Thursday, June 28, 2007

நீங்க என்ன பெரீய்ய்ய்ய பெரிய ஆழ்வாரா?

அது என்ன இவருக்கு மட்டும் பெரியாழ்வார்? "பெரிய" ஆழ்வாரா இவரு?

ஆழ்வார்கள் பன்னிரண்டு பேரில் இவருக்கு மட்டும் என்ன அப்படி உசத்தி? பக்தர்களுடைய பக்தியில் உன் பக்தி உசத்தி, என் பக்தி கொஞ்சம் தாழ்த்தி என்றெல்லாம் பாகுபாடு கிடையாதே!
அப்படி இருக்க, எம்பெருமானிடம் ஆழ்ந்தவர்களான ஆழ்வார்கள் இடையே, பெரிய/சிறிய அடைமொழிகள், ஏற்றத் தாழ்வுகள் எப்படி வரலாம்? - பார்ப்போம் வாருங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (Jun 26, 2007)
அதே போல், ஆனி மாதம் அனுஷ நட்சத்திரம் - நாதமுனிகள் பிறந்த தினம் - (Jun 28, 2007)
மேலும் ஆனி மூலம் - மாணிக்கவாசகர் குரு பூஜையும் கூட!

- இன்று நாம் எல்லா ஆழ்வார்களின் பிரபந்தமும் படிக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த நாதமுனிகள் தான்! தொலைந்த பொக்கிஷத்தை மீட்டுத் தந்தவர்!
பல நூற்றாண்டுகள் முன்னரே, வைணவ ஆலயங்களில் தமிழ் வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தவர்! இசைப்பாட்டு பாடித் துதிக்கும் அரையர் சேவை என்னும் முறையை அறிமுகம் செய்தவர்! இவருக்கும் பெரியாழ்வாரிடம் அப்படி ஒரு ஈடுபாடு! பார்க்கலாம் வாருங்கள்!


ஆழ்வார்களில், வைணவத்துக்குத் தத்துவக் கரையைக் கட்டி வைத்தவர் நம்மாழ்வார்! அவர் திருவாய்மொழி தான் எல்லாவற்றுக்கும் சாரம்!
வேதத்தையே தமிழ் செய்த மாறன் சடகோபன் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

அவருக்கு அடுத்து திருமங்கை ஆழ்வார். இவர் ஒரு பெரும் நிறுவனத்துக்கு மேலாளர் போல், வைணவம் என்றும் செழித்திருக்கச் செய்தவர்;
பாசுரங்கள் பாடி விட்டதோடு மட்டும் நில்லாது, அடிப்படை வசதிகள் (Basic Infrastructure) செய்து வைத்தவர்! - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

ஆழ்வார்களிலேயே முதலாமவர் பொய்கையாழ்வார்.
திருக்கோவிலூரில் அவர் பாடிய பாசுரம் தான் முதல் பிரபந்தம்! அவருடன் கூடச் சேர்ந்து பாடினர் பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்கிற இருவரும்! - ஆனால் இவர்களுக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

பெருமாளையே படுக்கையை விட்டு எழுப்பி, மணிவண்ணா, என்னைப் பின்தொடர்ந்து வா, என்று அதிகாரமாய்க் கட்டளையிட்டவர் திருமழிசை ஆழ்வார் - ஆனால் அவருக்குக் கூட "பெரிய" என்ற பட்டம் இல்லை!

இறைவனையே ஆண்டவள் ஆண்டாள்!
சரி இவளுக்காவது "பெரிய" பட்டம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை! அவளே "பட்டர் பிரான் கோதை சொன்ன" என்று பெரியாழ்வாரின் Initialஐயே தனக்கும் போட்டுக் கொள்கிறாள்!

One and Only One! - பெரிய ஆழ்வார், பெரியாழ்வார் மட்டுமே!
விஷ்ணு சித்தன் இவர் தம் இயற்பெயர்! பட்டர்பிரான் என்பது சிறப்புப் பெயர்!
திருவரங்கம் மற்றும் அதன் தொடர்புள்ள எல்லாமே "பெரிய" என்று தான் அடைமொழியப்படும்!
பெரிய கோவில் - திருவரங்கம்
பெரிய திருவடி - கருடன்
பெரிய அவசரம் - திருவரங்க நிவேதனம்
பெரிய பெருமாள் - அரங்கநாதன்
பெரிய பிராட்டி - அரங்கநாயகி
அந்த வரிசையிலே, அவனுக்குப் பெண் கொடுத்த பக்தரும்
பெரிய ஆழ்வார் - பெரியாழ்வார்!

மதுரை நகரம். மல்லி வாசம். கூடல் அழகர்!

பாண்டியன் சபையிலே பரமாத்மா யார் என்று பரத்துவ நிர்ணயம் செய்து,
கிழி அறுத்து, வெற்றி வாகை சூடினார் பட்டர்பிரான்; அரசனின் அன்பு வற்புறுத்தலால் யானை மேல் ஏறி, நகர் வலம் வருகிறார்!
முன்னே பின்னே யானை மீது ஏறியிருந்தா தானே! அப்படி வலம் வரும் அளவுக்குப் பணபலம்/படைபலம் உள்ளவர் அல்லவே!
ரொம்பவும் கூச்சப்பட்டு அமர்ந்து கொண்டு, திருவெட்டெழுத்து ஓதிய வண்ணம் வருகிறார், விஷ்ணுவைச் சித்தத்தில் வைத்த விஷ்ணுசித்தன்.

தன் பிள்ளை ஊர் மெச்ச வரும் காட்சியைக் காண, எந்தத் தாய்க்கும் தகப்பனுக்கும் தான் மனசு துடிக்காது?
மின்னல் போல் பளிச் என வானத்தில் தோன்றி, சூரியன் போல் பிரகாசித்தார் பெருமாள். கருட சேவையாக! காணக் கிடைக்காத காட்சி...

மன்னனைக் கண்டால் புலவருக்கு என்ன தோன்றும்? - பரிசு, பொற்கிழி, பொன்னாடை?
மந்திரியைக் கண்டால் மாவட்டத்துக்கு என்ன தோன்றும்? - கமிஷன், காண்ட்ராக்ட்?
காதலியைக் கண்டால் காதலனுக்கு என்ன தோன்றும்? - டேய், வாயில வாட்டர் ஃபால்ஸ் வருது பார்! வாயை மூடு என்ற சிவாஜி பட வசனம் :-)
தாயைக் கண்டால் குழந்தைக்கு என்ன தோன்றும்? - பால், பட்சணம், கொஞ்சல்?

எல்லாம் சரி!....ஆனால் தாய்க்குக் குழந்தையைக் கண்டால்?... அதே தான் பட்டர் பிரானுக்கும் தோன்றியது!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு - பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா, உன் - செவ்வடி செவ்வி திருக்காப்பு!


நான் இருக்கேன் உனக்குப் பிரிவின்றி - ஆயிரம் பல்லாண்டு!
இலட்சுமி மார்பில் இருந்து காப்பாள் - ஆயிரம் பல்லாண்டு!
வலப்பக்கம் சக்கரமும், இடப்பக்கம் சங்கும் எப்போதும் காக்கும் - ஆயிரம் பல்லாண்டு!
கடவுளைக் கண்ட மாத்திரத்தில், கை கூப்பக் கூட இல்லை!......மாறாக, "ஆகா...பேரழகுப் பெட்டகமே! நல்லா இரு! அமோகமா இரு! பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழு! என்று கடவுளுக்கே ஆசீர்வாதமா?



அட, இது என்ன பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு?
உள்ளேயும் மரணம் கூடாது, வெளியேயும் கூடாது...இல்லாக்காட்டி
என்னை மிஞ்சுவார் எவரும் இருக்கக் கூடாது...இல்லாக்காட்டி
ஏழடுக்கு மாளிகையில்....என் பேரனுக்குப் பேரன்....தங்கக் கிண்ணத்துல பால் குடிக்கறத பாக்கணும் - இப்படி எல்லாம் வரம் வாங்கறத வுட்டுபுட்டு,
வரம் தரும் வரதராஜனையே நல்லா அமோகமா இரு-ன்னா என்னா அர்த்தம்?
- பொழைக்கத் தெரியாத ஆளா இருக்காரேப்பா! தனக்கென்று மோட்சம் கூடக் கேட்கவில்லை! வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!


ஐயோ, குழந்தை ஊர் அறியத் தோன்றியதே! அந்த அழகே வெட்கப்படும் அழகனாயிற்றே அவன்! தோள் கண்டார் தோளே காண்பாரே!
என்ன கண்ணேறு படப்போகுதோ? திருஷ்டி கழிக்கணும் மொதல்ல! திருவந்திக்காப்பு செய்ய வேணும் உடனே!

அடேய் சக்கரமே, அடேய் சங்கே, அடே கருடா...
தூங்கிட கீங்கிடப் போறீங்க...குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோங்கடா!
என் கண்ணனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுது...உங்கள சும்மா விடமாட்டேன்!
எவ்வளவு 'தில்' இருந்தா, சகல சக்தி படைத்த சக்கரத்தாழ்வாரையே, இப்படி மிரட்டுகிறார் நம்ம பட்டர் பிரான்? - அதான் இவர் பெரிய ஆழ்வார்!

உறகல் உறகல் உறகல் ஒண் சுடர் ஆழியே! சங்கே!
அறவெறி நாந்தக வாளே! அழகிய சாரங்கமே! தண்டே!
இறவு படாமல் இருந்த எண்மர் உலோக பாலீர்காள்!
பறவை அரையா! உறகல் பள்ளியறைக் குறிக்கோண்மின்!


இப்படித் தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார் ஆனார்!
எந்த ஆழ்வாரின் பிரபந்தங்களை ஓதுவதற்கு முன்னரும், இந்தத் திருப்பல்லாண்டை சொல்லி விட்டே, மற்றவற்றை ஓத வேண்டும் என்பது கோவில் மரபு ஆகி விட்டது! அது மட்டுமா?......................


மற்ற ஆழ்வார்கள் எல்லாம், கண்ணன் வராவிட்டால்....
ஒன்று தூது அனுப்புவார்கள், இல்லை இப்படி என்னை வதைக்கிறானே பாவீ.... என்று வசைமாரி பொழிவார்கள்!
ஆனால் யசோதை மட்டும் தான்,
"கண்ணனை வீட்டுக்குள் பூட்டியும் வைக்க முடியாது. அப்படி செய்தால் உலக அனுபவம் அவனுக்கு இல்லாமல் போய்விடும்! அய்யோ வெளியில் சென்றானே, இன்று எந்தப் பாவி எந்த ரூபத்தில் குழந்தையைச் சூழ்ந்தானோ" - என்று தினம் தினம் செத்துப் பிழைத்தாள், ஓராயிரம் முறை!

அப்படியே தான் பெரியாழ்வாரும் செத்து செத்துப் பிழைக்கிறார், கண்ணனைப் பற்றிய கவலையில்!
அவன் பிறந்த நாளை அக்கம் பக்கத்தார்க்கு நேரடியாகச் சொன்னால், கம்சன் கண்டு பிடித்து விடுவானோ என்று பயப்படுகிறார்! அதனால் "அட்டத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்" என்கிறார்!

ஹஸ்த நட்சத்திரத்தின் பத்தாம் நாள் எது? - முன்னிருந்து கணக்கு போட்டா ரோகிணி - பின்னாடி இருந்து கணக்கு போட்டா திருவோணம்! கம்சனும் அவன் ஆளுங்களும் குழம்பட்டும்! நாம குழந்தையின் பிறந்த நாளைக் கொஞ்சம் மறைஞ்சே கொண்டாடுவோம் - என்று அப்படி ஒரு பரிவு பட்டர் பிரானுக்கு!

ஷைலஜா ஒரு பதிவில் கதை போல் சொல்லி இருந்தார்கள்; மிக வயதான ஒரு அம்மா, புகைவண்டி Upper Berth-இல் தூங்கும் தன் "ஐம்பது வயதுக் குழந்தை", எங்கே புரண்டு விழப் போகிறானோ என்று பயந்தார்களாம்!
எத்தனை முறை நம் வீட்டிலேயே, நம்ம அம்மா,
"டேய்...பாத்து போய் வாடா, ரோடு க்ராஸ் பண்ணும் போது ஜாக்கிரதை!", என்று இந்த வயதிலும் சொல்லுகிறார்கள்! :-)

- இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்!
- ஏனையோர் தங்களைத் தலைவியாக்கிக் கொண்டு, தலைவனைச் சேர விரும்பி இருக்க, இவர் மட்டும் கடமையை மட்டுமே கைக்கொண்டு, கைங்கர்யம் புரிந்ததால் பெரிய ஆழ்வார்!

- ஜனகன் வில் தூக்கும் போட்டி வைத்து பின்னர் தான் மகளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தான். ஆனால் இவரோ போட்டா போட்டி எல்லாம் எதுவும் வைக்காது, பெருமாளை ரொம்பவும் வருத்தாது, மகளைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார். அவன் செல்வம் செழித்திருக்க, திருவை அவனுக்குக் கொடுத்ததால் பெரிய ஆழ்வார்!

- பெருமாளுக்கே தாய் ஆனதால் பெரிய ஆழ்வார்!
- ஆண்டாள் பூமித் தாயின் அம்சம்! அந்த தாய்க்கே தந்தை ஆனதால் பெரிய ஆழ்வார்!
- இப்படி இவர் ஒருவரே,
அவனுக்குத் தாயுமாகி, அவளுக்குத் தந்தையும் ஆனதால் பெரிய - பெரிய ஆழ்வார்!


கீழே பாட்டைப் பாருங்கள்! இந்தப் பாட்டு தான், ஏன் "பெரிய" ஆழ்வார் என்பதற்கு முக்கியமான பிரமாணம்!
இதைப் பாடியவர், மணவாள மாமுனிகள் என்னும் ஆச்சார்யர்! - திருவரங்கக் கோயிலில் தமிழ் வழிபாட்டுக்கு இடைஞ்சல் வந்த போது, தமிழைத் தாங்கிப் பிடித்தவர்! நீங்களே ஒரு முறை வாய் விட்டுப் படியுங்கள்!

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வஅளவு தானன்றி -
பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
"பெரிய"ஆழ்வார் என்னும் பெயர்!


மற்றவர்களுக்கு எல்லாம் வெறும் பரிவு தான், இறைவனிடத்தில்!
இவருக்கு மட்டுமே பொங்கும் பரிவு!
தாய் போல் பொங்கும் பரிவு! தாய்ப்பால் பொங்கும் பரிவு! - அதனாலேயே அவர் பெரிய ஆழ்வார்!

விருத்திபெறு வில்லிபுத்தூர் விளங்கவந்தான் வாழியே!
பெருமைமிகு ஆண்டாளைப் பெற்றபிரான் வாழியே!

பட்டர்பிரான் வாழியே! பட்டர்பிரான் வாழியே!
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!!!

50 comments:

  1. ஆஹா!!
    மிக அழகிய பதிவு!!!
    ஆன்மீக பதிவுகளை நகைச்சுவையோடும் போரடிக்காமலும் எழுத உங்களை போன்ற வேறொருவஅரை நான் பார்த்ததில்லை!! :-)

    //பாண்டியன் சபையிலே பரமாத்மா யார் என்று பரத்துவ நிர்ணயம் செய்து,
    கிழி அறுத்து, வெற்றி வாகை சூடினார் பட்டர்பிரான்; அரசனின் அன்பு வற்புறுத்தலால் யானை மேல் ஏறி, நகர் வலம் வருகிறார்!//

    "பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தான் என்று,ஈண்டிய சங்கம் எடுத்தூத வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்,பாதங்கள் யாமுடைய பற்று"
    என்று கூறுவதற்கு இன்றுதான் அர்த்தம் புரிந்து கொண்டேன்!! :-)

    வாழ்த்துக்கள் அண்ணா!! :-))

    ReplyDelete
  2. அண்ணா நீங்க ரொம்ப நல்ல ஆசிரியர்.என்னை மாதிரி tube light க்கே நீங்க சொல்லுறது விவரமா புரியுது பாருங்க

    தாய்மை விட பெரியது இல்லை.ஆகவேதான் அவர் பெரிய ஆழவார்:D

    சரியா புரிஞ்சுகிட்டேனா அண்ணா?

    ReplyDelete
  3. பட்டர்பிரான் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  4. பெரியாழ்வாரைப் பத்தி இத்தனையும் சொன்ன நீங்க ரொம்பப் 'பெரிய ஆள்'தான்,
    போங்க.

    அருமை ன்னு சொல்றதை,வேற என்ன மாதிரி சொல்லலாமுன்னு யோசனையில் இருக்கேன்:-)

    ReplyDelete
  5. ரவி,

    இது அஜித் படம் இல்லையா ?

    :))

    ரஜினியால் சிவாஜி பெயர் கெட்ட அளவுக்கு அஜித்தால் ஆழ்வார்கள் பெயர் கெடவில்லை.

    ReplyDelete
  6. எல்லா ஆழ்வார்களுமே பெரிய ஆழ்வார்தான்.

    ReplyDelete
  7. இன்னும் பதிவு வரவில்லையேனு பார்த்தேன்.

    உங்கள் எழுத்து தேனே,கற்கண்டே என்பது போல்,
    விஷ்ணுதத்துவத்தைப் புரிந்து பெற்றவரைப் போல பேணிய,
    பெரிய ஆழ்வாரைப் பற்றி அமைந்திருக்கிறது.
    மிகப் பெரியவரைப் பற்றி மிக எளிமையாகப் படிக்கக் கொடுத்தீர்கள்.

    உங்களுக்குத் தெரிந்த அத்தனை பாசுரங்களையும் பதிவுகளாகப் போட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
  8. ஐயோ, குழந்தை ஊர் அறியத் தோன்றியதே! அந்த அழகே வெட்கப்படும் அழகனாயிற்றே! தோள் கண்டார் தோளே காண்பாரே!
    என்ன கண்ணேறு படப்போகுதோ? திருஷ்டி கழிக்கணும் மொதல்ல! திருவந்திக்காப்பு செய்ய வேணும் உடனே!

    அடேய் சக்கரமே, அடே சங்கே, அடே கருடா...
    தூங்கிட கீங்கிடப் போறீங்க...குழந்தையைப் பத்திரமா பாத்துக்கோங்கடா!
    என் கண்ணனுக்கு ஏதாச்சும் ஒண்ணு ஆச்சுது...உங்கள சும்மா விடமாட்டேன்!
    எவ்வளவு 'தில்' இருந்தா, சகல சக்தி படைத்த சக்கரத்தாழ்வாரையே, இப்படி மிரட்டுகிறார் நம்ம பட்டர் பிரான்? - அதான் இவர் பெரிய ஆழ்வார்!
    manitharkal evvalavu maarivittarkal
    iraivanai nesitha kalam poy, intu iraivanidam peram pesum kalamithu - aaka antha kaalathil naamum oru aalvaara piranthirukka koodaadha veru enna peru vendum - kalaiyil iraivanai athuvum antha kannanai ninaikka vaithatharku Mr. Kannan, lot of thanks - really i enjoyed - athuvum oru aalvaar iraivanaiye padukkaiyai vittu elunthu vaa entu kattalai ida mudikirathu ental, yenae pakthi - ethanai ontuthal iraivanidathil - avarkalidathil sathiyam irunthathu-
    athanal asaikka mudiyatha nampikkai - friend -baskar

    ReplyDelete
  9. அன்பின் கண்ணபிரான்:


    மிக்க நன்றி. நாம் மரபை மறந்து வரும் காலத்தில், ஆழ்வார்களின் ஜென்ம
    நட்சத்திரம் அறிந்து, அதற்கேற்ற ஆங்கில தேதி கண்டு அழகான கட்டுரை
    வடித்திருக்கிறீர்கள். விட்டுசித்தனுக்கு மட்டும் ஏன் 'பெரிய' ஆழ்வார் என்ற
    பட்டம்? என்று எல்லோருக்குள்ளும் உள்ள கேள்வியைக் கேட்டு பதில்
    அளித்துள்ளீர்கள். அதன் விடையில்தான் வைணவத்தின் ஆணி வேரே இருக்கிறது!
    கோவிலுக்குப் போய் 'அதைக்கொடு! இதைக்கொடு' எனக் கேட்பவன் ஆன்மீகத்தின்
    அடிநிலையில் உள்ளான். இறைவன் சந்நிதானத்தில் நமக்கிருக்க வேண்டிய
    மனோநிலை-நமக்கொரு வாழ்வு தந்து, நம்மையும் மனிதனாக நடமாட வைத்து, அவரவர் கரும
    வினைகளுக்கேற்ப பல நன்மைகள் செய்து வாழ்வு எனும் நீரோட்டத்தில் மூழ்கிவிடமால்
    மிதக்க வைத்திருப்பதை நினைத்து மகிழ்ந்து, அவனைப் பாராட்டும் மனோநிலை. இதை
    'மங்களா சாசனம்' என்பர். எப்போதும் வாயில் 'வாழ்க' என்றே வரவேண்டும். இறைவனை
    வாழ்க! எனச் சொல்வதன் மூலம் நம்மை நாமே ரட்சித்துக் கொள்கிறோம். இதுவொரு ஆழமான
    உளவியல் தத்துவம். இதை வலியுறுத்தும் வண்ணம் "பல்லாண்டு பாடியதால்"
    விட்டுசித்தன் 'பெரிய' ஆழ்வார் ஆகிறார். மற்ற ஆழ்வார்கள் எதற்கும் சளைத்தவர்கள்
    அல்ல, நீங்கள் குறிப்பிட்ட படி. இவரிடம் தயை பொழிந்து வழிகிறது. ஆண்டாளுக்கு
    என்றில்லை, நம் எல்லோருக்குமே 'விட்டுசித்தன்' தொடர்பு இருப்பது நல்லது.


    எனவே....
    பட்டர்பிரான் கண்ணன்

    ReplyDelete
  10. இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்*!


    அருமையான பதிவு ரவி!


    எனக்கென்ன வருத்தம் என்றால் இப்படிப்பட்ட எளிமையான தமிழ் அனைவரையும்
    சென்றடையவில்லையே - என்பதுதான்.


    பெரியாழ்வார் பாடலுக்கு விளக்கவுரையே தேவையில்லை. அத்தனை எளிய தமிழ் நடை.
    இன்னொன்று தெரியுமா? முதன்முதலில் தமிழில் எள்ளல் வகை பாடல் பாடியவர்
    பெரியாழ்வார்.


    *"சோர்வுடனே பொருள் வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லு என்று சுற்றமிருந்து ஆர்
    வினாவினும் அந்தக் காலம் வருமுன்*....." - இதன் பொருள் - படுக்கையில் ஒருத்தன்
    சாகப் படுத்திருக்கிறான் - அவனைச் சுற்றி அவனுடைய உற்றாரும் சுற்றாரும் அவன்
    சேமித்த பொருள் என்னென்ன, எங்கேங்கே என்று அவனை
    துன்புறுத்துகிறார்கள்...அவனுக்கும் சொல்லவேண்டும் போல்தான் இருக்கிறது..ஆனால்
    அவனால்...பாவம்..ஏதும் சொல்ல முடியவில்லை..நா பிறளுகிறது...- இவனைப் பார்த்து
    பெரியாழ்வார் கேட்கிறார் - ஏன் இதுவரை நீ காத்திருக்கவேண்டும்? முன்னமேயே உன்
    மனத்தில் மாதவனைப் பூசித்து வந்திருந்தால் இந்த யமபயத்தை வென்றிருக்கலாமே..


    (டிவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் - ஒரு cement adhesive என்று
    நினைக்கிறேன். அதில் தந்தை படுக்கையில் உயிர் போகும் நிலையில் இருக்க - மகன்
    அவரிடம்
    atleast one extra ciber in the signed cheque dad... என்று கெஞ்சுவான். அவரும்
    அந்த சைபர் போட்டுவிட்டு உயிர் விடுவார். அதே சமயம் இந்த காசோலையின் எண்களின்
    மீது மேலேயிருந்து ஒழுகும் நீர் சரியாகப் பட்டு amount அடிபட்டுப் போகும் -
    அப்போது ஒரு விளம்பரக் குரல் ' அந்தப் பசை (adhesive)
    ஏற்கனவே கூரையின் மீது உபயோகித்திருந்தால்' இந்த நிலையைத் தவிர்க்கலாமே' என்று
    கேட்கும் - இந்தக் காட்சி பார்க்கும்போதெல்லாம் எனக்கு பெரியாழ்வாரின் மேற்கண்ட
    பாடல் நினைவுக்கு வரும்.)


    பிள்ளைத்தமிழ் பாடிய தமிழ்ப் பெரியார் - முதன் முதல் என்று நினைக்கிறேன்.


    நல்லதோர் பதிவு - ஞாபகமூட்டியதற்கு நன்றி!


    அன்புடன்
    திவாகர்.

    ReplyDelete
  11. திருவாழிபுரத்து ஜகத்துதித்தாளைப் பெற்றெடுத்த புண்ணியத்துக்கும் பெண்கொடுத்த பெருமைக்கும் உரியவர் "பெரிய பெரிய ஆழ்வார்" தான்! நல்ல நடை உங்களுக்கு இயல்பா வருது. பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தைகளையும், உதாரணங்களையும் போட்டு அசர அடிக்கிறீர்கள். தமிழ் வாழ்க!

    ReplyDelete
  12. கோஷ்டி காதில் ஒலிப்பது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.....

    வெறுமனே அருமையான பதிவுன்னு சொன்னா அது அசட்டுத்தனம்....என்னவென்று புகழ உங்களது எழுத்தை?.....நன்றி கே ஆர் எஸ்......

    கோஷ்டி காதில் ஒலிப்பது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.....

    ReplyDelete
  13. The narration of the post is very good. Instead of asking favours from the Lord, periazhwar asks the Lord himself. You have explained that very well. Very Good Tamil.
    -Dr.Balu

    ReplyDelete
  14. //வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்,பாதங்கள் யாமுடைய பற்று"
    //

    ஆகா...CVR
    பதிவிலே சொல்லாத தனியனை அழகாப் பின்னூட்டத்தில் சொல்லிட்டீங்களே! அதுவும் ஒரு வரி விடாம! க்ரேட்!
    CVRக்குள் ஒளிந்திருக்கும் பிரபந்தப் புயல்!

    ReplyDelete
  15. //†hµrgåh said...
    அண்ணா நீங்க ரொம்ப நல்ல ஆசிரியர்//

    டேங்க்யூ!
    ஆனா இதை என் ப்ரெண்டு நீங்க சொன்னா ஒத்துக்கிட மாட்டாங்க! க்ளாச் பசங்க யாரும் சொல்ல மாட்டேங்கறாங்களே துர்கா! :-)

    //என்னை மாதிரி tube light க்கே//
    நீங்க ட்யூப் லைட்டா? யாரு சொன்னா?
    லைட் ஹவுஸ் லைட்டு நீங்க! ஒளி வெள்ளம் ஏழு கடல் தாண்டி இங்க அடிக்குது! :-)

    //தாய்மை விட பெரியது இல்லை.ஆகவேதான் அவர் பெரிய ஆழவார்:
    சரியா புரிஞ்சுகிட்டேனா அண்ணா?//

    கரீட்டாப் புடிச்சிக்கிட்டீங்க! குட்!

    ஆனா ஒரே ஒரு addition!
    தாய்மை என்ற பெரும் உணர்வு ஆண் பெண் இரு பாலருக்கும் உண்டு! பெண்ணையே மிஞ்சும் அளவுக்குத் தாய்மை உணர்வு ஒரு ஆணுக்கும் இருந்திச்சு என்பதை உலகுக்கு உணர்த்தவும் - இவர் தாயான பெரிய ஆழ்வார்!

    ReplyDelete
  16. //குமரன் (Kumaran) said...
    பட்டர்பிரான் திருவடிகளே சரணம்//

    சரணம் சரணம்!
    ஆகா... குமரன் ஊருக்கு வந்தாச்சா?
    பட்டர்பிரான் பதிவுல கரெக்டா ஆஜராயிட்டீங்களே!
    பட்டர்பிரான் மாவட்டம் எப்படி இருக்கு? வைகையில் தண்ணி பாத்தீங்களா?

    ReplyDelete
  17. //துளசி கோபால் said...
    பெரியாழ்வாரைப் பத்தி இத்தனையும் சொன்ன நீங்க ரொம்பப் 'பெரிய ஆள்'தான்,போங்க.//

    இல்லியே டீச்சர்...உசரம் கூட 5' 11" தான்! :-)

    //அருமை ன்னு சொல்றதை,வேற என்ன மாதிரி சொல்லலாமுன்னு யோசனையில் இருக்கேன்:-)//

    யோசிச்சு எனக்கு மட்டும் கேக்கற மாதிரி ரகசியமா சொல்லுங்க டீச்சர்! :-)

    ReplyDelete
  18. //கோவி.கண்ணன் said...
    ரவி,
    இது அஜித் படம் இல்லையா ?:))//

    அட போங்க GK! ஆழ்வார்-ன்னு கூகுள்ள தேடினா அஜீத் தான் வராரு!
    திருமலைன்னு தேடினா விஜய் வராரு!
    சிவாஜி-ன்னு தேடினா ஒரிஜினல் சிவாஜி மன்னரும் வரல! நடிப்புலக மன்னரும் வரல!

    கூகுள் என்னைக்குத் திருந்தப் போகுதோ? :-)))

    ReplyDelete
  19. //உண்மைத் தமிழன்(03027376146007401490) said...
    எல்லா ஆழ்வார்களுமே பெரிய ஆழ்வார்தான்.//

    உண்மை தாங்க உ.த
    இங்கே பெரிய/சிறிய பேதம் துளியும் வந்துடக் கூடாதுன்னு கவனமா இருக்கிறேன்!

    ஏன் அவருக்கு மட்டும் "பெரிய" என்ற அடைமொழி ஒட்டிக்கிடுச்சு என்பதைப் பார்க்கப் புகுந்ததே இந்தப் பதிவு!

    ஆழ்வார்கள் அனைவருமே அடியவர் தாம்! அடியவர் எவருமே பெரியவர் தான்!

    ReplyDelete
  20. //வல்லிசிம்ஹன் said...
    இன்னும் பதிவு வரவில்லையேனு பார்த்தேன்.//

    டீச்சர் மாதிரி கண்காணிக்கறீங்க-ன்னு சொல்லுங்க வல்லியம்மா! :-)

    //மிகப் பெரியவரைப் பற்றி மிக எளிமையாகப் படிக்கக் கொடுத்தீர்கள்//

    அடியேன் நற்பேறு வல்லியம்மா!

    //உங்களுக்குத் தெரிந்த அத்தனை பாசுரங்களையும் பதிவுகளாகப் போட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்//

    குமரன் வந்த பிறகு ஒரு கூட்டு வலைப்பூ பின்னலாம்னு எண்ணம் இருக்கு வல்லியம்மா!

    ReplyDelete
  21. //manitharkal evvalavu maarivittarkal
    iraivanai nesitha kalam poy, intu iraivanidam peram pesum kalamithu //

    ஹிஹி
    எவ்வளவு நேரம் தான் பேரம் பேச முடியும்? எப்பவாச்சும் ஒரு வாட்டி படியத் தானே வேணும்! அரங்கன் அருள் அதையும் அருளும் பாஸ்கர் சார்!

    //lot of thanks - really i enjoyed - avarkalidathil sathiyam irunthathu-athanal asaikka mudiyatha nampikkai - friend -baskar//

    நீங்க ரசிச்சுப் படிச்சதில் மகிழ்ச்சி-ங்க!

    ReplyDelete
  22. திவாகர்:


    மிகச்சரியாகச் சொன்னீர்கள்!


    ஆழமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தம் இல்லையெனில் ஆழ்வார்கள்
    பாடல்கள் அனைத்துமே எளியவையே, அதிலும் சிறப்பாக பெரியாழ்வார் திருமொழி.


    குறிப்பாக பட்டர்பிரான், கோதை இருவர் பாடல்களிலும் எள்ளல் அதிகம் இருக்கும்.
    ஆண்டாள் சொல்லுவாள், ருக்மிணி கை பிடிக்காமல் சிசுபாலன் அன்னாந்து கூரையைப்
    பார்த்துக் கொண்டு இருக்கும் போது கண்ணன் அவளை அள்ளிக் கொண்டு போய்விட்டான்
    என்று.


    இருவரிடமும் கிராமிய மணம் அதிகம். 'கல்யாணம்' என்று சொல்லாமல், 'கன்னாலம்'
    என்பாள் ஆண்டாள்.


    ஆக, இந்த மதுரைக்கவிகளிடம் (மதுரக்கவிகளும் கூட) ரசம் அதிகம், பார்த்து
    ரசிக்கத் தெரிந்தால். பிள்ளைத்தமிழ் முன்னோடி பட்டர்பிரான்.


    கண்ணன்

    ReplyDelete
  23. //Narayanan Kannan said...
    இறைவனை வாழ்க! எனச் சொல்வதன் மூலம் நம்மை நாமே ரட்சித்துக் கொள்கிறோம்.
    இதுவொரு ஆழமான உளவியல் தத்துவம்//


    மிகச் சரியாகச் சொன்னீர்கள்!
    நன்றி கண்ணன் சார்

    அது தானே கோவிலில் அர்ச்சை ரூபமாய் இருக்கும் இறைவனுக்கு, அவ்வளவு
    உபசாரங்கள் செய்கிறோம்!
    பள்ளி எழுச்சி முதற் கொண்டு, திருமஞ்சனம், வாழ்க என்று சொல்வது வரை -
    எல்லாம் நம்மை ரட்சித்துக் கொள்ளவே தான்! - ஆனால் அவன் பெயர் சொல்லி!

    ReplyDelete
  24. //venkatram dhivakar said...
    இப்படிப்பட்ட தாய்மை பொங்கி ஓடியதால் தான் அவர் பெரிய ஆழ்வார்*!//

    நன்றி திவாகர் சார்!

    //சோர்வுடனே பொருள் வைத்ததுண்டாகில் சொல்லு சொல்லு//

    மிக அருமையான பாசுரம்!
    அப்போதைக்கு ஏன் இப்போதே சொல்லி வைக்க வேண்டும் என்பதற்கு, அழகான
    விளக்கம் கொடுப்பார் பெரியாழ்வார் இந்தப் பாட்டில்! - எள்ளல் பாட்டின்
    மூலமாக ஏளப் பண்ணுகிறார் கொஞ்சம் கொஞ்சமாக!
    நீங்கள் சொன்ன cement adhesive விளம்பரம் இங்கு கச்சிதமாகப்
    பொருந்துகிறதே!

    //பிள்ளைத்தமிழ் பாடிய தமிழ்ப் பெரியார் - முதன் முதல் என்று
    நினைக்கிறேன்//

    பிள்ளைத்தமிழ் பத்து பருவங்கள், அதன் இலக்கணம் அதற்குள் எல்லாம் அடக்க
    முடியாவிட்டாலும்
    பின்னாளில் வந்த பிள்ளைத்தமிழுக்கு பெரியாழ்வார் பாசுரம் தான் முன்னோடி!

    ReplyDelete
  25. அருமையான பதிவு. நீங்க பெரீய்ய்ய்ய பெரிய ஆள்தான்!! :)

    ReplyDelete
  26. //கீதா சாம்பசிவம் said...
    திருவாழிபுரத்து ஜகத்துதித்தாளைப் பெற்றெடுத்த புண்ணியத்துக்கும்.//

    திருவாடிப் பூரத்து ஜகத்துதித்தாள்...
    பெரியாழ்வார் "பெற்று" எடுத்த பெண்பிள்ளை என்று தான் பாடுறாங்க கீதாம்மா!
    கண்டு எடுத்தார் என்று யாரும் சொல்லாத அளவுக்கு அவ்வளவு பாசம் பாருங்கள்!

    //நல்ல நடை உங்களுக்கு இயல்பா வருது. பொருத்தமான இடத்தில் பொருத்தமான வார்த்தைகளையும், உதாரணங்களையும் போட்டு அசர அடிக்கிறீர்கள்.//

    மலையப்பன் அருள் அன்றி வேறொன்று ஏது? கார் முகில் வண்ணா என்று சொன்ன மாத்திரத்தில் கல்லும் கவி பாடாதா என்ன!

    //தமிழ் வாழ்க!//

    நன்றி கீதாம்மா! தமிழ் வாழ்வாங்கு வாழ்க! தமிழுக்கும் சேர்த்தே - பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க!

    வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
    "கோதைத் தமிழ்" - என்று கோதையும் தமிழும் இரண்டறக் கலந்ததுவே! தமிழ் என்றும் வாழ்ந்திருக்கும்!

    ReplyDelete
  27. மதுரை, மல்லி, கூடல் என்று பத்தித்தலைப்பு இடும்போது யாரையாவது நினைத்துக் கொண்டீர்களா? எனக்குத் தெரிந்த ஒருவருக்கு புரையேறியதே. :-)

    முன்பு எங்க மாவட்டக்காரரா இருந்தார் இவர்; இப்ப வேற மாவட்டம். வைகையிலே எப்பவும் இருக்கிற தண்ணி தான் இருக்கு. அதிகம் இல்லை; குறைவும் இல்லை. :-)

    http://vishnuchitthan.blogspot.com/2005/12/79.html

    ReplyDelete
  28. //மதுரையம்பதி said...
    கோஷ்டி காதில் ஒலிப்பது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது.....//

    மெளலி சார்! கோஷ்டியின் சாற்று மறை ஒலிக்கத் துவங்கி விட்டதா! அருமையான சிந்தனைய்யா உங்களுக்கு!

    கோஷ்டி முடிஞ்சப்பறம் தர்ற சூடான நெய்ப் பொங்கல் - ரெண்டு தொன்னை இங்கே பார்சேல்ல்ல்ல்ல்ல்! :-)

    ReplyDelete
  29. //Anonymous said...
    The narration of the post is very good. Instead of asking favours from the Lord, periazhwar asks the Lord himself. You have explained that very well. Very Good Tamil.
    -Dr.Balu//

    நன்றி டாக்டர் பாலு.
    பெரியாழ்வார் மட்டும் அல்லாது எல்லா ஆழ்வார்களும் கூடப் பெருமாளைத் தான் கேட்டார்கள்!
    ஆனால் பட்டர்பிரான் கொஞ்சம் வித்தியாசமாய்க்... கேட்கக் கூடத் தோன்றாமல் அப்படியே அவனைத் தானாகவே தன் குழந்தை என்று உரிமை ஆக்கிக் கொண்டார்! :-)

    ReplyDelete
  30. தாமதமாக வந்திருக்கிறேன் இந்தப்பதிவிற்கு மன்னிப்பு அதற்கு முதலில்.

    பெரியாழ்வாரைப்பற்றி அருமையாக
    சொல்லிவிட்டீர்கள் ரவி!
    ''மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
    ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில்
    பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
    மாணிக் குறளனே தாலேலோ
    வையமளந்தானே தாலேலோ''
    என்ற பெரியாழ்வார் பாசுரம் ஓர் அழகென்றால்

    'பொன்னைக் கொண்டு உரைகல் மீதே
    நிறமெழ உரைத்தாற் போல்
    உன்னைக் கொண்டு என் நாவகம்பால்
    மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்
    உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
    என்னையும் உன்னில் இட்டேன்
    என்னப்பா இருடீகேசா
    என்னுயிர் காவலனே '



    தங்கத்தை உரைகல் மேல் அதன் நிறம் தெரிய, உரைப்பது போல உன்னை என் நாக்கின் மேல் மாற்றுக் குறையாமல் தேய்த்துக் கொண்டேன். உன்னை எனக்குள் வைத்தேன். என்னையும் உனக்குள் இட்டேன்' என்னும் இந்தப்பாசுரம் ஆழ்ந்த பொருள் கொண்டது .கடைசி வரிகளை விளக்க விஷ்டாத்வைதத்தின் ஆழமான தத்துவங்களைத் தொடவேண்டும். நாராயணன் நமக்குள் இருக்கிறான் நாமும் நாராயணனுக்குள் இருக்கிறோம் என்பது வைணவத்தின் கொள்கை.பெரியாழ்வாரைப்பற்றி பதிவு அளித்து பெரும்பேறு அடைந்தீர்கள் ரவி!

    ReplyDelete
  31. ஷைலஜா said...
    "பெரியாழ்வாரைப்பற்றி பதிவு அளித்து பெரும்பேறு அடைந்தீர்கள் ரவி!"

    படித்தும் பெரும் பேறு பெற்றோம் ரவி.
    எம் பெருமானுக்கே பல்லாண்டு பாடிய
    பெரிய ஆழ்வாரைப் பற்றி படித்தும் பெரும் பேறு பெற்றோம் ரவி.

    ReplyDelete
  32. //இலவசக்கொத்தனார் said...
    அருமையான பதிவு. நீங்க பெரீய்ய்ய்ய பெரிய ஆள்தான்!! :)//

    ஆகா...
    பெரீய்ய்ய்ய பெரிய கொத்தனாரிடம் இருந்து பெரீய்ய்ய்ய பெரிய பாராட்டு! :-)

    ReplyDelete
  33. //குமரன் (Kumaran) said...
    மதுரை, மல்லி, கூடல் என்று பத்தித்தலைப்பு இடும்போது யாரையாவது நினைத்துக் கொண்டீர்களா? எனக்குத் தெரிந்த ஒருவருக்கு புரையேறியதே. :-)//

    அப்படியா குமரன்?
    புரை ஏறிய போது யாரு தலையில் தட்டினார்களோ!
    அது என்னமோ மதுரை, மல்லி என்றாலே கூடலார் எப்படியும் அதில் வந்து விடுகிறார்!

    //http://vishnuchitthan.blogspot.com/2005/12/79.html//

    பார்த்தேன் குமரன்! நன்றாக இருந்தது! தேசிகன் விவாதத்தையும் கண்டேன் :-)

    ReplyDelete
  34. //ஷைலஜா said...
    தாமதமாக வந்திருக்கிறேன் இந்தப்பதிவிற்கு மன்னிப்பு அதற்கு முதலில்//

    மன்னிப்பா? அப்படீன்னா?
    வாங்க ஷைலஜா! நானே வார இறுதியில் ஆன் அர்பர் சென்று இப்போ தான் வந்தேன். உங்களுக்குப் பதில் சொல்ல நானும் தாமதமாத் தானே வந்தேன்! தான்டிக்கி தீன்டி சரியாப் போஸ்துனு!

    //உன்னைக் கொண்டு என்னுள் வைத்தேன்
    என்னையும் உன்னில் இட்டேன்
    என்னப்பா இருடீகேசா
    என்னுயிர் காவலனே//

    நாராயணன் நமக்குள் இருக்கிறான் நாமும் நாராயணனுக்குள் இருக்கிறோம் என்பது வைணவத்தின் கொள்கை.

    மிக அருமையான பாசுரங்கள் தந்து பதிவிற்கே சிறப்பு செய்துள்ளீர்கள்!

    //பெரியாழ்வாரைப் பற்றி பதிவு அளித்து பெரும்பேறு அடைந்தீர்கள் ரவி!//

    ஆமாம் ஷைலஜா
    பெரியாழ்வாரைக் கொண்டு என் நாவகம்பால் மாற்றின்றி உரைத்துக் கொண்டேன்! :-)

    ReplyDelete
  35. //ந.ஜெ.ஜெய் புஷ்ப லதா said...
    படித்தும் பெரும் பேறு பெற்றோம் ரவி.
    எம் பெருமானுக்கே பல்லாண்டு பாடிய
    பெரிய ஆழ்வாரைப் பற்றி படித்தும் பெரும் பேறு பெற்றோம் ரவி//

    நன்றி புஷ்ப லதா!
    தங்கள் முதல் வருகை போலும்; அடிக்கடி வாங்க!

    ReplyDelete
  36. பெரியாழ்வாரின் பெயருக்குக்குப் பின் இப்படியொரு பெரிய செய்தி இருக்குமென்று தெரிந்து கொண்டேன். சிறப்பு. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?

    ReplyDelete
  37. //G.Ragavan said...
    பெரியாழ்வாரின் பெயருக்குக்குப் பின் இப்படியொரு பெரிய செய்தி இருக்குமென்று தெரிந்து கொண்டேன்//

    ஆமாம் ஜிரா...
    செய்தி பெரிசு தான். பல ஆச்சார்யர்கள் நன்கு ஆய்ந்து தான் விளக்கி உள்ளார்கள்! அடைக்குந் தாழ் உடைக்குந் தாழ் ஆகி விடாதா என்ன, அன்பின் முன்னே! :-)

    ReplyDelete
  38. dear KRS,
    Ilavasa Kothanarin PERRIYA pinpathivai vazhimozhigiren.

    PERRIYA THIRUVADI sambandamum PERRIYA azhwarkku undu.
    So PERRIYA AZHWAR.Thanks again.

    sundaram

    ReplyDelete
  39. //Anonymous said...
    dear KRS,
    PERRIYA THIRUVADI sambandamum PERRIYA azhwarkku undu.
    So PERRIYA AZHWAR.Thanks again.
    sundaram//

    நன்றி சுந்தரம் சார்.
    பெரிய திருவடி சம்பந்தம் பற்றி பதிவின் துவக்கத்தில் சொல்லி உள்ளேன்! - திருவரங்கம் தொடர்புடைய "பெரியவை" பற்றி!

    ReplyDelete
  40. Tears welled in my eyes by the time I read the post & comments & could not read anymore. Just sitting in a trance.
    SR

    ReplyDelete
  41. //Tears welled in my eyes by the time I read the post & comments & could not read anymore. Just sitting in a trance.
    SR//

    ஆகா...அடியேன் பதிவினால் ஒரு அன்பர் கண்ணீர் விடுகிறார் என்றால் நான் என்ன சொல்ல!
    SR, அது வருத்தப்பட்டு வந்த கண்ணீர் இல்லை என்றே எண்ணுகிறேன்!

    விளையாட்டாகச் சில வசனங்கள, இக்கால நகைச்சுவைக்காக எழுதுவது பற்றி முன்னரே சிலர் கோபமாகக் குறிப்பிட்டு இருந்தார்கள்! பெருமாளிடமே விளையாட்டா என்று!

    ஆழ்வார் அனுபவத்தில் திளைத்ததால் வந்த கண்ணீர் தானே?
    ஆர்வலர் புன்கண்ணீர் பூசல் தரும்!

    ReplyDelete
  42. krs
    varuthathil vanda kanneer alla, Perialwar thaipasathai patri padithathum bakhthiyil vanda kanneer.
    SR

    ReplyDelete
  43. Dear Sri Kannabiran,

    I dont know how I missed this blogspot. Wonderful is word which is very low in its adjective capacity. But I dont know more than that. Great Job. The coloquial narration makes it more understandable and interesting, though I have attended a lot of traditional upanyasams.

    Just to add a little to your wonderful blog (though late), this year this festival enactment of this "thiruppallAnDu thoDakkam" is being done on 9th December 2007 at "koodalazhagar sannidhi". So if any one wishes to attend it, please do so.

    ReplyDelete
  44. இந்தப் பதிவுக்குப் பரிசாக ஒரு சுட்டி தருகிறேன். படித்துப் பாருங்கள்.

    பெறாத வயிறு

    இந்த சுட்டியின் பதிவு திஸ்கியில் இருக்கிறது. TSu_Paranar எழுத்துரு கொண்டு யுனிக்கோடில் படிக்கலாம்.

    ReplyDelete
  45. //ஓகை said...
    இந்தப் பதிவுக்குப் பரிசாக ஒரு சுட்டி தருகிறேன். படித்துப் பாருங்கள்.

    பெறாத வயிறு//

    ஓகை ஐயா! அரை வருஷமாச்சு பதிவு போட்டு! அதைத் தட்டி எழுப்பி, பரிசு கொடுத்திருக்கீங்களே! மிகவும் மகிழ்ச்சியா இருக்கு, பரிசுக்கு அல்ல! அந்த பரிசைப் படிச்சி பாத்த பின்...ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கு!

    அதை நீங்க மீள் பதியலாமே!
    தாயும் ஆனவன்-னு ஒரு தந்தையைச் சொல்லுவாங்க! தாய்மையும் தந்தையும் ஆண்-பெண்ணில் இல்லை! அன்பு செய்யும் மனத்தில் தான் இருக்கு-ன்னு அடிக்கடிச் சொல்லுவேன்!

    இன்னிக்கும் அப்படிப்பட்ட பெரியாழ்வார்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்!

    இதோ தந்தை காட்டிய தாய்மையின் பாசுரம்!
    ஒருமகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்
    திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்
    பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
    மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப்புறம் செய்யுங் கொலோ

    ReplyDelete
  46. //Venkatesh said...
    Dear Sri Kannabiran,
    The coloquial narration makes it more understandable and interesting, though I have attended a lot of traditional upanyasams.//

    வெங்கடேஷ், நன்றிங்க!
    Coloquial narration is intended to extend
    the loving arms to more youngsters.
    That way, our youngsters, if they really see a value in something, they really stick to it. Such is their conviction!
    புக்மார்க் செய்து கொள்ளுங்கள்! பதிவுக்கு அடிக்கடி வாங்க!

    //Just to add a little to your wonderful blog (though late), this year this festival enactment of this "thiruppallAnDu thoDakkam" is being done on 9th December 2007 at "koodalazhagar sannidhi".//

    பாருங்க! இதுக்குத் தான் நீங்க இந்தப் பதிவை மிஸ் பண்ணி இருக்கீங்க! இந்தத் தகவலை நீங்க தக்க சமயத்துல வந்து தரணும் என்பது தான் திருவுள்ளம் போலும்!
    மதுரை மக்கள் அவசியம் சென்று பாருங்கப்பு! :-)

    ReplyDelete
  47. Dear Sri Kannabiran,

    Yes, "adhuvum avanadhu innaruLE". Everything has a reason in His design. I have already bookmarked your blog and am slowly reading all the articles one by one.

    And when I read something, the interest increases and want to read more. Thankfully, since I am late to this blog, I have a lot of articles to read and I dont have to wait :-) which would not be the case if I had come earlier and need to wait everything you come out with another blog :-)

    Lastly, how do you people write your comments in Tamizh. All that I see on the screen is a comment box and I dont know how to write in Tamizh in that, though I love to write a lot in Tamizh. Please help me.

    ReplyDelete
  48. //Venkatesh said...
    Dear Sri Kannabiran//

    வெங்கடேஷ்...Sri ellam vename...Ravi or else as all friends call - "krs" - endre koopidunga! :-)

    //Lastly, how do you people write your comments in Tamizh. Please help me.//

    Hmm
    Visit this link. Blogger Maravandu has explained how to download the software and start typing.
    Here is the Link

    If you seriously dont want to download any software or may be bcoz of download restrictions @ work...then you can visit suratha -an online transliterator site.
    http://suratha.com/reader.htm

    If you have more questions, do email me. My email is listed on the profile page of this site.

    ReplyDelete
  49. சரி ரவி, மிக்க நன்றி

    இப்பொழுது என்னால் தமிழில் தட்டச்சு செய்ய முடிகிறது. ஆனால், ஆரம்பம் ச்ரமமாக இறுக்க்கிறது. போகப் போக சரியாகும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  50. I recently came accross your blog and have been reading along. I thought I would leave my first comment. I dont know what to say except that I have enjoyed reading. Nice blog. I will keep visiting this blog very often.


    Kaylee

    http://grillsblog.com

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP