Saturday, March 24, 2007

மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!

என்னாது?
பெருமாள் மட்டையால் அடி வாங்கினாரா? இன்னாப்பா சொல்ற நீ?
கிரிக்கெட் மட்டைய சொல்றியா நீ? வேர்ல்ட் கப்-ல நம்ம பசங்க எல்லாம் கப்-வச்சிட்டாங்களே; டெண்டுல்கர் டக் அவுட் ஆயிட்டாரேன்னு, உனக்கு புத்தி கித்தி ஏதாச்சும் கலங்கிப் போச்சா? சொல்றத தெளிவாச் சொல்லுப்பா!

அட நெசம் தான்பா!
திருவரங்கம் மற்றும் இன்னும் பல கோவில்கள்-ல பெருமாளுக்கு இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் உண்டு, தெரியுமா?
பங்குனி உத்திரம், பங்குனி உத்திரம்-னு ஒரு விழா. இந்த வருடம் ஏப்ரல் 1 அன்று வருகிறது.
அன்னிக்கி தான் இந்த காட்சிய கண்கொள்ளாம பார்க்கலாம். எல்லாப் பக்தர்களும் சும்மா ஜாலியா அடிக்கலாம். நீயும் வரியா? பெருமாளைச் சும்மா ஜாலியா நாலு சாத்து சாத்திட்டு வரலாம்?

தர்மத்தின் நாயகனுக்கு தர்ம அடியா? அடப் பாவிங்களா?
சாத்தமுது சாத்தமுது-ன்னு நீ சொல்றப்பவே நினைச்சேன். இப்படிப் பெருமாளைச் சாத்தி விட்டுத் தான் சாத்தமுது-ன்னு சொல்றீங்களாடா?


டேய், டென்சன் ஆவாதடா மச்சான். Freeஆ விடு மாமே-ன்னு ஒரு சூப்பர் பதிவர் சொல்லியிருக்காரு, தெரியுமா!
பெருமாளைப் போய் யாராச்சும் மனசு வந்து அடிப்பாங்களா?
ஆனா இப்படி அடிப்பதற்கு என்றே மட்டையடி உற்சவம்-ன்னு ஒரு உற்சவம் இருக்குடா!
திருவரங்கம் சென்று என்ன தான் நடக்குதுன்னு பாத்துட்டு வருவோம். இன்னா, நீயும் வரியா?


templeFront

திருவரங்கத்தின் அழகனான அரங்கன்
பங்குனி மாதம், பக்கத்து ஊரான உறையூர் சென்று வருகிறான். எதற்கு?
அவன் மேல் காதலால் உருகி நின்றாள் ஒரு மங்கை - சோழர்குல வல்லி, கமலவல்லித் தாயார் என்ற திருப்பெயர்; மகாலக்ஷ்மியின் அம்சம்.
அரங்கன் வருவானா வருவானா என்று கதவருகே நின்று, ஏங்கி ஏங்கி, அவள் கதவைப் போலவே மரத்து விட்டாள்.

அவளை ஆட்கொள்ள வந்தான் அரங்கன்; அவனை, உறையூரே வேண்டிக் கேட்டுக் கொள்கிறது!
"ரங்கா, எங்கள் வல்லியைத் தவிக்க விட்டு விடாதே; அவள் அன்பை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால், ஒரு பெண் கொடியைச் சித்ரவதை செய்தான் அரங்கன் என்று இந்த உலகமே உன்னைத் தூற்றும் படி செய்து விடுவோம்".

அச்சச்சோ! அவன் மார்பில் கை வைத்து உட்கார்ந்து விட்டான். மார்பில் மகாலக்ஷ்மி ஆயிற்றே!
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை,
என்றும் இருந்திட ஏது குறை உறையூருக்கு?
அவள் தலை அசைந்து விட்டாள்! இதற்கு இசைந்து விட்டாள்!!
மன்னனாய் வந்த அரங்கன் இப்போது மாப்பிள்ளையாகி விட்டான்.
திருமணம் முடிந்து, மீண்டும் திருவரங்கம் செல்கிறார் புது மாப்பிள்ளை!

வந்தது வினை! புது மாப்பிள்ளை தான் ஏற்கனவே பழைய மாப்பிள்ளை ஆயிற்றே! வரும் வழியில் பழைய கல்யாண மோதிரத்தைத் தொலைத்து விடுகிறார் சுவாமி.

போச்சுடா! திருவரங்கத்தில் மகாலக்ஷ்மி என்கிற அரங்கநாயகி, சும்மா விடமாட்டாளே! பெண்கள் எதை விட்டாலும் விடுவார்கள், செண்டிமெண்டை விடமாட்டார்களே! :-)
"ஏங்க, உங்களுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கவும் இசைந்தேனே! அப்படிப்பட்ட என் மோதிரத்தைப் போய் தொலைத்து விட்டீர்களே! அதே போல் என்னையும் தொலைத்து விடுவீர்களா? ஏங்க...ஏங்க...", என்று அவள் ஏங்கி விடுவாளே!

கணவன் அரங்கனைப் பயம் கப்பிக் கொண்டது.
தி.நகரில் கடைக்கு வெளியே நிற்கும் கணவன்மார்களின் பரிதாபமான முகம் அரங்கனுக்கும் வந்து விட்டது! :-)
பல்லக்கில் வரும் அரங்கன், அன்பர்களை எல்லாரையும் மோதிரத்தைத் தேடச் சொல்கிறான்; தானும் தேடுகிறான். கீழே குனிந்து எல்லோரும் தேடிக் கொண்டே பல்லக்கு செல்கிறது. ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை! என்ன செய்வது, பாவம்?
நீங்களே பாருங்கள் அந்தத் தேடும் காட்சியை!




சரி, வேறு வழியில்லை!
கோவிலுக்குள் அவசர கதியில் புகுந்து அரங்கநாயகியின் சந்நிதிக்குள் ஓடோடி வருகிறான்.
மகாலக்ஷ்மி ஒப்புக்கு இசைந்தாலும், மனதுக்கு ஒப்பவில்லை போலும்.
அரங்கன் வரும் நேரம் பார்த்து, கதவு மூடிக் கொள்கிறது!
சர்வேஸ்வரன், உலக நாயகன், தன் வீட்டுக்குள் கூட நுழைய முடியாது திணறுகிறானே! கதவைச் சாத்தி விடுகிறாள் அரங்கநாயகி. ஐயோ பாவம்!
பாருங்கள் காட்சியை! காணக் கிடைக்காத காட்சி!
வாசவன் வாசற்படியில் காத்துக் கிடக்கும் காட்சி!!

srirangam_renganathar_enlar


சண்டை துவங்குகிறது! ப்ரணய கலகம் என்று பெயர்.
தாயார் சார்பாக சில ஊழியர்கள். தலத்தார் என்று பெயர்.
பெருமாள் சார்பாக சில ஊழியர்கள். தொண்டுக் குலத்தார் என்று பெயர்.
தலத்தார் எல்லாம் பெருமாளைத் தடுக்க, குலத்தார் எல்லாரும் தாயாரிடம் கெஞ்சுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், பெருமாள் சலித்துப் போய், பின் வாங்குவது போல் வாங்குகிறார்.
சரி, பெருமாள் கிளம்பி விட்டார் என்று நினைத்து, லேசாகக் கதவைத் திறந்து எட்டிப் பார்க்கிறாள் தாயார்.
உடனே பெருமாள் பின் வைத்த காலை, முன் வைத்து ஒடி வருகிறார்...
படார்....உடனே கதவு மீண்டும் மூடிக் கொள்கிறது....
இப்படியே மூன்று முறை! ஒரே கலாட்டா தான் போங்க!


தாயார் சார்பாக உள்ள மக்கள் எல்லாரும், "ரங்கா, எங்கள் பெண்ணையா ஏமாற்றுகிறாய்", என்று அடிதடிக்குத் தயாராகிறார்கள்!
பூக்களாலும், பழங்களாலும், வெண்ணெய் உருண்டையாலும்
போட்டுத் தாக்கு! இது தான் சாக்கு!
சிறு வயதில் வேண்டிக் கொண்ட பின்பும் தேர்வில் ஃபெயிலான மக்கள்ஸ் எல்லாம், இன்னைக்குன்னு பாத்து தாயார் பக்கம் சேர்ந்துக்கறாங்க! பாவம் பெருமாள்!
அடுத்த அடி என்ன தெரியுமா? மட்டையடி!

என்ன மட்டை? கிரிக்கெட் மட்டையா?
இல்லை இல்லை...
மிகவும் மெல்லிய வாழை மட்டை...அதை வைத்து ஒரு சாத்து!
அதுவே மட்டையடி உற்சவம்.
கணவன் மனைவி கலாட்டா என்ன ஆனது? அரங்கனுக்குக் கதவு திறந்ததா?
பங்குனி உத்திரத்தின் புகழ் பெற்ற சேர்த்தி சேவை.
எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா?....

(Video Courtesy: oppiliappan.org)

42 comments:

  1. யு.எஸ். போனதும் முதல் பதிவு இது தானா? நேரே ஸ்ரீரங்கத்துக்கே கூட்டிப் போய்விட்டீர்கள். ரங்கனையும், ரங்கநாயகியையும் நேரே பார்த்து சமாதானமும் செய்தாச்சு. நல்ல பதிவு.

    ReplyDelete
  2. பங்குனி உத்திரசேர்த்திக் கதை!
    ஸ்ரீங்கமே கொண்டாடும் காவிய உற்சவம்! மட்டையடியின் போது நான் தாயார் பக்கம்! நிஜமாவே ரவி வர்ணித்தமாதிரி நடக்கும். ரங்கன் தொலைந்ததைத் தேடுவதுபோல அங்கும் இங்கும் ஓடுவது கண்கொள்ளா காட்சி! தாயார் படிதாண்டா பத்தினி அல்லவா அதனால் சந்நிதி நுழைவு வாயில்படிக்கு அந்தப்பக்கம் இருந்தபடியே பெருமாள் நைசாய் நுழையும்போது கதவை படால் என சார்த்துவதும், பயந்தமாதிரி பெருமாள் பின்வாங்கி நடப்பதும்....!
    நம்மாழ்வார் வந்து சமாதானம் பண்ணுவதை நீங்களே சொல்லுங்க ரவி..அன்று இரவு முழுவதும் சேர்த்தி சேவை நடப்பதையும்...! அன்றைக்கு ஊரில் பெரும்பாலான வீடுகளில் சக்கரைப்பொங்கல் செய்வோம்..
    ஊரிலிருந்து வந்ததும் அரங்கனையும் அழைத்துவந்துவிட்டீர்களா? அருமை வர்ணித்த விதமும், அளித்தபடங்கள் அத்தனையும்!
    திருவரங்கப்ரியா

    ReplyDelete
  3. இரவிசங்கர். நான் சொல்ல நினைத்ததை கீதாம்மாவும் திருவரங்கப்ரியாவும் சொல்லிவிட்டார்கள். இந்தத் திருக்காட்சியைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். இன்னும் நேரில் காணக் கொடுத்துவைக்கவில்லை. அந்தக்குறை கொஞ்சமாகவாவது இந்த இடுகையைக் கண்டு தீர்ந்தது.

    எங்கள் ஊரிலும் மட்டையடி உற்சவம் உண்டு தெரியுமா? அது பங்குனியில் இல்லை; சித்திரையில் வரும். அந்த உற்சவத்தையும் நான் இதுவரை பார்த்ததில்லை.

    ReplyDelete
  4. அமெரிக்கா வந்ததும்
    அரங்கனுக்கு மட்டையடியா?

    பங்குனி உத்திரம் நன்நாளில்
    பக்தரெல்லாம் கொண்டாடும்

    பாங்கான திருநாளை
    நீங்காமல் நிற்கும்படி

    சொல்லால் வடித்திங்கு
    நிலையாகச் செய்தமைக்கு

    மனமார்ந்த நன்றி.
    கண்ணபிரான் ரவியாரே!

    ReplyDelete
  5. //கீதா சாம்பசிவம் said...
    யு.எஸ். போனதும் முதல் பதிவு இது தானா? ரங்கனையும், ரங்கநாயகியையும் நேரே பார்த்து சமாதானமும் செய்தாச்சு. நல்ல பதிவு.//

    வாங்க கீதாம்மா...ஷாப்பிங் எல்லாம் முடிந்தும் முடியாமல் அவசரம் அவசரமாகக் கிளம்பி வந்தாயிற்று!

    இனிமே தான் தங்கள் இல்லத்தில் நடந்த பதிவர் சந்திப்பு பற்றியெல்லாம் பதிவிட வேண்டும்.
    அரங்கத்தில் துவங்கி அம்பத்தூர் வருகிறேன்! :-)

    ReplyDelete
  6. //ஷைலஜா said...
    ஸ்ரீங்கமே கொண்டாடும் காவிய உற்சவம்! மட்டையடியின் போது நான் தாயார் பக்கம்!//

    ஆகா...திருவரங்கப்ரியா பெருமாள் பக்கம் என்றல்லவா நினைத்தோம்!
    இப்படிக் கட்சி மாறிட்டீங்களே ஷைலஜா!

    //பயந்தமாதிரி பெருமாள் பின்வாங்கி நடப்பதும்....!//

    அய்யோ, அவர் உண்மையாலுமே பயப்படுவாருங்க....என்ன நீங்க பயந்த "மாதிரி" ன்னு சொல்லிட்டீங்க!
    :-)

    ReplyDelete
  7. //குமரன் (Kumaran) said...
    இன்னும் நேரில் காணக் கொடுத்துவைக்கவில்லை. அந்தக்குறை கொஞ்சமாகவாவது இந்த இடுகையைக் கண்டு தீர்ந்தது.//

    முழு ஒளிப்பத்தி இல்லாவிட்டாலும் சிறு துண்டுகள் உள்ளன குமரன். அனுப்பி வைக்கட்டுமா?

    //எங்கள் ஊரிலும் மட்டையடி உற்சவம் உண்டு தெரியுமா? அது பங்குனியில் இல்லை; சித்திரையில் வரும்.//

    கேள்விப்பட்டுள்ளேன் குமரன். சென்னைத் திருவல்லிக்கேணியில் கூட நல்ல ரகளை நடக்கும்.
    ஏசல் என்ற ஒரு சிவாஜி ஸ்டைல் நடையில் சுவாமி நடப்பது சரி காட்சியாக இருக்கும்.

    ReplyDelete
  8. சுவாரசியமான கொண்டாட்டம். படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது. நல்ல குடும்பச்சண்டை போங்கள். :-) நல்ல ரசமாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ரவி.

    ReplyDelete
  9. கண்கொள்ளா காட்சியை விலக்கிய கண்ணபிரானுக்கு நன்றி.இதை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
  10. ///Selvan Said:
    கண்கொள்ளா காட்சியை விளக்கிய கண்ணபிரானுக்கு நன்றி.இதை இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை. ///

    நானும்தான்!
    நன்றி மிஸடர் கண்ணபிரான்!

    ReplyDelete
  11. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே! ஆனாலும் இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!! :))

    //Freeஆ விடு மாமே-ன்னு ஒரு சூப்பர் பதிவர் சொல்லியிருக்காரு, தெரியுமா!//

    இது யாருங்க?? :))

    ReplyDelete
  12. ரவிசங்கர்!
    எங்கள் ஈழப் பெருமாள் கோவில்களிலும் இப்படியான விழாக்கள் இருந்திருக்கலாம். பார்க்கக் கிடைக்கவில்லை. ரங்கநாதரை உங்கள் பதிவில் பார்த்தேன்.
    நன்றி

    ReplyDelete
  13. ஆறுமை!!
    உங்கள் எழுத்துக்களை திரும்பவும் காண்பதில் நன்றி.
    துலுக்க நாச்சியார் கதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை உண்டு.
    இதை பற்றி இணையத்தில் எங்காவது கிடைத்தால் சொல்லுங்கள்!! :-)

    ReplyDelete
  14. பெருமாளா இருந்தாலுமே ஒரு பெண்டாட்டிக்கு கூடுதலா இருந்தால் (மட்டை)அடிதான்.:-))))

    பயணம் நல்லா இருந்ததா?

    ReplyDelete
  15. மட்டையடி பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது தான் விளக்கமாக அறிய முடிந்தது.நன்றி.
    என்னதான் பதிவாக இருந்தாலும் நம்ம இ.கொத்தனாரும்,துளசியும் ஒரு வரியில் சொல்லி எல்லாவற்றையும் அள்ளிப்போய்விடுகிறார்கள்.:-))))
    பொறாமையாக இருக்கு.

    ReplyDelete
  16. குமார்,

    என்ன நம்மளை டீச்சர் லெவலுக்குத் தூக்கி வைக்கறீங்க. அவங்க செய்யறதை நான் காப்பிதான் அடிக்கறேன். கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் விஜய.டி முன்னாடி அவரை மாதிரியே மிமிக்ரி பண்ணறாங்களே, அந்த மாதிரி. :))

    ReplyDelete
  17. //"மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!" //

    பிட்டுக்கு (புட்டு) மண் சுமந்து சிவபெருமான் பிரம்படி பட்டது போல் கதைகள் வைணவத்திலும் உண்டா ?

    ReplyDelete
  18. //"மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!" //

    கேள்விப்பட்டு இருக்கின்றேன், இது வரை பார்த்தது இல்லை ரவி.

    குமரனுக்கு அனுப்பும் போது என் பெயரையும் சேர்த்துக் கொள்ளவும்
    :-))))

    ReplyDelete
  19. //கோவி.கண்ணன் said...
    //"மட்டையால் தர்ம அடி வாங்கிய பெருமாள்!" //
    பிட்டுக்கு (புட்டு) மண் சுமந்து சிவபெருமான் பிரம்படி பட்டது போல் கதைகள் வைணவத்திலும் உண்டா ?//

    புட்டுக்கு மண் சுமந்தது போலவே நிறைய இருக்கு GK ஐயா.
    என்ன அங்கு அடியை அரசன் கொடுத்தான்.
    இங்கு அடியை ஒரு அன்பன் கொடுத்தான் :-)

    அங்கு பிரம்பால் படி
    இங்கு கடப்பாரையால் அடி
    இதோ சுட்டி

    இன்னும் இது போல் நிறைய திருவிளையாடல் எல்லாம், ஒன்று போலவே எந்த பேதமும் இல்லாமல் இருக்கும்!

    ReplyDelete
  20. ரவி
    பங்குனி உத்தர கதை நல்லாயிருக்கு. இத்தனை கால இடைவெளிக்கு பின் வந்தவுடனேயே அரங்கனுக்கு மட்டையடியா?
    எங்க ஊர்க் கோயில்களிலும் வெள்வீதி வலம் வந்து முடிக்கும்போது மூன்று முறை முன் வைத்தகாலை பின்வைத்து சாமியைக் காவிக் கொண்டு ஓடிவருங் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்!
    நன்றி, பகிர்ந்தமைக்கு.

    ReplyDelete
  21. ரவி, ஊர் வந்தாச்சா?
    பதிவர் சந்திப்பு நடந்ததா?
    அடே.
    முதல் பிள்ளையார் சுழி அரங்கனுக்கு மட்டையடி.
    அவர் பாட்டு ஊருக்கொரு கல்யாணம் பண்ணிப்பார். இங்கெ எங்க அம்மா கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க வேண்டுமோ. நல்லா இருக்கே சேதி:-)
    படு உற்சாகமான பதிவு.
    அழகான படங்கள்.

    ReplyDelete
  22. //VSK said...
    அமெரிக்கா வந்ததும்
    அரங்கனுக்கு மட்டையடியா?
    சொல்லால் வடித்திங்கு
    நிலையாகச் செய்தமைக்கு//

    ஆகா
    இது கவிதைப் பின்னூட்டமா இல்லை பின்னூட்டக் கவிதையா?
    மிக அருமை Vithagar.SK ஐயா.

    ReplyDelete
  23. // G.Ragavan said...
    சுவாரசியமான கொண்டாட்டம். படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது.//

    ஜிரா...உங்களைத் தான் ஊரில் பாக்க முடியவில்லை. இங்கு வரும் போதாச்சும் பாக்கலாம் வாங்க.

    படிக்கும் பொழுதே ஒரு மகிழ்ச்சி பொங்குகிறது உண்மை தான் ஜிரா. பார்க்கும் போது இன்னும் ஜாலியாக இருக்கும். அதுவும் சுவாமியின் தமிழ்ப் பாட்டோலை வாசிக்கும் போது!

    ReplyDelete
  24. // செல்வன் said...
    கண்கொள்ளா காட்சியை விலக்கிய கண்ணபிரானுக்கு நன்றி.இதை இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.//

    நன்றி செல்வன். நிறைய பேருக்கு இது போன்ற சுவையான நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து மகிழ வாய்ப்பு அமைவதில்லை. பதிவில் பார்த்தாச்சும் மகிழ்வார்கள் அல்லவா?

    விலக்கிய=விளக்கிய:-)

    ReplyDelete
  25. // SP.VR. சுப்பையா said...
    நானும்தான்!
    நன்றி மிஸடர் கண்ணபிரான்!//

    மிக்க மகிழ்ச்சி சுப்பையா சார்.
    நன்றி

    ReplyDelete
  26. //இலவசக்கொத்தனார் said...
    எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே! ஆனாலும் இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!! :))//

    அதானே! ரொம்ப கரெக்ட் கொத்ஸ்!
    நீங்களும் அப்படித் தானே? :-)
    தாங்குவீங்க இல்லையா? :-))

    ////Freeஆ விடு மாமே-ன்னு ஒரு சூப்பர் பதிவர் சொல்லியிருக்காரு, தெரியுமா!//
    இது யாருங்க?? :))//

    சங்கப் புலவர், சங்கப் பதிவர், பின்னூட்ட நாயகர், வெண்பா வேந்தர், விக்கியின் செல்வன்....
    இப்ப தெரியுதுங்களா?

    ReplyDelete
  27. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ரவிசங்கர்! எங்கள் ஈழப் பெருமாள் கோவில்களிலும் இப்படியான விழாக்கள் இருந்திருக்கலாம்.//

    வாங்க யோகன் அண்ணா.
    ஈழத்தில் நால்வர் பாடிய பஞ்ச-ஈஸ்வரம் கோவில்கள் பற்றி எழுத ஆசை. பொதுவாக ஈழத்துச் சிவன் கோவில்கள் பற்றித் தெரிந்த அளவுக்குப் பெருமாள் கோவில்கள் பற்றித் தெரியவில்லை.

    வைணவ வேளாளர்கள் பொன்னலை என்ற இடத்தில் வரதராஜப் பெருமாள் கோவில் ஒன்று எழுப்புவித்தார்கள் என்று என் ஈழத்து நண்பி ஒருவர் சொன்னார். யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் பெருமாள் கோவில்கள் உண்டு என்றும் சொன்னார்.

    அதைப் பற்றி உங்களிடம் எல்லாம் தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களோ மலைநாடான் ஐயாவோ இது பற்றி எழுதினால் மிகவும் மகிழ்வோம்.

    ReplyDelete
  28. //CVR said...
    துலுக்க நாச்சியார் கதை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை உண்டு.
    இதை பற்றி இணையத்தில் எங்காவது கிடைத்தால் சொல்லுங்கள்!! :-)//

    வாங்க CVR.
    துலுக்க நாச்சியார் திருக்கதையும் பெருமாள் லுங்கி அணிந்து ரொட்டி நிவேதனம் புரிந்தருள்வதையும், ஆழ்வார்களுக்கு கைலி உடை தருவதையும் பற்றி அடியேனும் பின்னர் எழுதுகிறேன். ஒரு இஸ்லாம் திருநாள் அன்று எழுதினால் நன்றாக இருக்கும். முயல்கிறேன்.

    ReplyDelete
  29. //துளசி கோபால் said...
    பெருமாளா இருந்தாலுமே ஒரு பெண்டாட்டிக்கு கூடுதலா இருந்தால் (மட்டை)அடிதான்.:-))))//

    வாங்க டீச்சர்.
    ஒரு பெண்டாட்டி தானே, ஒவ்வொரு ரசனைக்கும் ஏற்றவாறு பல பெண்டாட்டிகளாகத் தெரிகிறார்கள்! :-)
    அனைவரும் மகாலக்ஷ்மி தானே!

    பாவம்...டீச்சரே மட்டையால் அடித்தால் பெருமாள் எங்கு போவார்? :-)

    //பயணம் நல்லா இருந்ததா?//

    நன்றாக இருந்தது டீச்சர்.
    கீதாம்மா வீட்டில் பதிவர் சந்திப்பு பற்றியும் எழுத வேண்டும்.

    ReplyDelete
  30. //வடுவூர் குமார் said...
    மட்டையடி பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்போது தான் விளக்கமாக அறிய முடிந்தது.நன்றி//

    நன்றி குமார் சார்.

    //என்னதான் பதிவாக இருந்தாலும் நம்ம இ.கொத்தனாரும்,துளசியும் ஒரு வரியில் சொல்லி//

    அதானே. உண்மை! உண்மை!!

    ReplyDelete
  31. நன்றி கண்ணபிரான்
    எனக்கு இதை பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு ஆங்கிலத்தில் கதையாக எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக கனவு உண்டு!! ;-)

    ReplyDelete
  32. இரவி,

    போன வருடம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த இடுகைகளை இட்டேன். படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையெனில் படித்துப் பாருங்கள்.

    http://koodal1.blogspot.com/2006/04/166-1.html
    http://koodal1.blogspot.com/2006/04/167-2.html
    http://koodal1.blogspot.com/2006/04/168-3.html

    ReplyDelete
  33. //இலவசக்கொத்தனார் said...
    எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே! ஆனாலும் இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவண்டா!! :))//

    அதானே! ரொம்ப கரெக்ட் கொத்ஸ்!
    நீங்களும் அப்படித் தானே? :-)
    தாங்குவீங்க இல்லையா? :-))//

    என்னங்கடா பிளான் பண்ணறீங்களே. கைப்புவை வேற காணும் இந்த நேரத்தில். எனக்குப் பயமா இருக்கே. அவ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  34. KRS... ரொம்ப நல்ல பதிவுங்க!

    பெருமாள் பெருமை படிப்பதும் பார்ப்பதும் கோடி புண்ணியம்! அதை ஒரே இடத்தில் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி.

    //பங்குனி உத்திரத்தின் புகழ் பெற்ற சேர்த்தி சேவை.
    எல்லாம் அடுத்த பதிவில் பார்ப்போமா?....//

    அவசியமா பார்ப்போம்.

    ReplyDelete
  35. //நாகை சிவா said...
    குமரனுக்கு அனுப்பும் போது என் பெயரையும் சேர்த்துக் கொள்ளவும்
    :-))))//

    அப்படியா ஆகட்டும் புலியாரே!

    ReplyDelete
  36. //செல்லி said...
    எங்க ஊர்க் கோயில்களிலும் வெள்வீதி வலம் வந்து முடிக்கும்போது மூன்று முறை முன் வைத்தகாலை பின்வைத்து சாமியைக் காவிக் கொண்டு ஓடிவருங் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்!//

    நன்றி, செல்லி;
    ஆமாம் உங்க ஊர் கோவில் எது என்று சொல்லவே இல்லியே! :-)

    ReplyDelete
  37. //வல்லிசிம்ஹன் said...
    ரவி, ஊர் வந்தாச்சா?
    பதிவர் சந்திப்பு நடந்ததா?//

    வந்தாச்சு வல்லியம்மா; மயிலையில் உங்களை ஸ்பெஷலாக நினைத்துக் கொண்டேன்!

    சந்திப்பு கீதாம்மா வீட்டில்; எழுதிப் பதிவிடுகிறேன்.

    //அவர் பாட்டு ஊருக்கொரு கல்யாணம் பண்ணிப்பார். இங்கெ எங்க அம்மா கதவைத் திறந்து வைத்துக் காத்திருக்க வேண்டுமோ. நல்லா இருக்கே சேதி:-)//

    அடடா
    நான் யார் யார் எல்லாம் பெருமாள் கட்சின்னு நினைச்சிருந்தேனோ, அவங்க எல்லாம் இப்படி தாயார் பக்கம் கட்சி மாறரீங்களே!
    தாயாரே..ஒஓ...பெருமாளே, இது நியாயாமா? :-))

    ReplyDelete
  38. //குமரன் (Kumaran) said...
    இரவி,
    போன வருடம் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இந்த இடுகைகளை இட்டேன்.//

    படித்தேன், ரசித்தேன் குமரன்!
    சரி
    நான் வாழ்த்துக்கு ரெடியாகுகிறேன்
    நீங்க treat-க்கு ரெடியாகுங்க! :-)

    ReplyDelete
  39. //சிவமுருகன் said...
    KRS... ரொம்ப நல்ல பதிவுங்க!
    பெருமாள் பெருமை படிப்பதும் பார்ப்பதும் கோடி புண்ணியம்! அதை ஒரே இடத்தில் தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி.//

    நன்றி சிவா...
    தங்களிடம் தொலைபேசியது மிக்க மகிழ்ச்சி. மதுரையில் உங்களையும் கால்கரி சிவாண்ணாவையும் ஸ்பெஷலாக நினைத்துக் கொண்டேன்! :-)

    சித்திரைத் திருவிழா வருகிறதே!
    என்ன ஸ்பெஷல் உங்கள் வலைப்பூவில்???
    ஆவலுடன் காத்துள்ளேன்!

    ReplyDelete
  40. ரவி, இன்றுதான் இந்த பதிவினைப் படித்தேன்....அருமை.....எத்தனை முறை கேட்டாலும் அரங்கன் கதைகள் அலுப்பதில்லை. நன்றி.

    ஆமாம், நான் உங்கள் மெயில் கண்டு போன் செய்தேன் (கீதா மேடம் இல்லத்து சந்திப்பு சமயத்தில்) உங்கள் தந்தையார் பேசினார்...நீங்கள் பிஸியாக யாருடனோ பேசிக்கொண்டிருப்பதாகவும் பின் தொடர்பு கோள்வீர்கள் என்றார், ஆனால் தற்போதுதான் தெரிகிறது நீங்கள் இந்தியாவில் இல்லை என்று.

    ReplyDelete
  41. nanum srirangam la 7 varusham irunthu irukken. intha kathai theriathu. adutha varusham nerla poi kandu kalikiren. nanri,nanri,nanri.

    ReplyDelete
  42. Wonderful. Azhagu tamil. Vazhga valamudan

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP