Friday, November 30, 2007

திருக்கோவிலூர்: பொன்னார் மேனியனே! பொய் சொன்னாரோ ஆழ்வாரே?

பொன்மேனி கண்டேன்-னு பாடிய ஆழ்வார், பொய் சொன்னாரா என்ன? "பொன்னார் மேனியனே" - சிவபெருமான் ஆயிற்றே!
வந்திருப்பதோ நீலமேனி வண்ணன், நாராணன் தானே! நீலமேனி எப்பய்யா பொன்மேனி ஆச்சு? முந்தைய பதிவு இங்கே!

நீலமேகக் கல்-னு ஒரு ரத்தினக் கல் இருக்கு! அது உண்மையான கல்லு தானா என்பதை எப்படிச் சோதனை செய்வது? அதை எடுத்துப் பாலில் போடணும்! போட்டா, முழுப் பாலும் அப்படியே, உஜாலா சொட்டு நீலம் கணக்கா நீலமா மாறிடும்!
அது போல், அன்னை மகாலக்ஷ்மி விலை மதிப்பில்லா பொன் "மணி"! மணிகளுள் அவள் பெண் "மணி"!
ஹிரண்யவர்ணீம் என்று அவளைப் பொன்மயமாகத் தான் சொல்கிறார்கள்.

அன்பர்கள் எல்லாம் இறைவனைச் சேவிக்க வருகிறார்கள். அவர்கள் தொலைவில் வரும் போதே, அவர்களையெல்லாம் இவள் பார்த்து விடுகிறாள். தன் குழந்தையின் வருகையைத் தெருக்கோடியிலேயே காணும் ஒரு தாய் போல, அவன் திருமார்பில் இருந்து எட்டி எட்டிப் பார்க்கிறாள்!

கைத்தாங்கலாக, அவன் மார்பிலும் கை வைத்து இன்னும் எட்டிப் பார்க்க.......அவள் தீண்டிய அடுத்த நிமிடம், அந்தக் கருப்பனும் வெளுப்பன் ஆகி விட்டான்!
நீலமேனியாய் இருந்தவன், அவள் பொன்னான ஸ்பரிசம் பட்டு, தகதக என்று ஜொலிக்க ஆரம்பித்து விட்டான்! நீலமேகக் கல் பட்டவுடன், பால் நீலமானதைப் போல், இவனும் பொன் மயமாகி விட்டான்!

அதான் திருக்கண்டேன்-னு அன்னையை முதலில் பார்த்த ஆழ்வார், உடனே அடுத்து பொன்மேனி கண்டேன்-னு சொல்லிட்டார்.
பொருள் அல்லவரையும் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்!
பொருட் செல்வம் தரும் திருமகள், அவனையும் ஒரு பொருளாகச் செய்து விட்டாள்!
இப்படி மனைவியின் மகிமையால், அவனுடைய குடும்ப கலர் போய், நல்லா செவ செவன்னு, என்னமா கலரு ஆயிட்டான் ! :-)
அதான் அருக்கண் "அணி" நிறமும் கண்டேன்-னு உண்மையைப் போட்டு உடைக்கறாரு!
அவன் கையில் பொன்னாழி என்னும் சக்கரம் கண்டேன்!
புரிசங்கம் என்னும் வலம்புரிச் சங்கு கண்டேன்!
என் ஆழிவண்ணன் பால் இன்று! - என்று பாடி முடிக்கிறார்!

இப்படி மூவருக்கும் நெருக்கி, நெருக்கி, கும்மிருட்டில் காட்சி கொடுத்தான் இறைவன்!
அவர்களும் புறத்தூய்மை, அகத்தூய்மை என்னும் இரு விளக்குகளும் ஏற்றினார்கள்; அதனால், அவனைக் காணப் பெற்றார்கள்!
இடைக்கழியில் (தேகளியில்) தோன்றியதால் தேகளீசன் என்ற இன்னொரு பெயர், திருக்கோவிலூர் பெருமாளுக்கு!

பொதுவா கோயில்களில், பெருமாள் நின்னுக்கிட்டு இருப்பார்! இல்லை உட்கார்ந்துகிட்டு இருப்பார்! இல்லை படுத்த வண்ணம் இருப்பார்!
நின்றான், இருந்தான், கிடந்தான் என்று இந்தத் திருக்கோலங்களைச் சொல்லுவாங்க!

ஆனா இது இல்லாம, நடந்தான்-னு இன்னொரு கோலமும் இருக்கு! அதாச்சும் காலைத் தூக்கி நடக்குறா மாதிரி ஒரு போஸ்! அந்தக் கோலத்தைக் காண்பது மிகவும் அரிது! ஓரிரண்டு ஆலயங்கள் மட்டும் தான்!
அதில் திருக்கோவிலூர் மிக முக்கியமான ஒன்று!




பொய்கையாழ்வார் ஒரு நூறு வெண்பாவும்,
அதே போல் பூதத்தாழ்வார் ஒரு நூறு, பேயாழ்வார் ஒரு நூறும் பாடினர்.
- இந்த முன்னூறும் தான் தமிழ் வேதங்களின் துவக்கம்!
- அது துவங்கிய இடம்-னு புண்ணியம் கட்டிக் கொண்ட ஊர் திருக்கோவிலூர்!

இன்றும் திருக்கோவிலூர் முதலான எல்லா வைணவ ஆலயங்களிலும் தமிழ் வேதத்தை ஓதுகிறார்கள். அதற்கு இயற் சாற்று என்று பெயர்! வெண்பாவை நீட்டி முழக்கிச் சொல்லும் போது, எழும் செப்பல் ஓசை அனைவரையும் மயங்க வைக்கும்! செப்பல் ஓசை, அகவல் ஓசைன்னா என்னான்னு வெண்பா வாத்தி கிட்ட கேளுங்க! :-)

தமிழ் வேதங்களுக்குப் பேதம் என்பதே இல்லை! - மனிதனுக்கும் அது பேதம் வைக்கவில்லை! இறைவனுக்கும் அது பேதம் வைக்கவில்லை!பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று தான் சொல்லிற்று! சிவனையும் சேர்த்தே போற்றிற்று!

வடமொழி வேதங்களை இன்ன இன்ன ஆட்கள், இன்ன இன்ன காலங்களில், இப்படி இப்படித் தான் ஓத வேண்டும் என்று நெறிமுறைகள் இருக்கு!
ஆனால் தமிழ் வேதம் அப்படி இல்லை!
ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் ஓதலாம்! - எந்தச் சாதியினரும், எந்த வேளையிலும் ஓதலாம்!


அந்தத் தமிழ் வேதங்களைச் செய்த ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேரில், ஒன்பது பேர் மற்ற குலங்களில் இருந்து வந்தவர்கள்!
இவர்கள் செய்து வைத்த வேதத்தைப், பெருமாள் கோவில்களில், உயர் குலம் என்று சொல்லிக் கொண்டவர்கள் இன்றும் ஓதிக் கொண்டு தான் உள்ளனர்!
வேள்விகள், பூசைகள், சடங்குகள் - இது எல்லாம் கடந்தது தான் தமிழ் வேதம்! இதற்கு ஒப்பும் இல்லை! மிக்கும் இல்லை!


சரி...வந்தது வந்தோம்...திருக்கோவிலூரை ஒரு ரவுண்டு சுத்திப் பாக்கலாமா? நண்பர் செந்தழல் ரவி, பல படங்களை அனுப்பி இருக்காரு! - நன்றி தல!
ஆனா ரவிக்கு முன்னாடியே திருமங்கை-ன்னு இன்னொரு நண்பர் வீடியோ அனுப்பி இருக்காரு! அவர் கிட்ட காமிரா இல்லையாம்! அதுனால பாட்டுலயே படம் புடிச்சி அனுப்பி வைச்சிருக்காரு! :-)

திருக்கோவல் ஊருல தென்பெண்ணை ஆறு ஓடுது! வயல்-ல கரும்பு போட்டு இருக்காங்க! புன்னை மரம் வேற எங்க பாத்தாலும்!
வண்டு உய்ங்க் உய்ங்க்-னு பறந்து பாட்டு பாட, கரும்பும் அதைக் கேட்டு, தலைய ஆட்டி ஆட்டித் தூங்குதாம் திருக்கோவலூரில்!
ஆங்குஅரும்பிக் கண்ணீர் சோர்ந்துஅன்பு கூரும்
அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை,
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலைக்
குழாவரி வண்டுஇசை படும்பாடல் கேட்டு
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே

-திருமங்கை ஆழ்வார் பாசுரம்.

திருக்கோவிலூர் பெருமாள் ஓவியத்தையும், திருவிக்ரம சுவாமி கோவிலைப் பற்றியும் கொஞ்சமாப் போன பதிவிலேயே பாத்தாச்சு!
பார்ப்பனர் அல்லாதாரும் ஜீயராக/மடத் தலைவராகவும் வரமுடியும் என்பதற்கு இந்த ஊரே சான்று-ன்னும் சொல்லி இருந்தேன்!

திருக்கோவிலூர்ல புகழ் பெற்ற சிவன் கோவிலும் இருக்கு! வீரட்டானத் தலங்களுள் ஒன்று! சிவானந்த வல்லி என்பது இறைவியின் பெயர்! மெய்ப்பொருள் நாயனாரின் சமாதி உள்ள இடமும் கூட! சிவ வேடம் போட்டுக் கொண்டு, கொல்ல வந்தவன் கிட்டேயும் அன்பு காட்டிய நாயனார் அவர்!
இன்னும் கிட்டக்க அறையணி நல்லூர்-னு இன்னொரு சிவாலயம்! இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் நிரம்பி உள்ள ஊர்!

பக்கத்தில் ஞானாந்த சுவாமிகளின் தபோவனம்! அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு விருந்து செய்த மகான்...சென்ற பதிவில் செந்தழலார் பின்னூட்டங்களைப் படிங்க! நிறைய குறிப்பு கொடுத்திருக்காரு!

உத்தராதி மடத்தின் குருவான ரகோத்தம சுவாமிகளின் பிருந்தாவனமும் அருகே தான் - மணம்பூண்டியில்!



இன்னும் சற்றுத் தொலைவில், ஆதித் திருவரங்கம் என்னும் தலம்! மிகப் பெரிய அரங்கனின் உருவம் இங்கு தான்!

அனைத்துக்கும் மேலாய், பாரியின் நட்புக்காக தன் உயிரையே கொடுத்த தமிழ்ச் செம்மல் கபிலர் - அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பாறையும், கபிலர் குன்றாய், பெண்ணையாற்றில்!
இன்னும் அருகே பரனூர் என்னும் ஊரு - பரனூர் அண்ணா, கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் தமிழில் ஆற்றொழுக்காய், அருளுரைகள் ஆற்றும் ஊர்! சீர்காழி, சிதம்பரம்-னு....திருக்கோவிலூரைப் புடிச்சாப் போதும், ஒரு ஃபுல் ரவுண்டு வந்துடலாம்!

எல்லாத்த விட முக்கியமான ஒரு இடம் இருக்கு.....திருக்கோவிலூர் பக்கத்துல தான்! - அங்க, பெருமாளுக்கு விபூதி பூசுறாங்க!
வைணவ பக்தர்களும், பெருமாள் விபூதி பூசிக்கறத பார்த்து, தாங்களும் திருநீறு பூசிக்கறாங்கோவ்! - ஆனா அத வேற ஒரு பதிவுல பார்க்கலாம்!
அது வரை வர்ட்டா ஸ்டைலில் வரட்டா? :-)

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, இத்துடன் திருக்கோவிலூர் பதிவுகள் நிறைந்தன....

Read more »

Tuesday, November 20, 2007

கைசிகப் புரட்சி! "கீழ்க்குலத்தான்" அந்தணனுக்குக் காட்டிய வழி! (மீள்பதிவு)

கீழ்க்குலம் என்று சொல்லப்பட்ட ஒருவன், அந்தணன் ஒருவனுக்கு நல்வழி காட்டினான் என்று போயும் போயும் இந்து புராணங்கள் சொல்லுமா? :-)
இன்று கைசிக ஏகாதசி (Nov-21, 2007). ஒவ்வொரு கார்த்திகை மாதம் வளர்பிறையின் போது வருவது!

சரி, இதில் என்ன புரட்சி என்று கேக்கறீங்களா? கொஞ்சம் பொறுங்க!
ஏதோ நான்கு வருணங்கள் என்று சொல்கிறார்களே, அதற்கும் தாழ்ந்ததாகக் கருதப்பட்ட குலம்! சண்டாளன்!!
அக்குலத்தில் பிறந்த ஒருவன் வழிகாட்ட, பிராமணன் ஒருவன், சாபம் நீங்கி முக்தி அடைந்தான்! - இப்போது சொல்லுங்கள் இது புரட்சியா என்று!

தொட்டதற்கு எல்லாம் புரட்சி, புரட்சி என்று சொல்லும் அரசியல் காலம் இது; ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு? அதுவும் இதைப் பற்றிய குறிப்பு, மிகப் பழமையான வராகப் புராணத்தில் வருகிறது என்றால்....
நம்ப முடியவில்லையா? மேலே படியுங்கள்!!
அவன் பேரே நம்பாடுவான்; நம்+பாடுவான்; பிறந்ததோ பஞ்சமர் குலம்!

வைணவத்துக்குப் பெருமை சேர்த்தவர்களை எல்லாம் "நம்" என்று சொல்லிக் கொண்டாடுவது வழக்கம். நம்மாழ்வார், நம்ஜீயர், நம்பிள்ளை, அவ்வளவு ஏன் இறைவனை "நம்பெருமாள்" என்றே அழைக்கின்றனர்! அதே போல் நம்பாடுவான்! அவன் பாடுவது கைசிகப் பண்; இது ஒரு தமிழ்ப்பண்; பைரவி ராகம் போல ஒலிக்கும்!

இப்போதுள்ள நெல்லை மாவட்டம், நாங்குநேரிக்கு அருகில் உள்ள ஊர் திருக்குறுங்குடி; 108 திவ்ய தேசத்தில் ஒன்று! பெருமாளை நம்பி என்று தான் அழைக்கிறார்கள் இங்கு!
இங்கு வாழ்ந்த நம்பாடுவான், தனது யாழினால் பெருமாளைப் பாடி, இசைத்து வணங்கியவன்.

குறுங்குடி நம்பி


அரையர் சேவை

அன்று ஒரு நாள், ஏகாதசி. இரவுப் பூசைக்கு பெருமானைப் பாடி வணங்கக் கோவிலுக்குச் சென்றான். வழியிலும் பாடிக் கொண்டே சென்றதால் அவன் எதிரில் வந்து நிற்கும் பயங்கரத்தை முதலில் கவனிக்க வில்லை!
ஹா ஹா ஹா என்ற ஒரு நடுங்க வைக்கும் பேய்க்குரல்;
என்ன என்று பார்த்தால் எதிரில் ஒரு பெரும் பேய்; பிரம்ம ராட்சசன்!!

அந்தணனாகவோ இல்லை உயர் பொறுப்பிலோ இருந்து, ஆனால் மதி கெட்டு, தகாத செயல்களைச் செய்வோர் தான் சாபம் பெற்று இப்படி ஆவார்கள்! நம்பாடுவானை பிடித்துக் கொண்டான் ராட்சசன்;
ராட்சசன்: அடே, பாடிக் கொண்டா போகிறாய்? சரியான பசி எனக்கு; உன்னைக் கொன்று தின்றால் தான் என் பசி அடங்கும், வா...!
நம்பாடுவான்: இன்று ஏகாதசி அல்லவா?....
ராட்சசன்: அடே மூடா, உபவாசம் எல்லாம் பேய்க்கு ஏது?"

உயிர் போவது பற்றி நம்பாடுவான் கவலைப் படவில்லை;
வந்து வழிவழி ஆட்செய்கின்ற ஏகாதசி பூசையில், பெருமாளைப் பாடுவது நின்று போகிறதே என்று தான் வருந்தினான்;
நம்பாடுவான்: அடியார்கள் எல்லாம் பாட்டுடன் பூசிக்கக் காத்து இருப்பார்கள்; அவர்கள் எல்லாரும் ஏமாந்து போவார்களே! நான் பூசித்து வந்து விடுகிறேன்; பின்னர் என்னைப் புசித்துக் கொள்கிறாயா?
ராட்சசன்: "டேய், மானிட வாக்கைப் பேய் கூட நம்பாது!"

என்ன செய்வான் நம்பாடுவான்? பண்ணிசைத்துப் பரமனைப் பாடினான்.இசை என்றால் பேயும் இரங்காதோ? அவனைக் கோவிலுக்குச் செல்ல அனுமதித்தது.
ஓட்டமாய் ஓடினான்; கோவிலுக்குச் சென்று கண்கலங்கி வணங்கினான்; கடைசி வணக்கம் ஆயிற்றே!
அடியார்களின் உள்ளம் எல்லாம் அவன் பாடிய கைசிகப் பண்ணில் கரைந்து போனது; பெருமாளுக்குத் திவ்ய மங்கள கற்பூர ஆரத்தி.

தீர்த்தம் பெற்றுத், திரும்பி வருகிறான் நம்பாடுவான். வழியில் ஒரு கிழவர்!
வேறு யார்? நம் குறுங்குடிப் பெருமாள் தான்!
"நம்பாடுவானே, நான் ஒரு ஞானி; எனக்கு எல்லாம் தெரியும்; ஆபத்துக்குப் பாவமில்லை! நீ தப்பிச் சென்று விடு", என்று ஆசை காட்டினார் கிழவர்!
நம்பாடுவான்: "என்ன சொன்னீர்கள் தாத்தா? பெருமாளின் இசைக்குப் பேயே இரங்கி, என்னை நம்பி அனுப்பியது; நான் ஏமாற்றலாமா? அடியான் சொன்ன சொல் தவறலாமா?"

விடுவிடு என்று பிரம்ம ராட்சசனிடம் வந்து சேர்ந்தான். "பேயே, பயந்து விட்டாயா ஏமாற்றி விடுவேன் என்று? இதோ வாக்கு மாறவில்லை! புசித்துக் கொள்", என்று சொன்னான். சதா ஏமாற்றும் மானிடர்களையே கண்ட அது, இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
மனம் மாறியது பேய்! இசைக்காகத் தான் போனால் போகட்டும் என்று அவனை முதலில் விட்டது!

ராட்சசன்: "உன்னைக் கொல்ல எனக்கு மனமே வரவில்லை. நீ கைசிகப் பண்ணில் பாடியதின் புண்ணியத்தை எனக்குக் கொடுத்து விடு! எனக்கு ஒரு நல்ல வழி காட்டு" என்று தன் பழைய கதையைச் சொல்லி மன்றாடிக் கேட்டது.
நான் பெற்ற பேறு, இவ்வையகமும் பெறுக என நினைக்கும் நல்ல மனசு கொண்ட வைணவ அடியான் அல்லவா நம்பாடுவான்!

"சரி நீயே விரும்பிக் கேட்பதால், கடைத்தேற இதோ", என்று தன்னுடைய புண்ணிய பலனைத் தாரை வார்த்துக் கொடுத்தான். பிரம்ம ராட்சசனாக சபிக்கப்பட்டிருந்த அந்தணன், சாபம் நீங்கினான்;
"கீழ்க்குல" நம்பாடுவானை அந்த "அந்தணன்" விழுந்து வணங்கி, இறைவனின் திருவடிகளைப் பற்றி, மேல் நாடு அடைந்தான்.




(Re-enactment)

ஆண்டுதோறும் திருக்குறுங்குடி கோவிலில் இது நாடகமாக நடிக்கப்படுகிறது! (Re-enactment) . இதற்கான பெரும் முயற்சிகளை டிவிஎஸ். அனிதா ரத்னம், கூத்துப் பட்டறை சா.முத்துசாமி, பேராசிரியர் ராமானுஜம், துரைக்கண்ணு அம்மாள், இன்னும் பலர் செய்து கொடுத்துள்ளனர். இந்தக் கிராமியக் கலை பற்றி, இந்தச் சுட்டியில் காணலாம்!

இன்று திருவரங்கத்தில் பெருமாள் முன்னேயும் இக்கதை படிக்கப்படுகிறது! இப்படிப் பாடி நடிப்பதை, அரையர் சேவை என்று சொல்லுவார்கள்!
இந்தப் புரட்சிக்கு, ஆரவாரம் ஆடம்பரம் எதுவும் இல்லை!
விளம்பரங்கள்/போஸ்டர் ஒட்டி, வழியெல்லாம் தோரணம் கட்டி, "புரட்சி செய்தேன், புரட்சி செய்தேன்" என்றெல்லாம் ஆடாமல்,
இறைவனின் முன்னால், ஆழ்ந்த மனத்துடன், கொண்டாடுகிறார்கள்!

இறைவனைத் துதிக்கச் சாதியில்லை!
அடியவர் குழாங்களில், வந்து வழிவழி ஆட்செய்வது ஒன்றே போற்றப்படும்! இதை உறுதியாக விதித்து நடைமுறையும் படுத்தியவர் ராமானுஜர்!
என்ன தான் வேதம் ஓதினாலும், அந்தணர்கள் என்று கூறிக்கொண்டாலும்,
அடியவர்களைப் பழித்துப் பேசினாலோ, இல்லை சாதி வித்தியாசம் பாராட்டினாலோ, அவர்கள் தான் புலையரை விடக் கீழானவர்கள் என்று சாடுகிறார்!
யார் தெரியுமா? அந்தணர் குலத்தில் பிறந்த தொண்டரடிப்பொடி ஆழ்வார்! இதுவல்லவோ செயலில் புரட்சி!

அமர ஓர் அங்கம் ஆறும், வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய சாதி அந்தணர்கள் ஏலும்,
நுமர்களைப் பழிப்பார் ஆகில் நொடிப்பதுஓர் அளவில் ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகர் உளானே


இந்த ஏகாதசி நாளில் இக்கதையை பார்ப்பதும், படிப்பதும், படிக்கப் பக்கம் நின்று கேட்பதும், மிகவும் புண்ணியம் தரும் என்று அருளி உள்ளார்கள் நம் பெரியவர்கள்!
வாருங்கள், நாமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திப்போம்!
(சென்ற ஆண்டு, கைசிக ஏகாதசிக்கு இட்ட பதிவை, மீள்பதிவாக இடுகிறேன்...இந்த ஆண்டும்! - பழைய பதிவுக்கும், பின்னூட்டக் கருத்துகளுக்கும் க்ளிக்கவும்)

Read more »

திருக்கோவிலூர்: தமிழ் வேதம் பொய் சொல்லுமா? - 2

ஒருவர் படுக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க....இப்போ நால்வர் நெருக்க,
என்னவென்றே புரியவில்லை மூவருக்கும்! நெருக்குதல் அதிகரிக்க அதிகரிக்க, மூவருக்கும் மூச்சு முட்டுகிறது! அந்த அடைமழையிலும், குளிரிலும் கூட வேர்க்கிறது! திருட்டுப் பயமோ திருக்கோவிலூரில்? முந்தைய பதிவு இங்கே!

யாருப்பா அந்த அறிவு கெட்ட திருடன்? ஒன்றுமே இல்லாத அன்னாடங்காச்சிகள் கிட்டயா திருட வருவான்? வந்தது தான் வந்தான்! இப்படியா சத்தம் போடாமல் வருவது? ஆய்..ஊய் என்று சத்தம் போட்டு மிரட்டிக் கொண்டு வரலாமே! கும்மிருட்டில் ஆளும் சரியாத் தெரியலையே!
ஓசையும் இல்லை! ஒளியும் இல்லை!

பேய்: இது ஏதோ மனித வாசனை மாதிரியே தெரியல்லையே! மிருகமும் இல்லை! விளக்கு கிடைச்சாலாச்சும் யாருன்னு கண்டுபிடிக்கலாம்! இந்த அர்த்த ஜாமத்தில் யாரிடம் போய் விளக்கு கேட்பது?
(ஹூம்...பிற்கால மனிதர்களா இருந்தா பாக்கெட்டிலேயே நெருப்பு வைத்துக் கொண்டு, உலா வருவாங்க! ஆனா அப்போ தொழில் நுட்பம் அவ்வளவு நுட்பமா இல்லையே! என்ன செய்ய :-)

பூதம்: ஹூம்! இது தான் சரி! நம் யோகத்தில் நாமே ஒரு விளக்கேற்றலாம்!
விளங்க முடியாததைக் கூடி விளக்கிக் காட்டுவது தானே விளக்கு! - அதுக்குத் தானே விளக்கு-ன்னே பெயர்!
நாமே ஏற்றலாம்! பார்ப்போம் ஏதாச்சும் தெரிகிறதா என்று! சரி, எதை வச்சி ஏற்றுவது?
அகல் இல்லை, எண்ணெய் இல்லை, திரி இல்லை, நெருப்பு இல்லை!

பொய்கை: இல்லை இல்லை என்பதை வைத்துக் கொண்டு என்ன விளக்கு ஏற்றுவது?
இல்லை-யை வைத்துக் கொண்டு ஏதாச்சும் ஏற்ற முடியுமா? முடியும்!!
எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - இந்த "இல்லை இல்லை"-யை வைத்துக் கொண்டு ஏற்ற முடியுமே!

எதுவும் எனது இல்லை, எதுவும் எனது இல்லை! - எல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டது! என் ஆசைக்கோ, தகுதிக்கோ, செயலுக்கோ, முயற்சிக்கோ, கர்மாவிற்கோ, ஏதோ ஒன்றுக்காகக் கொடுக்கப்பட்டது!

யாராச்சும் பொருள் உருவாக்கினேன், புகழ் உருவாக்கினேன்-னு சொல்லுறாங்களா?
பொருள் கிடைச்சுது, புகழ் கிடைச்சுது! செல்வம் அடைந்தேன், செருக்கு அடைந்தேன் - ன்னு தானே சொல்லுறாங்க! - இப்படி எல்லாமே, கிடைச்சதும் அடைஞ்சதும் தானே!

இப்படிச் சிந்தித்ததுமே, பொய்கையார் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரிக்கிறார்!
ஓம் நமோ நாராயணாய!
நமோ என்று சொல்லும் போது, நம என்றே அவருக்குத் தெரிகிறது!
ந ம
= ந (இல்லை) !
= ம (எனது)!!
= எனதில்லை! எனதில்லை!

ஓம் நமோ நாராயணாய = ஓம்! எனதில்லை! நாராயணனுடையது!
அனைத்தும் பரம்பொருள் தந்தது! அனைத்தும் பரம்பொருள் தந்தது!

ஆகா! தோன்றி விட்டது திவ்யப் பிரபந்தம்! தமிழ் வேதம்!
பொய்கையார் ஆனந்தக் கண்ணீர் பெருக்குகிறார்!
அவருக்கு உலகம் என்னும் நம்மைப் பற்றிய கவலை தான் நிறைய போல! - அதனால் "வையம்" என்றே துவங்குகிறார். - அரும்பெரும் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உலகம் என்னும் முதற் சொல் வைத்தே தொடங்குவது போல், வையம் என்ற சொல் தானாய் அமைந்து விட்டது, திவ்யப் பிரபந்தம் என்னும் பெருந்தமிழ் இலக்கியத்துக்கு!

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று!


உலகத்தை அகல் ஆக்கினேன், சூழ்ந்த கடலை நெய்யாக்கினேன்,
உயிர் காக்கும் கதிரவனை நெருப்பாக்கி்னேன்...
சக்கரம் ஏந்தியவன் திருவடிக்குச், சொல் மாலை சூட்டினேனே! மனித குலத்தின் இடர் என்னும் இருள் நீங்காதா?

முதல் விளக்கு ஏற்றியாகி விட்டது. அதன் ஒளி, இருளைக் கிழித்து விட்டது!
ஒரே ஒரு சுடர் போதாதா கும்மிருட்டை நீக்க! இனி ஏற்றிய விளக்கைக் காத்துக் கொள்ள வேண்டுமே!
விளக்கில் இருந்தே விளக்கு எடுக்கிறார் பூதத்தாழ்வார்!
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
ஞானச் சுடர்விளக் கேற்றினேன்! நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்


அன்பை வாழ்வைத் தாங்கும் அகல் ஆக்கினேன், இறைவனிடத்தில் ஆர்வம் ஒன்றையே நெய்யாக்கினேன்,
இன்பமாய் உருகி மகிழும் சிந்தனையையே திரியாக்கினேன்...
ஞான விளக்கு ஏற்றினேன்! நாராணனுக்கு ஞானத் தமிழில்(வேதம்) சொன்னேனே!
என்று அன்புக் கண்ணீர் பெருக, பூதத்தாழ்வார் ஏற்றி வைத்த இரண்டாம் விளக்கும் ஜொலிக்கின்றது!

(உலகத்தை ஒரு விளக்காகவும், அன்பை இன்னொரு விளக்காகவும் ஏன் ஆக்க வேண்டும்?
ஒன்றில் கதிரவனையும், இன்னொன்றில் நம் சிந்தனையையும் ஏன் திரியாகப் போட வேண்டும்?
முதல் விளக்கு புற அழுக்கு அகற்ற! - அதான் உலகமும், சூரியனும்!
இரண்டாம் விளக்கு அக அழுக்கு அகற்ற! - அதான் அன்பும், சிந்தனையும்!!

இறை தரிசனம் வேண்டும் என்றால், இந்த இரண்டு விளக்குகளும் ஏற்ற வேணும்!!!
இதையே முதலாழ்வார்கள் ஏற்றி நமக்கு வழி காட்டினார்கள்!)



முதல் இருவர் ஏற்றிய விளக்குகள்...மொத்தமாய் இருள் போக்கி விட்டன!
இப்போ நல்லாத் தெரியுது, அந்த நாலாம் ஆசாமி யார் என்று!
ஆகா...பெருந்திருடன் தான் அவன்! அடே...நீயா எங்களை இப்படிப் போட்டு நெருக்கித் தள்ளியது?

பொய்கையும், பூதமும் ஏற்றிய விளக்கின் ஒளியில், கடைசியா அங்கு வந்த பேயாழ்வார் அந்தக் கள்வனை அப்படியே வர்ணிக்கிறார்!
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று


விளக்கின் ஒளியில் முதலில் கண்ணில் பட்டது யார்? கடவுளா? இல்லை! - ஒரு பெண்! - ஆமாம்! கள்வனின் காதலி, அவன் மார்பில் இருக்கிறாள்! மின்தடை ஏற்பட்டு, பின்னர் வெளிச்சம் வந்ததும், குழந்தைக்கு ஆசையா விளையாடின விளையாட்டுச் சாமானா முதலில் தெரியும்?
இருள் நீங்கி, ஒளி கண்டதும், அம்மாஆஆஆ என்று தாயைத் தானே ஓடிப் போய்க் கட்டிக் கொள்ளும்!

ஒவ்வொரு பிறவியிலும் ஒவ்வொரு அன்னை நமக்குக் கிடைப்பார்கள்!ஆனால் எல்லாப் பிறவியிலும், வரும் ஒரே ஒரு அன்னை யார்?
அவளே இவள்! - திருக் கண்டேன் - உலகம் அனைத்துக்கும் அன்னை!
திரு! மகாலக்ஷ்மி! அவளைக் கண்டேன்!

திருக்கோவிலூர் எம்பெருமான், ஓங்கி உலகளந்த உத்தமன் கோலத்தில்!

பொன்மேனி கண்டேன்! - அடுத்து அப்பனைக் காண்கிறார்! தன் ஒப்பார் இல் அப்பன் - அவன் பொன் மேனியைப் கண்டேன்!

அட, ஆழ்வார் கூடப் பொய் சொல்வாரா என்ன?
பொன்மேனி சிவபிரானுக்கு உரியது ஆயிற்றே! பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு இசைத்து என்பதல்லவா பாட்டு!
பெருமாள் நீல மேனியன் ஆயிற்றே! நீலமேனி கண்டேன்னு தானே சொல்லணும்! - இவர் பெருமாளைப் போய் பொன்மேனி கண்டேன்-ன்னு சொல்லறாரே! ஒரு வேளை, விளக்கின் ஒளி போதவில்லையா என்ன?
பொய் விளக்கல்லவே இது!
மெய் விளக்க வந்த மெய் விளக்கு ஆயிற்றே! அப்பறம் எப்படி இப்படி?
(அடுத்த பகுதியில் நிறையும்)



இன்று கைசிக ஏகாதசி! (Nov 21, 2007)
தறி கெட்டுப் போன பார்ப்பனன் ஒருவனுக்கு, கீழ்க் குலத்தவன் ஒருவன், உபதேசம் செய்து, மோட்சத்துக்கு வழிகாட்டிய நாள்!
சென்ற ஆண்டு இது பற்றி விளக்கமாக, மாதவிப் பந்தலில் ஒரு பதிவு இட்டிருந்தேன்!
//இந்த ஆண்டு வேறு ஒரு திடீர் பதிவுக்குக் காத்திருங்கள்! :-)// - குமரனின் பரிசுப் பதிவு இன்னொரு நாள் வரணும்-னு இறைவன் திருவுள்ளம் போலும்! அடியேன் சென்ற ஆண்டு இட்ட பதிவை மீள் பதிவாக, சில நிமிடங்களில் இடுகிறேன்!

இந்நாளில், இறைவன் திருக்கதைகளைச் செவி குளிரக் கேட்பது, சிந்தைக்கு அமைதி தரும்!
முதலாழ்வார்கள் கதையை இன்று நன்னாளில் சொன்னதும் ஒரு சிறப்பு தான்!

Read more »

Wednesday, November 07, 2007

திருக்கோவிலூரில் பார்ப்பனர் அல்லாதாரும், பேயும் பூதமும்!

திருக்கோவிலூர்-ன்னு ஒரு ஊர் தமிழ்நாட்டில் இருக்குன்னாச்சும் நீங்க எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க! அந்த ஊரில் தான் பேய் பூதங்களின் ஆட்டம் பாட்டம்! - ஹிஹி...புரியலீங்களா?
சரி, அதுக்கு முன்னாடி திருக்கோவிலூர் மண்ணின் மகிமையைக் கொஞ்சம் பார்ப்போம், வாங்க! பார்த்தால், நீங்களும் கொஞ்சம் ஆடித் தான் போயிடுவீங்க!

ஒரு வைணவ மடத்தில், பார்ப்பனர் அல்லாதார் தான் தலைவர் (ஜீயர்).
அவரின் பல சீடர்களும் பார்ப்பனர் அல்லதார் தாம்!
தமிழில் ஆழ்வார் அருளிச் செயல்களையும், வடமொழி வேதங்களையும் பார்ப்பனர்களைக் காட்டிலும் சிறப்பாக ஓதுகிறார்கள்! சாதி வேறுபாடுகள் இன்றிக் கோவிலில் அர்ச்சகர் பணி செய்யவும் பயிற்சி அளிக்கப்படுகிறது!

ஜோசப் பாகவதர், புருசோத்தம நாயுடு என்று சில அன்பர்கள் காலட்சேபம் (அருட் பேருரை) செய்கிறார்கள்! அந்தக் கோஷ்டியில் (குழுவில்), பார்ப்பனர்களும் அமர்ந்து கொண்டு, இறைவனின் வைபவத்தைக் கேட்கிறார்கள்!
இந்த மடத்தை, மற்ற மடங்கள் மதித்து நடத்துகின்றன. மற்ற ஜீயர்களும், இந்த ஜீயரும் ஒன்றாகக் கைகோர்த்து சமூகப் பணிகள் செய்கிறார்கள்!

பல்லக்கில் சுவாமி உலாவின் போது, ஊர் மக்களே சாதி வித்தியாசம் இன்றி, நெருங்கிக் கொண்டாடுவதையும் படத்தில் காணலாம்!

இப்படி எல்லாம் செய்து விட்டு, புரட்சி புரட்சி என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்களா? ஆண்டுக்கு ஒரு முறை கொடி பிடித்து, வெற்றி விழாவில் வீரவாள் வழங்கிக் கொண்டு இருக்கிறார்களா?
வாய்ச்சொல் புரட்சியா? வாழ்வில் புரட்சியா? - எது வேண்டும்?

இறைப்பணி அமைதியாக நடைந்து கொண்டு தான் இருக்கிறது! இராமானுசர் வகுத்துக் கொடுத்த வழியில், வந்த ஆலய நிர்வாக ஜீயர்கள் இவர்கள்!
அரசின் அனைத்துச் சாதி அர்ச்சகர் திட்டங்கள் எல்லாம் இப்போது வந்தவை! ஆனால் ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, இப்படி ஒரு மெளனப் புரட்சி, நடந்து கொண்டு தான் இருக்கு!
இது எல்லாம் எந்த ஊர்-லன்னு கேட்கறீங்களா? பதிவின் தலைப்பைப் பாருங்க! :-)

1. தமிழ் வேதங்களான நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் தோன்றக் காரணமாக இருந்த ஊர் எது?

2. பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே-ன்னு கொல்ல வந்தவனிடத்தும் கருணை காட்டிய மெய்ப்பொருள் நாயனாரின் ஊர் எது?

3. மூவேந்தர்களின் சதியால், வள்ளல் பாரி கொலையுண்டான்! அவன் ஆருயிர் நண்பர் சங்கப் புலவர் கபிலர். பாரியின் மகள்கள் அங்கவை-சங்கவையைக் காப்பாற்றி, பல எதிர்ப்புகளையும் மீறி, "திருக்கோவிலூர்" மலையமானுக்கு மணம் முடித்தார்.
பின்னர் நட்பின் ஆழம் உந்த, தென்பெண்ணை ஆற்றுக் குன்றில், வடக்கிருந்து உயிர் துறந்தார்! இப்படி நட்புக்கு இலக்கணமான ஊர் எது?

4. சம்பந்தர், அப்பர் சுவாமிகள், அருணகிரிநாதர் போற்றிப் பாடிய வீரட்டானத் தலம் எது?

5. தபோவனம், ஞானாந்த சுவாமிகள் பக்தி-ஞான யோகங்களை ஒன்றாக்கிக் காட்டிய ஊர் எது?

6. பஞ்ச கிருஷ்ண தலங்களில் (ஐந்து கண்ணன் தலங்கள்) ஒன்றான ஊர் எது?

7. பெருமாள் சங்கை வலக்கையிலும், சக்கரத்தை இடக்கையிலும் மாற்றி வைத்து நிற்கும் வாமன அவதாரத் தலம் எது?




அத்தனைக்கும் ஒரே பதில் தான்!
திருக்கோவிலூர்! - திருக்கோவலூர் என்பது பழைய பெயர்!
(பூங் "கோவல்" நாச்சியார் என்ற அழகிய தமிழ்ப்பெயர் தாயாருக்கு! அந்தக் கோவல் என்ற பெயரில் தான், திருக்கோவலூர் என்று ஊர் பெயரும் முன்பு இருந்தது!

தமிழில் இருந்து கடன் வாங்கி, புஷ்பவல்லித் தாயார் என்று வடமொழிப் பெயர் ஆக்கினாலும், இன்றும் பூங்கோவல் நாச்சியார் என்று அழகிய தமிழில் தான் சொல்கிறார்கள்! பெருமாளின் பெயரும் தூய தமிழில் தான் இன்னும் இருக்கு - ஆயனார் என்னும் கோவலன்; உளகளந்த பெருமாள் ஆதலால் திரிவிக்ரமன்!)

புறநானூற்றிலும் திருக்கோவலூர் சொல்லப்படுகிறது! (முரண்மிகு கோவலூர் நூறி, நின்னிரண்டு திகிரி ஏந்திய தோளே) - 108 திவ்ய தேசங்களில் ஒன்று!!
எங்க கிராமத்துக்கு உண்டான ஜில்லா ஆபிஸ் (மாவட்ட அலுவலகம்) திருவண்ணாமலை. அதுக்கு அருகில் உள்ளது தான் இந்தத் தலம்!
கடலூர், விழுப்புரம் போன்ற ஊர்கள் இன்னும் கிட்டக்க! காவிரி, தென்பெண்ணை, பாலாறு என்று காவிரிக்கு அடுத்ததாக, இந்த ஊர் தென்பெண்ணை ஆற்றைத் தான் அடுக்குகிறான் பாரதி!

எதுக்கு திருக்கோவிலூருக்கு, இன்னிக்கி இவ்ளோ பில்டப்பு-ன்னு பாக்கறீங்களா? - அண்மையில் மூன்று பேருக்குப் பிறந்த நாள் வந்தது! (ஐப்பசியில் திருவோணம், அவிட்டம், சதயம்)
அவங்க மூன்று பேரு = பொய்கை, பூதம், பேய்!
அவங்க தான் முதன் முதலில் வந்த ஆழ்வார்கள்! முதலாழ்வார்கள் என்றே பெயர்! அவங்க மூவரும் ஒன்னா அருளிய பாட்டு தான், இன்னிக்கி Me the First! ஆக நிக்குது :-)
இப்படி தமிழ் வேதங்களுக்குக் காரணமான ஊர்-னு, திருக்கோவிலூர் பெயர் தட்டிக் கொண்டது!

திவ்யப் பிரபந்தம் எப்படி உருவாச்சு? அப்பறம் அது எப்படி மறைஞ்சி போச்சி?
திரும்பி எப்படிக் கிடைச்சது?
திருவரங்கத்தில் தமிழ் ஆட்சி மொழியானது எப்படி? - இப்படி ஒவ்வொரு கதையா இனிமேல் வரும் பதிவுகளில் பார்க்கலாம், வாங்க!




திருக்கோவிலூரில் அன்னிக்கி ஒரே அடை மழை! கும்மிருட்டு வேறு!
பெருமாளிடத்தில் மிகவும் ஆழ்ந்து போன பக்தர் ஒருவர் காஞ்சிபுரம்-திருவெக்கா என்னும் ஊரில் இருந்து புறப்பட்டு, திருக்கோவலூரை வந்து அடைகிறார்! அவர் பெயர் பொய்கையார்.

பொய்கை: உஷ்...அப்பாடா...உணவில்லாமல் ரொம்ப தூரம் நடந்து விட்டோமே! இங்கு சற்று ஓய்வெடுத்துப் போகலாம்! இதுக்கு மேல் மழையில் பயணம் செய்ய முடியாது!
உலகளந்த பெருமாள்-ன்னு இந்த ஊருக் கடவுளைச் சொல்றாங்க! உலகத்த அளந்தவரு, என்னைக்கி நம்ம மனத்தை அளக்கப் போறோரோ, தெரியலையே!

அது ஒரு பக்தரின் வீடு போலும்! எங்கு திரும்பினாலும் திருச்சின்னங்களை வரைந்து வைத்துள்ளார்கள்! அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறார்!
அந்த வீட்டு ஐயாவுக்கு, அதிர்ஷ்டமே தன் வீட்டுக் கதவைத் தட்டுது-ன்னு அப்ப தெரியலை போலும்! திவ்யப் பிரபந்தம் தன் வீட்டில் தான் தோன்றப் போகிறது-ன்னு அவர் நினைச்சிப் பார்த்திருப்பாரா என்ன?

பொய்கை: ஐயா, மழை அதிகமா இருக்கு! குளிரத் தொடங்கி விட்டது! இன்று இரவு உங்கள் வீட்டில் தங்கிக் கொள்ளலாமா? உங்கள் வீட்டுக்குள் வந்து சிரமம் கொடுக்க எனக்கு மனசு வரலை! திண்ணை இருந்துச்சுன்னா அங்கேயே தங்கிப்பேன்.
அதுவும் இல்லை! அதனால் இப்படி தேகளியில் தங்கிக் கொள்கிறேனே!
(தேகளி=இடைக்கழி; ரேழி, நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசப்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்!)
நாளை காலை தரிசனம் முடித்துக் கிளம்பி விடுவேன்! நான் நம்பிக்கையான ஆள் தான்! பெருமாளுக்கு அடியவன், பெயர் பொய்கை, ஊர் காஞ்சி!

சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம் நான் கதவைச் சாத்திக் கொள்கிறேன்!
வீட்டில் உணவு தீர்ந்து விட்டது! பழம் ஏதாச்சும் தரேன் சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி!

பொய்கை: வேண்டாம்-ப்பா, மிக்க நன்றி! நாளை காலை தரிசனம் முடித்துச் சாப்பிட்டுக் கொள்கிறேன்! வீட்டில் அனைவருக்கும் என் ஆசியைச் சொல்லுங்க!

ஹூம்...என்னமோ தெரியலை இன்னிக்கி!
பசியும் எடுக்குறா மாதிரி இருக்குது! ஆனா ரொம்ப பசிக்கவும் இல்லை!
ஐப்பசியில், அவன் பசி தான், என் பசியையும் மிஞ்சுகிறது! இறைவா!
கையை அவர் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டது தான் தாமதம்!
டக் டக் டக்!
- இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! அவரும் பார்க்க அடியவர் போல் தான் உள்ளார்!

பூதம்: சுவாமி அடியேன் பெயர் பூதம்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்கு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா?

பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க!
இங்கு இடங் கொடுத்தவர் உறங்கப் போய் விட்டார்!
இவ்வுலகில் இடங் கொடுத்தவனும் அரங்கத்தில் உறங்கப் போய் விட்டான்!
நாம் தான் இடைக்கழியில் கிடந்து அல்லாடுகிறோம்!
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! (உட்காரலாம்)

இருவரும் அமர்ந்து, பேசத் தொடங்கலாம் என்று எண்ணுகிறார்கள்!
மீண்டும் டக் டக் டக்!
இன்னொருவர் தட்டுகிறார்! அவரும் அடியவர் போல் தான் உள்ளார்!
பேய்: சுவாமி அடியேன் பெயர் பேய்; நான் திருமயிலையில் இருந்து வருகிறேன்! இன்றிரவு மட்டும் இங்குத் தங்கிக் கொள்கிறேனே!

பொய்கை: வாங்க, சாரலில் நனையாதீங்க! இன்று என்ன விசேடமோ தெரியவில்லையே!
இது அடியேனுக்கு உரிமை இல்லாத இடம்; இங்கு போய் அடியவருக்கு இடவசதி செய்து தரக் கட்டளையா?
வாங்க ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! மூவர் நிற்கலாம்!!!

மூவரும் நின்று கொண்டே, இறைவனின் குணானுபவங்களைப் பேசி, இரவைக் கழிக்க எண்ணினர்!
குறுகலான இடம்! ஆனால் மூவரின் மனத்தில் எந்தக் குறுகலும் இல்லை!
நீங்க என்ன சாதி, அவங்க என்ன கோத்திரம் என்றெல்லாம் ஒருவரை ஒருவர் எதுவும் கேட்கவுமில்லை!
கூடும் அன்பினால் கும்பிடல் அன்றி, வேறெந்த எண்ணமும் அங்கு இல்லை!

திடீரென்று...கும்மிருட்டில்...
மூவருக்கும் மூச்சு திணறுகிறது!
மூவர் நிற்கும் இடத்தில், இப்போது ஒருவருக்குக் கூட இடமே இல்லாதது போல் ஒரு உணர்வு!
யாரோ பிடித்து நெருக்கறாங்க! அச்சோ வலிக்கிறதே!!! - கள்வனோ?
(நாளை தொடரும்...)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP