Sunday, July 11, 2010

நரசிம்மனைக் கடித்த கவி

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


இடம்: திருக்கோளூர்
நேரம்: ஒரு இனிய மாலை நேரம்

(ஒரு வைணவப் பெரியவர், தன் சீடர்களோடு ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஊர் எல்லை அருகே, ஒரு இளம் பெண் கையில் சில மூட்டைகளுடன் எதிரே வந்து கொண்டிருக்கிறாள். இதைக் கவனித்த அந்தப் பெரியவருக்கு, ஒரு விநாடி குழப்பம், பின்னர் ஐயம்! நேரே அந்தப் பெண்ணிடம் செல்கிறார் ...)



பெரியவர்: பெண்ணே! மூட்டைகளுடன் எங்கு சென்று கொண்டிருக்கிறாய், இரவு துவங்கும் இந்த வேளையிலே?

பெண் (அந்தப் பெரியவரை வணங்கி): இந்த ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கிறேன்!

பெரியவர் ('சந்தேகப் பட்டது சரிதான்' என்று நினைத்து): ஏனம்மா?

பெண்: இந்த ஊரில் இனிமேல் என்னால் இருக்க முடியாது!

பெரியவர் (அதிர்ச்சியுடன்): இந்த ஊரை விட்டு யாரும் போகமாட்டார்கள் என்று நம்மாழ்வார் சொன்னது பொய்யோ?

பெண்: என்ன? நம்மாழ்வார் உங்களிடம் சொன்னாரா?

பெரியவர்: 'எல்லோரும் திருக்கோளூருக்கு வருவார்கள்' என்று நம்மாழ்வார் சொன்னதால் தானே அடியேனும் சீடர்களும் இங்கு வந்தோம்! இங்கு வந்தால் வேறு விதமாய் இருக்கின்றதே?

பெண் (சற்றுக் குழம்பி): நம்மாழ்வார் பரமபதம் சென்று பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதே? அவர் உங்களிடம் எப்படிச் சொல்லி இருக்க முடியும்?

பெரியவர்: இல்லையம்மா! அவர் தானே தன் பாசுரத்தில், 'திருக்கோளூருக்கு எல்லோரும் வருவார்கள், ஆனால் செல்ல மாட்டார்கள்!' என்றாரே?



(பாசுரத்தைச் சொல்கின்றார் பெரியவர் ...)

*உண்ணும் சோறு பருகு நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்* எம்பெருமான் என்றென்றே* கண்கள் நீர் மல்கி*
மண்ணினுள் அவன் சீர்* வளம் மிக்க அவனூர் வினவி*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே!
திருவாய்மொழி 6-7-1

பெரியவர்: அதுவும், பெண்கள் புகும் ஊர் (இளமான் புகும் ஊர்) என்றாரே ஆழ்வார்! பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே?

(பாசுரத்தைக் கேட்ட அந்தப் பெண், சற்றுத் தயங்கி நிற்கின்றாள் ...)

பெரியவர்: சரி ... நீ எதற்கு இந்த ஊரில் இருக்க முடியாது என்கின்றாய்?

பெண்: இந்த ஊரில் இருக்க எனக்குத் தகுதியே இல்லை!

பெரியவர்: அப்படி என்ன தகுதி வேண்டும், திருக்கோளூரில் இருப்பதற்கு?

(அந்தப் பெண் சொல்லத் துவங்குகின்றாள் - 81 வரிகள் ...)

அழைத்துவரச் சென்றேனோ அக்ரூரரைப் போலே!
...
பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
...
ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
...
இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
...

(இதைக் கேட்கின்ற பெரியவர் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய, பிரமை பிடித்து நிற்கின்றார் - அந்தப் பெண் முடித்த பின்பும், வெகு நேரம் வரை!

அந்தப் பெண் மீண்டும் உரக்கக் கூப்பிட்டவுடன் தான், பெரியவருக்கு நினைவு திரும்புகின்றது ...)

பெண் (வருத்தத்துடன்): பெரியவரே! முனிவர்களும், ஆழ்வார்களும், ஆசாரியர்களும், அடியவர்களும் செய்ததில் ஒன்று கூட அடியேன் செய்யவில்லையே! எனவே, அவர்களும், வைத்த மாநிதியும் இருக்கும் இந்தப் புகழ் பெற்ற திருக்கோளூரிலே அடியேன் இருப்பதற்குத் தகுதியே இல்லை! எனவே இங்கிருந்து புறப்பட முடிவு செய்துள்ளேன்!

(திகைத்து நிற்கின்றார் அந்தப் பெரியவர் ...)

உண்மையிலேயே அந்தப் பெண்ணிற்குத் தகுதி இல்லையா?

***



ந்தப் பெண்ணின் மன நிலையும், திருமாலை அருளிச் செய்யும்போது, தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு இருந்த மன நிலையும் சற்றே ஒத்து நோக்கத் தக்கது.


'என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை; எனவே எம்பெருமான் எனக்குக் காட்சி தரப் போவதில்லை!' என்று அடிப்பொடியார், அரங்கன் சன்னிதியில் இருந்து விலகிச் செல்கின்றார் [...வெள்கி, போய், விலவறச் சிரித்திட்டேனே - திருமாலை-34].

எங்கே இருக்கின்ற உண்மையான ஒரே தொண்டனும் விலகிச் சென்று விடுவானோ என்று பயந்து, அரங்கன் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கூவி அழைத்தானாம்!

"ஆழ்வீர்! போகோதீர்! திரும்பி வாரும்! எப்போது நீர் 'எனக்குத் தகுதியில்லை' என்று நினைக்கும் நிலைக்கு வந்து விட்டீரோ, அப்போதே உமக்கு எம்மை அடையத் தகுதி வந்தது" என்று கூறுகின்றான்.

தான் உலகளந்த கோலத்தை அவருக்குக் காட்டி, அவரைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்கின்றான்.

அரங்கனைக் கண்டு கொண்ட ஆழ்வார், அடுத்த பாசுரத்தில் தான் உலகளந்த காட்சியைப் பாடி மகிழ்கிறார் [தாவி அன்று உலகமெல்லாம் தலை விழாக் கொண்ட எந்தாய் ...' - திருமாலை 35])

இந்தப் பெண்ணின் தகுதிக்கு வருவோம் ...

***

தொண்டரடிப்பொடி ஆழ்வார் போலவே, 'எனக்குத் தகுதியே இல்லை' எனும் மன நிலை வந்தவுடனேயே அந்தப் பெண்ணுக்கும் அவனை அடையத் தகுதி வந்து விட்டது!

ஆனால், எம்பெருமான் வரவில்லை! பதிலாக, எம்பெருமானார் வந்து விட்டார்!

ஆம்! அந்த வைணவப் பெரியவர் வேறு யாருமல்ல! ஸ்ரீ இராமாநுஜர்!



அந்தப் பெண்ணின் பெயர் குறிக்கப்படாவிட்டாலும், அவள் கூறிய 81 அழகான வரிகள், 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்' என்று அழைக்கப் படுகின்றது ('திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்' என்றும் கூறப்படுவதுண்டு)! வைணவத்தின் சாரம் என்றே இதனைக் குறிப்பிடலாம்!


(இருவரில் யார் முதலில் வரவேண்டும்? எம்பெருமானா, எம்பெருமானாரா?


நாம் தவறு செய்யும் நேரங்களில், நம் உள்ளே இருக்கும் அவன் [ஆத்மா/மனசாட்சி/...], 'இது இவன் விதி, முன் வினைப் பயன்; அனுபவிக்கிறான்' என்று எதுவும் செய்யாது இருந்து விடுவான். ஆனால், நம் ஆசானோ, நாம் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டி, நம்மை நல்வழிப் படுத்துகின்றார்! எனவே, உள்ளே இருக்கும் அவனை விட, வெளியே இருக்கும் ஆசானே நன்று!)


இந்தப் பெண் ஊரை விட்டுச் செல்வது கண்டு பொறுக்காத வைத்த மாநிதிப் பெருமானே இவளுக்கு ஆசானாக, எம்பெருமானாரையே அனுப்பி வைக்கின்றான்!

ஆசானே எதிரே வந்து ஆட்கொள்ளும்படி இருந்த அந்தப் பெண் புண்ணியம் செய்தவள் தானே?

சரி, இந்தப் பெண்ணின் கதையைத் தொடருமுன்பு, கொஞ்சம் புராணம் படிக்கலாம் வாருங்கள்!

***

பிரம்மாவின் ஐந்தாவது மகன், கர்த்தமப் பிரஜாபதி. படைப்புக்காகப் படைக்கப் பட்ட அவன், அதை வெறுத்து, திருமால் அருகில் இருக்கும் மோட்சம் வேண்டுமெனத் தவம் செய்கின்றான். இவன் தவத்தைக் கண்ட ஸ்ரீதேவி, 'ஏன் இவனுக்கு அருள் தர மறுக்கிறீர்கள்?' என்று எம்பெருமானிடம் கேட்க, அவனிடமிருந்து, புன்சிரிப்பே பதிலாக வருகின்றது.

திருமால் பதில் சொல்லாததால் கோபமடைந்த ஸ்ரீதேவி, பூவுலகில் வில்வாரண்யம் எனும் தலத்திற்கு வந்து, அங்குள்ள ஒரு தாமரையில் தன்னை மறைத்துக் கொள்கிறாள்.

திருமகளைத் தேடி வில்வாரண்யத்திற்கு வந்த திருமால், தன் இரு கண்களையும் ஒவ்வொன்றாக மூடித் திறக்கின்றார்! மற்ற எல்லாத் தாமரைகளும், மலர்ந்து, குவிந்து, பின் மீண்டும் மலர, ஒரே ஒரு தாமரை மட்டும் எப்போதும் மூடியிருக்கின்றது! ஸ்ரீதேவி அந்தத் தாமரையில் இருக்கின்றாள் என்று தெரிந்து, மலருடன் சேர்த்துத் திருமகளையும் அணைத்துக் கொள்கின்றார் திருமால்!

(வில்வாரண்யம், ஸ்ரீதேவி வந்து இருந்ததால் ஸ்ரீபுரி என்றும், திருமால் ஸ்ரீதேவியை அணைத்துக் கொண்டதால் ஆலிங்கன புரி என்றும் அழைக்கப் படுகிறது)


திருமாலைப் பின் தொடர்ந்து வந்த கர்த்தமன், 'இது தான் தக்க சமயம்' என்றெண்ணி, தனக்கு மோட்சம் வேண்டுமெனக் கேட்டு, இருவரின் கால்களையும் பிடித்துக் கொண்டான். திருமால், அவனிடம், 'உனக்கு மோட்சம் கலியுகத்தில் தான் கிட்டும்! அதுவரையில் ஒவ்வொரு யுகத்திலும் நீ பிறப்பாய்!' என்று கூறி மறைகின்றார்.

***

ர்த்தமன், அடுத்த யுகமான திரேதா யுகத்தில் உபரிசரவசு எனும் வடநாட்டு (நாட்டின் பெயர் தெரியவில்லை) மன்னனாகத் தோன்றினான். அரசை விட்டு, தவம் செய்யக் கிளம்பினான். தன் தவ வலிமையால், ஆகாயத்தில் பறக்கக் கூடிய சக்தி பெற்றான் (உபர் - ஆகாயம்).

உபரிசரவசு ஒரு முறை ஸ்ரீபுரியின் மீது பறக்கும்போது, மேலே செல்ல முடியாமல் கீழே விழ, அங்கேயே அவன் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். எம்பெருமான் அவன் முன் தோன்றி, முன்பிறப்பைப் பற்றிக் கூறி, ஸ்ரீபுரிக் கோயிலில் தொண்டு செய்து வருமாறு பணித்தார்.
***

துவாபர யுகத்தில், காவிரி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில், ககூஸ்த பட்டினம் எனும் நாட்டை, வஜ்ரகோசன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மந்திரி, சங்கபாலன். வஜ்ரகோசனுக்குப் பிள்ளைகள் இல்லாதலால், சங்கபாலன் மகனான வைரமேகன் என்பவனைத் தத்து எடுத்து, இளவரசுப் பட்டம் சூட்டினான். விரைவிலேயே இறந்துவிடுகின்றான் வஜ்ரகோசன்.

நாட்டை ஆளும் பொறுப்பு, சங்கபாலனிடம் வருகின்றது. தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்து, யாத்திரை செல்கின்றான் சங்கபாலன். ஸ்ரீபுரிக்கு வருகின்றான். அந்த இடத்தின் மகிமையைக் கேள்விப் பட்டு, அங்கேயே இருந்து, யாகங்கள் பல செய்து வந்தான். ஒருமுறை யாகத்தில் அவிர் பாகத்தை ஏற்கத் திருமால் தோன்றிய போது, சங்கபாலனுக்குத் தன் முந்தைய பிறவிகள் பற்றித் தெரிந்து கொள்கின்றான். அவன் திருமாலிடம், 'கலியுகத்திலாவது எனக்கு மோட்சம் நிச்சயம் தானே?' என்று கேட்க, அவர் புன்னகையுடன் மறைகின்றார்.
***

ர்த்தமனே கலியுகத்தில், கலியனாகத் தோன்றுகின்றான்!


கர்த்தமன் தவம் செய்த ஸ்ரீபுரியே - நம் (திருவாலி) திருநகரி! (ஸ்ரீ - திரு, புரி - நகரி) இதன் அருகில் உள்ள திருக்குறையலூரில் தான் நம் கலியனின் திருவவதாரம்!

நான்கு யுகங்களிலும் பிறந்த ஒரே ஆழ்வார் இவர் தான்!

(கர்த்தமனின் தந்தையான பிரம்மன், 'உன்னைப் படைத்ததன் காரணமே படைப்புத் தொழிலைச் செய்யத்தான்! எனவே அதைச் செய்!' என்று ஆணையிட்டதைக் கேட்காமல், தவம் செய்யச் சென்றதாலேயே கர்த்தமனுக்கு நான்கு யுகங்களிலும் பிறப்பு ஏற்பட்டது என்றும் சொல்வதுண்டு!)

திருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் கதையையும் முடித்து விடலாம் ...

***
இராமாநுஜர், அந்தப் பெண்ணை மீண்டும் ஊருக்குள் அழைத்துச் செல்கிறார். வைத்தமாநிதியைத் தரிசித்து விட்டு, அந்தப் பெண்ணையும் தன் சீடர்களில் ஒருவளாக்கிக் கொள்கிறார்.

அதுவரை வேறு எந்த வீட்டிலும் உணவு அருந்துவதைப் பழக்கமாகக் கொள்ளாத ஸ்ரீ இராமாநுஜர், அன்று அவள் வீட்டில் உணவு அருந்தியதாகக் கதை!

இராமானுஜரிடம், நம் திருக்கோளூர் பெண் பிள்ளை, தன் 81 வரிகளில் 12 ஆழ்வார்களைப் பற்றியும் கூறியுள்ளாள்.

***

ம் ஒவ்வொருவரையும் எம்பெருமான் தன்னிடமும், தன் அடியார்களிடமும் சேர்த்துக் கொள்ளும் விதமே வியப்பானது!

பலருக்கு, ஒரு ’கடினமான சோதனை’ வரும்! அதன் மூலம் அவன் பக்கம் செல்வோம்!

எல்லா ஆழ்வார்களுக்கும் கடினமான சோதனைகள் வந்தன! அதன் மூலம், அவர்கள் பூமிக்குத் தாம் வந்த காரணத்தை அறிந்தனர்!

ஆனால் மங்கையாருக்கு மட்டும், ஒரு 'கடிச்' சோதனை வந்தது! நரசிம்மனுடைய காலைக் கடிக்கும் சோதனை!


ஆழ்வார், எம்பெருமானுடைய காலில் உள்ள நகையைக் கேட்க, அவன், 'நீயே கழற்றிக்கொள்' என்கிறான்! ஆழ்வார் மிக முயன்றும் அது வராமல் போக, அதைக் கழற்ற, கடைசியில் அவன் காலையே கடிக்கிறார் ஆழ்வார்!

(சிலர், எம்பெருமானின் கையில் உள்ள மோதிரத்தை எடுப்பதற்காகவே கடித்ததாகக் கூறுவர்.

வேறு சிலர், தாயாரின் காலில் உள்ள மெட்டியைக் கழற்றவே ஆழ்வார் தாயாரின் காலைக் கடித்ததாகவும் கூறுவர். தாயார், 'ஆழ்வார் மங்களகரமான பொருளைக் கடித்து எடுக்கின்றாரே?' என்று எம்பெருமானைக் கவலையுடன் பார்க்க, 'இது கலியுலகம். இங்கு யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' எனும் பொருளில், 'இவன் கலியனோ!' என்று எம்பெருமான் உரைத்ததாகவும் கூறுவர்.

ஆழ்வார் இருவரில் யாரைக் கடித்தார், எதைக் கடித்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 'கடித்தார்' என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை!)

அதன் பிறகே, திருமங்கையாரின் செவியில் எம்பெருமான் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறி, அவரைத் தன் பக்கம் அழைத்துக் கொள்கின்றான்.


ஒவ்வொரு ஆழ்வாரையும், எம்பெருமான் எவ்வாறு தம்மிடம் அழைத்துக் கொண்டான் என்பதை, நம் திருக்கோளூர்ப் பெண் பிள்ளை, அழகாகக் கூறுகின்றாள், சில வரிகளில்!

மற்ற ஆழ்வார்களுக்கும், கலியனுக்கும் உள்ள வேறுபாட்டை, நம் பெண் பிள்ளை வார்த்தைகளில் இருந்தே நாம் அறியலாம்:

கடித்து அவனைக் கண்டேனோ கலியனைப் போலே!

***

திருமங்கையாழ்வார் இயற்றிய 6 திவ்வியப் பிரபந்தங்களும், நம்மாழ்வார் இயற்றிய தமிழ் வேதங்களுக்கு விளக்கமான 6 தமிழ் உபநிடதங்களாகத் (மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தஸ், நிமித்தம், ஜோதிடம்) திகழ்கின்றன. மணவாள மாமுனிகள்,

மாறன் பணித்த தமிழ் மறைக்கு* மங்கையர்கோன்
ஆறு அங்கம் கூற அவதரித்த* - வீறுடைய
'கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று!' என்று காதலிப்பார்*
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


என்று கலியன் பிறப்பினையும், சிறப்பினையும், படைப்பினையும் பற்றிக் கூறுகின்றார்.


நாமும் நம் கலியன் ஆசியுடன், அவர் இயற்றிய முதல் பிரபந்தமான பெரிய திருமொழியில், அவர் அனுபவித்த நரசிம்மனைக் (51 பாசுரங்கள்) கொண்டாடுவோம்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி*
வாழி குறையலூர் வாழ் வேந்தன்* - வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்* மங்கையர்கோன்
தூயோன் சுடர் மானவேல்.
- எம்பெருமானார்

எங்கள் கதியே!* இராமநுச முனியே!*
சங்கை எடுத்தாண்ட தவராசா!* - பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்*
தங்கு மனம் நீ எனக்குத் தா.
- எம்பார்

- பெரிய திருமொழி நரசிம்மர் விரைவில் வருவார்

15 comments:

  1. Thanks 4 the beautiful post (great story)!
    Especially, thanks for the beautiful photo of Vaithamaanidhi Perumal. :))

    Nava tirupati-kku vandhuteenga!!!
    Nava Tirupatiyil irukkum Perumal pathi ezhudhalaame?
    (Just a suggestion!)

    ReplyDelete
  2. //எங்கே இருக்கின்ற உண்மையான ஒரே தொண்டனும் விலகிச் சென்று விடுவானோ என்று பயந்து, அரங்கன் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கூவி அழைத்தானாம்!//

    Perumal-kke Emotional Blackmail!! :))

    ReplyDelete
  3. நெஞ்சுக்கு இருள்கடி தீபம்---
    அடங்காநெடுமபிறவி
    நஞ்சுக்கு நல்ல அமுதம்--- தமிழ் நன்னூல்துறைகள்
    அஞ்சுக்கு இலக்கியம், ஆரண சாரம், பரசமயப் பஞ்சுக்கு அனலின் பொறி --- பரகாலன் பனுவல்களே - கூரத்து ஆழ்வான்

    ReplyDelete
  4. haiyo...enna ithu...
    enga robinhood azhwar-aa inikki panthal-la!
    wow! vaa kaliyaa, vaa! :)

    ReplyDelete
  5. மனம் குளிர்ந்துவிட்டது கலியனின் பெருமையையும் திருக்கோளூர் பெண்பிள்ளையின் பெருமையும் படித்து! அருமை அருமை!

    ReplyDelete
  6. ஆம்! அந்த வைணவப் பெரியவர் வேறு யாருமல்ல! ஸ்ரீ இராமாநுஜர்!

    Aahaa! Arpudam . suspensaa kadaiseela solliteengale!

    கர்த்தமனே கலியுகத்தில், கலியனாகத் தோன்றுகின்றான்!

    Arputham. Mudal muraiyaaga ketkiren. மிக்க நன்றி!

    ReplyDelete
  7. எளியேன் சிறியேன் அடியேன் ஒரு சிறு சந்தேகம்.
    கலியன் என்றால் வீரனா! அல்லது திருடனா!

    கலியன என்றால் என்ன! கலிகன்றி என்றால் என்ன!
    இரண்டும் ஒன்றா!

    ReplyDelete
  8. Srimathe Ramanujaya Namaha

    Very good writing on Kalliyan..i enjoyed reading your post rangan swamin. Could you provide the pranam or any source of Kaliyan's murpiravi.

    Adiyen
    Srivathsan

    ReplyDelete
  9. //Nava tirupati-kku vandhuteenga!!!
    Nava Tirupatiyil irukkum Perumal pathi ezhudhalaame?
    (Just a suggestion!)//

    Hi

    Thanks for your suggestion.

    I plan to write about as many Dhivya DhEsams as possible. But only Narasimma should (& can) give his blessings to realize my plans.

    ReplyDelete
  10. //எளியேன் சிறியேன் அடியேன் ஒரு சிறு சந்தேகம்.
    கலியன் என்றால் வீரனா! அல்லது திருடனா!

    கலியன என்றால் என்ன! கலிகன்றி என்றால் என்ன!
    இரண்டும் ஒன்றா!//

    பல கேள்விகள்! அடியேனால் முடிந்த வரை விளக்குகிறேன்.

    ’கலி’ எனும் சொல்லுக்குப் பொருள்கள்:

    ஓசை, வலிமை, செருக்கு, வறுமை, துன்பம் (Calamity), மன எழுச்சி

    Noun: கலி (யுகம்)

    ’கலி’ எனும் சொல்லுக்குத் ’திருடன்’ என்ற பொருள் காணப்படவில்லை!!

    திருமங்கையார், நாராயணனின் மோதிரத்தை எடுக்க முயற்சி செய்கிறார். அது முடியாமல் போக, எம்பெருமான் தன் தேவியிடம் புன்சிரிப்புடன், ’ஒரு மோதிரத்தைக் கூட எடுக்க முடியவில்லை; இவனா பலம் மிக்கவன்?’ என்ற பொருளில், ‘இவன் கலியனோ?’ என்று கேட்டதாகத் தான் பெரும்பாலான் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

    இலக்கணப் பொருள் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பார்த்தால், ‘கலியன்’ எனும் சொல்லுக்கு, ‘பலம் மிக்கவன்’ என்ற பொருளே பொருந்தும்.

    ’செருக்கு மிக்கவன்’ என்ற பொருள் வரலாற்று ரீதியாகப் பார்த்தால் (செருக்குடன் தானே ஆழ்வார் அவன் காலைப் பற்ரினார்?) பொருந்தினாலும், நாம் அந்தப் பொருளை எடுத்துக் கொள்ளக் கூடாது (அப்படி எடுத்துக் கொண்டால், நாம் அவரை ‘செருக்கு மிக்கவன்’ என்று அழைப்பது போலாகி விடும்; அது தவறு).

    பிற்பாடு, பலர் தம் வியாக்கியானங்களில், ‘இவன் கலியனோ?’ எனும் சொற்றொடருக்குப் பல கதைகளைக் கூறி, பல விளக்கங்களைக் கூறியுள்ளனர். சொல்ல முயற்சித்தனர் (அடியேன் கதையிலும் இப்படி ஒரு விளக்கம் கூறவே முயன்றேன்).

    எனவே ’கலியன்’ எனும் சொல்லுக்கு, ’பலம் மிக்கவன்’ என்ற பொருளே சாலச் சிறந்தது.

    கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல், வெயிலால் வாடுதல், பதனழிதல் (வாழைப்பழம் கன்றி விட்டது என்றால், பழம் வாடிக் கெட்டுவிட்டது என்று பொருள்).

    கன்றி - ‘கன்றி’ விட்டது; கெட்டுவிட்டது; என்ற பொருள்.

    கலி கன்றி - கலி கெட்டுப்போய் விட்டது;

    கலிகன்றி - சேர்த்துச் சொல்லும்போது, ’கலியையே கெட்டுப் போய்விடச் செய்பவன்’ என்ற பொருள்.

    வாழி! கலிகன்றி - கலியைக் கெட்டுவிடச் செய்பவனே! அழிப்பவனே! நீ வாழி!

    ’கலியன்’, ’கலிகன்றி’ இரண்டும் ஒன்றா? - நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  11. //
    Very good writing on Kalliyan..i enjoyed reading your post rangan swamin. Could you provide the pranam or any source of Kaliyan's murpiravi.

    Adiyen
    Srivathsan//

    I got Mangai AzhvAr's previous births from 2 sources:

    I have heard this story in my younger days, during one of the discourses.

    This story is well detailed in the Tamil Book 'ஆழ்வார்கள் வரலாறு' by வைணவச் சுடராழி டாக்டர் எதிராஜன் (Pages 205-208). Apparently, his references are:

    1. குரு பரம்பரை ப்ரபாவம்
    2. உபதேச ரத்தின மாலை
    3. வைணவத்தின் ஆழ்வார்கள் கால நிலை - டாக்டர் எஸ் குலசேகரனார்
    4. தமிழகம் - வரலாறும் பண்பாடும் - பேராசிரியர் டி.ஏ.செல்வம்
    5. நம்மாழ்வாரும் தமிழ் நாடும் - திரு.வி.க

    This book has been blessed by

    ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீபெரும்புதூர்,

    ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீகலியன் வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள்

    and

    ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி 50வது பட்டம், ஸ்ரீ ரங்கனாராயண ஜீயர் ஸ்வாமி மடம், ஸ்ரீரங்கம்

    So I assumed that Dr எதிராஜன், the Author of the Book must have some home work before stating these stories in his book.

    Unfortunately, however, I have not gone into all of his references and find out where this story appears.

    On the other hand, if you are able to find out something, please let me know as well. I will be very glad to add these references to my repositories.

    Thanks and Best regards
    தாஸன்
    ரங்கன்

    ReplyDelete
  12. //Unfortunately, however, I have not gone into all of his references and find out where this story appears.//

    Madhavipanthal Editor D. Raghavan has realized that the story of Thirumangai AzhvAr's previous Birth is available as 'Sthala PurANA' for ThiruvAli-Thirunagari Divya DhEsam.

    Thanks Raghavan!

    ReplyDelete
  13. சிலர், எம்பெருமானின் கையில் உள்ள மோதிரத்தை எடுப்பதற்காகவே கடித்ததாகக் கூறுவர்.

    வேறு சிலர், தாயாரின் காலில் உள்ள மெட்டியைக் கழற்றவே ஆழ்வார் தாயாரின் காலைக் கடித்ததாகவும் கூறுவர். தாயார், 'ஆழ்வார் மங்களகரமான பொருளைக் கடித்து எடுக்கின்றாரே?' என்று எம்பெருமானைக் கவலையுடன் பார்க்க, 'இது கலியுலகம். இங்கு யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' எனும் பொருளில், 'இவன் கலியனோ!' என்று எம்பெருமான் உரைத்ததாகவும் கூறுவர்.

    ஆழ்வார் இருவரில் யாரைக் கடித்தார், எதைக் கடித்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 'கடித்தார்' என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை::)))



    நீங்கள் சொல்றத பார்த்தால்
    பாசுரம் தெளிவாக நமக்கு கிடைத்த அளவிற்கு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறு சரியாக கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

    பாசுரத்தை நாதமுனிகளுக்கு சொன்ன நம்மாழ்வார் ஆழ்வார்களின் காலத்தையும் வாழ்க்கை வரலாற்றையும் சொல்லியிருந்தால் இந்த குழப்பமே இருந்திருக்காது. what to do its ok!adjust pannikalaam.

    ReplyDelete
  14. பெரிய திருமொழி நரசிம்மர் விரைவில் வருவார்:)

    :))

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP