Thursday, December 30, 2010

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1

அவள் ஒரு தயிர்க்காரி! பேரு "தும்பையூர் கொண்டி"! கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா! அவள் மோட்சம் போவாளா?என்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு "உளறுகிறேன்"-ன்னு பார்க்கறீங்களா? அது எப்பமே பண்ணுறது தானே! :)

தும்பையூர்!

எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!
ஆரணி தொகுதி! திருவண்ணாமலை மாவட்டம்!
செய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு!(Ramana Maharishi College of Engg)

அது என்ன தும்பையூர்?
தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ! தும்பைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க-ல்ல?

தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட!
போர் புரியும் போது வீரர்கள் சூடிக் கொள்வது! திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா? :)

அந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள்! சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி!
வாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும்! எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்!

தும்பையூர் கொண்டி! பேரே நல்லா இருக்கு-ல்ல? :)


திருமலை அடிவாரம்! = அடிப்படி!
இன்னிக்கி "அலிபிரி" என்று தெலுங்கில் சொல்லுகிறார்கள்! அங்கே...........குருவுக்கும் சீடனுக்கும் வாக்குவாதம்!

ஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான்? இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே! :)
பாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு!
ஈரத் தமிழாய்ப் பார்ப்பதால்...அவனையும் அறியாமல், இப்படி மனம் செல்கிறது....

குலம் தரும், செல்வம் தந்திடும்,
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,
அருளோடு பெருநிலம் அளிக்கும்..


"சுவாமி, நிப்பாட்டுங்க, நிப்பாட்டுங்க!"

"எதுக்குப்பா நிறுத்தச் சொல்லுற? எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள்! இரு முடிச்சிடறேன்! அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா?"

வலம் தரும், மற்றும் தந்திடும்,
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,
நாரணா என்னும் நாமம்!

"ஆகா! சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே! பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா?"

"ஆமாம் ஆமாம்!"

"உண்மை தான் குருவே! அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போகலாம்! ஆனால் "அம்மா என்னும் சொல்"?
நம்ம அம்மா கூட, நம் நிம்மதியை எப்பவாச்சும் வந்து கெடுப்பாங்க! ஏம்மா படுத்தற? என்போம்! அவங்க அறையை விட்டுக் கிளம்பிய பின் தான் நமக்கு நிம்மதி......ஆனா அப்பவும் என்ன சொல்கிறோம்? = "அம்மாடி"! :)

பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்!"
அது போலத் தான் "அவன் என்னும் சொல்"!
அவன் பேரே என்னையும் தாங்கும்! அவன் பேரே என்னையும் தாங்கும்!

"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா! என்னால் உனக்குப் பெருமையா? உன்னால் எனக்குப் பெருமையா? ஆகா!"

"அதை விடுங்கள் குருவே! எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை! ஏதோ "தரும் தரும்"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே! அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா? தனம் தருமா? கல்வி தருமா?? என்ன தரும்?"


"ஓ அதுவா?
* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்!
* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்! "நீங்காத செல்வமும்" தரும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்!"

"அருமை! ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா!"

"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா! நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்!
அதான் மோட்சம் கொடுக்கும்-ன்னு ஒரு முறை சொல்லிட்டாரே...
அப்பறம் எதுக்கு இன்னொரு முறையும், அருளோடு மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்லணும்?
முதலில் சொன்னது அருளில்லாத மோட்சம்! பின்னே சொன்னது அருளோடு மோட்சமா? - இப்படியெல்லாம் சந்தேகமா ஆழ்வார் எழுத மாட்டாரே....."

"உம்ம்ம்ம்............அது வந்து....அது வந்து....."

"சொல்லுங்க சுவாமி! எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது!"

"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...
* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா.....அப்படி இருக்காது சுவாமி! புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க! ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு!
கேவலம், இந்திர லோகத்தையா "நாரணா" என்னும் சொல் கொடுக்கும்? நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு! அப்படி இருக்காது சுவாமி!"

"ஆகா! ஆரம்பித்து விட்டாயா? இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா?"

"மன்னிச்சிக்குங்க சுவாமி! புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை! ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்!"

"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற?"

"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்?
அன்பர் மனசுக்கெல்லாம்.....
சொர்க்க வாசல் என்பதே....
அவன் வீட்டு வாசல் தானே
சுவாமி?"

"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்!
ஆனா நீ தான் - நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்-ன்னு எதுக்கு ரெண்டு முறை மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்றாரு-ன்னு கேட்ட!
என்னை அப்படியும் போக விடாம, இப்படியும் போக விடாம....என்ன இராமானுசா இது?"அடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....

"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல! என் பேரு தும்பையூர் கொண்டி!
தயிர்க் காரி! திண்ணாமலை பக்கம்! இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்!
ஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை! கொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க...."

"சரிம்மா! இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற? பார்க்க லட்சணமா வேற இருக்க! இந்தக் காட்டில் தனியா வரலாமா? தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே!"

"அது இல்லீங்க! நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்! இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே! இவரு தான் இராமானுசரா?"

"ஆமாம், அதுக்கென்ன இப்போ? என் பேரு திருமலை நம்பி! அவரோட குரு!"

"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும்? நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க!
நல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ! இந்தத் தும்பையூர்த் தயிர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க"

"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார்! தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம்! வெளியில் வாங்கும் வழக்கமில்லை!"

"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு! பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே! நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்!"

"சரி! தினப்படிக்கு மூன்று படி தயிர்! அளந்து விட்டுப் போம்மா! மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ!"

தும்பையூர் கொண்டி (மனசுக்குள்): "உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க! வேறு ஏதோ வாங்கப் போகிறேன்!"

(தொடரும்....)
Read more »

Tuesday, December 28, 2010

இவன், எந்த முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்!

பந்தலில், மார்கழி மாசம் அதுவுமா, ஒரு பதிவு கூடவா இல்லை?-ன்னு என்னிடம் இமெயிலில் குறைபட்டுக் கொண்ட உள்ளங்களுக்காக...இந்தப் பதிவு! :)
மன்னிக்க வேண்டுகிறேன், தனித்தனியா பதில் அனுப்பாமைக்கு! முடிஞ்சா, ஒரேயொரு புதிரா புனிதமா மட்டும் அப்பாலிக்கா போடுறேன்! :)

சென்ற ஆண்டு...இதே நாள் - Dec 28 - மோட்ச ஏகாதசி!
யாரோ ஒரு முகம் தெரியாத குருவாயூர் யானையின் கதை!
.....நினைவுகளில் இப்போ இருக்கேன்!
So, just for a post, here we go,...Can you tell which ooru murugan boy is this?

இவன், எந்த ஊரு முருகன்? கண்டு புடிங்க பார்ப்போம்! - குடை கவிக்க வரும்....இவன் தலையில் சடை, ஜடை, கொண்டை....தோள் மாலை....வேல்...இவன்? இவன்? இவன்?
(one day later....)

என்ன கண்டுபுடிச்சிட்டீங்களா?
இதோ...இந்தத் திருவரங்க "முருகன்"! :) கையில் வேல் வச்சிக்கிட்டு, ஆனா நாமம் போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க! :))

மேற்கண்ட படங்கள், கோயில் என்று சிறப்பித்துப் பேசப்படும் திருவரங்கம், அங்கே இந்த ஆண்டு (2010) தமிழ் விழாவில் (இராப் பத்தில்) எடுத்தது! - படங்களுக்கு நன்றி: திருக்கோவிலூர் ஜீயர்!

பெரும்பாலும் வடமொழி உற்சவங்களுக்கிடையே,
இந்தத் தமிழ்ப் பெரும் விழாவை,
ஆயிரத்து முன்னூறு ஆண்டுக்கு முன்பே
துவக்கி வைத்து, பெருமை பெற்ற "முருகன்" இவன்!


நீலன் என்பது இயற்பெயர்!
பரகாலன் என்பது பட்டப் பெயர்!

1. ஆலிநாடன்
2. அருள்மாரி
3. அரட்டமுக்கி
4. அடையார் சீயம்
5. கொங்குமலர் குழலியர் வேள்
6. மங்கை வேந்தன்
7. பரகாலன்
8. கலியன்

என்பதோடு...
9. திருமங்கை ஆழ்வார் என்று சொன்னால் அனைவரும் அறிவார்கள்! :)கள்ளர் குல முனையரையர் - பிறப்பால் சைவர் - குமுதவல்லியின் காதலுக்காகப் பெருமாளைப் பிடித்துக் கொண்டார்! :)
ஆனால்....அதற்கு அப்புறம்....பெருமாளோ இவரைப் பிடித்துக் கொண்டார்! :)

இவரால் அவரை விடவே முடியவில்லையாம்!
குமுதவல்லியைக் கூட மறக்கத் துணிவு வந்ததாம்! ஆனால் அவரை மறக்க முடியவே இல்லையாம்! :)


இவர் எப்படி "முருகன்" ஆவான்(ர்)? = கையில் வேல் இருப்பதாலா? :)

கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்! - திருப்பாவை 01
வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி! - திருப்பாவை 24

முருகன்=அழகன்!
இவர் வடிவழகு, தமிழழகு அப்படி! அதனால் இவரை "முருகு+அன்" என்று சொல்வது பாதகமில்லை!
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானை, "பெருமாளே=பெரும்+ஆளே" என்று வரிக்கு வரி அருணகிரி பாடவில்லையா?
அதே போல் தான் இதுவும்! திருமங்கை அழகோனே-முருகோனே! :)

* இவரே கருவறைக்குள் தமிழை முதன்முதலில் புகுத்தினார்!
* இவரே தமிழுக்கென்று தனிப்பெரும் விழாவை, தலைநகராம் அரங்க நகரில் எடுப்பித்தார்!
* இவரே தமிழ் வேதமான மாறன் மொழியை, (திருவாய்மொழியை), அரங்கன் முன்னிலையிலே, ஓதுவார்கள் ஒதுங்கி இருந்து ஓதாமல், ஓதுவார்கள்-அர்ச்சகர்கள் உட்பட, அத்தனை பேரையும் ஓதச் செய்தார்!

தமிழுக்கு வாழ்வு என்னும் போது, அங்கே தமிழ்க் கடவுளாம், என் முருகனின் வாசனை வீசாதா என்ன?

* திருமங்கையின் பிறந்த நாள் = முருகன் உகந்த, கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம்!
* திருமங்கையின் கையில் = வேல்!
* காவடிச் சிந்தின் மெட்டை, வழிநடைச் சிந்தாக...முதன் முதலில் இலக்கியத்தில் பாடிச் சேர்த்தார்!
- இப்படி "தெரிந்தோ/தெரியாமலோ" திருமங்கை வரலாற்றில் முருக வாசம் வீசுகிறது!


முருகன் என்றால் அழகு! இந்த மங்கை மன்னனின் முருகை - வடிவழகு என்றே இசைக் கவிதையாக எழுதியுள்ளார் மணவாள மாமுனிகள்!

அணைத்த "வேலும்", தொழுத கையும்,
அழுந்திய திரு நாமமும்,
ஓம் என்ற வாயும், உயர்ந்த மூக்கும்,
குளிர்ந்த முகமும், பரந்த விழியும்.
...
என்றெல்லாம் போகும்! பின்னர் ஒரு நாள் எழுதுகிறேன்! அதன் கடைசிப் பத்தியை மட்டும் இப்போது பாருங்கள்!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கும் திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாள் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!

இதுவோ திருவரசு? இதுவோ திருமணங் கொல்லை?
இதுவோ எழிலாலி என்னும் ஊர்? - இதுவோ தான்
வெட்டும் கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டு எழுத்தும் பறித்த இடம்!!!

எப்படி, எப்படி? = எட்டெழுத்தைப் "பறித்தாராம்"!
"வேலை"க் காட்டிப் பெருமாளையே பயங் கொள்ளச் செய்து,
எட்டெழுத்தைப் பறித்து,
அதை நமக்கெல்லாம் கொடுத்த திருமங்கை அழகே "முருகு"!


சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்?

அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்! பார்ப்போமா?
ஆனால் இது ஒரு "போலிக்" கதை! சுவைக்கு மட்டும் வாசியுங்கள்! :)

திருஞான சம்பந்தர் = தந்தையைக் காணோமே என்ற மலைப்பால் முலைப்பால் உண்ட தமிழ்ப்பால்!

இவரை முருகனின் அம்சமாகவே/அடையாளமாகவே சைவ சித்தாந்தத்தில் சொல்வது வழக்கம்! அருணகிரியும் அப்படியே பாடியுள்ளார்! முன்பெல்லாம், சம்பந்தர் கையிலும் ஒரு வேல் இருக்கும்!

இவரின் சொந்த ஊர் சீர்காழி! பக்கத்து ஊரோ, திருமங்கை மன்னனின் ஊரான திருவாலி! இருவருமே தலம் தலமாகச் சென்று பாடிய அடியார்கள்!

ஒரு முறை, திருமங்கை மன்னன், சீர்காழித் தலத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வர (காழிச் சீராம விண்ணகரம்), கூடவே அவர் குழாமும் வந்தது! விருதுகளைக் கூவிக் கொண்டே வந்தது! அழகன் திருமங்கை, அவன் ஆடல் மா என்னும் குதிரை மேல் வரும் அழகை எண்ணிப் பாருங்கள்!

வீதியில், சம்பந்தப் பிள்ளையின் மடத்தைத் தாண்டிச் சென்றாக வேண்டும்!
என்ன இருந்தாலும் சொந்த ஊர் அல்லவா! தலைவர் அடக்கமாக இருந்தாலும், தலை இருக்க வால்கள் ஆடுமே! சம்பந்தர் மடத்தில் உள்ளவர்கள், சம்பந்தர் வீதியில் மட்டும் கோஷம் போடாமல் மவுனமாகப் போகச் சொன்னார்களாம்!

நம்ம திருமங்கை தான் எதிலுமே பொசுக் பொசுக்-கென்று செயல்படுபவர் ஆயிற்றே! இதென்ன நாட்டாமைத்தனம்-ன்னு நினைச்சாரோ என்னவோ, அவரிடமே கேட்டு விடுவோம் என்று, விறுவிறு-சுறுசுறு...சைவ மடத்துக்குள் வைணவர் நுழைந்தே விட்டார்! :)

உள்ளே சென்றால்...பச்சிளம் பாலகன்! அன்னையின் முலைப்பால் உண்டவன், அவனை மலைப்பால் பார்த்த இந்தக் கள்ளர் குலத் தலைவன்...என்ன இருந்தாலும், கற்றாறைக் கற்றாரே காமுறுவர் அல்லவா?

இருவரும் அன்புடன் முகமன் கூறிக் கொள்ள...நம் திருமங்கை, "உம்ம ஆட்களின் அதிகாரம் பார்த்தீரா" என்று கேட்க...
ஆளுடைய பிள்ளையான சம்பந்தப் பிரான் குறும்பாக, "எம் ஆட்களுக்கு உம்மை நிரூபித்துத் தான் காட்டுங்களேன் பார்ப்போம்" என்று சொன்னாராம்!

இரு பெரும் தமிழ் மலைகள்!
சம்பந்தர் முதலில் பாட...

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பக்
கயத்துக்குகள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர் தெங்கின் பழத்தாற் பூதம்
அலையுண்டு குலைசிதறும் ஆலி நாடா!

படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடி
பதம் பெற்ற பெருமாளே தமியேன் பெற்ற
கொடி ஒன்று நின்பவனிக்கு எதிரே சென்று
கும்பிட்டாள் உயிர் ஒன்றுங் கொடு வந்தாயே!

ஆலிநாடரான திருமங்கை மன்னா, எம் பெண்ணை மயக்கிக் கொண்டு போய் விட்டீரே, நியாயமா? என்று ஒரு தாய் பாவனையில் சம்பந்தர் கேட்க....
திருமங்கை, தம்மையே தலைவியாகப் பாவித்து, அதே சூட்டில் மறுமொழி உரைக்கிறார், ஞானக் குழந்தைக்கு! :)

வருக்கை நறுங்கனி சிதறிச் செந்தேன் பொங்கி
மருக்கரையின் குளக்கரையில் மதகில் ஓடப்
பெருக்கெடுத்து வண்டோலம் செய்யும் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்

அருட்குலவு மயிலை தன்னில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினோம் என்று
இருக்குமது தகவன்று நிலவால் வெந்த
இவளையும் ஓர் பெண்ணாக்கல் இயல்புதானே!

நீர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்தது போல், நான் இவளுக்கு உயிர் கொடுத்தால் மட்டும் ஏலாதா என்ன? என்று எதிர்க்கவிதை, எசப்பாட்டு :)
இப்படி வீசியவுடன் சிரித்தே விட்டார் சம்பந்தர்! தம்மையே மடக்கிய மங்கை மன்னனுக்கு, நாலுகவிப் பெருமான் என்று பட்டம் சூட்டி, அதுகாறும் தான் வைத்திருந்த வேலை, கொடுத்துவிட்டதாகக் கதை சொல்கிறார்கள்!


கதை நல்லாத் தான் இருக்கு.....ஆனாலும், கே.ஆர்.எஸ் இதுகெல்லாம் மயங்கீற மாட்டான்! :)
அது வைணவமே ஆனாலும் சரி! பெருமாளே ஆனாலும் சரி, வாய்மையே வெல்லும்! :)

என்னைப் பொருத்தவரை, இதை ஏன் "கட்டுக்கதை", உண்மைக் கதை அல்ல என்று சொல்கிறேன் என்றால்...

1. வரலாற்றின் படி, சம்பந்தர் காலத்தால் முந்தியவர்! மகேந்திர வர்ம - நரசிம்ம வர்ம பல்லவன் காலம் என்றும் சொல்வார்கள்! 640-656 CE!
திருமங்கையோ, நந்தி வர்ம பல்லவன் காலம்! 730-800 CE! குறைந்தது நூறு ஆண்டாச்சும் பின்னால் வந்தவர்! அப்படி இருக்க, இருவரும் எப்படிச் சந்தித்து இருக்க முடியும்? :)

2. திருமங்கை ஆழ்வாரின் வைபவத்தைச் சொல்லும் வைணவ நூல்கள்/குரு பரம்பரை கூட, இந்த நிகழ்ச்சியைச் சொல்லவில்லை!

3. ஐயோ! அப்போ இந்த ரெண்டு பாட்டு? எசப்பாட்டு மாதிரி கொடுத்தியே-ன்னு கேக்குறீங்களா? ஹிஹி! அந்தப் பாட்டெல்லாம் யாரோ பின்னாளில் எழுதியது போலத் தான் இருக்கு! சந்த அமைப்பிலோ/நடையிலோ, ஆழ்வாரைப் போலவும் இல்லை! சம்பந்தரைப் போலவும் இல்லை!
மிகவும் முக்கியம்: அந்தப் பாடல்கள் தேவாரத்திலும் இல்லை! திவ்ய பிரபந்தம் என்னும் அருளிச் செயலிலும் இல்லை!

இப்படி, வைணவ நூல்களே குறிப்பிடாத ஒரு நிகழ்ச்சியை, யாரோ கதை கட்டி விட,
அதையே அங்கொன்றும் இங்கொன்றுமாக, "பகூத் அறிவுள்ள" சிலர் எழுதி வைக்க,
தரவே தராமல்.....பத்து முறை சொன்னதையே சொன்னால், வெறுமனே கும்மி அடித்தால், பொய்யும் "மெய் போல்" ஆகும் அல்லவா நம்ம பதிவுலகில்?

அப்படித் தானே "தொல்காப்பியத் திருமால் தமிழ்க் கடவுள் இல்லை! முருகன் "மட்டுமே" தமிழ்க் கடவுள்" என்று கும்மியடித்து கும்மியடித்து, நம்ப வைக்கப்பட்ட கூட்டம்? :)

* ஏபி நாகராஜன் சினிமாவில், "தமிழ்க் கடவுள்" என்று பத்து முறை வசனம் வருவது தான் தரவு,
* எங்கோ சிவன் கோயில் யானைக்கு ஓம் போட்டு பார்த்து இருக்கேன் என்ற சிங்கைத் தரவு! :))
அது போலத் தான் இதுவும்! திருஞான சம்பந்தர் - திருமங்கை சந்தித்தார்கள்! திருமங்கை வாதில் வென்று, வேலைப் பெற்றார் என்பதெல்லாம்!

அது வைணவமே ஆனாலும்.......தவறான தகவல் என்று ஓப்பனாகச் சொல்லும் அறத் துணிவு, எனக்கு உண்டு! :)
எப்பொருள், "எத்தன்மைத்" தாயினும் - அப்பொருள்
"மெய்ப்பொருள்" காண்பது அறிவு!

இதுக்கு, நான் ரெண்டு பக்கமும் வாங்கிக் கட்டிக் கொள்வேன்-ன்னு நல்லாவே தெரியும்! :) சைவத்திலும் பிடிக்காமல் போகலாம்! வைணவத்திலும் பிடிக்காமல் போகலாம்! :) இருப்பினும்......
சமயம் கடந்து, தமிழைத் தமிழாகவே பார்த்தால், தமிழ் தழைக்கும்!எல்லாஞ் சரி, இவர் கையில், வேல் எப்படி வந்துச்சாம்? அதைச் சொல்லவே இல்லீயே?

பண்டைத் தமிழ் மறவன் - கள்ளர் குலத் தலைவனான நீலன், திருமங்கை ஆனான்! இவன் பெருநில மன்னன் அல்ல! மிகவும் குறு நில மன்னன்! இவனுக்கு யானை கூடக் கிடையாது! வெறும் குதிரை மட்டுமே! அது போல் தான் வேலும்!

பெரிய வாள் என்பதை விட, கத்தி தான் இருக்கும்! கேடயம் இருக்கும்! வேல் இருக்கும்! அப்படித் தான் வைணவ ஆலயங்களிலும் சிலையாக வடித்துள்ளார்கள்! தொலைவில் இருந்து எறிய வல்ல வேல்! நேருக்கு நேர் வாள் வீசிச் சண்டை போடும் பெருநில மன்னன் அல்ல! கள்ளர் குலத் தலைவன்! ராபின்ஹூட்! :)

இவன் கையில் வேலும், கத்தியும், கேடயமும் தானே!
அப்படித் தான் "வேல்" தாங்கிற்றே அன்றி..........
சம்பந்தரை வென்று வாங்கிய வேலாக இருக்கச் சாத்தியமே இல்லை!

* முருகப் பெருமானின் திருக்கை ஆயுதம் "வேல்" என்பதாலும்,
* இவர் தோன்றிய கார்த்திகை நட்சத்திரத்தாலும்,
* ஆழ்வார் தமிழுக்கு ஆற்றிய தொண்டு கருதியும், - தமிழ்க் கடவுளான முருகனோடு ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம்! அவ்வளவே!

"வேல்" அணைத்த மார்பும், விளங்கு திரு எட்டெழுத்தும்,
மால் உரைக்கத் தாழ்த்த வலச் செவியும் - தாளின் இணைத்த
தண்டையும், வீரக் கழலும், தார்க் கலியன் நன் முகமும்
கண்டு களிக்கும் எந்தன் கண்!


ஆழ்வார்கள் ஈரத் தமிழ் வாழ...ஆலயக் கருவறைக்குள்ளும் தமிழ் வாழவென்றெ வாழ்ந்த............திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்!

அந்தத் தமிழுக்குக் குறிஞ்சித் தலைவனாய் நிற்கும்.............என் காதல் முருகப் பெருமான் இணையடிகளே சரணம்!!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP