Tuesday, August 31, 2010

மணிமேகலையில் தமிழ்க் கடவுள்!

மணிமேகலை:

சிலம்பில் திருமாலைப் பற்றிய பல நுண்ணிய, அடுக்கடுக்கான தகவல்களைப் பார்த்தோம்! இப்போது மணிமேகலைக்கு வருவோம்!

இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம்-மணிமேகலை!
ஒன்றின் கதைக் களன் இன்னொன்றின் தொடர்ச்சி!

சிலப்பதிகாரக் கதையினை இளங்கோ எழுதினாலும், அதை அவருக்கு முதலில் சொன்னவரே சீத்தலைச் சாத்தனார் தான்! இதைச் சிலம்பின் பாயிரத்திலேயே குணவாயிற் கோட்ட நிகழ்வில் நாம் காணலாம்!
சிலம்பைச் "சொன்னவர்", மணிமேகலையை "எழுதினார்"! :)



அடிப்படையில்...
* சிலம்பு - சமயம் சாராத காப்பியம்
* மணிமேகலை - பெளத்தக் காப்பியம்

அதனால், கொள்கை விளக்கமாக இல்லாமல், சிலம்பில் "கதைச்சுவை" அதிகம்!

அதற்காக மணிமேகலையில் கதைச்சுவை இல்லை என்று பொருளாகி விடாது! இதிலும் நுட்பமான கதைக் களன் உண்டு! துறவியைக் காதலிக்கும் அரசன்-ன்னு ஒரு கதைக்கரு வைத்தால் சும்மாவா? = மணிமேகலை-உதய குமாரன்! பெண் சாமியாரைக் காதலிக்கும் அமைச்சர்-ன்னு எடுத்தா இப்போ பிச்சிக்கிட்டு போகாது? :)


ஆனால் கதைக்குத் தரும் முக்கியத்துவத்தை விட, ஆசிரியர், தத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகிறார்! அது படைப்பாளி என்ற முறையில் அவரின் சொந்த உரிமை!

அதனால் மக்களின் வாழ்வியல், குரவைக் கூத்து, வேலன் வெறியாடல், தமிழிசை, மருத்துவம், வேளாண்மை, நாட்டுப் பாடல்கள் - இது போன்ற சமுதாயத் தகவல்கள், சிலம்பைப் போல் மேகலையில் இல்லை!

ஆனாலும் உயரிய தத்துவங்கள் உண்டு! பசிப் பிணி நீக்கல் உண்டு!
* உண்டி (உணவு) கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
* பசியும் பிணியும் பகையும் நீங்கி
*
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்
ஆற்றா மாக்கள் அரும்பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை!

கள்ளுண்ணாமை கூட உண்டு! ஆனா அதெல்லாம் நாம கேட்போமா என்ன? :)
திருக்குறளை எவ்வளவு தான் கொண்டாடினாலும், அதில் உள்ள புலால் மறுத்தல் /கள்ளுண்ணாமை - இதெல்லாம் மட்டும் சாய்சில் விட்டுருவோம்-ல்ல? :)
மனிதர்களுக்கு அறத்துப் பால் மட்டும் சொன்னால் போதுமா? காமத்துப் பாலும் வேண்டும்-ல்ல? :)




மணிமேகலையில், சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை என்னும் பகுதி! கிட்டத்தட்ட ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரத்தில் வரும் ஞான சபை அறிஞர்களின் விவாதம் போலத் தான் இருக்கும்! அதில் பல சமயங்களின் தத்துவங்கள் முன் வைக்கப்படுகின்றன!
1. வைதீகம்,
2. சைவம்,
3. பிரம வாதம்,
4. உலகாயுதம்,
5. சமணம்,
6. பௌத்தம்,
7. சாங்கியம்,
8. நையாயிகம்,
9. வைசேடிகம்,
10. மீமாம்சை
....என்று பல சமய/தத்துவ ஞான மரபுகள் பற்றி, மணிமேகலை, அந்தந்த அறிஞர்களோடு விவாதம் செய்கின்றாள்!
வைதீகனை,ஆசீவகனை, இன்னும் பலரைக் கேள்வி கேட்டு மடக்குகின்றாள்! ஆனால் வைணவனை ஏனோ மடக்கவில்லை! :) ஏன்?

இந்த விவாதத்தில் அவரவர் மதத் தத்துவங்கள் விரித்துச் சொல்லப்படுகின்றன!
ஆனால் வைணவத்துக்கு மட்டும் பெரிதாக ஒன்றும் சொல்லப்படவில்லை! ஒரே வரியில் முடிந்து விடுகிறது! அதான் மணிமேகலை மடக்கவில்லை! மடக்க ஒன்றுமில்லை!

காதல் கொண்டு, கடல்வணன் புராணம்
ஓதினன், நாரணன் காப்பு என்று உரைத்தனன்!!


காதல் கொள்ளுதல், நாரணனே காப்பு - இவ்வளவு தான் தத்துவம்! :)
* காதல் = இறை அன்பே முக்கியம், ஞான-கர்மங்களை விட!
* நாரணன் காப்பு = இறைவன் ஒருவனே உயிர்களுக்கு எல்லாம் காப்பு! சரணாகதி! அவ்வளவு தான்! இதுக்கு மேல பெருசா ஒன்னும் இல்ல! :)

ஏன் இப்படி? வைணவத்துக்கு-ன்னு தத்துவம், ஒன்னு கூடவா இல்லை?

சமயக் கணக்கர்கள், மணிமேகலையிடம் என்னென்னவோ பேசுகிறார்கள்! அதில் ஆசீவகன் என்பவனை மணிமேகலை கேள்வி கேட்டு மடக்குகிறாள்! ஆனால் இந்த வைணவர் மட்டும் ஒரே வரியில் முடித்து விட்டாரே? ஏன்??

ஏன்னா, அப்போ "வைணவம்"-ன்னு ஒன்னு இல்லவே இல்லை! அது மிகவும் பின்னால் வந்த சமயம்! :)



உலகம் மாயை அல்ல! உலகம் உண்மை! இதைச் சொன்ன சமயத் தத்துவம் = வைணவம்!
மனத்தைப் பக்குவமாய்ச் சமைப்பது எதுவோ அது சமயம்! ஆனால் "மதம்" என்பது கூடாது!

உலகமே மாயை, சிற்றின்பம் சிறுமை, பேரின்பம் தான் பெருமை என்ற சொல்லிக் கொண்டிருந்த அந்நாளைய சமய வெளியில்...
சங்கத் தமிழ் மரபை, அகம்-புறம் என்று இரண்டையுமே முன்னிறுத்தி ஒரு விழுமிய மரபும் உருவானது!

இது ஒன்றும் புதிய மரபு அல்ல! ஏற்கனவே சங்க காலத்தில் இருந்தது தான்!
ஆனால்....என்ன....ஒரு கட்டமைப்பாக இல்லை! அமைப்பு ரீதியாக இது நிறுவனப் படுத்தப்படவில்லை!

* மாயோன்-பெருமாள், சேயோன்-முருகன் என்று வாழ்வியலாகத் தான் இருந்ததே தவிர...
* வைணவம் என்றோ, கெளமாரம் என்றோ மத அமைப்பாக இல்லை!


உலகம் உண்மை தான், மாயை அல்ல, அகம்-புறம் என்று வாழ்வியல் - இப்படி சங்கத் தமிழ் மரபை ஒட்டி, தத்துவ நீட்சியாக மட்டுமே இருந்த ஒரு மரபு....
பின்னாளில் "விண்ணவம்/வைணவம்" என்று அமைப்பு கண்டு விட்டது! ஒரு தொல் மரபு, "சமயம்" என்ற புதுப் போர்வை போர்த்திக் கொண்டு விட்டது! இதைத் தான் மணிமேகலையில் பார்க்கிறோம்!

சமயக் கணக்கர் திறம் உரைத்த காதையில், வைணவம் பற்றி அதிகமான தத்துவங்கள் இல்லை! ஒற்றை வரியிலேயே முடித்துக் கொள்கிறார்!
ஏன்னா, வைணவம் அப்போது நிறுவனப்படுத்தப்படவில்லை!
அகம்-புறம் என்று வாழ்வியலாகவே இருந்தது! தத்துவ நீட்சியாகவே இருந்தது!


அதான்...
* காதல் கொண்டு = உன் தன்னோடு உறவு!
* நாரணன் காப்பு = முதற்"றே" உலகு!
இறைவ"னே" அனைத்து உயிர்க்கும் தஞ்சம்! நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்! உன்தன்னோடு-உறவேல்-நமக்கு, அது ஒழிக்க ஒழியாது!

.....என்று மட்டுமே முடித்து விட்டார்! உலகம் உண்மை, மாயை அல்ல! என்று நடைமுறை வாழ்வியலாக முடித்து விட்டார்!

மாயாவாதம், ஜீவாத்மா-மாயை-பரமாத்மா, பசு-பதி-பாசம், ஆசை அறுத்தல் என்றெல்லாம் இதர சமயங்கள் பேச...
வைணவம் மட்டும், அப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தத்துவக் கரை கட்டப்பட்டு, நிறுவனப் படுத்தப்பட்டது...மிகவும் தாமதமாகத் தான்! அது வரை வாழ்வியலை ஒட்டியே அமைந்து இருந்தது!

சிலம்பு-மணிமேகலைக்கு பின்னால் வந்த முதல் சில ஆழ்வார்களும், வாழ்வியலை ஒட்டியே ஈரத் தமிழைப் பொழிந்தனர்! மாயோன்-நப்பின்னை-அகம்-புறம் என்று சங்கத் தமிழ் மரபே அவர்களின் ஈரத் தமிழிலும் காணலாம்!

பின்னால் தான், இராமானுசர் முதலான ஆசார்யர்கள், நடைமுறை வாழ்வியலாக ஏற்கனவே இருந்த ஒன்றுக்கு...பலமான தத்துவக் கரைகளைக் கட்டி, நிறுவனப் படுத்தினார்கள்! சங்கத் தமிழ் மரபாக இருந்ததால் அதை ஒதுக்கி விடாது, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயம், விதப்பொருமை (விசிட்டாத்துவைதம்) என்றெல்லாம் நிறுவனமும் படுத்தி விட்டார்கள்!

இப்படி "நிறுவனப்படுத்தல்" தேவையா? என்று பலமுறை நான் யோசித்ததுண்டு!

* சேயோன்-முருகன் யாராலும் நிறுவனப்படுத்தப்படவில்லை! அதனால் வாழ்வியல்/தொன்மம் என்பதையெல்லாம் நடைமுறையில் இழந்து, ஆலயங்களில் வெறுமனே "சுப்ரமணியன்" ஆகி விட்டான்! வள்ளி-முருகன் காதலைக் கொண்டாடுவார் இல்லை! வள்ளியம்மைக்கு எந்த ஆலயத்திலும் தனி மதிப்பு என்பது கிடையாது!

* மாயோன்-பெருமாள், மிகவும் லேட்டாக, பின்னாளில் தான் நிறுவனப் படுத்தப்பட்டான்! இன்றும் பெருமாள் கோயில் கருவறைகளில் தமிழ் ஒலிக்கிறது! ஓதுவார்கள் போல் ஒரு ஓரமாக இருந்து சொல்லாமல், அர்ச்சகர்களே, ஒவ்வொரு பூசைக்கும் தமிழ் ஓதுகிறார்கள்! மார்கழி மாதத்தில், தமிழுக்கு என்றே விழா எடுக்கிறார்கள் (திருவாய்மொழித் திருநாள்)! ஒரு மாதம் முழுதும், வடமொழி-சுப்ரபாதங்களை ஓதாமல் தள்ளி வைக்கிறார்கள்!

"நப்பின்னை" என்ற பெண்ணின் பெயர் மறைந்து விட்டாலும், அவளை ஒட்டிய "ஆண்டாள்" என்ற பெண் இல்லாமல், எந்தப் பெருமாள் கோயிலும் இல்லை!
"தாயார்" என்று பெண்மைக்குச் சிறப்பிடம் கொடுத்து, அவளைச் சேவித்த பின்னரே, பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்றெல்லாம் ஆகிப் போனது!

"நிறுவனப்படுத்தலில்" லாப-நட்டங்கள் இரண்டுமே உண்டு!
* நஷ்டம் -> சடங்குகள் புகுந்து கொள்ள வாய்ப்புண்டு
* லாபம் -> வாழ்வியலும், தமிழும் அழிந்து விடாமல்..அடுத்த தலைமுறைக்கும் செல்ல ஏதுவாகும்! இறைத் தமிழ் தழைக்கும்!

எதை எவ்வளவு தூரம் நிறுவனப்படுத்துகிறோம், ஓவராக இல்லாமல் அதை எங்கே நிறுத்துகிறோம் என்பதைப் பொறுத்து நன்மை/தீமைகள்...
அதை அவரவர்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்!


சரி, போதும்! பேசு பொருளான = மணிமேகலையில் மாயோன்/திருமால் எங்கெங்கு வருகிறான் என்பதற்கு மட்டும் நாம் வருவோம்!

1. (சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை)

காதல் கொண்டு, கடல்வணன் புராணம்
ஓதினன், நாரணன் காப்பு என்று உரைத்தனன்!!

இதற்கான விளக்கத்தை முன்னரே பார்த்து விட்டோம்!

2.(சிறைக்கோட்டம் அறக்கோட்டம் ஆக்கிய காதை)

இதில் திருமால் உலகளந்த சேதி பேசப்படுகிறது!

நெடியோன் குறள் உருவாகி நிமர்ந்து தன்
அடியிற் படியை அடக்கிய அந்நாள்
(51 - 52)

இவையே மாயோன்/திருமாலின் தமிழ்த் தொன்மையை எடுத்துரைக்கும் அகச் சான்றுகளாக மணிமேகலையில் திகழ்கின்றன!


(Back to Tamizh kadavuL main page)

(குறிப்பு: இந்தத் தொடர் சங்கப் பாடல்களுக்கான முழு விளக்கம் இல்லை! திருமால் சங்க இலக்கியத்தில் எங்கெங்கெல்லாம் வருகிறான் என்பதற்கான அகச் சான்று - அறிதல் முயற்சி மட்டுமே!)

6 comments:

  1. நல்லதிரு அகச்சான்றுகளும் அதன் தொடர்ச்சியாக உங்கள் அகத்தின் சான்றுகளும்... :-)

    ReplyDelete
  2. // குமரன் (Kumaran) said...
    நல்லதிரு அகச்சான்றுகளும் அதன் தொடர்ச்சியாக உங்கள் அகத்தின் சான்றுகளும்... :-)//

    ஒன்னும் புரியலை குமரன் அண்ணா!
    அகச்சான்று தெரியும்! அதென்ன நல்ல திரு அகச்சான்று?

    என் அகத்தின் சான்றா? ஹா ஹா ஹா! மனசுல தோன்றதெல்லாம் சான்றாகுமா என்ன?

    கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க! இந்த இடுகைக்கு நீங்க நிறைய தகவல் சொல்வீங்க-ன்னு எதிர்பார்த்தேன்!

    ReplyDelete
  3. நல்லதொரு அகச்சான்றுன்னு ஒரு சான்று மட்டும் காட்டியிருந்தா சொல்லியிருப்பேன். நீங்க அகச்சான்றா ரெண்டு காட்டுனதால நல்லதிரு அகச்சான்றுகள்ன்னு சொன்னேன். இப்ப புரிஞ்சிருக்குமே. :-)

    ரொம்ப தத்துவம் இல்லாம வைணவம்ன்னு ரெண்டே வரியில சொன்னதால அதுக்கு என்ன காரணம்ன்னு யோசிச்சு உங்களுக்குத் தோணுனதை எல்லாம் சொன்னீங்கள்ல. அதனைத் தான் உங்க அகத்தைக் காட்டும் சான்றுன்னு சொன்னேன். :-)

    ReplyDelete
  4. //ரொம்ப தத்துவம் இல்லாம வைணவம்ன்னு ரெண்டே வரியில சொன்னதால அதுக்கு என்ன காரணம்ன்னு யோசிச்சு உங்களுக்குத் தோணுனதை எல்லாம் சொன்னீங்கள்ல//

    :)

    அது என்னுடைய சொந்த Fantasy-ன்னு நினைச்சிக்கிட்டீங்களா? இல்லை! அது தேவநேயப் பாவாணர் அவர்களின் முடிபும் ஆகும்! தமிழர் மதம் என்ற நூலை முடிந்தால் வாசித்துப் பாருங்கள்!

    * எப்படி மாயோன் - விண்ணவன் வழிபாடு சங்க காலத்திலேயே பெரும் ஆதரவு பெற்றிருந்தது,
    * முக்கோல் பகவர்கள் யார்
    * பண்பாட்டுக் கலப்புகளுக்குப் பின் நப்பின்னை எப்படி மாயமானாள்,
    * தத்துவ நிறுவனமாக இல்லாமல் வாழ்வியலாக இருந்த ஒன்று,
    * ஆனால் எப்படி மற்ற பின்னாள் மதங்களுடன் ஈடு கொடுக்க, படிப்படியாகத் தத்துவ முறையைத் தனக்குத் தேடிக் கொண்டது,
    * ஆசாரியர்கள் எப்படி இரு பண்பாட்டுக்கும் பாதகம் வராமல் "ஒட்ட" வைத்தார்கள் :))
    * ஆளவந்தார், ராமானுசர் போன்றவர்கள் செய்த பரவலாக்க "நிறுவனப்படுத்தல்" :)
    இப்படிப் பலவும் இருக்கும்......

    ReplyDelete
  5. தமிழர் மதம் நூலை படிக்க வேண்டிய நூல்கள் பட்டியலில் சேர்த்துக் கொண்டேன் இரவி.

    ReplyDelete
  6. வெகு சிறப்பு. :)

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP