Wednesday, September 03, 2008

பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்!

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சுடா-ன்னு வழக்கத்தில் சொல்லக் கேட்டிருப்பீங்க! "நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன்! ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி!" - இப்படிச் சொல்வதற்குத் தானே இந்தப் பழமொழியைப் பயன்படுத்தறாங்க, இப்பல்லாம்?

பிள்ளையார் சிலை பண்ணலாம்-னு தான் களிமண்ணைத் திரட்டி, உருட்டி ஆரம்பிச்சேன்!
ஆனால் கடைசியா வந்து நின்னதென்னவோ பிள்ளையார் உருவம் இல்லைப்பா! போயும் போயும் ஒரு குரங்கு உருவம்!
நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான்! - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))

சரி...
அதென்ன பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதை? அப்படி ஒரு கதை நிஜமாலுமே இருக்கா என்ன?
கேட்டா, நொந்து, நூலாகி, நூடுல்ஸ் ஆயிருவீங்க! அப்படி ஒரு பழமொழியே இல்லை!
நம்ம மக்கள் அடிச்ச கும்மியில், நல்ல பழமொழி ஒன்று, வேற மாதிரி ஆகிவிட்டது! :)
சமய ஒற்றுமை சொல்ல வந்த பழமொழி, சலசலத்துப் போய் வேறு மாதிரி ஆகிவிட்டது!

உண்மையான வாசகம் என்னவென்றால்...
பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!

எந்த ஒரு செயல் துவங்கினாலும், யாரை வணங்க வேண்டும்? அது உங்களுக்கே தெரியும்! -பிள்ளையார்!
அதே போல் எந்த ஒரு செயலை முடிக்கும் போது, யாரை வணங்க வேண்டும்? தெரியுமா? -அனுமன்!
ஏன் இப்படி? பார்ப்போம் வாருங்கள்!


சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க? கை தூக்குங்க பார்ப்போம்! ஆனந்த விநாயகர்! வேங்கடானந்த விநாயகர் என்பது சுவாமியின் திருநாமம்!
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை! ஆதி+அந்தம்+பிரபு = ஆத்யந்தப் பிரபு
அதாச்சும், பாதி பிள்ளையார்-பாதி அனுமன் என்ற ஒரு திருவுருவச் சிலையை இங்கே காணலாம்! இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து! இதுவே ஆதியந்த ஸ்வாமி!

* எந்த ஒரு செயல் துவங்கினாலும், பிள்ளையாரை வணங்கிச் செய்வது வழக்கம்! விக்கினங்கள்/தடைகள் இன்றி செவ்வனே நடைபெற!
பிரணவம் தானே மூலாதாரம்! அங்கிருந்து தானே எந்த மந்திரமும் துவக்கம்! அதான் முதலில் பிள்ளையார் பூஜை!

* அதே போல் அந்தச் செயல் முடிக்கும் போது, அனுமனைத் துதித்து முடிப்பது வழக்கம்! நன்றி தெரிவித்துக் கொள்ள!
எப்பேர்ப்பட்ட செயலையும் செய்து விட்டு, நன்றி ஒன்றைக் கூட எதிர்பாராது இருப்பவரிடம் சொல்லும் நன்றி மிகப் பெரிதல்லவா! அதான் இறுதியில் அனுமத் பூஜை!

மத்திய கைலாசத்தில் ஆத்யந்த சுவாமி!

பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்!
முதலில் "மகா கணபதிம்" என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, "ராமச்சந்த்ராய ஜனக" என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு!
பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!


* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின ரூபம் கொண்டவர்கள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள்! - யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும்! எதிர்த்து செங்குத்தாய் நடக்காது! அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறித் "தான்" என்று எழுந்து நடக்காது!
அதே போல் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் இருவரும்! ஆனால் நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
அவருக்கு ஆற்றங்கரை கூட இடம் தான்! மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! இவருக்கோ தூண் கூட இடம் தான்! விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!

* வடநாட்டிலும் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!

* நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!

* எம்பெருமான் கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!

* பிள்ளையாரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "கம்"; ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "ஹம்"! கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.


பொதுவாகச் செயல் துவங்கும் முன்னர் விநாயகரை வணங்குதல் எல்லாருக்கும் தெரியும்! ஆனால் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை! அதான் அடியேன் இங்கு சொல்லி வைத்தேன்!
இராமாயணத்திலும், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான்! நன்றி சொல்லி மாளுமா நன்றி ஒன்று வேண்டாதானிடம்?

பிரணவ மந்திரம் ஓதி, ஜீவன் மண்ணுக்கு வருகிறது! - அது ஐங்கர (விநாயக) சொரூபம்!
அனுமனின் ராம மந்திரம் ஓதி, ஜீவனை மண்ணில் இருந்து அனுப்புகிறார் காசி நகர் ஈசன்! - அது அனுமத் சொரூபம்!
ஆதியில் தொடங்கி, அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி! அடுத்த முறை சென்னை மத்திய கைலாசத்தில் தரிசியுங்கள்!

இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!
ஆதியில் பிடித்து அந்தத்தில் முடித்த கதை!
இனி பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காய் முடிஞ்சி போச்சி-ன்னு சொல்லாதீங்க! :)

அனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

1. கொழுக்கட்டைகள் பெற வேண்டுமென்றால் நேற்றே இந்தப் பதிவை இட்டிருக்கணும்! ஆனால் வாரயிறுதி அலைச்சலில், காய்ச்சல் பிடித்துக் கொண்டது போல! இன்று அலுவலகத்தில் இருந்து மதியமே வந்து, பதிவை எழுதிட்டு, இதோ சீக்கிரமே தூங்கச் செல்கிறேன்! :)

2. வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டதால், ரோமாயணம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை! தசாவதாரம் போல் தள்ளிக் கொண்டே போகிறது! Sorry! :)

29 comments:

  1. அன்னை மைந்தனையும் அஞ்சனை மைந்தனையும் பற்றி அருமையான பதிவு. படங்களும் அருமை. நன்றி கண்ணா.

    உடல் நலத்தை கவனிச்சுக்கோங்க!

    ReplyDelete
  2. முடிக்கும் போது ஹனுமானுக்கு நன்றி கூற வேண்டும் என்பது புதிய தகவல். ஆஞ்சனேயர் சன்னதியில் தன்னுடைய பெயரை சொல்வதை விட 'ராம ராம' என்று சொல்வதையே அவர் விரும்புவார் என்று கூறுவர். அப்படி ஒரு ராம பக்தி.

    ஒரு நல்ல பதிவை கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  3. இதுதான் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையா!! சொன்னதுக்கு நன்றி தல. உடம்பைப் பார்த்துக்குங்க!!

    ReplyDelete
  4. ஆத்யந்த பிரபு போட்டோ ஏற்கனவே பார்த்துள்ளேன், ஆனால் விவரங்கள் எதுவும் தெரியாது.. இன்று தெரிந்து கொண்டேன்..

    ReplyDelete
  5. //நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான்! - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))
    //

    உங்களுக்குமா !!!! . அதனால் தான் இப்போ எல்லாம் அடிக்கடி பதிவி போடாம ஓரமா நின்னு வேடிக்க பார்க்கிற மாதிரி தெரியுது.

    பதிவில் பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன். இதுதான் தான் பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிய கதைங்களா?.

    ReplyDelete
  6. // Anandha Loganathan said...//
    வாங்க அனந்த லோகநாதன்!

    //இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))//

    இது சும்மா விளையாட்டுக்குச் சொன்னது! Kummi is part of the game; இதுக்கெல்லாம் போயி ஓதுங்க முடியுங்களா? :)
    தீதும் நன்றும் பிறர் தர வாரா! நாம் நாமாகவும் இருப்போம், நட்பாகவும் இருப்போம்-ன்னு இருந்தா, எப்பவும் சுகம் தான்!

    //அதனால் தான் இப்போ எல்லாம் அடிக்கடி பதிவி போடாம ஓரமா நின்னு வேடிக்க பார்க்கிற மாதிரி தெரியுது//

    சேச்சே!
    அப்படி எல்லாம் இல்லீங்க! பணிச்சுமை அதிகம்! வீட்டுக்கு வருவதும் லேட் ஆகிறது! ஓர்க்குட் பக்கம் கூடப் போக முடிவதில்லை! :)

    அடியேன் வலையில் பதிவது பொழுதுபோக்குக்கும் இல்லை! எல்லாம் தெரிஞ்சதாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளித்தனத்துக்கும் இல்லை!

    இறைவனை விட, அவன் குணானுபவங்களைச் சக அடியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் என்பது ஒரு கைங்கர்யம்!

    இந்தக் குணானுபவத்துக்காகத் தான் ஆஞ்சநேயப் பெருமானே, இராமனுடன் செல்லாமல், இராம பக்தர்கள் இருக்கும் இடத்தில் தங்கிக் கொள்கிறார்!

    அடியேன் கடன் (எந்தச் சூழலிலும்) பணி செய்து கிடப்பதே! :)

    ReplyDelete
  7. //கவிநயா said...
    அன்னை மைந்தனையும் அஞ்சனை மைந்தனையும் பற்றி அருமையான பதிவு//

    நன்றிக்கா!
    மத்ய கைலாசம் கோயிலுக்குப் போயிருக்கீங்களா?

    //உடல் நலத்தை கவனிச்சுக்கோங்க!//

    ஆபீஸில் நல்லாவே கவனிச்சிகிறாங்க! இன்னிக்கி காலையில் Fresh corn & bean soup :)

    ReplyDelete
  8. //Expatguru said...
    முடிக்கும் போது ஹனுமானுக்கு நன்றி கூற வேண்டும் என்பது புதிய தகவல்//

    ஆமாங்க நிறைய பேருக்குத் தெரியாது தான்!

    //ஆஞ்சனேயர் சன்னதியில் தன்னுடைய பெயரை சொல்வதை விட 'ராம ராம' என்று சொல்வதையே அவர் விரும்புவார் என்று கூறுவர்//

    இராவணன் சபையில் தூதனுக்குரிய பணிவு இன்றி ஆணவத்துடன் பேசினார்! அத்தனை குரங்கினத்தையும் விடுத்து, தன் பக்தியை மட்டுமே முன்னிறுத்திக் கொள்ளும் சுயநலப் போக்கு கொண்டவர் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டும் எழுந்ததாம்! :)

    குற்றம் சுமத்தியவரும் சாமான்யர் அல்ல! இராமனுக்கு அன்பர்! இதைக் கேட்டு வாயடைத்துப் போனான் அன்பு சால் அனுமன்! இதை எப்படி எதிர் கொண்டான் என்பதை இன்னொரு பதிவில் சொல்கிறேன்! கைங்கர்யம் பரமம் பரம் என்பதற்கு அதுவே சாரம்!

    ReplyDelete
  9. //இலவசக்கொத்தனார் said...
    இதுதான் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையா!!//

    அதே அதே!

    கொத்ஸ்
    பழமொழிகளை எல்லாம் வச்சி ஒரு ரீபஸ் போடறது? ரொம்ப நாளாச்சே விளையாடி!

    ReplyDelete
  10. ஆபீஸில் நல்லாவே கவனிச்சிகிறாங்க! இன்னிக்கி காலையில் Fresh corn & bean soup :)//

    அதையும் கம்கணபதிக்கும், ஆஞ்சனேயருக்கும் கைகாட்டி விட்டுச் சாப்பிடுங்கோ ரவி.சரியாகிவிடும்.

    ReplyDelete
  11. //Raghav said...
    ஆத்யந்த பிரபு போட்டோ ஏற்கனவே பார்த்துள்ளேன், ஆனால் விவரங்கள் எதுவும் தெரியாது.. இன்று தெரிந்து கொண்டேன்..//

    ரொம்ப லயிச்சி எல்லாம் சொல்லலை ராகவ்! ஜூர வேகத்தில் ஏதோ மேலோட்டமாய்த் தான் சொல்லியுள்ளேன்! அனுமத் சூட்சுமம் இன்னும் நிறைய இருக்கு! சொல்லி மாளாது! உணர்ந்தால் தான் முடியும்!

    ReplyDelete
  12. //வல்லிசிம்ஹன் said...
    அதையும் கம்கணபதிக்கும், ஆஞ்சனேயருக்கும் கைகாட்டி விட்டுச் சாப்பிடுங்கோ ரவி.சரியாகிவிடும்//

    ஹா ஹா ஹா
    அப்படியே செய்கிறேன் வல்லியம்மா!

    கம் கணபதயே ஸ்வாஹா!
    ஹூம் ஹனுமதே ருத்ராத்மாகயே ஸ்வாஹா!
    :)

    ReplyDelete
  13. pillaiyarin bIjam 'aim' illai; 'gam'. 'aim' saraswathi bIjam.

    ReplyDelete
  14. சமீபத்தில் நான் இதற்கு வேறு விளக்கம் படித்தேன். அதாவது இராமாயணத்தை வால்மீகி சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுத்தாணி பிடித்து எழுத ஆரம்பித்து, ராமர் பட்டாபிஷேகத்தின் போது சீதை அனுமனுக்கு (i.e. குரங்குக்கு) முத்து மாலை பரிசளிப்பதில் முடிவதால் பிள்ளையார் (எழுத்தாணி) பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொல் வழக்கு வந்தது என்று படித்தேன்.

    எது எப்படியானாலும், பிள்ளையாரும் கொழுக்கட்டையும் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே :)

    ReplyDelete
  15. தல

    இம்புட்டு விஷயம் இருக்கா!!!!...வழக்கம் போல நன்றி ;))

    \\சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க?\\

    போயிருக்கேன்...பார்த்திருக்கேன் ஆனா விஷயம் இதுதான்னு தெரியாது..;)

    ReplyDelete
  16. //Anonymous said...
    pillaiyarin bIjam 'aim' illai; 'gam'. 'aim' saraswathi bIjam//

    சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா!
    பதிவிலும் திருத்தி விடுகிறேன்!

    கம் என்ற மூலமான பீஜாட்சரத்தோடு, லம் போன்ற அட்சரங்களும் சேர்ந்து கலெளம் என்ற அட்சரமும் விநாயகருக்கு வழங்கப் பெறும்!

    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே
    வர வரத சர்வ ஜனாமே வசமானாய ஸ்வாஹா!

    கூடவே ஹ்ரீம், ஸ்ரீம் என்ற மற்ற தேவதைகளின் அட்சரங்களும் சேர்ந்தே அல்லவா விநாயகருக்கு வழங்கப்படுகிறது? இதனால் தான் சற்று குழம்பிப் போனேன்.
    ஏன் இப்படி என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

    ReplyDelete
  17. //வினோத் said...
    வாங்க வினோத்

    //அதாவது இராமாயணத்தை வால்மீகி சொல்லச் சொல்ல பிள்ளையார் எழுத்தாணி பிடித்து எழுத ஆரம்பித்து//

    இது மகாபாரதம்! வியாசர் சொல்ல விநாயகர் எழுதுவது!
    இராமாயணம் அல்ல! :)

    //ராமர் பட்டாபிஷேகத்தின் போது சீதை அனுமனுக்கு (i.e. குரங்குக்கு) முத்து மாலை பரிசளிப்பதில் முடிவதால்//

    முத்து மாலையுடன் மட்டும் முடியவில்லை! இன்னும் தொடர்கிறதே :)

    //பிள்ளையார் (எழுத்தாணி) பிடிக்க குரங்கில் முடிந்தது என்ற சொல் வழக்கு வந்தது என்று படித்தேன்//

    ஹிஹி!
    கற்பனை அருமை என்றாலும், பொருத்தியும் பார்க்கும் போது, இது நிற்காது அல்லவா! சாத்திரப் பிரமாணங்கள் தேவை! அதனால் சான்றோர்களுடன் ஒரு முறைக்கு சரி பார்த்து விட்டு, இது போன்ற விளக்கங்களை அளிப்பது நல்லது என்று கருதுகிறேன்!

    //எது எப்படியானாலும், பிள்ளையாரும் கொழுக்கட்டையும் இருக்கும்வரை எனக்கு மகிழ்ச்சியே :)//

    எனக்கும் தான்!
    பிள்ளையாரே கொழுக்கட்டை போல் உருவத்திலும் இனிப்பிலும், இனிப்பவர் தானே! :)

    ReplyDelete
  18. ஆதியந்தனை பார்க்கும் பாக்கியம் கிடைச்சது, மத்திய கைலாசத்தில்.

    நம்ம வீட்டில் முகப்பில் பிள்ளையார் பிடிக்க அனுமான் வந்துட்டார்:-)))

    ReplyDelete
  19. நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர். மத்திய கைலாசத்திற்கு அடிக்கடி போவதுண்டு. இப்போதும் சென்னை செல்லும் போதெல்லாம் போவதுண்டு. ஆதியந்த பிரபுவை பலமுறை தரிசித்திருக்கிறோம்.

    உடம்பைப் பாத்துக்கங்க. வேலையில ரொம்ப அழுத்தமா?

    ReplyDelete
  20. THAMAZ NAINA....VARA VARA UNODHA
    BLOG KURANGU PUDIKKA PILLIAR AYDICHU.....

    hA Ha ha hahhhhhaaaaaaaaaa

    Murali

    ReplyDelete
  21. //கோபிநாத் said...
    தல
    இம்புட்டு விஷயம் இருக்கா!!!!...வழக்கம் போல நன்றி ;))//

    வா கோபி!
    நான் கொஞ்ச விஷயம் தான் சொல்லி இருக்கேன்!
    கணபதி-அனுமன் தொடர்பு எல்லாம் மெளலி அண்ணா, கீதாம்மா போன்றவர்கள் வந்து சொன்னா இன்னும் விரியும்!

    //போயிருக்கேன்...பார்த்திருக்கேன் ஆனா விஷயம் இதுதான்னு தெரியாது..;)//

    அடுத்த முறை போகும் போது தெரிஞ்சிடும் அல்லவா? :)

    ReplyDelete
  22. //துளசி கோபால் said...
    ஆதியந்தனை பார்க்கும் பாக்கியம் கிடைச்சது, மத்திய கைலாசத்தில்//

    அருமை!
    உங்க யானை, உங்க கபீஷ் ஆச்சே டீச்சர்!!

    //நம்ம வீட்டில் முகப்பில் பிள்ளையார் பிடிக்க அனுமான் வந்துட்டார்:-)))//

    நீங்க பிள்ளையார் எலிக்கும் தோழர்! பூனை ஜேகே/ஜிக்குஜூவுக்கும் தோழர்! :)

    ReplyDelete
  23. //குமரன் (Kumaran) said...
    நல்லா விளக்கம் சொல்லியிருக்கீங்க இரவிசங்கர்//

    நன்றி குமரன்!

    //மத்திய கைலாசத்திற்கு அடிக்கடி போவதுண்டு. இப்போதும் சென்னை செல்லும் போதெல்லாம் போவதுண்டு. ஆதியந்த பிரபுவை பலமுறை தரிசித்திருக்கிறோம்//

    மத்திய கைலாசம் பித்ரு காரியங்களுக்கும் சிறந்த இடம் அல்லவா?

    //உடம்பைப் பாத்துக்கங்க. வேலையில ரொம்ப அழுத்தமா?//

    கொஞ்சம் மன அழுத்தம் தான் குமரன்!
    இப்போ ஓக்கே! From 103 to 99 deg!

    ReplyDelete
  24. // Anonymous said...
    THAMAZ NAINA....VARA VARA UNODHA
    BLOG KURANGU PUDIKKA PILLIAR AYDICHU.....
    hA Ha ha hahhhhhaaaaaaaaaa

    Murali//

    புரியலீங்க முரளி!
    குரங்கு புடிக்க பிள்ளை ஆனதா?

    தவறாக எழுதி இருந்தேன்-ன்னு நினைச்சீங்கன்னா, அடியேனை மன்னிச்சிக்கோங்க!

    ReplyDelete
  25. இங்கேயும் காய்ச்சலாத்தான் இருக்கு.

    மருந்து மூணு வேளையும் பதிவுவிருந்து மணிக்கொருதடவையுமா
    இருக்கேன்:-)

    ReplyDelete
  26. @டீச்சர்!
    //மருந்து மூணு வேளையும் பதிவு விருந்து மணிக்கொருதடவையுமா
    இருக்கேன்:-)//

    ஆகா
    இதுக்குப் பேரு காய்ச்சல் இல்லீங்க டீச்சர்! இதுக்குப் பேரு பாய்ச்சல்! :)

    உடம்பைப் பாத்துக்கோங்க டீச்சர்!
    வெறும் வயித்தோட மட்டும் தூங்கிறாதீங்க! அப்பறம் என்னைப் போல இன்னும் அதிகமாயிடும்!

    ReplyDelete
  27. மத்ய கைலாஷ் கோவிலுக்கு போனதில்லைங்க...அடுத்த முறை சென்னை செல்கையில் பார்க்கணும்.

    ReplyDelete
  28. நீங்க சொன்ன விளக்கம் அருமை.

    பிள்ளையார் பிடிக்க குரங்கா முடிஞ்ச கதை "மஹாபரதம்"ன்னு கேள்வி பட்டுருக்கேன்.

    பிள்ளையார் தன் கோம்பெடுத்து பிடித்து ஆரம்பிக்க, போர் முடிக்கும் சமயம் பார்த்தனின் தேர் கொடியில் இருந்த அனுமன் இறங்கி வர தேர் தீப்பிடித்து முடிய மஹாபாரதத்தை முடித்து வைத்ததாக விளக்கம் சொல்ல கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  29. எதற்கெடுத்தாலும் ஒரு கதையை இட்டுக் கட்டுகிற காலம் மலை ஏறிவிட்டது அய்யா!
    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு" என்கிற எமது குறள் சொல்லும் செய்தி எமக்குப் போதும் .
    ***
    சங்கி இதே ஆனைமுகத்தானையும் குரங்கு முகத்தானையும் மதவெறியின் சின்னங்களாகப் பயன்படுத்துகிற கொடுமை நடக்கிறது! இந்த இருவரும் கடவுளர் என்றால் அந்தக் கொலை வெறிக் கும்பலை இந்நேரம் சுட்டுப் பொசுக்கி இருக்கும்.
    தமிழ் மண்ணுக்குச் சற்றுபீம் பொருத்தம் இல்லாத புராணக் கதை இது! . .

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP