Tuesday, January 06, 2009

மார்கழி-23: ஆண்டாள் & ஃபோட்டோகிராபி in தமிழ்!

இன்று அரங்கத்தில் தமிழ் விழா! இராப்பத்து விழா! திருவாய்மொழித் திருநாள்! பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்திலே வைகுந்த ஏகாதசிப் பெருவிழா! மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் இதைச் சொல்லுவார்கள்! மேலும் கீதையின் பிறந்த நாளும் கூட!
மூலவர் அரங்கனுக்கு முத்தங்கி சேவை! உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை!

* நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன் என்னும் நம் ஆழ்வார்!
* அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.

குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் குட்டி போல், நாமும் நுழையலாம், வாங்க!
அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! சொர்க்க வாசல் என்பது பேச்சு வழக்கு! உண்மையில் அது வைகுந்த வாசல், பரமபத வாசல் தான்!

விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நடை அழகு! உடை அழகு!
திருக் குடை அழகு! சக்கரப் படை அழகு!

கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!

TY03NAMPERUMAL

பாயுநீர் அரங்கம் தன்னுள், பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும், மரகத உருவும், தோளும்,
தூய தாமரைக் கண்களும், துவர் இதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும், தேசும், அடியோர்க்கு அகல லாமே!

இச்சுவை தவிர யான் போய், இந்திர லோகம் ஆளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன்!!! அரங்க மா நகருளானே!!!

அரங்கன் அடி முடி ஜொலிக்கக் காட்டப்படும் தசாவதாரக் கற்பூர தீப சேவை!


நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, அரங்கன் அவன், "சிம்ம கதியில்", சிம்ம நடை போட்டு வரும் அழகே அழகு!
அதற்கு ஏற்றாற் போல், இன்றைய திருப்பாவையும் சீரிய "சிங்கம்" பாசுரம் தான்! :)

டிஸ்கவரி சேனலில், காட்டுச் சிங்கங்களின் வாழ்க்கையைப் படமாக் காட்டுவாய்ங்க! பார்த்து இருக்கீய தானே? பிடறி உலக்குறதும், முழங்குறதும், மான் வேட்டையும்......அடா, அடா, அடா, என்ன ஒரு ஸ்டைலு!
* சாதாரணமா நடக்கும் போது ஒரு கெத்தான ஸ்டைல்-ல நடக்கும் = போங்கடா, நீங்களாச்சு, உங்க ஃபோட்டோவுமாச்சு-ங்கிற Carefree லுக்கு!
* ஓடும் போது வேற ஸ்டைல்-ல ஓடும் = இரையை, ஓட விட்டுப் பிடிப்பதிலும் தனி ஸ்டைல்!

அதனால் தானே அது காட்டு ராஜா! ஆண்டாளும் டிஸ்கவரி சேனல் படத்தை, அப்பவே, அம்புட்டு டீட்டெயிலா, காட்டுறான்னா பாருங்க! ஆண்டாள் ஒரு இயற்கைப் புகைப்படக்காரியோ? (Nature Photographer)?


பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,
வேரி மயிர் பொங்க, எப்பாடும் பேர்ந்து உதறி,
மூரி நிமிர்ந்து, முழங்கிப் புறப்பட்டுப்,


போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில் நின்று, இங்ஙனே போந்தருளிக், கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து, யாம் வந்த
காரியம், ஆராய்ந்து அருள்! ஏல்-ஓர் எம் பாவாய்!



அடியவர் வாக்கு மெய்ப்பித்தான் = ஆள்+அரி = நர+சிம்மம் = பிரகலாத வரதன்!
இந்தப் பாசுரத்தின் முழுமையும், ஆளரிப் பெருமாளை, ஆண்டாள் சேவிக்கிறாள் என்பது ஆச்சார்யர்கள் வாக்கு! கண்ணனைச் சிங்கமாகவே பல இடங்களில் பார்க்கிறாள் கோதை! முதல் பாசுரமே யசோதை இளஞ்"சிங்கம்" தான்!

அடியவர் வாக்கை மெய்ப்பித்தான் என்பதாலே, தன் கனவையும் மெய்ப்பிக்க வல்லான் என்று ஆண்டாளுக்கு நரசிம்மப் பெருமாள் மீது ஒரு அலாதிப் ப்ரியம்!
இல்லீன்னா கல்யாணத்தின் போது, மிகவும் உக்கிரமாகச் சொல்லப்படும் நரசிம்மன் கையைப் பிடிச்சேன்-ன்னு ஒரு சின்னப் பொண்ணு பாடுவாளா? அரி(சிங்க)-முகன், அச்சுதன் கை-மேல்-என் கை வைத்து, பொரி முகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

ஆளரிப் பெருமாள், நரசிம்ம மூர்த்தி, மிகவும் உக்கிரமானவரா என்ன? எல்லாரும் அப்படிச் சொல்லித் தானே பயமுறுத்துறாங்க! ஹா ஹா ஹா! நரசிம்ம பெருமாளைப் போல் ஒரு மென்மையானவரை, அழகானவரைப் பார்க்க முடியாது! பேரே அழகிய+சிங்கர்!
* இல்லீன்னா ஒரு கல்யாணப் பொண்ணு அப்படிப் பாடுவாளா?
* குழந்தை பிரகலாதன் பயமில்லாமல் தொட்டுத் தொட்டுப் பேசுவானா?
* ஆடி ஆடி அகம் கரைந்து, இசைப் பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்கா என்று மாறன் குழந்தையும் பயப்படவில்லையே!

* சமயம் காக்க வந்த ஜகத்குரு, ஆதிசங்கர பகவத்பாதரையே, காத்துக் கொடுத்த ஆளரிப் பெருமாள்! இளவயதில் இறைவனுடன் கலந்த சங்கராச்சார்யர், இல்லீன்னா, இன்னும் இளவயதிலேயே அல்லவா உயிர் நீத்திருப்பார்? காபாலிகள் கிட்ட இருந்து காப்பாற்றி, அவரை நம் தர்மத்துக்குக் காத்துக் கொடுத்த தர்மப் பிரபு நாரசிம்மன்!

* மிகவும் ஸ்டிரிக்ட்-ஆன ஆளு-ன்னு கருதப்படும் சக்கரத்தாழ்வார்! அவரைக் கூல்-டவுன் செய்ய அவருக்குப் பின்னாடியே ஒரு சாந்த மூர்த்தியை ஸ்தாபிக்கறாங்களே! யார் அவரு? :)
எந்தச் சக்கரத்தாழ்வார் சிலை பின்னாலும் நரசிம்மர் இருப்பது எதற்கு-ன்னு நினைக்கறீங்க? உக்கிரத்தை உக்கிரத்தோடு சேர்ப்பார்களா யாராச்சும்? ஏன்? சொல்லுங்க பார்ப்போம்! :)

இனி நரசிம்மனை உக்கிரமானவன்-ன்னு யாரும் சொல்லாதீங்க! வக்கிரமானவர்களுக்கே உக்கிரமானவன் அவன்! அரி-முகனை, அரி-அவனை, அரியவனை, அறியே!
பிரகலாதக் குழந்தை பிஞ்சு-அடிகளே சரணம்!
அடியார்க்கு நல்லான் ஆளரித் திருவடிகளே சரணம்!!



மழைக் காலம் என்பது பொதுவாக விலங்குகளின் இனப்பெருக்க காலம்! பெண் சிங்கங்கள் கருவுற்று இருக்கும்! ரொம்ப ஓட முடியாது! குகைக்குள்ளேயே தூங்கும்!
அப்போ சாப்பாட்டுக்கு??? ஆண் சிங்கம் தான் சிங்கிளா வரும் வேட்டைக்கு! சிங்கம் சிங்கிளா வந்தாலும், சிங்கம் சிங்கம் தான்-லே! :)

ஆண் சிங்க்ஸ் அப்பவே இதுக்கு வழி காட்டியிருக்கு - டேய் ஆம்பிளைங்களா, இனி நீங்க எழுந்து சமைங்கடா-ன்னு! அதை நம்ம ஒன்னு விட்ட சிங்கப் பயலுவ இன்னி வரைக்கும் சின்சியரா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கானுங்க! :))

மாரி மலை முழைஞ்சில் = மழைக்காலத்தின் போது, மலைக் குகையில்
மன்னிக் கிடந்து உறங்கும் = அமைதியாப் படுத்துத் தூங்கும்
"சீரிய" சிங்கம் = "பெருமை" மிக்க சிங்கம்! அப்பா ஆகப் போகுதுல்ல? அந்த வெட்டி பந்தா-பெருமை! அதான் "சீரிய"-ன்னு சொல்லுறா நம்ம ஃபோட்டோகிராபர் கோதை! :)

அறிவுற்று, தீ விழித்து = திடீர்-ன்னு பசி மிகுதியால் அறிவுற்று, கண்ணில் தீ பறக்க
வேரி மயிர் பொங்க = வேர் மயிர்! வேர்க்-கால் மயிர், ரோமம் எல்லாம் பொங்குதாம்! பொங்கிப் புடைப்பா நிக்குதாம்!

எப் பாடும் பேர்ந்து உதறி = அந்தப் பிடரி மயிரை, ஒரு உலுக்கு உலுக்கி, நிக்குது! கழுத்தைச் சிலுப்பிக்குது! சோம்பல் முரிக்குது!
இவ்வளவு நேரம் சோம்பிக் கிடந்த சோம்பல் தீர, எப் பாடும் = அப்படியும் இப்படியும், பேர்ந்து = பெயர்ந்து, அந்தாண்ட இந்தாண்ட உலாத்தி, உதறி= உதறிக்குது!

மூரி நிமிர்ந்து = மூரி-ன்னா முதுகுப் பக்கம் இருக்கும் சின்ன திமில்! அது நிமிருதாம்! மூரி=முரித்தல்-ன்னும் கொள்ளலாம்!
சோம்பல் முரிக்கும் போது சடக்-படக்-ன்னு சத்தம் வரும்-ல? நீங்க முரிச்சிப் பார்த்துச் சத்தம் எப்படி வந்தது-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்! :)
அப்படி முரிச்சி, நிமிர்ந்து நிக்குது! ராசா நிமிர்ந்துட்டாருய்யா! தயார்!!!!!

முழங்கிப் புறப்பட்டு = தயார்! புறப்படும் முன்னாலே சும்மா கெளம்ப முடியுமா? சவுண்டு விட்டாத் தானே எப்பவும் மதிப்பு! :)
அதான் "முழங்கி"ப் புறப்படுது! சிங்கம் "கர்ஜிக்கும்" என்று வடமொழியில் சொல்லுவாய்ங்க! தூய தமிழில் சிங்கம் முழங்கும்-ன்னே இனி சொல்லுங்க!

எப்படி ஆண்டாள் காட்டும் டிஸ்கவரி சேனல்? ஃபோட்டோகிராபி in தமிழ் ஆண்டாளுக்கே சொந்தம்! என்ன மக்களே, சரி தானே? :))



போதருமா போலே, நீ பூவைப் பூவண்ணா = அப்படிச் சிங்க நடை நடந்து வாடா, என் காதலா! உன் சிம்ம கதியில், அத்தனை பேரும் ஈடழியணும்! மனம் பறி கொடுக்கணும்!
பூவைப் பூ வண்ணா = காயாம் பூவைக் போல நீ கருத்த சிங்கம்-டா! நீ பொன்னிறச் சிங்கம் இல்லை! கருநிறச் சிங்கம்!

சிம்ம கதி போட்டு உன் நடையை ஆரம்பி! சிங்க நடை போட்டுச் சிகரத்தில் ஏறு! Ready, Steady, Go!
* உன் கோயில் நின்று = உன் கோயில் அரண்மனையில் கம்பீரமா (Majestic) "நின்று"
* இங்ஙனே போந்து = அப்படியே கம்பீரமா "நடந்து" வா!
* கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து = உறுதியா, திம்-முனு இருக்கும் அரியாசனத்தில் வந்து "இருந்து" (அமர்ந்து)

யாம் வந்த காரியம், "ஆராய்ந்து" அருள் = நாங்க உன்னைத் தேடி வந்த காரியங்களை எல்லாம் "ஆராய்ந்து" அருள்! பேரரசன் ஒருவன் சபைக்கு வந்து அமரும் காட்சியை, அப்படியே கம்பீரத் தமிழில் காட்டுகிறாள் கோதை!
கோதைத் தமிழ் கம்பீரத் தமிழ்!

இறைவன், ஆலயங்களில், பொதுவாக நான்கு கோலங்களில் சேவை சாதிப்பான்!
* நின்றான் = உன் கோயில் "நின்று" => திருவேங்கடம், காஞ்சி, திருமாலிருஞ்சோலை (மதுரை) போன்ற தலங்கள்!
* இருந்தான் (அமர்ந்தான்) = சீரிய சிங்காசனத்து "இருந்து" => திருக்கடிகை (சோளிங்கபுரம்) போன்ற தலங்கள்!
* கிடந்தான் = மன்னிக் "கிடந்து" உறங்கும் => திருவரங்கம் போன்ற தலங்கள்!
* நடந்தான் = இங்ஙனே "போந்து", "புறப்பட்டு" => திருக்கோவிலூர் போன்ற தலங்கள்! (நடந்து, உலகளந்த பெருமாள்)

நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான்! அதையும் இந்தப் பாட்டிலேயே கொண்டாந்து காட்டி விட்டாள் கோதை!


யாம் வந்த "காரியம்" = ஆகா! "காரியமாத்" தான் இறைவன் கிட்ட போறோமா? ஹா ஹா ஹா! தப்பில்லை! கண்ட பேரிடம் செல்லாமல், இறைவனிடமாச்சும் செல்கிறோமே! முதல்ல அப்படித் தான் ஆரம்பிக்கும்! ஆனால் பெருமாளின் செளந்தர்யமான கருணையால், கொஞ்ச நாளில் மாறீடுவோம்!
பிற்பாடும் "காரியமாத்" தான் போவோம்! என்ன காரியம்? = அவனே காரியம்!
சன்னிதியில் வேண்டிக்கணும்-ன்னு கூடத் தோனாது! நல்லா இருக்கியா ராசா? பாத்து எவ்ளோ நாளாச்சு?-ன்னு பேசத் தான் தோனும்! :)

"ஆராய்ந்து" அருள் = யப்பா பெருமாளே! நாங்க கேட்டதை எல்லாம் பொசுக் பொசுக்-ன்னு கொடுத்துறாதே! நாங்க எதுக்குக் கேக்கறோம்-ன்னு பாதி நேரம் எங்களுக்கே தெரியாது! :)

நேத்தெல்லாம் வயித்து வலி; இன்னிக்கு குழந்தை பலாச்சுளை கேக்குது! அம்மா கொடுத்துருவாளா? கொடுக்காமப் போனா அவ அரக்கியா?
அப்படியே அரக்கி-ன்னு குழந்தை திட்டினாலும் கொடுப்பாளா? பெருமாளே, நாங்க உன்னைத் திட்டினாக் கூட நீ சட்டை பண்ணாதே! ஆராய்ந்து அருள்! ஆராய்ந்து அருள்!

* பிரம்மா முதலான பல தெய்வங்களும், தவத்துக்குக் கட்டுப்பட்டு, "ஆராயாமல்" கொடுத்துத் தான் எத்தினி கஷ்டம்?
* பக்த கோலாகலன் எங்கள் சிவபெருமான் தலையிலேயே ஒருவன் கை வைக்கப் பார்த்தானே!
வேணாம்ப்பா! வேணாம்! நீ ஆராய்ஞ்சே கொடு!
புராண வரலாறுகள் படிச்சீங்கன்னா தெரியும்!
தேவர்கள்-அசுரர்கள் ரெண்டு பேருமே பிரம்மாவை நோக்கித் தான் தவம் இருப்பாங்க! ஏன்-னா அவர் தவத்துக்குக் கட்டுப்பட்டவர்! அவர் கிட்ட எப்படியாச்சும் ஏதாச்சும் வாங்கிருவாங்க! தவத்துக்குக் கட்டுப்படாதார் ரெண்டே பேரு தான்! = சிவபிரான், பெருமாள்!

பிரம்மாவால் தர முடியாத சில வரங்கள் வேணும்னா, அசுரர்களின் அடுத்த சாய்ஸ் சிவபெருமான் தான்! ஈசன் சோதனைகள் நிறைய கொடுத்தாலும், கோரமான தவத்தில் வென்று விட்டால் அள்ளி அள்ளிக் கொடுப்பவர்!
தன்னையே கொடுத்தாலும் கொடுத்துருவார்! அம்புட்டு கருணை!

இது தன்னலம் புடிச்ச தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நல்லாவே தெரியும்! தேவர்களால் கோரமாத் தவம் பண்ண முடியாது! அசுரர்கள் அதுக்கும் துணிஞ்சவங்க! அவ்ளோ தான் வித்தியாசம்!
ஆனா எங்கேயாச்சும், பெருமாளை நோக்கி எவனாச்சும் தவம் செஞ்சதா படிச்சிருக்கீங்களா? ஹிஹி! அம்புட்டு Reputation ஐயாவுக்கு! :)
அம்பாளும் கிட்டத்தட்ட அப்படியே! குடும்பப் பழக்கம் போல! :))

தேவன்-அசுரன் எவனுமே பெருமாளை நோக்கித் தவம் இருக்க மாட்டான்! துருவன் முதலான பக்தர்கள் மட்டுமே இவரைக் குறித்து தவம் இருப்பார்கள்! அதுவும் "வரம்" வேண்டிய தவமா இருக்காது! "அவனை" வேண்டிய தவமாவே இருக்கும்!
பின்னே? ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்! மனசை ஆராய்ந்து அப்புறமா வரம் கொடுத்தா யாருக்குத் தான் புடிக்கும்? போய்யா! நீயாச்சி, உன் வரமும் ஆச்சி! :))

* எங்களுக்கு நல்லதா?
* எங்க புள்ள குட்டிங்களுக்கு பிற்காலத்தில் நல்லதா?
* எங்க வம்சத்துக்கு நல்லதா?
* எங்க நண்பர்கள்-உறவினர்களுக்கு இதுனால எதுவும் கெடுதல் வராதே?
* சமுதாயத்துக்கு இதுனால தீங்கு விளையாதே?

இது எல்லாத்தையும் ஆராயும் சக்தி எங்களுக்கு இல்லை! அதுனால நீயே ஆராயணும்! நீயே அருளணும்!
ஆராய்ந்து கொடு! அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, உன்னையும் கொடு!
எங்களை ஏல்-கொள், ஏற்றுக் கொள் பெருமாளே!
ஏல்-ஓர் எம்பாவாய்! ஏல்-ஓர் எம்பாவாய்!


ஆண்டாள் திருவடிகளே சரணம்!
ஆள்+அரிப் பெருமாள் திருவடிகளே சரணம்! சரணம்!!

50 comments:

  1. இந்தப் புகைப்பட ஒப்பீட்டுப் பதிவை
    என் தம்பி CVR பெயரில்,
    கோதைக்கு Dedicate செய்கிறேன்!

    திரு ஆடிப் பூரத்து ஜகத்து உதித்தாள்(ன்) வாழியே! :)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இந்த பாசுரம் ஆலயங்களில் இருமுறை சேவிக்க படுகிறது

    இதில் ஆண்டாள் தாயார் தான் பெரிய பிராட்டியின் நிலையில் இருந்து பாடியதாக சொல்லும் அற்புதமான பாடல்
    Mani Pandi

    ReplyDelete
  4. @துர்கா
    ஏன் சிஸ்டர் சோகம்? :)

    சிங்கம் பதிவு-ல உன் ஃபோட்டோவைப் போடலீன்னா? :)

    ReplyDelete
  5. முக்தி தரும் திருநாளாம் வைகுண்ட ஏகாதசி திருநாளில் பதிவும் சிறப்பாக வந்துள்ளது அண்ணா..

    காலை முன்னமே எழுந்து அருகிலுள்ள ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சேவித்து விட்டு தற்போது தான் வருகிறேன்.. கைக்குழந்தைகளுடன் சில அம்மாக்கள் காலை 5 மணிக்கு வந்திருந்து பெருமாளை தரிசிக்க 4 மணி நேரம் ஆனாலும் பக்தியுடன் இருந்து சேவித்தது கண் கொள்ளா காட்சி.

    ReplyDelete
  6. அண்ணா, திருவாய்மொழித் திருநாளாஇ ஆரம்பித்து வைத்தவர் நாதமுனிகளா இல்லை எம்பெருமானாரா ?

    ஸ்ரீமன்நாதமுனிகள் தான் திவ்ய பிரபந்தத்தை இன்னிசை வடிவில் தொகுத்து தந்தார் இல்லையா?

    ReplyDelete
  7. எனக்கு தெரிந்து அரையர் சேவை ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே உண்டு... மற்ற திவ்யதேசங்களில் கிடையாது என்றே நினைக்கிறேன். இங்கு மட்டும் உள்ளதற்கான சிறப்பு என்ன?

    ReplyDelete
  8. //விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
    ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
    நடை அழகு! உடை அழகு!
    திருக் குடை அழகு! சக்கரப் படை அழகு!
    கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!/

    கண்டேன் அரங்கனை மனக்கண்ணில்!!
    பெற்றேன் பெரும்பேற்றினை அவனருளால்!
    சொல்வேன் அவன் நாமங்களே உம் உதவியால்!

    ReplyDelete
  9. //ஆண்டாள் ஒரு இயற்கைப் புகைப்படக்காரியோ? (Nature Photographer)?/

    ம்ம்.. ஆண்டாளுக்கு என்னன்ன பட்டம் கொடுத்தீங்கன்னு திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொல்லி முடித்தபின் பின்னூட்டமிடுகிறேன்.. :)

    ReplyDelete
  10. //மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
    சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,/

    இந்த பாசுரம், எம்பெருமானார் இராமானுஜர் பிற்காலத்தில் அவதரிக்கப் போவதை ஆண்டாள் குறிப்பதாக ஒரு விளக்கம் கேள்விப்பட்டுள்ளேன்..

    ReplyDelete
  11. //நாங்க உன்னைத் தேடி வந்த காரியங்களை எல்லாம் "ஆராய்ந்து" அருள்!//

    இதற்கு என் அண்ணா கொடுத்த விளக்கம், கண்ணன் விளையாட்டு பிள்ளை.. அதனால் ஆண்டாள் எங்கே அவன் தான் வந்த காரியத்தை விளையாட்டாக எடுத்து கொண்டு விடுவானோ என்று நினைத்து.. கண்ணனை பார்த்து, உன் விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு, அறிஞர்கள் நிறைந்திருக்கும் அரச சபையில் வந்து ஆராய்ந்து அருள் என்கிறாள்.

    ReplyDelete
  12. //மிகவும் ஸ்டிரிக்ட்-ஆன ஆளு-ன்னு கருதப்படும் சக்கரத்தாழ்வார்! அவரைக் கூல்-டவுன் செய்ய அவருக்குப் பின்னாடியே ஒரு சாந்த மூர்த்தியை ஸ்தாபிக்கறாங்களே!//
    அட அட.
    //நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான்! அதையும் இந்தப் பாட்டிலேயே கொண்டாந்து காட்டி விட்டாள் கோதை!//
    அருமை

    ReplyDelete
  13. முதல்பாட்டில் இளம்சிங்கம் என்றாள் இங்கே அதனை எழுந்துவரச்சொல்கிறாள்!
    ஆராய்ந்து அழகாய் எழுதி உள்ள பதிவினை மறுபடி நன்குபடித்து எண்ணங்களை மடலிடுகிறேன் இப்போ பயணக்களைப்பு!!

    ReplyDelete
  14. மீ த பர்ஸ்ட்ன்னு சொல்ல ஆசை ஆசையாய் ஓடி வந்தேன்.ஆனால் கொ.க கோவி கண்ணன் இன்று முந்திட்டார்.

    சரி இரண்டாவது கமெண்ட் போடாலம்ன்னு வந்தால் தம்பி பாசம் கடல் மாதிரி ஓடுது.
    :( :(
    வழக்கம் போல அப்பாவி தங்கச்சிக்கு ஒன்னுமே இல்லை.



    தூக்கம் கண்ணைக் கட்டுது.சண்டை போட டைம் இல்லை :)
    இரவு வணக்கங்கள் அண்ணா.

    ReplyDelete
  15. //υnĸnown вlogger™ said...
    சரி இரண்டாவது கமெண்ட் போடாலம்ன்னு வந்தால் தம்பி பாசம் கடல் மாதிரி ஓடுது//

    ஓ...இதான் சோகத்துக்குக் காரணமா? :)
    என்ன இருந்தாலும் இலக்குவன், இலக்குவன் தான்!

    //வழக்கம் போல அப்பாவி தங்கச்சிக்கு ஒன்னுமே இல்லை//

    :)

    //தூக்கம் கண்ணைக் கட்டுது.சண்டை போட டைம் இல்லை :)//

    அப்பாடா!
    துக்கா = தூக்கா = தூக்கம்!

    //இரவு வணக்கங்கள் அண்ணா//

    ஹிஹி!
    வணக்கம் தங்கச்சி, வணக்கம்!
    குட் நைட்-க்கு யாராச்சும் வணக்கம் சொல்வாங்களா? உன் பணிவே பணிவு! :)

    ReplyDelete
  16. //மணி said...
    இந்த பாசுரம் ஆலயங்களில் இருமுறை சேவிக்க படுகிறது//

    ஆமாங்க மணியண்ணே!

    //இதில் ஆண்டாள் தாயார் தான் பெரிய பிராட்டியின் நிலையில் இருந்து பாடியதாக சொல்லும் அற்புதமான பாடல்//

    பெரிய பிராட்டியின் நிலையில் இருந்தா? கொஞ்சம் விளக்குங்களேன்!

    ReplyDelete
  17. //Raghav said...
    அண்ணா, திருவாய்மொழித் திருநாளாஇ ஆரம்பித்து வைத்தவர் நாதமுனிகளா இல்லை எம்பெருமானாரா ?//

    ரெண்டு பேரும் இல்லை! :)
    யாரு-ன்னு கெஸ் பண்ணுங்க பார்ப்போம்!

    //ஸ்ரீமன்நாதமுனிகள் தான் திவ்ய பிரபந்தத்தை இன்னிசை வடிவில் தொகுத்து தந்தார் இல்லையா?//

    இல்லை!
    மதுரகவிகள் தான் அத்தனைப் பாசுரங்களையும் நாதமுனிக்குச் சொல்லி அருளியதாக சம்பிரதாயம்! அவரே பண்ணுடன் பாடியும் சொல்லி அருளினார். "மதுர" கவிகள் அல்லவா? அதான்!

    நாதமுனிகள் பிரபந்த ஓலைச்சுவடிகளைத் தேடி அலைந்திருக்கலாம்! மதுரகவிகள் அருளால் அவை கிடைத்த பின், அவற்றை codify செய்து, பண்ணுடன் பண்ணி வைத்தார். அரையர்களை உருவாக்கி, பயிற்றுவித்து, பாடவும் வைத்தார்!
    நாத (இசை) வடிவான நாதமுனிகள்!

    ReplyDelete
  18. //Raghav said...
    எனக்கு தெரிந்து அரையர் சேவை ஸ்ரீரங்கம், ஆழ்வார் திருநகரி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே உண்டு...//

    மரபுப் படியான அரையர் சேவைன்னா, ஆம்!

    // மற்ற திவ்யதேசங்களில் கிடையாது என்றே நினைக்கிறேன். இங்கு மட்டும் உள்ளதற்கான சிறப்பு என்ன?//

    ஓ...அந்த மூனு ஊர்ல மட்டும் நடப்பதால் ஏதோ சிறப்பு-ன்னு நினைச்சிட்டீங்களா? :)
    நிறைய இடத்தில் நடந்து கொண்டு இருந்த அரையர் சேவை, இப்போ அந்த மூனு ஊருக்கு மட்டும் சுருங்கிடிச்சி! :(

    இப்பவும், திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி நடித்துக் காட்டுவது போல், சிற்சமயம் பாசுரம் பாடவும் செய்கிறார்கள்! அனிதா ரத்னம் உதவி செய்கிறார்!
    கூத்துப் பட்டறை (இது நாத்திக இயக்கம்-ன்னு பேரு வாங்கினாலும்), பிரபந்த பாடல்களைப் பாடி நடித்துக் காட்ட பெரும்பங்கு உதவுகிறது!

    ஆச்சார்ய விளக்கம், ஆச்சார்யர்கள் கட்டி வைத்த அமைப்பு மட்டுமே அரையர் சேவை பண்ணனும்-ன்னு "வைராக்கியம்" பார்த்ததன் விளைவு தான், இன்னிக்கி அரையர் சேவைக்கு ஆளே இல்லாம, இந்த மூன்று ஊர்களுக்கு மட்டும் சுருங்கிடிச்சி! இன்னும் பத்து வருஷத்துல என்ன ஆகுமோ? :(

    * அன்பர்கள் இது போன்ற மற்ற முயற்சிகளை"யும்" ஊக்குவிக்க வேணும்!
    * ஆச்சார்ய அமைப்பு-ன்னு பேசற எத்தனை பேருக்கு நுட்பமான ஆச்சார்ய விளக்கம் தெரியும்?
    * விளக்கம் மட்டும் பாத்தா போதுமா? ஆச்சார்ய ஹ்ருதயத்தையும் பாக்க வேணாமா? பிரதம ஆச்சார்யர் நாதமுனியின் இசைச் சம்பிரதாயத்துக்கே மூடுவிழா பண்ணிருவாங்க போல இருக்கே! :(

    தானும் பண்ண மாட்டேன், மத்தவனையும் பண்ண விட மாட்டேன்-ன்னு வல்லடி பண்றது பெருமாளுக்கு திரு உள்ள உகப்பு ஆகாது! என்னவோ போங்க! ஏகாதசி அதுவுமா புலம்ப வைக்கறீங்க!

    கூத்துப்பட்டறையே - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ReplyDelete
  19. //Raghav said...
    முக்தி தரும் திருநாளாம் வைகுண்ட ஏகாதசி திருநாளில் பதிவும் சிறப்பாக வந்துள்ளது அண்ணா..//

    நன்றி ராகவ்!
    ஒவ்வொரு நாளும் உங்கள் (உன்) உற்சாகம் பாக்கும் போதும் மகிழ்ச்சியா இருக்கு! :)

    //காலை முன்னமே எழுந்து அருகிலுள்ள ரங்கநாதர் கோவிலுக்கு சென்று சேவித்து விட்டு தற்போது தான் வருகிறேன்..//

    அடாடா! அது எங்கே பெங்களூருவில் ரங்கநாதர்?
    ஸ்ரீரங்கப்பட்னா-ன்னு வேற இருக்குல்ல மைசூர் பக்கம்?

    ReplyDelete
  20. //Raghav said...
    ம்ம்.. ஆண்டாளுக்கு என்னன்ன பட்டம் கொடுத்தீங்கன்னு திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொல்லி முடித்தபின் பின்னூட்டமிடுகிறேன்.. :)//

    ஹா ஹா ஹா!

    பதிவாப் போடுங்க! அப்பத் தான் பட்டம் எல்லாம் one stop shopஆக, பதிஞ்சி இருக்கும்! :)

    ReplyDelete
  21. //Raghav said...
    //மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
    சீரிய சிங்கம், அறிவுற்றுத் தீ விழித்து,/

    இந்த பாசுரம், எம்பெருமானார் இராமானுஜர் பிற்காலத்தில் அவதரிக்கப் போவதை ஆண்டாள் குறிப்பதாக ஒரு விளக்கம் கேள்விப்பட்டுள்ளேன்..//

    ஹிஹி!
    நோ கமென்ட்ஸ்!

    காலத்தால் பின்னால் வந்த திருமங்கை ஆழ்வாரை, ஆண்டாள் தோழியாய் பாவித்துத் தான் பாட்டெழுதி எழுப்புறா-ன்னு சொன்னா, அது சரியாயிரும்!

    ஆனா கோதையைக் "கோபியா" பாவிக்கறா, வடமதுரையை வட(தென்)மதுரையாப் "பாவிக்கிறா"-ன்னா அது சாஸ்திர விரோதம், ஆச்சார்ய விரோதம் ஆயிரும்! :))

    என்னவோ போங்க!

    பை தி வே, தூய பெரு நீர் யமுனைத் துறை, திருப்பதி மலை மேல ஒன்னு இருக்காம்! :)
    அதுக்குப் பேரே யாமுனைத் துறை! எல்லா மலர் மாலையும் அங்கத் தானாம்! :)

    ReplyDelete
  22. //Raghav said...
    இதற்கு என் அண்ணா கொடுத்த விளக்கம், கண்ணன் விளையாட்டு பிள்ளை.. விளையாட்டாக எடுத்து கொண்டு விடுவானோ என்று நினைத்து.. அறிஞர்கள் நிறைந்திருக்கும் அரச சபையில் வந்து ஆராய்ந்து அருள் என்கிறாள்//

    சூப்பர்! அருமையான விளக்கம்! பள்ளிக் கூடப் பசங்களுக்குத் திருப்பாவை சொல்லும் போது, இதைச் சொல்லிப் புரிய வைக்கலாம்!
    உங்க அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள், ராகவ்! அவரை ஆச்சார்ய விளக்கத்துக்கு ஆப்போசிட்-ன்னு வைஞ்சிறாதீங்க! :)

    இன்னும் மேலதிகமா
    //அறிஞர்கள் நிறைந்திருக்கும் அரச சபையில் வந்து ஆராய்ந்து அருள்//

    கண்ணா, நீ பகவானா இருக்கலாம்!
    ஆனால் ஆச்சார்யர்களும், நித்ய சூரிகளும் உன் சபையில் இருக்காங்க! அங்கு வந்து ஆராய்ந்து அருள்! நீ சரியா ஆராயவில்லை-ன்னாலும், அவர்கள் இருப்பதால், அடியேனுக்கு நீதி கிடைக்கும்! :)

    ReplyDelete
  23. //ஷைலஜா said...
    முதல்பாட்டில் இளம்சிங்கம் என்றாள் இங்கே அதனை எழுந்துவரச்சொல்கிறாள்!//

    சிங்கம் 22 நாள்ல வளர்ந்து பெருசாயிரிச்சி! :)

    //ஆராய்ந்து அழகாய் எழுதி உள்ள பதிவினை மறுபடி நன்குபடித்து எண்ணங்களை மடலிடுகிறேன் இப்போ பயணக்களைப்பு!!//

    மெள்ள வாங்க-க்கா! களைப்பு தீர கொத்தமல்லி ரசம் ரெண்டு கப் குடிச்சி ரெஸ்ட் எடுங்க! :)

    ReplyDelete
  24. சிற்றஞ்சிறுகாலே பாசுரத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த திருப்பாவைப் பாசுரம் இது. :-)

    கல்லூரிக் காலத்தில் ஒரு நண்பன் சொன்னான் - நாங்கள் எல்லாம் மாதுர்ய பாவத்தில் கண்ணனைப் பார்த்தால் நீ அவனை இராஜகோபாலனாக தாஸ்யபாவத்தில் பார்க்கிறாய் என்று. சிற்றஞ்சிறுகாலே பாசுரமும் மாரி மலை பாசுரமும் பிடிக்கின்றன என்பதைப் பார்த்தால் அப்படித் தான் போலிருக்கிறது. :-)

    ReplyDelete
  25. எம்.எல். வசந்தகுமாரி பாடுனதைக் கேக்கலாம்ன்னு கிளிக்குனா சித்ரா பாடுற ஏதோ ஒரு சினிமா பாட்டு கேக்குதே. அதுவும் தமிழ்ப்பாட்டு கூட இல்லை. பாருங்க இரவி.

    ReplyDelete
  26. இராகவ்.

    ராபின் ஹுட் ஆழ்வார் தான் திருவாய்மொழித் திருநாளைத் தொடங்கி வைத்தவர்.

    அரையர் சேவை முன்பு பல திவ்ய தேசங்களிலும் இருந்ததாம். கால மாற்றத்தில் இப்போது மூன்றே இடங்களில் மட்டும் தொடர்கிறது.

    ReplyDelete
  27. //குமரன் (Kumaran) said...
    எம்.எல். வசந்தகுமாரி பாடுனதைக் கேக்கலாம்ன்னு கிளிக்குனா சித்ரா பாடுற ஏதோ ஒரு சினிமா பாட்டு கேக்குதே. அதுவும் தமிழ்ப்பாட்டு கூட இல்லை. பாருங்க இரவி//

    ஹா ஹா ஹா, சாரி குமரன்!
    அது ஒரு ஹிந்திக் குத்துப் பாட்டு :)
    பதிவில் இப்போ மாத்திட்டேன்! கேளுங்க!
    நான் குருசரண் தான் தினமும் கேக்குறேன்! அவங்க தான் க்ரூப்பா பாடுறாங்க!

    பாட்டின் சுட்டியில் உள்ள Id-இல் நம்பரைக் கூட்டிக்கிட்டே வருவேன் ஒவ்வொரு பதிவுக்கும்! எம்.எல்.வி மட்டும் நடுவுல ஆர்டரா வராம சதிப் பண்ணீட்டாங்க! :)

    ReplyDelete
  28. //மின்னல் said...
    //அவரைக் கூல்-டவுன் செய்ய அவருக்குப் பின்னாடியே ஒரு சாந்த மூர்த்தியை ஸ்தாபிக்கறாங்களே!//

    அட அட//

    என்ன மின்னல், அட-அட சொல்றீங்க? ஏதாச்சும் தப்பா சொல்லிப்புட்டேனா? :)

    //
    //நின்றான்-இருந்தான்-கிடந்தான்-நடந்தான்!//
    அருமை
    //

    வரிக்கு வரி ரசிச்சிப் படிப்பதற்கு நன்றி!

    ReplyDelete
  29. //குமரன் (Kumaran) said...
    இராகவ்.
    ராபின் ஹுட் ஆழ்வார் தான் திருவாய்மொழித் திருநாளைத் தொடங்கி வைத்தவர்//

    அட, உங்களை யார் அதுக்குள்ளாறச் சொல்லச் சொன்னது? அவரும் கெஸ் பண்ண வேணாமா? திருமங்கையாழ்வார்-ன்னா பாசம் பொத்துக்குமே உங்களுக்கு? :)

    //அரையர் சேவை முன்பு பல திவ்ய தேசங்களிலும் இருந்ததாம். கால மாற்றத்தில் இப்போது மூன்றே இடங்களில் மட்டும் தொடர்கிறது//

    கால மாற்றம் எல்லாம் இல்லை!
    மன மாற்றம் இல்லாதது தான் காரணம்!

    ReplyDelete
  30. //குமரன் (Kumaran) said...
    சிற்றஞ்சிறுகாலே பாசுரத்திற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த திருப்பாவைப் பாசுரம் இது. :-)//

    எனக்கும் ரொம்பப் பிடிக்கும் குமரன்!
    அதான் ஆராய்ந்து அருளேலோ-வை இதுக்கு ரிசர்வ் பண்ணி வச்சேன்! :)
    கீழ்வானம் வெள்ளென்றில் நீங்க ஆ-வான்னு விளக்கம் சொன்னீங்க! இங்க அடியேன் சொல்லிப்புட்டேன்!

    //மாதுர்ய பாவத்தில் கண்ணனைப் பார்த்தால் நீ அவனை இராஜகோபாலனாக தாஸ்யபாவத்தில் பார்க்கிறாய் என்று//

    ஓ கண்ணன் உம் சேவகன்?
    உம்ம்ம்!
    வேலை வாங்குவீங்களா? "வேலை" வாங்குவீங்களா? :)

    //சிற்றஞ்சிறுகாலே பாசுரமும் மாரி மலை பாசுரமும் பிடிக்கின்றன என்பதைப் பார்த்தால் அப்படித் தான் போலிருக்கிறது. :-)//

    யாருக்கு யார்-ப்பா தாஸ்யம்? ஒரே ஹாஸ்யமா இருக்கே! :)

    ReplyDelete
  31. அவன் இராஜகோபாலன் என்றால் யார் யாருக்கு சேஷன்னு தெரியலையா? :-)

    ReplyDelete
  32. //குமரன் (Kumaran) said...
    அவன் இராஜகோபாலன் என்றால் யார் யாருக்கு சேஷன்னு தெரியலையா? :-)//

    இதெல்லாம் சத்தியமா சதி!
    (அட..சத்யம் கம்பேனியைச் சொல்லலை :)

    கோபாலன்-ன்னு ஒங்க இஷ்டத்துக்கும் எங்க மச்சானை வேலை வாங்குவீங்க!
    நாங்க எதிர்த்துக் கேட்டா, "இராஜ"-ன்னு கூடச் சேர்த்து இராஜ-கோபாலன்னு கணக்கு காட்டிருவீங்க! :)

    Cool Guy! I am here for you, buddy! :)

    ReplyDelete
  33. \\"ஆராய்ந்து" அருள் = யப்பா பெருமாளே! நாங்க கேட்டதை எல்லாம் பொசுக் பொசுக்-ன்னு கொடுத்துறாதே! நாங்க எதுக்குக் கேக்கறோம்-ன்னு பாதி நேரம் எங்களுக்கே தெரியாது! :)

    நேத்தெல்லாம் வயித்து வலி; இன்னிக்கு குழந்தை பலாச்சுளை கேக்குது! அம்மா கொடுத்துருவாளா? கொடுக்காமப் போனா அவ அரக்கியா?
    அப்படியே அரக்கி-ன்னு குழந்தை திட்டினாலும் கொடுப்பாளா? பெருமாளே, நாங்க உன்னைத் திட்டினாக் கூட நீ சட்டை பண்ணாதே! ஆராய்ந்து அருள்! ஆராய்ந்து அருள்!\\

    ஆகா...அழகாக சொல்லிட்டிங்க..;)

    கலக்கல் தல ;)

    ReplyDelete
  34. //நிறைய இடத்தில் நடந்து கொண்டு இருந்த அரையர் சேவை, இப்போ அந்த மூனு ஊருக்கு மட்டும் சுருங்கிடிச்சி! :( //

    எதனால்?
    பணமாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்?

    அரையர் சுவாமிகள், இச்சேவை தங்கள் பரம்பரையை தவிர வேறொருவருக்கு கற்றுக் கொடுப்பதில்லை என்ற வறட்டுக் கொள்கையினாலா?

    இன்னொன்று இவை அனைத்து திவ்யதேசங்களிலும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் எம்பெருமானாரால் நியமிக்கப்பட்ட 74 சிம்மாசனங்கள் இருந்த திவ்யதேசங்களில் மட்டும் ஏற்படுத்தப்பட்டது என்று கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  35. //குமரன் (Kumaran) said...
    இராகவ்.
    ராபின் ஹுட் ஆழ்வார் தான் திருவாய்மொழித் திருநாளைத் தொடங்கி வைத்தவர்//

    நன்றி குமரன் :)

    ReplyDelete
  36. //உங்க அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள், ராகவ்! அவரை ஆச்சார்ய விளக்கத்துக்கு ஆப்போசிட்-ன்னு வைஞ்சிறாதீங்க! :) //

    ஹா.ஹா.ஹா..

    அவரை வைய மாட்டேன்.. அவரின் பிடிவாதத்தையும், ஸ்ரீமத் கம்பீரியத்தையும்(?) அவ்வப்போது வாரி விட்டுக் கொண்டு மட்டும் இருப்பேன். :)

    அப்புறம், ஆச்சார்ய விளக்கம்னா என்னன்னா?? ஆச்சார்யர்கள் சொன்னா ஆச்சார்ய விளக்கம். மத்தவங்க சொன்னா ஆச்சர்ய விளக்கமா? :)

    ReplyDelete
  37. //கோதையைக் "கோபியா" பாவிக்கறா, வடமதுரையை வட(தென்)மதுரையாப் "பாவிக்கிறா"-ன்னா அது சாஸ்திர விரோதம், ஆச்சார்ய விரோதம் ஆயிரும்! :)) //

    சாஸ்திர விரோதமா இல்லையா என்று சாஸ்திரம் தெரிந்தவர்களிடம் விவாதியுங்கள், என்னை விடுங்கள் :)

    எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான், திவ்ய பிரபந்தத்தில் நம் மதுரையை மதுரை என்று குறிப்பிடுகின்றனரா? இல்லை கூடல் என்று அழைக்கின்றனரா?? மதுரையில் இப்போதும் கூடல் நகர் என்ற இடம் உள்ளது..

    ReplyDelete
  38. ஆண்டாள் எடுத்த ப்ளாக் அண்ட் புகைப்படத்தை ரவி ஈஸ்ட்மேன்வண்ணத்தில் அமர்க்களப்படுத்திட்டார்! அருமை அருமை என்பதைத்தவிர வேற ஒண்ணூமே இப்போ சொல்ல வரல. கண்முன்காட்சிவர எழுதுவது என்பது சாதாரணச்செயல் இல்லை. அது
    உங்களுக்கும் வந்திருக்கு ரவி வாழ்த்துகள்!

    ReplyDelete
  39. //Raghav said...
    சாஸ்திர விரோதமா இல்லையா என்று சாஸ்திரம் தெரிந்தவர்களிடம் விவாதியுங்கள், என்னை விடுங்கள் :)//

    அதான் உங்க கிட்ட பேசறோம் ராகவ்! :)

    //மதுரையில் இப்போதும் கூடல் நகர் என்ற இடம் உள்ளது..//

    அப்போ மதுரைக்கு உள்ளே இருக்க்கும் ஒரு இடம் தான் கூடல்! மதுரை கூடல் அல்ல-ன்னு சொல்றீங்களா? :)

    FYI
    கூடல் அழகர் மங்களாசாசனத்தை ஆண்டாளும் பாடலை! பெரியாழ்வாரும் பாடலை! அவிங்க ஒன்லி கள்ளழகர் தான்! :)

    //எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான், திவ்ய பிரபந்தத்தில் நம் மதுரையை மதுரை என்று குறிப்பிடுகின்றனரா? இல்லை கூடல் என்று அழைக்கின்றனரா?? //

    எனக்கும் ஒரே ஒரு சந்தேகம் தான்!
    கள்ளழகர் மதுரையா? மதுரை இல்லியா?

    ReplyDelete
  40. //மதுரை என்று குறிப்பிடுகின்றனரா? இல்லை கூடல் என்று அழைக்கின்றனரா??//

    கொல்லி நகர்க்கு இறை
    கூடல் கோமான்
    குலசேகரனின் இசையில் மேவி...ன்னு வேற சொல்றாரே!
    அப்போ குலசேகரன் எந்தக் கூடலை ஆண்டு கொண்டிருந்தார்?

    ReplyDelete
  41. //Raghav said...
    //குமரன் (Kumaran) said...
    இராகவ்.
    ராபின் ஹுட் ஆழ்வார் தான் திருவாய்மொழித் திருநாளைத் தொடங்கி வைத்தவர்//

    நன்றி குமரன் :)//

    யப்பா சாமீகளா...
    நான் சும்மா "பாவனை"யாத் தான் ராபின் ஹுட் ஆழ்வார்-ன்னு சொல்லி வச்சேன்! அதையே அவருக்குப் பேரா வச்சி என்னைய மாட்டி வுட்டுறாதீங்கப்பா! :))

    ReplyDelete
  42. //கோபிநாத் said...
    //நேத்தெல்லாம் வயித்து வலி; இன்னிக்கு குழந்தை பலாச்சுளை கேக்குது! அம்மா கொடுத்துருவாளா? கொடுக்காமப் போனா அவ அரக்கியா?
    அப்படியே அரக்கி-ன்னு குழந்தை திட்டினாலும் கொடுப்பாளா?//

    ஆகா...அழகாக சொல்லிட்டிங்க..;)
    கலக்கல் தல ;)//

    என்ன கோப்பி...இன்னிக்கி ரொம்பவே ஆழ்ந்து படிச்சிட்டீங்களோ? :)

    ReplyDelete
  43. //Raghav said...
    எதனால்?
    பணமாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன்?//

    :)
    அதான் சொல்லி இருக்கேனே! பாருங்க!

    //அரையர் சுவாமிகள், இச்சேவை தங்கள் பரம்பரையை தவிர வேறொருவருக்கு கற்றுக் கொடுப்பதில்லை என்ற வறட்டுக் கொள்கையினாலா?//

    அப்படி எல்லாம் பெருசா ஒன்னும் இல்லை! குடும்பம் அல்லாத வேறு பலரும் கற்றுக் கொண்டு தான் இருந்தனர்! திருவரங்கப் பெருமாள் அரையர் குடும்பமும் பரம்பரை பரம்பரையா அரையர் கிடையாது!

    இராமானுசர் திடீர்-ன்னு ஒரு நாள் கூப்பிட்டு, இதோ எனக்குத் தெரிஞ்சவன் வடுக நம்பி! இவனுக்கு அரையர் சேவை சொல்லிக் கொடுங்க-ன்னா, முடியாது-ன்னு சொல்வாங்களா? பரம்பரை கிரம்பரை-ன்னு பேச முடியுமா?

    இன்னோன்னு தெரியுமா? எம்பார் அரையர் கிடையாது! ஆனா அரையர்களுக்கே சொல்லிக் கொடுப்பாரு!
    தப்பா அபிநயம் பிடிச்ச அரையருக்கு, உடையவர் அறியா வண்ணம், சரியான போஸைப் பின்னாடி இருந்து காட்டுவாரு! ஆனா எப்படியோ ஒரு அனுமானத்துல கண்டுபுடிச்ச இராமானுசர், இது என்ன எம்பார் திருத்தினானா-ன்னு கரீட்டா கண்டு புடிச்சிருவாரு! :))
    கதை இருக்கு! சொல்லட்டுமா? :)

    //74 சிம்மாசனங்கள் இருந்த திவ்யதேசங்களில் மட்டும் ஏற்படுத்தப்பட்டது என்று கேள்விப்பட்டேன்//

    தவறான தகவல்!
    74 சிம்மாசனங்களும் திவ்யதேசமா இருக்கணும்-ன்னு அவசியம் இல்லை!

    ReplyDelete
  44. kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //Raghav said...
    அவரின் பிடிவாதத்தையும், ஸ்ரீமத் கம்பீரியத்தையும்(?) அவ்வப்போது வாரி விட்டுக் கொண்டு மட்டும் இருப்பேன். :)//

    பாவம் மனுசன்! :)
    இப்போ எந்த அண்ணா-ன்னு தெரிஞ்சி போச்சி! :)

    ReplyDelete
  45. //அப்புறம், ஆச்சார்ய விளக்கம்னா என்னன்னா?? ஆச்சார்யர்கள் சொன்னா ஆச்சார்ய விளக்கம். மத்தவங்க சொன்னா ஆச்சர்ய விளக்கமா? :)//

    ஹிஹி! அவங்க நியூயார்க் ஆளுங்க! பொல்லாதவனுங்க! ஆச்சார்ய விளக்கத்தையும் நடுநடு-ல சேத்துப்பாங்க! அதுனால "ஆச்சார்ய ஆச்சர்ய விளக்கம்!" :)

    இராமானுசருக்கு திருவாய்மொழி சொல்லிக் கொடுக்க ஒரு ஆச்சார்யனை ஏற்பாடு பண்ணினார் திருக்கோட்டியூர் நம்பி! திருமாலையாண்டான்-ன்னு அவருக்குப் பேரு! அவர் கிட்ட பாடம் கேட்ட இராமானுசர், கொஞ்ச நாள்-ல திருவாய்மொழிக்குத் தானே புதுசா புதுசா விளக்கம் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சாரு! :))

    இப்போ ராகவ், குமரன், சுந்தர் அண்ணா, அன்புடன் பாலா மாதிரி, அப்போ பல பேரு இராமானுசரை எதிர்த்தனர்! :)

    அப்படிக் கூறுதல் முறையில்லை, மரபு இல்லை, ஆளவந்தார் சொன்ன ஆச்சார்ய விளக்கமா இல்லை-ன்னு ஒரே கலாட்டா ஆயிரிச்சி! :) பிரபந்தத்தில் வேறெந்த ஆழ்வாரும் இது மாதிரி சொன்னதில்லை-ன்னு ஒரே மேற்கோள் தான் போங்க!

    அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
    அறியா மாமாயத்து அடியேனை வைத்தாயால்....பாசுரம்!

    பெருமாள் மாமாயத்தில் என்னை வைத்தானே என்பது ஆச்சார்ய விளக்கம்! செம கலாட்டா! விஷயம் திருக்கோட்டியூர் நம்பி வரைக்கும் போயாச்சு! யார் பக்கம் தீர்ப்பு ஆச்சு? :))

    ReplyDelete
  46. //ஷைலஜா said...
    ஆண்டாள் எடுத்த ப்ளாக் அண்ட் புகைப்படத்தை ரவி ஈஸ்ட்மேன்வண்ணத்தில் அமர்க்களப்படுத்திட்டார்!//

    ஹா ஹா ஹா!
    நல்ல காலம் 70 mm, 35 mm, Dolbyன்னு சொல்லாம விட்டீங்களே! :)

    //கண்முன்காட்சிவர எழுதுவது என்பது சாதாரணச்செயல் இல்லை. அது
    உங்களுக்கும் வந்திருக்கு ரவி வாழ்த்துகள்!//

    நன்றிக்கா!
    தாமே பெற மாலவர் தந்ததினால்...

    ReplyDelete
  47. இராகவ்,

    கூடல் என்பது மதுரையின் இன்னொரு பெயர். பழந்தமிழ் இலக்கியங்களில் அந்தப் பெயர் மதுரைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பழைய பெயரைக் கொண்டு ஒரு புதிய நகருக்கு 'கூடல் நகர்' என்று இப்போது பெயர் வைத்திருக்கிறார்கள்.

    கூடல் அழகர் என்ற பெயர் எங்க ஊர் பெருமாளுக்கு வந்ததே அதனால் தான். என் பதிவிற்குக் கூடல் என்ற பெயர் வைத்ததற்கும் காரணம் அது தான்.

    ReplyDelete
  48. இரவிசங்கர்,

    இன்னொரு பதிவிலும் பெரியாழ்வார் கூடல் அழகருக்கு மங்களாசாசனம் செய்யவில்லை என்று சொல்லியிருந்தீர்கள். அப்புறம் அடியேன் வந்து அவர் செய்த மங்களாசாசனத்தைப் பற்றி சொல்லியிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போலும்.

    ஆண்டாள் கூடல் அழகரைப் பாடவில்லை. ஆனால் கூடல் நகரில் பாடப்பட்ட 'திருப்பல்லாண்டு' கூடல் அழகருக்கு உரியது என்பது மரபு.

    ReplyDelete
  49. //குமரன் (Kumaran) said...
    அப்புறம் அடியேன் வந்து அவர் செய்த மங்களாசாசனத்தைப் பற்றி சொல்லியிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போலும்//

    நீங்க சொல்லிப் போன பிறகு, அடியேனும் வந்து, அது "மங்களாசாசனத்தில்" வராது-ன்னு சொல்லியிருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை போலும் :)))

    இதுவா குமரன்? மெளலி அண்ணா பதிவு தானே சொல்றீங்க?
    http://maduraiyampathi.blogspot.com/2008/12/blog-post_21.html

    //ஆனால் கூடல் நகரில் பாடப்பட்ட 'திருப்பல்லாண்டு' கூடல் அழகருக்கு உரியது என்பது மரபு//

    "உரியதாக" இருக்கலாம் என்பது மரபு! ஆனால் அது "மங்களாசாசனம்" ஆகாது!

    மங்களாசாசனம் என்பது தலத்தின் பெயரைப் பதிந்து சாசனம் செய்வது!
    அப்படிக் கூடலழகர் சன்னிதியை பெரியாழ்வார் செய்யவில்லை! அதனால் "மங்களாசாசன" முறையில் பெரியாழ்வார் பாசுரங்கள் கூடலழகர் கோயிலுக்கு வராது!

    திவ்யதேசப் பட்டியலில், இந்த இந்தப் பாசுரம், இந்த இந்தத் தலத்திற்கு என்று குறிக்கப்படுகிறது! அதில் கூடல் அழகருக்கு "மங்களாசாசனம்" செய்தது திருமங்கை மற்றும் திருமழிசை ஆழ்வார் - இருவர் தான்!
    http://www.srivaishnavam.com/divyadesam108/108az.htm

    மற்றபடி பல்லாண்டு பாடியது இந்த "இடத்தில்" தான் என்பது சரியே! அது மங்கல மரபு!

    அப்படிப் பார்த்தால், ஆண்டாளும் "கூடிடு கூடலே" என்று கூடலழகரைப் பாடி உள்ளாள்! :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP