Wednesday, May 07, 2014

கல் தோன்றி மண் தோன்றா - தமிழ் டுபாக்கூர்?

பந்தல் வாசகர்களுக்கு வணக்கம்!
பதிவெழுதி வருசம் ஆகி விட்டது; ஆளு பூட்டான்-னு நினைச்சிட்டீயளோ?:)

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நன்றி சொல்லிப் பதிவெழுதணும்-னு நினைச்சேன்; அது கூட என்னால் முடியலை!
--
இணைய வெளியில் தமிழ் இலக்கணம் = அறிவியல் பார்வை | இது குறித்து நானும் எழுத்தாளர் ஜெமோவும்,அகத் திறப்பு உரையாடல்! அதற்கான நன்றி!


சரி, நாம இன்றைய காட்சிக்கு வருவோம்:)
நிறையப் பேரு மேடையில் பேசக் கேட்டிருப்பீங்க,Very Famous Punch Dialogue!
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, 
வாளோடு... முன் தோன்றிய மூத்த குடி!

அது எப்படிய்யா, கல்லு தோன்றி, மண்ணு தோன்றா முன்னரே, தமிழ் தோன்றும்?
பூமி-ன்னு ஒன்னு தோன்றி, மக்கள் தோன்றி, அப்பறம் தானே-ய்யா மொழியே தோன்றும்? என்னய்யா "பகுத்தறிவு"?

தமிழ் -ன்னாலே, "ஓவர்" உணர்ச்சி வசப்படறவங்க-ய்யா!
எப்படி அடிச்சி விட்டிருக்கானுங்க பாரேன்!
இரும்பு தோன்றி, அப்பறம் தானே வாள் தோன்றும்?

எப்படி-ய்யா, மண் தோன்றும் முன்னரே... "வாளோடு" நீங்கெல்லாம் தோனுவீங்க?
ஒரு வேளை, "வாலோடு" முன் தோன்றிய மூத்த குடியா?:) குரங்குப் பய குடிகளோ?:) சுவடி Mistakeuuu பாட பேதமா?

இப்படித் தான் போல, மொத்த தமிழ் இலக்கியமும் = "கப்சா" ஓய்! Dubakoor of Tamizh..


என்னடா இது? மாதவிப் பந்தலில், தமிழைப் பற்றி இப்படியொரு பதிவா?-ன்னு பாக்குறீங்களா?:)

ஒன்னுமில்ல!
Twitter-ல, சில அதி மேதாவிப் "பண்டிதாள்" இருக்காளோ-ன்னோ?

* ஆதாரம்/ தரவே தர மாட்டாங்களே?
* சும்மானா அடிச்சி விட்டுட்டு, Group சேர்ந்து பரப்புவாங்களே?
* தமிழை "டுமீல்" -ன்னு எள்ளி விட்டு, அதே தமிழ் இலக்கணத்தில் பாடம் நடத்துவாங்களே?
* தமிழைக் கொண்டே, தமிழின் கண்ணைக் குத்துவாங்களே?

இது போல ஒருத்தரு, இன்னிக்கி துவங்கி வச்ச "கைங்கர்யம்" = "கல் தோன்றி, மண் தோன்றா":)
= ஆனா, உண்மை என்ன???


அதுக்கு முன்னாடி, 
ஒரு சின்ன நியாய/தர்மம் = உங்க மனசாட்சிக்கு!

கல் தோன்றி, மண் தோன்றா = தமிழ் "கப்சா" -ன்னே வச்சிக்குவோம்:)
ஆனா...
"கப்சா"லயே ஊறினவங்க, அதைக் குத்திக் காட்டி "எள்ளுவது" தான் மிகப் பெரிய வேடிக்கை:)

*கல் தோன்றி, கால் பட்டு, பொண்ணு ஆகுமாம் = இராமாயண "உண்மை"!
*கல் தோன்றி, மண் தோன்றா மட்டும் = தமிழ் "கப்சா"
= எப்பிடி இருக்கு ஓய் நம்ம நியாயம்?:)

வானத்தை, ஒத்தைக் காலால் அளப்பாராம்!
3D Volume (m^3) விண் வெளி = எப்படிய்யா 2D Length (m) -ஆல் அளக்க முடியும்?

அப்படி அளந்துட்டு, கீழே தள்ளினவன் தான்.. மஹாபலி
வருசா வருசம், சேரளம்-கேரளத்துக்கு வரானாம்!
= இதெல்லாம் கப்சா இல்ல! தமிழ் மட்டும் தான் கப்சா?:)

Yes Yes! நாம சொன்னா= "குறியீடு" ஓய்!
Vedas, Vibration in Mantra ன்னு மாத்தீருவோம்ல?:)


சரி,
கல் தோன்றி, மண் தோன்றா = உண்மைகளைப் பார்ப்போமா?
இந்தப் பாடல் முழுக்கத் தெரியுமா?
"முழுமை" அறிந்தால் தானே "உண்மை"யும் அறிய முடியும்? நுனிப்புல் இணைய "மேதை"களாச்சே நாம தான்:)

பாட்டைப் பாருங்க:
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

புறப்பொருள் வெண்பா மாலை -ன்னு ஒரு இலக்கண நூல்; 9th CE!
சங்கத் தமிழ்-ல்லாம் இல்ல.. ரொம்ப பிந்தி!
*முன் தோன்றி மூத்த குடி= தமிழ் தான் உலகில் முதல் குடி!
*கல்/மண் தோன்றும் முன்னரே, தமிழ் தோன்றி விட்டது!
அப்படியா சொல்கிறது இந்தப் பாடல்?

கல் = மலை என்ற பொருளும் உண்டு!
*கல் உயர் தோள், கிள்ளி பரி = மலை போன்ற உயரமான தோள் உடைய கிள்ளிச் சோழன்
*கல் இயங்கு கருங் குற மங்கையர் = மலையில் இயங்கும் கருப்பு நிறக் குறத்திப் பெண்கள்

மண் = வயல் என்ற பொருளும் உண்டு!
மணிநீரும் "மண்ணும்" மலையும் அணிநீழற்
காடும் உடையது அரண் (குறள்)
மண் வளம் -ன்னு சொல்றோம்-ல்ல? பச்சை மண்ணு!
----

இப்போ, கூட்டிக் கழிச்சிப் பாருங்க!
*கல் தோன்றி = மலை தோன்றி
*மண் தோன்றா = வயல் தோன்றா

முல்லை/குறிஞ்சி தோன்றி,
மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வேல்-வில்-வாளோடு, முன்பு இருந்த = ஆதி குடிகள்!

வயல் வெளி நாகரிகம் தோன்றாக் காலத்தே..
*காடும்/மலையும் தானே = ஆதி மனிதன்?
*அவன் கையில் = கல்/ எஃகு/ இரும்பால் ஆன வேலும் வாளும்!
Natural Evolution Process!

வாளோடு முன் "தோன்றி": 
"தோன்றுதல்" -னா பிறத்தல்-னு மட்டும் பொருள் அல்ல! கையில் வாளைப் புடிச்சிக்கிட்டே, தமிழ்க் குழந்தை பொறக்குமா என்ன?:)

தோன்றிற் புகழொடு தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று (குறள்)
பொறக்கும் போதே, குழந்தை புகழோட பொறக்குமா? அப்படிப் பொறக்காத குழந்தை சாவட்டும்-ன்னா சொல்றாரு ஐயன்?:)
தோன்றிற் புகழொடு தோன்றுக= Appear on the Stage, with Glory!

தோன்றல்= Appearance!
*முல்லை/குறிஞ்சி தோன்றி,
*மருதம் தோன்றாக் காலத்தே..
கையில் வாளோடு Appear ஆன ஆதி குடிகள்!

இப்போ சொல்லுங்க!
இதுல என்னய்யா "கப்சா"? பகுத்தறிவு கெட்டுப் போயிருச்சி??



இவ்ளோ தான் இந்தப் பாடல்!
எதுக்கு முல்லை/குறிஞ்சியைத் திடீர்-ன்னு சொல்லணும்?
அடேய் ரவி, தெரியும் டா ஒன்னைய பத்தி;
நீயா Meaning மாத்திச் சொல்லுறியா?:)))

Never!
உண்மையே = பெரிது!
முருகனே வந்தாலும், தமிழே எனக்கு முதல்!
மதத்தில், மொழியை அடகு வைக்க மாட்டேன்!
= மெய்த் தரவுகளே முதல்!

அதாச்சும், புறப்பொருள் வெண்பா மாலை -னு சொன்னேன்-ல?
அதில் வருது இப்பாடல்!

எழுதனவரும், ஒரு சைவ சமய ஆளு தான்! = ஐயனாரிதனார்
தமிழ் இலக்கண நூலுக்கு, விநாயகர் காப்பு-ல்லாம் எழுதி இருப்பாரு:)
இதே....
MBBS FRCS மருத்துவ நூலுக்கு, கணபதிக் காப்பு எழுதினா சும்மா விடுவீங்களா?:)

இப்படிச் சமய ஆளுங்க, தமிழில் செஞ்ச குழப்படிக்கும், நாம தான் பதில் சொல்ல வேண்டியிருக்கு! என் தலையெழுத்து:(

1. சிவபெருமான் உடுக்கை அடிச்சி, ஒரு பக்கம் தமிழ் மொழி, இன்னொரு பக்கம் சம்ஸ்கிருதம் தோனிச்சி -னு எழுதி வைப்பானுங்க!

2. சிவபெருமானே, தமிழ்ச் சங்கத்தில் உட்காந்தாராம்!
முருகன் பேரு= உருத்திர "சர்மா"வாம்!
= யோவ் எங்க முருகன் நடுகல்லு! சர்மா/ குர்மா இல்ல:)

3. திருவிளையாடற் புராணம் எழுதி, அ முதல் ஹ வரை 51 Sanskrit Letters became 51 Tamizh Poets -ன்னு எழுதி வைப்பானுங்க, "மதம்" புடிச்ச பண்டிதாள்!

இவை அத்தனையும், தமிழில், "மதம்" செய்த கப்சா!
*கல் தோன்றி, மண் தோன்றா = கப்சா இல்ல!
*இயற்கையே உருவான சங்கத் தமிழும் = கப்சா இல்ல!

தொல்காப்பியர் அருமையா வகுத்துக் குடுத்த
*அகத் திணை = 7
*புறத் திணை  = 7

கைக்கிளையும் = அகத் திணையில் தான் வைப்பாரு தொல்காப்பியர்;
ஒருதலை-ன்னாலும் = அதுவும் மனசு (அகம்) தானடா?
அதையெல்லாம் மாத்தி, புறத் திணையில் கொண்டாந்து வைச்ச நூல் இது:(
= புறப்பொருள் வெண்பா மாலை, 9th CE


புறப் பொருளில், முதல் திணை= வெட்சி X கரந்தை!
போருக்கு முன்
*வெட்சி=  எதிரிப் படை, ஆநிரை (மாட்டுக் கூட்டம்) கவர்தல்
*கரந்தை= அந்த ஆநிரைகளை, இழக்காது காத்தல்

இந்த ஆநிரைகள்-ல்லாம் எங்கே? = முல்லை/குறிஞ்சியில் தானே!
அதில், கரந்தையில் வருவதே இந்தப் பாட்டு!

புறப்பொருள் வெண்பா மாலை - கரந்தைப் படலம் 35 | குடிநிலை
பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!

மேலோட்டமான பொருள்:
அடேங்கப்பா, என்னமா ஆநிரை காக்குறாங்க, இந்த ஆதிகுடிகள்?
பொய் அகல, புகழ் விளைக்குறாங்க.. என்ன வியப்பு!

வையகம், நீர் போர்த்தி இருந்து, பின்பு வாழ்வு துவங்கிற்று!
அப்போ, மலை வாழ்வு/ காட்டு வாழ்வு தான் முதல்!
*கல் தோன்றி = மலை தோன்றி
*மண் தோன்றா = வயல்கள் தோன்றா

முல்லை/ குறிஞ்சி தோன்றி, மருதம் தோன்றாக் காலத்தே...
கையில், வாளோடு, Appear ஆகி,
இப்படி வீரமாகப் போர் செய்து, ஆநிரை காக்கிறார்களே, இந்தக் கரந்தைத் திணையில்! வாழ்க ஆதி குடிகள்!

இவ்ளோ தான் பொருள்; வெறுமனே கரந்தைத் திணை
Stone Age, Bronze Age, Iron Age = Natural Evolution of Mankind!
--

இதுக்குத் தான், பாட்டை முழுக்கப் படிக்கணும், "தரவு, தரவு" -ன்னு அடிச்சிக்குறது!
இப்பல்லாம், ஒங்க பொழுது போகாமைக்கு, தமிழ் இலக்கணம் -ங்கிற பந்து கிடைச்சிருச்சி அவனவனுக்கு! கால் போன போக்கில் எட்டி உதை?:(

இனி, எவனா இருந்தாலும், எவன் சொன்னாலும், தரவு கேளுங்க!
(நானே ஆயினும்..)
எப்பொருள், யார் யார் வாய்க் கேட்பினும்..

@r_inba என்கிற "மகான்" = இவருக்கே இப்பதிவு காணிக்கை!
*கல் தோன்றி மண் தோன்றா என்று தமிழை எள்ளல் செய்தது இவரே!

அதுவும், என் அன்புக்குரிய இசைஞானி இளையராஜாவின் தளத்திலே:((
இசைஞானி மேல் பிறர் அபாண்டம் சொல்லும் போது வரும் அறக்கோபம்
தமிழின் மேல், பிறர் "எள்ளல்" செய்யும் போது வரக் காணோமே?? Hypocrisy!

கல் தோன்றி, மண் தோன்றா = கப்சா அல்ல!
சங்கத் தமிழ் நெறி! Natural Evolution! அறிவீர், அறிவீர்!

67 comments:

  1. Nice to see a post after a long time.

    என்னை போல தமிழில் ஆர்வம் மட்டும் கொண்டு உங்கள் blog (கொஞ்ச வருஷமா ) follow பண்றவங்களுக்காக.. கொஞ்சம் எளிமையாக இதுபோன்றவற்றில் baby steps நடை பழக ஒரு பதிவு please. Convent educated-லயே கொஞ்சம் அரைகுறை educated - எந்த மொழியும் - சரியா தேரியாத சாபம் பெற்றவங்க.

    கோபம்னு தெரியுது .. நல்ல பதிவுக்கு நடுவுல இவளோ திட்டினா கொஞ்சம் பயமாவும் இருக்கு :)
    நல்ல கோபம் - அதனால நல்லா இருக்கு! :D

    நன்றி
    ராகவ்

    ReplyDelete
    Replies
    1. Baby Steps? போட்டுருவோம்:)
      இதுவே, பேச்சு நடையும் - செய்யுளும் கலந்து கலந்து தானே எழுதீருக்கேன்?:)
      --
      அச்சம் தவிர்
      சீறுவோர் சீறு
      நையப் புடை
      = புதிய ஆத்தி சூடி:)

      Delete
  2. அருமையான பதிவு. மீண்டும் எழுதத் தொடங்கியமைக்கு நன்றி. தமிழில் ஆர்வமுள்ளவர்களுக்கு உங்களின் பதிவுகள் படிக்கப் படிக்க சலிக்காதவை.

    ReplyDelete
  3. நீங்க ட்விட்டர் பக்கம் போகாதிங்க. இங்க எங்களுக்காக தமிழைப் பற்றி எதாவது எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றி:) நலமா குட்டிப்பிசாசு?:)

      Delete
  4. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு
    முன் தோன்றி மூத்த குடி! ...க்கு

    அருமையான விளக்கம். நன்றி ஐயா.
    ஆனால் யாரையோ திட்டிக்கொண்டே எழுதி இருந்தது தான் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி:)
      "திட்டுதல்" என்பது அறத் தமிழின் சீற்றமே:) | அதனால் நன்மையே; அவ்வண்ணமே காணவும்:)

      Delete
  5. உண்மையில் அர்த்தம் அறியாமல்தான் இருந்தேன்....இன்று தெரிந்து கொண்டேன் நன்றி .

    ReplyDelete
    Replies
    1. பொருள், இன்றேனும் அறிந்து கொண்டதில் மகிழ்வு:)

      Delete
  6. Replies
    1. டைப் செய்ததில் சில் எழுத்துப் பிழைகள். எனவே இதனை நீக்கி விட்டு , சரி செய்து மீண்டும் இணைத்துள்ளேன். மன்னிக்கவும்!

      Delete
    2. No Issues, Sir:)
      தங்கள் பின்னூட்டு, தங்கள் உரிமையே:)

      Delete
  7. அப்படி எழுதின நாதாரி யாரென்றும் சொல்லியிருக்கலாமே...
    உங்களது விளக்கம் அருமை..இதை யாரும் மறுக்கவும் முடியாது...பத்தாம் வகுப்புக்குமேல் தமிழே படிக்காதவர்களுக்கும் விளங்குமுகமாக எழுதியதற்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. I studied Tamil only till 4th std... so u can keep this as a minimum level for this post

      Delete
    2. No No!
      "எள்ளல்" செய்தவரை கடுமையாக அறம் உரைக்கலாம்! ஆனா, Personal தீச்சொல் கூடாது! தவறு:)

      Delete
  8. பிரமாதம், இப்படிதான் பதில் தரணும். நாமளும் நாளைக்கு ஒருத்தர் கேட்கும்போது சரியான விளக்கம் தரமுடியும்

    ReplyDelete
    Replies
    1. அப்படியே எடுத்துச் சொல்லுங்கள், அறியாத மற்ற பிறர்க்கும்! நன்றி:)

      Delete
  9. அழகு அழகான படங்கள் நிரம்பிய உங்கள் இலக்கிய கட்டுரைகளை வாசித்து இருக்கிறேன். மீண்டும் எழுதத் தொடங்கியமைக்கு நன்றி!

    இந்த கட்டுரையில் ஏதோ ஒன்றைச் சொல்ல வந்து தயக்கம் காரணமாக, முழுமையாகச் சொல்லாதது போலத் தோன்றுகிறது.

    இதே புறப்பொருள் வெண்பாமாலையை வைத்து நான் ஒரு மாற்றுச் சிந்தனை கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். தங்களுக்கு நேரமிருந்தால் படித்துப் பார்க்கவும்.

    பண்டைத் தமிழர்களின் காட்டுமிராண்டிப் போர்:
    http://tthamizhelango.blogspot.com/2013/06/blog-post_9.html

    த.ம. – ஓட்டுப்பட்டை உங்கள் பதிவில் இல்லை. கவனிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. கட்டாயம் படிக்கிறேன், நன்றி!

      "தயக்கம்"-ன்னு இல்லை; ஒரேயடியாகச் சீறி விட வேண்டாமே என்ற Restraint தான்:) | பழைய softness முழுக்கப் போக மாட்டேங்குது:)

      தமிழ்மணம் ஓட்டுபட்டை/ சூடான பதிவு-ன்னு அள்ளிக் குவித்தது எல்லாம் ஒரு காலம்!:))

      Delete
  10. அட்டகாசம் அய்யா...

    ReplyDelete
  11. நன்றி.வேறென்ன சொல்றதுன்னு தெரியல.இவ்வளவு வருஷமா இது தான் அர்த்தம்னு தெரியாம வளர்ந்திருக்கோம்,நான் மட்டுமில்ல,ஒரு சமூகமே.

    ReplyDelete
    Replies
    1. நற்-பொருள் சொல்லிக் குடுப்பது, ஆசிரியர்கள் கையில்-ம்மா:)

      Delete
  12. அருமை..மீண்டும் எழுத வந்ததில் சந்தோசம்.

    ReplyDelete
  13. கல் எனும் சொல் தோன்றி மண் எனும் சொல் தோன்றா காலத்து எனவும் கொள்ளலாம். குரங்கினம் மனிதனாக மாறிய தருணத்தில் எல்லா சொற்களும் உடனே தோன்றாது. அது கொட்டையை உடைக்கவும், கருவி செய்யவும் கல் பயன்படுத்தியதால் கல் எனும் சொல் முதலில் தோன்றி இருக்கு. அதை தன் குட்டிக்கு கல் என்று அதே சொல்லை சொல்லி கற்றுக்கொடுத்தது. இரண்டு கல்லை கல்கல் என சொல்லி அது கல்கள்(கற்கள்) என மருவியது. மண்ணின் பயன் குரங்குக்கு இல்லை. தமிழ் மொழியில் உடல் பாகங்கள், பறவைகள் விலங்குகள் பெயர்கள் மிகப்பெரும்பான்மை ககரத்தில் தொடங்கும். ”ககரமுதல தமிழெல்லாம்”. ககரம் தோன்றிய பின்னரே சகரம் தோன்றியது. சகர ஒலியை பயன்படுத்தும் உயிரினக்கள் அரிது. மழலையருக்கு சகரம் உடனே வருவது இல்லை என கவனியுங்கள் . அதனால் தமிழில சகரம் மொழிமுதல் வராது எனவும் ஒரு விதி இருக்கு. கை எனபது செய் ஆனது. கல் என்பது சிலா ஆனது.கிளி சிலக்க ஆனது. இதனால் பெரியார் சொன்னது போல் தமிழ் காட்டுமிராண்டி மொழிமட்டுமன்றி குரங்குமொழியும் என சொல்லலாம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேந்தன் அரசு; நலமா?
      மின் தமிழ்-ல்லாம் எப்படிப் போகுது?:)

      உங்கள் கருத்துக்குப் பின்னர் விரிவாக வருகிறேன்!
      "ச"கரம் மொழி முதல் வாராது என்பது பாடபேதம்; உண்மை அன்று:)

      சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
      அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே
      -என்பது தான் மெய்யான தொல்காப்பிய நூற்பா;
      செள மட்டுமே மொழி முதல் வாராது; செளபாக்யம், செளந்தர்யம்= வடசொற்கள்!

      மற்றபடி சகர ஓசை = இச்.. முத்தம்!:)))
      முத்த ஓசை = குடிகளுக்கு இயல்பே!:)


      Delete
  14. விளக்கம் நன்றாயுள்ளது.

    ஓர் ஐயம்:

    பாடலில், 'கல்தோன்றி' என்பது தனியாயில்லை.

    'கையகலக்கல்தோன்றி' என்பதுவரை ஒரு தொடர்மொழியாயுள்ளதைப்பாருங்கள். கல்லென்பது மலையைக்குறிப்பதென்பது சரி. ஆனால், கையகலக்கல்லென்பது மலையைக்குறிப்பதாயிருக்காதன்றோ?

    இதையும்விளக்கிச்சொன்னால் இன்னும் நன்றாய்விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாயிருக்கும்.

    ஒருவேளை மலையாறுகளால் உருட்டிவரப்பட்ட பெருங்கற்களிலிருந்து உடைந்து சிதறி கையகலக்கற்கள் உண்டாவதற்குமுனென்பதாயிருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. ஆகா!
      கையகலக் கல் -ன்னா Slab கிடையாது!:))

      கீழே வவ்வாலும் கேட்டிருக்காரு! அங்கே விளக்கிச் சொல்கிறேன்; பார்க்கவும்:) நன்றி!

      Delete
  15. கே.ஆர்.எஸ்,

    வாங்க ,நலமா?

    அவ்ளோசீக்கிரத்துல உங்கள போகவிடுவோமா?

    தமிழுக்கு அமுதெண்ரு பேராம் எனவே தமிழமுதம் உயிர் காக்கும் ,வாழ்க பல்லாண்டு!

    # அடிக்கடி உங்க கண்ணுல தமிழ் பண்டிதாள் சிக்குறாங்களோ ,பதிவு ஒன்னு நமக்கு கிடைக்குது எனவேஅவாளுக்கு நன்றி சொல்வோம் அவ்வ்!

    #கல் தோன்றி மன் தோன்றாக்காலத்திற்கு நீங்கள் கொடுத்த விளக்கமொரு வகையில் சரி என தோன்றினாலும் , இன்னும் கொஞ்சம் பொறுந்துறாப்போல வேற விளக்கமும் இருக்கு, சொன்னது யார்னு மறந்து போச்சு,ஆனால் இப்படியான கருத்து அது,

    ஆதியில் பூமி தோன்றியப்போது வெறும் மலை,பாறைகள் மட்டுமே இருந்தன மண்ணோ ,சிறு கற்களோ கூட இல்லை.

    பெருமழைக்காலத்தில் வெள்ளம் உண்டானது மற்றும் நதிகள் உருவாகி ,பாறைகளை அரித்து , சிறு கற்களாக்கி அவற்றை பின்னர்கூழங்கற்கள் ஆக்கி அதில் இருந்து மணல் உருவாகி ,அவற்றுடன் கரிம கழிவுகள் மக்கி சேர்ந்து தான் "மண்" உருவானது.

    எனவே மண் உருவான "weathering process" கால வரிசைப்படி மனித குலம் உருவானதை வைத்து முன் தோன்றிய மூத்தக்குடி என சொல்ல வருகிறாரெனலாம்.

    கையகலக்கல் தோன்றியது ஒரு காலம் ,அக்கல் சிதைவுற்று கூழாங்கல் , மணல் ,மண் என ஆக வெகு காலம் பிடிக்கும், அப்படி காலம் ஆகும் முன்னரே , அதாவது கையலக கல் உருவான காலத்திலேயே " வாள்" உருவாக்க தெரிந்த நாகரீக மனிதனாக தமிழன் உருவாகி விட்டான் ,அவன் உருவான பின்னரே "கையகல கல்" மண்ணாக உருவாச்சு என்கிறார்.

    ஏன்னா இந்த வெதரிங்கில் நடக்க , ரசாயன மாற்றம் , இயற்கை மாற்றம், எந்திர மாற்றம் என பலவும் உதவுது,பூமி உருவான போது இயல்பாக இரசாயன மாற்றம் மற்றும் மழை போன்றவை மலையை சிதைச்சு கல் ,ஆக மாற்றின,அக்காலத்திலேயே தமிழன் தோன்றிவிட்டான்,அவனின் செயல்ப்பாடுகளும் மண் ஆக உருவாக காரணம் என்ற அளவில் ,மிகமூத்தக்குடியாக உருவகிக்கிறாரெனலாம்.

    வளமான மண் உருவான காலத்தில் நிறைய மனித இனக்குழுக்கள் உருவாகி நாகரீகம் பெறுவது ஒன்றும் பெரிய விடமியல்லை,ஆனால் இயற்கை மானிடன் வாழ பெரிதும் உதவாத கற்காலத்திலேயே 'நாகரீக மனிதனாக கையில் வாளோடு" உருவானான் என்பது சிறப்பு என சொல்லி இருக்கலாம்.

    இன்னும் சொல்லப்போனால் ,தொல்லியல் ரீதியாக கற்கால மனிதர்கள் வாழ்ந்த சில வாழ்விடங்களில் தமிழகமும் ஒன்று என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    கற்கால மனிதர்கள் வாழ்ந்த எச்சங்கள் உலகில் வெகு சில இடங்களில் தான் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை பல்லாவாரம், திரிசூலம் ,கூடுவான்சேரி மற்றும் காஞ்சி ஆகிய பகுதிகளில் நிறைய கல் கோடாரி, ஈட்டி , கத்தி போன்றவை கிடைத்துள்ளன ,வெள்ளைக்காரன் காலத்தில் இந்தியாவில் நடந்த அகழ்வில் இப்படியான தொல்லியல் சான்றுகள் சென்னைக்கருகில் தான் முதலில் கிடைத்தன , அவற்றை "மெட்ராஸ் ஸ்டோன்ஃபேக்டரி" என வகைப்படுத்தி அழைக்கிறார்கள்.

    திருவள்ளூர் அருகே பூண்டியில் கற்கால மனிதர் வாழ்ந்த குகை, அவற்றில் ஓவியங்களும் உள்ளன ,அங்கு கிடைத்த கற்கால ஆயுதங்களைக்கொன்டு காட்சியகமும் உள்ளது.

    கல் மண்ணாக சிதைவுறும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்திலேயே தமிழினம் கல் ஆயுதங்களுடன் நாகரீகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதையே அப்பாடல் சொல்கிறது எனலாம்!

    #//முருகனே வந்தாலும், தமிழே எனக்கு முதல்!
    மதத்தில், மொழியை அடகு வைக்க மாட்டேன்!
    = மெய்த் தரவுகளே முதல்!//

    இங்கே தான் நீங்க நிக்கிறிங்க ,தமிழர்கள் மனதில்!

    பக்தியை முன்னுக்கு வச்சு தமிழை பின்னுக்கு வைக்காத உங்க நேர்மைக்கு ஒரு அரச வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. ஆகா! வவ்வால், நலமே நலம்!:)
      சும்மாப் பின்னி எடுக்கறீங்க போங்க! உங்கள் பின்னூட்டு ஒவ்வொன்றுமே, அற்புதம் ஒளிந்துள்ள ஆய்வுக் குத்தூசிகள்:)

      பண்டிதாளை எல்லாம் விடுவோம்!
      இந்த அறப் போராட்டம் ஓயவே ஓயாது!:)
      *வலியார் எளியாரை, வதை செய்து கொண்டு தான் இருப்பார்கள்...
      *எளியார் வலியார் ஆகும் வரை!
      *ஆகி, பிற எளியாரைத் "தொடர்ந்து" கைத்தூக்கும் வரை
      ---

      உங்கள் Weathering Process எல்லாம் உண்மையே!
      ஆனா, இந்தப் பாடலில் அத்துணை அறிவியல் இல்லை:) இது ஒரு சாதாரண மதவாதி, புகழ்மொழிக்கு எழுதுன பாடலே!:)

      தொல்காப்பிய இயற்கை அடிப்படை-ல்லாம் மாத்தி, "திணை மாத்துனவரும்" இவரு தான்:(

      எவரையும் ஒதுக்காது (பரத்தையர், Gays, ஒருதலை), அனைவரையும், "அகம்" என்பதிலே வைத்த தொல்காப்பியரை மீறி,
      "மனு புகுத்தல் தர்மம்" செய்தவரும் இவரே:( Dos & Donts of Dharma on Tamizh
      ------

      நாம, பாடலுக்கு வருவோம்!

      "வயங்கொலி நீர் - கையகலக்..
      கல் தோன்றி"
      என்பதை, அப்படிப் படிக்கக் கூடாது:) Itz not hand sized slab:))
      கல்லோடு பொருத்தாமல், அதற்கு முன்னுள்ள சொல்லோடு பொருத்தணும்!

      Delete
    2. வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக்
      கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே

      கை= ஒழுக்கம்! ஒழுகுதல்!

      கை-க்கிளை = (காதல்) ஒழுக்கம் கிளை விடுதல்;
      அதாச்சும் மனம் ஒன்றாமல், ரெண்டு பட்டுப் போதல்;

      *செய்-கை = செயல் ஒழுக்கம்
      *உவ-கை = மகிழ் ஒழுக்கம்
      ஒழுகுதல்! = தொடர்ந்து "ஒழுக" வேணும்; நின்று விடக் கூடாது
      அதான் "ஒழு"க்கம் -ன்னு காரணப் பெயர்!
      -----

      இப்போ பாட்டைப் படிங்க..

      வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகல
      = பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுக்கு அகல (கை=ஒழுகுதல்)
      = மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின!

      கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
      = அப்படி நீர் ஒழுக்கு விலக... வளங்கள் தோன்றி, குறிஞ்சி/முல்லை தோன்றி,
      வயல் வெளி நாகரிகம் தோன்றாத காலத்தே.. குடிகளின் வாழ்வு!

      இப்படிக் கொண்டு-கூட்டிப் படித்தால், தெற்றென விளங்கும்!:)

      Delete
    3. கே.ஆர்.எஸ்,

      நன்றி!

      hi...hi நாம என்னத்த பெருசா குத்திட போறோம், அவாள் எல்லாம் அசைக்க முடியாத இமயம் ஆச்சே அவ்வ்!

      #//எளியார் வலியார் ஆகும் வரை!
      *ஆகி, பிற எளியாரைத் "தொடர்ந்து" கைத்தூக்கும் வரை//

      இது நடந்தா நாடு முன்னேறிடுமே, ஆனால் தமிழ்நண்டு கதையாயில்ல இருக்கு :-)

      நீங்க ஆசைப்பட்டது நடக்கும்னு நம்புவோம்!

      #//ஆனா, இந்தப் பாடலில் அத்துணை அறிவியல் இல்லை:) இது ஒரு சாதாரண மதவாதி, புகழ்மொழிக்கு எழுதுன பாடலே!:)//

      ராமாயணத்துல புஷ்பகவிமானம் பத்தி சொல்லி இருக்கு அதான் இந்த கால ஜெட் விமானம்னு அறிவியலை கண்டுப்பிடிக்கிறா,நாம தமிழ் பாட்டில அற்வியலை கண்டுப்புடிப்போமே அவ்வ்!

      #//வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகல
      = பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுக்கு அகல (கை=ஒழுகுதல்)
      = மலைகள், மற்றும் இதர பூமியின் வளங்கள், ஒவ்வொன்றாய்த் தோன்றின!

      கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
      = அப்படி நீர் ஒழுக்கு விலக... வளங்கள் தோன்றி, குறிஞ்சி/முல்லை தோன்றி,
      வயல் வெளி நாகரிகம் தோன்றாத காலத்தே.. குடிகளின் வாழ்வு!//

      நீங்க சொல்றதன் படி ,உலகம் முழுக்கவே நீர் தான்பரவி இருந்தது அதில் இருந்து பூமி மெள்ள மேலே வந்து தலைக்காட்டியது போல ஆகுது.

      ஆனால் ரிவர்சில் தான் நடந்தது என சொல்கிறார்கள், பனி உருகி பெரு வெள்ளம் உருவாகி பல நிலப்பரப்பை மூழ்கடித்து ,அதற்கு முன்னர் இருந்த நிலப்பரப்பி சுருக்கி தான் இருக்கு, உலகம் முழுக்கவே பனி உருகி டெலுஜ் உருவானதன் பதிவுகள் இருக்கே.எனவே உலகை போர்த்தி இருந்த நீர் விலகி மலை தெரிந்தது எனக்கொள்வது சரியான விளக்கமாக படலையே?

      நான் " வயங்கு ஒலி நீர்" என்பதை தெளிந்த ஓசையுடன் கூடிய நீர் என எடுத்துக்கொண்டேன் , அதாவது ஒலி நீர் என சொல்வது இடியுடன் கூடிய மழை நீர் என்பதை குறிப்பதாக எடுத்துக்கொண்டேன்.

      ஒலிகடல் - அலைஓசையுடன் கூடிய கடல் எனப்பொருள்.

      எனவே நீர் என சொல்லாமல் ஒலி நீர் என சொல்வதால் அதனை மழை நீராக தான் கருத இயலும்.

      வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் = பூமியெங்கும் இடியுடன் கூடிய மழை பொழிவால் என ஏன் பொருள் கொள்ளக்கூடாது?

      நீங்க சொன்னது போல வைத்து பார்த்தாலும் , மண் தோன்றினால் தான் , வயலும் ,வயல் சார்ந்த இடம் ஆன "மருதம்" உருவாகும், எனவே கல்லில் இருந்து மண் தோன்றினால் மட்டுமே மருத நிலம் உருவாகி ,அதில் விவசாயம் செய்ய இயலும், அக்காலத்துக்கு முன்னரே கற்காலத்தில் , விவசாயம் செய்யஇயலாத நிலையில் வேட்டையாடி மனிதன் வாழ்ந்திருப்பான் இல்லையா அப்போவே தோன்றிய மனித இனம் தமிழினம் என சொல்கிறார் எனவும் கொள்ளலாம்.

      நீங்க திணை வழி சொல்றிங்க ,நான் கல்- மண் என மாற்றத்தின் வழி சொல்கிறேன் அவ்ளோ தான்.

      பூண்டி அருகே குடியம் என்ற இடத்தில் உள்ள மெகா லித்திக் கால குகை பற்றிய செய்திகள்.

      http://www.hindu.com/2000/04/17/stories/13170071.htm

      http://www.tiruvallur.tn.nic.in/departments/archaeology.htm

      ராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற ஆங்கில சர்வேயர் 1863 ஆண்டு வாக்கில் சென்னை பல்லாவரம் திரிசூலம் மலைப்பகுதிகளில் "கல் கோடாரி ,ஈட்டி போண்றவற்றினை அகழ்வில் கண்டு எடுத்துள்ளார் ,அவை இன்றும் சென்னை மிசியத்தில் உள்ளன. இக்கண்டுப்பிடிப்பினால் இந்தியாவில் ஆதியிலேயே மனித இனம் இருந்துள்ளது தெளிவானது அதனால் அவரை இந்திய தொல்லியல் அகழ்வின் தந்தை எனவும் அழைக்கிறார்கள்.

      அவருக்கு அப்புறம் தான் அசோகர் பத்திய கண்டுப்பிடிப்பெல்லாம் தீவிரம் ஆச்சு.

      கூடுவான்சேரி அருகேயுள்ள இரும்புக்கால ,மற்றும் கற்கால எச்சங்கள் பற்றிய செய்தி,

      http://www.cmi.ac.in/gift/Archeaology/arch_tambaramhistory.htm

      Delete
    4. //ராமாயணத்துல புஷ்பகவிமானம் பத்தி சொல்லி இருக்கு அதான் இந்த கால ஜெட் விமானம்னு அறிவியலை கண்டுப்பிடிக்கிறா,நாம தமிழ் பாட்டில அற்வியலை கண்டுப்புடிப்போமே அவ்வ்!// - எதற்கு அப்படியெல்லாம்? நாம் நாமாகவே இருப்போமே!

      Delete
    5. //ஆனால் ரிவர்சில் தான் நடந்தது என சொல்கிறார்கள், பனி உருகி பெரு வெள்ளம் உருவாகி பல நிலப்பரப்பை மூழ்கடித்து ,அதற்கு முன்னர் இருந்த நிலப்பரப்பி சுருக்கி தான் இருக்கு, உலகம் முழுக்கவே பனி உருகி டெலுஜ் உருவானதன் பதிவுகள் இருக்கே.எனவே உலகை போர்த்தி இருந்த நீர் விலகி மலை தெரிந்தது எனக்கொள்வது சரியான விளக்கமாக படலையே?// - அப்படியில்லை வவ்வாலரே, இந்தப் பாடலில் கூறப்படுவது பூமி உருவானபொழுது ஏற்பட்டதைப் பற்றியதில்லை. பனியுகத்தின் முடிவில் நடந்ததைப் பற்றியதாகத்தான் இருக்க முடியும். காரணம், பூமி உருவாகி வெகு காலத்துக்குப் பிறகுதான் மனித இனம் தோன்றியது. எனவே, கண்ணபிரானார் கூறுவது போல இந்தப் பாடலின் இறுதி அடியில் வரும் 'தோற்றம்' எனும் சொல்லை எழுச்சி (appearance) எனும் பொருளில் கொள்ளாமல் நாம் 'பிறப்பு' எனும் பொருளில் எடுத்துக் கொள்வதானால், இது மனித இனத்தின் தோற்றத்தைப் பற்றியதாகத்தான் எடுத்துக் கொள்ள முடியும் இல்லையா? எனவே, அப்படி எடுத்துக் கொள்வதாக இருந்தால் இது பனியுகத்தின் முடிவு பற்றிப் பேசுவதாகத்தான் கருத முடியும். பூமியின் தோற்றத்தைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம், பூமியின் தோற்றத்துக்கும், மனித இனத்தின் தோற்றத்துக்கும் இடையிலான கால இடைவெளி மிக மிகப் பெரியது இல்லையா?

      Delete
  16. அப்பாடா............. வனவாசம்
    முடிந்ததா???????????

    திட்டியோ, குட்டியோ, வாலோடோ இல்லை வாளோடோ , கோபமாவோ இல்லை எரிமலையாவோ திரும்பி வந்ததுக்கு இனிய வாழ்த்துகளும் வரவேற்பும்.

    ReplyDelete
    Replies
    1. ஆகா, டீச்சர்:)
      உங்கள் செல்வச் செல்லங்கள் நலமா? ஷைலஜா-க்கா சொன்னாய்ங்க, ஒங்க புத்தக மகிமை, Seattle வரை பரவியுள்ளது-ன்னு!:)
      நீங்க தான், "நூலோடு, முன் தோன்றிய மூத்த குடி"!:))))))

      Delete
  17. நல்லா இருக்குங்க! FB ல பகிர்ந்தாச்சு உங்க பேரோட!

    ReplyDelete
  18. நன்றாக உள்ளது

    ReplyDelete
  19. ஹேய், சூப்பரப்பு !

    ReplyDelete
  20. அந்தக் கீச்சரையும் சரி, இந்தப் பதிவின் தரத்திலும் சரி பிச்சிட்டீங்க போங்க!
    பதிவின் இறுதிப் பகுதிக்கு வரும்பொழுதே மேலே வேந்தன் அரசு அவர்களும், வவ்வால் அவர்களும் கேட்டிருந்த அதே 'கையகல' ஐயம் எழுந்தது. அது பற்றி நான் கேள்வி எழுப்பி நீங்கள் பதிலளிக்க நான் கொடுத்து வைக்காமல் போனது வருத்தமே! ஆனால், அதற்கான உங்கள் பதில் அருமை! ஆனால், இப்படிப்பட்ட சர்ச்சைகளுக்கும் ஐயங்களுக்கும் இடமளிக்காத வகையில், இனி இப்படிப்பட்ட பாடல்களுக்குப் பொருள் கூறும்பொழுது மேலோட்டமாகவோ, உட்பொருளை மட்டுமேவோ கூறாமல் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எளிய தமிழில் பதவுரை போல் கொடுத்துவிட்டால் என்னைப் போன்றவர்களும் விளங்கிக்கொள்ள ஏதுவாக இருக்கும்.

    சகரம் மொழி முதலில் வரும் என்பதற்கு நீங்கள் கூறிய அந்த 'இச்' விளக்கம் 'பச்'சென்று உள்ளத்தில் பதியும் அளவுக்கு இருந்தது. இவ்...வளவு தமிழறிவு கொண்ட தாங்கள் இன்னும் நிறைய... நிறைய... நிறைய... எழுத வேண்டும் என அனைவரின் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  21. மேலே ஐயா வவ்வால் அவர்கள் கூறியுள்ள தகவல்களைச் சிறுவன் நானும் படித்திருக்கிறேன். (முழுத் தகவல் இங்கே -> https://groups.google.com/forum/#!topic/theyva-thamizh/59xXL_s65wk).

    பல்லாவரம் பகுதியில் கிடைத்துள்ள அந்தத் தொல்பழங்குடிக் கற்கருவிகளின் அகவை (வயது)... மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்... ஏறத்தாழ 15,00,000 என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன!

    கண்ணபிரான் அவர்களே! மேற்கண்ட தகவலையும் நீங்கள் இங்கே இந்தப் பாடலுக்குக் கொடுத்துள்ள விளக்கத்தையும் வைத்துப் பார்க்கும்பொழுது இதற்கான விளக்கம் இப்படியும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது. அதாவது,

    வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கையகல
    = பூமியைப் போர்த்தி இருந்த நீரின் ஒழுக்கு அகல

    கல் தோன்றி
    = உலகின் பல பகுதிகளிலும் கல் (மலை) தோன்றி

    மண் தோன்றாக் காலத்தே
    = அது நொறுங்கி மண்ணாக மாறும் முன்பே

    வாளோடு முன் தோன்றி மூத்த குடி!

    இப்படியும் இருக்கலாம், இல்லையா?

    அதாவது, வையகத்தின் மற்ற பகுதிகளில் நீர் விலகி, கல் வெளிப்பட்டு, பின் அது உடைந்து மண்ணாவதற்கு முன்பே ஆயுதங்களோடு வாழ்ந்த மக்கள் இவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாமா?

    வெறுமே, எனக்கு இப்படித் தோன்றுவதால் மட்டும் கேட்கவில்லை. இந்தக் கேள்விக்கொரு பின்புலமும் உண்டு. 18.12.2002 'தினமலர்' நாளிதழில் வெளியான ஒரு செய்தியை அண்மையில் இணையத்தில் படித்தேன். அதில் பூம்புகார் பற்றி நடந்த ஆராய்ச்சிகள் பற்றிச் சில செய்திகள் கூறப்பட்டிருந்தன. அதன்படி, இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் பூம்புகார் கடற்பகுதியில் நடத்திய ஆராய்ச்சியில், பனியுகத்தின் இறுதியில் ஏற்பட்ட தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகிப் பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாகவும், அவற்றுள் பூம்புகாரும் ஒன்றாக இருக்கலாம் என்றும் கூறினாராம். (இது பற்றி மேலும் பல மலைப்பூட்டும் தகவல்கள் இங்கே -> http://www.thoguppukal.in/2014/04/blog-post.html). இந்தப் பாடல் ஏன் அதைக் குறிப்பதாக இருக்கக்கூடாது?

    ReplyDelete
  22. கண்ணபிரான் ஐயா!

    செயமோகன் அவர்களுடனான உங்கள் உரையடலை மேற்கண்ட சுட்டியில் படித்தேன். அருமை! இ, ஈ, எ, ஏ, ஐ ஆகியவை யகரத்தோடுதான் புணருமேயன்றி வகரத்தோடு புணராது என்பதற்கு மக்களின் அன்றாட வழக்கிலிருந்து நீங்கள் எடுத்துக்காட்டியிருந்த பள்ளிக்கூட அரிச்சுவடிப் பாட்டு, 'ஔவையை அவ்வையெனவும்' எழுதலாம் எனும் கருத்துக்கு நீங்கள் காட்டியிருந்த சான்று ஆகியவை வழக்கம் போலவே வியக்க வைத்து விட்டன. உங்கள் மடலுக்குச் செயமோகன் அவர்கள் எழுதியிருந்த மறுவினை அதை விட மலைப்பானது! இலக்கணத்தை, இலக்கணவியலாளர்களை, இவற்றின் தன்மைகளை வரலாற்றோடும் சமூக அமைப்போடும் இணைத்து எப்படியெல்லாம் சிந்திக்கிறார் அவர்! எதைப் பற்றி எழுதினாலும், எவ்வளவு கொஞ்சமாக எழுதினாலும் மலைக்க வைப்பதே அவர் வழக்கம்!

    தமிழ் இலக்கணத்துக்கு நெகிழ்வுத் தன்மைகள் உள்ளன; அவற்றை அறியாமல் இலக்கண நெறிகளைக் கண்மூடித்தனமாகக் கடைப்பிடிப்பது தவறு எனும் உங்கள் இருவருடைய இந்தக் கருத்துக்களையுமே அடியேன் தலை தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என் கேள்வி என்னவெனில், இன்றைய தமிழ்ச் சமூகத்தின் தேவை என்ன? கண்டிப்பான சட்டாம்பிள்ளைத்தனமா? இலக்கணம் பற்றிக் கவலைப்படாமல் படைப்புகளை யாக்கும் தனமா? என்னைக் கேட்டால், தமிழில் படைப்போர் எண்ணிக்கை தொடர்ந்து நல்ல நிலையில்தான் இருந்து வருகிறது. (ஆனால், வளர்ந்து வரும் அயல்தமிழ்ச் சூழலில் இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதும் கேள்விக்குறியே!) புதிய புதிய படைப்பாளிகள் அடுத்தடுத்த தலைமுறைகளிலிருந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், தமிழ் இலக்கணம்தான் தறிகெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது. முன்னணி ஏடுகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், வலைப்பூக்கள் என எல்லா ஊடகங்களிலும் தமிழ் பிழைகளோடுதான் பிழைத்துக் கிடக்கிறது! நீங்கள் கூறுகிற அளவுக்கு இலக்கணத் தூய்மை பற்றிப் பேசவில்லை. ஆனால், ஒருமை பன்மையில் கூடப் பிழைகள் செய்கிறார்கள், பார்க்கிறோம் இல்லையா? 'அவர் கூறிய கருத்துகள் ஏற்கப்பட்டது' எனக் கொஞ்சமும் கூசாமல் எழுதுகிறார்கள்! சொற்றொடர் அமைப்புப் பிழைகள் தனிக் கொடுமை! தட்டெழுத்துப் பிழைகள் இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுபவை!

    இப்படி எங்கும் தவறு, எதிலும் தவறு எனத் தமிழ் ஆகிவிட்ட நிலையில், இன்று நமக்குக் கண்டிப்பான, சட்டாம்பிள்ளைத்தனமான இலக்கணாசிரியர்களும் தேவைதான் என எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. மொழி முறைமை என்பது சட்டம் போட்டு வருவதில்லை:)
      எவ்வளவு சட்டம் போட்டாலும் மீறுவாய்ங்க..

      அதிகாரமுள்ள அரசியல் சட்டத்துக்கே "டிமிக்கி" குடுக்கும் போது,
      ஒரு அதிகாரமும் இல்லா மொழிச் சட்டத்துக்கு எந்தப் பயமும் இல்லை என்பதே நடைமுறை உண்மை:)

      மொழி முறைமை = அன்பால் வருவது; கருத்தால் வருவது!
      இது "பயிலப்பட" வேண்டியது;

      ஒருமை-பன்மை, எழுத்துப் பிழைகள், சொல்லுறபடிச் சொன்னா, தானே களைந்து கொள்வார்கள்! "எள்ளல்" தான் கூடாது:)

      அறத்தான் வருவதே இன்பம்!
      எழுத்துப் பிழையில், அத்தான் வருவதே இன்பம்-ன்னு எழுதுங்க!:))))
      தானே சிரிச்சி, மாத்திப்பாய்ங்க!

      *அடிப்படை இலக்கணம்= அசையாது இருந்தால் போதும்
      *அதைச் சுற்றிப் பலதும், காலத்துக்கேற்று மாறுபடும்!

      ஆங்கிலமும் அப்படியே! There is = Therez ஆகி விட்டது:)
      தமிழிலும், ஃ ஒலி, f கிடையாது! ஆனால் ஃபோட்டோ -னு எழுதுறாங்க!
      ஓரளவு தான் சொல்ல முடியும்! காலத்தால் நிற்பது எதுவோ, அதுவே அக்கால முறைமை ஆகிவிடும் என்பது இயற்கை விதி!

      எனவே
      *சட்டாம்பிள்ளைத் தனங்கள்= தமிழுக்கு உதவாது!
      *பயில்தலும், புரிதலும், அரவணைத்தலுமே = உதவும்!
      *எள்ளல் = உதவவே உதவாது!

      Delete
    2. இ.பு.ஞானபிரகாசம்,

      //அதாவது, வையகத்தின் மற்ற பகுதிகளில் நீர் விலகி, கல் வெளிப்பட்டு, பின் அது உடைந்து மண்ணாவதற்கு முன்பே ஆயுதங்களோடு வாழ்ந்த மக்கள் இவர்கள் எனவும் இதற்குப் பொருள் கொள்ளலாமா//

      அதை தாங்க நானும் சொல்லி இருக்கேன், கே.ஆர்.எஸ் நேராக திணை உருவாச்சு என சொல்கிறார்,நாம கல் இல் இருந்து மண் உருவான காலத்துக்கு இடையிலே தோன்றிய மனிதன் என்கிறோம் அவ்ளோ தான்.

      கற்காலத்தில் மனிதன் விவசாயம் செய்திருக்க வாய்ப்பேயில்லை ,அதனை அறியவும் இல்லை ,எனவே அக்காலத்தில் விவசாய நிலம் இல்லை எனவே மருத திணை இருக்கவும் வாய்ப்பில்லை ,எனவே மருதம் தோன்றும் முன்னரே உருவான மனிதன் எனவும் சொல்லிக்கலாம்..

      Delete
    3. ஓ அப்படியா! சரி வவ்வாலரே, நம்முடைய இந்தக் கருத்துக்குக் கண்ணபிரான் என்ன பதிலளிக்கிறார் எனப் பார்ப்போம். சுவையான இந்தக் கேள்விக்கு அவருடைய பதில் இன்னும் சுவையாகவே இருக்கும் என்பதால் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அவர் தற்பொழுது பயணத்தில் இருக்கிறாராம். கொஞ்சம் ஓய்வு கிடைத்ததும் பதிலளிக்கட்டும், காத்திருப்போம்!

      Delete
  23. சுவையான விளக்கம்.ஆனால் என் மனதுக்கு இது உயர்வு நவிற்சி என்றே தோன்றுகிறது. வள்ளுவர் கூட "கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப் பெய்யும் மழை" என்கிறார். அதனால் அவர் என்ன அறிவு இல்லாதவரா ?

    ReplyDelete
  24. இங்கு பதிவிடுவதற்கு மன்னிக்கவும்

    ......................................................



    வணக்கம் நாங்கள் பூச்சரம் எனும் தளம்,

    தமிழ் பிளாக்ஸ்பாட்களில் வழக்காமாக பயன்படுத்தும் எழுத்துருக்களுக்கு பதில் இணையுரு (WebFont) எழுத்துக்களை பயன்படுத்த எந்த நாங்கள் வசதி ஒன்றை அளிக்கிறோம். இது முழுக்க முழுக்க இலவசம் தான். தமிழ் பிளாக் ஸ்பாட் தளங்களை ஆங்கில தளங்கள் போன்று உருவத்திலும், அழகிலும் உயர்த்தவேண்டும் என்ற எண்ணம் தான் உங்களை நாங்களே இதுபோன்று அணுக வைத்துள்ளது.

    - இணையுரு (WebFont) என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

    - இதை பயன்படுத்துவதால் நம்முடைய பிளாக் ஸ்பாட்டிற்கு ஏதேனும் தீங்கு ஏற்படுமோ?

    - இது அவர்களுடைய தளத்தை விளம்பரப்படுத்த செய்யப்படும் உத்தியோ?

    - அவர்களாகவே தானாக வந்து உதவுவதாக சொல்வதில் ஏதேனும் பிரச்சனை இருக்குமோ?

    என்றெல்லாம் உங்கள் மனதில் நிச்சயம் கேள்விகள் எழும். அவ்வாறு தாங்கள் பயப்படவோ அல்லது ஐயமுறவோ தேவையில்லை. 100% எங்களை நம்பலாம். நாங்கள் கீழே கொடுத்துள்ள பதிவை பாருங்கள் உண்மை விளங்கும்.

    தமிழ் கணிமையை (Tamil Computing) வளர்ச்சியுறும் நோக்கில் தான் நாங்கள் செயல்படுகிறோம். மற்ற மொழியினர் இதுபோன்ற வசதிகளை எப்போதே செய்துவிட்டனர், ஆனால் நாம் இந்த வசதியை இப்போது தான் இந்த பதிவில் படித்துகொண்டு இருக்கிறோம். மற்றமொழிகளை போல நம் மொழியையும் அழகாக வைத்துகொள்ள வேண்டுமல்லவா?...

    சும்மா... பேச்சுக்கு தமிழ் அழகு என்று சொல்வதை காட்டிலும் செய்து காட்டுவதை தான் நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.

    இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி பிளாக்ஸ்பாட் இதோ பாருங்கள். http://poocharamtamilforum.blogspot.in/2014/05/this-is-sample-post.html

    இதோ இணையுருக்கள் எவ்வாறு இணைப்பது என்பதை பற்றிய கட்டுரை

    1) http://poocharam.net/viewtopic.php?f=57&t=1891

    2) http://poocharam.net/viewtopic.php?f=57&t=2053



    (அல்லது)

    1) http://puthutamilan.blogspot.in/2014/05/blog-post_14.html

    2) http://puthutamilan.blogspot.in/2014/05/webfont-2.html



    மேலும் ஏதேனும் உங்களுக்கு உதவியோ அல்லது ஐயமோ ஏற்பட்டால் தயங்காமல் rashlak@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது எங்கள் தள இடுகையிலோ அல்லது பிளாக்ஸ்பாட் இடுகையிலோ கேட்கலாம்.



    நன்றி மற்றும் வணக்கம்

    ராஜு.சரவணன்



    படித்தவுடன் இதை நீக்கிவிடவும்

    ReplyDelete
  25. தொல்காப்பியர், ஐந்திணைகளைக் குறிப்பிடும் போது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற வரிசையில் குறிப்பிடாமல் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று குறிப்பிடுவார்...தொல்காப்பியர் குறிப்பிட்ட வரிசையையும் 'கல் தோன்றி மண் தோன்றா' என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கத்தையும் பொருத்திப் பார்க்க முடிகிறது...ஆகையால், தொல்காப்பியர் குறிப்பிடும் வரிசை தமிழரின் நாகரிக வளர்ச்சியின் வரலாற்றைக் குறிப்பதாக இருக்கிறது என்பதற்கு வலு சேர்க்கிறது...

    ReplyDelete
  26. பேரன்பிற்கும் தனிப்பெருமதிப்பிற்கும் உரிய கண்ணபிரான் அவர்களே! பதிவுலகில் புதுக்குருதி பாய்ச்சி வரும் 'பன்முகப் பதிவர்' விருதைச் சிறியேன் பணிவன்போடு தங்களுடன் பகிர்ந்துள்ளேன்!

    தங்களுக்கு விருதளிக்கும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை. ஆனால் தகுதியைப் பாராமல், என் அன்பையும், தங்கள் எழுத்துக்கள் மீதான என் விருப்பம், மதிப்பு ஆகியவற்றையும் மட்டும் பார்த்து, சிறியவன் பகிரும் இந்த விருதினைப் பேருள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்!

    விருதினை ஏற்கவும் மேலும் விவரங்களுக்கும் http://agasivapputhamizh.blogspot.com/2014/09/drop-of-award-fell-on-me.html எனும் முகவரியிலுள்ள பதிவைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

    நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  27. நல்ல விளக்கம் கண்ணபிரான்..பண்டிதாள்' எல்லாம் லூஸ்ல விட்டு போயிட்டே இருக்க வேண்டியதுதான்..கொஞ்சம் இடத்தைக் கொடுத்தா மடத்தப் பிடிப்பாங்க.

    ReplyDelete
  28. அருமையான விளக்கம் போரடிக்காமல் தமிழை தெளிவாக சொல்லுகிறீர்கள் தொடரட்டும்... :)

    ReplyDelete
  29. என்ன ஐயா, இதற்கு அப்புறம் நீங்கள் பதிவே எழுதவில்லையே! எங்களையெல்லாம் மறந்து விட்டீர்களா? உங்கள் ஆய்வுத்தரம் மிகுந்த தமிழமுதைச் சுவைக்க நாங்கள் இன்னும் எத்தனை நாள் அருந்துயில் (தவம்) இருக்க வேண்டும்?

    ReplyDelete
  30. முருகா நீங்க நல்லாருக்கனும்... நீண்ட ஆயுளோட.. நல்ல ஆரோக்கியத்தோட... வாழ்க ��

    ReplyDelete
  31. அருமையான விளக்கம். நன்றி அய்யா.
    உயர்வு நவிர்ச்சி அணியாகவும் எடுத்துக்கொள்ளலாம் அல்லவா?

    ReplyDelete
  32. Took me to 10std Tamil class. Good one

    ReplyDelete
  33. Enaku oru Kelvi, thonrivittal dhane apadi onnu irukune therium, ipa kal thonri mannum thonralai na epdi adhu thonruvadharku munne nu therium.
    malai, vayal, aaru ellam pirandha aparam dhane namma kurinji marudham mulai neidhal paalai nu vagaipaduthunom.
    Adhu uruve aagadhapo epdi orutharala adhellem illadhapave epdi adha pathi solla mudium.
    na thappa purinjirukena?

    Dhayai koorndhu vilakkavum

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP