Tuesday, April 20, 2010

பிறந்தநாள்: இராமானுசர் தவறு? சுட்டிக் காட்டியது யார்?

ஆகா! இராமானுசர் தவறு செய்வாரா? அடப்பாவி! அங்க வச்சி, இங்க வச்சி, கடேசீல இவர் மேலேயே கைய வச்சிட்டியா?-ன்னு ஒரு சிலர் பொங்கி எழுவது எனக்குத் தெரிகிறது!
அவர்களுக்கு இராமானுசர் மேல அன்பு இருக்கோ இல்லீயோ...அடியேன் மேல் "பாஆஆசம்"...இருப்பதென்னவோ உண்மை! :)

வணக்கம் மக்களே! இன்று சித்திரைத் திருவாதிரை (Apr 20, 2010)!
உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும்.....காரேய்க் கருணை, இராமானுசரின் பிறந்த நாள்!
Happy Birthday Ramanuja! இன்னும் பல நூற்றாண்டு இரும்! :)

* தமிழ் வேதமான மாறன் மொழியை, ஆலயம் தோறும், "கருவறைக்குள்ளே-யும்" ஒலிக்கச் செய்து...
* தமிழை இறைவனுக்கு முன்னே ஓதி வர, இறைவன் பின் தொடர, வடமொழி வேதங்களை அதற்கும் பின்னால் ஊரறிய ஓதி வரச் செய்து...

* வேதங்களின் விளக்க நூலும், விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூலுமான ஸ்ரீபாஷ்யத்துக்கு, பிரம்ம சூத்திரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல், திருவாய் மொழியையும் ஆதாரமாகச் சேர்த்து...

* திருவாய் மொழிக்கு, பல ஈடு வியாக்யானங்களை எழுதப் பண்ணி...
* வைணவத் தலைநகரமான திருவரங்கத்தில், மார்கழி ஏகாதசியின் போது, தமிழுக்கென்றே தனித்த திருநாள் - திருவாய்மொழித் திருநாள் - 21 நாட்கள் இன்றளவும் நடக்க வைத்து...

இப்படி, பெற்ற தாயான நம்மாழ்வாரைக் காட்டிலும், வளர்த்த தாயாய், வளர்த்து விட்ட உடையவருக்கு.....இந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை!
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன்! மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் நம் இராமானுசன்!




சரி, இராமானுசர் பிறந்த நாள் பதிவுக்கு வருவோம்! அது என்ன இராமானுசர் செய்த தவறுகள்? இராமானுசர் தவறெல்லாம் செய்வாரா என்ன? :)

மனுசனாப் பொறந்த எல்லாருமே தவறுவது இயல்பு தான்!
நமக்குப் பாடம் காட்ட வந்த அவதாரங்களும், ஆசார்ய புருஷர்களும், நல்லது மட்டும் தான் செய்து காட்டுவாங்களா என்ன?
தவறும் செய்து காட்டுவார்கள்! அப்படித் தவறிய பின், அதை எப்படி எதிர்கொள்ள வேணும் என்றும் நடந்தும் காட்டுவார்கள்!

இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான்! அதை அவனே தவறு என்று ஏற்றுக் கொண்டு, அடுத்த அவதாரத்தில், அதே போல் மறைந்திருந்து, கண்ணன் கொல்லப்பட்டு, கழுவாய் தீர்த்துக் கொண்டான்!

ஆனால் நம் பண்டித சிகாமணிகள் தான், ஓவர் புனிதப் பூச்சுகளைப் பூசி, வாலி வதம் சரியே! சீதையின் அக்னிப் பிரவேசம் சரியே! என்று ராமாயண இண்டு இடுக்குகளில் புகுந்து, இன்றும் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருப்பார்கள்! :)
இதனால் இராமன் மேல் மதிப்பு வருவதற்குப் பதிலா, ஓவர் புனிதப் பூச்சு பூசி, வெறுப்பு வரவே இவர்கள் துணை போய்க் கொண்டு இருப்பார்கள்!

இராமன் காட்டிய வழியில் தானே இராம-அனுஜனும்? இராமானுச வைபவத்தில் அவர் "தவறிய" இடங்களும், மறைக்காது குறிப்பிடப் பட்டிருக்கும்! அவற்றில் சிலதை இன்று காணலாமா? :)
பயப்படாதீங்க! ஆசார்ய அபச்சாரம் எல்லாம் இல்லை! இதனால் அவர் பால் புரிதலும் மதிப்பும் இன்னும் கூடவே செய்யும்!


திருவரங்கம் - இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்ட இடம்


ஸ்ரீபாஷ்யம் எழுதத் துவங்கிய காலம்! மூல நூலான போதாயன விருத்தியை, இராமானுசர் நடையாய் நடந்து வாங்கிய பின்னால், சிறிது நாளிலேயே களவாடிக் கொண்டார்கள்!
அட, இதுவும் வேதம் தானே! விரிவுரை சொல்லிவிட்டுப் போகட்டுமே-ன்னு கூட அந்த வைதீகோத்தமர்களுக்குத் தோனவில்லை!
வேதமா முக்கியம்? தங்கள் உள்ள உகப்பு தானே இவிங்களுக்கு எப்பவும் முக்கியம்! தமக்கும், தம் நம்பிக்கை/பழக்க வழக்கங்களுக்கும் சரிப்பட்டு வரும் வரை தான் வேதம்! :(

இப்போ என்ன செய்வது? முழுசாப் படிப்பதற்குள் மூல நூல் திருடு போய் விட்டதே! எப்படி குருவான ஆளவந்தார் ஆசையை நிறைவேற்றி வைப்பது?
சமய சஞ்சீவியாக, எப்போதும் உடன் இருக்கும் நண்பரும்-முதன்மைச் சீடருமான கூரத்தாழ்வான் முன்னுக்கு வந்தார்!

"உடையவரே, தாங்கள் இரவில் படிக்கத் துவங்கிய போது, அசதியில் உறங்கி விடுவீர்கள்! அப்போது நான் பின் வரிசையாக, ஒவ்வொரு பாகமாகப் படித்து, உருவேற்றி விட்டேன்! ஒப்பிக்கிறேன்! கேட்கிறீர்களா? பிறகு நீங்களே முடிவுக்கு வாருங்கள்!"

இராமானுசருக்குப் போன உயிர் திரும்பி வந்தது!
குருவால் புகழ் பெற்ற சீடர்கள் பலர்! ஆனால் குருவுக்கே புகழ் சேர்த்த சீடர்கள் உண்டென்றால் அது உடையவரும்-அவர் சீடர்களும் தான்!
அந்த அளவுக்கு அங்கே அதிகாரம் காட்டாது, கொடுக்கல்-வாங்கல் இருந்தது! இனி பாஷ்யம் எழுத வேண்டியது தான் பாக்கி!

"கூரேசா, நான் ஸ்ரீபாஷ்யம் சொல்லிக் கொண்டே வருகிறேன்! வேதங்களில் இருந்தும், திருவாய் மொழியில் இருந்தும் என் விளக்கங்கள் அமையும்!
நீர் மூல நூலையும் வாசித்து உள்ளதால், நான் எங்கேனும் தவறான விளக்கம் சொல்லும் பட்சத்தில், என்னைத் தடுத்து நிறுத்தும்! சரியா?"

"ஐயோ! சுவாமி! உலகாசான்-ஜகத்குரு என்று ஊரே உங்களைக் கொண்டாடுகிறது! உங்கள் விளக்கத்துக்கு நான் மறுப்பு சொல்வதா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? வேண்டாம் இராமானுசரே!"

"சரி! இப்படிச் செய்வோம்! நான் சொல்லும் விளக்கம், மூல நூலின் கருத்தோடு மாறுபட்டு இருந்தால், நீர் எழுதுவதை நிறுத்தி விடும்!
உடனே அது எந்த இடம் என்று நானும் புரிந்து கொள்வேன்! சரியா? இதனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லை!"



இதோ, விசிட்டாத்வைத கலங்கரை விளக்கமாக, ஸ்ரீபாஷ்யம் நிறைவுறும் நிலைக்கு வந்து விட்டது! உடையவர் பொழியும் பொழிவை, கூரேசன் வயற்காட்டுக்குப் பாய்ச்சி விடுவது போல், எழுதி விடுகிறார்! ஆனால்...ஆனால்...இன்று.....

கூரேசன் எழுதுவதை நிறுத்தி விட்டார்! பாஷ்யம் நிறையப் போகும் சந்தோஷத்தில் பொழிவைத் தொடர்ந்து கொண்டே இருந்த உடையவருக்கு அதிர்ச்சி!
தான் போட்டுக் கொடுத்த திட்டப்படி தானே கூரேசன் செய்கிறார் என்பது கூட மறந்து போனது! பாஷ்யம் முடிய வேணுமே என்ற பேராவல் மட்டுமே ததும்பும் நிலையில்...

"கூரேசா, தொடர்ந்து எழுதும்!"

மெளனம்...

"கூரேசா..."

"சுவாமி, ஜீவாத்மாவை ஞானம் மிக்கவன், ஞானம் மிக்கவன் என்று தான் சொல்லிக் கொண்டே இருக்கிறீரே அன்றி...
பரமாத்மனைச் சரணம் அடைந்து இருப்பதே அந்த ஞானத்தின் பயன் என்று விரிக்கவே இல்லையே! அதான்....."

"ஓ...அதான் உம்ம கை மறுக்கிறதா? பலே! அப்போ நான் எதற்கு? பாஷ்யத்தை சுயமாக நீரே எழுதிக் கொள்ளும்!"

எங்கிருந்து தான் அப்படியொரு கோவம் வந்ததோ இராமானுசருக்கு!
கோவமே வராதவர்களுக்கு கோவம் வந்தால்?
அதுவும் தப்பு செய்யாதவன் மேல் தப்பு செய்தான் என்று கோவம் வந்தால்???

உடையவர் விறுவிறு என்று எழுந்து, கூரேசன் கையில் இருந்த ஓலையெல்லாம் வீசி எறிந்து விட்டு, ச்சீ, நன்கு முடியப் போகும் தக்க சமயத்தில் இப்படி ஒரு தடையா என்று கடுப்புடன் வெளியேறி விட்டார்!

கூரேசனுக்கு மூச்சே நின்று போனது!
அய்யோ! நீங்க ஆரம்பிக்கும் போது சொன்னீர்களே! அதைத் தானே நானும் செஞ்சேன்?-என்று தன் பக்க நியாயங்களைச் சொல்லக் கூட, அவருக்கு வாய் வரவில்லை!
பரிபூர்ண சரணாகதர்களின் லட்சணம் இது தான்! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை! "தன்னை அவன் கதிக்கே" விட்டு விடும் நிலை!

"என்ன ஓய் கூரேசரே, இராமானுஜர் இப்படிக் கோவப்பட்டு நாங்க பார்த்ததே இல்லைங்காணும்! இனி நீர் என்ன செய்யப் போகிறீர்?
ரொம்ப பணிவானவர் போல வளைய வந்தீரே! இராமானுஜரையே எதிர்க்கும் அளவுக்கு அடடா என்னவொரு பணிவய்யா உமக்கு! குட்டு வெளிப்பட்டுருச்சி-ங்காணும்! பேசாம மடத்தைக் காலி பண்ணிட்டு போம்!"

எள்ளல்கள்!!! கருடன், சரணாகதியில் ஒடுங்கி இருந்தால்...மண்புழு கூட "கருடா செளக்கியமா"-ன்னு கேட்கும் அல்லவா? :)

"என்னது?....அவரே கோபித்தாலும்....அவரை விட்டுப் போவதா?.....ஹைய்யோ!
எத்தனையும் வான் மறந்த காலத்தும், பசும் பயிர்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்.....வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!
என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்றல்லால் பற்றில்லேன்!

என் வாழ்வோ தாழ்வோ,
உன் கையால் நடப்பது என்னவோ,
அதுவே எனக்கு இனியது, இனி எது, இனி அது...கேட்கின்...?"


அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால், எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும், சச்சரவு உண்டாகி விடுகிறதே...அதுவும் இந்த அறிவியல் காலத்திலேயே!
கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்க்காது...
மாற்றுக் கருத்து சொன்னாலே, மாற்றான் ஆக்கி விடும் நிலைமை! ஒரு வேளை இராமானுசரும் அப்படிப் பட்டவர் தானோ?

இராமானுசர் எழுந்து அவர் அறைக்குச் சென்று விட்டாரே தவிர, அவருக்கு எதுவுமே நிலை கொள்ளவில்லை! மறுபடியும் மறுபடியும் அதே யோசனை!

"கூரத்தாழ்வான் அப்படிப்பட்டவன் இல்லையே! தன் சொத்தையெல்லாம் விட்டுவிட்டு என் பின்னால் வந்தவன், இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேணும்? அப்படி என்ன நான் தப்பாகச் சொல்லி விட்டேன்? ஞானத்தை முதலில் சொல்லி, இன்னும் சிறிது நேரத்தில் சரணத்தைப் பற்றிச் சொல்லத் தானே போகிறேன்! அதற்குள் என்ன அவசரம்?"

ஆலயத்தில், சாற்றுமுறையில், கோயில் திருவாய்மொழி ஓதும் சத்தம் கேட்கிறது!
ஒண்சங்கு கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே!!
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கல்லாம்
படியன் அல்லன் பரம் பரன்!!!

"ஆகா...ஆகா...இதைத் தானே கூரேசனும் சொன்னார்?
"என்"னுள்ளும் இறைவன் உள்ளான்-ன்னு சொல்லாது,
"அடியேன்" உள்ளான் என்று வருகிறதே மாறன் மொழி! அப்படீன்னா...அப்படீன்னா...

"என்" ஞானம் என்று ஒன்றும் கிடையாது!
"என்" கர்மம் என்ற ஒன்றும் கிடையாது!
அதான், இறைவன், "என்"-உள்ளான் என்று சொல்லாது
"அடியேன்"-உள்ளான் என்கிறாரோ நம்மாழ்வார்?

ஆகா! ஒரே சொல்லில், ஒத்தைச் சொல்லில்...
அவன் "அடிக்"கீழ் நாம் இருப்பதைக் காட்டி...
அப்படி "அடிக்"கீழ் இருக்கும் நமக்காகவே, அவனும் இருப்பதைக் காட்டி...
"அடி"யேன் உள்ளான்! "அடி"யேன் உள்ளான்!!

ஓ! ஞாபகம் வருது! வேதத்திலும் பகவத் சேஷ பூத: ஜீவ: என்று தான் வருகிறது அல்லவா! அடா, அடா, அடா! வேதத்தில் கூட நாலு சொற்கள்!
நம்மாழ்வார் எப்படி இவ்வளவு அழகா, நறுவிசா, திராவிட வேதத்தில், ஒரே சொல்லால்? - அடியேனுள்ளான்! அடியேனுள்ளான்!

கூரேசன் சொன்னது சரியே! கூரேசன் சொன்னது சரியே!
நாம் தான் அவசரப்பட்டு விட்டோம்! ஐயோ! கூரேசன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ? கூகூகூரேசா....."



இராமானுசர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்! அங்கே கூரேசன், கண்களில்.....வழிய....
பசியிலும், தனிமையிலும், "அவரே" என்று ஒடுங்கிய நிலையில்.....

"கூரேசா! என்னை மன்னித்து விடும்! என்னை மன்னித்து விடும்!"

"ஐயோ! சுவாமி, என்ன இது? உம்ம கண்ணில் இருந்து எதுக்கு இப்படி தண்ணி கொட்டுது? என்ன ஆயிற்று?"

"உம் கண்ணில் இருந்து கூடத் தான் தண்ணீர் கொட்டுது? என்னை மட்டும் கேட்கிறீரே?"

"சுவாமி..."

"ஒன்னும் பேச வேணாம்! நான் தான் அப்பவே சொன்னேன்-ல்ல? மூல நூலில் இருந்து நான் விலகிச் சென்றால், எழுதுவதை நிறுத்தி விடும், புரிந்து கொள்கிறேன்-ன்னு! அதை எனக்கு எடுத்துச் சொன்னால் என்னவாம்? எதுக்கு நான் திட்டிய போதும் மெளனம் காத்தீர்?"

"உங்கள் முக வாட்டமும், கோபமும் கண்டு, எனக்கு தற்காத்து கொள்ளக் கூட, பேச வரவில்லை! கண்ணீர் தான் வந்தது! அதான்....."

"ஐயோ! கூரேசா! இப்படியா இருப்பார்கள்?
உம்மைத் திட்டிவிட்டு, நான் மட்டும் உம்ம யோசனை இல்லாமல் இருப்பேனா? அரங்கன் சன்னிதி ஓதல் காட்டிக் கொடுத்து விட்டது! - அடியேனுள்ளான், அடியேனுள்ளான்! திருவாய்மொழி சொல்வது அதுவே! நீர் சொன்னதும் அதுவே!

இதோ, என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்! ஸ்ரீபாஷ்ய உரையை மாற்றிச் சொல்கிறேன்! தொடர்ந்து எழுதும் கூரேசா! எனக்காக, இந்த இராமானுசனுக்காக...தொடர்ந்து எழுதும்!"


* அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால்? = "நெருக்கமா"னவர் "வெறுக்க"மானவர் ஆவாரா?
* மாற்றுக் கருத்து வந்தால்? = மனத்துக்கு இனியான், மாற்றான் ஆகி விடுவானா?
* மாற்றுக் கருத்து....சரியானது என்னும் பட்சத்தில்...மாற்றிக் கொள்ள மனம் இடங் கொடுக்குமா? எப்போது இடங் கொடுக்கும்?

காரேய்க் கருணை மனத்தில் இருந்தால்...இடம் கொடுக்கும்! "அடம்" கொடுக்காது! "இடம்" கொடுக்கும்!

காரேய்க் கருணை இராமானுசா இக் கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
இராமானுசர் திருவடிகளே சரணம்!

27 comments:

  1. very fine, like it very much,Tamil literature had everything but no body knows this appreciate your work

    ReplyDelete
  2. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சங்கரா!
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இராமானுசா!

    காரேய்க் கருணை இராமானுசா இக் கடல் நிலத்தில்
    யாரே அறிவர் நின் அருளாம் தன்மை?

    ReplyDelete
  3. ஸ்ரீபாஷ்யம் எழுதத் துவங்கிய காலம்! மூல நூலான போதாயன விருத்தியை, இராமானுசர் நடையாய் நடந்து வாங்கிய பின்னால், சிறிது நாளிலேயே களவாடிக் கொண்டார்கள்!

    திக்கென்றது .
    ச்சீ ... இப்படியும் இருப்பாங்களா!

    ReplyDelete
  4. post a comment ... i think krs , u change some setting right . not compartable

    ReplyDelete
  5. 2 பதிவுகளையும் படிச்சாச்சி தல..அருமை ;) நன்றி ;)

    ReplyDelete
  6. தலைப்பைப் பார்த்தவுடனே 'அடடா. ரொம்ப நல்லா பாலன்ஸ் ஆக்ட் பண்றார் இரவி'ன்னு நினைச்சேன் இரவி. :-)

    இனியது கேட்டோம்! மிக நன்றாக இருந்தது!

    கூரேசரை இளையாழ்வார் முனிந்த போது எள்ளல்கள் செய்தவர்கள் இருந்தார்கள் என்று காட்டினீரே! இவ்விருவருக்கும் இடையில் மனவருத்தமா என்று வருந்தியவர்களும் இருந்தார்கள்! மறந்தீரா?! அவர்களே பேசாத பெரும்பான்மை என்பதையும் மறந்தீர் போலும்!

    ReplyDelete
  7. @rajesh
    //post a comment ... i think krs , u change some setting right . not compartable//

    :)
    ppl asked for inline comment box-nga..
    quote panni, comment panna easy-aa irukku-nu! thatz why made this change!
    why? ungalukku work aavaliyaa?

    ReplyDelete
  8. //குமரன் (Kumaran) said...
    தலைப்பைப் பார்த்தவுடனே 'அடடா. ரொம்ப நல்லா பாலன்ஸ் ஆக்ட் பண்றார் இரவி'ன்னு நினைச்சேன் இரவி. :-)//

    அதெல்லாம் பண்ணத் தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்கேன் குமரன்? :)
    இராமானுசர் செய்த தொண்டுகள் எனக்குப் பிடிக்கும் என்பதற்காக, அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று ஆகிவிட மாட்டார் அல்லவா? அதுவும் பொது மன்றத்தில்?

    சொல்லப் போனா, அவரே விமர்சனத்தை ஒளிக்காமல் வரவேற்பார் பல இடங்களில்!
    தன் நூலில் கூட, அத்வைதம் என்ன சொல்கிறது என்பதை வரி மாற்றாமல் திரிக்காமல், அப்படியே சொல்லுவார்!
    அதன் பின்னர் தான், ஒவ்வொன்றாக, தான் ஏன் உடன்படவில்லை என்பதைத் தக்க தரவுகளோடு விளக்கி, தன் கருத்தான விசிட்டாத்வைதத்தை எடுத்து வைப்பார்! - அவரின் அந்த நேர்மை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!

    //இனியது கேட்டோம்!//

    :)
    ஞாபகப் படுத்திட்டீங்க! இனியதில் அடுத்த புதிரா புனிதமா இட வேண்டும்! ரொம்ப நாளாச்சி!

    ReplyDelete
  9. @குமரன்
    //இவ்விருவருக்கும் இடையில் மனவருத்தமா என்று வருந்தியவர்களும் இருந்தார்கள்! மறந்தீரா?! அவர்களே பேசாத பெரும்பான்மை என்பதையும் மறந்தீர் போலும்!//

    இராமானுச வைபவத்தில் கூட இருந்தே எள்ளியவர்கள் பற்றிய குறிப்பு தான் வருகிறது குமரன்! முதலியாண்டான், எம்பார், வில்லி, போன்ற வருந்தவல்ல நல்ல உள்ளங்கள் அப்போது அருகில் இல்லை போலும்!

    ஏன்னா அப்போது இவர்கள் திருவரங்கத்தில் நண்பர்களோடு இல்லை! ஒரு சில மடத்துச் சிப்பந்திகளோடு வட யாத்திரையில் அல்லவா இருந்தார்கள்! அங்கு தானே ஸ்ரீபாஷ்யம் எழுதி, பாஷ்யக்காரர் என்று சாரதா பீடத்தில் பட்டம் பெற்றது! அதான் போலும்!

    ReplyDelete
  10. //Anonymous said...
    //Tamil literature had everything but no body knows this.//

    பாசுரங்கள் பலவும் சங்கத் தமிழ் மரபுகளையே எதிரொலிக்கும்!
    காதல்-களவு-கற்பு-இயற்கை-தூது-கூத்து-விளையாட்டு-நப்பின்னை-மக்கட் செல்வம்...
    என்று இத்தனை பரிணாமங்களின் கூட,
    கண்ணன் என்னும் கருந்தெய்வம்! மாயோனாகிய தமிழ்க் கடவுள்! - இவை தான் பாசுரங்களின் களன்!

    இறைவனைப் பேசுவதால் மட்டுமே இவை வெறுமனே "பக்திப் பாடல்களோ"/"பஜனையோ" ஆகி விடாது!

    அதை ஏட்டோடு நின்று விடாது, இயல்-இசை-நாடகம்-ன்னு ஆலய வாழ்விலும் கொண்டாந்து சேர்த்தவர்கள் தான் நாதமுனிகளும், இராமானுசரும்!

    //but no body knows this. appreciate your work//

    வைணவம் சிறுபான்மை என்பதால், இந்த நல்ல முயற்சிகள் வெளியில் உடனே தெரிவதில்லை! வைணவத்துக்குள்ளேயே இந்த நல்ல விஷயங்கள் அடங்கிப் போய் விடாது, எடுத்துச் சொன்னாலே போதும்! தமிழும், இறைமையும் ஒருங்கே வளரும்!

    அதான் அப்பப்ப எடுத்துச் சொல்றதுங்க! மத்தபடி பெருசா ஒன்னும் செஞ்சீறல! :)

    ReplyDelete
  11. //Sri Kamalakkanni Amman Temple said...
    திக்கென்றது .
    ச்சீ ... இப்படியும் இருப்பாங்களா!//

    :)
    Rajesh, naan konjam refined-aa cholli mudichitten...there were lotsa other hardships! and this man, right from his youth to old age was walking and walking all over, nadakkaRathe pozhaippo pochu, paavam!
    நடந்த கால்கள் நொந்தவோ - நடுங்கு ஞாலம் ஏனமாய்
    கடந்த கால் பரந்த கா - விரிக் கரை குடந்தையுள்
    கிடந்த வாறு எழுந் திருந்து - பேசு வாழி கேசனே!

    ReplyDelete
  12. பொறந்த நாள் குழந்தையை திட்டாதீங்கோ KRS அண்ணா!...:)

    ReplyDelete
  13. ஸ்ரீமதே ராமானுஜாய நம:

    எம் ஆசார்யரின் ஒவ்வொரு வைபவமும் அருமை !! அதை நீங்கள் சொல்லும் விதம் இன்னும் சுவை கூட்டுகிறது.. அவரின் செளலப்யமே நம்மை ஆட்கொள்ளச் செய்கிறது..

    ReplyDelete
  14. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். எம்பெருமானாரின் திருநாளில் அவரைப்பற்றிப் படிக்கக் குடுத்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. //கோபிநாத் said...
    2 பதிவுகளையும் படிச்சாச்சி தல..//

    இல்லையே, இராமானுசருக்கு மட்டும் தானே கோபி பின்னூட்டி இருக்க? சங்கரருக்கு எங்கே? :)

    ReplyDelete
  16. //தக்குடுபாண்டி said...
    பொறந்த நாள் குழந்தையை திட்டாதீங்கோ KRS அண்ணா!...:)//

    அட, இதுக்குப் பேரு திட்டு இல்ல தக்குடு!
    Itz just a birthday bump...to all of us :)

    ReplyDelete
  17. //Sabarinathan TA said...
    Very Nice Sir//

    Thanks Sabarinathan! "Sir" venaam, krs shd be fine :)

    ReplyDelete
  18. //Raghav said...
    ஸ்ரீமதே ராமானுஜாய நம://

    ஸ்ரீ-ன்னு மரியாதை முன்னொட்டாச் சொல்லலாம்!
    ஆனால் ஸ்ரீமதே என்பது நாராயணனுக்கே உரிய ஒன்றல்லவா? எப்படி இராமானுசருக்கு வரும்?
    ஐயம் போக்க வேணுமாறு விண்ணப்பிக்கிறேன் ராகவ்!

    //எம் ஆசார்யரின் ஒவ்வொரு வைபவமும் அருமை!!//
    அப்பாடா! காது குளிர்ந்தது! ராகவ்-வோட ஞான ஆசார்யன் இராமானுசர்-பா! நல்லாக் கேட்டுக்கோங்க! என் கிட்ட வம்புக்கு வராதீக! :)

    //அதை நீங்கள் சொல்லும் விதம் இன்னும் சுவை கூட்டுகிறது..//
    :)

    //அவரின் செளலப்யமே நம்மை ஆட்கொள்ளச் செய்கிறது..//
    செளலப்யம்-ன்னா என்ன ராகவ்? தமிழ்-ல் அதை எப்படிச் சொல்லலாம்?
    தேவரீர் அடியோங்களுக்குத் திருச்செவி சார்த்தி அருள வேணும்! :)

    ReplyDelete
  19. //இராமானுஜதாசன் said...
    மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள். எம்பெருமானாரின் திருநாளில் அவரைப்பற்றிப் படிக்கக் குடுத்ததற்கு மிக்க நன்றி//

    எம்பெருமானாரின் திருநாளில் அவரைப் பற்றிய குற்றங்குறை போல் தெரிவதைச் சொல்லணுமா-ன்னு முதலில் தோனுச்சி! ஆனால் வழக்கம் போல் துணிந்து சொல்லிட்டேன்! இது வரை யாரும் தப்பா எடுத்துக்கலை-ன்னே தோனுது! நன்றி! :)

    ReplyDelete
  20. //selvanambi said...
    srimathe ramanujaya namaha//

    நன்றி செல்வநம்பி ஐயா! என்ன உங்களைக் காணலையே-ன்னு பார்த்தேன்! :)

    ReplyDelete
  21. பந்தல் தலைப்பின் கீழே நீர்க்குமிழி பின்னூட்டம் பார்ப்பேன். அருமையான பின்னூட்டம். யார் இந்த நீர்க்குமிழி என்றெல்லாம் ஆராய்ச்சி செஞ்சிருக்கேன்.

    ராமானுஜர் பின்னூட்டம் போடலாம்னு பந்தலை ஓபன் பண்ணா பந்தல் தலைப்பின் கீழே நம்ம பின்னோட்டம் போலவே ஒருத்தர் பின்னூட்டம் இட்டிருக்கார் . அட யாருடா இது என்று பேரை பார்த்தா sri kamalakkanni amman temple.

    மாதவி பந்தல் தலைப்பில் sri kamalakkanni amman temple பின்னூட்டம். என் கண்ணையே என்னால நம்பமுடியல மிக்க நன்றி ஆண்டாள் sorry KRS

    அவசரத்தில் சில எழுத்து பிழைகள் ஆகி விட்டது, அப்படியே போட்டுடீங்களே!
    சரி பரவா இல்லை! அதுல இருக்கிற விசயம்தான் முக்கியம்

    இந்த பின்னூட்டம் இட வாய்ப்பு கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


    ரொம்ப நாளா ஒரு சந்தேகம்
    ராமானுஜர் பதிவில் கேக்கலாம் என்று இருந்தேன், மறந்து விட்டேன், இப்போதுதான் நினைவில்!!!

    இராமானுஜர் சைவ குடும்பத்தில் பிறந்தவரா!
    கேள்வி பட்டேன்! இது உண்மையா

    சரி அது ஒரு பக்கம் என்றால் ,
    எம்பார் சிவ பழமாக இருந்தவர்!
    அவரை பெருமாள் பக்கம் இழுத்து வந்தாரே இராமானுஜர்
    சிவன் கோபித்து கொள்ள மாட்டாரா!
    அரியும் சிவமும் ஒன்று . அப்படி என்றால் எம்பார் சிவனிடமே இருந்திருக்கலாமே!

    ReplyDelete
  22. //Sri Kamalakkanni Amman Temple said...
    பந்தல் தலைப்பின் கீழே நீர்க்குமிழி பின்னூட்டம் பார்ப்பேன். அருமையான பின்னூட்டம். யார் இந்த நீர்க்குமிழி என்றெல்லாம் ஆராய்ச்சி செஞ்சிருக்கேன்//

    :)
    அது சும்மா மக்களின் புரிதலுக்காக போட்டு வச்சிருக்கேன் ராஜேஷ்!

    ஆன்மீகத்தை Dilute செய்வதை ஒரு சில தீவிர உள்ளங்கள் ஏற்றுக் கொள்வதில்லை! ஆனாலும் அவிங்களும் அடியார்கள் தானே!
    நான் சொன்னா கோவிச்சிக்கிட்டு ஏத்துக்காதவங்க, என்னிக்காச்சும் ஒரு நாள், பயன்பெறும் மற்ற அடியார்கள் சொன்னா, அப்போ புரிஞ்சிப்பாங்க என்பதற்காகத் தான் அவற்றைத் திருச்சுற்று வாசகமா இட்டு வச்சிருக்கேன்! :)

    இப்போ, பல்பம் சாக்பீசிலும், பத்மநாபனைக் காணும் உங்கள் பின்னூட்டமும் சேர்ந்து கொண்டது! :)
    மந்திர ஜபங்களை வெறுமனே உச்சரிப்பதைக் காட்டிலும், இப்படி அன்றாட வாழ்விலும் பகவானைப் "பாவிப்பது" தான் முக்கியம்! பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே!

    //மிக்க நன்றி ஆண்டாள் sorry KRS//

    :)
    என் தோழிக்குச் சொன்னா என்ன? எனக்குச் சொன்னா என்ன? என்னிடம் சொன்னாலும், அதைக் கோதையிடமோ, இல்லை என் தோழனிடமோ கொடுத்து விடுவதே என் வழக்கம்! :)

    ReplyDelete
  23. //இராமானுஜர் சைவ குடும்பத்தில் பிறந்தவரா!
    கேள்வி பட்டேன்! இது உண்மையா//

    இராமானுசர் ஸ்மார்த்த குடும்பத்தில் பிறந்தவர்! வடமா என்பார்கள்! அத்வைதிகள் தான்!

    இராமானுசர் குடும்பத்தைச் சைவர்-ன்னு குறிப்பிட்டுச் சொன்னா, வைணவர்கள் சிலர் சண்டைக்கு வந்தாலும் வருவாங்க! என் முந்தைய பதிவுகளில் வந்தும் இருக்காங்க! :)
    காந்திமதி என்பது, இராமானுசரின் அன்னை பெயர்! ஆசூரி சோமயாஜி என்பது தந்தையின் பெயர்! அந்தக் காலத்தில் காந்திமதி என்றெல்லாம் அம்மன் பெயரை, வைணவக் குடும்பத்தில் வைப்பாங்களா என்பது சற்றுச் சந்தேகமே! :)

    இப்படியெல்லாம் உள்ளது உள்ளபடி எழுதினா, எனக்கு ரெண்டு பக்கமும் அடி தான்! :)
    So, me the finger on the lips now :)

    முருகா, மகான்களின் சரித்திரமே ஆனாலும், அதை மனிதர்களுக்குப் பிடித்தா மாதிரி, தான் சார்ந்துள்ளா மாதிரி எழுதணும் என்று எதிர்பார்ப்பு குறையும் நாள் எந்த நாளோ?

    //எம்பார் சிவ பழமாக இருந்தவர்! அவரை பெருமாள் பக்கம் இழுத்து வந்தாரே இராமானுஜர், சிவன் கோபித்து கொள்ள மாட்டாரா!
    அரியும் சிவமும் ஒன்று. அப்படி என்றால் எம்பார் சிவனிடமே இருந்திருக்கலாமே!//

    ஹா ஹா ஹா
    இதுக்கு குமரன் அண்ணா வந்து பதில் சொல்லட்டும்! அடியேன் அவரை மிஞ்சி ஒன்று சொல்லிடப் போவதில்லை! அப்படியே ஏதேனும் இருந்தால், அவர் கூறிய பிறகு சொல்கிறேன்!

    ReplyDelete
  24. மிக்க நன்றி KRS!
    அப்படியே
    கோப்பி பண்ணி கூடல் ராமானுஜர் பதிவு வந்தா போட்டுடறேன்!

    ReplyDelete
  25. KRS... romba nalla irunthuthu.... vazhthukkal...

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP