சங்க இலக்கியத்தில் தமிழ்க் கடவுள்!


தமிழ்க் கடவுள் என்றால்
= சங்க காலத் தமிழ்க் குடிகள், பரவலாக ஏற்று வணங்கிய இறைத் தொன்மம்!
= மாயோனும் சேயோனும் (திருமாலும், முருகனும்)
= பூர்வ குடி வழிபாடு; இன்றைய மதக் கடவுள்கள் அல்ல!

சேயோன்-முருகன்

மாயோன்-பெருமாள்

ஈழத்துத் தமிழறிஞர் கா.சிவத்தம்பி ஆய்ந்து சொல்வதைப் பாருங்கள்:
"மாயோன் வழிபாடு தமிழ் நாட்டின் பூர்வீக வழிபாடுகளில் ஒன்றானதாகும். மாயோன் என்பது கருமை நிறமுடையவன், திருமால் எனப் பொருள்படும்; (தமிழில் இலக்கிய வரலாறு, கா.சிவத்தம்பி, பக்.58. http://www.noolaham.net/project/02/175/175.htm)

இதோ..பெரும் தமிழறிஞரான திரு.வி.க அவர்கள், முருகன் (அ) அழகு என்னும் நூலில் சொல்வது; "தங்கள் கண்ணுக்கு, பச்சைப்பசேல் எனக் காட்சி வழங்கிய காட்டின் இயற்கை அழகை, "மால்" என்று பண்டைத் தமிழர்கள் வழுத்தினர்"


சில அறிஞர்கள் இப்படிச் சொல்ல...வேறு சிலரோ....
//மாலவனோ அந்நியப்பட்டுத்தான் நிற்கிறான். இரண்டொரு பாடல்களால் சுட்டப்படுவதால் எல்லாம், தமிழர் தம் தனிப்பெருங்கடவுள் ஆகிவிட முடியாது! முருகன் மட்டு"மே" தமிழ்க் கடவுள்//
- இப்படி வலைப் பதிவுகளில் மார் தட்டினார்கள் சிலர்! இதையொட்டி முன்பு எழுந்த விவாதப் பதிவை + பின்னூட்டங்களை வாசியுங்கள்; சுவை கூடும்! :))) இங்கே!

சரி, இவர்கள் அறைகூவலுக்கு என்ன பதில்? = ஓரிரு சங்கத் தமிழ்ப் பாடல்கள் தானா?

சங்க இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கும்,
தமிழ்க் கடவுள் = திருமாலின் பாடல்கள் அத்தனையும்...
இங்கே......இனி.......ஒவ்வொன்றாகத் தொகுத்து வைக்கப்படும்!
= One stop shop! Information is Power! Course-Correcting is Gentlemanly!:)

சரியாக நோக்குங்கள்:
"விஷ்ணு" தமிழ்க் கடவுள் அல்ல! = "திருமால்" தான் தமிழ்க் கடவுள்!
"ஸ்கந்தன்" தமிழ்க் கடவுள் அல்ல! ="முருகன்" தான் தமிழ்க் கடவுள்!

அண்மைக் காலங்களில், முருகனைத் "தமிழ்க் கடவுளாகப்" பேசிய அளவு, திருவிளையாடல் ஏபி நாகராஜன் வசனங்களில் காட்டிய அளவு,
திருமாலைப் பேசாததால்/ காட்டாததால்...அவன் தமிழ்க் கடவுள் இல்லை என்று ஆகி விட மாட்டான்!
* புரட்சித் தலைவர் = எம்.ஜி.ஆர் என்று சொல்வதால்...
* தந்தை பெரியார் = புரட்சித் தலைவர் இல்லை என்று ஆகி விட மாட்டார்!
யார் செய்த புரட்சி அதிகம் என்று உங்களுக்கே தெரியும்! :)

நினைவில் வையுங்கள்:
மாயோனாகிய பெருமாளும், சேயோனாகிய முருகனும் = இருவரும் தமிழ்க் கடவுளே!!!



பழந்தமிழ் மக்கள் வணங்கியது இயற்கையை!
அதுவே இயற்கை ஒட்டிய தெய்வங்களாக நாளடைவில் வளர்ச்சி பெற்றது!

மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்

- என்று முதலில் முல்லை நில மாயோனைச் சொல்லி, அப்புறம் தான் குறிஞ்சி நிலச் சேயோனைச் சொல்கிறார் தொல்காப்பியர்!

தமிழில் கிடைக்கக் கூடிய மிகப் பழமையான நூல்=தொல்காப்பியம்!
அது பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது!

தொல்காப்பியர் காலத்தில் இயற்கை/நடுகல் வணக்கம் தான் பரவலாக இருந்திருக்கிறது! நடுகல் பற்றிப் பல செய்திகள் தருகிறார்!
நடுகல் நட்ட இடத்தில் வழிபாடும் ஆட்டங்களும் நடைபெற்றதாக அறிகிறோம்! வேலன் வெறியாட்டம், குரவைக் கூத்து போன்ற ஆட்டங்கள் பற்றிய இலக்கியக் குறிப்புகள் உள்ளன!


மறைந்த முன்னோர்கள் நினைவாக, நடுகல் வைத்துப் படையல் போடும் வழக்கம், எங்கள் கிராமத்தில் இன்னிக்கும் உண்டு!
மாயோன், சேயோன் என்பவர்கள் அந்தந்த நில மகன்களாகக் கூட இருந்திருக்கலாம்! அவர்கள் நினைவைக் குறித்த நடுகல் வணக்கமே நாளடைவில் சிறு தெய்வ / பெருந் தெய்வ வணக்கமாக வளர்ச்சி பெற்றும் இருக்கலாம்!

முதலில் இயற்கை என்பது நடுகல்லானது!
பின்னர் நடுகல் என்பது தெய்வம் ஆனது!!

இயற்கை வழிபாட்டின் படியே, மாயோன், முல்லை நிலத்தின் கடவுள் ஆனான்!
கருப்பொருள்/உரிப்பொருளைக் கவனிச்சிப் பாருங்க!
தமிழ் வகுப்பில் படிச்ச நினைவிருக்கா? இல்லை choice-இல் வுட்டுட்டீங்களா? :)

* முல்லை = காடும் காடு சார்ந்த இடமும் = பச்சைப் பசேல்-ன்னு தானே இருக்கும்? அதனால் பச்சை மாமலை போல் மேனி!
* பெரும்பொழுது = கார் காலம்! அதனால் கார் மேனி வண்ணன்!
* சிறுபொழுது = மாலை! அதனால் மால்! திருமால்!

* ஆயர்கள் நிலம்! அதனால் ஆயர் தம் கொழுந்தே!
* தொழில் = ஆநிரை மேய்த்தல்! அதனால் பசுக்களை மேய்த்தான்!
* விளையாட்டு = ஏறு தழுவுதல்! அதனால் காளைகளை அடக்கி நப்பின்னையை மணம் புரிந்தான்!
* முல்லை நிலத்தில் காதல் மிகுதி! அதனால் இவன் காதல் மன்னன்! :)

இப்படி எல்லாமே இயற்கையை ஒட்டிய வழிபாடு தான்! இயற்கைக் கடவுளாகவே திருமால் அறிமுகமானான்!
மாயோன்-சேயோன் = நாட்டு வழக்காக பெருமாள்-முருகன்!
--------------------

பின்னாளில்....வந்த பண்பாட்டுக் கலப்பு.....
மாயோன்-சேயோன் = "விஷ்ணு-ஸ்கந்தன்" என்றும் ஆகி வடக்கே சென்றனர்!

* ஆனால் போன இடத்தில், மாயோன் என்ற விஷ்ணுவைக் கொண்டாடிய அளவுக்கு, ஏனோ சேயோன் என்னும் ஸ்கந்தனை அவனுங்க அதிகம் கொண்டாடவில்லை! "ஸ்கந்த" புராணம் எழுதினார்கள், ஆனால் அதிகம் கொண்டாடவில்லை!
* முல்லை நில முதல்வனை, மும்மூர்த்திக்குள் ஒருவராய் வைக்க முடிந்த அளவுக்கு, குறிஞ்சி நில முதல்வனை ஏனோ வைக்கவில்லை! இத்தனைக்கும் முல்லையின் கண்ணன் கருப்பு! குறிஞ்சியின் முருகன் தான் வெள்ளை! :)

இங்கிருந்து சென்ற இரு குழந்தைகள்!
* அங்கே ரொம்ப போற்றாத குழந்தை "மட்டுமே" இனி என் குழந்தை!
* அவர்கள் அதிகம் ஏற்றுக் கொண்டால், இனிமேல் அது என் குழந்தை அல்ல! 
- என்று தமிழ்த் தாய் சொல்லுவாளா?அப்படி ஒரு தாய் சொல்லுவா-ன்னு சொல்றவங்க கையைத் தூக்குங்க பார்ப்போம்! :)

நினைவில் கொள்க:
எங்கு சென்றாலும்...மாயோனும் சேயோனும் என்றும் தமிழ்க் கடவுளரே!


தமிழ்க் கடவுளான திருமாலைத், தமிழ்த் தொன்மத்தில் இருந்தே ஒதுக்கி வைத்து.. இறையியலில் தமிழ்த் தொன்மத்தை நாமே சிதைக்கலாமா?
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!

* எல்லாம் கடந்த இறைவனை மொழிக் குறுகலுக்குள் அடக்குவது நம் நோக்கம் இல்லை!
* அதே சமயம், நம் மொழியில், நம் இறையியல் வளர்ந்த பரிமாணத்தை அறிவதே நோக்கம்!
* இறைவனுக்கு நாம் தரும் பட்டங்கள் - தமிழ்க் கடவுள், தெலுங்கு தேவுடு, English Lord - ஒரு பொருட்டே அல்ல!
* இது நம் பண்பாட்டை நாம் அடையாளம் காணும் முயற்சி மட்டுமே!

தொல்காப்பியம்,
எட்டுத் தொகை, பத்துப்பாட்டு,
பதினெண் கீழ்க் கணக்கு,
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி,
இறையனார் அகப் பொருள், நன்னூல்...
என்று அத்தனை சான்றுகளும், இனி இங்கே ஒவ்வொன்றாக வரும்......

//மாலவனோ அந்நியப்பட்டுத்தான் நிற்கிறான். தமிழர் தம் தனிப்பெருங்கடவுள் ஆகிவிட முடியாது//
=
இப்படிச் சொல்பவர்கள் யார்? ஏன் சொல்கிறார்கள் என்பதையும் சற்றுப் பார்க்க வேண்டும்!
= சாதி/ பெரும்பான்மைப் போக்கு தான் காரணம்!

பார்ப்பனீயம் என்று பேசினாலும், "மே(வே)ளாளப் போக்காலும் இது போன்ற கருத்து எதேச்சாதிகாரங்கள்!:(
இல்லையென்றால், சமணம் தழைத்த காலத்தை, நீதி நூல்கள் தழைத்த களப்பிரர் காலத்தை, ஒட்டு மொத்தமாக "இருண்ட காலம்"-ன்னு பாடநூல்களில் முத்திரை குத்தி வைப்பார்களா? காலங்காலமாக இவர்கள் எழுதியதே வரலாறு! :(

* ஒட்டு மொத்த தமிழ் மரபையே பதுக்கி வைத்து,
* தாங்கள் மனம் போன போக்கே, தமிழ்ப் போக்கு என்று கதை கட்டி,
* அதைத் திரும்பத் திரும்பக் கட்டி...
* சமயப் "பெரும்பான்மைத்தனம்", சாதிப் "பெரும்பான்மைத்தனம்" தந்த அதிகாரத்தால்...

* சிறுபான்மைச் சமூகங்கள் தமக்கு அடங்கியே தங்கள் மரபைப் பேண வேணும்,
* மரபுச் சிறப்பில் சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை ஒரு போதும் முந்தி விடக் கூடாது....
போன்ற புத்தியுமே இப்படிச் சொல்லக் காரணம்!தரவுகள் எதுவுமே தராமல், "மனம் போன போக்கில்", கருத்துரைக்கும் "பான்மை"!

இன்றைய இணைய உலகில், சங்கத் தமிழ் இலக்கியங்கள், அனைவரின் பார்வைக்கும் கிடைக்கின்றன!
அவரவர்களே மூலநூலைப் படித்து உண்மை உணர்ந்து கொள்ளலாம்!

அத்திலக வாசனை போல் "அனைத்துலகும் இன்பமுற"
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே!


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

இன்றைய நடைமுறையைக் காண்போமா?

* தமிழ்ப் பாசுரங்கள் ஓதிக் கொண்டு முன்னே செல்ல...
* தமிழின் பின்னால் பெருமாள் பவனி/ ஊர்வலம் வர...

* வடமொழி வேதங்களைத் தமிழுக்கும் பெருமாளுக்கும் பின்னே தள்ளி, சொற்ப அளவில் தான் சொல்லிக் கொண்டு...இன்றும் நடந்து வருகிறார்கள்!

இந்தக் காட்சியைத் திருமால் ஆலயங்களைத் தவிர வேறு எங்கு காண முடியும், சொல்லுங்கள்? 
இப்படி ஒரு நிலைமை முருகன் ஆலயங்களிலும் வந்திடாதோ என்று ஏங்குகிறார், சிறந்த கவிஞரான குமரகுருபரர் - "பச்சைத் தமிழின் பின் சென்ற பசுங் கொண்டல் திருமாலே!"

திருமாலின் கருவறைகளில் இன்றும் "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு" என்று தமிழ் ஒலிக்கின்றது!
"அடியார்கள் வாழ, சடகோபன் தமிழ் நூல் வாழ...." தமிழ் வாழ வேண்டும் என்று வாழ்த்தப்படுகிறது! - இதைத் தில்லை என்னும் சிதம்பரத்தில் காட்ட முடியுமா? :(

அட, கருவறைகளை விடுங்கள்!வெளியில் உள்ள அம்பலத்தில் நின்று பாடவே, கூத்தாட வேண்டியுள்ளதே!
எத்தனைப் பாடுபட்டார்கள் தமிழ் ஆர்வலர்கள்? ஓதுவார்கள் ஒரு ஓரமாய் இருந்து தானே....கடமைக்கு ஓத முடிகிறது, அதுவும் அரசாணையால்!

நிலைமை இப்படி இருக்க.....
இன்றளவும் நடைமுறையில் தமிழைத் தாங்கிப் பிடிக்கும் ஒருவரையா தமிழ்க் கடவுள் இல்லை என்பது?


"நாங்கள் தான் தலையில் இருந்து பிறந்தவர்கள், நாங்கள் மட்டு"மே" மூத்த குலம் என்போர்க்கும் இவர்களுக்கும், என்ன பெருசா வித்தியாசம்???
ஒப்புக்குத் தமிழ்த் தோல் போர்த்தி, உள்ளுக்குள் மதப் புலிகள்-ன்னு வேணும்ன்னாச் சொல்லலாம்!

செய்ய "தமிழ் மாலைகள்" யாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!!! 
இறையியலில், தமிழ் ஒருக்காலும் குறைவுபட்டது அல்ல! இறைத்தமிழ் தொன்மம் மிக்கது!
அந்தத் தமிழ்த் தொன்மத்தைத் தேடி...நம் வேர்களைத் தேடி...
இதோ.....இனி ஒரு திறனாய்வு...முருகனருளால்.....முருகா!!!

(இந்தத் திறனாய்வுக்கான உசாத்துணை (References):

1. தமிழர் மதம் - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் = http://www.devaneyam.org/
2. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர் மு.வ
3. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் - தேவநேயப் பாவாணர்
4. தமிழ் இலக்கிய வரலாறு - தேவநேயப் பாவாணர்
5. தமிழ் இலக்கிய வரலாறு - டாக்டர். தமிழண்ணல்
6. முல்லைப் பாட்டு - மறைமலை அடிகள் உரை
7. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத் திரட்டு = http://www.tamilvu.org/library/l0100/html/l0100001.htm )

வாருங்கள்....ஒவ்வொரு இலக்கியமாக, சுருக்கமாகப் பார்க்கலாமா?


தொல்காப்பியம்:


* இன்றைக்கு கிடைக்கும் மிக மிகத் தொன்மையான தமிழ் நூல் = தொல்காப்பியம் = கி.மு 300க்கும் முன்னால்! = அதில் திருமால் உள்ளாரா?

* முல்லையா? குறிஞ்சியா? - தொல்காப்பியருக்கு எது முதலில்?

* மாயோன்/ சேயோன் தமிழ்க் கடவுள்-ன்னா, அப்போ வேந்தன்/ வருணன் நிலைமை என்ன?அவர்களையும் தொல்காப்பியர் குறித்து வைக்கிறாரே?

= அவர்கள் மக்கள் வாழ்வியலில் இல்லை, வெறும் நில அடையாளங்களாக மட்டும் சொல்கிறார்! துறை, கூத்து என்று அவர்கட்கு ஒன்றும் இல்லை!
வேந்தன் = மருத நில மன்னன், வருணன் = கடல் காற்று; மாறிக் கொண்டே இருப்பவை; மாயோன்-சேயோன் போல் நிலைத்த தொன்மம் அல்ல!

= கொற்றவை, பாலை நிலத்து எயினர்/ கள்வர்கள் தெய்வமாகச் சங்க நூல்களில் சித்தரிக்கப்பட்டதால், அதிகப் பாடல்கள் இல்லை; எனினும் பிற்பாடு பெரிதும் பரவியவள்; கொற்றவையும் தமிழ்க் கடவுளே!

* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் = யார்?
* முன்னை மரபின் முதுமொழி முதல்வன் = யார்?
=> மேலும் படிக்க, இதோ சுட்டி......தொல்காப்பியத்தில் தமிழ்க் கடவுள்



18 மேல்கணக்கு = 8 தொகை + 10 பாட்டு

"முல்லையின் தெய்வம்" திருமால், பின்னர் நிலம் கடந்த தெய்வமாய் வணங்கப்பட்டத்தைச் சங்க இலக்கியங்கள் (கி.மு.300-கி.பி.300) காட்டுகின்றன!

மொத்த சங்கப் பாடல்களில் மிகுதியாகக் குறிக்கப்பெறும் தெய்வம் திருமாலே என்பது டாக்டர் மு.வ, நீதியரசர் மு.மு.இஸ்மாயில், தேவநேயப் பாவாணர் போன்ற அறிஞர் பலரின் கருத்தாகும்!
மாநிலம் காக்கும் மன்னவர்க்குத் "திருமாலை மட்டுமே" உவமை கூறுவதும், பூவை நிலை என்று தனியாக அதற்கென்றே ஒரு துறை ஒதுக்கும் மரபையும் சங்க நூல்களிற் காணலாம்!

(குறிப்பு: இந்த ஆதாரங்களில், கடவுள் வாழ்த்துப் பகுதிகளை, நான் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை! அதெல்லாம் பின்னாளில் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) எழுதிச் சேர்த்தது!
அப்படி எடுத்துக் கொண்டால், எனக்கும் எண்ணிக்கை கூடும் தான்! ஆனால் அப்படிச் செய்ய நான் விரும்பவில்லை! பண்டைத் தமிழ் மரபை மட்டு"மே" இந்த ஆய்வுக்குக் கணக்கில் கொள்வோம்!  பின்னாளில் எழுதிச் சேர்த்த பாடல்களை அல்ல!)


எட்டுத் தொகை:

எட்டுத் தொகை நூல்கள்: (கி.மு 300 - கி.பி 100)
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து

5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு


* காதலன், தன் காதலை நிரூபிக்க, எந்தத் தமிழ்த் தெய்வம் மேல் சத்தியம் செய்கின்றான்?
* உலகளந்த இறைவனை = "முதல்வன்" என்று சொல்லலாமா?
* அழகிலும், வீரத்திலும், இவன் மாயோன் போல இருக்கிறானோ?
=> கலித்தொகையில் தமிழ்க் கடவுள்?


* இரண்டு தமிழ்க் கடவுள்-களும், முருகனும் திருமாலும், ஒரு சேர வருகிறார்கள்! எங்கே? எங்கே?
=> அகநானூறில் தமிழ்க் கடவுள்


* வல்லார் - அல்லார் என்ற பேதம் இல்லாமல், அனைவருக்கும் பொதுவான தெய்வம் யார்?
* போருக்குச் செல்லும் வீரர்கள், யாரைப் போல் கருப்பு? வெள்ளாடை உடுத்திப் போகிறார்கள்?
* இரண்டு மன்னர்களும் ஒன்றாக அமர்ந்து இருப்பது யாரைப் போல் இருக்கு?
=> புறநானூறில் தமிழ்க் கடவுள்!


* துழாய் மாலைச் செல்வன் யார்? அவன் கோயிலுக்கு வரும் அடியவர்கள் எப்படியெல்லாம் கூக்குரல் இட்டு மகிழ்ச்சியுடன் வருகிறார்கள்?
=> பதிற்றுப் பத்தில் தமிழ்க் கடவுள்!


* என் காதலனைக் கண்டால் மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அவன் மாயோன் போல் கருப்பாக இருக்கிறான் என்பதாலா?
=> நற்றிணையில் தமிழ்க் கடவுள்!


* "முன்னை மரபின் முதல்வன்" என்று சங்க இலக்கியம் யாரைச் சொல்கிறது?
* வீடு பேறு - தரும் தமிழ்த் தெய்வம் யார்?
* மதுரை - திருமாலிருஞ் சோலை - மதுரை மக்கள் யாரைத் தான் அப்படிக் கொண்டாடுகிறார்களோ?
=> பரிபாடலில் தமிழ்க் கடவுள்!



பத்துப் பாட்டுக்கு வருவோம்!



பத்துப்பாட்டு நூல்கள்: (கி.பி 100 - கி.பி 300)
1. குறிஞ்சிப் பாட்டு
2. முல்லைப்பாட்டு
3. மலைபடுகடாம்
4. மதுரைக் காஞ்சி
5. நெடுநல்வாடை

6. பட்டினப் பாலை
7. திருமுருகாற்றுப்படை
8. பொருநர் ஆற்றுப்படை
9. பெரும்பாணாற்றுப்படை
10. சிறுபாணாற்றுப்படை

பத்துப்பாட்டு காட்டும் திருமாலை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?

* எங்கும் புகழ் பரவி இருப்பதில் நீ திருமால் போல் இருக்கீயே! நினைத்ததை முடிப்பதில் முருகன் போல் இருக்கீயே!
* கூந்தலுக்கு வாசம் இருக்கா-ன்னு கேட்ட பாண்டியன் யார்? சினிமாவில் ஏபி நாகராஜன் அடிச்சி விடும் "செண்பகப் பாண்டியன்" அல்ல! :)
=> திரு முருகு ஆற்றுப்படையில் தமிழ்க் கடவுள்!


* பண்டைத் தமிழ் மக்களின் விழா என்ன? = திரு ஓண நன்னாளா? கந்த "சஷ்டியா"? :)))
=> மதுரைக் காஞ்சியில் தமிழ்க் கடவுள்!


* மாயோன் தான் திருமாலா? நல்லாத் தெரியுமா?
மாயோனே = ஆயர்கள் கொழுந்தே, திருமறு மார்பா, துழாய் (துளசி) அணிந்தவா, நப்பின்னையை ஏறு தழுவி மணந்தவா-ன்னு எல்லாம் பாடினால், மாயோன் = திருமால் தானே?
=> பெரும்பாணாற்றுப்படையில் தமிழ்க் கடவுள்!


* திருமால் கோயிலுக்குப் போய், நெல்லும் முல்லையும் தூவி, அவனுக்காகத் தலைவி வேண்டுகிறாள்! சங்கு-சக்கரம் என்றே முல்லைப் பாட்டு  துவங்குகிறது!
=> முல்லைப் பாட்டில் தமிழ்க் கடவுள்!



ஐம்பெருங் காப்பியங்களுக்கு வருவோமா?


தொல்காப்பியக் காலத்தில் = நடுகல்லும், மாயோன்-சேயோனும் மக்களிடையே இயைந்து இருக்க...
பின்னர் வந்த சிலம்பு/ மணிமேகலை காலத்தில் = இதர சமயங்கள், கொற்றவை, அருகர், புத்தர் போன்றோரும், பேசப்பட ஆரம்பிக்கின்றனர்! வடமொழியால் வந்த பண்பாடும் நன்கு கலக்கத் துவங்கி விட்டது! 

ஐம்பெரும் காப்பியங்கள்:
கி.பி 200
1. சிலப்பதிகாரம் - நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த - இளங்கோ அடிகள்
2. மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்

கி.பி 900-1000
3. சீவக சிந்தாமணி - திருத்தக்க தேவர்
4. வளையாபதி - (அனானி)
5. குண்டலகேசி - நாதகுத்தனார்

ஒவ்வொன்றாகப் பார்த்துச் சுவைக்கலாமா? உண்மை = எல்லாருக்குமே சுவைக்கும்! சிலருக்கு மட்டுமே கசக்கும்!! :)

* வேங்கட மலையில் நிற்பவன் = பெருமாளா? முருகனா?
* மாதவி ஆடும் நாட்டியம் = முதல் வணக்க நடனம் = யாருக்கு?
* மதுரைக்குப் போகும் "Route" - பழமுதிர் சோலை வழியாகப் போகலாமா?
* கோவலன் - கண்ணகி ஊரை விட்டு கிளம்பும் முன், எந்தக் கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டார்கள்??
=> சிலப்பதிகாரத்தில் தமிழ்க் கடவுள்!


* பல்வேறு சமயத் தலைவர்களுக்குள் விவாதம் நடக்கிறது மணிமேகலையில்! ஆனால் விண்ணவம் மட்டும் வாயை மூடிக் கொண்டு...கப்-சிப்! :)))
=>மணிமேகலையில் தமிழ்க் கடவுள்!


* நப்பின்னையைக் கண்ணன் ஏறு தழுவி ஏற்றுக் கொள்ளவில்லையா? அதே போல் என் மகளையும் ஏற்றுக் கொள்! - இப்படிச் சொல்லும் தந்தை யார்?
=>சீவக சிந்தாமணியில், தமிழ்க் கடவுள்!

சீவக சிந்தாமணி, மற்றும் வளையாபதி/ குண்டலகேசி பின்னாளைய காப்பியங்கள்! சிலம்பு போல் முற்பட்டது அல்ல! எனினும் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாக இவை வழங்கப்படுகின்றன!

வளையாபதி/ குண்டலகேசி பாடல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை! அதிலும் வளையாபதி கதை என்னதென்றே கண்டு பிடிக்க முடியாதபடி நிலைமை!
இவை சங்க காலம் கிடையாது! ஆழ்வார்கள் காலத்துக்கும் (கி.பி 5 - கி.பி 7) பிந்தி தான்!

எனவே திருமால் = தமிழ்க் கடவுள் என்கிற தரவுக்கு, வளையாபதி/ குண்டலகேசியை நான் எடுத்துக் கொள்ளவில்லை!
ஆழ்வார்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை! அவங்க திருமால் பக்தர்கள் தானே! அதனால் அது தரவில் சேராது!!

சங்க நூல்கள் மட்டுமே கணக்கில் கொள்வோம்!


18 கீழ்க் கணக்கு! (கி.பி 300 - கி.பி 500)

மொத்தம் 36 பழந்தமிழ் நூல்கள்!
* பதினெண் மேல்கணக்கு = 8 தொகை + 10 பாட்டு = 18
* பதினெண் கீழ்க்கணக்கு = 18

மேல் கணக்கு = பார்த்தாகி விட்டது! கீழ்க்கணக்கு நூல்களை இப்போது பார்க்கலாம்!
ஐம்பெருங் காப்பியங்கள், இவற்றுக்குப் பின்னால் தான்! இருப்பினும் காவியச் சுவை கருதி முன்னமே பார்த்து விட்டோம்!

18 கீழ்க் கணக்கு நூல்களில் தலையாய நூல் = திருக்குறள்! தமிழ் மறை! தமிழர் நெறி!
கீழ்க்கணக்கில் பொதுவாகவே அற நூல்கள்/ நீதி நூல்கள் தான்! Moral Science :)
திருக்குறள் மட்டுமே அறம், பொருள் என்று மட்டும் நின்று விடாமல், "இன்பத்தையும்" சேர்த்துப் பேசியது! அதுவே அதன் சிறப்பு!

அற நூல்கள்:
1. திருக்குறள்
2. நாலடியார்
3. நான்மணிக்கடிகை
4. இன்னா நாற்பது
5. இனியவை நாற்பது

6. திரிகடுகம்
7. ஆசாரக்கோவை
8. பழமொழி நானூறு
9. சிறுபஞ்சமூலம்
10. ஏலாதி
11. முதுமொழிக்காஞ்சி

அகத்திணை:
1. ஐந்திணை ஐம்பது
2. திணைமொழி ஐம்பது
3. ஐந்திணை எழுபது
4. திணைமாலை நூற்றைம்பது
5. கைந்நிலை
6. கார் நாற்பது

புறத்திணை:
1. களவழி நாற்பது

கீழ்க் கணக்கு நூல்களில் திருமால் - ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?

* திருக்குறளில் திருமால் பற்றிய சொல்லாட்சி இருக்கா என்ன?
* அப்படியே இருந்தாலும் திருக்குறளைச் சமயத்துக்குள் அடைக்க முடியாது! அடைக்கக் கூடாது!
* ஒரு நூலில் எடுத்துக்காட்டுக்குச் சொல்லப்படும் "சொல்லாட்சி" என்பது வேறு! "சமய நூல்" என்பது வேறு! - திருக்குறள் சமய நூல் அல்ல! 

வள்ளுவரை "எங்கள் சமயம்" என்றெல்லாம் சமயப் போர்வைக்குள் அடைக்கவே கூடாது!
அவர், நக்கீரரைப் போல், திருமுருகாற்றுப்படை எழுதி இருந்தால், அப்போ சரி!  ஆனால் வள்ளுவரின் நோக்கம் சமய நூல் அல்லவே!
=>திருக்குறளில் திருமால் பற்றிய சொற் குறிப்புக்கள்!


* திருமாலின் மூன்று அடிகள் என்னென்ன?
=>திரிகடுகம் - அதில் திருமால் சொற் குறிப்பு!


* நிலவு, கதிரோன், வயற்காட்டுத் தாமரை, காயாம்பூ - இதெல்லாம் யாரைப் போல் இருக்கு?
=>நான்மணிக் கடிகையில் தமிழ்க் கடவுள்!


* நரிக்கு "நாரண" அம்பா? நிறைகுடம் நீர் தளும்புமா?
=>பழமொழி 400-இல் தமிழ்க் கடவுள்!


* தமிழக ஆண்களின் "கருப்பு" நிறத்தின் மீது, பெண்களுக்கு எத்தனை காதல் இலக்கியத்தில்?
* வானவில், கார்கால மேகம், கடலும் மணலும் உறவாடும் காட்சி - அங்கே மாயோன் வருவானா? கடல் நெய்தலாச்சே! அங்கே எப்படி முல்லை நில மாயோன்?
=>ஐந்திணை ஐம்பது, கார் நாற்பது...இவற்றில் தமிழ்க் கடவுள்!



நிறைவாக........

பண்டைத் தமிழ்த் தொன்மத்துக்கு இறை என்பதால் தான் = திருமாலும் முருகனும் "தமிழ்க் கடவுளே" தவிர....

* இயேசுநாதர்-இறைவன்(பிதா-சுதன்),
* இன்ஷா அல்லா,
* தென்னாடுடைய சிவ பெருமான், அன்னை உமையவள்,
* அன்பின் அருகர்,
* கருணையே உருவான ததாதகர் - புத்த பிரான்,
...என்று தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ள அனைவரும் "தமிழர் கடவுளே"! கிஞ்சித்தும் மறுப்பில்லை!!

இன்னொரு கேள்வி நீங்கள் கேட்கலாம்:
ஏன் மாயோன்/ சேயோன் தமிழ்க் கடவுள் என்று சொல்லுபவர்கள்,
வேந்தன்/ வருணன் என்ற மற்ற இருவரைத் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை?

= ஏனென்றால் அவர்கள் மக்கள் வாழ்வியலில் கலக்கவில்லை! வெறும் நிலத்துக்கான அடையாளங்களாக மட்டும் நின்று விட்டனர்!
* காதல், வீரம், கலை என்று மக்களோடு மக்களாக அவர்கள் இல்லை!
* வேங்கடம், அரங்கம், செந்தூர், ஏரகம் என்று தலங்களைக் காட்டும் சங்க நூல்கள், வேந்தன்/ வருணனுக்கு அப்படி ஒன்றுமே இல்லை!
* அவர்களுக்கென்று மக்கள் மத்தியில் கூத்தோ, வழிபாடோ, ஆலயமோ....ஒன்றும் அமையவில்லை...மருத/நெய்தல் நிலத்தில் கூட!
வேந்தன் = மருத அரசன்; வருணன் = கடல் காற்று; மாறிக் கொண்டே இருப்பவை; மாயோன்-சேயோன் போல் நிலைத்த தொன்மங்களாய் இல்லை!

இப்போது சொல்லுங்கள்!
Going back to the earliest available history of tamizh civilization,What is that civilization's iRai? = That is the basis of tamizh kadavuL!
மாயோனும், சேயோனும், மக்கள் தெய்வமாகப் பேசப் படுகின்றார்கள்!

வெறும் பேச மட்டுமா? இல்லை! மக்களின் அன்றாட வாழ்வியலிலும் இடம் பெறுகின்றார்கள்!
* குரவைக் கூத்து போன்ற ஆட்டம் பாட்டம் கலைகளிலும்
* காதலன் தன் காதலை மெய்ப்பிக்க, திருமால் மேல் சத்தியம் (சூள்) செய்வதும்
* அரசன் திருமாலைப் போல் என்றும், போர் மறவர்கள் திருமாலைப் போல் கருப்பாய் விளங்குகிறார்கள் என்றும்...காதல், வீரமாய் நிறைந்து!

அண்மைக் காலங்களில், முருகனைத் தமிழ்க் கடவுளாகப் பேசிய அளவு,
திருவிளையாடல் சினிமா வசனங்களில் காட்டிய அளவு,
திருமாலைப் பேசாததால்...காட்டாததால்...அவன் தமிழ்க் கடவுள் இல்லை என்று ஆகிட மாட்டான்!

புரட்சித் தலைவர் = எம்.ஜி.ஆர் என்று சொல்வதால்...
தந்தை பெரியார் = புரட்சித் தலைவர் இல்லை என்று ஆகி விட மாட்டார்!
யார் செய்த புரட்சி அதிகம் என்று உங்களுக்கே தெரியும்! :)

தாய்த் தமிழ் மேல் ஆணை! சங்கத் தமிழ் மேல் ஆணை!! =முருகனும், திருமாலும் என்றென்றும் தமிழ்க் கடவுளே!!


காணிக்கை:
இந்த ஆய்வுக் கட்டுரைக்கான உந்துதல், என் இன்னுயிர்த் தோழன் =கோ.இராகவன்

இதன் முயற்சியினையும், இதைக் கூகுளில் தேடப் போகும் வரும் தலைமுறையின் தமிழ்த் தேடலையும்...இராகவனின் உணர்வுக்கே காணிக்கை ஆக்குகின்றேன்!
அவன் மாற்றுக் கருத்து கொண்டிருப்பினும், இத்தனை இலக்கியத் தேடல்களுக்கும், நன்மைக்கும் அவனே உந்துதல்! வாழி! கதியாய், என் "விதி"யாய் வருவாய் குகனே!!

குறிப்பு: இப்பதிவிற்குப் பின்னூட்டப் பெட்டி பூட்டப்பட்டுள்ளது! சுட்டிகளில் சுட்டப்படும் அந்தந்த இலக்கியம் குறித்த பதிவுகளுக்குச் சென்று, அங்கே கருத்துரையாடிக் கொள்ளவும்! நன்றி!




Posted by kannabiran, RAVI SHANKAR (KRS)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP