Saturday, December 02, 2006

கூகுள் படத்தில் கார்த்திகை தீபம் மின்னுதே!

"மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" என்பது தலைவர் படத்தில் வர்ற பாட்டு இல்லையா? என்ன படம் பேரு? மறந்து போச்சு! சரி அத விடுங்க!
இன்று கார்த்திகை தீபம்! (Dec 03)

திருவண்ணாமலை தீபம்! எல்லாரும் அறிந்த கதை தான்!
பேசாம நாம எல்லாரும் அண்ணாமலைக்கே போய், தீப தரிசனம் கண்டு வரலாம் வாங்க! கீழே தீபத்தின் கூகுள் ஒலி-ஒளிக் காட்சி; கண்டு மகிழுங்கள்!
(please allow time for video buffering; Runtime 7 mins)

தீப மங்கள ஜோதீ நமோ நம!
அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை!!

அண்ணாமலைக்கு அரோகரா!!!




தசாவதாரம் என்ற ஒரு தமிழ்த் திரைப்படம் நேற்று விசிடியில் பார்த்தேன். அதிலிருந்து ஒரு காட்சி! சைவ-வைணவ ஒற்றுமையில் ஒரு புதிய பார்வை!
பிரம்மனுக்கு ஒரு விபரீத ஆசை. ஒவ்வொரு முறையும் நாம் தானே கைலாயம், வைகுந்தம் சென்று வணங்குகிறோம்! ஒரு நாளாவது அவர்கள் தான் இருக்கும் இடம் வரட்டுமே!
கலைவாணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள்! பெருமாள் உங்கள் தந்தைக்குச் சமம்! ஈசன் குருவுக்குச் சமம்! நீங்கள் தான் சென்று வணங்க வேண்டும்!

குழந்தை ஆசைப்பட்டால் பெற்றோர்கள் வீம்பு பார்ப்பார்களா?
பிரம்மன் நினைத்த மாத்திரத்தில், ஈசனும் எம்பெருமானும் பிரம்மலோகம் வந்து விட்டார்கள்! பிரம்மனின் மனக்குறை தீர வழியும் சொன்னார்கள்!
சிவனார் ஓங்கி உலகளந்து தீப ஸ்தம்பமாய் நிற்கிறார்!
பிரம்மனுக்கோ ஈசனின் திருவடிகளைப் பற்றுவதற்குத் தயக்கம்! காரணம் Ego! மரியாதைக் குறைவு என்று எண்ணினார். வாகன வசதியுடன், ஈசனின் முடியைத் தேடச் சென்றார்.
சென்றார்..சென்றார்...சென்று கொண்டே இருந்தார்.

ஆனால் பெருமாள் சிரிப்பழகன் ஆயிற்றே! சத்வ குண நாயகன்! சாந்த சொரூபி!
ஈசனின் திருவடிகளைக் காண அவருக்கு என்ன தயக்கம்! முனிவர் உதைத்தாலும் வாங்கிக் கொண்டவர் தானே! வராக (பன்றி) உருவம் எடுத்து பாதாளம் பாய்ந்தார்! ஈசன் சற்றே தலைசாய்த்து கீழே பார்க்க, கீழே விழுந்தது பூ!

வெற்றி எனும் போதை, எவரையும் வெறி கொள்ளச் செய்து விடும்! பிரம்மனும் அதையே செய்தார். ஈசன் முடியில் இருந்து விழுந்த தாழம் பூவுடன் பேசி வைத்துக் கொண்டதால், பொய் சாட்சி சொன்னது பூ!
பிரம்மன், ஈசனாரின் திருமுடியைக் கண்டதாக!
அதனால் பூவையே விலக்கி வைத்து விட்டார் பரமன்!

பெருமாளோ, அதள பாதாளத்தில் போய் விட்டார்; ஈசன் திருவடியைக் காணாததால், கால்களைத் தன் திருக்கைகளால் பற்ற, ஒரு கணம் ஈசனுக்கே தூக்கி வாரிப் போட்டது!
காக்கும் நாயகன் தன் கால்களைப் பற்றுவதா என்று!! உடனே பெருமாளைத் தூக்குவதற்கு அன்புடன் குனிய, ஈசனின் திருமுடி தெரிகிறது பெருமாளுக்கு!
போட்டியால் தெரியாத திருமுடி, இப்போது பணிவால் தெரிந்தது!
பிரம்மனுக்கும் பாடம் புரிந்தது!

பாடம் பிரம்மனுக்கா?
இல்லை நமக்கே! மும்மூர்த்திகளின் நாடகம் அன்றோ?

1. இறைவனின் பணியில் இருக்கும் பேறு பெற்றவர்கள், மிக கவனமாக இருக்க வேண்டும்!
தான் மற்ற அடியாரை விட ஒரு படி மேலே!
தான் சொல்வதெல்லாம் எப்படியாச்சும் சரியாகி விடும் என்பதெல்லாம்,
நம்மை அவனிடம் சேர விடாது செய்து விடும்
(தாழம் பூவின் நிலை)
தாழம் பூவுக்கு இல்லாத வாசமா? ஆனால் அவ்வளவு வாசம் இருந்தும், கடைசியில் பயன் இல்லாமல் போய் விட்டது!

2. அகந்தை, அதுவும் பொறுப்பானவர்களிடம் இருந்தால்?
பக்தியில் தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை என்பதெல்லாம் கூடவே கூடாது! தன்னை யாரும் ஸ்பெஷலாக கவனிக்க வில்லையே என்ற தாழ்வு எண்ணம் இருந்தால் பக்தி சித்திக்கவே சித்திக்காது!
என் கடன் பணி செய்து கிடப்பதே! - இதுவே சரி! (பிரம்மனின் நிலை)

பலர் சொல்லி விளக்க முயன்ற ஒன்றை, இந்தத் திரைப்படம் அழகாக விளக்கி விட்டது!
முதல் நாள் பரணி தீபம்; அடுத்த நாள் சிவ தீபம்; அதற்கு மறு நாள் விஷ்ணு தீபம் என்று பல ஊர்களில் இன்றும் வழக்கம்!
இப்போது நன்றாகவே புரிகிறது!!

20 comments:

  1. அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி

    தீப மங்கள சோதி நமோ நம

    அண்ணாமலையானுக்கு ஹரோஹரா

    வையம் தகளியா வார்கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
    சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
    இடராழி நீங்குகவே என்று

    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
    ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
    ஞானத் தமிழ் புரிந்த நான்

    பணிவின் பெருமையைத் தான் அடியேனும் தசாவதாரம் படத்தில் இந்தப் புராணக்கதையைப் பார்க்கும் போது அறிந்தேன் இரவி. நன்கு சொன்னீர்கள்.

    ReplyDelete
  2. சிறு வயதில் கேட்ட கதை. மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நன்றிகள் பல!

    குமரனின் பின்னூட்டமும் மிக அருமை.

    மாதவிப் பந்தலில் மேலும் பல தோரணங்கள் அழகுறச் செய்யட்டும். வாழ்த்துக்கள்!

    //மலைக் கோவில் வாசலில் கார்த்திகை தீபம் மின்னுதே" என்பது தலைவர் படத்தில் வர்ற பாட்டு இல்லையா? என்ன படம் பேரு? மறந்து போச்சு!//

    படம் 'வீரா'. இன்னொரு உபரித்தகவல் - இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் பெயர் 'முத்துவீரா'. இந்தப்பாட்டில் தீபத்தினால் 'முத்து' என்றப் பெயர் எழுதப்பட்டிருக்கும். அதற்கென்ன என்கிறீர்களா... இந்தப் பாடல் காட்சியால் கவரப்பட்டு அவருடைய அடுத்த படத்திற்கு 'முத்து' என்று பெயரிட்டார் என்று ஏதோ ஒரு பேட்டியில் கேட்டதாக நினைவு.

    ReplyDelete
  3. வாங்க குமரன். கார்த்திகை தீப முதல் பின்னூட்ட விளக்கு நீங்கள் தான் ஏற்றியுள்ளீர்கள் :-)

    சிவனாரின் துதியோடு, ஆழ்வார்கள் ஏற்றிய விளக்குகளையும் தந்துள்ளீர்கள்! நன்றி!

    பொய்கையார் ஏற்றும் விளக்கு:
    வையம் தகளியா வார்கடலே நெய்யாக
    வெய்ய கதிரோன் விளக்காக

    பூதத்தார் ஏற்றும் விளக்கு:
    அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
    இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
    ஞானச்சுடர் விளக்கு

    இந்நாளில் இரண்டும் சுடர் விட்டு நம் இருள் நீக்கட்டும்!

    ReplyDelete
  4. அருமையான தத்துவம் KRS

    ReplyDelete
  5. நண்பர்களே,

    வீடியோ தெரிகிறது அல்லவா?

    வீடியோவின் முதல் பகுதியில் காலை உற்சவம் தான் நடைபெறுகிறது! அண்ணாமலையார் ஆடும் தாண்டவக் கோலம், சுவாமியின் தாங்கிகள் விரைந்து ஆடுவது!

    இரண்டாம் பகுதியில் தான் மகாதீபம் ஏற்றப்படுகிறது! அவசியம் காணவும்!

    ReplyDelete
  6. அடிமுடி காண தீப்பிழம்பாய் எழுந்து நின்றார் ஈசன்,
    பிரம்மனின் அகந்தை களைந்து, விஷ்ணுவுக்கு அருளுருவம் காட்டி,
    அத்தீப்பிழம்பே அருள் தரும் அண்ணாமலை ஜோதியாய்,
    தீபத்தின் நெருப்பாய்,
    அருள் தரும் தழலாய்,
    கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை தீபமாய்..

    தீபத்திருநாள் வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்.

    ReplyDelete
  7. படிச்சேன். ஆனால் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துட்டுச் சொல்றேனே.

    ReplyDelete
  8. After reading this my heart is full,hence my tongue and hand is still.

    ReplyDelete
  9. //Sridhar Venkat said...
    மாதவிப் பந்தலில் மேலும் பல தோரணங்கள் அழகுறச் செய்யட்டும். வாழ்த்துக்கள்!//

    நன்றி ஸ்ரீதர் வெங்கட்! கார்த்திகை நாள் வாழ்த்துக்கள்!

    //படம் 'வீரா'.
    அடுத்த படத்திற்கு 'முத்து' என்று பெயரிட்டார்//

    ஆகா தலைவர் படம் நான் ஓண்ணைச் சொன்னா, நீங்க ரெண்டா சொல்லியிருக்கீங்க! மிக்க நன்றி!

    ReplyDelete
  10. கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.
    என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

    தமிழ்மணம் முழுவதும் தீபங்கள் தான் இன்று.
    நன்றி நன்றி.

    ReplyDelete
  11. //வெட்டிப்பயல் said...
    அருமையான தத்துவம் KRS//

    நன்றி பாலாஜி!
    Lowellஇல் மலை ஏதாச்சும் இருக்கா? தீபம் ஏத்தனீங்களா?

    Pittsburgh Penn Hillsஇல் தீபம் உண்டு!

    ReplyDelete
  12. //சாத்வீகன் said...
    தீபத்தின் நெருப்பாய்,
    அருள் தரும் தழலாய்,
    கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை தீபமாய்..//

    அழகாய்ச் சொன்னீங்க சாத்வீகன்!
    தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. //துளசி கோபால் said...
    படிச்சேன். ஆனால் இன்னும் படம் பார்க்கவில்லை. பார்த்துட்டுச் சொல்றேனே.//

    பாத்துட்டுச் சொல்லுங்க டீச்சர்! நன்றி!!

    ReplyDelete
  14. //தி. ரா. ச.(T.R.C.) said...
    After reading this my heart is full,hence my tongue and hand is still.//

    வாங்க திராச ஐயா!
    சென்னையில் தீபம் எப்படி? கந்த கோட்டத்தில் கோபுரம் மீது தான் விளக்கீடுதல், இல்லீங்களா?

    ReplyDelete
  15. // வல்லிசிம்ஹன் said...
    கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்.
    தமிழ்மணம் முழுவதும் தீபங்கள் தான் இன்று.நன்றி நன்றி.//

    தீப மங்கள் ஜோதீ நமோநம!
    நன்றி வல்லியம்மா!

    ReplyDelete
  16. கே.ஆர்.எஸ்,
    சொன்னா நம்ப மாட்டீங்க. இந்த வாரம்தான் இதே படத்தின் டிவிடி எடுத்து வீட்டில் ஒரு காட்சி ஓட்டினோம். :)

    ReplyDelete
  17. கார்த்திகைத் திருநாளில் தீபவொளி பொலிந்து உலகம் உய்ய இறைவனை வணங்குகிறேன்.

    தீபமங்கல ஜோதீ நமோ நம என்ற திருப்புகழ் வரிகளை இங்கு நண்பர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிறார்கள். மிகச்சிறப்பு. பழநித் திருப்புகழ் வரி. செஞ்சுருட்டி ராகத்தில் பாடச் சுகமானதும் கூட.

    நீங்கள் குறிப்பிட்ட தசாவதாரம் படத்தை நானும் பார்த்திருக்கிறேன். படத்தில் பல இடங்களில் கதை மாற்றங்கள் நிறைய. ஆகையால் நிறைவான படமாக எனக்கு அது தோன்றவில்லை. அதை விட ஏ.பி.நாகராஜனின் திருமால் பெருமையும் திருமலைத் தெய்வமும் நன்றாக இருக்கும். பாடல்களும்தான்.

    ReplyDelete
  18. ஜி.ரா.வின் கருத்துகளுடன் நானும் ஒத்துப் போகிறேன், ரவி.

    அதற்கு முன்,

    அந்த இரு விடியோக்களும், பாடல்களும் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியது!

    அதுவும் அண்ணாமலையானின் அந்த ஆவேச ஆட்டம் அப்படியே மெய் சிலிர்த்தது.
    மிக்க நன்றி!

    இப்போது,

    திருமந்திரம் போன்ற ஆதார நூல்களில் இந்த தாழம்பூ கதை காணப்படவில்லை.

    அதில் வருவது இதுதான்!
    ஒரு சமயம், பிரமனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி வந்து, பலகாலம் சண்டையிட்டனர்.

    இதைக்கண்ணுற்ற சிவன் ஒரு பெரிய ஜோதிக்கம்பமாக எழுந்து இருவர் இடையிலும் நின்றார்.

    போரை நிறுத்திய இருவரும், தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.

    யார் இதன் அடி முடியை முதலில் பார்க்கிறாரோ அவ்ரே பெரியவர் என்று!

    பிரமன் அன்னமாக மேல் நோக்கியும், திருமால் வராகமாக கீழ்நோக்கியும் ச்ல்கின்றனர்.

    இருவராலும் அடியையோ, முடியையோ பார்க்க முடியாமல் போய், களைத்து நின்று, சிவனின் பெருமையை உணர்ந்து, அவரே பேரியவர் என்று பணிந்தனர்.

    பிரமனுக்கு ஞானவாளையும்,[Sword] திருமாலுக்கு சௌபாக்கிய சக்கரத்தையும் [Discus] கொடுத்தார் சிவன்!

    இது இலிங்க புரணத்தில் 352[அல்லது அதற்கு பக்கத்தில்] செய்யுளில் காணலாம். காணலாம்

    ReplyDelete
  19. அண்ணாமலையானுக்கு அரோகரா.

    அண்ணாமலை ஜோதி தரிசனம்
    செய்ய வைத்தமைக்கு
    மிக்க மிக்க நன்றி.

    உங்கள் சேவை மிகவும் மகாத்தானது.

    ReplyDelete
  20. ஒரு நொடி, இங்கேயும் தசாவதாரமான்னு திகைச்சுப் போயிட்டேன் :) தெரிஞ்ச கதையையே கண்ணன் சொல்லிக் கேட்டா, மருந்தா இருந்தது ஏதோ ஒரு மாயத்தால விருந்தாயிடற மாதிரி இருக்கு :)

    ஆடி மாசம் தீபத் தரிசனம் கிடைச்சதுக்கு எங்க குமரனுக்கும், கண்ணனுக்கும் நன்றிகள் :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP