Saturday, January 14, 2012

கோதைத்தமிழ்30: தமிழில் 12 வித மாலை @raama.ki.ayya

மக்களே வணக்கம்!
இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!



கடந்த ஒரு மாதமாய், ஆடி ஆடி, அசைந்து அசைந்து...
துண்டெழுத்து வீதியான ட்விட்டரில்...
சிறப்புடன் வலம் வந்த தமிழ்த் தேர்...
இதோ நிலைக்கு வந்து விட்டது!

* நற்றமிழ் அறிஞர், நுட்பியல் பொறியாளர்,
* SPIC நிறுவன முன்னாள் மேலாண்மை இயக்குநர்...
* துறை சார் தமிழ் - அறிவியல் தமிழ் - சங்கத் தமிழ் என முழு வட்டம் சுழல் வல்லார்...
* இணையத் தமிழில் இணையிலா ஈடுபாடு காட்டுபவர்...
* பலரையும் தமிழ்ப் பெருமிதம் கொள்ளச் செய்பவர்...

ஆசான் இராம.கி ஐயா-வின் நிறைவு நாள் உரை!
கீச்சர்களின் தமிழ்த் தேருக்கு அணிகலன்! இதோ!
(குறிப்பு: ஐயாவின் பணி நிமித்தங்களால், அவர் எழுத்து உரையை வாசிப்பது, என் தந்தை மு. கண்ணபிரான் அவர்கள்)

30-thirupaavai-raamakiayya

நன்றி ஐயா!
உரை சால் உரையுடன், கீச்சர்களின் இந்தத் தமிழ் விழா நிறைந்தது மட்டிலா மகிழ்ச்சி!



பாசுரம்:
வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,


சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!

தை-01: "தை-ஒரு" திங்கள் என்னும் முதல் நாச்சியார் திருமொழி!

தையொரு திங்களும் தரை விளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்,
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்த அனங்க தேவா!


உய்யவும் ஆங்கொலோ? என்றுசொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்,
வெய்யதோர் தழல்-உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!




இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = தெரியல் (டரியல் அல்ல:)))))

தெரியல் = மாலை!
பல விதக் கதம்பமான மலர்களால், 'தெரிந்தெடு'த்துக் கட்டியதால் = தெரியல்!

தமிழ் மாலைகள் பல உண்டு!
* தொங்கல் = இரு புறமும் தொங்கும் மாலை
* தெரியல் = பல வண்ணப் பூவால் 'தெரிந்தெடு'த்துக் கட்டிய மாலை

* கண்ணி = ரெண்டு ரெண்டு பூவாய்த் தொடுத்த மாலை
* கோதை = கொண்டை/கழுத்தில் நெருக்கமாய்ச் சூடும் மாலை
* கோவை = ஊசியால் கோர்த்த மாலை

* தார் = வாழைத்தாரில் பூக்கள் சொருகிய மாலை (பெரும் அலங்காரத்துக்கு)
* படலை = பச்சை இலைகள+பூக்களால் தொடுத்த மாலை

* அலங்கல் = சரிகை/துணி சுற்றிய மாலை
* பிணையல் = பின்னல் போல் முறுக்கிக் கட்டிய மாலை

* சிகழிகை = தலை மாலை
* சூட்டு = நெற்றி மாலை
* ஆரம் = கழுத்து மாலை

இப்படி பலப்பல மாலையாய் மணக்கும் தமிழ் = நம் கோதைத் தமிழ்!


இந்தத் தமிழ்த் தேரினை இழுத்துக் குடுத்த ட்வீட்டர்கள் அனைவருக்கும் இனிய நன்றி! பந்தல் வாசகர்கள் அனைவருக்கும் பரவிய நன்றி!

நன்றி மட்டும் சொன்னால் போதுமா? கீச்சர்-ன்னா சும்மாவா?
இதோ அவள் நினைவாக, அவள் சூடிக் கொடுத்த மாலையும், பாடிப் பேசிய கிளியும்...உங்கள் பரிசாக...பரிசேலோ ரெம்பாவாய்!

எழுத்தாளர் சொக்கனும் & நானும் தோழன் ராகவனும் மட்டுமே பேசுவதாய் இருந்த பாசுரங்களை.....

இந்த மாதம் முழுதும்.....அனைத்து ட்வீட்டர்களும்.....அவரவர் இயல்பில் பேசிக் குடுத்து.....
ஒரு அழகிய தமிழ்ச் சூழலை உருவாக்கித் தந்த தமிழ்க் கீச்சர்களுக்கு என் பல்கால் நன்றி!

* அனைத்து ட்வீட்டர்களின் குரல்கள் இங்கே
= http://soundcloud.com/kryes/sets/tamiltwitter-paavaipodcast

ட்வீட்டர்களின் குரல், இது போலவே, தமிழுக்கும் மனிதநேயத்துக்கும் என்றும் ஒலிக்கட்டும்! வர்ட்டா?:)

கோதைத்தமிழ்29: What Time is சிற்றஞ்சிறுகாலே? @kryes

வணக்கம் மக்கா!
இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிறைவுறப் போகிறது.....நிலைக்கு வரப் போகிறது.....நாளை க்கு.....தைப்பொங்கல் நாளிலே!
அதுக்கு முன்னால, சின்னதா ஒரு warm down exercise:) யாரு பேசுறா இன்னிக்கி? நீங்களே கேளுங்க!:)

29-thirupaavai-kryes


சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!


இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: சிற்றஞ் சிறு காலையில் வந்து உன்னைச் சேவித்தோம்! உன் திருவடிகளையே பாடுகிறோம்! ஏன் தெரியுமா?

மாடு மேய்த்து உண்ணும் குடியில் பிறந்தோம் நாம் இருவரும்! என்னை நீ உன்னுடன் ஏற்றுக்கொள்! மாட்டேன்-ன்னு சொல்லக் கூடாது! மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேணும்!

ஏதோ நோன்பு-பறை ன்னு சடங்காச் செஞ்சோம்-ன்னு நினைச்சிக்காதே கண்ணா! எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்கும் நீ தான்! உனக்கு நான்-எனக்கு நீ!

இதைத் தவிர வேற எதுவும் எனக்கு வேணாம்!
அப்படியே வேற ஆசை எனக்கு வந்தாலும் அதை மாத்திருடா! அந்த ஆசையெல்லாம் எனக்கு வேணாம்! எனக்கு நீ தான்டா எல்லாம்!




இன்றைய எழிலான தமிழ்ச் சொல் = சிற்றஞ் சிறுகாலே!

காலை, சிறுகாலை, சிற்றஞ் சிறுகாலை
Morning, Dawn, PreDawn!

* காலத்தின் துவக்கம் = காலை (Morning)
* காலை-மாலை என ஒரு நாளை இரண்டாகப் பகுப்பதால் = பகல் (Noon)
* ஒவ்வொரு நிமிடமாகப் போவதால் = போது/ பொழுது

இப்படி, தமிழில் காலங்களின் பெயர்களும் காரணப் பெயர்களே!
காலை என்பது காலத்தின் துவக்கம்!
அது விடியலுக்கு முன்-பின் என இரண்டு வகைப்படும்!

சிறுகாலை, வைகறை, விடியல் என பல பெயர்கள் உண்டு! சிற்றஞ் சிறுகாலை = வைகறைக்கும் முன்னே!
நாளை, ஆறாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் நான்கு மணி நேரங்கள் என்பது தமிழ்க் காலக் கணக்கு!

* வைகறை 2:00 am - 6:00 am
* காலை 6:00 am - 10:00 am
* பகல் 10:00 am - 2:00 pm
(முற்பகல் - நண்பகல் - பிற்பகல்)
* எற்பாடு 2:00 pm - 6:00 pm
* மாலை 6:00 pm - 10:00 pm
* யாமம் 10:00 pm - 2:00 am

வள்ளுவரும், ஒரே குறளில், காலங்களைத் தொட்டுச் செல்வார்!
காலை அரும்பி, பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய் - (காமத்துப் பால்)

காதலில் விழுந்த ஆளுங்களுக்கு, காலங்களும் மாறி விடுகிறதாம்!
வைகறைத் துயில் எழு-ன்னு கூற்றுப்படி, வைகறையில் எழுந்திரிச்சிக்க முடியல! ஒரே கனவு!

* அதனால் விடியலில் பூக்க வேண்டிய பூ, காலையில் தான் அரும்பே விடுதாம்! = காலை அரும்பி
* பகல் முழுக்க, விரியலாமா வேணாமா-ன்னு குழம்பிக் குழம்பி...விரியத் தயாரா இருக்கு, ஆனா விரியல = பகலெல்லாம் போதாகி
* மாலையில், பறவைகள் தத்தம் துணையோடு சேர, கூட்டுக்குத் திரும்பும் வேளையில், அதைக் கண்டு ஏங்கி, பட்டு-ன்னு விரியுது = மாலை மலரும் இந்நோய்

இப்படிக் காதலால் காலமே மாறுது-ன்னு, காலம்+காதலை ஒரு சேரக் காட்டும் அழகுத் தமிழ்க் கவிதை!

நாளை நற்றமிழ் அறிஞர் இராம.கி ஐயாவின் உரையோடு, தைத்தமிழ் நன்னாளில், இந்தக் கோதைத் தமிழ்த் தேர் நிலைக்கு வரும்!

Thursday, January 12, 2012

கோதைத்தமிழ்28: ஓம் என்றால் என்ன? @FamousLadyTwitter

மக்கா வணக்கம்! இன்னிக்கி பேசப் போவது பிரபல பெண் ட்வீட்டர்! ஆனாப் பேரைச் சொல்லக் கூடாது-ன்னு எனக்கு உத்தரவு!:)

விடிய விடியக் கதை கேட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பா-ன்னு சொன்னாக் கூடப் பரவாயில்லை! ஆனா சின்னம்மா-ன்னு சொல்லலாமா? உத்தரவுக்குக் கீழ்ப்படிகிறேன்:))

ஆனா கடினமான Clue குடுக்கலாமாம்! என்னத்த குடுக்க?

* இவிங்க நல்லவுக, வல்லவுக, சேவல் பண்ணைச் சண்டை போடுபவக!
* துரைமாருங்க புத்தகமாவே படிச்சி, Status Update கீச்சிக் கீச்சியே பிரபலமானவங்க!
* கண்ணாலப் பேச்செடுத்தாலே காத தூரம் ஓடுவது போல் சீன் போட்டு, காதல் தூரம் ஓடுபவக....:))
* அப்பாவிகளான என்னையும், @4sn செ.வையும் அடிக்கடி வம்பு பண்ணுபவுக

Any More Difficult Clues??:) கண்டு புடிச்சாச்சா?:)))
அம்மிணி பேசுவதைக் கேளுங்க!
பாசுரத்தின் முதல் வரிக்கு மட்டுமே இத்தனை நுட்ப நுண்ணிய விளக்கம்! மத்த எல்லா வரிக்கும் குடுக்க ஆரம்பிச்சா?

28-thirupaavai-FamousLadyTwitter

நன்றி அம்மிணி!:) எங்க கிராமத்தின் சாயலை அப்படியே அணுகிப் பேசியமைக்கு!
கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்! பொங்கலுக்கு கிராமத்துக்கு போனது போல் ஒரு Effect இப்பவே கிடைச்சிருச்சி!:)




கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை "ஒன்றும்" இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,


உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்!


மேலோட்டமான பொருள்: கறவை மாடுகளுக்குப் பின்னாலேயே சென்று, காட்டை அடைந்து, அனைவரும் சேர்ந்து உண்போம்!
இப்படி, மாட்டை நாங்கள் முன் நடத்திச் செல்லாமல், மாடு எங்களைப் பின் நடத்திச் செல்கிறது! இப்படியான அறிவில்லா ஆயர் குடி!

அதில் நீ வந்து தோன்றினாயே கண்ணா! என்ன புண்ணியஞ் செய்தோமோ? குறை ஒன்னுமே சொல்ல முடியாத கோவிந்தனே!
நீ - உறவு - நான்! = இதை யாராலும் ஒழிக்க முடியாது! ஒழித்தாலும் ஒழிக்க ஒழிக்க ஒழுகும்! நம் உறவு என்னைக்கும் இருக்கும்!

ஏதோ ஆயர் குடிப் பசங்க, அறிவில்லாமப் பேசினா, அதையெல்லாம் மனசுல வச்சிக்காதேடா! நீயே எங்களுக்கு எல்லாமும்! நீயே பறை தருவாய்! எங்களை ஏற்றுக் கொள் பெருமானே!



இன்றைய எழிலான சொல் = உன் தன்னோடு-உறவேல்-நமக்கு!

என்னடா இவ்ளோ பெரிய சொல்லா?-ன்னு பாக்குறீங்களா? - இது தமிழ் மந்திரச் சொல்! ஓங்காரத்தைக் குறிப்பது!

ஓம் என்பது வடமொழி அல்ல! அது ஒரு ஒலிக் குறிப்பு மட்டுமே!
அது பல மொழிகளிலும் இருக்கு, சமணம், சீக்கியம் போன்ற சமயங்களிலும் இருக்கு! அதை, கோதை தமிழில் காட்டுகிறாள்!

முன்பு அப்பாவுக்குப் பாடஞ் சொன்ன என் முருகன், என்ன சொன்னான்? = யாரும் சொல்ல மாட்டாங்க!:)
பிரணவப் பொருள் சொன்னான், சொன்னான்-ன்னு சொல்லுவாங்களே தவிர, அது என்ன பொருள்-ன்னு மூச்சு விட மாட்டாங்க!
ஏன்னா ரகசியமாம்! வேதம் படிக்கறவா மட்டும் தான் தெரிஞ்சுக்கணுமாம்!:)

ஆனா, கோதையிடம் இந்தச் சட்ட திட்டம் எல்லாம் வேலைக்காவாது!
எல்லாரும் அவனை அடைய வேணும்-ன்னு நினைப்பவள்!
தான் நரகம் புகினும், மற்ற அனைவரும் திருநாடு புகுவார் அல்லவா என்று பின்னாளில், ஒருவரை, இதுவே கோபுரம் ஏறிப் பேச வைத்தது!

ஓம் = அ + உ + ம்
* அ = 'அ'வன்
* ம் = நா'ம்'
* உ = 'உ'றவு

அவனுக்கும் நமக்கும் உள்ள உறவு என்னைக்கும் இருக்கு! அதை அவனே நினைச்சாலும் ஒழிக்க முடியாது! = அதான் ஓம்!
வேதங்கள்/ தமிழ் மறைகளின் உயிர் நாடி = ஓங்காரம்! மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி...என்பர்!

* அம்மா மேல புள்ளைக்கு ஆத்திரம், நீயெல்லாம் அம்மாவா?-ன்னு புதுப் பொண்டாட்டி பேச்சில் மயங்கி அவளை மறுதலிக்கலாம்!
* புள்ளை மேல் அம்மாவுக்கு கோவம்! உன்னைப் போய் பெத்தேனே-ன்னு அழுவலாம்! ஆனா அம்மா-பிள்ளை உறவு? அதை அழிக்க முடியுமா?

அவ தொடர்பையே அறுக்கணும்-ன்னு, அவன் போய், ஆயிரங் கோடி செலவழிச்சாலும், தன்னோட DNAவை மாத்திக்க முடியுமா?:)

* எப்படி DNA-வை மாத்த முடியாதோ, அப்படி ஓங்காரத்தை மாத்த முடியாது! இறைவனாலும் முடியாத ஒரு செயல்-ன்னா, இது ஒன்னு தான்!
நமக்கும் அவனுக்குமான உறவை, அவனே நினைச்சாலும் அழிக்க முடியாது! ஒழிக்க ஒழியாது என்கிறாள் கோதை!

இதுவே முருகன் சொன்ன ஓங்காரப் பொருள்!
மத்த விளக்கமெல்லாம் சும்மா தத்துவம்! அ-உ-ம=பிரம்மா-விஷ்ணு-சிவன், மேல்பாகம்-வயிறு-அடிப்பாகம், குண்டலினி ன்னு எல்லாம் ஏதோ சொல்லுவாய்ங்க!
Juz Forget It! Those are Latter Day Hypes for Om!
ரொம்ப தத்துவமெல்லாம் இல்லாம, இறைவனிடம் நம் உறவை முன் வைப்பதே ஓம்! = தமிழ்ப் பொருள்!

ஓம் = அ+உ+ம் = அவன்-உறவு-நாம் 
= உன்தன்னோடு + உறவேல் + நமக்கு!

நாளை முத்தாய்ப்பாக நான் முடிக்கிறேன்!
30ஆம் பாசுரத்தை, நற்றமிழ் அறிஞர், இராம.கி. ஐயாவின் உரையோடு, இந்த #TamilTwittersPodcast என்னும் தமிழ்த் தேர், அசைந்து நிலைக்கு வரும்!

ஆன்மீகம் கடவுளுக்கு அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
அது தான் என்னைப் போன்றவர்களை எல்லாம் படிக்க வைக்குது. குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை -
//துன்பமும் ஓடணும்! வினையும் அழியணும்! அதுனால, அழகிய ரெண்டு கண்ணையும் நல்லாத் தொற! விரிய விரியத் தொற! தொறந்து தொறந்து எங்களைப் பாரு!//
இந்த மாதிரி நீங்க அனுபவிச்சு எழுதறீங்க பாருங்க இது தான்!

Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009
பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை, பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை, விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தாம் என்று, தம் மனத்தே வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தாள் உடைய பிரான் அடிக்கீழ், பிரியாது என்றும் இருப்பார்களே!

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...
//இந்தச் சங்கரன்-அடியேன் தான் இப்படி லோக்கலா எழுதறேன்-ன்னு முன்பு கம்ப்ளையிண்ட்டு! :)//

ஆழி மழை கண்ணா! என்ற ஆண்டாள் திருப்பாவையில் பற்பநாபன் கையில் ஆழி மோல மின்னி... என்ற வரியில் பற்பநாபன் என்றால் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்ரவனா என்று சொல்வீங்க!
இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோகல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP