Tuesday, March 30, 2010

ஆண்டாள் திருமணம்



'கல்யாணம் வரை சொல்லி முடித்து விட்டுத்தான் வீட்டுக்குப் போவேன்' என்று பாவை, தன் தோழியிடம் தொடர்ந்து சொல்கிறாள் ...

***
தோழி: அந்தக் காலக் கல்யாணங்கள் 5 நாள்! அதைச் சொல்லவே நீ 5 நாட்கள் ஆக்காமல், கொஞ்சம் வேகமா சொல்லுடீ! பக்கத்து விட்டுப் பையன் பார்க்கில் சாயங்காலம் 5 மணிக்கு கண்ணாமூச்சி விளையாடக் கூப்பிட்டிருக்கான்!

பாவை: பொறாமையோ? மேலே கேளு! எங்கள் இருவரையும் மணப் பந்தலில், கிழக்கு முகமாக, ஹோம குண்டத்தின் முன், மணையில் உட்கார வைத்தனர்.

மாதவன் 3 மந்திரங்கள் மூலம், எனக்கு குடும்ப பாரத்தைச் சுமக்கும் சக்திக்காக சோமனையும், என் இளமைக்காக கந்தர்வர்களையும், என் அழகிற்காக அக்னியையும் பிரார்த்தித்தான்.

(சோமன், தன் மனைவி சூர்யாவுக்காக சோமனை - அதாவது தன்னையே - குறிப்பிட்டு மந்திரம் சொல்வது, அதிசயமானது!)

கோவிந்தன், 4 மந்திரங்கள் மூலம் (10.85.36-39) பகன், அர்யமா, சவிதா, இந்திரன், அக்னி, சுரியன், வாயு, சரஸ்வதி ஆகியோரை வணங்கி என் கையைப் பிடித்தான் (கைத்தலம் பற்ற)! என் கையுடன், 'இதயத்தை'யும் கொடுத்தேன்!

தோழி: இதயமா? நல்லெண்ணெய் ரொம்ப விலையாச்சே! அதையும் உன் அப்பா கொடுத்தாரா?

பாவை: அடி வாங்கப் போறே நீ! என் கை விரல்கள் ஐந்தையும், ஒரு குவிந்த தாமரை போல் சேர்த்து வைக்க, அவன் என் கைப்பற்றினான்! 'குவிந்த கைகள்' ஒரு முத்திரை! இது, இதயத்தைக் குறிக்கும்!



(கை விரல் நுனிகளில் நரம்புகள் முடிவதால், அதனைத் தடவிக் கொள்ளுதல், நரம்புகளை தளர்த்தி, மன அமைதியை அளிக்கும்; விரல்களைக் குவித்து வைத்து, இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று சுமார் 5 நிமிடங்கள் தடவிக் கொள்வது, மனதை அமைதிப் படுத்தும் ஒரு உடல் பயிற்சியாகச் செய்யலாம்!)

***

பாவை: நல்ல நேரத்தில் - மத்தளமும் நாதஸ்வரமும் சேர்ந்து இசைக்க (மத்தளம் கொட்ட), நல்ல பெரிய வெள்ளை வலம்புரிச் சங்குகள் சப்திக்க (வரிசங்கம் நின்றூத), புரோகிதர் மந்திரம் சொல்ல - மதுசூதனன் எனக்குத் தாலி கட்டினான்! இப்படியாக, மாங்கல்ய தாரணம் முடிந்தது! என் கனவில் என் வாழ்க்கைக் கனவு நிறைவேறியது!

(நல்ல நேரம் வந்ததை, 'மத்தளம் கொட்ட' என்பதன் மூலம் நம் பாவை குறிப்பிடுகிறாள்)

தோழி: உடனே எல்லாரும் மேடைக்குப் பாய்ந்து, கை குலுக்கிவிட்டு, சாப்பிடப் போயிருப்பார்களே?

பாவை: இது மட்டும் உனக்குத் நல்லா தெரியுமே?

தோழி: எவ்வளவு கல்யாணம் பார்க்கறேன்! கல்யாணக் காட்சின்னா, 'கெட்டி மேளம்', 'மாங்கல்யம் ...', தானே? அப்புறம் வயிறு தானே?

பாவை: கேலியை நிறுத்து! உண்மையில், 'மாங்கல்யம் ...' அது மந்திரமே இல்லை! அதற்கு அர்த்தம், 'இது மங்களகரமானது. இதை உன் கழுத்தில் நான் கட்டுகிறேன்! நீ என்னுடன், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க வேண்டும்'. தாலி கட்டும் போது, எந்தக் கடவுளையும் நினைத்து மந்திரம் சொல்வதில்லை!

தோழி: அப்படியா?

பாவை: எங்கள் கல்யாணத்தில், மிக முக்கியமானது இது இல்லை! அதுனால தான் இதைப் பற்றி நான் பாசுரத்தில் சொல்லலை!

தோழி: பின் எதுடீ முக்கியம்?

***

(பாவை தொடர்கிறாள்)

தோழி: ஏய்! தாலி கட்டியாகி விட்டதல்லவா? சீக்கிரம் கனவை முடிடீ!

பாவை: முக்கியாமன நிகழ்ச்சி வரலையே! அதற்குள் அவசரம் உனக்கு! வைதீகர்கள் (வாய் நல்லார்), நல்ல வேதங்களை ஓதினர் (மந்திரத்தால் நல்ல மறை ஓதி)! எங்கள் திருமணத்திற்கு, அந்த விஷ்ணுவும், அந்த அக்னியுமே சாட்சி!

(மறை 'ஓத' என்று இருக்க வேண்டும்! 'ஓதி' என்று பாசுரம் இட்டுள்ளாள் நம் பாவை. இது எச்சத் திரிபு!

'வாய் நல்லார் நல்ல மறை ஓத, காய்சின மாகளிறன்னான், மந்திரத்தால் பாசிலை நாணல் பரிதி வைத்து, என் கை பற்றி, தீ வலம் செய்யக் கனாக் கண்டேன்'

என்று பொருள் கொள்ள வேண்டும்!)

தோழி: ஏண்டி 'நல்ல மறை' என்கிறாய்? 'கெட்ட மறை'யும் இருக்கிறதா என்ன?

பாவை: வேதத்தில், முதலில் (பூர்வ பாகம்), யாகத்தின் வகைகள், அவைகளைச் செய்யும் முறைகள் பற்றிக் கூறப் படுகின்றது. பின்னரே (உத்தர பாகம்), புருஷ சூக்தம் போன்றவற்றில், எல்லாவற்றிலும் உள்ளே உறையும் விஷ்ணுவின் ஸ்வரூப குணங்கள் சொல்லப் படுகின்றன. பெரும்பாலும், கல்யாண ஹோமத்தில் நாராயணனின் பெருமைகளைக் கூறும் புருஷ சூக்தமே முதலில் சொல்லப் படுகின்றது! இதைத் தான் 'நல்ல மறை' என்றேன்!

தோழி: Thanks-டி! இப்பதாண்டீ கனவில், நனவாக ஒன்று சொல்லி இருக்கே!

பாவை: பயங்கரக் கோபம் கொண்ட பெரிய யானை (காய் சின மா களிறு) போல் கம்பீரமான (அன்னான்) கண்ணன், அக்னி குண்டத்தைச் சுற்றி, பசுமையான இலைகளை உடைய நாணல் புல்லை (பாசு இலை நாணல்) , தரையில் காப்பாக வைத்து (படுத்து), வாசனை உடைய சின்ன மரக் குச்சிகளை (ஸமித்துகளை) வைத்து (பரிதி வைத்து), தன் வலது கையால் என் கையைப் பற்றி (என் கை பற்றி), தீயை வலம் செய்தான் (தீவலம் செய்ய)!


ஒரு அடி எடுத்து வைத்தவுடன், அவன் குனிந்து, தன் கையால் என் திருவடி பற்றினான்!

(அளவற்ற பலமும் சக்தியும் படைத்த எம்பெருமானும், தாயாரிடம் சரணாகதி அடைய வேண்டும் என்று இவள் சொல்கின்றாளோ?)

ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், (திரும்பி, பின்னால் வரும்?!?) மஹா விஷ்ணுவின் மீது ஒரு மந்திரம் சொல்லி (யஜுர் அஷ்டகம்-3, ப்ரஸ்ந-7, பஞ்-89), எங்களை நன்றாக வைக்குமாறு வேண்டினான்! இப்படி, 7 முறை (ஸப்த படி) செய்தோம்!

தோழி: அப்படி என்ன வேண்டினான் அவன்?

பாவை: நீ (வாழ்க்கையில்) ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், விஷ்ணு உன் பின்னாலேயே இருந்து, உன்னை (என்னையும்) காக்கட்டும்!

- விஷ்ணு உனக்கு, உன் குடும்பத்திற்கு வற்றாத உணவு அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வியாதியற்ற உடம்பையும், சக்தியையும் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, விரதங்களைக் கடைப்பிடிக்க மனமும், சக்தியும், அளிக்கட்டும் (தர்மபத்னியாக இரு!)
- விஷ்ணு உனக்கு, 'மண வாழ்வு' இனிமையாக இருக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, வற்றாத செல்வம் (பசு, குதிரை, யானை, நிலம், ஆபரணம்) அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, எல்லாக் காலங்களிலும் கணவனிடம் இருந்து பிரியா வரம் அளிக்கட்டும்!
- விஷ்ணு உனக்கு, என்னுடன் சேர்ந்து நல்ல குழந்தைகளை அளிக்கட்டும்!

தோழி: ஆஹா! கேக்கறத்துக்கே நல்லா இருக்கே! நிஜமாவே இப்படி நடந்தா நல்லாயிருக்குமே!

பாவை: வேத முறைப்படி நடக்கும் கல்யாணத்தில், தீவலம் முடிந்த பிறகு தான் 'திருமணம்' முடிந்ததாகக் கணக்கு! கை குலுக்குதல், பரிசளித்தல் எல்லாம் இதற்குப் பின் தான் நடக்க வேண்டும்!

தோழி: இழுக்காம, மேலே சொல்லுடி!

பாவை: கண்ணன் தீயினில் நெய் விட, தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி, இந்திரன், வாயு, அஸ்வினி தேவர்கள், ப்ருஹஸ்பதி, ஸவிதா, விஸ்வ தேவர்கள், வருணன், ஆகாஸ தேவதை) ஆசிகளைப் பெற, 'ப்ரதான ஹோமம்' எனப்படும் 16 மந்திரங்கள் கொண்ட ஹோமம் நடந்தது!

***

தோழி: எனக்கு ஒரு சந்தேகம்!

பாவை: என்னடீ?

தோழி: இந்தக் கண்ணன், ஆரம்பத்தில் இருந்தே, 'வரும், ஆனால் வராது' எனும்படித்தானே இருக்கிறான்! ஒரு நாள் வந்தால், ஒரு மாதம் வருவதில்ல! கல்யாணத்தின் பின் ஓடி விட்டால்?

பாவை: இவ்வளவு தானா? நான் ஏதோன்னு பயந்துட்டேன்! கண்ணன், அக்னி சாட்சியாக, என்னைக் கைவிட மாட்டேன் என்று மந்திரம் சொல்லியுள்ளான்! அக்னியே கை விட்டாலும், விஷ்ணு சாட்சியாகச் சொன்னதால், கண்ணனால் என்னை விட முடியாது! விஷ்ணு சாட்சியாகக் கை கொடுத்ததால், என்னாலும் அவனை விட முடியாது!

தோழி: அதெப்படி?

பாவை: என்ன இப்படிக் கேட்டுட்டே? இந்தப் பிறவியிலும் (இம்மைக்கும்), 'ஏழேழ்' பிறவியிலும் (ஏழேழ் பிறவிக்கும்), அவன் நமக்குப் பிடித்தவனாயிற்றே (பற்றாவான்) நாராயணன்? நமக்கெல்லாம் உரிமையாளன் (நம்மை உடையவன்) ஆயிற்றே அந்த நாராயணன் (நாராயணன் நம்பி)! அந்த நாராயணனே ஒப்புக் கொண்டதால், யாராலும் கை விடமுடியாது!

தோழி: ஏழாம் வாய்ப்பாடில், 7x7=49 என்று வருமே? அந்த 49-ஆ? ஒண்ணே தாங்க முடியலை! 49, ரொம்பக் கஷ்டம்ப்பா!

பாவை: உனக்குக் கணக்கு வரும்னு காட்டிக்கணுமாக்கும்?

மழை வேணும்னு யாகம் செய்தால், ஒரு முறை பலமாகப் பெய்து, பின் நின்று விடும்! ஆனால், நாராயணன் திருவடிகளைப் பற்றினால், நம் ஆத்மா உள்ள அளவும், கால தத்வம் உள்ள வரையிலும் நமக்கு பகவதனுபவம் உண்டு! இதைத் தான் 'ஏழேழ்' என்று சொன்னேன்!

நமக்கும் அவனுக்கும் உள்ள உறவு, ஒண்ணா ரெண்டா, எடுத்துச் சொல்ல?

தோழி: அப்படி என்னடி எப்போதும் பிரிக்க முடியாத உறவு?

பாவை: ஏய்! 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம்'னு, திருப்பாவையிலேயே சொன்னேனே? அப்போ தூங்கிட்டு இப்போ கேட்டா? சரி ... போனாப் போறது! இன்னொரு தடவை சொல்றேன்! ஆனால், நானே Repeat பண்ணறதுக்குப் பதிலா, குலசேகரரைச் சொல்லச் சொல்றேன்!

***

ரங்கனைக் காண முடியாமல் குலசேகரர் தவிக்கிறார்! அரங்கனோ, அவரிடம் கருணை காண்பிக்க மறுக்கிறான்!

கருணை காட்ட மறுக்கும் அரங்கனை விட்டு, மற்ற தெய்வங்களைப் பற்றும் சாமானியர்களைப் போல் அல்லாது, 'நீ என்னை எவ்வளவு சோதித்தாலும், வெறுத்து ஒதுக்கினாலும், அது நல்லதற்கே என்று நினைத்து, மீண்டும் மீண்டும் உன் திருவடிக்கே வருவேன்' என்று, திருவித்துவக் கோட்டு எம்பெருமானான உய்ய வந்த பெருமாளைப் பார்த்துச் சொல்கின்றார் குலசேகரர்:

வித்துவக் கோட்டு அம்மானே! கோபத்தால், தனது சிறு குழந்தையை வெறுத்துத் தள்ளினாலும், மீண்டும் தாயிடமே வந்து சேரும் குழந்தையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தந்தை-தனயன் உறவு)!

என் கண்ணா! கணவன், எல்லோரும் வெறுக்கத் தக்க செயல்களைச் செய்தாலும், அவனைத் தவிர வேறு ஆண்மகனை ஏறெடுத்தும் பார்க்காத பதிவிரதையைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (நாயகன்-நாயகி உறவு)!

அபய வரதா! அரசன் எத்தனை துயரம் செய்தாலும், அவன் நல்லது செய்வான் என்று காத்திருக்கும் (இந்தக் கால வழக்கப்படி, மீண்டும் ஓட்டுப் போடும்) குடிமகனைப் போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (உடல்-உயிர் உறவு - 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்' - புறநானூறு)!

மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணா! மருத்துவர், கத்தியால் எவ்வளவு அறுத்தாலும் (சட்டை Pocket-ஐ எவ்வளவு சுரண்டினாலும்) மீண்டும் அவரிடமே செல்லும் நோயாளி போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (காப்பாறுபவன்-காப்பாற்றப் படும் பொருள் உறவு)!


புட்கொடியானே! கடலில் செல்லும் கப்பலின் கூம்பு மேல் உள்ள பறவை, எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்து, கரையைக் காண முடியாமல், மீண்டும் அந்தக் கூம்பு மேல் வந்து உட்காருவது போல், உன்னிடமே மீண்டும் வருவேன் (தாங்குபவன்-தாங்கப்படும் பொருள் உறவு)!

தாமரைக் கண்ணா! சூரிய கிரணங்கள் எவ்வளவு எரித்தாலும், சந்திரனுக்கு மலராது, சூரியனுக்கு மட்டுமே மலரும் தாமரையைப் போல் உனக்காகவே காத்திருப்பேன் (ஆண்டான்-அடிமை உறவு)!


மழைக் கண்ணா! எவ்வளவு தான் மழை பெய்யாமல் இருந்தாலும், மழை மேகத்தையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பயிர்கள் போல, உன்னையே எதிர்பார்த்துக் காத்திருப்பேன் (அறிபவன்-அறியப்படும் பொருள் உறவு)!

கடல் வண்ணா! ஆறுகள் எவ்வளவு வளைந்து, பாய்ந்து, நீண்டு ஓடினாலும், கடைசியில் கடலிடம் வந்து சேர்வது போல், உன்னிடமே வந்து சேர்வேன் (சொத்துக்கு உரியவன்-சொத்து உறவு)!

திருமகள் கேள்வா! செல்வம் வேண்டாம் என்று வெறுத்து ஒதுக்குபவனிடம், அந்தச் செல்வமே தானாக வந்து சேர்வது போல், உன்னையே அடைய விரும்புவேன் (போகத்தை அனுபவிப்பவன்-போகப் பொருள் உறவு)!

எனக்கும், இந்த உலகத்தில் உள்ள வேறு எந்தப் பொருளுக்கும், ஒன்றோ, அல்லது, சில உறவுகளோ இருக்கலாம்! ஆனால், எனக்கு, உன்னிடத்தில் மட்டும் தான் இந்த 9 உறவுகள் அனைத்தும் ஒரு சேர இருக்கின்றன! எனவே, உன்னிடமே மீண்டும் மீண்டும் வருவேன்!

***

பாவை: என்ன! இப்போதாவது புரிஞ்சதா?

தோழி: ம்ம்! மேலே சொல்லு!
- கனவு தொடரும்!
Read more »

Monday, March 29, 2010

மாதவிப் பந்தலுக்கு கல்யாணமே! சீதா கல்யாண வைபோகமே!

என்னது? மாதவிப் பந்தலுக்குக் கல்யாணமா? எப்போ? எங்கே? ஹா ஹா ஹா! இதோ, இங்கே! போய் ஆசீர்வாதம் பண்ணிட்டு வரீங்களா? :)

* என் தோழி கோதைக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!
* மாதவிப் பந்தலுக்கும், என் முருகனுக்கும் இன்னிக்கு தான் கல்யாணம்!

இன்று பங்குனி உத்திரம்! (Mar-29,2010) !
பழனி மலையில் தைப்பூசக் காவடிகளை விட, பங்குனி உத்திரக் காவடிகள் அதிகம்!...காவடிக் கடல்!
அப்படி என்ன இருக்கு பங்குனி உத்திரம் அன்னிக்கு?-ன்னு யோசிக்கறீங்களா? கீழே படத்தைப் பாருங்க! சொல்ப சொல்ப, நூகே அர்த்தா கொத்தாகும்! :)



* தோழி கோதைக்கும் - அரங்கனுக்கும் திருவில்லிபுத்தூரிலே திருமணம் ஆகும் நாள்!
* என் ஒரு திரு முருகன், அவன் வள்ளியை மணக்கும் நாள்!
* சீதா கல்யாண வைபோகமே என்று சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் ஆகும் நாள்!

* பாற்கடலில் தோன்றி, அன்னை மகாலக்ஷ்மி, பெருமாளுக்கு மாலையிடும் நாள்!
* ஜகத் மாதா-பிதா, பார்வதி பரமேஸ்வரன் திருமண நாள்!
* பூலோக வைகுந்தமான திருவரங்கத்திலே, தாயாருடன் அரங்கன் சேர்த்தி காணும் திருநாள்!

இப்படித் திருமணத்துக்கென்றே தோன்றிட்ட திருநாள் பங்குனி உத்திரம்!
இரு மனம், ஒரு மனம் ஆகி, திரு மணம் ஆகும் திருநாள் = பங்குனி உத்திரம்!

இன்று...முருகனருள்-150 ஆம் பதிவு உதிக்கப் போகின்றது! சென்று சேர்மின்கள்!




சரி, நாம மாதவிப் பந்தல் கல்யாணப் பதிவுக்கு வருவோமோ? :)
இன்று மனத்துக்கினிய இராகவனுக்கும்-சீதைக்கும் கல்யாணம்-ன்னு சொன்னேன்-ல்ல?
சீதை கல்யாணம்-ன்னா என்ன பாட்டு? = சீதா கல்யாண வைபோகமே!

இந்தப் பாட்டைத் தொடாத சினிமா, மேடை, வீடே இல்லை! அப்படி மர்ம ஜாலங்கள் இருக்கு இந்தப் பாட்டில்! பதிவின் முடிவில் சினிமா, இசை என்று பலர் பாடிய தொகுப்பும் இருக்கு, பாருங்க!

இதை மெல்லிசா பாடும் போது...கல்யாணம் முடிஞ்ச கையோட...ரெண்டு பேரும் கைகோர்த்து, இணைபிரியாத அன்னங்கள் போல்,
அப்படியே, அடி எடுத்து வச்சி வராப் போலவே இருக்கும்! அவ்ளோ ஒரு Softness இந்தப் பாட்டில்!

இவ்ளோ மெல்லீசா, ஒரு பாட்டை யார் எழுதினா-ன்னு கேட்கறீங்களா? = நம் அனுமன் தான்!
தெலுங்கில் எழுதியது வேணும்-ன்னா = தியாகராஜரா இருக்கலாம்!
ஆனால், இது மூலமா சீதைக்கும் - இராமனுக்கும் திருமணம் நடத்தி வச்சதே நம் அனுமன் தான்!

அட, அது எப்படிப்பா? அனுமார் காட்டுல தான் அறிமுகமே ஆவுறாரு?
அதுவும் சீதையத் தொலைத்த பின்பு?
அவர் எப்படி ரெண்டு பேருக்கும் கண்ணாலம் செஞ்சி வைச்சாரு-ன்னு கேட்கறீங்களா? இவனுக்கு டகால்ட்டி பண்றதே வேலையாப் போச்சு-ன்னு பாசமாத் திட்டறீங்களா? :)

ஹிஹி! கல்யாண நாள் அதுவுமா என்னைத் திட்டலாமா? பதிவின் இறுதியில் அனுமன் நடத்தி வைத்த கல்யாணம் பற்றிச் சொல்கிறேன்! இப்போ பாடலைக் கேட்போம்!


வழக்கம் போல் ஜீவனும்+மெட்டும் மாறாது, தமிழில் மொழியாக்க முயன்றுள்ளேன்! படிச்சி-கேட்டுப் பார்த்துட்டு பொருந்தி வருதா-ன்னு சொல்லுங்க!

இதைத் தமிழில் அழகாகப் பாடிக் கொடுத்தவர் யாரு-ன்னு நினைக்கறீங்க? = மீனாட்சி சங்கரன்!
ஞாபகம் இருக்கா? அம்மன் பாட்டு-100 க்கு பாடிக் கொடுத்தாரே! அவரே தான்!
தமிழாக்கச் சொற்களின் கோர்வையை, அழகாப் பாட்டில் கொண்டாந்து கொடுத்த அவருக்கு, அடியேன் இனிய நன்றி! இதோ...நீங்களே...கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

To Download

வரிகள்: தியாகராஜர்
ராகம்: குறிஞ்சி (அ) சங்கராபரணம்
குரல்: பலரும்

சீதா கல்யாண வைபோகமே!
ராமா கல்யாண வைபோகமே!

பவனஜ ஸ்துதி பாத்ர, பாவன சரித்ர
ரவி சோம வர நேத்ர, ரமணீய காத்ர

அனுமானும் துதி செய்யும், புண்ணிய சரிதா!
கதிர்மதியக் கண்ணாளா, மனத்துக்கு இனியா!

(சீதா கல்யாண)

பக்த ஜன பரிபால, பரித சர ஜால
புக்தி முக்தி தலீல, பூதேவ பால

தாழாதே சர மழையால், அன்பர்களைக் காக்கும்!
இம்மைக்கும் மறுமைக்கும், எங்களையும் சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பாமரா அசுர பீம, பரிபூர்ண காம
சியாம ஜகத் அபிராம, சாகேத தாம

அல்லார்க்கு மருள் அருளி, நல்லார்க்கும் அருளும்!
அயோத்தி நகர் அபிராமன், கார்மேனி்த் திரளும்!

(சீதா கல்யாண)

சர்வ லோக ஆதார, சமர் ஏக வீர
கர்வ மானவ தூர, கனக அக தீர

பார்க் களத்தில் ஆதாரம், போர்க் களத்தில் வீரம்!
சீர்க் குணங்கள் உனது ஆரம், சினந்தார்க்கு தூரம்!

(சீதா கல்யாண)

நிகம ஆகம விஹார, நிருபம சரீர
நக தர அக விதார, நதலோக ஆதார

ஆகமங்கள் வேதங்களும், உன் அழகு பார்க்கும்!
ஆறாத பாவங்களை, அறுத்து(ன்) அடி சேர்க்கும்!

(சீதா கல்யாண)

பரமேச நுத கீத, பவ ஜலதி போத
தரணி குல சஞ்சாத, தியாக ராஜ நுத

சிவபெருமான் உளம் பாடும், பிறவிக் கடல் கலமே!
தியாகராஜன் உனைத் துதிக்க, தரணி வளர் நலமே!

(சீதா கல்யாண)

பாடலின் பொருள் புரிவதற்காகத் தமிழில் கேட்டீர்கள்! மூலப் பாடலைத் தெலுங்கில் கேட்கலீன்னா எப்படி?
இதோ, தம்பி ராகவ் அனுப்பி வைத்த சுட்டி! குழுவாகப் பாடினாலும், கூச்சலாப் பாடாம, எவ்ளோ அனுபவித்து பாடுறாங்க-ன்னு நீங்களே பாருங்க!
கூடி இருந்து குளிர்ந்தேலோ-ன்னு அவ சொன்னது சரியாத் தான் இருக்கு!

இதுக்குப் பேரு தான் குணானுபவம் = கூடி இருந்து குளிர்தல்!
பாடலின் முடிவில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் அந்த முகத் திருப்தி...
Dont miss this Mesmerizing Effect of Seetha Kalyana Vaibhogame! Just Watch it!





படங்களில் - சீதா கல்யாண வைபோகமே!

மலையாளம்:
படம்=பைத்ருகம்; குரல்=யேசுதாஸ்

அதே படத்தில், அதே பாடல் - சித்ரா


விளம்பரம்:
தனிஷ்க் நகைகள்; குரல்=ஹம்ஸிகா



இசைக் கருவிகளில் - சீதா கல்யாண வைபோகமே!

சாக்ஸோஃபோன் - கத்ரி கோபால்நாத்:


நாதஸ்வரம்:


கீ-போர்ட் - சத்யா:



பாடகர் குரலில் - சீதா கல்யாண வைபோகமே!

விசாகா ஹரி:


பாலமுரளி கிருஷ்ணா:


யேசுதாஸ்:


மகராஜபுரம் சந்தானம்:


விஜய் சிவா:


ராஜா ராம வர்மா



சரீரீரீ...அது என்ன அனுமன் நடத்தி வச்ச சீதா-ராம கல்யாணம்?
இராமாயணத்தில், மொத்தம் மூன்று இடங்களில் சீதை-இராமன் கல்யாணம் வருகிறது!
1. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் - மிதிலையில், தாய் வீட்டில் நடந்த திருமணம்!

2. அத்ரி மகரிஷியின் மனைவியான அனுசூயைக்கு, சீதையே தன் வாயால் விவரிக்கும் கல்யாணம் - சித்ரகூடம், காட்டில் "நடந்த" திருமணம்!

3. அன்னையை முதல் முதலாகக் காணும், நம் அன்பன் ஆஞ்சநேயன்...
தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போன நிலையில்...
வாடிய உடலும், முகமும், உள்ளமுமாய்...
அசோக மரத்தடியில், அந்தக் கொடி, இராகவம் என்னும் கற்பனைக் கொம்பில் படர்ந்து உயிர் வாழ...

அந்தச் சூழ்நிலையை, சுந்தர காண்டமாக ஆக்கி வைக்கிறான்...இந்தச் சுந்தர ஆஞ்சநேயன்!

தன் மனம் என்னும் மேடையில், அவளையும் அவனையும் ஏற்றி,
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ரா = அனுமானும் துதி செய்யும் புண்ணிய சரிதா!
* அன்று நடந்த கல்யாணத்தை, இன்று நடத்திக் காட்டி,
* அன்று நடந்த கல்யாணத்தை எல்லாம், இராகவன் சொல்லக் கேட்டு
* இன்று நடந்த கல்யாணம் போல், ஒவ்வொன்றாய்ச் சொல்லிச் சொல்லி...
* அவளுக்கு, போன உயிரை இழுத்துப் பிடித்துப் பெற்றுத் தந்து...

கல்யாண நிறைவிலே...இதோ...அனுமன் என்னும் ஜீவன் தரும் கல்யாணப் பரிசு = கணையாழி! அவள் இணையாழி! துணையாழி! உடலாழி! உயிராழி! ஆழி ஆழி! உனக்கே நான் ஆழ ஆழி!

சீதா கல்யாண வைபோகமே! இராமா கல்யாண வைபோகமே!
பந்தல் கல்யாண வைபோகமே! கந்தன் கல்யாண வைபோகமே!!

Read more »

Saturday, March 27, 2010

கருடன்-அனுமனைக் கேலி செய்யும் இறைவன்! - திருப்புல்லாணி!

என்னது? கருடனைக் கேலி செய்வதா? என்ன திமிர்? என்ன ஆணவம்?
பெரிய திருவடி என்று போற்றப்படும் கருடனின் விநயம் என்ன? வீரம் என்ன? தொண்டு என்ன? துடிப்பு என்ன? அவன் வேகம் தான் என்ன என்ன?.....

அன்று யானை அலறிய போது, அவன் வந்த வேகம் = (3x10^8 m/s) x 10^7

அட....அதாங்க......ஒளியின் வேகத்தை விட கோடி மடங்கு வேகம்! = அதாச்சும் 30 கோடி Km/hr! சூரியனில் இருந்து ஒளி, பூமியை வந்து அடையவே சுமார் 8 நிமிடம் ஆகுமாம்! இதுவோ அதை விட வேகமாம்! Velocity of Light! = ஏய் "சோதீ" என்ன...இடர் தீர்க்கத் தோன்றினையே!
போலீஸ் மாமா கிட்ட மாட்டாம, அப்பவே இப்படியெல்லாம் ஓவர் ஸ்பீடிங் நடந்திருக்கு! :)

தொழுங் காதல் களிறு அளிக்க, புள் ஊர்ந்து.....தோன்றினையே!
* கருடன் ஊர ஆரம்பித்தான்! காரை கர்ர்ர்-ன்னு ஸ்டார்ட் செய்வது போல = புள் "ஊர்ர்ர்ந்து"
* அடுத்த விநாடி... = "தோன்றினையே"!!!
கருடனின் Speed-க்கு, "விதி" மீறல் டிக்கெட் கொடுக்கறாரு......நம்+ஆழ்வாராகிய மாறன்! :)

இப்படியாகப்பட்ட கருடனை, அவன் தோற்றத்தை வைத்துக் கேலி செய்வது யாரு-ன்னு கேட்கறீங்களா? சேச்சே...என்னை எதுக்குப் பாக்குறீங்க? நான் தான் அமைதியான சுபாவம்-ன்னு உங்களுக்கே தெரியுமே! :)
கருடனைக் கேலி செய்பவர், வேறு யாருமல்ல! = சாட்சாத் நம்ம ஆதி ஜகன்னாதப் பெருமாள்! :)


திருப்புல்லணை = 108 திருத்தலங்களில் இது பாண்டி நாட்டுத் தலம்!
இராமநாதபுரம்/இராமேஸ்வரம் கிட்டக்க இருக்கு! இந்தத் தண்ணியில்லா காட்டுல இருக்குற பெருமாள் தான் இப்படியெல்லாம் பண்றாரு!
இவரை வேற எந்தத் தண்ணி இல்லாக் காட்டுக்கு மாத்தறது-ன்னு நீங்களே சொல்லுங்க பார்ப்போம்? :)

ஒருவரைக் கேலி செய்யணும்-ன்னா என்ன பண்ணுவோம்? அவரைப் போலவே பேசிக் காட்டி, நடந்து காட்டி கிண்டல் அடிப்போம்-ல்ல??
அதையே தான் இவரும் செய்யறாரு! தன் கருட வாகனத்தை "Imitate" செஞ்சிக் காட்டறாரு! நீங்களே பாருங்க!

கருடன் படத்தைக் க்ளிக்கி, பெரிதாக்கிப் பாருங்கள்!
* கருடன் எப்படி இரு கைகளையும் தூக்கி, பெருமாளைத் தாங்குகிறானோ...
அதே Pose-இல் தான் பெருமாளும் இருக்கார்!
* அனுமன் கூட இப்படித் தானே வாகனமாக உலா வருவார்? ஒரு வேளை அனுமனையும் கிண்டல் ஓட்டுகிறானோ?
மெய்யாலுமே இது கிண்டல் அடிக்கத் தானா??? ஏன் இப்படி ஒரு Pose?


சுவாமி ரகுவீரதயாள் - "திருத்திரு" = இவரை அறிவீர்களா? பலரும் அறிவார்கள்!
பந்தல் வாசகர்களுக்கும் இவர் பரிச்சயம் தான்! இது தான் அவர் வலைப்பக்கம்!

* பல பழமையான நூல்களை எல்லாம் மின்னாக்குபவர்!
* ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்கால் பட்டவர்!
* ஊர் என்னமோ சென்னை தான் என்றாலும், திருவரங்கம் ஆண்டவன் ஆசிரமத்திலே செயலராக இருந்து கொண்டு, புல்லாணிக் கிராமத்திலேயே தங்கி விட்டவர்!
* புல்லாணி ஜகன்னாதனுக்கு பல கைங்கர்யங்கள் செய்து வருபவர்!
* இணையத்திலும், பாசுரம் குறித்த மென்பொருள் தொகுப்பிலும், பெரிதும் உலாவுபவர்!

இந்தத் திருப்புல்லாணி திவ்ய தேசத்தில் தான், இப்போது பிரம்மோற்சவம் நடைபெற்றுக் கொண்டுள்ளது!
ஒவ்வொரு நாளும்...விழாச் செய்திகளையும், வாகனங்களையும், படங்களையும், வீடியோக்களையும், திருத்திரு-வின் வலைப்பூவிலே சுடச்சுட......அவசியம் காணுங்கள்! இதோ சுட்டி!

* ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும் விழாக்கள்...
* அந்தந்த மாதங்களில் வரும் ஆழ்வார்/ஆசாரியர் பிறந்த நாட்கள்
இதையெல்லாம் நீங்க உடனுக்குடன் அறிந்து கொள்ளணுமா? = இதோ இராம தூதன் பக்கம்!
நண்பர் செந்தில், இந்தத் தொண்டினை ஆர்வமுடன் செய்து வருபவர்! எட்டிப் பாருங்கள்! கை-தட்டிப் பாருங்கள்!!



நாம கருடனுக்கு வருவோம்! - திருப்புல்லாணி கருட சேவையில் பெருமாள் ஏன் இப்படி ஒரு லுக்கு விட்டுக்கிட்டு வராரு?
வாங்க வாங்க-ன்னு கூப்பிடறாரா? சீக்கிரம் என்னைச் சரணம் அடையுங்க-ன்னு நம்மளைக் கெஞ்சறாரா? :)
அதற்கு காலைச் சுட்டிக் காட்டி இருக்கலாமே, திருவேங்கடமுடையானைப் போல?
ஏன் இரண்டு கைகளையும் உயரத் தூக்கணும்? அதுவும் கருடனைப் போலவே தூக்கணும்? எதுக்கு இப்படி அலங்காரம் பண்ணி வச்சிருக்காங்க இவிங்க?

எனக்குத் தெரிஞ்சதை உளறி வைக்கட்டுமா? :)...ஏன்-ன்னா.....

திருப்புல்லாணி = சரணாகதி க்ஷேத்திரம்! தஞ்சத் தலம்!
அருகிலேயே சேதுக்கரை - கடற்கரை! = இங்கு தான் விபீஷண சரணாகதி நடந்தது!

வீடணன் செஞ்சது சரியா? துரோகமா? - இதெல்லாம் இன்னொரு நாள் பார்க்கலாம்!
அது வரைக்கும் அவனைத் "துரோகி"-ன்னே கூப்பிட்டாலும் கூட...அது வீடணனுக்கு ஓக்கே தான்!
ஆனால் நம் இனியன் அனுமனுக்குத் தான் அது ஓக்கே இல்லை! :)

எது எப்படியோ, இராமயணத்தில் மிகவும் சிலாகித்துப் பேசப்படும் ஆறு சரணாகதிகள், ஆறு காண்டங்களிலும்! = அதில் விபீஷண சரணாகதிக்கு தான் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!
* அங்கே, அவன் நிராதரவா அந்தரத்தில் நிற்க,
* இங்கே, இராமன் கோஷ்டியில், அவனைச் சேர்த்துக் கொள்வதா வேணாமா-ன்னு ஒரு விசாரணையே நடக்குது!
ஒரு "துரோகி"யை நம்ப, இராமன் கோஷ்டியிலேயே தயார் இல்லை!

சாந்தம், வீரம், விவேகம், கல்வி-கேள்வி இதெல்லாம் உள்ள வீடணனுக்கே இந்த விசாரணை-ன்னா, நம்ம கதி? என் கதி?? :)
* அதுக்கு மேல் விசாரணையை நீடிக்க விரும்பாத என் ராகவன்...
* அன்பை அறுத்துப் பார்த்து விசாரிக்க விரும்பாத என் ராகவன்...
ஹைய்யோ.....அவனையும் தீக்குளிக்கச் சொல்லப் போறானோ? ஹா ஹா ஹா!

ஊர் அறிய, உலகு அறிய, கடல் அலைச் சத்தத்தையும் மீறி, திடீர்-ன்னு ஒரு சத்தியம் செய்கிறான்!
சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே!
அபயம் சர்வ பூதேப்யோ: ததாம் யேதத் வ்ரதம் மம!!
இப்படிக்கு,
இராகவன்



அது என்ன சத்தியம்?

சக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே!
= ஒரே ஒரு முறை, சரணம் என்று வந்தக்கால், அன்பை ஆத்ம பூர்வமாய் தந்தக்கால்...

அபயம் சர்வ பூதேப்யோ:
- எது யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்...மனிதனோ, அசுரனோ, தேவனோ, பறவையோ, விலங்கோ,
- மனிதனுக்குள்ளேயே அந்தச் சாதியோ, இந்தச் சாதியோ, எந்த மொழியோ, நல்லவனோ, கெட்டவனோ, போகியோ, யோகியோ...
- ஞான யோகியோ, கர்ம யோகியோ, பக்தி நெறியாளனோ...யாராய் வேண்டுமானாலும் இருக்கட்டும்...

ஒரே ஒரு முறை,
"சரணம்" என்று வந்தக்கால்...
அபயம் "சர்வ" பூதேப்யோ
= யாருக்கானாலும் “அபயம்” அளிப்பேன்!

ததாம் யேதத் வ்ரதம் மம!!
= இது விரதம்! சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

என்று நடுத் தெருவில் சத்தியம் செய்து காட்டுகின்றான்!
அதான் இரு கைகளையும் உரக்கத் தூக்கி,
This Jagannatha PerumaL of PullaaNi is taking Oath!

** சக்ருதேவ ப்ரபந்நாய = ஏகம் சரணம்!
** (அ+பயம்) = பயப்படாதே! மா சுச: = கவலைப்படாதே!

என்னை எப்படிக் கருடன் தாங்குகிறானோ...
அதே போல்...
என் ப்ரியமான சரணாகதனே...
உன்னை நான் தாங்குவேன்!
உன்னை நான் தாங்குவேன்!
உன்னை நான் தாங்குவேன்!

திருப்புல்லாணி கருட சேவை கண்டீர்களா?
ஒரே நேரத்தில் இரண்டு கருட சேவைகள் - உபய கருட சேவை - அது திருப்புல்லாணிக்கே விசேடம்!
ஒரு கருடன் மேல் பெருமாளும், இன்னொரு கருடன் மேல் இராமனும், தொம் தொம் என்று உலா வர...
கருடத்வனி என்னும் ராகத்தில், நாதஸ்வர-தவிலிலே மல்லாரி வாசிக்க,
தொம் தொம் தொம் என்று கருட கம்பீரக் காட்சி!

இதோ...உற்சவத்தையும், மற்ற வாகனங்களையும் அவசியம் காணுங்கள்!


திருப்புல்லாணி பற்றிய சிறு குறிப்புகள்:

* இலங்கைக்கு அணை கட்டும் பொருட்டு, அலைகளின் சீற்றத்தைக் குறைத்துக் கொள் - என்று கடலரசனை வேண்ட,
இராமன் தர்ப்பைப் புல்லின் மேல், விரதம் இருந்த கோலம்! = தர்ப்ப சயனம் = புல்+அணை
அது தான் புல்லாணி-ன்னு ஆயிருச்சி! :)
சும்மா சொல்லக் கூடாது...நம்ம மக்கள் பேச்சு வழக்குக்கு கூட இலக்கண விதி வச்சித் தான் லோக்கல் ஆக்குறாங்க போல! தலை+அணை = தலக்காணி! புல்+அணை = புல்லாணி! :)

* இலக்குவன் அருகில் இல்லை, ஆதி சேடனாய் இருப்பதால்! சேடனின் மேல் புல் விரிப்பை உற்று நோக்கவும்! தாயாரும் அருகில் இல்லை! அப்போது அசோக வனத்தில் இருந்ததால்!
ஆனால், நம் அனுமன் இருக்கிறான்! வீடணனுக்கும் சிலை உண்டு!
பெருமாள் கருவறையில் சுகன்-சாரணன் முதலான அரக்கர்களும் இருக்கிறார்கள்! :))

* ஆலயக் கருவறைச் சுற்றில் பெரிய அஸ்வத்த மரம் = ஆலமரம் உண்டு! அதன் கீழ் பல நாகர்கள்...நேர்த்திக் கடனாகச் செலுத்தும் வழக்கம் உண்டு!

* தர்ப்ப சயன இராமன் என்றாலும்...மூலவர் என்னவோ, ஆதி ஜகன்னாதப் பெருமாள் தான்! ஜகன்னாதன் = உலகீசன்!
பூரி ஜகன்னாதர் இடுப்பு உயரம்! புல்லாணி ஜகன்னாதர் முழு உருவம்! அருகே கல்யாணவல்லி, பத்மாசினித் தாயார்கள்!

* தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து பெற்ற பாயசம், அதை அருந்திப் பிறந்த நால்வர்! இன்றும், பால் பாயசம் பெருமாளுக்கு நிவேதனம்!
"பெருமாள்" என்னும் இராமன் வழிபட்ட பெருமாள் ஆதலால் = இவரும் "பெரிய பெருமாள்"!

* திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த தலம்! தோழி ஆண்டாளும், திருமழிசையும் சேதுவைப் பாடியுள்ளனர்! சங்கீத மும்மூர்த்திகளில், தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும்...இப்பெருமாள் மேல் இசைத்து உள்ளனர்!

* இராமேஸ்வர யாத்திரையில் - புல்லாணியும், சேதுக்கரையும் முக்கியம்! திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டும் தலமும் கூட!

* எல்லாவற்றுக்கும் மேலாக...இது சரணாகதி க்ஷேத்திரம்...
= வீடணன் + உடன் வந்த நால்வர் = அனலன், அனிலன், அரன், சம்பாதி
= பின்னர் இராவணனால் வேவு பார்க்க அனுப்பப்பட்ட = சுகன், சாரணன்
= அதோடு கூட, கடலரசன், அவன் மனைவி வருணி
என்று பலப்பல சரணாகதிகள் நிகழ்ந்த ஒரே தலம் = திருப்புல்லணை!

இறைவன் யார் யாரை எல்லாம் அணைத்து மகிழ்ந்தான் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்!
ஞான கர்ம யோகிகளையா? வேதியரையா? பெரும் மன்னர்களையா? - இவர்களில் ஒருவரையாச்சும் அணைத்து மகிழ்ந்தானா? பின் யாரை அணைத்துக் கொண்டான்?
* படகோட்டி = குக சரணாகதி
* விலங்கு = ஆஞ்சநேய சரணாகதி
* அரக்கன் = விபீஷண சரணாகதி

துரோகி என்று "அங்கே" இழித்தாலும், அரக்கன் என்று "இங்கே" இழித்தாலும்..
என்னால் இனி ஆவதொன்று இல்...
எல்லாம் நின்னடிக்கே என்று நின்று விட்டேன்...
நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன திருக்குறிப்பே??
* ஒரு அரக்கனை, இன்னொரு அடியவன் கண்டு கொண்ட தலம் = திருப்புல்லாணி!
*
ஒரு அரக்கனை, தம்பீ என்று அணைத்துக் கொண்ட தலம் = திருப்புல்லாணி!

இராவணன் கூட ஜெய-விஜயனாய், மீண்டும் மோட்சம் போய் விட்டான்!
ஆனால் இன்னி வரை தாங்கள் மோட்சம் போகாது,
* சரணாகத அன்பிலே...
* தன்னைப் பின்னுக்குத் தள்ளி, அவனை முன்னுக்குத் தள்ளி,
* இங்கேயே இருந்து கொண்டு,
* இன்னும் இன்னும் அடியார்களை, அவனிடத்திலே சேர்ப்பித்துக் கொண்டு இருக்கிறார்கள்!
எம் இனியான் ஆஞ்சநேயன் திருவடிகளே சரணம்!
அடியார்க்கு நல்லான், விபீஷணாழ்வான் திருவடிகளே சரணம்!


திருப்புல்லாணிக்குச் செல்லுங்கள்! திருத்திரு பதிவிலே சேவித்து நில்லுங்கள்! ஹரி: ஓம்!


அப்படியே Mar-28, நம் கூடல் குமரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
பதிவு குமரனுக்கு சமர்ப்பணம்! சரணாகதி க்ஷேத்திரத்தில், அர்ச்சனை துவங்கட்டும்! :)

Read more »

Tuesday, March 23, 2010

வாணி ஜெயராம், சங்கராபரணம், ராமதாசு, இராமநவமி

சங்கராபரணம் படத்தைப் பத்தி உங்களுக்கே நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கும்! ஏன்? எதுக்குத் தெரிஞ்சி வச்சிக்கிட்டு இருக்கீங்க?
இன்னைக்கும் அதன் "சங்கீத-அமைதியில்" மூழ்க முடிகிறதே! எப்படி?

இசை ரசிகர்கள் மட்டுமன்றி, பல தரப்பினருக்கும், படம் பிடிச்சி இருந்ததே!
தெலுங்குப் படம்-ன்னாலே மசாலா, உடற்பயிற்சி நடனங்கள்-ன்னு கேலி பேசப்படும் நிலையில், எப்படி இது போன்ற ஒரு கலைப் படத்துக்கு தெலுங்கில் ஹிட் கொடுக்க முடிந்தது?

தமிழில் சங்கராபரணம் போல் ஒரு படம் வந்துள்ளதா?

மிருதங்கச் சக்ரவர்த்தி, சலங்கை ஒலி, சிந்து பைரவி போன்ற படங்கள் இருக்கு தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனால் மசாலா எதுவும் கலக்காமல்? வெற்றிகரமாக??

இத்தனைக்கும் படத்தின் ஆரம்பமே, ரொம்ப மெதுவா...ஒரு கலைப் படம் போலத் தான் நகரும்! காதல் காட்சிகள், நகைச்சுவை, சண்டைக் காட்சிகள் - இதெல்லாம் 2% கூட இருக்காது! பாடல்கள் கூட, ரொம்ப Dilute செஞ்சிருக்க மாட்டாங்க! எல்லாமே மரபிசைப் பாடல்கள் தான்! மொத்தம் 12 பாட்டு வேற! தாங்குமா? :)

இத்தனைக்கும், படத்தில், சமூகம் ஒப்புக் கொள்ளாத "உறவுக் குழப்பம்" வேற தொட்டுச் செல்லப்படுகிறது! அபூர்வ ராகங்கள் அவ்வளவா ஓடலையே!
ஆனால் சங்கராபரணமோ, பல மாநிலங்களில், தெலுங்கிலேயே ஓடி, அப்பறம் தான் தமிழில் எல்லாம் டப் செய்யப்பட்டது! ஆனால் இன்னிக்கும் தெலுங்கில் பார்க்கவே பிடிக்கிறது!

படத்தில் இத்தனை "Drawback" இருக்கும் போது, எப்படி...இது ஒரு Trend Setter? :)



இப்போ VJ என்னும் வாணி ஜெயராமுக்கு வருவோம்!

சுசீலாம்மாவுக்கு அடுத்து, என்னைத் தாலாட்டித் தூங்க வைக்க முடியும்-ன்னா அது வாணி ஜெயராம் தான்!
ஜானகி பாடினாங்க-ன்னா தூங்க முடியாது! ஒரு வித கிக்-கில் எழுந்து கொள்வோம்! :)

"பி.சுசீலா அவர்களை சுசீலாம்மா-ன்னு கூப்படறீங்க, ஆனா இவிங்கள மட்டும் ஜானகி-ன்னு மரியாதை இல்லாம கூப்பிடறீங்களே?"-ன்னு, என்னுடைய இசை இன்பம் பதிவுகளில் மக்கள் கேட்டு இருக்காங்க! :)
ஜானகி குரலோடு "கிக்" அப்படி! வேற ஒன்னும் பெருசா காரணம் இல்லை!

வாணிக்கு முன்பே ஒரு தேசிய விருது கிடைச்சிருந்தாலும்...சங்கராபரண தேசிய விருது மிகவும் பரவலாகப் பேசப்பட்டது...க்ளைமாக்ஸ் பாடலான = தொருகு நா இதுவன்ட்டி சேவா!

வாணி ஜெயராம், தமிழில், சங்கர் கணேஷ் கிட்ட தான் முதலில் பாடினாங்க-ன்னு நினைக்கிறேன்! அப்பறம் தான் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கண்டு கொண்டார்!
ஆனா எம்.எஸ்.வி கிட்ட பாடின "மல்ல்ல்ல்ல்லிகை - என் மன்னன் மயங்கும்" பாட்டு தான் முதல் பாட்டோ-ன்னு அப்பப்போ நினைச்சிக்குவேன்! அவ்வளவு இனிமை!

Vani Jayaram - MSV


ஆனால் எம்.எஸ்.வி-சுசீலாம்மா Vs இளையராஜா-ஜானகி என்னும் இரண்டு பெரிய மலைகளுக்கு இடையில், வாணி மாட்டிக்கிட்டாங்களோ-ன்னு எனக்கு அடிக்கடி தோனும்!
தமிழில் "காட்சிகரமான" வெற்றிகளை வாணியால் பெற முடியவில்லை! குன்னக்குடி மட்டுமே வாணியைத் தன் எல்லாப் படங்களிலும் பயன்படுத்திக் கொண்டார்!

பின்னாளில், மலையாள இசை உலகம், வாணி ஜெயராமை வெற்றிகரமாக இழுத்துக் கொண்டது! அதனால் என்ன? வாணியின் - "கேள்வியின் நாயகனே" பாட்டு ஒன்னே போதும்! திரை மரபிசையில், பல்லாண்டு பல்லாண்டு, மணம் பூத்துக் கிடக்கும்!

அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?-
ன்னு ஹை பிட்ச்சில் எகிறும்!
ஆனா பெருமாள் ஞாபகத்துக்கு வரவே மாட்டாரு! ஏன்னா இங்கே தாயார் மட்டுமே தெரிவாங்க! :)

But, அதுக்கு அப்பறம், பழனி மலையில் உள்ள வேல் முருகா-ன்னு ஆரம்பிப்பாங்க பாருங்க...
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்(தி) இரு முருகா...திருமுருகா...திருமுருகா
...ன்னும் போது, அந்தப் பிடிவாதம் கண்டு இன்னிக்கும் அழுதுருவேன்!


இப்போது சங்கராபரணம் + வாணி ஜெயராம்-க்கு வருவோம்!

தேசிய விருது என்னமோ தொரகு நா இதுவன்ட்டி சேவா என்னும் க்ளைமாக்ஸ் பாட்டுக்குத் தான்!
ஆனால் எந்த பெரிய இசைக் கருவியும் இல்லாம,
ஒரு டொய்ங்க் டொய்ங்க் என்பதை மட்டும் வச்சிக்கிட்டு,
ஒக்க நிமிஷப் பாட்டு ஒன்னு வரும் பாருங்க!
அந்த டொய்ங்க் டொய்ங்-கை வாழ்க்கை-ல மறக்கவே முடியாது!

மஞ்சு பார்கவியோட பையன் (பொண்ணு), சங்கர சாஸ்திரி வாரி இன்ட்டிக்கு ஒச்சிந்தே, ஈ பாட்டு மூலமா, அனாதை-ன்னு "பொய்" சொல்லி, Entry கொடுக்கும் கட்டம்!
அப்போ பாடப்படும் மிக எளிமையான பாடல்...மிக ஆத்மார்த்தமான பாடல்...

12 வருஷம் ஆகியும் கூட...தன்னை எட்டிப் பார்க்காத ஒருத்தருக்கு...
தன் அன்பை, பொய் ஆக்கி விடாத பாடல்!


ஆகா! என்ன பாட்டு-ங்க அது? = பத்ராச்சலம் இராமதாசர் கீர்த்தனை!
இன்று ராம நவமி! (Mar 24, 2010)!
சக்ரவர்த்தித் திருமகனின் பிறந்த நாள்! - Happy Birthday Rama!
Happy Birthday - Bharatha, Lakshmana, Satrughana - அடுத்த இரண்டு நாட்களும்...)

இராமநவமி அதுவுமா, ஜெயிலுக்குப் போவோம் வாங்க!.....இராமதாசரும் இராமனும் வாழ்ந்த அந்த ஜெயிலுக்குப் போயி, பாடலைக் கேட்போமா?


சிறைச் சுவரில்...இராமதாசரின் தனிமைக் கைவண்ணம்...


தெலுங்குப் பாடலுக்கு பெருசு பெருசா விளக்கம் சொல்வதற்குப் பதிலா...
"அதே மெட்டில்", தமிழாக்கிக் கொடுத்துள்ளேன்!
பொருளும் புரிஞ்சி, இசையும் அதே மெட்டில் இருக்கா-ன்னு பார்த்துச் சொல்றீங்களா?

பாட்டைக் கேட்டுகிட்டே, பதிவை வாசியுங்க!
* மூலப் பாடல் இங்கே!
* தமிழில் "பாட" முயற்சித்து உள்ளேன்! :) பயமா இருந்தா கேட்க வேணாம்! :)
ஆனால்...இந்தப் பாடல்...என் சுவாசம் போல!
அதான் நியுயார்க்கில் இருந்து, சிகாகோ வந்து, எங்கும் வெளியே போகாம, விடுதி அறையில்.....இதை ஹம் பண்ணிக்கிட்டே, எழுதிக்கிட்டு இருக்கேன்! :)


படம்: சங்கராபரணம்
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: வாணி ஜெயராம்
வரிகள்: பத்ராச்சலம் இராமதாசர்
ராகம்: நாத நாமக்ரியை

ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ, இன வம்சோத்தம ராமா
நா தரமா பவ, சாகர மீதனு, நளின தளேக்ஷண ராமா

எப்படி என்மேல், கருணை புரிவாய், ரவி ராகவ குல ராமா?
எப்படி அடியேன், கடல் கடப்பேனோ, அல்லி விழி அபி ராமா??

ஸ்ரீ ரகு நந்தன, சீதா ரமணா, ச்ரித ஜன போஷக ராமா
காருண்யா லய, பக்த வரத நின்னு, கன்னதி காணுபு ராமா


திரு ரகு குலனே, சீதையின் சுவையே, அடியரை அணைத்திடும் ராமா!
தனிப் பெருங் கருணை, எங்களின் வரதா, கோசலை விளக்கே ராமா!


க்ரூர கர்மமுலு, நேரக சேசிதி, நேரமுலேஞ்சகு ராமா
தாரித்ரயமு, பரிகாரமு சேயவே, தெய்வ சிகாமணி ராமா

போய்புகு பிழைகள், செய்தேன் எனினும், தூசாக்கிடுவாய் ராமா!
வறுமையும் வெறுமையும், போக்கி எனக்கருள், தெய்வ சிகாமணி ராமா!

வாசவ நுத, ராம தாச போஷக, வந்தனம் அயோத்ய ராமா!
பாசுர வர, சத் குணமுலு கல்கின, பத்ராதீஸ்வர ராமா!

வாசவன் துதி, ராம தாசனைக் காக்கும், அபயம் அயோத்தி ராமா!
தேசமும் குணமும், நடையாய் உடையாய், பத்ர கிரீஸ்வர ராமா!



(* பாடலின் பொருளையும், சில தெலுங்குப் பதங்களையும்...சரி பார்த்துக் கொடுத்த மதுமிதா அக்கா, துளசி டீச்சர், திவாகர் சாருக்கு...மன வந்தனமுலு!)


சங்கராபரணம் - படத்தில் பாடல் வரும் காட்சி:


பக்த ராமதாசு படத்தில், இதே பாடல், விஜய் யேசுதாஸ் பாடுகிறார்:


கர்நாடக இசையில்:
* பால முரளி கிருஷ்ணா



ஏன் பத்ராச்சலம் இராமதாசர் பாடல்கள் மட்டும் இப்படி மனதை என்னமோ செய்யுது?

எல்லா விதமான அன்புக்கும், காதலுக்கும், பாசத்துக்கும், நட்புக்கும்...
கால அளவிலே...
ஒரு பொறுமை உண்டு! ஒரு எல்லையும் உண்டு!

சீதை இராமனுக்கு ஒரு வருடம் தான் காத்திருந்தாள்!
அதற்குள் தற்கொலை முடிவு!

நம் அன்பன் வந்து தடுத்தான்! பிழைத்தாள்!

ஆனால் இராமதாசர் என்னும் இந்தக் கோபண்ணா...
ஒரு வருடம் இல்லை, இரண்டு வருடம் இல்லை....
மொத்தம் 12 வருடம்....
மொத்த பாண்டவர்களின் வனவாச காலம்...
அவன் வந்து மீட்பானா, பார்ப்பானா என்று கூடத் தெரியாது...

அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!

நமக்கு கஷ்டம் வந்தா...ஒன்னு கடவுளை வெறுவெறு-ன்னு வெறுத்துக்குவோம்! இல்லை கர்ம பரிகாரத்தை பிடிபிடி-ன்னு பிடிச்சிக்குவோம்! :)
ஆனால், அவனுக்கென்றே அடைந்து கிடப்போமா?

இப்போ சொல்லுங்க.....
சரணாகதி என்னும் ஆத்ம சமர்ப்பணம் = உன் உள்ள உகப்புக்கே நான்!
இங்கு நம்மில் யார் ஆத்திகர்கள்? :)

இராம நவமி அன்று, இராமனைப் பற்றி எழுதவில்லை! சினிமாவும் பாட்டுமா எழுதி விட்டேன்! மன்னியுங்கள்!
ஆனால் இந்த ஆன்மீகம் "சினிமாத்தனமாக" இருந்தாலும்......
இதுவே நம் அன்பன் ஆஞ்சநேயனுக்குப் பிடித்தமானது! - யத்ர யத்ர ரகு நந்தன கீர்த்தனம்! எங்கெங்கெல்லாம்....அங்கெங்கெல்லாம்!

மனத்துக்கு இனியானை மனத்திலே வைத்தான்
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!
அவனுக்காகவே அடைந்து கிடந்தான்!

என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்று அல்லால் பற்றில்லேன்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்....வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...
ஏ தீருக நன்னு, தய ஜூசே தவோ???

Read more »

Thursday, March 18, 2010

ஆண்டாள் கனவில் கண்ட கல்யாணம் !


உதவி வேண்டுபவர்கள், மிரட்டி உதவி கேட்டால் வேலை நடக்குமா என்ன? அப்போது ஓடிய குயில், மீண்டும் அந்தச் சோலைப் பக்கமே வரவில்லை!

விரட்டியவளுக்கோ, சிறு நப்பாசை! ஒரு வேளை குயில் வேறு எங்காவது சென்று கோவிந்தனைக் கூவியிருந்தால்? அப்படியாவது கண்ணன் வரமாட்டானா என்ற ஏக்கம்! வெகு நாட்கள் ஆன பின்பும் கண்ணன் வராததால், குயில் கூவவில்லை என்று உணர்ந்தவள், திகைக்கிறாள்! வருத்தத்தில், மெலிகிறாள்!

நம் பாவையின் பர பக்தி, பரம பக்தியாகிறது!

காலம் கனிந்துவிட்டதை அறிந்த கண்ணன், அவளுக்குக் காட்சியளிக்கத் தீர்மானிக்கிறான்! எப்படி?

நினைவில் வந்தால், அவளுக்குச் சிறிது களிப்பு, பிறகு வருத்தம்!
கனவில் வந்தால், அவளுக்கு அதிக மகிழ்ச்சி, இரவு மட்டுமல்ல!
கனவில் வந்ததை அவள் நினைவெல்லாம் வரும், பகல் கனவும்!
கனவில் வந்தான், அவள் மணாளனாக , கண்ணனெனும் கள்வன்!

(நேரில் வந்தால் அந்த 'சந்தோஷ அதிர்ச்சி'யை அவளால் தாங்க முடியாது என்று அறிந்தே, கனவில் வந்ததாக விளக்கம் சொல்லப்படுவது உண்டு)

***

இடம்: அதே சோலை
காட்சி: பகல் காட்சி - கனவு

(பாவையும் தோழியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)


தோழி: என்ன, ரொம்ப குஷியாய் இருக்கே! அப்பா மாப்பிள்ளை பார்த்துட்டாரா?

பாவை: எனக்குக் கல்யாணம் ஆயிடுத்து!

தோழி: ஏய்! நேற்று வரை நல்லா தானே இருந்தாய்! உடம்பு சரியில்லையா?

பாவை: நேற்று இரவு ஒரு கனவு வந்தது! நாராயணன் என்னை முறையாகக் கல்யாணம் செய்தான்!

தோழி (சற்று குழம்பி): முறையாக என்றால்? புரியல ...

பாவை: ஒண்ணுமே தெரியாதா உனக்கு? நம்மாத்துக் கல்யாணம் பார்த்ததே இல்லையா?

தோழி (மழுப்பலாக): எனக்கு எல்லாம் தெரியும்! இருந்தாலும், நீயே, உன் Style-ல் சொல்லிடேன்?

பாவை: சூரியன், தன் பெண்ணான சூர்யாவை சோமனுக்குத் (சந்திரனுக்கு) திருமணம் செய்து கொடுத்த போது கூறிய மந்திரங்கள், நடந்த சடங்குகள், ரிக் வேதம் 10-வது மண்டலம், பகுதி 23/32/65/85-ல் உள்ளன. சில மந்திரங்கள், யஜுர் வேதத்தில் உள்ளன.

நாராயணனுக்கும் எனக்கும் நடந்த கல்யாணமும், இதையே பின்பற்றி நடந்தது!

தோழி: எல்லாமே ஒரே கனவிலா? இது Too-much! அப்புறம், அந்தச் சடங்குகள், மந்திரங்கள் ...?

***

வேத சம்பிரதாயமான திருமணத்தில், பல அங்கங்கள் உண்டு. முதல் அங்கம், வாக் தானம்.

மணமகன் (வரன்), கல்யாணம் நல்லபடியாக அமைய, தன் வீட்டுப் பெரியவர்களையும், அர்யமாவையும் (Lord of Cosmic order), பகனையும் (Lord of Blessings/Grace) வேண்டி, 2 மந்திரங்கள் (10.32.1, 10.85.23) சொல்கிறான்.

பின்னர் அவன் வீட்டுப் பெரியவர்கள் பெண் (வது) வீட்டிற்குச் சென்று, பெண் கேட்பர்.

பெண்ணின் தந்தை வரனை ஒப்புக் கொள்வது முதல், திருமணச் சடங்குகளும், ஏற்பாடுகளும் தொடங்கும்.

ஆண்டாள் கனவில், கண்ணன் திருமணக் காட்சி தந்த அதே சமயத்தில், பெரியாழ்வார் கனவில் தோன்றி 'ஸ்ரீ ஆண்டாளை அரங்கத்திற்கு அழைத்து வாரும், அவளை நாம் திருமணம் செய்து கொள்கிறோம்' என்று கூறியதாகவும், ஸ்ரீரங்கத்தில் உள்ள புரோகிதர்கள் சிலர் கனவிலும் வந்து, 'பெரியாழ்வார் வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆண்டாளைப் பெண் கேளுங்கள்' என்று உத்தரவிட, 'வாக் தானம்' நடந்ததாகக் கூறுவர்.

திருமணம் முழுவதையும் கனவாகக் கண்டது பற்றித் தோழியிடம் விவரித்த ஆண்டாள், 'அரங்கன் வீட்டார் தன் வீட்டிற்கு வந்து பெண் கேட்டார்கள்' என்று மட்டும் இத்திருமொழியில் சொல்லவில்லை. எனவே ஆண்டாள் இத்திருமொழியை அருளிச் செய்த போது, அரங்கன் பெரியாழ்வார் கனவில் வந்து பெண் கேட்கவில்லை என்று யூகிக்க இடமுள்ளது.

நாச்சியார் திருமொழியில், 'வாரணமாயிரம்' அருளிச் செய்த பிறகும், ஆண்டாள் 'கண்ணன் வரவில்லை' என்று, வேங்கடவனையும், திருமாலிருஞ்சோலை அழகரையும் வரச் சொல்லி, மேகங்களையும், பூக்களையும் தூது விடுகின்றாள். அதன் பிறகே, 'அரங்கனைக் காண வேண்டும்' என்று சொல்கிறாள். எனவே, அரங்கன் 'பெரியாழ்வாரிடம் பெண் கேட்கும் படலம் நடந்தது இன்னும் சில காலத்திற்குப் பிறகே' என்று இன்னொரு சாரார் கூறுவர்.

வேறு சிலர், பெரியாழ்வார் கனவில் அரங்கன் வந்தான்; ஆனால், திருவரங்கத்துப் புரோகிதர்கள் வர கால தாமதம் ஆகிவிட்டதால், அதைக் கூடப் பொறுக்காமல் ஆண்டாள் மீதித் திருமொழிகளை அருளிச் செய்ததாகக் கூறுவர்.

***

(கனவாடல் ... அதாங்க - கனவு + உரையாடல் .. .தொடர்கிறது ...)

பாவை: நாராயணன், ஆயிரம் யானைகள் சூழ (வாரணம் ஆயிரம் சூழ) வருகின்றான்!


தோழி: ஆய்ப்பாடியில் யானைகள் ஏது?

பாவை: எல்லாம் நந்தகோபருடையது! அவர் தன் எதிரிகளை அழிப்பதற்கு, யானைப் படையையே வைத்துள்ளாரே! 'உந்து மதகளிற்றன்' பாசுரம் சொன்னேனே, அதற்குள் மறந்து விட்டதா?

தோழி: சரி! சரி! அப்புறம்?

பாவை: தன்னைப் போலவே தன் தோழர்களையும் யானை மீது ஏற்றி, அவர்கள் சூழ்ந்து வர ஸ்ரீவில்லிபுத்தூர் தெருக்களை வலமிருந்து இடமாகப் பிரதக்ஷிணம் செய்து (வலம் செய்து) வருகின்றான்!

தோழி: தோழர்களும் யானைகள் மீதா?

பாவை: 'தம்மையே வணங்கித் தொழுவார்க்கு, தம்மையே ஒக்க அருள் செய்வர்' எனும்படி இருக்கும் 'நாரண நம்பி' ஆயிற்றே அவன்? தன் நண்பர்களையும், யானை மேல் ஏற்றிக் கொள்கிறான் (இப்போது, மாப்பிள்ளை தன் நண்பர்களையும், ஊர்வலத்தில் காரில் ஏற்றிக் கொள்வது போல்)!

தோழி ('கனவில் கூட நல்லாவே யோசிக்கறா இவ' என்று நினைத்து): மேலே சொல்லு!

பாவை: ஊரெங்கும் தோரணம் கட்டி, என் அப்பாவும், உறவினரும், என் தோழிகளும் (நீயும் தான்), பூரண கும்பங்களுடன் நாராயணன் எதிரே வந்து, அவனை வரவேற்றனர்!

தோழி: ஒரு வழியாக கனவு முடிந்ததா?

பாவை: இல்லடீ! இப்போ தான் ஆரம்பமே!

***

நாளை வதுவை* மணமென்று நாளிட்டு*
பாளை கமுகு* பரிசுடைப் பந்தல் கீழ்*
கோளரி மாதவன்* கோவிந்தன் என்பான்* ஓர்
காளை புகுத* கனாக் கண்டேன், தோழீ! நான்.
நாச்சியார் திருமொழி 6-2

நாளை திருமணம் என்று நாள் குறித்து, பாக்கு மரங்களை உடைய அலங்காரங்கள் நிறைந்த பந்தலின் உள்ளே, மிடுக்கு உடைய நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயருடைய ஒரு காளை நுழைவதைப் போல் கனவு கண்டேன், தோழி, நான்!

(பாளை - பட்டை; கமுகு - பாக்கு மரம்; பரிசு - அழகு, பெருமை; கோள் - மிடுக்கு, ஒளி)

***

(நம் பாவை மீண்டும் தொடர்கிறாள்)

பாவை: நாளை திருமணம் (நாளை வதுவை மணம்) என்று பெரியோர்கள் நாள் குறித்தனர் (நாளிட்டு). குறிப்பிட்ட நல்ல நேரத்தில், நரசிம்மனும், மாதவனும் ஆகிய கோவிந்தன் (கோளரி மாதவன் கோவிந்தன்), பாக்கு மரப் பட்டைகளுடன் (பாளை கமுகு) அலங்கரிக்கப் பட்ட மணப் பந்தலுக்கு (பரிசுடைப் பந்தல் கீழ்) வந்தான்.


ராமாயணத்தில், சீதை, உப்பரிகையில் இருந்து, ராமன் எனும் சிங்கத்தை நேரில் பார்த்து வெட்கமடைந்தது போல நானும், கோவிந்தனை, வெட்கத்துடன் நேரிலே பார்த்தேன்!

(மிடுக்கும், ஒளியும் உள்ள முக அழகைப் பற்றிப் பேசும் போதும், நடந்து, பந்தலுக்குள் வரும் அழகையும் சொல்லும் போதும், ஆண்டாளுக்கு முதலில் நினைவுக்கு வருவது, நம் நரசிம்மன் தான்! மற்ற பெருமாள்கள் எல்லாம் அதன் பிறகே!

எனவே தான் இதையும் நரசிம்மன் பாசுரமாக அடியேன் கருதுகிறேன்! சிலர், இதை நரசிம்மர் பாசுரம் இல்லை என்பர்! அதில் அடியேனுக்கு உடன்பாடு இல்லை!)

தோழி ('முற்றி விட்டது' என்று நினைத்து): அதாவது, நேரிலே, கனவிலே, பார்த்தேன் என்கிறாய்!

பாவை: ஏய்! கிண்டல் வேண்டாம்! அப்புறம் நான் வீட்டுக்குப் போய் விடுவேன்!

தோழி: ஸாரிடி! மேலே சொல்லு!

பாவை: என் அப்பா, கோவிந்தனை கிழக்கு முகமாக உட்கார வைத்து, தன் வருங்கால மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே நினைத்து, அவன் திருவடிகளை அலம்பி விடுகிறார். பின்னர், கோவிந்தனுக்கு, சில வேத மந்திரங்களைச் சொல்லி, 'மது பர்க்கா' (தயிர், தேன், நெய் ஆகியவற்றின் கலவை) கொடுத்தார்!

(வேதங்கள், சூரியன், சோமனையும் விஷ்ணுவாகவே நினைத்து மந்திரங்களைச் சொன்னதாகக் கூறும்; இந்தச் சடங்கு, 'கன்யா தானம்' எனும் சடங்கின் ஒரு பகுதி.

சில வீட்டார், இந்தக் கலவையைக் கொடுப்பதில்லை!
)

***

பாவை: பின்னர் என்னை, பந்தலுக்கு அழைத்து வந்தனர்! இப்போது தான், முறையாக நேரில் கண்ணனைப் பார்த்தேன்!

தோழி (பாவை வெட்கப் படுவதைப் பார்த்து): கனவிலேயும் வெட்கம் வருமா உனக்கு?

பாவை: சும்மா இருடீ! மண்டபத்தில், இந்திரன் உட்பட (இந்திரன் உள்ளிட்ட) பல தேவர்கள் வந்திருந்தனர் (தேவர் குழாமெல்லாம் வந்திருந்து). அங்குள்ள தேவர்களும், முனிவர்களும், என்னை மாதவனுக்குத் திருமணம் செய்து (என்னை மகள் பேசி) கொடுக்க முடிவு செய்தனர்.

நானும் மாதவனும், எனக்கு இருக்கும் தோஷங்களைப் போக்க, பிரஹஸ்பதி, இந்திரன், வருணன், சூரியன் ஆகியோரை மந்திரங்கள் (Rg 10.85.44-47) சொல்லி வணங்கினோம் (மந்திரித்து).

இந்திரனிடம், பத்து நல்ல புத்திரர்கள் பெற அருள் செய்யுமாறு வேண்டினோம்! 11-வது குழந்தையாக, நாராயணனையே (என் கணவனையே) கேட்டேன்! அவர், எங்களைத் தம்பதிகளாக ஆசீர்வதித்தார்.

கண்ணன், என் தோஷங்கள் நீங்க, மந்திரங்கள் சொல்லி, தர்ப்பைப் புல்லால், என் புருவங்களில் தடவினான்.

(புரோகிதர் இந்த மந்திரத்தைச் சொல்லும்போது, மணப் பெண்கள், பக்தியுடன் நன்கு திரும்பச் சொன்னால் அவர்கள் குடும்ப வாழ்க்கை நன்கு அமையும்)

தோழி: பத்து பெற்றால், எப்படிடீ சமாளிப்பே நீ? இதிலே உனக்கு 'Buy-10-Get-11th-Free' வேறே!

பாவை: சும்மா வாயை மூடிண்டு கேளுடீ! நாராயணன், எனக்கு வாங்கிய புடவையை (கோடி உடுத்தி), தன் தங்கை மூலம் (அந்தரி - துர்க்கை) அணியச் செய்தான். பிறகு, எனக்கு மணமாலை அணிவித்தனர். இவ்வாறு, எங்கள் நிச்சயதார்த்தம் முடிந்தது!


தோழி (Tension-னுடன்): Suspense தாங்கலை! கல்யாணம் நடந்ததா, இல்லையா?

***

பாவை: கண்ணன், என் வலது கையைப் பிடித்து, அக்னி குண்டத்தின் மேற்குப் புறம் மணையில் (பாய்) அமரச் செய்தான். அவனும் வடக்குப் புறம் அமர்ந்தான்.

மந்திரம் (Rg 10.85.26) சொல்லி, புஷனை (12 ஆதித்யர்களில் ஒருவன்) வணங்கி, என்னை கண்ணனின் வீட்டுத் தலைவி ஆக்குமாறு வேண்டினோம்.

தோழி: ம்ம்...

பாவை: நல்ல ஒழுக்கம் உடைய, வேதம் ஓதுகின்ற பிராம்மணர்கள் பலர் (பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார்), பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் (நால் திசை) இருந்து, புனித நீரைக் கொண்டு (தீர்த்தம் கொணர்ந்து) வந்திருந்தனர்!

தோழி (ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக): எதற்காம்?

பாவை: எனக்கு மங்களாசாசனம் செய்யத்தான்! சவிதா, சூரியன், வருணன், தேவர்கள், புனித நதிகள் (Holy Waters) ஆகியோர் மீது 5 மந்திரங்கள் சொல்லி (எடுத்து ஏத்தி), எங்கள் மீது தெளித்தனர் (நனி நல்கி)! எங்கள் வீட்டுக் குழாயில் அன்று தண்ணீர் வராததால், என் மீது இன்னும் கொஞ்சம் நன்றாகச் தெளிக்கச் சொன்னேன்!

பின்னர், பலவித மாலைகள் அணிந்து, புனிதனாக வந்த கண்ணனுடன் (பூப்புனை கண்ணிப் புனிதனோடு) என்னைச் சேர்த்து வைத்தனர்.

தோழி: கண்ணன் புனிதனாக வந்தானா? எதற்கு?

பாவை: அதுவா! இவனோ, எப்போதும் காடுகளில் மாடுகளுடன் திரிந்து, வெண்ணை திருடித் தின்று உடம்பெல்லாம் அழுக்காய் இருப்பவன்! என் அப்பா ரொம்ப ஆசாரம் ஆயிற்றே! சுத்தமா வரலேன்னா கல்யாணம் இல்லைன்னுட்டார்! எனவே, கண்ணன் நீராடி, மாலை தரித்து, கையில் தர்ப்பையுடன் ஆசாரமாக வந்தான்!

பின்னர், கண்ணன், என் இடுப்பில் தர்ப்பைப் புல்லால் காப்பு கட்டினான் (காப்பு நாண் கட்ட). என் கையிலும் காப்பு (கங்கணம்) கட்டினான்!


(இன்று சிலர் வழக்கத்தில், கையில் மஞ்சள் கயிறு மட்டும் காப்பாகக் கட்டப் படுகிறது)

***

பாவை: அவன் மீண்டும் மணப்பந்தலுக்கு வரும் போது, நீயும், பக்கத்து வீட்டு பத்மாவும், வேறு சில தோழிகளும் சேர்ந்து (சதிரிள மங்கையார்), சூரியன் போன்ற ஒளி உடைய மங்கள தீபங்களுடனும் (கதிரொளி தீபம்), பூர்ண கும்பங்களோடும் (கலசமுடன் ஏந்தி), எதிரே வந்து வரவேற்றீர்கள் (வந்து எதிர் கொள்ள)!


தோழி: நானா? நான் நேற்று என் வீட்டில் நன்றாகத் தூங்கினேன்! உன் கல்யாணத்திற்கு வந்து, கும்பமும் தீபமும் தூக்கிய நினைவு இல்லையே எனக்கு?

பாவை: அம்மா தாயே! கனவிலே, நீ வருங்காலத்தில் ரயிலைக் கூடத் தூக்கலாம்!! ... சும்மா குறுக்கே பேசாமல், மேலே கேள்! மதுரை மன்னன் (மதுரையார் மன்னன்), பாதுகைகளை அணிந்து கொண்டு (அடிநிலை தொட்டு) பூமி அதிரும் படி வந்தான் (அதிரப் புகுத)!

('கொடுத்தே பழக்கப் பட்ட வாமனன், யாசிக்க வந்ததனால், பதற்றத்தில் பூமி அதிரும்படி வந்தான்' என்று நஞ்சீயர் கூறுவது போலே, இங்கு கண்ணன் பூமி அதிரும்படி வந்தான் என்கின்றாள் நம் பாவை!)

(கண்ணனுக்கு, பரமபத நாதன் என்ற பெயரை விட, 'மதுரையார் மன்னன்' எனும் பெயர் அதிகம் பெருமை தரும்! பரமபதத்தை விட்டு, இங்கு வருவதைத் தானே அவன் விரும்பினான்? இதனால் தானே ஆண்டாளும் திருப்பாவையில், 'மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை' என்று தானே அவனை அழைக்கின்றாள்!

ஒரு வைணவர், வெண்ணைக்காடும்பிள்ளை சிலையை வைத்து, அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தார். அன்றிரவு அவர் கனவில் கண்ணன் தோன்றி, "என்னை 'நம்பி', 'பிம்பி', என்று நாட்டு மானிடப் பேரிட்டு அழைக்காதே! ’மதுரை மன்னன்’ என்று கூப்பிடு" என்று சொல்லி மறைந்ததாக ஒரு கதை உண்டு!)

- சிம்ம சொப்பனம் தொடரும்!

Read more »

Monday, March 08, 2010

நரசிம்மனைக் காணாத பாவையின் புலம்பல்



இடம்: தென் தமிழ் நாட்டில், ஒரு வீட்டு முகப்பு
காலம்: மாசி மாதத்தின் முதல் பகுதி
நேரம்: ஓடும் நேரம்

(நம் 'பாவை', தன் வீட்டின் வாசலில், புலம்பிக் கொண்டே கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள்)
பாவை (தனக்குள்ளே): மார்கழி மாதம் நோன்பிருந்தால் வேண்டிய மணாளன் கிடைப்பான் என்று சொன்னார்களே? அதற்காகத் தானே 30 பாசுரங்கள் எழுதி, நோன்பு நோற்றேன்? தை மாதம் முடிந்து, மாசியும் ஆரம்பித்து விட்டதே? கண்ணனைக் காணோமே? வரட்டும், பேசிக்கறேன்!

(அப்போது, தெருவின் முனையில், ஒரு அழகன் வந்து கொண்டிருக்கிறான்)

பாவை (காதலன் வந்து விட்டான் என்று நினைத்து): வா! இப்போது தான் வழி தெரிந்ததா?

மன்மதன் (அருகில் வந்து): என்னம்மா! என்னை ஏன் கூப்பிட்டாய்!

பாவை (நிமிர்ந்து பார்த்து): சே ... நீயா? ... என்ன மன்மதா? என் காதலனோ என்று நினைத்தேன்! என்ன வேண்டும் உனக்கு?

மன்மதன்: ஓஹோ! உனக்குக் காதலன் உண்டா? யார்? பக்கத்துத் தெரு பத்மநாபனா?

பாவை: ம்ஹும்!

மன்மதன்: கோடி வீட்டுக் கோவிந்தனா?

பாவை: ஏய்! உளராதே! என்னை, மானிடர் யாருக்காவது கல்யாணம் செய்து வைக்க நினைத்தால், தற்கொலை தான்!

மன்மதன்: பின்னே? தேவர்கள், கந்தர்வர்கள், இவர்களில் யாரையாவது ....

பாவை: அந்த level-க்கு எல்லாம் நாங்கள் இறங்க மாட்டோம்! Straight-ஆ தல - அதான் ... அந்த வேங்கடவன் - அவன் தான் என் குறி!

மன்மதன்: பேராசை தான் உனக்கு!

பாவை: ஏன் இருக்கக் கூடாதா? ... சரி ... வந்தது தான் வந்தாய்! கேசவ நம்பிக்குக் கால் பிடித்து விடும் பாக்கியம் கிடைக்கும்படி, உன் கரும்பினால் ஏதாவது செய்யேன்?


மன்மதன்: அதுக்கு வேற ஆளைப் பாரு!

(ஓடி விடுகிறான் மன்மதன்)

***

இடம்: அதே ஊர்
நேரம்: பங்குனி மாதத்தில் ஒரு நாள்

('காமன் வரும் காலமான பங்குனி வந்த பிறகும் கண்ணன் வரவில்லையே!' என்று கோபம் கொண்ட அந்தப் பாவை, தன் தோழிகளோடு, ஆற்றங்கரைக்குச் சென்று மணல் வீடு - சிற்றில் - கட்டிக் கொண்டிருக்கின்றாள். இதற்கிடையில், 'நம்மை அடைவதற்கு, நாம் தானே உபாயம்! இவள் வேறு ஒரு தேவதையை - மன்மதனை - நாடும்படி நாம் நடந்து கொண்டோமே', என்று கண்ணன் வருந்துகிறான்; அவளைச் சமாதானப் படுத்த நினைத்து, ஆற்றங்கரைக்கு வருகின்றான்)


பாவை (கோபத்துடன்): நாங்கள் காமனுக்காகக் காத்திருக்கிறோம்! நாராயணா! நீ ஏன் இங்கு வந்தாய்!

(கண்ணன், பதில் பேசாமல் மணல் வீடுகளைத் தன் காலால் இடறி அழிக்க முற்படுகிறான்)

தோழிகள் (அனைவரும் சேர்ந்து): இன்று முழுவதும் முதுகு வலியுடன் நாங்கள் கட்டிய இந்த மணல் வீடுகளை ஏன் அழிக்க நினைக்கிறாய்! தீமை செய்யும் ஸ்ரீதரா! இதுவும் எங்கள் பாவமே!

(கண்ணன் மணல் வீடுகளை அழிக்கத் தொடங்குகிறான்)

ஒரு தோழி: கண்ணா! கஜேந்திரன் போன்ற மிருகங்களுக்கு இரக்கப் படும் நீ, மனிதர்கள் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா?

கண்ணன்: நீங்களோ என் மீது கோபப் படுகிறீர்கள்! நான் ஏன் உங்களிடம் இரக்கம் காட்ட வேண்டும்?

பாவை: கள்ள மாதவா! உன் மேல் எங்களுக்குக் கோபம் இல்லை! உன்னைக் காணாததால் உடல் நைந்து, உள்ளம் உருகி இருக்கிறோம், அவ்வளவு தான்!

(அப்படியும் கண்ணன் அதற்குள் ஓரிரு வீடுகளை அழித்து விடுகிறான்)

பாவை: நீ ஒரு கால், கடலின் மேல் அணை கட்டினாய்! அது உனக்குப் பெருமை! உன் காலால் வீட்டை அழிக்கிறாயே! இதனால் உனக்கு என்ன பயன்?

(அப்படியும் கண்ணன் கேளாமல், எல்லா மணல் வீடுகளையும் அழிக்கிறான்; வருத்தம் அடைந்த பாவையர் அனைவரும் கூடிப் பேசி, ஒரு முடிவுக்கு வருகிறார்கள் - தங்கள் வீடுகளுக்கு உடனே சென்று, கண்ணன் வர முடியாதபடி முன் கதவு, பின் கதவு இரண்டையும் பூட்டிக் கொள்வது என்று! அப்படியே செய்தும் விடுகிறார்கள். மூவுலக மண்ணையும் அளந்தவனுக்கு, வீடுகளில் புகுவதா கஷ்டம்? பாவையின் வீட்டில், முகம் காட்டி, அழகாய்ச் சிரித்துக் கொண்டு நிற்கின்றான்!)

பாவை (திடுக்கிட்டு): கோவிந்தா! நீ எப்படி உள்ளே வந்தாய்?


கண்ணன்: முற்றம் புகுந்து வந்தேன்!

பாவை: அங்கு எங்கள் சிற்றிலை சிதைத்தது போதாதா? ஏன் இங்கு வந்தாய்? உனக்கு இன்னும் எங்களிடமிருந்து என்ன வேண்டும்?

(கண்ணன், அதற்குப் பதிலாக, அவளை வலுக்கட்டாயமாக அணைத்துக் கொள்கிறான்)


பாவை: சீதை மணாளனே! சிற்றிலோடு, எங்கள் சிந்தையும் நீ கலைத்து விடுகிறாயே! இந்தப் பக்கம் வருபவர்கள், நம்மை இப்படிப் பார்த்தால் ஏதாவது சொல்வார்களே?

(பாவை சற்றே சிணுங்கினாலும், அவள் கோபம் மறைகிறது! ஒரு வழியாக, கண்ணனைப் பார்த்ததால் நிம்மதி அடைகிறாள்)

***

(கண்ணன், முன் பாசுரத்தின் முடிவில், பாவையருடன் கூடியதை அறிந்து, பெண்களை நிலவறையில் அடைத்து வைக்கின்றனர் பெற்றோர். அவர்கள் மெலிந்து விட்டதைப் பார்த்து, இரக்கம் கொண்டு பனி நீராட அனுமதிக்க, அவர்கள் ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கின்றனர்)

ஒரு தோழி (திடீரென்று): ஐயோ! நம் உடைகளில் பாதியைக் காணவில்லை!

(சுற்றும் முற்றும் பார்த்தவர்கள், மரத்தில் கண்ணன் உடைகளோடு உட்கார்ந்திருப்பதைப் பார்க்கின்றனர்)

கண்ணன்: அடைத்து வைக்கப்பட்ட நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?
பாவை: அரவணை மேலாய்! பனி நீராட பெற்றோர்கள் அனுமதியுடன், இரவு முடியும் முன்னரே நீராடுவதற்கு வந்தோம்!

கண்ணன்: அப்படியெனில், சூரியன் எழும் வரை ஏன் இங்கு இருந்தீர்கள்?

பாவை: இனிமேல் இங்கு வரமாட்டோம்! எங்கள் துணிகளைக் கொடு!

(கண்ணன், திடீரெனக் கீழே குதித்து, மீத உடைகளையும் எடுத்துச் செல்கிறான்; அவன் இவர்களுடன் கூடி இருக்க நினைக்க, இவர்களோ உடைகளை எடுத்து சென்றுவிட நினைக்கிறார்கள்; அங்கே ஒரு 'மினி' பாரதம் நடக்கிறது)

தோழி: மாயனே! நீ எவ்வாறு இங்கே வந்தாய்? காளியன் தலையில் குதித்த மாதிரி, நீ கீழே குதித்து எங்கள் உடையைத் திருடலாமா? துணிகளைக் கொடுத்து விடு!

கண்ணன்: அப்படியென்றால், மேலே ஏறி வந்து ஆடைகளை எடுத்துக் கொள்ளுங்கள்!


(இடந்தப் பேச்சை நம்பி சில பாவையர் மேலே ஏறி வர, கண்ணன் அவர்களை உற்றுப் பார்த்து, புன்முறுவல் செய்கின்றான்)

ஒரு தோழி (வெட்கப்பட்டு): ராமா! இது என்ன சிறு பிள்ளைத்தனம்! ஒரு பெண்ணுக்காக இலங்கையை அழித்த நீ, பல பெண்களைத் தவிக்க விடுகிறாயே?

இன்னொரு பெண் (கோபத்துடன்): குரங்குகளுக்குத் தலைவனாக இருந்தவன் தானே நீ! அது தான் குரங்கு வேலை செய்கிறாய் இப்பொழுது!

பாவை (சமாதானமாக): கரிய பிரானே! மீன்கள் எங்கள் கால்களைக் கடிக்கின்றன! நாங்கள் தேள் கொட்டியது போல வேதனைப் படுகின்றோம்! நீரிலே நின்று நடுங்குகிறோம்!

கண்ணன்: நானும் நீங்கள் வெளியே வாருங்கள் என்று தானே சொல்கின்றேன்.

மற்றொரு தோழி: குடக் கூத்தனே! நீ நீதியற்ற செய்கையைச் செய்கின்றாய்! உன் விளையாட்டைத் தவிர்த்து, உடனே உடைகளைக் கொடுத்து விடு!

கண்ணன்: நீரில் அதிக நேரம் விளையாடியது நீங்கள் தான்! உங்களோடு பொழுது போக்கலாம் என்று அதிகாலையிலேயே நான் வந்து, இந்த மரத்தில் முடங்கிக் கிடந்து, நானல்லவோ வேதனைப் படுகின்றேன்? என்னைத் தவிக்க விட்டது நீங்கள் தான்!

ஒரு தோழி: ஊழி முதல்வா! எங்களுக்கும் உன்னுடன் விளையாட ஆர்வம் உண்டு! ஆனால், பெற்றோர்கள் பார்த்தால், வம்பு!

கண்ணன்: பெற்றோர்கள் பார்த்தால் என்ன? என் முறைப் பெண்களுடனும், நான் மணமுடிக்கும் வயதும் உள்ள தானே நான் விளையாடுகிறேன்?

பாவை: ஆயர் கொழுந்தே! உனக்கு மாமியார், பெரியவர் உறவு முறை உடையவர்களும் இங்கு இருக்கின்றனர்! ஆகவே, நீ இத்தகைய செயல்களைச் செய்யக் கூடாது!

கண்ணன்: என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து வந்திருந்தால், மாமியாரையும், மக்களையும் கூட்டிக் கொண்டா வருவீர்கள்?

பாவை (கோபப்படுகிறாள்): வெட்கம் கெட்டவனே! உனக்கு அந்த இருள், பிறந்ததில் இருந்தே உதவி செய்கிறது! உன் தாயாரும் உன்னைக் கண்டிப்பதில்லை! இல்லை, பூதனையின் பேய்ப் பாலை உண்டதனால் உனக்கு புத்தி பிசகிற்றோ?

(கண்ணன், போனால் போகிறது என்று, உடைகளைக் கொடுக்கிறான்; அதனால் பாவையர் கோபம் தணிந்து, கண்ணனிடம் சிறிது நேரம் கூடிவிட்டு, வீட்டிற்குச் செல்கின்றனர்)

***

ற்றங்கரையில், கண்ணனும், பாவையும், தோழிகளும் சேர்ந்திருந்தாலும், அப்போது சென்ற கண்ணன் மீண்டும் வரவில்லை!

வெகு நாட்கள் கழிந்து விடவே, பாவைக்கு கண்ணனைப் பிரிந்த ஏக்கம் அதிகமாகிறது! இவனைப் பார்ப்போமா, மாட்டோமா என்ற சந்தேகம் வருகின்றது! தரையில் வட்டம் போட்டு, 'ஒத்தையா இரட்டையா' விளையாடுகிறாள்!


தரையில், ஒரு பெரிய வட்டம்! அதில், பல மனம் தோன்றியவாறு, பல சுழிகள் - பெரியதும், சிறியதுமாக - போடுகிறாள்!

எத்தனை சுழிகள் என்று எண்ண ஆரம்பிக்கின்றாள்! இரட்டையாக் வந்தால், (கண்ணனுடன் சேருகின்ற) காரியம் கை கூடுமாம்! ஒத்தையாக வந்தால், காரியம் கைகூடாது! கண்ணன் வரமாட்டானாம்! இப்படி, அந்தக் 'கூடலை'ப் பார்த்துப் பேசுகின்றாள் நம் பாவை!

- திருமாலிருஞ்சோலை அழகன் திருவடிகளில் அடியேன் சேவகம் செய்ய முடியுமென்றால், கூடிடு!
- வேங்கடவனும், கண்ணபுரத்தானுமானவன் வந்து என் கை பற்றுவான் என்றால், கூடிடு!
- தேவகி, வசுதேவரின் மகன் வருவானென்றால், கூடிடு!
- காளியன் மேல் நடமாடிய கூத்தன் வருவானெனில், கூடிடு!
- குவலயாபீடத்தை உதைத்தவன், நம் தெருவுக்கு வந்து என்னுடன் கூடிவானாகில், கூடிடு!
- கம்சனைக் கொன்ற மதுரையரசன் வருவானெனில் கூடிடு!
- சிசுபாலன், பகாசுரன் போன்றோர்களை அழித்தவன் வருவானெனில் கூடிடு!
- கன்று மேய்ப்வன் வருவானென்றால் கூடிடு!
- அடி ஒன்றினால் உலகளந்தான் வருவானெனில் கூடிடு!
- கஜேந்திரனுக்கு துயர் தீர்த்தவன், என் துயர் தீர்க்க வருவானெனில், நீ கூடிடு கூடலே!
'கூடல்' என்ன செய்தது?

***

த்து முறை கூடலைக் கேட்டும், அது பதில் சொல்லவில்லை (ஒவ்வொரு முறையும், 'ஒத்தை'யாகவே வந்தது!)

'கூடலுக்கு உயிரில்லை; எனவே அது நான் சொல்லியதைக் கேட்கவில்லை! என்னுடனும் பேசவில்லை!'



தனக்குத் தானே அறிவுரை சொல்லி, தன்னைச் சமாதானப் படுத்திக் கொள்கிறாள், காதல் தலைக்கேறிய அந்தப் பாவை!

சரி, இனிமேல், உயிருள்ளது, அறிவுள்ளது ஒன்றின் காலில் விழலாம் எனத் தோன்றுகிறது!

விழுகின்றாள் நம் பாவை! எம்பெருமான் குழலூதும் போது, அருகே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றது, வார்த்தை கேட்டால் சில சமயங்களிலாவது பதில் சொல்லும் பழக்கம் உடையதும், சிறிது அறிவுள்ளதுமான - குயிலின் காலில்!

***

இடம்: அருகே ஒரு சோலை
காட்சி: குயில் பத்து

பாவை: குயிலே! மாதவனை நினைத்து ஏங்கி, இளைத்து, என் வளையல் தொலைந்து விட்டது! என் பவள வாயனை வரச் சொல்லு!


(குயில், தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு, அங்கேயே நிற்கிறது)

பாவை: உன்னை இங்கே நிற்கச் சொல்ல வில்லை! என் உயிர், வேங்கடவனைக் காணாமல், தத்தளிக்கின்றது! நீ விளையாடாமல், வேங்கடவனிடம் என் நிலைமையைச் சொல்லிக் கூவ வேணும்!

குயில்: க்க்.. க்க்... க்.. க்க்க்.. கூஊ (இவ்வளவு நாள், எனக்கு ஒரு கைப்பிடி பழைய சாதம் கூடப் போடாமல் வெறுப்பேத்தினாயே! இப்ப மட்டும் உனக்கு நான் வேணுமாக்கும்?)

பாவை: த்ரிவிக்கிரமனை, இங்கே வரும்படி கூவினால், உனக்கு, இனிய சோறும், பால் அமுதும் தந்து வளர்த்த என் கிளியை நட்புக் கொள்ளச் செய்வேன்!

குயில்: க்கி... க்.. க்க்க்க்... (கிளிக்குப் பால் சோறு, எனக்கு மட்டும் பழைய சோறா?)

பாவை: நீ இருடீகேசனை வரச் சொன்னால், என் தலையை உன் காலடியில் வைப்பேன்! அவன் வந்தவுடனே அவனை நான் கவனிக்க வேண்டி இருக்கிறது!

குயில்: கு.. கு.. கு.. கு.. (அவன் வந்தவுடனே நீ ஓடிப் போயிடுவே! நான் உக்காந்து பஜனை செய்வதா?)

(நயமாகச் சொல்லியும், உதவி செய்வதால் கிடைக்கும் பலன்களைச் சொல்லியும், சரணாகதி அடைந்தும், குயில் கேட்காததால், மிரட்டுகிறாள்)

பாவை: இப்போது வாமனனை நீ அழைக்கவில்லை என்றால், உன்னை இந்தச் சோலையில் இருந்து துரத்தி விடுவேன்!

மிரட்டலைக் கேட்ட குயில் என்ன செய்தது?

- குயில் பத்து தொடரும்
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP