Thursday, October 29, 2009

மறங்கொள் இரணியன் - 2ம்பராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

இடம்: ராவணன் அரண்மனை
காலம்: அவனுடைய கெட்ட காலம்ராவணன்:
மந்திரிகளே! நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்யலாம்!

மகோதரன்: குரங்குகளுடைய சேட்டைகளை நிறுத்துவதற்காக மந்திராலோசனை வேண்டுமோ?

வச்சிரதந்தன்: இப்பொழுதே பூமியில் உள்ள எல்லாக் குரங்குகளையும் கொன்று தின்ன உத்தரவிடுங்கள்.

துன்முகன்: யாராவது தம் உணவுப் பொருட்களிடம் பயப்படுவார்களா?

மகா பார்சுவன்: குரங்குக்கு உதவிய அக்னியை நீங்கள் அன்றே எரித்திருக்க வேண்டும்.

தூமிராட்சன்: அல்பமாக இருந்தாலும், சண்டையிட்டு, கொன்று தின்று விடுவோம். வேறு வழியில்லை.

கும்பகர்ணன்: சீதையை அபகரித்தது தவறு. உனக்குப் பல மனைவிகள் இருந்தும், இன்னொருவன் மனைவியின் அடிகளில் பல முறை வீழ்ந்தும், அவள் மறுப்பதும் உனக்கு அழகல்ல. இருந்தாலும், சண்டை செய்வதே இப்பொழுது வீரர்களுடைய செயல்.

இந்திரஜித்: நாங்களே சென்று கொன்று வருவோம். அந்தக் குரங்கை நான் ஏற்கனவே பிடித்தவன் தானே!

விபீடணன்: உனக்கு முன்னால், உன்னையும் விட வலிமையான இரணியாட்சனும், அவனையும் விட மிக வலிமையான இரணியகசிபுவும், திருமால் சினத்தால் தமது சுற்றத்தாருடன் இறந்தனர். அதைக் கேள்!

(இரணிய வதைப் படலத்தின் 170 கவிகளால் பிரகலாத சரித்திரத்தை, அழகாக விவரிக்கின்றான்)

விபீடணன் (கடைசியில்): இப்படிப் பட்ட வலிமையுடைய இரணியனே திருமாலால் எளிதாக அழிக்கப்பட்டான்! நீ எம்மாத்திரம்? இராமனாக வந்துள்ள திருமால் உன்னை அழிப்பது நிச்சயம். நீ உயிர் பிழைக்க வேண்டுமென்றால், சீதையை இராமனிடம் மீண்டும் சேர்த்து விட்டு அவரிடம் சரணடைந்து விடு!

கம்பர், இங்கு விபீடணன் மூலம் வர்ணித்த இரணியனின் வீரம், நம் கற்பனைக்கு எட்டுமா?

***


ம்பர், 11 கவிகளால் (133-143) இரணியனுடைய அபரிமிதமான வலிமையையும், அவனால் தேவர்களும், மனிதர்களும் பட்ட துன்பங்களையும் வர்ணிக்கின்றார்.

இவற்றை முழுவதும் விளக்கினால், நரசிம்மரில் இருந்து முழுவதும் ராமருக்குத் தாவ நேரிடலாம் என்ற பயத்தினால், ’இரணியன் Top 10' மட்டும் குறிப்பிட்டுள்ளேன்:

பாழி வன்தடம் திசை சுமந்து ஓங்கிய பணைக்கைப்
பூழை வன் கரி இரண்டு, இரு கைக்கொடு பொருத்தும்;

ஆழம் காணுதற்கு அரியவா அகன்ற பேராழி

ஏழும், தன் இரு தாள் அள, எனத் தோன்றும்.
(133)

10. Exercise - யானைகளை இழுத்து மோத விடுவது (கரி ... பொருத்தும்)!
9. Olympics - கடல் தாண்டுவது (ஆழி ஏழும் ... தோன்றும்)!

'வண்டல் தெண்திரை ஆற்று நீர் சில', என்று மருவான்;
'கொண்டல் கொண்ட நீர் குளிர்ப்பில' என்று, அவை குடையான்;

'பண்டைத் தெண்திரைப் பரவை நீர் உவர்' என்று படியான்;

அண்டத்தைப் பொதுத்து, அப்புறத்து அப்பினால் ஆடும்.
(134)

8. Bathtub/Shower - அண்டத்தில் உள்ள கடல் நீர் (அண்டத்தைப் ... ஆடும்)!

(இதை, வட மொழியில் ஆவரண ஜலம் என்பர்)

மரபின் மாப்பெரும் புறக்கடல் மஞ்சனம் மருவி,
அரவின் நாட்டிடை மகளிரோடு இன்னமுது அருந்தி,

பரவும் இந்திரன் பதியிடைப் பகல் பொழுது அகற்றி,

இரவின் ஓலக்கம் நான்முகன் உலகத்துள் இருக்கும்.
(135)

7. Party - நாக லோக மகளிர் (அரவின் .. அருந்தி)!
6. Entertainment - தேவ லோக ஆடல், பாடல் (இந்திரன் ... அகற்றி)!
5. Bedroom - பிரம்ம லோகம் (இரவின் ... நான்முகன் ... இருக்கும்)!

நிலனும் நீரும் வெங்கனலொடு காலுமாய், நிமிர்ந்த
தலனுள் நீடிய அவற்றினை, தலைவரை மாற்றி,

உலவும் காற்றொடு கடவுளர் பிறருமாய், உலகின்

வலியும், செய்கையும், வருணன் தன் கருமமும் ஆற்றும்.
(137)

4. Hobbies - பஞ்ச பூதங்களின் செயல்கள் (... கருமமும் ஆற்றும்)!

தாமரைத் தடம் கண்ணினான் பேர்; அவை தவிர
நாமம் தன்னதே உலகங்கள் யாவையும் நவில;
தூம வெங்கனல் அந்தணர் முதலினர் சொரிந்த
ஓம வேள்வி(அ)வயின் இமையவர் பேறெலாம் உண்ணும்.
(138)

3. Food - யாகங்களில் வரும் அவிர் பாகம் (வேள்வி ... உண்ணும்)

பண்டு வானவர் தானவர் யாவரும் பற்றி,
தெண் திரைக்கடல் கடை தர வலியது தேடிக்

கொண்ட மத்தினை, கொற்றத் தன் குலவு தோட்கு அமைந்த

தண்டு எனக் கொளல் உற்று; 'அது நொய்து', எனத் தவிர்த்தான்.
(141)

2. Dumbells - மந்திர மலை (மத்தினை ... கொளல் ... தவிர்த்தான்)!

மண்டலம் தரும் கதிரவன் வந்து போய் மறையும்
எண் தலத் தொடற்கு அரியன தடவரை இரண்டும்,

கண் தலம் பசும் பொன்னவன் முன்னவன் காதில்

குண்டலங்கள்; மற்று என், இனிப் பெரு வலி கூறல்?
(142)

1. Earrings - இரு பெரு மலைகள் (தடவரை இரண்டும் ... காதில் குண்டலங்கள்)!

அவன் வலிமையைப் பற்றி இனிக் கூறவும் வேண்டுமோ (மற்று ... கூறல்)?

(கவிஞனின் கற்பனை வளத்திற்கு உதாரணமாக, இலக்கிய ஆராய்ச்சிப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும், இரணிய வதைப் படலம் கூறப்படுகின்றது)

சரி, மூல ராமாயணமான வால்மீகி ராமாயணத்தில் நரசிம்மர் வருகிறாரா?

***

வா
ல்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் ஒரு காட்சி:

(ராவணனிடம் கோபித்துக் கொண்டு, விபீடணன் தன் நான்கு மந்திரிகளுடன் ராமன் இருக்குமிடம் வருகிறான். சுக்ரீவனும் மற்ற வீரர்களும், போரிடத் தயாராகின்றனர்)விபீடணன் (எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாக):
ராமனிடம் சரணடைய வந்துள்ளோம்.

(சுக்ரீவன், ராமனிடம் ஓடிச் செல்கிறான்)

சுக்ரீவன்:
பிரபோ! விபீடணன் எதிரியின் பலத்தைச் சோதிக்க வந்திருக்கிறான். இவனை நம்மிடம் சேர்க்க வேண்டாம்.

ராமன் (மற்ற மந்திரிகளிடம்): நீங்கள் சுக்ரீவன் சொன்னதைக் கேட்டீர்கள் அல்லவா? உங்கள் எண்ணம் என்ன?

அங்கதன்: அவனைப் பரீட்சித்துப் பார்த்தே சேர்க்க வேண்டும். அவன் நல்லவனாக இருந்தால் சேர்க்கலாம்.

ஜாம்பவான்: இவனிடத்தில் நாம் சந்தேகப் படவேண்டியது நியாயமே.

மைந்தன் (மயிந்தன்): கேள்விகள் கேட்டுப் பரீட்சித்துப் பாருங்கள். இவன் நல்லவனாக இருந்து, இவனை நாம் விட்டு விட்டால், ஒரு மித்திரனை இழந்து விடுவோம்.

(’கழுவும் நீரில் நழுவும் மீன்கள்’ என்பதற்கு இவர்கள் தான் உதாரணமோ?)

இலக்குவன்: அண்ணா! இவன் வந்த காரணம் பற்றி எனக்குச் சந்தேகம் உள்ளது.

அனுமன் (ராமனிடம்): தங்களுக்குத் தெரியாததல்ல. இருந்தும் என்னை ஒரு பொருட்டாக மதித்துப் பேசும்படி கட்டளை இட்டதால் பேசுகிறேன். இவனை இப்படிப் பரீட்சிப்பது உசிதமல்ல. (விபீடணனுடைய நல்ல குணங்களைச் சொல்லி), சந்தேகப் படுவதும் தவறு. இவன் நேர்மையாகப் பேசுபவன். அசுரனாக இருந்தாலும், யோக்கியன். எனவே இவனைச் சேர்க்கலாம். தங்கள் கட்டளை என்ன?

(அனுமன் மற்ற மூன்று மந்திரிகளையும் மறைமுகமாகக் கண்டித்ததால், அவர்கள் நெளிகின்றனர் )

ராமன்: என்னை வந்து அடைந்தவனை நான் ஒருபோதும் கைவிடுவது இல்லை.

சுக்ரீவன்: இவன் நன்றியற்றவன். தமையனைக் கைவிட்டு இங்கு வந்தவன், பின்னால் நம்மையும் கைவிடலாம்.

ராமன்: ராவணன், நல்லவனான விபீடணனிடம் கோபப் படுவது நம்பக் கூடியதே. மேலும், அசுரர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்களே (பிரகலாதனைச் சொல்கிறாரோ)?

சுக்ரீவன்: தாங்கள் இவனிடத்தில் பொறுமை காட்டுவது தவறு. இப்பொழுதே திருப்பி அனுப்பி விடுங்கள்.

(ராமனிடத்தில் உள்ள அன்பினால், கோபம் கொள்கிறான் சுக்ரீவன்)

ராமன் (அவனுக்கு புத்தி சொல்ல நினைத்து): வானர அரசனே! இவன் கெட்ட எண்ணத்துடனேயே வந்து இருக்கட்டும். இவனால் என்னை என்ன செய்ய முடியும்? (யு.கா.ஸ - 18.240-244)


ராமன் (மீண்டும்):
நீயும் உன் படைகளும், ஏதோ என்னை ஆபத்திலிருந்து காத்துக் கொண்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைக் கொஞ்சம் கூடச் சிரமப் படுத்தாமல், பூமியில் உள்ள அரக்கர்களையும், தானவர்களையும், பிசாசுகளையும், மற்ற கெட்ட பிராணிகளையும், நினைத்த மாத்திரத்திலேயே விரலின் நுனியால் நாசம் செய்வேன் என்று நீ அறி! அஸ்திர, சஸ்திரங்கள் வேண்டாம். கையில் உள்ள மற்ற விரல்களின் உதவியும் வேண்டாம். ஒரு விரலிலும், அதில் உள்ள மற்ற கணுக்களும் வேண்டாம். நுனி ஒன்றே போதும்! (யு.கா.ஸ - 18.245-255)

(அனைவரும், விபீடணனை அழைத்து வரச் செல்கின்றனர்)

(சர்வேஸ்வரன் தன்னையே புகழ்ந்து கொள்வது சரியா எனில், நடந்த உண்மையை அப்படியே சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்பர் பெரியோர். நரசிம்ம அவதாரத்தில் இது தானே நடந்தது?)

நரசிம்மாவதாரத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் வேறு எங்கும் கூறப்படவில்லை.

(பல அறிஞர்கள், இராமகாதையில் நரசிம்மாவதாரமும், இரணிய வதமும் வருவதற்குக் காரணமே இல்லை என்பர். இருந்தும், இந்த நரசிம்மம் தானே சிரித்து, ராமாவதாரத்தை அரங்கனூரில் அரங்கேற்றி வைத்தது?)

(அடியேனின் எண்ணம் - வால்மீகி கோடு காண்பித்தார்; கம்பர் ரோடு போட்டார். இதில் தவறேதும் இல்லையே? மேலும், நரசிம்மனே 'சரி' என்று கூறியதில் நாம் தவறு காணலாமா?)

மீண்டும் ஆழ்வார் பாசுரத்துக்குத் தாவுவோமா?

***

ன்ன? 'மறங்கொள் இரணியன்' என்பது சரிதானே?

ஆழ்வார் உண்மையில் இரணியனையா புகழ்ந்தார்?

'இந்தக் கண்ணன் தான் இரணியனின் மார்பை அன்று கிழித்தான்' என்பதால், நரசிம்மன் வலிமையை மட்டும் சொல்கிறாரோ?

ஒருவேளை 'கண்ணனே நரசிம்மன்!' என்றும் சொல்கிறாரோ?

இந்த நரசிம்மனின் வலிமைக்கு, நம் வணக்கங்கள்.

... நரசிம்மர் மீண்டும் வருவார்

Read more »

Sunday, October 25, 2009

பூதனா சம்ஹாரம் - கண்ணன் ஏன் கண்ணை மூடினான் ?பெரியாழ்வார், தன்னை யசோதையாகவும் கண்ணனைத் தன் குழந்தையாகவும் நினைக்கின்றார் (’பெரிய ஆழ்வார்' என்று இவரை அழைப்பது இதற்காகத் தானோ?).

மனம், மின்னல் வேகத்தில், ஆய்ப்பாடிக்குச் செல்கிறது. கண்ணனின் அழகில் லயிக்கின்றது.பாதாதிகேச வண்ணமாக (பாதம் + ஆதி + கேசம் = திருவடி முதல் திருமுடி முடிய), ’குஞ்சிக் கோவிந்தனுடைய’ அழகை அனுபவிக்கிறார்.
அப்படியே நின்றுவிடாமல், நமக்காக, பாசுரம் இயற்ற ஆரம்பிக்கின்றார். பிறந்தது, ‘சீதக்கடல்’ எனும் திருமொழி!

10 பாசுரங்கள் போதும் என்று எழுத நினைத்தவர், அழகில் தன்னை மறக்கிறார். எழுதியது 21 பாசுரங்கள்! நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தானே!
(ஒரு சாரார், திருப்பல்லாண்டுப் பதிகத்தைத் தனிப் பிரபந்தமாக எடுத்துக் கொண்டு, சீதக்கடல் பதிகத்தை 2 பதிகங்களாக எடுத்துக் கொள்வர்)

5-வது பாசுரத்தில், நரசிம்மாவதாரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

***
பிறங்கிய பேய்ச்சி* முலை சுவைத்து உண்டிட்டு*
உறங்குவான் போலே* கிடந்த இப்பிள்ளை*
மறங்கொள் இரணியன்* மார்பை முன் கீண்டான்*
குறங்குகளை வந்து காணீரே!* குவிமுலையீர்!* வந்து காணீரே!
சீதக்கடல்-1-3-5

"வஞ்சனையால், உருவம் மாறி வந்த பேயின் முலையுடன் உயிரையும் சேர்த்து உண்டு விட்டு, இப்பொழுது தூங்குவது போல் பாசாங்கு செய்கின்ற இந்தக் கண்ணனே வீரமுடைய இரணியனுடைய மார்பை முன்பு பிளந்தவன். அவனுடைய அழகிய தொடைகளை, ஆய்ப்பாடிப் பெண்களே, வந்து பாருங்கள்!".
(பிறங்கிய - நிலை மாறிய, சிறந்து விளங்கிய; மறங்கொள் - வீரமுடைய, குறங்குகள் - தொடைகள்)

***

ண்ணனைக் கொல்ல, கம்சன் பூதனை எனும் அரக்கியை ஆய்ப்பாடிக்கு அனுப்புகிறான். 'எல்லோரும் கண்ணனை வந்து பாருங்கள்!' என்ற யசோதையின் அழைப்பிதழ், பூதனைக்கும் சேர்த்துத் தானே! அழகான ஒரு நடுத்தர வயதுப் பெண் போல், நந்தகோபன் மாளிகைக்கு வருகின்றாள் அவள். அவளுக்கு, ’விருந்தினர்’ என்ற மரியாதை வேறு!

கண்ணனைக் கொல்ல வழி தேடுகின்றாள். கேட்டதைக் கொடுப்பவனாயிற்றே கண்ணன்! உடனே வழி காண்பிக்கின்றான் அவளுக்கு (நேரம் வந்துவிட்டதே என்ற அவசரம் தான்)!

வந்த விருந்தினரை (!?) உபசரிப்பதற்காக யசோதை உள்ளே செல்கிறாள் - உணவு எடுத்து வரச் செல்கின்றாளோ? உயிரே சற்று நேரத்தில் (இன்னொருவருக்கு) உணவாகப் போகும் போது இந்த உணவு எதற்கு!


சமயம் பார்த்து அழுகின்றான் கண்ணன், பூதனைக்காக! நீலிக்கண்ணீர்! அவளுக்கோ, வாய்ப்பு தானாகக் கிடைத்து விட்ட மகிழ்ச்சி! இது தான் மனிதர்களின் அறியாமையோ?கண்ணனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டு, நஞ்சு தடவிய மார்பிலிருந்து அவனுக்குப் பால் கொடுக்கின்றாள். கண்ணன், பேய் முலை நஞ்சை உண்கின்றான்.

ஐயோ! இந்த நஞ்சு கண்ணனை என்ன செய்யுமோ?

***

திலை, (அடியேனைப் போன்ற) சிறியோர் சொல்வதை விட, குலசேகராழ்வார் சொல்வது அழகாக இருக்குமே!எம்பெருமான், திருவரங்கத்தில், அரவணையில் உறங்கிக் கொண்டு இருக்கின்றான்.

அவன் திருமுடி மீது ஆதிசேஷன் தன் உடலை வளைத்து, தன்னுடைய ஆயிரம் வாய்களால் (வாயோர் ஈரைஞ்ஞூறு) சுற்றி வளையமாக இருந்து, காக்கின்றான்.

வாயோர் ஈரைஞ்ஞூறு துதங்கள் ஆர்ந்த*
வளை உடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ*
வீயாத மலர்ச் சென்னி விதானமே போல்*
...பெருமாள் திருமொழி 1-2

தன் ஆயிரம் வாய்களாலும், அரங்கனை இடை விடாது துதித்துக் கொண்டு (துதங்கள் ஆர்ந்த) இருக்கின்றான்! அந்த ஆயிரம் வாய்களில் இருந்து ஸ்தோத்திரங்கள் வந்தாலும், அவற்றுடன் உமிழ்கின்ற நெருப்பும், விஷமும் சேர்ந்து வருகின்றன (உமிழ்ந்த செந்தீ). அவை, அரங்கனுடைய திருமுடி மேல் சிவந்த மலர்களால் ஆன அழகான அலங்காரம் போல் (விதானமே போல்) உள்ளதாம்!

ஆதிசேஷனின் ஆயிரம் வாய் விஷமே எம்பெருமானுக்கு மலர் அலங்காரம்! பேய் முலை நஞ்சு அவனுக்கு ஒரு பொருட்டா என்ன?

***
பூதனைக்கு ஆனந்தம் - காரியம் இவ்வளவு எளிதில் முடிகின்றதே! வருத்தமும் கூட - இந்தச் சிறு வேலைக்குக் கம்சன் தன்னைப் போய் அனுப்ப வேண்டுமா என்று. ஒரு வினாடி தான் நிலைத்தது ஆனந்தம்! விளக்கு அணைவதற்கு முன் சற்று நன்றாக எரிவதைப் போல்!

கண்ணன், நஞ்சுடன், உயிரையும் சேர்த்து உறிஞ்சி விட்டான். உயிர் செல்லும் தறுவாய் - சுய ரூபத்துடனும், பயங்கர அலறலுடனும் தரையில் வீழ்கிறாள் பூதனை.
சப்தம் கேட்ட யசோதையும், ரோகிணியும், மற்ற ஆய்ப்பாடிப் பெண்களும் ஓடி வருகின்றனர். அங்கே விரிந்த காட்சி:

கீழே மிகவும் பயங்கர உருவமுள்ள ஒரு அரக்கி இறந்து கிடக்கிறாள். தொட்டிலில், எதுவுமே நடவாததுபோல் கண்ணன் உறங்குகின்றான்!

'உறங்கினான்' என்று கூறாது, 'உறங்குவான் போலே' என்கிறார் ஆழ்வார். கண்ணன் உண்மையில் தூங்கவில்லையா? ஏன் தூங்குவதாகப் பாசாங்கு செய்ய வேண்டும்?

பூனை கண்ணை மூடினாலும், பூதனை கண்ணை மூடினாலும், உலகம் இருண்டு விடாது! ஆனால் கண்ணன் கண்ணை மூடினால்?

***

வதாரங்களின் போது, எந்த உருவம் எடுத்தாலும், அந்தத் தாமரைக் கண்களை மட்டும் அவனால் எளிதில் மறைக்க முடியாதாம்! ஒரே சமயத்தில், பகைவர்களுக்கு நெருப்பும், பக்தர்களுக்குக் குளிர்ச்சியுமாய், 'திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்' இருக்கின்ற அவனுடைய தாமரைக் கண்களை யார் பார்த்தாலும் தெரிந்துவிடும், இவன் நாராயணன் தான் என்று!

பூதனை தன்னை மடியில் கிடத்திய போதே கண்ணை மூடிக் கொண்டானாம்! ஏனோ?

நாராயணனை அடையாளம் தெரிந்துகொண்டு, அவனைக் கொல்லவே முடியாது என்று அறிந்து அவள் ஓடிவிட்டால்? எனவே கண்களை மூடினான் - ஓடாமல் இருக்க!

கண்களைப் பார்த்தவுடன், அவளுக்குப் பூர்வ ஜன்ம வாசனை வந்து, கொல்லாமல், வணங்கி ஓடி விட்டால்? மூடினான் - பழைய வாசனை அவளுக்கு வராமல் இருக்க!

வேத நியமங்களின் படி, பெண், பிராம்மணர்கள், பசு, குழந்தை ஆகியவற்றைக் கொல்லக் கூடாது. ஆனால், கண்ணன் கொன்ற முதல் அசுரன் (அசுரி என்று ஒரு தமிழ் வார்த்தை உள்ளதா?), ஒரு பெண் - பூதனை!

தன் கைகளால் அவளைக் கொல்லவில்லை. அவளே நஞ்சு தடவிய முலையுடன், தன் உயிரையும் கொடுக்கின்றாள்! ஒரு பெண்ணின் உயிரை எடுக்க வேண்டியதால், அவளைப் பார்க்க விருப்பம் இல்லாமல், மூடினான் - சங்கடத்தினால்!

ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளரும் கண்ணனுக்கு முலை கொடுத்ததால் (நஞ்சு இருந்தாலும்), பூதனையும் தன் தாயாகி விட்டாளே! (இரண்டு தாய்மார் போதாதென்று, புதிதாக மூன்றாவது)!

பெண்ணைக் கொல்லவே சங்கடப் பட்டவனுக்கு, அது தன் தாயாகவே இருந்தால்? தாயின் முகத்தைப் பார்த்து இரக்கப் பட்டு, கொல்லாமல் விட்டு விட்டால்? எனவே மூடினான் - தன் மீதே நம்பிக்கையின்றி!

சரி, பூதனையைக் கொல்லும்போது தான் பார்க்க வேண்டாம். அவள் இறந்த பின்னும் கண்களை மூடிக் கொண்டு இருப்பானேன்?

***

ங்கு வந்த யசோதை, தன் கண்களைப் பார்த்து, நடந்ததைக் கண்டுபிடித்து விடுவாளோ? எனவே காரியம் முடிந்த பின்னும் மூடிக் கொண்டிருந்தான் - வளர்த்த தாய்க்கு அஞ்சி!

அந்த நிஜ யசோதைக்கும், ரோகிணிக்கும் அங்கு என்ன நடந்தது என்று புரியவில்லை! ஆனால், கற்பனை யசோதையான பெரியாழ்வாருக்கு, கண்ணன் நடித்தான் என்பது தெரியுமே! எனவே 'உறங்குவான் போலே' என்கின்றார்.

ஆஹா! 'போலே' என்ற வார்த்தைக்கு இவ்வளவு அர்த்தமா (ஆழ்வார் என்றால் சும்மாவா?)

பூதனையில் இருந்து, இரணியணுக்குத் தாவுகின்றார் ஆழ்வார், பாசுரத்தின் அடுத்த வரியில். அவனை, வீரமுள்ள (மறங்கொள்) இரணியன் என்கின்றார் பெரியாழ்வார்.

அவன் வீரம் எவ்வளவு என்று ராமாயணம் படித்தால் தெரியும் (என்னப்பா இது புதுக் கதை?).
***
... நரசிம்மர் தொடர்வார்

Read more »

Tuesday, October 20, 2009

அந்தியம் போதில் அரியுரு - உலகின் ஒரே ஒரு அழகிய மாலைப் பொழுது


இடம்: பாண்டிய நாட்டின் ஒரு வீதியில், ஒரு வீட்டுத் திண்ணை
நேரம்: மாலை நேரம்
காலம்: வல்லப தேவன் மதுரையை ஆண்ட காலம்

ஒரு வழிப்போக்கன், களைப்புடன், ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்கிறான். அங்கு ஒரு பிராம்மணர் அமர்ந்திருக்கிறார்.

வழிப்போக்கன் (அமர்ந்து, சிறிது நேரம் கழித்து): பிராம்மணரே, ஒரு நல்ல வார்த்தை சொல்லும்!

பிராம்மணர் (சற்று யோசித்து, வடமொழியில்):

வர்ஷார்த்த மஷ்டௌ ப்ரயதேத மாஸாந் நிசா(யா)ர்த்த மர்த்தம் திவஸம் யதேத
வார்த்தக்ய ஹேதோர் வயஸா நவேந பரத்ர ஹேதோரிஹ ஜந்மநா ச


வழிப்போக்கன்: பிராம்மணரே, எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. சற்றுப் புரியும்படி தமிழில் சொல்லுங்களேன்!

பிராம்மணர் (மீண்டும், தமிழில்): மழைக் காலத்துக்கு வேண்டியவற்றை மற்ற மாதங்களிலும், இரவுக்குத் தேவையானதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் சேர்த்து வைக்க வேண்டும்.

வழிப்போக்கன் (புரிந்தது போல, மகிழ்ச்சியுடன்): மிக்க நன்றி, பிராம்மணரே!

வழிப்போக்கன் (சென்று கொண்டே ... தனக்குள்): ... ம்ம்ம்... மறுமையைத் தவிர மற்ற மூன்றுக்கும் எனக்கு ஒன்றும் குறைவில்லை; இனி மறுமைக்கு வழி தேட வேண்டும்.

(இந்தப் பிராம்மணர் அந்த வீட்டில் இருப்பவரா, இல்லை அவரும் ஒரு வழிப்போக்கரா என்பதில் வித்தியாசமான கதைகள் உள்ளன. ஆனால், அவர் வழிப்போக்கனுக்குக் கூறிய கருத்தில், அடியேனுக்குத் தெரிந்த வரையில் மாற்றம் இல்லை)

***

இடம்: பாண்டியமன்னன் ஸ்ரீ வல்லப தேவனின் அரச சபை
நேரம்: மறுநாள் காலை

அரசன்:
புலவர்களே! சபையோர்களே! எனக்கு ஒரு பெருத்த சந்தேகம் உள்ளது. அதை நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும்!

(சபையிலிருந்து முணுமுணுப்பு ... என்னடா இது? மதுரைக்கு வந்த சோதனை ... மீண்டும் ஒரு திருவிளையாடலா? இப்பொழுது எந்த அரசியின் கூந்தல் வாசனை?)

அரசன்: அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வித உறுதிப் பொருள்களையும் தரவல்ல பரம்பொருள் எது? அதை அறிவது எப்படி?

(சபையில் சிலரிடமிருந்து நிம்மதிப் பெருமூச்சு)


ஒருவர் (அருகில் இருப்பவரிடம்): ஓ! நேற்று இரவு நான் கேள்விப்பட்டது உண்மை தானோ? அரசர் நகர சோதனையின் போது, வழிப்போக்கன் வேடத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாடம் கேட்டதாகக் கேள்விப் பட்டேன்!

தலைமைப் புரோகிதர் செல்வ நம்பிகள்: அரசே! திருமாலே நீங்கள் தேடும் அந்தப் பரம்பொருள்!

அரசன்: அப்படியானால், பிற மதங்களில் பிறப்பற்ற நிலையைத் தரும் சக்தியில்லையா?

திருக்கோட்டியூர் செல்வ நம்பி (மீண்டும்): ஆம் அரசே! மற்ற தெய்வங்கள் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் கொடுத்தாலும், பரம்பொருளாகிய திருமால் ஒருவர் தான் (மறுபிறவி இல்லாத) வீடு பேற்றைக் கொடுக்க இயலும்!

அரசன் (மந்திரிகளுடன் கலந்தாலோசித்து): (சினிமா, நாடகங்களில் வருவது போல் கை தட்டி) யாரங்கே!

(இரு காவலர்கள் வருகின்றார்கள்)

அரசன்: தங்கத்தினால் ஒரு கிழி செய்து, அதை, ஒரு கம்பத்தில் கட்டி, இந்த சபை நடுவே தொங்க விடுங்கள்!


அரசன் (அவையோரைப் பார்த்து): எந்த மதத்தைச் சேர்ந்தவரானாலும், தங்கள் மதம் தான் பரம்பொருளைக் காட்டுகிறது என்று நிர்ணயம் செய்ய முயற்சி செய்யலாம். எப்போது பொற்கிழி தானாகவே அறுந்து கீழே விழுகிறதோ, அவர் கூறும் மதமே உண்மையான பரம்பொருளைக் காட்டுகிறது என்று யாம் ஒப்புக் கொள்வோம். அந்தப் பொற்கிழியும் அப்படிச் செய்பவருக்கே! இதை விரைவில் மக்களுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள்!

(சபையோரிடமிருந்து மீண்டும் முணுமுணுப்பு ... என்று இதற்கு விடை தெரியுமோ? யார் தலை உருளப் போகிறதோ? ... ம்ம்ம் ... இதற்கு அந்த கூந்தல் வாசனைப் பிரச்சினையே பரவாயில்லை. அதனால் நமது சந்ததியினருக்காவது ஒரு நல்ல தமிழ்த் திரைப் படம் கிடைக்கும். இதனால், நல்லது நடந்தால் சரி ...)


... சபை கலைகிறது ...

***

சில நாட்கள் கழித்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் விட்டுசித்தரின் கனவில், எம்பெருமான் தோன்றுகின்றான்.


எம்பெருமான்: விட்டுசித்தரே! எழுந்திரும்!

விட்டுசித்தர் (திடுக்கிட்டு எழுந்து): நாராயணா! நாராயணா!

எம்பெருமான்: விட்டுசித்தரே! நீர் மதுரை சென்று, பாண்டிய மன்னன் அவையில் பரம்பொருளை நிர்ணயம் செய்து வாரும்!

விட்டுசித்தர் (யோசித்து): நாராயணா! அடியேனும் இதைப் பற்றிக் கேள்விப்பட்டேன். வேதம் எவற்றையும் படிக்காத நான் எவ்வாறு பொற்கிழியை அறுக்க முடியும்?

எம்பெருமான்:
இதற்கு நாமல்லவோ பொறுப்பு?

விட்டுசித்தர் (தவறை உணர்ந்து): எம்பெருமானே! மன்னிக்கவும். தங்கள் சித்தப்படி, இன்றே புறப்படுகிறேன்.

எம்பெருமான்: வெற்றியுடன், பொற்கிழியை எடுத்து வந்து, இங்குள்ள கோயிலில் திருப்பணி செய்து வாரும்!

***

விட்டுசித்தர், பாண்டிய மன்னன் அவையில், எம்பெருமான் அருளால் பரதத்துவ நிர்ணயம் செய்தார். அப்பொழுது, கம்பம் வளைந்து விட்டுசித்தர் முன் நிற்க, அவர் பொற்கிழியைப் பெற்றுக் கொண்டார்.

(சிலர், பொற்கிழி அறுந்து கீழே விழுந்தது என்றும், விட்டுசித்தர் கிழியை எடுத்துக் கொண்டார் என்றும் கூறுவர்)

பொற்கிழி கீழே வந்த அதிசயத்தைக் கண்ட பாண்டிய மன்னன், விட்டுசித்தரை வணங்கி, 'பட்டர் பிரான்' என்ற பட்டம் சூட்டினான். பின்னர், தன் பட்டத்து யானை மீது ஏற்றி, குடை, கொடி, சாமரம், ஆல வட்டம் முதலியவற்றை அணிவித்து, மற்ற பண்டிதர்களும் மந்திரிகளும், புடை சூழ நகர் வலம் வரச் செய்தான்.

(விட்டுசித்தருக்கு, பெரியாழ்வார் என்ற பெயர், விட்டுசித்தரின் காலத்தில் கொடுக்கப் பட்டதாகச் சான்றுகள் இல்லை. இதை குரு பரம்பரையினர் கொடுத்திருக்க வேண்டும். மேலும், இந்த நிகழ்ச்சி, ஆண்டாள் காலத்திற்குப் பிறகே ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்).

இப்படி ஆழ்வார் பவனி வரும் பொழுது இந்த அழகை நேரில் காண, பிராட்டியாருடன் ஸ்ரீமந் நாராயணன், கருடன் மீதமர்ந்து அங்கே தோன்றி, அனைவருக்கும் காட்சி அளித்தான்.


(மதுரைக்கு வந்த சோதனை, எம்பெருமானின் வரவால் விலகுகிறது ...)


அடியேனைப் போன்ற சாமானியர் எல்லாம், எம்பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, (’நமக்கெல்லாம் காட்சி தரமாட்டார் அவர்’ என்ற அவநம்பிக்கையுடன்)‘, உடை நன்றாக இருக்கிறது. எந்த நாடகக் கடையில் இருந்து உடை வாடகைக்கு எடுத்து வந்தீர்?’ என்று கேட்போம்.

ஆனால், பெரியாழ்வார், சாமானியர் அல்லவே! அவர் என்ன செய்திருப்பார்?

***

பெரியாழ்வாருக்கு, எல்லையில்லாத ஆனந்தம்! எம்பெருமானை நேரில் பார்த்ததில்! ஆனாலும் உடனே பயம்! இந்தக் கலி காலத்தில் பகவான் தன் அழகிய திருமுகத்தை எல்லோருக்கும் காட்டுகின்றானே? அதுவும், தன்னுடைய பரிவாரத்தையும், ஆயுதங்களையும் சேர்த்துக் காட்டுகிறானே? 'கண்' பட்டு விட்டால்?

தாகத்தினால் தொண்டை வரண்டு, தண்ணீர் கேட்பவன், தன்னையும் அறியாமல் 'தண்ணீர்! தண்ணீர்!' என்று ஒரு முறைக்குப் பலமுறை தண்ணீர் கேட்பது போல, எம்பெருமானுக்கு என்ன தீங்கு வருமோ என்று அஞ்சி, அவனுக்குப் பல முறை ‘பல்லாண்டு வாழ்த்து’ பாட ஆரம்பிக்கின்றார் பெரியாழ்வார்.

'பல்லாண்டு' என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்த அவருக்கு, 'வாழ்க' என்று கூறி முடிக்க இயலவில்லை - பயம் மிகவும் அதிகமாகி விட்டது! மனம் அமைதி அடையாமல், அங்கு கூடியிருக்கின்ற எல்லோரையும் பல்லாண்டு பாட அழைக்கின்றார். அவர்களும், ஆழ்வாருடன் சேர்ந்து பல்லாண்டு பாடுகின்றனர்.

'திருப்பல்லாண்டு' எனும் இந்தப் திருமொழியில் (பதிகத்தில்) பதினொன்று பாசுரங்கள் உள்ளன. ஸ்ரீமந் நாராயணனுக்கு வாழ்த்துக் கூறும் இந்தத் திருப்பல்லாண்டே நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தின் துவக்கமாக அமைந்துள்ளது!

கூடியிருந்த ஞானிகள், எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுவதாக வரும் 6-வது பாசுரத்தில், நரசிம்மாவதாரம் பற்றிப் பேசப்படுகிறது.

***

ந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன்* ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழி வழி ஆட்செய்கின்றோம்* திருவோணத் திருவிழவில்*

அந்தியம் போதில் அரி உருவாகி* அரியை அழித்தவனை*

பந்தனை தீரப் பல்லாண்டு*பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.


திருப்பல்லாண்டு 1-1-6

(எந்தை - நானும், என்னுடைய தந்தையுமாகிய இருவர்; தம் மூத்தப்பன் - அவனும், அவனுக்குத் தந்தையும், பாட்டனும் ஆகிய 3 பேர்; ஆட்செய்தல் - அடிமைத்தொழில் செய்தல்; அரி - பகைவன்; பந்தனை - வருத்தம், களைப்பு)

"அடியேனுடைய தந்தையும், அடியேனும், அவருக்குத் தந்தையும், அவருடைய தந்தையும், அவருடைய தந்தையும், அவருக்குப் பாட்டனுமாகிய ஏழு தலைமுறையாகத் தொடங்கி, உரிய காலங்களில், வழி வழியாக எம்பெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறோம்.

திருவோணத் திருநாளில், அந்திப் பொழுதில், சிங்க உருவம் எடுத்து, இரணியன் எனும் பகைவனை அழித்தவனாகிய ஸ்ரீமந் நாராயணனுக்கு, அவதாரக் களைப்பு தீர, அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!"

என்று, ஞானிகள், பெரியாழ்வாருடன் சேர்ந்து எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுகின்றனர்.

***

நாராயணின் அடியவர்கள், 'நான்', 'எனது', என்ற சொற்கள் அகங்காரத்தைக் குறிப்பதால், அவற்றை பெரும்பாலும் உபயோகப் படுத்தமாட்டார்கள் (மாறாக, அடியேன், தாஸன் என்ற சொற்களைப் பயன்படுத்துவர்). இதைப் பின்பற்றியே பெரியாழ்வார் இங்கு 'நானும், எனது தந்தையும்' என்று சொல்லாமல், தன் தந்தையை முன்னிலைப் படுத்தி, 'எந்தை' என்று பாசுரத்தைத் துவங்கியிருப்பது கவனிக்கத் தக்கது.

பாசுரத்தில், 'அந்திப்போதில்' என்று குறிப்பிடாமல், 'அந்தி அம் போதில்' என்று குறிப்பிடுவதன் நோக்கம் என்ன?

'அம்' என்றால் அழகு என்றும் பொருள். அழகிய மாலைப் பொழுது, என்று பொருள் கொள்ளலாம். எது அழகு?

இந்த மாலைப் பொழுதானது, தினமும் வருகின்ற மாலைப் பொழுது போன்றதல்ல; ’எம்பெருமான் சிங்க உருவம் எடுத்து வந்த அந்த திருவோண மாலைப் பொழுது. இதுவே அழகிய மாலைப் பொழுது, மற்ற மாலைப் பொழுதெல்லாம் வெறும் மாலைப் பொழுதுதான்' என்று ஆழ்வார் கூறுகின்றார் போலும்!

அம்-அந்திப்-போதில் என்று தானே இருக்க வேண்டும்? பாசுர அமைப்பு கருதி, அந்தி-அம்-போதில் என்று ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார்.

'அரி' என்றால் பகைவன். பகைவனை அழித்தவன் என்று நாராயணனைக் குறிப்பிடுகின்றார் பெரியாழ்வார். எல்லாப் பொருட்களிலும் உள்ளே உறைந்து நிற்கும் அவனுக்கென்று யாரும் பகைவன் இருக்க முடியாதே! இந்த நாராயணனுக்கு யார் பகைவன்?

தன் பக்தர்களுக்கு (இங்கு, பிரகலாதனுக்கு) யார் பகைவனோ, அவனே நாராயணனுக்குப் பகைவன். ஏனென்றால் அவன் அடியவருக்கு அடியவன் ஆயிற்றே! பக்தர்களுக்கு ஒரு துன்பம் வந்தால் தாங்கமாட்டானாம் அவன்!

இந்தப் பாசுரத்தில் பெரியாழ்வார் கூறியது போல (திருவோண ... அழித்தவனை), நரசிம்மர் பிறந்த நட்சத்திரம் திருவோணமா அல்லது ஸ்வாதியா?

***

ரசிம்மாவதாரம் பற்றி, பாகவதம், அக்னி புராணம், பாத்ம புராணம், ப்ரம்மாண்ட புராணம், வாயு புராணம், ஹரி வம்ஸம், ப்ரம்ம புராணம், விஷ்ணு புராணம், கூர்ம புராணம், மத்ஸ்ய புராணம், நரசிம்ம புராணம், சிவ புராணம், மஹாபாரதம், போன்ற பல புராணங்களும், உப புராணங்களும், உபநிடதங்களும் குறிப்பிடுகின்றன. சிலவற்றில் மிகவும் விவரமாகவும், சிலவற்றில் சிறு கதைகளாகவும், குறிப்புகளாகவும் சொல்லப்பட்டுள்ளன.

இத்தனை புராணங்களும் உப புராணங்களும் தவிர, நரசிம்மாவதாரம் பல மொழிகளிலும், மொழி பெயர்ப்பாகவோ, அல்லது மொழி இலக்கியமாகவோ எழுதப்பட்டுள்ளன. தமிழிலும், சில காவியங்களில் நரசிம்ம அவதாரம் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. தமிழ்க் காவியங்களில் இருந்து மேற்கோள்களை பின்னால் நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கலாம்.

அநேகமாக எல்லாவற்றிலும் நரசிம்ம அவதாரக் கதைத் தொகுப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், ஆங்காங்கே விவரங்களில் பல வித்தியாசங்கள் உள்ளன.

பெரும்பாலான அவதாரக் குறிப்புகள், நரசிம்மாவதாரம் ஸ்வாதி நட்சத்திரத்தில் ஏற்பட்டது (தூணில் இருந்து தோன்றிய போது) என்று கூறுகின்றன.

இந்தப் பாசுரத்தில் ஆழ்வார், 'திருவோணத் திருவிழவில்' என்று நரசிம்மம் உருவாகியதைப் பற்றிக் கூறுவது எப்படிப் பொருந்தும்?

***

பாஞ்சராத்திரத்தில் (பாத்மம்), ஸ்வாதிக்குப் பதிலாக, திருவோணம் நரசிம்மனின் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டுள்ளது. திருவோணம் பொதுவாக விஷ்ணுவின் நட்சத்திரமாகும். எனவே, விஷ்ணு அவதாரமாயாகிய நரசிம்மனுக்கும் இது ஜன்ம நட்சத்திரமாகும் என்பர் சிலர். ஏதோ ஒரு காரணத்திற்காக ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம உத்ஸவத்தைக் கொண்டாடாதவர்கள், திருவோணத்தில் கொண்டாடலாம் என்ற நியமமும் உள்ளது.

ஆழ்வார், 'திருவோணத்தில்' என்று குறிப்பிடாமல், 'திருவோணத் திருவிழவில்' என்று கூறுகின்றாரே?

வைணவக் கோயில்களில், வருடத்தில் ஒரு முறை திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, 7-10 நாட்கள் வரை ப்ரம்மோத்ஸவம் என்னும் திருவிழாவைக் கொண்டாடுவது உண்டு (இது இப்பொழுதும், திருமலை உட்பட பல கோயில்களில் வழக்கத்தில் உள்ளது). எனவே, இந்தத் திருவிழாவின் போது, ’10 நாட்களில், ஏதோ ஒரு நாளில் வந்த ஸ்வாதி நட்சத்திரத்தில் நரசிம்ம அவதாரம் ஏற்பட்டது’ என்று ஆழ்வார் கூறுவதாகவும் இதைப் பொருள் கொள்ளலாம்.

பாசுரத்தின் அடுத்த வரியில் ’பந்தனை தீரப் பல்லாண்டு’ பாடுவதாகச் சொல்கிறார். அது என்ன ’பந்தனை’?

***

ரசிம்மாவதாரத்தின் போது, நரசிம்மர் மற்ற அசுரர்களை அழித்த விதமும், இரணியனை வதைத்த விதமும் பல புராணங்களில் மிகவும் அழகாகச் சொல்லப் பட்டுள்ளன (இதைப் பற்றிப் பின்னால் பார்க்கலாம்). அவற்றைப் படித்தால், நமக்கே சண்டை போட்ட களைப்பு வந்து விடும். சண்டையிட்ட அவனுக்கு வராதா என்ன?

எனவே பெரியாழ்வாரும், ஞானிகளும், நரசிம்மனின் அவதாரக் களைப்புத் தீர, எல்லோரையும் பல்லாண்டு பாட அழைக்கின்றனர்.

வாருங்கள், நாமும் அவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்!

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம்*
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வி திருக்காப்பு*


அடியோமோடும் நின்னோடும்* பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு*

வடிவாய் நின் வல மார்பினில்* வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு*
வடிவார் சோதி வலத்துறையும்* சுடர் ஆழியும் பல்லாண்டு*
படை போர்புக்கு முழங்கும்* அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.... நரசிம்மர் மீண்டும் வருவார்
Read more »

Thursday, October 15, 2009

நாலாயிரம் - ஒரு எளிய அறிமுகம்இந்த உலகினில் வாழ்கின்ற ஸாதுக்களையும், நல்ல மனிதர்களையும் பாதுகாக்கவும், தீய மனிதர்களை அழிக்கவும், தர்மத்தைக் காப்பாற்றவும், யுகங்கள் தோறும் நான் அவதரிக்கிறேன்.
- கண்ணன், கீதையில்


ஸ்ரீமந் நாராயணன் நமக்காக எடுத்த அவதாரங்களையும், அவன் குணாதிசயங்களையும், வேதங்கள், புராணங்கள், காவியங்கள் போன்றவை நமக்குக் காட்டுகின்றன.

தெய்வ மொழிகளான தமிழிலும், ஸமஸ்க்ருதத்திலும் வாய் வழியாக, எப்பொழுதோ சொல்லப்பட்ட இவை, நமக்கு ஞாபகம் வருமா என்ன - நேற்று சொன்னது இன்றும், தேர்தலுக்கு முன்னால் சொன்னது தேர்தலுக்குப் பின்னாலும் எல்லோருக்கும் (குறிப்பாக சொன்னவர்களுக்கு :-) வேண்டுமென்றே மறந்து விடுகிறதே?

இவற்றை யார் நமக்கு ஞாபகப் படுத்துவது?

***

ந்த 'நினைவூட்டல்’ வேலைக்கு, எம்பெருமான், தான் தேவையில்லை என்று நினைக்கின்றானோ அல்லது தன்னால் மட்டும் முடியாது (!!) என்று நினைக்கின்றானோ அல்லது உலகம் திருந்தியது போதாது என்று நினைக்கின்றானோ என்னவோ?

தான் வருவதோடு நின்றுவிடாமல், அவ்வப்பொழுது தன்னுடைய திருமேனியை அலங்கரிக்கும் அணிகலன்களையும், வைகுந்தத்தில் தம்மிடம் இருப்போரையும் (நித்தியசூரிகள்) பூமிக்கு அனுப்பி வைக்கின்றான்.

அவதாரங்கள் எதுவும் தமிழ் நாட்டில் ஏற்படவில்லையே?

***

மக்கு நன்மை செய்வதற்காக, வைகுந்தத்தில் இருந்து தமிழ் நாட்டிற்கு வந்த நித்தியசூரிகளே பன்னிரண்டு ஆழ்வார்கள்: பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்.

ஒரு சில ஆசாரியர்கள், ஆண்டாள், மதுரகவியாழ்வார் இருவரையும் ஆழ்வார்கள் என ஒப்புக்கொள்வதில்லை (ஆகா! ... வந்தவுடனே நாரதர் வேலையை ஆரம்பிச்சுட்டாயா!!).

'ஆழ்வார்கள்' என்ற சொல்லுக்கு, எம்பெருமானின் கல்யாண குணங்களிலே 'ஆழமாக ஈடுபட்டவர்கள்' என்று பொருள். இவர்கள், தாம் அனுபவித்தது மட்டுமல்லாது, பிரபந்தம் எனும் எளிய தமிழ்ப் பாசுரத் தொகுப்புகளால் இந்த அனுபவத்தை உலகிற்கும் தந்தவர்கள்.

அவர்கள் பிறந்த மாதம், நட்சத்திரம் முதலியவை சரியாகத் தெரிந்தாலும், அவர்கள் பிறந்த வருடங்கள் தெரியவில்லை.

வைணவ சமய நூல்களில் குறிப்பிட்டுள்ள ஆழ்வார்கள் காலமும், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ள ஆழ்வார்களின் காலமும் பொருந்தவில்லை (இப்பத்தானே ஆரம்பிச்சீங்க ... அதுக்குள்ள இன்னொண்ணா?).

ஆழ்வார்களின் அவதாரங்கள் முடிந்தவுடன், பிரபந்தங்களும் வழக்கில் இல்லாமல் மறந்து போயின.

பின், நமக்கு எப்படி பிரபந்தங்கள் தெரிந்தன?

***

இடம்: காட்டுமன்னார்குடிக்கு அருகிலுள்ள வீரநாராயணபுரத்தில் மன்னார் கோயில் வளாகம்
நேரம்: ஒரு நாள் மாலை
காலம்: சுமார் கி.பி. 850 முதல் கி.பி. 900 க்குள்


(தந்யாசி ராகத்தில், ஆதி தாளத்தில், ஒரு இனிய தமிழ்ப் பாட்டு கேட்கிறது)

*ஆரா அமுதே!* அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*
நீராய் அலந்து கரைய உருக்குகின்ற* நெடுமாலே*
சீரார் செந்நெல் கவரி வீசும்* செழுநீர்த் திருக்குடந்தை*
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்!* கண்டேன் எம்மானே!
...

கோயில் வளாகத்தில், சில வைணவர்கள், தங்களை மறந்து, பாடிக் கொண்டு இருக்கின்றனர். கோயில் அர்ச்சகரான நாதமுனிகள் அவர்களுக்கு அருகில் சென்று, பாசுரத்தின் இனிமையையும், வளத்தையும் மிகவும் கவனமாகக் கேட்கிறார்.

*உழலை யென்பின் பேய்ச்சி முலையூடு* அவளை உயிருண்டான்*
கழல்கள் அவையே சரணாகக் கொண்ட* குருகூர்ச் சடகோபன்*
குழலின் மலியச் சொன்ன* ஓராயிரத்துள் இப்பத்தும்*
மழலை தீர வல்லார்* காமர் மானேய் நோக்கியர்க்கே.

(கேட்டு மெய்மறந்து நின்றவருக்கு, பாட்டு நின்றவுடன், நினைவு திரும்புகிறது)

'மிக அருமையாக இருக்கிறதே இது, எழுதியவர் யாரோ?' என்று நினைத்தவருக்கு, சட்டென்று, மனதுக்குள் ஒரு மத்தாப்பு!

இந்தப் பாசுரங்களை, மனமுருகப் பாடியவர்கள் அருகே செல்கின்றார், நாத முனிகள்.

நாதமுனிகள்: நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

வைணவர்கள்: நாங்கள் மேல் நாட்டைச் (மேலக் கோட்டை திரு நாராயணபுரத்தைச்) சேர்ந்தவர்கள். இந்த ஊரில் உள்ள வீரநாராயணப் பெருமாளைச் சேவிக்க வந்தோம்.

நாதமுனிகள்: நீங்கள் பாடிய பாடலின் கடைசியில், 'ஓராயிரத்துள் இப்பத்தும்' என்று வருகிறதே? ஆயிரமும் உங்களுக்கு வருமா?

வைணவர்கள்: இவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்.

நாதமுனிகள்: உங்கள் நாட்டிலாவது யாருக்காவது இந்த ஆயிரமும் தெரியுமோ?

வைணவர்கள்: அப்படி ஒருவரும் இல்லை.

நாதமுனிகள்: உங்களுக்கு இதைக் கற்றுத் தந்தது யார்?

வைணவர்கள்: பரம்பரையாக இந்தப் பாடலை ஊர்க் கோயிலில் பாடுவோம். அவ்வளவு தான்.

நாதமுனிகள்: பாடலில் ’குருகூர்' என்று வருகிறதே! குருகூரில் உங்களுக்கு உறவினர் யாராவது உண்டா? அவர்களுக்காவது தெரியுமா?

வைணவர்கள்: எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் அங்கு சென்றதும் இல்லை, இதைப் பற்றிக் கேள்விப் பட்டதும் இல்லை.

(ஒரே நிமிடத்தில், மனதில் தோன்றிய மத்தாப்பு, தீபாவளி மழையில் நனைந்த மத்தாப்பு ஆகிவிட்டது:-(.

***
சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ...

நாத முனிகள் (தனக்குத் தானே): எப்படியாவது இந்த ஆயிரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் ... பாடலில் 'குருகூர்ச் சடகோபன்' என்று வந்ததே! குருகூருக்குச் செல்ல வேண்டியது தான் ... வேறு வழியே இல்லை ...

***

இடம்: குருகூர் (ஆழ்வார் திருந்கரி), ஒரு வீட்டுத் திண்ணை
நேரம்: சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் காலை


வழிப்போக்கன் (திண்ணையில் வெற்றிலை போடுவரிடம்): சடகோபர் வீடு எங்குள்ளது?

வெற்றிலை: எந்தச் சடகோபர்? இந்த ஊரில் அப்படி யாரும் இல்லையே!

சிறிது மௌனம் ...

வெற்றிலை (மீண்டும்): நீர் யார்? உமக்கு என்ன வேண்டும்?

வழிப்போக்கன்: அடியேன் திருநாமம் நாதமுனிகள். நான் காட்டு மன்னார்குடியில் இருந்து வருகிறேன். சடகோபரைப் பார்க்க வேண்டும்.

வெற்றிலை: சரி ... என்ன விஷயமாக?

நாதமுனிகள்: இந்த ஊரில் சடகோபன் என்பவர், எம்பெருமான் மீது ஆயிரம் பாட்டுக்கள் எழுதியதாகக் கேள்விப் பட்டேன். அவரிடம் இருந்து கற்கலாம் என்று வந்தேன்.


வெற்றிலை (சற்று உரக்கச் சிரித்து): ஓ! அந்த மரத்தடி மாறனா? அவர் சென்று பல நூறு ஆண்டுகள் ஆகின்றதே! இப்போது வந்தால் எப்படி?

நாதமுனிகள் (வருத்தத்துடன்): அவருக்குச் சீடர்கள் இங்கு யாராவது உண்டா?

வெற்றிலை (பெருமிதத்துடன்): இங்கு, மதுரகவி ஆழ்வார் என்பவரின் சீடர் பரம்பரையில் வந்தவரான 'பராங்குச தாஸர்' என்பவர் புளிய மரத்தடிக்குப் பக்கத்து வீட்டில் இருக்கிறார். அங்கு இல்லை என்றால், கோயிலில் இருப்பார். அவரைச் சென்று பாருங்கள்.

***

இடம்: பராங்குச தாஸரின் வீடு
நேரம்: அன்று மாலை


வழிப்போக்கன் (வீட்டுப் பெரியவரைப் பார்த்து): பராங்குச தாஸரைப் பார்க்க வேண்டும்.

பெரியவர்:
அடியேன் தான்! நீங்கள் ...

வழிப்போக்கன்: அடியேன் திருநாமம் நாதமுனிகள். நான் காட்டு மன்னார்குடியில் இருந்து வருகிறேன். சடகோபர் எழுதிய 1,000 பாட்டுக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு வந்தேன். அவை எல்லாம் உங்களுக்குத் தெரியும் என்று, ஊரில் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். எனவே உங்களைப் பார்க்க வந்தேன்.

பராங்குச தாஸர் (உசுப்பேத்திக்கிட்டே இருக்காங்கப்பா' என்று நினைத்து): யார் சொன்னது? அடியேனுக்கு நம்மாழ்வார் பாசுரங்கள் எதுவும் தெரியாது.

சிறிது மௌனம் ... (மௌனம் சம்மதம் என்று யார் சொன்னது?)

பராங்குச தாஸர்: ஆனால், எனக்கு, மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த 'கண்ணிநுண் சிறுத்தாம்பு' எனும் பிரபந்தத்தில் உள்ள பதினொன்று பாசுரங்கள் தெரியும்.

நாதமுனிகள் (தனக்குள்): என்னடா இது ... மளிகைக் கடைக்கு வந்தாற் போல் இருக்கிறது - கடலைப் பருப்பு இருக்கா? என்று கேட்டால், 'இல்லை' என்று சொல்லாமல், ’துவரம் பருப்பு இருக்கு’ என்கிறாரே இவர் ... அதுவும் விலை அதிகமாச்சே ...

நாதமுனி (பெரியவரிடம்): இதை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யட்டும்?

பராங்குச தாஸர் (சற்று உரக்க): கிட்ட வாங்கோ ... ஒரு ரகசியம் சொல்கிறேன் ...

நாதமுனிகள் (தனக்குள், இது என்ன 'Dhoosraa'? என்ற் எண்ணி): அது என்ன?

பராங்குச தாஸர் (அருகில் வந்து, மெதுவாக): நம்மாழ்வார் திருவுரு முன் அமர்ந்து 12,000 முறை இந்தக் ’கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களைச் சேவித்தால் நம்மாழ்வார் தோன்றுவார். அப்படி அவர் தோன்றினால், அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேட்டுக் கொள்ளுங்கள்.

நாதமுனிகள் ('இதுவாவது கிடைத்ததே' என்று எண்ணி): சரி பராங்குஸ தாஸரே! இதை அடியேனுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பராங்குச தாஸர்: உள்ளே வாரும், முதலில்.

***

நாதமுனிகள் நம்மாழ்வார் திருவுரு முன் அமர்ந்து, தியானம் செய்ய, ஒரு ‘Soap' கம்பெனி விளம்பரத்தின் பளீர் (நிஜமாவே தான்!) வெளிச்சத்துடன், நம்மாழ்வார் அவர் முன் தோன்றுகிறார்.

நம்மாழ்வார்: நாதமுனியே! உமக்கு என்ன வேண்டும்?

நாதமுனிகள்: வணக்கம்! அடியேனுக்கு தாங்கள் அருளிச் செய்த 1,000 பாசுரங்கள் வேண்டும்.

நம்மாழ்வார்: அப்பனே! நீ கேட்டதைக் நான் கொடுப்பதற்கு முன்னால் நீ திருவிலச்சினை அணிய வேண்டும்.

நாதமுனிகள், வாத்தியார் கேட்ட கேள்விக்கு விடை தெரியாத மாணவனைப் போல் 'Mr. Mr.' என விழிக்கிறார்.

நம்மாழ்வார் திடீரென்று அருகில் வந்து, இரண்டு தோள்களிலும் ஏதோ வைக்க, ’ஆஆஆ’ என்ற அலறல் கேட்கிறது ...

சற்று நேரம் கழித்து ...

நம்மாழ்வார்: உனக்கு யாம் சங்கு, சக்கரம் (திருவிலச்சினை) அணிவித்தோம். இன்று முதல் நீ எம்பெருமானின் சீடன். உனக்கு என்ன வேண்டும் கேள்!

நாதமுனிகள்: தாங்கள் எழுதிய 1,000 பாசுரங்கள்!

நம்மாழ்வார்: அது 1,000 அல்ல. 4,000.

நாதமுனிகள் (தோள் வலியுடன்): ஏதோ ஒண்ணு! சீக்கிரம் கொடுங்கள்!

நம்மாழ்வார்: நாலாயிரம் தானே! இந்தா பிடி!

நாதமுனிகள் (தயங்கி): ... இதற்கு ... எவ்வளவு ....

நம்மாழ்வார் (இடையில் புகுந்து):
காசா, பணமா? பாடல் தானே! சும்மா வைத்துக் கொள். நம் காலத்தில் ’காப்புரிமை’ எதுவும் கிடையாது. இதை நீயும் எல்லோருக்கும் சும்மா கொடுக்கலாம். ஆனால் வாங்கியவர்கள், பிற்காலத்தில், அரிசி யோகா, போல் இதையும் வேறு நாடுகளுக்கும எடுத்துச் சென்று, கூறு போட்டுக் காசு பார்த்தால் அதற்கு யாம் பொறுப்பில்லை.

’ட்ரயிங்ங்ங்ங்’ என்ற சத்தத்துடன் ...
நம்மாழ்வார் மறைகிறார்.

சரி, நீங்களும் 12,000 முறை இடைவிடாமல் தியானம் செய்யத் தயாரா (’ஆளை விடுங்கப்பா!’ என்று நீங்கள் எல்லோரும் ஓடுவது, அடியேன் வீட்டு ‘Live TV'-யில் தெரிகிறது)?

***

வ்வாறு, முதல் வைணவ குருவான நாதமுனிகள், ஒரு வழியாக நாலாயிரத்தையும் பெற்று, அவற்றை முறைப் படுத்தி, தனது சீடர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் நமக்குக் கிடைக்கச் செய்துள்ளார். இந்த நாலாயிரத்தை, 'தமிழ் மறை' என்றும் கூறுவர்.

நாதமுனிகள் கொடுத்த நாலாயிரத்திற்கும், இன்று வழக்கில் இருந்து வருகிற நாலாயிரத்திற்கும் சில கணக்கு வித்தியாசங்கள் இருக்கின்றன (ஐயோ! திருந்தவே மாட்டாங்களா?).

முதலில் நம்மாழ்வார் கூறிய நாலாயிரத்தில் எதுவும் விடப்படவில்லை.

ஆழ்வார்கள், தங்கள் பிரபந்தங்களில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள 108 கோயில்கள் (திவ்விய தேசங்கள்) மீது பாடியுள்ளனர். அவதாரங்களில், கண்ணன், இராமனைப் பற்றியே அதிகமான பாசுரங்கள் காணப்பட்டாலும், நரசிம்மாவதாரமும் பல பாசுரங்களில் கூறப்படுகின்றது.

எம்பெருமானுடைய திருவடிகளுக்கு ஒரு தமிழ் வணக்கத்துடன், ஆழ்வார்கள் அனுபவித்த அந்த நரசிம்மனை, அவர்கள் பாசுரங்கள் மூலம் நாமும் அடுத்த தபாலில் இருந்து அனுபவிக்கலாம்!

***

Read more »

Sunday, October 11, 2009

மாயா மச்சேந்திரா, நர சிம்மம் பார்க்க வந்தீரா?

இந்த இரவி செஞ்சது சரியா நீங்களே சொல்லுங்க. மாதவிப் பந்தல்ல இது தான் கடைசி இடுகைன்னு ஒரு Dash அடிச்சுட்டு ஓரமா போயி உக்காந்துட்டாரு. ஆனா நம்ம நாச்சியாரு உடுவாங்களா?

'டேய் தோழா. நீ இங்க ஓரமா வந்து குந்திக்க. ஓம் நமோ Dashல படம் படமா போட்டு விளக்குனீயே அவுக (அ) - நானு (உ) - எங்கப்பா (ம).
எல்லாரும் ஒரே லெவல்ல நின்னு ஒரு இரகசியம் சொல்றோம் - எங்கப்பா இடத்துல வேணா நீ நின்னுக்கோ.

பந்தல்ல 'அவுக' பேரு வச்சிருக்கிற இன்னொரு குயில் உக்காந்து பாடட்டும்'ன்னு இரவியோட தோழி சொல்லிட்டாங்க.

நியூயார்க்கன் நண்பனா இருந்தாலும் இன்னும் இந்தத் தென்பாண்டி வழக்கத்தை கோதை விடலை பாருங்க. ரங்கன்னு புருசன் பேரைச் சொல்லாம அவுகன்னு சொல்றாங்க.
கோதை சொல்லை கோவிந்தனே தட்ட மாட்டான் மத்தவுங்க தட்டிட முடியுமா? நம்மாளு இரவி ஓரமா குந்திக்கினு இருக்காரு இப்ப. பந்தல் பக்கம் எட்டிப் பாத்தா ஆட்டோ அனுப்புவேன்னு சொல்லியிருக்கேன்.

'முத்தைத் தரு பத்தித் திருநகை'ன்னு முருகன் அருணகிரிநாதருக்கு எடுத்துக் குடுத்த மாதிரி இந்தப் புதுக்குயிலுக்கும் 'கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனா கண்டேன்'ன்னு வல்லியம்மா... சாரி சாரி...கோதையம்மா எடுத்துக் குடுத்திருக்காங்க.
(நாச்சியாரு நரசிம்மனுன்னு சொன்னாலே வல்லியம்மா ஞாபகம் தானே வருது. அதுனால நடுவுல கோதையம்மான்னு சொல்ல வந்து வல்லியம்மான்னு சொல்லிட்டேன்.)

இந்தக் குயிலாரும் 'யாரு அந்த கோளரி ஆளரி'ன்னு கிண்டல் செய்யாம பொறுமையா உக்காந்து 'தாயே. அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாக நீ வந்தாய்.
நீயும் உன் அஞ்சுக்குடியைச் சேர்ந்தவர்களும் அழகிய சிங்கனின் மேல் என்ன என்ன பாடியிருக்கிறீர்களோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துப் படித்து எழுதுகிறேன்'ன்னு படிச்சு இங்கன எழுதப் போறாரு.

யாரு இந்தப் புதுக்குயில்?
ஆளரி கோளரின்னா யாரு?
அஞ்சுக்குடி பத்துக்குடி சாத்துக்குடின்னு எல்லாம் வருதே; அப்புடின்னா என்னா?

ஆமாங்க. என்ன தான் லோகல்ல பேசுனாலும் சில நேரம் பேசுற விசயம் என்னான்னு புரிபடறதுக்கு கொஞ்சம் நேரம் ஆகத் தான் செய்யுது. அந்த கஷ்டம் எனக்கும் இராம் தம்பிக்கும் தான் தெரியும். சரி தானா ராம் பபு?

அஞ்சுக்குடின்னா நம்ம டகால்டி இரவி அடிக்கடி சொல்லுவாரே அந்த ஆழ்வாருங்க தானுங்க.
அவங்க பாடுன பாட்டெல்லாம் சேத்து நாலாயிர திவ்விய பிரபந்தம்ன்னு நம்ம இரவி அடிக்கடி சொல்லுவாரே.
அந்தப் பாட்டுல நம்ம பல்ராம் நாயுடு...சாரி..சாரி..நரசிம்ம நாயுடு எங்க எல்லாம் வர்றாருன்னு நம்ம புதுக்குயில் புட்டு புட்டு வைக்கப்போகுது. அம்புட்டுத் தாங்க விசயமே.

கோளரி ஆளரின்னா நம்ம சின்னத்தம்பி பிரபு... ஐயய்யோ தப்பு தப்பு... சின்னத்தம்பி பெருகலாதன் (ப்ரஹ்லாதன்) கூப்புட்டவுடனே கோவிச்சுக்காம ஓடி வந்தாரே நம்ம நரசிம்ம பிரபு அவரு தாங்க.

நம்ம புதுக்குயிலைப் பத்தி இப்ப சொல்லணும்ல. இவரு இரவிசங்கரை விட பெரிய ஆளா இருப்பாரு போலிருக்குங்க. எப்பப் பாரு 'கண்ணன் லீலைகள் செய்வானே. கண்ணன் மாயங்கள் புரிவானே'ன்னு பாடிக்கிட்டே இருக்காரு. கேட்டா அவரோட maayaa.net க்கு விளம்பரமாம்.

சரி விளம்பரம் தான் பண்றாரே; அப்புடி என்ன தான் அங்கன இருக்குன்னு போயி பாக்கலாம்ன்னு போனா அசந்து போயிட்டேங்க. பாடுறாரு ஆடுறாரு கதை சொல்றாரு இன்னும் நிறைய நிறைய பண்றாரு. ஆடுறாருன்னா சொன்னேன். அத மட்டு எடுத்துருங்க. மத்ததெல்லாம் பண்றாரு அங்க. நீங்களும் ஒருவாட்டி போயி பாருங்க. அப்புறம் அங்கயே குடியிருந்திருவீங்க. பந்தல்ல ஆளில்லாம போயிரும்.

இந்தச் சின்ன குயில் சீரங்கன் (Rangan Anna) இனிமே கொஞ்ச நாளுக்கு பந்தல்ல Guest-ஆ குடி வரப் போறாரு. 'நாலாயிரத்தில் நரசிம்மன்'ங்கற டாபிக்ல தொடர்ந்து பேசுவாரு.

பேசுவாருன்னா சொன்னேன். ஆமாங்க பெங்களூருவுல நிறைய இடத்துல பிரசங்கம் பண்ற குயில் தான் இந்தக் குயில். அதனால பேசுவாருன்னு சொல்றது சரி தான். இவரு என்ன தான் சொல்லப்போறாருன்னு இனி மேல் உக்காந்து கேட்டா தெரிஞ்சிரும்.

நான் ரெடி நீங்க ரெடியா?
- கான மயில்களாட கண்டிருந்த வான்கோழி
அன்பன் குமரன்.
_____________________________________________________________________
நம்மையுடையவன் நாராயணன் நம்பியை வணங்கி, மாதவிப்பந்தல் அன்பர்களுக்கு என் வணக்கங்கள்.

ஆலமரம் போன்று விருத்தியடைந்திருக்கும் மாதவிப்பந்தலில் எழுத வாய்ப்பளித்த கண்ணபிரான் ரவிசங்கருக்கும்,
அறிமுகப்படுத்திய கூடல் குமரனாருக்கும், கண்ணபிரானை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்த ராகவனுக்கும் என் நன்றிகள்.

இப்போ ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்குடன் ஆரம்பிப்போமா?

இடம்: ஒரு கல்லூரி விடுதி

நேரம்: சுமார் 15 வருஷம் முன்பு, ஒரு மாலைப் பொழுது

சில கல்லூரி மாணவர்கள் தேநீர் அருந்திக்கொண்டு, அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். பல இடங்களையும், மிருகங்களையும், பொருட்களையும், மனிதர்களையும், நண்பர்களையும் கேலி செய்து நடந்த அந்த அரட்டை, ஒரு நேரத்தில் தெய்வத்தைப் பற்றித் திரும்பியது.

'ஆகா, இது நமக்குப் பிடித்ததாயிற்றே!' என்று ஆத்திக மாணவர்களும், 'ஆகா, இது நமக்கு மிகவும்பிடித்த தலைப்பாயிற்றே!' என்று நாத்திக மாணவர்களும், மிகவும் காரசாரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர். சில மாணவர்கள், இரண்டு பக்கமும் இல்லாமல், 'நான்', 'விஞ்ஞானம்','அறிவு', லாஜிக், என்று, போலி நடுநிலையாக - 'மூன்றாவது பக்கம்' நின்று பேசிக் கொண்டு இருந்தனர்.
மிகவும் உச்ச கட்டத்தில்:

ஒரு விஞ்ஞானம் பேசுகிறது ('யௌவன கர்வம்' தலை விரித்தாட): கடவுள் இருந்தால், அவனைக் காண்பி!

ஒரு ஆத்திக மாணவன்: அவர் இருக்கிறார், ஆனால் நானோ நீயோ கூப்பிட்டால் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.

விஞ்ஞானம் மீண்டும் பேசுகிறது: ஏன்?

அதே ஆத்திக மாணவன்: ஒரு அரசியல்வாதியோ, ஒரு அரசாங்க அதிகாரியோ,
நீ கேட்டவுடன், உடனே கேட்டதைக் கொடுக்கின்றார்களா? அவருக்கு வேண்டியதை' நீ கொடுத்தவுடன் தானே உனக்கு வேண்டியதைக் கொடுக்கின்றனர்!

விஞ்ஞானம்: இதெல்லாம் சுத்த சால்ஜாப்பு! ஏதோ நரசிம்மர் அவதாரமாமே? யாரோ ஒரு பையன் கூப்பிட்டானாம்! உடனே அவர் தூணைப் பிளந்து கொண்டு வந்தாராம்! இதெல்லாம் சுத்தக் கதை!

அந்த அரட்டை அரங்கத்தில் சிறிது மௌனம் ...

விஞ்ஞானம் (மீண்டும்): பார்த்தாயா! உன்னால் பதில் சொல்ல முடியாது! ஏனென்றால் இது உண்மை இல்லை! இதில் 'லாஜிக்' எதுவும் இல்லை!
இன்னொரு ஆத்திக மாணவன் (சற்றுத் தளர்வுடன்): அது ... அதெல்லாம் உண்மை. அவர் நினைத்தால் வருவார்!

விஞ்ஞானம் (வெற்றிப் பெருமிதத்துடன்): டேய் வாழைப்பழம்! நழுவாதடா! நான் இப்போதுகூப்பிடுகிறேன். இந்த நாற்காலியில் இருந்து வருகிறாரா பார்க்கலாம். அப்படி வரவில்லை என்றால் கடவுள் இல்லை என்று நீ ஒத்துக் கொள்ள வேண்டும்! ஒருவேளை அவர் வந்துவிட்டால், நான், கடவுள் இருக்கிறார், நம் புராணங்கள் எல்லாம் உண்மை என்று ஒத்துக் கொள்கிறேன்.

மீண்டும் அங்கு சிறிது மௌனம் ...

இன்னொரு ஆத்திக மாணவன் (மிகவும் நிதானமாக, ஆனால் கம்பீரத்துடன்): டேய் விஞ்ஞானம்! நீ முதலில் பிரகலாதனாய் இருடா. நீ அப்படி இருந்தால், உனக்கு உண்மையான ஆபத்து வரும்போது உன்னைக் காப்பாற்ற உனக்காகக் கட்டாயம் எதில் இருந்தும் வருவார்!

மேலும் மௌனம் ...

ஆத்திக மாணவன் (விஞ்ஞானத்தைப் பார்த்து): டேய் விஞ்ஞானம்! என்னடா பம்முற! பதில் இல்லையா? நல்லா 'உக்காந்து யோசி'. அதுக்குள்ள நாங்க போய் டிபன் சாப்பிட்டுட்டு வரோம்.

எல்லோரும் கலைந்து செல்ல, அரட்டை முடிவடைகிறது. ஆனால் அந்த விஞ்ஞானம் மட்டும் எழுந்திருக்கவே இல்லை!! ஒரு வேளை நிஜமாவே உக்காந்து யோசிக்கிறானோ?

***

இப்பொழுது புரிந்திருக்குமே, அந்த விஞ்ஞானம் யாரென்று! அடியேன் தான்!

அன்று அத்துடன் அந்த அரட்டை முடிந்து விட்டது. ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலை, பதினைந்து வருடம் உட்கார்ந்து யோசித்தேன். தேடினேன். ஆரம்பத் தேடலில், ’நரசிம்மர் வருவாரா’ என்று தேடினேன். பின்னர், அது தவறு என்று சீக்கிரமே புரிந்தது.

'நான் பிரகலாதன் ஆவது எப்படி?’ என்று தேட வேண்டும் என்று தெரிந்தது. நான் ஒரு விஞ்ஞானம் ஆயிற்றே! எனவே, இதற்கும், வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ,

'(a+b)(a+b) = a*a + 2ab + b*b'

மாதிரி ஏதாவது 'சிம்பிள் ஃபார்முலா' இருக்குமா அல்லது ”நீங்களும் 30 நாட்களில் பிரஹலாதன் ஆகலாம் போன்ற புராணப் புத்தகங்கள் கிடைக்குமா என்று தேடினேன் (அதிகமாகத் தேடவேண்டியிருக்காது என்ற நினைப்பு தான்). தலை முடி எல்லாம் உதிர்ந்தது தான் மிச்சம். பின்னர் தான் புரிந்தது, நான் உடனே பிரகலாதன் ஆவது என்பது ’தவறான சயண்டிஃபிக் அப்ரோச்’ என்று.

பிரகலாதன் மாதிரி ஆக வேண்டும் என்றால், முதலில் 'பிரகலாதன் எப்படி இருந்தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்' என்று புரிந்தது. உடனே இதற்கான பதிலைத் தேட முயற்சித்தேன்.

இத்தனை வருடங்களில், 10-15 சதவிகிதம் தான் தேடி முடித்திருப்பேன் என்று நினைக்கிறேன். முழுவதும் தேடி முடிப்பதற்கு முன்னமேயே, அந்த ஆத்திகன் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைத்து விட்டது.

ஆம்! நான் பிரகலாதனாக இருந்திருந்தால், கட்டாயம் நரசிம்மர் அன்றே வந்திருப்பார்; என் முன்னே நரசிம்மர் வராததற்குக் காரணம், 'நான்' தான் என்று! இதைப் பற்றி, பின்னால் சந்தர்ப்பம் வரும்போது, மேலும் விளக்குகின்றேன்.

***

இந்தத் தேடலின் போது, அடியேனுக்கு, அந்த நரசிம்மர் அருளாலேயே, நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை, முறையாகப் படிக்கும் அனுபவமும் கிடைத்தது (சிறு வயதில் படித்திருந்தாலும், அது தேர்வுக்காகப் படித்தது - தேர்வு முடிந்ததும், மறந்து விட்டது). நரசிம்மர் மீது ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்களில் தனி ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தேன். அவற்றில் உள்ள தமிழ் இன்பத்தை அடியேன் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றியது. எனவே கிறுக்க ஆரம்பித்துள்ளேன்.


எழுதியதில் தப்பிருந்தால் அது அடியேனுடையது
எழுதியது பிடித்திருந்தால் அது அவனுடையது


இந்த முன்னுரையில் அதிகம் ஆங்கிலம் இருப்பதற்கு மன்னிக்கவும். 'அன்று நடந்ததை அப்படியே எழுதினால் என்ன?' என்று நினைத்ததனால் ஆங்கிலம் அதிகம் வந்து விட்டது. பாசுர விளக்கங்களின் போது, ஆங்கில வார்த்தைகளைக் குறைப்பதற்கு மிகவும் முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றேன்.

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பம்மணமஸ்து
நரசிம்மன் திருவடிகளே சரணம்
ஓம் நமோ நாராயணாய

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP