Sunday, June 10, 2012

தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!

வணக்கம் மக்கா!
சில வீட்டில், பெண்கள், இட்லிக்கு மாவரைச்ச ஒடனேயே, உப்பு போட்டுற மாட்டாங்க!
ராவுக்குத் தூங்கப் போவையில, கல்லுப்பைக், கையால அள்ளிப் போடுறது வழக்கம்! ஏன்?:)

Fresh மாவு, புளிக்கத் துவங்கும் போது, தூவுற உப்புக்கு மகத்துவம் அதிகம்!
கெட்டிப்படும் போது கலந்தா, "குப்பு"ன்னு பூக்கும் = இட்லி நம்பிக்கையோ, தோசை விஞ்ஞானமோ... நாம் அறியோம்:)

அதே போல, பல ஊர்களின் பெயர்கள், ஆரம்பத்திலேயே வந்து விடுவதில்லை!
குடியேறிய பின், ஏதோவொன்று கெட்டிப்பட்டு, அதுவே அந்த ஊரின் பேராகத் தூவப்படுகிறது! நாளடைவில், "குப்பு"-ன்னு பூத்து, அழகுடன் பரிணமிக்கிறது!

ஊர்ப் பெயர் விகுதிகள் = பட்டி, பாளையம், குடி, புரம், பட்டினம்....

* ஊர் = வேற வேற பேரா இருந்தாலும்,
* ஊர்களின் விகுதி = ஒன்னே போல இருக்கும் மாயம் என்ன?
யோசிச்சிப் பார்த்து இருக்கீங்களா?

ஊர்ப் பேரில் இருக்கும் விகுதியை வச்சிக்கிட்டே, அந்தூரு...தெக்கத்தியா-வடக்கா? செட்டிநாடா-கவுண்டம் பாளையமா?...
அட அம்புட்டு ஏன்...., முல்லை - குறிஞ்சி - மருதம் - நெய்தாலா?-ன்னு கூடக் கண்டுபுடிச்சீறலாம்!:))
தமிழக ஊர்களை எடுத்துக் கொள்ளுங்கள்!
- பட்டி ன்னு முடிஞ்சா... பெரும்பாலும் மருதைப் பக்கம்
- பாளையம் ன்னு முடிஞ்சா... கோவைப் பக்கம்
- குடி ன்னு முடிஞ்சா... தெக்கத்தி (அ) செட்டிநாட்டுப் பக்கம்
- பட்டினம் ன்னு முடிஞ்சா... கடற்கரை ஓரம்

தமிழகம் மட்டுமல்ல!
* ஈழத்திலும் இது உண்டு - துறை, மலை, இறவு ன்னு..
* மலையாளத்தில் = குளம், சேரி
* கன்னடத்தில் = ஹள்ளி, சந்த்ரா
* தெலுங்கிலும் உண்டு = பேட்(டை), கொண்டா ன்னு

இப்படி.... ஊர்ப் பெயர்களில் ஏதோவொரு ஒழுங்கு ஒளிஞ்சிக்கிட்டுத் தான் இருக்கு!
அதைச் சன்னமா, நறுவிசா, பிட்டுப் பிட்டுத் தின்பதே... இப்பதிவின் நோக்கம்! = தமிழ்: ஊர்-பேர்-விகுதிகள்!


தொல்காப்பியம் = 2000+ ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் காலக் கண்ணாடி!
தொல்காப்பியரு, அவரா நாலு பேரை எழுதி, இதான்டா ஒங்க எல்லை ன்னு இட்டுட்டுப் போவல! ஏற்கனவே மக்களிடம் வழங்கியதைத், தொகுத்துத் தருகிறார்!

* முல்லை
* குறிஞ்சி
* மருதம்
* நெய்தல்
எனச் சொல்லிய முறையான் சொல்லவும் படுமே!

முதலில் முல்லை! பின்னரே குறிஞ்சி! - வியப்பா இருக்கு-ல்ல?:)

நாம, இன்னிக்கி மனப்பாடப் பாட்டுல சொல்லுற வரிசை வேற! பின்னாளில் இலக்கியத்தில் கலந்த சமய அரசியல்!
ஆனா, தொல்காப்பியர் பதிஞ்சி வைச்சது, அறிவியல் பூர்வமான sequence; சிறுபொழுது/ பெரும் பொழுது

* முல்லையின் பொழுது = மாலை/ மழைக் காலம்
* குறிஞ்சி்யின் பொழுது   = யாமம் (இரவு)/ குளிர் காலம்

மாலைக்கு அப்பறம் தானே இரவு?
மழைக்கு அப்பறம் தானே குளிர் காலம்?
= அதான் முல்லைக்குப் பிறகு குறிஞ்சி!

* முல்லை = காத்து இருத்தலும், இருத்தல் நிமித்தமும்
* குறிஞ்சி = புணர்தலும், புணர்தல் நிமித்தமும்

காத்திருந்து, ஏங்ங்ங்கி..... அப்புறம் புணர்தலின் இன்பம் ஒங்களுக்குத் தெரியுமா?:))

இப்படித் தான்... முல்லை, குறிஞ்சி ன்னு இயற்கையா வச்சாரு தொல்காப்பியர்! ஆனா நாம...
* முல்லை = திருமால்
* குறிஞ்சி = முருகன்
ன்னு வருவதால், வரிசையையே மாத்தீட்டோம்:) பின்னாள் பதிப்பகங்கள்/ பண்டிதர்கள் செய்த வேலை! எதை ஒன்னுமே சமய நோக்கோடவே சங்கத் தமிழில் கலந்தால் வரும் ஆபத்து இதான்!:(

இந்த முல்லை-குறிஞ்சி & மற்ற திணைகளில் வரும் கருப்பொருட்கள் = ஊர்ப் பேரு விகுதிகள்;
இன்னிக்கி, அதெல்லாம் இருக்கா? போயிந்தே, போயேபோச்சு ன்னு போயிருச்சா?
ஒவ்வொரு ஊராத் தொட்டுப் போவோம், கூடவே வாங்க! :)


குறிஞ்சிப்பூ

முல்லைப்பூ

1) முல்லை (காடும், காடு சார்ந்த நிலம்):

* காடு ஆர்க்காடு, ஏர்க்காடு, ஆலங்காடு, களக்காடு

* பட்டி = ஆநிரை (ஆடு/மாடு) மேய்த்தல் என்பதால் பட்டி
கோயில்பட்டி, செவல்பட்டி, ஆண்டிப்பட்டி, வாடிப்பட்டி, தி. கல்லுப்பட்டி

(மதுரைக்காரன், மதுரைக்காரன் தான்யா! புதுசா வந்த ஊருக்கும் HarveyPatti ன்னே பேரு வைக்குறான்!
நாமத் தான் Sunrise City, Temple Towers ன்னு சென்னையில் கண்ட பேரையும் வச்சி, காலாவதி ஆவுறோம்:))

* பாடி = ஆநிரைகளைக் காக்க, பாடி வீடு அமைத்துத் தங்குதல்
வேலப்பாடி, மேலப்பாடி, ஆயர்ப்பாடி

* காவு = கா (சோலை) என்று பொருள்
ஆரியங் காவு, புல்லிக் காவு, கொல்லிக் காவு (கேரளத்தில்);

கா+விரி = பல சோலைகளை விரித்துப் பாய்வதால் காவிரி!
ஆனா, இந்தக் "காடு"/"கா" என்பதை "வனம்" ஆக்கி விட்டது, சம்ஸ்கிருதப் பரவல்!:(
* புளியங் காடு = திண்டி வனம்! (வடமொழியில், திண்டி-ன்னா புளி)
* முல்லைக்கா = மல்லீவனம்!
* மரைக் காடு = வேதாரண்யம்

மரைக் காடு = மான்கள் வாழும் காடு!
மரை ஆன் கறந்த, நுரை கொள் தீம் பால், 
மான் தடி புழுக்கிய, புலவு நாறு குழிசி

ஆனா "தல" புராணம் உருவாக்கணுமே? என்ன செய்யலாம்? = ஒத்தை எழுத்தை அசைப்போம்...
மரை = மறை ன்னு ஆக்கீருவோம்...

வேதங்களே வந்து வழிபட்ட 'ஸ்'தலம்! => வேதக் காடு => வேதாரண்யம் ன்னு ஆக்கியாச்சு! பேஷ் பேஷ்!:))
இப்படித் தான் எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து ன்னு, ஒத்தை எழுத்தைக் கிளப்பி விட்டு, அந்தத் தமிழ்ச் சொல்லே இல்லாமப் பண்ணிடுவாங்கோ:( "நகரம்" தமிழா? ன்னு கேட்டவுங்க தானே!:(

* தோப்பு, பொழில் என்ற ஊர்களும் உண்டு!
பைம்பொழில் (பம்புளி), சேத்தியாத் தோப்பு

* மந்தை = முல்லை நிலத்து ஆடு/மாடுகளை ஒட்டி வந்த பெயர்
புஞ்சை மந்தை, நஞ்சை மந்தை ன்னு, எங்க வடார்க்காடு பக்கம் உண்டு!
ஒத்தைக் கல் மந்தை (Ooty) = தோடர்கள் வாழும் மந்தைப் பகுதி!

இங்கிலீசுக்காரன் வாயில் சிக்கி, ஒத்தக் கல் மந்தை =  Oota ca Mund ஆகி விட்டது:)
இது குறித்த தனித்த கட்டுரைகள் உண்டு! இப்படியே, வேர்ச்சொல் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்!

2) குறிஞ்சி (மலையும், மலை சார்ந்த நிலம்)

* மலை: மலை என்ற நேரடிப் பெயர்; ஆனைமலை, கொல்லிமலை, திரிகோணமலை (ஈழம்), அண்ணாமலை, கழுகுமலை

* கோடு = மலை முகடு என்ற பொருள்
திருச்செங்கோடு, திருவித்துவக்கோடு, கோழிக்கோடு (கேரளம்), கசரக்கோடு (Kasseragode, Kerala)

ஆங்கிலத்தில் எழுதும் போது, kodu->Kassera-gode ஆகி விட்டது; இங்கிலீஷ்காரன் செஞ்சது;
அதை எள்ளி நகையாடுறோமா? இல்லை AdaiyaaRu Ananda Bhavan ன்னு வாங்கித் திங்குறோமா?
ஆனா, Mulla Periyar -ன்னா மட்டும், பெரியார்-குல்லா போட்ட முல்லாவா? -ன்னு ட்விட்டரில், "இலவச" நையாண்டி நர்த்தனங்கள்:( 

Triplicane Fine Arts -ன்னு தான் இன்னிக்கும் சங்கீதம் பாடுறான்; அங்கே Thiruvallikeni Fine Arts ன்னு பாடத் துப்பில்லை!
ஆங்கிலத்தில், Adaiyaaru -ன்னு எழுத மாட்டோம்; Adyar தான்! ஆனா Mulla Periyar ன்னா மட்டும் எகத்தாளம்; 
தமிழ் இலக்கணம் படிச்சதே, அன்பர்களின் "தமிழ் உணர்ச்சி"யை மட்டம் தட்டத் தானே? என்ன பொழைப்போ? முருகா:(

* குன்றம் = சிறிய மலை
திருப்பரங் குன்றம், திருக்கழுக் குன்றம், நெற் குன்றம், பூங் குன்றம்

* குறிச்சி = குன்றக் குறவர்களின் வாழ்விடம்
பாஞ்சாலங் குறிச்சி, ஆழ்வார் குறிச்சி, கள்ளக் குறிச்சி

* பாறை = மலையை ஒட்டிய பெருங் கற்கள்
வால்பாறை, பூம்பாறை, அம்பாறை (ஈழம்), சிப்பிப் பாறை

* கல் = திண்டுக்கல், நாமக்கல், வாரங்கல் (ஆந்திரம்), ஒகேனக்கல்

(ஹொகே-ன-கல் = புகை எழும் கல்,
கன்னடத்தில் ஹொகே = புகை; அருவியால்.. புகை எழும் கல்)

3) மருதம் (வயலும், வயல் சார்ந்த நிலம்):

* ஆறு = நேரடிப் பெயர்; திருவையாறு, மணிமுத்தாறு, ஆழியாறு, கயத்தாறு,
எங்கூரு வாழைப்பந்தல் பக்கம் செய்யாறு

* துறை = Banks ன்னு ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம்!
=> வெறுமனே இருந்தா = கரை
=> மக்கள் இறங்குறாப் போல இருந்தா = துறை

காங்கேசன் துறை (ஈழம்), மயிலாடுதுறை (மாயவரம்), திருவாவடுதுறை, சிந்து பூந்துறை, செந்துறை
# மயிலாடு துறை = மயிலை வெரட்டிட்டு,  "மாய" வரம் ஆக்கீட்டோம்:)
# குரங்காடு துறை = குரங்கை வெரட்டிட்டு, வெறும் ஆடுதுறை ஆக்கீட்டோம்

பொருநை (தாமிரபரணி) யின் கரையில் = குறுக்குத் துறை ன்னே ஒரு ஊரு! அம்புட்டு அழகு!
என் முருகன் ஆத்துக்குள்ள மூழ்கி, வெளிய வருவான் = Scuba Diving Guy:)

மொத்த ஆலயமே, தண்ணிக்குள் மூழ்கி, வெளிய வரும்.... இங்கெல்லாம் இன்னொரு முறை போகணும்..... மனசுக்குப் பிடிச்சவங்களோடு, தோளில் சாய்ஞ்சிக்கிட்டு, முருகன் கதையைப் பேசிக்கிட்டே..!
---------------

அரங்கம்:  ஒரே ஆறு, இரண்டாய்ப் பிரிந்து, மீண்டும் ஒன்றாய்க் கூடும், இடைப்பட்ட திட்டு/ துருத்திக்கு = "அரங்கம்" ன்னு பெயர்!

திருவரங்கம் = எந்தை, அரவணை மேல் துயில் அமரும் அரங்கம்! ஆழ்வார்கள் பதின்மரும் பாடிய ஒரே தலம்!

மொழிமுதல் "அ"கரத்தை வெட்டி, அதை ரங்கம்-ன்னு ஆக்கி, ஸ்ரீ சேத்துருங்கோ:)
ஆனா எந்த ஆழ்வாரும் சீரங்கம், ஸ்ரீரங்கம்-ன்னே பாடவே மாட்டாரு! அணி, திரு-வரங்கம் அய்யோ! அரவணை அழகில் பட்டேன்!

அரங்கம் = எப்படி நாடக மேடையில், ஒரு பக்கமா நுழைந்து, இன்னொரு பக்கமா, நாடக மாந்தர்கள் வெளியேறுவாங்களோ....
அதே போல், ஆறு.... ஒரு பக்கமாய் விரிந்து, இன்னொரு பக்கமாய் இணைவதால் = அரங்கம் என்ற தீந்தமிழ்ப் பெயர்!
---------------

* கூடல் = ஆறுகளின் கூடல்! திருமுக்கூடல், கூடலூர், பவானிக் கூடல்

* ஓடை, மடை = வயலுக்குப் பாயும் நீர்; காரனோடை, பத்தமடை, பாலாமடை

* ஏரி = பாசனத்துக்குச் சேமிக்கப்படும் நீர்; மாறனேரி, சீவலப்பேரி, பொன்னேரி, நாங்குநேரி

*ஏந்தல், தாங்கல் = சிற்றேரி; மழை நீரை ஓட விட்டு ஏந்துவதால் = ஏந்தல்!
கொம்புக்காரனேந்தல், வேடந்தாங்கல், பழவந்தாங்கல்

* குளம் = மக்களின் அன்றாட நீர்த் தேவைக்குச் சேமிக்கப்படும் நீர் (குளிக்க, குடிக்க, துவைக்க..)
பெரியகுளம், விளாத்திகுளம், பெருங்குளம், கருங்குளம்

* ஊருணி = குளம் போலவே! ஆனால் குடிக்க மட்டும்!
பேராவூருணி, மயிலூருணி

* கேணி, கிணறு = இது ஊற்று நீரால் சுரப்பது! (மழை நீர் அல்ல)
திருவல்லிக்கேணி, கிணத்துக்கடவு, ஏழுகிணறு, நாழிக்கிணறு

* வயல், விளை = இது நேரடி வேளாண் நிலங்கள்!
புதுவயல், நெல்வயல், திசையன்விளை, ஆரன்விளை

* பழனி, கழனி = இதுவும் வயலே! ஆனால் நீர் நிறைந்த வயல்!
தென்பழனி, நடுக்கழனி
(மேலே வயல் சூழ்ந்த பழனிமலைப் படத்தைப் பாத்துக்கோங்க:)

Important Question: பழனியா? பழநியா??
பழம் + நீ = பழநி என்பதெல்லாம் வெறும் புராணக் கதையே!:))

என் முருகனைத் தோத்தவனாக் காட்டுறதல, உங்களுக்கு என்னய்யா அப்படியொரு இன்பம்? All Cheaters!:)
Hey honey! Everytime when I come to your temple, I bring only Mango for u!You are the Winner da!:)

Jokes apart..
பழனம் = வேளாண் நிலம்!
சேல் உலாம் பழனம், செங்கழு நீர்ப் பழனம்
இதான் பழனி, கழனி ன்னு ஆகும்!
"இயற்கை" கொஞ்சும் முருகனை, "பழனி" ன்னே எழுதலாம்! பழம் நீ அல்ல!

4) நெய்தல் ( கடலும், கடல் சார்ந்த நிலம்) 

கரை = நேரடிப் பெயர்; கோடியக்கரை, கீழக்கரை, சேதுக்கரை, மணக்கரை

துறை = துறைமுகத்தை ஒட்டிய பெயர்; குமரித் துறை, கொற்கைத் துறை, காயல் துறை
(இது மருத நிலத்துக்கும் உண்டு! அங்கே ஆற்றுத் துறை, இங்கே கடல் துறை)

பட்டினம் = கடற்கரை நகரம்
காவிரிப் பூம் பட்டினம், குலசேகரப் பட்டினம், நாகைப் பட்டினம், காயல் பட்டினம்
(பட்டணம் = பெரு நகரம்; பட்டினம் = கடற்கரை நகரம்)

பாக்கம் = சிற்றூர்
பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், வில்லிப்பாக்கம், புரசைப்பாக்கம்....
அடடா....சென்னையில் தான் எம்புட்டு பாக்கங்கள்!:))

(பட்டினம் = Seaside Town, பாக்கம் = Seaside Hamlet
மருவூர்ப்பாக்கம், பட்டினப்பாக்கம் என்றே சிலப்பதிகாரம் பேசும்)

குப்பம் = கடற்கரைக் குடியிருப்புப் பகுதிகள்
காட்டுக் குப்பம், நொச்சிக் குப்பம், சோலைக் குப்பம்...
(மீனவர் பகுதி என்றும் கொள்ளலாம்; ஆனா பரதவர்/ மீனவர்களே இருக்கணும் ன்னு அவசியம் இல்லை; மருத்துவர், அலுவலர் பலரும் உண்டு)


5) பாலை:

பாலை-ன்னு தனித்த நிலம் இல்லை!
அந்தந்த நிலங்களே, அவற்றின் இயல்பு கெடின், பாலை ஆகும்!

* காடான திருவேங்கடம், காட்டுத் தீ பற்றி எரிஞ்சா = பாலை!
* துறைமுகப் பட்டினம்,  கடல் கொண்டு போனால் = பாலை!

சேர நாடு முழுக்கவே மலை->குறிஞ்சி -ன்னு முடிவு கட்டீற முடியாது!
அதான் தொல்காப்பியர், "அரசியல் அடிப்படையில்" பிரிக்காம, "இயற்கை அடிப்படையில்" பதிஞ்சி வைச்சாரு!

எல்லா ஊர்களிலும், நால்வகை நிலங்களும் இருக்கலாம்! (அ) ஒரு சிலது மட்டுமேவும் இருக்கலாம்!
அடிப்படையில் முல்லை-குறிஞ்சி = ஒன்னுக்குள்ள ஒன்னு; மலையில் காடு உண்டு! காட்டில் மலை உண்டு!

முல்லை-குறிஞ்சி = ஆதி குடி!
காட்டு மக்களே இடம் பெயர்ந்து, நாகரிகம் கண்டனர்;

சேயோன்-முருகன்

மாயோன்-பெருமாள்

* முன்னை மரபின் முதுமொழி முதல்வ = திருமால்
* அரும்பெறல் மரபின் பெரும்பெயர் முருக = முருகன்

பண்டைத் தமிழ்த் தெய்வங்கள்!
ஆறு-தலை, நாலு-கை ன்னு கதைகள் ஏற்றப்படாத, நடுகல்-இயற்கை வழிபாட்டில் அமைந்த தமிழ்த் தொன்மங்கள்!

காட்டைத் திருத்தி நாட்டாக்கிய போழ்து => மருதம் = வயல்!
பண்பாடு வளர வளர, முல்லை-குறிஞ்சி மக்களே, இடம் பெயர்ந்து, மருதம் கண்டார்கள்!
தங்கள் தொன்மமான திருமாலும், முருகனும்..., முல்லை-குறிஞ்சிக்குள் மட்டும் அடைபடாமல், எல்லா நிலங்களிலும் பரவியது, இதனால் தான்!

* திருச்செந்தூரில் இருப்பது முருகனே அல்ல! நெய்தலில் எப்படி முருகன் இருப்பான்?
* திருமலையில் இருப்பது திருமாலே அல்ல! குறிஞ்சி-ல எப்படித் திருமால் இருப்பாரு?
- ன்னு டைப் டைப்பாக் கிளப்பும் "அறி-வாளி"கள் நம்மிடையே உண்டு:))

அவர்களுக்கெல்லாம் ஒரே பதில் = எந்தச் சார்பும் இல்லாத, சமணப் பெருமகனாரான இளங்கோ அடிகள் தான்!
திருப்பதி மலை மேல் நிற்கும் மாயவனையும், செந்தூரில் கொஞ்சும் முருகனையும் சிலம்பில் படம் பிடித்துக் காட்டுகிறார்!

வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மாமலை உச்சியின் மீமிசை
பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கும்
தகை பெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கன் மால் நெடியோன் நின்ற வண்ணமும்
...
...
சீர்கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல் அன்றே!

கொற்றவை என்பவளும் தமிழ்க் கடவுளே!
ஆனால், இவளைப் பாலை நிலத்தில் வைத்து விட்டனர் = ஏன்னா இவள் பாலை நிலத்தில் வாழ்ந்த கள்வர் - எயினர்களின் தெய்வம்!

கொடுமையான கள்வர் வாழ்க்கை, நாகரீக மேம்பாடு இல்லாத காரணத்தால், இவள் சங்கத் தமிழில் சற்றே அடைபட்டுப் போனாள்!
ஆனால், பின்னாளில், ஊர் தோறும் ஆலயம் கண்டாள்!

வேந்தன் = அரசன்! வருணன் = கடல் காற்று!
மாறிக் கொண்டே இருப்பதால், இவர்கட்கு தனித்த அடையாளமோ, ஆலயமோ, கூத்தோ, துறையோ இல்லை!
மக்கள் வாழ்வியலில் கிடையாது! வெறும் நில அடையாளங்கள் மட்டுமே; வேந்தனை இந்திரன் ஆக்கியது, பின்னாள் "புராணம்":)


பொதுவான "ஊர்" விகுதிகள்:

மேலே பார்த்த ஐந்திணை விகுதி மட்டுமில்லாமல், பல பொது விகுதியும் இருக்கு!

* ஊர் = இது எல்லா இடங்களுக்கும் வரும்!
திருவாரூர், திங்களூர், கஞ்சனூர், நாவலூர், மூவலூர், குறையலூர்... ன்னு அளவே இல்ல!
ஆழ்வார் - நாயன்மார் பாடல் பெற்ற ஊர்களுக்குத், "திரு" ன்னு முன்னால் சேர்த்துக் கொள்வதும் வழக்கம்:)

* நாடு = ஒரத்தநாடு, வழுதிநாடு, வயநாடு (கேரளம்)

* புரம்/ புரி = காவலை உடைய நகர்;
காஞ்சிபுரம், பல்லவபுரம் (பல்லாவரம்), சோழபுரம், திருவனந்தபுரம் (கேரளம்)

* குடி = சான்றோர்கள் ஒன்றி வாழும் இடம்; குடி-இருப்பு!

நல்ல "குடி"யில் பிறக்கணும், "குடிப்" பிறந்தார் ன்னு சொல்றோம்-ல்ல? குடி-ன்னா சாதி அல்ல! குடி = சான்றோர் சமூகம்!
தூத்துக்குடி, இளையான்குடி, காரைக்குடி, குன்றக்குடி
(என் தோழனின் ஊரும் தூத்துக்குடி தான்! எனவே அவனும் சான்றோன் தான்:))
----------------

வீட்டின் பல அமைப்புகளைக் குறிக்கும் ஊர்கள்:

* இல் = இல்லம்; மருதில், அன்பில், செந்தில்! => சேந்தன் + இல் = செந்தில்!

* அகம் = திருவேடகம், பாடகம், ஏர்-அகம் (சுவாமிமலை)

* வாயில்/ வாசல் = வீட்டுக்கு வாயாக (நுழைவு) இருப்பதால் = வாய் + இல்;
திருமுல்லை வாயில், சித்தன்ன வாசல், குடவாசல்

* முற்றம் = சத்திமுற்றம், குளமுற்றம்

* பள்ளம், மேடு= பீளமேடு, பெரும்பள்ளம்

* சேரி = பல குடிகள் "சேர்ந்து" வாழ்வதால் சேரி; இன்னிக்கி Slum ன்னு ஆக்கீட்டோம்:(
புதுச்சேரி, பறைச்சேரி, சாவகச்சேரி


கடேசீயா....போரை/ தொழிலை அடிப்படையா வைத்தும் பல ஊர்கள்....

பாளையம் = படை வீரர்கள் தங்கும் ஊர்; பாளையக் காரர் ன்னே பேரு!
பெரிய பாளையம், பாப்பா நாயக்கன் பாளையம், இராச பாளையம், கோபிசெட்டிப் பாளையம், மேட்டுப் பாளையம்....

கோவை/ கொங்கு பகுதியில் பாளையங்கள் நிறைய; பின்னூட்டத்தில் கொட்டுங்க மக்கா:))

படைவீடு = முருகனின் படை வீடு வேற! அது ஆற்றுப்படுத்தும் வீடு = ஆற்றுப்படை!
இது, மெய்யாலுமே "படை"-வீடு (Soldiers Barracks)!
படவேடு (ஆரணி) = படைவீடு! மணப்பாடு (Manappad) = மணற் படை வீடு

கோட்டை = படைகள் சூழ, மன்னனின் அரண்
செங்கோட்டை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை...

பேட்டை = தொழில் சார்ந்த ஊர்கள்
செவ்வாய்ப்பேட்டை, சூளூர்ப்பேட்டை, வண்ணாரப்பேட்டே, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை...

"பேட்டை ராப்" என்று புகழ் பெற்ற சங்க இலக்கியப் பாடலை, இயக்குநர் சங்கர் கிட்ட கேட்டு வாங்கிக்குங்கப்பா!:)
எனக்கு மூச்சு முட்டுது...dei muruga, panneer soda open; வர்ட்டா?:))

நன்றி:

1) Twitter-இல் இந்த சுவையான உரையாடலைக் கிளப்பிய சக ட்வீட்டர்களுக்கு நன்றி!
குறிப்பாக, @ArulSelvan, @nRadhakn, @rexArul, @scanman, @drTRM, @spineSurgeon, @mayilSK, @ezharai, @psankar, @0SGR, @dheepakG

2) டாக்டர். ரா.பி. சேதுப் பிள்ளை - ஊரும் பேரும் - Published by: Palaniappa Brothers, திருச்சி

3) பல தகவல்கள் பகிர்ந்து கொண்ட, நல்-நண்பர், ஐயா, தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
Read more »

Monday, June 04, 2012

’கள்’ளுண்ட தமிழ்: வாழ்த்துக்கள் / வாழ்த்துகள் - எது சரி?

முன்குறிப்பு: வாழ்த்து-"க்கள்" என்பது தவறா?

அப்படீன்னா, அதைத் தொல்காப்பிய உரைஞர் நச்சினார்க்கினியர் போன்ற தமிழ் இலக்கணத் தந்தையர் பயன்படுத்துவாங்களோ?
இது இணையத்தில் அரையும்-கொறையுமாச் செய்யப்பட்ட "மிகைத் திருத்தம்" என்று அறிக! சரியையும், பிழை என்று திருத்தம் செய்தல்!

* சரியான ஒன்றைத் தவறென்று ஆக்கி..
* இப்படி எழுதியதற்காக, "டுமீல்/ டுமீலன்"-ன்னு, தமிழ் உணர்வாளர்களை இளக்காரம் பேசி..
* "மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்" -ன்னு எள்ளி..
* "ஓ இது தவறோ?" -ன்னு நம்மையே திகைக்க வைத்து..

கவுண்டமணி பாணியில் சொல்லுறதுன்னா: 
"டேய்... ஒங்க சிகைத் திருத்தம் பண்ணுங்கடா! 
ஏன்டா மிகைத் திருத்தம் பண்றீங்க"?:)

ஒரு கதை போல் பார்க்கும் முயற்சி! ஆர-அமரப் படிங்க!:)


* வாழ்த்துக்களா? வாழ்த்துகளா??
* எழுத்துக்களா? எழுத்துகளா??
= எந்தப் பாண்டியன் பறை அறிவிச்சி, எந்த நக்கீரன் வந்து தாடியைத் தடவப் போறானோ?:)

90 நாள் அஞ்ஞாதவாசம்!
இப்போதைக்கு என் நெலமை = கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு!

தமிழின் பால் மாறா ஆர்வமுள்ள நண்பன் பலராமன் (@balaramanl) எப்படியோ #365paa வில் என் அஞ்ஞாதவாசத்தை மோப்பம் பிடிச்சிட்டா(ர்)ன்!:)
அவன் கேட்டுக் கொண்டதால், என் பல்வேறு யோசனைக்கு நடுவே.... Figure இல்லா ஆப்பிரிக்க விமானத்தி்ல்.. இப் பதிவை எழுதிக் கொண்டு வருகிறேன்:)


பொதுவா, இணையத்தில் எது ஒன்னும் பரவும்! அதுவும் Twitter வேகம், சுனாமி வேகம்!

* சில்க் ஸ்மிதாவின் ஆவி, வித்யா பாலனை மன்னிக்குமா? என்ற "அறிவியல்" ஆகட்டும்....
* அன்னக் கிளியா? சின்னச் சின்ன ஆசையா? போன்ற ராஜா/ ரஹ்மான் Debate ஆகட்டும்....
Twitter 140-இல் நடக்குறாப்பல, வேறெங்கும் நடத்த முடியாது!:)

தமிழும்... இதுக்கு விதிவிலக்கு அல்ல!

எழுத்துப் பிழைகளை... ஒரு பள்ளிக் கட்டுரையில் கண்டுபுடிக்கறதை விட, 140இல் கண்டுபுடிப்பது எளிது! பளிச்-ன்னு பல் இளிப்பாள்:) அவளை "Correct" செய்ய சில ட்வீட்டர்களும் ரொம்ப ஆர்வமா முனைவார்கள்!:)


ஆனா... ஆனா...

ஒட்டடை அடிக்கிறேன் பேர்வழி ன்னு,
வீட்டின் உயர்ந்த பொருட்களையும் உடைத்து விடுகிறார்கள்!
அப்படி ஆனதே....வாழ்த்துக்கள் "தவறு" என்ற பரவல்!

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியானதையும், தவறு-ன்னு அடிச்சித் "திருத்துவது";

பிரபலமானவர்கள் சொல்வதால், இது பரவியும் விடுகிறது!
இழப்பு = தமிழ் மொழி இயலுக்கு :(

இதுக்கு ஒரே வழி தான் இருக்கு! 
= இனி, எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும், தரவு (ஆதாரம்) கேளுங்க!

பலரும் "அபிப்ராயம்" சொல்லுறாங்களே தவிர, தரவு காட்டுவதில்லை!
மொழி இயல் = ஒருவரின் நம்பிக்கையோ/ புராணக் கதையோ அல்ல, அப்படியே ஏத்துக்கிட்டு போவதற்கு!
என் ஆளுங்க நான் சொல்லுறதை ஏத்துக்கட்டும், உன் ஆளுங்க நீ சொல்வதை ஏத்துக்கட்டும் -ன்னு "தனிமனித ஜல்லி" அடிக்க முடியாது!

அறிவியலைப் போலவே = மொழியியல்!
அதனால்.. சத்யராஜ் style இல்... தரவு தரவு!:)

Coming to the Matter,
வாழ்த்துக்கள் vs வாழ்த்துகள்; Jollyஆ, கதை போலப் பார்க்கலாமா?

திருக்குறளில் "கடவுள் வாழ்த்து" ன்னு தான் இருக்கும்! வாழ்த்து-"கள்/ க்கள்" இருக்காது! => கள்-ளுண்ணாமை! :))
* வாழ்த்து = ஒருமை!
* -கள் (அ) -க்கள், விகுதி சேர்த்தால் வருவது = பன்மை!

சொன்னா நம்ப மாட்டீங்க! சங்க காலத்தில் இது = அஃறிணைக்கு மட்டுமே பயன்படுத்துறது வழக்கம்;
யானைகள் - பூனைகள் | ஆனா உயர்திணை? தோழியர் - பாவையர்

தோழிகள் -ன்னு அப்பறமாத் தான் வந்துச்சி:) இன்னிக்கி... எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் ன்னு...சகலருக்கும் பயன்படுத்தறோம்:))

ஒருமையைப் -> பன்மை ஆக்கத், தொல்காப்பியர் ஒரு formula சொல்றாரு! = "விகுதி செய்யவும்"
* ஆட-வன் = ஆட-வர்
* பெண் = பெண்-டிர்
* சான்-றோன் = சான்-றோர்

அர், இர், ஓர் = எல்லாமே பன்மை விகுதி! ஆனா கவனிச்சிப் பாருங்க; எல்லாமே உயர் திணை தான்!
* யானை = யானை-யர் ன்னு சொல்லுறதில்ல!:)
* யானை = யானை-கள்!

So... அஃறிணைப் பன்மை விகுதி = கள்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
கொள்வழி உடைய பல அறி சொற்கே (தொல் - சொல்லதிகாரம்)

கள்ளொடு சிவணும் = சிவன் கள்ளு குடிச்சாரு ன்னு, Type Typeஆ, அர்த்தம் பண்ணப்படாது:)
பாவம் சிவபெருமான்! கருணையே உருவானவரு!  அவரு 'விடம்' தான் குடிச்சாரு! 'கள்' அல்ல!
சிவ"ன்" = அவருக்குக் கண்ணு வேணும் ன்னா மூனா இருக்கலாம், ஆனா சுழி ரெண்டு தான்:)

இங்கே "சிவணும்" ன்னா "சேரும்/ பொருந்தும்" -ன்னு பொருள்!
கள்ளொடு சிவணும் = -"கள்" என்ற விகுதியோடு சேரும்!

இன்னொரு technique-உம் சொல்லிக் குடுக்குறாரு, நம்ம தொல்காப்பியர்!
கலந்தன கண்ணே! கழன்றன வளையே!
கலந்தன கண்களே-ன்னு தானே சொல்லணும்? தேவையில்லை!
கலந்தது -ன்னு சொல்லாம... கலந்தன என்று சொன்னாலே பன்மை தான்!
அதனால் கண்களே-ன்னு explicitஆ சொல்லத் தேவையில்லை;
கலந்தன கண்ணே! (கலந்தன கண்களே என்றாலும் பிழையில்லை); இது "மொழி நெகிழ்வு"!

இப்படி, கலந்தன/ கலந்தது போன்ற வினைமுற்றை வைத்தும், ஒருமையா, பன்மையா ன்னு எளிதாக் கண்டு புடிச்சீறலாம்!
தெரிநிலை உடைய அஃறிணை இயற்பெயர்
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே (தொல் - சொல்லதிகாரம்)


ஆனா, இந்தக் "-கள்" மூலமா, ஒரு பெரிய பிரச்சனை வந்துருச்சி!
படிச்ச மனுசன், ரொம்ப மரியாதை எதிர்பார்க்க ஆரம்பிச்சிட்டான்!:)
சில "நித்ய" ஆதீனங்கள்..."யாம் அறிவோம்!" ன்னு சொல்றாங்களே;  அது போல வச்சிக்குங்களேன்;
அதென்னடா யாம் அறிவோம்? "நான் அறிவேன்"-ன்னு சொன்னா என்னவாம்?

ஒருமை = ஒரு மாதிரியா இருக்காம்!
பன்மை தான் = மரியாதையா இருக்காம்:)
* அரசன் = மரியாதைக் குறைச்சல்!
* அரசர் = மரியாதையா இருக்கு!

ஆனா, அர் = பன்மை விகுதி ஆச்சே??? | ஆட-வன் = ஆட-வர்;
பன்மையைக் கொண்டு போய், மரியாதைக்கு வச்சிட்டோம்-ன்னா.... அப்பறம் பன்மைக்கு என்ன பண்ணுறதாம்?

=> விகுதியோடு-விகுதி சேர் => அரசு + (அர் + கள்)

-கள் (எ) அஃறிணை விகுதியை,
மரியாதைப் பன்மை காரணமாக,
உயர் திணைக்கும் வைக்கலாம் -ன்னு மாற்று ஏற்பாட்டைச் செஞ்சாரு!

* மன்னன் - மன்னர் = ஒருமை
* மன்னர் - மன்னர்கள் = பன்மை

அரசு-அர்-கள் = This is like double plural:)
ஆங்கிலத்தில், King - Kings! அவ்ளோ தான்; மரியாதைப் பன்மைல்லாம் கிடையாது; மருவாதை தெரியாத பயலுவ!:)

திராவிட மொழிகளில் தான் "மரியாதைப் பன்மை" ன்னு நினைக்கிறேன்!
தெலுங்கில்:
* ஒருமை = கிருஷ்ண தேவ ராஜு, கிருஷ்ண தேவ ராஜூலு!
* பன்மை = ஆந்திர தேச ராஜுலு

நாய் = குக்க; நாய்கள் = குக்கலு! ட்வீட்டர் = ட்வீட்டர்லு :)) மரியாதை குடுக்குறா மாதிரிக் குடுத்து, அஃறிணை ஆக்கீறலாம் போல இருக்கே:)


சரி, நாம Matter க்கு வருவோம்; "-கள்" எப்படி "-க்கள்" ஆச்சு??

தொல்காப்பியத்துல சொன்னதே தான்!.. "கள்/ க்கள்" = ஒற்று இரண்டாகும்!
கள்ளொடு சிவணும் அவ் இயற் பெயரே
அளபிற் குற்றுயிர் இரண்டு ஒற்றாகும்

இப்படி இரண்டு ஒற்று மிகுவதைப், பல இடங்களில் காணலாம்!
* ஆ = ஆ-க்கள்
* மா = மா-க்கள்
ஊர்க் குறு மா-க்கள் வெண் கோடு கழாஅலின் (புறநானூறு)

இலக்கண ஆசிரியர்கள், -க்கள் சரளமாகப் பயன்படுத்துவர்;
Ex: "லள -க்கள்   திரிந்த  னண -க்களுக்கு முன்னின்ற மகரம் குறுகும்"

முன் சொன்ன கதை தான்! "மரியாதைப் பன்மைத்" தாக்கத்தால், ரெண்டுமே குறிக்கத் துவங்கி விட்டது!
= பூ= பூக்கள் & குரு = குருக்கள்

Okடா இரவி... புரிஞ்சிருச்சி! -கள், -க்கள் = ரெண்டுமே பலவின்பால் விகுதி! ஒத்துக்கறோம்;
ஆனா.. என் கேள்வி என்ன-ன்னா: எதை, எங்கே பயன்படுத்தறது? அதை இன்னும் நீ சொல்லலீயே?
குரு=குருக்கள் போல, வீடு=வீடுக்கள் -ன்னு எழுதலாமா?:) ha ha ha!


இங்க தான் "டண்-டணக்கா" இருக்கு!:)
குரு = குருக்கள்! ஆனா...வீடு = வீடுக்கள் அல்ல!
Fan = Fans! ஆனா Man = Mans ன்னு கேட்போமா?:) Man = Men!

இதுக்குப் பேரு தான் = மரபியல்! (சொல்லதிகார - விளி மரபு)

புழுக்கள், பசுக்கள், குருக்கள்
புழு-கள், பசு-கள், குரு-கள்-ன்னு சொல்லிப் பாருங்க! எப்படி இருக்கு? :)

புழு-க்-கள் = புழுவின் கள் = Chinese Soup-ன்னு... சில குசும்பு புடிச்ச இலவச நாத்தனார்கள் அர்த்தம் பண்ணிக்கலாம்!
எழுத்து-க்-கள் = போதை தரும் எழுத்து; டுமீலன்ஸ் & குடிப்பழக்கம் always go together -ன்னுலாம் எள்ளிக் கெக்கலிப்பாய்ங்க!:(

ஆனா...."எழுத்து-க்கள்" ன்னு எழுதற "டுமீலன்ஸ்" யாரு யாரு?
= தொல்காப்பியத்துக்கு உரை கண்ட நச்சினார்க்கினியர்
= இளம்பூரணர்
= மணக்குடவர்
= ஈழத்தின் சைவத் தமிழறிஞர், ஆறுமுக நாவலர்
= All of the Above!

உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் ன்னு சொல்லுவாங்க! அவரின் தமிழ் அறிவு, எந்த Tweeter க்கும் இளைச்சது கிடையாது!

நீங்களே கீழே வாசிச்சிப் பாருங்க...
எத்தனை முறை..."எழுத்து-க்கள், "எழுத்து-க்கள்" ன்னு... பயன்படுத்தறாரு?



பாத்தீங்கல்ல? ஆனானப்பட்ட தொல்காப்பிய ஆசிரியர், இலக்கணப் பிழை பண்ணிட்டாரா? இல்லை!
முழு உரையும் இங்கிட்டு போய் படிச்சிக்கோங்க!
http://tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=1&auth_pub_id=1&pno=1

இப்போ தெரிகிறதா?
= நச்சினார்க்கினியர் எழுத்துக்கள் -ன்னு தான் எழுதுகிறார்;
= வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள்.. சரியே! பிழை இல்லை!


சரிப்பா... இது ஒரு சாதாரணச் சொல்லு;
இதுல ஏன் இம்புட்டு உறுதி காட்டுற நீயி?


ஏன்னா, இந்த வாழ்த்துக்களை வச்சியே, #TNFisherman இயக்கத்தின் போது, தமிழ் உணர்வாளர்களை, "டுமீல்" ன்னு ட்விட்டரில் இளக்காரம் பேசினார்கள்!
#MullaPeriyar என்ற மலையாள வழக்கை வச்சி, பெரியார் என்ன முல்லா-வா? -ன்னு எள்ளி ஏசினார்கள்:(

மொதல்ல டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; அப்பறமா டுமீல் கோஷம் போடப் போவலாம்"
= இப்படிப் பேசிய "பண்டிதாள்", இப்போ எங்கே போய் மூஞ்சியை வச்சிப்பாங்க?
= நச்சினார்க்கினியர் பேச்சுக்கு, எதிர்ப்பேச்சு பேசச் சொல்லுங்க, பார்ப்போம்!

மத்தபடி... இதை, இம்புட்டு வளர்க்க நான் எண்ணியதே இல்லை; இளக்காரக் கீச்சுகளின் போதும் அமைதி காத்தேன்; இன்றே வெடித்தேன்; மொழியின் மான உணர்ச்சி; அதற்காகவே! 

தமிழ் மொழி, எக்காரணம் கொண்டும், தன்னிடம் உள்ள நல்ல சொற்களை இழந்து விடக் கூடாது!!
இது தொல்காப்பியர் தொட்டு வந்த மரபியல்! மொழியியல் நெகிழ்வு!
அதை over night -இல் tweet போட்டு, அழிச்சீற முடியாது! கூடாது!

மத்தபடி, கற்றது கை மண்ணளவு! திருத்திக் கொள்ள வெட்கப்படவே மாட்டேன்;
அப்படித் தான் அன்னிக்கு, @naanraman என்பவர் செய்வினை/ செயப்பாட்டு வினை -ன்னு கேட்ட கேள்விக்கு, நானும் @nchokkan சாரும் ஆடிப்போனோம்;
@naanraman யாரு-ன்னே தெரியாது! அவர் சுட்டிக் காட்டியதை ஏத்துக்கிட்டு, மன்னிப்பும் கேட்டு, தன்வினை - பிறவினை -ன்னு மாற்றியே இட்டேன்!

“மொழி மரபியலை” நம் Ego -வுக்கு அணுகாமல்....
தமிழைத் தமிழாக அணுகிப் பார்த்தா, இது புலப்படும்!
------------

இன்னோன்னும் சொல்லணும்!
மொதல்ல, எழுத்து-க்கள் இலக்கணப்படியே தவறு -ன்னு சொன்னவங்க..
இப்போ நச்சினார்க்கினியர் தரவு கண்டதும்
Tune ஐ மாத்தி, "அனர்த்தம்" வந்துறப்படாதே -ன்னு கவலைப் படுறாங்களாம்:)

எழுத்து-க்-"கள்" = "போதை" தரும் எழுத்து! 'அனர்த்தம்' வந்துருமாம்!
அப்படீன்னா Fruits = பழங்-கள்? = பழமையான கள்? 10 year Wine ஆ?:)
இனி பழங்-கள் ன்னு யாரும் எழுதாதேள்; "பழம்ஸ்" ன்னு எழுதுங்கோ??:)

* வாழ்த்து + க் + கள் = "குவார்ட்டரோடு" கூடிய வாழ்த்து;
* வாழ்த் + "துகள்"? = வாழ்க்கையே தூள் தூளாப் போவட்டும்?
இப்படி நல்ல தமிழ்ச் சொல்லையெல்லாம், 'அனர்த்தம்' என்ற பேரில், நாக்கால வெட்டி வெட்டிக் கெக்கலிப்பது = மட்டமான மனப்பான்மை:(

"காய் தொங்குது" = பலான அர்த்தமெல்லாம் சொல்ல முடியும்:)
அதுக்காக, "காய்" என்பதை மொழியில் இருந்தே துரத்திவிடுவோமா என்ன?

ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சங்கேத மொழி இருக்கும்!
* கல்லூரி மாணவர்கள் ’பாஷை’
* டீக்கடை ’பாஷை’
* அவாள் ’பாஷை’
* சென்னை”பாஷை’ ன்னு நிறைய...
கல்லூரிப் பசங்க, "காய்" ன்னா... நமுட்டுச் சிரிப்பு, சிரிக்கத் தான் செய்வாங்க:)
அதுக்காக, காய் எ. சொல்லை மொழியை விட்டே துரத்தீற முடியாது!
------------

சிறு, நீர்த் துளி உன் மேல் பட்டது
= இந்தக் காலத்தில் இப்படிச் சேர்த்துச் சொன்னா, எல்லாருக்குமே நெருடும்:))
ஏன்னா சிறு-நீர் universal ஆக ஒன்றைக் குறிக்கத் துவங்கி விட்டது!
கொஞ்சம் நீர்த் துளி உன் மேல் பட்டது -ன்னு மாத்திச் சொல்லலாம்;

ஆனா,காய் என்பதோ / எழுத்துக்கள் என்பதோ, universalஆக ஒன்றைக் குறிக்கவில்லை!  
பொதுப் புழக்கத்தில் இன்னமும் இருக்கு! இப்படிப் பரவலாக இருக்கும் சொல்லை/ தமிழைக் காணாமல் போக.. நாமே வழி செய்யலாமா?:((
------------

இதுக்குப் பேரு = மிகைத் திருத்தம்
சரியாக இருக்கும் ஒன்றைத்... தவறு -ன்னு "திருத்துவது"!

யாதும் ஊரே, யாவரும் கே"ளீ"ர் ன்னு எழுதினா...
அப்போ... கே"ளி"ர் = உறவினர் ன்னு திருத்துங்க!
ஆனா, வாழ்த்துக்கள்/ எழுத்துக்கள் சரியே; மிகையாகத் திருத்தாதீர்

* தொல்காப்பியர் - நச்சினார்க்கினியர் பலுக்கல்,
* ஈழத்து அறிஞர் பலுக்கல்
* இன்றைய இராம.கி ஐயா வரை பயன்படுத்துவது...
* அதை "மிகைத் திருத்தம்" பண்ணித் துரத்திடாதீங்க!
தமிழுக்காக, உங்களிடம் என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!



சரி, எழுத்துக்கள் சரியே = தொல்காப்பிய ஆசிரியர்கள் மூலம் பார்த்து விட்டோம்!

இன்னோன்னும் சொல்லிடறேன்:
வாழ்த்துக்கள் என்று எழுதுவோர், -"க்கள்" என்பதற்கு, குற்றியலுகர விதியை ஆதாரமாக் காட்டுவாங்க! ஆனா அதுவும் தவறே!
நாம தான் எந்தக் கட்சியிலும் நிக்குற சுபாவம் இல்லீயே:) தமிழைத் தமிழாய் அணுகவே பிடிக்கும்!

குற்றியலுகரப் புணர்ச்சி:
பிடித்து + கொள் = பிடித்துக் கொள்! =>ஒற்று மிகும்!
இதே போல வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் ன்னு எடுத்துக்கக் கூடாது!

ஏன்னா இவ்விதி, ரெண்டு "சொற்களுக்கு" இடையே தான்!
* "-கள்" = சொல் அல்ல!
* "-கள்" = விகுதி! அது வரு"மொழி" அன்று!
So, முன்பு சொன்ன விகுதி விதியைத் தான் எடுத்துக்கணும்! குற்றியலுகர விதியை அல்ல!
------------

எங்கே -கள் போடுறது? எங்கே -க்கள் போடுறது?
= சுருக்கமாப் படம் போட்டுச் சொல்லட்டுமா?
= விரிவா, இதோ நூலகத்தில் பாத்துக்கிடலாம்!
Here = http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=84

A Ready Reckoner Picture is also following after some examples :)

1) "க்" மிகலாம்...

* ஒற்றோடு வந்தா = மிகலாம் (கவனிங்க: "மிகணும்" ன்னு சொல்லலை, "மிகலாம்")
=> முத்துக்கள், எழுத்துக்கள், பழச் சத்துக்கள் = சரியே!
=> முத்துகள், எழுத்துகள், பழச் சத்துகள் = சரியே!

* ஒற்று இல்லாமல் வரும் உகரச் சொற்கள் = மிகாது!
=> கொலுசுகள், மிராசுகள்

எழுத்துக்கள்/ எழுத்துகள் = இரண்டும் சரியே! போலவே பாட்டுக்கள், வாழ்த்துக்கள், கொழுப்புக்கள்!
ஆனால், இரும்புகள் தான்; இரும்புக்கள் இல்லை:) போலவே தழும்புகள்! தழும்புக்கள் இல்லை!

வல்லின எழுத்து இரட்டிக்கும் போது மட்டுமே.. க்கள் என்று அளபெடுத்து ஒலிக்கலாம்! *இரு"ப்பு" -க்கள்
*வாழ்"த்து" -க்கள்
*எழு"த்து" -க்கள்
*அ"ச்சு" -க்கள்

இந்த நுட்பத்தை/ நெகிழ்வை அறிந்து கொள்வோம்!
*வாழ்த்து= த் வல்லின ஒற்று! => மிகலாம் = வாழ்த்துக்கள்!
*இரும்பு=   ம் வல்லின ஒற்று அல்ல! => மிகாது = இரும்புகள்!
*கொலுசு=  ஒற்றே இல்ல => கொலுசு-க்கள் ன்னு மிகாது! = கொலுசுகள்!

------------

2) "க்" மிகணும்

* ஈரெழுத்துச் சொற்கள்.. குறிலா வந்தா = மிகணும்!
=> பசு-க்கள், அணு-க்கள், தெரு-க்கள்

* ஈரெழுத்துச் சொற்கள்.. நெடிலா வந்தா = மிகாது!
=> வீடு-கள், மாடு-கள், ஓடு-கள்

இப்போ புரியுதா? குரு-க்கள் = சரி! வீடு-க்கள் = தவறு:)

* ஓரெழுத்துச் சொற்கள் = மிகணும்!
=> பூ-க்கள், மா-க்கள், ஈ-க்கள்
(ஐகார-ஒளகாரக் குறுக்கம் அற்றவை மட்டுமே! கைகள்! கைக்கள் அல்ல!)
------------

3) "க்" மிகவே கூடாது


ஓரெழுத்தோ, ஈரெழுத்தோ, பல எழுத்தோ...."வு" வரும் போது மட்டும், மிகவே கூடாது!
=> ஆய்வுகள், நோவுகள், தீவுகள், உராய்வுகள்
------------

அவ்ளோ தானுங்க! இதுக்கா இத்தினி வாய்க்கா வரப்புத் தகராறு?:)
Lemme put this as a ready reckoner for the benefit of all...(save this img) 


வாழ்த்து-க்கள் ன்னு முன்னாடி எழுதிக்கிட்டு இருந்தவங்க...
என்னமோ ஏதோ? ன்னு பயந்து போயி, மதம் மாத்திக்கிட்டவங்க,
பழையபடி, வாழ்த்து-க்கள் ன்னே எழுதலாம்:)
பாவ மன்னிப்பு கேக்க வேணாம்! ஏன்னா, நீங்க எந்தத் தப்பும் செய்யலை!:)

Thanks for travelling with me in this long story:)




முடிப்பா, மக்களுக்கு ஒரு வேண்டுகோள்:

1) Tamizh has a Written Constitution! That too with a version history of 2000+ years!
So, Never “banish” rightful words from “heritage”!
------------------------------------------------

2) அப்போ தவறான சொற்களை எப்படித் தான் அடையாளம் காண்பது?

= யார்.. தவறு-ன்னு சொல்றாரோ, அவரிடம், தரவு கேளுங்கள்!
நானே சொன்னாலும், என். சொக்கன் சொன்னாலும், வேறெவர் சொன்னாலும்... தரவு தரவு:)
------------------------------------------------

3) தொல்காப்பியரை அவ்ளோ லேசுல எடை போட்டுறாதீக!
நீங்களா முடிவு கட்டி.... Tweet போட்டுறாதீக!
தொல்காப்பியம் = தட்டுங்கள்! திறக்கப்படும்:))

ஐயா -> அய்யா
= தந்தை பெரியார் தான் ஐ->அய் ன்னு தேவையில்லாம மாத்தினாரு-ன்னு சில தமிழ்ப் "பண்டிதாள்" கேலி பேசினாங்க-பேசுவாய்ங்க! (#MullaPeriyar)
= தமிழ்ப் போர்வையில் இருந்துக்கிட்டே சம்ஸ்கிருத-பாசமிகு பண்டிதாள்!

ஆனா, பெரியாரைத் திட்டும் இவர்கள், தொல்காப்பியர் மேல் கை வைக்க முடியுமோ?
பெரியாருக்கு 2000+ years back, தொல்காப்பியரே.., எழுத்துச் சீர்திருத்தம் குறிச்சி வச்சிட்டுத் தான் போய் இருக்காரு - வியப்பா இல்ல?

ஐ & அய்!
"அ"-கரத்து இம்பர் ,"ய"-கரப் புள்ளியும்
"ஐ" என நெடுஞ்சினை மெய் பெறத் தோன்றும் (தொல்-எழுத்ததிகாரம்)

தொல்காப்பியர் = ஆதித் தமிழ்த் தந்தை
அவரை விட, உங்க அரைகுறை tweet பெருசில்ல-ன்னு உணரவும்!


4) "பிக்காலி" ன்னு உங்களைத் திட்டுறவன் கூட Ok, ராசி ஆயீருவீங்க!:)
ஆனா உங்களை எதிர்ப்பாய் ஒன்னுமே பேசாம...
உங்க கருத்துக்கு மாறாக, உண்மைத் தரவு காட்டிட்டா?
ஆதாரமாடா குடுக்குற? நீயே என் எதிரி! என்று ஆகிடறோம் அல்லவா?:)

= கருத்து வேற, மனிதம் வேற!

என் நண்பர்கள்-ன்னா.....
= என் கருத்துக்கு உடன்பட்டே அவிங்களும் இருக்கணும்;
= என் உணர்ச்சிகளையே அவங்களும் பிரதிபலிக்கணும்!
Plz... இது வேண்டாமே:)
------------------------------------------------

5) கருத்து வேறுபட்டாலும், மனம் ஒன்றான குணம்! = தாமே பெற வேலவன் தந்தது!

"டேய் முருகா"-னு.. "Dei" தான் போடுறேன்; கோச்சிக்கவே மாட்டான்:)
உடனே, "டேய் பெருமாள்"-னு சொல்லேன் பார்ப்போம்? -னு, சமயக் கணக்கா வம்பிழுக்கக் கூடாது!
சொல்ல மாட்டேன்! ஏன்னா அவரு = அப்பா! காதலனை டேய் போடலாம்:) அப்பாவை?:)
------------------------------------------------

6) Finally.....
#TNFisherman, 
#EelamTamils, 
#MullaPeriyar 
போன்ற Twitter இயக்க முயற்சிகளில், எழுத்துப் பிழை வரலாம்! அது ஒன்னும் "பஞ்சமா பாதகம்" இல்லை!
ஆனா அதுக்காக...
டுமீலை ஒழுங்கா எழுதுங்கடா; டுமீலன்ஸ் அப்பறம் கோஷம் போடப் போவலாம் - போன்ற "மட்டமான இளக்காரங்கள்" வேண்டாமே!

இரங்கல் வீட்டிலே சந்திப் பிழை காண்போமா? :(

------------------------------------------------

@iamkarki கிட்ட கடன் பாக்கி இருக்கு; எலே... எத்தியோப்பா ஆப்பிரிக்க குழந்தைங்க முகாமில்,
ஆப்பிரிக்க பசங்க.. விஜய் பாட்டு பாடுதுங்க = "என் உச்சி மண்டைல சுர்-ங்குது" = I had the shock of my life: )

அனைவருக்கும் தமிழ் இனிய...
வாழ்த்துக்கள் & வாழ்த்துகள்! வர்ட்டா?:)

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP