Sunday, February 08, 2009

தைப்பூசம்: வள்ளலாருக்கு வந்த ஆசைகள்!

தருமம் மிகு சென்னை என்று எழுதும் போதே, சென்னைச் செந்தமிழ் அப்படியே வந்து தென்றலாய் ஒட்டிக் கொள்கிறது:-) என்ன செய்ய!

"அது சரி...அது இன்னாப்பா 'தருமம் மிகு சென்னை'? மெட்ராஸ்-க்குள்ள அம்மாந் தருமம் கீதா? இல்லாங்காட்டி நீயா எதுனா பிகிலு வுடுறியா?மேட்டருக்கு ஸ்டெரெயிட்டா வா மாமே" என்று அங்கு செளகார்பேட்டையில் யாரோ மொழிவது, இங்கு என் காதில் தேன் வந்து பாய்கிறது! :)
அதனால ஸ்டெரெயிட்டா மேட்டருக்கு வருகிறேன்!

இன்று தைப் பூசம்! (Feb-8-2009)!
வடலூர் வள்ளல் இராமலிங்க முனிவன் ஜோதி வழிபாட்டைத் துவங்கி வைத்த திருநாள்!
Jan-25-1872 அன்று வந்த தைப்பூசத்தில் முதல் ஜோதி வழிபாடு துவங்கியது, வடலூரில்!

வடலூர் சத்திய ஞான சபைக் கருவறையில்.......ஏழு திரைகள்!
1. கறுப்புத் திரை = மாயா சக்தி
2. நீலத் திரை = கிரியா சக்தி
3. பச்சைத் திரை = பர சக்தி
4. சிகப்புத் திரை = இச்சா சக்தி
5. பொன்மைத் திரை = ஞான சக்தி
6. வெண்மைத் திரை = ஆதி சக்தி
7. கலப்புத் திரை = சிற் சக்தி
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா! தெர தீயக ராதா? திரை விலக லாகாதா? இந்தத் திரைகளின் பின்னால்...
தீப மங்கள ஜோதீ நமோ நம!
அருட் பெருஞ் சோதி! தனிப் பெருங் கருணை! கீழே கண்டு தரிசியுங்கள்!




இந்த நல்ல நாளில் இன்னொரு விசேடம்! சோழ நாட்டுத் திருப்பதி, ஒப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கு (குடநீர் தெளித்தல்-சம்ப்ரோக்ஷணம்)! இதோ சுட்டி!

தருமம் மிகு சென்னை-ன்னு நான் சொல்லலைப்பா! வள்ளலார் சொல்றாருப்பா!
என்னாத்துக்கு இந்த களவாணித்தனம் புடிச்ச ஊரை "தருமமிகு"-ன்னு சொல்லணும்? :)
ஏன்னா, அங்கு வந்து குடி கொண்டான் ஒரு மிகப் பெரும் செல்வந்தன்! அவனிடம் 'எனக்கு அது கொடு, இது கொடு', என்று கேட்டுக் கேட்டு வாங்குறாருப்பா வள்ளலார்!

வள்ளலாரா இப்படி...சேச்சே இருக்காதுப்பா....உண்மையான துறவிப்பா அவரு!

அப்ப நான் சொல்லறது பொய்யா? 'வேண்டும் வேண்டும்'-ன்னு அவர் கேட்டு கேட்டு வாங்குற பாட்டை நீங்களே பாருங்க!
சரி...அந்த செல்வந்தன் யாருன்னு நினைக்கிறீங்க? சாட்சாத் நம்ம முருகப்பெருமான் தான்!! :)

சென்னையில் இரண்டு கோட்டம் உண்டு! ஒன்று வள்ளுவர் கோட்டம், மற்றொன்று கந்த கோட்டம்!
சென்னை பாரிமுனையில், (ஜார்ஜ் ட்வுன், பூக்கடை ஏரியா), ராசப்ப செட்டித் தெருவில் உள்ள இக்கோவில், சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று!
கந்த கோட்டம் என்று பெயர். ஆனால் கன்ஸாமி கோயில் (கந்தசாமி கோயில்) என்று தான் சென்னை மக்களிடையே பிரபலம்! :)

மிகப் பெரிய கோவில், குளம், மண்டபங்கள்! ஆனா, வெளியில் இருந்து பார்த்தால் கோபுரம் கூட கஷ்டப்பட்டுத் தான் கண்ணுக்குக் தெரியும்!
ஏன்னா சுற்றிலும் அடுக்கு மாடிக் கடைகள், பாத்திரக் கடைகள், என்று வணிக வளாகம் போல் ஆகி விட்டது! வடபழனிக் கோவிலுக்கும் முந்தியது! சென்னையின் முதல் முருகன் கோவில்களுள் ஒன்று எனலாம்!

திருப்போரூர் வேப்ப மரப் புற்றில் இருந்து மாரிச்செட்டியாரால் கொண்டு வரப்பட்ட முருகன்! ஒரு கை வேலும், மறு கை அபயமும் காட்டி, வள்ளி, தேவயானையுடன் சாந்த சொரூபத் திருக்கோலம்!
வள்ளலார், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், அண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் என்று பல மகான்கள் வழிபட்ட தலம் என்று சென்னை வாசிகளுக்கே அவ்வளவாகத் தெரியாது!

மூலவர்
கந்தசுவாமி (ஓவியம்)


உற்சவர் முத்துக்குமாரசுவாமி



அடுத்த முறை சென்னை சென்றால், பாரீஸ் கார்னர் ஷாப்பிங் முடித்து, அவசியம் இந்த அழகனைக் கண்டு வாருங்கள்!


வேண்டாம் என்று சகலமும் துறந்த வள்ளலார், கந்த கோட்டம் வாழும் கந்தனைக் கண்டதும், 'வேண்டும் வேண்டும்', என்று வேண்டி வேண்டிப் பாடுகிறார்! இதோ!
(அருணா சாய்ராம் - இந்தச் சுட்டியில் கேட்டு மகிழுங்கள். க்ளிக் செய்த பின், புதிய விண்டோவில், ராப்சடி ப்ளேயரில் திறக்கும்)

Still Better,
கொஞ்சும் சலங்கை படத்தில், சிக்கல் சிங்காரவேலன் சன்னிதி செட் போட்டு, பாடும் பாடல் காட்சி!
பாடுவது: P. லீலா! (சூலமங்கலம் குரல் மாதிரியும் இருக்கு! யாரு-ன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா)


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம்உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்


பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்


மருவு பெண் ஆசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்


தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.




மிகவும் எளிமையான பாடல் தான்; நான் பொருள் சொல்லப் போவதில்லை! கவிதை நயம் மட்டும் சிறிது சுவைப்போம்.
தனக்காக எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. போனஸ் கொடு, நிலம் கொடு, பணம் கொடு, செல்வாக்கு கொடு, தேர்தலில் வெற்றி கொடு,
எனக்கு வெற்றி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனுக்குத் தோல்வி கொடு, என்று எல்லாம் கேட்கவில்லை! :)

இந்தத் தலை நகர முருகனிடம், நற் சிந்தனைகள்
தலைக்குள் நகர மட்டுமே வேண்டிப் பாடுகிறார்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற அடியார்கள் உறவு = அது என்ன ஒருமை?... அப்படின்னா பன்மை-ன்னு வேற இருக்கா?
ஆமாம் இருக்கு! பல எண்ணங்களுக்குள் ஆழ்ந்து போய், கடவுள் அன்பை, பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு-ன்னு வச்சிக்காம...

உலக வாழ்வில் பல கடமைகள், பன்மையாக இருந்தாலும், அவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டே,
இறைவன் விழைவை, ஒருமையாக, (primary) மனத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்!

முடிகிறதோ இல்லையோ, மனத்தில் வைத்துக் கொண்டால் என்றாவது ஒரு நாள் துளிர் விடும் அல்லவா?
அப்படிப்பட்ட நல்ல இதயங்கள் உள்ளவரோடு பழகினாலே, அரைக்க அரைக்க அம்மிக்கும் வாசம் வந்து விடும். அதனால் தான் அடியார் உறவை வேண்டுகிறார்.

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை = இது போன்ற ஆட்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை; ஆனால் உறவு கொண்டு, நாமும் அதில் கலந்து விடக் கூடாது என்று தான் எச்சரிக்கிறார்.
அதனால் நாமும் கெட்டு, அவன் திருந்தும் வாய்ப்பையும் நாமே கெடுத்து விடுவோம்.

பெருமை பெறு நினது புகழ் பேசல் = இப்படிப் பேசிக் கொண்டு இருந்தாலே, 'வாசி வாசி' என்பது போய், 'சிவா சிவா' வந்து விடும். அரைக்க அரைக்க அம்மியும் மணக்கும்! அதுனால பதிவு போட்டு, போட்டு, போட்டுக்கிட்டே இருப்போம்! :)))

பொய்மை பேசாது இருத்தல் = பொய்யும் சொல்லிட்டு, சப்பைக்கட்டு கட்ட மேலும் மேலும் பொய் சொல்ல, வட்டி குட்டி போட்டு விடும்; அதனால் வேண்டாம் என்கிறார்.

பெருநெறி பிடித்து ஒழுகல் = அவன் நெறி (ஒழுக்கம்) பிடித்துக் கொண்ட பின், தவறவிட்டு விடக் கூடாது. அதில் "ஒழுகணும்"!
ஞானம் - அனுட்டானம் ரெண்டுமே வேண்டும்! இல்லீன்னா right from scratch என்று முதலில் இருந்து துவங்க வேண்டியதாகி விடும்.

மதமான பேய் பிடியாது இருத்தல் = இது மிக மிக முக்கியம்;
'ஆன்மீகம்' என்ற தேவதை போய், 'மதம்' என்று பேய் பிடித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் இறங்காது! "மதம்" பிடித்த யானை ஊரையே ஒருவழி பண்ணிவிடும்!

பரமத பங்கம், பரமத வெறுப்பு கூடவே கூடாது! "மதம்" என்ற காரணி, ஆன்மீகத்தில் வரவே கூடாது! - இதை இந்த வலைப்பூவுல சொல்லிப் பார்த்தேன்! ஆனால் கடும் எதிர்ப்பு தான் மிஞ்சியது! - சென்று பாருங்கள்! விஷயம் புரியும்!

மருவு பெண் ஆசை மறத்தல் = பெண்ணை ஆணோ, ஆணை பெண்ணோ, விட்டுவிட்டு ஓடச் சொல்லவில்லை!
ஆனால் அதையே பிடித்து உழன்று கொண்டு இல்லாமல்(மருவு), பருவ தாகம் தீர்ந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக...
காமத்தை மறந்து, காதலை முன்னுக்குத் தள்ளச் சொல்கிறார்! கவனிக்கவும்: 'மறந்து' தான்; 'துறந்து' இல்லை! பெண்-ஆசை மறத்தல்! பெண்-அன்பு மறத்தல் அல்ல!

உனை என்றும் மறவாது இருத்தல் = இது தான் கொஞ்சம் கஷ்டமோ கஷ்டம்! ஆனால் முயற்சி வேண்டும்!

மதி = குதர்க்கம் பேசாத நல்லறிவு
கருணை நிதி = நம்ம தமிழக முதல்வர்-ன்னு யாரும் நினைச்சிக்காதீங்க! :)
வள்ளலார் சொல்வது இறைவனின் கருணை தான் நமக்கு வைத்த மா நிதி! பிக்சட் டெபாசிட்! அதுவே கருணாநிதி = அருட்செல்வம்!! மிக அழகிய சொல் இது!

நோயற்ற வாழ்வில் வாழல் = இது துறவிக்கும் தேவையான ஒன்று! சுவர் இருந்தால் தானே சித்திரம்?

பல தான தருமங்கள் நடக்கும் தலை நகரமாம் சென்னையில் உள்ள கந்த கோட்டத்து கந்தசாமியே!
அடியேன் இப்படி 'வேண்டும் வேண்டும்' என்று கேட்டது எல்லாம் தாப்பா!
எனக்கு மட்டும் இல்லை! அன்பர் எல்லார்க்கும் தா!(அவர்கள் கேட்காவிட்டாலும், அவர்கள் சார்பாக நான் தான் கேட்டு விட்டேனே!)
அன்பர் அனைவருக்கும் அருள் செய்யப்பா, சண்முகத் தெய்வமணியே!!



இன்னொரு சூப்பர் பாட்டும் இருக்கு! இதுவும் வள்ளலார் கந்த கோட்ட முருகன் மேல் பாடியது தான்! உண்டு, உண்டு-ன்னு ஒவ்வொரு வரியிலும் வேகமா வரும்! இது YES, YES என்னும் Positive Attitude பாடலோ?
நீங்களே படிச்சிப் பார்த்து, அப்படியே எனக்கும் கொஞ்சம் பொருள் சொல்லிக் கொடுங்களேன்!

நீர் உண்டு, பொழிகின்ற கார் உண்டு, விளைகின்ற
நிலன் உண்டு, பலனும் உண்டு!
நிதி உண்டு, துதி உண்டு, மதி உண்டு, கதி கொண்ட
நெறி உண்டு, நிலையும் உண்டு!


ஊர் உண்டு, பேர் உண்டு, மணி உண்டு, பணி உண்டு,
உடை உண்டு, கொடையும் உண்டு!
உண்டு உண்டு மகிழவே உணவு உண்டு, சாந்தம் உறும்
உளம் உண்டு, வளமும் உண்டு!

தேர் உண்டு, கரி உண்டு, பரி உண்டு, மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு!
தேன் உண்ட வண்டுறு கடம்பு அணியும் நின்பதத்
தியானம் உண்டாயில் அரசே!


தார் உண்ட சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!

என்ன மக்களே! பாட்டு புரியுது தானே?
எங்கே...புரியாத சிறுவன் எனக்குப் புரிய வைங்க பார்ப்போம்! :)

27 comments:

  1. Vallalar post super sir. 2nd song meaning?

    ReplyDelete
  2. நன்றி ரவி, சென்னையில் இருந்து கிளம்பும் முன் இறுதியாக தரிசித்த திருத்தலம்.
    தைபூசம், சஷ்டி, சூரசம்ஹாரம் போன்ற நாட்கள்/நிகழ்வுகள் என்றவுடன சென்னை வாழ் மக்களின் நினைவுக்கு வரும் கந்த கோட்ட முருகனின் பெருமைகளை அனைவரும் அறிய வெளியிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. கண்ணை கட்டுதே! எப்படி தான் இப்படி எல்லாம் தகவல்களை திரட்டி வைத்து இருக்கீங்களோ!

    நன்றி

    ReplyDelete
  4. முருகனுக்கு உகந்த மாலை கடம்ப மாலையாகும். அந்த மலர்களிலுள்ள தேனை உண்ண வரும் வண்டுகள் சூழ்ந்திருக்கும் கடம்ப மாலை அணிந்தவனின் பாதம் பற்றித் தியானித்தால், மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும் என்ற பொருளோ??

    உண்டு உண்டு என்று பாடியவர், அடுத்த பாடலிலேயே இல்லை இல்லை என்று பாடுகுறார்.


    உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
    ஒல்லைவிட் டிடவுமில்லை
    உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
    உனைஅன்றி வேறும்இல்லை
    இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
    இசைக்கின்ற பேரும்இல்லை
    ஏழையவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
    றியம்புகின் றோரும்இல்லை
    வளமருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
    மற்றொரு வழக்கும்இல்லை
    வந்திரப் போர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
    வன்மனத் தவனும்அல்லை
    தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
    தலம்ஓங்கு கந்தவேளே
    தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
    சண்முகத் தெய்வமணியே

    ReplyDelete
  5. //Anonymous said...
    Vallalar post super sir//

    நன்றிங்க!

    //2nd song meaning?//

    வாசகர்கள் தான் சொல்லணும்! :)

    ReplyDelete
  6. //Logan said...
    நன்றி ரவி, சென்னையில் இருந்து கிளம்பும் முன் இறுதியாக தரிசித்த திருத்தலம்//

    எனக்கு மிகவும் பிடிச்ச கோயில், லோகன் சார்!
    இங்கு ஒருமுறை நண்பர் ஜிராவை அழைச்சிக்கிட்டு போய் சில சந்தேகம் கேக்கணும்-ன்னும் ஆசை! :)

    நானும் திராச ஐயாவும் இங்கு ஒருமுறை சேர்ந்தும் போயிருக்கோம்! மீதி கதையை அவர் வந்து சொல்லுவாரு! புகைப்பட நிபுணன் என்னைப் பாராட்டுவாரு! :)

    ReplyDelete
  7. //கிரி said...
    கண்ணை கட்டுதே!//

    :)

    //எப்படி தான் இப்படி எல்லாம் தகவல்களை திரட்டி வைத்து இருக்கீங்களோ!//

    திரட்டி வச்சதைத் திரட்டிக்கு கொடுத்துருவோம்! என்ன கிரி சொல்றீங்க? :)

    ReplyDelete
  8. //கமலா said...
    முருகனுக்கு உகந்த மாலை கடம்ப மாலையாகும். அந்த மலர்களிலுள்ள தேனை உண்ண வரும் வண்டுகள் சூழ்ந்திருக்கும் கடம்ப மாலை அணிந்தவனின் பாதம் பற்றித் தியானித்தால், மேற்கண்ட அனைத்தும் கிடைக்கும் என்ற பொருளோ??//

    கடைசிப் பத்திக்கு மட்டும் விளக்கமா?
    நன்றிங்க கமலா!
    மத்த மூன்று பத்திக்கும் சொல்லுங்க!

    //உண்டு உண்டு என்று பாடியவர், அடுத்த பாடலிலேயே இல்லை இல்லை என்று பாடுகுறார்//

    சூப்பர்! அருமை! நன்றி தந்தமைக்கு!
    இப்ப இதுக்கும் சேர்த்து விளக்கம் சொல்லுங்க வாசகர்களே! :)

    ReplyDelete
  9. கல்லூரிக்காலத்தில் சென்னைக்குத் தனியே முதன்முதலில் (சின்ன வயதில் பெற்றோருடன் சென்றிருக்கிறேன்) சென்ற போது பாரிமுனைக்குச் சென்று அங்கிருந்த ரிக்சாகாரரிடம் கந்தக்கோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று சொன்னால் அவருக்கு புரியவே இல்லை; அக்கம் பக்கம் கேட்டுப் பார்த்தார்; யாருக்கும் தெரியவில்லை. கடைசியில் அந்தப் பக்கம் போன ஒரு மார்வாடியார் 'கன்சாமி கோவில்பா'ன்னு சொன்ன பிறகு தான் புரிந்தது. 'தம்பி குந்திக்கோ. ஃபை ருபீஸ் குடு'ன்னு கூட்டிக் கொண்டு போனார். நல்ல வேளை கந்தக் கோட்டம் என்று கேட்டதற்கு வள்ளுவர் கோட்டம் கூட்டிக் கொண்டு போகாமல் விட்டாரே. :-)

    அடுத்த முறையிலிருந்து வழி தெரிந்துவிட்டதால் பாரிமுனையிலிருந்து நடந்தே சென்றுவிடுகிறேன்.

    ReplyDelete
  10. அருமையான மூன்று பாடல்களுக்கும் நன்றி இரவி & கமலா. மூன்றையும் வாயாரப் பாடிக் கொண்டேன்.

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    கடைசியில் அந்தப் பக்கம் போன ஒரு மார்வாடியார் 'கன்சாமி கோவில்பா'ன்னு சொன்ன பிறகு தான் புரிந்தது//

    ஆகா ஒரு இந்திக் காரன் தமிழ்க் கடவுளுக்கு வழி காட்டி இருக்கான்னு சொல்லுங்க! :)

    கந்த கோட்டம்-ன்னு மார்வாடிக்குத் தெரிந்தது மறத் தமிழருக்குத் தெரியாமல் போனது ஏனோ? :(

    //'தம்பி குந்திக்கோ. ஃபை ருபீஸ் குடு'ன்னு கூட்டிக் கொண்டு போனார்//

    சவாரி அஞ்சே ரூவாய்க்கு எல்லாம் உண்டா என்ன? நான் பொறக்கும் முன்னாடியே போல! :)

    //நல்ல வேளை கந்தக் கோட்டம் என்று கேட்டதற்கு வள்ளுவர் கோட்டம் கூட்டிக் கொண்டு போகாமல் விட்டாரே. :-)//

    அதனால் என்ன, வள்ளுவர் கோட்டம் போய், ஐயனுக்கு ஒரு (தமிழ்)அர்ச்சனை பண்ணிட்டு வரது? :)

    //பாரிமுனையிலிருந்து நடந்தே சென்றுவிடுகிறேன்//

    அடுத்த முறை, அருகேயுள்ள அகர்வால் ஸ்வீட்ஸ்-இல் குங்குமப்பூ, ஏலம் தூவிய பாதாம் பால் தவறாது குடிக்கவும்!
    பால் திரவமா இல்லாம திண்மமா இருக்கும்! வாசனையே போதும்! அட்ரெஸ்ஸே தேவையில்லை! :)

    ReplyDelete
  12. //குமரன் (Kumaran) said...
    அருமையான மூன்று பாடல்களுக்கும் நன்றி இரவி & கமலா. மூன்றையும் வாயாரப் பாடிக் கொண்டேன்//

    விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  13. KRS சிங்கப்பூர் தைப்பூசம் பற்றிய என் பதிவின் தொடுப்பு

    http://girirajnet.blogspot.com/2009/02/blog-post_10.html

    ReplyDelete
  14. அருமையான பதிவு & ஜோதி வழிபாடு வீடியோவுக்கு மிக்க நன்றி தல ;)

    \\இந்த களவாணித்தனம் புடிச்ச ஊரை "\\

    ம்க்கும்...இது தேவையா!!!!?? ;)

    ReplyDelete
  15. வள்ளளாரை பற்றி ஒரு ஆன்மீக கூட்டத்தில் நண்பர் ஒருவர் அவர் வேண்டும் வேண்டும் சொல்லி அவர் எழுதிய பாட்டை சொல்லி புளாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார், உடனே எனக்கு ஒரு எண்ணம் மனதில் தோன்றியது அவர் மட்டுந்தான் அப்படி பாட்டு எழுதுவாரா ஏன் நாங்க எழுத மாட்டோமா அப்படி வள்ளராடோட சப‌தம் போட்டுட்டு மனசுல குருநாதர நினைச்சுட்டு பாட ஆரம்பிச்சா

    என்ன அச்சரியம் பாட்டுக்கு 4 வரினு மொத்தம் 10 பாட்டு எழுதினேன், ஆனா வெண்பாஇலக்கண முறை படி இருக்கா அப்படியெல்லாம் தெரியாது, ஆனா எழுதினேன், முடிச்ச புறம் படிச்சா நானா எழுதினேனு தோனிச்சு

    ஒரு பாட்டு மட்டும் சொல்றேன்

    அவளோடு முறையோடு உறவாட வேண்டும்
    முறைமாறி கூடாடத மனமென்றும் வேண்டும்
    மனம் பேச புலனடங்கி போதல் வேண்டும்
    மதிமாறி போகாத குணமென்றும் வேண்டும்

    ReplyDelete
  16. // கிரி said...
    KRS சிங்கப்பூர் தைப்பூசம் பற்றிய என் பதிவின் தொடுப்பு
    //

    தாரை தப்பட்டைகள் முழங்க சும்மா அதிருது பதிவு! :))

    ReplyDelete
  17. //கோபிநாத் said...
    அருமையான பதிவு & ஜோதி வழிபாடு வீடியோவுக்கு மிக்க நன்றி தல ;)//

    ஜோதி வழிபாடு ரொம்ப பிடிக்குமா கோபி?

    //\\இந்த களவாணித்தனம் புடிச்ச ஊரை "\\
    ம்க்கும்...இது தேவையா!!!!?? ;)//

    உம்ம்ம் ஊர்ஸ் பாசமா? :)
    தான் ஆடாட்டாலும் தன் சென்னை ஆடும்! :)

    ReplyDelete
  18. //மணி said...
    வள்ளராடோட சப‌தம் போட்டுட்டு மனசுல குருநாதர நினைச்சுட்டு பாட ஆரம்பிச்சா//

    :)))

    //என்ன அச்சரியம் பாட்டுக்கு 4 வரினு மொத்தம் 10 பாட்டு எழுதினேன்//

    சூப்பர்! முழுக்க அனுப்பி வைங்க மணியண்ணே!

    //ஆனா வெண்பாஇலக்கண முறை படி இருக்கா அப்படியெல்லாம் தெரியாது//

    இது வெண்பா இல்ல!
    வேற என்ன பா? சொல்லுங்கப்பா!

    //அவளோடு முறையோடு உறவாட வேண்டும்
    முறைமாறி கூடாடத மனமென்றும் வேண்டும்//

    அருமை!
    கவிதைத் தலைப்பு என்னவோ?

    ReplyDelete
  19. Hi really amazing.. nice article..if possible (If you are in india) please provide your mobile no. i want to talk with you.. provide your mobile no to: thamizhstudio@gmail.com

    thanks,
    thamizhstudio.com

    ReplyDelete
  20. //அரைக்க அரைக்க அம்மியும் மணக்கும்! அதுனால பதிவு போட்டு, போட்டு, போட்டுக்கிட்டே இருப்போம்! :)))//

    இது சூப்பர் :) அழகன் முருகனிடம் ஆசை வைக்காதிருக்க முடியுமா என்ன? :) வழக்கம் போல அழகான பதிவுக்கு நன்றி கண்ணா.

    ReplyDelete
  21. நண்பர் ரவியுடன் மார்ச் மாதம் 27ஆம் தேதி 2007 வருஷம் கந்தக்கோட்டம் சென்றோம்.
    அன்றுதான் நண்பர் படம் காட்டுவதில் வல்லவர் என்பதை தெரிந்து கொண்டேன். நண்பரே FILO (First In Last Out)முறையை பயன் படுத்துகிறீர்களோ?அப்போதே போடவேண்டிய பதிவு.ஆனாலும் லேட்டா வந்தாலும் எல்லாத் தகவல்களுடன் சிறப்பாக வந்திருக்கிறது. நன்றி.
    சரி பாட்டிற்கு விளக்கம்தானே வேண்டும்

    கடைசியில் வரும் அடியை மேலே கொண்டு வந்து படியுங்கள் விளக்கம் தானக வரும்.

    தேன் உண்ட வண்டுறு கடம்பு அணியும் நின்பதத்
    தியானம் உண்டாயில் அரசே!

    நீர் உண்டு, பொழிகின்ற கார் உண்டு, விளைகின்ற
    நிலன் உண்டு, பலனும் உண்டு!
    நிதி உண்டு, துதி உண்டு, மதி உண்டு, கதி கொண்ட
    நெறி உண்டு, நிலையும் உண்டு!

    ஊர் உண்டு, பேர் உண்டு, மணி உண்டு, பணி உண்டு,
    உடை உண்டு, கொடையும் உண்டு!
    உண்டு உண்டு மகிழவே உணவு உண்டு, சாந்தம் உறும்
    உளம் உண்டு, வளமும் உண்டு!

    தேர் உண்டு, கரி உண்டு, பரி உண்டு, மற்றுள்ள
    செல்வங்கள் யாவும் உண்டு

    பின் குறிப்பு. இந்தக்கோவிலுக்கு சென்ற மறுநாளே சென்னையில் உள்ள ஒரு பெரிய தணிக்கை நிறுவனம் என்னைத் தங்கள் நிறுவனத்தில் ஒரு பாங்குதாரராக சேர்த்துக்கொண்டார்கள்.

    ReplyDelete
  22. //கவிநயா said...
    இது சூப்பர் :) அழகன் முருகனிடம் ஆசை வைக்காதிருக்க முடியுமா என்ன? :)//

    அதானே!

    //வழக்கம் போல அழகான பதிவுக்கு நன்றி கண்ணா//

    இந்த "வழக்கம் போல"-க்கு பொருள் தெரியாம ரொம்ப நாள் திண்டாடறேன்-க்கா! :)
    நீங்க மட்டும் இல்ல-க்கா, இன்னும் சில பல பேரு சொல்றாங்க! அதுனால யாராச்சும் பொருள் சொல்லுங்கப்பா! :)

    ReplyDelete
  23. //இந்த "வழக்கம் போல"-க்கு பொருள் தெரியாம ரொம்ப நாள் திண்டாடறேன்-க்கா! :)//

    அதாவது எப்போதுமே ஜ்ஜூப்பரா எழுதறீங்கன்னு பொருள்!

    ReplyDelete
  24. @திராச
    //நண்பர் ரவியுடன் மார்ச் மாதம் 27ஆம் தேதி 2007 வருஷம் கந்தக்கோட்டம் சென்றோம்//

    யப்பாஆஆஆ! தேதி கூட மறக்காம ஞாபகம் வச்சிருக்கீங்க திராச! காலைக் காட்டுங்க! :)

    //அன்றுதான் நண்பர் படம் காட்டுவதில் வல்லவர் என்பதை தெரிந்து கொண்டேன்//

    ஹிஹி! அந்த போட்டோவை உங்களுக்க்கு இன்னும் அனுப்பலை-ன்னு கோபமா? கவலைப் படாதீங்க, கீதாம்மா வீட்டில் எடுத்த கொலு போட்டோவைக் கூட இன்னும் அனுப்புல! :))

    //நண்பரே FILO (First In Last Out)முறையை பயன் படுத்துகிறீர்களோ?அப்போதே போடவேண்டிய பதிவு//

    ஹிஹி!
    கந்த கோட்டம் பற்றி, பதிவு எழுத வந்த புதிதில், ஒரு பதிவிட்டேன் திராச! நம்மூரு முருகனை வச்சித் தானே கச்சேரி ஆரம்பிக்கணும்! அதான்! :)
    http://madhavipanthal.blogspot.com/2006/10/blog-post_26.html

    //கடைசியில் வரும் அடியை மேலே கொண்டு வந்து படியுங்கள் விளக்கம் தானக வரும்//

    இதுக்குப் பேரு SK டெக்னிக்!
    பின் பார்த்து முன் பார்ப்பது அவர் இஷ்டைலு! :)
    முன்னிலும் பின்னழகு என்பது தான் பெருமாளுக்கும்! :)

    //தேன் உண்ட வண்டுறு கடம்பு அணியும் நின்பதத்
    தியானம் உண்டாயில் அரசே!//

    விளக்கத்துக்கு நன்றி திராச :)

    //பின் குறிப்பு. இந்தக்கோவிலுக்கு சென்ற மறுநாளே சென்னையில் உள்ள ஒரு பெரிய தணிக்கை நிறுவனம் என்னைத் தங்கள் நிறுவனத்தில் ஒரு பாங்குதாரராக சேர்த்துக்கொண்டார்கள்//

    சூப்பர்! சூப்பர்! வாழ்த்துக்கள்!
    என் கூட வந்ததால் தானே? :))

    அடுத்த முறை வரும் போதும் கண்டிப்பா கந்த கோட்டம் போகலாம்! அப்படியே சிறுவாபுரியும்! முடிஞ்சா ராகவனையும் வடபழனிக்குப் போனாப் போல இழுத்துக்கிட்டு வாரேன்! :)
    http://madhavipanthal.blogspot.com/2008/04/blog-post_03.html

    ReplyDelete
  25. //கவிநயா said...
    அதாவது எப்போதுமே ஜ்ஜூப்பரா எழுதறீங்கன்னு பொருள்!//

    ஆகா! நன்றிக்கா!
    உங்க தம்பியை நீங்க விட்டுக் கொடுப்பீங்களா என்ன? :)

    ReplyDelete
  26. //கந்த கோட்டம் என்று பெயர். ஆனால் கன்ஸாமி கோயில் (கந்தசாமி கோயில்) என்று தான் சென்னை மக்களிடையே பிரபலம்! :)//

    ஸ்கந்தஸ்வாமி என்று கூடத்தான் (கண்) கண்டபடி சொல்றாங்க

    :)

    ReplyDelete
  27. Who knows where to download XRumer 5.0 Palladium?
    Help, please. All recommend this program to effectively advertise on the Internet, this is the best program!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP