Sunday, January 31, 2010

"அறிவு கெட்ட" பீஷ்மரா? "மகா ஞானி" பீஷ்மரா??

பந்தல் வாசகர்களுக்கு இனிய வணக்கம்!
தலைப்பைக் கண்டு என்னமோ ஏதோ-ன்னு பயந்துறாதீங்க! பீஷ்மர் கதாபாத்திரத்தை மிகவும் நேசிப்பவர்கள் ஓவரா டென்ஷனும் ஆவாதீங்க :)
.....இன்று பீஷ்ம ஏகாதசி! (26-Jan-2010)

பெரிய ஞான யோகியும்...சிறந்த கர்ம யோகியுமான...பீஷ்ம பிதாமகர்!
அவரோட நினைவு நாள் இன்று!

* பீஷ்மர் => "அறிவு கெட்ட" பீஷ்மரா?.... "பக்த பெரும்" பீஷ்மரா??
* நாம் எல்லாம் => "அறிவு கெட்ட" ஆத்திகர்களா? "அன்பு கொண்ட" நெஞ்சங்களா?? :)


பீஷ்மன் = தமிழில், வீடுமன்! ="பயங்கரமான சபதம் எடுத்தவன்"
என்ன சபதம்?-ன்னு தான் உங்களுக்கே தெரியுமே!

அப்பாவுக்கு ஒரு பெண்ணின் மேல் = கண்டதும் "காதல்"!
பெண்ணின் அப்பனுக்கோ...ராஜ்ஜியத்தின் மேல் = கண்டதும் "காதல்"!
தன் பெண்ணின் பிள்ளையே நாடாள வேண்டும்!
அந்தப் பிள்ளை இன்னும் பொறக்கக் கூட இல்ல! திருமணம் கூட நடக்கலை! அதற்கு முன்பே இப்படி ஒரு Family Planning! :)

அப்பாவைக் கலந்து பேசாமலேயே, இந்த நிபந்தனை பிள்ளை பீஷ்மனுக்கு ஓக்கே தான்!
ஏன்னா, அவனுக்கு அப்பா சந்தோஷம் மட்டுமே முக்கியம்!


ஆனால் அவனுக்குப் பின், அவன் வம்சத்தவர்கள் வந்து அரச உரிமை கொண்டாடினால்? - கணக்கு போட்டார் காதலியின் அப்பா!
அப்பப்பா! வீடுமன் விடு விடு என்று செய்தான் ஒரு சபதம்! சாதாரண சபதமா அது? பாஞ்சாலி சபதத்தை விடப் பெரும் சபதம்!

"நான் கல்யாணம் செய்து கொண்டால் தானே, எனக்கு வம்சத்தவர் உருவாவார்கள்? 
நான் கடைசி வரை பிரம்மச்சாரியாகவே இருக்கிறேன்! இது சத்தியம்! சத்தியம்!!"

ஒரு இளம் வாலிபன்...மீசையெல்லாம் ஆசை மணப்பவன்...பருவ வாலிபன் செய்யக் கூடிய சபதமா இது?
நாம செய்வோமா? ஃபிகருக்காக ஃபிரெண்டையே கழட்டி விட்டுற மாட்டோம்? :))

இளம் வயதிலேயே பீஷ்மனின் உயர்ந்த மனசு தெரிகிறது அல்லவா? எதையும் தாங்கும் இதயம் தெரிகிறது அல்லவா?
ஒரு "பிள்ளை" பீஷ்மன், "தியாகி" பீஷ்மன் ஆனான்! ஆக்கப்பட்டான்!

விஷயம் கேள்விப்பட்டு, இப்பேர்ப்பட்ட பிள்ளையை மெச்சிய அவன் தந்தை, அவனுக்கு ஒரு நல்ல வரத்தைக் கொடுக்கக் கூடாதோ?
"நீயாக விரும்பும் போது, மரணம் அடைவாய்" - என்ற ஒரு பெரிய சாபத்தை, வரமாகக் கொடுத்து விட்டார் அப்பா! :(

அது எப்படிச் சாபம் ஆகும்-ன்னு கேக்கறீங்களா?
* இறுதி என்னிக்கி-ன்னு தெரியாமலேயே மறைந்தால், அது மரணம்!
* இறுதி என்னிக்கி-ன்னு தாமே தெரிவு செய்து மறைந்தால், அது தற்கொலை அல்லவா? :)
இப்போ சொல்லுங்க...அந்த அப்பா கொடுத்தது வரமா? சாபமா??

தான் விரும்பும் போது தான் மரணம் என்றால்...எத்தனை பேர் "போக" ஆசைப்படுவோம்-ன்னு சொல்லுங்க பார்ப்போம்! :)
* ஆருயிர் நண்பனையே, ரெண்டு மாசம் கழிச்சிக் கூப்பிட்டுக்கலாம்...என்னும் சோம்பல் சக்ரவர்த்திகளாகிய நாம்...
* ஆருயிர் கவ்வும் எமனையா ரெண்டு மாசம் கழிச்சிக் கூப்பிடப் போறோம்? ஒத்திப் போட்டு ஒத்திப் போட்டே, ஓட்டி விட மாட்டோமா என்ன? :)

இறைவன், சில விஷயங்களை, Expiry Date ஒட்டாமல், நம்ம கிட்ட இருந்து "மறைத்து வைப்பது" - நம் நன்மைக்குத் தானோ???
ஆனால் பீஷ்மன் விஷயத்தில், இந்தக் கணக்கு தப்பியது! அன்று முதல்...தப்பு தப்பாய்த் தப்பியது!பீஷ்மன் = சபதம் = தியாகம்!
இந்த வட்டத்துக்குள்ளேயே அடங்கிப் போனான் ஒரு சிறு பிள்ளை!

பல நூல் படித்தவன்! = அறிவாளி!
பல வேல் பிடித்தவன்! = வெற்றி வீரன்!
"தன் மனசுக்கு எது நல்லது"-ன்னு படுதோ, அதன் படி மட்டுமே நடப்பவன்! - நல்ல குணம் தானே-ன்னு நினைக்கத் தோனுது இல்லையா? ஆமாம், நல்ல குணம் தான்! மேலே படிங்க!

யாருக்காகச் சபதம் செய்தானோ, அந்தத் தந்தை மறைந்து விட்டார்! கங்கைக் கரையில் சடங்குகள் செய்கிறான் பிள்ளை!
மந்திரங்கள் முழங்க அர்ப்பணிப்புகள் அளிக்கிறான்!
திடீரென்று மண்ணில் இருந்து தந்தையின் கரம் மட்டும் மேலே எழுகிறது.....அவன் அளிக்கும் அர்ப்பணிப்புகளைப் பெற!

பிள்ளையோ, அவன் மெத்தப் படித்த சாஸ்திர நூலில் சொல்லி இருப்பதால், தந்தையின் கைகளில் அளிக்காது, சடங்கிலே வைக்கப்பட்டிருக்கும் "குசம்" என்னும் புல்லில் அர்ப்பணத்தை விடுகிறான்!
ஆர்வம் துடிக்க எழுந்த தந்தையின் கரம், கைகளை உள்ளே இழுத்துக் கொள்கிறது!

இத்தகைய "நெறி மாறாத" பீஷ்மன்...வளர்ந்து வளர்ந்து...
"பீஷ்மர்" ஆனார்...
"பீஷ்மாச்சாரியர்" ஆனார்...
"பீஷ்ம பிதாமகர்" ஆனார்...

* ஒருவன் தன் செயல்களை மட்டும் தவறாது செய்து வந்தால் போதாதா? => கர்ம யோகி பீஷ்மர் உருவாகிறார்!
* ஒருவன் தன் ஞானத்தை மட்டுமே வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் போதாதா? => ஞான யோகி பீஷ்மர் உருவாகிறார்!

பரசுராமனுக்கே அடங்காத யோகி...
சகுனிக்கு அடங்கிப் போகும் "யோகி" ஆனார்!!!
:)))

ஆனால்........
ஒரு "மாடு மேய்க்கும் இடை மகன்"..."ஆயர்களின் ஆண்மையற்ற தலைவன்", அத்தினாபுரத்துக்குத் தூது வந்து-போனதில் இருந்து...
பீஷ்மரின் மனத்தில் என்னவோ ஒரு யோசனை....அரித்துக் கொண்டே இருக்கு!!


தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே...வாங்க...போவோமா போர்க்கோலம்?

அதோ......................
* கையிலே உழவு கோலும்,
* பிடிச்ச சிறுவாய்க் கயிறும்,
* தூசரிதமான திருமுடிக் கற்றையும்,
* தேர்த் தட்டிலே நாற்றின திருவடிகளுமாய்...

அவன் மேல் பீஷ்ம பிதாமகரின்...மின்னல் வேக அம்புகள்...
பறந்து பறந்து, பருந்து போல் அவன் முகத்தைக் கொத்த...

அன்று கன்னியர் வருடிக் கண்பட்ட முகம்,
இன்று புண்ணியர் வருடிப் புண்பட்ட முகமாய்ப் போனதே!!!

சாரதி: "பீஷ்மரே! எதிராளியை விட்டுவிட்டு, ஆயுதமில்லாத தேரோட்டி மேல் பாய்கிறீரே! என்னவாயிற்று உமக்கு? இது தான் தர்மமா?"

பீஷ்மர்: "கிருஷ்ணா, முடிந்தால் நீயும் ஆயுதம் எடுத்து, உன்னைக் காத்துக் கொள்ளேன்! இது ராஜாங்க யுத்தம்! இதில் ராஜாங்கம் மட்டும் தான் தர்மம்!"

சாரதி: "ஹா ஹா ஹா! நல்ல தர்மம் தான்! மூன்று தலைமுறை வயசாகியுமா உங்கள் ராஜாங்க ஆசை அடங்கவில்லை?"

பீஷ்மர்: "கிருஷ்ணா! எனக்கு ராஜாங்க "ஆசை" இல்லை! ஆனால் ராஜாங்க "தர்மம்" உண்டு!
எதுவாகிலும், அதை விட்டுக் கொடுக்கவே மாட்டேன்! என் தர்மம்! - அது மட்டுமே தர்மம்!"

சாரதி: "கிழட்டுச் சிங்கமே! "உம்" தர்மமா? எதைச் சொல்கிறீர்கள், "உம்" தர்மம், "உம்" தர்மம் என்று?* வயதான தந்தைக்கு பிள்ளையே மறுமணம் செய்து வைத்தது தான் தர்மமா?
* பின்னால், அதே தந்தையின் கைகளுக்குத் தர்ப்பணம் விட மறுத்தது தான் தர்மமா?

* பெண்களை, மணப்பவர்கள் தான் கைப்பிடிக்க வேண்டும்! ஆனால், மூக்கை நழைத்து...ஏதோ தம்பிக்குப் பொம்மை வாங்கிக் கொடுப்பது போல், மனைவி வாங்கிக் கொடுத்தீரே, அதான் தர்மமா?

* ஒன்றும் அறியாப் பேதைப் பெண் அம்பை! அவள் காதலன் வெல்லும் முன்னரே, நீர் திடுதிப்பென்று நுழைந்து பற்றிக் கொண்டீர்...
அவளுடைய காதலை அறிந்து கொண்ட பின்னால்...மாற்றி வாங்கி வந்துவிட்ட கடைச் சரக்கைப் போல் கை கழுவி விட்டீர்! அவளைக் குறுக்கும் நெடுக்கும் ஓட விட்டீரே - அதான் தர்மமா?

* அந்தப் பேதை முருகப்பெருமானிடம் மாலை வாங்கி, உத்திரத்தில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டாளே! - அதான் தர்மமா?

* மாத விலக்கான பாஞ்சாலியின் சேலையை, மான விலக்காகப் பற்றி இழுத்த போது...
இன்று "என்" தர்மம் "என்" தர்மம் என்று பேசும் இதே வாய்....அன்று அபலை தர்மம் பேசாது இருந்ததே! - அதான் தர்மமா?

* அவள் கடைசி நம்பிக்கையாக, போயும் போயும் உம்மை கையெடுத்துக் கும்பிட்டாளே!
அப்போது முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டு, "என்னை எதற்குக் கேட்கிறாய்?...போய் உன் கணவனைக் கேள்!" என்று பேசியதே, ஒரு வாய்! இதற்கு என் தொடை மீது வந்து உட்கார் என்று சொன்னவன் எவ்வளவோ மேல்!!

* அவள், அவள் கணவனைத் தான் கேட்க வேண்டும் என்றால்,
உன் தம்பி, அவன் மனைவியைத் தானே கேட்க வேண்டும்?
நீர் எதற்கு மூக்கை நுழைத்து "மனைவி வாங்கி" கொடுத்தீர்? தர்மம், உம் வசதிக்கு வசதி மாறுபடுமா?"

செய்கை அநீதியென்று தேர்ந்தாலும், சாத்திரம் தான்
வைகும் நெறியும் வழக்கமும் நீ கேட்பதனால்!
ஆங்கவையும் நின் சார்பில் ஆகா வகை உரைத்தேன்.
தீங்கு தடுக்கும் திறம் இலேன் - என்றந்த
மேலோன் தலை கவிழ்ந்தான்!!!பீஷ்மர்: "கண்ணா, என்னை வார்த்தையால் கொல்லாதே! ஆயுதத்தால் கொன்று விடு!
நான் செய்து கொடுத்த சத்தியம் அப்படி! அதை எப்படியும் காத்தே ஆக வேண்டும்! அதுவே "என்" கர்மம்!

சாரதி: "சத்தியமா? அப்படி பெருசா, என்ன சத்தியம் செய்து கொடுத்தீங்க பீஷ்மரே?"

பீஷ்மர்: "நான் எனக்கென்று வம்சத்தை வளர்த்துக் கொள்ளாது, இந்த அரியணைக்கே கடைசி வரை விசுவாசமாக இருப்பேன்!
இந்த வம்சத்தின் வளர்ச்சிக்காகவே என்னை அர்ப்பணித்துக் கொள்வேன்! - இதுவே பீஷ்ம சபதம்!"

சாரதி: "ஹா ஹா ஹா! நல்ல சத்தியம் தான்!
சரி.....இப்போ இந்த வம்சத்தின் "வளர்ச்சிக்கு" வழி கோலுகிறீர்களா? இல்லை இந்த வம்சத்தின் "அழிவுக்கு" வழி கோலுகிறீர்களா??
வம்சமே அழிந்தாலும் பரவாயில்லை! ஆளில்லா அரியணைக்கு விசுவாசம் காட்டப் போகிறீர்கள்? = இதானே உம்ம சத்தியம்?"


பீஷ்மர்: "ஐயோ கண்ணா!"

சாரதி: "உம் தம்பிகள், அவர்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைக்குப் பிள்ளைகள், என்று பல தலைமுறைகள் செத்து விட்டாலும்...
நீர் மட்டும் இன்னும் அட்டை போல் ஒட்டிக் கொண்டு இருப்பது இதற்குத் தானா? ச்சீ...

பீஷ்மர்: "ஐயோ...."

சாரதி: "உம் சத்தியம் - வம்சத்தின் வாழ்வுக்காகச் செய்யப்பட்டதா? இல்லை தாழ்வுக்காகச் செய்யப்பட்டதா?
யோசித்துப் பார்க்க மாட்டீர்களா? ஒரு வம்சமே வாழாது போனாலும் பரவாயில்லை! உமக்கு "உம்" சத்தியம் மட்டுமே முக்கியம்? அப்படித் தானே?"

பீஷ்மர்: "கண்ணாஆஆஆஆ!
நான் கர்ம யோகத்தில் இருப்பவன்! ஏது வந்தாலும் "என்" கர்மங்களை மட்டும் விடாது செய்து கொண்டே செல்பவன்! இதுவே "என்" தர்மம்!"

சாரதி: "கர்மங்களைத் **தான்** செய்வதாக நினைக்காமல் செய்வது  கர்ம யோகமா? இல்லை மூச்சுக்கு மூச்சுக்கு "என்" கர்மம், "என்" கர்மம் என்று உங்களை நீங்களே பிடித்துத் தொங்குவது கர்ம யோகமா, பீஷ்மரே?"

பீஷ்மர்: "ஆஆஆஆ!"

சாரதி: "ஹே பார்த்திபா, இந்தக் கிழச் சிம்மத்தின் கர்மயோகம் இனி மேலாவது அடங்கட்டும்! எடு காண்டீபம்! தொடு பாண்டீபம்!!"


கண்ணன் கருமுகத்தில் சிவ-முகம்! முகமெல்லாம் குருதி கொப்பளிக்கத் தேரோட்டுகிறான் தேவப் பெருமாள்!
தாத்தாவாயிற்றே என்று தயங்கும் பார்த்தன்.....

சாரதி: "ஹே! அர்ச்சுனா! வீண் வேடிக்கையா காட்டுகிறாய்?...இதோ நானே இறங்கி முடிக்கிறேன் அந்த மூர்க்க முதல்வன் பீஷ்மனை!

* போரிலே ஆயுதம் ஏந்தேன் என்று கண்ணன் செய்த சத்தியம் பொய்யாகட்டும்!
* போரிலே தோழனைக் காத்தான் என்ற கண்ணன் மனம் மட்டுமே மெய்யாகட்டும்!


ஹே பீஷ்மாஆஆஆ....
சத்தியம் தவறிய கண்ணன்...இதோ உன் முன்னே!"

தேர்த் தட்டிலே, ஆசன பத்மத்திலே,
அழுத்தின திருவடிகள், எகிறிக் குதிக்க...
கலைந்த மயிரிலே புழுதிகள் அளைக்க...
கச்சையின் ஆடையோ காற்றிலே பறக்க...

அறிவுற்று, தீ விழித்து,
வேரி மயிர் பொங்க,
எப்பாடும் பேர்ந்து...உதறி....
மூரி....நிமிர்ந்து....முழங்கி....
புறப்பட்டான்...புறப்பட்டான்...புறப்பட்டான்...

"சத்தியம் தவறிய கண்ணன்" கைகளில், சத்திய சொரூபமான சக்கரம் சுழல்கின்றதே!

(எதற்கும் கலங்காத யோகி பீஷ்மர், இன்று கண்ணன் கோலத்தைக் கண்டு, மனத்தால் கேவுகிறார்...உடல் நடுங்குகிறது....)
எம்பெருமானே வருக! என் கண் வருக! எனது ஆருயிர் வருக!
சேத தண்ட வினோதா நமோ நம! தீர சம்ப்ரம வீரா நமோ நம!


தனக்குப் பொய்யனே! = தன் அடியார்க்கு மெய்யனே!!
சரணாகதம்! அடியேன் உனக்குச் சரணாகதம்!!

பீஷ்மர்: "கண்ணாஆஆஆஆஆ! இன்று தான் தெரிந்து கொண்டேன்! இன்று தான் புரிந்து கொண்டேன்!
"என்" தர்மம், "என்" தர்மம் என்று இது நாள் வரை....எனக்குள் மட்டுமே ஒழிந்த என்னை......

இன்று தோழனின் உயிர் காக்க, "உன்" சத்தியத்தையும் பொய்யாக்கத் துணிந்து, "என்" தர்மம் என்றால் என்ன என்று உணர்த்தி விட்டாய்!

அர்ச்சுனன்: "ஐயோ...கண்ணா வேண்டாம்! வேண்டாம்! உனக்கு எதற்கு இந்த அவப் பெயர்? இது நாள் வரை எங்களுக்காக நீ வாங்கிக் கட்டிக்கிட்ட சாபங்களே போதும்! அவரை விட்டு விடு! நான் பார்த்துக் கொள்கிறேன்! காரேறு கண்ணனே, தேரேறு! நீ தேரேறு!"


கண்ணன்: ஹே அர்ஜூனா! பொறு! உனக்கு ஒருவரை நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்!

"ஐயா, ஆயுசுக்கும் உங்கள் வீட்டுக் கிணற்றிலே நீர் இறைத்து, என் நன்றியைச் செலுத்துவேன் என்று சத்தியம் செய்தானாம் ஒருவன்!

ஒரு நாள் அந்த வீட்டுக் குழந்தை தவறிக் கிணற்றிலே விழுந்து விட்டது! அதைப் பார்த்து விட்டு.......

அப்போதும் விடாமல் தன் சத்தியம் தன் சத்தியம் என்றே நீர் இறைத்துக் கொண்டு இருந்தானாம் அந்தச் "சத்திய" புருஷன்!

அவன் ஒரு "கர்ம" யோகி! அவன் பெயர் பீஷ்மன்!
அவனுக்கு சத்தியம் தவறிய கண்ணனின் வணக்கங்கள்
!"

பீஷ்மர்: "ஐயோ...ஐயோ....கண்ணாஆஆஆஆஆ!"

கண்ணன்: "யாரங்கே? கண்ணனின் புனிதமான தேரிலே, ஒரு திருநங்கை ஏறப் போகிறாள்!
அவளுக்குத் தேரோட்டுவதில் இந்தக் கண்ணன் பெருமைப் படுகிறான்!
இதை விடாப்பிடிக் கர்ம-ஞான சாஸ்திர யோகியான பீஷ்மர் உணரட்டும்!
இவர் மட்டுமல்ல! இன்னும் பலப் பல விடாப்பிடி பீஷ்மர்கள் எல்லாம் உணரட்டும்!"


அவன் தூக்கிய சக்கரத்தால்......அவர் மனத்திலே "சரணம்" கனிந்தது!

ச்சே...அடியவன் ஒருவனுக்காக...பெருமான் தன் "தர்மத்தையே" விடத் துணிந்தானே!
நானோ, யாருக்கும் பயனில்லாமல், என் "தர்மத்தை" மட்டுமே இது நாள் வரை பிடிச்சி, தொங்கிக் கொண்டு இருந்தேனே!

குலத்தின் மானம் காக்கத் தானே சத்தியம் செய்தேன்?
ஆனால் அன்று அவள் சேலை பறி போன போது, குலத்தின் மானமே ஒட்டு மொத்தமாய்ப் போச்சே!
நான் எதைக் காத்தேன்? - "என்" சத்தியத்தையா? "குலத்தின்" மானத்தையா??


எது தர்மம்?
பக்கத்து வீட்டுக் குழந்தையின் சங்கிலி, என் வீட்டு வாசலில் விழுந்து விட்டது! கீழே விழுந்த பொருள் தானே? நைசாக எடுத்து வந்து விடு என்று என் அப்பா சொல்கிறார்!
- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை! பித்ரு வாக்ய பரிபாலனம்! அதுவா தர்மம்??

எது தர்மம்?
* மாதா பிதா குரு தெய்வம் என்பதே தர்மம்! => பிரகலாதன் அதர்மம் செய்தவனா?
* இறைவன் தலையில் நம் கால் தூசு படக் கூடாது! => கோபிகைகள் அதர்மக்காரிகளா?


தனக்குப் பொய்யன்! தன் அடியார்க்கு மெய்யன்!
அவன் எங்கே? நான் எங்கே?
நான் ஏன் இப்படி யோசிக்காமல் போனேன்?


எது தர்மம்?
* "என்" கர்ம யோகத்தில் மட்டுமே அடங்கிப் போய் விடுவதா?
* "என்" ஞான யோகத்தில் மட்டுமே அடங்கிப் போய் விடுவதா?
* என் தர்மத்துக்கு நான் இருப்பதா?? அவன் தர்மத்துக்கு நான் இருப்பதா??

- இப்படியெல்லாம் ஒரு கர்ம யோகி, ஞான யோகி யோசிக்கத் தொடங்கி விட்டார்!


அன்று வரை பீஷ்மர் என்பவர்
= போராளி, அரசியல் வித்தகர், பெண்களைச் சிறையெடுப்பவர், சபதக்காரர், நிர்வாகி, யோகி...என்று மட்டுமே உலகம் அறிந்து வைத்திருந்தது!

இன்றோ பீஷ்மர் என்பவர் = "தன்"-னை விடுத்து, "அவன்"-ஐப் பற்றிக் கொண்டார்!

* உலகமே துதித்து மகிழும் விஷ்ணு சகஸ்ரநாமம் என்பதற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டார்!
* ஆசார்யர்கள் துதித்து மகிழும் பீஷ்ம ஸ்துதி என்பதற்குச் சொந்தக்காரர் ஆகி விட்டார்!
* அவர் இறக்கும் தறுவாயில், அவர் மோட்சம் புகுவதைக் காண வேண்டுமே என்று கண்ணன் அரக்க பறக்க ஓடி வருகிறான்! பீஷ்மரை நாடி வருகிறான்!

பீஷ்மோ உவாச:
ஜகத் ப்ரபும் தேவ தேவம், அனந்தம் புருஷோத்தமம்!
ஸ்துவன் நாம சகஸ்ரேன...புருஷ சத தோதிதா
ஏஷமே சர்வ தர்மானாம்! தர்மாதிக தமோமத:
பவித்ரானாம் பவித்ரம்யோ, மங்களானாம் ச மங்களம்!

ஏஷமே சர்வ தர்மானாம்! = அவன் தர்மமே பரம தர்மம்!
என் தர்மம் என்று ஒன்றில்லை! அவன் தர்மத்துக்கே நான்!

"மகா ஞானி" பீஷ்மர், தன்னை ஒப்புக் கொண்டார்!
"அறிவு கெட்ட" நான், என்னை ஒப்புக் கொள்வேனா?
என்னைப் பின்னே தள்ளி, அவனை முன்னே தள்ளுவேனா?
அவன் "உள்ள உகப்புக்கு" இருப்பேனா?

* நான் = என் சுயநல ஆசைக்காக, முருகன் மேல்...குடம் குடமாய் பால் கொட்டும் ஆத்திகனா?
* நான் = அவன் சிலையின் அவல நிலை கண்டு, ஐயோ முருகாஆஆஆ வேணாம்...ரெண்டே கண்-துளி சொட்டும் காதலனா?


என் ஆசைக்கு அவனா? = அவன் ஆசைக்கு நானா??
பீஷ்மர் திருவடிகளே சரணம்!
Read more »

Friday, January 29, 2010

நரசிம்ம சரணாகதி - 1


ரங்கனின் பெருமைகளைப் பேசிக் கொண்டே வந்த பெரியாழ்வாருக்கு, தன் மனம் ஐம்புலன்களிலே சென்றதைக் குறித்து வெறுப்புக் கொண்டு, 'என் பிழையைப் பொறுக்க வேண்டும்; எனக்கு அருள் செய்ய வேண்டும்' என்று, வாக்குத்தூய்மை என்ற திருமொழியின் மூலம் அரங்கனை வேண்டுகின்றார்.

திருமொழியின் 9-ஆம் பாசுரத்தில், நரசிம்மனை அழைக்கிறார்.

***

நம்பனே! நவின்றேத்த வல்லார்கள்* நாதனே! நரசிங்கமதானாய்!*
உம்பர்கோன்! உலகேழுமளந்தாய்!* ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி*

கம்ப மா கரி கோள் விடுத்தானே!* காரணா! கடலைக் கடைந்தானே!*

எம்பிரான்! என்னை ஆளுடைத்தேனே!* ஏழையேன் இடரைக் களையாயே.
வாக்குத்தூய்மை 5-1-9

நம்பத் தகுந்தவனே! நாவினால் அவனை வணங்குபவர்களுக்கு அன்பனே! நரசிம்ம அவதாரம் செய்தவனே! தேவர்கள் தலைவனே! ஏழு உலகங்களையும் அளந்தவனே! பிரளய காலத்தில் இருந்தவனே! முன்பு சக்கரத்தை ஏந்தி, நடுங்கும் பெரிய யானையின் துயர் நீக்கியவனே! உலகப் படைப்புக்குக் காரணமாய் இருப்பவனே! கடலைக் கடைந்தவனே!

எனது தலைவனே! அடிமையான என்னை ஆளும் போக்கியம் உடையவனே! இந்த ஏழையின் துன்பத்தை நீக்குவாயாக!

(நவின்று - பயிற்சி செய்து; உம்பர் - தேவர்கள்; ஊழி - பிரளயம்; ஆழி - சக்கரத்தாழ்வான்; கம்பம் - நடுக்கம்; மா கரி - பெரிய யானை; கோள் - துயரம்; காரணன் - படைப்புக்குக் காரணமானவன்)

***

மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் இறைவனின் திருவிளையாடல்களைக் போல இருக்கும். ஆனால், உண்மையில் இந்தப் பாசுரம், சரணாகதிப் பாசுரம்!

நாம் ஒருவரிடம் சரணடைய வேண்டுமானால், நமக்குத் தான் சில குணங்கள் வேண்டும் என்று நினைக்கிறோம்! ஆனால், யாரிடம் சரணடைகிறோமோ அவருக்கும் சில குணங்கள் (9) இருக்க வேண்டும்!

இந்த குணங்களை, கதைகள் மூலம் (நமக்கு?!) சொல்லி, 'இந்த குணங்கள் உன்னைத் தவிர வேறு யாரிடமும் இல்லை; எனவே தான் உன்னைச் சரணடைந்தேன்! எனக்கு அருள் செய்!' என்கிறார் பெரியாழ்வார்!

ஒரு கதை (அடியேன் நேரிலே கண்டது) கேளுங்கள்!

***

ரு நடுத்தர வயது அப்பா, தன் மகனுக்கு, Inspector, சிபாரிசைத் தேடிச் செல்கிறார். கொடுக்க வேண்டியதைக் கொடுத்தவுடன், சிபாரிசு, உத்தரவாதம் கொடுக்கிறது. நிம்மதியுடன் வீட்டிற்கு வருகிறார் அப்பா.

மனைவியின் மந்திரத்திற்குப் பிறகு, இருவருக்கும், 'சிபாரிசு, வேலை வாங்கித் தருமா?' என்ற சந்தேகம்! 'எதற்கும் இருக்கட்டுமே!' என்று, இம்முறை, மனைவி, தன் அண்ணன் மூலம் இன்னொரு சிபாரிசைத் தேடிச் செல்கிறார். அங்கும், 'கவனிப்பு' நடந்தவுடன், அதே வேலைக்கு, இந்தப் புதிய 'சிபாரிசு' உத்தரவாதம் கொடுக்கிறது.

தம்பதியருக்கு, இரட்டிப்பு நிம்மதி! 'இவர் வாங்கித் தராவிட்டாலும் அவர் வாங்கித் தருவார்' என்று!

இரு சிபாரிசுகளும், இருக்கும் ஒரே Post-க்குப் போட்டி போட, சிபாரிசுகளுக்குள் Ego தலை விரித்தாடியது! Ego பிரச்சனை முற்றி, Egg பிரச்சனையாக மாறியது! பின்னர் நடந்த சமரசமாக, முதலில், அந்தப் பதவிக்கான Appointment போடப் பட்டது.

சில மாதங்கள் கழித்து, இரு சிபாரிசுகளின் 'பெரிய மேலிடம்' உள்ளே புகுந்து, இன்னொருவனுக்கு அந்த வேலையைப் போட்டுத் தந்தது! இது தான் விதி என்பதோ?

இப்போது, அந்தத் தம்பதியர் இருவரும், சிபாரிசுகளிடம் 'கொடுத்ததை' மீட்க நடையோ நடை என்று அலைகின்றனர்!

காரணம்? முதல் சிபாரிசு, நம்பத் தகுந்தது அல்ல (இரண்டாவதும் தான்)! முதல் சிபாரிசு காரியத்தை முடிக்கும் என்பதில், தம்பதியினருக்கும் நம்பிக்கை இல்ல! நம்பிக்கை இருந்தால், இரண்டாம் சிபாரிசை நோக்கிச் செல்வானேன்? அந்தத் தம்பதியர் செய்ய மறந்தது:

இதனை இதனால், இவன் முடிப்பன்' என்று, பேசி, 'அதனை' அவன் கண் கொடல்!

***

நாம் சரணாகதி அடைபவர், முதலில் நம் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருக்க வேண்டும்!

பதிலுக்கு எதுவும் எதிர்பாராமல், நமக்கு உதவி செய்வதையே நோக்கமாகக் கொள்பவன், எம்பெருமான் ஒருவனே! அவனே, எல்லாக் காலங்களிலும், எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் நம்பத் தகுந்தவன்!

அதற்கு நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான் - அவனிடம் நாம் செல்ல வேண்டும்! அவ்வளவே!

(இப்படி, பதிலுக்கு எதுவும் எதிர்பார்க்காது, நம்பி வருபவர்களுக்கு, மழை போல் அருளைப் பொழியும் அவன் குணத்திற்கு, அவாப்த ஸமஸ்த காமத்வம் என்பர் வடமொழியில்)

சில சங்கடங்களால், அவனிடம் செல்ல இயலவில்லை என்றால் என்ன செய்வது?

***

ப்படி ஒரு சங்கடம் சிலருக்கு உண்டு! திரௌபதியைப் போல!

அந்தச் சபையினில் அவள் நிலைமை? இருந்தாலும் சங்கடம்! தன் மானம் பறிபோகிறது! வெளியே ஓடிச் சென்றாலும் மானம் போய்விடும் - கணவன்(கள்) சொல்லைத் தட்டியவள் என்று!

அவளால் முடிந்த மனித முயற்சி எல்லாம் செய்து விட்டாள் அவள்! கடைசியில், அவளுக்கு (நம் எல்லோருக்கும் தான்) இருக்கும் ஒரே வழி - அவனைக் கூப்பிடுவது தான்!

அவனை நம்பி, அவள் 'கோவிந்தா!' என்றழைக்க, அவன் வரவில்லை!

இந்தச் சின்னக் காரியத்துக்கு அவன் வரத் தேவையில்லை என்று நினைத்தான் அவன்! வந்தது, அவளுக்கு அந்த சமயத்தில் மிகத் தேவையானது! நீஈஈஈஈஈஈளமான புடவை!


'வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கவில்லை', 'நேரில் வந்து அழைக்கவில்லை', முறையாக அழைக்கவில்லை', அவள் கல்யாணத்திற்கு என்னை அழைக்கவில்லை', என் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வரவில்லை', ஏன் முதலிலேயே என்னைக் கூப்பிடவில்லை', போன்ற கோபம் எல்லாம் இல்லை அவனுக்கு!

கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக, உதவி செய்தான் அவன்!

***

திரௌபதிக்கு அன்று மானப் பிரச்சனை என்றால், பிரகலாதனுக்கோ, உயிர்ப் பிரச்சனை!

பின்னே, சிறிய மலையுடன், நாக பாசத்தால் கட்டி, கடலில் எறிந்தால், இருக்காதா என்ன!

அந்த சமயத்தில், பிரகலாதன் செய்யக் கூடியது - செய்தது - ஒன்று தான்! அவன் நாமத்தைச் சொல்வது! சொன்னான் அவன் - பிரகலாத ஸ்துதியை! உயிர் தப்பியது!

இப்படி, பிரகலாதனைப் போல், திரௌபதியைப் போல், நன்கு கற்று, அவன் பெயரைச் சொல்பவர்களுக்கு ('நவின்று ஏத்துவார்களுக்கு') அவன் பிடித்தவன் ('நாதன்') என்கின்றார் பெரியாழ்வார்!

ஒரு முறை அவன் நாமத்தைச் சொல்லப் பழகி விட்டால், பின் அவன் நம்மை விடமாட்டான்! அவன் அருளாவிட்டாலும், அவன் நாமம் அருளும்!

அவ்வளவு ஸெளலப்யம் (எளிமை) அவன்!

***

ரணியகசிபு போல் பகைவர்கள் இருந்து விட்டால், நம்பிக்கையும், எளிமையும் இருந்து விட்டால் மட்டும் போதாது! பலமும் வேண்டும்! மறங்கொள் இரணியனாயிற்றே அவன்! அவனையும் விளையாட்டாக அழிக்கக் கூடிய அசாத்திய பலம் வேண்டும்! அது இருப்பது, ஒருவனிடமே!

(இப்படி, பிறரால் செய்ய முடியாத காரியங்களை மிக எளிதில் செய்யும் குணத்திற்கு, ஸர்வ ஸக்தித்வம் என்ற வடமொழிச் சொல் உண்டு)!


மிகவும் நம்பத் தகுந்தவனாய், அதிக பலம் கொண்டவனாய் இருந்தான் நரசிம்மன்!

எனவே, அவதாரங்கள் பல இருந்தாலும், நரசிம்மனையே முதலில் அழைத்து, அவனிடம் சரணாகதி செய்கிறார் பெரியாழ்வார்!

***

இடம்: ஒரு அலுவலகம்
நேரம்: கெஞ்சல் நேரம்

(ஒருவன் தன் மானேஜரிடம் பேசிக் கொண்டிருக்கிறான்)

பணியாளன்: ஸார்! என்னுடைய இடம் சரியில்லை. வெளிச்சமே இல்லை. காற்றும் வருவதில்லை. எப்பொழுதும் யாராவது காபி குடிக்க வந்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் அரட்டை சத்தம் தாங்க முடியவில்லை.

மானேஜர்: வேறு இடம் இல்லை. இப்போதைக்கு Adjust செய்து கொள். எதற்கும் நான் என் மானேஜரிடம் பேசிப் பார்க்கிறேன். அடுத்த மாசம் பார்க்கலாம்.

(பணியாளன், தலையைச் சொறிந்து கொண்டே, 'SAAAAAAR' என்று இழுக்கிறான்)

மானேஜர்: இன்னும் என்ன வேண்டும்! சீக்கிரம் சொல்லு! எனக்கு நிறைய வேலை இருக்கிறது.

(’இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை’ என்று முனகிக் கொண்டே)

பணியாளன்: சார்! இந்த வருடம் எனக்கு சம்பள உயர்வே இல்லை! நான் தானே எல்லா வேலைகளையும் ஒழுங்காகச் செய்கிறேன்.

மானேஜர்: நானும் முயற்சி செய்தேன். ஆனால், உயர்வு பலருக்குக் கிடைக்கவில்லை. எதற்கும் இன்னொரு முறை சிபாரிசு செய்து பார்க்கிறேன். அடுத்த வாரம் வா!

பணியாளன்: ஸார்! எனக்கு 3 நாள் லீவு வேண்டும்!


மானேஜர்: இந்த மாதம் முடிய விடுமுறை கிடையாது! வேலை நிறைய உள்ளது. வேறு பலர் லீவில் உள்ளனர். நீயும் போய்விட்டால் நான் தான் எல்ல வேலையும் செய்ய வேண்டும்!

பணியாளன் ('அப்படியாவது நீயும் வேலை செய்' என்று முனகிக் கொண்டே): சார்! இது ரொம்ப Urgent! வீட்டில் பண்டிகை. கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும்.

மானேஜர்: என்ன முனகல்!

பணியாளன்: ஒன்றும் இல்லை! உங்களைப் போல் தயாள குணம் யாருக்கும் வராது என்று சொன்னேன் ஸார்!
மானேஜர்: இப்போதைக்கு விடுமுறை இல்லை! எதற்கும் நாளை வா! Customer-ஐ கேட்டுச் சொல்கிறேன்.

(பணியாளன், 'இவனால் எதுவுமே முடியாது! நாம் நேரே முதலாளியிடம் செல்ல வேண்டியது தான்!' என்று புலம்பிக் கொண்டே செல்கிறான்)

***

லுவலகத்தில், நம் மானேஜர் நம் தேவை எல்லாவற்றிற்குமே மேலிடத்திற்குப் போனால், நாமே நேராக, தலைமைக்கே சென்று விடுவோம்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு தேவதையைத் தனித் தனியாக அடைவதை விட, எல்லாவற்றிற்கும், ஒரே சரணாக எல்லாத் தேவர்களுக்கும் CEO-வான எம்பெருமானிடமே சரணடையலாம். அவன், தன்னை உதவி கேட்டு யாராவது வரமாட்டார்களா எனக் காத்திருப்பானாம்! இப்படிப் பட்ட இவனை, 'தேவர்கள் தலைவனே' ('உம்பர் கோன்') என்று அழைக்கின்றார் பெரியாழ்வார்!

வடமொழியில் இதனை 'ஸ்வாமித்வம்' என்பர்!

***

இடம்: வைகுந்தம்
நேரம்: Emergency


(வைகுந்தத்தில், தேவிகள் பேச, எம்பெருமான் தலையாட்டிக் கொண்டு இருக்கிறார். திடீரென்று, ஒரு அலறல் கேட்க, இதைச் சாக்காக வைத்துக் கொண்டு எம்பெருமான், Vivek Style-ல் ’Escape'!

எல்லா நித்ய சூரிகளும், தேவியரும் பார்க்கும் போதே, எம்பெருமான், கிளம்பி விட்டார்! எப்படி?)

சேனை முதலியார்: எம்பெருமானே! உங்கள் கைலாகை மறந்து விட்டீர்களே!

நாராயணன்: ஓ! மறந்து விட்டேன்! கொடுங்கள்!

(ஓடிச் சென்று, கருடன் மேல் அமர்ந்து கொள்ள முயற்சிக்க, கருடன் தவிக்கிறான்)

கருடன் (தயக்கத்துடன்): நாராயணா! நான் இன்னும் வாஹன அலங்காரம் செய்யவில்லையே! வழக்கமாக அரை மணி நேரம் அவகாசம் கொடுப்பீர்களே! இன்று என்னவாயிற்று?


நாராயணன்: ரொம்ப அவசரமப்பா!

கருடன் (அவசரமாக): சரி! ஏறிக்கொள்ளுங்கள்!

கருடன்: நாராயணா! இன்று நான் அதிருஷ்டம் செய்துள்ளேன்!

நாராயணன்: வைநதேயா! இப்போது Sentiment-க்கு நேரமில்லை! விஷயத்திற்கு வா!

கருடன்: வழக்கமாகத் தங்கள் பாதுகையைத் தான் என் கைகளில் தாங்கி இருப்பேன்! இன்று, பாதுகை இல்லாமல் என் கைகளின் மேல் உங்கள் திருவடியை வைத்துள்ளீர்கள்!

நாராயணன்: அதனால் என்ன இப்போது?

(ஆஹா! தலையில் திருவடி வைத்ததால் 'மாவலிக்கு அடுத்த ஜன்மத்தில் இந்திர பதவி; எனக்கு என்ன கிடைக்கும்!' என்று கருடன் எண்ணுவதற்குள்)

ஸ்ரீதேவி (ஓடி வந்து): என்னங்க! கலைந்த ஆடையுடன் எங்கே போகிறீர்கள்? இந்தாருங்கள் உங்கள் செருப்பு!

(பிடுங்காத குறையாக, ரத்ன பாதுகைகளை வாங்கிக் கொண்டு, நாராயணன் கிளம்ப முயற்சிக்கிறார்)

ஸ்ரீதேவி: 'ஒரு நிமிஷம் இருங்க! நானும் வரேன்'!

(ஸ்ரீதேவி Makeup செய்யப் போக, நாராயணன் அதற்குள் கருட வாஹனனாக கிளம்பி விடுகிறார்; உடனே ஸ்ரீதேவி ஒரே தாவு - கருடனின் வலப்புறத்திற்கு! இதைப் பார்த்த நீளா தேவி, 'அதெப்படி அக்கா மட்டும் எப்போதும் உடனே செல்லலாம்?' என்று நினைத்து, தானும், ஆதிசேஷன் மேலிருந்து ஒரே Long Jump! இடப் பக்கத்திற்கு சென்று உட்கார்ந்து கொள்கிறாள் - பாவம் கருடன்!)


(இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் சக்கரத்தாழ்வார்! 'நானில்லாமல் கிளம்ப மாட்டாரே இவர்! இன்று என்னாச்சு இவருக்கு?' என்று நினைத்து)

சுதர்ஸனர் (கூவுகிறார்): நாராயணா! சற்று நில்லுங்கள்! சண்டைக்குச் செல்வது போல் புறப்படுகிறீர்களே? நான் உங்கள் தோள் மேல் இல்லாமல் எப்படி நீங்கள் வெளியில் கிளம்புகிறீர்கள்? அப்படி என்ன அவசரம்?

நாராயணன்: ஸாரி சுதர்ஸனா! மறந்து விட்டேன்! 'ஆதிமூலமே' என்று கஜேந்திரன் அழைத்தான்! அவனுக்கு ஆபத்து என்று நினைக்கிறேன்! கேள்வி எதுவும் கேட்காமல் உடனே வா!

(சுதர்ஸனரும் உடனே சேர்ந்து கொள்ள, நாராயணன் அவசரமாக பூலோகத்திற்குக் கிளம்புகிறார்)

***

மேலே கூறிய காட்சி, பராசர பட்டர் (ர.ஸ்த. 2-57) அருளிச் செய்தது!

'பக்தனுக்கு ஆபத்து என்று தெரிந்ததும், தானும் அலங்காரம் செய்யாமல், அலங்காரம் ஏதும் இல்லாத கருட வாஹனத்தின் முன் ஏற முயற்சித்த நாராயணனின் வேகத்திற்கு ஒரு நமஸ்காரம்' என்கின்றார் பட்டர்!

நாம் ஒருவரிடம் சரணாகதி அடையும்போது, நம்முடைய நிலைமையைப் பார்த்து, அவர் இரக்கப்பட வேண்டும்! எம்பெருமான் கஜேந்திரனுக்கு இரக்கப் பட்டது போல்! 'முன் ஆழி ஏந்தி, கம்ப மா கரி கோள் விடுத்தான்' என்கின்றார் பெரியாழ்வார்!

இரக்க குணம் உடையவரிடம் நாம் சரணாகதி அடைவதில் நமக்கும் வருத்தம் இராது!

(மாறாக, நம்மை அவர் கேலி செய்தால், அவரிடம் பெரும்பாலும் நாம் சரணகதி அடைய இயலாது; அல்லது, 'இது நம் தலையெழுத்து' என்று, காரியம் நிறைவேறும் வரை பொறுத்துக் கொள்வோம்)!

- நரசிம்ம சரணாகதி தொடரும்!

Read more »

Friday, January 22, 2010

தசாவதார நரசிம்மர்முந்தைய பாசுரத்தில், நரசிம்மனே வாமனனாய் வந்து காட்சி தரும் கோயில் அரங்கம் என்றார்.

ஆனால் அடுத்த பாசுரத்தில்?
***

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*

சேவலொடு பெடை அன்னம்* செங்கமல மலர் ஏறி ஊசலாடி*

பூவணைமேல் துதைந்து எழு* செம்பொடி ஆடி விளையாடும் புனலரங்கமே.
மரவடியை 4-9-9

அருள் உடைய மீனாக, ஆமையாக, வராகமாக, நரசிம்மமாக, வாமனனாக, மூன்று உருவில் ராமனாக, கண்ணனாக, கல்கியாக வந்து, தீயோரை அழிப்பவனுடைய
கோயிலானது,

ஆண் அன்னத்துடன், பெண் அன்னம், தாமரை மலர் மீது ஏறி, ஊஞ்சல் ஆடி, மலர்ப் படுக்கையில் ஒன்றோடு ஒன்று கலந்து இருந்து, மலரிலிருந்து எழுந்த மகரந்தப் பொடிகளைப் பூசிக்கொண்டு விளையாடுவதற்கு இடமான, நீர் வளம் மிக்க அரங்கமே!

(தேவுடைய = தே + உடைய = அருள் உடைய; சேவல் - ஆண் அன்னம்; பெண்; பெடை -ஊசல் - ஊஞ்சல்; பூவணை = பூ + அணை - மலர்ப் படுக்கை; துதைந்து - ஒன்றோடொன்று கலந்து; செம்பொடி - செந்தூரப் பொடி; புனல் - நதி, நீர்)

***

திருமால், ராமன், கூர்மம், இருக்குமிடம் அரங்கம், நரசிம்ம வாமனன் இருக்குமிடம் அரங்கம், என்று எழுதிக் கொண்டிருந்த பெரியாழ்வாருக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது!

பத்து அவதாரங்களுக்கும், எல்லா Combination-களையும் போட ஆரம்பித்தால் குறைந்தது 10C2 பாசுரங்களாவது எழுத வேண்டுமே?

யோசித்த ஆழ்வார், தசாவதாரப் பெருமான்கள் எல்லோரும் இருக்குமிடம் அரங்கம் தான் என்று, இரண்டே வரியில் அழகாகப் பாடி முடித்து விட்டார்! நாமும் ஒரு தசாவதாரப் பாசுரம் கிடைக்கப் பெற்றோம்!


(மங்கையாரும் ஒரு தசாவதாரம் பாசுரம் எழுதியுள்ளார் - மீனோடாமை - பெ.தி.8-8-10)

நமக்கு அருள் செய்வதற்காகவே, மீனாய் அவதாரம் எடுத்து, வேதங்களை அருளிச் செய்கிறான்! எனவே, அருள் உடைய மீன் இது! 'தேவுடைய மீன்'!

மீன் மட்டும் தான் தேவுடையதோ?

தேவுடைய = தேவு + உடைய. 'தேவு' என்பது, 'தேஜஸ்' என்னும் வடமொழிச் சொல்லின் திரிபு. ஒளி உடைய மீன்!

தேவுடைய - அவனே ஒளியுடையவனாய்ப் பிறக்கிறான்! அவன் ஒளி பெறுபவனாகவே இருக்கிறான்! அவன் பிறந்தே நமக்கு ஒளி கொடுக்கிறான்!

இவன் தானே 'ஆதியஞ் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த வேத முதல்வன்' (திருவாய்மொழி 2-5-5)!

மீன் மட்டும் தான் ஒளி உடையதா? எல்லா அவதாரங்களும் தானே! எனவே, தேவுடைய மீன், தேவுடைய ஆமை என்று, எல்லா அவதாரங்களுக்கும் இந்த வார்த்தையைச் சேர்த்தும் பொருள் கொள்ளாலாம்!

தேவுடைய நரசிம்மன்! இவன் ஒளி, பற்களாலும், நகங்களாலும்! இவனை நாம் இப்பொழுது அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்!

மூவுருவில் - மூன்று உருவில் (ஏதுப் பொருளில் வந்த ஐந்தாம் வேற்றுமை) ராமன்! பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்!'கல்கியாய் முடிப்பான்' அரங்கன்! அருள் கொடுக்கும் அரங்கன் அழிக்கலாமோ?

அவன் அழிப்பது நம்மையல்ல! கலியுலகின் முடிவில், பெருகும் அதர்மத்தை முடிப்பவன்! யஸஸ் எனும் பிராம்மணரின் மகனாய், கையில் சங்கு சக்கரத்துடனும், குதிரை வாகனமாய், நாந்தகம் (கத்தி) ஏந்தி வருவான் அவன்!

அந்த நேரத்தில் நாம் இல்லாமல் போனாலும் பரவாயில்லை!

இப்பொழுதே அரங்கனைச் சேவித்து விடுங்கள்! அரங்கனைச் சேவித்தால், கலியைச் சேவித்தது போல் ஆயிற்று என்கின்றார் ஆழ்வார்!

ஒரு கதை கேளுங்கள்!

***

இடம்:
ஸ்ரீ வில்லிபுத்தூர்
நேரம்: காதல் நேரம்
மாதம்: தை மாதம்

(ஒரு பெண், தனியாகப் புலம்பிக் கொண்டு இருக்கிறாள்)

பெண்: பிரிந்தவர்களைச் சேர்த்து வைக்கும் மன்மதா! உன்னை வணங்குகிறேன். எனக்கு உதவி செய்!

மன்மதன் (நேரிலே தோன்றி): என்ன? தை மாதமாயிற்றே! பொங்கல் கரும்பு வேண்டுமா? என்னிடம் ஒரு கரும்பு வில் தானே உள்ளது!

பெண்: விளையாடாதே! என்னை வேங்கடவனுடன் சேர்த்து வை!

மன்மதன்: யார்! அந்த ஏழு மலையானிடமா?

பெண்: பின்னே! மனித வேங்கடவனா? மனிதக் கல்யாணம் என்ற பேச்சு எழுந்தால் நான் உயிர் தரிக்க மாட்டேன்!

மன்மதன்: ஐயோ! ஆளை விடு! ஏற்கனவே ஒரு திவ்ய தம்பதிகளைச் சேர்த்து வைக்கப் போய், நான் முழுவதும் எரிந்து விட்டேன்!
(மறைந்து விடுகிறான்)

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு தோழி, வேகமாக ஓடிச் சென்று, கோயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் வடபத்ர சாயியிடம் கோள் சொல்ல, அவர் புலம்புகிறார் '... நான் அல்லவா தினமும் அவள் சூடிய மாலையை அணிந்து கொள்கிறேன். இவள் வேங்கடவனைக் கேட்கிறாளே!')

***
இடம்: வீட்டுத் தோட்டம்
நேரம்: காலை நேரம்
காலம்: மார்கழி மாதத்திற்கு முன்

(இந்தப் பெண்ணின் காதல் முற்றுகிறது. எம்பெருமான் அவளைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கனவு காண்கின்றாள். அதே கனவு, பெண்ணின் தந்தைக்கும் வருகின்றது. விடிந்தவுடன், பெண்ணும், தந்தையும் பேசிக் கொள்கின்றனர்)

தந்தை: பெண்ணே! நீ யாரை மணமுடிக்க விரும்புகிறாய்?

பெண்: மணிவண்ணனையே மணாளனாக மணமுடியுங்கள்!
தந்தை (அதிர்ச்சி அடைந்தாலும்): சரி! அந்த மணாளன் எந்த ஊரான்? எந்த அவதாரம்?

பெண்: தந்தையே! மணிவண்ணன் அவதாரங்களையும், ஊர்களையும்ன் விளக்குங்கள்!

(தந்தை விளக்க ஆரம்பிக்கிறார்)

தந்தை: வாமனனைப் பிடிக்குமா?
பெண்: வேண்டாம்! அவன் என்னை விட உயரத்தில் சிறியவன்!

தந்தை: சரி, பலராமனைப் பிடிக்குமா?

பெண்: வேண்டாம்! அவன் ஞானி! நமக்கும் அந்த அறிவுக்கும் ஒத்து வராது! மேலும், அவன் எப்பொழுதும் கலப்பையுடனேயே வயல்களிலேயே திரிவான். அவன் பின்னால் காலில் செருப்பும் இல்லாமல் என்னால் ஓட முடியாது!

தந்தை: ராமனைப் பிடிக்குமா?

பெண்: அவர் ஏக பத்தினி விரதர்! என்னைக் கல்யாணம் செய்ய மாட்டார்!

தந்தை (அலுப்புடன்): கண்ணன்?

பெண்: அவனை எனக்குப் பிடிக்கும்! இருந்தாலும் அவனுக்கு ஏற்கனவே என்னைப் போலவே 14,000 மனைவியர்!

தந்தை: வேங்கடவன்?


பெண்: வேண்டாம்! அவனைப் பார்க்கவேண்டும் என்றால் கூட, கையில் Badge கட்டிக் கொண்டு, 3 மாதம் முன்னாலேயே Booking பண்ணி, வைகுந்த வாசலில் நுழைந்து, வரும் VIP-களுக்கும், அவர்களுடைய வேலைக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் வழி விட்டு, 20 மணி நேரம் Queue-வில் நின்று, கடைசியில், ஜய, விஜயர்களுக்கு அருகே வந்து கை கூப்புவதற்குள், 3-4 பேர், புரியாத பாஷையில், பிடித்துத் தள்ளிவிடுவார்கள்!


தந்தை (எரிச்சலுடன்): பின்னே என்ன தான் செய்யச் சொல்லுகிறாய்?

பெண்: அப்பா! ஒவ்வொரு திவ்ய தேசப் பெருமாளையும் பற்றிச் சொல்லுங்கள்!

(தந்தை, மிகவும் பொருமையாக விளக்கத் தொடங்குகின்றார்)

தந்தை: திருக்கோட்டியூர் ஸெளம்ய நாராயணன்?

பெண்: அவர் அழகு தான்! இருந்தாலும், அவர் வீட்டில் எப்போதும் தேவர்கள் ஒளிந்து கொண்டு இருப்பர்! Privacy கிடைக்காது! வேறு வரன் உள்ளதா?

தந்தை: பத்ரி நாராயணன்?

பெண்: அவர் 1,000 வருடங்களுக்கு ஒரு முறை தவம் செய்யப் போய்விடுவார்! வேண்டாம்!

தந்தை: கடிநகர் (தேவப் ப்ராயாக்) புருஷோத்தமன்?

பெண்: அப்பா! தென் திருப்பதி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்! என்னால் அடிக்கடி கோபித்துக் கொண்டு வட நாட்டில் இருந்து இங்கே வர முடியாது! மேலும், மாப்பிள்ளை பெயர் வடமொழிப் பெயராக இருப்பதால், கல்யாண செலவிற்கு Discount கிடைக்காது!

தந்தை: பிரகலாத வரதன்?

பெண்: அப்பா! பிரகலாதன் மாதிரி யாராவது கூப்பிட்டால், என்னை விட்டு விட்டு, உடனே தூணிற்குள் ஒளிந்து கொள்ளப் போய்விடுவார் இவர்! தாயாரே இவரைப் பார்க்க பயப்படும்போது, நான் மட்டும் பயப்பட மாட்டேனா?

(பல திவ்ய தேசங்களையும், அவதாரங்களையும், கழித்து விடுகின்ற பெண்ணைக் கண்டு, கோபமும், ஆத்திரமும், எரிச்சலும், வருத்தமும் வருகின்றது தந்தைக்கு ... புலம்புகிறார் ... 'உனக்குத் தாய் இல்லையாதலால், பெண் மனது அறியாமல் வளர்த்து விட்டேன்! என் தவறு அது! இதற்குத் தகுந்த தண்டனை எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது’)

தந்தை: இன்னும் ஒரே ஒருவன் தான் இருக்கின்றான்! அவனையும் பிடிக்கவில்லை என்றால், அவன் தான் உன்னையும் என்னையும் கடைத்தேற்ற வேண்டும்!

பெண்: யார் அப்பா அந்த ஒருவன்?

தந்தை: அழகிய மணவாளன்!


பெண்: பெயரே அழகாக இருக்கின்றது! அவன் பெருமைகளைச் சொல்லுங்கள் அப்பா!

தந்தை (பாடுகிறார்):

ஆமையாய்க் கங்கையாய்* ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய்*
நான்முகனாய் நான்மறையாய்* வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான்*

...

உலகில் உள்ள எல்லாப் பொருட்களும், மனிதர்களும், தெய்வங்களும் அரங்கத்தில் இருக்கும் அவனே!

பெண்: அடேயப்பா! இவ்வளவு பெருமைகளா? மேலும் சொல்லுங்கள் அப்பா!

தேவுடைய மீனமாய் ஆமையாய்* ஏனமாய் அரியாய்க் குறளாய்*
மூவுருவில் இராமனாய்* கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோயில்*

...


எல்லா அவதாரங்களும் இருக்கும் கோயில் அரங்கமே!

பெண் (முகம் சிவந்து): இன்னும் ஏதாவது?


தந்தை (மகள் முகம் நோக்கியதும் தன் முகத்தில் சிரிப்புடன்): இந்தத் திருப்பதியைத் தொழுதால், தென் நாட்டுத் திருப்பதியும், வட நாட்டுத் திருப்பதியும் தொழுதது போல் ஆகும்!

(வெட்கத்தில், பேச இயலாத பெண்ணைக் கண்டு, தந்தையின் முகத்தில் சிரிப்பு! அதையும் மீறி, இந்தத் திருமணம் எப்படி நடக்கும் என்ற கவலை!)

இப்படி, ஆண்டாளுக்காகப் பெரியாழ்வார், அரங்கன் பெருமைகளைச் சொல்லி, தேர்ந்தெடுத்த மணவாளன் வாழுமூர்! தசாவதாரமும் இருக்கும் ஊர்! அரங்கம்!

Over To பாசுரம்!
***

ண் அன்னம், தன் பெண் அன்னத்துடன் விளையாட இடம் தேடுகின்றது! காவிரியின் கரையில், தாமரை மலர்களைப் பார்த்தவுடன், இரண்டும் மலர்களின் மீது ஏறி விளையாடுன்றன! மெல்லிய காற்றினால் அசையும் தாமாரை மலர்த் தண்டுகளுடன், அன்னங்களும் ஊஞ்சலாடுகின்றன!

இரவு வந்து விடுகின்றது! தாமரை மலரிலேயே அன்னங்கள் தூங்கிவிடுன்றன! மலர்ப் படுக்கையாயிற்றே! இரவில் புரண்டு படுக்கும்பொழுது, மலர்களில் உள்ள மகரந்தச் செம்பொடி, அன்னங்களின் உடல் மீது சேர்ந்து, அன்னங்கள் சிவப்பு நிறமாய்க் காட்சியளிக்கின்றன!

இப்படி, சிவந்த அன்னங்கள் விளையாடும் இடம், குளிர்ந்த அரங்கமே!

இங்கு, தசாவதாரங்களுடன், ஹம்ஸ (அன்னம்) அவதாரமும் பேசப்படுகின்றது!
'தேவுடைய' (இன்னமுமா?) எம்பெருமானாக இருப்பதற்குக் காரணம், அவனுடன் இருக்கும் திருவே என்கின்றார். எனவே தான் சேவலுடன், பெடையும் (பெண் அன்னம் - திரு) இருக்கின்றதாம்!

- தசாவதார நரசிம்மன் மீண்டும் வருவார்!
Read more »

Sunday, January 17, 2010

ஒரு "தாசி" உணர்ச்சி அடைகிறாள்! - பிங்கலாவின் கதை(கீதை)!

மாயக் கண்ணன் மாயப் போகிறான்! துவாரகை மூழ்கப் போகிறது!
திருச்சீர் அலைவாய்கள் அலைத்து அலைத்து விளையாடும் தீவு நகரமாம் அந்த துவரைப் பதி! அதைக் கடல் சூழ்ந்து "சுனாமி"க்கப் போகிறது!
துவரைப் பதியின் சில வேளிர் குடிகள், இன்னும் தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டன! தமிழைக் கைக்கொண்டு புறப்பட்டு விட்டன!

தன் அன்பனும்-நண்பனும்-பக்தனுமான உத்தவனுக்கு,
தன்னுடைய "கடைசி" நேரத்தில்....
இன்னொரு கீதையைச் சொல்லத் துவங்குகிறான் கண்ணன்!


கண்ணன் சொன்னது இரண்டு கீதைகள்!
* ஒரு கீதை = பகவத் கீதை!
* இன்னொரு கீதை = உத்தவ கீதை!
முன்னது = வாள் போராட்டத்தின் துவக்கத்தில்! பின்னது = வாழ்க்கைப் போராட்டத்தின் முடிவில்!

இந்த உத்தவ கீதையில் தான்.....இந்தத் "தாசி"யின் கீதை!...ஒரு பேதையின் கீதை!...அவள் பெயர் பிங்கலா! - கிருஷ்ண பிங்கலா!என்னாது...? மிகப் "புனிதமான" கீதையின் நடுவில், ஒரு "தாசியின் கீதையா"?

சமூகம் அவளைத் "தேxxxx" என்ற சொல்லால், "சிறப்பித்து" வைத்துள்ளதே!
இப்படியெல்லாம் ஆன்மீகத்தில் கண்ணனே கலந்து எழுதலாமா? தவறாயிற்றே!
கண்ணா, இது உனக்கே அடுக்குமா? இதெல்லாம் சினிமாவுக்கு வேண்டுமானால் நல்லா இருக்கும்! ஆனால் ஆன்மீகப் பொக்கிஷமான கீதையில்.....போயும் போயும் ஒரு தாசியின் கீதத்தைச் சேர்க்கலாமா?

கீதையைப் பாராயணம் வேறு பண்ணுவார்களே! புத்தக அடுக்கில் வைத்து, பூ போட்டு, பூஜிக்கவும் செய்வார்களே! அதிலா இப்படி ஒரு "இழிந்தவளின்" பாட்டைக் கொண்டு போய்க் கலந்து வைப்பது??? ஹைய்யோ!

கண்ணன்: ஆன்மீக உள்ளங்களே........நான் கைவிட்டாலும், என்னைக் கைவிடாதவர்கள் யாரோ, அவர்களே "ஆத்திகர்கள்" ஆகிறார்கள்!
எனவே, உங்களில் "ஆத்திகர்கள்" யாரோ...
அவர்கள்...இவள் மீது கல் எறியக் கடவீராக!
"இதரர்"...பூ எறியக் கடவீராக! சர்வம் கிருஷ்ணார்ப்பணமஸ்து!


இந்தக் கீதையின் மீது வைக்கப்படும் பூக்கள் ஒவ்வொன்றும் "தாசி" பிங்கலாவை அலங்கரிக்கட்டும்!
* வாழ்வைத் தொலைத்து விட்ட பெண் இவள்!
* வாழ்வைத் தொலைத்தாலும், "வாழும்-அன்பை" தொலைக்காத பெண் இவள்!

உயிர் துறந்த கன்னிப் பெண்களை "கிருஷ்ணார்ப்பணம்" என்று சொல்லி இறுதியாக்குவது போல்...
இவளைக் "கிருஷ்ணார்ப்பணம்" என்று ஜபித்தே உறுதியாக்குங்கள்...
இவளே ஆசார்யன்! இவளே கீதையின் இந்தப் பகுதிக்கு "கீதாசார்யன்"!


அவள் ஒரு "தாசி"! ஆனால் "பேதை" தாசி!
அன்று குழந்தை தாசியாக இருந்து, இன்று குமரி தாசியாகி நிற்கிறாள்!
அவள் பெயர் பிங்கலா! கிருஷ்ண பிங்கலா!

பிதிஷா நகரத்து தாசிகளில், "அப்பாவி" தாசி என்றால் அது இவள் தான்!
எளிதில் இவளை "மடித்து" விடலாம்!
அன்பு காட்டினால் போதும்! காசைக் காட்ட வேண்டும் என்ற கட்டாயமே இல்லை! :)
என்னடீ...கண்ணாஆஆஆ என்று செல்லமாய் அழைத்தாலும் வந்து விடுவாள்! :)

அவள் பேரழகி எல்லாம் ஒன்றும் இல்லை! ஆனால் அசிங்கமாகவும் இருக்க மாட்டாள்! சுமாரான பால் வடியும் முக-அழகி என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
புன்னகையே அவள் பலம்! அகம் குழைவதே அவள் பலம்-வீனம்!

மருவே செறித்த குழலாள்,
மயக்கி, மதன் ஆகமத்தின் விரகாலே,
மயலே எழுப்பி, இதழே அருந்த
மலை போல் முலைக்குள் உறவாக்குபவள்! உருவாக்குபவள்!


அவளிடம் ஆசை வார்த்தைகள் ஒன்றிரண்டு பேசி விட்டான்.....ஒரு இளைய செல்வந்தன்!
பேசினது தான் பேசினானே......காமம் கலந்து பேசாமல்.....காதல் கலந்தது போல் பேசித் தொலைத்து விட்டான்! அவள் மேல் கொஞ்சம் அக்கறையும் காட்டி விட்டான்! குப்ப்ப்ப்....

நெருப்புக்கே நெருப்பு பிடித்துக் கொண்டது! ஆசைக்கே, ஆசை வந்து விட்டது! - அது பேராசையா? அவன் பேரில் ஆசையா??

அவனை அல்லால், பிற எவரையும் அண்ட விடுவதில்லை! - தொழில் "தர்மத்தை" மீறல் ஆகுமோ? அவளுக்கென்று "விதிக்கப்பட்டதை"ச் செய்ய வேண்டாமோ?அன்று மதி நிறைந்த, நிலாக் காயும் இரவு.....ஹேய் இது "அந்த" இரவு என்று அவனும் சொல்லி வைத்தான்! அவளும் நம்பி வைத்தாள்!
சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே,
பாடகமே என்று பல்கலனும் அணிந்து வைத்தாள்! மனம் துணிந்து வைத்தாள்!

கண்ணிமைக்கும் நேரத்தில், தான் காணாமல் போகப் போவது தெரியாமல், கண்ணிமைக்கு கன்னி மை இடுகிறாள்!
தலையெழுத்தே மாறப் போவது தெரியாமல், தலை எழுத்தில் தளிர்க் குங்குமம் இட்டுக் கொள்கிறாள்!

சீர்சிறக்கு மேனி பசேல் பசேல் என
நூபுரத்தின் ஓசை கலீர் கலீர் என
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேல் என


மார்பு அடைத்த கோடு பளீர் பளீர் என
ஏமலித்து என் ஆவி பகீர் பகீர் என
வாடை பற்று வேளை அடா அடா என
நீ மயக்கம் ஏது சொலாய் சொலாய் என...


பெளர்ணமி இரவில்...மதி நிறைந்த நன்னாளில்...ஒருவனுக்காக ஒருத்தி காத்திருக்கலாம்! ஆனால் ஒரு தாசி காத்து இருக்கலாமோ?
அன்றிரவென்று பார்த்து, பிதிஷா நகரத்தில் கொஞ்சம் அதிகமான பேருக்கு வேட்கை! அவரவர் இச்சையில் எவை எவை உற்றன??

கல்விச் செல்வத்து வேத பண்டிதர்கள்...
செல்வச் செல்வத்து பெருஞ் சீமான்கள்...
வீரச் செல்வத்து விவேக மறவர்கள்...
இப்படிச் சிலர் வந்து அவள் கதவைத் தட்டிப் பார்க்கின்றனர்! ஹூஹூம்! நேய நிலைக் கதவம் நீக்கவும் இல்லை! நேரே எவரையும் பார்க்கவும் இல்லை! அவன்! அவன்! அவன் மட்டுமே!

ஹா ஹா ஹா!
நட்பைக் கூட கற்பைப் போல எண்ணலாம்! ஆனால் இவள், கற்பை எண்ணலாமா?
இவள் முகம் நகலாம்! அகம் நகலாம்! ஆனால் அகங் குழையலாமா? - உன் அந்தமில் சீர்க்கு அல்லால் வேறு எங்கும் அகங் குழைய மாட்டேனே!
குழைந்து விட்டவள், கும்மிருட்டில், குளிரக் குளிரக் காத்து நிற்கிறாள் வாசற்படியில்!

இரவின் கடுமை! தனிமைக் கொடுமை!
ஒரே வாசலுக்கு எத்தனை முறை தான் நடந்து நடந்து தேய்வது? பத்தே விரல்களில் எத்தனை முறை தான் நகத்தைக் கடித்து ஏங்குவது?ஆனால் அவன் வாசம் மட்டும் வரவே இல்லை! பாசம் மட்டும் வரவே இல்லை!
ஓலை வந்தது! அவள் வாழ்விற்குப் பாலை வந்தது!

"வார்த்தை தவறி விட்டாய் கண்ணய்யா! மார்பு துடிக்குதடா! பார்க்கும் மனிதரெல்லாம் உன்னைப் போல் ஒரு பாலன் தெரியுதடா!
இளைய செல்வந்தா...எதற்கு அன்பு காட்டினாய்? அக்கறை காட்டினாய்? காதல் கலந்து பேசினாய்?"

"அட அப்புராணியே, சிரிப்புக்குச் சொன்னதெல்லாம் சீர் வரிசை ஆகுமா? பொழுது போக்கப் பேசியதெல்லாம் பொன் மணத்தில் முடியுமா??
இந்த நியாயத்தை நீ போய் ஊராரிடம் கேட்கத் தான் முடியுமா? இல்லை என்னைத் தான் கேட்க முடியுமா? அதை விடு, உன்னையே நீ கேட்க முடியுமா?"

"ஊரிடம் கேட்க முடியா விட்டால், நியாயம், நியாயம் ஆகாதா, மணவாளா?"

"அடியே அறிவு கெட்டவளே! தர்மவான்கள் கேட்டால் நியாயம்! ஆனால் தாசி கேட்டால்???
உனக்குச் சூதனமாக இருக்கத் தெரியாதோ? நான் சும்மா பேசிய வார்த்தைகளுக்காக...வந்த "பெரியவர்களை" உள்ளே விடாது ஊரைப் பகைத்துக் கொண்டாயே! இனி என்ன செய்யப் போகிறாய் பிங்கலா?
அடங்கு! அடங்கு! அடங்கு! மூலையில் ஒடுங்கு! ஒடுங்கு! ஒடுங்கு!"

"சரி நான் ஒடுங்குகின்றேன்...ஆனால் உள்ளம் ஒடுங்குமா, உயர்ந்தவரே?"

"உள்ளமா? அதற்கெல்லாம் உனக்கு உரிமையே இல்லை! இது காமமா? காதலா?? என்று போய்க் கேள்! சந்தேகம் என்ன? அனைவரும் சொல்வார்கள்!
காமத்துக்கென்று இருப்பவள்...அவள் காதலித்தாலும்...அது காமம் தான்!"

மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோர் எம் பாவாய்!
மற்றை நம் "காமங்கள்" மாற்றேலோர் எம் பாவாய்!

பளீர்...பளீர்...பளீர்...என்று அவள் மன வானத்தில்...
ஆழி போல் மின்ன...வலம்புரி போல் நின்று.....அதிர்ந்து போனாள்!

பேதை...நள்ளிரவில் கீதை...பாடத் துவங்குகிறாள்...
கண்ணனின் "உத்தமமான" உத்தவ கீதையில்...இதோ...ஒரு "தாசி" கீதை!கர்ணாம்ரிதா என்னும் மேலைநாட்டுப் பாடகி, இந்தத் "தாசி"யின் கீதைப் பாடலைப் பாடுகிறார்!
வித்தியாசமான...ஆனால் அழுத்தம் திருத்தமான உச்சரிப்புகளோடு!
கேட்டுக் கொண்டே பதிவை மேலும் வாசியுங்கள்!or hear from here... Dasi - Prayers by Women
The Story of Pingala, From Lord Krishna's Uddhava Gita

Vocals: Karnamrita
Melody composed by: Yuddhistira and Karnamrita
Tablas: Yuddhistira
Kartals: Chaitanya Nitai
Hand Claps: Ron Marinelli
..................................................

பிங்கலோ உவாச:
அஹோ மே மோக விதாதிம்
பஸ்யதா அவிஜித் தாத் மன:
யா கண்டாத் அசதா காமம்
காமயே யேன பாலிசா!
காமயே யேன பாலிசா!

பிங்கலை சொல்கின்றாள்:
மோகம் எனும் தீ வளர்த்தேன்! - ஊர்
பார்க்க உளம் தனில் உழந்தேன்!
காமத்தில் காதலைக் கலந்தேன்!
காண்பீர் நான் ஒரு பேதை!
பி்திஷாவின் மக்களே, காண்பீர் நான் ஒரு பேதை!

சந்தாம் சமீபே...ரமணாம் ரதிப் ப்ரதாம்
வித்தாப் ப்ரதாம்...நித்யம் இமம் விகாயா
அ-காமா தாம்....துக்க, பயாதி, சோகா
மோகப் ப்ரதம்...துச்சம் அகம் பஜேனா!


மனத்துக்கு இனிய என் காதலைத் துறந்தேன்!
மனத்துக்கு இனியான் அவனையும் துறந்தேன்!
துக்க, பய, சோகம், மோகம் என்று ஆகித்
துச்சம் ஆகிப் போனேன்! பேதை நான் பேதை!

எங்கெங்கோ போய்க் கரை காணாது, எறி கடலுக்கே மீண்டும் வந்து,
கப்பலின் கூம்பில் ஏறி, உனக்காக என்றும் நின்று விட்ட,
மாப்பறவை ஆனேனோ? மாப்பறவை ஆனேனோ?

தேனோ உப...கிருதம் ஆதாயா
சிரசா கிரமயா சங்கதஹா
தியாக த்வ...துர் ஆசா
சரணம் வ்ரஜாமி.... தம்...ஆதீஸ்வரம்!

சரணம் வ்ரஜாமி.... தம்...ஆதீஸ்வரம்!

உன் அருளினைத் தலையினில் ஏற்றேன்!
புலன் ஆசையை அறிந்தே நோற்றேன்!
உன் "சரணம் சரணம்" என...நான் ஏற்றேன்!
அவன் சடுதியில் வர வர வேற்றேன்!


முன்பு கட்டிலில் பலர் மூச்சு வாங்கிய வேசியாள்...
இன்று அவள் மூச்சையே சுவாசியாள்!
முன்பு பஞ்சணையில் இருமை உற்றவள்...
இன்று பாம்பணையில் ஒருமை உற்றாள்!

சற்று முன்பு செய்து கொண்ட அலங்காரங்கள் கரைந்து ஒழுகின!
பல நாள் காமத்தின் அகங்காரங்கள் கரைந்து ஒழுகின!
வழுக்கும் கால்கள் நெகிழ...வளைந்த இடுப்பு நெகிழ...
செழிக்கும் மார்பு நெகிழ...சிறைக்கும் கண்கள் நெகிழ...

மேனியின் மேலும் கீழும்...திரவங்கள் திரண்டோட...
பருவங்கள் பறந்தோட...மதனங்கள் மறந்தோட...
பல இரவு உடலொழுகு நீரை.....
ஓர் இரவு கண்ணொழுகு நீர்.....
மிஞ்சிட...விஞ்சிட...அஞ்சிட...கெஞ்சிட...

கைகள்...மேலெழ மேலெழ...
சரணம் ஐயோ! சரணம் ஐயோ!!
ஆதி மூலமே! நீதி வானமே!
சரணம் ஐயோ! சரணம் ஐயோ!!
தன்னையே கொலை செய்து கொள்ள முயன்றாள்!
ஆனால் குதித்ததோ தற் கடல்! தத்துவக் கடல்!!
மூழ்க முனைந்தவளால் மூழ்க முடியவில்லை!
ஆழத் தான் முடிந்தது! - ஆழ்ந்து போனாள்! "ஆழ்வாள்" ஆனாள்!

பிங்கலை, எப்படி ஒரே இரவில், இப்படி "மாறி"ப் போனாள்?
- குருவின் உபதேசமா?
- இல்லை, அவள் கர்ம வினையா?
- அவள் தாழ்ந்து விட்ட போது, அவள் அன்பன் காட்டிய, "அளவில்லாக் கருணையா"?
- இல்லை, அவள் "ஆசையே" அவளுக்கு "அனுபூதி" கொடுத்ததா??

Denial of an Intense Desire leads to vairaagya?
ஆழ் மனம் மறுதலிக்கப்பட்டால்? வருவதோ வைராக்கியம்??
அவள் "ஆன்மீகப் பதிவு" எழுதவில்லை! - ஆனால் "ஆன்மாவில் எழுதி" வைத்து விட்டாள்!

அவள் எழுத்தை, கண்ணனே தன் கீதைக்குள் நுழைக்கிறான்!
"உத்தவ" கீதையில்............. ஓர் "தாசியின்" கீதை!
"அவன்" கீதையில்...........ஓர் "அவள்" கீதை! = அது அடியவள் கீதை!

என்னாது "அடியவளா"? ஒரே இரவில், அவள் "அடியவள்" ஆகி விட்டாளா??
ச்சீ..ச்சீ என்று முகஞ் சுளிப்பார்கள்...
அவள் பாடல் இருக்கும் கண்ணனின் கீதைக்கும் முகம் சுளிக்கக் கடவர் ஆகுக!

நல்ல ஆன்மீகத்தில் நெருடல் என்பதில்லை! அந்த "ஓர் இரவுச் சரணாகதி"யில் முரணாகதி இல்லை!
கருத்து "எதுவாயினும்".......மனங்களை ஒதுக்கலும் விலக்கலும் இல்லை!

* இதைக் கண்ணன் அறிந்தான்!
* கண்ணனை அறிந்தவரும் அறிந்தார்!
* அறியாதார்...ஆன்மீக "நிர்ணயம்" பேசப் புகுந்தார்! பேச மட்டும் புகுந்தார்!

ஆனால்...ஆனால்...ஆனால்...
அவன் "வாசி" கீதையில், அவள் "வேசி" கீதை,
அனைவரும் வாசிக்குமாறு...
இன்றுமே நிலைத்து விட்டது! என்றுமே நிலைத்து விட்டது!

பிங்கலை என்னும் "தாசியே"...உனக்கு வணக்கம்! உன் நள்ளிரவு ஞானத்துக்கு வணக்கம்!விசாகன்: "புனிதா, பிங்கலையின் கதையைக் கேட்டாய் அல்லவா?"

புனிதா: "கேட்டேன் முருகா!"

விசாகன்: "பிங்கலை துணிந்தது போல் நீயும் துணிவாயா?"

புனிதா: "நீ இருக்க, நான் வேறு தனியாகத் துணிய வேணுமா முருகா?"

விசாகன்: "புனிதா, நீ எனக்கு மிகவும் பிடித்தமானவள்! அதனால் தான் உன்னைக் கேட்கிறேன்! எங்கே சொல் பார்ப்போம்! பிங்கலை எப்படி ஒரே இரவில், அப்படி "மாறி"ப் போனாள்? அவள் மாறக் காரணம் என்ன?
- அவள் தாழ்ந்து விட்ட போது, அவள் அன்பன் காட்டிய, "அளவில்லாக் கருணையா"?
- இல்லை, அவள் "ஆசையே" அவளுக்கு "அனுபூதி" கொடுத்து விட்டதா??

புனிதா: "முருகாஆஆஆ.....ஆசையால் அனுபூதி கூடக் கிடைக்குமா என்ன?"

விசாகன்: "சரி, அதை விடு புனிதா! அன்று நான் தானே, உன் கையை உதறி, உன்னை அந்தப் பயங்கரமான ஆபத்தில் இருந்து காப்பாற்றினேன்?"

புனிதா: "ஆமாம் முருகா!"

விசாகன்: "இறந்து மீண்டும் பிறந்துள்ளாய், புனிதா! செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்துள்ளது!"

புனிதா: "ஆஆஆ!"

விசாகன்: "சொல்...அது, எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்?"

புனிதா: "முருகா...நீ கேட்கும் கேள்வி எனக்கு அச்சமூட்டுகிறது முருகா! இது மாறன் மொழி ஆச்சே! முன்பு எங்கோ படித்தது போல் இருக்கே முருகா??"

விசாகன்: "புனிதா, என் செல்வமே! யாமிருக்க பயம் ஏன்? முன்பு 'படித்து' இருந்தாய்! இப்போது 'உணர்ந்து' இருக்கப் போகிறாய்!
மாறன் மொழியாவது, முருகன் மொழியாவது! அது உனக்கும் எனக்கும் மாறா மொழி! காதல் ஆறா மொழி!"

புனிதா: "சரி முருகா! எனக்குன்னு நீ சொன்னாச் சரியாத் தான் இருக்கும்!"

விசாகன்: எங்கே, பதில் சொல் பார்ப்போம்...உன்னைப் போன்று....பிங்கலையைப் போன்று.....
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்?
அது......எத்தைத் தின்று? எங்கே கிடக்கும்??

(தொடரும்...)
(இனி, ஒவ்வொரு ஏகாதசி அன்றும், மாதவிப் பந்தலில் உங்கள் அனைவரையும் மறுபடியும் சந்திக்க முயல்கிறேன்...)
Read more »

Friday, January 15, 2010

நரசிம்ம வாமனன்


பெரியாழ்வாரின் திருவரங்கக் காதல் தொடர்கின்றது ...

***

உரம் பற்றி இரணியனை* உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றி*
சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க* வாயலறத் தெழித்தான் கோயில்*

உரம் பெற்ற மலர்க் கமலம்* உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட*

வரம்புற்ற கதிர்ச் செந்நெல்* தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண் அரங்கமே.

மரவடியை 4-9-8

இரணியனின் இருதயத்தைத் தொட்டு, நகங்களின் முனையால் அவன் ஒளி பொருந்திய மார்பு அழுந்தும்படி அழுத்தி, அவன் தலையைப் பற்றி, கிரீடம் உடையும்படி, கண்கள் பிதுங்கி வழிய, வாயினால் அலறும்படி பிளந்தவனுடைய கோயிலானது,

திண்மை பொருந்திய தாமரை மலர்கள், உலகளந்த வாமனனுடைய சிவந்த திருவடிகள் போல் உயர்ந்து வளர, முற்றும் வளர்ந்த நெல் பயிர்கள் தண்டுகளைச் சாய வைத்து, நுனியைத் தாழ வைக்கும் குளிர்ந்த அரங்கமே!

(உரம் - மார்பு; தெழித்தான் - பிளந்தவன்; உரம் - வலிமை, திண்மை; வரம்புற்ற - வரம்பு + உற்ற = அதிக பட்சமாக வளர்ந்த; தாள் - தண்டு)

***

கையால் மண்ணை எடுப்பது போல் இரணியனை அள்ளு! நகத்தால் மார்பில் ஒரு குத்து! மல்லியைப் போல் நரம்பு ஒரு கொத்து! தலையில் ஒரு தட்டு! 'Paste' போல் கண்களை ஒரு பிதுக்கு! 'ஐயோ' என்ற கத்து!

ஆழ்வாரின் வர்ணை இப்படி! மற்ற வர்ணனைகள் எப்படியோ?

***

ன் பலத்தால், இரணியனைப் பிடிக்கிறான் எம்பெருமான். அரண்மனை வாசல் படியில், தன் மடியில் வைத்து, அவன் மார்பைப் பிளக்கிறான்.

'ஐயோ! ஐராவதத்தின் (இந்திரனின் யானை) பற்கள் மோதிய போது, என் மார்பில் பட்டு ஐராவவதத்தின் பற்கள் பொடிப் பொடியாயின. இப்படிப் பட்ட என் நெஞ்சை இந்த உருவம் சாதாரணமாகப் பிளக்கிறது! விதி நம்மை ஆட்டும் போது, புல்லும் நம்மை அவமதிக்கிறது!' (ந.பு.44.30)

(இது ரொம்ப ஓவர்! சாகும் போதும் பழமொழி தேவையா?!)

என்று இரணியன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, நரசிம்மம் மார்பைப் இரு கூறாகப் பிளக்கிறதாம் - ஐராவதம், துர்வாசர் கொடுத்த தாமரை மாலையைத் தன் காலில் போட்டு நசுக்கியது போல்!

நரசிம்மத்தின் நகத்தில் இருந்து, இரணியன் மார்பு, இரண்டு கூறுகளாகக் கீழே விழுகின்றது! இதைப் பார்த்த நரசிம்மத்தின் கண்களிலும், வாயிலும் சிரிப்பு!

மார்க்கண்டேய ரிஷி, ஸஹஸ்ராணிகருக்கு, நரசிம்ம புராணத்தில், இரணிய வதத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.

***

ரணியன் அனுப்பிய அசுரர்களை வதைத்த பின்னர், இரணியனுடன் போர் புரிகிறான் நாரயணன். இந்தப் போரை அற்புதமாக 6 கவிகளால் வருணிக்கிறார் கம்பர் (இதனைப் பின்பு பார்க்கலாம்)! போரின் முடிவில், மேலும் 4 கவிகளால் இரணியனை எம்பெருமான் வதைத்தமையைப் பாடுகிறார்.

வாளொடு தோளும், கையும், மகுடமும், மலரோன் வைத்த
நீளிருங் கனக முட்டை நெடுஞ்சுவர் தேய்ப்ப, நேமி

கோளடும் திரிவது என்ன, குலமணிக் கொடும்பூண் மின்ன,

தாளினை இரண்டும் பற்றிச் சுழற்றினன் தடக்கை ஒன்றால்.
(280)

இரணியன் கால்களிரண்டையும், தன் ஒரு கையால் சிம்மம் பிடித்துச் சுழற்றியதாம்!

சுழற்றிய காலத்து, இற்ற தூங்கு குண்டலங்கள் நீங்கி,

கிழக்கொடு மேற்கும் ஓடி விழுந்தன; கிடந்த இன்றும்,

அழல்தரு கதிரோன் தோன்றும் உதயத்தோடு அத்தமான,

நிழல் தரும் காலை, மாலை நெடுமணிச் சுடரின் நீத்தம்.
(281)

சுழற்றிய போது, அவன் காதிலிருந்த குண்டலங்கள், கிழக்கு, மேற்குத் திசைகளுக்குச் சென்று விழுந்தனவாம்! அவையே, இன்றும் சூரியன் உதிக்கும்போதும், மறையும்போதும் நமக்கு நிழல் தருகின்ற மலைகளாம்!

போன்றன இனைய தன்மை; பொருவியது இனையது; என்று
தான் தனி ஒருவன் தன்னை, உரை செயும் தரத்தன் நானோ?

வான் தகு வள்ளல், வெள்ளை வள்ளுகிர் வயிர மார்பின்

ஊன்றலும்; உதிர வெள்ளம் பரந்துளது உலக மெங்கும்.
(282)

பரமபதம் தருகின்ற வள்ளல், வெண்மையான கூரிய நகங்களை மார்பில் ஊன்றிய உடனேயே ரத்தம் உலகெங்கும் பரவியதாம்!

ஆயவன் தன்னை, மாயன், அந்தியின் அவன் பொற் கோயில்

வாயிலின் மணிக்க வான் மேல், வயிரவாள் உகிரின் வாயின்

மீயெழு குருதி பொங்க, வெயில் விரி வயிர மார்பு

தீயெழப் பிளந்து நீக்கி, தேவர் தம் இடுக்கண் தீர்த்தான்!


அரண்மனை வாயில் படியில், அவன் மார்பை, தீப்பொறி உண்டாகப் பிளந்து, தேவர்கள் துன்பம் தீர்த்தான் நரசிம்ம மூர்த்தி!

பிரகலாதன் சொன்னதை நிரூபிக்க வந்தாலும், இரணியன் மரணம், தேவர்கள் இன்னல் தீர்ப்பதற்காகத் தான் என்று கம்பர் கருதுகின்றாரோ?


***

செவ்வை சூடுவார் பாகவதத்தில், வதத்தை விளக்க எழுதிய ஒரே கவிதையை (கழை சுளி களிறு அன்னானை ... அன்றே. 1692) நாம் முன்னமேயே (’அளைந்த கைகள்’ பதிப்பில்) பார்த்தோம்.

மூல பாரதத்திலும், இரணிய வதம் சுருக்கமாகவே உள்ளது (2 சுலோகங்கள் - 7.14.8.28-29). அதன் தமிழாக்கம் இதோ:

'நாராயணனுடைய ஒளியினால் கண்களை மூடிக் கொண்டு சண்டை செய்யும் அசுரனை, அட்டகாசமாகச் சத்தம் செய்து கொண்டு பிடித்தார். பாம்பு எலியைப் பிடிக்கும்போது எலி எவ்வாறு துன்பப் படுமோ, அவ்வாறு இரணியன் நரஸிம்மர் பிடியில் துன்பப் பட்டான்.

வஜ்ராயுதத்தாலும் காயப் படுத்த முடியாத தோலை உடைய அசுரனை, நரஸிம்மர், இரணியன் அரண்மனையில் வாசல் படியில், தன் தொடையில் போட்டுக் கொண்டு நகங்களால், பகலும் இல்லாத, இரவும் இல்லாத மாலை வேளையில், அதிக விடமுள்ள பாம்பைக் கருடன் கிழிப்பது போல், விளையாட்டாகக் கிழித்தார்.'

எம்பெருமான் குடலை உருவினாரா, இல்லை மார்பைப் பிளந்தாரா?

***

ஸ்ரீமத் பாகவதத்தில், நரசிம்மம், 'அசுரனைக் கிழித்தார்' என்றே இருக்கின்றது (7.14.8.29). 'உடல்' என்றால், மார்பா? குடலா? உடலா?

இந்தக் கேள்வியை முன்பு ஒரு அன்பரரும் ('கலவை' என்று நினைக்கிறேன்) கேட்டிருந்தார்.

சூடுவார் பாகவதத்தில், 'மார்பைக் கிழித்து, குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டார்' என்றும், நரசிம்ம புராணத்தில், 'மார்பைக் கிழித்தார்' எனவும், கம்பராமாயணத்தில் 'மார்பில் நகங்களை ஊன்றினார்' எனவும் உள்ளது! விஷ்ணு புராணத்தில், நரசிம்ம அவதாரம் மற்றும் வதம் பற்றி அதிகம் பேசப் படவில்லை.

பொதுவாக, பெரியோர்கள் இரணிய வதத்தை அதிகம் பேசுவதில்லை (நரசிம்மாவதாரத்தை எழுதுவதனால் அடியேண் இதை விளக்கமாக எழுத வேண்டியதாயிற்று).

இரணிய வதம் செய்யும் உக்ர நரசிம்மர் (படங்கள், சிலைகள், கோயில் சிலைகள்) பார்ப்பதற்குப் பயங்கரமாக இருப்பார். இந்தக் காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருந்தால் சிலருக்கு மனக்கலக்கம் ஏற்படலாம் (இதை அனுபவித்துள்ளதாக, சிலர் அடியேனிடம் கூறியுள்ளனர்). இதனாலேயே, 'வீட்டில் உக்ர நரசிம்மரை வைக்கக் கூடாது' என்றும் பெரியோர் கூறுவர். மாறாக லக்ஷ்மி நரசிம்மரை வீட்டில் வைத்து வணங்குதல் நன்று! திருவும் சேர்ந்து இருந்தால் நலம் தானே?

மீண்டும் பாசுரத்திற்குத் தாவுவோமா?

***

திருவரங்கம், தீவரங்கம் = தீவும், அரங்கமும்!

காவிரி! அரங்கனுக்காகவே படுக்க இடம் கொடுத்து, உறங்கும் அவன் திருவடிகளைத் தன் அலைக் கைகளால் வருடிக் கொடுத்து, மீண்டும் ஓடும் காவிரி!

அதனுள் மூன்று தீவுகள்! ஆதி ரங்கம் (ஸ்ரீரங்கப் பட்டிணம்)!

மத்ய ரங்கம் (சிவ சமுத்திரம்),!


இதில் கடைக்குட்டியான அந்த்ய ரங்கம் தான் நம் திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!


இந்த மூன்று தீவுகளும், மிகவும் செழிப்பானவை! காவிரியினால் வளப்படுத்தப் பட்ட இந்த தீவுகளில் வளர்கின்ற யாவையும், எவரும் கொடுத்து வைத்த வைகள்/வர்கள்! அதீதமான வளர்ச்சி! அரங்கனின் பெயரைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தால் இருக்காதா என்ன?

இப்படிப் பட்ட குளிர்ச்சியான அரங்கத்தில் நன்கு முற்றிய, வளர்ந்த, செந்நெல் கதிர்கள் வளர்கின்றன! அருகே, அழகிய தாமரைகள்! திருவின் தயவால், ஏற்கனவே சிவந்து, அழகாக இருக்கும் தாமரைகள், அரங்க நாமம் எனும் உரமும் சேர்ந்து, மிகவும் உயர்ந்து இருக்கின்றன!


வழக்கமாகத் தங்களை விட தாழ்ந்து இருக்கும் தாமரைகளைப் பார்க்கின்ற நெற்கதிர்களுக்கு, மிகவும் ஆச்சரியம்! தாமரைகள், தங்களை விட உயரமாக வளர்ந்து, சிவந்து எம்பெருமான் திருவடி போல் தெரிகின்றன!


நெற்கதிர்களுக்கு, ஒரு வேளை அரங்கத்தில் வாழும் நரசிம்மன், மீண்டும் வாமன அவதாரம் எடுத்து விட்டாரோ என்ற வியப்பு! உடனே, வாமனனின் திருவடிகளை வணங்குவதற்காக, தங்கள் தண்டுகளை சற்று வளைத்து, தலைகளை சற்றே தாழ்த்துகின்றன!


(சில வகைத் தாமரைகளின் தண்டு, நீண்டு, நேராக இருக்கும்! விளைந்துள்ள முற்றிய கதிர்கள், நெல்லின் பளுவால், சற்று வளைந்து இருக்கும்! அந்த சமயத்தில், தாமரைகள் நெற்கதிர்களை விட உயரமாக இருக்கும், அல்லது அப்படித் தோன்றும்! தாமரையும், அருகே வளைந்து நெற்கதிர்கள் இருக்கும் இந்தக் காட்சியைத் தான் ஆழ்வார் இப்படி வருணிக்கின்றார்!)

இப்படி, நரசிம்மன் வாமன அவதாரம் எடுத்த திவ்ய தேசம், அரங்கமே என்கின்றார் பெரியாழ்வார்!

- அரங்க நரசிம்மர் மீண்டும் வருவார்!
Read more »

Saturday, January 02, 2010

ரங்க சிம்மன்


20 திவ்ய தேசங்களின் மேல் பாடல்கள் பாடியுள்ள பெரியாழ்வார், மற்ற எல்லாத் திவ்ய தேசங்களையும் விட, பூலோக வைகுண்டமாகிய திருவரங்கத்திற்கு மிகவும் அதிக ஏற்றம் தருகிறார்!

திருவரங்கத்தைப் போற்றும் 'மாதவத்தோன்' என்று தொடங்கும் இந்தத் திருமொழியின் 8-ம் பாசுரத்தில், நரசிம்மன் இருக்கும் ஊர் திருவரங்கம் என்கின்றார்!

***

வல் எயிற்றுக் கேழலுமாய்* வாள் எயிற்றுச் சீயமுமாய்*
எல்லை இல்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானூர்*

எல்லியம் போது இருஞ்சிறை வண்டு*
எம்பெருமான் குணம் பாடி*
மல்லிகை வெண் சங்கு ஊதும்* மதிளரங்கம் என்பதுவே.
மாதவத்தோன் 4-8-8

(எயிறு - கொம்பு, பல்; கேழல் - வராகம்; வாள் - ஒளி வீசும்; சீயம் - சிங்கம்; இடந்தான் - தூக்கினான்; எல்லி - இரவு; இருஞ்சிறை - இரு சிறகுகள்; சங்கு ஊதும் - தேன் குடிக்கும்; மதிள் - பிரகாரங்கள்)

வலிமையுடைய கொம்புகள் உடைய வராகமுமாய், ஒளி வீசும் பற்கள் உடைய நரசிம்மமாய் அளவு கடந்த பூமியையும், இரணியனையும் தூக்கியவன் (இருக்கின்ற) ஊரானது,

அந்திப் போதில் திடமான சிறகுகளை உடைய வண்டுகள், எம்பெருமானுடைய குணங்களைப் பாடிக் கொண்டு, வெண் சங்கு போல் நிறமுடைய மல்லிகைப் பூக்களின் உள்ள தேனைக் குடிக்க இடமாய் உள்ள பிரகாரங்களை உடைய அரங்கமே!

எம்பெருமான் இரணியனையும் 'எயிற்றால்' தூக்கியதாகப் பெரியாழ்வார் கூறுகின்றரோ?

***

ராஹ அவதாரத்தின் போது இரணியாட்சனைக் கொன்று, தன் கொம்புகளால் ('வல் எயிற்று'), பூமியை வெளியே தூக்கி வருகின்றான் ('எல்லை இல்லாத் தரணியை இடந்தான்') எம்பெருமான்!


ஆனால் இரணியாட்சனைக் கொன்றது, தன் கொம்புகளால் அல்ல! பாகவதம், இரணியாட்சனை எம்பெருமான் 'கதையால் தலையில் அடித்துக் கொன்றார்' என்றே கூறுகிறது! கொம்புகள், பூமியைத் தூக்குவதற்காவே வந்ததாம்!

(சிலர், சக்கரத்தாழ்வாரே கொம்பு ரூபத்தில் வந்ததாகக் கூறுவர்)

இரணியனை வதம் செய்வதற்காக, எம்பெருமான் நரசிம்மமாக வருகின்றான்! கைகளில் சங்கு, சக்கரம், வேல், போன்ற பல ஆயுதங்கள்! கூரிய நகங்கள் - கைகளிலும், கால்களிலும்!

எதனால் இரணியன் கொல்லப் படுவான் என்று பகவானுக்குச் சந்தேகம் இருந்ததால், எதற்கும் இருக்கட்டுமே என்று, கூரிய பற்களும், கத்தி போன்று கூர்மையான நாக்கும் இருந்ததாக பாகவதம் வர்ணிக்கும்!

நகங்களால் தான் இரணியனுக்கு மரணம் ஏற்படுகின்றது! இந்த நகம், பல், நாக்கு ஆயுதங்களா?

***

இரணியன் பெற்ற வரங்களில் அதிகம் பேசப்படாதது ஒன்று: உயிர் உள்ளவைகள், அல்லது உயிரற்றவைகள் இரண்டினாலும் மரணம் இல்லை என்பதே!

'பற்களுக்கு உணர்ச்சியும், உயிரும் உண்டு' என்கிறது விஞ்ஞானம் (உள்ளே உள்ள நரம்புகள் மூலம்)! ஆனால் நகங்கள்?

விஞ்ஞான ரீதியாக, நம்முடைய நகங்கள் 'Dead Cells'. இருந்தாலும், எல்லா நகங்களும், எப்பொழுதும் வளர்கின்றன! நகங்கள் உயிருள்ளவையா? உயிரில்லாதவையா?

இந்தக் குழப்பம் இன்னும் தீராததால், பிரமன் கொடுத்த வரங்களுக்குச் சேதம் ஏற்படாது, இரணியனை வதைக்க எம்பெருமான் தேர்ந்து எடுத்தது நகங்கள்!

எதற்கும் இருக்கட்டுமே என்று பற்களையும் 'கூர்மையாக்கிக் கொண்டு' வந்தானாம் நாராயணன்! கடைசியில், நகங்களால் மார்பைக் கீற, நகங்களில் ரத்தம் உறைகின்றது! பற்களுக்கு வேலை இல்லை! எனவே அது இரணிய வதத்திற்குப் பிறகும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றதாம்!

'வல் எயிற்றுக் கேழலுமாய் எல்லை ல்லாத் தரணியை இடந்தான் ஊர்; வாள் எயிற்றுச் சீயமுமாய் இரணியனை இடந்தான் ஊர்'

என்று மாற்றிப் படித்தால் வரும் பொருள்:

’வலிய கொம்புகளுடன் வந்து, பூமியைத் தூக்கியவன் ஊர்; ஒளி வீசும் பற்களுடன் வந்து, இரணியனைக் கிழித்த ஊர்’

(இரணியன் மார்பை, பற்களால் பிளந்தவன் என்ற பொருள் வராது)

இரண்டு அவதாரங்களுக்குமே, 'இடந்தான்' என்ற பதத்துக்கு, 'கிழித்தான்' என்ற பொருள் பொருந்தும் - வராக அவதாரத்திலும், பிரளய ஜலத்தைக் கிழித்துத் தானே பூமியை எடுத்தான்?

இப்படி அவதாரங்கள் எடுத்தவன் ஊர் எது என்கின்றார் ஆழ்வார்?

***

விசாலமான மதிள்களை உடைய ஊராம் அது! உள்ளே, பல சோலைகள்! பூங்கொத்துக்கள்!

சில முனிவர்கள், எம்பெருமான் இருக்கும் அந்த ஊரின் மேல் தீராத காதல் கொள்கின்றனர்! அந்த ஊரை விட்டுப் பிரிய மனமில்லாமல், மறு பிறவியில் அதே ஊரில் வண்டுகளாகப் பிறக்கின்றனர்!

இந்த (முனி)வண்டுகள், தூங்குவதற்காக, மாலைப் பொழுதில் மலர்களைத் தேடி வருகின்றன!

அங்கு, வெண்மையான சங்கு போல் நிறமுள்ள மல்லிகை, மலர்கள்! இந்த மலர்களில், வண்டுகள் அமர்ந்து, தேன் குடிக்கின்றன!

(‘சங்கு ஊதும்என்றால், ’கடைசியில் ஊதுகின்ற சங்கு’ இல்லீங்கோ! , ’தேன் குடிக்கும்’ என்று அர்த்தமுங்கோ!)

தேன் குடித்த வண்டுகளுக்கு, பூர்வ ஜன்ம வாசனை வருகின்றது! ஆனால், எம்பெருமானைப் பாட நினைத்தாலும் வார்த்தைகள் வர மறுக்கின்றன! அந்த வண்டுகள் போடும் சப்தம், அவன் குணம் பாடுவது போலுள்ளது!


'ரங்கா, ரங்கா' என்ற சத்தம் வருகின்றது (இது தான் ர[ரீ]ங்காரமோ?)

(இந்த ஊருக்கு அரங்கம் என்ற பெயரும் இதனால் தான் என்ற கதை உண்டு)

பாசுரத்தின் கடைசி இரண்டு வரிகளை,

எல்லி அம் போது, வெண் மல்லிகை சங்கு ஊதும் இருஞ்சிறை வண்டு, எம்பெருமான் குணம் பாடும் மதிள் அரங்கம் என்பதுவே

என்றே பொருள் கொள்ள வேண்டும்!

அரங்கத்தில் இருப்பவன் நரசிம்மன் என்கின்றாரே ஆழ்வார்?

***

இடம்: கோயில் மண்டபம்
நேரம்: Trial நேரம்

(ஒரு வைணவப் பெரியாரும், புலவர் ஒருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்)

புலவர்: அடியேன் திருவெண்ணெய் நல்லூரில் இருந்து வந்துள்ளேன்! அடியேனுக்கு ராமன் பேரில் மிகுந்த அன்பு உண்டு! அந்த அன்பினால், ராம காதையை எழுதியுள்ளேன்!

வைணவப் பெரியார்: இந்தக் கோயிலில் இதை அரங்கேற்றும்!

புலவர்: அரங்கேற்றத்தின் முன் தங்களைப் போன்ற பெரியவர் யாராவது படித்து விட்டு, கருத்துக்களைக் கூறினால் அரங்கேற்றம் எளிதாகும்! தாங்கள் உதவுவீர்களா?

வைணவப் பெரியார்: அடியேன் முடிந்தவரை உதவுகிறேன். தாங்கள் ராமனைப் படித்துக் காட்டுங்கள்!

(புலவர் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து, தான் எழுதிய கதையை அவருக்குப் படித்துக் காட்டுகின்றார்)

வைணவப் பெரியார்: ஒரு சிறு எண்ணம்! ஆழ்வார்களை முன்னிட்டு ராமன் கதையைச் செய்தால், ஒப்புதல் எளிதில் கிடைக்கும்!

புலவர்: நன்றி பெரியவரே!

(புலவர், கலக்கத்துடன், எம்பெருமானிடம் சென்று கண்ணீர் வடிக்கிறார்)

எம்பெருமான் (அசரீரியாக): புலவரே! நம் சடகோபனைப் பாடினையோ? பாடினால் தான் உம் ராம காதையை நாம் அங்கீகரிப்போம்!


(புலவர் முகம் மலர, எம்பெருமானை வணங்கிச் செல்கிறார்)

***

ப்போது எல்லாம் தெரிந்திருக்குமே! புலவர், கம்பநாட்டாழ்வார்! அந்த வைணவப் பெரியார் ...


நாதமுனிகள்! வைணவர்களின் முதல் குரு (நம்மாழ்வாருக்குப் பிறகு)!

இது நடந்த இடம், திருவரங்கத்தில், 5-ம் திருச்சுற்றில் உள்ள திருவந்திக் காப்பு மண்டபத்தின் கீழ்ப்புறம்.

(இதனை சோழ மன்னன் அகளங்கனின் திருச் சுற்று என்றும் கூறுவர்)

மண்டபத்தின் இடது பாகத்தில் ஒரு கோயில் உண்டு. ஸ்ரீ நாத முனிகளும், அவரது சீடரான திருவரங்கப் பெருமாள் அரையரும், நாதமுனிகளின் பேரரான ஆளவந்தாரும் கோயிலில் நமக்குத் தரிசனம் தருகின்றார்கள்!

(வேறு சிலர், கம்பர் சில அறிஞர்களைக் கூப்பிட்டு அவர்களிடம் படித்துக் காட்ட, அவர்கள், ராம காதை ஆழ்வார் சம்பந்தம் இல்லாததால் அதை முன்னிட்டுப் பல குறைகள் கண்டு பிடித்ததாகவும் கூறுவர். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுவது போல், கம்பர் எழுதிய சடகோபர் அந்தாதிச் செய்யுள்:

பாவைத் திருவாய்மொழிப் பழத்தை பசுங்கற்பகத்தின்
பூவைப் பொருகடற் போதாவமுதைப் பொருள் சுரக்குங்
கோவைப் பணித்த வெங்கோவை அல்லா வென்னைக் குற்றங்கண்டென்
னாவைப் பறிப்பினு நல்லோரன்றோ மற்றை நாவலரே!)

நாதமுனிகள் எதிரே, முன் கம்பத்தில் கை கூப்பிய வண்ணம்,கம்பர் நிற்கின்றார்! அவருக்கு நன்றி செலுத்துகிறாரோ?

***

இடம்: திருவரங்கம், கம்ப மண்டபம்
வேளை: அரங்கேற்ற வேளை

(கம்பர், சடகோபர் அந்தாதி எழுதிய பின், ராமாயணத்தை அரங்கேற்றம் செய்கின்றார். பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்க, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது. அதன் நடுவே, திடீரென்று இரணியனும், பிரகலாதனும் ’Entry' ஆகின்றனர்)

ஒரு புலவர்: இது தவறு! ராமாயணத்தில் இரணியன் வருவதற்குக் காரணமே இல்லை!

('சும்மா நீளமா வசனம் பேசுவதற்கென்றே எல்லாக் கதைகளிலும், காப்பியங்களிலும் யாராவது ஒருத்தர் கிளம்பிடறாங்கப்பா!' என்று அவையில் ஒருவர் முணுமுணுக்கிறார்)

இன்னொருவர்: உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?

பொழுது போகாமல் உட்கார்ந்திருப்பவர் ஒருவர்: ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது!

அவைத் தலைவர்: புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!

(பெருமூச்சுடன், கம்பர் தொடர்கின்றார்)

நசை திறந்து இலங்கப் பொங்கி, 'நன்று நன்று' என்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி

இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்
;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது சிங்கட் சீயம்!
(யு.கா - இ.வ.ப - 257)

'நாடி நான் தருவேன்!' என்ற நல் அறிவாளன், நாளும்
...

ஒரு புலவர் (வேகமாக எழுந்து): புலவரே! முந்தைய பாடலை மீண்டும் படியுங்கள்!

(கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்குகிறார்)

புலவர்: 'சிரித்தது சிங்கட் சீயம்' என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாரவது இதைப் பார்த்ததுண்டா?

(அவையில் சிரிப்பு!; கம்பர், இந்தச் சிரிப்பை 'கண்டுக்காமல்', அடுத்த பாசுரத்தை ஆரம்பிக்கிறார்)

அவைத் தலைவர் (கம்பரை நோக்கி): புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!

(கம்பர் பதில் தெரியாமல் திகைக்க, அதைக் காணச் சகியாமல் சூரியன் மறைய, அன்று அரங்கேற்றம் நிறுத்தப் படுகிறது; கம்பர் இரவு முழுவதும் மணத்தூண் அருகிலேயே, கண்களில் நீர் வழிய, அரங்கனை வேண்டி நிற்கின்றார்)

***

இடம்: கம்ப மண்டபம்
நேரம்: மறு நாள் காலை

(அரங்கேற்றம் தொடர்கிறது ...)

அதே புலவர் (மீண்டும்): நேற்றிரவு, உங்கள் கனவெல்லாம், சிங்கம் சிரிப்பதாகவே வந்திருக்குமே?

(அவையில் பலத்த சிரிப்பொலி ... திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

(ஒரே ஒரு கணம்! கம்ப மண்டபத்தின் மேட்டுப் புறத்திலே எழுந்தருளியுள்ள அழகிய சிங்கர், பெருமுழக்கத்துடன் சிரித்து, பின் மறைகிறார்! அனைவரும் மெய் சிலிர்க்கின்றனர்! கம்பரின் கண்களிலே ஆனத்தக் கண்ணீர்!)

(விக்கிரகமே சிரித்தால், சிங்கம் சிரிப்பதில் என்ன ஆச்சரியம்! ராம காதை அரங்கேற்றம் தடங்கல் இன்றி இனிதே நிறைவேறுகின்றது!)

(சிலர், அவைத் தலைவர் நாத முனிகள் தான் என்றும், சிலர், இதன் பின்னர் நாத முனிகளிடம் அங்கீகாரம் பெற்றார் என்றும் கூறுவர்)

***

ம்ப மண்டபத்திற்கு எதிரே, இன்னொரு பெரிய மண்டபம் உண்டு.

இங்கு, யக்ஞமூர்த்தி என்பவருக்கும், ராமாநுஜருக்கும், விவாதம் நடந்ததாம்! அப்போதும் இதே மேட்டு அழகிய சிங்கர், தம் தலை அசைப்பினால், ராமாநுஜரை வெற்றி அடையச் செய்ததாக குரு பரம்பரை பிரபாவம் கூறுகின்றது!

பிரகலாதன் துயர் துடைத்தவனும், கம்பன் துயர் துடைத்தவனும், ராமாநுஜர் துயர் துடைத்தவனும், அரங்கனூரில் இருக்கும் நரசிம்மன் தானே?

- அரங்க சிம்மனே போற்றி!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP