Showing posts with label Nation. Show all posts
Showing posts with label Nation. Show all posts

Thursday, August 14, 2008

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்!
அறுபத்தோரு ஆண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன என்று பார்க்கலாம் வாங்க! அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன், தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நேர்காணலை Rediff.com இல் படித்து விட்டீர்களா? சுருக்கமாக இங்கே!

1.Where we achieved:
The Indian economy is in an ascent phase. Particularly, our economy is growing at 8% to 9% per annum for the last four years
Where we failed:
220 million people living below the poverty line shows the failure of our system
சாதனை: இந்தியப் பொருளாதார வளர்ச்சி 8-9%; சக்கரத்தின் மேல் புறச் சுழற்சியில் உள்ளோம்!
வேதனை: 22 கோடி மக்கள் இன்னும் வறுமைக்கோட்டின் கீழே வாழ்வது, நம் அமைப்பின் தோல்வி!

2.The need for a National Campaign to Eradicate Terrorism
தீவிரவாதம் களையெடுக்க நாடு தழுவிய முயற்சி

3.The skill deficit among our youth is the most important issue.
இளைஞர் ஆற்றல் பற்றாக்குறை என்பது முக்கியமான பிரச்சனை!

4.Always elect people who will work for development politics.
வளர்ச்சி அரசியல் செய்பவர்களுக்கு மட்டுமே வாக்கு அளியுங்கள்!

5.It is essential that economic prosperity reaches 700 million people in rural areas.
நகர்ப்புறம் அல்லாத எழுபது கோடி மக்களை, பொருளாதார வளர்ச்சி சென்று தாக்குமா/அடையுமா?

6.The youth is restless. They want to contribute to make India great.
The time has come to launch a youth movement for national development.
இந்திய இளைஞர் இயக்கம் ஒன்றைத் தொடங்கும் வேளை வந்து விட்டது!


பதிவுக்கு மீண்டும் வருவோம்...

தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்து அது பாடப்பட்டது என்பது, ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

மேலும் அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை! நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்! மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார். இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொல்லிப் பின்னர் பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன பாடல், துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது! இதோ சபை விவாதங்களின் சுட்டி! ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது! அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும். வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm



சென்ற ஆண்டு விடுதலை நாள் விழாவின் போது இட்ட இடுகையின் மீள்பதிவு!
Read more »

Monday, September 24, 2007

ராமர் பாலமும், ராமானுசரும்!

ராமர் பாலத்தைப் பற்றிப் பலரும் பேசி விட்டார்கள்! ஆனால் அது பற்றி ராமன் பேச வேண்டாமா? இதோ! இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வு! இதைப் படிக்க வேண்டியவர் படிக்கட்டும்! பிடிக்க வேண்டியவர் பிடிக்கட்டும்!!

முன் குறிப்பு:
பாலம்-ராமானுசர்-அதை அவர் இடிக்கச் சொன்னாரா?-ன்னு "அந்தக்" கண்ணோட்டத்தில் மட்டும் தேடினா இந்தப் பதிவு அதற்குத் தீனி போடாது! :-)
பாலம் சம்பந்தமா ஆன்மீகத் தலைவர்கள் எப்படி நடந்து கொள்ளணும்? - அப்படின்னு தேடினா அப்போ நிச்சயம் புரியும்! :-))


மதுரைக்கு அருகில் உள்ள ஒரு சிற்றூர். கிராமம் என்றே வைத்துக் கொள்ளுங்களேன்.
அழகிய இராமர் கோவில்! கோவில் மட்டுமா அழகு?
கோவிலுக்குள் குடியிருந்த இராமனும் கொள்ளை அழகு! வித்தியாசமான விக்ரகமும் கூட! தலையைச் சாய்த்தாற் போல், குறி பார்த்து பாணம் விடத் தயாராய் இருக்கும் இராமன்!
பொதுவா கூடவே சீதை, இலக்குவன், அனுமன்-மூவரும் இருப்பார்கள்.
இங்கு இன்னும் கூடச் சேர்ந்து சுக்ரீவன், அங்கதன் என்று காண்பதற்கு அரிய இராம விக்ரகம்!

அந்நியர் படையெடுப்பு! சூறையாடல்!
அகந்தையால் ஊரையும் கோவிலையும் அழித்தார்கள்! கிராம மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை!
இராமன் திருமேனியையாவது காப்பாற்றினால், அடுத்த தலைமுறைக்குத் தரலாம் அல்லவா? தூக்கிக் கொண்டு ஊர் ஊராய், அந்நியரின் கண்ணில் படாமல் ஓடினார்கள்! கடைசியில் வந்து சேர்ந்த இடம் திருமலை திருப்பதி அடிவாரம்!

அந்த சமயத்தில், அங்கு பாடம் பயின்று கொண்டிருந்தார் ஒரு பிரபல மதத்தலைவர்!
என்ன பாடம்? இராமாயணப் பாடம்!
பாடம் நடத்தியவர் பெயர் திருமலை நம்பி. பாடம் கேட்டவர் பெயர் இராமானுசர்!
அப்போது இராமானுசர் செம பாப்புலர் ஆகியிருந்த நேரம். அவர் பேச்சுக்கு மறுப்பேது? "உம்" என்று சொல்லும் முன் உருண்டோடி வரக்கூடிய தொண்டர் படை எல்லாம் அவருக்கு அமைந்து வி்ட்டது! அவரை விட வயதில் பெரியவர்களுக்கு எல்லாம் அவர் தலைவர்!

அன்று இராமாயணப் பாடத்தில், வீடணன் அடைக்கலப் படலம்!
சுக்ரீவன் எதிரியைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்ல, அனுமனோ சேர்க்கலாம் என்று சொல்ல, அங்கதன் வானத்தில் வீடணனைக் கைகாட்ட....
அதே நேரம் பார்த்து நம்ம மதுரை மக்கள், சிலைகளை எல்லாம் தூக்கிகிட்டு ஓடீயாறாங்க!
இராமானுசரை அங்கு கண்டதும் பணிந்து வணக்கம் சொல்லினர். அவருக்கோ உற்சாகம் கொள்ளவில்லை!
சுக்ரீவன் மறுத்துரைக்கும் படலம் கேட்கும் தருணத்தில், இப்படி சுக்ரீவனோடு, அங்கதனோடு, அனுமனோடு, இராமன் திருவுருவம் வந்து சேர்கிறதே!


திருமலையில் இராமன்

அனுமன்


சாமீ...எப்படியாச்சும் எங்க ஊருக்கு வந்து, கோவிலை மீண்டும் கட்டித் தர வேணுமுங்கோ!
இந்த இராமன் சிலையை திருப்பி வைக்க வேணுமுங்கோ!
நீங்க பெரிய மகான்! நீங்க மனசு வச்சா முடியாதது இல்ல!
நீங்க சொன்னா ராசா, அப்பறம் அந்த நவாப் கூடக் கேப்பாருங்க சாமீ!

சரி ஜனங்களே, ஆவன செய்யலாம்! மதச் சண்டைகள் மிகுந்து இப்படி நம் இராமன் ஊர் ஊராய் அல்லாடும் படி ஆகி விட்டதே! என்று கவலையுற்றார். உபவாசம் இருந்தார்.
(யார் அங்கே, நவாப்பை மாறு கால், மாறு கை வாங்கு என்றெல்லாம் சவடால் விட, பாவம் அவருக்குத் தெரியவில்லை :-)

நிலைமையைப் பார்த்து வரத் தன் சீடர்களை ஊருக்கு அனுப்பினார்!
அவர்கள் திரும்பி வந்து, "குருவே! கோவில் இப்போ இருந்த இடம், தடம் தெரியாமல் ஆகி விட்டது! அந்நியர்கள் அகப்பட்டதைச் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார்கள்! படை திரட்டி அப்போதே தடுத்திருக்க வேண்டும்! இப்போது காலம் கடந்து விட்டது!
அங்கே ஊர்ச் சந்தை ஏற்பட்டு, மக்கள் வணிக மண்டலமாக மாறி விட்டது, ஆசார்யரே!" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்!

யோசித்தார் இராமானுசர். சந்தையை இடிக்கச் சொல்லி, மறுபடியும் ஆலயம் கட்டலாமா?
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்! - இந்த "ராமா" என்னும் ரெண்டு எழுத்துக்குச் சந்தையைக் கொடுக்கட்டுமே!
- சந்தையைக் கொடுக்காவிட்டால் சண்டை போடுவோமா? இல்லை சாபம் கொடுப்போமா? இல்லை அடித்து நொறுக்குவோமா?

மதுரைக் கிராமத்து மக்களே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்!
உங்க ஊர் பேரே எனக்கு மறந்து போச்சு! அவ்வளவு சின்ன ஊர்! நம் இராமனை மீண்டும் அங்கே வைக்கலாம் தான்! ஊருக்குப் பொதுவான சந்தையை இடித்து விட்டுச் சிலை வைக்க வேண்டும் என்று அரசனிடம் சொல்ல என்னால் முடியும்!

ஆனால், அரசனையும் அரசியலையும் நம்பி சமயம் வளர்ப்பது மிகவும் கொடுமை! மக்கள் மனத்தில் தான் சமயம் வளரவேண்டுமே தவிர, அரசியலை நம்பி அல்ல!
சமயம்-ன்னா என்ன? சமைத்தல் தான் சமயம்!
அரிசியைச் சமைத்தால், அது பக்குவப்பட்டு, குழைந்து சாதம் ஆகும்!
அது போல் வைணவ சமயம் நம்மை எல்லாம் சமைக்க வேண்டும்! பக்குவப்படுத்த வேண்டும்!


ராமானுசர்


அறிந்தோ அறியாமலோ இவ்வாறு ஆகி விட்டது! ஊரையும் சந்தையையும் இடிக்க வேண்டாம்! அது பொது மக்கள் பயன்பாடு ஆகி விட்டது! வேண்டுமானால் ஒன்று செய்யலாம்!
இந்த விக்ரகங்களைக் கலியுக வைகுந்தம் என்று போற்றப்படும் திருமலையில் அடியேன் ப்ரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்கிறேன்! திருமலையில் திருவேங்கடமுடையான் கருவறையிலேயே இந்தச் சிலைகளை வைத்து விடலாம்!

எங்கோ ஊர் பேர் தெரியாது இருந்த இந்த அழகு விக்ரகம், இனி சகலரும் அறியுமாறு, புகழ் பெற்ற திருப்பதி மலையில் இருந்து அருள் பாலிக்கட்டும்! அர்ச்சகர்களையும் மற்றவர்களையும் இதற்கு ஒத்துக் கொள்ள வைப்பது என் பாடு!
ஆனால் அதற்கு முன் நீங்கள் நான் சொல்வதை ஒப்புக் கொள்கிறீகளா?
மக்களுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை!
ஒரு புறம் தங்கள் ஊர் இராமனைப் பிரிய வேண்டுமே என்ற கலக்கம்! இன்னொரு புறம் திருவேங்கட மலையில் இராமன் இருக்கப் போவதை எண்ணி ஆனந்தம்! - இராமானுசர் பேச்சைக் கேட்டனர்!
வில்லாளி இராமனை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை! விளங்கக் கொடுத்தனர்!
இடையில் வந்த விக்ரகத்தை, இடையறாது வழிபட ஏற்பாடுகள் எல்லாம் செய்து வைத்தார் அண்ணல் இராமானுசர்!

இன்றும் திருமலையில் இராமன் திருக்கோலத்தைக் கருவறைக்குள் செல்லும் வழியில் காணலாம்!
இராமர் மேடை என்றே அதற்குப் பெயர்.
எங்கிருந்தோ வந்த இராமன், இன்று நீங்காது நிற்கிறான்!

இராமானுசர் நினைத்திருந்தால், அரசியல் செய்திருக்கலாம் = இப்போது பாலத்தில் செய்வது போல!
அரசனிடம் தன் செல்வாக்கைக் காட்டி, ஊர்ச்சொத்தை இடித்து விட்டு இன்னொரு ஆலயம் எழுப்பி இருக்கலாம்!
மக்கள் கேட்கா விட்டாலோ, தன் தொண்டர் படையை ஏவி விட்டிருக்கலாம்! = இப்போதைய கல்வீச்சு கலாட்டா போல!

ஊரே கூச்சலில் மூழ்கியிருக்க, கலங்கிய குட்டையில் மீன் பிடித்து இருக்கலாம்! அறிக்கைப் போர் நடத்தி இருக்கலாம்! = நீ என்ன பாலம் கட்டும் இன்ஜினியரா / தப்பாப் பேசும் நாவை அறுத்துக்கிட்டு வாங்கடா! என்று இப்போது இரு தரப்பும் பேசிக் கொள்வது போல!
இப்படி எல்லாம் செய்திருந்தால், ஒரு அஞ்சு வருடத்துக்குள் மறுபடியும் அந்தக் கோவில் கட்டி, பத்தோடு பதினொன்னா போயிருக்கும்!
ஆனால் இராம நாமமும், வைணவமும் இந்தத் தலைமுறை வரை தழைத்திருக்குமோ?

துலாபாரம் என்று எடைக்கு எடை வெல்லமும் சர்க்கரையும் தருவார்கள், குழந்தையின் நேர்த்திக் கடனுக்கு! தலையை வெட்டிக் கொண்டு வந்தால் எடைக்கு எடை தங்கம் என்று ஆன்மீகம் பேசவே பேசாது!
ஆக்கத் தான் எடைக்கு எடை! அழிக்க அல்ல!
இதை மதத் தலைவர்கள் மனத்தில் இருத்த வேண்டும்! மதத் தலைவர்கள் என்று கூறிக் கொள்வோரும், மதம் காக்கப் புறப்பட்டவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்!
இராமானுசர் சமயத்தைக் கட்டிக் காத்து நமக்குத் தந்தது போல், தம்மால் தர முடியுமா என்று அவரவர் மனசாட்சியைக் கேட்கட்டும்!

இராமனை உணர்ந்தவர் இராமானுசர்!
இராமனையும் இராமானுசரையும் உணர்ந்தவர் யாரோ?



References:
1. திருமலைக் கோவில் ஒழுகு
2. அனந்தாழ்வான் அருளிய வேங்கடாசல இதிகாச மாலை
Read more »

Friday, September 14, 2007

காங்கிரஸ்காரர் கனவை நனவாக்கிய திமுக-காரர் - தமிழ்நாடு தீர்மானம்!

அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் இன்று (Sep 15th). நூற்றாண்டு விழாவுக்கு ஓராண்டு முன்னோடி (99).
அவர் இன்னும் சற்று நாள் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்நாட்டின் தலைவிதி எப்படி ஆகி இருக்குமோ இல்லையோ, நிச்சயம் இப்படி ஆகியிருக்காது என்று சொல்வாரும் உண்டு!

அவர் பிறந்த நாள் அஞ்சலியாக இந்தப் பதிவு! - அவர் கொண்டு வந்த தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டசபை தீர்மானத்தைப் பார்க்கலாம் வாங்க!

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரம் என்றோர்
மணியாரம் படைத்த தமிழ்நாடு
- இப்படி தமிழ்நாடு, தமிழ்நாடு என்று பாரதி கூவி விட்டுப் போனாலும், தமிழ்நாடு என்னவோ மதறாஸ் ராஜதானியாகவே இருந்தது!

இனி, அந்த நாள் ஞாபாகம் - பத்திரிகைக் குறிப்பை, History Channel போல அப்படியே பார்ப்போம்! நன்றி - மாலை மலர்!



"தமிழ்நாடு" பெயர் மாற்றக் கோரிக்கை. காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் உயிர்த்தியாகம்; 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மரணம் அடைந்தார்
மொழி வாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்ட பிறகும் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படவில்லை. ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் அழைக்கப்பட்டது.

"சென்னை ராஜ்ஜியம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும்" என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கனார் 1957ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர்.

"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார்.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.

காமராஜர் பதில்
இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார். மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.
"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 76_வது நாளில் (1957 அக்டோபரில்) அவர் மரணம் அடைந்தார்.

தமிழில் "தமிழ்நாடு" ஆங்கிலத்தில் "மெட்ராஸ்"
இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின.
இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24_2_1961_ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம்.

இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும்.

எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

தி.மு.க. வலியுறுத்தல்
எனினும், "ஆங்கிலத்திலும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.


18_7_1967
"தமிழ்நாடு" பெயர் மாற்ற தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது

"மெட்ராஸ் ஸ்டேட்" (சென்னை ராஜ்ஜியம்) என்ற பெயரை அடியோடு ஒழித்து, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வகை செய்யும் தீர்மானம், தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேறியது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, தமிழில் மட்டும் "தமிழ்நாடு" என்று அழைக்கப்பட்டாலும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே குறிப்பிடப்பட்டது. "மெட்ராஸ் ஸ்டேட்" என்ற பெயரை அடியோடு ஒழித்து, "தமிழ்நாடு" என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்தது.

சட்டசபையில் தீர்மானம்:
இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18_7_1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார்.
"தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், "இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்' என்று அழைக்க வேண்டும். `மதராசி' என்று அழைக்கக்கூடாது" என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், "தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணா விரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்" என்று குறிப்பிட்டார்.

தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
"இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக _ உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந் தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய்நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா?

முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது. அடக்கிக்கொண்டேன்.
தமிழ்நாடு என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் "செயிண்ட் ஜார்ஜ் கோட்டை" என்று இருப்பதை "திருவள்ளுவர் கோட்டை" என்று மாற்ற வேண்டும்."
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.

அண்ணா பதில்
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
"இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.

இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய மந்திரிகள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, "தமிழ்நாடு" என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை" என்று கூறினார்கள்.

10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை "மெட்ராஸ் ஸ்டேட்" என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் "டமில்நாட்" (தமிழ்நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல. தமிழின் வெற்றி. தமிழ ரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ்நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்.

மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும். அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது.
சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.

நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.

பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

"தமிழ்நாடு வாழ்க"
பின் அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி, "தமிழ்நாடு" என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் "வாழ்க" என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.
Read more »

Wednesday, August 15, 2007

Aug 15 - தேசிய கீதமா? வி-தேசிய கீதமா??

அனைவருக்கும் இனிய சுதந்திர தின (விடுதலை நாள்) வாழ்த்துக்கள்! அறுபதாண்டுகளைக் கொண்டாடும் இந்தியா, இன்னுமா அந்நியரைப் போற்றும் பாடலைத் தேசிய கீதமாகக் கொண்டுள்ளது? - என்று ஒரு சர்ச்சை அவ்வப்போது சில இடங்களில் எழும்! பின்பு அடங்கி விடும்! அது என்ன தான் சர்ச்சை என்று பார்க்கலாம் வாங்க!
அப்படியே நம் தேசிய கீதமும், அதன் பொருளும் அறிந்து கொள்ளலாம் வாங்க!

அதற்கு முன் நீங்கள் எல்லாரும், சர்வேசன் கேட்டபடி பாடி விட்டீர்களா?
பாடவில்லை என்றால், மனசுக்குள்ளவாச்சும் ஒரு முறை பாடிப் பாருங்களேன்! இதோ உதவிக்கு ராணுவத்தின் இசை முழக்கம். 52 விநாடிகள்!



தாகூர் இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களுக்குச் சொந்தக்காரர்!
உலகில் வேறு எவர்க்கும் இந்தப் பெருமை உள்ளதா என்று தெரியவில்லை!
ஒன்று, நம் இந்தியாவின் தேசிய கீதம் - ஜன கன மன
இரண்டு, பங்க்ளாதேஷ் எனும் வங்காள தேசத்தின் கீதம் - அமர் ஷோனார் பாங்க்ளா

யாருக்கும் ரவீந்தரநாத தாகூரின் கவித்துவத்தின் மீதோ, தேச பக்தியின் மீதோ ஐயம் கிடையாது!
ஜாலியன் வாலா பாக் படுகொலையைக் கண்டித்து, தமக்குக் கொடுக்கப்பட்ட சர் பட்டத்தை உதறி எறிந்தவர் தான் தாகூர்.
தாகூரின் சாந்தி நிகேதன் பலகலைக் கழகத்துக்கு, அரசு அதிகாரிகள், தங்கள் பிள்ளைகளை அனுப்பக் கூடாது என்றெல்லாம் உத்தரவு போட்டது தான் ஆங்கிலேய அரசு!
பின் ஏன் இந்த சர்ச்சை? இந்தப் பாடல் எழுதப்பட்ட நேரம் அப்படி!

Dec 1911-இல் இது எழுதப்பட்டது! இறை வணக்கமாகவும், தேச வணக்கமாகவும் எழுதப்பட்ட பாடல் ஜன கன மன!
அந்த நேரம் தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவும் கூட! அந்தக் காலக்கட்டத்தில் இருந்த காங்கிரசின் நிலை வேறு! பூர்ண சுதந்திரம் எல்லாம் அப்போது கிடையாது! அப்போது தான் வங்காளப் பிரிவினையை (Partition of Bengal), காங்கிரசின் வேண்டுகோளுக்கு இணங்க, வாபஸ் வாங்கயிருந்த நேரம்!

அப்போது தான் கல்கத்தாவில் (கொல்கத்தாவில்) காங்கிரசின் மாநாடு நடந்தது! Dec 27, 1911 அன்று இரண்டாம் நாள் கூட்டத்தில் இந்த ஜன கன மன பாடல் துவக்க வணக்கமாகப் பாடப்பட்டது.
அந்த நாளில், ஜார்ஜ் மன்னரையும் அரசியையும் வரவேற்று, வரவேற்புப் பத்திரம் வாசித்தார்கள்! வங்காளப் பிரிவினையின் வாபசுக்கு நன்றி தெரிவித்தார்கள்! கூடவே ராம்புஜ் சவுத்தரி என்பவர் மன்னரை வரவேற்றுப் பாடிய ஹிந்திப் பாடலையும் பாடினார்கள். போதாதா?
பனை மரத்தின் கீழே நின்று பாலையே குடித்தாலும்...கள் என்று சொல்வார்களே...அந்தக் கதை ஆகி விட்டது!

அன்றைய ஆங்கில அரசுப் பத்திரிகைகள் ஸ்டேட்ஸ்மேன், இங்க்லீஷ் மேன் போன்றவை, இந்த நிகழ்ச்சியைக் கவர் செய்யும் போது, ஏதோ மன்னர் ஜார்ஜை வரவேற்க, பிரத்யேகமாக எழுதிப் பாடப்பட்ட பாடல் என்று நினைத்து எழுதி விட்டன. வங்காள மொழி என்று கூடத் தெரியாமல், சில பத்திரிகைகள் இதை ஹிந்திப் பாடல் என்று கூட எழுதின. இதை அறிந்து தாகூரே அப்போது வருத்தப்பட்டார்.



ஒரு பாடலைப் பற்றிப் பலர் விமர்சிக்கலாம்.
ஆனால் அதன் அடி நாதத்தில், யாரை வைத்துப் பாடப்பட்டது என்பது, அதனை ஆக்கிய கவிஞனின் மனசாட்சிக்குத் தான் முதலில் தெரியும். எனவே தாகூரின் மனநிலை என்ன என்பதையும் நாம் முதலில் படிக்க வேண்டும்!

ஜன கன மன, அதி நாயக = மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்யும் நாயக...அவர்கள் வாழ்வையும் விதியையும் நிர்ணயிக்கும் பாக்ய விதாதா....என்று மக்கள் மனங்களில் ஆட்சி செய்வதாக, எந்த ஒரு மானிட அரசனையும் பாடியதாக இல்லை.

அரசனையும் அரசியையும் சேர்த்தே தான் எல்லா இடத்திலும் வரவேற்றார்கள். ஆனால் இங்கோ பாடலில் அரசியைப் பற்றிய குறிப்பே இல்லை!
நாம் பாடும் தேசிய கீதம் வெறும் முதல் பத்தி தான். மொத்தம் ஐந்து பத்திகள் தாகூர் எழுதினார்!
மூன்றாம் செய்யுளில் இறைவனை நேரிடையாகவே சொற்களால் குறிக்கிறார் தாகூர்! கடவுளைச் சாரதியாகக் கொண்டு, காலங்காலமாக ஓடும் நாடு என்னும் தேர் - அதன் வீழ்ச்சியும் எழுச்சியும் பற்றிப் பேசுகிறார்.

ஆங்கிலக் கவிஞர் யீட்ஸ் (Yeats) பின்னாளில் தன் பெண் நண்பருக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜன கன மன ஆக்கப்பட்டதின் சில தகவல்களைச் சொல்லியுள்ளார். இது இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழிலும் வெளிவந்தது!
"அன்று அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட தாகூர், அருமையான பாடல் ஒன்றை இயற்றினார்.
இறைவனை நோக்கி எழுதப்பட்ட பாடல் இது. காங்கிரசாரிடம் கொடுங்கள். மிகவும் சந்தோஷப்படுவார்கள் என்று தாகூர் சொன்னார்".
இதைக் கேட்ட நண்பர் ஒருவர், யீட்ஸ்-இடம் இந்தத் தகவலைச் சொன்னதை பத்திரிகையில் வெளியிட்டு இருந்தார்கள்!
ஆனால், குற்றக் கண் கொண்டு பார்க்கத் தொடங்கி விட்ட பின், மனதுக்குச் சமாதானம் ஆவது? ஒன்றாவது!

கேட்வே ஆப் இந்தியா (Gateway of India) என்ற இந்தியாவின் நுழைவாயில், மும்பையில் உள்ளது.
இது ஜார்ஜ் மன்னரையும், மேரி அரசியையும் வரவேற்கக் கட்டப்பட்டது தான்! அந்த வாயிலில் அவ்வாறே எழுத்துக்களும் பொறிக்கப்பட்டு இருக்கும்!
"Erected to commemorate the landing in India of their Imperial Majesties King George V and Queen Mary on the Second of December MCMXI"
இதைப் போய், எப்படி "இந்தியாவின் நுழைவாயில்" என்று சொல்லலாம்? என்று பேசிக் கொண்டா இருக்கிறோம்?

1911-இல் பாடப்பட்டாலும், இதற்கு இசை அமைக்கப்பட்டது என்னவோ 1918-இல் தான்!
தாகூரும், ஆந்திரா-மதனப்பள்ளியில் உள்ள தியோசாபிகல் கல்லூரி தம்பதிகள் - ஜேம்ஸ் எச் கசின் (James H Cousin) இருவரும், சேர்ந்து தான் பாடலுக்குப் பண் அமைத்தார்கள் (Notation)! அதற்குப் பின்னர் தான் பாடல் பெரும் ஹிட் ஆனது!
சுருக்கமான அதே சமயம் கம்பீரமான இசை கொண்ட பாடல் என்பதால் மேலும் பிரபலமானது. ஜெயஹே ஜெயஹே என்பது இன்னும் தூக்கிக் கொடுத்தது.

நேதாஜியின் இந்திய தேசியப் படை (INA), இதைத் தனது கீதமாகக் கொண்டது!
1946-இல் காந்தியடிகளும் ஜன கன மன, துதிப்பாடல்களைப் போல தேசியத்துடன் இணைந்த பாடலாக ஆகி விட்டது என்று கூறி மகிழ்ந்தார்.


Capt Ram Singh Thakur playing the National Anthem
in the presence of Mahatma Gandhi.




அதே நேரம், பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் எழுதிய வந்தே மாதரம் பாடலும் நல்ல ஹிட்! தாகூரே இந்தப் பாடலை வரவேற்று பல இடங்களில் பேசியுள்ளார்.
ஆனால் அதில் மதம் குறித்த சில வெளிப்படையான சொற்கள் இருப்பதால், தேசிய கீதமாக அதை ஆக்கக் கூடாது என்று சில தேசியவாதிகள் பிரச்சனை எழுப்பினார்கள்.
இதனால் வலதுசாரி தேசபக்தர்கள் சிலரும், எதையோ எதிர்க்கப் போய், தாகூரின் கீதத்தை எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது தான் பரிதாபம்!

மேலும் Band வாத்தியத்தில் வந்தே மாதரம் இசைப்பது சற்றே கடினம்.
Band இசை என்பது ராணுவத்துக்கு மிகவும் தேவையான ஒன்று! நாட்டின் கீதத்தை உள்நாடு, வெளிநாடு என்று பல இடங்களில், Band-இல் வாசிப்பது இன்றியமையாத வழக்கம்!

கவிஞர் இக்பாலின் சாரே ஜஹான் ஸே அச்சா என்ற அருமையான பாடலும் போட்டியில் இருந்தது. அது சற்றுப் பெரிய பாடல். ஆனால் இசையோ அமர்க்களம்!

சுதந்திரம் பெற்ற பின், இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசியலமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), தேசிய கீதத்தை முடிவு செய்தது!
இதோ சபை விவாதங்களின் சுட்டி!
ஜன கன மன தேசிய கீதமாக உதித்தது!
அதே சமயம், வந்தே மாதரம் சுதந்திரப் போராட்டத்தின் ஆத்ம நாதம் - எனவே இது தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டு, தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு அளிக்கப்பட்டது!

இன்று உலகின் பல இசைக்கருவிகளில் நம் தேசிய கீதத்தை இசைக்க இயலும்! அதுவும் Band இசை! அதில் வெளுத்த வாங்க நம் தேசிய கீதத்தை மிஞ்ச எந்த கீதத்தாலும் முடியாது!
அமெரிக்க கடற்படை (US Naval Band) நம் கீதத்தை வாசிப்பதை இங்கு கேளுங்கள்!


2005இல், தேசிய கீதத்தில் இன்னொரு புதிய சர்ச்சை முளைத்தது.
சிந்து என்று கீதத்தில் வருகிறதே! அது இப்போது பாகிஸ்தானில் அல்லவா உள்ளது? அதைப் போய் நாம் எப்படிப் போற்றிப் பாட முடியும்?
"சிந்துவை" எடுத்து விட்டு, "காஷ்மீரம்" என்ற சொல்லைப் போட்டு விடுங்கள் என்று வாதிட்டார்கள்!

உச்ச நீதிமன்றம் வழக்கைக் கேட்டு விட்டு,
சிந்து என்பது கலாச்சாரம், பண்பாடு, மக்கள் ஆகிய இவற்றைத் தான் குறிக்கும்.
வெறும் பல ஆயிரம் ஏக்கர்கள் கொண்ட மண்ணை மட்டும் அல்ல!
சிந்து நதியும், சிந்தி மக்களும் இந்தியக் கலாச்சாரத்தில், பெரும் பங்கு வகிப்பவை!
எனவே தேசிய கீதத்தைத் துளியும் மாற்றத் தேவை இல்லை என்று தீர்ப்பு அளித்தது!


ஒரு பாடலின் ஆத்மா-வைப் பார்ப்பதை நாம் அனைவரும் கொஞ்சம் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்!

அதில் வரும் வார்த்தைகளையோ, இல்லை கால கட்டத்தையோ "மட்டும்" பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கத் தேவையில்லை!

வரும் தலைமுறையை, அது எப்படி உற்சாகப்படுத்தும் என்ற சிந்தனை இங்கு மிகவும் முக்கியம்! அப்படி எல்லாம் பார்த்தால்,
ஜன கன மன அதி நாயக - மக்களின் மனங்களில் அதி நாயகமாக, என்றென்றும் ரீங்காரம் இட்டுக் கொண்டு தான் இருக்கும்!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித் திருநாடு!
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே!!!



சில சுட்டிகள்:
தேசிய கீதம் - தமிழில், பொருளுடன்! நண்பர் குமரன், முன்னொரு முறை இட்ட இடுகை
வந்தே மாதரம் - பாரதியாரின் மொழிபெயர்ப்பு

வெள்ளைக்கார பெண்ணொருத்தி, சொல் ஒரு சொல்லாய், சொல்லிக் கொடுக்கும் ஜன கன மன!


சியாச்சென் (Siachen) பனிப்பாறைகளில் - ஜன கன மன முழக்கம்!


ஜன கன மன - பல வாத்தியங்களில் முழக்கம்!


References:
Meaning of the National Anthem at Nation Portal of India, Government of India.
http://india.gov.in/knowindia/national_anthem.php


Are we still singing for the Empire? - by Pradip Kumar Datta
http://www.sacw.net/DC/CommunalismCollection/ArticlesArchive/pkDatta092004.html

How the anthem was set to music? - An article from The Hindu -
http://www.hindu.com/mag/2006/03/19/stories/2006031900120400.htm

Tagore's undying allegiance to India & Jana Gana Mana
http://homepages.udayton.edu/~chattemr/janaganamana.html

Capt Ram Singh Thakur playing the National Anthem in the presence of Mahatma Gandhi.
http://www.tribuneindia.com/2002/20020504/windows/main2.htm
Read more »

Thursday, June 21, 2007

அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்!

நாள்: நவம்பர் 20, 2003
இடம்: திருமலை-திருப்பதி
செய்தி: குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், திருமலையில் வழிபாடு.
(pdf version of this post)

பைந்தமிழால் பாமாலை சூட்டி, ஆழ்வார்கள் உள்ளம் உருகிய இடம்.
தமிழிசையால் இறைவனைத் தாலாட்டி மகிழ்ந்த இடம்.
தெழி குரல் அருவித் திருவேங்கடம்!
- இன்று பணக்காரத் தோற்றம் காட்டினாலும், அதன் ஆன்மா என்றுமே எளிய பக்தி மட்டும் தான்!
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!" என்பது ஆழ்வாரின் உள்ளக் கிடக்கை!

இப்படி மானுடம், தமிழ் என்று இரண்டிற்கும் பொதுவாய் நிற்கும் திருமலை நாயகன், நம் அப்துல் கலாம் ஐயாவையும் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லையே!
முன்பு ராபர்ட் க்ளைவ், தாமஸ் மன்றோ, பீவி நாஞ்சாரம்மா, பீதா பீவி என்று அனைவரையும் கவர்ந்தவன் தானே அவன்!

அதனால் தான் போலும், அவன் அனுபவத்தை நேரிலே பெறுவதற்காகத் திருமலைக்கு வருகை புரிந்தார் நாட்டின் முதற் குடிமகன்.
ஆனால் அடியவர்களுக்கும், பக்தர்களுக்கும் தன் வருகையின் படோபடத்தால், தொல்லை தர விரும்பவில்லை அவர்.
அதனால் விடியற்காலை, வைகறைப் பூசைகளில் மட்டும் கலந்து கொண்டார். நாட்டின் மன்னருக்கு அளிக்கப்படும் "இஸ்டி-கபால்" மரியாதைகள் தரப்பட்டு, ராஜகோபுரத்தின் அருகே வரவேற்கப்பட்டார்.

இனி என்ன? நேரே தரிசனம் தான்!

ஆனால் கலாம் தயங்கி தயங்கி நிற்கிறார்.
அதிகாரிகளே "அதை" மறந்து விட்டார்கள்!
ஆனால் இது பற்றி எல்லாம் முன்பே தெரிந்து கொண்டு வருபவர் தானே நம் தலைவர்!

"எங்கே... அந்த கையெழுத்துப் புத்தகம்? கொண்டு வாருங்கள்" என்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்.
மாற்று மதத்தினராய் இருப்பதால், ஆலயத்தில் அதன் கோட்பாடுகளுக்குக் குந்தகம் வாராது, இறை தரிசனம் செய்ய விழைகிறேன் என்று படிவத்தில் கையொப்பம் இடுகிறார்!

இப்படி ஒரு வழக்கம் தேவையா?
இது போல் ஆகமங்களில் கூடச் சொல்லப்படவில்லையே! இது அவரவர் அந்தந்த ஆலயங்களுக்கு ஏற்படுத்திக் கொண்ட விதிகள் தானே!

முன்பு முகம்மதிய மன்னராட்சிக் காலத்தில்....
திருவரங்கம் படையெடுப்பு, திருப்பதி கோவில் கொள்ளை, ஆலயங்களுக்குத் திறை வசூல், மறுத்தால் கோவில் உடைப்பு
என்றெல்லாம் இருந்த போது, ஆலய நிர்வாகிகள் அமைத்த சட்டதிட்டம்.
ஐயா சாமீ....நீ உள்ளே வந்து உயிரை வாங்காதே-உனக்குக் கட்ட வேண்டிய கப்பத்தைப் பக்தர்களிடம் வசூலித்துக் கட்டி விடுகிறோம், என்று "அக்ரீமெண்ட்" அவலம்!

அப்போது கூட ஜீயர்கள் என்னும் வைணவத் துறவிகள்,
இதனால் உண்மையான மாற்றுமத பக்தர்கள் உள்ளே வந்து பெருமானைச் சேவிக்க முடியாது போய் விடுமே என்று எண்ணினர்;
அதிகாரிகளிடம் சொல்லி ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். அது தான் இந்தக் கையொப்பப் படிவம்! உறுதிமொழி வாங்கிக் கொண்டு உள்ளே விடுவது!

துலுக்கா நாச்சியார் என்ற இஸ்லாத்தின் பெண்மணி, இறைவனைக் கண்டு மோகித்த போது, உள்ளே அனுமதி மறுத்தாரா இராமானுசர்?
இல்லையே! அவளுக்குத் தனிச் சந்நிதி அல்லவோ கண்டார்!
அவர் வழி வந்த ஜீயர்கள், அரசியல் அவலத்தால் அன்பர்கள் அல்லல்படக் கூடாது என்று இந்த மாற்று வழி கண்டனர்!

பின்னர் காலம் உருண்டோடியது!
முகம்மதிய சுல்தான்களின் ஆட்சி எல்லாம் போயே போய் விட்டது! ஆனால் வழக்கத்தை மட்டும் மாற்ற யாருக்கும் தோன்றவே இல்லை! மறந்தே போனது!

மடத்தில், பூனையின் தொல்லை அதிகம் இருந்ததால், அதைத் தூணில் கட்டிவிட்டு பாடம் எடுத்தார் ஒரு குரு.
அவருக்குப் பின் வந்தவர்கள் காலத்தில், பூனைகள் தொல்லையே மடத்தில் சுத்தமாய் இல்லை.
இருந்தாலும் எங்கிருந்தோ தேடிப் பிடித்து, ஒரு பூனையைக் கொண்டு வந்து தூணில் கட்டி விட்டுத் தான் பூசைகளை ஆரம்பித்தார்களாம்:-)
அந்தக் கதை ஆகி விட்டது!

இது போன்ற விடயங்கள் இப்போது பெரும் பிரச்சனையாகக் கிளம்பி, ஆளாளுக்கு அரசியல் பண்ணத் துவங்கி விட்டார்கள்!
அரசியல் சட்டங்கள் கூட மாற்றமும் திருத்தமும் பெறுகின்றன.
ஆனால் அவை எப்போது செல்லும் என்றால்,....
அதை மக்கள் பிரதிநிதிகள், தாங்களாகவே அவையில் கொண்டுவர வேண்டும்.

அதே போல் தான், கால வழக்கமாக ஏற்பட்ட ஆலய விதிகளும்;
அவை திருத்தப்படலாம்.
ஆனால் அவற்றை வெளியில் இருந்து திணித்தால் வம்பு தும்புகள் தான் பறக்கும். அவரவரே செய்ய வேண்டும்!

ஆன்மிகப் பெரியவர்களும், மடங்களும், ஆலய நற்பணி மன்றங்களும் சேர்ந்து கலந்துரையாடினால் ஒரு நல்ல வழி கிடைக்கும்!
எல்லாரையும் கூட்டுவது சிரமம் என்றால்...பெருமைக்குரிய மடங்கள் ஒரு சிலவாவது, இதற்கு முன் முயற்சிகள் எடுக்க வேண்டும்!
ஒன்றைப் பார்த்து படிப்படியாக இன்னொன்றும் தெளிவு பெறும்!

இராமானுசர் வழியில், அனைத்துச் சாதி-அர்ச்சகர்கள் பயிற்சித் திட்டம் போன்ற நல்ல மறுமலர்ச்சிகளைக் காலம் காலமாகச் செய்து வரும் திரிதண்டி சின்ன நாராயண ஜீயர்,
முதல்வர் கலைஞரின் மதிப்பைப் பெற்ற திருவரங்கம் எம்பெருமானார் ஜீயர், மற்றும் பரனூர் அண்ணா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் போன்றோர் இது போன்ற முன்முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும்!
- இவர்கள் எல்லாம் ஒரு unifying Force என்னும் ஒருங்கிணைப்பு சக்தியாகச் செயல்பட்டால், இதை எளிதில் தீர்த்து விடலாம்!

சரி, நாம் அப்துல் கலாமுக்குத் திரும்பி வருவோம்!


நல்ல மனிதரான கலாம் இதை வைத்து அரசியல் செய்யவில்லை. அதிகாரம் காட்டவில்லை!
அதிகாரிகள் மறந்தால் கூடத் தாமே கேட்டு வாங்கி, இருக்கும் விதியைக் கடைப்பிடிக்கிறார்.
உண்மையான, உள்ளார்ந்த பக்தர்களின் நற்குணம் இது! அவர்கள் நோக்கம் இறை தரிசனம் மட்டுமே!
ஆலயத்தில் இறைவனை மட்டுமே அடியவர்கள் முன்னிறுத்துகிறார்கள்! இறைவனோ அடியவரை முன்னிறுத்துகிறான்.

வரவேற்பு எல்லாம் முடிந்து, பங்காரு வாகிலி எனப்படும் பொன் வாயிலைக் கடந்து அழைத்துச் செல்கிறார்கள், அப்துல் கலாமை!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே என்று பாடியது போல், படி அருகே நின்று விழிகளால் பரந்தாமனைப் பருகாதார் யார்?

கலாம் என்ன நினைத்தாரோ, என்ன வேண்டினாரோ, எப்படி வழிபட்டாரோ, நாம் அறியோம்!
சுமார் பத்து நிமிடங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள் முழங்க, வழிபாடு.
முடித்துக் கொண்டு, தீர்த்தமும் திருப்பாதமான சடாரியும் பெற்றுக் கொண்டு, வலம் வருகிறார் கலாம். உண்டியலில் காணிக்கையும் செலுத்துகிறார்.

அங்கே ரங்கநாயக மண்டபத்தில் மரியாதைகள் செய்யக் காத்து இருக்கிறார்கள் கோவில் அலுவலர்கள்!
திருமலையில் எப்பேர்ப்பட்ட விஐபி-க்கும் மாலைகள் போட்டு மரியாதை கிடையாது!
மாலைகளும் மலர்களும் ஆண்டாள் சூடிக் கொடுத்தவை அல்லவா?
அவை எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! - இது இந்த ஆலயத்தின் சம்பிரதாயம்!

அதனால் லட்டு/வடை பிரசாதமும், வஸ்திரம் என்கிற பட்டுத்துணியும் அர்ச்சகர்கள் வாழ்த்திக் கொடுக்கிறார்கள்!
அப்போது தான் அப்துல் கலாம் குண்டைத் தூக்கிப் போட்டார்! :-)



வேத ஆசிர் வசனம் என்ற சுலோகங்கள் உள்ளதே!
அதை ஓதி வாழ்த்தும் போது, நம் தேசத்தின் பேரைச் சொல்லி, "இந்தியா" என்று வாழ்த்திக் கொடுங்களேன்! நாட்டுக்காக ஆசிர்வாத மந்திரம் சொல்லுங்களேன், என்று அர்ச்சகர்களைக் கேட்டுக் கொண்டார்...

யாருக்கும் முகத்தில் ஈயாடவில்லை! அருகில் இருந்த ஆளுநர் பர்னாலாவுக்கும், முதல்வர் நாயுடு காருவுக்கும் தான்!
அட, இந்த மனுசனுக்கு எப்படி இது தெரிந்தது என்ற வியப்பா!
இல்லை இது வரை யாரும் இப்படிக் கேட்டுப் பெற்றதில்லை என்ற திகைப்பா?
"இந்தியா" என்ற பெயருக்குத் திருமலைக் கோவிலில் நடந்த அர்ச்சனை இதுவே முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

அருகில் சேஷாத்ரி என்ற அர்ச்சகர்/பாரபத்யகாரர் இருந்தார்.
அவரிடம் தன் பாக்கெட்டில் இருந்து ரூ.600 பணம் எடுத்துக் கொடுத்து, மூன்று சகஸ்ரநாம அர்ச்சனைச் சீட்டுகளை வாங்கச் சொன்னார் கலாம்.
இது போன்று அர்ச்சனை செய்ய 200 ரூபாய் கட்டணம் செலுத்தி இருக்க வேண்டும்.

எங்கேயோ முகம் தெரியாமல் வறுமையில் வாடும் ஏழை இந்தியன் ஒருவன். அவனுக்குத் தன் பெயர் சொல்லி, தன் நல்வாழ்வுக்கு அர்ச்சனை செய்து கொள்ள முடியுமோ என்னவோ,....அதுவும் திருவேங்கடமுடையான் சன்னிதியில்!
பொத்தாம் பொதுவாக, அவர்களை எல்லாம் நினைத்து சங்கல்பம் செய்து கொண்டு, அர்ச்சனை செய்து வைக்குமாறு சொன்னார் கலாம்!
அர்ச்சகர்களும் மறுநாள் காலை செய்து வைத்தனர்!

கோவில்களில் ட்யூப்லைட்-டில் கூட உபயம் என்று தன் பெயரை ஒட்டி வைத்து, வரும் கொஞ்ச நஞ்ச வெளிச்சத்தையும் மங்கலாக்கும் ஆசாமிகள் எத்தனை பேர் உள்ளனர்! :-)
தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளையின் பேரில் தான் அர்ச்சனை செய்து பார்த்துள்ளோம். இல்லைன்னா சுவாமி பேருக்கே அர்ச்சனை என்பார்கள் சிலர்!
ஆனால் இப்படியும் ஒரு அர்ச்சனையா? - அந்த நாள், கோவில் பட்டர்களுக்கே சற்று வித்தியாசமான நாளாகத் தான் இருந்திருக்கும்!

பலரும் அப்துல் கலாமை,
ஒரு விஞ்ஞானி, தேசபக்தர், மனித நேயர், நல்ல மேலாளர்,
கல்வியாளர், குழந்தைப் பாசம் கொண்டவர், எளிமைப் பண்பாளர்,
இயற்கை ஆர்வலர், குடியரசுத் தலைவர் என்று தான் பார்த்திருப்பார்கள்!
சற்றே வித்தியாசமாக,
திருவேங்கட மலையில் அப்துல் கலாமைக் கண்டதே இந்தப் பதிவு!


அவர் ஒய்வு பெறும் இந்த வேளையில்....
அவர் ஓய்வு தான் பெறுகிறாரா......இல்லை அவரை வைத்து இவர்கள் ஆட்டம் போட எண்ணுகிறார்களா....தெரியவில்லை!
எது எப்படியோ.....
அவர் முதலாம் பதவிக் காலத்துக்கு விடைகொடு விழா!

வாழ்கநீ எம்மான்! இந்த
வையத்து நாட்டில் எல்லாம்,
தாழ்வுற்ற தோற்றம் போல்
தோன்றிய பாரதத்தை
ஆழ்வுற்று கனவு கண்டு
அனைவரும் நாடச் செய்து
வாழ்விக்க வந்த கலாம்
வாழ்கநீ வாழ்க வாழ்க!
Read more »

Sunday, April 15, 2007

அழகிகள் ஆறு பேர்!

ஆழகுகள் ஆறு பற்றித் தான் எழுத வேண்டுமா? அழகிகள் ஆறு பேர் பற்றி எழுதினால் என்ன?
ஆகா - இப்படின்னு தெரிஞ்சிருந்தா அழைத்திருக்கவே மாட்டேனே என்று நண்பர் குமரன் சொல்லி விடுவாரா என்ன? :-))
நன்றி குமரன்!

"அழகுன்னு இன்னாப்பா?", என்று யாரையாச்சும் கேட்டுப் பாருங்கள்! உடனே பதில் வருவது சற்றுக் கடினம் தான்.
ஆனா ஒரு ஃபோட்டோவைக் காட்டி, இவங்க அழகா இருக்காங்களான்னு கேளுங்க. - உடனே பதில் வரும்!
(ஃபோட்டோவில் உள்ளவர் அப்போது உடன் இருக்கக் கூடாது என்பதை நான் சொல்லவும் வேணுமா என்ன? :-)

ஃபோட்டோவில் உள்ளவர் பெரிய தலைவராகவோ, பிரபலமானவராகவோ இருக்கலாம். இல்லை சும்மானாச்சும் எங்கோ புடிச்ச ஃபோட்டாவாகவோ கூட இருக்கலாம்.
புற அழகோ, அக அழகோ, ஏதோ ஒன்று - இது அழகுன்னு கண்டிப்பா சொல்ல முடியும்!

கன்னடத்துப் பைங்கிளி ஐஸ்வர்யா ராய் கண்களை அழகு என்று ரசிப்பவரும் உண்டு!
கல்கத்தா அன்னை, தெரேசாவின் முகத்தைப் பேரழகு என்று ரசிப்பவரும் உண்டு!!

என்னைக் கவர்ந்த ஆறு அழகிகள் (அழகுகள்) இதோ!
இவர்கள் அறுவரும் தமிழ் அழகிகள்,
அல்லது தமிழ் சார்ந்த அழகிகள் என்பது கூடுதல் சிறப்பு!!

1.
சில பேருக்கு இளமையில் அழகு! சில பேருக்கு வயசானா அழகு! அதுவும் வயசு ஆக ஆக, இன்னும் அழகு ஜொலிக்கும்!
அழகுடன், முகத்தில் ஒரு ஐசுவரியம் மின்னும்!
அந்த அழகுடன் பணிவும் சேர்ந்து கொண்டால்?
தமிழிசையை வளர்க்க்கும் ஆவலும் முயற்சியும் சேர்ந்து கொண்டால்?
படோபடம் இல்லாமல், அலட்டல் இல்லாமல், நகைக் கடையே மேனியில் மின்னாமல்,
"விநயம்" என்ற ஒற்றைச் சொல் இவர்களுக்கு அழகு சேர்க்கிறது என்று சொல்லலாம் அல்லவா?
MS AMMA
பணிவே அழகு! - எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. நாட்டியம் அழகு தான், எப்போதும்!
நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு ஆடாத மனமும் உண்டோ?
ஆனால் அந்த நடனத்தை வளர்க்க, அதுவும் நடனக் கலைஞர்களை மரியாதையுடன் சமூகம் நடத்த ஒருவர் வழி வகுத்தார் என்றால்?
சென்னையில் கலா ஷேத்ரா என்ற அமைப்பு நிறுவி, மெய்யாலுமே கலைப்பணி செய்வது அழகு தானே!
போதாது என்று சுதந்திரப் போரில், அவர் கணவருக்கும் உதவியாய் இருப்பதும் அழகு தானே!
நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகுங்களேன் என்று பிரதமர் மொரார்ஜி கேட்க, அதை அவர் மறுத்து விட்டாரே! - அம்மா, இது உங்களுக்கே அழகா? :-)
ARUNDALE
நடனம் அழகு! - ருக்மிணி தேவி அருண்டேல்

3.
உலகில் ஒரு தமிழ்ப் பெண்மணி, ஹில்லாரி கிளண்டனை விடச் சக்தி வாய்ந்தவர் என்று பட்டியல் இடப்பட்டால்?
உலகிலேயே சக்தி வாய்ந்த பெண்மணிகளில் நாலாவது இடம் தரப்பட்டால்?
அமெரிக்க அரசைப் பற்றி இவர் பேசிய பேச்சு நடுவிரல் சர்ச்சை (Middle finger Controversy) என்று ஆனது. தேசத்தை வெள்ளையர்கள் ஆண்ட காலம் போய், பல வெள்ளையர்களை ஒரு தேசிப் பெண்மணி ஆளுகிறார் என்பது மிடுக்கு அல்லவா?
சென்னையில் பிறந்த 57 வயது அழகு என்று சொல்லலாமா?
NOOYI
மிடுக்கு அழகு! - இந்திரா நூயி

4.
ராமோன் மேக்சாசே விருது ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு - அதுவும் நற்பணிக்கு!
சென்னையில் பிறந்து, IAS-இல் கொடி கட்டிப் பறந்து, பின்னர் சமூகப் பணிக்காக அதை ராஜினாமா செய்தால், அது அழகாகுமா?
Social Work and Research Center என்ற நிறுவனத்தில் அவர் கணவருடன் சேர்ந்து,
இந்தியக் கிராமங்களில், குறிப்பாக பெண்ணடிமை அதிகம் காணப்பட்ட ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குடி பெயர்ந்து, பணிகள் செய்வதற்கு என்ன பெயர்?

காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவினும் கைகொடுத்தது பெண்ணுரிமைக்கு அழகா?
அண்மையில் வந்த தகவல் அறியும் உரிமை (Right to information) சட்டம், இவர் மூலமாக ராஜஸ்தானத்தில் வெற்றி பெற்று, பின்னரே தேசிய அளவில் பரவியது அல்லவா?
Aruna Roy
நற்பணி அழகு! - அருணா ராய்

5.
பால் வடியும் பால முகம் என்பார்கள்; ஆனால் ஒரு பாலனுக்குச் சொன்னதை, தாய்க்கும் சொல்ல முடியுமா? சொல்ல முடியும்!
முகம் பொழி கருணை போற்றி என்று முருகனைப் பற்றி வரும்.
அது அன்னை வேளாங்கண்ணிக்கும் மிகவும் பொருந்தும்! புன்னகை சற்றே தான் இழையோடும்!
மோனாலிசா புன்னகை பற்றிச் சொல்பவர்கள், இந்தப் புன்னகையைப் பார்க்கவில்லையோ என்று கூட சில சமயம் எண்ணுவேன்!
நோய்கள் தீர்க்கும் தாயின் கருணையும் ஒரு அழகு தானே!
VELANKANNI
கருணையே அழகு! - அன்னை வேளாங்கண்ணி

6.
Last but not the least என்பார்கள். தமிழில் எப்படிச் சொல்லலாம்?
ஆங்...இறுதியாக,ஆனால் உறுதியாகச் சொல்வது, யாரை என்றால்....
செந்தமிழ்ச் செல்வி, நம்ம தீஞ்சுவைக் கோதை.
தமிழைத் தான் மட்டும் பாடியது அன்றி, ஊரையே பாட வைத்தது அழகு தானே!

இவள் சூடிக் களைந்ததைத் தான் இறைவனே விரும்புகிறான் என்றால், - இவள் அக அழகு தான் என்ன!!
எல்லோரையும் மயக்குபவன் மால் என்றால், அந்த மாலையே மயக்கும் கோதை - இவள் புற அழகு தான் என்ன!!

தொங்கல் மாலை, முத்து மகுடம், பச்சைக் கிளி, இச்சை மொழி எல்லாமே அழகு தானே!
படத்தைப் பார்க்காமல், கண்களை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்!
ஆண்டாள் என்று வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்!
அப்போதும் அந்த அழகு தெரியும்! அழகுத் தமிழ் புரியும்!!

ANDAL AZHAGU
ஆண்டாள் - தமிழை ஆண்டாள்!
அழகே அழகு! - ஆண்டாள் அழகு!!





(பின் குறிப்பு:திருமலையில் ஸ்ரீதேவியைக் கண்டேன், பழனியில் தேவயானியைக் கண்டேன், என்றெல்லாம் பதிவைப் படித்து விட்டு, ஸ்ரீதேவி தான் அழகு என்று சொல்வேனோ என்று யாராச்சும் எண்ணியிருந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல :-)
ஆனா அவங்களும் ஒரு அழகு தானேப்பா! என்ன வெட்டிப்பையலாரே - சரி தானே :-)


நண்பர்கள்,
சிவமுருகன், யோகன் அண்ணா, கீதா சாம்பசிவம் (கீதாம்மா)
அவர்களை, அழகு விளையாட, அன்பாக அழைக்கிறேன்!

துளசி டீச்சர் அழைப்பு - அப்படியே இருக்கட்டும்! கொத்ஸ் ஏற்கனவே அழைத்து விட்டாராம்! ஆனாலும் அழைத்தவர்களை வாபஸ் வாங்குவதெல்லாம் நம்மளால முடியாதுப்பா!
பின்னே என்னவாம், டீச்சரின் வகுப்பில், வீட்டுப்பாடம் பண்ணாம வரலாம்னு ஒரு ஐடியா யோசிச்சா...விடமாட்டாங்க போல இருக்கே! :-)))
Read more »

Sunday, January 14, 2007

பொங்கல் - இந்தியாவுக்குத் தாருங்கள்! (giveindia.org)

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பொங்கல் என்றாலே தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு தனி மகிழ்ச்சி தானே! தீபாவளிக்குக் கூட இவ்வளவு சிறப்பு தமிழகத்தில் இருக்குமா?
சாதி-மதம், இனம்-பேதம் எதுவும் இல்லாமல், இறை நம்பிக்கை இருப்பவரும் சரி, இல்லாதாரும் சரி, எல்லாரும் கொண்டாடி மகிழும் விழா என்றால் அது பொங்கல் தானே!

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்

இப்படி வேளாண் மக்களைச் சிறப்பிக்கும் திருநாள் அல்லவா?
மக்களை மட்டுமா? மாக்களையும், சிறப்பிக்கும் நாள்!
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களுக்குக் கூட கொண்டாட்டம் தானே!

பட்டணத்துப் பொங்கல் என்றால் தொலைக்காட்சியிலும், நடிகை ஸ்ரேயா வைக்கும் பொங்கலைப் பத்திரிகைகளிலும் கொண்டாடி மகிழலாம் :-)
ஆனாலும் கிராமமோ, நகரமோ, வீட்டுப் பொங்கல் என்பது சுவையான ஒன்று!
எங்க ஊர் வாழைப்பந்தலில், ஊரே கூடி, "பெருமா கோயில் வாசலில்" வைக்கும் பொங்கல், இந்தக் காலத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கு!

கரும்புகளை வைத்து நட்டே, பந்தல் போட்டு விடுவார்கள்!
முற்றத்தில் கோலமும், பூசணிப் பூக்களும் சிரிக்கும் சிரிப்பே தனி!
யப்பா, எவ்வளவு பெரிய பானை! அதில் வைக்கும் பொங்கல், ஊரே சேர்ந்து வைக்கும் கூட்டுப் பொங்கல்!
அதிலும் கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் வந்து பொங்கலைக் கிண்ட வேண்டும்! அப்ப பறக்கும் பாருங்க விசிலு! :-)
கூடவே "பொங்கலோ பொங்கல்" கோஷம்!
சிலர் நைசாக "பெண்களோ பெண்கள்" என்றும் சத்தம் போடுவார்கள்! :-)

6AA7612AA62


பால் கொண்டு வடிச்ச பொங்கலை, காராமணி குழம்பு ஊத்தி, வள்ளிக்கிழங்கு கூட்டு தொட்டு, பூசணி இலையில் வைத்துக் கொடுப்பார்கள்!
ச்ச்ச்ச்ச்....! ஊரில் எந்தச் சாதி வித்தியாசமும் பார்க்காது எல்லாரும் சாப்பிடுவார்கள்! நாயக்கராவட்டும், பள்ளராவட்டும், அய்யராவட்டும்! எல்லாரும் சப்புக் கொட்டிச் சாப்பிடும் காட்சியே காட்சி!

அதக்கப்புறம் தான் அவரவர் வீட்டுக்குப் போய் அவங்கவங்க பொங்கல் வைக்கணும்! சின்னப் பசங்க நாங்க எல்லாம் எப்படா சாயந்திரம் வரும்னு காத்திருப்போம்! ஏன்? மூன்று காரணங்கள்:

1. பொங்கல் இனாம்! ஆனா அதை வாங்கும் முன் பெரியவங்க காலில் வி்ழுகோணும்! அட, இதெல்லாம் பாத்தா முடியுமா? அடுத்த ரெண்டு மாசத்துக்கு உண்டான பாக்கெட் காசை தேத்த இத விட ஒரு வாய்ப்பு கிடைக்குமா?
2. மாட்டுப் பூசை; மாட்டுடன் ஊர் முழுக்க ஜல் ஜல் ஒட்டம்.
3. பெண்கள் எல்லாம் காலையில் பொங்க வைச்ச இடத்தில் ஆடும் குரவைக் கூத்து! கும்மி, மற்றும் பள்ளுப் பாட்டு!


ஹூம்....இதை எல்லாம் Manhattanஇல் நடுரோட்டுல பண்ணா எப்படி இருக்கும்? :-))
ஒவ்வொரு தீபாவாளி, பொங்கலின் போதும் ஊர் ஞாபகம் வருகிறது!
அப்போதெல்லாம், செய்ய நினைக்கும் ஒரே வேலை, அடுத்தவர் முகத்திலும் கொஞ்சம் சிரிப்பைப் பார்க்கலாமே என்பது தான்!

வெளிநாட்டுத் தனிமை தான் நமக்கு நல்ல பாடம் கத்துக் கொடுத்திருக்கே! மனித உறவுகளும் நேயங்களும் இது போன்ற நல்ல நாட்களில் கண் முன்னே இன்னும் நன்றாக விரிந்து போகும்! சென்ற தீபாவளிக்கு முதியோர் இல்லம் சென்றது போல், பொங்கலுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்த போது கண்ணில் பட்டது இந்த வலைத்தளம்!

giveindia.org (இந்தியாவுக்குத் தாருங்கள்)

நாம் பொதுவாக உதவ நினைக்கும் போதெல்லாம் நம் முன் வரும் கேள்விகள்:

1. நம் உதவி சரியான கரங்களுக்குப் போய்ச் சேருமா?
2. நாம் ஏன் எங்கோ ஒரு முகம் தெரியாத இடத்தில் உதவி செய்ய வேண்டும்? நம்மூருக்கு அருகிலேயே இருக்கும் ஒரு நிறுவனத்துக்குத் தரலாமே?
3. நாம் நினைக்கும் நிறுவனம் உண்மையிலேயே நம்பத் தகுந்த ஒன்றா? - வலைப் பதிவு என்றால் செந்தழல் ரவி, பொன்ஸ், ஞான வெட்டியான் ஐயா, என்றென்றும் அன்புடன் பாலா, ரஜினி ராம்கி என்று யாராவது சரிபார்த்துச் சொல்வார்கள்! இந்த நிறுவனங்களை யார் சரி பார்ப்பது?

இந்த giveindia தளம், மேற்கண்ட கேள்விக்கு எல்லாம் நல்ல முறையில் விடையளிக்கிறது! இதன் சிறப்பம்சம் என்னவென்றால்:

1. நாம் எந்தத் துறைகளுக்குத் தரலாம் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். Category வைத்துள்ளார்கள்.
குழந்தைகள் நலம், ஊனமுற்றோர், கல்வி, சுற்றுச்சூழல், உடல்நலம், பெண்கள் நலம், இளைஞர் நலம், முதியோர் - இப்படிப் பல!

2. நாம் விரும்பும் இடத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்; சென்னை, காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை - இப்படி! நம்ம ஊர் பட்டியலில் இல்லை என்றால் விருப்பத்தைப் பதிவு செய்யலாம். (advanced search optionஐ பயன்படுத்த வேண்டும்)

3. நாம் அளிக்கும் நிறுவனம் பற்றிய குறிப்புக்கள், பயன்பெறுவோர் விவரங்கள், தணிக்கை அறிக்கைகள், ஆண்டு வரவு செலவு, அங்கு பணிபுரிவோர் விவரங்கள், அவர்களின் சம்பளம், முகவரி, தொலைபேசி எண்கள் என்று அனைத்தும் தருகிறார்கள்! நாம் தனிப்பட்ட முறையிலும் சரி பார்த்துக் கொள்ளலாம்!

4. நாம் உதவி அளித்த பின், மூன்று நான்கு மாதங்கள் கழித்து, பயனாளி யார், அவர்கள் புகைப்படம், அவருக்கு எப்படி உதவியாய் அமைந்தது என்றும் ஒரு அறிக்கை அனுப்புகிறார்கள்! பயனாளியுடன் சில நேரங்களில் பேசவும் வழி செய்து கொடுக்கிறார்கள்!

diagram

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும், சாமியை வேண்டிக் கொண்டு ஒரு மஞ்சள் துணியில் பணம் முடிந்து கொள்வார்கள்! பின்னர் அதை ஆலயத்திலோ இல்லை தர்ம காரியங்களுக்கோ தந்து விடுவார்கள்!
இன்று தொலை தூரத்தில் இருக்கும் நமக்கு, இது போல் முடிந்து கொள்ள, இத்தளமும் பயன்படலாம்!

உதவுவது அப்புறம்! ஆனால் வலைத்தளத்தைப் போய் ஒரு எட்டு பார்த்து விட்டாவது வரலாமே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கட்டும்!
இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள்!
Read more »

Saturday, November 18, 2006

ஒத்த ரூவா தாரேன்!

"ஒத்த ரூவா தாரேன்" என்ற குஷ்புவின் கரகாட்டப் பாட்டு எவ்வளவு பிரபலம்?
ஆனா இந்த "ஒத்த ரூபாயைப்" பாத்து எவ்வளவு நாள் ஆகி விட்டது, தெரியுமா?
இதோ கீழே பாருங்க!
இதுகளை எல்லாம் எங்காச்சும் எப்பவாச்சும் பாத்த ஞாபகம் இருக்குங்களா?

பார்த்த ஞாபகம் இல்லையோ?



இதை நிச்சயமா அடிக்கடி பாத்திருப்பீங்க!


அப்படிப் பாக்காதவங்க, இப்பவே நல்லா பாத்துக்குங்க!
அப்புறம் இதுவும் நாணயமாப் போச்சேன்னு ரொம்ப நாணயமாப் புலம்பக்கூடாது, சொல்லிட்டேன்! :-)

எங்கே சென்றன இவையெல்லாம்?

இந்தியப் பொருளாதாரம் வளர்கிறது!
பங்குச் சந்தையின் கிடுகிடு வளர்ச்சி! அந்நிய முதலீட்டாளர்கள் விரும்பும் சந்தையாக மாறி உள்ளது.
நில விலைகள் ஏறுமுகம்! கடன், கேட்காமலேயே கிடைக்கும் :-)
வாழ்க்கைத் தரம் உயர்ந்து, வாங்கும் திறனும் உயர்கிறது.
இந்தியத் திட்டம் 2020, வலுவான இந்தியா என்பதில் பொருளாதாரத்துக்கும் முக்கிய பங்கு உண்டு!

Cost of Living உயர உயர, அடிமட்ட பணத்தின் மதிப்பு குறையவே செய்யும் என்பது தான் எல்லாருக்கும் தெரியுமே!
ஐந்து ரூபாய் நோட்டை வைத்து மொய் எழுதிய காலம் உண்டு; இப்ப செஞ்சி பாருங்க! உங்கள மொய் எழுதிடுவாங்க:-)
ஆக நோட்டு எல்லாம் நாணயமா மாறிகிட்டே வருது!
"வெகு விரைவில் எதிர்பாருங்கள் 20 ரூபாய் நாணயம்", என்று விளம்பரம் தான் இன்னும் செய்யலை!

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் சிலவற்றில் அடிப்படையான ஒரு டாலர்/யூரோ/பவுண்டு/ரூபிள் இன்னும் அப்படியே உள்ளன!
அதை வைத்துப் பெரிதாக ஒன்றும் வாங்கி விட முடியாது தான் என்றாலும் புழக்கத்தில் இருக்கு! மதிப்பும் இருக்கு!
ஆனால் நம் இந்தியாவில் அப்படி இல்லை!

வல்லரசாக நினைக்கும் நமக்கு, இது நல்ல அறிகுறியா?
பொருளாதார நிபுணர்களைத் தான் கேட்கணும்; நம்ம மா.சிவக்குமார் அவர்களைக் கேட்டா அழகான விளக்கம் கிடைக்கும்!

அது சரி,
யாரிடமாவது இந்த ரூபாய்த் தாள்கள் இருந்தால், அப்படியே பத்திரப்படுத்தி வையுங்கள்!
வருங்காலத்தில் அருங்காட்சியகம் (மியூசியம்), மற்றும்
தொல்பொருள் துறையில் இதற்கு நல்ல டிமாண்ட் இருந்தாலும் இருக்கலாம்!
Numismatics என்ற பணத்தாள் சேகரிப்பில் கூட டிமாண்ட் கூடலாம்!

இவ்வளவு ஏன், "இந்த அஞ்சு ரூபாய்க்கு என்னென்னல்லாம் வாங்குவோம் தெரியுமா", என்று குழந்தைகளுக்குப் பல கதைகள் விடலாம்!
என்ன சொல்றீங்க?

(பட உதவி: rbi.org.in)
கீழே வெட்டிபையல் பின்னூட்டம் பாத்தவுடனே ஒரு பயம் வந்துடுச்சு; இதோ டிஸ்கி: -)
Disclaimer:
மேலே உள்ள ரூபாய் படங்கள் எல்லாம் ஒரு சாம்பிள் தான்; Specimen Copy; பமாகப் பயன்படுத்தலாம் என்று rbi வலைத்தளம் சொல்லுகிறது! இருந்தாலும் மக்களே, படத்தைக் காண மட்டும் செய்யுங்கள்! (நல்ல காலம் ரூபாய்களின் மறுபக்கத்தைப் பதிக்க வில்லை...)

Read more »

Sunday, October 01, 2006

காந்தியால் கிடைத்த outsourcing பணம்

வாங்க நண்பர்களே! காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!
எனக்குத் தெரிந்த காந்தி ஜெயந்தி:

பள்ளிப் பருவத்தில் காந்தி ஜெயந்தி:
பள்ளியில் assembly-இல் பாட்டுப் பாடி, காந்தியின் படத்துக்கு முன்னர் உறுதி மொழி எடுப்போம். என்ன உறுதி மொழின்னு கேட்காதீங்க, ப்ளஸ் ஒன்லேயே அதெல்லாம் மறந்துட்டோம்!

கல்லூரியில் காந்தி ஜெயந்தி:
ஹாஸ்டல் நண்பர்கள் பலர் லீவு நாள் அதுவுமா அவஸ்தைப் பட்ட நாள்.
பின்ன என்னாங்க எல்லாக் கடையும் லீவு! முன்னாடியே வாங்கி வைக்காத ப்ளானிங்கே இல்லாத மக்கள் எல்லாம் - ஒண்ணு சினிமா போகணும்; இல்லை பிளாக்-ல வாங்கணும்!
இரண்டாம் சாய்ஸ் பசையுள்ள பார்ட்டிகளுக்கு மட்டும்!

வேலைக்குச் சேர்ந்த பின் காந்தி ஜெயந்தி:
ச்சே! ஒரு நாள் லீவு கிடச்சாக் கூட இந்த பிராஜக்ட் மேனேஜர் பய ரவுசு தாங்க முடியல; இன்னிக்கும் வரணுமாம் ஆபீசுக்கு!
போங்கடா! அப்பா காந்தி, சுதந்திரம் நீ நெஜமாலுமே வாங்கிக் கொடுத்தியா?

மணமான பின் காந்தி ஜெயந்தி:
அடையாறில் இருந்தா கிஷ்கிந்தா,மாயாஜால்;
அட்லாண்டாவில் இருந்தா நல்ல நண்பன் எவனா மெயில் பண்ணாத் தெரியும்! நினைவுக்கு வந்துடும். ஓ இன்னிக்கி Oct 2! ச்சே காந்தி is great-ல்ல? ஏதோ பண்ணாலும் நல்லா போல்டாவே பண்ணாருப்பா!

குழந்தைகள் வந்த பின் காந்தி ஜெயந்தி:
கண்ணா, சொல்லு "Gandhiji is the Father of Our Nation"!

காந்தி அண்ணலே!
உன் வழிமுறை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். பிற்போக்குத்தனம் என்று கூடக் கருதலாம். உன்னால் விளைந்த நன்மைகள், தீமைகளை லிஸ்ட் போடலாம்.
ஆனாலும் நீயும், உன் தலைமையில் திரண்ட பலரும் நிச்சயம் உழைத்தீர்கள். வெறும் கோஷத்தோடு நின்று விடவில்லை! இந்தியாவைப் பற்றிக் கனவு கண்டீர்கள்!

நான் தான் கொடியேற்றுவேன் என்று ஓடி வந்து நிற்கவில்லை! மரியாதை கொடுக்கவில்லை என்று கடைசி நேரத்தில் அணிகள் மாறவில்லை!உன்னைச் சுட்டதால் நீ தியாகி ஆனாய் என்றெல்லாம் பேச எனக்கு மனம் வரவில்லை. நீ நிச்சயம் வித்தியாசமான மனிதன். புரட்சித் தலைவர் என்றும் உன்னைச் சிலர் சொன்னாலும் சொல்லலாம்.

எங்கள் மீசைக் கவிஞன் சொன்னான், உன்னைப் பார்த்து,
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!


ஆனால் நான்,
ஒன்று மட்டும், இன்று சொல்கிறேன்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! Happy Birthday to you, from your Nation!

காந்தியால் கிடைத்த outsourcing பணமா? எப்படி? (கவனிக்கவும்; 'காந்தியால் மட்டும்' என்று சொல்லவில்லை!)
இல்லாக்காட்டி துரைகளே இந்தியாவிலும், குத்தகை எடுத்து, hourly rate கொடுத்து, மிச்சத்தையெல்லாம்....என்ஜாய்!
ஆக நம் மக்கள்ஸ் உழைக்கும் நம் பணம், நம் நாட்டுக் கருவூலம் சென்று சேர்கிறதே! அதற்கு நன்றி!

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP