Sunday, April 24, 2011

இயேசுநாதர்-நம்மாழ்வார்! ஏலி ஏலி-லாமா சபக்தானி?

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள்! - Happy Easter! Happy Sunday!
* "ஏலி ஏலி லாமா சபக்தானி "? (என் தேவனே! தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?) = இயேசுநாதப் பெருமான் சொன்ன கடைசி வார்த்தை இது!
* "என்னைப் போர விட்டிட்டாயே "? = நம்மாழ்வார் சொன்ன கடைசி வார்த்தை இது!

ஆகா! என்ன ஆச்சரியம்! ரெண்டு வாய்மொழியும் ஒன்னு போலவே இருக்கு-ல்ல?
இயேசு பிரானின் இனிய நாளான இன்று, நசரேயன்-மாறன், இருவரின் அகவியலையும் கொஞ்சம் எட்டிப் பார்க்கலாமா?

(பிரேசில் சென்றது, வாழ்வில் ஒரு திருப்புமுனை!
அப்போது கண்ட Jesus Christ - Redemeer on the Mount)
(அவர் அழகே அழகு!)


பள்ளிக் காலத்திலே என் நண்பராய், என்னுடன் பலவும் கதைத்த, Fr. Rosario Krishnaraj அவர்களுக்கு இப்பதிவைக் காணிக்கை ஆக்குகின்றேன்!

என்னை முதல்வெள்ளிப் பூசையில்(First Friday Mass), முதன்முதலில் பாட வைத்ததும் அவரே! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எல்லாம் எனக்குத் தான் வந்து சேரும்!
சங்கத் தமிழ் பற்றியும், தமிழ்க் கடவுளர் யார் என்றும் அவரிடம் அப்பவே விவாதம்! :) ஆனாலும் தபால்தலை தருவது மட்டும் நிற்கவே இல்லை :)

சரி...பதிவின் மையத்துக்குப் போகும் முன்னர்....,
கதை போல் இருக்கும் சில நல்ல சுவிசேஷங்களை வாசித்துப் பாருங்களேன்! வாயளவில் அல்ல! உங்கள் மனத்தளவில்!
மத்தேயு:27 (ஏலி ஏலி லாமா சபக்தானி)

28. அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,

29. முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின் மேல் வைத்து, அவர் வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற் படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம் பண்ணி,

30. அவர் மேல் துப்பி...

40. "தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக் கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைத் தூஷித்தார்கள்.

46. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

47. அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
48. உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற் காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
49. மற்றவர்களோ: பொறு! எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.

50. இயேசு மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார்!


மாற்கு:16 (முதல் தரிசனம் மரியா மகதலேனாவுக்கு)


9. வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்த பின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல் முதல் தரிசனமானார்.

கர்த்தருடைய தூதன் வானத்தில் இருந்து இறங்கி வந்து, வாசலில் இருந்த கல்லைப் புரட்டித்தள்ளி, அதின் மேல் உட்கார்ந்தான். காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போல் ஆனார்கள்.

தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;

12. மூப்பரோடே கூடி வந்து, ஆலோசனை பண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
13. நாங்கள் நித்திரை பண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
15. அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள் வரைக்கும் பிரசித்தமாய் இருக்கிறது.

14. அதன் பின்பு பதினொரு சீஷருக்கும் போஜன பந்தி இருக்கையில் தரிசனமாகி.....நம்பாமற் போனதின் நிமித்தம், அவர்களுடைய இருதய கடினத்தைக் குறித்தும், கடிந்துகொண்டார்.

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே இருக்கிறேன் என்றார்.

19. இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசின பின்பு, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். ஆமென்!!!


என்ன மக்களே, விவிலியம் என்னும் பைபிள் வசனத்தை வாசித்தீர்களா?
Bible Reader Widget-ஐ, பந்தலின் கீழே கொடுத்துள்ளேன்! இனி, அதுவும் மாதவிப் பந்தலில் நிரந்தரமாக இருக்கும்! அப்பப்போ பார்த்து மகிழ்ந்து கொள்ளுங்கள்! :) இப்போ நாம் பேசு பொருளுக்கு வருவோம்!

* இயேசுநாதப் பெருமான் = நசரேயன் (Son of Nazareth, a town in Israel)
* மாறன் நம்மாழ்வார் = குருகையர் கோன் (Kurugoor, a town in Nellai)

இருவருமே இளைஞர்கள்! இருவருக்குமே 32 வயது தான்! அத்துடன் முடித்துக் கொண்டார்கள்!
முன்னவர் 02 BC - 30 CE; பின்னவர் 5th-7th நூற்றாண்டு!

இயேசு பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாறன் படவில்லை! ஏன்-ன்னா இயேசுவின் பிரச்சாரம், நேரடிப் பிரச்சாரம்!
மக்களிடையே கலந்து போதித்தார்! அதனால் "மேலாள" மனங்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்! "நாலாம் வருணத்து" நம்மாழ்வார் அப்படி இறங்காததால் தப்பித்தார் போலும்! :)

* இருவருமே குல முதல்வர்கள்! - இயேசு இல்லாமல் கிறித்தவம் இல்லை! மாறன் இல்லாமல் தமிழ்-வைணவம் இல்லை!
* எல்லாத் தேவாலயத்திலும் சிலுவை உண்டு! எல்லாக் கோயில்களிலும் சடாரி உண்டு! (நம்மாழ்வாரே சடாரி - இறைவனின் திருவடி)


இருவருமே அடித்தட்டு மக்களிடம் சேர்பிக்க வந்தார்கள்!
* இயேசு, இறைவனின் வசனங்களை அனைவருக்கும் பொதுவில் பொழிந்தார்! மாறனோ, ஒரு சிலரின் கட்டுக்குள் மட்டுமே இருந்த வேதங்களை, அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம், தமிழாக்கி வைத்து விட்டார்! - "வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன்"

* முன்னவர், வேசிப் பெண்ணுக்கும் மீட்சிப் பாதையைக் காட்டினார்! பின்னவர், பெண்களும் "திராவிட வேதம்" ஓத வழி வகுத்தார்!
எய்தற்கு அரிய மறைகளை, ஆயிரம் இன்தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபன்!

* இயேசு தம் கையால் ஒரு நூலும் எழுதவில்லை! அவர் சீடர்களே, மலைப்பொழிவு முதலான சுவிசேஷங்களை எழுதி வைத்தார்கள்! பின்னாளில் ஊரெங்கும் பரப்பியும் வைத்தார்கள்!
* மாறனும் தம் கையால் எதுவும் எழுதவில்லை! அவர் சீடரான மதுரகவியே, அவர் சொல்லச் சொல்ல எழுதி வைத்தார்! பின்னாளில் மதுரைச் சங்கப் புலவர்களைச் சந்தித்து அரங்கேற்றி, பின்பு ஊர் ஊராகப் பரப்பியும் வைத்தார்!

ஒற்றுமை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்தா எப்படி? வேற்றுமை என்னான்னு பார்க்கலாமா?
* முன்பே சொன்னபடி, முக்கியமான வேற்றுமை என்னன்னா, நம்மாழ்வார் கொடுமைக்கு உள்ளாகவில்லை! இயேசுபிரானுக்கு நடந்த கொடுமைகளோ, கற்பனை செய்து பார்க்கவும் மனம் வலிக்கும்!
* இன்னொரு முக்கிய பரிமாணம் இருக்கு! அதான் காலத்தின் கோலம்! = இயேசுநாதர் / நம்மாழ்வாரின் "சாதி"!

** மாறன் (எ) நம்மாழ்வார் = பிறப்பால், நான்காம் வருணம்! "கீழ்ச் சாதி"!
ஆனாலும் அவருடைய திருவாய்மொழியை எல்லாப் பெருமாள் கோயில்களிலும்...அதுவும் கருவறைக்குள்ளேயே...அதுவும் அர்ச்சகர்களே...ஓதி ஆக வேண்டும்!
"நாங்க கருவறையில் வடமொழி சொல்லிக்கறோம்; நீங்க வேணும்-ன்னா, ஓதுவாரை வைச்சி, வெளியில் ஒரு ஓரமா இருந்து தமிழ் ஓதிக்கோங்க-ன்னுல்லாம் சொல்ல முடியாது! அடி பின்னிருவாங்க! :))

(உம்ம்ம்ம்...தில்லையில் தான் இன்னமும் மோசம்: ஓரமாக் கூட இல்லாது, பொன்னம்பலத்துக்கும் கீழே இறங்கி வந்து, படிக்கட்டுக்கு கீழே இருந்து தான், ஓதுவார் ஓதவே முடிகிறது:( முருகா, இதுக்கு என்னிக்குத் தான் விடிவோ?)

** இயேசுபிரான் = பிறப்பால் யூதர்!
ஆனால், இன்று வரை எந்த யூதரும், இயேசுவின் வசனங்களை ஏற்பதில்லை!
வேறு பல இனத்தவர்/நாட்டவர் எல்லாம் ஏற்றுக் கொண்ட ஒருவரைச் சொந்த இனம் மட்டும் இன்றும் மறுதலித்துக் கொண்டு தான் இருக்கிறது! பொதுவான வசனங்களைக் கூட ஏற்காமல் மறுதலிக்கிறார்கள்! ஏனோ? :(((
இங்கே, மாறனை மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் (அ) ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டார்கள்? - இன்று வரை எனக்கு வியப்பிலும் வியப்பே!


சரி, வெளி ஒப்பீடுகள் ரொம்ப வேண்டாம்! அக ஒப்பீடுகள் தான் முக்கியம்! இயேசுபிரானின் வசனம்-மாறனின் பாசுரத்துக்கு வருவோமா?
* இயேசுபிரானின் வசனங்கள்-ன்னு பார்த்தால், அனைத்திலும் மகுடமாய், மனமாடத்திலே தீபமாய் ஒளிர்வது = Sermon on the Mount (மலைப்பொழிவு)!
* நம்மாழ்வாரின் நான்கு தமிழ் நூல்களில், ஈரம் பொலிந்து நிற்பதென்னவோ திருவாய்மொழி தான்!.........திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்!

மலைப்பொழிவிலும், வாய்மொழியிலும் உள்ள சில ஒற்றுமைகளை மட்டும் இன்னிக்கி பார்ப்போம்!
(பாசுர விளக்கமெல்லாம் சொல்லாம, புரியும் படி பத்தி பிரித்து, அதே கலரில் கொடுத்திருக்கேன்! பொருள் புரியலீன்னா பின்னூட்டத்தில் கேளுங்க! மற்ற அன்பர்கள் பதில் சொல்லுவாய்ங்க :)

மத்தேயு 5:16 - பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவை மகிமைப் படுத்தும்படி, உங்கள் "வெளிச்சம்" அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது.
திருவாய்மொழி 3:3:1 - எழில்கொள் "சோதி", எந்தை தந்தை தந்தைக்கே, ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்!

மத்தேயு 11:25 - பிதாவே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
திருவாய்மொழி 3:3:4 - ஈசன் வானவர்க்கு அன்பன் என்றால், அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு? நீசன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே!
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:7 - நீயோ ஜெபம் பண்ணும் போது, அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு; அன்றியும் நீங்கள் ஜெபம் பண்ணும்போது, அஞ்ஞானிகளைப் போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படும் என்று நினைக்கிறார்கள்.

திருவாய்மொழி 1:2:7 - அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழில் அஃதென்று--"அடங்குக உள்ளே"
திருவாய்மொழி 1:2:8 - உள்ளம் உரை செயல்--உள்ள இம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--"உள்ளில் ஒடுங்கே"
-----------------------------------------------------------------------------

மத்தேயு 6:25 - ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்;
திருவாய்மொழி 6:7:1 - உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம், கண்ணன் எம்பெருமான் என்றே....

மத்தேயு 23:9 - பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாது இருங்கள்; பரலோகத்தில் இருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாய் இருக்கிறார்.
திருவாய்மொழி 3:9:1 - என் நாவில் இன்கவி, யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன், என் அப்பன், எம்பெருமான் உளன் ஆகவே.
-----------------------------------------------------------------------------

மத்தேயு 4:17 - அதுமுதல் இயேசு: மனந் திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்து இருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
திருவாய்மொழி: - பொலிக, பொலிக, பொலிக, போயிற்று வல்லுயிர்ச் சாபம், கலியும் கெடும், கண்டு கொண்மின்!

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக......இரு பெரும் தத்துவங்களும் சங்கமிப்பது இந்த ஒரு புள்ளியில்......
* நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்! = * ஆறும் நீ, பேறும் நீ!
சாதனமும் நற்பயனும் நானே ஆவன்! என் ஒருவனையே சரணம் எனப் பற்று!பதிவின் துவக்கத்தில் சொன்னேன் அல்லவா? "ஏலி ஏலி லாமா சபக்தானி? தேவனே தேவனே, என்னை ஏன் கைவிட்டீர்?" - இது தான் இயேசுநாதரின் இறுதி வார்த்தைகள்!
கிட்டத்தட்ட அதே போல் தான் நம்மாழ்வாரும், உலக வாழ்வை நிறைவு செய்து கொள்கிறார்! வைகுந்தம் புகும் தருவாயில், கடைசிப் பொழிவாக, "என்னைப் போர விட்டிட்டாயே" என்று பாடுகிறார்!
இயேசுபிரானும், நம்மாழ்வாரும், இறுதிக் கட்டத்திலே இறைவனைச் சந்தேகப்பட்டு விட்டார்களா என்ன?

ஹா ஹா ஹா! அப்படியில்லை!
அன்பு ரொம்ப அதீதமாக மிகுந்துவிடும் போது, ஒருவன் தன்னைக் கைவிடவில்லை-ன்னாலும், ஒருத்தி, என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே-ன்னு கேட்பது போலத் தான் இதுவும்!

இயேசுபிரான், தான் உயிர்த்தெழப் போவதை, முன்னமே சீடருக்குச் சொல்லி விட்டார்! ஆக, அவருக்குத் தெரிந்தே தான் இருக்கு, தான் எழுவோம் என்று! அப்பறம் ஏன் "என்னைக் கைவிட்டீரே" என்று சோகம்?
தான் உள்ளான அவமானங்கள் உள்ளத்தை வாட்டியெடுக்க, என்று தான் புரிந்து கொண்டு நடப்பார்களோ? என்ற பாவனையில், அப்படி இறைவனைக் கேட்கின்றார்! - "நீரே என்னைக் கைவிடலாமா?"


நம்மாழ்வாரும் அப்படியே! "முனியே. நான்முகனே, முக்கண்ணப்பா" என்ற கடைசித் திருவாய்மொழியை வைகுந்தம் புகும் தருணத்தில் பாடுகிறார்!
அப்போது மறக்காமல்...சிவபெருமானையும், நான்முகனையும் நினைத்துக் கொள்கிறார்! ஆனால் பெருமாளைப் பார்த்து, ஐயனே என்னை நீயே போர விட்டு விட்டாயோ? என்று கேட்கிறார்!

உம்பர் அந்தண் பாழேயோ? அதனுள் மிசை நீயேயோ?
எம்பரம் சாதிக்கல் உற்று, என்னைப் போர விட்டிட்டாயே??
தீர இரும்பு உண்ட நீர் - அது போல என் ஆருயிரை
ஆரப் பருக, எனக்கு ஆரா அமுது ஆனாயே!!!

நல்லாச் சுடச் சுடக் காய்ச்சிய இரும்பு; தகதக-ன்னு மின்னுது! அந்த இரும்பு தண்ணி குடிச்சா எப்படி இருக்கும்? :) = இரும்பு உண்ட நீர்!
உஸ் உஸ்-ன்னு சத்தம் பொங்க, தண்ணி இருந்த இடமே தெரியாது ஆவி ஆயிரும்-ல்ல? அது போல
என் உயிரைக் குடித்த இரும்பா, என் கரும்பா, அடே "இரும்பு மண்டையா"-ன்னு எம்பெருமானைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார்!
என்ன மக்களே, நசரேயன்-மாறனின் வசன ஒப்பீடுகள் எப்படி இருந்துச்சி? :)


எல்லாத்தையும் விட சுவாரஸ்யமான ஒப்பீடு ஒன்னும் பாக்கி இருக்கு! அதான் "நாயகி பாவம்" (Bridal Mysticism)!"
எதுக்கு ஒரு சிலர் தன்னை இறைவனிடத்திலே பெண்ணாய் பாவித்துக் கொள்ள வேணும்? தான் தானாய் இருப்பது தானே Natural? இதுல என்னமோ இருக்கு டோய்! Bridal Mysticism என்பது Homosexuality என்னும் ஓரினச் சேர்க்கை பாவனையோ?" என்று கூட ஒரு சிலர் கிளப்பி விட்டுள்ளார்கள்! :))

ஆழ்வாரின் "நாயகி பாவம்" (எம்பெருமானிடத்திலே தன்னைப் பெண்ணாய் ஏறிட்டுக் கொள்வது) என்பது கிறிஸ்துவத்திலும் உண்டு! ஆகா.....! "கிறிஸ்தவத்தில் நாயகி பாவனையா"? அடுத்த சில பதிவுகளில் பார்க்கலாமா?.......

இயேசுநாதப் பெருமான் திருவடிகளே சரணம்!
மாறன்-நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!
Read more »

Thursday, April 21, 2011

"தற்கொலை" செய்து கொண்ட நாயன்மார்!

அடியவர்களின் கதைகளை, புராண மிகைகள் களைந்து, மூலநூலில் (திருத்தொண்டர் திருவந்தாதி) உள்ளது உள்ளபடியே எட்டிப்பார்த்து.....
அதை, நம்முடைய அகவியலோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளும் முயற்சியின் தொடர்ச்சியாக.....
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்! - வண்ணான் குலத்தில் பிறந்து வெளுத்துக் கொடுத்தவர்! அவரின் குருபூசை இன்று! (நினைவு நாள் - சித்திரை மாதம் சுவாதி)! பார்க்கலாமா?


தொண்டை மண்டலம் என்னும் நாடு, காஞ்சியை மையமாகக் கொண்டது!
சோழ வளநாடு சோறுடைத்து, பாண்டி முத்துடைத்து, சேரம் வேழமுடைத்து-ன்னு அவிங்கவிங்க பெருமை பாடிப்பாய்ங்க! :) ஆனாலும் அவையெல்லாம் Raw Material என்னும் மண் வளம் மட்டுமே! மனித வளம் (Human Resource) எங்கே? = தொண்டைநாடு சான்றோர் உடைத்து!

சான்றோர்-ன்னா என்ன? = யாரைச் சான்று காட்ட முடிகிறதோ, அவர்கள் சான்றோர்கள்!
அவர்கள் வாழ்வே அவர்கள் சான்று! அதை யாருக்கும் காட்டலாம்!

இப்பல்லாம் நமக்கு ஒரு Proof, சான்று தேவைப்படுகிறது! அந்தக் கடையில் "சரக்கு" எப்படி மச்சி? இந்த வங்கியில் கடன் வாங்கலாமா நண்பா?-ன்னு ஒரு பேச்சுக்கு நண்பர்களைக் கேட்டுக் கொண்டு தான் நகர்கிறோம்!
ஆனால் அந்தச் சான்று ஒத்த வாழ்கைமுறை உள்ளவர்க்கு மட்டுமே! கீழ்த்தட்டு மக்களுக்கு, நடுத்தட்டு மக்களின் சான்று ஏலாது! ஆனால் எல்லாருக்கும் ஏலக் கூடிய சான்று எது? அதைக் காட்ட வல்லரே = சான்றோர்!

* கலையில் பணிவு = எம்.எஸ்.சுப்புலட்சுமி
* ஆன்மீகத் தமிழ் = வாரியார்
* கடைசி வரை காதல் உறுதி = கே.பி. சுந்தராம்பாள்
* தொண்டில் தூய்மை = அன்னை தெரேசா
இப்படி சான்று காட்ட வல்லவர்களே, "சான்றோர்"! ஆன்றோர்களே, சான்றோர்களே என்பது வெறுமனே மேடைச்சொல் அல்ல! :)

தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்தாம்! அறிவில் சிறந்தது காஞ்சிபுரம்! அறிவு-ன்னா வெறுமனே கல்வி அல்ல! அது ஞான-பக்தி-வைராக்கியம்!
அப்படியான வைராக்கியத்திலே (உறுதியிலே) சிறந்தவர் திருக்குறிப்புத் தொண்டர்! காஞ்சிபுரத்தில், வண்ணான் குடியிலே பிறந்தவர்!

வண்ணான் குடிக்கு ஏது ஞானம்?
சிவபரம்-ன்னா என்னான்னு தெரியுமா? சிவ ரகஸ்யம், சிவகலை, சிவாகமம், சைவ சித்தாந்தம் - இதெல்லாம் தான் தெரியுமா?
"அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்"-ன்னு இருப்பவர்களுக்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை தான்! ஆனால்...ஆனால்...ஆனால்....

* ஈசனுக்காக/அடியார்களுக்காக தங்கள் கண்ணையே, உயிரையே தருவார்கள் ஒருபுறம்!
* ஈசனின் தில்லை அம்பலத்தில் எண்ணெயைக் கொட்டி, தமிழ் ஓதி வரும் அடியார்களை வழுக்கி விழச் செய்வார்கள் மறு புறம்!
* முன்னவருக்கு சிவாகமம்/சிவ ரகஸ்யம்-ன்னு எல்லாம் அதிகம் பேசத் தெரியாது!
* பின்னவர்கள் சிவகலை, சைவ சித்தாந்தம் என்றெல்லாம் "நன்கு" அலசிப் பேசுவார்கள்!
ஆனால் ஈசனுக்கு எதைக் கொடுப்பார்கள்? = அன்பைக் கொடுக்க மாட்டார்கள்! தங்கள் அறிவையே கொடுப்பார்கள்!

சிவபெருமான் வேணுமா? சைவம் வேணுமா?-ன்னு அவிங்களைக் கேட்டுப் பாருங்க! சைவமே வேணும்பாங்க! :)
"தங்கள்" கொள்கை, "தங்கள்" குழு, "தங்கள்" பாண்டித்யம், "தங்கள்" பிடிப்பு - இதன் மேல் உள்ள கவனம் போக, மீதிக் கவனம் தான் "நங்கள்" ஈசனிடம்! :)

வண்ணான் வேலை செய்து வந்த திருக்குறிப்புத் தொண்டரிடம் போய், சைவம் வேண்டுமா? சிவன் வேண்டுமா என்று கேட்டால்.....???

(காஞ்சி - முத்தீஸ்வரர் ஆலயம் - திருக்குறிப்புத் தொண்டர் நிறைவு கொண்ட தலம்)

காஞ்சிக்கு வரும் அடியார்களின் முகக் குறிப்பைப் பார்த்தே, அவர்களுக்கு இன்ன வேணும், உணவு வேணும், நீர் வேணும், தங்க இடம் வேணும் என்பதை அறிந்து, ஆவன செய்து கொடுப்பார்! அதான் "திருக்குறிப்புத்" தொண்டர்!
"நின்னருளே புரிந்திருந்தேன், இனி என்ன "திருக்குறிப்பே"? என்பது பெரியாழ்வார் ஈரத்-தமிழ்! They also serve, who ONLY stand and wait  என்பது கண்ணழிந்த John Milton கவிதை! அப்படியான ஆசாமி நம்ம "திருக்குறிப்புத்" தொண்டர்!

திருக்குறிப்புத் தொண்டர்,  காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில், துணி வேக வைத்துக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தார்! ஆனால் ஒரே ஒரு பிரச்சனை!
தன் வாடிக்கையாளர்களின் துணியைக் காசுக்கு வெளுக்கும் முன்னர், சிவனடியார் ஒருவரின் ஆடையையாச்சும் இலவசமாக வெளுத்துக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்!

ஒருத்தன், இப்படியெல்லாம் உறுதியா இருந்தாத் தான் ஊருக்கு ஆகாதே! பல பேருக்கு இந்த வண்ணானைப் பிடிக்கவில்லை!
இவனுக்கு என்ன பெருசா சிவனைப் பற்றித் தெரியும்-ன்னு இத்தனை பிடிப்பு காட்டுறான்? எல்லாம் போலியான தன்னடக்கம், வெளிவேஷம் என்று சிலரின் பேச்சு! காசு கொடுக்கறது நாம, ஆனா முதல் துணிவெளுப்பு வேற்றூரில் இருந்து வரும் ஆட்களுக்கா? - என்ற நையாண்டியும் சேர்ந்து கொண்டது!


இப்படி வாழும் சூழலில், அன்று காஞ்சிபுரம் வந்தார் ஒரு பொன்னார் மேனி அடியார்!
மெலிந்த உடல், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு! குனித்த புருவம், கொவ்வைச் செவ்வாய், குமிழ் சிரிப்பு........ஆனால் அழுக்க்க்க்க்கேறிய ஆடை!

பரதேசி போலும்! துணி துவைச்சி எத்தனை நாள் ஆச்சோ? கிட்டக்க வந்தா ஒரு வாடை அடிக்குது! எத்தனை திருநீறு பூசி இந்த வாடையைப் போக்குவதோ?
அன்று பிட்டுக்கு மண் சுமந்தவன், இன்று ஆடைக்கு வாடை சுமந்தான்!

"என்னங்க சிவனடியார் ஐயா, ஆடை இப்படி அழுக்கேறி இருக்கு?  கோயிலில் யாரேனும் முகம் சுளிக்கக் கூடுமே! 
என் கிட்ட குடுங்க! நான் ஒரு வண்ணான்! துவைத்து வெளுத்து, இன்றே தந்து விடுகிறேன்! அது வரை  இதோ இந்த மண்டபத்தில் தங்கி இளைப்பாறுங்கள்!  இந்தாருங்கள் செப்புக் காசு, உணவுக்கு உதவும்!"

"யாருய்யா நீ? தேடி வந்து உதவி செய்யறேன்-ன்னு சொல்லுற? உன்னைய போல ஆளுங்களைத் தான் நம்பவே கூடாது!"

"ஐயையோ! அப்படியில்லை! என்னை இந்த ஊரில் எல்லாருக்கும் நல்லாத் தெரியும் ஐயா! இதோ... நீங்களே பாருங்க, கழுதையும் பொதி மூட்டையும்! நான் துணி துவைக்கும் வேகவதி ஆறும், இந்த முத்தீஸ்வரர் கோயிலுக்கு அருகில் தானே!  நீங்க என் மீது ஒரு கண் வச்சிக்கிட்டே இருக்கலாம்!
இது ஒரு சிவத் தொண்டு-ன்னே நினைக்கிறேன்! அடியார்களின் உடை அழுக்கை நீக்கி, என் பிறவி அழுக்கை(?) நீக்கிக் கொள்வேன்! நம்புங்க ஐயா!"

"சரி சரி!  என் கிட்டக்க இந்த ஒரே ஆடை தான் இருக்கு! அதைத் துவைத்து உலர்த்திக் கொடுத்து விடு!  அதுவரை நான் மேல் துண்டைக் கட்டிக் கொண்டு, கோயிலுக்குச் சென்று வருகிறேன்!
சீக்கிரம்-ப்பா!  இராத்திரியானால் என்னால் குளிர் தாங்க முடியாது! இந்த மேல் துண்டு தான் எனக்கு இரவிலே போர்வை! புரிஞ்சுதா?"

"அப்படியே ஆகட்டும் ஐயனே! என்னிடம் இருக்கும் சொற்பப் பணத்தில், உங்களுக்கு இன்னொரு ஆடை வாங்கித் தரவும் சித்தமாய் உள்ளேன்!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்! ஒழுங்கா சொன்னதைச் செய்! அதுவே போதும்!
நான் ஒரு சிவ-தவசி! ஓர் உடை-ஒர் ஓடு! இதில் தான் வாழணும் என்பது எங்கள் நியதி! அதெல்லாம் உனக்குப் புரியாது! என் ஆடை பத்திரம்!"

வண்ணான் வேக வேகமாகத் துவைத்து விட்டான்! ஆனால் அவனையும் விட வேக வேகமாக தூவத் துவங்கி விட்டது!  மழை மேகம் சிவ போகம்! எத்தனை வெளுத்தும், உலர்த்தவே முடியவில்லை!

கஞ்சியம்பதியில், கஞ்சி போட்ட ஆடை....
ஈரத்தில் ஒரு ஓரத்தில் வண்ணானைப் பார்த்துச் சிரித்தது!

ஐயையோ! வேறு துணி கொடுத்தாலும், வாங்க மாட்டேன்-ன்னு முன்பே சொல்லிட்டாரே! என்ன செய்ய? ஒருவேளை வெள்ளாவியில் புழுக்காமல், வீட்டிலேயே துவைத்திருந்தால், இந்நேரம் காய வைத்திருக்கலாமோ?
- இப்படியெல்லாம் யோசித்து என்ன பயன்? ஆனால் அன்பைத் தவிர வேறொன்று அறியாத மனசு, இது போன்ற தருணங்களில், இப்படித் தானே லூசுத்தனமாக யோசிக்கறது! என்ன செய்ய?

வண்ணான் நடுநடுங்கிப் போனான்! அங்கோ அடியவர் குளிரில் நடுங்குகிறார்! இங்கோ இவன் மானத்தால் நடுங்குகிறான்!

"யோவ், உன் நியதியைக் கொஞ்சம் தளர்த்திக்கோ; இந்தா புதுத் துணி! இதுல என் தப்பு ஒன்னுமில்லை! மழை கொட்டும்-ன்னு நானும் எதிர்ப்பார்க்கலை! நீயும் எதிர்ப்பார்க்கலை! அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, சரியா?
இல்லையில்லை...தவம் தான் பெருசு-ன்னு சொன்னியானா, நான் ஒன்னும் செய்யறத்துக்கு இல்லை, நீ குளிரில் சாவது தான் வழி....என் மேல் பழி ஒன்னும் வராது!  அவரவர் வாழ்வு அவரவர் கையில்....."

- இப்படியெல்லாம் வாதாடித் தப்பிக்கும் மனம் வண்ணானுக்கு வரவில்லை!
சரணாகதியில் திளைக்கும் ஒரு உள்ளத்துக்கு, "தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தோன்றாத" மனநிலை! அவனே! அவனே! அவனே!

வண்ணான், துணி துவைக்கும் பாறைக் கல்லிலே, தன்னைத் துவைத்துக் கொள்ளத் துவங்கி விட்டான்!
ஐயோ! என்ன இது? இப்படியும் ஒரு மடமையா? நினைத்த காரியம் நிறைவேறலை-ன்னு இப்படிச் செய்யறவனைப் பார்த்தா, யாருக்கும் பயம் தானேய்யா வரும்? அவனிடமிருந்து ஒதுங்கி விடலாமா? - இப்படி இனியவர்கள் கூட யோசிக்கலாம்! ஆனால் ஈசன் யோசிப்பதில்லை! - "நில்லு குறிப்புத் தொண்டா, நில்லு"!!

"திருக்குறிப்புத் தொண்டனே! உன் உள்ளம் என்ன என்பது எமக்குத் தெரியும்!  தன்மானத்துக்கு அஞ்சியா இப்படிச் செய்தாய்? என் மானத்துக்கு அஞ்சி அல்லவோ, இப்படிச் செய்தாய்?
உனக்கு வரும் பழியை விட, எனக்கு வரும் பரிதவிப்பைக் காண ஒண்ணாது துடித்தவனை,  சைவ-உலகுக்குச் "சான்று" காட்டினோம்!
சான்றோனே!  நம் கைலாயத்திலே என்றும் அணைந்திரு!  உன் "திருக்குறிப்பு" வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!"

- நின்னருளே புரிந்து இருந்தேன், இனி என்ன "திருக்குறிப்பே"?
They also serve who only stand and wait!
திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Tuesday, April 12, 2011

கம்பன் கள்: காமம் இராமனுக்கா? இராவணனுக்கா??

வாரியார் - ஆன்மீகத் தமிழுக்கு வேறுயார்?

அன்னாரின் காணொளி ஒன்றை youtube-இல் தரவேற்றியுள்ளேன்; கண்டு மகிழுங்கள்! பதிப்புரிமைப் பிரச்சனை வராமல் இருக்கணும்! வாரியார் குறித்த பல நிரல்கள், சிலரின் "தனிப்பட்ட உரிமை" என்ற பேரில் அகற்றப்பட்டு விடுகின்றன! வள்ளல் வாரியார் வலைப்பூவும் இப்படித் தான் முடங்கிப் போனது!  இதுக்கு என்னிக்குத் தான் விடிவோ?

வாரியார் சுவாமிகளின் கம்ப இராமாயணப் பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தேன்! இருந்தேன், இருந் தேன், நறுந் தேன்! அம்புட்டு போதை!
இன்று இராம நவமி அல்லவா! அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்! (12-Apr-2011)


இராமனை அளவுக்கு அதிகமா ஏத்திவிட்டு, பேசியும் எழுதியும் விடுறாங்க என்பது ஒரு பொதுவான குற்றச்சாட்டு!
நாத்திகர்கள்/பகுத்தறிவாளர்கள் மட்டுமன்றி, சைவ அன்பர்கள், முருக அன்பர்கள் சிலரும் இப்படிச் சொல்லிச் சொல்லி எதிர்வினை ஆற்றுவதும் வழக்கம்!:)

ஆனால் திருமுருக. வாரியாரே, இராமனுக்கு வரிந்து கட்டும் காட்சிகளைப் பார்த்து ஒரு கணம் திடுக்கிட்டுப் போனேன்!
வாரியார் இப்படித் "தெரிந்தே துணை போவதற்கு", மேற்சொன்னவர்கள் எல்லாம் என்ன சப்பைக் கட்டு கட்டுவார்களோ, நாம் அறியோம்:)

இராமனை, ஆழ்வார் அருளிச் செயல்கள் கூட இப்படித் தாங்கிப் பிடிக்காது!
இராமன் பால் அன்பு பூண்ட குலசேகராழ்வார் கூட, "இராமன் செய்த ஒவ்வொரு செயலும் ஒரு தத்துவம்" என்றெல்லாம் அடுக்க மாட்டார்!

ஆனால் ஆழ்வாருக்கும் ஒரு படி மேலே போய், நம் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவிலே தத்துவமாக விரிக்கின்றார்!
=> ஒரு பாதுகை = பர ஞானம், இன்னொரு பாதுகை = அபர ஞானம்,
=> இராவணன் = ஆணவம்; கும்பகர்ணன் = கன்மம்; இந்திரஜித் = மாயை!
=> கோசலை/கைகேயி/சுமித்திரை = ஞான சக்தி/இச்சா சக்தி/கிரியா சக்தி என்றெல்லாம் தத்துவ அடுக்குகள் அடுக்கப்படுகின்றன! :)

இது ஏன் என்பது இன்று வரை எனக்குப் புரியாத புதிர்!
வாலி வதம் தவறு என்று இராமனே ஒப்புக் கொண்ட பிறகும், எதற்கு இராமனைக் காப்பாற்ற இத்தனை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள்?வாலி வாங்கிய வரம் அப்படி! No Fair Play!
கலைஞரை எதிர்த்து யாரு திருவாரூரில் நின்னாலும், அவிங்க ஓட்டில் பாதி, கலைஞர் ஐயாவுக்குப் போயிரும்-ன்னா, எவன் தேர்தல்-ல்ல நிப்பான் சொல்லுங்க? :) பாதி ஓட்டு அங்கே போயிரும்-ன்னு வரம் பற்றியே தெரியாது, ஒரு புதியவன் வீரத்தை மட்டுமே நம்பிக் களத்துக்கு வந்தால்???
வஞ்சக வரத்தை வஞ்சகத்தால் தான் வீழ்த்த முடியும்! அப்போ தான் வஞ்சமாய் வரம் வாங்கியவனுக்கு வலி-ன்னா என்ன-ன்னு தெரியும்!

திரைமறைவு பேரங்களைத் "திரைமறைவாக" டேப் செஞ்சாத் தானே, ஆ.ராசா/நீரா ராடியாவுக்கு வலிக்கும்? "ஐயோ, எங்கள் சதிப் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது தனி மனித உரிமை மீறல்"-ன்னு அப்போ தானே குதிப்பாய்ங்க? :)
செய்யறது பொதுஜனச் சதி! இதுல உரிமை மீறலா? ஆமாண்டி, மீற வேண்டி இருக்கு, என்னாங்குற? அதே போலத் தான் இதுவும்!

வாலியை எப்படித் தான் வீழ்த்துவது?
மறைந்திருந்து கொல்வது முறையாகாது! மறையாமல் கொல்லணும்-ன்னா, கொல்லவே முடியாது! நம்மோட பாதி பலமும் போயீரும்!
ஓக்கே! மறைஞ்சிருந்து கொன்னு, கெட்ட பேரு வாங்கிக்க யாரு ரெடி?


வரம் கொடுத்தவரு ரெடியா? வரம் வாங்கியவரு ரெடியா?
ஹிஹி...யாருமே இல்லை! ஒரே ஒருத்தரு தான் ரெடி! :)

பேரறத்துக்காகச் சிற்றறத்தைக் கைவிட்டாலும்....
அதனால் வரும் விளைவுகளையும்....
ஒருவன் துணிந்து ஏற்க வேண்டும்! = இதைக் காட்ட வந்ததே காவியம்!


மனுசனா வாழ்ந்து காட்ட வந்த ஒருத்தரு, நல்லதும் பண்ணுவாரு, தப்பும் பண்ணுவாரு! தப்புக்கு Spelling-கே தெரியாத "புனித பிம்பம்" இல்ல அவரு!
ஆனா தப்பு பண்ணா, அதுக்கு எப்படி நடந்துக்கணும் என்பதையும் சேர்த்தே தான் நடந்து காட்டுவாரு! ஏதாச்சும் பரிகாரம்/ஹோமம் பண்ணி சமாளிச்சிறலாம்-ன்னு கணக்குப் போடமாட்டாரு! :)

வாலியை "மறைந்து" கொன்ற "பாவம்" தீர......
தானும் அதே போல் மறைந்தே கொல்லப்படுவாரு!
அவரே காலம்பு வாங்கி, குவலயம் நீங்கி, பாலாழி பாய்ந்த பாதகன்! (பா.பா.பா)

"பிற்பகல் தாமே வரும்" என்னும் வினைச் சுழற்சிக்கு யாருமே அப்பாற்பட்டவர் அல்லர்! அதைத் தனக்கும் சேர்த்தே உட்படுத்திக் கொள்வாரு!  ஹைய்யோ, நான் கடவுள்; அஹம் பிரம்மாஸ்மி, நான் பிறவான்-இறவான்,  I Am excluded-ன்னு சொல்லிக்க மாட்டாரு:)
No one is above Lokpal, incl the Prime Minister! அதானே அன்னா ஹசாரே சொல்வதும்?

அவரைச் சும்மா அவதாரம், அவதாரம்-ன்னு எதற்கெடுத்தாலும் ஓவராக ஏத்தி விடுதல் என்பதை இலக்கியமும், ஆன்மீகமும் செய்யவே கூடாது!
அது அந்த அவதார நோக்கத்துக்கே முற்றிலும் மாறாகப் போய் விடும்!
"அவிங்க எல்லாம் அவதாரம்-ப்பா! நாமளோ சாதாரண மனுசங்க! நம்மால முடியுமா?" என்று மனிதன் எஸ்கேப் ரூட் தேடிக்கொள்வான்! இதற்காகவா அவதாரம்?

இப்படி யோசிச்சா, "இராம போதையை" சமயவாதிகள் ஏற்ற மாட்டார்கள்! இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஒரு சிலர் மட்டுமே இப்படி நன்கு யோசிப்பவர்கள்!

இராமனை உச்சி மேல் வைச்சிக்கணும்! ஆனா நடக்க எல்லாம் வேணாம்! நாடு உடையாம இருக்கணும்-ன்னு அவன் காட்டுக்குப் போவான், ஆனா நாம மசூதியை உடைப்போம்! :)
இராமன் தப்பே பண்ணாலும் அது தப்பே இல்ல! ஆனா அடியவனான ஆஞ்சநேயன், தான் என்ற எண்ணத்தால்  இன்னொருவர் செய்த லிங்கத்தை வாலால் அசைப்பான்-ன்னு பின்னாளில் "கப்ஸா" எழுதி வைப்போம் :))

இப்படியெல்லாம் ஏத்தி விட்டதால் தான், அவதாரங்கள் "தோல்வி" அடைந்து போயின!
அவதாரங்கள் தோல்வி அடைந்தன என்று சொல்வதில் எனக்குத் தயக்கமோ, பயமோ இல்லை! கூட இருந்து கீதை கேட்ட அருச்சுனனே போர் முடிந்ததும் சரணாகதி செய்யலையே? நாட்டை ஆண்டு, சுகபோகத்தில் திளைத்து, வழியில் அல்லவோ மாண்டான்?
கூட இருந்து கீதை கேட்டவனுக்கே இந்த லட்சணம்-ன்னா, நாமெல்லாம் கேட்கும் கீதை எந்த லட்சணம்? யோசிச்சிப் பாருங்க :)

மனிதனுடைய "Hypocrisy" முன்னால், தாம் இறங்கி வந்து ஒன்னும் செய்ய முடியாது என்பதைப் புரிந்த கொண்ட இறைவன்...அதனால் தான்...
* ஆழ்வார்களைப் பிறப்பித்து,
* நாயன்மார்களைப் பிறப்பித்து,
* அடியவர்களைப் பிறப்பித்து,
மானைக் கொண்டு மானைப் பிடித்தாற் போலே, மனிதனைக் கொண்டே மனிதனைப் பிடிப்போம் என்று எண்ணி விட்டான் எம்பெருமான்!

கீதையோ, வேதாந்தமோ சற்றே தாழ்வானது! ஆழ்வார்களின் ஈரத் தமிழோ அதனினும் உயர்வானது!
கீதையை யார் வேண்டுமானாலும் வறட்டு வேதாந்தமாகப் பேசி விடலாம்! ஆனால் ஆழ்வாரின் ஈரத் தமிழை, கண் ஈரம்-மன ஈரம் கொண்டே அணுக முடியும்!

அதனால் தான் கீதை சாதித்துக் காட்டாத சரணாகதியை, ஆழ்வார்களின் காதல் நிறைந்த அருளிச்செயல் சாதித்துக் காட்டியது!
இராமானுசர் முதலானவர்களும், ஆழ்வார்களை முன்னிட்டே, மக்களைச் சரணாகதிப் பாதைக்குத் திருப்பினார்கள்!


இராமனைத் துதிபாட இத்தனை பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் எதற்கு தெரியுமா?=ஹீரோவை வில்லன் ஆக்குவது, வில்லனை ஹீரோ ஆக்குவது - இந்த மாயையிலேயே சுழன்றுச் சுழன்று...
ஆக மொத்தம் நமக்குத் தேவை ஒரு ஹீரோ-ஒரு வில்லன்! :)

இதைக் கடந்தால்:
இராகவன் இனிப்பான், இராவணன் இனிப்பான், இராமாயணம் இனிக்கும்!

இதைக் கடக்கா விட்டால்:
இராகவன் கசப்பான் = நாத்திகருக்கு! இராவணன் கசப்பான் = ஆத்திகருக்கு! இராமாயணம் கசக்கும் = எனக்கு! :)

ஆனால் ஒரே ஒரு விஷயம்: "இராம நாடகத்தை" நன்கு அறிந்தவர்கள் இதையும் அறிவார்கள்...இராவணன், இறைவனின் அன்புக்குரிய வாயிற் காப்போன் என்று!
எப்படிச் சூரனை மயிலும் சேவலுமாய் ஆக்கிக் கொண்டானோ திருமுருகன், அதே போல், வைகுந்த வாயிலுக்குச் சொந்தக்காரராகவே ஆகிப் போனார்கள் இராவண-கும்பகர்ண ஜய-விஜயர்கள்!

கற்பனை செய்து பாருங்கள்: இதோ....இராவணன் கையிலும் சங்கு-சக்கரங்கள்! :)
யார் தருவார் அடியவர்க்கு, தன்னுடைய அடையாளமான சங்கு சக்கரங்களை? தனக்கு மயிலாய்/ஊர்தியாய் வைத்துக் கொண்டால் போதாதா? எதற்கு தன் அடையாளங்களை அவர்களுக்கும் தர வேண்டும்? பார்ப்பவர்கள் இவன் தான் பெருமாள் என்று நினைத்து விட்டால்? :)

ஏன்? = தனிப் பெருங் "கருணை"! கருணை என்பதே ஆன்மீகத்தின்/ இறையன்பின் அடிப்படை!
ஹீரோ-வில்லன், நல்லோர்-தீயோர், அசுரர்-தேவர் என்று அனைவரும் ஒரு நாள் அங்கே தான் சேரப் போகின்றார்கள்! வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! - என்று ஓதுவது திராவிட வேதம் என்னும் திருவாய்மொழி!

அதனால் தான் இராவணின் செத்த உடம்பைத் "திருமேனி" என்று சொல்கிறார் கம்பர்!
பொதுவாகப் பாகவத அடியவர்களின் பூத உடலைத் தான் "திருமேனி" என்று குறிப்பது வழக்கம்! இராவணன் அடியாரா? :) பார்க்கலாமா நம் வாரியார் விருந்தை?


இராவணன் வீழ்ந்து கிடக்கிறான்! துயில் ஆழ்ந்து கிடக்கிறான்!
அவன் அரும் உடலைச் சுவைத்த மனைவி/துணைவி/இணைவிகள் எல்லாம்...
இதோ வெறும் உடலைக் காண விரைந்து வருகின்றனர்!

அத்தனை பேருக்கும் முன்னாக, அலறி அடித்து, ஓடோடி வருகிறாள் அன்னை மண்டோதரி!
அவள் இராவணனின் உடலை மட்டும் சுவைக்கவில்லை! உள்ளத்தையும் சுவைத்தவள்! அதான் அவளுக்கு மட்டும் கண்ணிலும்+நெஞ்சிலும் நீர்! மற்றவருக்கு கண்ணிலே நீர்!

வந்தவளுக்கோ பெரும் அதிர்ச்சி!
இராவணன் உடலை அம்புகள் துளைத்த்த்த்து எடுத்துள்ளன...யாரோ, கண்ட மேனிக்கு, எங்கு படுதோ படட்டும் என்று அம்பு விட்டாற் போலே!
ஆகா! இருக்காதே! இராகவன் சுத்த வீரனாயிற்றே! அவனா இத்தனை அம்புகளை விட முடியாமல் கண்ட மேனிக்கு விட்டிருப்பான்?

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த "திருமேனி" - மேலும் கீழும்
எள்ளிருக்க இடமின்றி உயிர் இருக்கும் இடம்தேடி - இழைத்த வாறோ?


எருக்கம் பூவைச் சடையில் சூடிய எங்கள் ஈசன் - பொன்னார் மேனியன் - அவர் மலையையே மலைக்க வைத்த  இராவணன்!
பலரும் நினைப்பது போல்...இராவணன் சிவ அன்பன் அல்ல! வெறும் பய பக்தன்! அட, அன்பனுக்கும் பக்தனுக்கும் என்னங்க வேறுபாடு?

* சிவ அன்பன் = இறைவனிடம் அன்பு செலுத்துவான்!
* பய பக்தன் = இறைவனிடம் "பய"-பக்தி செய்வான்!

இராவணன் பய-பக்தன்!
ஈசனைத் தாறுமாறாக இகழ்ந்து பேசியவன் தான்! சுடுகாட்டான் மலையை நான் சுற்றிக் கொண்டு செல்வதா? என்று இறுமாந்த இலங்கையர் கோன்!
நந்தி தேவரை ஏளனம் செய்து சாபம் வாங்கியவன்! ஞானசம்பந்தர் ஒவ்வொரு தேவாரப் பதிகத்தின் எட்டாம் பாட்டிலும் இராவணனை இகழ்ந்து பாடுவார்!

மலையை அசைக்க எண்ணி முடியாமல் போகவே, மலைக்குள் அழுந்திக் கொண்டதால் உயிர்ப் பயம் வந்தது! வாழ்க்கையில் முதன்முதலாகப் "பணிவு" செய்து பார்த்தான் இராவணன்!  அதுவே முதலும் கடைசியுமான பணிவு!
நந்திகேஸ்வரர் உட்பட யாரிடம் சாபம் வாங்கினாலும், சாப விமோசனம் கூடக் கோராது, தவறுக்கு வருந்தாது, ஹா போங்கடா என்று போகிறவன்...
இப்போ போக முடியாததால், ஈசனை வணங்கினான்! "ஆராய்ந்து அருளும் கள்ளத்தனம்" தெரியாத வரப் பிரசாதியான ஈசனாரும், அவனை மன்னித்து வாழ்த்தி விட்டார்!

இப்படி வெற்பெடுத்த வெறும் மேனி, இப்போ "திருமேனி"யாகக் கிடக்கிறது! அதில் எள்ளிருக்க இடமின்றி என்கிறார் கம்பர்!
எள்ளைப் போல் சிறுசிறு துளையாகத் துளைத்திருக்கு-ன்னு பெரும்பாலும் பொருள் கொள்ளுவார்கள்! ஆனால் அதையும் தாண்டிய இலக்கியச் சுவை ஒன்று உண்டு!

இறந்தவனுக்கு நீத்தார் கடனாக எள்ளிறைப்பது வழக்கம்! அந்த எள்ளும் நீரும் தூவும் போது, அதை ஏற்கக் கூட முடியாத அளவுக்கு, உடலில் துளைகள்!

எள் இருக்க இடம் இன்றி = எள் மேனியிலே தங்க முடியாத அளவுக்கு, துளைகளில் போய் சிக்கிக் கொள்கிறதே!
எத்தனை துளைகளைத் தான் நிரப்புவது? மொத்த உடலையும் எள்ளால் மூடினால் தான் உண்டு! பாவி இராமா! இப்படியா துளைப்ப்ப்ப்ப்ப்ப்பாய்?கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் - கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ - ஒருவன் வாளி?


இவன் உடம்பும் மனசும்...எங்கெங்கெல்லாம் என் மனைவியை ஆசைப்பட்டதோ?
அந்த ஒவ்வொரு இடமாகத் தேடி...
அதில் தேங்கியுள்ள சீதையாசை என்னும் காமத்தை அழிக்கிறேன் பார்...
என்று உடல் முழுதும் தடவியதாம் ஒருவன் அம்பு! (வாளி=அம்பு)

இப்படியுமா எண்ணுவான் ஒரு ஆண் மகன்?
ஆகா! இராவணனுக்குக் காமமா? இராகவனுக்குக் காமமா?

தன்னுடைய போகப் பொருளை இன்னொருவன் வைத்திருந்தான் என்றால், அந்தப் போகப் பொருளைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்வதைக் கேட்டிருக்கிறோம்! ஆனால் வைத்திருந்தவனின் உடம்பை....
"டேய்,  இங்கேயா வைத்துக் கொண்டு இருந்தாய்?
இங்கேயா ஆசைப்பட்டாய்?
இந்த உறுப்பா காமத்தை விரும்பியது?" என்றெல்லாம் அணுஅணுவாக யாரேனும் நுணுக்குவார்களா? இராமன் நுணுக்கினானோ இல்லையோ, அவன் வாயிலாகக் கம்பன் நுணுக்குகின்றான்! = உள்ளிருக்கும் எனக்கருதி உடல் முழுதும் தடவியதோ ஒருவன் வாளி?

எந்த அளவுக்கு அவளை உடலாலும் உள்ளத்தாலும் உரிமை கொண்டாடி இருந்தால் இப்படி யோசிப்பான் "காமுக" இராமன்?:) பிரிந்திருந்த மாதங்களின் ஒட்டுமொத்த காமமோ/காதலோ?
* இதை........இராமன் நிலையில் இருந்து "வெறியுடன்" நோக்குவதா?
* இல்லை, இராவணன் நிலையில் இருந்து "காமத்துடன்" நோக்குவதா?
* இல்லை, சீதை நிலையில் இருந்து, "தற்பெருமையுடன்" நோக்குவதா?
* இல்லை, மண்டோதரியின் நிலையில் இருந்து, "ஆற்றாமையுடன்" நோக்குவதா?
உளவியல் வல்லுநர்கள் தான் சொல்ல வேணும்! இது தான் கம்பன் கவி! கம்பன் கவியே கவி!
ஒரே ஒரு வரி = உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

சரிஈஈஈஈஈ....ஆனால் கள்ளிருக்கும் மலர்க் கூந்தல்???
ஒரு மலரில், தேன் தானே இருக்கும்? கள் எப்படி இருக்கும்? தோண்டிப் புதைச்சி ஊற வச்சா தானே கள்ளு?

இங்கும் கம்பன் தமிழால் விளையாடுகிறான்! = கள்ளிருக்கும் + மலர்கூந்தல் + சானகி!
* கள் இருக்கும் மலரைச், சூடிய சீதையா?
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சீதையா? :)

சீதை, அசோக வனத்தில், ஆ-சோகமாகத் தானே இருந்தாள்? இராகவனே இராகவனே என்று ஸ்தம்பித்துப் போய் இருப்பவள், வாழ்வைத் தொலைத்துவிட்டு....வாழாமல் வாழ்ந்து கொண்டு இருப்பவள்!
She exists, not lives...அழுக்கு ஆடை, செம்பட்டை முடி.....அவளா புது மலர் சூடிக் கொள்வாள்?

வாடிப் போன சம்பங்கிப் பூவைப் பார்த்து இருக்கீங்களா? அதிலிருந்து ஒழுகி ஒரு வாடை அடிக்கும்!
அவள் காட்டிலே அன்று சூடிய மலர், இராகவன் தன் கையால் வைத்துவிட்ட மலர், அது வதங்கி, இன்றும் அவள் தலையில் தான் இருக்கிறது! அதை எடுக்கக் கூட அவளுக்குத் தோனலை! அது வாடி, ஊறி, அந்தத் தேனே கசந்து போய்க் கள்ளாய் மாறி விட்டது! = கள் இருக்கும் மலரை, சூடிய சானகி!

இராவணனுக்கு அவள் உடம்பு மேல் அப்படியொரு ஆசை! காமக் கடும்புனல்!
அவள் கண் மேல் தன் கண்,
அவள் இதழ் மேல் தன் இதழ்,
அவள் முலை மேல் தன் மார்,
அவள் "அதன்" மேல் தன் "இது"!

இப்படி அவள் உடம்பு முழுக்கக் கள் பொங்குகிறது இராவணனுக்கு! பால், நெருப்பில் தான் பொங்கும்! கள்ளோ, நெருப்பு இல்லாமலேயே பொங்கும்!

கள்ளைப் பூமிக்குள் அடைத்து வைப்பது போல், அவளை மனச் சிறையில் அடைத்து வைத்தான்! அது பரிசுத்தமான காதலா? இல்லை! "கரந்த" காதல்! காமக் கடும்புனல்!
அவள் கண்ணீரிலே ஒன்றும் வடியாதவனுக்கு, அவள் உடம்பில் மட்டும் கள் வடிகிறது!  சீதை உடம்பிலே கள்= மலர் சூடிய, கள்ளிருக்கும் சானகி!

கள்ளிருக்கும் + மலர்க்கூந்தல் + சானகி
* கள் இருக்கும் மலரைச், சூடிய சீதை!
* மலரைச் சூடிய, கள் இருக்கும் சீதை!!
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?

கம்பன் கள் வாழ்க! கம்பன் தமிழ் வாழ்க!!


இந்தச் சொற்றொடரில் "கள்" இருப்பதாலோ என்னவோ கண்ணதாசனுக்கும் இதன் மேல் ஒரு மோகம்! :)
"கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்" என்ற சொல்லாட்சியை அப்படியே எடுத்தாளுகிறார் சினிமாப் பாட்டில்! கொடி மலர் என்னும் படம்! எம்.எஸ்.வி இசை...

தேடி வந்த மாளிகையில் ஆதரவில்லை - அவள்
தேர் செல்லும் பாதையிலே தெய்வமும் இல்லை
பாவை அவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை - தன்
பாவமில்லை என்று சொல்ல ஒரு வார்த்தையும் இல்லை

கானகத்தைத் தேடி இன்று போகின்றாள்,
கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகி
மானிடத்தைத் தேடி இன்று போகிறாள்
தன் மணவாளன் கட்டளையால் ஜானகி!

என் கண்ணாளா முருகா! இவள் வழக்கில் ஒரு சாட்சியும் இல்லை! "என் பாவமில்லை" என்று சொல்லக் கூட இவளுக்கு ஒரு வார்த்தையும் இல்லை! கானகம் தேடிப் போகின்றாள்! முருகா, இவள் பயந்த தனி வழிக்கு நீயே துணை!

கம்பன் கவியை, இதோ, தமிழ்ச் சுவையாக மனப்பாடம் செய்து கொள்ளுங்கள் :)
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை, மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி, உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி?மக்களே, Apr-13; ஓட்டு மறக்காம போட்டுருங்க! நாளை (மட்டும்) நமதே!:)
எந்தச் சின்னமா? = தமிழ்த் துரோகச் சின்னத்துக்கு மட்டும் அல்ல! 49-O ஆச்சும் போட்டுருங்க! ஆனா ஓட்டு கட்டாயம் போட்டுருங்க!
Read more »

Sunday, April 10, 2011

Election Pal Bill: கலைஞர் சாகும் வரை உண்ணாவிரதம்!

புதுச்சேரி: வரும் காலத்திலாவது, தேர்தல் கமிஷன் அதிகாரிகளின் அதிகாரம், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்கும் Election Pal Bill-ஐ நிறைவேற்றக் கோரி, தமிழக முதல்வர் கலைஞர் திடீரென்று, இன்று உண்ணாவிரதம் இருக்கத் துவங்கியுள்ளார்!
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க, இந்த உண்ணாவிரதம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!  அன்னா ஹசாரேவுக்கு அடுத்து இன்னொரு உண்ணாவிரதமா என்று மத்திய அரசு தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது!
புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர் பேசியதாவது:
"தேர்தல் கமிஷன் எங்களைக் கண்காணித்து வருகிறது. தேர்தல் கமிஷன் கண்காணிக்கக் கூடாது என்றோ, அதை எதிர்த்தோ நான் ஏதும் கூற மாட்டேன். ஆனால் விழுப்புரத்தில் கூட்டம் முடிந்த பின், அரசு விருந்தினர் மாளிகையிலோ அல்லது அரசுக்கு சொந்தமான மண்டபத்திலோ தங்குவதற்குக் கூட எனக்கு அனுமதி இல்லை. 
அட, எங்கு தான் தங்கினேன் என்று நீங்கள் கேட்பீர்கள்...விழுப்புரத்தில் தி.மு.க. அலுவலகத்து ஒண்டி அறையில் தங்கிவிட்டுப் புதுச்சேரிக்கு வந்திருக்கிறேன்.

இது போன்ற ஒரு அவல நிலை எனக்குத் தேவையா? ஈழத் தமிழர்கள் உட்பட்ட ஆறரை கோடி தமிழ் மக்களின் தலைமைக்கு இப்படி ஒரு அவமானமா? 
கேவலம், ஒரு அலுவலக அறையில் தங்கிப் படுத்து விட்டு வரும் அளவுக்கா நான் இருக்கின்றேன்?
என் எழுபதாண்டு காலப் பொது வாழ்க்கையில், ஏன்...,எமெர்ஜன்சியின் போது கூட, இப்படி ஒரு இழிவை நான் சந்தித்தது இல்லை!

மக்கள் பிரதிநிதி இந்தக் கருணாநிதி கேட்கிறேன்: தேர்தல் நடக்கும் போது ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சரே தேவை இல்லையா? தேர்தல் கமிஷனுக்கு ஆகும் செலவை நாங்கள் தானே கொடுக்கிறோம்? அந்த "நன்றி" கூடவா அவர்களுக்கு இல்லை?
தேர்தல் கமிஷனின் வரம்பு மீறிய செயல்களை எதிர்த்து, நானும் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்! அவர்களின் அதிகாரங்களை வரையறுக்கும் Election Pal Bill ஐ நிறைவேற்றிக் கோரி இந்த உண்ணாவிரதம்!

அன்று இராவணன் தனக்காகவா, தன் ஆசைக்காகவா போரிட்டான்? இனம் வாழ அல்லவோ இகல் வேந்தன் களம் இயற்றினான்?
அந்தக் கோமகனின் அடியொற்றி, படியொற்றி, குடியொற்றி, கோலொற்றி, மிடியற்று, மடியற்று,  பந்தபாசம் அற்றுஅற்று, ஆண்டு வருபவன் அல்லவா இந்தக் கருணாநிதி?

உடன்பிறப்பே, இனமே அழிந்தாலும் பரவாயில்லை! ஆனால் இனமானம் மிகவும் முக்கியம்!
இனத்துக்கான உண்ணாவிரதத்தை விட, இன மானத்துக்கான உண்ணாவிரதம் புனிதமானது! உடன்பிறப்பே வா, உடனே உண்ணாவிரதம் இருக்க வா!
* அன்னா ஹசாரே தலைமையில், இந்தியாவை ஊழலின் பிடியில் இருந்து மீட்டாகி விட்டது!
* இந்த அண்ணாவின் தம்பி தலைமையில், இந்தியாவை, கமிஷன் என்னும் அதிகாரப் பிடியில் இருந்து மீட்டெடுப்போம்!"


இவ்வாறு அறிக்கையில் கூறிவிட்டு, தமிழக முதல்வர், திடீரென்று, அண்ணா சமாதியில் இன்று உண்ணாவிரதம் இருக்கத் துவங்கி விட்டார்!
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்க, இந்த உண்ணாவிரதம் மிகுந்த பரபரப்பைக் கிளப்பியுள்ளது!

இந்திய/தமிழக மீடியாக்களின் ஒட்டுமொத்த கவனமும் உண்ணாவிரதம் மீது திரும்பியுள்ளதால், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது!
எங்கே அனுதாப அலை வீசிவிடுமோ என்று அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் அச்சம் கொண்டுள்ளனர்!

மாநில சுயாட்சிக்கு உள்ள ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கருணாநிதி என்று பல அண்டை மாநில முதல்வர்களும் கலைஞரைப் புகழ்ந்து உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!
லாலு பிரசாத் யாதவ், மாயாவதி, எடியூரப்பா, சுரேஷ் கல்மாடி என்று கட்சிக்கு அப்பாற்பட்டு, அனைத்து தலைவர்களும் முதல்வர் கலைஞருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்!

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு, சோனியாவின் உத்தரவின் பேரில், குலாம் நபி ஆசாத்தின்  துணைநிலைச் செயலதிகாரி ஒருவர், இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பு கொண்டு, முதல்வருக்குத் தந்தி கொடுத்துள்ளார்!

அண்ணா சமாதியில் இலவச ஏர் கூலர்கள், இலவச ஃபேன்கள் தருவிக்கப்பட்டுள்ளன! தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் ஆகியோரும், "இந்த வயதில் உங்களுக்கு உண்ணாவிரதம் தேவையா?" என்று கலங்கிய நிலையில் அருகில் உள்ளனர்!  ஒருவர் ஆலங்குடி நவகிரகக் கோயிலுக்கு ஆயிரம் மஞ்சள் துண்டும், இன்னொருவர் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு ஆயிரம் குடம் பாலாபிஷேகமும் நேர்ந்து கொண்டுள்ளனர்!

பிரச்சாரத்தில் இருக்கும் துணை முதல்வர் ஸ்டாலின் விஷயம் கேள்விப்பட்டு சென்னைக்கு விரைந்துள்ளார்!
வங்கிப் பரிவர்த்தனை சம்பந்தமான ஒரு முக்கியமான ஆய்வில் இருக்கும் மத்திய அமைச்சர் அழகிரியும் சென்னைக்கு விரைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டங்கள் தெரிவிக்கின்றன!

முதல்வரின் உடல்நலம் கருதி, உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும், Election Pal சட்டக் குழுவிலே, உதயநிதி மற்றும் துரை தயாநிதி இருவரையுமே கமிட்டி அங்கத்தினர்களாகச் சேர்க்கவும் தயாராக இருப்பதாக மத்திய சட்ட அமைச்சர் வாக்குறுதி கொடுத்துள்ளார்!

அனைத்துச் சாதி அர்ச்சகர்கள் திட்டத்தை ஸ்ரீமான்.கலைஞர் அம்போ என்று கைவிட்டாலும், அதை நம்பிச் சேர்ந்து, இன்று வாழ்க்கையைத் தொலைத்து  நிற்கும் முன்னூறு குடும்பங்களும், முதல்வர் வெற்றியடைய, சிறப்பு அர்ச்சனைகளை, ஆலய வெளியில் இருந்தே செய்து வருகிறார்கள்!
செத்துப் பிழைத்த தமிழக மீனவர்கள் பலரும், பாச மிகுதியால் மீன் குழம்பு வைத்து, இதை "ஜூஸ்" என்று கருதியாவது முதல்வர் குடிக்க வேண்டும் என்று கெஞ்சி வருகிறார்கள்!

முதல்வரின் உடல்நிலை கருதி, உயர் ரக ஆம்புலன்ஸ் ஒன்று உடனடியாகத் தருவிக்கப்பட்டுள்ளது!
ஆனால் வண்டி புறப்படும் முன்னர், சில தேர்தல் கமிஷன் அதிகாரிகள், அதையும் நிறுத்திச் சோதனை செய்துள்ளனர்!

இது இன்னும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது!
"ஆம்புலன்ஸைக் கூட செக் பண்ணறீங்களே? எங்களுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் அதற்கு கமிஷனே முழுப் பொறுப்பு" என்று கனிமொழி எம்.பி. அவர்கள் கண்ணீர் வடித்துள்ளார்! இது போன்ற பிரச்சனைக்கெல்லாம் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருப்பாரா என்ற தார்மீகக் கேள்வியும் எழுப்பியுள்ளார்!

முதல்வரின் பேரன் "ஆதித்யா" (எ) செந்தமிழ்ச் செல்வன், தன் பிஞ்சுக் கைகளால், "தாத்தா பிஸ்கோத்து", "தாத்தா பிஸ்கோத்து" என்று கெஞ்சியது, காண்பவர் நெஞ்சத்தை உருக்குவதாக இருந்தது!

மேலும் செய்திகள்,  விளம்பர இடைவேளைக்குப் பிறகு....


@ All makkaLs...
கலைஞர், அரசு விடுதியில் தங்க முடியாமல், ஆபீஸ் ரூமில் படுத்து விட்டு வந்தேன் என்று அங்கலாய்த்து, தேர்தல் ஆணையத்தைத் திட்டியது மட்டுமே உண்மையான செய்தி! பிற கற்பனையே! ஆனால் உணர்வுகள் உண்மையே!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP