Wednesday, April 11, 2007

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனாரே!

சுல்தானி பீவி, நாச்சியார் ஆனார்! - அட, இது என்ன மதமாற்றமா?
கட்டாய மத மாற்றத் தடைச்சட்டம் பாயவில்லையா? காட்டுக் கூச்சல்கள் எதுவும் ஓயவில்லையா? :-)

இருங்க, இருங்க...நீங்க பாட்டுக்குன்னு பேசிக்கினே போனா எப்படி?
யாருங்க இந்த சுல்தானி பீவி? அவங்க ஏன் நாச்சியார் ஆனாங்க?
நமக்குத் தெரிஞ்ச நாச்சியார், நம்ம வல்லியம்மா என்கிற பதிவர் தானே! அவங்க தான் வலைப்பூவுக்குத் நாச்சியார்-ன்னு பேரு வைச்சிருக்காங்க.

அது சரி. கேக்கணும்னு நினைச்சேன்.
இந்த நாச்சி நாச்சி-ங்கறாங்களே, நாச்சி-ன்னா என்னாங்க?
ஆச்சி, பேச்சி போல இந்த நாச்சியும் வட்டார வழக்கா? தமிழ் மாதிரி தான் தெரியுது்;
ஆனா இந்தக் காலத்துல சொன்னா, ஏதோ கிராமத்தான், காட்டான்-ங்கிற மாதிரி பாக்குறாங்களே!

வாங்கய்யா வாங்க! நியாயமா, சொல் ஒரு சொல் பதிவுல போய் நீங்க கேக்கோணும்.
உங்களுக்கு நாச்சி-ன்னா அவ்வளவு சீப்பா போயிடுச்சா?

ஆண்டாள் நாச்சியார், கோதை நாச்சியார், ரங்க நாச்சியார், நிலமங்கை நாச்சியார், திருவிளக்கு நாச்சியார், திருவாதிரை நாச்சியார், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார்...
இதுல ஒருத்தராச்சும் கேள்விப்பட்டு இருக்கீங்களா?
பொன்னியின் செல்வன் குந்தவை நாச்சியார் - இவங்க என்ன கிராமமா - பட்டணமா?

நாயன்=ஆண் பால்; நாச்சி=பெண் பால்
நாயன், நாச்சி
நாயனார், நாச்சியார்!
நாயன்மார், நாச்சிமார்!
தலைவன், தலைவி - அப்பிடின்னு பொருள்!
இன்னொரு வாட்டி பேசினீரு, வாட்டி எடுத்துடுவோம், ஞாபகம் வைச்சிக்குங்க!:-)

சரிப்பா..சரிப்பா...கோச்சிக்காதே! நீ சுல்தானி நாச்சியாருக்கு வா; அது என்ன கதை?


இந்தக் காலத்தில் ஒரே சாதியில் கல்யாணம் பண்ணிக்கறத்துக்கே ஆயிரம் நொள்ளை, சொள்ளை சொல்லறாங்க!
கொஞ்சம் நிறைய பாசம் வச்சி வளர்த்துட்டுங்கன்னா, வேற சாதி வேற மதம்-ன்னு வரும் போது, ஒரு இறுக்கமும் கூடவே வந்து விடுகிறது.
என்ன தான் வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் ஆரம்பத்தில் ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது!
ஆனா அதையெல்லாம் மீறி வருபவர்கள், இப்பல்லாம் கொஞ்சம் அதிகம்.

ஆனா ஒரு ஆயிரம் ஆண்டுக்கு முன்னே, முகம்மதியப் பெண் ஒருத்தி, இந்துப் பையன் ஒருவனைக் காதலித்தால்?
அதுவும் அவனைப் பற்றி ஒன்றுமே கேள்விப்படாமல், காதலித்தால்?
அதுவும் அவனிடம் எதுவுமே பேசாமல், காதலித்தால்?
சாட்டிங், ஆர்குட் இவை எல்லாம் எதுவும் கிடையாது அப்போது.

அவன் உருவத்தை மட்டுமே வைத்து நெஞ்சு நிறைய காதல்!
சரி அவன் இருக்கும் ஊருக்கே வந்து பேசலாம்-ன்னு அந்தப் பொண்ணு கிளம்பி வந்தா, பையன் தெய்வமாய் நிக்கறான்!
வந்தவளும் உயிரை விட்டுத் தெய்வமாக நின்று விட்டாள்!
பையன் பெயர் = சம்பத்குமாரன் என்கிற திருநாராயணப் பெருமாள்
பெண்ணின் பெயர் = சுல்தானி பீவி என்கிற துலுக்கா நாச்சியார்
(சூரத்தானி பீவி என்றும் அழைக்கிறார்கள்)


மைசூரில் இருந்து தும்கூர் செல்லும் வழியில் ஜக்கனஹள்ளி. அதற்கு அருகே உள்ள ஊர் தான் Melkote என்னும் மேலக்கோட்டை.

சோழ அரசன் சொந்த ஊரில் மத வெறி கொண்டு அலைகிறான்.
இறைப்பணி இடையறாது நடக்க வேண்டுமே என்று இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்து இந்த ஊர் பக்கம் வருகிறார்.
ஊர்க் கோவில் மண்மேடாய் கிடக்கிறது. மக்களைக் குறை சொல்ல முடியுமா? பாவம், அவர்களே தவிச்ச வாய்க்குத் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்!

பார்த்தார் இராமானுஜர்! அகண்ட காவிரியைப் பார்த்துப் பழகியவர் ஆயிற்றே!
முதலில் மக்கள் பணி! பின்பு மாயவன் பணி!!
தொண்டனூர் என்னும் பக்கத்து ஊரில் நீர் தேக்கி வைக்க பெரிய ஏரி ஒன்றை வெட்டுவிக்கலாம் என்று ஏற்பாடுகள் செய்கிறார். தொண்டனூர் நம்பி என்ற அவர் சீடர், இதற்குப் பெரிதும் உதவி!
பின்பு இந்த வறண்ட ஊரில், கல்யாணி குளம் என்ற குளம் ஏற்படுத்தி, அடிக் கால்வாய் மூலமாக அதில் நீர் நிறைத்தார்.
பின்பு நீர்வண்ணனையும் மனக் குளத்தில் நிறைத்தார்!

57971640.17KalyaniKolam

கோவில் பணிகள் கிடுகிடுவென்று தொடங்கின!
மண்ணில் புதையுண்ட மூலவர் விக்ரகம் - திருநாராயணப் பெருமாளைக் கண்டு எடுக்கிறார்.
ஒரு காலத்தில் சிறப்பாய் விளங்கிய ஆலயம் இப்படிக் கவனிப்பார் இன்றி ஆகி விட்டது! பேசாமல் விட்டு விட்டு வேறு செழிப்பான கோவிலுக்குப் போய் வசதியாகச் சாப்பிட்டுக் கொண்டே பணி செய்யலாமே! அவருக்கு வயது வேறு 80ஐ நெருங்குகிறது! ஆனால் உடையவர் இராமனுஜருக்கு மனசு வருமா?

புதிதாக ஆயிரம் ஆலயங்கள் எழுப்பவதற்கு முன், சிதிலமானவற்றைச் சீரமைக்கலாம் இல்லையா? பெற்ற தாய்க்கு வைர அட்டிகை வாங்கித் தருவதற்கு முன், அவள் கிழிந்த புடைவைக்கு வழி காணலாம் இல்லையா?
கோவில் சீரமைப்பு முழு வீச்சில் நடக்கிறது.

* மூலவரைப் போல் உற்சவர் ஒருவர் இருக்க வேண்டுமே! எங்கே அந்தத் திருவுருவம்?
# பிஜப்பூர் சுல்தான் முன்னொரு படையெடுப்பில் வந்து பல செல்வங்களையும் சிலைகளையும் கவர்ந்து கொண்டு போய் விட்டான் ஐயா. இனி கேட்டாலும் அந்த ராமப்ரியன் என்ற தங்க விக்ரகம் கிடைக்காது - மக்கள் எல்லாரும் சொல்கிறார்கள்.
(இது பிஜப்பூர் சுல்தான் இல்லை, தில்லி சுல்தான் என்று சொல்பவரும் உண்டு).

இராமானுஜர் ஒரு கணம் சிந்திக்கிறார். தாமே சுல்தானிடம் போய் உற்சவரைப் பெற்று வருவதாகச் சொல்கிறார். வயதான காலத்தில் கால் கடுக்க நடந்து சுல்தானின் மாளிகையை அடைகிறார்.
சுல்தான் முதலில் சற்று ஏளனமாகப் பேசினாலும், பின்பு இராமானுஜரின் அன்பையும் அறிவுக் கூர்மையும் கண்டு சற்றே மனம் மாறுகிறான்.
வேறு எந்தப் பொருளும் தரமாட்டேன். இந்தப் பொம்மையை மட்டும் தான் தருவேன்! சம்மதமா நாமக்காரப் பெரியவரே?

மன்னா, மற்ற செல்வம் எல்லாம் கேட்க மாட்டேன்.
செல்வத்துள் செல்வம் மட்டுமே எனக்கு வேண்டும்.
செல்வப் பிள்ளை அவன். சம்பத்குமாரன் என்பது தான் அவன் முழுப் பெயர். இருந்தாலும் செல்வப் பிள்ளை என்று தான் ஆசையாய் அழைக்கிறோம்! அவனை மட்டும் தருவாய் அப்பனே!

சரி பெரியவரே, கொள்ளைப் பொருட்கள் சேமிக்கும் கூடாரத்தில் தேடச் சொல்கிறேன்.....
ஆகா....என்ன? ஆட்கள் எவ்வளவு தேடியும் எங்கும் கிடைக்கவில்லையா! எங்கே போய் இருக்கும்? நான் களவாடிய பொருளையே களவாடிய களவாணிப் பயல்கள் யார்?
ஆங்....ஞாபகம் வந்து விட்டது. என் ஆசை மகள் லச்சமார் சுல்தானி, அதை அந்தப்புரத்துக்கு அல்லவா விளையாட எடுத்துப் போனாள்?

sultani


இராமானுசருக்கு கண் கலங்கி விட்டது.
"நான் ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்பது போய்,
"நீ ஒரு விளையாட்டுப் பொம்மையா" என்று மாற்றிப் பாட வேண்டியது தானோ!
பருவ மங்கை சுல்தானி, தந்தையின் சபைக்கு வருகிறாள்;
இராமானுஜருக்கோ கண்கள் எல்லாம் கரியவன் மேலேயே உள்ளது. ஆனால்....

அப்பா, இது என் ஆசை பொம்மை மட்டும் இல்லை;
இதன் அழகைப் பாருங்களேன்! இதழில் எப்படி குறுஞ்சிரிப்பு சிரிக்கிறது!
நான் எங்கு சென்றாலும், இதை எடுத்துக் கொண்டு தானே செல்வேன்.
இதை எப்படி வாப்பா என்னால் தர முடியும்?
போங்க வாப்பா! தர முடியாது!
தூங்கும் போது கூட, இதை கட்டிக் கொண்டு தானே தூங்குவேன்!

அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)
அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா?
நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

(விக்ரகம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா? சுல்தானி பீவி எப்போது நாச்சியார் ஆனார்?
மேலக்கோட்டையில் இருந்த விக்ரகம் இது என்றால், திருவரங்கத்தில் எதற்கு பீவிக்குக் தனிச் சந்நிதி? - எல்லாம் அடுத்த பதிவில்!)

44 comments:

 1. //அடப் பெருமாளே! கடைசியில் உன் கதி இந்தக் காலத்து Teddy Bear போலவா ஆக வேண்டும்! :-)
  அவள் தான் கரடிப் பொம்மை போல் கட்டிக் கொண்டு தூங்கினால், ஏ ராமப்ரியனின் சிலையே, உனக்கு அவளை விட்டு எழுந்து, நடந்து வர கூடத் தெரியாதா? நடந்த திருக்கோலம் என்பார்களே! இது தானா உலகளந்த உன் பராக்கிரமம்?

  (விக்ரகம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா? சுல்தானி பீவி எப்போது நாச்சியார் ஆனார்?
  மேலக்கோட்டையில் இருந்த விக்ரகம் இது என்றால், திருவரங்கத்தில் எதற்கு பீவிக்குக் தனிச் சந்நிதி? - எல்லாம் அடுத்த பதிவில்!)

  Posted by kannabiran, RAVI SHANKAR (KRS) on Wednesday
  //

  ரவிசங்கர்,

  அருமையான இடுகை. நல்ல எழுதி இருக்கிங்க அங்காங்கே நகைச்சுவை பொடி.
  :)

  ReplyDelete
 2. மிகச் சுவைப்பட எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. துலுக்கா நாச்சியார் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனால் ஏன் என்று யோசிக்கவில்லை.
  இந்த பதிவு மூலம் பாதி தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete
 4. முந்தி ஒரு கதை(??) கூடப் படிச்ச ஞாபகம். எழுதுனது ஸ்ரீவேணுகோபாலன்னு
  நினைவு.

  படம் அட்டகாசம். பீவி நாச்சியாருக்காகத்தான் நம்மாளு ரொட்டி துன்றார்:-)

  ReplyDelete
 5. ஆஹா, ஆஹா!!
  என்ன அருமை இன்றைய தினம்.
  உங்கள் பக்கத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட மென்புத்தகங்கள், வயது வந்தோரை திருப்பதி கூட்டிப்போன புண்ணியும் கிடைக்கும்படி செய்துவிட்டது.
  இதற்கு நன்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை.அவர்கள் வாழ்த்துவதை உங்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.வாழ்க வளமுடன்.
  ஈ ஸ்னிப் போனால் அங்கும் ஒரு ஆச்சரியம்.ஆமாங்க வடுவூர் ராமரின் கலர் படம் கண்கொள்ளா காட்சி கிடைத்தது,சுட்டு விட்டேன். மன்னிக்கவும்.
  ஆமாம் அதற்கு தேசிகன் என்று பெயர் சூட்டி உள்ளீர்களே! ஏதேனும் விசேஷமா?ஏன் கேட்கிறேன் என்றால் அங்கு ஒரு காலத்தில் தேசிகன் என்பவர் மிக பிரபலமாக இருந்தவர் என் அம்மாவை மிகவும் தெரிந்தவர்.மன்னார்குடிக்காரர்.அவருடைய உச்சரிப்பு இன்றும் பிரபலம்.
  எல்லாவற்றுக்கும் மீண்டும் நன்றி நன்றி.

  ReplyDelete
 6. "ஆராதிக்கும் அடியவரை விட்டு என்றைக்கு நான் நகர்ந்திருக்கிறேன்?

  அன்புடன் ஆராதிப்பவர் "எவரானாலும்" என் அடியவரே!

  எனக்கு கிடந்த கோலமும் உண்டே!
  கண்டதில்லையா மகனே!"

  இப்படிச் சொல்லியிருப்பார் ராமப்ரியன் என எண்ணுகிறேன், திரு. ரவி!

  நாய்ச்சியார் என்பதே சரி என ஒரு இடத்தில் படித்தேன்.

  ReplyDelete
 7. ரவி, நாம் மதம் பார்க்கலாம். ஜாதி பார்க்கலாம். ஆண்டவன் பார்ப்பானா? அன்பைக் கொண்டு அளப்பவனுக்கு சுல்தான் பீவியும் சுனிதாவும் ஒன்றுதான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே. கொண்டாடியது சுல்தான் பீவி. ஆகையால்தான் அவரை நாம் கொண்டாடுகிறோம்.

  நாச்சிக்கு விளக்கும் சொல்லி சொல்லொரு சொல்லையும் இங்கே கொண்டு வந்து விட்டீர்கள். நல்லது.

  அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 8. துலுக்க நாச்சியார் சன்னிதி,ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது.

  அதுவேறு,
  இந்த சுல்தான் பெண் வேறு என்று நினைத்தேன். இப்படிப்போகிறதா கதை.

  சீக்கிரம் அடுத்த கட்டம்ம்.:-)
  அப்ரமேயன் படம் கூடப் போடலாமே.

  ReplyDelete
 9. கண்ணபிரான், உங்கள் நடையில் இந்த விருத்தாந்தத்தை தெளிவாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

  இந்த சம்பவங்கள் முழு அளவில் வரலாற்று உண்மையா என்று தெரியவில்லை, ஆனால் இந்த கர்ணபரம்பரைக் கதையில் கண்டிப்பாக ஏதோ ஒரு வரலாற்று இழை உள்ளது.

  மதவெறி பிடித்த இஸ்லாமிய மன்னர்களின் குடும்பத்திலும் எம்பெருமான் திருநாராயணன் மேல் காதல் கொண்ட இப்படி ஒரு பெண் இருந்திருக்கிறாள் என்பது ஆச்சரியமில்லை. காதல் இயற்கையான உணர்வு. அதை அவள் வெளிப்படுத்தியும் இருக்கிறாள்.

  ஆனால் இந்த உணர்வை வெளிப்படுத்தியவளைக் கொல்லத் துணியாத ஒருவிதமான மென்-இஸ்லாம் வகையும் சில இடங்களில் அந்த காலகட்டத்தில் பாரதத்தில் வழக்கில் இருந்தது என்பது தான் இதில் அறியப்படும் முக்கிய சேதி. ஜிகாதி தீவிரவாதம் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இத்தகைய கதைகளை மீண்டும் சொல்ல வேண்டும்.

  கண்ணன் மேல் காதல் கொண்ட ரஸ்கான் என்ற இஸ்லாமியக் கவிஞர் பற்றி அறிந்திருப்பீர்கள். ராமானந்தரின் சீடர் கபீர்தாசர் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

  அதே சமயம் உபனிஷதங்களைப் படித்து பாரசீக மொழியில் மொழிபெயர்த்ததால், கோயிலுக்கு மானியம் தந்ததால், இஸ்லாமுக்கு எதிரி என்று அடையாளம் காட்டப்பட்டு ஔரங்கசீப்பால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பட்டத்து இளவரசர் தாரா ஷுகோ (இவர் ஔரங்கசீப்பின் அண்ணா) போன்றவர்களது உதாரணம் தான் இஸ்லாமிய வரலாறு முழுதும் காணக் கிடைக்கிறது. காசியில் குமரகுருபரருக்கு மடம் கட்ட நிலம் தந்தவர் இந்த தாரா ஷுகோ தான்.

  இத்தகைய சூழலிலும் தர்மத்தையும், பக்தியையும் காத்து வளர்த்த ஸ்ரீராமானுஜர் போன்ற சான்றோர்களை வாழ்த்தி வணங்குவோம்.

  ReplyDelete
 10. இந்த கோவிலை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. செலுவ கேசவ பெருமாள் அழகாக இருக்கிறார். வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் வைரமுடியுடன் (கிரீடம்) காட்சியளிக்கிறார். குன்றின் மேலே ஒரு யோக நரசிம்மரும் இருக்கிறார்.

  ReplyDelete
 11. ரவி,
  தலைப்பைப் பார்த்துவிட்டு என்ன வட இந்திய மொழிகளில் ஏதோ சொல்கிறீர்களோ என நினைத்துவிட்டேன்.

  நல்ல பதிவு. இரசிக்கும் வண்ணம் மிகவும் சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோயிலடி என ஒரு இடம் உண்டு.இப்ப உங்களின் பதிவை வாசித்த பின்னர்தான் இந்த இடத்திற்கு ஏன் இப்படிப் பெயர் வந்தது என ஊகிக்க முடிகிறது. யாழ்ப்பாணத்தில் 90% இடங்களின் பெயர்கள் காரணப் பெயர்கள்.

  ReplyDelete
 12. //கோவி.கண்ணன் said...
  அருமையான இடுகை. நல்ல எழுதி இருக்கிங்க அங்காங்கே நகைச்சுவை பொடி.:)//

  நன்றி GK ஐயா. உண்மையில் இது சோகக் கதையா முடியும். அதான் நடுவில் கொஞ்சம் நகைச்சுவை வைத்தால், டிவி சீரியல் அழுகை போல் ஆகாமல் இருக்கும் :-))

  ReplyDelete
 13. //இலவசக்கொத்தனார் said...
  மிகச் சுவைப்பட எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
  //

  நன்றி கொத்ஸ்

  ReplyDelete
 14. //வடுவூர் குமார் said...
  துலுக்கா நாச்சியார் என்று கேள்விப்பட்டு இருக்கேன்.ஆனால் ஏன் என்று யோசிக்கவில்லை.
  இந்த பதிவு மூலம் பாதி தெரிந்துகொண்டேன்.//

  அடுத்த பதிவில் முழுக்கச் சொல்லி விடுகிறேன் குமார் சார்.

  ReplyDelete
 15. //துளசி கோபால் said...
  முந்தி ஒரு கதை(??) கூடப் படிச்ச ஞாபகம். எழுதுனது ஸ்ரீவேணுகோபாலன்னு
  நினைவு.//

  ஆமாம் டீச்சர்; திருவரங்கன் உலா!
  அதில் கதை சற்று வேறு மாதிரி இருக்கும்!

  //பீவி நாச்சியாருக்காகத்தான் நம்மாளு ரொட்டி துன்றார்:-)//

  லுங்கியும் கட்டறார் :-))

  ReplyDelete
 16. //மிகச் சுவைப்பட எழுதி இருக்கிறீர்கள். //
  repeatu

  ReplyDelete
 17. கே.ஆர்.எஸ்,

  அழகாய் வருகிறது செல்(வ/ல)பிள்ளையின் வரலாறு. நன்றி.

  அங்கு கோவிலை ஒட்டி பல ஏரிகள் தற்ப்போதும் உள்ளது. மாத்வர் இந்த கோவிலைச் சுற்றி 1000 ஏரிகளை தோண்ட ஏற்ப்பாடு செய்ததாக என்னுடன் வந்த மாத்வ பெரியவர் கூறினார்.

  சம்பத் குமரனின் உருவம் கண்ணைவிட்டகலாத திருமேனி....

  திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றல்லவா...

  ReplyDelete
 18. ரவி சங்கர்!
  இவ்விடயம் ;பல வருடங்களுக்கு முன் கலைமகளில் படித்தேன். மீள ஞாபகப் படுத்த்க் கூடியதாக இருந்தது . உங்கள் பதிவு.

  ReplyDelete
 19. திருவரங்கன் உலாவில் படித்தேன் இதைப்பற்றி ஆனால் திருவரங்கத்தில் மட்டும் தான் துலக்க நாச்சியார் என்று நினைத்திருந்தேன். அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. இந்த கதையை உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்தேன்.

  வாசகர் விருப்பத்துக்கு செவி சாய்த்ததற்கு நன்றி.

  ஆவலுடன் அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

  வாழ்த்துக்கள் :-))

  ReplyDelete
 21. அருமை! அருமை! கேட்டு அறிந்த கதைதான்..திருவரங்கத்திலேயே இருந்து அனைத்தும் கண்டுகளித்த நினைவுகள்தான் ஆனாலும் ரவி அதனை விவரிக்கும் போது மீண்டும் எல்லாம் கண் முன்! விக்ரஹம் மீண்டும் ஊர் வந்து சேர்ந்ததா மேலக்கோட்டையில் செல்வப்பிள்ளையின் காலடியில் கைகுவித்து நிற்கும் சிறு பீவியின் விக்கிரகம் என்ன என்பதை நீங்களே சொல்லுங்கள் ரவி...அந்தரங்கத்தில் அதை நான் அறிந்திருந்தாலும் அந்த ரங்கனைப்பற்றி பதிவில் நீங்கள் எழுதும்போது சுவை கூடுகிறது பாராட்டுக்காள்!
  திருவரங்கப்ரியா

  ReplyDelete
 22. mmm, when we went to Melakottai, heard this story. Your writing is so impressive. Super. Just waiting for the other post. Write about the 'VAIRA MUDI SEVAI" urchavam also if possible, which is celebrating in the Panguni Month. Then about the Narasimmar Temple in the hills nearby ThiruNarayana Perumal temple. The food they used to give to the pilgrims. Everything is to be shared.

  ReplyDelete
 23. //வடுவூர் குமார் said...
  ஆஹா, ஆஹா!!
  என்ன அருமை இன்றைய தினம்.
  உங்கள் பக்கத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட மென்புத்தகங்கள், வயது வந்தோரை திருப்பதி கூட்டிப்போன புண்ணியும் கிடைக்கும்படி செய்துவிட்டது.
  இதற்கு நன்றி எப்படி சொல்வது என்று தெரியவில்லை.அவர்கள் வாழ்த்துவதை உங்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.வாழ்க வளமுடன்//

  குமார் சார்.
  திருமலை பிரம்மோற்சவப் பதிவுகளின் pdf தொகுப்பு அது!
  புத்தாண்டு அதுவும், தங்கள் ஆசி! அன்புக்கு நன்றி. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  //வடுவூர் ராமரின் கலர் படம் கண்கொள்ளா காட்சி கிடைத்தது,சுட்டு விட்டேன். மன்னிக்கவும்//

  ராமன் எல்லாருக்கும் சொந்தமானவன் ஆயிற்றே! முன்பு ஒரு பதிவில் இட்ட படம் அது.
  தாராளமாய் சுட்டுக் கொள்ளுங்கள் :-)
  இவர் வேறு தேசிகன் என்று நினைக்கிறேன் சார். ராமானுஜ தாசர்கள் குழுவில் உள்ளார். அமெரிக்கா வாசி. அவர் எடுத்த நிழற்படம் அது!

  ReplyDelete
 24. //VSK said...
  எனக்கு கிடந்த கோலமும் உண்டே!
  கண்டதில்லையா மகனே!"
  இப்படிச் சொல்லியிருப்பார் ராமப்ரியன் என எண்ணுகிறேன், திரு. ரவி!//

  ஆகா, பாதுஷா மகள் விளையாடுவதற்காக கிடந்த கோலமா:-)
  இதுவும் நல்லாத் தான் இருக்கு SK ஐயா!

  //நாய்ச்சியார் என்பதே சரி என ஒரு இடத்தில் படித்தேன்//

  நாய்ச்சி என்று ஈடு வியாக்யானத்தில் கூட வரும் SK. அதுவே நாச்சி என்றும் குறுகியதோ?
  நாய்க்கன், மாநாய்க்கன் என்ற ஆண்பாற் சொற்கள் கூட அப்படி வருகிறதே!

  ReplyDelete
 25. // G.Ragavan said...
  அன்பைக் கொண்டு அளப்பவனுக்கு சுல்தான் பீவியும் சுனிதாவும் ஒன்றுதான்.//

  ஆகா...யாருங்க புதுசா இந்த சுனிதா? :-)

  //நாச்சிக்கு விளக்கும் சொல்லி சொல்லொரு சொல்லையும் இங்கே கொண்டு வந்து விட்டீர்கள். நல்லது.
  அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்.//

  இராமானுஜ ஜெயந்திக்கு முன்பு அடுத்த பகுதி, இட்டு விடுகிறேன் ஜிரா

  ReplyDelete
 26. //வல்லிசிம்ஹன் said...
  அதுவேறு,
  இந்த சுல்தான் பெண் வேறு என்று நினைத்தேன். இப்படிப்போகிறதா கதை.//

  ஆமாம் வல்லியம்மா...இது வரலாற்றுப் பூர்வமாக பதிவு செய்யப்படாததால் பல இடங்களில் பலவாறு வழங்கி வருகிறது. ஆந்திராவில் கூட உண்டு!

  //அப்ரமேயன் படம் கூடப் போடலமே//

  ஓ, கட்டாயம், அடுத்த பதிவில்!

  ReplyDelete
 27. //ஜடாயு said...
  இந்த சம்பவங்கள் முழு அளவில் வரலாற்று உண்மையா என்று தெரியவில்லை, ஆனால் இந்த கர்ணபரம்பரைக் கதையில் கண்டிப்பாக ஏதோ ஒரு வரலாற்று இழை உள்ளது.//

  ஆமாம் ஜடாயு சார்.
  ஆந்திராவிலும், மதுரையிலும் கூட துலுக்கா நாச்சியார் உண்டு!
  அந்த வரலாற்று இழை குறித்து அடுத்த பதிவில் அடிக்குறிப்பாக (foot note)ஆக இடுகிறேன்.

  //காசியில் குமரகுருபரருக்கு மடம் கட்ட நிலம் தந்தவர் இந்த தாரா ஷுகோ தான்//

  ஆகா, அப்படியா!
  அவுரங்கசீப் எங்கே? தாரா எங்கே!
  ஒரு கொடியில் இரு வெவ்வேறு மலர்களா? :-)

  ReplyDelete
 28. //Sridhar Venkat said...
  இந்த கோவிலை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. செலுவ கேசவ பெருமாள் அழகாக இருக்கிறார். வருடத்திற்கு ஒருமுறை பங்குனி மாதத்தில் வைரமுடியுடன் (கிரீடம்) காட்சியளிக்கிறார். குன்றின் மேலே ஒரு யோக நரசிம்மரும் இருக்கிறார்//

  ஆகா, மேலக்கோட்டை பற்றி சிறு குறிப்பே வரைந்து விட்டீர்கள்!
  நன்றி ஸ்ரீதர் வெங்கட்!

  //செலுவ கேசவ பெருமாள் அழகாக இருக்கிறார்//

  அந்த அழகை அடுத்த பதிவில் close-up-இல் பார்க்கலாம்! :-)

  ReplyDelete
 29. //வெற்றி said...
  ரவி,
  தலைப்பைப் பார்த்துவிட்டு என்ன வட இந்திய மொழிகளில் ஏதோ சொல்கிறீர்களோ என நினைத்து விட்டேன்//

  :-)))
  குறும்புங்க, வெற்றி உங்களுக்கு!

  //யாழ்ப்பாணத்தில் நாச்சிமார் கோயிலடி என ஒரு இடம் உண்டு....யாழ்ப்பாணத்தில் 90% இடங்களின் பெயர்கள் காரணப் பெயர்கள்.//

  ஆமாங்க வெற்றி, நானும் கேள்விப்பட்ட வரை அப்படித் தான் உள்ளது! திரிகோணமலை, காங்கேசன் துறை (காங்கேயன் = முருகன்), மாதோட்டம், திருக்கேதீஸ்வரம்....அப்பப்பா...
  பெயரிலேயே பாதிக் கதை சொல்லப்பட்டு விடுகிறது!

  ReplyDelete
 30. //dubukudisciple said...
  //மிகச் சுவைப்பட எழுதி இருக்கிறீர்கள். //
  repeatu

  நன்றி சுதாக்கா

  ReplyDelete
 31. ////மதுரையம்பதி said...
  அங்கு கோவிலை ஒட்டி பல ஏரிகள் தற்ப்போதும் உள்ளது//

  ஆமாம் மெளலி சார்.
  பல ஏரி, குளங்களுடன் பச்சைப்பசேல் தான் அந்தப் பகுதி. இத்தனைக்கும் ஒரு காலத்தில் சரியான மண்மேடு!

  //சம்பத் குமரனின் உருவம் கண்ணைவிட்டகலாத திருமேனி....
  திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்றல்லவா...//

  108 திவ்ய தேசங்களில் ஒன்றாக மேலக்கோட்டை சொல்லப்படவில்லை!
  எனினும் அபிமானத் தலங்களில் தலையாய ஒன்றாகச் சொல்லப்படுகிறது!

  ReplyDelete
 32. /யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
  ரவி சங்கர்!
  இவ்விடயம் ;பல வருடங்களுக்கு முன் கலைமகளில் படித்தேன். மீள ஞாபகப் படுத்த்க் கூடியதாக இருந்தது . உங்கள் பதிவு.//

  கலைமகள் கட்டுரை, ஸ்ரீவேணுகோபாலன் எழுதியதா யோகன் அண்ணா?

  ReplyDelete
 33. // வேதா said...
  திருவரங்கன் உலாவில் படித்தேன் இதைப்பற்றி ஆனால் திருவரங்கத்தில் மட்டும் தான் துலக்க நாச்சியார் என்று நினைத்திருந்தேன்//

  வாங்க வேதா!
  அரங்கம் மட்டும் இல்லாது, மதுரை, திருவல்லிக்கேணி மற்றும் ஆந்திராவில் கூட இப்போது நாச்சியாருக்கு சந்நிதிகள் உள்ளன!

  ReplyDelete
 34. //CVR said...
  இந்த கதையை உங்களிடமிருந்து கேட்க வேண்டும் என்று வெகு நாட்களாக காத்திருந்தேன்.
  வாசகர் விருப்பத்துக்கு செவி சாய்த்ததற்கு நன்றி.//

  வாங்க CVR!
  நீங்க கேட்டதும் தான் எழுத வேண்டும் என்று தோணியது. இராமானுஜ ஜெயந்தி Apr 22 அன்று வருகிறது. அதற்கு முன்னோட்டமாக எழுதலாம் என்று எண்ணினேன்.

  தூண்டிய உங்களுக்குத் தான் என் நன்றி முழுதும்! :-)

  ReplyDelete
 35. //ஷைலஜா said...
  ஆனாலும் ரவி அதனை விவரிக்கும் போது மீண்டும் எல்லாம் கண் முன்! செல்வப்பிள்ளையின் காலடியில் கைகுவித்து நிற்கும் சிறு பீவியின் விக்கிரகம் என்ன//

  வாங்க திருவரங்கப்ரியா.
  அரங்கன் கதையை நீங்க எப்படி ஆழ்ந்து ஆழ்ந்து படிக்கிறீங்கன்னு உங்க ஒவ்வொரு சொல்லுமே காட்டிக் கொடுக்கிறது.
  செல்வப்பிள்ளையின் காலடியில் உள்ள செல்வமகளைச் சொல்லாது விட முடியுமா? நிச்சயம் சொல்கிறேன்!

  ReplyDelete
 36. //கீதா சாம்பசிவம் said...
  Write about the 'VAIRA MUDI SEVAI" urchavam also if possible, which is celebrating in the Panguni Month. Then about the Narasimmar Temple in the hills nearby ThiruNarayana Perumal temple. The food they used to give to the pilgrims. Everything is to be shared. //

  வாங்க கீதாம்மா..
  வைரமுடியும், நரசிம்மரும் பின்பு சொல்கிறேன்!
  ஆனால் அவர்கள் தரும் உணவின் சுவை...சூப்பர்! வெட்கத்தை விட்டுக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டேன்! :-)

  ReplyDelete
 37. ரவி,
  இன்னும் திருநெல்வேலிப்பக்கம்
  நிறைய மங்கைகளும்,
  நாச்சிகளும் இருப்பார்கள்.
  வீட்டுக்கு ஒரு நாச்சிப் பெரியம்மா,ஒரு மங்கை சித்தி என்று
  இருப்பார்கள்.

  ReplyDelete
 38. //வல்லிசிம்ஹன் said...
  ரவி,
  இன்னும் திருநெல்வேலிப்பக்கம்
  நிறைய மங்கைகளும்,
  நாச்சிகளும் இருப்பார்கள்.
  //

  உண்மை தான் வல்லியம்மா.
  ஆனா தெற்கத்திப் பக்கம் பிரபலமான அளவுக்கு, வட தமிழ்நாட்டில் நாச்சி அவ்வளவு பரவலாக இல்லை!

  ஆனா ஆந்திராவில் கூட ஒரு சில இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன்.
  இலங்கையிலும் நாச்சிமார் என்பது வழக்கம் போலும்! வள்ளி நாச்சியார் என்று தான் அழைக்கிறார்கள்.

  ReplyDelete
 39. கண்ணபிரான்,

  மனதை நெகிழ வைக்கும் வரலாறு.

  சத்ரபதி சிவாஜியின் வாழ்விலும் இதுபோல் ஒரு சம்பவம் உண்டு....பிறிதொருநாளில் அந்த கதையை எழுதுகிறேன்.

  ReplyDelete
 40. //செல்வன் said...
  கண்ணபிரான்,
  மனதை நெகிழ வைக்கும் வரலாறு.
  சத்ரபதி சிவாஜியின் வாழ்விலும் இதுபோல் ஒரு சம்பவம் உண்டு....பிறிதொருநாளில் அந்த கதையை எழுதுகிறேன். //

  வாங்க செல்வன்; சிவாஜியின் வாழ்வில் இது போல் ஒரு நிகழ்வா?
  கல்யாண் நவாப்பின் மருமகள் பற்றிச் சொல்கிறீர்களா, செல்வன்?
  ஆகா, உடனே எழுதுங்களேன்.

  ReplyDelete
 41. உங்கள் வார்த்தைகளில் துலுக்க நாச்சியாரைப் பற்றி படிப்பது நன்றாக இருக்கிறது இரவிசங்கர்.

  சம்பத்குமாரன் என்றாலும் செல்வப்பிள்ளை என்பதும் ஒரே பொருள் தானே.

  இராமப்ரியனா இரமாப்ரியனா? ரமாப்ரியன் (திருமகள் கேள்வன்) என்றல்லவா நினைத்திருந்தேன். என் மேல்கோட்டை நண்பர் ஒருவரும் ரமாப்ரியன் என்றே பெயர் கொண்டிருந்தார்.

  துளசியக்கா, நானும் திரு.வேணுகோபாலன் எழுதிய திருவரங்கன் உலாவை படித்திருக்கிறேன். பலமுறை. மிக நல்ல நாவல்.

  ReplyDelete
 42. // குமரன் (Kumaran) said...
  சம்பத்குமாரன் என்றாலும் செல்வப்பிள்ளை என்பதும் ஒரே பொருள் தானே//

  வாங்க குமரன். ஆமாம்,
  சம்பத்து=செல்வம்
  குமாரன்=பிள்ளை
  எவ்வளவு அழகான தமிழாக்கம்!

  //இராமப்ரியனா இரமாப்ரியனா? ரமாப்ரியன் (திருமகள் கேள்வன்) என்றல்லவா நினைத்திருந்தேன்//

  ஆகா, ரமாப்ரியனா! லக்ஷ்மிகாந்தன் போல் கேட்கவே அழகாக உள்ளதே!
  ஆனால், அடியேன் அறிந்த வரை ராமப்ரியன் என்று தான் சொல்கிறார்கள் குமரன்.

  ஏன் ராமப்ரியன் என்றால்,
  தசரத குமாரன் ராமபிரான், வழிபாடு செய்ய விஷ்ணு விக்ரகம் இல்லையே, இருந்ததையும் விபிஷணனுக்குக் கொடுத்தாகி விட்டதே என்று வருந்தினான். பிரம்மனை வேண்ட, அவனுக்குக் கிட்டியதே இச்சிலை. ராமன் விரும்பி வழிபட்டதால் ராமப்ரியன்.

  ராமன் தன் மகன் குசனுக்குத் தர, குசன் தன் மகளுக்குச் சீதனமாகத் தர, அவள் தன் புக்ககமான யாதவரிடம் எடுத்துச் சென்றாள்.
  இப்படியே இது பலராமன், கிருஷ்ணனிடம் வந்து சேர, பலராமனும் விரும்பியதால் ராமப்ரியன் ஆனான்!

  பின்னர் பலராமன் மேலக்கோட்டை வந்த போது மூலவரும், தன்னிடம் உள்ள சிலையும் அச்சு அசலாக ஒரே போல் இருக்க, ராமப்ரியனை இவ்விடத்தில் உற்சவராக நிலைநாட்டினார். அன்று முதல் மேலக்கோட்டை யதுகிரி, யாதவாத்ரி என்று அழைக்கப்படுவதாக தல வரலாறு!

  ReplyDelete
 43. யாதவாத்ரி, யதுகிரியின் தலவரலாற்றைச் சொன்னதற்கு நன்றி இரவிசங்கர்.

  ReplyDelete
 44. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP