Tuesday, December 20, 2011

கோதைத்தமிழ்05: செப்பண்டி @UmaKrishh

மக்கா, இன்றைய Twitter குரல் = பெண் குரல்! நன் குரல்! மதுரைக் குரல்!
பாசுரமும் = "மதுரை" மைந்தனை!
வேற யாரு? நம்ம @UmaKrishh தான்!:)

இவங்க கிட்ட, டீச்சரைக் கண்டால் போல், எனக்கு பய பக்தி! அடக்கியே வாசிப்பேன்:) நீங்களே கேளுங்க...என்னமா நயவுரை சொல்லுறாங்க-ன்னு!

இது உமாவின் அப்பாவுக்குப் பிடித்தமான பாட்டாம்! = ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும், தன் பெண்ணைச் சான்றோள் எனக் கேட்ட தந்தை:)



நன்றி உமா! உங்க "மதுரை":) வட மதுரை = வில்லிபுத்தூருக்கு வடக்கால இருக்கும் மதுரை:)



மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,


தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்:  சங்கத் தமிழ்க் கடவுளான மாயோன்...
அவன் கதை வடக்கே போன போது, வட மதுரை மைந்தனும் ஆனான்!யமுனை ஆற்றுத் துறைகள் அவன் விளையாட்டுத் துறைகள் ஆயின!

ஏழை பாழையான ஆயர்கள் குலத்திலே "தோன்றிய" விளக்கு!
அவனால் அவன் அம்மா வயிற்றுக்கே பெருமை!

அந்த மாயோனை, உள்ளத் தூய்மையோடு அணுகுவோம்! பாசாங்கு அலங்காரங்கள் வேண்டா!
மலர் தூவினால் போதும்! கை தொழுதால் போதும்!
வாயால் பாடினால் போதும்! மனசால் சிந்தித்தால் போதும்!

ஹோமம்/ யாகம்/ ஆடம்பரம் தேவையில்லை!
நம் வாயும், மனமுமே = வேள்வி! அந்தத் தீயில் தூசாகும்! = எது?

* போய பிழையும் = இது வரை செய்த பாவங்களுக்குக் கூலி
* புகுதருவான் நின்றனவும் = இனி வரப் போகும் கூலி
ரெண்டுமே தீயில் தூசாகி விடும்! ஆடம்பரம் இன்றி, அன்போடு வாய் விட்டுச் சொல்லுங்கள் = அப்பா, பெருமாளே!


இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = "செப்பண்டி"

ஐயோ...செப்பண்டி தெலுங்கு-டான்னு என்னைப் பார்த்துக் கத்தறீங்களா? :))
ஆமா, இன்னிக்கு அது தெலுங்கு ஆயிருச்சி! ஆனா அது தமிழ்ச் சொல்லும் கூட!
தமிழ்-தெலுங்கு ஒற்றுமைக்கு இப்படி நிறைய சொற்கள் உண்டு = செப்புதல், நவ்வு(நகுதல்), பாவி(வாவி) etc etc etc!:)

செப்புதல் = சொல்லுதல்
வெண்பாவின் ஓசை "செப்பல்" ஓசை! செப்பு, செப்பல், செப்பம் என்று தமிழில் சொற்கள் குவிந்து கிடக்கின்றன!

சொற்கோட்டம் இல்லது "செப்பம்" - ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்
-ன்னு குறளே செப்பு-ன்னு தான் செப்புது:)

ஆனா சில "நல்ல" தெலுங்கர்கள் ஒப்புக்கவே மாட்டாங்க!:)
வேணும்-ன்னா தெலுங்கில் இருந்து, "செப்பு", திருக்குறளுக்குச் சென்றது-ன்னு சொல்வாங்களே தவிர, "செப்பு" தமிழ் காதண்டி! காதண்டி!:)

தவறில்லை! தீவிரத் தெலுங்குப் பாசம் அப்படிப் பேச வைக்குது!
* திருக்குறள் கால கட்டம் கிமு!
* தெலுங்கின் முதல் நூலே நன்னய்யா = கிபி-ன்னு தரவு காட்டலாம்!
ஆனா, சிலருக்கு எத்தனை தரவு காட்டினாலும் ஏலாது! உண்மையை விட அவிங்கவிங்க மனசே முக்கியம்:))

கொய்ததும் வாயாளோ? கொய் தழை கை பற்றிச்
செய்ததும் வாயாளோ? "செப்பு"" - இது பரிபாடல் (எட்டுத் தொகை)
அண்மையில்....பாரதியார் கவிதை....
ப்பு மொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்!


செப்பு=சொல்லு-ன்னு பார்த்தோம் அல்லவா?
ஆனா இன்னும் நிறைய இருக்கு!

1. செப்பு 2. சொல் 3. நவில் 4. நுதல் 5. நுவல்
6. நொடி 7. பகர் 8. பறை 9. பன்னு 10. பனுவு
 11. புகல் 12. புலம்பு 13. பேசு 14. மாறு 15. மிழற்று
16. மொழி 17. விளத்து 18. விளம்பு


சொல்லுதல் என்பதற்கு மொத்தம் 18 சொற்கள் தமிழில்:) ஒவ்வொன்னும் பொருள் லேசா மாறுபடும்!
எல்லா நேரமும் செப்ப முடியாது! சில நேரம் பகர வேண்டும்! சில நேரம் நவில வேண்டும்!
என்ன வேறுபாடு-ன்னு நீங்களே கணக்கு போட்டு, நாக்குச் செப்பண்டி!:)

நாளைய Twitter Podcaster = என் பேரில் உள்ள, ஆனால் என்னை விட நல்ல ட்வீட்டர்! வர்ட்டா?:))

7 comments:

  1. அருமை, ரசித்தேன்

    ReplyDelete
  2. பழைய தமிழ் வழக்கு இன்றைய கன்னடத்திலும் உண்டு..
    மாடல்ல.. (கேட்டில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு மாடல்ல மற்றையவை.)
    மாடல்ல - செய்யாது
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்..
    நென்னலே - நென்னே- நேற்று..
    நேரம் கிடைத்தால் நிறைய எழுதலாம்.

    ReplyDelete
  3. ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்க உமா. ஆழமான கருத்தை உணர்ந்து சொல்லியிருக்கீங்க! உண்மையின் அழகு அதுவே. ஆடம்பரமில்லாத தூய்மையான பக்தியினால் பெருமாளை அடைந்துவிடலாம் என்பதற்கு ஆண்டாள் நாச்சியார் சாட்சி.
    amas32

    ReplyDelete
  4. செப்பு மொழி பாரதிபாட்டிலும் வருமே...
    உமா அவர்கள் அழகா சொல்லி இருக்காங்க.
    பகவானுக்கு இரண்டு முக்கிய நாமங்கள் ஒன்று வைகுந்தன் இன்னொன்று மாயன். வைகுண்டத்திற்கு அதிபதியாவதால் வைகுந்தன். லீலாபிபூதியான மாயத்திற்கு அதிபதியாவதால் மாயன். நம்மை சதா தேடுபவன் அவன்.அவன் நம்மை வைகுந்தத்தில் தேட முடியுமா இந்த மாயப்ரபஞ்சத்தில் எங்கோ கண்காணாமல் தூசாக உள்ள நம்மை ஆசையோடு தேடுபவன் கண்ணன். அதனால்தான் பகவானின் முகவரித்திருநாமம் வைகுந்தன் என்பதைவிட நம்மைத்தேடும் மாயன் என்பதாக ஆண்டாள் கூறுகிறாள்.அற்புதமான பாடல் இது சரணாகதி செய்தால் கிருஷ்ணானந்தம் கிடைக்கும் என்பதை செப்பு என்று திண்ணமாய்க்கூறிமுடிக்கிறாள்.

    ReplyDelete
  5. வாழ்த்தியவர்களுக்கு நன்றி :) ஊக்கமளித்த KRYES க்கும் நன்றி :)

    ReplyDelete
  6. விளம்பு- விளக்கமாக பேசு .
    -சுகர் பாகவதம் விளம்பினார்
    மாறு -நான் சொன்னதற்கு பதில் பேசு
    பறை -(மலையாளத்தில் 'பறை')சத்தமாக ஊருக்கே பேசும்படி பேசு!
    நொடி- (கன்னடத்தில் 'நுடி') சுருக்கமாகப் பேசு ..
    செப்பு- (தெலுங்கில் 'செப்பு') - அழகாக கவித்துவமாகப் பேசு
    புலம்பு - :) :) :) விளக்கம் தேவையில்லை :):)
    சொல் -சொல்லை சொல் .....'ஹரி' என்று சொல். 'முருகா' என்று சொல்
    மொழி -மொழியை மொழி .......தமிழில் மொழி. கன்னடத்தில் மொழி

    ReplyDelete
  7. மன வாக்கு காயங்களாலே இறைவனை வணங்குவதை எளிமையா சொல்லிட்டார் ஆண்டாள். மனத்தினால் சிந்திக்க - மனம்,வாயினால் பாடி - வாக்கு,தூமலர் தூவித் தொழுது - காயம் (உடல்)..
    உமாக்கா அப்பாவை நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சி
    குருவே கூறு,கூறுதல் இதுவும் செப்புதலின் ஒரு வடிவமா?

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP