Thursday, August 09, 2007

பூரம்1: தங்கச்சி பட்ட ஆசை, அண்ணன் சுட்ட தோசை!

ஆசை, தோசை, அப்பளம், வடை என்று குழந்தைகள் விளையாடும் போது சொல்வதைக் கேட்டுள்ளீர்களா? சில சமயம் பெரியவங்க கூட ஆசை தோசை என்பார்கள்! ஏன்? ஆசைக்கும் தோசைக்கு என்ன கனெக்சன்?
சரி, அதெல்லாம் விடுங்க.
இங்கே எத்தனைப் பதிவர்கள், தங்கச்சி ஆசைப்பட்டுக் கேக்க, ஒரு அண்ணனாய் நீங்க வாங்கிக் கொடுத்திருக்கீங்க?
வாங்கிக் கொடுத்தீங்களா,இல்லை நல்லா ஓங்கிக் கொடுத்தீங்களா?:-)

பாசமலர் சிவாஜி-சாவித்திரி, "தட்டிப் பார்த்தேன் கொட்டாங்குச்சி" பாட்டு பாடும் டி.ராஜேந்தர் லெவலுக்கு எல்லாம் நீங்க இறங்கி யோசிக்க வேண்டாம்! தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க! :-)

ஆனா இன்னிக்கி நாம பாக்கப் போற கதை, கொஞ்சம் வித்தியாசமானது!
தங்கையோ எட்டாம் நூற்றாண்டு!
அண்ணனோ பதினோராம் நூற்றாண்டு!

ச்சே....இது எப்படிச் சாத்தியம்? அச்சோ....என்னை அடிக்க வாரீங்களா?
வ.வா.ச-வில் எழுதுவதால், இங்கேயும் கலாய்க்கத் தொடங்கி விட்டேன் என்று கும்ம வரீங்களா? பொறுமை! பொறுமை! மேலே படியுங்கள்!


அவள் ஒரு தங்கை - மாலை இட்ட மங்கை - நளினம் கொஞ்சும் நற்குண நங்கை! பாண்டி நாட்டாள் - தமிழ்ப் பாட்டாள்!
காதல் கவிதைகள் புனைவதில் அவளை மிஞ்ச உலகில் யாரும் கிடையாது!
அவளுக்கு அப்பா மட்டும் தான். அம்மா இருந்திருந்தால் அவள் வயதுக்குப் பல விஷயம் பேசி இருப்பாள். ஆனா அதுக்காக மனசுக்குப் பூட்டு போட்டு வைக்க முடியுமா?...அதுவும் கவிதைகள் ஊற்றெடுக்கும் கங்கை உள்ளத்துக்கு?

அவள், தன் மனதை, ஒரு மன்னனுக்குப் பறிகொடுத்தாள்.
அவனோ குழல் அழகன், கண் அழகன், வாய் அழகன்,
கொப்பூழில் எழு கமலப் பூ அழகன்! தன்னை அன்பால் நாடி வந்த எவரையும், எந்தப் பேதமும் காணாது காப்பவன்!
ஆனால் அவனை அடைவது என்னமோ அவ்வளவு சுலபமான விஷயமாகத் தெரியவில்லை! கழுவும் மீனில் நழுவும் மீன் என்பார்களே! அது போல!

பாடி ஆகி விட்டது, மாலை சூடி ஆகி விட்டது!
தூதும் விட்டு விட்டாள், நோன்பும் நோற்று விட்டாள்!
ஹூஹூம்....ஒன்றுமே நடக்க வில்லை! தந்தையின் உதவியும் அவளுக்குப் பெரிதாக உதவவில்லை! எல்லாம் காதல் படுத்தும் பாடு!
அவன் வியர்வையிலும், எச்சிலிலும் கூடத் துளசி மணமே தெரிந்தது அந்தப் பேதைப் பெண்ணுக்கு!

திக்கற்றவர்க்கு தெய்வமே துணை அல்லவா? காதலுக்கும் தெய்வம் தானே துணை! ஓ...அதனால் தான் கோவில்களில் இப்போதெல்லாம் அதிக அளவில் இளைஞர், இளைஞி கூட்டங்களோ? கற்பூர ஜோதிக்குப் பதில் காதல் ஜோதிகளோ? :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஊர், திருமால் இருஞ் சோலை; அழகர் கோவில்-னு சொன்னா இன்னும் நல்லாத் தெரியும்! ஏற்கனவே காதலில் வெற்றி பெற்ற முருகன் கூட அங்கு தான் இருக்கிறான்! சரியான இடம் தான் மருதகாரய்ங்களுக்கு!
அங்கு தோசைப் பிரசாதம் மிகப் பிரபலம்!
அங்கு ஆசைப் பிரசாதம் பெற, வேண்டிக் கொள்கிறாள் இந்தப் பேதை!

"கள்ளழகரே, கள்ளழகரே! என் காதலைக் கனிவித்துக் கொடு!
உனக்கு நூறு தடா சர்க்கரைப் பொங்கலும், நூறு தடா வெண்ணையும் நேர்ந்து விடுகிறேன்!
(தடா என்றால் பாத்திரம் என்று அர்த்தம்...நீங்க அரசியல் பற்றியெல்லாம் ஏதும் தப்பா நினைச்சிக்காதீங்க :-)
நீ உண்ட பின், அதை உன் அடியவர்கள் எல்லாம் உண்டு, சேஷமாக வாழட்டும், சேமமாக வாழட்டும்! "
நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்;
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில்
சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று இவை கொள்ளுங் கொலோ

(- நாச்சியார் திருமொழி)

வெண்ணெய், அதை உருக்கி நெய், அதையே ஊற்றி அக்கார அடிசில்! - என்ன சாமர்த்தியமான வேண்டுதல் பாருங்க :-)
அக்காரம்=சர்க்கரை; அடிசில்=சோறு/பொங்கல்;
அக்கார அடிசில் = சர்க்கரைப் பொங்கல்!
இதைக் கேட்டவுடன் சர்க்கரையாய்க் கரைந்து விட்டார் கள்ளழகர்...
அவ்வளவு தான்...கேட்டதைக் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா, என்று அவள் கேட்டதைக் கொடுத்து விட்டார்.

இதில் இருந்து என்ன தெரிகிறது?
மருத கள்ளழகரை வேண்டிக்கிட்டா காதலில் உடனே வெற்றி!

பதிவுலக நண்பர்களில் காதலர்கள் யார் யாரு இருக்கீங்க? கை தூக்குங்க பார்க்கலாம்! மதுரை அழகர் கோவிலுக்கு டிக்கெட் எடுக்கணும்ல; அதான் கேட்டேன்! :-))


ஆனாப் பாருங்க....ஊர் மெச்ச, உலகம் போற்ற, நம்பிக்கு மாலையிடவில்லை நங்கை! அதான் தம்பதிகள் ஏற்கனவே மாலை மாற்றிக் கொண்டார்களே வில்லிபுத்தூரில்...இன்னும் என்ன? :-)
திருவரங்கத்தில் நம்பியிடம் சர்க்கரைப் பொங்கலாய் கரைந்து விட்டாள் நங்கை!
அவன் பாம்புப் படுக்கையில் மெல்லத் தன் காலை வைத்து,
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி....அவன் மலர் மார்பைச் சேர்ந்து விட்டாள்.
பாம்பின் மேல் நாம் எல்லாம் கால் வைத்தால் பதறுவோம்! படையும் நடுங்குவோம்! ஆனால் அவள் ஏதோ ஏக்கமாய் முணுமுணுத்துக் கொண்டே ஏறிவிட்டாள்! அந்த ஏக்கத்தைக் கண்ட பச்சை மாமலைப் பாம்புக்கு, "மனதில் ஓர் எண்ணம்"!

சரி....அப்போ அவளுடைய வேண்டுதல்? - அவ்வளவு தான், அம்போ!!!
காந்திக் கணக்கு என்பார்களே - அதுவா? :-)
அம்மா இருந்திருந்தா நிறைவேத்தி வைச்சிருப்பா! அப்பாவுக்கு மகளைப் பிரிந்த துக்கமும், பாட்டெழுதும் பணியுமே சரியாகப் போய்விட்டது!


மூன்று நூற்றாண்டுகள் கழிந்து விட்டன!
ராமானுசர் வந்துதித்த கால கட்டம். அவர் ஆதிசேஷன் என்னும் அந்தப் பாம்பின் அம்சம்.
பழுத்த துறவி...ஆனால் படிப்பதோ காதல் கவிதை! - திருப்பாவை என்னும் காதல் கவிதை! திருப்பாவை ஜீயர் என்றே பெயர் அவருக்கு!

அரங்க மாநகரத்தில் அன்று பெருவிழா.
கோவிலில் அரங்கனுக்குத் தமிழை ஓதுகிறார்கள். அப்போது இந்த நாச்சியார் திருமொழியையும் சேர்த்துத் தான் ஓதுகிறார்கள்! "நூறு தடா" என்னும் வரிகள் வரும் போது ராமானுசருக்கு "தடார்" என்று ஒரு கலக்கம்!
அச்சோ! கோதையே சொன்னதைச் செய்யாமல் போனாளே! வாய்ச் சொல் வீரமோ என்று உலகத்தார் யாராச்சும் நாளை சொல்லி விட்டால், பழி யாருக்கு?
பதறினார்....துண்டை உதறினார்....எழுந்தோடினார்!
- எங்கே? நேரே மதுரை அழகர் கோவிலுக்குத் தான்!

நூறு தடா வெண்னெய், நூறு தடா சர்க்கரைப் பொங்கல்.....
கல்யாண சீர் வரிசைப் பாத்திரங்களில் எப்படி நிரப்புவார்களோ, அப்படி நிரப்பினார்கள். சுந்தர ராஜப் பெருமாள் என்னும் மாலிருஞ்சோலை நம்பிக்கு, ஆண்டாளின் நேர்ச்சையாக,
அவள் பெயரும் நட்சத்திரமும் சொல்லிக், கோதையின் சார்பாகச் சமர்பித்தார் அண்ணல்! - வேண்டுதல் நிறைவேறியது! கோதையின் வாக்கும் மெய்யானது!
காதலே ஜெயம்! ஜெயிக்க வைத்த மதுரை நம்பிக்கு ஜெயம்! என்று அனைவரும் ஆனந்தப்பட்டார்கள்.

ஆனால் ராமானுசருக்கு மட்டும் ஏனோ, ஆண்டாளைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உணர்வு!
"அம்மாடி...உன் ஆசை இதோ பூர்த்தியாகி விட்டது. இன்னும் என்ன ஒரே ஆழ்ந்த சிந்தனை? சிரி தாயி..." என்று சொல்ல வேண்டும் போல் ஒரு உந்துதல்...மதுரையில் காணிக்கையைச் செலுத்தி முடித்து, வில்லிபுத்தூருக்கு மீண்டும் ஒரே ஓட்டம்!

வில்லிபுத்தூர் கோவிலுக்குள் அவர் நுழைந்தது தான் தாமதம். அவருக்கு என்ன உணர்ச்சிகள் மனத்தில் ஓடினவோ, அதே உணர்ச்சிகள் அனைத்தும் கல்லில் சிலையாய் நிற்கும் ஆண்டாளுக்கும்!
"நம் கோயில் அண்ணன் வந்தாரே", என்று அர்ச்சகர் மேல் ஆவேசித்துச் சொன்னாள்! கருவறையில் இருந்து ஓடி வருகிறாள்...அர்ச்சகரின் உருவில்!..தன் புதிய அண்ணனை வரவேற்க! எல்லாருக்கும் ஒரே திகைப்பு!
அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது! இன்றோ மடை திறந்த வெள்ளமாய் கவி பாடி ஓடி வருகிறார். வருபவள் அவளே அல்லவா?

அர்த்த மண்டபம் தாண்டியும் வந்து விட்டாள்...ராமானுசரைக் கையால் பிடித்து அழைத்து, அண்ணா என்று அன்பு காட்டினாள் கோதை!
எட்டாம் நூற்றாண்டுத் தங்கையும், பதினோராம் நூற்றாண்டு அண்ணனும் அளவளாவி மகிழ்ந்தார்கள்!

எதுக்கு ஆண்டாள் ராமானுசரைப், போயும் போயும், அண்ணா என்று கூப்பிட வேண்டும்?
ரக்ஷா பந்தன் - அதாங்க ராக்கி - கையில் கட்டி விடுவாங்களே - ஒடனே சிஸ்டர் ஆயிடுவாங்களே...அப்ப அண்ணன்கள் எல்லாரும் என்ன பண்ணுவாய்ங்க? தங்கச்சி ஆசைப்பட்டதை வாங்கிக் கொடுப்பாங்க!
அட, நம்மூரு கல்யாணத்துல கூட எடுத்துக்குங்க!
மணப்பெண்ணின் சகோதரன் தான், காசி யாத்திரைக்குக் கூட வரான், கால் கழுவி விடறான், பொரி வார்த்து பெண்ணைக் கொடுக்கறான்! - இப்படியான அண்ணன் தங்கை உறவு காலம் எல்லாம் தொடரும் ஒன்று!
ஒவ்வொரு பண்டிகைக்கும் அண்ணன் வீட்டுச் சீரைக் கேட்கும் தங்கச்சிங்க யாராச்சும் இருக்கீங்களா? :-)

காதலுக்குக் கண் தானில்லை! - ஆனால்
அன்புக்கோ காலமே இல்லை!! - நூற்றாண்டாவது? ஒன்றாவது?

இன்றும் வில்லிபுத்தூர் ஆலயத்தில் அர்த்த மண்டபதையும் சேர்த்து தான், கருவறையாகவே கருதப்படுகிறது! அங்கு ஆண்டாள் கால் பதித்த காரணத்தால்! அதற்கு முன்பே நாம் எல்லாம் நின்று விட வேண்டும், அதற்கு மேல் அனுமதி இல்லை!

இப்படி ஆண்டாளுக்கே அண்ணன் ஆன காரணத்தால் தான்....அவள் மேல் பாடப்பட்ட வாழித் திருநாமம் என்னும் பாட்டில்,
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின் ஆனாள் வாழியே என்று பாடினார்கள்!
பெரும்பூதூர் மாமுனி = ராமானுசர்
அவருக்கு பின் ஆன தங்கை = ஆண்டாள்...திருவடிகளே சரணம்!


அடியே கோதை...
இன்னும் கொஞ்ச நாளில் உன் பிறந்த நாளடி! திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்த அழகியே...உனக்கு மட்டுமா பிறந்த நாள்? எங்கள் பாரத தேசமும் இதே நாளில் தானே அன்று புதிதாகப் பிறந்தது!
(இந்த ஆண்டு Aug 15, அன்று ஆடிப் பூரம் வருகிறது)
அதை ஒட்டி, ஆடிப் பூரம் - தொடர் பதிவுகளாய் - உன்னைப் பலப்பல கோணங்களில் காண ஆசை! அதுக்கு வில்லிபுத்தூர் வரப் போகிறோம்!
இதோ, உனக்கு பிறந்த நாள் பரிசுகளாய், பதிவுகள், தொடரும்...

46 comments:

  1. மிகவும் ரசித்துப் படித்தேன்.நான் அறிந்திராத புதிய தகவல்கள். பதிவிட்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
    என்றென்றும் அன்புடன்,
    பா. முரளி தரன்.

    ReplyDelete
  2. அருமை! அருமை!!!

    //எங்கள் பாரத தேசமும் அன்று தானே புதிதாகப் பிறந்தது! (Aug 15, 2007)//
    1947 தானே? :-/

    ReplyDelete
  3. ஆகா ஆகா!!
    அழகான எழுத்து நடை!! :-)

    கலக்குங்க அண்ணாத்த!!!
    தொடரின் அடுத்த பகுதிகளை ஆவலுடன் எதிர்நோக்கி!! :-)))

    ReplyDelete
  4. ஆடிப்பூரத்துக்கு ஆடிப்போறமாதிரி அருமையா ஒரு பதிவு. தோசையில ஆரம்பிச்சு அக்காரவடிசல்ல தொடர்ந்துட்டீங்க. ஒப்பிலியப்பன் கோயில்ல சாப்ட்ட ப்ரசாதம்லாம் ஞாபகத்துக்கு வர வச்சுட்டீங்க

    ReplyDelete
  5. ஆகச்டு 15, 2007 சுதந்திரம் இந்தப்பதிவில் தேவையா. அடுத்த 2008 ல்பொருந்திவராது.
    அருமையான பதிவை என்றும் பொருந்தும் வகையில் கருதி அமைப்பது தேவையல்லவா.
    அன்புடன்
    இராதாகிருஷ்ணன்
    radhamadal@gmail.com

    ReplyDelete
  6. பாலாஜி, ராதாகிருஷ்ணன்...

    சுதந்திர தினம் என்றுமே ஆக15 தான்.
    2007-இல் ஆடிப்பூரமும் அதே நாளில் தான் வருகிறது! அதைச் சரியாச் சொல்லத் தெரியவில்லை எனக்கு, சரியான மக்கு! :-) மன்னிக்கவும்!

    கோதையைப் பற்றிய பதிவை எழுதும் போது இருந்த உணர்ச்சி வேகத்தில்...பட பட வென்று முடித்து விட்டேன்...பதிவில் இப்போது சொற்களை மாற்றி அமைத்து விட்டேன்..பொருந்துகிறதா பாருங்கள்!

    ReplyDelete
  7. கட்டிப்போடுது அப்படியே... உங்க எழுத்து.
    விவரிக்க வார்த்தை இல்லை.

    ReplyDelete
  8. இந்தத் தங்கச்சிப் பதிவை
    மலேசிய மாரியாத்தா என்ற பட்டப்பெயர் கொண்ட
    அன்புத் தங்கை, துர்காவுக்கு...
    dedicate செய்கிறேன்! :-)))
    Sis, that is the Birthday treat for now!


    சன் மீசிக்-ல தான் பாட்டுக்கு பாட்டு கேட்டு பிடிச்சவங்களுக்கு டெடிகேட் செய்யணுமா என்ன? பதிவுல கூடச் செய்யலாம் தானே! :-)))

    ReplyDelete
  9. //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    இந்தத் தங்கச்சிப் பதிவை
    மலேசிய மாரியாத்தா என்ற பட்டப்பெயர் கொண்ட
    அன்புத் தங்கை, துர்காவுக்கு...
    dedicate செய்கிறேன்! :-)))
    Sis, that is the Birthday treat for now!

    சன் மீசிக்-ல தான் பாட்டுக்கு பாட்டு கேட்டு பிடிச்சவங்களுக்கு டெடிகேட் செய்யணுமா என்ன? பதிவுல கூடச் செய்யலாம் தானே! :-)))
    //


    அவ்வ்வ்வ்வ்வ்,இப்படி மனசை தொட்டு விட்டீர்களே அண்ணா...நன்றி நன்றி.
    நம்ப ரெண்டு பேரும் கூடிய விரைவிலேயே தோசை சாப்பிடலாம். இப்படி நூற்றாண்டு காலம் காத்துக்கொண்டிருக்க வேண்டாம்.நான் சுட்ட சுட்ட தோசை வாங்கி தரேன் அண்ணா.Frozen idly காண்பித்து மோசம் செய்ய மாட்டேன் :)
    நான் நல்ல தங்கை,உங்கள் தம்பி போல் இல்லை.முடிந்தால் பிரியாணி எல்லாமே ஒரு பிடி பிடிப்போம்.

    ReplyDelete
  10. எனக்கும் தங்கை வேணும்னு ரொம்ப ஆசைதான்... ஆனா, எங்கப்பா அம்மாதான் 7 போதும்னு நிறுத்திட்டாங்க :)

    நல்ல நடை... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. Arumaiyana Aadipura padivu. Coimbatore Ramnagar kovilil Aadipurathukku Ramarukke Andal alangaram. Anaithu Sivan kovililum Ambalukku aadipurathil Valaikappu, kovilukku varum pengalukkellam valayal prasadam.

    Shobha

    ReplyDelete
  12. எப்பவும் போல கலக்கிட்டீங்க கே.ஆர்.எஸ்.....

    திருவாடிப்பூர திருவிழாவிற்கு இந்த வருடம் பதிவில் நானும் சேர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  13. அழகு கொஞ்சும் தமிழ் நடையில் ஆண்டாளுக்குச் சொல்மாலை சூட்டக் கண்ணபிரானே வந்ததும் ஒரு ஆச்சரியம் தானே! அருமைன்னு சும்மாச் சொல்லிட்டுப் போறதிலே அர்த்தமே இல்லை!

    ReplyDelete
  14. கோவில் அண்ணாரைப் பற்றி சொல்லி பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாளை வாழ்த்துகிறீர்கள் இரவிசங்கர். மிக நன்று. அன்று திருப்பாவை ஜீயரை 'அண்ணா' என்று அழைத்துக் கொண்டு கருவறையை விட்டு அருத்த மண்டபத்திற்கு வந்தவள் தான். அங்கேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறாள். அவளோடு அரங்கமன்னாரும் அப்பா கருடாழ்வாரும் கூட இணைந்து ஓம்காரத்திற்கு விளக்கமாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  15. aatipuurathu uthittha nayakiyin thinam Aug.15.mayyaoo...marakathamoo... iyyoo... avan azhaku...
    mumbay airprtil irunthu pinnuttam athaan thanglish mannikkavum

    ReplyDelete
  16. //துளசி கோபால் said...
    ஹைய்யோ............//

    என்ன ஆச்சு டீச்சர்? :-)

    ReplyDelete
  17. //Anonymous said...
    மிகவும் ரசித்துப் படித்தேன்.நான் அறிந்திராத புதிய தகவல்கள்//

    நன்றி முரளி்தரன்.
    வில்லிபுத்தூர் பற்றி அதிகம் பேர் அறிந்திராத தகவல்களையும் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

    ReplyDelete
  18. @ பாலாஜி
    நன்றி தல...உங்களுக்குப் பிடிக்கும் என்று தெரியுமே! சகோதரிக்கு ஸ்பெஷலா என்ன வாங்கிக் கொடுத்தீங்க பாலாஜி, இந்தியப் பயணத்தின் போது? :-)

    @ CVR
    எல்லாம் நீங்க சொல்லிக் கொடுக்கறது வச்சி தான் அண்ணாத்த! அடுத்த பகுதிகளில் வில்லிபுத்தூர் வயக்காட்டுக்கு எல்லாம் போயி வரலாமா? :-)

    ReplyDelete
  19. //சின்ன அம்மிணி said...
    தோசையில ஆரம்பிச்சு அக்காரவடிசல்ல தொடர்ந்துட்டீங்க//

    வாங்க சின்ன அம்மணி.
    அடடா...தொன்னை ரெடி? பொங்கல் எங்க?

    //ஒப்பிலியப்பன் கோயில்ல சாப்ட்ட ப்ரசாதம்லாம் ஞாபகத்துக்கு வர வச்சுட்டீங்க//

    ஹூம்...utterly butterly delicious...amul :-)

    ReplyDelete
  20. //R. said...
    அருமையான பதிவை என்றும் பொருந்தும் வகையில் கருதி அமைப்பது தேவையல்லவா//

    நிச்சயமாக, ராதாகிருஷ்ணன்!
    உங்கள் கருத்து மிகவும் சரி. மாற்றி விட்டேன்!

    ReplyDelete
  21. //வடுவூர் குமார் said...
    கட்டிப்போடுது அப்படியே... உங்க எழுத்து.
    விவரிக்க வார்த்தை இல்லை.//

    ஹிஹி..
    எழுத்து என்னதில்ல குமார் சார்...
    ஆண்டாளோடது :-)

    ReplyDelete
  22. //துர்கா|thurgah said...
    நான் சுட்ட சுட்ட தோசை வாங்கி தரேன் அண்ணா.Frozen idly காண்பித்து மோசம் செய்ய மாட்டேன் :)//

    இது, இதைப் புரிந்தவர்களுக்குப், புரிய வேண்டிய முறையில் புரிந்தால், சரி! :-)

    //நான் நல்ல தங்கை,உங்கள் தம்பி போல் இல்லை//

    இது உலகம் அறிந்த உண்மை! :-)

    //முடிந்தால் பிரியாணி எல்லாமே ஒரு பிடி பிடிப்போம்//

    ராயல் ராமும் மதுரை பிரியாணி பார்சல் ஒன்னு சொல்லியுள்ளார்.

    ReplyDelete
  23. //தஞ்சாவூரான் said...
    எனக்கும் தங்கை வேணும்னு ரொம்ப ஆசைதான்... ஆனா, எங்கப்பா அம்மாதான் 7 போதும்னு நிறுத்திட்டாங்க :)
    நல்ல நடை... வாழ்த்துக்கள்!//

    நன்றி தஞ்சாவூரான்!
    நீங்க கடைக்குட்டியா என்ன? :-)

    ReplyDelete
  24. //Shobha said...
    Arumaiyana Aadipura padivu. Coimbatore Ramnagar kovilil Aadipurathukku Ramarukke Andal alangaram. Anaithu Sivan kovililum Ambalukku aadipurathil Valaikappu, kovilukku varum pengalukkellam valayal prasadam.//

    வாங்க ஷோபா.
    நண்பன் ஒருவன் ராம் நகர், ஸ்வர்ணாம்பிகா லேஅவுட்டில் தான் உள்ளான்...கோவில் சூப்பரா இருக்கும்! வந்துள்ளேன்....

    வில்லிபுத்தூர் மடித்தல சயனச் சேவை பதிவிடுகிறேன்..அவசியம் பாருங்க!

    ReplyDelete
  25. மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள் KRS. அண்ணன் தங்கை பாசத்தை பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது. ஹூம் அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும். மற்ற பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  26. //மதுரையம்பதி said...
    எப்பவும் போல கலக்கிட்டீங்க கே.ஆர்.எஸ்.....
    திருவாடிப்பூர திருவிழாவிற்கு இந்த வருடம் பதிவில் நானும் சேர்ந்து கொள்கிறேன்//

    ஆகா...வாங்க வாங்க...ஆண்டாள் ஆழித்தேர் வடம் பிடிச்சு இழுங்க!

    ReplyDelete
  27. //கீதா சாம்பசிவம் said...
    அழகு கொஞ்சும் தமிழ் நடையில் ஆண்டாளுக்குச் சொல்மாலை சூட்டக் கண்ணபிரானே வந்ததும் ஒரு ஆச்சரியம் தானே!//

    கண்ணபிரான் தான் புண்ணியம் செஞ்சிருக்கணும் கீதாம்மா, நம்ம கோதையிடம் சொல்மாலை வாங்க! :-)

    //அருமைன்னு சும்மாச் சொல்லிட்டுப் போறதிலே அர்த்தமே இல்லை!//

    ஆகா...அதுக்காக அப்படியே போயிடாதீங்க....கொஞ்சம் சர்க்கரைப் பொங்கல் கொடுத்துட்டுப் போங்க...சப்புக் கொட்டிச் சாப்பிடுகிறோம்!

    ReplyDelete
  28. //குமரன் (Kumaran) said...
    கோவில் அண்ணாரைப் பற்றி சொல்லி பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாளை வாழ்த்துகிறீர்கள் இரவிசங்கர். மிக நன்று//

    அண்ணனைக் கொண்டாடினாத் தான் தங்கச்சிகள் திரும்பிப் பாக்குறாங்க குமரன்! என்ன செய்யறது சொல்லுங்க :-)

    //கருவறையை விட்டு அருத்த மண்டபத்திற்கு வந்தவள் தான். அங்கேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறாள்//

    ஆமாம் குமரன்...
    அவளோடு அரங்க மன்னாரும் அப்பா கருடாழ்வாரான பெரியாழ்வாரும் சேர்ந்தே ஏகாசன சேவை தருகிறார்கள்! ஓம்கார விளக்கம் பற்றிக் கொஞ்சம் விரிவா சொல்லுங்க குமரன். எல்லாரும் பயன் அடைவோம்!

    ReplyDelete
  29. //தி. ரா. ச.(T.R.C.) said...
    aatipuurathu uthittha nayakiyin thinam Aug.15.
    mayyaoo...marakathamoo... iyyoo... avan azhaku...
    mumbay airprtil irunthu pinnuttam athaan thanglish mannikkavum//

    மும்பை நிலையத்தில் இருந்து பின்னூட்டமா?
    ஹூம்ம்..திராச கலக்குறீங்க!

    மையோ மரகதமோ
    மறிகடலோ மழைமுகிலோ
    ஐயோ இவன் வடிவென்பது
    அழியா அழகுடையான்...
    என்ன அழகான கம்பன் பாட்டு கொடுத்திருக்கீங்க!

    ReplyDelete
  30. //ஓம்கார விளக்கம் பற்றிக் கொஞ்சம் விரிவா சொல்லுங்க குமரன். //

    அண்மையில் பதிவுகள் படிக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது 'முன்பெல்லாம் ஒவ்வொரு நல்ல நாளுக்கும் பதிவு போடுவியே. இப்ப எல்லாம் ஏன் போடறதில்லை?'ன்னு கேட்டார். அதுக்கு 'சூரியன் வந்த பின்னாடி நட்சத்திரங்களுக்கான கதி தான் இப்ப எனக்கு'ன்னு சொன்னேன். சூரியரே. நீங்களே அடுத்த இடுகையில் சொல்லிவிடுங்கள். :-)

    ReplyDelete
  31. //அன்புத்தோழி said...
    அண்ணன் தங்கை பாசத்தை பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது. ஹூம் அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணும். மற்ற பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்//

    ஆமாங்க அன்புத்தோழி...அண்ணன் தங்கை சென்டி-ன்னு சும்மா கேலி செய்தாலும் கூட...பசங்க தங்கச்சிய வுட்டுக் கொடுக்க மாட்டானுங்க...அதுவும் கல்யாணமான பின்னாடி தான் ஒரி மிஸ்ஸிங் ஃபீலிங் வரும்.

    அது வரை நாயே பேயே என்று சண்டையிட்டு விட்டு...இப்ப குடும்பத்தலைவி-ங்கிறதுன்னாலே...ரெஸ்பெக்ட் கொடுக்கறதா பாத்தா சிரிப்பா வரும்! :-)))

    ReplyDelete
  32. //குமரன் (Kumaran) said...
    அதுக்கு 'சூரியன் வந்த பின்னாடி நட்சத்திரங்களுக்கான கதி தான் இப்ப எனக்கு'ன்னு சொன்னேன். சூரியரே. நீங்களே அடுத்த இடுகையில் சொல்லிவிடுங்கள். :-)//

    ஆகா என்ன வார்த்தை சொன்னீங்க குமரன்..
    சூரியனாவது, ரவியாவது...
    சூரியனே ஒரு நட்சத்திரம் தானே!

    நீங்க தான் என்னைக்கும் துருவ நட்சத்திரம். சப்தரிஷி மண்டலம் மாதிரி நம்ம நண்பர்களும் நட்சத்திர மாலை ஆச்ச்சே!

    இருங்க...இந்த வார இறுதியில் ஒங்க கிட்ட பேசி...உங்களையே எழுத வைக்க முயல்கிறேன்! நான் ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிச்சாலும், பாண்டி நாட்டுப் பரங்குன்றத்தான் - நீங்க வில்லியைப் பத்தி சொல்லுறா மாதிரி வருமா?

    கோதைத் தமிழ் வலைப்பூவுக்கு நல்ல படங்கள் சில கிடைத்துள்ளது...
    அனுப்பி வைக்கிறேன்...இங்கு இட்ட பெரியாழ்வார், ஆண்டாள் பல்லக்கில் வருவதும் அதில் ஒன்று தான்!

    ReplyDelete
  33. //சூரியனே ஒரு நட்சத்திரம் தானே!
    //

    அப்படி வாங்க வழிக்கு. நீங்க சூரியன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. :-)

    மனதாரத் தான் சொல்கிறேன் இரவிசங்கர். எவ்வளவு முயன்றாலும் என்னால் இப்படி அருமையாக எழுத இயலாது. அதற்குச் சாட்சியாக நம் நண்பர்கள் இருக்கிறார்கள். தொடர்ந்து நீங்களே எழுதுங்கள் இரவி. ஆன்மிகப் பதிவுகளா என்று ஓடியவர்களும் உங்கள் பதிவுகளுக்கு வந்து படிக்கிறார்கள். அது தொடர வேண்டும்.

    கோதை தமிழில் எழுதவேண்டும். படங்களை அனுப்புங்கள். நன்றி.

    ReplyDelete
  34. //நன்றி தஞ்சாவூரான்!
    நீங்க கடைக்குட்டியா என்ன? :-)//

    ஆமாங்க, ஏழாவது மனிதன் :-)

    ReplyDelete
  35. இரவிசங்கர்,
    நல்லா எழுதியிருக்கீங்க.. ரசித்துப் படித்தேன்..

    அன்புடன்,
    சீமாச்சு

    ReplyDelete
  36. AndaL thirunaamam vaazhi.
    aangilaththil ezhuthuvathaRku manniyungaL Ravi.
    after reading this post ,I just wanted to fly to Srivilliputhur and inhale the fragrance of that special ambience.
    thank you thank you.thank you.
    கொடுத்திருக்கீங்களா? இல்லையா??
    நீங்க பேச்சிலர்-னா, சும்மா, கூச்சப்படாமச் சொல்லுங்க!
    கல்யாணம் ஆகியிருந்தா, சும்மா, பயப்படாமச் சொல்லுங்க.
    This is really something.
    God Be with You always and guide you to write more and more.
    Bless you Ravi Kannabiraan.

    ReplyDelete
  37. மீண்டும் மீண்டும் படிக்க வைத்த,
    நெகிழ வைத்த பதிவு.. இதுமாதிரி
    நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. dear KRS,
    அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது!

    Pazhaiya KOBAM(anger) over Thirumalai Archgar's action at the Main gate in Sridevi episode, thangalin ezhuthil(Writer/Poet's Liberty)veliyagiyathupol-ullathu.

    Many incidents are new to me and enjoyed the narration very much....pl continue..thanks.

    sundaram

    ReplyDelete
  39. //குமரன் (Kumaran) said...
    அப்படி வாங்க வழிக்கு. நீங்க சூரியன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி. :-) //

    குமரனோடு பேசி ஜெயிக்க முடியுங்களா? :-)

    //ஆன்மிகப் பதிவுகளா என்று ஓடியவர்களும் உங்கள் பதிவுகளுக்கு வந்து படிக்கிறார்கள். அது தொடர வேண்டும்//

    உங்கள் அன்பும் ஆசியும், நண்பர்கள் ஆதரவும் சேர்ந்து, இறைவனின் குணானுபவங்களை நாம் எல்லாரும் சுவைத்துக் கொண்டே இருக்கலாம் குமரன்.

    ReplyDelete
  40. //Seemachu said...
    இரவிசங்கர்,
    நல்லா எழுதியிருக்கீங்க.. ரசித்துப் படித்தேன்..//

    சீமாச்சு
    மிக்க நன்றி...அண்ணன்-தங்கை என்பதால் நானும் ரசிச்சே தான் எழுதினேன்...என் தங்கையிடம் போட்ட சண்டைகள் நினைவுக்கு வந்து! :-)

    ReplyDelete
  41. //வல்லிசிம்ஹன் said...
    after reading this post ,I just wanted to fly to Srivilliputhur and inhale the fragrance of that special ambience.//

    வாங்க, அடுத்த பதிவில் நாம் எல்லாரும் சேர்ந்தே வில்லிபுத்தூர் போகலாம்...வல்லியம்மா!

    //God Be with You always and guide you to write more and more.
    Bless you Ravi Kannabiraan//

    பதிவெழுதத் தொடங்கி பத்து மாசம் ஆகுது. அன்றில் இருந்து இன்று வரை உங்க அன்பும், நீங்க பாடிக் கொடுத்த கண்ணன் பாட்டும் அப்படியே நினைவில் இருக்கு! நன்றி வல்லியம்மா!

    ReplyDelete
  42. //ஜீவி said...
    மீண்டும் மீண்டும் படிக்க வைத்த,
    நெகிழ வைத்த பதிவு.. இதுமாதிரி
    நிறைய எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்.//

    நிச்சயம் எழுதுகிறேன் ஜீவி.
    நன்றி.

    ReplyDelete
  43. //Anonymous said...
    dear KRS,
    அந்த அர்ச்சகருக்கு நல்ல நாளிலேயே தமிழ் அவ்வளவாக வராது!

    Pazhaiya KOBAM(anger) over Thirumalai Archgar's action at the Main gate in Sridevi episode, thangalin ezhuthil(Writer/Poet's Liberty) veliyagiyathupol-ullathu.//

    அச்சச்சோ! சுந்தரம் சார், அதுவல்ல இது! கோபம் எல்லாம் அப்பவே போச்சே! அந்தத் திருமலை அர்ச்சகரும் ஒரு அடியார் தானே!

    இங்கே ஏன் அர்ச்சகருக்குத் தமிழ் அவ்வளவா வராது என்று சொன்னேன் என்றால் - அவர் தமிழ்க் கவிகளைப் பொழிந்தாராம்!
    அவர் அப்படிப் பொழிந்து அது வரை யாரும் கண்டதும் இல்லை!

    ஆண்டாள் அவர் மேல் ஆவேசிக்கவில்லை என்றால் அவர் இப்படிப் பொழிவது சாத்தியமே இல்லை!
    அதனால் தான் அப்படிச் சொன்னேன்!

    //Many incidents are new to me and enjoyed the narration very much....pl continue..thanks//

    புதிய செய்திகள் இயன்ற வரை தருகிறேன். நன்றி சுந்தரம் சார்!

    ReplyDelete
  44. கண்ணபிரான் சொற்புனைவில்
    சூடிக் கொடுத்தக் கோதை நாச்சியாரின்
    தமிழமுது, பல நூற்றாண்டு கடந்தாலும்
    நினவில்,மனதில் மணம் வீசுகிறது.

    ReplyDelete
  45. ஆஹா, எத்தனை நூற்றாண்டு கழிஞ்சாலும் இப்படி ஒரு அண்ணன் கிடைக்கறதுன்னா சும்மாவா? அருமையான பதிவு கண்ணா.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP