Friday, April 02, 2021

தமிழகத் தேர்தல் 2021 - தமிழ்மொழி அரசியல்!



தமிழகத் தேர்தல்: மொழியுரிமையும் அரசாட்சியும்!

(பேரா. முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர்,
Professeur adjoint - Littératures comparée (tamoul), Université de Paris, France)


(ஆனந்த விகடன் இதழ், கேட்டுக்கொண்ட வண்ணம் எழுதிய கட்டுரை
அங்கு, முதன்மையான புள்ளிகள், சுருக்கப்பட்டு  விட்டமையால்
https://www.vikatan.com/news/politics/challenges-and-responsibilities-of-upcoming-tn-government
முழுக் கட்டுரையும், இங்கே பொதுமக்களாகிய உங்கள் பார்வைக்கு!)


மொழிக்கு அரசியல் தேவையா?

மொழி, மக்களின் வாழ்வியலில் ஓர் இயந்திரப் பொறி (Engine). கண்ணுக்கு நேரடியாகத் தெரியாவிட்டாலும், அதன் மூலமாகத் தான் வாழ்வியல் வண்டி ஓடுகிறது. 


மொழி சிதைந்து போனால், ஏதோ பழைய வரலாறு, பண்பாடு, நாகரிகம் – இவை மட்டும் தான் சிதைந்து போகும் என்று எண்ணிவிட வேண்டாம். நம் மக்களின் எதிர்காலமும், அடுத்த தலைமுறையின் அறிவாற்றலும், இன-வரைவியல் தனித்தன்மையும், மொழியுடன் சேர்ந்தே சிதைந்து போகும். (Hawaiian ஆதிகுடி மக்கள், தங்கள் மொழியை இழந்து, பிறகு கடினப்பட்டு மீட்டெடுத்த வரலாறு வாசிக்க). 

எனவே, ஓர் இனம், காத்துக் கொள்ள வேண்டிய முதன்மைச் சொத்துக்கள், மொழி & சமூகநீதி – இவ்விரண்டும் தான்!

”மொழிக்கு அரசியல் தேவையா? மொழி, மொழியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று ஒரு சிலர் (தங்களை நடுநிலைவாதிகள் என்று கருதிக் கொள்வோர்) கேட்பர். ஆனால் உண்மையில், தமிழ்மொழி மீதான அரசியல், இன்று நேற்றல்ல, 2500+ ஆண்டுகளுக்கும் மேலாகவே தொடர்கிறது. 

ஒரு மொழி, அரசியலற்று, தனித்து இயங்குதல் என்பது வரலாற்றில் இல்லவே இல்லை!


எப்படி அரசியலும் அரசாட்சியும், மக்களின் வாழ்வியலைச் சட்டங்கள் மூலமாகப் பாதிக்கின்றதோ, அது போலவே மொழியையும் பாதிக்கும். மொழி என்பது வெறுமனே தொடர்புக் கருவியோ (Communication Tool), அல்லது இலக்கிய-இலக்கண ஆராய்ச்சிப் பொருளோ மட்டுமல்ல; மொழி, ஓர் இனத்தின் வழிவழி வாழ்வியல்! அந்த வாழ்வியலில் விளைபவையே இலக்கியங்களும் இலக்கணங்களும். 


தமிழ்மொழி, முதலில் மக்களின் சொத்து; பிறகே அறிஞர்களின் சொத்து.
மக்கள் இன்றேல், மொழி இல்லை!
தொன்மத்தில் மட்டுமல்ல, தொடர்ச்சியிலும் மொழி தழைக்க வேண்டும்!
அதற்கு, அரசு-இயலின் பங்கும் மொழியில் உண்டு.



மொழி அரசியலின் வரலாறு:


ஆரிய x திராவிட அரசியல், இப்போது மட்டுமல்ல, அப்போதே தொடங்கி விட்டது! சங்க கால அரசர்கள்: பெருநற்கிள்ளி - இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளியாய் மாறின போது, பெருவழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாய் மாற்றப்பட்ட போது, தமிழ் மொழி & தமிழ் இனத்தின் பல உரிமைகள் பறி போயின. எதிர்வினைகளும் கிளம்பின!


1. ஆரிய அரசன் பிரஹத்தன், தமிழர்களின் காதல் மண வாழ்வை ஏளனம் செய்து இழித்த போது, அவனை மறுத்து, அன்றே கபிலர் பாடியது தான் குறிஞ்சிப் பாட்டு. 

2. குயக்கோடன், ”ஆரியம் நன்று; தமிழ் தீது” என்ற போது, அவன் அழிய அறம் பாடினார் நக்கீரர்.

3. வடமொழித் திணிப்புக்கு, இயைந்து போகக் கூடாது என்று அன்றே எச்சரித்தார் தொல்காப்பியர். (”சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்; வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ”, ஒதுக்கு என்றார்).

4. ஜாதி வேறுபாட்டை இறைவனே படைத்தான் என்று சட்டம் எழுதப்பட்ட போது, ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, ”மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்” என்று எதிர்ப்பே காட்டினார் வள்ளுவர்.

5. நைவேத்தியம் என்ற பேரில், ஒரு சாராருக்கு மட்டும் உணவுக் கொள்ளை நடந்த போது, முன்னோர் நடுகல்லே தமிழர்களுக்குக் கடவுள்; எங்களுக்கு நைவேத்தியக் கடவுள்கள் இல்லை (”நடுகல்லே பரவின் அல்லது, நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலமே”) என்று எதிர்த்தார் மாங்குடிக் கிழார்.

6. ஜோதிடம், பரிகாரம் என்று சமூகத்தில் புதிதாகப் பரவும் வடமொழிப் போலித்தனங்களைச் செய்ய மாட்டேன்! என்று அன்றே முரண்டு பிடித்தாள் கண்ணகி! (”பீடு அன்று என்று இருந்த பின்னரே”).



மொழி அரசியலின் இன்றைய நிலை:


இப்படி, தமிழ்ச் சமூகம், அரசியல்/அரசாங்கம் மூலமான திணிப்புகளைப் பல காலமாக எதிர்த்துக் கொண்டும், மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டும் தான் வந்துள்ளது. அது, இன்றும் பொருந்துகிறது. 


கடந்த 2014 முதல் இன்று வரை, மத்திய (ஒன்றிய) வலதுசாரி அரசாலும், மாநில அரசாலும், பல்வேறு சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுள்ள புதிய சூழலில், தமிழ்மொழியின் நிலை என்ன?


1. ஒன்றிய ஆட்சியின் மூலமாகப் புதிய கல்விக் கொள்கை (NEP) வழியே, தமிழ்நாட்டில் கட்டாய மும்மொழிக் கொள்கை புகுத்தல் அபாயம்.

2. உள்துறை அமைச்சக Raj Basha திட்டம் மூலமாக, அரசு அலுவலகங்களில் கட்டாய ஹிந்தி ஆவணமாக்கம்; அரசுத் திட்டங்கள் யாவும் ஹிந்திப் பெயரிலேயே அமைதல்.

3. அரசு ஊழியர்களின் மேல் கட்டாய Parangat ஹிந்தித் தேர்வு வேலை வாய்ப்பும், பணி உயர்வும்.

4. அரசுத் துறைகளின் அலுவல் முழுதும் ஹிந்தியில் நடத்த Karyashala Sandarshika பெருந்தொகுப்பு.

5. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ/தொழில்நுட்பக் கருத்தரங்கில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள், என்று பலருக்கும் தொடர்பேயின்றி, ஹிந்தியிலேயே ஆவணங்கள் அனுப்பல்.

6. சம்ஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ. 643 கோடியும், பிற எல்லா மாநில மொழிகளுக்கும் வெறுமனே ரூ. 29 கோடியும் அரசு மானியச் செலவினம். 60% இந்தி பேசாத மக்கள், 99.9% சம்ஸ்கிருதம் பேசாத மக்களின் வரிப் பணத்தை எடுத்து, ஒரு மொழிக்கு மட்டும் அதீத ஓரவஞ்சனை காட்டல். 


7. குடியரசுத் தலைவரின் சம்ஸ்கிருத மொழி விருது & மஹரிஷி பாதராயனர் விருது, ரூ. 5 லட்சம் ஒருவருக்கு ஒருமுறை வழங்குவதோடு மட்டுமன்றி, அவரின் ஆயுட்காலம் முழுதும் ரு. 50,000 ஆண்டுத்தொகை வழங்கல்; தமிழ்/வேறெந்த மொழிக்கும் ஆயுட்கால விருதுத் தொகை இல்லை.

8. தேசிய இணையவழி இந்திய நூலகத்தில் (National Digital Library of India), தமிழ் உட்பட தென்மாநில மொழிகள் இடம் பெறாமை.

9. நடுவண் அரசு மட்டுமல்லாது, தமிழக அரசிலும், தமிழ் ஆராய்ச்சிக்கு என்றே உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலேயே, ஹிந்தி மொழிப் பயிற்சித் திட்டம் (2019).

10. பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 2019-இல் நடைபெற்று முடிந்தாலும், இன்னும் கூட மாநாட்டின் நிகழ்முறைகளும் (Proceedings), ஆராய்ச்சித் தாள் தொகுப்பும் வெளிவரவில்லை. அந்த ஆராய்ச்சிகளால் மொழிக்கு விளையும் பயன் & செயல்திட்டங்களும் வெளியிடப்படவே இல்லை.

11. தமிழக அரசின் பாடப் புத்தகத்திலேயே, ”தமிழை விடவும் மிக மூத்த மொழி சம்ஸ்கிருதம்” என்று நம் பாடநூல் கழகமே அச்சிட்டு வெளியிடல்.

12. மாநிலத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரே, சம்ஸ்கிருத ஹிந்தி மொழிகளுக்கு ஆதரவாகப் பேசல், முன்னெடுப்பு செய்தல்... என்று பலப்பல அரசாங்கச் சோகங்கள். (சில மட்டுமே மேற்குறிப்பில்).


அறிவியல் காலத்தில், தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்து, அடுத்த நூற்றாண்டு ஆக்கப் பணிகளைச் சிந்திப்பதும் செய்வதும் போய், இருப்பதைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும் என்ற அவல நிலையில் தான், இன்று தமிழ் மொழியியல் உள்ளது. உலகப் பெருந் தமிழறிஞர்களுக்கும் இதனால் வருத்தமே.


இவையெல்லாம் யார் செய்கிறார்கள்? எவர் தூண்டுதலால் நிகழ்கின்றன? என்று பொதுவெளியில் ஒருவாறு நமக்குத் தெரியும்.
ஆனால், அவர் பிழை, இவர் பிழை, என்று கட்சிகள் சார்ந்து வெறுமனே ஆள்காட்டல் செய்வது, தமிழுக்குப் பயன் தராது.
இந்த இழிநிலை மாற வேண்டும்! மாற்ற வேண்டும்! யார் துணிந்து மாற்றுவார்களோ, அவர்களைத் தமிழ் மக்களாகிய நாம் ஆதரிக்க வேண்டும்!



தமிழகத் தேர்தலும் மொழி உரிமைகளும்:


எதிர்வரும் தமிழ்நாட்டுச் சட்டமன்றத் தேர்தலில் (ஏப்ரல் 6, 2021),
பல கட்சிகள், வளர்ச்சித் திட்டங்கள் மட்டுமல்லாது,
மொழிசார்ந்த சில வாக்குறுதிகளையும்,
தங்களின் தேர்தல் அறிக்கைகளில் தந்துள்ளன.

ஆனால், வாக்குறுதி தருவது மட்டுமே பெரிதல்ல;
அதைத் துணிந்து ஆற்றக் கூடிய ஆற்றல் யாருக்கு உண்டு?

என்பதையும் கருதியே வாக்களிக்க வேண்டும்!


1. சொல்லுதல் யார்க்கும் எளிய – அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல். (குறள் 664: வினைத் திட்பம்)

2. இதனை இதனால் இவன்முடிக்கும் - என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல். (குறள் 517: தெரிந்து வினையாடல்)


நடுவண் அரசின் அப்பட்டமான அத்துமீறல்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, 1. இருப்பதைக் காத்தும், 2. புதிதாக ஆற்றியும் – இரண்டு வழிகளிலும் தமிழ்ப்பணி செய்ய வேண்டிய காலத்தில் உள்ளோம்.

அதனால், ஒரு கட்சியில் சொல்ல விட்டுப்போன தமிழ்ப் பணியை,
இன்னொரு கட்சி சொல்லியிருந்தாலும்,
அதையும் தமிழ்த் தொண்டாகவே கருதி முன்னெடுத்தல்,
Copy அடித்தல் ஆகாது; தமிழ் உழைப்பே ஆகும்!


எதிர்வரும் தமிழகத் தேர்தல் களத்தில், 5 கூட்டணிகளின் மொழிசார்ந்த பொதுவான வாக்குறுதியும், குறிப்பிட்டு என்ன மொழிப்பணி ஆற்றுவார்கள்? என்றும் கீழ்வரும் பட்டியலில் காணலாம்.



திமுக, அதிமுக - இரண்டு பெருங்கட்சிகள் & வேறு சில கட்சிகளின் பொதுவான வாக்குறுதிகள்:

1. தமிழகத்தில், இரு மொழிக் கொள்கை தொடர்ச்சி.

2. இந்திய ஒன்றிய ஆட்சி மொழியாகத் தமிழை(யும்) சேர்த்தல்.

3. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ்.

4. ஒன்றிய அரசுத் தேர்வுகள், தமிழி(லும்) நடத்த வலியுறுத்தல்.

5. பிற மாநில / அயல் நாட்டுப் பல்கலைக்கழகங்களில், தமிழ் இருக்கை உதவி.

6. தமிழ்த் தொல்லியல் & அகழாய்வு (கீழடி/ பிற) – பொதுவான முயற்சிகள்..



திமுக செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. திருக்குறள், தேசிய நூலாக அறிவித்தல்.

2. தமிழை, Section 343 மூலம், இந்திய இணை ஆட்சிமொழி (Co-official Language) என அறிவித்தல்.

3. சட்டம் மூலமாக, தமிழகத்தில், தமிழ் கட்டாயப் பாடம், 8ஆம் வகுப்பு வரை (CBSE/Kendriya Vidayalaya உட்பட மத்தியக் கல்வி நிறுவனங்களிலும்).

4. தமிழ் அலுவல்மொழி வளர்ச்சிப் பிரிவு – தலைமைச் செயலகம் முதல் வட்டாட்சி வரை.

5. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மேம்பாடு, மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் - புதிது.

6. கீழடி – சிவகங்கை உலக அருங்காட்சியகம், ஆதிச்சநல்லூர் & கொற்கை புதிய அருங்காட்சியகங்கள்.

7. இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் தமிழ்க் கல்வெட்டுகளை, கர்நாடகத்தின் மைசூரில் இருந்து, தமிழகத்துக்குக் கொண்டுவந்து காட்சிப்படுத்திப் பாதுகாத்தல்.

8. தமிழ் வரிவடிவச் சிதைப்புத் தடுப்பு; (சம்ஸ்கிருதம் கலவாத) தூயதமிழ் வரிவடிவம் – அரசுச் சட்டம்.

9. உலக நூல்கள் தமிழில் மொழியாக்கம், தமிழ் நூல்கள் உலக மொழியாக்கத் திட்டம்.

10. பொங்கல், தேசிய விழாவாக அறிவித்தல், விளையாட்டுப் போட்டிகள் – மாநில/ மாவட்ட/ ஒன்றியம்.

11. சல்லிக்கட்டுக் காளை வளர்ப்பு ஊக்கத் தொகை ரூ 1000.

12. வள்ளலார் பன்னாட்டு மையம் நிறுவல்.

13. பெரியார் சமத்துவபுரங்கள் – 240+ மீள் உருவாக்கம்.

14. அனைத்துச் சாதி அர்ச்சகர் பணியாணை – 205 பேர்; தேவாரம்/ஆழ்வார் அருளிச்செயல் ஊக்கம்.

15. தமிழ் நாட்டுப்புறக் கலைப் பயிற்சிப் பள்ளிகள் & ஆண்டு விழா.

16. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் (CICT Central Institute of Classical Tamil) புதுப்பொலிவு.

17. செம்மொழிப் பூங்கா, அனைத்து மாநகராட்சிகளிலும் நிறுவல்.

18. திராவிட இயக்கச் சான்றோர் பிட்டி தியாகராயர், சி. நடேசனார், டாக்டர் டி.எம். (நாயர்), தமிழகத்தின் முதல் இடஒதுக்கீட்டுச் சான்றோர் பி. சுப்பராயன் – தீரர் கோட்டம் & தமிழ்ப் புதினத்தின் (Novel) தந்தை, மயூரம் வேதநாயகம் (பிள்ளை) மணிமண்டபம்.



அதிமுக செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. தமிழ்நாட்டில், தமிழ் கட்டாயப் பாடம் 10 ஆம் வகுப்பு வரை என்ற பொதுவான அறிவிப்பு (சட்டம் பற்றிய குறிப்பு இல்லை; CBSE கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்துமா என்ற குறிப்பும் இல்லை).

2. திருக்குறளைத் தேசிய நூல் ஆக்கல்.

3. தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஊக்குவிப்பு.

4. சல்லிக்கட்டுக் காளை ஊக்குவிப்பு.

5. தரங்கம்பாடியில், அயலகத் தமிழறிஞர் சீகன்பால்கு இல்லம் அரசுடைமை.

6. அப்துல் அமீது பாகவி – இசுலாமிய இலக்கியக் கருவூலம் உருவாக்கல்.

7. மணிமண்டபங்கள் – மறைமலை அடிகள், மொழிஞாயிறு பாவணர், சிலம்புச் செல்வர் ம.பொ.சி., நாவலர் நெடுஞ்செழியன்.



மநீம செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. அப்துல் கலாம் அறிவுசார் ஆராய்ச்சி & Digital நூலகம்.

2. இடைநிலைக் கல்வியில் மும்மொழிக் கொள்கை – தமிழ்/ ஆங்கிலம்/ விருப்ப மொழி.

(மொழி அளவில் - இருமொழிக் கொள்கை தொடரும் என்று பக்கம் 26-இல் குறிப்பிட்டு இருந்தாலும், இடைநிலைக் கல்வி அளவில் - தமிழ், ஆங்கிலம், வேறு ஏதாவது ஓர் இந்திய மொழி – மும்மொழிக் கொள்கை அமல் என்று பக்கம் 40-இல் குறிப்பிட்டு இருப்பது, தமிழ் மொழிக்கு நல்லது அல்ல! 

முதலமைச்சர் அறிஞர் அண்ணா சட்டப் பேரவைத் தீர்மானத்தின் படி, தமிழ்நாட்டில் என்றும் இருமொழிக் கொள்கையே என்று இருந்துவரும் நிலையில், அதற்கு மாறாகத் துணிந்து ஏன் இப்படிக் குறிப்பிட்டு உள்ளார்கள் என்று தெரியவில்லை; வருத்தமே!).



நாதக செயல்திட்ட வாக்குறுதிகள்:

(இன்னும் தேர்தல் அறிக்கை வெளியாகவில்லை – Mar 24, 2021 11:00 am நேரப்படி)



அமமுக செயல்திட்ட வாக்குறுதிகள்:

1. தமிழர் பாரம்பரிய உணவு/தின்பண்டம் பரவலாக்கத் திட்டம்.

2. தமிழ் இலக்கிய உலக விருது - ரூ 25 லட்சம் பரிசுடன்.



மேற்கண்ட தனித்தனி வாக்குறுதிகளை நீங்களே பாருங்கள்!
எவை தமிழ்மொழிக்கு நீடித்த நலன் என்று கருதி,
யார், அவை நிறைய சொல்லியுள்ளார்கள்/ செய்யும் துணிவு?
என்று கருதி, தமிழக மக்கள்/ தமிழ் ஆர்வலர்கள் வாக்களிக்கவும்! 


யாருக்கு வாக்களிப்பது? என்பது அவரவர் தனி உரிமையே ஆயினும்,
வாக்களிக்காது மட்டும் இருந்து விட வேண்டாம்!
கட்டாயம் வாக்களிக்கச் செல்லவும்!
வாக்கு என்பது நம் அனைவரின் உரிமை & கடமை – இரண்டுமே!

கடமை செய்வோர்க்கே, உரிமையின் பலன் கிட்டும்!

இது தவிர, வேறு பலப்பல பணிகள், தமிழ்மொழிக்கு ஆற்ற வேண்டியுள்ளன. அவற்றைக் கீழ்வரும் பட்டியலில் குறிப்பிடுகிறேன். யார் வென்று ஆட்சி அமைத்தாலும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை மட்டுமல்லாது, இவற்றையும் நிறைவேற்றித் தாருங்கள் என்பதே வேண்டுகோள்! மாநில அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும், தமிழ் - நின்று வென்று நிலைக்க, இம் முன்னெடுப்புகள் இன்றியமையாதவை!



எதிர்வரும் தமிழக அரசு செய்ய வேண்டிய தமிழ் வளர்ச்சிப் பணிகள்:


1. தமிழ் மொழியியல் உலக ஆணையம் நிறுவல் - அனைத்துலகப் பல்கலைக்கழக இருக்கைகள் (Global University Academic Chairs), செந்தர நிறுவனங்கள் (Standardization Bodies), தமிழ்க் கணிமை (Tamil Computing) நிறுவனங்கள் என்று பலவற்றுக்கும் கொள்கை வழிகாட்டும் ஆணையமாய்ச் செயல்படல்.

2. ஒருங்குறி ஆணையம் (Unicode Consortium) முதலான பல உலக நிறுவனங்களில், தமிழ்மொழி சார்ந்தாற்றுகையில் (Representation), தமிழக அரசு தன்னை ஒரு பங்குதாரராக (Stakeholder) நிறுவிச் சேர்ந்து கொள்ளல்.


தமிழி (தமிழ்ப் பிராமி) & வட்டெழுத்து சேர்த்தல்.

சம்ஸ்கிருத கிரந்த எழுத்து - ஶ, ஷ, ஸ, ஹ மதிப்பிழக்கச் (deprecate) செய்தல்.

அளபெடைக்கான joiner குறியீடு பெறல்.

குற்றியலுகரம், குற்றியலிகரம் - சந்திர பிந்து பெறல்.

இசைக்குறிகள், தாளக்குறிகள், வேறு கலைக் குறிகள் – Unicode SMP குறியேற்றல்.


3. மக்கள் பலரும் தமிழ் எழுதுகையில் ஈடுபடுவது மகிழ்ச்சியே என்றாலும், எழுதுகையில் செய்யும் பிழைகளைக் களைந்து, மொழியை எல்லா மட்டங்களிலும் எளிதாக்க, மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் தமிழ்த் தொழில்நுட்பக் கருவிகளை உருவாக்கித் தொகுத்தல்.

தானியங்கு பிழைதிருத்தி (Auto Spellchecker)

தானியங்கு வடமொழிநீக்கி (Auto Sanskrit Remover)

தானியங்கு ஆங்கிலக்கலப்பு நீக்கி (Auto Tanglish Adapter)

ஒளிவருடல் கோப்பில் எழுத்து அறுவடை செய்தல் (Pdf to Unicode Converter for Tamil)

தமிழ் ஒலிப்புப் பயிற்றுநர்கள் (Tamil Voice Assistants)

இன்ன பிற கருவிகள்


4. குழந்தைகளுக்கான தமிழ்ப் பெயர்கள் வழங்குபொறி (Tamil Baby Names Provider) உருவாக்கி, தமிழ்நாட்டின் மகப்பேறு மருத்துவமனைகளில் பரவலாக அறிமுகப்படுத்தல். இன்னும் 2-3 தலைமுறைகளில், தமிழர்கள் யாவருக்கும் தமிழ்ப் பெயர்களே இருக்கும்படி ஊக்குவித்தல்.

5. தேசிய இணையழி இந்திய நூலகம் (National Digital Library of India) போல், தேசிய இணையவழித் தமிழ்ப் பெருநூலகம் (National Digital Library of Tamil) உருவாக்கி, தமிழ் இலக்கிய இலக்கணங்கள் யாவும், தமிழறிஞர்களின் நூல்கள் யாவும், தேடுபொறிகளோடு ஒரே இடத்தில் திரட்டி வைத்தல்.


6. உலகப் பெரும் பல்கலைக்கழக நூலகங்களோடு, தேசியத் தமிழ்ப் பெருநூலகத்தை இணைத்தல். 

7. ஒரு சொல், தமிழா? சம்ஸ்கிருதமா? வேற்று மொழியா? என்று பிரித்தறிய எளிதாக, உலகத் தமிழ்ப் பேரகராதி உருவாக்கல்; மொழிஞாயிறு பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை, அனைத்து அகராதிகளோடும் இணைத்து, எளிதாக்கி, அயல்மொழிச் சொற்களை அடையாளம் காணல்.

8. அறிவியல் & தொழில்நுட்பம் மிகுத்து வரும் காலத்தில், உடனுக்குடன் புதிய கலைச்சொல்லாக்கம் (Technical Terms) செய்து, உலகம் முழுதும் ஒரே சீராக வெளியிடல்.



9. கீழடி, அழகன்குளம், கொடுமணல், இன்னும் பல தமிழ்த் தொல்லியல் களங்களுக்கு, உலகத் தொல்லியல் களங்களோடு இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்தல். (Rome, Greece, Egypt, China – linking ancient trade artefacts, arretine pottery & numismatics). மத்திய அரசுத் துறைகளின் Red Tape கடந்து, உலகப் பல்கலைக்கழகங்களோடு தொல்லியல் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்தல்.

10. தொல்லியல் காலக் கணக்கீடு செய்யும் உலக நிறுவனங்களோடு, (C14 Attestation/ U 234-Th 230 Dating) புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளல்.


11. கடல் தொல்லியல் (Maritime Archaeology) துறையைப் புதிதாக உருவாக்கல்.

12. பூம்புகார் – சிலப்பதிகார நகரைப் புதுப் பொலிவுறச் செய்து மேம்படுத்தல்.

13. குமரிமுனை ஐயன் வள்ளுவப் பெருஞ்சிலையைப் புதுப் பொலிவுறச் செய்தல்.

14. குமரிமுனையிலேயே, தமிழ்த்தாய் பெருஞ்சிலையைப் புதிதாக நிறுவுதல்.

15. மதுரை, தஞ்சை, உறையூர், பழையாறை, காஞ்சி, கொற்கை, பறம்பு மலை, கடல் மல்லை, வஞ்சி, தொண்டி, முசிறி, ஈழம் - இன்ன பிற தமிழ்த் தொல் நகரங்களில், தமிழ் வரலாற்றுக் கூடங்களை உருவாக்கல்; தமிழ் வரலாற்றுச் சுற்றுலா, தமிழ்ப் பண்பாட்டுச் சுற்றுலாக்களை வடிவமைத்தல்.


16. இலண்டன் Shakespeare's Globe Theater போல், தொல்காப்பிய-வள்ளுவ-இளங்கோ இலக்கியப் பேரரங்கம் உருவாக்கல்.

17. தனித்தமிழ் இயக்க வரலாற்று மையம் & திராவிட இயக்க வரலாற்று மையம் நிறுவுதல்.

18. தமிழிசைக்கென்றே, தனியாகவொரு தமிழிசைப் பல்கலைக்கழகம் நிறுவுதல்.

19. தொல்லியலுக்கென்றே, தனியாகவொரு தமிழ்த் தொல்லியல் பல்கலைக்கழகம் நிறுவுதல்.

20. தமிழ் மொழி, இலக்கியம் & வரலாறு குறித்த ஆவணப் படங்கள், உலகத் தரத்தில் உருவாக்கம்.

21. தமிழ் என்றால் என்ன? என்று தமிழர்/ அயலவர்/ இளைய தலைமுறை யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம், சுவையான திரைப்படம்/ஆவணப்படம் ஒன்றை, தமிழ் & ஆங்கிலத்தில் உருவாக்கல்.



தொண்டு செய்க தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே என்பது பாவேந்தர் கனவு!

தமிழை உலக மயமாக்குவோம்! உலகத்தைத் தமிழ் மயமாக்குவோம்!

உணவு, உடலை வளர்க்கும் தமிழா;
உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே! தமிழே!


12 comments:

  1. மிகவும் அருமையான பதிவு . தங்களின் கோரிக்கைகள் சிலவற்றின் மீது நடவடிக்கை எடுத்தாலே தமிழ் தழைக்கும்.

    ReplyDelete
  2. https://www.hindutamil.in/amp/news/reporters-page/153830-50.html

    பதவியேற்கும் புதிய அரசுக்கு ஒரு வேண்டுகோள்:

    இரு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு பாடநூல் கழகம், ஐம்பது ஆண்டுகள் பழமையான சுமார் 875 அரிய தமிழ்ப்புத்தகங்களை மறு பதிப்பு செய்து வெளியிட்டது. அந்த புத்தகங்கள் அனைத்துமே 1950-1970 காலகட்டத்தில் உயர்கல்வி படிப்பவர்களுக்கான பாடநூல்களின் (Textbook) தமிழ் மொழிப்பெயர்ப்பு.

    தற்போதைய ஆண்டு 2021. உலகம் எவ்வளவோ மாற்றமடைந்து விட்டது. BlockChain Technology, Artificial Intelligence, Forensic Sciences, Architecture முதல் Genetics, Anthropology, Biodiversity, Climate Change, Online Banking - Markets - Payments - Algorithmic Trading, Food Processing வரை பல புதிய துறைகள் உருவாகிவிட்டன / பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டன. இத்துறையில் பயிலும் மாணவர்களுக்கோ அல்லது வல்லுனர்களுக்கோ அல்லது ஆர்வமுடைய தமிழ் மக்களுக்கோ இத்துறை தொடர்புடைய உலகத்தரம் வாய்ந்த பாடநூல்கள் (Texbooks) தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படவில்லை.

    மேலும், 22-ஆம் நூற்றாண்டிற்கு தமிழ் மொழியை எடுத்துச் செல்ல இப்போதே தமிழ் மொழியை ஆயத்தப்படுத்த வேண்டும். 22-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் Artificial Intelligence, Block Chain Technology போன்றவையே விண்வெளியியல், பாதுகாப்புத்துறை முதல் கட்டிடவியல், விவசாயம் வரை எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்படும். இத்துறைகள் தொடர்பான தொழில்நுட்பங்களும் தகவல்களும் என அனைத்தும் தமிழிலும் இருக்க வேண்டும். இத்துறைகள் சார்ந்த புதிய தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    ஆகவே, தமிழ் நாடு அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் மொழிப்பெயர்ப்புக்கு என்று ஐந்து முதல் பத்து கோடி வரை ஒதுக்கி, அகரமுதலித் திட்டம், பாடநூல் கழகம், தமிழ்வளர்ச்சித் துறை போன்றவற்றை ஒருங்கிணைத்து, ஒவ்வொரு துறையிலும் உள்ள வல்லுநர்களைக் கொண்டும், ஐஐடி, இஸ்ரோ போன்ற நடுவண் அரசுத் துறைகளின் உதவியையும், மேற்கத்திய மற்றும் சீனா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் உதவியை பெற்றும், புலம்பெயர் தமிழர்களின் அறிவுசார் உதவிகளையும் பெற்று, தற்போது உள்ள பல பாடநூல்களை (Textbooks) தமிழில் மொழிப்பெயர்க்க வேண்டும். உலகத்தரம் வாய்ந்த நூல்கள் தமிழிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்படல் வேண்டும்.

    தரமான நூல்களை தமிழில் மொழிப்பெயர்ப்பு செய்வதும் புதிய தமிழ்ச்சொற்களை உருவாக்குவதுமே, தமிழ் மொழியை இருபத்தியிரண்டாம் நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும்.

    ReplyDelete
    Replies
    1. செம்மையாகச் சொன்னீர்கள்! உண்மையில் நான் அடிக்கடி நினைத்துக் கொண்டிருந்த கருத்து. ஓரீர் ஆண்டுகளுக்கு முன் மொழிபெயர்ப்பு சார்ந்த ஒரு பணிக்காகக் கேட்டு வைத்திருந்தபொழுது சோதனைக்காக ஒரு பத்தியை மொழிபெயர்க்கச் சொல்லி எனக்கு அனுப்பினார்கள். அது பிளாக்செயின், எண்ணிமப் பணம் (digital currency) தொடர்பான ஒரு பத்தி. அந்த ஒரு பத்தியை மொழிபெயர்த்து அனுப்பிய பிறகு உங்களுக்குத் தோன்றியதுதான் எனக்கும் தோன்றியது. உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது! ஆனால் நாம் இன்னும் இந்தப் புதிய துறைகளையெல்லாம் தமிழ் விரல்களால் தொடக் கூட இல்லையே! இப்படி என் சிந்தனை ஓடியது. இவையெல்லாம் அரசு மனம் வைப்பது மட்டுமில்லை தமிழ் ஊடகங்கள் மனம் வைத்துச் செய்ய வேண்டியது. எங்கே, இவர்கள் இன்னும் இணையம், வட்டகை, ஊர்தி, எண்ணிமம், விசைப்பலகை, சுட்டி போன்ற அடிப்படையான தமிழ்ச் சொற்களையே இன்னும் கையாளத் தொடங்கவில்லையே!

      Delete
  3. வணக்கம்
    "அறியப்படாத தமிழ்" வாசித்தேன். சிறு விளக்கம் கேட்க எண்ணுகிறேன். தங்கள் மின்னஞ்சல் தர முடியுமா?எனது மின்னஞ்சல் kanjey@gmail.com
    அன்புடன்
    செயபாலன்

    ReplyDelete
  4. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பந்தலிலே தமிழ்க் கனி! இப்பொழுதுதான் தற்செயலாகப் பார்த்தேன். தமிழ் குறித்துத் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவை என்ன என்பதை பட்டியலிட்டுப் பதிவு செய்து விட்டீர்கள். இத்தனை நாட்களாகத் துவிட்டரில் நீங்கள் எழுதி வந்த பல கருத்துக்களை இதிலும் பார்க்க முடிந்தது. குறிப்பாக 9, 10, 11 ஆகியவை. அவை தவிர தொல்காப்பிய-வள்ளுவ-இளங்கோ இலக்கியப் பேரரங்கம், தனித்தமிழ் இயக்க வரலாற்று மையம் & திராவிட இயக்க வரலாற்று மையம், தமிழிசைக்கென்றே தனிப் பல்கலைக்கழகம், தொல்லியலுக்கென்றே தனிப் பல்கலைக்கழகம், தமிழ் மொழி - இலக்கிய - வரலாறு குறித்த உலகத் தர ஆவணப் படங்கள்!

    ஆகா!... ஆகா!!... ஆகா!!!... எத்தனை கனவுகள்! எப்பேர்ப்பட்ட கனவுகள்!! இவற்றையெல்லாம் புதிய முதல்வருக்கும் அனுப்பி வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்தக் கட்டுரை இந்தத் தேர்தலுக்கோ இப்பொழுது அமைந்திருக்கும் புத்தரசுக்கோ மட்டுமில்லை இந்தக் கனவுகள் அத்தனையும் நிறைவேறும் வரை இனி தமிழ்நாட்டில் அமையும் ஒவ்வோர் அரசுக்கும் தமிழ்க் கடமைகளை உணர்த்தும் செந்தர ஆவணமாய்த் திகழும்!

    நன்றி இப்படி ஒரு பதிவுக்காக!

    ReplyDelete
  5. இளங்குமரன் ஐயா அவர்களின் வழக்குச் சொல் அகராதி

    https://solalvallan.com/topics/%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d/

    ReplyDelete
  6. நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் தமிழில் பிளாக்கரை ஆரம்பிப்பது எப்படி? https://www.techhelpertamil.xyz/

    ReplyDelete
  7. இக்கட்டுரை சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  8. மிக அருமை நன்றி

    ReplyDelete
  9. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  10. வணக்கம்.உங்கள் சுப்ரபாதம் பதிவுகளை கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து இப்போது தான் படித்து அனுபவித்து வருகிறேன். மிக்க நன்றி

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP