Wednesday, August 15, 2007

பூரம்2: கோவிலில், காதலியின் மடியில் காதலன்!

வாங்க இன்னிக்கி வில்லிபுத்தூருக்குப் போயி ஊர் சுத்தலாம்! அப்படியே காதலியின் மடியில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம்!
மதுரை பழங்காநத்தம் பஸ் ஸ்டாண்டு-ல இருந்து மருதைக்காரய்ங்க பஸ் ஏற்பாடு பண்ணியிருக்காய்ங்க! மதுரையில் இருந்து ட்ரெய்னில் விருதுநகருக்கு போயி, அங்கிருந்தும் வில்லிபுத்தூருக்கு வரலாம்-ல!

இன்று திருவாடிப் பூரம்!
ஆண்டாள் அவதார தினம்! (இந்த ஆண்டு, Aug 15, 2007)
Happy Birthday Kothai! அடியே கோதை, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவள் பிறந்த நாள் அன்னிக்கி, ஊரே ஒரே கோலாகலம்! பெரிய தேரு வேற! விதம் விதமா விழா!
* ஐந்து கருட சேவை
* மடித்தல சேவை
* புஷ்ப பல்லக்கு
* ஆண்டாள் திருத்தேர்
* முத்துக்குறி் உற்சவம்...

இப்படிப் பல கொண்டாட்டங்கள்...
வாங்க மண் வாசனையோடு, ஜாலியா ஊர் சுத்தலாம்! இந்தப் பதிவில் விளக்கங்கள் எல்லாம் அவ்வளவா கிடையாது...
வில்லிபுத்தூரும், விழாவும், விதம் விதமான படங்களும் தான்!

வில்லிபுத்தூர் கோபுரம் - தமிழக அரசு முத்திரை



கி.பி. 716 - நள வருடம் - ஆடி மாதம் - எட்டாம் நாள் - சுக்ல பட்சம் - பஞ்சமி திதி - செவ்வாய்க் கிழமை - பூர நட்சத்திரம் - துலா லக்னம்
ஆண்டாள் ஐந்து வயதுக் குழந்தையாய், பூமித் தாயின் அம்சமாய்,
பட்டர் பிரான் கண்டெடுக்க, திரு ஆடிப் பூரத்தில் ஜகத்து உதித்தாள்!

அப்படி என்ன, அவளை எல்லாரும் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுறாங்க?
பெரியாழ்வார் பொண்ணு என்பதாலா? - இல்லை!
பேரழகி என்பதாலா? - இல்லை!
காதல் கவிதைகளில் வித்தகி என்பதாலா? - இல்லை?
பெரிய பெருமாளையே மணந்து கொண்டதாலா? - இல்லை! இல்லை! இல்லை! பின்ன எதுக்கு அவளுக்கு மட்டும் இவ்வளவு பெருமை?

மேலே சொன்னது எல்லாம் அவரவர் தன்னலம். அவரவர் சொந்தப் பெருமை. அவ்வளவு தான். வெறும் காதல் கவி சொல்லவா ஆண்டாள் வந்தாள்?
ஆன்மீகத்தின் கடமை என்ன? அது உலகத்து மக்களுக்கு என்னவெல்லாம் செய்யணும்?

பாதகங்கள் தீர்க்கணும் - தீர்த்த பின்,
பரமன் அடி காட்டணும் - காட்டிய பின்,
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் - காட்டிய திருவடியை என்றும் இடையறாது பற்றிக் கொள்ள, வேதத்தைக் காட்டி உதவி செய்யணும்!
இந்த மூன்றையுமே செய்தது கோதைத் தமிழ்! அதான் அவளுக்கு அவ்வளவு பெருமை!

பாதகங்கள் தீர்க்கும், பரமன் அடி காட்டும்,
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைத் தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு

பெருமான் கீதையில் விரித்து விரித்துக் கஷ்டப்பட்டுச் சொன்னதை எல்லாம் இவள், முப்பதே பாட்டில் நமக்குக் காட்டிக் கொடுத்து விட்டாளே! அதுவும் எளிய, இனிய, புரியும் தமிழில்!
அவன் தன்னைத் தானே வணங்குமாறு எல்லாரையும் அழைத்தான் - யாரும் வரவில்லை!
அவள் அந்தக் காதலனை வணங்குமாறு எல்லாரையும் அழைத்தாள் - அனைவரும் வந்தார்கள்!
ஆதலால், கீதையா, கோதையா என்றால், கோதையே சிறப்பு! :-)

நடையலங்காரம்

ஜடையலங்காரம்


கோதை பிறந்த ஒரே காரணத்துக்காக, கோவிந்தனே வந்து வாழும் ஊர் ஆகி விட்டது, வில்லிபுத்தூர்!
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதியால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்...


மொத்தம் ஒன்பது நாள் ஆடிப்பூர உற்சவம்.
வழக்கம் போல் கொடி ஏற்றம், சேனை முதலியார் புறப்பாட்டுடன் தொடங்குகிறது விழா! ஐந்தாம் நாள் விழா மிகவும் சிறப்பு!
ஏன் என்றால் ஒரே சமயத்தில் ஐந்து கருட சேவையைக் காணலாம்!
பெரியபெருமாள் என்னும் வடபத்திரசாயீ
ரங்கமன்னார்
சுந்தரராஜப் பெருமாள்
ஸ்ரீநிவாசப் பெருமாள்
திருத்தங்கல் அப்பன்...ஆகிய ஐந்து பெருமாள்களும் தத்தம் கருட வாகனத்தில் ஒரு சேரக் காட்சி!

ஏழாம் நாள் - இந்த நாள் ஒரே ரொமாண்டிக் நாள் :-)
ஏன் என்று கேட்கிறீர்களா?
எத்தனை பேர் காதலியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கீங்க? கூச்சப்படாம சொல்லுங்க பார்ப்போம்! அப்படிப் படுத்துக் கொண்டே என்னவெல்லாம் காதல் கதைகள் பேசுவீங்க? என்னவெல்லாம் சீண்டி விளையாடுவீங்க? நீங்களே பாருங்க இந்த உலக மகா ஜோடியை!

மடி மீது தலை வைத்து, விடியும் வரை...தூங்குவோம்!

ரயில்வே ஸ்டேஷன் (தொடர்வண்டி நிலையம்) அருகில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், ஆண்டாளும் ரங்கமன்னாரும் எழுந்தருளி, இப்படி மடித்தல சேவை (சயன சேவை) சாதிக்கிறார்கள்!

ஒன்பதாம் நாள் (ஆடிப்பூரம் அன்று) திருத்தேர்! இது மிகவும் பெரிய தேர்! ஆயிரம் சிற்பங்கள் கொண்டது! எட்டுச் சக்கரம், ஐந்து அடுக்கு, 81 தூண்கள் கொண்ட தேர்!

பத்தாம் நாள் - விழாவின் ஹைலைட் - Dance Drama - அரையர் சேவை!
முத்துக்குறி உற்சவம் என்பார்கள் இதை. சிங்கம்மாள் குறடு என்ற ஒரு இடத்தில் தான் இது நடக்கும்!
தலைவியின் அம்மா, தன் பெண், பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று ஏக்கப்படுவாங்க! அடே இரக்கம் இல்லாத பெருமாளே-ன்னு காய்வாய்ங்க.

வாணுதல் இம் மடவரல், உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள், விறல்
வாணன் ஆயிரந்தோள் துணித்தீர், உம்மைக்
காண நீர் இரக்கம் இல்லீரே.


பின்னர், காட்டுவிச்சி என்னும் குறத்தி வந்து முத்துக்குறி சொல்லுவா. அது இன்னா முத்துக்குறி? முறத்தில் முத்தைப் பரப்பி, பாடிக்கிட்டே, எண்ணி என்ணிக் குறி சொல்லுவா!
மாலையில் தொடங்கி இரவெல்லாம் விடிய விடிய நடக்கும்!

பின்னிய கூந்தல் கருநிற நாகம்..

தட்டொளி-கண்ணாடி சேவை


சவுரித் திருமஞ்சனம்

அரையர்களே, தங்களை அலங்கரித்துக் கொண்டு, தாளங்கள் தட்டி, தமிழ்ப் பாசுரங்கள் இடையே முழங்க, ஆடி அபிநயித்துக் காட்டுவார்கள்!
இதுக்குன்னே ஆண்டாள் போட்டு வரும் ஆடை என்ன தெரியுமா? நீங்களே பாருங்க! (இந்தக் காலச் சுடிதார் போல ஒரு உடை :-)



ஆண்டாளுக்குச் சார்த்தப்படும் மாலையோடு, ஒரு பொம்மைக் கிளியும் சார்த்தப்படுகிறது. இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது.
கிளி மூக்கு = மாதுளம் பூ;
கிளியின் உடல் = மரவல்லிக் கிழங்கின் இலை;
இறக்கைகள் = நந்தியாவட்டை இலை, பனை ஓலை;
கிளியின் வால் = வெள்ளை அரளி, செவ்வரளி மொட்டுகள்;
கிளியின் கண் = காக்காய்ப் பொன்.
கட்டுவதற்கு வாழை நார்;
இப்படித் தினமும் தயாராகிறது ஆண்டாளின் கிளி.

நாமும் அந்தக் கிளியாய், அவள் தோளில் என்றும் தங்கி, கோதைத் தமிழ் பேட்போம்!
வில்லிபுத்தூர் விழா பார்த்து முடிச்சாச்சு! பேக் டு மதுரை! எல்லாரும் வண்டியில் ஏறி உட்காருங்க!

இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து,
ஆழ்வார் திருமகளா ராய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

(திருமஞ்சனப் படங்களுக்கு மிகவும் நன்றி: adiyen b_senthil)

29 comments:

  1. ஆஹா!அற்புதம் ரவி! அழகான அருமையான படங்களை கோர்த்து பதிவில் அதனையே மாலையாக்கி பாமாலை பாடி பூமாலை சூடிக்கொடுத்தவளுக்கு இன்றையதினத்தை
    சிறப்பித்துவிட்டீர்கள்!
    "பெரியாழ்வார்பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த திருவடிப்பூரத்தின் சீர்மை ஒருநாளைக்குண்டோ மனமே உணர்ந்துபார்!ஆண்டாளுக்குண்டாகில்
    ஒப்பிதற்கும் உண்டு!"
    ஆடிப்பூரம் தன்னில் உதித்த ஆண்டாள் நம் கோதையை இத்தனை அழகாய் படங்களோடு விவரித்த ரவிக்கு
    அரங்கனின் ஆசிகள் என்றும் கிடைக்குமாக!

    ReplyDelete
  2. ரவிசங்கர்!
    என்னைப்போன்றோருக்குக் காணக் கிடைக்கத படங்கள்.
    அழகிய வர்ணனை
    நன்றி

    ReplyDelete
  3. :) என்ன சொல்ல?? எனக்கு இதெல்லாம் நியூஸ்!!

    ReplyDelete
  4. Ravi sir,vanakkam.
    In Arangam also,Andal festival is celebrating in paramapadanadarsannidhi.your informations also very good.
    ARANGAN ARULVANAGA.
    anbudan
    k.srinivasan.

    ReplyDelete
  5. சூப்பரு அண்ணாத்த!!!
    நேரில பார்த்தா மாதிரி இருந்துச்சு!!
    பார்க்கற ஆசையும் வருது!!

    நீங்க எவ்வளவு அழகாக எழுதறீங்கன்னு சொல்லியா தெரியனும்!!
    எப்பவும் போல கலக்கல் போஸ்ட்!! :-)

    ReplyDelete
  6. அருமையான படங்கள்.....பல செய்திகள்...நன்றி கே.ஆர்.எஸ்

    ReplyDelete
  7. Ravi
    Aadi Purathil irunda idathileye Andal sevai -nandri.

    Nadai Alangaramum, Jadai singaramum kandu aadada manamum vundo?
    Ungal ezhuthu nadayum azhagu.Andal & Rangamannarin Aasigal ungalukku yendrum irukkum.
    Shobha

    ReplyDelete
  8. Ravi ,
    Andal utsavam description , A class ..

    " மடி மீது தலை வைத்து, விடியும் வரை...தூங்குவோம்! " ..

    Ippadiyum Sevaigal kaanbitchu kuduthathukku .nanri . Just in case u cud upload a lot more fotos..

    ReplyDelete
  9. //ஷைலஜா said...
    ஆஹா!அற்புதம் ரவி! அழகான அருமையான படங்களை கோர்த்து பதிவில் அதனையே மாலையாக்கி பாமாலை பாடி பூமாலை சூடிக் கொடுத்தவளுக்கு இன்றைய தினத்தை
    சிறப்பித்துவிட்டீர்கள்//

    வாங்க திருவரங்கப்ரியா.
    அரங்கனே வில்லிபுத்தூருக்கு வந்தாப்புல இருக்கு, நீங்க வந்தது!:-)
    படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சவுரித் திருமஞ்சனமும், மடித்தல சேவையும் தான்!

    //திருவடிப்பூரத்தின் சீர்மை ஒருநாளைக்குண்டோ மனமே உணர்ந்து பார்!//

    மணவாள மாமுனிகளின் வெண்பா தானே இது, ஷைல்ஸ்? ஹெல்ப் ப்ளீஸ்!

    ReplyDelete
  10. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
    ரவிசங்கர்!
    என்னைப் போன்றோருக்குக் காணக் கிடைக்கத படங்கள்.
    அழகிய வர்ணனை//

    நன்றி யோகன் அண்ணா...
    அது என்ன "என்னைப் போன்றோர்க்கு"! அனைவர்க்கும் கிடைக்கும். மேலும் மாதவிப் பந்தலும் இதுக்குத் தானே இருக்கு! :-)

    ReplyDelete
  11. //Dreamzz said...
    :) என்ன சொல்ல?? எனக்கு இதெல்லாம் நியூஸ்!!//

    தலைவா
    சன் நியூஸா இல்லை ஸ்டார் நியூசா? :-))))
    பிடிச்சு இருந்துச்சா?

    ReplyDelete
  12. //Anonymous said...
    Ravi sir,vanakkam.
    In Arangam also,Andal festival is celebrating in paramapada nadarsannidhi.your informations also very good.//

    வாங்க ஸ்ரீநிவாசன் சார்.
    அரங்கத்தில் பரமபதநாதர், உள் ஆண்டாள் சன்னிதி இங்கு தானே உற்சவம் நடக்கும்?

    மற்ற திவ்யதேசங்களில் கூட ஆடிப்பூர விழா அமர்க்களம் தான்!

    ReplyDelete
  13. //CVR said...
    சூப்பரு அண்ணாத்த!!!
    நேரில பார்த்தா மாதிரி இருந்துச்சு!!
    பார்க்கற ஆசையும் வருது!!//

    நாம போய் வரலாமா CVR? :-)
    வாடகை பைக்கில் கூட்டிக்கிட்டுப் போறீங்களா? பால்கோவா விசேடமா விக்கறாங்களாம். வாங்கித் தாரேன்!

    //நீங்க எவ்வளவு அழகாக எழுதறீங்கன்னு சொல்லியா தெரியனும்!!
    //

    இது கூடத் தெரியாம பதிவு எழுத வந்துட்ட-ன்னு அன்னிக்கி் என்னையத் திட்டிட்டு...
    இப்ப வழக்கம் போல் உ.குத்தா? :-))

    ReplyDelete
  14. //மதுரையம்பதி said...
    அருமையான படங்கள்.....பல செய்திகள்...நன்றி கே.ஆர்.எஸ்//

    படங்களுக்கு நன்றி: திருவில்லிபுத்தூர் ஆலயம், மற்றும் B.Senthil

    ReplyDelete
  15. >>>//திருவடிப்பூரத்தின் சீர்மை ஒருநாளைக்குண்டோ மனமே உணர்ந்து பார்!//

    மணவாள மாமுனிகளின் வெண்பா தானே இது, ஷைல்ஸ்? ஹெல்ப் ப்ளீஸ்! >>>>

    ஆ! கலைஞருக்கே தமிழில் சந்தேகமா?
    சாட்சாத அது மணவாளமாமுனிகளின் உபதேசரத்தினமாலையின் 23ஆம் பாடலே!நீங்க அளித்தது22ஆம் பாட்டு!

    ReplyDelete
  16. எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த 'ஜடை அலங்காரம்'

    எல்லாப் படங்களுமே அட்டகாசம்.

    நன்றி KRS.

    ReplyDelete
  17. //ஷைலஜா said...
    ஆ! கலைஞருக்கே தமிழில் சந்தேகமா?
    சாட்சாத அது மணவாளமாமுனிகளின் உபதேசரத்தினமாலையின் 23ஆம் பாடலே! நீங்க அளித்தது22ஆம் பாட்டு!//

    Super...Dank u Shyls!
    உபதேச ரத்ன மாலை படிக்கணும்ங்கிற ஆவலைக் கிளறி விட்டீங்க :-)

    ReplyDelete
  18. //துளசி கோபால் said...
    எனக்கு ரொம்பப் பிடிச்சது அந்த 'ஜடை அலங்காரம்'//

    தெரியுமே!
    டீச்சர் எப்பமே கலைக்கண்ணோடு தான் பார்ப்பார்கள்! :-))))

    ReplyDelete
  19. dear KRS,

    sirithu thamatham-aga vandhal,ANDAL THIRUTHERAI izhuthvittirgal....

    Thiruvadipurathu Jagathuthal Vazhiye....
    .....................
    Perumbudur Mamuniku Pinanal vazhiye.....

    Andalin permissionudan ...
    PERUMBUDUR MAMUNIKKU PINNANA KANNABIRAN VAZHIYE..
    Endru vazhithi...melum thodarattum thangal natrpani....
    VANPUDUVAI MALARKODHAI MALARPATHANGAL VAZHIYE..

    sundaram

    ReplyDelete
  20. //மதுரையம்பதி said...
    அருமையான படங்கள்.....பல செய்திகள்...//

    நன்றி மெளலி சார்

    ReplyDelete
  21. //Shobha said...
    Ravi
    Aadi Purathil irunda idathileye Andal sevai -nandri.
    Nadai Alangaramum, Jadai singaramum kandu aadada manamum vundo?//

    அதே அதே...சூப்பராச் சொன்னீங்க ஷோபா!

    //Ungal ezhuthu nadayum azhagu.Andal & Rangamannarin Aasigal ungalukku yendrum irukkum.
    //

    அன்புக்கும் ஆசிக்கும் நன்றி ஷோபா!

    ReplyDelete
  22. //Madhusoodhanan said...
    Ravi ,
    Andal utsavam description , A class ..
    Ippadiyum Sevaigal kaanbitchu kuduthathukku .nanri//

    நன்றி மது!

    //Just in case u cud upload a lot more fotos..//

    ஹூம்...பெருமாளிடம் பேர் ஆசை? :-))
    கிடைக்கக் கிடைக்க இடறேங்க!

    இன்னும் ஒரு பதிவு பாக்கி இருக்கு, ஆடிப்பூரம் தொடரில்!
    கருட பஞ்சமி - Aug 18 அன்று இடுகிறேன்!

    ReplyDelete
  23. //Anonymous said...
    sirithu thamatham-aga vandhal,ANDAL THIRUTHERAI izhuthvittirgal....//

    ஹிஹி..தினமலர் படம் நேத்து தான் பார்த்தேன்...அதன் சுட்டு விட்டேன்! :-)

    //Andalin permissionudan ...
    PERUMBUDUR MAMUNIKKU PINNANA KANNABIRAN VAZHIYE..
    Endru vazhithi...melum thodarattum thangal natrpani....//

    தங்கள் அன்புக்கும் ஆசிக்கும் நன்றி சுந்தரம் சார்!
    ஆனா இதுக்கு எல்லாம் சுத்தமா எனக்கு அருகதை இல்லை!

    மேலும் வாழித் திருநாமம் எல்லாம் மாற்ற வேண்டாமே...Request தான்! அரசியல்வாதிகள் தான் அவிங்க இஷ்டத்துக்கு மாத்திப்பாய்ங்க!

    பெரும்பூதூர் மாமுனிக்கு நாம் அனைவருமே பின் செல்பவர்கள் தான்!
    அடியோம் இராமானுச தாசர்கள்!

    ReplyDelete
  24. ரொம்ப நல்லா இருக்கு இரவிசங்கர். கல்லூரியில் படிக்கும் போது பக்கத்தில் இருக்கும் நாச்சியார் திருமாளிகைக்குப் போய் தேர்த்திருவிழா தான் பார்த்தேன். மடித்தல சேவையை மதுரையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தான் பார்த்திருக்கிறேன்.

    கல்லூரியில் படிக்கும் போது அடிக்கடி அம்மாவைப் போய் பார்த்து வந்ததை நினைவூட்டிவிட்டீர்கள். அழகான ஊர் வில்லிபுத்தூர்.

    ReplyDelete
  25. //மடித்தல சேவையை மதுரையில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தான் பார்த்திருக்கிறேன்//

    யார் மடியில் யார் குமரன்? :-)

    //அழகான ஊர் வில்லிபுத்தூர்.//

    ஆமாங்க குமரன்...
    ஊரும், குளமும், தேரும், கோபுரமும், கண்ணாடிக் கிணறும், மாதவிப் பந்தலும், அரையர் சேவையும், மக்களும் அழகோ அழகு!

    ReplyDelete
  26. //யார் மடியில் யார் குமரன்? :-)//

    மதுரையிலும் கோதை மடியில் தான் கோவிந்தன் படுத்திருந்தான். மதுரை என்றதால் மாறிவிடும் என்று நினைத்தீர்களா? அது மீனாட்சி அம்மன் கோவிலோடு நின்றுவிடும். அங்கே தான் மீனாட்சி அம்மனுக்கு முதல் மரியாதை. :-)

    ReplyDelete
  27. நான் பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்ற
    ரவிக்கு வெறும் நன்றி மட்டுமா?

    தமிழ் பாவால் புனைகிறேன்..
    தாழை மடலின் மணத்துடன்
    தகவறியா நன்றிபா....

    ReplyDelete
  28. //குமரன் (Kumaran) said...
    //யார் மடியில் யார் குமரன்? :-)//

    மதுரையிலும் கோதை மடியில் தான் கோவிந்தன் படுத்திருந்தான். மதுரை என்றதால் மாறிவிடும் என்று நினைத்தீர்களா? //

    கரெக்டாப் புடிச்சீங்க பாயிண்டை!
    மாணவர்கள் எப்படி எல்லாம் டைப்பா கேள்வி கேப்பாய்ங்கன்னு பாத்து, நெத்தி அடி பதில்கள் தரும் நல்லாசிரியர் நீங்க தான் குமரன்!

    ReplyDelete
  29. //ந.ஜெ.ஜெய புஷ்ப லதா said...
    நான் பிறந்த ஊருக்கு அழைத்துச் சென்ற
    ரவிக்கு வெறும் நன்றி மட்டுமா?//

    ஓஹோ! நீங்க ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தீங்க புஷ்பலதா....நான் தான் மறந்துட்டேன் ஒங்கூரு திருவில்லிபுத்தூருன்னு! வில்லிபுத்தூரில் இப்ப எல்லாம் பால்கோவா விக்கறாங்களாமே! :-)

    //தமிழ் பாவால் புனைகிறேன்..
    தாழை மடலின் மணத்துடன்
    தகவறியா நன்றிபா.... //

    நன்றி, ப்பா! :-)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP