Monday, February 19, 2007

ஏழு விளையாட்டு (சிவராத்திரி-2)

பதிவர்கள் எல்லாம் ஆறு விளையாட்டு விளையாடினர் அல்லவா, ஒரு காலத்தில்? இந்திரன் ஏழு விளையாட்டு விளையாடினான்!
பெருமாள் கொடுத்த தியாகராஜரைப் போலவே, இன்னும் ஆறு தியாகராஜ மூர்த்திகளை, மாயமாக உருவாக்கினான்.
"முசுகுந்தா, இவை ஏழு உருவங்களுமே தியாகராஜர்கள் தான்; உனக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொள்! உனக்குக் கடன்பட்டவன் நான்; உனக்குத் தராமல் யாருக்குத் தரப் போகிறேன்?" - சாமர்த்தியமாகப் பேசினான்.

முசுகுந்தன் செய்வதறியாது இறைவனைத் தியானிக்க, அஜபா மூர்த்தி அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது; "வா, என்னை எடுத்துக் கொள்; பெருமாளின் திருவுள்ளப்படி ஆரூரில் என்னை அமர்த்து" என்றது!
அரசனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை! ஒடோடிச் சென்று அஜபா மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்.
இந்திரனுக்கோ பெரும் வியப்பு! இறைவன் கணக்குக்கு முன் எழும் கணக்கு, ஏழும் கணக்கு எம்மாத்திரம்?

arielview

உளம் திருந்தினான்; அந்த ஏழு மூர்த்திகளையுமே, முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். பொதுநலத்துக்காக, தன்னலம் விட்டான்.
அரசன் அவற்றைப் பூமிக்குக் கொண்டு வந்து, மூலத் தியாகராஜ மூர்த்தியை ஆரூரில் இருத்தினான். மற்ற மூர்த்திகளை அந்தந்தத் தலங்களில் இருப்பித்தான். சப்த விடங்க தலங்கள் உருவாயின! (சப்த=ஏழு)
1.திருவாரூர் - அஜபா நடனம்,
2.திருக்குவளை - பிருங்க நடனம்,
3.திருக்காறாயில் - குக்குட நடனம்,
4.திருமறைக்காடு - ஹம்ச பாத நடனம்,
5.திருநாகை - பராவர நடனம்
6.திருநள்ளாறு - உன்மத்த நடனம்,
7.திருவாய்மூர் - கமல நடனம்
- இவையே சப்த விடங்க தலங்கள்.

இன்றும் திருவாரூரில் விஷ்ணுவின் மூச்சில் நடனம் புரிந்த அழகிய அஜபா மூர்த்தியைக் காணலாம்.
திருவாரூர், நாகைக் காரர்கள் யாராச்சும் வந்து அவன் அழகைச் சொல்லுங்க!
முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டேன்
பின்னம் அவனுடைய ஆரூர் கேட்டேன்
பேர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனேன்!ஆரூர், ஆதி ஊர். மிகப் பழமையான ஊர்.
ஆரூரில் பிறக்க முத்தி, காசியில் துறக்க முத்தி என்பார்கள்!
அன்னை கமலாம்பிகையுடன் அருள் ஆட்சி செய்கிறான் தியாகராஜன்...
அங்கு கோயில் பாதி, குளம் பாதி!
ஆரூரில் எல்லாமே பெரிது! ஆலயம், அதே பரப்பளவு உள்ள குளம், ஆழித் தேர், அகண்ட விளக்கு இப்படி எல்லாமே பெரிது!

சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டு, ஈசன் காலாற நடந்து தூது சென்ற ஊர்.
இசை மும்மூர்த்திகள் என்று சொல்கிறோமே, தியாகராஜர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள்...
இவர்கள் மூவரும் சொல்லி வைத்த மாதிரி, இந்த ஊரில் தான் அவதரித்தனர்.
இது ஒன்றே போதும் திருவாரூர் பெருமை சொல்ல!
மனு நீதிச் சோழன், கன்றை இழந்த பசுவுக்கு நீதி வழங்கிய ஊர்.
இன்றைய காலகட்டத்தில் சொல்ல வேண்டும் என்றால், தமிழக முதல்வர், கலைஞரின் சொந்த ஊர்.

சிவனார் தான் ஊருக்கே ராஜா - தியாகராஜா!
அவர் வீட்டில் விளக்கு வைத்த பின் தான், மற்ற அனைத்து ஆலயங்களிலும் இல்லங்களிலும் விளக்கிடுதல் நிகழும். இந்த ஆரூரில் சிவராத்திரி மிகவும் விசேடம்!
சிவராத்திரியின் கதையே இந்த ஊர் தானே!

இருண்ட தனிக் காட்டில் புலிக்குப் பயந்து, வேடன் ஒருவன் மரத்தில் ஏறிக் கொண்டான். இரவு முழுதும் உண்ணாது உறங்காது விழித்து இருந்தான்.
போதாக்குறைக்கு தூங்கி விடுவோமோ என்று பயந்து, மரத்தின் இலைகளைக் கிள்ளிக் கிள்ளிக் கீழே போட்டுக் கொண்டே இருந்தான்.
அந்த மரத்தின் கீழோ ஒரு சிவலிங்க உருவம்.
வேடனுக்குத் தெரியாது அன்று சிவராத்திரி என்று!
வேடனுக்குத் தெரியாது அவன் கிள்ளிப் போட்டது வில்வ இலை என்று!

அறியாமல் தெரியாமல் செய்த சிவராத்திரி உபவாசம் மற்றும் வில்வார்ச்சனை. அதனால் தான் மறு பிறப்பில், முசுகுந்தச் சக்ரவர்த்தியாகப் பிறந்தான்.
அவன் கடைத்தேறியதோடு மட்டும் இல்லாமல், நம்மையும் கடைத்தேற்ற தியாகராஜ உருவத்தை மேல் உலகில் இருந்து கொண்டு வந்தான்.
(சிலர், வேடன் என்பதற்குப் பதிலாக, குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து இலைகளைக் கிள்ளிப் போட்டது என்றும் சொல்லுவர்)

2004043001350601

இந்தச் சிவராத்திரி நன்னாளில் இந்தக் கதையைப் படித்து மனத்தில் இருத்துவோம்!
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
அறியாமலே செய்த வழிபாட்டின் மகிமை இதுவென்றால், அறிந்து உணர்ந்து உருகி வழிபடும் போது, சித்திப்பது எது?
சிவமே சித்திக்கும்! சீவனே தித்திக்கும்!!

தியாகராஜரைப் பூமிக்கு அனுப்பிய பெருமாளையும், சிவராத்திரி அன்றே,
வழிபடுவோம் வாங்க!
வெளியில் காட்டிக் கொள்ளா விட்டாலும், சிந்தையில் எங்கேனும் ஒரு ஓரத்தில் சிவ வைணவ பேதங்கள் நமக்குக் கூட இருக்காலாம்; அதையும் அகற்றி,
நெறிபடுவோம் வாங்க!

திருமலையில் எம்பெருமானுக்கு இன்று வில்வார்ச்சனையும் உண்டு.
திருமகளும் விரும்பி உறைவது வில்வ மரத்தில் தான்! இப்படிப்
பெருமாளுக்கே பேதம் இல்லை என்றால்,
வெறுமாளான (வெறும் ஆள்) நமக்கு ஏன்?

சிவ சிவ = ராம ராம = மங்களம் மங்களம்!
Read more »

Thursday, February 15, 2007

விமானத்தில் ஒரு சிவராத்திரி

சிவராத்திரி, சிவனின் ராத்திரி என்று தான் எல்லாருக்கும் தெரியுமே! அப்புறம் சிவராத்திரி அன்று என்ன பதிவு போடுவதாம்?
அதுவும் விமானத்தில் அமர்ந்து எழுதும் போது, ஜன்னல் வழியாக ஒரே மேகக் கூட்டம். அப்படியே திருவிளையாடல் படத்தில் வருமே, திருக்கயிலாய எஃபெக்ட்! புகை மண்டலம்!!

நந்தி தேவரான பைலட் அடிக்கடி அறிவிப்புச் செய்கிறார், ஒழுங்கு முறைகளைப் பற்றி. கந்தர்வ லோக விமானப் பணிப்பெண்கள், தேவ கானம் இசைக்கிறார்கள். (ஆனா யாருமே ரம்பை, மேனகை, ஊர்வசி போல, அப்படி ஒண்ணும் ஓகோன்னு இல்லை என்பது தனிக்கதை :-)

பூத கணங்கள் யாரும் இல்லையா என்று எடக்கு மடக்கா, கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது, சொல்லிட்டேன்!
என் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தான் அப்சரஸ் என்று நினைக்கிறேன்...
ச்சே என்ன இது, புத்தி இன்று இப்படிப் போகிறது! எல்லாம் இந்த வெட்டிபையல் பாலாஜியைச் சொல்லணும்! அவர் தான் பழனியில் தேவயானியைச் சந்தித்தேன்-னு பதிவு போடச் சொன்னார்.

சிவ சிவ....சரி, நாம் பதிவுக்கு வருவோம்!சிவனாரைப் பூமிக்குக் கொண்டு வந்ததே அவரின் ஆப்தரான திருமால் என்று தெரியுமா? - என்னது, சிவனைப் பூமிக்கு அனுப்பியது விஷ்ணுவா?
இப்படி ஒரு நல்லிணக்கமா நமது தர்மத்தில்!
அப்புறம் ஏனாம் வீணாகச் சண்டை இடுகிறார்கள், அதுவும் மெத்தப் படித்தவர்கள்?

ஹிஹி....மெத்தப் படித்ததனால் தான்! படித்தனர் சரி, ஆனால் பிடித்தனரா?
கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே
!

எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணின் திருமார்பில் கொலு இருப்பவள் மகாலக்ஷ்மி.
ஆனால் அவன் இதயத்துக்கு உள்ளே இருப்பவன் யார் தெரியுமா?
- சாட்சாத் சிவபெருமான் தான்!
ஈசன், பெருமாளின் இதயத்தில் தாண்டவம் புரிகிறான். எப்படி?

பெருமாளின் மூச்சுக் காற்று மேலும் கீழும் ஏறி இறங்குகிறது. அதனால் அவனுக்குள் இருக்கும் ஈசனும் ஏறி ஏறி இறங்குகிறான்.
இந்தச் சிவ தாண்டவத்துக்கு "அஜபா நடனம்" என்று பெயர்.
சிவ யோகிகளும், மதங்களைக் கடந்த சித்தர்களும் பெரிதும் காண விழையும் தாண்டவம் இது!

ThiyagarajaMain


கஷ்ட காலத்தில் இருந்த இந்திரனுக்கு மனமிரங்கினார் விஷ்ணு.
தன்னுள் இருந்த இந்தச் சிவானாரின் உருவை, இந்திரனுக்குக் கொடுத்து அருள் புரிந்தார். தியாகராஜ மூர்த்தி என்று அதற்கு நாமமும் சூட்டினார்.
சிவம்=மங்களம்; அதனால் இந்திரன் சங்கடம் தீர்ந்தான்.
தினமும் அஜபா நடனச் சிவனாரை வழிபடத் தவறவில்லை.

ஆனால் அப்படியும் வந்தது ஒரு சோதனை. அசுரர்களின் வாயிலாக.
வழக்கம் போல் பெருமாளிடம் முறையிட்டான். பெருமாளோ பதவிச் சண்டைகளுக்கு எல்லாம் தான் உதவ இயலாது என்றும்,
தர்மத்துக்குத் தீங்கு வரும் போது மட்டுமே தான் தலையிட முடியும் என்று சொல்லிவிட்டார்.
போரில் உதவிக்கு, பூலோக அரசன் முசுகுந்தச் சக்ரவர்த்தியை வேண்டுமானல் நாடிக் கொள்ளவும் என்று ஆலோசனை வழங்கினார்.

முசுகுந்தனின் உதவியால் போரில் பெரும் வெற்றி பெற்றான் இந்திரன். ஆனால் மனதுக்குள் ஒரு ஏக்கம்.
ஒரு மானுடன் உதவியால் தான் வென்றோமா? அஷ்ட திக் பாலகரில் ஒருவனான அமரேந்திரன் மானுடன் உதவியை நாடிப் பெற்றான் என்று வரலாறு பேசாதோ?

ஆகா....பாருங்கள் கதையை, வெற்றியும் வேண்டும் ஆனால் கம்பீரமும் தொலையக் கூடாது! அப்படியே இந்தக் கால மனிதர் பலரின் அலை பாயும் மனம். இந்திரன் பக்தன் தான், ஆனால் பக்திக்கும் ஆசைகளுக்கும் இடையே தடுமாறுகிறவன்.
பார்த்தார் பெருமாள்! முசுகுந்தனின் கனவில் தோன்றி, ஒரு உபாயத்தைச் சொன்னார். மறுநாள் காலை, அரசன் விடைபெற்று பூவுலகம் திரும்ப முனைகிறான்.

worship2


இதோ இந்திரனின் பூஜையறை...
காலையில் வாழி பாடு-வழி பாடு முடிகிறது.
இந்திரன், "நண்பா, தக்க சமயத்தில் உதவினாய்! உனக்கு அன்புடன் ஏதாவது அளிக்க வேண்டும் போல் உள்ளது; விரும்பியதைக் கேட்டுப் பெறுவாயாக", என்று மொழிந்தான்.
முசுகுந்தனோ, முன்பே பெருமாளிடம் பேசி வைத்த படி,
"நண்பா, இந்திரா, எனக்கும் என் குடிமக்களுக்கும் ஆரூரில் யாது குறையுமில்லை. ஆனால் நீயே விரும்பிச் கேட்பதால், இதோ பூசையில் உள்ளதே அஜபா மூர்த்தி, தியாகராஜம் என்ற திருவுருவம்! அதை வேண்டுமானால் கொடுத்தருள்வாய்!"

இந்திரனுக்கோ சப்த நாடியும் ஒடுங்கி விட்டது! அவனும் பக்தன் தானே! சுயநலப் பக்தன்!
தியாகராஜ மூர்த்தியைப் பிரிய மனமில்லை; பூவுலகிற்குக் கொடுக்கவும் மனம் வரவில்லை!
ஆனால் நன்றி மறப்புக்கும், மறுப்புக்கும் அஞ்சினான் அமரர் தலைவன்; எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டே! செய்நன்றி கொண்டவர்க்கும் உண்டோ?
பத்தி விலகி, புத்தி வேலை செய்யத் துவங்கியது...

மனிதர் தேவர் அசுரர் எல்லாரும் போடும் கணக்கு ஒன்று. ஆனால் அதில் யாரும் இறைவன் போடும் கணக்கைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லையே!
இந்திரன் போட்ட கணக்குக்கு எண்ணிக்கை ஏழு!
ஏழு விளையாட்டு விளையாடினான்! அடுத்த பதிவில்!!

(அப்பாடி...தாயகம் வந்து சேர்ந்தேன்! தாய் மண்ணே, வணக்கம்!
சொர்க்கமே என்றாலும்...அது நம்மூரு போல வருமா?
இந்தியக் காற்றே, இந்தியக் காற்றே...எனக்கும் சேர்த்தே வீசுகிறாயா?

சரி சரி இரு... அலுவலகம் எட்டிப் பாத்து வருகிறேன்...)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP