Tuesday, July 21, 2009

சூரிய கிரகணம் For Dummies: தமிழில் என்ன? அறிவியலில் என்ன?

வாங்க மக்கா! முப்பது நாளில் மூன்று கிரகணங்கள், கிரகண காலத்தில் என்ன செய்யக் கூடாது?, கிரகண கால நன்மை தீமைகள், கிரகணமும்-அரசியலும்-மஞ்சள் துண்டும் - இப்படி விதம் விதமாப் படிச்சி ஓய்ஞ்சிருப்பீங்க! :)

1. ஆன்மீகத்தில் கிரகணம்
2. தமிழில் கிரகணம் (கரவணம்)
3. அறிவியலில் கிரகணம்-ன்னு மூனாப் பிரிச்சி, லேசு மாசாப் பாத்துருவமா? :)



1. ஆன்மீகத்தில் கிரகணம்:

ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கிரகணப் பதிவையும் ஒருகா வாசித்து விடுங்கள்! மூட நம்பிக்கையான பழக்கங்களை அதிகம் சொல்லாது இயல்பாக எழுதியுள்ளார்! :)

இன்று அதிகாலை (July-22-2009),
பிரம்ம முகூர்த்தம் என்னும் சிற்றஞ் சிறு காலையில்,
05:28 முதல் 07:14 வரை சூரிய கிரகண காலம்!
அதுவும் முழுமையான பூர்ண சூரிய கிரகணம்!

ஜப்பான், சீனா, இந்தியா என்று தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மட்டும் தெரியும் இந்த கிரகணத்தில், இந்தியாவில் பீகார்-தாரிக்னா என்னும் கிராமத்தை நோக்கிப் பலரும் ஓடுகிறார்கள்!
தெளிவான வானம் என்பதால் ஆர்யபட்டா முன்பு முகாம் இட்ட இந்த ஊர், கிரகணத்தின் போது மட்டும் வெளிச்சத்துக்கு வருகிறது! :)

கிரகண காலத்தில் செய்யப்படும் தியானமும், ஜபமும், யோகமும்
பல லட்சம் மடங்கு பயன் தர வல்லவை என்று யோக நூல்கள் சொல்லும்!


அதனால் ஆலயங்களில் வழக்கமான சாங்கிய பூசைகள், கூட்டான பிரார்த்தனைகள், மேள தாள மணிச் சத்தங்கள் இதெல்லாம் ஏதும் இல்லாது,
கிரகண காலத்தில், கோயில் நடையைச் சார்த்தி வைப்பார்கள்!
இது ஏதோ மூட நம்பிக்கைக்காகவோ, கிரகணத்துக்குப் பயந்து கொண்டோ செய்வது அல்ல! :)

கூட்டத்தோடு கூட்டமாக வெறுமனே இறைவனைக் கண்ணால் மட்டுமே தரிசிக்காது,
தனிமையில் தியானமும்,
அவனைப் பற்றிய நினைவுகளை நம்முள் இருத்திக் கொள்ளவுமே இவ்வாறு செய்யப்படுகிறது!

புறக் கண்களால் மட்டுமே தரிசனம் செய்யாது, அகக் கண்களாலும் உணரும் பொருட்டே இந்தக் கோயில் நடை சாத்தல்!
கிரகண கால உணர்தல்கள் நமக்குப் பன்மடங்கு பயன் தரும் என்பதால் இப்படி!

கிரகண காலத்தில் தியானம் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை! அனைவரும் இறைவனைப் பற்றி வாசித்து, மனத்தில் உணரவாவது முயற்சி செய்ய வேண்டும்! இதோ வாசியுங்கள்:
1. ஓம் என்றால் என்ன?
2. நமோ என்றால் என்ன?
3. நாராயண என்றால் என்ன? - என்ற தொடர்பதிவுகளின் தொடர்ச்சியை இன்றிரவு இட முயல்கிறேன்! :)



2. தமிழில் கிரகணம் (கரவணம்):

* கிரகணம் என்ற சொல்லுக்குத் தமிழில் பெயர் இல்லையா?
* தமிழர்கள் வானியல் ஆராய்ச்சி செய்தார்களா இல்லையா?

இதெல்லாம் தனி ஆய்வு! :) கோதை என்னும் கிராமத்துப் பெண், Ascent of Venus & Descent of Jupiter பற்றியெல்லாம் குறித்து வைக்கிறாளே! இதோ! வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று!

கிரகணம் என்பதன் தமிழ்ச் சொல் கரவணம்! கரத்தல் = மறைத்தல்!
காக்கை "கரவா" கரைந்துண்ணும் என்பது குறள்!
நிலவோ, பூமியோ சூரியனை மறைப்பதால் (கரத்தலால்) = கரவணம்!
தமிழ் இலக்கியங்கள் கோளம்பம் என்றும் இதைப் பேசும்!

கரவணம் பற்றிய சங்கப் பாடல்கள் பற்றியெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்!
ஏன்னா அதில் அறிவியலும் உண்டு! அறிவில்லாத இயலும் உண்டு! :)
அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
பசங்கதில் மதியத்து அகல் நிலாப் போல
என்று நற்றிணைப் பாடல்! பறவைகள் கிரகண காலத்தில் ஒளிந்து கொள்ளும் பாடல்கள் பலவும் சங்கத் தமிழில் உண்டு!

அருணகிரியும், பாரதப் போரில் செயற்கையாக எழும்பிய கிரகணத்தைப் பற்றி திருப்புகழ் முதல் பாட்டில் பாடுகிறார்! ஆழ்வார்களும் பாடுகிறார்கள்!

முத்தைத் தரு பத்தித் திருநகை என்னும் முதல் திருப்புகழில், "பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக" - என்று பேசுகிறார் அருணகிரி!
கண்ணன் தன் ஆழியால் கதிரவனை மறைத்து நிழல் உண்டாகச் செய்து,
இருள் காட்டிச் செயத்ரதனை வெளிக் கொணர்ந்தமை பற்றி இன்றும் ஆய்வு செய்கிறார்கள்!

* பாரதப் போர் தொடங்கும் முன்னர் ஏற்பட்ட நிலாக் கரவணம் (சந்திர கிரகணம்) பற்றிய குறிப்பும்,
* அதற்குப் பதின்மூன்று நாள் கழித்து, சக்கர மறைப்பு (அ) கதிர்க் கரவணம் (சூரிய கிரகணம்) பற்றியும் பேசப்படுவதை வைத்து,
மகாபாரத காலம் (Dating of the Mahabharata War) பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சியே உள்ளது!
போரின் காலத்தை ஆறு வகையாகக் கணிக்கிறார்கள்: 3129 BCE - 1397 BCE

சில புராணங்களில் ராகு, கேது, பாம்பு விழுங்கல் என்று கதைகளை அளந்தாலும், அதற்கெல்லாம் தத்துவம் என்று விவஸ்தை இல்லாமல் சிலர் பெயர் கொடுத்தாலும்.....

* நம் விஞ்ஞானிகளான வராக மிஹிரர் போன்றவர்கள் சந்திரன்/ பூமியின் கருநிழல் - அயனிழல் (அயல் நிழல்) - Umbra & Penumbra - இதுவே கிரகணத்துக்குக் காரணம் என்று தெளிவாகக் காட்டிச் சென்றுள்ளனர்!

* ஆனால் பிரம்மகுப்தர் போன்ற சில விஞ்ஞானிகளோ அதை ஒப்புக் கொள்ளாமல், "நிழல்" கிரகங்களான (சாயாக் கிரகங்கள்) - Ascending & Descending Nodes - ராகு & கேதுவின் மறைப்பே என்றும் மாற்றி வாதிட்டுள்ளனர்! ஆனால் ராகு/கேதுவை பாம்பாகக் கருதாமல், சாயா-நிழலாகவே கருதிப் பேசியுள்ளனர்.

எது எப்படியோ, பாம்பு விழுங்குதல் கிடையாது! நிழலின் பொருட்டே இந்த வானக் கோலம் என்பது இந்திய விஞ்ஞானத்தில் அப்போதே தெளிவு!
நாம் தான் ஓவர் புனிதப் பூச்சால், செய்த தவறுகளை/அறியாமையை இப்படியெல்லாம் கதைகட்டி மறைத்து விட்டோம்!
இந்திய விஞ்ஞானத்தை இந்திய மதங்களே அறிந்தோ அறியாமலோ சம்பிரதாயப் போர்வையில் மறைத்து விட்டன!


3. அறிவியலில் கிரகணம் (கரவணம்):

இதான் எல்லாருக்குமே தெரியுமே-ங்கறீங்களா? சும்மா படம் பாருங்க! அப்பறம் எப்பமே மறக்க மாட்டீங்க! அறிவியல் பூர்வமா யாரு கேட்டாலும் உங்களால வாயாலயே அத்தனையும் விளக்க முடியும் :)

நிலவின் நிழலில் எப்படி மறைந்து வெளி வருகிறது என்ற அருமையான படம்:


சூரிய கிரகணம் ஏன் வருகிறது?
அதுவும் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டுமே வருகிறது?
ஹிஹி! சூரிய கிரகணம்-ன்னாலும் சந்திரனை வைச்சித் தான் எதுவுமே பேச முடியும்! :)

* சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் போகும் போது,
* அதன் நிழல் பூமி மேல் விழுந்தா,
* அந்த நிழல் பட்டு, சூரியத் தகடு மறைவது போல் ஒரு தோற்றம்
* அதான் சூரிய கிரகணம்-ன்னு எல்லாருக்குமே தெரிஞ்சது தான்!

ஆனால் ஏன் அமாவாசை அன்னிக்கி மட்டும் இது நடக்கிறது? அதான் மாசா மாசம் அமாவாசை வருதே! அப்புறம் ஏன் மாசா மாசம் சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை?

= ஏன்னா நிலவின் சுற்று வட்டப் பாதையும், பூமியின் சுற்று வட்டப் பாதையும் ஒரு 5 டிகிரி சாய்வு! அதுனால முக்கால் வாசி நேரம், இந்த நிழல் விழாம நாம எஸ்கேப் ஆயிடறோம்!

ஆனால், வருசத்துக்கு ரெண்டு முறையாச்சும், எப்படியோ நிழல் எங்கேயாச்சும் விழுந்துடுது! அதுனால அப்படி விழுந்த இடத்தில் மட்டும் கிரகணம் தெரியுது!
அமாவாசை அன்னிக்கு நமக்குத் தான் நிலவு தெரியலையே தவிர, சூரியனில் இருந்து பார்த்தா நல்லாவே தெரியும்! :)

நிலவின் நிழல் ரெண்டு தினுசா விழும்!
1. கருநிழல் - Umbra - உள் நிழல்
2. அயல் நிழல் (அயனிழல்) - Penumbra - வெளி நிழல்
நீங்களே சுவற்றுக்கு அருகில் போய் நின்னு உங்க நிழலைப் பாருங்க! ரெண்டு தினுசா தெரிவீங்க! :)

* உள் நிழல் விழுந்தா முழு கிரகணம்! (Total Eclipse)
* வெளி நிழல் விழுந்தா முழுமையற்ற கிரகணம்! (Partial Eclipse)

முழுமையற்ற கிரகணம் பார்வைக்கு இன்னும் டேஞ்சர்! ஏன்னா, சூரிய ஒளி மறைஞ்சும் மறையாமலும் இருக்கு! மங்கலாத் தானே இருக்கு-ன்னு பார்த்தா அம்புட்டு தான்!

முழுமையான கிரகணத்தின் போது ஏற்படும் வைர மோதிர சேவை பார்த்து இருக்கீயளா? :) (Diamond Ring Effect)
நிழல் விலக ஆரம்பிக்கும் போது, நிலவின் பள்ளத்தாக்கில் உள்ள மலை முகட்டு இடுக்குகள் வழியாக லேசா ஒளி சிந்த ஆரம்பிக்கும் போது, இந்த வைர மோதிர டகால்ட்டி நடக்குது! :)

முழுமையான கிரகணத்தில்,
நிலவு ஒரு தகடு போல் முழுக்க சூரியனை மறைத்துக் கொள்ளும் போது, சூரியனின் வெளி வட்டமான கரோனா (Corona) என்னும் ப்ளாஸ்மா நன்கு தெரியும்!
ஆனால் கொஞ்ச நேரம் தான்! அந்தக் கொஞ்சூண்டு நேரத்துக்கு விஞ்ஞானிகள் காத்திருக்கும் அழகைப் பார்க்கணுமே! திருப்பதி தரிசனம் கதை போலத் தான்! :)

இன்னும் நிறைய சொல்லலாம்! ஆனால் அதெல்லாம் விக்கி பசங்க பதிவில் வரவேண்டியது! ஆனால் பதிவர் இலவசக் கொத்தனார் இப்போ என்ன வீடு கட்டிக்கிட்டு இருக்காரு-ன்னு தான் தெரியலை! :)
கீழ்க்கண்ட காணொளிகளையும் பாருங்கள்! "ஏன் சில இடங்களில் மட்டும் கிரகணம் தெரிகிறது?" என்பதற்கும் விளக்கம் கிடைக்கும்!

கிரகண செய்முறை விளக்கம்:


கிரகணம் ஏன் சில இடங்களில் மட்டும் தெரிகிறது?



இப்போ கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :)

1. ஏன் சூரிய கிரகணம்-ன்னா அமாவசை மட்டுமே? சந்திர கிரகணம்-ன்னா பெளர்ணமி மட்டுமே?

2. சூரியனும் சந்திரனும் பார்க்க ஒரே சைசில் இருப்பதால் நம்ம பூமியில் பார்க்கும் கிரகணத்துக்கு மவுசே தனி! :)
ஏன் நம்ம சந்திரன் சூரியனைப் போல ஒரே சைசில் தெரியறான்?

3. நாம செயற்கையா செயற்கைக் கோள் எல்லாம் ஏவுறோமே? அதன் நிழல் எல்லாம் விழுந்து ஏன் கிரகணம் தெரிவதில்லை? :)

4. கிரகணம் என்பது பூமியில் மட்டும் தானா? இல்லை செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) போன்ற கோள்களில் கூடத் தெரியுமா?

அறிவியல் புலிகள் சொல்லுங்க பார்ப்போம்! ஆன்மீகப் புலிகளும் பதில் சொல்லலாம்! :)
கிரகணம் என்னும் வடமொழிச் சொல், தமிழில் "கரவணம்" என்பதையும் மறக்காதீக! :)

53 comments:

  1. எதிர்பார்த்த தகவல்களோடு நிறைவான கட்டுரை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கோவி அண்ணா
    இந்தப் பகுத்தறிவுக் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்க ப்ளீஸ்! :)

    ReplyDelete
  3. //இப்போ கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ் :)

    1. ஏன் சூரிய கிரகணம்-ன்னா அமாவசை மட்டுமே? சந்திர கிரகணம்-ன்னா பெளர்ணமி மட்டுமே?//

    அறிவியல் விளக்கப்படி அமாவசை, முழுநிலவு நாட்களில் தான் சூரியல், நிலவு, பூமி நேர்கோட்டில் வர வாய்ப்பு உள்ளதாம்.

    //2. சூரியனும் சந்திரனும் பார்க்க ஒரே சைசில் இருப்பதால் நம்ம பூமியில் பார்க்கும் கிரகணத்துக்கு மவுசே தனி! :)
    ஏன் நம்ம சந்திரன் சூரியனைப் போல ஒரே சைசில் தெரியறான்?//

    உங்கள் கண்ணுக்கு அருகில் உங்கள் சுண்டுவிரலால் சூரியனை மறைக்க முடியும். தொலைவு, Focal Length இவதான் உருவங்களின் அளவுகளை நம் கண்ணுக்கு காட்டுகிறது.

    //3. நாம செயற்கையா செயற்கைக் கோள் எல்லாம் ஏவுறோமே? அதன் நிழல் எல்லாம் விழுந்து ஏன் கிரகணம் தெரிவதில்லை? :)//

    விமானம் பறந்தால் விழும் நிழல், கருடன் பறந்தாலும் விழும் ஆனால் நமக்குத்தான் புலப்படதாது.

    //4. கிரகணம் என்பது பூமியில் மட்டும் தானா? இல்லை செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) போன்ற கோள்களில் கூடத் தெரியுமா?//

    துணைக் கோள்கள் இருக்கும் அனைத்துக் கிரகங்களுக்கும் வாய்புள்ளவைதான்

    ReplyDelete
  4. //கோவி.கண்ணன் said...
    1. அறிவியல் விளக்கப்படி அமாவசை, முழுநிலவு நாட்களில் தான் சூரியல், நிலவு, பூமி நேர்கோட்டில் வர வாய்ப்பு உள்ளதாம்.//

    ஆகா!
    இப்படி "வாய்ப்பு உள்ளது", "பிராப்தம் உள்ளது", "விஞ்ஞான சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு"-ன்னு எல்லாம் பதில் சொல்லக் கூடாது! :))
    ஏன் அப்படி ஒரு அமைப்பு இந்த நாட்களில் மட்டும்?

    //2.
    உங்கள் கண்ணுக்கு அருகில் உங்கள் சுண்டுவிரலால் சூரியனை மறைக்க முடியும். தொலைவு, Focal Length இவதான் உருவங்களின் அளவுகளை நம் கண்ணுக்கு காட்டுகிறது//

    ஓரளவு சரி! ஆனால் அப்போ அதே போல் வியாழனில் அதன் கோளும் அங்கே அதே அளவில் தெரியணும்-ல? ஆனா அப்படித் தெரியாது! ஏன்?

    //3
    விமானம் பறந்தால் விழும் நிழல், கருடன் பறந்தாலும் விழும் ஆனால் நமக்குத்தான் புலப்படதாது//

    புலப்படும்! ஆனால் கிரகணம் போல் மறைக்கும் அளவுக்கு பெரிது அல்ல! நொடியில் அகன்றும் விடும்!

    //
    துணைக் கோள்கள் இருக்கும் அனைத்துக் கிரகங்களுக்கும் வாய்புள்ளவைதான்//

    தவறு! சரி பார்த்துச் சொல்லுங்கள்! :)

    ReplyDelete
  5. //நிகழ்காலத்தில்... said...
    எதிர்பார்த்த தகவல்களோடு நிறைவான கட்டுரை//

    நன்றி-ங்க! :)

    ReplyDelete
  6. வணக்கம் கேயாரெஸ்,

    கேள்விக்கு நீ, பதிலுக்கு நாங்கள்,,,, சரியோ தவறோ? ;))

    1) கிரகணம் என்றாலே மறைத்தல்!!! ஏதோ ஒன்று எதையோ மறைக்கிறது ன்னு சொல்வோம்!

    கிரகணம் நடக்கும் போது, சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். ஒவ்வொரு கிரகணத்து அப்பவும், இந்த வரிசை மட்டும் மாறும்!

    சூரியக்கிரகணம் நடக்கும்பொழுது சூரியன் அப்புறம் சந்திரன் அப்புறம் பூமி, இந்த வரிசையில இருக்கும்! அதனால,சந்திரனோட எந்த அரைப்பகுதி சூரியன நோக்கி இருக்கோ, அங்கன சூரியனோட ஒளி விழும்! பூமியைப் பார்த்து இருக்குற பக்கம் இருளா இருக்கும்!

    சூரியன் ------- சந்திரன் -------- பூமி!

    நிலவைப் போல பளிச்சென்று முகம் கொண்ட பெண்ணே! ன்னு சொல்லுவோம்! அப்ப சந்திரன் முழுதாய் ஒளிர வேண்டியதுதானே! அப்படின்னு கேட்டா, நிலா ஒளிர்வது சொந்தமா இல்ல, புறம்போக்கு மாதிரி கிடைக்கிற ஒளியைத்தான் அது கடன் வாங்கி எதிரொளிக்கின்றது!

    அதனாலத்தான் அமாவாசையும் சூரியக்கிரகணமும் ஒன்னா வருது!

    மேலும், அமாவாசையா இருக்குற எல்லா நாட்களிலும் சந்திரன் சூரியனை மறைப்பதில்லை! ஏன்னா, அது சூரியனுக்குப் பூமிக்கும் நடுவில சரியான கோணத்தில வந்தாதான் அதனால சூரியனை மறைக்கமுடியும்!

    சந்திர கிரகணம்---

    சந்திரகிரகணம் அப்போ,

    சூரியன் ---- பூமி ---- சந்திரன் அப்படிங்கற வரிசையில இருக்கும்!

    சந்திர கிரகணம் ங்கறது, சூரியன் கிட்ட இருந்து உட்கவருகின்ற ஒளியைத்தானே சந்திரன் எதிரொளிக்கிறது! அப்படிப்பட்ட சமயத்துல, சூரியன்கிட்ட இருந்து அது வாங்கி எதிரொளிக்கிறத, பூமி நடுவுல வந்து மறைச்சுடும்!

    ஒளியின் விளிம்பு விளைவுன்னால, சொற்ப அளவிலான ஒளி மட்டும் தான் நிலாவைப் போய்ச் சேரும்!

    இவ்வாறு, சந்திரன் பெறும் ஒளியை பூமி வந்து மறைக்கிறதுக்குப் பேருதான் சந்திரகிரகணம்!

    சுருக்கமா சொன்னா, சூரியனோட ஒளி மறைக்கப்பட்டா அது சூரியக் கிரகணம்!!

    சந்திரனோட கடன்வாங்குற ஒளி மறைக்கப்பட்டா அது சந்திர கிரகணம்!!

    முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  7. 2) சூரியனும் சந்திரனும் ஒரே அளவில தெரிவது ஏன்னா, பூமியானது சூரியனை நீள்வட்டப் பாதையில சுற்றி வருது! அதே மாதிரி சந்திரனும் (பூமியின் துணைக்கோள்)பூமியைச் சுற்றி வருகிறது!

    சந்திரனானது நீள்வட்டப் பாதையில பூமியைச் சுற்றும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்துல அது பூமிக்குத் தூரமாகவும், சூரியனுக்கு அண்மையிலும் போகும்! அப்பத்தான் அது பூமியில இருந்து பாக்கும்பொழுது சின்னதா இருக்கறாப்புலயும் சூரியன் அளவுக்குப் பெரிசாயிடுறமாரியும் தெரியுது!!

    முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  8. 3) செயற்கைக்கோள் என்பது மனிதனால் ஏவப்பட்டு பூமியைச் சுற்றிவரும் ஒரு பொருள்! அதுக்கு இயற்கைத் துணைக்கோளன நிலாவை மாதிரி, சூரியனோட ஒளியை உட்கவர்ர தன்மையும் இல்ல, அவ்வொளியை மறுபடி எதிரொளிக்கிற தன்மையும் இல்ல! அதனால அதுக்கு அம்மாவாசையும் இல்ல, பௌர்ணமியும் இல்ல!! ;))

    அது மட்டும் இல்ல, அது பூமியை ஒட்டி சுற்றி வருவதால அதனால சூரியன மறைக்க முடிவதும் இல்ல!!

    முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  9. 4) கிரகணம் என்பது ஒளியை மறைத்தல்! செவ்வாய், வியாழனுக்கும் கிரகணம் ல்லாம் உண்டு!

    நீங்க செவ்வாய் ல்ல வீடு வாங்கினாலும், அங்கயும் கிரகணம் வரும்! ஆனா அது நம்மல மாதிரி இல்லாமப, பாதியளவு மட்டும் தான் வரும்! செவ்வாயில சூரியக்கிரகணம் முழுமையற்ற கிரகணம்!!!

    வியாழன்;
    பூமிக்கு நிலா மட்டும்தான் ஒரே ஒரு இயற்கைத் துணைக்கோள்! ஆனா வியாழனுக்கு 63 இயற்கைத் துணைக்கோள்கள் இருக்கு! அப்படின்னா அங்கன ஏகப்பட்ட கிரகணம் நடக்கும்ன்னு கற்பனைப் பண்ணிக்கக் கூடாது! அவை எல்லாம் வெவ்வேறு அளவிலானவை!

    63 ல, சும்மா ஒரு நாலு அஞ்சு தான் வியாழன் கோள் ல்ல கிரகணத்த உண்டாக்கும்!

    முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  10. நன்றி விக்கிப்பீடியா!!!

    அமால்த்தியா,
    லோ,
    கானிமேட்,
    ஈரோப்பா,
    காலிஸ்ட்டோ!! ஆகியன மட்டுமே வியாழன் ல்ல சூரியக் கிரகணத்தை உண்டாக்கவல்லன!

    மற்றவை, மிகவும் சிறியனவாய் இருப்பதாலும், அல்லது,சூரியனிடமிருந்து மிகத்தொலைவில் இருப்பதனாலும் அவற்றால் கிரகணத்தை உண்டாக்க இயலுவதில்லை!!!

    முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  11. அருமையான தகவல்

    முன்பு இளங்கோ பாண்டியன் "கரவணத்தைப் பற்றி எழுதிய இடுகையைக் கண்முன்னே
    நினைவு படுத்தியது தங்களின் இந்த இடுகை
    /தமிழ்ச் சொற்கள் பல ஒலிப் பிறழ்வால் உரு மாறி வடசொற்களாய் வழங்கிவருகின்றன. அவற்றுள் ஒன்று "கரவணம்" (கிரகணம்) . "கரத்தல்" என்ற சொல் மறைதலையும் மறைத்தலையும் குறிக்கும். அதனால்தான் பகலில் மறைந்து திரியும் பூச்சி "கரப்பான்" எனப்பட்டது. உள்ளத்தால் ஒன்றை மறைக்கும் "வஞ்சனை"யும், சொல்லால் ஒன்றை மறைக்கும் "பொய்"யும், மறைவாக ஒன்றைக் கவரும் "திருட்டு"ம் "கரவு" எனப்பட்டன. திருடர்கள் "கரவடர்" எனப்பட்டனர்.

    அதுபோல ஞாயிறும் திங்களும் வானில் மறைபடும் நிகழ்வு "கரவணம்" எனப்பட்டது. இந்தக் "கரவணம்" என்ற சொல்தான் "கரகணம்" எனத் திரிந்து வடமொழியில் "கிரகணம்" என்று வழங்கிவருகிறது./

    மிக்க நன்றிங்க

    ReplyDelete
  12. கிரகணத்தின் காரணமாக பித்ரு தர்ப்பணம் செஞ்சேன்னு மட்டும் சொல்லிக்கிறேன் :)

    மத்தபடி முகிலரசி தமிழரசன் பதில்கள் அனைத்தையும் படிச்சுட்டேன்னும் சொல்லிக்கிறேன்,

    ReplyDelete
  13. //தமிழ் said...
    வணக்கம் கேயாரெஸ்,
    கேள்விக்கு நீ, பதிலுக்கு நாங்கள்,,,, சரியோ தவறோ? ;))//

    வணக்கம் முகில்!
    அட கேள்விக்கு நானா? பதிலும் அரை கொறையாச் சொல்லி இருக்கேங்க! கில்ஸ், சிவமுருகன்-ல்லாம் புதிர் போட்டு இருக்காங்களே! அங்கெல்லாம் கலந்தடிச்சி ஆடி இருக்கோம்! :)

    1. //மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும்//

    Yessu! அப்படி வந்தால் தான் கிரகணமே நடக்கும்! ஒரே நேர்க்கோட்டில் வருவது தானே அமாவாசையும் பெளர்ணமியும்! அதான் எல்லாச் சூரியக் கிரகணங்களுமே அமாவாசையும், எல்லாச் சந்திர கிரகணங்களும் பெளர்ணமியுமாய் வருகிறது!

    //அமாவாசையா இருக்குற எல்லா நாட்களிலும் சந்திரன் சூரியனை மறைப்பதில்லை! ஏன்னா, அது சூரியனுக்குப் பூமிக்கும் நடுவில சரியான கோணத்தில வந்தாதான் அதனால சூரியனை மறைக்கமுடியும்!//

    ஆமாம்! பதிவில் சொன்ன அந்த 5 டிகிரி சாய்வினால் எப்போதும் நிழலை வெட்டும் கோணத்தில் விழாமல் எஸ்கேப் ஆகி விடுகிறது! ஆண்டுக்கு குறைந்த பட்சம் ரெண்டு நாள் மட்டும் இப்படி எஸ்கேப் ஆக முடிவதில்லை! அப்போது அந்த ஏரியாவில் கிரகணம்!

    ReplyDelete
  14. //தமிழ் said...
    சந்திரனானது நீள்வட்டப் பாதையில பூமியைச் சுற்றும் போது, ஒரு குறிப்பிட்ட இடத்துல அது பூமிக்குத் தூரமாகவும், சூரியனுக்கு அண்மையிலும் போகும்! அப்பத்தான் அது பூமியில இருந்து பாக்கும்பொழுது சின்னதா இருக்கறாப்புலயும் சூரியன் அளவுக்குப் பெரிசாயிடுறமாரியும் தெரியுது!!//

    உம்ம்ம்ம்ம்
    அது மட்டுமே காரணம் இல்லை!

    சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் = 400 * சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரம்!
    சூரியனின் விட்டம் (diameter) = ௪00 * சந்திரனின் விட்டம்

    இப்படி 400 என்ற ஒரே மடங்கு எண்ணிக்கையால் தான், Ratio ஒன்றாகி, சூரியனும் சந்திரனும் பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரே சைஸாகத் தெரிகிறது! :)

    ReplyDelete
  15. //தமிழ் said...
    3) செயற்கைக்கோள் என்பது...அது மட்டும் இல்ல, அது பூமியை ஒட்டி சுற்றி வருவதால அதனால சூரியன மறைக்க முடிவதும் இல்ல!!//

    முதல் பகுதி சரி! ஆனாலும் செயற்கைக் கோள்களின் நிழல் விழத் தான் செய்யும்! ஆனால் கிரகணம் ஏற்படுத்தும் அளவுக்கு அவை அளவில் பெரியவை அல்ல! மேலும் ஒரே விநாடியில் அவை கடந்து விடுவதால் தெரிவதும் இல்லை!

    ReplyDelete
  16. //வியாழன்;
    பூமிக்கு நிலா மட்டும்தான் ஒரே ஒரு இயற்கைத் துணைக்கோள்! ஆனா வியாழனுக்கு 63 இயற்கைத் துணைக்கோள்கள் இருக்கு! அப்படின்னா அங்கன ஏகப்பட்ட கிரகணம் நடக்கும்ன்னு கற்பனைப் பண்ணிக்கக் கூடாது! அவை எல்லாம் வெவ்வேறு அளவிலானவை//

    சரியான விடை!
    கலக்கறீங்க முகில்! உங்க பையன் விஞ்ஞானியா வரப் போறான்! :)

    பெரும்பாலும் மற்ற கோள்களில் கிரகணம் நடப்பதில்லை! No Eclipse, Only Transit!

    ஏனென்றால் சூரியனின் கோண விட்டத்தை (Angular Diameter) விடப் பெரிதாகவோ சிறிதாகவோ துணைக் கோள்கள் இருந்தால், அவற்றால் கிரகணம் போன்ற காட்சியை ஏற்படுத்த முடிவதில்லை! They are only called as Transits & Occultations!

    பூமியில் பிறந்த நமக்குத் தான் இந்த இயற்கை மாய அழகையெல்லாம் பார்க்க கொடுத்து வச்சிருக்கு!
    வைகுந்தம் புகுவதும் ஜூப்பிட்டர் விதியே இல்லை!
    வைகுந்தம் புகுவதும் "மண்ணவர்" விதியே! :)

    ReplyDelete
  17. //திகழ்மிளிர் said...
    அருமையான தகவல்//

    நன்றி திகழ்மிளிர்!

    //முன்பு இளங்கோ பாண்டியன் "கரவணத்தைப் பற்றி எழுதிய இடுகையைக் கண்முன்னே
    நினைவு படுத்தியது தங்களின் இந்த இடுகை//

    நன்றி! கரவணம் என்ற சொல்லை நாம் இன்னும் புழங்க வேண்டும்! அப்போ தான் மக்கள் மனதில் நிலைக்கும்!

    //இந்தக் "கரவணம்" என்ற சொல்தான் "கரகணம்" எனத் திரிந்து வடமொழியில் "கிரகணம்" என்று வழங்கிவருகிறது.//

    உம்ம்ம்ம். உறுதியாகச் சொல்வதற்கில்லை! ஏன்னா கிரகண் என்ற வடமொழிச் சொல்லுக்குப் பொருள் பற்றுதல்/ Capture/ Seize/ Catch!

    பாம்பு பிடித்துக் கொள்வது என்பதால் கிரகணம்-ன்னும் வந்திருக்கலாம்!

    ReplyDelete
  18. //Raghav said...
    கிரகணத்தின் காரணமாக பித்ரு தர்ப்பணம் செஞ்சேன்னு மட்டும் சொல்லிக்கிறேன் :)//

    நல்லது ராகவ்!
    கிரகண காலத்தில் தர்ப்பணம் அவசியமாகச் செய்ய வேண்டிய ஒன்று! மிகவும் உயர்ந்த கர்மா/செயல்!

    //மத்தபடி முகிலரசி தமிழரசன் பதில்கள் அனைத்தையும் படிச்சுட்டேன்னும் சொல்லிக்கிறேன்//

    அப்போ வழக்கம் போல பதிவைப் படிக்கலையா? :))

    ReplyDelete
  19. 1959 ம் வருடம் என நினைக்கிறேன். பி.எஸ்.சி. கணிதம். மூன்றாவது வருட மேஜர் அஸ்டிரானமி துவங்கிய நேரம்.
    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் வானியல் கணிதம் (mathematical astronomy))
    பாடங்கள் துவங்குவத்ற்கு முன்னால் ஒரு பத்து நாட்கள் எங்கள பேராசிரியர்
    கால்குலஸ் ஸ்ரீனிவாஸன் அவர்கள் அண்டத்தைப் பற்றியும் நமது சோலார் சிஸ்டம்
    பற்றியும் முகவுரையாக டிஸ்க்ரிப்டிவ் அஸ்ட்ரானமி வகுப்புகள் எடுத்தது, எல்லாமே ஒண்ணாங்கிளாஸ் அரிச்சுவடி அஸ்ட்ரானமி தான் என்றாலும், ஆ என்று நாங்கள் எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு அவரைக் கேட்டுக்கொண்டிருந்தது எல்லாமே உங்கள் பதிவைப்பார்த்ததும் நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில் தான் மனுசன்
    மூன் லான்டிங் ஆனது எல்லாம்.

    அவர் ஒரு நாள் ஏன் எல்லா பெளர்ணமி, அமாவாசைகளில் முறையே சந்திர சூர்ய கிரகணங்கள் தோன்றுவதில்லை என பாடம் நடத்தின தினத்தன்றும் ஒரு கிரகண தினம் .

    பூமி, சந்திரன் இந்த அஞ்சு டிகிரி ஸ்லான்டிங்கைப் பற்றி அற்புதமாக வர்ணித்திக்கொண்டிருக்கும்போது ஒரு முந்திரிக்கொட்டை
    ( நானல்ல ..இன்னொரு நண்பன், பிற்காலத்தில் அவன் ஹெட் ஆஃப் த் டிபார்ட்மென்ட் ஆனான்) எழுந்து நின்று
    " சார் ! திடீரென ஒரு நாளைக்கு இந்த அஞ்சு டிகிரி கூடவோ குறைச்சோ இல்ல ஸைபர் ஆனால், அப்ப என்ன ஆகும் எனக் கேட்டதும்
    நினைவுக்கு வருகிறது.

    ஒரு வினாடி அவனை உத்துப்பார்த்த ப்ரொஃபஸர், அப்ப மாசா மாசம் ஒரு தர்ப்பணம் இல்ல, மூணு தர்ப்பணம்
    என்று சொல்லி சிரிப்பலைகள் எழுப்பியதும் நினைவுக்கு வருகிறது.

    அது சரி !

    //அமாவாசை அன்னிக்கு நமக்குத் தான் நிலவு தெரியலையே தவிர, சூரியனில் இருந்து பார்த்தா நல்லாவே தெரியும்! :)//

    அப்ப மாசா மாசம் நீங்க சூரியனுக்கு போயிடுவீங்களா ஸார் ! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.
    சாந்தோக்யத்திலே கூட சூர்ய லோகத்திற்குப் போகிறவர்களைப்பற்றி இருக்கிறது.
    யாராவது கூட்டிக்கொண்டு போவணுமே......

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  20. // அந்த சமயத்தில் தான் மனுசன்
    மூன் லான்டிங் ஆனது எல்லாம்.//

    மூன் லேன்டிங் பின்னாடி 1969 லே . கொஞ்சம் ஞாபக மறதி அதிகமாயிடுத்து போலே.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  21. //
    Raghav said...

    கிரகணத்தின் காரணமாக பித்ரு தர்ப்பணம் செஞ்சேன்னு மட்டும் சொல்லிக்கிறேன் :)

    மத்தபடி முகிலரசி தமிழரசன் பதில்கள் அனைத்தையும் படிச்சுட்டேன்னும் சொல்லிக்கிறேன்,//

    :-))))

    நன்றி, கேயாரெஸ்!!
    பதிவிற்கும், வினாக்களுக்கும், விளக்கங்களுக்கும்...

    -முகிலரசி தமிழரசன்

    ReplyDelete
  22. அருமையான தகவல்களோட மீண்டுமொரு கிரகணத்தைப் பார்த்த நிறைவு. நன்றி ரவி.

    ReplyDelete
  23. 1. ஏன் சூரிய கிரகணம்-ன்னா அமாவசை மட்டுமே? சந்திர கிரகணம்-ன்னா பெளர்ணமி மட்டுமே?

    அறிவியலில் பெளர்ணமி அமாவசை சார்ந்த ஆய்வு அதிகமாக இல்லை. ஆனால் சந்திரன் பூமியும் விலகி செல்லும் பொழுது பெளர்ணமியும் இணையும் பொழுது அமாவாசையும் இருப்பதால் கிரகணங்களும் அதைசார்ந்து நடக்கும்.

    2. சூரியனும் சந்திரனும் பார்க்க ஒரே சைசில் இருப்பதால் நம்ம பூமியில் பார்க்கும் கிரகணத்துக்கு மவுசே தனி! :)
    ஏன் நம்ம சந்திரன் சூரியனைப் போல ஒரே சைசில் தெரியறான்?

    சந்திரன் - சூரியன் பூமியிலிருந்து ஒரே தூரத்தில் இல்லை. பேருந்தில் செல்லும் பொழுது அருகில் இருக்கும் வீடும் தூரத்தில் இருக்கும் பெரிய மரமும் ஒரே அளவில் தெரிவது போல.

    3. நாம செயற்கையா செயற்கைக் கோள் எல்லாம் ஏவுறோமே? அதன் நிழல் எல்லாம் விழுந்து ஏன் கிரகணம் தெரிவதில்லை? :)

    பூமியின் மேலே அதிக தூரம் செல்ல செல்ல நிழல் விழும் இடமும் நிழலின் அளவும் குறையும். பாரா ஜம் செய்யும் மனிதனின் நிழல் பூமியை நெருங்கும் பொழுது தான் தெரியும். உங்களுக்கு ஒரு கேள்வி மஹாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொடுக்கும் பொழுது நிழல் கீழே விழுந்ததா :) ?


    4. கிரகணம் என்பது பூமியில் மட்டும் தானா? இல்லை செவ்வாய் (Mars), வியாழன் (Jupiter) போன்ற கோள்களில் கூடத் தெரியுமா?

    துணைக்கோள் இருக்கும் அனைத்து கிரகத்திற்கும் கிரகணம் உண்டு. சனிக்கு 13 துணைக்கோள்கள். அங்கே 13 நாட்கள் அமாவாசை மற்றும் பெளர்ணமி. வருடத்திற்கு அனேக கிரகணங்கள். புரோகிதர்கள் அங்கே இருந்தால் தர்ப்பணம் செய்து அதிக வருமாணம் பார்க்கலாம்.

    மாதவி பந்தலில் வேதத்தின் கண்ணை வைந்து அலங்கரித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  24. //உங்களுக்கு ஒரு கேள்வி மஹாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொடுக்கும் பொழுது நிழல் கீழே விழுந்ததா :) ?//

    கேள்வி நியாயமானது தான்.
    ஆனால்,

    யார் யாருக்கு விஸ்வ ரூப தர்சனம் கிடைத்ததோ அவர்கள் தானே அந்த மாதிரியான‌
    நிழலையும் பார்த்திருக்க முடியும் !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  25. //
    கோவி.கண்ணன் said...
    1. அறிவியல் விளக்கப்படி அமாவசை, முழுநிலவு நாட்களில் தான் சூரியல், நிலவு, பூமி நேர்கோட்டில் வர வாய்ப்பு உள்ளதாம்.
    //
    அண்ணன் தலைகீழாச் சொல்லீருக்கார்...
    சூரியன், நிலவு, புவி மூன்றும் நேர்கோட்டில் வரும் நாட்கள் தான் அமாவாசை, முழுநிலவு நாட்கள்.
    :)

    ReplyDelete
  26. //ஜெகதீசன் said...
    அண்ணன் தலைகீழாச் சொல்லீருக்கார்...//

    ஜெகா,
    கோவி அண்ணன் அப்படித் தலைகீழாச் சொன்னாத் தானே நமக்கெல்லாம் சரியாப் புரியும்? :))

    ReplyDelete
  27. //sury said...
    மூன் லேன்டிங் பின்னாடி 1969 லே . கொஞ்சம் ஞாபக மறதி அதிகமாயிடுத்து போலே//

    ஹிஹி! வாங்க சூரி சார்! மூன் லேண்டிங்கே நடக்கலை-ன்னு வேற இப்போ கெளப்பி விடறாங்க! :)

    எங்களுக்கெல்லாம் "ஹனி"-மூன் லேன்டிங்கே போதும்-ப்பா! :)))

    ReplyDelete
  28. //கோபிநாத் said...
    உள்ளேன் ஐயா ;)//

    ஆகட்டும் மாப்பி! நீ என்னைக்குத் தான் கேள்விக்குப் பதில் சொல்லி இருக்கே? :))

    ReplyDelete
  29. //வல்லிசிம்ஹன் said...
    அருமையான தகவல்களோட மீண்டுமொரு கிரகணத்தைப் பார்த்த நிறைவு. நன்றி ரவி//

    இன்னொரு கிரகணமா? பதிவிலா? ஹா ஹா ஹா! வாங்க வல்லீம்மா!

    ReplyDelete
  30. //sury said...
    ஆ என்று நாங்கள் எல்லோரும் வாயைப் பிளந்து கொண்டு அவரைக் கேட்டுக்கொண்டிருந்தது எல்லாமே உங்கள் பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது//

    ஆகா! திருச்சி St.Joesph ஆ நீங்க?
    அவர் சொன்னது Astronomy & Calculus.
    அதெல்லாம் நான் பதிவில் சொன்னா, மக்கள் Lim x->00 தான்! :)

    //பூமி, சந்திரன் இந்த அஞ்சு டிகிரி ஸ்லான்டிங்கைப் பற்றி அற்புதமாக வர்ணித்திக்கொண்டிருக்கும்போது ஒரு முந்திரிக்கொட்டை
    ( நானல்ல ..இன்னொரு நண்பன், பிற்காலத்தில் அவன் ஹெட் ஆஃப் த் டிபார்ட்மென்ட் ஆனான்)//

    ஹா ஹா ஹா!
    விளையும் பயிர் முளையிலே தெரியும் :))

    //" சார் ! திடீரென ஒரு நாளைக்கு இந்த அஞ்சு டிகிரி கூடவோ குறைச்சோ இல்ல ஸைபர் ஆனால், அப்ப என்ன ஆகும் எனக் கேட்டதும்
    நினைவுக்கு வருகிறது.

    ஒரு வினாடி அவனை உத்துப்பார்த்த ப்ரொஃபஸர், அப்ப மாசா மாசம் ஒரு தர்ப்பணம் இல்ல, மூணு தர்ப்பணம்
    என்று சொல்லி சிரிப்பலைகள் எழுப்பியதும் நினைவுக்கு வருகிறது//

    :))
    சூப்பர் நகைச்சுவைப் பேராசிரியர் போல!

    //
    //அமாவாசை அன்னிக்கு நமக்குத் தான் நிலவு தெரியலையே தவிர, சூரியனில் இருந்து பார்த்தா நல்லாவே தெரியும்! :)//

    அப்ப மாசா மாசம் நீங்க சூரியனுக்கு போயிடுவீங்களா ஸார் ! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு.
    சாந்தோக்யத்திலே கூட சூர்ய லோகத்திற்குப் போகிறவர்களைப்பற்றி இருக்கிறது.
    யாராவது கூட்டிக்கொண்டு போவணுமே......//

    சத சவித்ரு மண்டல மத்யவர்த்தே நாராயணஹ!
    சரசிஜாசனா சாம்னிவிஷ்டஹ
    ....
    ன்னு எங்காளு கூட ஜாலியாப் பேசிக்கிட்டுருந்தா அவரே சூரிய மண்டல மத்யவர்த்தே-ன்னு சுத்திக் காமிச்சிருவாரு! :)))

    ReplyDelete
  31. //sury said...
    யார் யாருக்கு விஸ்வ ரூப தர்சனம் கிடைத்ததோ அவர்கள் தானே அந்த மாதிரியான‌
    நிழலையும் பார்த்திருக்க முடியும் !!//

    அதான் கீதையைப் பாக்கறோம்-ல? கீதையில் இருக்கா-ன்னு பார்த்துச் சொல்லுங்க சூரி சார்! :)

    ReplyDelete
  32. //ஸ்வாமி ஓம்கார் said...
    மாதவி பந்தலில் வேதத்தின் கண்ணை வைந்து அலங்கரித்ததற்கு நன்றி//

    :)
    வாங்க ஸ்வாமி.
    வேதத்தின் கண் வைத்தது ஒரு வகையில் ஆத்ம அலங்காரம் தான்! :)

    //1. அறிவியலில் பெளர்ணமி அமாவசை சார்ந்த ஆய்வு அதிகமாக இல்லை. ஆனால் சந்திரன் பூமியும் விலகி செல்லும் பொழுது பெளர்ணமியும் இணையும் பொழுது அமாவாசையும் இருப்பதால் கிரகணங்களும் அதை சார்ந்து நடக்கும்//

    அறிவியலில் இந்த விலகிச் செல்லை apoge/perigee என்று வகைப்படுத்துவார்கள்

    //2. சந்திரன் - சூரியன் பூமியிலிருந்து ஒரே தூரத்தில் இல்லை. பேருந்தில் செல்லும் பொழுது அருகில் இருக்கும் வீடும் தூரத்தில் இருக்கும் பெரிய மரமும் ஒரே அளவில் தெரிவது போல//

    சரி தான்! ஆனால் மரம் நெருங்க நெருங்கப் பெரிதாகும் இல்லையா?
    இங்கு பெரும்பாலும், நிலவு, பூமிக்கு அண்மையோ தூரமோ, இரு நிலைகளில் இருந்தாலும்...ஒரே அளவில் தெரிவது...அந்த 400 மடங்கு-ன்னு மேற்சொன்ன அறிவியல் விளக்கத்தின் அடிப்படையில் தான்!

    //3. பூமியின் மேலே அதிக தூரம் செல்ல செல்ல நிழல் விழும் இடமும் நிழலின் அளவும் குறையும். பாரா ஜம் செய்யும் மனிதனின் நிழல் பூமியை நெருங்கும் பொழுது தான் தெரியும்.//

    சரியே!

    //4. துணைக்கோள் இருக்கும் அனைத்து கிரகத்திற்கும் கிரகணம் உண்டு. சனிக்கு 13 துணைக்கோள்கள். அங்கே 13 நாட்கள் அமாவாசை மற்றும் பெளர்ணமி. வருடத்திற்கு அனேக கிரகணங்கள். புரோகிதர்கள் அங்கே இருந்தால் தர்ப்பணம் செய்து அதிக வருமாணம் பார்க்கலாம்.//

    ஹா ஹா ஹா
    இப்படிப் புரோகிதர்களை எல்லாம் நிரந்தரமா நீங்களே சனி தசைக்கு ஆட்படுத்தலாமா? :))

    ReplyDelete
  33. //உங்களுக்கு ஒரு கேள்வி மஹாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொடுக்கும் பொழுது நிழல் கீழே விழுந்ததா :)//

    இல்லை! நிழல் விழவில்லை-ன்னே நினைக்கிறேன் ஸ்வாமி!
    விளக்கத்தை நீங்களே சொல்லுங்களேன்! அடியேனிடம் உடனடியாகக் கீதைத் தரவு இல்லை!

    பொதுவா ஒரு ஒளிக்கற்றைக்கு "எதிரில்" இன்னொரு ஒளிக்கற்றை வைத்தால், எதிரே விழ வேண்டிய நிழல், அந்த ஒளிக்குள்ளேயே அடங்கி விடும்! ஃபோட்டோ ஸ்டூடியோவில் இப்படித் தான் நிழல் விழாம பண்ணுவாய்ங்க!

    இங்க...
    கண்ணன் என்னும் ஆத்ம ஜோதி,
    உலகத்துக்கே பெரு விளக்கு, விளக்கொளிப் பெருமாள் என்னும் தீபப் பிரகாசன்,
    அருட் பெருஞ் சோதியானவன்.

    அதனால் அவன் ஒளி மேல் வேறெந்த ஒளி விழினும், அவன் நிழல் விழாது, விழுந்த ஒளியையே உள் வாங்கிக் கொள்ளும் என்பது அடியேன் தானாகக் கருதுவது! தரவுகள் இல்லை! :)

    தாங்கள் விளக்கிச் சொன்னால் இன்னும் சுவையும், நலமுமாய் இருக்கும்!

    ReplyDelete
  34. மஹாவிஷ்ணு விஸ்வரூப தரிசனம் கொடுக்கும் பொழுது நிழல் கீழே விழுந்ததா ?//

    ’திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய’
    வானில் ஒரே நேரத்தில் ஆயிரம் ஆதவர்கள் உத்தித்தது போலிருக்கும்
    ஓர் அற்புத வடிவம் என வர்ணிக்கப் பட்டுள்ளது. தவறான கேள்வி.

    தேவ்

    ReplyDelete
  35. // பொதுவா ஒரு ஒளிக்கற்றைக்கு "எதிரில்" இன்னொரு ஒளிக்கற்றை வைத்தால், எதிரே விழ வேண்டிய நிழல், அந்த ஒளிக்குள்ளேயே அடங்கி விடும்! //

    யுவர் அனாலஜி. இஸ் ஜஸ்ட் ப்யூடிஃபுல்

    இன்னொரு கான்டக்ஸ்டில்,
    அயம் ஆத்மா ப்ரும்மம் என அதர்வ வேதத்தில் சொல்லியிருப்பதன் உட்பொருள் இதுதானோ ?

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  36. //R.DEVARAJAN said...
    ’திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய’
    வானில் ஒரே நேரத்தில் ஆயிரம் ஆதவர்கள் உத்தித்தது போலிருக்கும்
    ஓர் அற்புத வடிவம் என வர்ணிக்கப் பட்டுள்ளது//

    நன்றி தேவ் சார்! இது கீதை வரிகளா?

    //தவறான கேள்வி//

    ஹிஹி!
    ஸ்வாமி ஓம்கார் என்னைப் போல பசங்களுக்கு ஒழுங்காத் தெரியுதா-ன்னு டெஸ்ட் பண்ணிப் பார்க்க கேட்டாரு-ன்னே நினைக்கிறேன்! :)

    ReplyDelete
  37. @சூரி சார்!
    //யுவர் அனாலஜி. இஸ் ஜஸ்ட் ப்யூடிஃபுல//

    he he ! dankees :)

    //இன்னொரு கான்டக்ஸ்டில்,
    அயம் ஆத்மா ப்ரும்மம் என அதர்வ வேதத்தில் சொல்லியிருப்பதன் உட்பொருள் இதுதானோ ?//

    அயம் ஆத்மா ப்ரும்மம் - என்றால் என்ன? பொருள் சொல்லி விளக்குங்களேன்!

    ReplyDelete
  38. //கிரகண காலத்தில், கோயில் நடையைச் சார்த்தி வைப்பார்கள்!
    இது ஏதோ மூட நம்பிக்கைக்காகவோ, கிரகணத்துக்குப் பயந்து கொண்டோ செய்வது அல்ல! :)
    //

    அப்போ எதுக்குங்க கிரகணம் முடிஞ்சதுக்கப்புறம் சுத்தம் பண்ணி ஸ்பெஷல் பூஜையெல்லாம் பண்ணி தோஷம் கழிக்கிறாங்க. நீங்க சொல்றதும் இதுவும் உதைக்குதே!

    ReplyDelete
  39. திவி ஸூர்யஸஹஸ்ரஸ்ய
    பவேத் யுகபத் உத்திதா !
    யதி பா:ஸத்ருசீ: ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்யமஹாத்மந:!!
    (கீதை 11/12)

    ”பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே” என்று
    பேரருளாளனின் ஆவிர்பாவத்தை ஸ்வாமி தேசிகன் விவரிப்பது இன்னும் சுவையானது.

    தேவ்

    ReplyDelete
  40. //ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கிரகணப் பதிவையும் ஒருகா வாசித்து விடுங்கள்! மூட நம்பிக்கையான பழக்கங்களை அதிகம் சொல்லாது இயல்பாக எழுதியுள்ளார்! :)//

    பின்வரும் வரிகள் உங்களுக்கு மூடநம்பிக்கையாகத் தெரியவில்லையா?

    "/கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். /"


    "/ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது./"

    இந்த 'சித்தி'ன்னா என்னதுங்க நெடுந்தொடரா?

    "/முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். /"

    இது மூடநம்பிக்கை இல்லீங்களா?

    "/சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது./"

    இது எப்படிங்க?!!!

    சூரியன், பூமி, சந்திரன் - இவை தோன்றிய காலத்திலிருந்தே இந்த கிரகணமும் நடந்து வருகிறது. ஆதிமனிதன் இந்த மாதிரி பரிகாரங்களையெல்லாம் கடைபிடித்தா வாழ்ந்தான்.

    அருமையாக தகவல்களைத் திரட்டி எழுதுகிறீர்கள். இயற்கையில் நிகழும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் பூர்வமாக அணுகுங்க பாஸூ. ஏன் ஆன்மீகத்துடன் சேர்த்து குழப்புகிறீர்கள்?

    ReplyDelete
  41. //ஊர்சுற்றி said...
    அப்போ எதுக்குங்க கிரகணம் முடிஞ்சதுக்கப்புறம் சுத்தம் பண்ணி ஸ்பெஷல் பூஜையெல்லாம் பண்ணி தோஷம் கழிக்கிறாங்க. நீங்க சொல்றதும் இதுவும் உதைக்குதே!//

    வாங்க ஊர்சுற்றி! தோஷமா? அந்தந்த நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் பண்ண வேணும் என்பது ஆலயம் சார்ந்தது அல்ல! ஜோதிடம் சார்ந்தது!
    இந்திய இறையியலில் பல துறைகளும் ஒன்றோடு ஒன்று கலந்து இருப்பதால், ஏதாச்சும் ஒன்னு மூட நம்பிக்கையா உங்களுக்குத் தோனிச்சினா, உடனே மொத்தமும் வேஸ்ட்-ன்னு முடிவுக்கு வந்துடறாங்க சில பேரு!

    நான் சொன்னது ஆலய நடைமூடல்-தியானம் பற்றி மட்டுமே!
    தோஷ நிவர்த்தி பற்றி அல்லவே!

    கழுவித் தள்ளுதல் என்பது ஆலயங்களில் ஒவ்வொரு சந்தியிலும் பண்ணுவது தான்! வைகறை, உச்சிக்காலம், மாலை-ன்னு எப்பமே செய்வாங்க! கிரகணம் (கரவணத்தின்) போது, சந்தி என்பது தற்காலிகமாக மறைந்து தோன்றுவதால், இந்தக் கழுவித் தள்ளுதல்!

    மேலும் கிரகண காலக் கதிர் வீச்சு பற்றி இப்போது விஞ்ஞானிகளும் பேசத் துவங்கி உள்ளார்கள்! அவர்கள் என்ன சொல்றாங்க-ன்னும் கேட்போம்!

    ReplyDelete
  42. //R.DEVARAJAN said...
    ”பகலோன் பகல் விளக்காகப் பரஞ்சுடர் தோன்றியதே” என்று
    பேரருளாளனின் ஆவிர்பாவத்தை ஸ்வாமி தேசிகன் விவரிப்பது இன்னும் சுவையானது//

    சூப்பரு! விளக்கொளிப் பெருமாளின் திவ்ய தேசத்தில் தோன்றிய தேசிகர் "பரஞ்சுடர்" பற்றிப் பேசுவது தான் எத்தனை பொருத்தம்!

    இன்னிக்கி காலையில் பேருந்தில் வரும் போது, உங்க கிட்ட இன்னொன்னும் கேட்கணும்-ன்னு நினைச்சேன்!

    * ஆதியும் அந்தமும் இல்லா அருட் பெருஞ் சோதியை
    * அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
    * ஜோதியே சுடரே தூயொளி விளக்கே
    என்று சைவம் பேசும் அளவுக்கு, வைணவம்/பாசுரங்கள் "ஜோதி" பற்றிப் பேசுகிறதா?

    தோற்றமாய் நின்ற "சுடரே" துயில் எழாய் என்று ஜோதி-ன்னு சொல்லாம, தூய தமிழில் "சுடர்"-ன்னு சொல்கிறாள் கோதை!
    ஆனால் இந்த ஜோதி ரூபம் என்பது சைவம் பேசும் அளவுக்கு வைணவம் பேசுகிறதா என்று குறிப்பு தர முடியுமா? :)

    ReplyDelete
  43. //ஊர்சுற்றி said...
    //ஸ்வாமி ஓம்கார் அவர்களின் கிரகணப் பதிவையும் ஒருகா வாசித்து விடுங்கள்! மூட நம்பிக்கையான பழக்கங்களை அதிகம் சொல்லாது இயல்பாக எழுதியுள்ளார்! :)//

    பின்வரும் வரிகள் உங்களுக்கு மூடநம்பிக்கையாகத் தெரியவில்லையா?

    "/கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். /"

    "/ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? ./"//

    ஹா ஹா ஹா
    இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது! ஸ்வாமி ஓம்கார் அவர்கள் தான் வந்து சொல்ல வேணும்!

    நான் //மூட நம்பிக்கையான பழக்கங்களை "அதிகம்" சொல்லாது//-ன்னு மட்டும் தானே அவரைப் பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன்?

    //இந்த 'சித்தி'ன்னா என்னதுங்க நெடுந்தொடரா?//

    ஹிஹி! மந்திர சித்தி-ன்னா உங்களுக்கு சீரியல் சித்தி ஞாபகம் வருதா? ஹைய்யோ ஹைய்யோ :)

    //"/முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். /"

    இது மூடநம்பிக்கை இல்லீங்களா?//

    கிரகண காலத்தில் அந்த அற்புதமான நேரத்தை அக/புற ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளாமல் வழக்கம் போல் உண்பதும் உறங்குவதும் வேண்டாம் என்பது தான் அடிப்படை!
    நான் முன்பே சொன்னது போல், பலதும் இறையியலில் கலப்பதால், நோக்கம் நீர்த்து, வெற்றுச் சம்பிரதாயம் முன்னிடம் பிடித்துக் கொள்கிறது!

    //அருமையாக தகவல்களைத் திரட்டி எழுதுகிறீர்கள்.//

    நன்றி!

    //இயற்கையில் நிகழும் இந்த நிகழ்ச்சிகளை அறிவியல் பூர்வமாக அணுகுங்க பாஸூ.//

    அப்படித் தான் அணுகுகிறேன்!
    அதனால் தான் பலர் அதிகம் அறியாத தமிழ்ச் சொல்லும் கொடுத்து இருந்தேன்!

    நல்ல அறிவியலும் நல்ல ஆன்மீகமும் ஒன்றொக்கொன்று முரணானவையே அல்ல என்பது என் ஆழமான கருத்து!
    இரண்டுமே தேடல் சார்ந்தவை!
    இரண்டுக்கும் நோக்கம்: மானுடத்தை வளப்படுத்துவதாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  44. சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதிமூர்த்தி என்றால் அளவாகுமோ

    சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்து முடிவில் பெரும் பாழே ஓ
    சூழ்ந்து அதனில் பெரிய பர நன்மலர் சோதீ ஓ

    நம்மாழ்வார்

    ’சுடர் மிகு சுருதி’ – சுடர் என்னும் சொல்லைத் திருவாய் மொழியிலும் காண்கிறோம்.

    மேலும் பல இருக்கக் கூடும்; திருமுறைகளின் அளவு பெரிது. அவற்றில் ’சோதி’ பயன்பாடு மிகுந்திருக்க வாய்ப்புள்ளது.

    தேவ்

    ReplyDelete
  45. //R.DEVARAJAN said...
    ’சுடர் மிகு சுருதி’ – சுடர் என்னும் சொல்லைத் திருவாய் மொழியிலும் காண்கிறோம்//

    நன்றி தேவ் சார்!
    முடிச் சோதியாய் நின் முகச் சோதி மலர்ந்ததுவோ
    அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
    என்ற பாசுரம் இப்ப தான் ஞாபகம் வந்துச்சி! :)

    //திருமுறைகளின் அளவு பெரிது. அவற்றில் ’சோதி’ பயன்பாடு மிகுந்திருக்க வாய்ப்புள்ளது.//

    ஆமாம்!
    மொத்தம் 4000 பாசுரம் தான்!
    திருமுறைப் பதிகங்களோ மொத்தம் 18349! சோதி என்னும் சொற் பயன்பாடு அதிகம் இருக்க அதுவும் ஒரு காரணம்!

    சொல்லின் எண்ணிக்கையை மட்டுமே வைத்துச் சொல்லி விட முடியாதல்லவா? அப்படிப் பார்த்தால் "பெருமாள்" என்ற சொல் நாலாயிரத்தில் ஒரு இடத்தில் கூட இல்லையே! ஹா ஹா ஹா! :)))

    எல்லாம் மால் என்றும் மாயோன் என்றும் கண்ணன் என்றும் தானே இருக்கு!

    ReplyDelete
  46. //அப்படிப் பார்த்தால் "பெருமாள்" என்ற சொல் நாலாயிரத்தில் ஒரு இடத்தில் கூட இல்லையே! ஹா ஹா ஹா! :)))//

    பெருமாளே என்ற சொல்
    பிரபந்தத்தில் இல்லை !!!
    நானே,
    தங்களது
    முன் ஒரு பதிவில், மாயோன்
    புகழ்பாடும் அச்சொல் = திருப்
    புகழில் உள்ளது என நீங்கள்
    பெருமையுடனுரைத்தபோது
    சொல்ல எண்ணியதுதான் !


    அவரவர் போற்றும் தெய்வத்தை
    அவரவர் உணர்ந்தவாறு
    சொல்வதும்
    வர்ணிப்பதும்
    இயல்பு தானே !
    நிற்க .
    எங்காளு என்ற சொல்லும்
    அந்த வகைதானோ ?

    இன்னொரு நிற்க.
    அயம் ஆத்மா பிரும்மா எனும்
    அதர்வ வேத வாக்கியத்தை
    ஒரு நிழற்பதிவில் விளக்குவதா !!??
    ஒளியில் வாதிடுவோம்.
    அதுவரை காத்திருப்போம்.

    //he he ! danke

    என்னது புரியலையே !
    நான் ஒரு ட்யூப் லைட்.


    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  47. கிரகண காலத்தில் செய்யப்படும் தியானமும் ஜபமும் யோகமும் பல மடங்கு பயன் தரவல்லவையா? சரி தான். அந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அதுவும் பல மடங்கு பயன் தந்திருக்குமா? தூங்கி காலையில எழுந்த பின்னாடி தான் தெரியும் கிரகணம் வந்து போயாச்சுன்னு. :-)

    ReplyDelete
  48. @ சூரி சார்!
    //he he ! dankees
    என்னது புரியலையே !//

    Dankees என்பது Thanks என்பதின் "இளசு" வடிவம்! :)

    //பெருமாளே என்ற சொல்
    பிரபந்தத்தில் இல்லை !!!
    நானே,
    தங்களது
    முன் ஒரு பதிவில், மாயோன்
    புகழ்பாடும் அச்சொல் = திருப்
    புகழில் உள்ளது என நீங்கள்
    பெருமையுடனுரைத்தபோது
    சொல்ல எண்ணியதுதான் !//

    ஹிஹி!
    அருணகிரி திருப்புகழில் பெருமாளே என்று பாடப் பலத்த காரணம் இருக்கு! அவர் காலத்தில் பெருமாளே என்றால் திருமாலே என்று மக்களிடம் பலமாகப் பரவி விட்ட நிலையில்,

    இலக்கியத்தில் அதைக் கொண்டு சேர்க்க அருணகிரியார் நடத்திய தமிழ்ப் பெரும் ஆராய்ச்சி தான் அது! அந்தப் பதிவில் தான் "தொடரும்"-ன்னு போட்டிருந்தேனே! :)

    ReplyDelete
  49. //குமரன் (Kumaran) said...
    கிரகண காலத்தில் செய்யப்படும் தியானமும் ஜபமும் யோகமும் பல மடங்கு பயன் தரவல்லவையா?//

    ஆமாம் குமரன்! :)

    //சரி தான். அந்த நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் அதுவும் பல மடங்கு பயன் தந்திருக்குமா?//

    கண்டிப்பா! :))
    சில பேர் தூக்கமே வராம காதல் நோயால் அவஸ்தைப் படுவாங்க!
    ஆனால் கிரகண காலத் தூக்கத்தால் உங்களுக்குப் படுத்தவுடன் சட்டுனு தூக்கம் வந்துரும் பாருங்க! :)

    ReplyDelete
  50. //ஆமாம்!
    மொத்தம் 4000 பாசுரம் தான்!
    திருமுறைப் பதிகங்களோ மொத்தம் 18349! சோதி என்னும் சொற் பயன்பாடு அதிகம் இருக்க அதுவும் ஒரு காரணம்!//

    சிவனுக்கு அவதாரம் கிடையாது, அதனால் ஜோதியாகக் காட்டுகிறார்கள்.

    ReplyDelete
  51. //கழுவித் தள்ளுதல் என்பது ஆலயங்களில் ஒவ்வொரு சந்தியிலும் பண்ணுவது தான்! வைகறை, உச்சிக்காலம், மாலை-ன்னு எப்பமே செய்வாங்க! கிரகணம் (கரவணத்தின்) போது, சந்தி என்பது தற்காலிகமாக மறைந்து தோன்றுவதால், இந்தக் கழுவித் தள்ளுதல்!//

    ஆனால், தோஷம் கழிக்கவே கழுவித்த தள்ளுகிறோம் என எல்லா கோவில் நிர்வாகமும் பேட்டி கொடுக்கிறார்கள். மக்களுக்கும் அதையேதான் சொல்லுகிறார்கள். அதனால்தான் கேட்டேன்.

    //அப்படித் தான் அணுகுகிறேன்!
    அதனால் தான் பலர் அதிகம் அறியாத தமிழ்ச் சொல்லும் கொடுத்து இருந்தேன்!
    //
    அறிவியல் பூர்வமாக அணுகுவதற்கும் தமிழ்ப் பெயர் கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு விளங்கவில்லை.

    //நல்ல அறிவியலும் நல்ல ஆன்மீகமும் ஒன்றொக்கொன்று முரணானவையே அல்ல//
    நல்ல-கெட்ட ன்னு சொல்றீங்க. என்னக்கென்னவோ, கெட்ட ஆன்மீகமே அதிகமாய் ஆக்கிரமித்துள்ளதாகத் தோன்றுகிறது.

    நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து இதுபோன்ற புதுவிஷயங்களைப் பற்றி எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களுக்காக எப்போதும் காத்திருக்கிறோம்.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP