Sunday, August 02, 2009

மதுரையம்பதி: சந்தியா வந்தனம்! சந்திப்பு வணக்கம்!

சந்தியா வந்தனமா? பந்தல்ல ஏதுடா இது வம்பு-ன்னு யாரும் பயந்து போயிறாதீக! காதல் படத்துல பரத் கூட நடிச்சாங்களே "சந்தியா"...அந்த சந்தியாவை வந்தனம் பண்ணப் போறீயா கேஆரெஸ்-ன்னும் கேட்டு கீட்டு வைக்காதீக! :)

அடியேன் "மெளலி அண்ணா" என்று அப்போது அழைத்த, இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கும், எப்போதும் அழைக்கப் போகும்...
நம்ம மதுரையம்பதி-சந்திரமெளலி அவர்களின் பிறந்த நாள் இன்று! (Aug-02)

அன்னையின் புகழ் பாடுபவர்-ன்னா ஆடி மாசம் தானே பொறக்கணும்!
அடியேனும் தோழி பிறந்த மாசத்தில் தானே அண்ணனைக் கலாய்க்கணும்! :)
மெளலி அண்ணாவின் பிறந்த நாள் சிறப்புப் பதிவே இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மெளலி அண்ணா! இன்னுமொரு நூற்றாண்டு இரும்! :)

அப்படியே, அண்ணி, அன்னிக்கு உங்க வீட்டில் எனக்கு-ன்னு பண்ணாங்களே...
காரவடை, அடை அவியல்...அதை இன்னிக்கும் பண்ணச் சொல்லுங்க! தட்டில் வைக்காம, அதே போல் நறுக்கு வாழையிலையில் வைத்துத் தரச் சொல்லுங்க! :))


சந்தியா வந்தனம்-ன்னா என்னா-ன்னு மேலோட்டமா பார்க்கலாமா? ஆனா...அதுக்கும் முன்னாடி...

மாதவிப் பந்தலில் இறைவனைப் "பாவிப்பது" பற்றியே அதிகம் பேசப்படுகிறது!
* கர்மாக்கள் பின்னே! பகவான் தான் முன்னே!-ன்னு
* பந்தலில் அடிக்கடிச் சொல்வதால்....
கர்மாக்கள் எல்லாம் தேவையே இல்லை! குப்பையில் போடுங்கள்! - என்று அர்த்தமா? அப்படி-ன்னு எடுத்துக் கொள்ளப் படுகிறதா என்ன? :)

அட, பாவனா-வையெல்லாம் பாவிக்கறோம், வால் பேப்பரில் போட்டு வைக்கிறோம், அவிங்கள பார்த்திரா விட்டாலும் நம்ம உறவுக்காரப் பொண்ணு போல பாவிக்கறோம்! கனவுல எல்லாம் வராங்க! :)
பாவனா-வையெல்லாம் பாவிக்க முடியும் போது, பகவானைப் பாவிக்க முடியாதா என்ன? :)

முடியும்! முடியும்! என்ன......கொஞ்சம் பழகிப் பார்க்கணும்! பழகினாத் தானே காதல் கத்திரிக்காய் எல்லாம்? சூப்பர் ஸ்டார், சிவாஜி படத்துல சொல்லுறாப் போல, "பழகலாம், வரீங்களா?" :)

பகவானை "உண்மையாக" பாவிப்பது என்பதும் கிட்டத்தட்ட காதலிப்பது போலத் தான்!
* சட்டப்படியான திருமணங்கள் உண்டு!
* ஆனால் எந்த ஊரிலும் "சட்டப்படியான காதல்"-ன்னு இருக்கா? :)


அதனால் சட்டங்களைச் "சற்று" பின்னுக்குத் தள்ளி,
பகவானை மட்டுமே முன்னுக்குத் தள்ளும் போது....


காதலை ஏற்றுக் கொள்ளாத வீடுகளில் கொஞ்சம் கோவம் வருது! :)
அது போலத் தான் ஆன்மீகப் பெரியவர்கள்/பதிவர்கள் அடியேன் மீது கொண்டுள்ள சிலச்சில கோவங்களும்! :))


ஆனா, நீங்களே சொல்லுங்க! இந்தக் கேஆரெஸ் பய புள்ள என்னைக்குத் தான் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கான்? சாஸ்திரத்தை மதிச்சி நடந்து இருக்கான்? :)
யார் மதிச்சாலும் மதிக்கா விட்டாலும், இவன் மதிக்க வேணாமா? மத்தவங்க ஆயிரம் பேசட்டும்! ஆனா இவன்...இவனே இப்படியெல்லாம் பேசலாமா? :)

ஆன்மீகத்தை "வேற வேற மாதிரி" எழுதி வம்பு பண்ணறான்!
மனசுல பெரிய கோகுலத்துக் கண்ணன்-ன்னு நினைப்போ?
இந்திரனுக்குப் பண்ணி வந்த பூசையை நிறுத்தி, மலைக்கு பண்ணச் சொன்ன நினைப்போ?
மலையைக் குடையாப் பிடிக்க முடியுமா இவனால? குடை--மிளகாயைக் கூடப் புடிக்க முடியாது! ஆமாம்! :)

* கர்மாக்கள் பின்னே! பகவான் தான் முன்னே!-ன்னு
* பந்தலில் அடிக்கடிச் சொல்வதால்....

கர்மாக்கள் எல்லாம் தேவையே இல்லை! தூக்கிக் குப்பையில் போடுங்கள்! - என்று அர்த்தம் இல்லை!

செய்யற தப்பையெல்லாம் செஞ்சிட்டு, உடன் பிறவாச் சகோதரிகள் போல...பரிகாரம் பண்ணிக்கலாம் என்ற மனோபாவம்....பரிகாரம் என்ற பேரில்...யாகம், ஹோமம், துணியை நெருப்பில் போட்டு பொசுக்கல்-ன்னு
"சுயநலமான கர்மாக்களை" மட்டுமே பல பதிவுகளிலும் சுட்டிக் காட்டுவது! இவற்றுக்குப் பேரு = காம்யார்த்த கர்மாக்கள்!
இவற்றை ஒரு நல்ல சரணாகதன் செய்ய மாட்டான் என்பது அடியேன் சொல் அல்ல! ஆசார்யர்கள் வாக்கு!!

ஆனால் நித்ய கர்மாக்களும், நைமித்திக கர்மாக்களும் மிகவும் அவசியமானவை!
அதையும் புரிந்து கொள்ள வேணும்! அதிலும் இறைவனுக்கே முதலிடம்! வெறும் சடங்குக்கு அல்ல!

* காதல் கணவனே முக்கியம்! = இறைவன்!
* வீட்டுக் கடமைகள் அவன் நலத்துக்கே! ஒப்புக்குச் செய்வதில்லை! = நித்ய கர்மாக்கள்!
* பேராசையான வைர நகை, ஆடித் தள்ளுபடி ஷாப்பிங் = காம்யார்த்த கர்மாக்கள்!

புரிந்ததா? புரிந்ததா? புரிந்ததா? :)
இப்போ நித்ய கர்மாவான சந்தியா வந்தனம்-ன்னா என்னா-ன்னு மேலோட்டமா பார்க்கலாமா? Once again, Happy Birthday Mouli Anna! :) )



சந்தி-ன்னா சந்திப்பு! இரு எதிர் வேளைகள் சந்திப்பது ஒரு சந்தி! சூரியன் நிலை மாறும் நிலை!
* காலைச் சந்தி = பிராதக் காலச் சந்தியா வந்தனம்
* மதியச் சந்தி = மாத்யான்னிகம்
* மாலைச் சந்தி = சாயம் சந்தியா வந்தனம்

இந்த மூன்று வேளையும் சந்தியா வந்தனம் அதாவது சந்திப்பு வணக்கம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர விதி! சாஸ்திரமா? அப்படீன்னா?

அதாச்சும் சாஸ்திரம் சாஸ்திரம்-ன்னு தனியா ஒரு புத்தகம் எல்லாம் இல்லை! வேதம், உபநிடதம், இன்னும் பல நூல்களில் சொல்லியுள்ள விதிமுறைகளை ஒன்னாத் திரட்டி வைச்சா அதுக்குப் பேரு சாஸ்திரம்!
சாசனாத் இதி சாஸ்திரஹ! = Code of Conduct! இதைச் செய் என்று சாசனம் செய்வது சாஸ்திரம்!

எதுக்குச் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்? ஏன்?

வேதத்தில் சொல்லி இருக்கு! விதிச்சி இருக்கு! அதனால் செய்யணும்!
யஜூர் வேதம், தைத்ரீய ஆரண்யகத்தில், இரண்டு அனுவாகையில் சொல்லி இருக்கு! இது சாஸ்திர விதி! - அப்படின்னு இதைச் சிலர் விதிக்கப்பட்ட ஒன்றாய்ச் சொல்லலாம்!
உண்மை தான்! ஆனால் விதி-ன்னாலே கதி கலங்கி ஓடுபவர்கள் தான் இந்தக் காலத்தில் நிறைய! Break the Rules! :)

பாவம்! மனுசனைச் சொல்லியும் குற்றமில்லை! ஆபிசில் விதி, ரோட்டில் விதி, அட வீட்டில் கூட விதியே-ன்னு வாழறவன்!
விதிச்சபடியே லொங்கு லொங்கு-ன்னு வாழறவன் கிட்ட போய்,
இறைவன் கிட்டேயும் விதிகள்-ன்னு பேசும் போது, அவனால சத்தியமா முடியலை!
Frozen Idli சாப்பிட்டுச் சாப்பிட்டு, அம்மா கையால நல்ல இட்லி கெடைக்காதா-ன்னு உட்காரும் போது, விதியை நீட்டினா? :))

எதுக்குச் சந்தியா வந்தனம் செய்ய வேண்டும்? விதியாக இல்லாமல், விவரமாகப் பார்க்கலாமா?

சூரிய வணக்கம் என்பது தொன்று தொட்டு பலரும் செய்து வருவது தான்! ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்! அதுவே சந்தியா வந்தனம்!

கிராமத்தில் வேளாளர்களும், விவசாயிகளும், இருட்டிலேயே கழனிக்குப் போய், உழ ஆரம்பிப்பார்கள்! அப்போது அவர்கள் கண் முன்னே பொல பொல-ன்னு விடியும் போது அவர்களும் சூரிய வணக்கம் செய்வார்கள்!
என்ன, அவர்கள் செய்வது கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்! கைகளால் கண்களைக் குவித்து, சூரிய நாராயணா என்றே வாய் விட்டுச் சொல்லுவார்கள்! அதையே தான் வேதமும் சொல்கிறது!

சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தே! நாராயணஹ!
சரசிஜாசனா, சாம்னி விஷ்டஹ!
கேயூரவான்! மகர குண்டலவான்! கிரீடே! ஹாரீ! ஹிரண்மய வபுர்!
தித சங்கு சக்ரஹ!
சங்கு சக்ர கதாபாணே, துவாரகா நிலைய அச்சுத
கோவிந்த புண்டரீகாட்சா, ரக்ஷமாம் "சரணாகதம்"!

இது தினப்படி சூரிய வணக்கம் செய்யும் போது, சைவ/வைணவ, சாதி/மத பேதமின்றி அனைவரும் சொல்வது!
தினப்படி செய்யும் சந்தியா வந்தனமே, "சரணாகதம்" என்றல்லவோ பேசுகிறது!



சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தே! நாராயணஹ!
= சூரிய மண்டல மத்தியில் இறைவன் எழுந்தருளுகிறான்!
அவன் எழுந்தவுடன், உயிர்களும் எழுகின்றன! உலக இயக்கமே ஆரம்பிக்கிறது!

* ஓரறிவு ஈரறிவுச் செடிகளுக்கான Photosynthesis முதல்,
* ஐந்தறிவு ஆறறிவுக்கான உணவு தேவைப்பட ஆரம்பிக்கிறது! இரவில் இல்லாத உடை கூட பகலில் தேவைப்படுகிறது! :)

இப்படிப் பிரத்யட்சமான ஒரு இயக்கம் துவக்கம்! அதுவே சந்தியா வந்தனம்!

வெளியில் ஒளி மயமாக எழும் சூரியனை, நமக்குள்ளே உள் வாங்கிக் கொள்ளும் முறை தான் சந்தியா வந்தன முறைகளில் சொல்லப்பட்டிருக்கு!
* ரஜோ குண, தமோ குணங்களில் தூங்கிக் கிடந்த உயிர்,
* இன்றைய பொழுதுக்கு எழுந்து கொள்ளும் போது,
* அதுக்கு ஆற்றல், புத்துணர்ச்சி, நினைவு, இயக்கம் என்று அனைத்தும் தரவல்லவை இந்தச் சூரிய வணக்கம்!

சூரிய வணக்கம்-ன்னா, அய்யோ, சூரியனே ஒரு கோள் தானே, அதையா போயிக் கும்பிடுவாங்க?-ன்னு விபரீதப் பகுத்தறிவு பேசக் கூடாது! :)
அதான் வெறுமனே சூரியன்-ன்னு சொல்லாம, அந்த மண்டலத்தில் உலகத்துக்கே உயிர்ப்புச் சக்தியாய் இருக்கும் இறைவன் = சவித்ரு மண்டல மத்யவர்த்தே என்று சொன்னார்கள்!



சந்தியா வந்தனம் என்பது அந்தணர்களுக்கு மட்டும் தானே? மற்றவர்கள் செய்வாங்களா என்ன?

மற்றவர்களும் செய்வார்கள்! ஆனால் அவரவர் வழிகளில்! உழவர்கள் செய்வதைச் சொன்னேன்! அனைவருக்கும் பொதுவானது தான்! அந்தணர்கள் செய்வதில் இருந்து வழிமுறைகள் மாறுபட்டு இருக்குமே தவிர, மற்றபடி ஒன்றுமில்லை!

ஆழ்வார்கள் நாலாயிரமே சந்தியாவந்தனத்தில் தான் தொடங்குகிறது! வெய்ய கதிரோன்-வையம் தகளியாய் என்றே துவங்குகிறார்!

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று
= தமஸோ மா ஜ்யோதிர் கமய!

சூரியன், இந்திய ஜோதிட நூல்களில், உடல் நலத்தின் தேவதையாகவும் வைக்கப்பட்டு உள்ளான்! அதனால் ஞாயிறு மூலமான வழிபாட்டுக்கு இன்னும் ஏற்றம்! மேலும் சந்தியா வந்தனத்திலேயே பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியும் இதனாலேயே வைத்துள்ளார்கள்!

கையில் நீர் எடுத்துக் கொண்டு, துதிகளைச் சொல்லி, நீரினைத் தூவி அவனுக்கே அளிப்பது என்பது சந்தியில் வழக்கம்! = இதுக்கு அர்க்கியம்-ன்னு பேரு!
காயத்ரி என்னும் மந்திரத்தை ஜபித்து, இந்த அர்க்கியம் கொடுக்க வேண்டும்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல, அவன் தந்த நீரினை அவனுக்கே தருதல்!

நீர் இன்று அமையாது உலகு! எனின் யார்யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு!


இப்படி எல்லாரும் நீரைச் சூரியனை நோக்கித் தூவுதல், சூரியனைப் பிடிக்க வரும் மந்தேகர் என்னும் இராட்சசர்களை விரட்டவே என்று ஒரு கதை இருந்தாலும்...
உண்மையான பொருள் என்னன்னா....மந் தேஹம் = ம + தேஹம் = நம் உடம்பு!
நம் உடம்பில் இரவில் தங்கி விட்ட ரஜோ தமோ குணங்களை விரட்டி,
சத்வ குண சம்பன்னான சூரியனை/இயங்கும் ஆற்றலை
நம்முள் உள் வாங்கிக் கொள்வதே தாத்பர்யம்! = அகச் சோதி!


ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் சந்தியா வந்தனம் செய்வார்கள்!
கிராமத்தில் ஒரு வகை-ன்னா, அந்தணர்களுக்குள்ளேயே விதம் விதமான வகைகள்! நிறைய வேறுபடும்! இருந்தாலும் அடிப்படை ஒன்று தான்! அதன் முக்கியமான கட்டங்களை மட்டும் பட்டியல் இடுகிறேன்!


சந்தியா வந்தன நிலைகள்:

1)
நீர் பருகல்: ஆசமனம்
மூச்சுப் பயிற்சி: பிராணயாமம்
உறுதி மொழி: சங்கல்பம்

2)
சரணாகதி: சாத்விகத் தியாகம்
நீரால் தூய்மை: புரோக்ஷணம்

3)
நீர் அளித்தல்: அர்க்கியம் என்னும் அர்க்கியப் பிரதானம்

4)
நன்றி உரைத்தல்: கேசாவாதி தர்ப்பணம்

5)
துதிகள்: காயத்ரி ஜபம்
ஓம்:
பூர் - புவ - ஸ்வஹ = சக்தி கொடுப்பதுவே! துன்பம் அழிப்பதுவே! இன்பம் தருவதுவே!
தத் - சவிதுர் - வரேண்யம் = அப்படிப்பட்ட ஒளியே! சிறப்பே!
பர்கோ - தேவஸ்ய - தீமஹி = வினை அறுப்பதுவே! தெய்வம் அதுவே! தருவதுவே!
தியோ - யோ - ந - ப்ரசோதயாத்: = சிந்தையை, எதுவே, எங்களுக்குத் தூண்டுவதுவே!
உனக்கு வணக்கம்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

(குறிப்பு: திருப்பாவையில் இது ஒவ்வொன்றுக்கும் ஒரு வரி அமைத்து உள்ளாள்! அதனால் தான் வேதம் அனைத்துக்கும் வித்து - கோதைத் தமிழ்!
எப்படி வேதத்துக்கு வித்து = இந்தக் காயத்ரியோ
அப்படி தமிழ் வேதத்துக்கு வித்து = கோதைத் தமிழ்!
இன்னொரு நாள் சொல்கிறேன்! இல்லையேல் விரும்புவோர் இங்கேயே முயன்று பாருங்கள்! :)

6)
இறைவன் இருப்பை உணர்தல்: உப ஸ்தானம்

7)
சந்தி கால தேவதைகளுக்கு வணக்கம்: சந்தியாதி தேவதா வந்தனம்
முன்னோர் வழிவழி உரைத்தல்: அபி வாதனம்
திசை காத்தல்: திக் வந்தனம்

8)
மீண்டும் துதிகள்: காயத்ரி ஜபம்
மீண்டும் நீர் அளித்தல்: அர்க்கியம் என்னும் அர்க்கியப் பிரதானம்

9)
நிறைவு: இறைவனின் தலங்களை மனத்தில் எண்ணிப் பார்த்துக் கொள்ளுதல்! உருவம் கடந்த இறைவன், நம் பொருட்டு, நமக்காகத் தலங்களில் எழுந்து இருக்கும் நன்றிக்காக எண்ணிப் பார்க்க வேண்டும் என்று, உடையவர் இதைச் சந்தியா வந்தனத்தில் விதியாகப் பின்னாளில் சேர்த்து விட்டார்! ஆனால் இது வைணவர்கள் மட்டுமே சொல்வது! அனைவருக்கும் பொதுவல்ல!

ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாசம் = திருவரங்கம்
ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் = திருமலை
ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோ ஜ்வல பாரிஜாதம் = திருக் கச்சி
ஸ்ரீ-சம் நமாமி, சிரசா யது சைல தீபம்! = யது கிரி என்னும் மேலக் கோட்டை!

எழுந்து கொள்ளல்:
அன்றாட கடமைகளுக்கு எழுந்து கொள்ளல்! அதற்கு முன் சவித்ரு மண்டல மத்ய வர்த்தனான இறைவனை உள் வாங்கிக் கொள்ளுதல்!

பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே, கர்த்தவ்யம் தைவ மான்னிஹம்!
கோசலை குமாரா ஸ்ரீராமா, பொழுது புலர்கின்றதே!
தெய்வீகத் திருச் சடங்குகள் செய்ய, எழுந்தருள் புருஷோத்தமா!

மேலே சொன்னவை சந்தியா வந்தனத்துக்கான அறிமுகம் மட்டுமே!
சந்தி for Dummies-ன்னு வச்சிக்கோங்களேன்! :)
விதியே-ன்னு செய்யாமல், மதியே-ன்னு செய்தால் தான் சிறப்பு!


முன்பே சொன்ன வண்ணம்,
காதல் கணவனான எம்பெருமான் உள்ளம் உவக்குமாறு நடத்தல் முக்கியம்! = இறைவன் திரு உள்ள உகப்பு!
ஒவ்வொரு செயலிலும், ஒன்றை ஆதரித்தாலோ, எதிர்த்தாலோ...எதைச் செயினும்...
இதைச் செய்தால் எம்பெருமான் திருமுகம் உவக்குமா? வாடுமா?
என்ற கேள்வியை நம்மிடமே கேட்டுக் கொண்டால்...

சந்தியா வந்தனங்கள் ஜொலிக்கத் துவங்கி விடும்!
அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே! - என்ற திருப்புகழ் சொல்லி, இந்தப் பிறந்தநாள் பதிவை நிறைவு செய்கிறேன்! ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!

44 comments:

  1. முதலில் எம் அருமை மெளலி அண்ணாவிற்கு இந்த இனிய பிறந்தநாளில் வாழ்த்துக்களுடன் பாதம் பணிகிறேன்.

    ReplyDelete
  2. அன்பு மௌலி, ஆரோக்கியம்,அன்பு,பக்தி எல்லாம் செழிக்க சதாயுஷ்மான் பவதி !!என்று வாழ்த்துகிறேன்.

    இனியவருக்குப் பிறந்தநாள் சொன்ன, (ரவி) கண்ணனுக்கும் வாழ்த்துகள்.


    பேரனுடன் உட்கார்ந்து அவனுக்காக சந்தி மந்திரங்கள் சொல்லி எனக்கே மனப்பாடம் ஆகும் நிலையில் நீங்கள் சந்தியாவந்தனம் பற்றிச் சொல்லப் புகுந்தது நல்லதொரு அடையாளம்.

    கதிரவனும், காயத்ரியும் நம்முடன் எப்போதும் நிலை பெறட்டும்

    ReplyDelete
  3. //அப்படியே, அண்ணி அன்னிக்கு உங்க வீட்டில் எனக்கு-ன்னு பண்ணாங்களே...
    காரவடை, அடை அவியல்...அதை இன்னிக்கும் பண்ணச் சொல்லுங்க! தட்டில் வைக்காம, அதே போல் நறுக்கு வாழையிலையில் வைத்துத் தரச் சொல்லுங்க! :))//

    உங்க சார்பா நான் போய் சாப்புடுறேன்... எப்புடி இருந்துச்சுன்னு ஒரு பதிவே போட்டுர்றேன் :)

    ReplyDelete
  4. //ஆனா, நீங்களே சொல்லுங்க! இந்தக் கேஆரெஸ் பய புள்ள என்னைக்குத் தான் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கான்? சாஸ்திரத்தை மதிச்சி நடந்து இருக்கான்? :)//

    நாங்க சொல்றத விட உங்க அண்ணா.. பிறந்த நாள் காணும் மெளலி அண்ணா சொன்னாத்தான் சரியா இருக்கும்

    ReplyDelete
  5. மௌலி அண்ணாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

    அருமையான விளக்கம் ரவி. மிக எளிமையாக சரியாக விளக்கம் எழுதியிருக்கிறீர்கள். சில கருத்துகள் அங்கிங்கே மாறுபடலாம் (அபிவாதனம் என்பது பரிச்சயம் சொல்லி வணக்கம் சொல்வதுதான். முன்னோர் வழியெல்லாம் கிடையாது. தந்தைப் பெயர் கூட வராது அதில்). ஆனால் சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள். வழக்கம் போல கலக்கல்ஸ்.

    சந்தியா தேவதைகளின் துதிகளையும் தமிழ்படுத்திப் போடுங்களேன். சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  6. //Sridhar Narayanan said...
    அருமையான விளக்கம் ரவி. மிக எளிமையாக சரியாக விளக்கம் எழுதியிருக்கிறீர்கள்//

    நன்றி அண்ணாச்சி! எளிமையே இனிமை :)

    //சில கருத்துகள் அங்கிங்கே மாறுபடலாம் (அபிவாதனம் என்பது பரிச்சயம் சொல்லி வணக்கம் சொல்வதுதான். முன்னோர் வழியெல்லாம் கிடையாது. தந்தைப் பெயர் கூட வராது அதில்)//

    முன்னோர் வழிவழி உரைத்தல்-ன்னு சொன்னது கோத்ரம், சூத்ரம் சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்றாங்க இல்லையா, அதைக் குறிப்பிட்டேன்!

    அபிவாதயே
    அகஸ்திய, தர்த்யாயுத, செளமவ
    த்ரயர்ஷேய ப்ரவரான்வித
    அகஸ்திய கோத்ர
    த்ரயன சூத்ர
    சாம சாகா அத்யாயீ
    ஸ்ரீ...சர்மா நாமாஹம் அஸ்மிபோ:

    இந்த வழிவழியைச் சொன்னேன் :)

    //சந்தியா தேவதைகளின் துதிகளையும் தமிழ்படுத்திப் போடுங்களேன். சிறப்பாக இருக்கும்//

    இதுக்கெல்லாம் பெரியவங்க உதவி வேணும்! நானே செய்து பழக்கம் இல்லாத ஒன்று! கேள்வி ஞானம் மட்டுமே! :))

    ReplyDelete
  7. //Raghav said...
    பிறந்தநாளில் வாழ்த்துக்களுடன் பாதம் பணிகிறேன்//

    Mouli anna, Take the 501 rupees please! :)

    ReplyDelete
  8. //வல்லிசிம்ஹன் said...
    அன்பு மௌலி, ஆரோக்கியம்,அன்பு,பக்தி எல்லாம் செழிக்க சதாயுஷ்மான் பவதி !!என்று வாழ்த்துகிறேன்//

    ததாஸ்து! ததாஸ்து!

    //இனியவருக்குப் பிறந்தநாள் சொன்ன, (ரவி) கண்ணனுக்கும் வாழ்த்துகள்//

    ஹிஹி! எனக்கு எதுக்கு வல்லீம்மா வாழ்த்து? சரி வச்சிக்கறேன்! அடை அவியல் சாப்பிடக் கிடைக்கும்! :)

    //பேரனுடன் உட்கார்ந்து அவனுக்காக சந்தி மந்திரங்கள் சொல்லி எனக்கே மனப்பாடம் ஆகும் நிலையில் நீங்கள் சந்தியாவந்தனம் பற்றிச் சொல்லப் புகுந்தது நல்லதொரு அடையாளம்//

    ஆகா! நான் சொன்னது ஒன்லி for dummies! சும்மா அறிமுகப் படலம் மட்டுமே!

    //கதிரவனும், காயத்ரியும் நம்முடன் எப்போதும் நிலை பெறட்டும்//

    அப்படியே ஆகட்டும்!
    ஆதித்யம் ஹ்ருதயம் புண்யம்!

    ReplyDelete
  9. //Raghav said...
    //அப்படியே, அண்ணி அன்னிக்கு உங்க வீட்டில் எனக்கு-ன்னு பண்ணாங்களே...
    காரவடை, அடை அவியல்...அதை இன்னிக்கும் பண்ணச் சொல்லுங்க! தட்டில் வைக்காம, அதே போல் நறுக்கு வாழையிலையில் வைத்துத் தரச் சொல்லுங்க! :))//

    உங்க சார்பா நான் போய் சாப்புடுறேன்... எப்புடி இருந்துச்சுன்னு ஒரு பதிவே போட்டுர்றேன் :)//

    பதிவெல்லாம் ஒன்னும் வேணாம்! பார்சல் அனுப்பி வை ராசா! அது போதும்! :)

    ReplyDelete
  10. //Raghav said...
    //ஆனா, நீங்களே சொல்லுங்க! இந்தக் கேஆரெஸ் பய புள்ள என்னைக்குத் தான் சொன்ன பேச்சைக் கேட்டிருக்கான்? சாஸ்திரத்தை மதிச்சி நடந்து இருக்கான்? :)//

    நாங்க சொல்றத விட உங்க அண்ணா.. பிறந்த நாள் காணும் மெளலி அண்ணா சொன்னாத்தான் சரியா இருக்கும்//

    ஹிஹி! அண்ணன் பிறந்தநாள் அதுவுமா அடியேன் வாயைக் கிண்டுறீங்களா? நோ கமென்ட்ஸ் :))

    மெளலி அண்ணா என்னைப் பத்தி எது சொன்னாலும் சரியாத் தான் இருக்கும்!

    ReplyDelete
  11. மெளலி சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

    நமக்கும் வந்தனத்துக்கும் ரொம்ப தூரம் தல...8 மணி ஆபிசுக்கு 7.20 எழுந்திருப்பேன். ஆனால் உங்கள் பகிர்வு அருமை ;)

    ReplyDelete
  12. Belated birthday wishes to Mouli Sir !
    //ஸ்ரீ ரங்க மங்கள நிதிம் கருணா நிவாசம் = திருவரங்கம்
    ஸ்ரீ வேங்கடாத்ரி சிகராலய காள மேகம் = திருமலை
    ஸ்ரீ ஹஸ்தி சைல சிகரோ ஜ்வல பாரிஜாதம் = திருக் கச்சி
    ஸ்ரீ-சம் நமாமி, சிரசா யது சைல தீபம்! = யது கிரி என்னும் மேலக் கோட்டை!//

    One should hear M.S sing this piece towards the end of "Bhavayaami Ragu Raamam...".Those ears are priveleged !!
    ~
    Radha

    ReplyDelete
  13. //பரத் கூட நடிச்சாங்களே "சந்தியா"...அந்த சந்தியாவை வந்தனம் பண்ணப் போறீயா கேஆரெஸ்-ன்னும் கேட்டு கீட்டு வைக்காதீக///
    குறும்புக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல!!!

    ReplyDelete
  14. //மெளலி அண்ணா" என்று அப்போது அழைத்த, இப்போதும் அழைத்துக் கொண்டிருக்கும், எப்போதும் அழைக்கப் போகும்...
    நம்ம மதுரையம்பதி-சந்திரமெளலி அவர்களின் பிறந்த நாள் இன்று//

    தனிமடல்ல சொல்லியாச்சுன்னலும் இங்கயும் வாழ்த்தறேன் மௌலியை!

    ReplyDelete
  15. //அவிங்கள பார்த்திரா விட்டாலும் நம்ம உறவுக்காரப் பொண்ணு போல பாவிக்கறோம்! கனவுல எல்லாம் வராங்க! :)
    பாவனா-வையெல்லாம் பாவிக்க முடியும் போது, பகவானைப் பாவிக்க முடியாதா என்ன? :)
    .....

    >>
    சந்தியா பாவ்னா அடுத்து தமனா தானே தம்பி?:)

    ReplyDelete
  16. //யார் மதிச்சாலும் மதிக்கா விட்டாலும், இவன் மதிக்க வேணாமா? மத்தவங்க ஆயிரம் பேசட்டும்! ஆனா இவன்...இவனே இப்படியெல்லாம் பேசலாமா? :)

    ஆன்மீகத்தை "வேற வேற மாதிரி" எழுதி வம்பு பண்ணறான்!
    மனசுல பெரிய கோகுலத்துக் கண்ணன்-ன்னு நினைப்போ?
    இந்திரனுக்குப் பண்ணி வந்த பூசையை நிறுத்தி, மலைக்கு பண்ணச் சொன்ன நினைப்போ?
    மலையைக் குடையாப் பிடிக்க முடியுமா இவனால? குடை--மிளகாயைக் கூடப் புடிக்க முடியாது! ஆமாம்! :)
    ///
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!

    ReplyDelete
  17. எல்லாம் சரி இந்த மந்திரங்கள் எல்லாம் ஏன் ஆண்களுக்கு மட்டுமே என்று
    இருக்கிறதுதான் எனக்குப்புரிவதில்லை
    யோகா வகுப்புபோய் இப்போல்லாம் நாங்களும் பிராணாயாமம் சூர்ய நம்ஸ்காரம்லம் செய்றோம்தான் ஆனாலும் இல்லங்களில் பெண்களுக்கு
    சந்தியாவந்தனம் காய்த்ரிஜபம்லாம் சொல்லிதரது இல்லை. ஒருவேளைஅதெல்லாம் சொல்லாமலே நாங்கள்ளாம் சூரியனா ஜொலிக்கிறோமோ என்னவோ போங்க:)

    ReplyDelete
  18. //Radha said...
    One should hear M.S sing this piece towards the end of "Bhavayaami Ragu Raamam...".Those ears are priveleged !!//

    ராதா
    ஸ்ரீ ரங்க புர விஹாரா-ன்னு பாட்டு ஆரம்பிக்கும் போதும் இதைப் பாடுவாங்க-ல்ல? அப்படியே உச்ச ஸ்தாயில? அம்மாடியோவ்!

    ReplyDelete
  19. //கோபிநாத் said...
    நமக்கும் வந்தனத்துக்கும் ரொம்ப தூரம் தல...8 மணி ஆபிசுக்கு 7.20 எழுந்திருப்பேன்.//

    ஹிஹி! நாங்க மட்டும் என்னவாம்? :)
    சந்தியா வந்தனத்தை மானசீகமாகவும் செய்யலாம்! சாத்திரத்திலும் அதுக்கு இடம் இருக்கு!

    எங்க குடும்பத்தில் யாருக்கும் இது பழக்கம் இல்லை என்றாலும், ஞாயிறு போற்றுதும் என்று சொல்வதில் தடையேதும் இல்லையே!

    //ஆனால் உங்கள் பகிர்வு அருமை ;)//

    நன்றி மாப்பி! :)

    ReplyDelete
  20. //ஷைலஜா said...
    எல்லாம் சரி இந்த மந்திரங்கள் எல்லாம் ஏன் ஆண்களுக்கு மட்டுமே என்று
    இருக்கிறதுதான் எனக்குப்புரிவதில்லை//

    மெளலி அண்ணா பதிவுல வந்து இப்படி என் வாயைக் கிண்டிக் கெளப்பி விடறீங்களே-க்கா! நியாயமா? :))

    //யோகா வகுப்புபோய் இப்போல்லாம் நாங்களும் பிராணாயாமம் சூர்ய நம்ஸ்காரம்லம் செய்றோம்தான்//

    யோகா வகுப்பில் சூர்ய நமஸ்காரம் உடலால் செய்வது! மந்திரத்தால் அல்ல அல்லவா? அதான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முறை-ன்னு கொஞ்சம் "ஜென்டிலா" சொல்லி இருந்தேன்! :)

    //ஆனாலும் இல்லங்களில் பெண்களுக்கு
    சந்தியாவந்தனம் காய்த்ரிஜபம்லாம் சொல்லிதரது இல்லை//

    காயத்ரி மாதாவே பெண் சொரூபம் தானே!
    நான் சொல்வதை விட, இதுக்கு சாஸ்திரம் தெரிஞ்ச பெரியவர்கள் வந்து சொன்னா நல்லா இருக்கும்!

    //ஒருவேளைஅதெல்லாம் சொல்லாமலே நாங்கள்ளாம் சூரியனா ஜொலிக்கிறோமோ என்னவோ போங்க:)//

    தோடா! இப்படியும் கெளம்பிட்டீங்களா? :))

    ReplyDelete
  21. //Once again, Happy Birthday Mouli Anna! :) )//

    ayushmaan bhava
    (if maduraiyampathi is less than 68 years old)
    otherwise,
    abhivadhaye, sadhya, sankrithya, gowravitha, thrayarishiya, apasthamba suthraha, yajus sakadhyayay, subbarathna namaham
    asmi bohu
    subbu rathnam.

    ReplyDelete
  22. திரு கேஆர் எஸ்,

    சந்திர மெளலிக்கு எனது ஆசிகள்.

    சந்தியாவந்தனத்தை பற்றிய தொகுப்பு அருமை.

    ஒரு சிறிய கேள்வி. பதிவில் சந்தியாவந்தனம் பற்றி எழுதி அதில் மஹாபெரியவர் மற்றும் வேறு ஒரு சன்யாசியின் படமும் இருக்கிறதே..?

    சன்யாசிகள் சந்தியாவந்தனம் செய்வார்களா?

    ReplyDelete
  23. இங்கு வாழ்த்திய கே..ஆர்.எஸ், ராகவ், வல்லியம்மா,ஸ்ரீதர் அண்ணா, கோபிநாத், ஷைல்ஸக்கா, ராதா சார், சூரி சார், ஓங்கார் ஸ்வாமிகள் ஆகிய எல்லோருக்கும் நன்றிகள்.


    @ சூரி சார், உங்களைவிட நான் மிகவும் சிறியவன். நீங்க 'வாடா' என்று கூப்பிடும் வயது தான். :)

    ReplyDelete
  24. @ ஸ்வாமி ஓங்கார் அவர்களே!

    ஸ்ரீவைஷ்ணவ சன்யாஸிகளுக்கு (எஞோபவிதம் தரித்திருப்பதால்) சந்த்யாவந்தனம் இருக்கும் என்றே நினைக்கிறேன். எனக்கு சரியாகத் தெரியவில்லை.


    ஸ்மார்த்த சன்யாஸிகளுக்கு சந்த்யாவந்தனம் கிடையாது. ஆனால் அவர்களுக்கு த்ரிகால அனுஷ்டானங்கள் உண்டு. அதில் அவர்களுக்கும் பிரம்மச்சாரி, க்ருஹஸ்தர்கள் போன்று ஐக்யானுஸ்சந்தானம்,அர்க்யம், நியாஸாதிகள் போன்றவை உண்டு. நமக்கு காயத்ரீ ஜபம் போல அவர்களுக்கு ப்ரணவ ஜபமும், மஹா வாக்ய ஜபமும் (சன்யாஸ தீக்ஷையின் போது குருவால் உபதேசம் செய்விக்கப்படுவது) உண்டு என்று தெரிகிறது.


    இவற்றைத் தவிர, சன்யாஸி பீடாதிபதியாக இருப்பாராகில், பஞ்சாக்ஷர, ஷோடசி போன்ற மந்த்ர ஜபங்கள் செய்வது சன்யாஸ ஆஸ்ரமத்தை அளித்த ஆசார்யார் உத்தரவின்படியும், அப்பீடத்தின் வழிமுறைப்படியும் செய்வதாக அறிகிறேன்.

    ReplyDelete
  25. திரு மதுரையாம்பதி,

    உங்கள் கருத்து சரியே.

    ஆனாலும் சன்யாசிகள் காயத்திரியை ஜபிப்பதில்லை. சந்தியாவந்தனத்தின் மூலம் காயத்திரியே.

    //ஐக்யானுஸ்சந்தானம்,அர்க்யம், நியாஸாதிகள்//

    இவை அனைத்தும் உண்டு. மேலும் அவர்கள் மஹாமிருத்யஞ்சயத்தை காயத்திரிக்கு சமமாக செய்வார்கள்.

    அவர்களில் லக்‌ஷியம் முக்தி அல்லவா?

    ReplyDelete
  26. //மதுரையம்பதி said...
    இங்கு வாழ்த்திய கே..ஆர்.எஸ், ராகவ், வல்லியம்மா,ஸ்ரீதர் அண்ணா, கோபிநாத், ஷைல்ஸக்கா, ராதா சார், சூரி சார், ஓங்கார் ஸ்வாமிகள் ஆகிய எல்லோருக்கும் நன்றிகள்.//

    நல்வரவு மெளலி அண்ணா! :)
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  27. //ஸ்வாமி ஓம்கார் said...
    திரு கேஆர் எஸ்,
    சந்திர மெளலிக்கு எனது ஆசிகள்.
    சந்தியாவந்தனத்தை பற்றிய தொகுப்பு அருமை//

    வணக்கம் ஸ்வாமி!
    நன்றி! பிறந்தநாள் தொகுப்பா இருக்கட்டுமே-ன்னு இட்டேன்! :)

    //ஒரு சிறிய கேள்வி. பதிவில் சந்தியாவந்தனம் பற்றி எழுதி அதில் மஹாபெரியவர் மற்றும் வேறு ஒரு சன்யாசியின் படமும் இருக்கிறதே..?//

    படத்தில் காஞ்சிப் பெரியவர் செய்வது அனுஷ்டான கடன், கரையோரத்தில் திருநீறு குழைப்பது போன்றது தான்!

    //சன்யாசிகள் சந்தியாவந்தனம் செய்வார்களா?//

    மெளலி அண்ணா பதில் சொல்லிட்டாரு-ன்னே நினைக்கிறேன்!
    வைணவ சந்நியாசகளுக்கு சந்தியா வந்தனம் முதலான கர்மாக்கள் உண்டு!
    அவர்கள் பூனூல் தரிப்பதால் மட்டும் இதைச் செய்யவில்லை! சாதி வித்தியாசங்களை மீறி, நித்ய கர்மாக்களை இறைவனின் அவதாரங்களே செய்வதால், வியாசர் முதலான ரிஷிகள் செய்வதால், தாங்களும் செய்கிறார்கள்!

    சைவத் துறவிகள், பூனூல் உட்பட முழுமையும் துறப்பதால், சந்தியா வந்தனம் செய்வதில்லை! ஆனால் அர்க்கியம் கொடுக்க வேண்டும்! தீட்சையின் போது பெற்ற மகா வாக்கியத்தையும் ஜபிக்க வேண்டும்!

    இவர்கள் காயத்ரி ஜபிப்பதில்லை! சொல்லிக் கொடுப்பதோடு சரி! மிருத்யுஞ்சய மகா மந்திரம் ஜபிப்பார்கள்!

    * காயத்ரி - நல்லபடியான உலக வாழ்க்கைக்கு தேவையான ஆதார சக்திகளை வேண்டும் மந்திரம்!
    * மகா மிருத்யுஞ்சயமோ - பந்தங்களை விடுவிக்கச் சொல்லி வேண்டும் மந்திரம்!

    அதனால் முன்னது இல்லறவாசிகளும்/ரிஷிகளும், பின்னது துறவிகளும் கைக்கொள்கிறார்கள்!

    ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
    சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
    ஊர்வாருகமீவ "பந்தனாம்"
    மிருத்யோர் மோக்ஷிய மாம்ருதாத்

    என்று பந்தனத்தில் இருந்து விடுவிக்கச் சொல்வதால் துறவிகள் கைக்கொள்ளும் ஜப மந்திரம் ஆகிறது!

    ReplyDelete
  28. //ஷைலஜா said...
    //பரத் கூட நடிச்சாங்களே "சந்தியா"...அந்த சந்தியாவை வந்தனம் பண்ணப் போறீயா கேஆரெஸ்-ன்னும் கேட்டு கீட்டு வைக்காதீக///

    குறும்புக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல!!!//

    அதெல்லாம் அவ்ளோ சீக்கிரம் என்னைத் திருத்த முடியாதுக்கா! மெளலி அண்ணாவே கை விட்டுட்டாரு! :))

    ReplyDelete
  29. //ஷைலஜா said...
    சந்தியா பாவ்னா அடுத்து தமனா தானே தம்பி?:)//

    ஹிஹி!
    இதையெல்லாம் எப்படி நான் பப்ளிக்கா சொல்வேன்? :)
    சந்தியா பாவ்னா அடுத்து தமனா எல்லாம் சும்மா ஜாலிக்குத் தான்!
    என்னிக்கி இருந்தாலும் காப்பு மறந்தறியேன்! என் ஆசை முருகனே என்றிருப்பேன்! :)

    ReplyDelete
  30. //ஷைலஜா said...
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!//

    ஆகா!
    என் இனிய கண்ணன் எவ்ளோ-ன்னு தான் தாங்குவான்? எல்லாரும் அவனையே பழி சொல்லி அவன் மேலயே பாரம் ஏற்றினால் எப்படி?
    பாரதப் போரை வென்று தந்தவனுக்கு பரிசா என்ன கெடைச்சது? ஒன்னுமே இல்ல! சாபம் தான் கெடைச்சுது! :(

    அவன் பாவம்-க்கா! வேணாம்! அவன் என்னிக்கும் நல்லா இருக்கணும்!
    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கேஆரெஸ்-க்கே!

    ReplyDelete
  31. //sury said...
    ayushmaan bhava
    (if maduraiyampathi is less than 68 years old)//

    ha ha ha
    mouli anna is not 68 years old....but naan ellam vizhunthu kumbidum aLavukku old thaan... :))

    //otherwise,
    abhivadhaye, sadhya, sankrithya, gowravitha, thrayarishiya, apasthamba suthraha, yajus sakadhyayay, subbarathna namaham
    asmi bohu
    subbu rathnam.//

    enna ennikki pantha-la ore abhivaathaiye irukku? :)
    enakke tamashaa irukku! panthal thaangaathu saami thaangathu :)

    ReplyDelete
  32. ஒரு விஷயத்தை நல்லபடி "மாற்ற" வேண்டும் என்று மனப்பூர்வமாகச் செயல்பட்டுப் பாருங்கள்,
    எதிரிகள் புற்றீசல் போல் கிளம்புவார்கள் :)


    வயது தெரியவில்லை. கும்புட்டுக்றேன்.


    உறவாய் தொடர நினைப்பவன்


    தேவியர் இல்லம். திருப்பூர்.




    http://texlords.wordpress.com

    texlords@aol.in

    ReplyDelete
  33. // சைவத் துறவிகள், பூனூல் உட்பட முழுமையும் துறப்பதால், சந்தியா வந்தனம் செய்வதில்லை! ஆனால் அர்க்கியம் கொடுக்க வேண்டும்! தீட்சையின் போது பெற்ற மகா வாக்கியத்தையும் ஜபிக்க வேண்டும்!

    இவர்கள் காயத்ரி ஜபிப்பதில்லை! சொல்லிக் கொடுப்பதோடு சரி! மிருத்யுஞ்சய மகா மந்திரம் ஜபிப்பார்கள்!//

    பொதுவாக சொல்லப்போனால், துறவிகள் என்ன ஜபிக்கிறார்கள் என்பது அவரவர் மட சம்பிரதாயத்தைப் பொருத்து உள்ளது. அனாதி தர்மமாகிய வைதீக மதத்திலே, பிரும்மசர்யத்தில் இருக்கும்பொழுதே சன்யாச தர்மத்தை
    மேற்கொள்ளும் ஒருவர், கெள்பீனம், கமண்டலம், தண்டம் , தண்டத்தில் ஒரு பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும்
    துணி முடிச்சு தவிர ஏனைய எல்லாவற்றினையும் துறந்துவிடுகிறார் என்பதால், மற்ற ஆசிரமங்களுக்கு
    விதிக்கப்பட்டுள்ள கர்மாக்கள் சன்யாசிகளை பந்திப்பதில்லை, குறைந்த பட்சம் பந்திப்பதாக அவர்கள் எடுத்துக்
    கொள்வதில்லை.

    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரும்மசர்யம், க்ருஹஸ்த, வானபிரஸ்த ஆகிய ஆஸ்ரமங்களின் ஒரு எக்ஸ்டென்ஷன்
    ஆகவே சன்யாசிகள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கர்ம மார்கத்தில் உள்ள விதிகளைக் கடைப்பிடிக்கின்றனர்.

    சைவத்தில் துறவிகள் பற்றி, திரு கண்ணபிரான் சொல்வது பொதுவாக சரியே. இருப்பினும், ஒன்று சொல்லவேண்டும்.
    அங்க ந்யாஸம் ( அங்கங்களைத் தொட்டுக் கொண்டு கர்மங்கள் செய்வது ) கர ந்யாஸம் ( கரங்களை க்கூப்பிக்கொண்டு
    செய்வது ) இவையெல்லாம் இத்துறவிகளுக்கு இல்லை என்றே நினைக்கின்றேன். ஐம்புலன்கள் தரும் இன்ப துன்பங்கள், (உடல்) புத்தி, மனஸ் ஆகியவற்றினைத் துறந்ததாகக் கொள்ளப்படும் இவர்களுக்கு ஒரு காயத்ரி
    ஜெபம் மட்டுமே உண்டு என நினைக்கிறேன். அது ஹம்ஸ காயத்ரி எனப்பெயர்.


    " ஹ" என்று மூச்சினை உள்ளே இழுப்பதும், இழுத்த மூச்சினை உள்ளே இருத்துவதும், பின், " ஸ" என்று இருத்திய‌
    மூச்சினை வெளியே விடுவதுமாகிய ஹம்ஸ காயத்ரி இவர்கள் செய்கிறார்கள். மற்ற ஆஸ்ரமத்தைச் சார்ந்தவர்
    செய்யும் காயத்ரி ஜெபங்கள் இவர்களுக்குத் தேவையில்லை. மேலே சொன்னது போல, அங்க ந்யாஸங்கள், கர‌
    ந்யாஸங்கள், சன்யாஸிக்கு கிடையாது. ஸ ந்யாஸி எனின் ஸத் தை தொட்டவன். ஸத் எது? பூரணத்வம் எதுவோ
    அது. அந்த ஸத் என்பது ஒன்றினையே இதய ஆகாசத்தில் இருத்தி இருப்பதால், மற்ற ஆசரணங்கள் இல்லை.

    துவக்கத்திலேயே சொன்னது போல, துறவிகள் என்ன செய்கிறார்கள் , என்ன செய்யவேண்டும் என்பது அந்தந்த‌
    மட சம்பிரதாயங்களை ப் பொருத்ததே. ஒரு காமன் டினாமிடேரர் இருப்பதாகத் தோன்றவில்லை.

    திவா போன்றவர்கள், காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள், மேற்கொண்டு விளக்கமளித்தால்,
    விவாத மேடை இன்னும் பிரகாசமாகும்.

    சுப்பு ரத்தினம்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  34. //ஜோதிஜி. தேவியர் இல்லம். said...
    வயது தெரியவில்லை. கும்புட்டுக்றேன்.//

    ஹா ஹா ஹா
    வயது தெரியணுமா? புகைப்படம் பாருங்க! அது மூனு வருசத்துக்கு முன்னாடி எடுத்தது! :)
    கும்பிடலா? அச்சோ! ரெண்டாவது சொன்னீங்க பாருங்க! உறவாகவே தொடருங்க! நன்றி! :)

    ReplyDelete
  35. //sury said...
    திவா போன்றவர்கள், காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள், மேற்கொண்டு விளக்கமளித்தால்,
    விவாத மேடை இன்னும் பிரகாசமாகும்//

    திவா சார் பயணத்தில் இருக்காரு போல! நீங்க சொன்னதுக்கு அப்புறம் மடல் அனுப்பிச்சேன்! அவரு பயண பிசி :)

    //பொதுவாக சொல்லப்போனால், துறவிகள் என்ன ஜபிக்கிறார்கள் என்பது அவரவர் மட சம்பிரதாயத்தைப் பொருத்து உள்ளது//

    மிகவும் உண்மை!
    ஒவ்வொரு மடத்துக்கும் சம்பிரதாயம் மாறுபடும்! அடிப்படை ஒன்னா இருந்தாலும் கூட!

    //எல்லாவற்றினையும் துறந்துவிடுகிறார் என்பதால், மற்ற ஆசிரமங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மாக்கள் சன்யாசிகளை பந்திப்பதில்லை, குறைந்த பட்சம் பந்திப்பதாக அவர்கள் எடுத்துக்
    கொள்வதில்லை//

    சரியே!

    //வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பிரும்மசர்யம், க்ருஹஸ்த, வானபிரஸ்த ஆகிய ஆஸ்ரமங்களின் ஒரு எக்ஸ்டென்ஷன்
    ஆகவே சன்யாசிகள் இருக்கிறார்கள். இவர்களில் பலர் கர்ம மார்கத்தில் உள்ள விதிகளைக் கடைப்பிடிக்கின்றனர்//

    கர்ம யோகம் வைணவத்தில் அதிகமோ? :))
    ஸ்மார்தத்தில் ஞான யோகம் அதிகமோ? :)

    //துறந்ததாகக் கொள்ளப்படும் இவர்களுக்கு ஒரு காயத்ரி
    ஜெபம் மட்டுமே உண்டு என நினைக்கிறேன். அது ஹம்ஸ காயத்ரி எனப்பெயர்//

    உம்...இதுவும் அனைவரும் கைக்கொள்வதில்லை! தியான மார்க்கத்தில் உள்ள துறவிகள் தான் ஹம்ச காயத்ரி அதிகம் கைக்கொள்வது! ஸோ-ஹம் என்னும் மூச்சு வழி தியானம்...ஸோ என்னும் இறைவனை உள்ளுக்கு இழுத்து, ஹம் என்னும் நம்மை வெளி விட்டு விடுவது...
    ஓம் ஹம்ஸாய வித்மஹே
    பரம ஹம்ஸாய தீமஹி
    தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்:

    //ஸ ந்யாஸி எனின் ஸத் தை தொட்டவன். ஸத் எது? பூரணத்வம் எதுவோ//

    ஸ + ந்யாஸி அருமையான விளக்கம் சூரி சார்!

    ReplyDelete
  36. Vanakkam sir,
    சங்கு சக்ர கதாபாணே, துவாரகா நிலைய அச்சுத
    கோவிந்த புண்டரீகாட்சா, ரக்ஷமாம் "சரணாகதம்"!
    as I remember well, this words are from Dhrowpathi. Mandehar explantion is very good,at the same time this prayer is for the entire world.
    Happy birthday to you Mouli sir.
    Arangan arulvanaga.
    anbudan,
    k.srinivasan.

    ReplyDelete
  37. என்ன இரவி? சூரிய பிரபை வாகன படம் கிடைக்கவில்லையா? சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தேன்னு போட்டுட்டு சந்திர பிரபை வேணுகோபாலன் படத்தைப் போட்டிருக்கீங்க?

    ReplyDelete
  38. //குமரன் (Kumaran) said...
    என்ன இரவி? சூரிய பிரபை வாகன படம் கிடைக்கவில்லையா? சத சவித்ரு மண்டல மத்ய வர்த்தேன்னு போட்டுட்டு சந்திர பிரபை வேணுகோபாலன் படத்தைப் போட்டிருக்கீங்க?//

    ஹிஹி! வாங்க குமரன்! நலம் தானே?
    அண்ணாவுக்கு வாழ்த்து சொல்றத விட்டுப்போட்டு கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீய? :)

    ReplyDelete
  39. //குமரன் (Kumaran) said...
    என்ன இரவி? சூரிய பிரபை வாகன படம் கிடைக்கவில்லையா?//

    அதாங்க இது! :)
    அது சூரியப் பிரபை தான்!
    திருமலையில் வெள்ளியில் பண்ணி இருக்காங்க! அதான் வெள்ளையா இருக்கு!

    காலையில் சூரியப் பிரபை வாகனம்!
    இரவில் சந்திரப் பிரபை வாகனம்!
    பகல் வெளிச்சம் இருக்கு பாருங்க! :)

    ReplyDelete
  40. //Anonymous said...
    Vanakkam sir,
    சங்கு சக்ர கதாபாணே, துவாரகா நிலைய அச்சுத
    கோவிந்த புண்டரீகாட்சா, ரக்ஷமாம் "சரணாகதம்"!
    as I remember well, this words are from Dhrowpathi//

    ஆமாங்க ஸ்ரீநிவாசன் சார்! நீங்க சொல்லுறது சரியே!

    //Mandehar explantion is very good,at the same time this prayer is for the entire world//

    :)
    குமரன் அளவோ மெளலி அண்ணா அளவோ ராகவ் அளவோ இல்லாட்டாலும், ஏதோ கொஞ்சம் கொஞ்சம் சம்ஸ்கிருதம் தெரியும்! :)

    ReplyDelete
  41. அதான் இதுன்னு தொடங்குன உடனே செந்தில் கவுண்டமணி ஜோக்கு சொல்லத் தொடங்கிட்டாரான்னு தோணிச்சு. ஆனா இன்னும் தெளிவான படத்தைத் 'தரவா' அனுப்பிச்சு வச்சு வாயை அடைச்சிட்டீங்க.

    ReplyDelete
  42. //குமரன் (Kumaran) said...
    ஆனா இன்னும் தெளிவான படத்தைத் 'தரவா' அனுப்பிச்சு வச்சு வாயை அடைச்சிட்டீங்க//

    ஹிஹி! வாயை அடைக்குறது எல்லாம் எப்பமே அப்பப்ப பண்ணுறது தானே? :)))

    நீங்க தான் வாழ்த்தைக் கூடச் சொல்லாம, வந்ததும் வராததுமா, கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீய! மீள் நல்வரவு நக்கீரர் அவர்களே! :)

    பை தி வே
    பதிவில் படத்தைக் கொஞ்சம் உத்துப் பாத்தீங்கன்னா, ஏழு குதிரையும், அதை ஓட்டும் அருணனும், சூரியத் தட்டுத் தேரும் தெரியுது பாருங்க! :) உங்க நண்பன் சூரியச் சிவத்துக்கே அல்வா-வா? :))

    ReplyDelete
  43. வாழ்த்து தானே?! இன்னிக்கு மட்டுமா என்னைக்குமே சொல்லிக்கிட்டே இருக்கலாமே. அன்னைக்கே அண்ணன்கிட்ட பாட்டு பாடி வாழ்த்து சொல்லிட்டேனே. அதான் இங்கே மதுரைக் கணக்காயனார் திருமகனார் முன்னாடி வந்துட்டார்.

    ReplyDelete
  44. belated wishes to Mouli.
    very nice and informative post.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP