Monday, November 02, 2009

கோவிந்த கோளரி - நரசிம்ம அவதாரமா அல்லது ”சிம்ம” அவதாரமா ?


பெரியாழ்வாருக்கு யசோதை நினைவுகள் தொடர்கின்றன ...

தவழ ஆரம்பித்த கண்ணன், தனது இரண்டு கைகளையும், முழந்தாள்களையும் தரையில் ஊன்றி, தலையை நிமிர்த்திக் கொண்டு ஆடுகின்றான்.

கண்ணனின் இந்த விளையாட்டை, கற்பனை யசோதை ரசிக்கின்றாள்!

(பிள்ளைத் தமிழில், குழந்தையின் இந்த விளையாட்டுக்கு, 'கீரை' எனும் பதம் உண்டு. பெரியவர்கள் தாலாட்டுப் பாட, குழந்தை இவ்வாறு ஆடுவதற்கு, 'செங்கீரை ஆடுதல்' என்ற பெயரும் உண்டு. சிலர் இதை, 'கீரைக்குத் தண்ணீர் இறைத்தல்' என்பர்).

கண்ணனை, 'மீண்டும் ஒரு முறை ஆடு!' என்று கெஞ்சுகின்றாள், 'உய்ய உலகு' என்ற திருமொழி மூலம்.

இதில் 2-ம் பாசுரத்திலும், 11-ம் பாசுரத்திலும் நரசிம்மனைப் பற்றிப் பேசுகிறாள்.

***

கோளரியின் உருவங் கொண்டு அவுணன் உடலம்*
குருதி குழம்பி எழக் கூருகிரால் குடைவாய்!*

மீள, அவன் மகனை மெய்ம்மை கொளக் கருதி*

மேலை அமரர்பதி மிக்கு வெகுண்டு வர*

காள நன்மேகம் அவை கல்லொடு கால் பொழிய*

கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே!*

ஆள எனக்கொருகால் ஆடுக செங்கீரை*

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.
உய்ய உலகு - 1-6-2

'வலிமையுடைய சிங்க உருவம் கொண்டு, இரணியன் உடலில் இருந்து ரத்தம் பொங்கி எழும்படி, கூர்மையான நகங்களால் அவனை நீ குடைந்தாய்! மீண்டும், அவன் மகன் கூறியது உண்மை என்று நினைக்கும்படி.

தேவர்கள் தலைவனான இந்திரன் மிகவும் கோபம் கொண்டு, நன்கு கறுத்த மேகங்களைக் கொண்டு கல் (ஆலங்கட்டி) மழை, பலத்த காற்றுடன் பொழியச் செய்தான். அப்பொழுது கோவர்த்தன மலையைக் குடையாகக் கொண்டு, பசுக் கூட்டங்களைக் காத்தவனே! தலைவனே! எனக்காக மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக! வலிமை வாய்ந்த ரிஷபம் போன்றவனே! நீ மீண்டும் ஒருமுறை செங்கீரை ஆடுக!'

(கோள் - வலிமை; அரி - சிம்மம்; கூருகிர் = கூர் + உகிர் - கூர்மையான நகம்; மீள - மீண்டும்; காளம் - கருத்த; கால் - காற்று; வரை - மலை; காலிகள் - பசுக்கள்; ஆள - தலைவனே)

ஆழ்வார், வலிமை மிக்க 'நர-சிங்கம்' என்று குறிப்பிடாமல், வலிமை மிக்க சிங்கம் (அரி) என்று குறிப்பிட்டுள்ளது ஏன்?

***
தூணில் இருந்து வந்த எம்பெருமான் மனிதனாக வெளியே வந்தால், இரணியன் பெற்ற வரங்களின் படி, அவனை அழிக்க முடியாது. ஆக, இந்த அவதாரத்தின் முக்கிய அம்சமே, மனிதன் இல்லை - சிம்மம் தான்!


(அதே போல், முழுவதும் சிங்கமாக வந்தாலும் இரணியனை அழிக்க முடியாதே. இதற்கு விளக்கம் அளியுங்களேன்!)

எனவே, ஆழ்வார்கள் நரனை விட்டு அரியையே (சிங்கம்) அவதாரமாகப் பாசுரங்களில் குறிப்பிடுவர்.

'குடைவாய்!' என்கின்றார் - அது என்ன 'மீள'?

***

பிரகலாதன், இரண்டாவது முறையாக சத்தியம் செய்கின்றான் - இம்முறை, 'அரி எங்கும் உள்ளான்' என்று. இரணியன் 'இந்தத் தூணில் அரி இல்லை என்றால் உன்னை என் கையால் கொன்று விடுவேன்' என்று சொல்லி, தூணில் அடிக்க, சிம்மம் வெளி வந்து இரணியன் மார்பைப் பிளக்கிறது.

இதனை விவரிக்க ஆழ்வார், பாசுரத்தின் மூன்றாவது வரியில் 'மீள' எனும் வார்த்தையைப் பல விதமாக (மீண்டும், மறு பிறவி எடுத்தல், ஆபத்தில் இருந்து தப்பித்தல்) உபயோகப் படுத்தியுள்ளார்:

எம்பெருமான் இரணியன் மார்பைப் பிளக்கின்றார். இரணியன் உயிர் தரிக்கின்றான். இருந்தாலும் சந்தேகம்! எனவே, குடைகின்றார், மீள!

முனி குமாரர்களின் சாபத்தால் பூமிக்கு வந்து அசுரனாகப் பிறந்தவனே இரணியகசிபு. இறந்தால் தான் அவன் அந்தச் சாபத்தில் இருந்து மீள்வான்! எனவே, குடைந்தார், அவன் சாபத்தில் இருந்து மீள!



பக்தனான பிரகலாதன், பிறந்தது முதல் துன்பப் படுகின்றான்; இரணியனின் வதத்தால், பக்தன் இந்தத் துன்பத்தில் இருந்து மீள, குடைந்தார்!

நரசிம்மம் வெளி வரவில்லை என்றால் இரணியன் பிரகலாதனைக் கொன்று விடுவான். எனவே, பிரகலாதன் ஆபத்தில் இருந்து மீள, குடைந்தார்!

பிரகலாதன் இரணியனிடம், மீள (மீண்டும்) செய்த சத்தியத்தை உண்மையாக்கக் கருதி ('மெய்ம்மை கொளக் கருதி''), சிம்மம் வெளி வந்தது!

முதல் முறை மார்பைப் பிளந்ததும், ரத்தம் உறைந்து இருக்கின்றது. அதனால், இரணியனின் உள்ளத்தில் (மார்பில்) இருந்த வெறுப்பு மறையவில்லையாம்! அது மறையாவிட்டால் எப்படி அவனுக்கு மீள (மீண்டும்) வைகுந்தம் அளிப்பது?

இரணியனுடைய வெறுப்பு மறைய, அவன் மார்பைக் குடைந்தார், மீள!

'குருதி குழம்பி எழ''!

'மீள' என்ற ஒரே வார்த்தையினால், கிட்டத் தட்ட கதையையே சொல்லி முடித்து விட்டார் ஆழ்வார்!

(பக்தியைத் தவிர, இத்தகைய தமிழ் அழகாலும், பிரபந்தப் பாசுரங்கள் மற்ற கவிதைகளை விட மிக உயர்ந்து இருக்கின்றன)

பாசுரத்தின் அடுத்த நான்கு வரிகளையும் ஆராய்ந்து விடலாமா?

***

டையர்கள் இந்திரனுக்குப் பூஜை செய்ய பொருட்கள் சேர்க்கின்றனர்.


கண்ணன் அவர்களிடம், 'கோவர்த்தன மலையே புல்லும், தண்ணீரும், காற்றும், நிழலும், பழங்களும், காய்கறிகளும் நமக்குக் கொடுக்கின்றது. இந்திரனால் நமக்குப் பயன் ஒன்றும் இல்லை' என்கிறான்.

கோவர்த்தன கிரிக்கு அதிர்ஷ்டம்! இந்திரனுக்குக் கோபம்!

மேகங்களை, ஆய்ப்பாடியை வெள்ளத்தில் மூழ்கடிக்கச் சொல்கிறான்! காற்று, மின்னலுடன், கற்கள் ('கல்') போல் விழுந்தது, பலத்த மழை! (ஓஹோ! இது தான் 'அந்த 7 நாட்களோ'?).

'கல்லொடு கால் பொழிய' என்கின்றார் ஆழ்வார். காற்று எப்படிப் பொழியும்? உண்மையில், 'காலொடு கல் பொழிய' என்றல்லவோ இருக்க வேண்டும்?

மழையுடன், பலத்த காற்றும் வீசுகிறது! ஒரு வேளை, சாதாரண மழையை விட, பலத்த காற்றுடன் கூடிய மழை அதிகச் சேதம் விளைவிக்குமோ? இந்தச் சூழ்நிலைக்கு, 'கல்லொடு கால் பொழிய' என்ற சொற்றொடர் அழகு சேர்க்கின்றது! மீண்டும் தமிழ் அழகு!

பசுக்களும், மற்றப் பிராணிகளும், விருந்தாவன வாசிகளும் கண்ணனைச் சரணடைந்தனர்.


ஆனால் 'காலிகள் (பசுக்கள்) காத்தவனே!' என்கின்றார் ஆழ்வார்!

பசுக்கள் மனிதர்களை விட மிகவும் உயர்ந்தவையோ? மனிதர்களைப் பற்றி எம்பெருமானுக்கு அக்கறை இல்லையா?

***

கோபியர்கள், சில நேரங்களில் கண்ணனிடம் கோபிக்கின்றனர் - பெரும்பாலும் பொறாமை!

கோபியரின் தாய்மார்களோ, எப்போதும் யசோதையிடம் கோள் சொல்கின்றனர்.

தாய் தந்தையரோ, ரொம்பக் கண்டிப்பு!

கோகுலத்து வயதான ஆண்களோ, எப்பொழுதும் ஆய்ப்பாடியின் எல்லையில் உள்ள மரத்தின் கீழ், வேலை எதுவும் செய்யாமல், அமர்ந்து அரட்டை அடிக்கின்றனர். பக்கத்தில் ஒரு சொம்பும், குடையும் வேறு!

உடனிருக்கும் நண்பர்களோ, ஒரு நேரம் போல் இருப்பதில்லை.

அண்ணனோ, சில சமயங்களில் ஒத்து வருவதில்லை.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், பதில் பேசாமல், எப்பொழுதும் கூடவே இருந்து, தலையை நன்றாக ஆட்டி (குழல் இனிமைக்குத் தான்), கண்ணனிடம் முழுச் சரணாகதி அடைந்தவை இந்தப் பசுக்கள் தான்! இவனுக்குப் பெயரே ’கோ’பாலன் தானே?

மழை வந்ததும், முதலில் பசுக்கள், தலைகளைத் தாழ்த்திக் கொண்டு, கன்றுகளைத் தன் கால்களின் இடையே வைத்துக் கொண்டு கண்ணனிடம் வந்து நின்றதாம்! அதன் பிறகே மனிதர்கள் வந்து நின்றனராம்!

கோகுலத்தில், பசுக்கள் இல்லையேல், உணவும், மனிதர்களும், மற்றப் பிராணிகளும் இல்லை. பணமும், ஜீவனமும் இல்லை. ஆய்ப்பாடியைக் காப்பாற்ற வேண்டும் என்றால், முதலில் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும். எனவே, பசுக்களுக்குத் தான் அங்கு ஏற்றம்!

ஆழ்வார் 'காலிகள் காத்தவனே' என்றது சரிதானே?

கண்ணன் தன் ஒரு கைச் சுண்டு விரலால் கோவர்த்தன மலையைக் குடையாக்க, அனைவரும் அதன் கீழ் ஒரு வாரம் நிம்மதியாக இருந்தனர்.

இந்த அற்புதத்தைக் கண்டு இந்திரன் திகைத்தான். கண்ணன் யார் என்று புரிந்தது. மேகங்களை விலக்கி, கண்ணனைச் சரணடைந்து, 'கோவிந்தன்' என்று பெயர் சூட்டிப் பட்டாபிஷேகம் செய்வித்தான்.

(பெரியாழ்வார், கண்ணன் கோவர்த்தன மலையைத் தாங்கிய அழகை, 'அட்டுக்குவி' எனும் திருமொழியில் [பெரியாழ்வார் திருமொழி 3-5] அழகாக வர்ணித்துள்ளார். நேரமிருந்தால், படித்துப் பாருங்கள்)

மலை எடுத்ததையும், நரசிம்மாவதாரத்தையும், ஆழ்வார் ஒரே பாசுரத்தில் சேர்த்து, பெரியாழ்வாரும், மங்கையாரும் சில பாசுரங்களில் எழுதியுள்ளனர். ஏன்?

ஒரு வேளை இரணியன் மனதும் கோவர்த்தனகிரியும் கல் என்பதாலோ?
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்?

இந்த 'கோவிந்த' கோளரிக்கும், ஆழ்வார்களின் தமிழுக்கும் நம் வணக்கங்கள்.

- நரசிம்மரே, மீண்டும் வாரும்!

13 comments:

  1. நல்ல பதிவுகள் நல்ல விளக்கங்கள், நான் தற்போது உங்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். நன்றி.

    ReplyDelete
  2. அன்பரே

    //நல்ல பதிவுகள் நல்ல விளக்கங்கள், நான் தற்போது உங்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். நன்றி.//

    தங்களைப் போன்ற அன்பர்கள் படிக்கும்போது, அடியேனுக்கும் இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற ஆர்வம் எழுகின்றது. நன்றி.

    ReplyDelete
  3. இதயத்தில் எங்காவது ஒரு மூலையில் அரியை பற்றிய பக்தி சிந்தனை இந்த ஹிரண்யனுக்குள் இருக்குமா?

    அப்படி இருந்தால் பிரகலாதன் பொருட்டு(தந்தையை இழக்க வேணாமே) இவனை நல்வழி படுத்தி விட்டுவிடலாமே! என்ற நப்பாசையில் சிங்கம் குடைந்து துழாவி பார்த்ததாம்.

    இப்படியும் ஒரு விளக்கம் எங்கோ படித்த நினைவு. நரசிம்மம் தாழ் போற்றி.

    உங்கள் எழுத்துக்களை படிக்க, படிக்க சிம்மம் என்னை ஆட்கொள்வது போல சிலிர்க்கிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //உங்கள் எழுத்துக்களை படிக்க, படிக்க சிம்மம் என்னை ஆட்கொள்வது போல சிலிர்க்கிறது. //

    அப்படியே வழிமொழிகிறேன் அம்பி.. இதே உணர்வு தான் எனக்கும்..

    ReplyDelete
  5. //கோபியர்கள், சில நேரங்களில் கண்ணனிடம் கோபிக்கின்றனர்//

    கண்ணன் கண்ணில் தென்படாதவரை தானே இந்தக் கோபமெல்லாம்.. :)

    ReplyDelete
  6. Vanakkam sir,
    ENJOYED.Pasura mazhai verygood. Hiranyakasibu got the boon from Bramha that he should not be killed by either human or animal,by any weapons so Arangan took Narasimha roopam,and he used his nail as aweapon.Azhwar in Thiruvaimozhi 7-6-11 he mentioned that, Pukka ariyuruvai avunanudal keendugantha sakkara selvan.
    AKKARAKANI ARANGAN ARULVANAGA.
    anbudan.
    srinivasan.

    ReplyDelete
  7. //அதே போல், முழுவதும் சிங்கமாக வந்தாலும் இரணியனை அழிக்க முடியாதே. இதற்கு விளக்கம் அளியுங்களேன்!)//



    அன்பர் சொன்னது போல் மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் இருக்கவே
    நரசிம்மம்.

    மாரி மலை முழைஞ்சில், மன்னிக் கிடந்து உறங்கும்,
    சீரிய சிங்கம் அருள்! ஏல்-ஓர்

    ReplyDelete
  8. நரசிம்மர் படங்கள் எல்லாம் அருமை தாங்களே வரைகின்றீர்களா?

    வளர்க தங்கள் தொண்டு.

    ReplyDelete
  9. கோவிந்த கோளரிக்கு வணக்கங்கள்.

    ReplyDelete
  10. கைலாசி

    //நரசிம்மர் படங்கள் எல்லாம் அருமை தாங்களே வரைகின்றீர்களா?//

    இல்லை. சில காலமாக, நரசிம்மர் படங்களைச் சேமித்து வருகிறேன். நண்பர் ராகவனும் சில படங்கள் வைத்துள்ளார்.

    அதிலிருப்பவை தான் இவை.

    ReplyDelete
  11. அம்பி

    //இதயத்தில் எங்காவது ஒரு மூலையில் அரியை பற்றிய பக்தி சிந்தனை இந்த ஹிரண்யனுக்குள் இருக்குமா?

    அப்படி இருந்தால் பிரகலாதன் பொருட்டு(தந்தையை இழக்க வேணாமே) இவனை நல்வழி படுத்தி விட்டுவிடலாமே! என்ற நப்பாசையில் சிங்கம் குடைந்து துழாவி பார்த்ததாம்.//

    அற்புதம். தங்கள் மூலம் இன்னும் ஒரு காரணம் தெரிந்தது.

    ReplyDelete
  12. ராகவா

    //கண்ணன் கண்ணில் தென்படாதவரை தானே இந்தக் கோபமெல்லாம்.. :)//

    கண்ணன் வேறு பெண்களுடன் இருந்தாலும் கோபம் தான்.

    ’ஏர்மலர்ப் பூங்குழல்’ எனும் பெருமாள் திருமொழியைப் (குலசேகராழ்வார்) படித்துப் பாருங்கள். இந்தப் பொறாமைப் பாவத்தை நன்கு அனுபவித்துக் கூறியுள்ளார்.

    ReplyDelete
  13. ஸ்ரீனிவாசன், செல்வநம்பிகளே!

    //அன்பர் சொன்னது போல் மனிதனாகவும் இல்லாமல் மிருகமாகவும் இல்லாமல் இருக்கவே
    நரசிம்மம்.//

    சரியான விளக்கம். ஆனால், இதில் இன்னும் ஒரு கருத்து உள்ளது - இரணியன் வரம் வாங்கிய விதம்.

    அதையும் யாராவது சொல்லுங்களேன்?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP