Friday, September 10, 2010

பனையோலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகறீங்களா?

பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள் + ஈத் முபாரக்!
ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் போது, பிள்ளையார் தான் பெரும்பாடு படுகிறார்! நாம முழுங்குகிறோம்! அவரோ முழுகுகிறார்! :)

நடக்கும் காரியம் விக்கினம் இல்லாமல் நடக்க நாமெல்லாம் விநாயகரை வணங்கினால்...
அவரோட சதுர்த்திக்கு, அவர் விக்கினமில்லாமல் கரைய,
பாவம்...அவர் எந்த முழுமுதற் கடவுளை வேண்டுவார்? :))

மெரீனாவில் பிள்ளையாரின் அல்லோலகல்லோலங்கள்-ன்னு பதிவு போடலாமா? :)

* களிமண் பிள்ளையாரை ஒவ்வொரு ஆண்டும் கரைக்கக் கஷ்டமாக இருக்கா?
* குளம்/கடல்-ன்னு கரைக்கும் நேரத்தில் மண்ணும் சகதியுமாய் ஆகி, பிள்ளையாருக்கும் கஷ்டம், நமக்கும் கஷ்டமா?

பேசாமல், இந்த ஆண்டு, பனை ஓலைப் பிள்ளையாருக்கு ஷிஃப்ட் ஆகிப் பாருங்களேன்! இதோ...மங்கலம் கொழிக்கும்...அழகியவாரணப் பிள்ளை!ஹாரித் தாரங் என்பவர் எளிமையாக வடிவமைத்துள்ள இந்தப் பிள்ளையார் சுற்றுச் சூழல் கெடாத பிள்ளையார்!
எளிமையான பிள்ளையார்! அழகானவரும் கூட! பனையோலையால் சுருட்டிச் சுருட்டியே தலைப்பாகையும், காதும், துதிக்கையும், தொந்தியும் அழகாகச் செய்துள்ளார்கள்! = தால விருட்ச கணபதி! திருப்பனந்தாள் பிள்ளையார்!

சென்னையில் வாங்கணும்-ன்னா இதோ தகவல்கள்:
Rajen’s Square,
40, Bazzullah Road,
T.Nagar,
Chennai – 600 017.
Phone: 044 – 65275990,
Mobile: 98412-79881, 98419-37297
(http://chennaionline.com/City360/City-Feature/Get-eco-friendly-this-Chaturthi-with-Palm-leaf-Ganeshas/20101409011403.col)


பனையோலை பிள்ளையார்-ன்னா சாஸ்திரத்துக்கு ஒத்து வருமா-ன்னு எல்லாம் குழம்பாதீங்க! :)
நாம நல்லா இருக்கணும்-ன்னு, பிள்ளையாரை அலைக் கழிப்பதுவா பக்தி??? யோசிச்சிப் பாருங்க!

மஞ்சளில் பிடித்து வைக்கும் பிள்ளையார் தான் மங்களகரமானவர்!
அடுத்து இயற்கையாகச் செடி கொடிகளில் செய்யப்படும் விநாயகர்! - வெள்ளெருக்கு விநாயகர் கேள்விப்பட்டு இருப்பீயளே? அதே போலத் தான் பனையோலையும்!

* தோரணத்துக்கு பனையோலை தானே பயன்படுத்துகிறோம்?
* காதோலை/கருகமணி என்று இன்றும் பனையோலையில் தானே கிராமத்தில் அம்மனுக்குச் சார்த்துகிறோம்?
* ஆண்பனைகளை பெண்பனைகளாக மாற்றிப் பாடி, பனையோலைக்குப் பெருமை சேர்த்தவர் அல்லவா ஞானசம்பந்தர்! இந்தத் தலம் = செய்யாறு (திருவத்திபுரம்), எங்கூரு வாழைப்பந்தலுக்கு அருகில் தான்!

வெள்ளை வெளேர் என்று = சுக்லாம்பரதரம் விஷ்ணும் என்று பனையோலையிலும் அப்படியே இருக்கிறார்! கரைக்கவும் எளிது! இலைகள் எளிதாகத் தானே மஃகி விடும் அல்லவா? பிள்ளையாரைக் கரைக்கிறேன் பேர்வழி என்று அவரைக் கலங்கடிக்க வேண்டாம் அல்லவா?

அவளை முருகனிடம் கூட்டி வைத்த முதல்வன்! தேனினும் இனிய திருப்புகழ்! அக்குற மகளொடு அச்சிறு முருகனை அக்கண மணம் அருள் பெருமாளே!

இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடன் நெய்
எள் பொரி அவல் துவரை இளநீர் வண்(டு)
எச்சில் பயறு அப்பவகை பச்சரிசி பிட்டு வெளரிப்
பழம் இடிப் பல் வகைத் தனி மூலம்

மிக்க அடிசில் கடலை பட்சணம் எனக் கொள் ஒரு
விக்கின சமர்த்தன் எனும் அருளாழி
வெற்ப குடிலச் சடில விற்பரம அப்பர் அருள்
வித்தக மருப்புடைய பெருமாளே!


பிள்ளையார்-ன்னாலே எளிமை தானே? எளிமையானவரை எளிமையாகவே வணங்கலாம்!
நாம் குழந்தையாய் இருந்த போது, நம்மை எளிமையாகவே வந்து தொட்ட முதல் தமிழ்ப் பாடலால் போற்றுவோம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா!


கோலம் செய் கரிமுகனை,
அலங்-கோலம் செய்யாது,
அலங்-காரம் செய்து வணங்குவோம்!!


உங்கள் தெரிவு என்னவோ?

1) ஜெய் ஸ்ரீ கணேஷா

2) பிள்ளையார் பிள்ளையார்! 3ஆம் நாள்...வரிசை வாய்ந்த பிள்ளையார்!

3) அந்தி வானம் அரைத்த மஞ்சள்! அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்!
தங்கத் தோடு ஜொலித்த மஞ்சள்! கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்!
மஞ்சள்! மஞ்சள்! மஞ்சள்!

14 comments:

 1. :-) நல்லா இருக்கு. :-)

  ReplyDelete
 2. என்னுடைய்யா சாய்ஸ் நிச்சயமா பனையோலைப்பிள்ளையாரும் மஞ்சள் பிள்ளையாரும்தான்

  ReplyDelete
 3. @குமரன்
  எது நல்லா இருக்கு? மூனு சாய்சில் உங்களது எது? :)

  ReplyDelete
 4. @சி.அக்கா
  மஞ்சள் பிள்ளையாரை நம் வீட்டு நீரிலேயே கரைத்து செடி கொடிகளுக்கு ஊற்றி விடலாம் அல்லவா! மஞ்சள் உங்கள் சாய்ஸ்! :)

  ReplyDelete
 5. ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தியின் போது, பிள்ளையார் தான் பெரும்பாடு படுகிறார்! ::)))

  ரொம்ப சரி!
  நேற்று இரவு 8.30pm மாயவரம் பக்கம் நான் பார்த்த நிகழ்ச்சி!

  பிள்ளையார் ஜீப் இல் ஊர்வலம்! பிள்ளையார் முன் ஜீப்பில் நின்று கொண்டு வாயில் சிகரத்தை வைத்து கொண்டு ஒருவன் கண்ட படி ஆட!
  ஊர்வலத்தில் முன்பு ரோட்டில் பல வாலிப பசங்க தண்ணி அடிச்சிட்டு கூத்து ஆடி கொண்டு வந்தாங்க!

  அதற்க்கு பின்னல் வந்த விநாயகர் ஊர்வலத்தில் ( விநாயகர் பக்கத்தில் ஓடிய பாடல் "வாடி பொட்ட புள்ள வெளியே என் வாலிபத்தை நோகடிட்ட கிளியே")

  அச்சோ! இதெல்லாம் பார்த்து விட்டு பிள்ளையார் பாவம் மாட்டிகிட்டு முழிக்கிறார் என்று நான் நினைத்து கொண்டிருக்க சுற்றியிருந்த மக்களும் புலம்பல்!
  what a vinayagar chadurthi!

  ReplyDelete
 6. பனைஓலை ECO பிள்ளையார் அட்டஹாசம்.environmental friendly!! எங்க ஊர்ல கொண்டுவர விடுவாளானு தெரியல்லை.இருந்தாலும் உங்க மஞ்சள் பிள்ளையார் தான் களையா இருக்கு. குட்டி வேற. பூக்களோட கலரோட contrast அழகா தெரியறது!! ஆஃப்டெரால் அவரோட அம்மாவே அவரை அப்படித்தான் உண்டாக்கினதா படிச்சிருக்கேன்:)))

  ReplyDelete
 7. பனை ஓலை பிள்ளையார் ஜம்முன்னு இருக்கார். :-)

  ReplyDelete
 8. Narasimmar dharisanam ini eppppo kidaikkum??

  ReplyDelete
 9. Hi,

  The following lines are from kandha guru kavacham.Can you please post an article about the meaning of the mantra mentioned below?
  It is from Kandha guru Kavacham (170-175)

  பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
  ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்
  க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும்
  ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா
  ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி


  Thanks in advance

  Aum saravana bhava!!!!

  ReplyDelete
 10. முருக அன்பரான அனானிமஸ் அவர்களே
  வேண்டுகோள் வைக்கும் போது உங்க பெயரையாவது சொல்லக் கூடாதா? :)

  உங்கள் வேண்டுகோள் குறித்து பதிவுலகில் உள்ள பெரியவர்களைக் கேட்டுப் பார்த்தேன்! அவர்கள் தந்த விடையின் சாராம்சம் இது தான்:

  இந்த மந்திர வரிகளில் பீஜாக்ஷரங்கள் அடங்கி உள்ளன! அதை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லிட இயலாது! தகுந்த குருவைத் தேடித் தான் அதைப் பெற வேண்டும்! அது வரை சரவணபவ என்று ஜபித்தாலே போதுமானது! அதுவே உங்களுக்கு வழி காட்டும்!

  - இதுவே அவர்கள் தங்களுக்குச் சொல்லச் சொன்னது!

  ReplyDelete
 11. @அனானி

  இருப்பினும் பொருள் விளங்கிச் சொல்ல வேண்டும் என்று, தங்கள் "ஆர்வத்தின்" பொருட்டு கேட்டமையால்,

  அதைக் "குருமுகம்" என்று காட்டித் தள்ளிடாது...இதோ மேலோட்டமான பொருளை அடியேன் சொல்கிறேன்! ஆனால் இது "அறிவதற்கு" மட்டுமே! "உணர்வதற்கு" ஆசானை நாடிப் பெறவும்! = "குருவாய்" வருவாய் அருள்வாய் குகனே!

  Kandha guru Kavacham (170-175)

  //பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே
  ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும்//

  பீஜம் என்றால் உயிர்! விதை!

  எப்படி விதை, சூட்சுமமாக எப்படியோ முளைத்து, செடியாகத் துவங்குகிறதோ...
  அதே போல் உள்ளுக்குள் இருக்கும் உயிரின் உயிர்ப்பை (விதையினை) எழுப்பவல்ல மந்திரங்கள் = பீஜ மந்திரங்கள்!

  அவை பெரும்பாலும் ஒற்றை எழுத்து போல் இருக்கும்! ஆனால் மூன்று மாத்திரையில் ஒலிக்கும்! = மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி!

  ஒரு இறை வடிவத்தின் ஒட்டு மொத்தக் குறியீடாகவும் அது இருக்கும்!
  பீஜ + அக்ஷரம் = வித்து + எழுத்து = வித்தெழுத்து!
  ---------------------------------

  சுப்ரமணியன் என்று வடமொழியில் சொல்லப்படும் முருக வடிவத்துக்கு இருக்கும் பீஜாட்சரம் = "செளம்"!

  இதே போல் கணபதி வடிவத்துக்கு = கம்! கம் கணபதயே நமஹ-ன்னு கேட்டு இருப்பீங்க!

  பிரணவத்தோடு சொன்னால் "ஓம் செளம்"!
  அதைத் தான் சொல்லச் சொல்கிறார் பாட்டில் - "ஓம் ஸெளம் சரவணபவ"

  * ஸ்ரீம் = ஐஸ்வர்யம் (மகாலக்ஷ்மி)
  * ஹ்ரீம் = சர்வ வியாபம் (ஹரி, தேவி)
  * க்லீம் = துடிப்பு(காமத் துடிப்பு (அ) ஞானத் துடிப்பு)

  இவை அத்தனையும் சேர்த்து...
  //ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா//

  இப்படி, பீஜ மந்திரங்களைக் கூட்டிச் சேர்த்து...
  ஓம்-இல் இருந்து, இந்த மந்திரங்களைச் சேர்த்து, நமஹ-வில் முடிக்கச் சொல்கிறார்!

  அவ்ளோ தான் மேலோட்டமான பொருள்!
  ---------------------------------

  தியானம் செய்யும் போது, எழுத்தின் பின் எழுத்தாக, இந்த முறையானது மனப் பயிற்சிக்கு உதவும்! தன் மனசுக்குப் பிடித்த இறை வடிவத்தின் மூலமாக மனப் பயிற்சி! அவ்ளோ தான்!

  என்ன தான் நம் உயிரின் உயிர்ப்பை எழுப்பினாலும், அதை எழுப்பி வைத்துக் கொண்டு என்ன செய்வது? :) வெறும் ஞானம்/கைவல்யம் தான் கிட்டும்! Self Awareness! ஆத்ம சாஷாத்காரம்!

  ஒரே மந்திர-யந்திரமாக இருப்பதால், நல்ல குருவை அணுகி, முறையாகப் பழகிக் கொள்ளலாம்!

  ஆனால், இதெல்லாம் பழகுகிறோமோ இல்லையோ...
  இது அவரவர் ஞானத் தேடலுக்கும், சுய இன்பத்துக்கு மட்டுமே உதவும்!

  இதை எல்லாம் விட.....அவன் பால் மாறாத காதல் ஒன்றே மகத்தானது!

  ReplyDelete
 12. உங்களுக்காகக் கேட்ட போது மேற்சொன்ன விளக்கத்தைச் சொல்லி உதவிய திருவானைக்கா உமாபதி சிவாச்சாரியார் அவர்களுக்கு அடியேன் நன்றி!

  உங்களுக்காகத் தேடப் போய் தான் இன்னொன்னும் கண்ணில் பட்டது! கந்த சஷ்டிக் கவசத்திலும் இது வரும்!

  ஐ-யும் கிலி-யும் அடைவுடன் சௌ-வும்
  = ஐம் க்லீம் செளம்

  உய்யொளி சௌ-வும் உயிர் ஐயும் கிலி-யும்
  = ஒளி வீசும் செள என்னும் சுப்ரமண்யம் (முருக வடிவம்)

  நிலைபெற்று என் முன் நித்தமும் ஒளிரும்-ன்னு வரும் அல்லவா?
  பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்! :)
  உங்கள் ஆர்வத்துக்கு என் பெம்மான் முருகன் அருள் செய்வானாக!

  ReplyDelete
 13. Thank you very much!!!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP