Saturday, September 30, 2006

திருமலை விழா 6 - அனுமன் / யானை வாகனம்

ஆறாம் நாள்

காலை - அனுமன் வாகனம் (ஹனுமந்த வாகனம்)

குறுகுறு குழந்தைகள் முதல் குடுகுடு முதியோர் வரை அனுமனை விரும்பாதார் யார்? வடை மாலை, வெற்றிலை மாலை, ராமஜெயம் எழுதப்பட்ட காகித மாலை, என்று மாலை மரியாதைகள் தான் என்ன? ராமனுக்குக் கூட இவ்வளவு சிறப்புகள் கிடைக்குமா என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்று சும்மாவா சொன்னாள் ஒளவைப்பாட்டி.

சிறிய திருவடி, மாருதி, ஆஞ்சனேயன், ராம தூதன், சொல்லின் செல்வன் என்ற பல பட்டப் பெயர்கள் இவனுக்கு!
ராமாயணத்தில் ராமனுக்கு சீதை மேல் எப்போதாவது ஒரு முறை மன வருத்தம் ஏற்பட்டு இருக்கலாம். சீதைக்கும் அவ்வாறே;
அவளுக்கும், இளையாழ்வார் இலக்குவனுக்கும் வாக்கு வாதம் வந்தது.
இப்படி பல பேர் பலரின் மீது காய்ந்து உள்ளனர்.
ஆனால் ஒருவன் மட்டும் தான் அனைவரின் அன்பும் ஒருங்கே பெற்றான்.
அவனே நம் அழகன் அனுமன்!


சமய சஞ்சீவி என்ற சொல்லே அவனால் தானே வந்தது!
கன்னடர்கள் 'முக்கியப் பிராணன்' என்று தான் அவனை அழைக்கின்றனர்!
சீ்தையின் உயிரைக் காத்து, இலக்குவன் உயிரைக் காத்து, பரதன் உயிரைக் காத்து, அதன் மூலமாக ராமன் உயிரையே காத்தான்!
உயிர் காப்பான் தோழன் அல்லவா?
'நாரணா, உன் வேலை எல்லாம் அனுமனே செய்து விட்டான், பேசாமல் காத்தல் தொழிலை அவனிடம் கொடுத்து விட்டு, நீ ஓய்வெடுக்கப் போ', என்று சத்குரு தியாகராஜர் சுவையாகக் கூறுகிறார்!

அனுமன் சிறந்த அமைச்சன், தொண்டன் மட்டும் அல்ல!
மிகப் பெரிய இசைக் கலைஞன். வீணை வித்வான் என்பது பலர் அறிந்திராத ஒன்று.
'மல்யுத்தம் செய்யும் வானரத்துக்கா வீணை பிடிக்கத் தெரியும்', என்று எண்ணி, நாரத மகரிஷியே அவனிடம் போட்டி போட்டுத் தோற்றார் என்றால் பாருங்களேன்.
அதனால் தான் இராமாநுஜர் போன்ற ஆசாரியர்கள், 'தோற்றத்தை வைத்து அடியவரை எடை போடக் கூடாது' என்பதை மிக உறுதியாக விதித்தனர்.

இப்பேர்பட்ட அனுமன் பிறந்தது திருமலை, அஞ்சனாத்ரியில்! எவ்ளோ பெரிய ஆளாய் இருந்தாலும் தான் பிறந்த ஊரில், அவருக்குத் தனி மரியாதை தானே!
அதனால் தான் இன்று, கருட சேவைக்கு மறு நாள், ஆஞ்சனேய சேவை!
பெரிய திருவடி உலா முடிந்ததும் சிறிய திருவடி உலா!
இறைவன் திருமலை வாசன், ராம ரூபனாய், அனுமன் மேல் அமர்ந்து வீதியுலா வருகிறான்!


இரு பெரும் பட்டுக் குடைகள் சூழ, பச்சைப் பட்டு உடுத்தி, மஞ்சள் மாலைகள் சூடிக் கொண்டு, அனுமன் தோளிலே, "தோளுக்கு இனியனாய்" பறந்து வருகிறான்.


மாலை - யானை வாகனம் (கஜ வாகனம்)

யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, சிறுவர் கும்பல் ஆடும் கண்ணே!!
தமிழ்மணப் பதிவுகளில் வரும் யானைப் பாசத்தைப் பார்த்தால், யானை கூடிய விரைவில் வீட்டுச் செல்லப் பிராணியானாலும் ஆகி விடும் போல் இருக்கிறது! என்ன ஒரே ப்ராப்ளம், வால் மார்ட்டில் உள்ள எல்லா frozen vegetables -உம் எடுத்து உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்! அவ்வளவு தான்! :-)))


நேற்று கருட சேவையில், கஜேந்திரனுக்கு அபயம் அளித்த பெருமாள், இன்று அவன் மேல் வீதியுலா வருகிறான். 'இனி இவன் நம்ம ஆளு, அதனால் மக்களே யானையிடம் பாசம் காட்டுங்கள்', என்று சொல்லாமல் சொல்லி விடுகிறான்!
யானையின் மேல் பெரிய தொங்கு மாலை; சுவாமி உலாவின் போது 'தொம் தொம்' என்று வீசி வீசி ஆடுகிறது! ராஜ நடையில் மலையப்பன், கையில் அங்குசம் கொண்டு, காண்பவர் கண்களுக்கு விருந்தாய் வலம் வருகிறான்.
குடை அழகு, சக்கரப் படை அழகு, யானை நடை அழகு, அழகோ அழகு!!



இன்று,
குலசேகர ஆழ்வாரும், திருவேங்கடத்தானும்.

இந்த ஆழ்வார் கொல்லி நாட்டு அரசராய், யானை மேல் உலா வந்தவர். அவர் மனதிலோ அவர் மிகவும் உகந்த ராமன் உலா வர, 'என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ' என்று அவனையே தூங்க வைத்த ராஜரிஷி! அதனால் இன்று இவன் ராம ரூபத்தில் வரும் நாளில், அவர் தம் கவிதையைக் காண்போம்.

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

"காட்டுச்செடி, கள்ளிச்செடி போல் வெட்ட வெட்ட வளரும் ஊழ் வினைகளை எல்லாம் ஒழித்து, ஆவி காக்கும் திருமாலே,
உயரங்களின் உயரமே, வேங்கடவா, உன் கோவிலின் வாசற்படியில்,
அடியவர்களும், விண்ணோரும் அவர் பெண்ணோரும், 'தவமாய் தவமிருந்து' காத்துக் கிடக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் உன்னை நான் எப்படிப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்?
"நகர்ந்து செல்; மற்றவருக்கும் வழி விடு" என்று தள்ளி விடுவார்களே! அவர்கள் சொல்வதும் நியாயம் தானே?
இதற்கு ஒரே வழி! பேசாமல் உன் கருவறைப் படிக்கட்டாய் என்னை மாற்றி விடு!
உன் பவள வாய், கமலச் செங்கண்ணை, குளிர் முகத்தை, சதா சர்வ காலமும், ஊழி தோறும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்" என்று காதலால் உருகுகிறார்!

இன்றைக்கும் திருவேங்கடமுடையான் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று தான் பெயர். அதற்கு ஆரத்தியும் உண்டு.

இந்த சிந்தனை, இதனுடன் கூடிய மற்ற பாடல்களும் (மரமாவேனே, மலையாவேனே, குருகாவேனே, ஸ்தம்பமாவேனே) தான், கவியரசர் கண்ணதாசனை, "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்" என்று எழுதத் தூண்டியதாக ஒர் இலக்கிய விழாவில் சொல்லக் கேட்டேன்.
சில படங்கள் உதவி: TirupatiTimes, AP Weekly

21 comments:

  1. ஹைய்யா.... இன்னிக்கு எல்லாமே நம்ம ஃபேவரைட் விஷயம்.
    எனக்கு யானையும் பிடிக்கும்,பூனையும் பிடிக்கும், குரங்கும் பிடிக்கும், இன்னும்
    எல்லா மிருகமுமே ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.

    (நம்ம வீட்டில் ஊஞ்சலில் ஓரத்தில் ஒரு யானை எப்பவும் இருக்கும். அதுக்கு மேலெ அந்த
    ஊஞ்சல் சங்கிலியில் ஒரு குரங்கு தொங்கிட்டு இருக்கும்.ரெண்டு பேரும் பயங்கர நட்பாக்கும்)

    பெருமாளே இன்னிக்கும் அபார தரிசனம் கொடுத்தீர்.

    எல்லாம் 'நம்ம கண்ணபிரான்' கருணை.

    ReplyDelete
  2. தலைவா இரண்டுநாளா மிஸ் பண்ணிட்டேன்.இன்று இரவு வந்து பூராவற்ரையும் படித்து பின்னூட்டம் போடுகிறேன்.

    ஓம் நமோ நாராயணா

    ReplyDelete
  3. ஸ்ரீராம நாமம் ஒலிக்குமிடமெல்லாம் இருப்பான் அந்த அஞ்சனையின் மைந்தன்... இன்று கண்டிப்பாக எங்களின் இதயத்தில் வாசம் செய்திருப்பான் உங்கள் மூலம்...
    (அனுமன் அந்த நட்சத்திரம் தான்)

    அனுமனை ருத்ரனின் ஒரு அவதாரம் என்றும் சொல்வார்கள்.

    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  4. தொடர்ந்து படித்து வருகிறேன். பாடல்களுக்கு தரும் விளக்கங்களும் அருமை.

    ReplyDelete
  5. திருப்பதியின் மிக சுவாரசியமான விஷயங்களுலள் ஒன்று 'மொட்டைத்தலை' உங்கள் ஒவ்வொரு பதிவிலும் பக்தர்களின் குளோசப் அசத்தல். மொட்டைத்தலையைக் கண்டால் கை குறுகுறுக்கும்..தடவிக் கொடுக்க. நியூயார்க் வரும் போதும், எங்கு சுருள் தலை கருப்புக் குழந்தைகளைக் கண்டாலும் இதே நிலை :-)

    சொல்லின் செல்வனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாமே! குலசேகரர் ஒரு பாடலில் நமக்கு வரும் துன்பத்தை மருத்துவனின் அறுவை சிகிச்சைக்கு உவமிப்பார்.

    ஆக, நீங்க எங்க கோதை பிறந்த ஊரா? மதுரைக்காரர் என்று சொல்லுங்க!உங்க ஊர் திரட்டிப்பால், ஸ்நானப்பவுடர் பற்றி எழுதுங்கள் :-)

    ReplyDelete
  6. //துளசி கோபால் said...
    ஹைய்யா.... இன்னிக்கு எல்லாமே நம்ம ஃபேவரைட் விஷயம்.
    //
    டீச்சர் வாங்க, எனக்குத் தெரியும் ஒங்களுக்கு இந்த வாகனம் ரொம்ப பிடிக்கப் போகுதுன்னு. பேசாம துளசி தளத்தில் இருக்கும் யானையார் படத்தை வாடகைக்கு கேக்கலாமான்னு தோணிச்சு!

    //ரெண்டு பேரும் பயங்கர நட்பாக்கும்//
    உண்மை தான் டீச்சர். யானையார், குரங்கார் இருவருமே சீக்கிரமே ஒத்துப் போயிடுவாங்கன்னு ஒருமுறை எங்க ஊர்கோவில் யானைப்பாகன் சொன்னாரு!

    ReplyDelete
  7. // செல்வன் said...
    தலைவா இரண்டுநாளா மிஸ் பண்ணிட்டேன்.இன்று இரவு வந்து பூராவற்ரையும் படித்து பின்னூட்டம் போடுகிறேன்.

    ஓம் நமோ நாராயணா//

    வாங்க செல்வன். அதனால என்ன செல்வன். நமக்காகத் தானே அவர் குன்றின் மேல் கல்லாக இருக்கார். வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்து படித்து மகிழுங்கள்!

    பிரசாதம் காத்திருக்கும்-ன்னு கியாரண்டியா சொல்ல முடியாது :-))

    ReplyDelete
  8. // வெட்டிப்பயல் said...
    இன்று கண்டிப்பாக எங்களின் இதயத்தில் வாசம் செய்திருப்பான் உங்கள் மூலம்...
    (அனுமன் அந்த நட்சத்திரம் தான்)//

    வாங்க பாலாஜி. அனுமனை நல்லாக் கண்டீர்களா? மிக்க மகிழ்ச்சி!
    ஆமாங்க....அனுமன் மூல நட்சத்திரம் தான். மார்கழி மூலம். மிகச் சரியாகச் சொன்னீர்கள்! நன்றி.

    பாத்தீங்களா, 'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்' -ன்னுட்டு எகனை மொகனையா யாரோ சொல்லப் போய், இந்த நட்சத்திரப் பெண்கள் (நடுத்தர வர்க்கப் பெண்கள்) பலர் படும் பாடு, பாவம் சொல்லி மாளாது! சரியா எதுவும் புரிஞ்சுக்காம சில பெரியவங்களும் இதுக்கு உடந்தையா இருக்காங்க!

    இது மாறனும்...நல்ல விழிப்புணர்ச்சி ஏற்படுத்தனும். அட்சய திருதியை-ன்னா என்னான்னே தெரியாம இப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கலையா? அது தெரியும் போது இதையும் தெரிஞ்சுக்க வைக்கலாம். :-)))

    ஆண் மூலம், அனுமன், இங்கே அரசே ஆளவில்லை! இப்பவும் ப்ரியமான தொண்டனாகத் தான் இருக்கான்! இது ஒண்ணே போதும் அந்த எகனை மொகனையை உடைக்க!

    ReplyDelete
  9. //அனுமனை ருத்ரனின் ஒரு அவதாரம் என்றும் சொல்வார்கள்//

    ஆமாம் பாலாஜி.
    திருமாலை விட்டுப் பிரியாதவன் ஈஸ்வரன். அதனால் தான் ராம நாமத்தை எப்போதும் ருத்ரன் ஜபிக்கிறார்.
    பெருமாளும், ஈசனின் நடனத்தை எப்போதும் மனத்தளவில் கண்டு கொண்டே இருப்பதாக தில்லை தல வரலாறு சொல்லும்.

    ReplyDelete
  10. //பத்மா அர்விந்த் said...
    தொடர்ந்து படித்து வருகிறேன். பாடல்களுக்கு தரும் விளக்கங்களும் அருமை//

    வாங்க பத்மா, நல்வரவு.
    வாழ்த்துக்கு நன்றி!
    நவ நாட்களும் நீங்கள் அவசியம் வந்து கலந்துக்கணும்!

    சமூக நிகழ்வுகளையும் அவலங்களையும் bias இன்றிப் படம்பிடிக்கும் தங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்; குறிப்பாக குழந்தைகள் குறித்த தங்கள் நோக்கும், பதிவுகளும்.

    இறைவன் திருமலையான் அருள், உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக, unfortunate ones, -க்கும் நிச்சயம் துணை செய்யும்!

    ReplyDelete
  11. // நா.கண்ணன் said...
    ....'மொட்டைத்தலை'
    உங்கள் ஒவ்வொரு பதிவிலும் பக்தர்களின் குளோசப் அசத்தல்.//

    வாங்க கண்ணன் சார்.
    பக்தன் அன்றி பகவான் பெருமை ஏது?
    அவர்கள் பார்வையிலும் சிரிப்பிலும் என்றுமே வாகனமாகத் தானே வருகிறான்!

    //மொட்டைத்தலையைக் கண்டால் கை குறுகுறுக்கும்..தடவிக் கொடுக்க. நியூயார்க் வரும் போதும், எங்கு சுருள் தலை கருப்புக் குழந்தைகளைக் கண்டாலும் இதே நிலை :-)//

    அச்சச்சோ. குறுகுறுக்கும் கைகளா உங்களுக்கு! போச்சுடா...தொப்பி போட்டுக் கொண்டால் என்ன பண்ணுவீங்க??? :-)))))

    //சொல்லின் செல்வனைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருக்கலாமே! குலசேகரர் ஒரு பாடலில் நமக்கு வரும் துன்பத்தை மருத்துவனின் அறுவை சிகிச்சைக்கு உவமிப்பார்//

    ஆமாம் சார்;
    "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்
    மாளாத காதல் நோயாளன் போல்"
    என்று சொல்லுவார். இறைவன் நமக்குத் தரும் சோதனைகள், மருத்துவன் செய்வது போல், நம் நன்மைக்கே என்று சொல்ல வருவார்!
    நல்லா ஞாபகம் வச்சி சொல்றீங்க சார்! நன்றி, பாசுர சிந்தனைக்கு!

    //ஆக, நீங்க எங்க கோதை பிறந்த ஊரா? மதுரைக்காரர் என்று சொல்லுங்க!உங்க ஊர் திரட்டிப்பால், ஸ்நானப்பவுடர் பற்றி எழுதுங்கள் :-)//

    பால்கோவா 'பிரசாதம்'- கண்டிப்பா எழுதணும் :-)))
    கோதையின் ஊரில் பிறக்க அவ்வளவு புண்ணியம் செய்யல சார்.
    நான் 'அவதரித்த தலம்' இப்பாருக்குள்ளேயே மிக மிகப் புண்ணிய நகரமான 'தருமமிகு சென்னை';
    நீங்க கோலிவுடானந்தா சுவாமிகள் கொடுந்தமிழில் எழுதிய சென்னைத் 'தல' புருடாணம் படிச்சிருக்கீங்களா? :-)))))

    ReplyDelete
  12. //பாத்தீங்களா, 'ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்' -ன்னுட்டு எகனை மொகனையா யாரோ சொல்லப் போய், இந்த நட்சத்திரப் பெண்கள் (நடுத்தர வர்க்கப் பெண்கள்) பலர் படும் பாடு, பாவம் சொல்லி மாளாது! சரியா எதுவும் புரிஞ்சுக்காம சில பெரியவங்களும் இதுக்கு உடந்தையா இருக்காங்க!
    //
    ஆமாம் KRS சரியா சொன்னீங்க...
    அதுவும் மாமனார் உயிருக்கு ஆபத்துனு சொன்னதுக்கு அப்பறம் யாருமே உதவ முடியாம போயிடுது. ஆண் மூலத்திற்கும் அது பொருந்தும் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். இந்த எண்ணங்கள் எல்லாம் மாறனும். நமக்குனு இருக்கறத யாரும் மாத்த முடியாது.

    நாராயணனை மனதில் நினைத்து செய்தாலே அனைத்து காரியங்களும் ஜெயமாகும்.

    காலையில் எழுந்தவுடனும் நாராயண நாமத்தை பார்க்க வைத்தீர்கள். படுக்கும் போதும் அவன் நினைவை கொடுத்தீர்கள்...

    மிக்க நன்றி!!!

    ReplyDelete
  13. // செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
    நெடியானே வேங்கடவா நின்கோயிலின் வாசல்
    அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
    படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே //

    ரவி இந்தப் பாடலில் சிறப்பு "கிடந்து இயங்கும்" என்ற சொற்றொடரில் இருக்கிறது.

    படி கிடப்படுதான். ஆனால் இயக்கம் இல்லாதது. அப்படியிருக்க கிடந்து இயங்க எப்படி முடியும்?

    அதற்கு அடுத்த வரியில் விடை இருக்கிறது. "கிடந்து உன் பவழ வாய் காண்பேனே"

    அடியாரும் வானவரும் அரம்பையரும் திருக்கோயில் வாயிலில் விழுந்து உன் பவழவாய் காண்பதற்குத் தோதாக நானும் படியாய்க் கிடந்து உன் பவழவாய் கண்டியங்குவேன்.

    ReplyDelete
  14. கண்ணபிரான்,
    நாளுக்கு நாள் உங்கள் பதிவுகளில் மெருகு கூடிக் கொண்டே வருகிறது. எல்லாம் திருவேங்கடமுடையான் அருள் போலும் :)

    படங்கள் அருமை. நான் அனுமனை பூஜிப்பவன் என்பதால், அனும வாகனம் பிடிக்கும் !!! ஒரு சிறு சந்தேகம் !

    "அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
    படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே"

    என்பதற்கு "அடியார்களும், நித்யசூரிகளும், தேவமாதரும் உன் திருவடியைத் தொழ சதா சர்வகாலமும் வந்து போவதால், அவர்களை சுமக்கும் பெரும்பாக்கியமும், செம்பவளம் ஒத்த இதழ்கள் கொண்ட உன் திருவாயை , உன் திருமுகத்தை எந்நேரமும் மனங்குளிர தரிசிக்கும் பெரும்பேறும் ஒரு சேரப்பெற உன் உள்வாயிற் கோயிற்படியாய் நான் ஆக அருளுவாய், எம்பெருமானே" என்பது இன்னும் பொருத்தமான விளக்கமாக இருக்குமா ? சுட்டிக்காட்டியதை தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்பிக்கை !

    திருமலை மட்டுமன்றி, எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் உள்வாயிற்படி, "குலசேகரன் படி" என்று தான் அழைக்கப்படுகிறது!

    குலசேகரரை நீங்கள் அழைத்ததால், அவரது அழகிய பாசுரம் ஒன்று "பெருமாள் திருமொழியிலிருந்து":

    ஆதி அந்தம் அனந்த அற்புதமான* வானவர் தம்பிரான்*
    பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உய்ந்திட*
    தீதில் நன்னெறி காட்டி* எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
    காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல்செய்யும் என் நெஞ்சமே!

    முதலும் முடிவுமில்லாதவனும், அற்புதமான அழகுடையவனும், தேவர் தலைவனும் ஆன எம்பெருமானின் மலரொத்த திருவடிகளை எண்ணாத மாந்தர்களும் உய்வுற, அவர்களை நல்வழியில் செலுத்தி பெரும் இறைத்தொண்டு புரிபவர்கள், திருவரங்கனின் மேல் பேரன்பும், பக்தியும் கொண்ட அடியார்களே ஆவர் ! அத்தகைய உன் பேரடியார்களுக்கு, எனது எல்லா பிறப்புகளிலும், அன்பு திருச்சேவை செய்வதற்கு எனக்கு அருளுவாயாக !
    (ஆஹா, எப்பேர்ப்பட்ட காதல் செய்கிறது குலசேகரப் "பெருமாளின்" நெஞ்சம் !!!)

    எஅ.பாலா

    ReplyDelete
  15. தலைவா சைடில் சின்னதா ஒரு விளம்பரம்.ஆஞ்சநேயரின் பெருமைகளை எழுதும்போது இனி மேல் அவர் உலக சாதனை செய்தவர் என்ற பெருமையையும் எழுத வேண்டும். அது பற்றி நீண்ட நாட்களுக்கு முன் ஒரு பதிவு போட்டேன்.

    http://holyox.blogspot.com/2006/02/blog-post_113901493753665734.html

    மற்றபடி பதிவு மிக அருமையாக உள்ளது.ஆஞ்சநேயரின் பெருமைகளை நால் முழுக்க சொன்னாலும் திருப்தி வருமா?ஆனால் எங்கள் வீட்டில் ஆஞ்சநேயர் கோயிலில் சென்று அவர் புகழை பாடுவதை விட "ராம்,ராம்" என சொன்னால் அதுதான் அவருக்கு பிடிக்கும் என்பார்கள்.அதனால் ஆஞ்சநேயர் கோயிலில் ராம்,ராம் எனவும் ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஸ்துதியையும் பாடுவது வழக்கம்

    ஜெய் ஆஞ்சநேயா

    ReplyDelete
  16. // G.Ragavan said...
    ரவி இந்தப் பாடலில் சிறப்பு "கிடந்து இயங்கும்" என்ற சொற்றொடரில் இருக்கிறது.//

    நன்றி ஜிரா நுண் பொருளுக்கு!
    வானவர்கள் கிடந்து இயங்குகிறார்கள்!
    இதற்கு முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார், இன்னொரு விளக்கம் கொடுக்கிறார்.

    தேவர்கள், அன்றைய பொழுதுக்கு, அவர்கள் தொழிலை ஆரம்பிக்கும் முன், திருமலையான் படிகளில் வீழ்ந்து சேவித்து, தொடங்குகிறார்கள்.
    கிடந்து, பின்னர் இயங்குகிறார்கள்!

    இன்றும் ஒவ்வொரு இரவு ஏகாந்த சேவைக்குப் பிறகு, பூசைக்குரிய பொருட்களும், நீரும் வைத்து விட்டு, அர்ச்சகர்கள் திருக்கதவம் தாழிடுகின்றார்கள். அதன் பின் தேவர்கள் வந்து பூசிப்பதாக ஐதீகம்!

    ReplyDelete
  17. // enRenRum-anbudan.BALA said...
    கண்ணபிரான்,
    நாளுக்கு நாள் உங்கள் பதிவுகளில் மெருகு கூடிக் கொண்டே வருகிறது. எல்லாம் திருவேங்கடமுடையான் அருள் போலும் :)//

    வாங்க பாலா, நன்றி
    மெருகு அவன் பாடல்களால் தானே அன்றி, என் எழுத்தில் இல்லை! அந்தப் பூவோடு சேர்ந்ததால் இந்த நாரும்,லேசாகவேனும் மணக்குது போல இருக்கு :-)

    //சுட்டிக்காட்டியதை தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்பிக்கை !//

    அச்சச்சோ, இதில் தவறாக எண்ண என்ன இருக்கு பாலா? கண்டிப்பாக நீங்கள், மற்றும் பலரும் சுட்டிக் காட்ட வேண்டும்!
    அடியவர்கள், சொல்லச் சொல்லத் தானே வியாக்யானங்கள், பாசுரப் படி என்று பல பொக்கிஷங்கள் உருவாயின.

    மேலே ராகவன் விளக்கமும் பாருங்கள்!
    உங்கள் விளக்கமும் மிக அருமை.
    அடியவரைச் சுமக்கும் பாக்கியம், அவனைச் சுமப்பதைக் காட்டிலும் பெரிது தானே! அடியவரையும் சுமந்தாயிற்று, அவனையும் கண்டாயிற்று! மிக நன்று!

    //திருமலை மட்டுமன்றி, எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் உள்வாயிற்படி, "குலசேகரன் படி" என்று தான் அழைக்கப்படுகிறது!//

    உண்மை; பாட்டு வேங்கடத்தின் மேல்! கருத்து அனைத்து ஆலயங்களுக்கும் தான்!

    //பாதமாமலர் சூடும் பத்தியிலாத* பாவிகள் உய்ந்திட//
    பக்தியில்லாமல் கடனே என்று சேவிக்கும் மனிதரைக் கூட "பாதமலர் சூடும்" என்று அடைமொழியுடன் தான் அழைக்கிறார். பணிவே பண்பாகக் கொண்ட அவர்கள் எங்கே? நாம் எங்கே??

    பாலா, உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியல. ஓவ்வொரு பதிவிலும் பாட்டும் பொருளும் சேர்த்தே தருகிறீர்கள்! மிக்க நன்றி. ஒரு தனி மடல் தட்டுங்களேன்! குழுப் பதிவு எண்ணம் ஒன்று எனக்கு உண்டு. you will be a great asset if your time permits!

    //காதல் செய்தொண்டர்க்கு எப்பிறப்பிலும்* காதல்செய்யும் என் நெஞ்சமே!//
    ஆண்டாள் அரங்கனைக் காதலித்தாள்; ஆழ்வார் அடியாரைக் காதலிக்க இறைஞ்சுகிறார். எவ்வளவு பெரிய உள்ளம்!
    "வணங்குதல் அல்லாது வாழ்த்தல் தான்" நம் நாவுக்கு அடங்குமோ?

    ReplyDelete
  18. // செல்வன் said...
    தலைவா சைடில் சின்னதா ஒரு விளம்பரம்.
    http://holyox.blogspot.com/2006/02/blog-post_113901493753665734.html//

    வாங்க தலைவா, 'சின்னதா' எதுக்கு தலைவா...ஒரு பெரிய வினைல் போர்டே வச்சுக்குங்க :-)) உங்களுக்கு இல்லாததா? அதுவும் நம்ம ஆஞ்சநேயன்-ன்னா சும்மாவா? பதிவைப் பார்த்தேன். ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் சில சிந்தனைகள். பின்னூட்டத்தில் சொல்கிறேன். குமரனும் லேசாகத் தொட்டுச் சென்றுள்ளார்.

    //அதனால் ஆஞ்சநேயர் கோயிலில் ராம்,ராம் எனவும் ராமர் கோயிலில் ஆஞ்சநேயர் ஸ்துதியையும் பாடுவது வழக்கம்//

    சூப்பர்! அங்கிருப்பதை இங்கேயும், இங்கு இருப்பதை அங்கேயும் சொல்கிறீர்கள் :-)))) சும்மா ஒரு நயத்துக்காகச் சொன்னேன்!

    யாருக்கு எது பிடிக்கும் என்று அவங்க மனசைப் புரிஞ்சு செஞ்சிருக்கீங்க!
    மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவிலில் அனுமன் சேவை தான் முதலில். அப்புறம் தான் ராமனே!

    ReplyDelete
  19. இரவி,

    அனுமன் புகழை அருமையாக உரைத்துள்ளீர்கள்.

    //பெரிய திருவடி உலா முடிந்ததும் சிறிய திருவடி உலா!//

    சிறுவயதில் அனுமனின் பெருமையை மீண்டும் மீண்டும் கேட்டும் படித்தும் அவரின் பெருமையில் மூழ்கி இருந்ததால் அவரைப் போய் 'சிறிய திருவடி' என்றும் கருடாழ்வாரைப் 'பெரிய திருவடி' என்றும் சொல்கிறார்களே என்று திகைத்ததுண்டு. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?

    ReplyDelete
  20. // குமரன் (Kumaran) said...
    இரவி,
    சிறுவயதில் அனுமனின் பெருமையை மீண்டும் மீண்டும் கேட்டும் படித்தும் அவரின் பெருமையில் மூழ்கி இருந்ததால் அவரைப் போய் 'சிறிய திருவடி' என்றும் கருடாழ்வாரைப் 'பெரிய திருவடி' என்றும் சொல்கிறார்களே என்று திகைத்ததுண்டு. ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்கிறீர்களா?//

    குமரன். எனக்குத் தெரிந்த வரை சொல்கிறேன்.
    அனைவரின் பாதங்களும் ஒரே சமம் தான். இடது வலது வித்தியாசம் இல்லை.
    இங்கே "பெரிய", "சிறிய" என்பது கருடனையோ, அனுமனையோ குறிக்கவில்லை. இருவருமே ஒரே திருவடி தான்!
    "பெரிய", "சிறிய" என்பது பெருமாளைத் தான் குறித்தது!

    "பெரிய" என்பது பெரிய பெருமாளின் வாகனம் - கருடன்
    "சிறிய" என்பது சிறிய பெருமாளான ராமனின் வாகனம் - அனுமன்

    (இலக்குவனை இளைய பெருமாள் என்றும் கூறுவார்கள்! ஒப்பு நோக்கவும்)

    பெரிய பெருமாளான அரங்க விமானம், ராமனின் முன்னோர்களும் வழிபட்டது! அதனால் "பெரிய" ஆயிற்று! இது முழுக்க முழுக்க ஆசாரியர்கள் வியாக்யானத்தில் விளைந்த பதம் தான்!

    அனுமனின் பெருமையில் மூழ்கிய குமரன் இனி திகைக்கத் தேவையில்லை! :-)))
    அனுமனைச் சற்றே இறக்கி விட்டார்களோ என்று!
    அடியவர்க்குள் "பெரிய", "சிறிய" ஏது?

    எல்லாம் அவனைத் தான் "பெரிய", "சிறிய" என்று பிரித்து கலாய்த்தார்கள் :-))))

    பாதுகா சகஸ்ரத்தில் இதற்கு மேலும் நுண்ணிய விடை கிடைக்குமோ? போய்ப் பாக்கணும்!

    ReplyDelete
  21. daiii KRS,be careful !!!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP