Monday, March 24, 2008

KRS - ஆன்மீகப் பதிவு எழுதுவதை நிறுத்தி விடு!

புதுசா ஜொலிக்கும் விண்மீனுக்கு என் வாழ்த்துக்கள்! (இதை எழுதும் போது பேர் சொல்லி வாழ்த்த அவரு யாருன்னு தெரியலை)
விண்மீன் வாரத்தில் வேண்டாமே-ன்னு தான், முடிவுரையில் இதை எழுதாது, அது முடிஞ்சவுடன் எழுதுகிறேன்!

ஆன்மீகம் எழுதும் பதிவர்களுக்கும், பின்னூட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், ஒரு சொல் சொல்லிக்க ஆசைப்படுகிறேன்.
மற்றவர்கள் இந்தப் பகுதியை மட்டும் ஸ்கிப் செஞ்சிடலாம்! (இப்படிச் சொல்வதாலயே நீங்கள் ஸ்கிப் செய்யப் போவதில்லை என்பது தனிக்கதை!:-)
நின் அருளே புரிந்து இருந்தேன்! இனி என்ன திருக்குறிப்பே?

பொதுவா நான் பதிவுலக அரசியல், பின்னூட்ட விளையாட்டுகளில் அதிகம் புழங்காதவன். ஆனால் இந்த வாரம், வரிசையாக இரண்டு மூன்று இடுகைகளில் அடியேன் பொங்கியது எனக்கே தெரியும்! பலருக்கு வியப்பும், சிலருக்கு நட்சத்திர வார ஆணவமோ என்றும் தோன்றி இருக்கலாம்! நெருங்கிப் பழகுபவர்களுக்கு அப்படி இல்லைன்னு நல்லாத் தெரியும்! ஆனால் எனக்குத் தோன்றியது என்னான்னா...

* எதிர்பார்ப்புகளை அடியேன் மேல் சில நல்லன்பர்கள் அதிகம் வளர்த்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்குப் பிடித்தமானதை எல்லாம் நானும் சுமக்க வேண்டும் என்ற அதீத ஆவல்!

* உங்கள் தமிழ் நடையில் முருகனைப் பாடுங்களேன், திருவண்ணாமலை பற்றி எழுதுங்களேன்-னு நேயர் விருப்பங்கள் தருவது தவறே இல்லை!
ஆனால் அப்படி விருப்பமாய்த் தாராமல், அதைப் பற்றியே எழுதுகிறாயே, ஏன் இதைப் பற்றி எழுதவில்லை, அவனுக்குக் குடை பிடிக்கிறாயே, ஏன் இவருக்குப் பிடித்தால் குறைந்து விடுவாயா என்னும் சட்டாம்பிள்ளை போக்கு நலம் பயக்காது!

* நான் இணையத்தில் படித்து விட்டு, அதைப் பதிவு போடும் சுபாவம் உள்ள பையன் இல்லை! ஆன்மீக விஷயத்தில் மட்டும் உள்-வாங்காமல் (Internalizing) அவ்வளவு சீக்கிரம் எழுதவே மாட்டேன்! இதனால் தான் சில சமயங்களில், வெட்டிப்பயல், "எப்பமே லயிச்சி எழுதுவது போல் இன்னிக்கி எழுதல போல இருக்கே"-ன்னு பின்னூட்டத்தில் சொல்லுவாரு!

வாரியாரைப் போய் பெருமாள் மீதும் காலட்சேபம் பண்ணுங்க! வேளுக்குடி சுவாமியிடம் போய் வள்ளித் திருமணம் விரிவுரை பண்ணுங்க-ன்னு எல்லாம் கேட்பது எவ்வளவு அபத்தம்? ஒரு படைப்பாளியின் கருப்பொருளைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கு என்பதும் உங்களுக்கே தெரியும்!

முருகனருள் வலைப்பூவில், என் குலதெய்வம் முருகப்பெருமான் மேல் ஆறு நாளும் சஷ்டிப் பதிவு போடுறேன். ரத்னேஷ் ஐயா போன்றவர்கள் படிச்சிட்டு, திருச்செந்தூருக்கு நேராப் போனாக் கூட இப்படித் தரிசனம் கிடைக்குமாத் தெரியாது-ன்னு சிலாகித்துச் சொல்றாங்க!
அவங்க ஜிராவை இப்படிச் சொன்னாக் கூட அர்த்தம் இருக்கு! ஆனா அவிங்க என்னைத் தான் சொல்லுறாங்க! என் ஆதங்கம் என்னான்னா, எதிர் தரப்பில் இருப்பவருக்கும் தெரியும் போது, நம் தரப்பில் உள்ளவர்கள் அறிந்து கொள்ளாது சொல்லாடுவது தான் வேதனை தருகிறது!

முருகப்பெருமான், சிவபெருமான், அம்பாள், பிள்ளையார், சண்டேஸ்வரர், திருவாரூர், தில்லைக்களி, நாட்டார் தெய்வ மாரியம்மன், அவ்வளவு ஏன்,
கிறிஸ்துமஸ் அன்று இயேசு பிரான்
இப்படிப் பதிவிட்டது எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லையா?
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்! எத்துணை ஆன்மீக அன்பர்கள் இயேசுபிரான் மீது பதிவிட்டு உள்ளீர்கள்?

எண்ணிக்கையில் அவை உங்களுக்குப் போதவில்லையா? ஒவ்வொரு வலைப்பூவிலும், முருகனருளில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு, அம்மன் பாட்டில் KRS இட்ட இடுகைகள் இவ்வளவு என்று கணக்கு சமர்பிக்க வேண்டுமா? சொல்லுங்கள், சமர்பிக்கிறேன்! இல்லை மற்ற தெய்வங்கள் மீது இடப்படும் உங்கள் பதிவுக்கு எல்லாம் அடியேன் பின்னூட்டியது இல்லையா? கீதாம்மாவைத் தில்லைக் கொடிக்கவி வரலாற்றை ஊருக்கே சொல்லுங்க-ன்னு வேண்டுகோள் வைக்கலையா? SK ஐயாவிடம் இந்தத் திருப்புகழ், அந்தத் திருப்புகழ்-ன்னு மாறி மாறி நேயர் விருப்பம் வைக்கலையா? நீங்க என்ன நேயர் விருப்பம் வைத்தீர்கள் அடியேனிடம்? ஏண்டா பெருமாளைப் பத்தி மட்டும் எழுதற-ன்னு அதிகாரமா மட்டும் கேக்கறீங்க!

ராமானுசரை எழுதும் நீ ரமணரை எழுதக் கூடாதா-ன்னு கேட்டா, அடியேன் விக்கியில் இருப்பதைப் பார்த்து எழுத முடியும்! ஆனால் பரிபூர்ணமாக உள்வாங்காமல் எழுதுதல் எனக்கு வராத ஒன்று! அதைத் தான் லயிப்பு-ன்னு சொல்றீங்க போல!
உங்களில் பல பேருக்கு அடியேனின் தமிழும் நடையும் பிடிச்சிருக்கு அப்படின்னா, அதுக்கு அதன் பின்னுள்ள இந்த நேர்மையும் ஒரு காரணமா இருக்கலாம்!

அதனால் தான் என்னைப் பிடித்து அழுத்தாதீர்கள் என்று உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்!
Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!* ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன.
அதிகம் பேசாது, கேள்விகள் ஏதும் கேட்காது, தனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!
அடியார்களுடன் அடியார்களாக, கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும், பாடுவதும், கேள்வி கேட்பதும், விடை தேடுவதும் ஒன்று!

அப்படி எல்லாம் இல்லை! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அப்படிக் கேட்டால் குழப்பத்தில் இருக்கிறாய்-ன்னு சொல்றீங்க!
அதுவும் நல்ல பூக்களை அறிமுகப்படுத்தும் ஒரு வலைச்சரத்தில், நல்ல பூக்களை மட்டும் அறிமுகப்படுத்தலாமே! குழப்பவாதப் பூக்களை அறிமுகப்படுத்த வலைச்சரம் தேவையில்லை! குழப்பத்தின் தலையில் குட்டத் தலைச்சரம் என்று தனியாகத் துவங்கி விடுவது நல்லது!

சமயக் குழப்பத்தில் இருக்கிறாய் என்று சொன்னால் அடியேன் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை! ஆனானப்பட்ட அருணகிரியாரும், மதுரகவி ஆழ்வாருமே சமயக் குழப்பத்தில் இருந்தவர்கள்! நம் சமயத்தை நாமே கேள்வி கேட்கலாமா? அதுக்கு தான் இன்னொருத்தன் இருக்கானே என்றால், இன்னொரு பெரியார் அவதரிக்க இப்போதே துண்டு போட்டு வைக்கிறீர்கள் என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! நம் வீட்டை நாமே துடைப்பதற்கும், சானிடரி இன்ஸ்பெக்டர் வந்து துடைப்பதற்கும் உள்ள வேறுபாடு நீங்கள் அறியாதது அல்ல! உங்களுக்கு அடுத்து ஆண்டவன் அவதாரம் வேண்டுமா இல்லை பெரியார் அவதாரம் வேண்டுமா என்று யோசித்துக் கொள்ளுங்கள்!

* உண்மையாலுமே, KRS சைவ/வைணவம் பார்ப்பவன் இல்லைன்னு உங்களுக்கும் தெரியும்!
தில்லை=சைவம்! அதுனால நைசா சைக்கிள் கேப்புல வைணவத்தைக் கம்பேர் பண்ணி சைவத்தைத் தாழ்த்திறலாம் என்கிற மட்டமான எண்ணம் உடையவனா அடியேன்?
ராமர் பாலம் வைணவம் தானே? ராமானுசர் இருந்திருந்தால் பொது நலனுக்குப் அணையைக் (பாலம் மெய்யோ/பொய்யோ - அது வேற விஷயம்) கொடுத்து விடு-ன்னு சொல்லி இருப்பாரு-ன்னு பதிவு போட்டேனே! அப்போ அடியேனோட Hidden Vainava Agenda-வை யாரும் சுட்டிக் காட்டலையே?

எது உங்களை இப்படி எல்லாம் சொல்லத் தூண்டுது? சொல்லட்டுமா?
யார் சொன்னாலும், நான் சொல்லக் கூடாது என்ற உங்களின் அதீத அன்பு தான் இப்படி எல்லாம் பேச வைக்குது!
ஆன்மீக வலையுலகப் பெரியவர்களே, உங்கள் குழந்தை கேஆரெஸ் சொல்வதையும் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்!
வெறும் அலங்காரங்கள், கோயில் விளக்கங்கள், ஸ்லோகங்களுக்குப் பொழிப்புரைகள், கதைகள்-ன்னு சொல்லிக்கிட்டு போவதால் மட்டும் ஆன்மீகம் வளர்ந்து விடாது!

தில்லை தீட்சிதருக்கு மடல் தீட்ட அடியேனுக்கு என்ன உரிமை இருக்கு-ன்னு சில அன்பர்கள் நினைக்கிறாங்க!
தில்லையை விட்டுடுவோம்! இதே விசயம் திருமலையில் நடந்திருந்தால் அதை விட இன்னும் சினந்தே எழுதி இருப்பேன். வலையுலகில் என் முதல் பதிவே திருமலை அர்ச்சகர்களுடன் பேசிய வாய்ச் சண்டையில் தான் துவங்கியது என்பது ஞாபகம் இருக்கா?

தமிழ் தில்லையில் நுழைய இன்னும் கூத்தாட வேண்டி இருக்கு-ன்னு ஒரு வரிக்கு - அதுவும் நான் சொல்லி விட்டதால் - உங்கள் மென்மையான மனம் தாங்கிக் கொள்ள முடியவில்லை போலும்!
KRS சொல்லிட்டாரே! KRS சொல்லிட்டாரே-ன்னா, என்னய்யா பெரிய இவனா இந்தக் கேஆரெஸ்ஸு? பச்சைப் பய புள்ள அவன்! அவன் சொன்னா எதுக்கு இம்புட்டு டென்சன் ஆவறீங்க?

அவன் திருவாரூர் சிவன் கோயில்-ல தமிழ் இல்லேன்னோ, குன்றக்குடி கோயில்ல தமிழ் இல்லேன்னோ சொல்லலையே? தில்லையை மட்டும் தானே சொன்னான்!
தில்லையில் தமிழை நீச பாஷை-ன்னு தீட்சிதர்கள் சொல்லிட்டாங்க-ன்னு சும்மா ஏதாச்சும் இட்டுக் கட்டினானா? //தீட்சிதர்களே, நீங்களே பெருமான் பாதம் பள்ளியறை எழும் போது, தமிழ்ப் பதிகம் பாடறீங்க-ன்னு// அவன் சொன்னதை நீங்க பாக்கலையா?
கருவறையில் தமிழில் பாடாததையும், அன்பர்களைக் கரடு முரடாக நடத்துவதையும் தானே அப்பதிவில் சுட்டிக் காட்டினான்?

ஆனா அதே சமயம் தீட்டு கழிச்சாங்க-ன்னு, பிரச்சனை முடிஞ்சாப் பிறகும் ஒரு பிரச்சனை பண்ண போது என்ன சொன்னான்? பாக்கலையா?
//ஆனா இதுல நான் பெரியாரைத் தான் ஃபாலோ பண்ணுவேன்!
டெய்லி பாடப் போற! ஆறு காலமும் பாடப் போற! எத்தனை வாட்டி கழுவித் தள்ளுவான்? பெண்டு கழண்டிடும்! சாப்பாடக் கூட நேரம் இருக்காது! பக்கெட்டும் கையுமா நிக்கவே டயம் சரியா இருக்கும்! வெங்காயம்! உன் வேலை ஆச்சா! உனக்குப் பிரச்சனை பண்ணலையே! போயிக்கிட்டே இரு! :-)//
தத்துவ வித்தகர் ஜீவா வந்து Hats Off KRS-ன்னு சொல்லிட்டுப் போனாரு!

ஒரு விசயம் கேக்குறேன்.
இனித்தமுடைய எடுத்த பொற்பாதத்தான் இறைவனின் பொன்னம்பலம். அந்த அம்பலத்தை எண்ணெய் அம்பலம் ஆக்கியது யார்? எண்ணெயை வீசி வீசி அசுத்தப்படுத்தியது யார்?
(கறி மாமிசம் உண்டு, ஒடம்பைக் கும்முன்னு வச்சிருக்கும்) போலீஸ் கூட, அவ்வளவு களேபரத்திலும், விதிகளை மதித்து, சட்டையைக் கழட்டிவிட்டுத் தான் அம்பலத்துக்குள் போகிறது! அமெரிக்கப் போலீஸ் இப்படிச் செய்யுமா?
எண்ணெய் வீசி அம்பலத்தை அசுத்தப்படுத்தியதை ஆன்மீகம் பதிபவர்கள் யாரேனும் இது வரை கண்டித்தார்களா?

நடனமாடும் இறைவன் எண்ணெயிலா நடனமாடுவான்? வீட்டில் கூட ஐயோ குழந்தைக்கு வழுக்கிறப் போகிறதே-ன்னு பதறுகிறோம்! ஆனால் சைவத்தின் தலைநகரில், அம்பலத்துக்குப் பொறுப்பானவர்களே, பொறுப்பா அம்பலத்துல எண்ணெய் ஊத்தி, ஆடுறா நடராசா-ன்னு சொல்லுவாங்க! அதை யாரும் கண்டுக்கிட மாட்டோம்! உங்களுக்கு நடராஜரின் மேல் பாசமா இல்லை வேறு எவரின் மீதாவது பாசமா??

தமிழ் தில்லைக் கருவறைக்குள் நுழையக் கட்டப்படுது-ன்னு கேஆரெஸ் மட்டுமா சொன்னான்? எத்தனை பேர் சொல்கிறார்கள்? சைவ மடங்கள் மறைமுகமாச் சொல்லலையா?
ஆனா அவன் சொன்னா மட்டும் உங்களுக்குக் கோவம் வருகிறது! உடனே வைணவத்தை தூக்கி நிறுத்த சைக்கிள் கேப்பில் சைவத்தைத் தாழ்த்தறான்-ன்னு, குழந்தைத்தனமா பேசலாமா? என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல?
பெரியவங்க நீங்க குழந்தையா? இல்லை பச்சப் புள்ள கேஆரெஸ் குழந்தையா? :-)))


நாத்திகம் பேசுவோர் கருத்தை விட்டுவிட்டு ஆட்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்-ன்னு சொல்லுறோம்! ஆனா நாம மட்டும் என்ன பெருசா செய்யறோம்? Are we walking our talk?

தமிழ்க் கடவுள்- இல்லன்னு யாரையும் பதவி இறக்கல! இவரும் தமிழ்க் கடவுள் தான் என்று தமிழ் இலக்கியத் தரவுகளை முன் வைக்கிறோம்!
தரவுக்கு எதிர் தரவு வைப்பது ஒரு வகை! தரவினை மறுப்பது ஒரு வகை!
ஆனால் ரெண்டும் செய்யாம "இவருக்கு ஏதோ ஆசைப்பா! சொல்லிக்கிராரு! சொல்லிட்டுப் போகட்டம்" என்று, இங்கும் ஆட்களுக்கு attributing motive தான் நடக்குதே தவிர, பயனுள்ள விவாதம் நடக்குதா?

இதே திருமலைத் தெய்வம் யார் என்ற விவாதத்தில், அடியேனோ இல்லை குமரனோ இப்படி attributing motive செய்தோமா? இப்போது தில்லைக்குப் பாய்ந்து வரும் ஆன்மீக அன்பர்கள், அப்போது எங்கு இருந்தீர்கள்?
என் இனிய நண்பன் ஜிரா, திருமால்-சிவன் அனைவரும் தங்கள் தலைகளை முருகப் பெருமான் காலடியில் ஒத்தி ஒத்தி எடுத்தாங்க-ன்னு எழுதின போது (அவர் மத மாச்சர்யம் கருதி எழுதவில்லை! அது வேறு விடயம்), அப்போது எங்கே இருந்தீர்கள்? நகைச்சுவை பதிவுகளை அதிகம் இட்டு விளையாடும் வெட்டிப்பயல் அல்லவா வந்து வழக்குரைத்தார்? ஆன்மீகப் பதிவர்களின் கடமை அன்று எங்கே இருந்தது?

வாதங்கள் செய்வதை விடுத்து பேதங்கள் செய்வது யாருக்குமே அழகல்ல! புகழும், பிரபந்தமும், அனுபூதியும் ஓதும் நமக்கு இன்னும் அழகல்ல!

விவாதங்கள் அவசியம் தேவை! கேள்வி தான் வேள்வி வளர்க்கும்! மூடி மூடி மறைக்காமல் நம் வீட்டை நாம் சுத்தம் செய்து கொள்வது போல் வரவே வராது! இந்த விஷயத்தில் ஆன்மீகப் பதிவராய் என்னை அதிகம் கவர்பவர் அரைபிளேடு!
எதையும் ஒளிக்காது விவாத களமாய் முன் வைப்பவர்! அரசியல் பெற அல்ல! தெளிவு பெற! தரவுக்கு தரவு தர முயற்சிப்பாரே அன்றி, ஆன்மீகக் குழப்பவாதிகள் மலிந்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லவே மாட்டார்!
அவர் மட்டும் ஆன்மீகப் பதிவில் இன்னும் தீவிரமாக இறங்கினால்...அச்சோ...எனக்கு நினைத்துப் பார்க்கவே இனிக்கிறது! :-)


பெரியவர்களை எதிர்த்துப் பேசி இருக்கேன்! பிழை பொறுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! உங்களுக்கே இந்நேரம் தெரிந்திருக்கும், எது ஒன்றுக்கு மட்டும் அடியேன் முக்கியத்துவம் தருவேன் என்று!

அடியார் பழித்தல் (பாகவத அபசாரம்) அறவே கூடாது என்ற கருத்துக்குத் தரப்படும் அளவில்லாத மதிப்பு ஒன்று தான்,
நாத்திகன் ஒருவனை ஆத்திகன் ஆக்கியது (உங்களைப் பொறுத்த வரை வைணவன் ஆக்கியது!:-)

பகவத் கீதையோ, சுப்ரபாதமோ, தொல்காப்பியமோ, தேவாரமோ, பிரபந்தமோ, கந்தர் அனுபூதியோ அந்த நாத்திகனை ஆத்திகன் ஆக்கவில்லை!
அந்த ஏட்டில் உள்ளதை எல்லாம்
இந்த நாட்டில் கொண்டு வந்த இயக்கம் - சாதி தாழ்த்தாமை, தமிழ் தாழ்த்தாமை, அடியார் பழியாமை - இவை தான் நாத்திகனை ஆத்திகன் ஆக்கியது! அதனால் தானோ என்னவோ இராமானுசரைப் பற்றிச் சொல்லப் புகும் போது, என் பதிவுகளில் வைணவ வாடை வீசுதுன்னு நினைச்சிக்கறீங்க போல!

அந்த அனுபவத்தில் ஐயா பெரியாரிடம் கடன் வாங்கி, ஆன்மீகப் பதிவுலகத்துக்கு அடியேன் ஒரு சொல் சொல்லிக் கொள்கிறேன்!
நாத்திகர்கள் உருவாவதில்லை! உருவாக்கப்படுகிறார்கள்!

இதை ஆன்மீகம் பேணுபவர்கள் சிந்தையில் இருத்தினால், மீண்டும் ஒரு பெரியார் தோன்ற மாட்டார்! மீண்டும் ராமர் சிலைகளும் பிள்ளையார் சிலைகளும் உடைக்கப்படமாட்டாது!
நான் இன்னும் உறுதியாக நம்புவது: பிள்ளையார் சிலைகளைப் பெரியார் உடைக்கவில்லை! நம் அருமைத் தெய்வங்கள் உடைய நாம் தான் காரணமாக இருந்திருக்கிறோம்! நாம் தான் பெரியாரின் திருக்கரங்களில் தூக்கிக் கொடுத்து உடையுங்கள்-ன்னு சொல்லி இருக்கோம்!

(இது போன்ற தன்னிலை விளக்கப் பதிவுகளை அடியேன் ஜென்மத்துக்கும் இட்டதில்லை! இப்படி இட்டதற்கு நானே வெட்கப்படுகிறேன்! முதலில் இதை இட வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா இது ரொம்ப நாளா நீறு பூத்த நெருப்பா இருக்கு! அந்த நேரத்துக்கு அடியேன் அடியேன்-ன்னு சொல்லி, நானும் குமரனும் இன்ன சிலரும் அதை அணைக்கிறோம்! ஒற்றுமைப் பதிவுக்காகவே மெனக்கெட்டு முருகனருளில் எக்ஸ்ட்ரா ரெண்டு பதிவு போட்டு சூட்டைக் குறைக்கிறோம்!
ஆனாத் திருப்பி ரெண்டு மாசம் கழிச்சி வேற உருவத்தில் வரப் போகுது. அதான் ஒரு நிரந்தரத் தீர்வாக....நம் மனங்களை நாமே கேட்டுக் கொள்ளும் முகமாக...)

மேலே காணும் ஒரு வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, உங்கள் எண்ணங்களை அடியேனுக்குச் சொல்லி உதவினால், எனக்கு நானே course correction செய்து கொள்ள ஏதுவா இருக்கும்! தயங்காமல் உங்கள் எண்ணங்களை வாக்காகச் சொல்லுங்கள்! திருத்திக் கொள்கிறேன்!

ஆன்மீகமே எழுதாதே!
சமூகப் பிரச்சனைகளை ஆன்மீகத்தில் கலக்கும் குழப்பவாதிகள் "தூய்மையான" ஆன்மீகத்துக்குத் தேவை இல்லை! சமூகம் வேறு, ஆன்மீகம் வேறு என்றால்...
அடியேன் புன்சிரிப்புடன் ஒதுங்கிக் கொள்கிறேன்! சிறு வயதில் நகைச்சுவை, டகால்ட்டி-ன்னு எழுதிக்கிட்டு ஜாலியா இருக்குறத வுட்டுப்போட்டு தேவையில்லாம எதுக்கு இதெல்லாம்? காதல் மில்லிமீட்டர்-ன்னு எழுதி வச்ச நாவல் வேற இன்னும் நாலு பாகம் முடிக்காம இருக்கு!:-)

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - அரகரோகரா!!!
அண்ணாமலைக்கு - கோவிந்தா கோவிந்தா!!!

ஆன்மிகப் பதிவு எழுதி அடியேன் பெருசா ஒன்னும் கிழிச்சிடலை! அடியார்களும் அன்பர்களும் வருத்தப்படும் அளவுக்கு எழுதுகிறேன் என்றால், வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-ன்னு பாடுறதல பொருளே இல்லை!
வேணும்னா விட்டுறலாம்! பிரச்சனையே இல்லை!
ஆனா நல்லபடியா ஊருக்குப் போய்வர ஆசி கூறி விடைகொடுத்து அனுப்புங்க! மறக்காம மேலே வாக்களித்து அடியேன் என்ன பண்ணனும்னும் சொல்லிருங்க! பண்ணிறலாம்!Results of the Poll:

Read more »

Sunday, March 23, 2008

***அத்தை மகளே, போய் வரவா?

அன்புடை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், வாழிய நலம்! இந்த ஒரு வாரம் முழுதும், உங்களுடன் அளவளாவி இருந்தது மிகவும் மகிழ்ச்சி.
பொதுவாகக் கச்சேரி முடிக்கும் போது மங்களம் பாடி முடிப்பாய்ங்க! ஆனா அடியேன் வேற மாதிரி மங்களத்தைப் பாடி முடிக்கிறேன்! இந்தப் பாட்டை அவசியம் இங்கே கேட்டுக்கிட்டே படிங்க!

அனைவருக்கும் பதில் சொல்ல முடியலை! காரணம் உங்களுக்கும் தெரியும்! குறிப்பாக வவ்வால், அரைபிளேடு, கோவி அண்ணா, சிறில் அண்ணாச்சி, VSK ஐயா, மதுரையம்பதி, கோபிநாத் - இவர்கள் எல்லாம் சில நுட்பமான கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். இவற்றுக்கு எல்லாம் இன்னும் சில வாரங்கள் கழித்து, நான் அறிந்த வரை பதில் தருகிறேன். மின்னஞ்சலும் செய்கிறேன்.ஆரோக்கியமான விவாதங்கள் அமைத்துக் கொடுத்த உங்களுக்கு என மனமார்ந்த நன்றி!

பதிவுலக விவாத களங்களில், தனி மனிதத் தாக்குதல் இருக்குன்னு பல பேர் சொல்லுறாங்க! ஆனா கடந்த ஒரு வாரத்தில, இங்கு பல சூடான தலைப்புகளின் மேல் விவாதங்கள் நடந்தன! எவ்ளோ தனி மனிதத் தாக்குதல் நடந்ததது-ன்னு சொல்ல முடியுமா?
இத்தனைக்கும் பதிவின் உரிமையாளர் என்கிற முறையில் அடியேனோ, இல்லை வேறு எவரும் மாடரேட் கூடச் செய்யவில்லை! பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்படவில்லை! (இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டுத் தான் Comment Moderation எடுத்தேன்!:-)

அப்படி இருந்தும், கருத்தை ஒட்டி மட்டுமே விவாதங்கள் நடைபெற்றது!
கருத்துக்குக் கருத்து தான் இருந்ததே தவிர, கருத்துக்கு மனுசன்-ன்னு இல்லை! பொறுப்புடன் விவாத நோக்கம் அமைந்து விட்டால், விவாதங்களும் பொறுப்புடன் அமைந்து விடும்! (Garbage In - Garbage Out)!

இது ஒன்றே போதும்,
தமிழ்ப் பதிவர்கள் அப்படி ஒன்னும் பொறுப்பற்றவர்கள் அல்லர் என்று ஊருக்குச் சத்தம் போட்டுச் சொல்ல!
(நான் தான் பார்க்கிறேனே, Rediff போன்ற தளங்களில் எப்படி எல்லாம் நடக்கிறது என்று)
குறிப்பாக E=mc^2 பதிவில் ஆத்திக-நாத்திக வாதங்கள் தனிப்பட்ட முறையில் இல்லாமல், எப்படித் தரம் வாய்ந்தவையாக இருந்தன என்பது கண்கூடு!
இதற்காக, முன்னாள் நாத்திகன் - இந்நாள் (அரைகுறை) ஆத்திகன் என்ற முறையில் அடியேன் இரண்டு பங்கு மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்தச் சமயத்தில் அரைபிளேடு, சிறில், திவா, கோவி, ஜீவா, ஸ்ரீதர் ஆகியோருக்கு நன்றி சொல்லலை-ன்னா எனக்குச் சென்னையில் சோறு கிடைக்காது!(பிரியாணி கிடைக்குமா-ன்னு கேக்காதீங்க! :-)
குறிப்பு: ஆன்மீகப் பதிவுலகில் அரைபிளேடு, ஜீவா, ஸ்ரீதர் போன்ற சிறப்பான தத்துவ வித்தகர்கள், இன்னும் அதிகமாக வளைய வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆவல்!

ஒரு தம்பிக்கு எடுத்துச் சொல்வது போல், என் பதிவுலகப் பயணத்தை Critical Review செய்து தந்த கோவி அண்ணாவுக்கும், அண்ணா என்று நான் அழைக்காவிட்டாலும் அப்படியே கருதும் நண்பர் குமரனுக்கும் என் நன்றி!
டீச்சருக்கு எப்பமே நான் செல்லப் பிள்ளை தான்! அதனால் நன்றி-ன்னு சொல்ல மாட்டேன். அதுக்குப் பதிலா ரெண்டு வடையை மட்டும் வாங்கிக்குறேன்!(டீச்சர், யானை மோதிரம் வந்து சேர்ந்துச்சா?)
ஆன்மீகப் பதிவுலகத்துக்கு வினை ஊக்கிய பாபாவுக்கு, ரவிசங்கருக்கு என் நன்றிகள்!

விளையாட்டோ வினையோ, ஒரு கட்டத்தில் சைவ/வைணவ வேறுபாடு எல்லை மீறிப் போகவே, ஓகை ஐயாவிடம் சினக்க வேண்டி வந்தது!(நான் சினந்தாலும் எப்படிச் சினப்பேன்-னு உங்களுக்கே தெரியும்! (அடியேன்-னு சொல்லிக்கிட்டு நிப்பேன் :-)
என் சினத்தையும் பொருட்படுத்தாது, அதன் பின்னர் நான் இட்ட பதிவுகளுக்கும் வந்து கருத்துகள் சொன்னாரு ஐயா! அவருக்கு என் நன்றியறிதல்கள்!

பின்னூட்டிக் கருத்துச் சொன்ன எல்லாப் பதிவர்களுக்கும்,
தனி மடலில் உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும், (குறிப்பா கெ.பி.அக்காவுக்கும்),
வராது வந்த மாமணி போல் நட்புடன் வந்த விடாதுகருப்பு அண்ணாச்சி இதர நண்பர்கள் அனைவருக்கும்
ஆர்க்குட்டில் புதிரா புனிதமா விடை சொன்ன நண்பர்களுக்கும் = நன்றி! நன்றி! நன்றி!
(என்னது ஆர்க்குட்டில் புதிரா புனிதமா-வா? ஹிஹி! நாங்க அடுத்த கட்டத்துக்குப் போயிட்டோம்-ல)

அப்பறம் முக்கியமா, நான் ரொம்பவே பீட்டர் வுட்டுட்டேன்...பின்னூட்டத்தில் மட்டும் தான்...அவசரம்...நேரமின்மை...இந்த மாதிரி நேரத்துல் பீட்டர் பட்டுன்னு ஓடியாந்துறான்! பீட்டர் எதுக்கு வரணும்? பிரிசில்லா வந்தா எம்புட்டு நல்லா இருக்கும்! :-)

இரண்டு பிறந்த நாட்களுக்குப் பதிவிட்டது (ஷைலஜா, குமரன்), நம்ம கல்யாண மாப்ள குசும்பன் அண்ணாச்சிய செந்தமிழால் கலாய்ச்சதெல்லாம் எனக்கு நட்சத்திர வார உவகை!
பங்குனி உத்திரம், புனித வெள்ளி, மீலாது நபி - இவை மூன்றும் ஒன்னா வந்து அடியேனின் நட்சத்திர வாரத்தில் அமைந்தது,
அதுவும் ஆன்மீகப் பதிவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருத்தனின் வாரத்தில் அமைந்தது திருமலை எம்பெருமானின் திருவருளாகவே கருதிக் கொள்கிறேன்.எழுதலாம் என்று நினைத்து விட்டுப் போன இடுகைகள்:

1. தந்தை பெரியார் - இராமானுசர் கற்பனை உரையாடல் (பெரியார் நொடித்துப் போன ஆலயத்தை மேம்படுத்திக் காட்டுவார் அல்லவா? ஆலய நிர்வாகத்தைச் சீர்திருத்தி நடத்துவது பற்றிய இந்த இடுகையை அப்புறமா போடட்டுமா என்ன? :-)
2. Magical Realism/கம்பர்/கப்பி பய
3. கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, சிவன் பாட்டு குழுப் பதிவுகள் அறிமுகம்
4. பங்குனி உத்திரம் - திருமணமா/லிவிங் டுகெதரா?
(அடியேனுக்கு நிச்சயம் குழப்பவாதி ஆன்மீகப் பட்டத்தைக் கொடுத்திருப்பார்கள் வலையுலக ஆன்மீகப் பெரியவர்கள்!:-)
5. கம்பர்/இயேசு காவியம்/சீறாப் புராணம்
சும்மா ஒவ்வொரு பாடல் கொடுக்கலாம்-னு இருந்தேன் மும்மத விழாவில்! முடியலை! (ஆனால் பாடலை மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்)

இறுதிப் பாகம் போடாத இடுகை:

* பெண்ணழகு-கண்ணழகு-முன்னழகு-பின்னழகு Part 2!

ஆன்மீக அன்பர்கள் சிலரிடம் மட்டும் இப்போது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சைவ/வைணவ மனக்குறைகள்! இதற்கு மூல காரணம் (root cause) அடியேன் தில்லைப் பிரச்சனையில் எடுத்த நிலைப்பாடு! அன்பர்களின் மனக்குறை நீங்காத வரை, அடியேன் இந்தக் கதையைப் பூர்த்தி செய்யப் போவதில்லை!
தமிழுக்கு முகம் காட்டி (முன்னழகு), வடமொழிக்கு முதுகு காட்டும் (பின்னழகு) அரங்கன்! இந்த மனக்குறை தீர முகம் காட்டுவானா?
மனக்குறையை நீக்கி அருளும் வரை, அரங்கனை (திருவரங்கனை மட்டும்), அடியேனும் பதிவில் எழுதப் போவது இல்லை! :-( ரங்கா! ரங்கா! ரங்கா!!!


பொதுவாகக் கச்சேரி முடிக்கும் போது மங்களம் பாடி முடிப்பாய்ங்க! ஆனா நான் வேற மாதிரி மங்களத்தைப் பாடி முடிக்கிறேன்! அந்தப் பாட்டைக் கேட்டீங்கல்ல? இல்லீன்னா இங்கே கேட்டுக்கிட்டே படிங்க! அதுவும் கடைசிப் பத்தியில் மிகவும் மென்மையான எம்.எஸ்.அம்மா, ரொம்பவும் அழுத்தி, ஆணித்தரமாச் சொல்லுவதைத் தட்டாமக் கேளுங்க! சின்ன வயசுப் பதிவன் ஒருத்தன் எண்பது வருசத்துக்கு முன்னாடி எழுதன பாட்டு!

கருத்து வேற்றுமை நாட்டுல வருது! பதிவுல வராதா? ஒற்றுமைக்கு என்னவெல்லாம் பண்ணலாம்-னு அப்பவே ஆக்கப் பூர்வமா யோசிச்ச பதிவன் நீ தான்-யா!
நாங்களா? அடச்சே! சேதுவுக்கு இன்னும் கேது தோஷ பரிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்! போய்யா போ! ஏதோ உன்னளவு இல்லீன்னாலும், உன்னை மாதிரி யோசிச்சி ப்ளாக் எழுத முயற்சிக்கிறோம்!

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம்
நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!

அடியேனும் அவ்வண்ணமே...
பார்த்தாலும்
படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்
பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும்
பிடித்தாலும்
இறுகிக் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே என்னும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலையைத் தாழ்த்தி, இந்த நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்!

உங்கள் சிறுவனுக்கு ஆசி கூறி அனுப்புங்கள்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
Read more »

***இசை இன்பம்: தமிழில் ஊஞ்சலாடும் தியாகராஜர்!

நீங்க எத்தனை பேர், நடுக் கூடத்தில் மரப்பலகை ஊஞ்சலில் ஆடி இருக்கீங்க? இல்லை யாரையாச்சும் உட்கார வச்சி ஆட்டி இருக்கீங்களா?
ஊஞ்சலில் தூங்கும் சுகம் என்னன்னு தெரியுமா? அப்பப்பா...! அப்படி ஒரு சாய்வு! இப்படி ஒரு சாய்வு! - சங்கிலிகள் உரசும் சத்தம்! கூடவே ஒரு சுகமான பாட்டு!

இப்பல்லாம் மர ஊஞ்சல் இருக்கான்னு தெரியலை! தோட்டத்துல மூங்கில் கூடையில் ஊஞ்சல் கட்டுறாங்க. அதுல ஆடினா ஒரே குத்தும்! :-) சரி குத்துதேன்னு அதுல ஏதாச்சும் மெத்தை போட்டா, அது கட்டில் ஆயிடுமே தவிர, அந்த ஊஞ்சல் சுகம் போயிடும்! ப்ளாஸ்டிக் கம்பி, இரும்புக் கம்பி போட்டெல்லாம் ஊஞ்சல் புதுப்புது அவதாரங்களில் பட்டினத்தில் வந்தாலும், எங்க கிராமத்து மர ஊஞ்சலுக்கு இருக்கும் மவுசே தனி தான்!

அந்த ஊஞ்சல் சங்கிலிகள் ஒவ்வொன்னும் நல்ல கனமா இருக்கும்! இடம் அடைக்காதபடி அதை சுவர்-ல இருக்கும் ஆணியில் தொங்க விட்டுறலாம்! பலகையைக் கழட்டி வச்சிடலாம்! வேணும் போது மட்டும், எங்க பாட்டி ரெண்டே நிமிஷத்தில் அசெம்பிள் பண்ணிடுவாங்க! :-)

கிழக்குவாசல் படத்துல ரேவதி சாம்பிராணிப் புகையில் தலைவிரித்து, ஊஞ்சலில் ஒய்யாரமாய் தூங்க, கார்த்திக் ஆட்டி விட்டு ஒரு பாட்டு பாடுவாரே! என்னாங்க அது?

இன்னிக்கி நாம பாக்கப் போற ஊஞ்சல் பாட்டு, சும்மானாங்காட்டியும் பாட்டு இல்ல! ஊஞ்சலில் ஆடுவதற்கே என்று ஒரு பாட்டு இருக்கு!
கேட்டுப் பாருங்க! அப்படியே ஊஞ்சலில் போய் வராப் போலவே இருக்கும்! நீலாம்பரி ராகத்தில்...உய்யால லூகவய்யா என்று பாடுகிறார். ஊஞ்சலும் கூடவே ஆடுகிறது! கூடவே அந்தக் க்றீச் க்றீச் சத்தம்!

தமிழில், தியாகராஜரை அணைக்கும் முயற்சிகளின் தொடர்ச்சியாக....இதோ!

கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழிலும் மொழியாக்கி உள்ளேன்.
அப்படியே தமிழில் ஹம் பண்ணிக்கிட்டே, அதே மெட்டு வருதான்னும் பாருங்க!

* தாலாட்டு - வேதவதி பிரபாகர் பாடுவது (nice)
** Saxophone-கத்ரி கோபால்நாத் (Must Hear!)
*** Clarinet - AKC Natarajanபாடல்: உய்யால லூகவய்யா
எழுதியவர்: தியாகராஜர்
ராகம்: நீலாம்பரி
தாளம்: கண்டசாபு


உய்யால லூகவய்யா - ஸ்ரீராம
உய்யால லூகவய்யா
ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா
ஊஞ்சலில் ஆடுமய்யா


சய்யாட பாடலனு
சத்சார்வ பெளம
உடனுறங்கு பாடலதில்
உலகாளும் உத்தமா
(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

கமலஜாத்ய அகில சுருலு நின்னுகொலுவ
விமலுலைன முனீந்த்ருலு
த்யானிம்ப கமனீய பாகவதலு குணகீர்த்தன-முலு
நலபம்புல செய்யக

தாமரையில் நான்முகனும் தேவரும் உனைத்துதிக்க
முனிவர்களும் தியானிக் கவே
காமரும் குணங்களைக் காதலால் அடியவரும்
கீர்த்தனைகள் வாசிக் கவே

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நாரதா துலு மெரயசு நுதியிம்ப சாரமுலு, பாகா......வினுச்சு.....
நின்னு நம்முவாரல சதா ப்ரோசுசு, வேதசார சபலனு சூசுசு, ஸ்ரீ்ராம

நாரதாதி முனிவரும் போற்றி-உனைப் பாடிடும்
சாரமதை நன்கு கேட்டு
நம்பியவர் தமைக்காக்க நான்மறைகள் ஓதிடும்
சபையிலுன் காட்சி கண்டு

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)

நவமோகன ஆங்குலைன சுரசடுலு விவரமுக, பாடக நா பாக்யமா
நவரத்ன மண்டபமுன த்யாகராஜ வினுத, க்ருதி பூணின ஸ்ரீராமா

இளமுருகு வடிவழகு தேவியர்கள் விரிவாகப்
பாடவும் என் பாக்கியமா
நவரத்ன மண்டபத்தில் தியாகராஜன் வேண்டவும்
உருக் கொண்ட ஸ்ரீராமா

(ஊஞ்சலில் ஆடுமய்யா - ஸ்ரீராமா)


அடிக்குறிப்பு:
தியாகராஜர் கிட்டத்தட்ட 600 சாகித்யங்களைச் செய்துள்ளார். அவர் தமிழில் செய்த சில சாகித்யங்கள் நமக்குக் கிடைக்காமற் போனது, நம் (என்) நற்பேறின்மையே!
சமதர்மத்தில் சத்குரு தியாகராசருக்கு நாட்டம் இருந்ததில்லை போலும்!
அவர் செய்த 600 சாகித்யங்களில்,
ராமன் மேல் செய்த பாடல்கள் 560க்கும் மேல்.
சிவபெருமான் மேல்=4-5,
பர்வதவர்த்தினி அம்பாள் மேல்=6-8,
இதர சிவாலயங்கள் கோவூர் திருவொற்றியூர் முதலானவை=10-15,
இன்ன பிற=5,
முருகப்பெருமான் மேல் செய்தருளியவை=0 (all figures approx)

இனி அடியேனின் ஒவ்வொரு பதிவுகளிலும் இப்படியே கணக்கு வாசிக்கப்படும்! வைணவம் தாண்டி அனைத்தையும் எழுதி என் கணக்கை நானே நேர் செய்து கொள்ளும் வரை இது தொடரும்!
வலையுலக ஆன்மீகத் தணிக்கைப் பெருமக்கள் அனைவரும் கருணை கூர்ந்து என் பதிவுகளைத் தணிக்கை செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!
Read more »

Saturday, March 22, 2008

***இவர் அக்கா, எவர் அக்கா, அவர் அக்காக் கூட்டு!

நட்சத்திர வாரத்தில் மாயா பஜார் ரேஞ்சுக்கு விருந்து கொடுக்காவிட்டாலும், கூப்பாடு போடாத அளவுக்காச்சும் சாப்பாடு போடணும்-ல!
இன்னிக்கி கிச்சன் காபினெட் பக்கம் ஒதுங்கலாம்-னு ஐடியா!
மாதவிப் பந்தலில் செவிக்கு உணவு ரொம்பவே கொடுத்தாச்சு இஸ்டார் வீக்குல! அதான் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்-னு...
யாருப்பா அது ஈயப்படும்-னு சொல்லுறத்துக்கு முன்னாடியே பெண் ஈயம், ஆண் பித்தளை-ன்னு கெளப்பறது? ஓ...கொத்தனாரா?

வாய்யா! வா! கொத்தனார் கிட்டத் தான் இந்த மாதிரி அறிவியல் பூர்வமான கேள்வி எல்லாம் கேக்கோனும்! விக்கியும் நீயே, பக்கியும் நீயே! அறிவியல் கொக்கியும் நீயே! ஆன்மீக மிக்கியும் நீயே!
கொத்ஸ் அண்ணே: அவரைக்காய் என்றால் என்ன? கொத்ஸ்வரங்காய் என்றால் என்ன? அதை அமேரிக்காவில் இங்க்லிபீஷ்-ல என்னன்னு சொல்லி வாங்கணும்ணே?
இதைத் தீர்த்து வைக்க வேண்டிய மாபெரும் பொறுப்பு இபிகோ செக்சன் 356 படி, உங்க மேலச் சுமத்தப்பட்டுள்ளது.

நாம சாப்பாட்டு மேட்டருக்கு வருவோம்! இந்த அவரக்கா தெரியுங்களா ஒங்களுக்கு, அவரக்கா?
என்னாது? அவர் அக்கா, இவர் அக்கா-ன்னு எல்லாம் கேக்கறீங்களா?
போச்சுடா! பதிவுலகில் எனக்கு நிறையவே அக்காங்க!
கெ.பி.அக்கா மொதக் கொண்டு, ஜி3 அக்கா இடைக்கொண்டு, துர்கா அக்கா கடைக்கொண்டு, சர்வம் அக்கா மயம்!
இதுல நான் எவர் அக்காவைச் சொல்வது? நான் சொல்லுறது அவரைக்காய்-ங்க! பச்சையா இருக்கும்-ல!

இதுக்குத் தான் சென்னை போகும் போதெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்கு ஒரு நடை போயி வரணும்ங்கிறது! இங்கிட்டு பார்க்காத காய்கறி எல்லாம் அங்கிட்டு பார்த்துக்கலாம்!
அம்மாவின் ஸ்பெசாலிட்டிகளில் இந்த அவரைக்காயும் ஒன்னு! அவரைக்காய் புளிக்குழம்பு-ன்னு ஒன்னு வைப்பாங்க பாருங்க! யம்மாடியோவ்!

அந்த உறைப்புக்கும் காரத்துக்கும் சாப்பாடு கூட வேணாம்! சும்மா குழம்பையே நக்கி நக்கிச் சாப்பிட்ட பக்கிப் பய தான் நானு! அதுக்குக் கூடவே தொட்டுக்க அவரைக்காய் பொரிச்ச கூட்டு! - இப்பவே எனக்கு நாக்கு ஊறுதே!
இன்னும் கொஞ்ச நாளு தானே! இதோ சென்னைக்குப் போனவுடன், நான் கேட்காமலேயே இந்த ஐயிட்டம் எனக்காகச் செய்து வைக்கப்பட்டிருக்கும்! வூட்டாண்ட வாங்க, 50-50 போட்டுக்கலாம்! :-)


அவரைக்காய் பொரிச்ச கூட்டு எப்படிச் செய்யறது?
(அந்தப் அவரைப் புளிக் கொழம்பு அம்மா கிட்ட இது நாள் வரை கேட்டுக்கலைங்க! சாரி, கூட்டு மட்டும் இன்னிக்கி பார்க்கலாம்)

1. மொதல்ல கிச்சன் எங்க இருக்குன்னு கண்டுபுடிச்சிக்குங்க! வழி தெரியலையா? இந்தாங்க!

2. தேவையான பொருட்கள்:
அவரைக்காய் = 1/4 கிலோ (அரிஞ்சி வைச்சா, 3 கப் வரும்)
கடலைப் பருப்பு = ?
(கடலை போடும் போதே இதெல்லாம் தெரிஞ்சி இருக்கணும்! சரி போனாப் போவட்டும்! சொல்லிடறேன்! 1/4 கப்)
புளி பேஸ்ட் = 1 தேக், பெருங்காயம் = 1/2 தேக்

உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பலை, உ.பருப்பு, காய்ஞ்ச மிளகாய்(3) = இதெல்லாம் பேச்சிலர் பசங்களுக்கே தெரியும்! ஒங்களுக்குத் தெரியாதா என்னா? தேங்காத் துருவல்= ஒரு கைப்பிடி போட்டா இன்னும் மஜாவா இருக்கும்!

3. அவரைக்காயைக் மொதல்ல அந்த இழை உரிக்கணும்! இல்லீன்னா சாப்பிடும் போது நூடுல்ஸ் மாதிரி வந்து உயிரை வாங்கும்.
அப்பறம் அவரைக்காயைத் துண்டு துண்டா அரிஞ்சி வைச்சிக்குங்க! நீளவாட்டில் பொடிசா அரிஞ்சா இன்னும் நல்லா இருக்கும்! French Fries மாதிரி ஒரு மொரமொரப்பு கெடைக்கும்!

4. கடலைப் பருப்பைத் தனியாக் குக்கரில் வேக வச்சிக்குங்க! அட, அரிசி வைக்கும் போது, கூடவே இதையும் வச்சிக்குங்க அப்பு! :)

5. இனி மேல் தாண்டி வேலை!
வாணலியில்(கடாய்) எண்ணெய் விட்டு, காய்ஞ்ச மிளகாய், உ.பருப்பு எல்லாம் கொட்டி பொன்னிறமா வறுத்துக்குங்க! இது கூடத் தேங்காய்த் துருவல் சேர்த்து, மிக்சியில் நல்லா விழுதா, ஒரு அரை அரைச்சிக்கிடணும்!

ஏற்கனவே கட் பண்ணி வச்ச அவரைக்காயை வாணலியில் கொட்டி, கீப் ஆன் வதக்கிங்!
வேக வைத்த கடலைப் பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும்! உப்பும், மஞ்சள் தூளும் தேவையான அளவு முன்னாடியே சேர்த்துக்கிடணும்!
நெருப்பைக் குறைச்சி, தட்டு போட்டு மூடிருங்க! கொஞ்ச நேரம் ஆவியில் வேகட்டும்!

திரும்பவும் வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு/கறிவேப்பிலை/பெருங்காயம் போன்ற தாளிப்பு சமாச்சாரங்களை எல்லாம் கவனிச்சுக்குங்க! கடுகு கொஞ்சம் நல்லாவே வெடிச்சா வாசனையும் தூக்கலா இருக்கும்!

பத்து நிமிசம் கழிச்சி, மூடி வைச்ச தட்டைத் தொறந்து,
உப்பு, புளி பேஸ்ட், ஏற்கனவே அரைச்சி வைச்ச தேங்காய்ப் பேஸ்ட், இப்ப தாளித்த ஐட்டம்-இது எல்லாத்தையும் ஒன்னாக் கொட்டிக் கிளறி, ஒரு ரெண்டு நிமிடம் வதக்கினாக்கா...பொரியலா, மொரமொர-ன்னு வரும்!
மணக்க மணக்க....பொரிச்ச அவரைக்காய்க் கூட்டு!

சுடச்சுட ஆவி பறக்கும் மல்லிப்பூ சாதத்துடன் தொட்டுக்கிட்டுச் சாப்பிடலாம்! ஆனா இதை அவரைப் புளிக்குழம்போடு சாப்பிடணும். அப்ப தான் கிக்கே கெடைக்கும் என்பது கெக்கே பிக்குணி அக்காவின் ஆணை! :-)
ஜவ்வரிசி வத்தல், தனியாத் துவையல், புதினாத் துவையல் கூட, இந்த அவரைக்காய்க் கூட்டை வச்சி சாப்பிட்டாக்கா...சொர்க்கம் நிச்சயம்! :-))

அவரைக்காய் மருத்துவ குணங்கள் வாய்ந்தது! நீரிழிவு/அலசர் நோயாளிகளுக்கு இப்போது அறிவுறுத்தப்படும் ஓர் உணவு! நார்ச் சத்து (Fiber) அதிகம் உள்ளது! உள்குத்து...ச்சே உள்காயங்களுக்கு நல்ல மருந்தும் கூட!

தெலுங்கு=சிக்குடு காய், கன்னடம்=அவேரக்காயி, மலையாளம்=அவரா, இந்தி=செம்; இங்கிலிபீஷ்-ல என்னான்னு தெரிஞ்சா ஓடிப் போயி, பாத்மார்க் கடையில் வாங்கியாந்துறலாம்! கொத்ஸ், என்ன ரெடியா? மக்களே, நீங்க அதுக்குள்ள ஒரு கை அள்ளி வாயில் போட்டுக்குங்க! இன்னா, எப்படி இருக்கு அவர் அக்கா, இவர் அக்கா, எவர் அக்கா பொரிச்ச கூட்டு? :-)

Read more »

Friday, March 21, 2008

***கண்ணன் பாட்டு: கந்தன் திரு நீறணிந்தால்! கண்டபிணி ஓடிவிடும்!

இஸ்டார் வீக்குல முடிஞ்ச மட்டும் வெளம்பரம் தேடிக்கணுமாம், நம்ம கண்ணன் பாட்டு வித்தகர் வெட்டிப்பயல் ஐடியா கொடுக்கறாரு! ஞாபகம் இருக்குல்ல? தில்லாலங்கடி தாங்கு-ன்னு எம்பெருமான் முதலடி எடுத்துக் கொடுக்க, நம்ம வெட்டி ஈற்றடி எடுத்து, கண்ணன் பாட்டையே வித்த "வித்த"கர் அவரு! :-)

மேட்டர் இன்னான்னா, பல பதிவுகள் வைத்திருந்தாலும், நட்சத்திர வாரத்தில் ஒரே பதிவில் இருந்து பதிவது தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்!
அச்சச்சோ, அப்போ என் மத்தக் குழந்தைகள் - கண்ணன் பாட்டு, இசை இன்பம், முருகன் அருள், சுப்ரபாதம், பிள்ளைத் தமிழ் - இதெல்லாம்?

எலே வெண்ணை! இப்போதைக்கு அதை எல்லாம் மாதவிப் பந்தலில் போடு; அந்த வலைப்பூவுக்கு இலவசமா நட்சத்திர வெளம்பரம் பண்ணு!
அப்பாலிக்கா இஸ்டார் வீக்கு முடிஞ்ச பிறகு, அதை எல்லாம் அந்தந்த வலைப்பூவுக்குள் கூடு விட்டு கூடு பாஞ்சிக்கணும்! என்னாப் புரியுதா? :-)

இது சூப்பர் ஐடியாவா இருக்கே! இப்படியே பண்ணீறலாம்!

கண்ணன் பாட்டு குழுப்பதிவு பத்திப் பலருக்கும் தெரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்! சினிமாப் பாடல்கள், ஆல்பம், மேடைக் கச்சேரிகள், தனிப் பாடல்கள், நீங்களே எழுதிப் பாடிய பாடல்கள்-ன்னு,
கண்ணனும் கண்ணன் நிமித்தமும் இருக்கிற பல பாடல்களின் களஞ்சியம் தான் அந்த வலைப்பூ! It's an one stop shop for Kannan Songs! இன்னும் கொஞ்ச நாளில் சதம் அடித்து விடும்!

மலைநாடான் ஐயா, குமரன், ஷைலஜா, திராச, மடல்காரன் பாலு, டிடி அக்கா, வெட்டிப்பயல், அடியேன்-னு ஒரு கூட்டமே கும்மாளம் போட்டிக்கிட்டு இருக்கு அங்கே!
ஜிரா, கோவி.கண்ணன், மதுரையம்பதி, வல்லியம்மா, நா.கண்ணன் என்று வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் கட்சிகளும் இருக்காய்ங்க!
வெளியுலகில் அச்சில் வராத பாடல்களும் அதில் இருக்கு! அதை மெளலி அண்ணா போன்றவர்கள் தேடிப் பிடித்துக் கொடுக்க, நம்ம அன்பு வல்லியம்மா போன்ற பதிவர்கள் சொந்தக் குரலில் பாடியும் கொடுத்திருக்காங்க!

பல அருமையான பாடல்களின் வரிகள், இசை, ஒலி, ஒளி, படங்கள்-னு...உங்களுக்கு மிகவும் பிடிச்சிப் போயிடும்! எட்டிப் பாருங்க!
வாங்க இன்னிக்கு ஒரு சூப்பர் கண்ணன் பாட்டைப் பார்க்கலாம்!


(அழகு கொஞ்சும் முருகப் பெருமான் - வள்ளி சற்றே எட்டிப் பார்க்க - எந்த ஆலயம்-னு தெரிகிறதா?)

"மணம் மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா" என்பதை TMS அழுத்திப் பாடும் போது, நம் மனதில் திருநீறும் சேர்ந்தே அழுந்தி விடும்!
அப்படி என்ன பெருசா மகிமை இருக்குதுங்க திருநீறில்? பின்னூட்டதில் சொல்லுங்களேன் பார்ப்போம்! (க்ளூ வேணும்னாக் கொடுக்கறேன்! சம்பந்தப் பெருமான் திருவாலவாயன் மீது பாடிய பாட்டின் வரிகளை எடுத்துக்கிட்டா, மகிமை-1, மகிமை-2...அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே கிடைத்து விடும்!)

* திருநீறுக்கு ஐஸ்வர்யம் என்ற இன்னொரு பேரு இருக்கு தெரியுமா?
வாரியார் சுவாமிகளிடம் ஒரு ஊரில் பழங்குடி மக்கள் ஐஸ்வர்யம் கேட்டனர். வாரியாருடன் போன பழுத்த சைவர்கள் சிலர், சரி ஜனங்க ஏதோ துட்டு கேக்குதுங்க-ன்னு நினைச்சிக்க, வாரியார் அவர்களைத் திருத்தினார். ஐஸ்வர்யம்=திருநீறு என்பது நமக்கே இப்பல்லாம் தெரியாது! மறந்து போச்சி! எங்கேயோ பாட்டில் வரும்! அது எப்படி இந்த ஆதிவாசி ஜனங்களுக்குத் தெரிந்தது?-ன்னு மிகவும் வியந்தாராம்!

* திருக்கண்ணமங்கை பெருமாளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை திருநீறு பூசி வழிபடுகிறார்கள் தெரியுமா? அப்போது அர்ச்சகர்கள், பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் கூடவே தாங்களும் திருநாமத்தின் மீதே திருநீறு பூசிக் கொள்வதை யாராச்சும் பார்த்திருக்கீங்களா?

* விபூதி என்றும் வழங்கப்படும் திருநீறு, பகவத் கீதையில் எங்கே வருதுன்னு தெரியுமா? (அடியேன் பெகாவத் கீதையைச் சொல்லவில்லை! அங்கு தேடினால் ஒன்னும் கிடைக்காது!:-)


சிறிய, மனப்பாடம் செய்ய எளிதான பூசைப் பாடல்! படித்து மகிழவும்!
பாடலை இங்கே கேட்கவும்!
குரல்: TMS வரிகள்: MP Sivam

கந்தன் திரு நீறணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்

(கந்தன்)

சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்துப் போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்து அன்னைசெல்வம் ஓடிவந்து
சிந்தையைக் குளிரவைத்துச் சொந்தம் கொண்டாடிடுவாள்

(கந்தன்)

மணம்மிகுந்த சாம்பலிலே மகிமை இருக்குதடா
மனமுடன் அணிவோர்க்கு மகிழ்ச்சியைப் பெருக்குதடா
தினம்தினம் நெற்றியிலே திருநீரு அணிந்திடடா
தீர்ந்திடும் துன்பமெல்லாம் தெய்வம்துணை தாருமடா
(கந்தன்)
Read more »

***ஆன்மீகப் பதிவர்களின் அடுத்த கட்ட ஆட்டம்? - பாஸ்டன் பாலானாந்தா!

நம்ம பாபாவைப் பற்றி என்ன சொல்லுறது? நானும் எத்தனையோ பதிவு போட்டிருக்கேன்! ஆனா இவரைப் பத்தி எழுத உட்கார்ந்தா ஒன்னுமே வரமாட்டேங்குதே! என்ன கொடுமை பாலாஜி!

ஆங்...இதோ வந்திரிச்சி! பதிவு எழுத நேரமே இல்லை-ன்னு சொல்லுறவங்க எல்லாம் உடனே பாபாவை மீட் பண்ணுங்க! அவருக்கு மட்டும் ஒரு நாளைக்கு தொன்னூத்தியாறு மணி நேரம் என்பது பிரம்ம சிருஷ்டியின் ரகசியம்! :-)
அவர் கிட்ட இருந்து கொஞ்ச நேரத்தையும் காலத்தையும் வட்டிக்குக் கடன் வாங்கினீங்கனா, நீங்க எங்கயோ போயிருவீங்க!

சுட்டி நிபுணர் நம்ம பாஸ்டன் பாலா, ஆன்மீகப் பதிவர்களுக்கு மட்டும் இ-தமிழ் பக்கத்தில் சுட்டியே கொடுக்க மாட்டேன் என்பதை ஏகாதசி விரதமாகவே வச்சிருக்காரு! :-)
அப்படிப்பட்ட தலைவரு, அடியேன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆன்மிகத் தமிழ்ப் பதிவுகளின் அடுத்த கட்டத்தை ஒரு அக்கு அலசி இருக்காரு பாருங்க!
அதுவும் சும்மாவா?
வார இறுதியின் சிற்றஞ் சிறுகாலே, ஜிமெயிலில் வந்துன்னைச் சேவித்து, 04:24 மணிக்குத் தன் முத்தான பதில்களை அனுப்பி வச்சாரு!
இப்படிப்பட்ட பாபாவுக்கு, ஆன்மீக டிபார்ட்மென்ட்டில் இருந்து என்ன பட்டம் கொடுக்கலாம்? அடியார்கள் எல்லாரும் வந்து அடிச்சி விளையாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!:-)


இங்கு இன்னொரு செய்தியையும் சொல்லிக் கொள்ள பாபாவின் அனுமதியை வேண்டுகிறேன்!
பாபாவின் அன்னையார் திருமதி ஆர்.பொன்னம்மாள் அருமையாக ஆன்மீகக் கட்டுரைகள் எழுத வல்லவர்!
காமகோடி இதழில் இவரின் கட்டுரைகளை நான் சென்னையில் இருக்கும் போது தவறாமல் வாசிப்பேன்! ரொம்ப அடர்த்தியா சொல்லாது, என்னைப் போலவே லோக்கலாகப் பேச்சுத் தமிழில் ஆன்மீகத்தைச் சொல்லுவாய்ங்க!

ஆனா அப்போ, இவங்க தான் பாபாவின் அம்மா என்பது எனக்குத் தெரியாது!
இந்த ஒட்டக்கூத்தர் ஒலிப்பேழைப் பதிவைப் பார்த்து தான் அறிந்து கொண்டேன்!
திருமதி ஆர்.பொன்னம்மாள் அவர்களின் வலைப்பூ இங்கே!

முன்பு ரவியின் நேர்காணலில் சொல்லப்பட்ட அதே எண்ணங்களும், விழைவுகளும் தான் பாபாவையும் நேர் காண வைத்தது!
பாபாவின் பல்லூடகப் பார்வைகள், நிச்சயம் மாறுபட்ட சிந்தனைகளைத் தரும் என்பது அடியேன் நம்பிக்கை! அந்த நம்பிக்கை இந்த நேர்காணலில் மேலும் வலுப்பட்டது!
Thus Spake Baba....


1. ஆன்மீகம் என்பது தனி மனிதன், தானாய் மனதில் உணர்ந்து கொள்வது! அப்படி இருக்க, ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?

முதல் கேள்வி: 'தானாய் தெரிந்து கொள்வது'.இது சாத்தியமில்லை. புத்தகம், பட்டறிவு, நண்பனுக்கு தொலைபேசி போட்டு கேட்டறிவது போன்றவை மட்டுமே எனக்கு சாத்தியம். குறுங்கதை மூலம் இதை விளக்கலாம்.

மண்டனமிஸ்ரருடன் வாதம் செய்ய (கொஞ்சம் பேக்கிரவுண்ட் விரும்புபவர்களுக்கு: கீதா சாம்பசிவம்: "வெற்றியைக் குறிக்கும் நாள் இது!") சங்கரர் செல்கிறார். செல்லும் வழியில் 'தேங்காய் மண்டிக்காரனை' பார்க்கிறார்.

எல்லாரும் தென்னை மரத்தில் ஏறி, தேங்காய் பறித்தால், அவன் வித்தியாசப்படுகிறான்.
சன் டிவியில் வடிவேலு பிள்ளை போல் 'மாயாஜாலம்' என்று உரைத்தவுடன்,
'அர்ஜூனா.. அர்ஜூனா' பாடலில் சமத்துவ சரத்குமார் முன் நமீதா வளைவதைப் போல் நெளிந்து இளநீர்களைப் பறிப்பதற்கு வசதியாக தென்னை மரம் சாய்கிறது. அவனும் பறித்துக் கொண்டவுடன், வழக்கம்போல் நிமிர்ந்து நிற்கிறது.

இந்த டெக்னிக், ஆதிசங்கரருக்குத் தெரியாது.
'தெரிந்து என்ன ஆகப் போகிறது?' என்று அலட்சியப்படுத்தாமல், அவனிடம் சென்று சீடனாக சேர்ந்து, மரங்களை வளைவிக்கும் நுட்பத்தை அறிந்து கொள்கிறார்.

ஆதிசங்கரரோ ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக இருக்க விரும்புபவர். தேங்காய் சேர்த்துக் கொண்டால் கொழுப்பு ஏறி 'காவித் துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு' என்று ரஜினி கூட அட்வைஸ் விடும் நிலைக்கு ஆகிவிடுவார். என்றாலும் புதியது அறிய உற்சாகத்துடன் கற்றுக்கொள்ள விரும்புகிறார்.

இதெல்லாம் முடிந்து மண்டனமிச்ரரின் வீட்டுக்கு சென்றால், அவர் வீட்டில் அன்று திவசம் என்பதால் வாசற்கதவு தாளிட்டிருக்கிறது. எதிர்த்தாப்பில் பார்த்தால் தென்னை மரம் நின்று கொண்டிருக்கிறது.. வளைய சொல்கிறார். வளைகிறது. மேலேறி நின்று செர்ஜி பூப்காவாக உயரந்தாண்டி வீட்டுக்குள் சூப்பர் ஸ்டார் எண்ட்ரி கொடுக்கிறார்.
கதையின் முடிவில் மாரல்: 'களவும் கற்று மற; ஆன்மிகமும் கற்று வை'

இரண்டாவது கேள்வி: 'ஆன்மீகப் பதிவுகள் பதிவுலகத்துக்குத் தேவையா?'
எல்லாமே அவசியந்தான். எலியட் ஸ்பிட்சர்களுக்கு சிற்றின்பம் தேவையில்லாமல் மோட்சம் பெற வைக்கவாவது ஆன்மிகம் தமிழ்ப் பதிவுலகத்துக்கு அவசியம்.


2. நீங்கள் ஆன்மீகம்/இலக்கியம் கலந்த பதிவுகள் படிப்பீர்களா? இல்லை போரடிக்கும் என்று ஓடிவிடுவீர்களா? எதைப் படிப்பீங்க? எதை விடுப்பீங்க?

நான் பெரும்பாலும் படிப்பதில்லை. அலுவலில் கொடுக்கும் பத்து பக்க ஒலை போல் இருந்தால் ஒவ்வாமை இன்னும் அதிகரிக்கிறது.
தங்களின் புதிர்களில் 'இந்து சமயத்தில் எனக்கு எல்லாமே தெரியும்' என்னும் அகந்தையைப் போக்கிக் கொள்ள மேலோட்டமாகவாது பார்ப்பதுண்டு. இதற்கும் இன்னொரு குட்டிக்கதை.

இப்பொழுது ஆதிசங்கரரின் சிஷ்யருக்கு செல்வோம். அவருடைய பெயர் பத்மபாதர். இவருக்கு இஷ்ட தெய்வம் நரசிம்மர். எல்லா முனிவர்களும் போல் காட்டுக்குப் போய் நரசிம்மர் கண் முன்னே பிரத்யட்சம் ஆவதற்காக மோனநிலையில் இருக்கிறார். காடு மாறி காடு வரும் ஃப்ரெஷர் வேடன் இவரைப் பார்க்கிறான்.
தட்டியெழுப்பி, 'அய்யா.. சாமீ! எதுக்கு இப்டி ஃபீலிங்கா உக்காந்துண்டு இருக்கீங்க? ஊர்வசி மேல லவ் ஃபெய்லியரா!' என்று கொக்கி போடுகிறான்.

பத்மபாதரும் பொறுமையாக, 'இந்தக் காட்டில் சிங்க முகத்துடனும் மனித உடலுடனும் இருப்பவரை கண்ணுறுவதற்காக தியானித்துத் தேடுகிறேன்' என்று குறிக்கோளை விளக்குகிறார். 'அம்புட்டுதானே... ராவுக்குள்ளாற உங்களுக்கு யுபிஎஸ்ஸிலோ டிஎச்ல்லிலோ டெலிவரி செஞ்சுடலாம்' என்று சூளுரைத்து விட்டு கிளம்புகிறான்.

'மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.'

என்று குமரகுருபரர் சொன்னது போல் அவனுடைய அன்றாட வேலையான வேட்டையை விட்டான். நண்பகல் பழரசம்; மதியத்திற்கான மான் ஃப்ரை; சாயங்கால கேடோரேட்; கொஞ்சம் சியஸ்டா என்று எல்லாமே நினைவில் வரவில்லை. சூரிய அஸ்தமனமும் ஆகிவிடுகிறது. குத்தீட்டியை எடுத்து மாய்த்துக் கொள்ள செல்கிறான். கண்ணப்பருக்கு வந்தது போல் காட்சியளிக்கிறது அந்த மிருகம்.

கொஞ்சம் உல்லுவா காட்டி சண்டைக்குப் பின் அடிபணிந்து நாயாக கூடவே வருகிறது.
பத்மபாதர் மிரண்டு போகிறார். கணித அரசி சகுந்தலா தேவியாகக் கணக்கிட்டு, 'உமக்காக 87,600+ மணி நேரம் தவமிருந்தேனே! பத்து மணி நேரத்தில் அவனுக்கு வந்துவிட்டீரே!!' என்று க்ளையண்டிடம் பில்லிங் ரேட்டை பெருக்கும் குந்துரத்தராக கேள்வியெழுப்பினாலும் விடை+நீதி எளிது: 'வேண்டும் என்கிறபோது வேடனைப் போல் வேங்கடவனைக் கட்டியிழுத்துக் கொள்ளலாம்; இன்றைய தேவை சி#, இன்ன பிற மைக்ரோசாப்ட் நுட்பமும் ஊசிப் போகாத தமிழ்ப்பதிவு மசாலாவும்'.


3. ஆன்மீகப் பதிவுகளால் தமிழ் மொழிக்கும், தமிழ் இணையத்துக்கும் ஏதாச்சும் நன்மை இருக்கா?

சுருக்கமான பதில்: நிச்சயமாக.

விரிவான தோட்டாப்புள்ளிகள்:
 • அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களுக்கு சன் டிவி பொழுதுபோக்கு போரடிக்கும்போது
 • புதிய வார்த்தைகளை, சொற் குவியல்களை, பதங்களை, ஆக்கங்களை வெளிக்கொணரும் பழங்கால இலக்கியங்களுக்கு வெளிச்சம் பாய்ச்சும்போது
 • சோறு ஊட்டும்போது 'காக்காய் வடை' கதைக்கு பதில் புதிதாய் புனைவதற்கு உதவும்போது
 • தமிழ்ப்பதிவுகள் எல்லாமே குப்பை என்று பொதுமைப்படுத்தும்போது 'தெய்வ நிந்தனை செய்யலாமா?' என்று சுட்டிகளைக் காட்டும்போது
 • அந்தக் கால 'அவர்கள்' சத்தம் போடாதேவாகவும்; மகாபாரதம் 'தளபதி'யாகவும் உருமாறும் கற்பனைப் பஞ்சத்தைப் போக்குவதற்கு உதவி இயக்குநர்களுக்கு ஐடியா கொடுக்கும்போது


4. சமூக அவலங்கள், மொழி வெறுப்பு, தாக்குதல்கள் - இவை மிகும் போதெல்லாம் இது போன்ற பதிவுகளின் பங்கு என்ன? (எடுத்துக்காட்டு; தில்லைப் பிரச்சனை)

தில்லை, ஜெயேந்திரர் (அல்லது) இருள்நீக்கி சுப்பிரமணியன், பிரேமானந்தா போன்றவை வெளிப்படையாக தெரிபவை. ஆனால், இது போன்ற வெளியில் தெரியாத அவலங்களை வெளிக் கொணருவதில் தான் ஆன்மிகப் பதிவுகளின் பங்கு முக்கியமாக இருக்கிறது.

சுதா சேஷய்யனைப் படித்து கொண்டிருந்த காலத்தில் அவரின் எழுத்துகளில் பிழைகள் மலிந்து இருந்ததை உணர்ந்திருந்தேன். அந்த வருட கல்கி/இன்ன பிற இப்பொழுது கிடைப்பதில்லை என்றாலும், இது போன்ற வெகுசன ஊடக பத்தி எழுத்தாளர்கள் தவறாக எழுதுவதை தெளிவாக்கலாம்.

தெரிந்தவர் குடும்பத்தில் நடப்பவை, அதற்கான பொலிடிகலி கரெக்ட் 'ஆன்மீக'த் தீர்வுகளை 'கேள்வி-பதில்' போல் தரலாம்; இந்த மாதிரி நேரடி கைங்கரியங்கள் சிரமம்.

உதாரணத்திற்கு, என்னையே எடுத்துக் கொள்ளலாம்: சமீபத்தில் என் அம்மா எழுதி வெளியான நூலுக்கு 'இந்தப் புத்தகத்தை இந்த மாதிரி ஆண் பெயர் போட்டு இன்ன அடையாளங்களுடன் வெளியிட்டால்தான் இன்னார் வாங்குவார்கள்' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டு முகமூடி பெயரில்தான் வெளியிட்டிருக்கிறார்கள். இது கூட சமூக அவலம்தான். பெண் மீது நடக்கும் வெளிப்படையான அடக்குமுறை தாக்குதல்.

இவற்றை பெரிய அளவில் எடுத்துச் செல்ல ஜெயமோகனைக் காட்சிப்படுத்தும் விகடன் க்ரூப்பும் முன்வரப்போவதில்லை; அவர்களை வெளிக்காட்ட 'ஃப்ரீயா விடுப்பா' என்று அமைதிகாக்க சொல்லும் அம்மாவும் இடம் தரப் போவதில்லை. எனினும், இது போன்ற கழுத்தை நெறிக்கும் ஆன்மிகச் சூழலை உள்ளிருந்தே வெளிக் கொணர்வதில் பதிவுகளின் பங்கு மிகவும் முக்கியம்.


5. பதிவுலகம் தன்னைத் தானே முதிர்ச்சி கொள்ளும் நிலை வரத் துவங்கியுள்ளது (இதைச் சொல்ல, யாருப்பா உனக்குப் பிரியாணி வாங்கிக் கொடுத்தா?:-) திரட்டிச் சார்பின்மை, குழுப்பதிவுகள், துறைசார் பதிவுகள், ஒரே பதிவர்-பல்துறைப் பதிவுகள் என்று வளரும் சூழ்நிலையில்...
ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டம் என்னவா இருக்கும்/இருக்கணும்-னு நினைக்கறீங்க?

நான் சொல்வதெல்லாம் அடுத்த கட்டமா அல்லது ஆன்மிகத்தை பிந்தைய கட்டத்துக்குத் தள்ளுவதா என்று நீங்கதான் சொல்ல வேண்டும்:

 • நடை: சுருக்கமாக, நவீனமாக, சுய எள்ளலுடன் (உதாரணம்: Nothing New: The Story of Diwali to an ABCD) எழுதினால், இன்னும் சிலரைக் கவரலாம்.
 • உடை: பதிவு என்றாலே நேரடி வர்ணனை, புகைப்படம் (உதாரணம்: thirumylai: பங்குனிப் பெருவிழாக் காட்சிகள் - ஐந்தாம் நாள் உற்சவம்), விழியம் போன்ற பெர்சனல் டச் வேண்டும்; கொணரலாம்.
 • கோர்ப்பு: ஆபிராம், ஆகார், சாரா(ள்) கதைக்கும் ஆதிசேஷன், அதிதி, அருணனுக்கும் முடிச்சுப் போட்டு, பல் மத ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகலாம்.
 • இணைப்பு: புதியதாக வருபவர்கள் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், எது பிடிக்கும் என்பதில் குழப்பம் இருக்கலாம்.
  பல்வேறு பதிவுகளை 'மகளிர் சக்தி' போல் ஒருங்கிணைத்து ஓடை உருவாக்கலாம்.
  பகுதிவாரியாகப் பிரித்து மா சிவகுமார் (annotated archives) போல் தொகுக்கலாம்.
  ஐம்பது வார்த்தைகளில் உபநிஷத்துகள், ஐந்து பதிவுகளில் இந்து மதம் என்று எளிமையான அறிமுகங்களைக் கொடுத்து இணைக்கலாம்.
 • ஊடக விமர்சனம்: அன்றைய 'வணக்கம் தமிழக'த்தின் தென்கச்சியை பிரித்து மேயலாம். சக்தி விகடன் போன்றவற்றில் வரும் நல்ல பதிவுகளுக்கு வெளிச்சம் பாய்ச்சலாம்; தனிப்பதிவில் சேமித்து வைக்கலாம். நாளிதழ்களில் வரும் ஆன்மிக சிந்தனைகளுக்கு விவாத மேடை அமைக்கலாம்.

  தங்களின் பதிவில் இடமளித்தமைக்கு நன்றிகள் பல :)

  அன்புடன்
  பாலாஜி
  பாஸ்டன்


  //நான் சொல்வதெல்லாம் அடுத்த கட்டமா அல்லது ஆன்மிகத்தை பிந்தைய கட்டத்துக்குத் தள்ளுவதா//
  ஹிஹி! அடுத்த கட்டமே தான்! அதையும் தாண்டிப் புனிதமானது!
  நன்றி என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன் பாஸ்டன் பாலானந்த சுவாமிகளே! :-)

  என்ன மக்களே!
  மாதவிப் பந்தலுக்குப் பிரதான ஆசாரியரா பாபாவை நியமித்து விடலாமா? கதை சொல்றாரு! குமரகுருபரர் கவுஜ சொல்றாரு! பட்டைய கெளப்புறாருல்ல?
  நகைச்சுவை/சுய எள்ளல் கலந்து தான் ஆன்மிகம் தரணும் என்பது அடியேனின் அசைக்க முடியாத நம்பிக்கை! தீர்த்தம்-னா கொஞ்சம் சுறுசுறுன்னு பச்சைக் கர்ப்பூரம் போட்டாத் தான் தீர்த்தம்! திருநீறின் மகிமையே தனி தான் என்றாலும், அதனுடன் பன்னீரும் ஜவ்வாதும் சேர்க்கும் போது நா மட்டும் மணக்காது, நாமும் மணக்கிறோம்! அது போலத் தான் ஆன்மீகத்துக்கும் நகைச்சுவை!

  ஆன்மீகப் பதிவாளர்களும் பின்னூட்டாளர்களும், பாபாவின் கருத்துக்கள் பற்றி திரண்டு வந்து எது நல்லது, எது அல்லது என்று விவாதிக்க வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்!
  ஆன்மீகப் பதிவுகளின் அடுத்த கட்டத்துக்கு - தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்! ஊர் கூடித் தேர் இழுக்க வாருங்கள்!
 • Read more »

  ***மாரியம்மனும் மேரியம்மனும்!

  மாரியம்மன் கோயில் இல்லாத கிராமங்கள் மிக மிகக் குறைவு! தனிப்பட்ட கோயிலாய் இல்லை என்றாலும் கூட எங்காகிலும் ஒரு இடத்தில், வேப்ப மரத்திலோ இல்லை மண் புற்றிலோ, ஏதோ ஒன்றில் அவள் நிரப்பப்பட்டு விடுவாள்! அப்படி ஒரு அன்னோன்னியம் அவளுக்கும் கிராமத்து மக்களுக்கும்!
  நாம் என்ன தான் மாயோனும் சேயோனும் ஆதி காலத் தமிழ்க் கடவுள் என்று மாஞ்சி மாஞ்சிப் பதிவு போட்டாலும், இன்னிக்கு மூலைக்கு மூலை இருப்பதென்னவோ அரசரடிப் பிள்ளையாரும், வேப்ப மர மாரியும் தான்! இதை யாரும் மறுப்பதற்கு இல்லை! :-)

  படிப்பின்மையால் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகமாக இவள் வழிபாட்டில் இருந்தாலும், எளிமையும் அன்பும் கூட அங்கு தான் அதிகம்!
  படித்தவர்கள் பேராசையால் செய்யும் மூடநம்பிக்கைகளைப் பார்க்கும் போது, கிராமத்து மூடநம்பிக்கைகள் எவ்வளவோ மேல் என்று தான் எண்ணத் தோன்றுகிறது! :-)
  குறைந்த பட்சம், நிறுவனப்படுத்தப்பட்ட பிரேமானந்தாக்களைக் கிராம மக்கள் உருவாக்கியது கிடையாது! அடுத்தவரை வருத்தும் மூடநம்பிக்கைகளைக் காட்டிலும் தன்னை வருத்திக் கொள்ளும் மூடநம்பிக்கைகள் தான் கிராம மக்களிடம் அதிகம்!

  அதெல்லாம் இருக்கட்டும்! மாரி-ன்னா என்னாங்க?
  மாரி என்பது மழை என்னும் தூய தமிழ்ச்சொல் என்பது பலருக்கும் தெரியும்! மழைக் கடவுளாக வழிபடப்பட்டவள் இவள்!
  இன்று மரக்கடவுளாக வழிபடும் நிலைக்கு இந்த மாரி, மாறி உள்ளாள்!

  இவளின் தோற்றம் வேதக் கடவுளாக இல்லை என்பதே அறிஞரின் கருத்து! பின்னாளில் தான் பார்வதி, துர்க்கையுடன் இவள் தொடர்புகள் பேசப்படுகின்றன! கொற்றவை என்று தமிழ் இலக்கியம் பேசுவது மாரியம்மனைத் தானா?
  இல்லை இ்வளும் பிடாரி, இசக்கியம்மனைப் போல் ஒரு சாதாரண கிராமத்து தேவதையா? இல்லை எப்போதோ மடிந்த ஒரு பெண்ணின் தெய்வாம்சமா?  தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

  இவளை எப்படியெல்லாம் கருதுகிறார்கள்?

  * பரசுராமனின் தாயார் ரேணுகா தேவி = நெறி தவறிய தாயின் தலையைப் பரசுராமன் வீழ்த்தியதால் இன்றும் தலை மட்டும் காலடியில் சிலையாக வைத்து வழிபடும் வழக்கம் மாரியம்மன் கோயில்களில் இருக்கு!
  படவேடு "ரேணுகா" பரமேஸ்வரி மிகவும் பிரபலமான ஆலயம்! எங்கூருக்கு மிகவும் பக்கம்!

  * மாயை, மாயாதேவி, விஷ்ணு மாயை = வசுதேவர்-யசோதையின் உண்மையான மகள்! ஆயர் குலத்தில் உதித்தவள்! கண்ணன் பிறந்த போது பிறந்த குழந்தை! கம்சன் கையில் இருந்து தப்பி வானில் எழுந்து சிறு வயதிலேயே மறைந்தவள்! இப்படி மணமாகாமல் மறையும் கன்னிப் பெண்களை, ஆண்டுக்கொரு நாள் வழிபடுவது ஆயர் குல வழக்கம்! எங்கள் வீட்டில் பூவாடைக்காரியாக இப்படி வழிபடுவார்கள்!

  கண்ணனுடன் பிறந்தவள் ஆதலால் பெருமாளின் சகோதரி. இன்றளவும் ஒவ்வொரு வைகாசி மாதமும் முதல் நாள் அன்று, திருவரங்கத்து அந்தணர்கள் இவளை வழிபடுகிறார்கள். பூச்சொரிதல் விழாவின் போது அரங்கனும் சமயபுரத்தாளுக்குப் பிறந்தவீட்டுச் சீதனமாய்ப் பட்டாடை அனுப்புகின்றான்!

  * கொற்றவை = கொற்றம் என்றால் வெற்றிச் சிறப்பு! நின் கொற்றம் வாழ்க-ன்னு டயலாக் வரும்ல! வெற்றியைத் தரும் போர்த் தேவதை இவள்! பாலை நிலத்து வேட்டைத் தெய்வம்!
  சிலப்பதிகாரம் வேட்டுவ வரிகளில் இவள் பேசப்படுகிறாள்! வழிப்பறி/ கொள்ளைகள் செய்யும் ஆறலைக் கள்வர்களால்(எயினர்) வணங்கப் பெற்றவள்! இந்தக் கொள்ளைத் தொடர்பினாலோ என்னவோ தான் சிலம்புக்கு முன்னுள்ள சங்க இலக்கியங்கள் இவளை அதிகம் பேசவில்லை போலும்! நக்கீரர் மட்டும் "கொற்றவைச் சிறுவ" என்று கொற்றவையின் புதல்வனாக முருகனை அழைக்கிறார்!

  * கண்ணகி அம்மன் = கண்ணகி தான் மாரியம்மனோ?
  கண்ணகி உயிர் துறந்த மலைநாடான கேரளத்தில் இந்த பகவதி நம்பிக்கை அதிகம்! ஆடியின் கடைசி வெள்ளியில் கண்ணகி மதுரையை எரித்ததாகச் சொல்லுவார்கள்! கண்ணகி என்பவள் அம்மனான பின்னர், அம்மனுக்கும் ஆடியில் விழா எடுக்கிறார்கள்!

  * அம்மை நோய் எப்படி இவளோடு தொடர்பாச்சு என்பது ஒரு புதிர் தான்! தென்னகம் மட்டும் இல்லை! வடக்கிலும் அம்மை நோய்க்குச் சீதளாதேவியின் தொடர்புண்டு! (சீதளம்=குளிர்ச்சி); நம் நாட்டைத் தாண்டி, யூதர்கள்=மார்ச்சு, Chaldeans=மாராட்டு, பாபிலோனியர்கள்=ஆயா என்று நோய் தீர்க்கும் அம்மன்கள் எல்லாக் கலாச்சாரம், பண்பாட்டிலும் இருக்கு போல!:-)

  * எல்லையம்மன், பேச்சியம்மன், செல்லியம்மன், பச்சையம்மன், பொன்னியம்மன், கங்கையம்மன், ராக்காயி, பிடாரி, இளங்காளி என்று அத்தனையும் இவள் தானா?


  இப்படிப் பலப்பல கேள்விகள்!
  கேக்கறவன் கேட்டுக்கிட்டே இருப்பான். கும்புடறவன் போயிக்கிட்டே இருப்பான்!:-)
  எது எப்படியோ,
  பொங்கல், குலவைச் சத்தம், கரகம் என்று ஆய கலைகள் - நாட்டுப்புறக் கலைகள் - அதுக்காகவேனும் மாரியம்மனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்!
  பதிவர்களில் எத்தினி பேருக்குக் குலவை போடத் தெரியும்? தெரிஞ்சவங்க பின்னூட்டத்தில் போடுங்க பார்ப்போம்! :-)

  மாரியம்மன் ஏழை மக்களோடும் குறிப்பாகப் பெண்களோடும் உறவாடும் தெய்வமாய் இருப்பது எப்படி-ன்னு கீழே அசைபடம் பாருங்க! புரிஞ்சிடும்!


  மாரியம்மாவில் இருந்து மேரியம்மாவுக்கு வருவோம்!
  சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் ஈர்த்த தெய்வ வடிவங்களுள், அன்னை வேளாங்கண்ணியின் திருமுகமும் ஒன்று!
  மு.கு: அப்ப நான் கிறித்துவப் பள்ளியில் எல்லாம் படிக்க ஆரம்பிக்கல!:-)

  வேளாங்கண்ணி அன்னையின் மிகப் பெரும் சிறப்பு என்ன தெரியுமா மக்களே? கத்தோலிக்க ஆலயங்களில், மாதாவுக்கு மேனாட்டு முறையின் படியான ஆடை தான் அணிவித்திருப்பார்கள், இல்லை அப்படித் தான் திருச்சிலையும் வடிக்கப்பட்டு இருக்கும்!
  தமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி ஒன்றே!

  மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி!-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குக் கொடுக்கவும் அடியேன் தயார்! முகம் பொழி கருணை! அப்படி ஒரு கருணைக் கடாட்சமான கண்கள் அன்னையின் கண்கள்!

  இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா,
  வேளாங்கண்ணிக்கு அருகில் தான் சிக்கல் என்ற சிவத்தலமும் இருக்கு!
  அங்கு அம்பாளின் பெயர் வேல்-நெடுங்-கண்ணி! அது தான் திரிந்து வேளாங்கண்ணி ஆச்சுது-ன்னு ஒரு நண்பர் என்கிட்ட தீவிரமாச் சொல்லிக் கிட்டு இருப்பாரு!
  அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன்!
  அடப் பாவிங்களா! உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை! பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க! அதான்! :-)

  வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களில், மாற்று மதத்தினர் தான் அதிகம்! தீவிரமான மத மாற்றுப் பிரச்சாரங்கள், மயக்குமொழிகள் எல்லாம் எதுவும் செய்யவே வேணாம்! அமைதி அமைந்தாலே போதும், தானாகவே சேவிக்க வருவார்கள் என்பதற்கு வேளாங்கண்ணியே சாட்சி! முகத்தின் அமைதி ஒன்றே அன்னையை ஆயிரம் முறை காணச் சொல்லும்!

  அன்னையின் திருப்பெயர் என்னவோ ஆரோக்கிய மாதா (Our Lady of Good Health) என்பது தான்! ஊரின் பெயரால் வேளாங்கண்ணி மாதா என்றே ஆகி விட்டது!
  அன்னையின் முதல் தோற்றத்துக்கும் காரணம் ஒரு இந்துச் சிறுவன் தான்.
  ஆயர்குலச் சிறுவன் (பால்காரப் பையன்) ஒருவன், குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்க, அவன் முன் அன்னை தோன்றினாள்!
  தன் கைக்குழந்தைக்குக் கொஞ்சம் பால் தர முடியுமா என்று அவனைக் கேட்க, அவனும் தயங்காது கொடுத்து விட்டான்! பின்னர் பால் கொடுக்கும் வீட்டுக்குச் சென்று பால் ஊற்றிவிட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் அந்த இந்து முதலாளியிடம் சொன்னான். ஆனால் பானையில் எட்டிப் பார்த்தாலோ, பால் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது!

  இருவரும் விடுவிடுவென்று மீண்டும் ஆலமரத்துக்கு வந்து பார்க்க, அங்கே அன்னை மீண்டும் தோன்றினாள்! அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது! போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் கடல் சூறாவளியில் இருந்து காப்பாற்றப்பட்டு, அன்னைக்கு நிரந்தரமான ஆலயம் எழுப்பினர் என்பது தான் தலவரலாறு!

  தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொன்கனி என்று ஏழு மொழிகளில் திருப்பலி சார்த்தப்படும் ஆலயம் இது மட்டும் என்று தான் நினைக்கிறேன்!
  மாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் - மொட்டை போடுதல், கண்மலர் சார்த்தல், உடல்மலர் சார்த்தல், அங்கப் பிரதட்சிணம் செய்தல், முட்டிபோட்டு நடத்தல் - இவை அத்தனையும் வேளாங்கண்ணிக்கும் செய்யப்படுகிறது!

  மதங்களுக்கு இடையே தீ மூட்டிக் குளிர் காயும் வேதாகம/விவிலிய பண்டிதர்களும் உள்ளார்கள்.
  மதங்களை இணைக்கிறோம் என்றே தெரியாமல், அன்பு ஒன்றினாலேயே மத நல்லிணக்கப் பாலம் கட்டும் பாமரர்களும் இருக்கிறார்கள்!
  எளிய மக்களுக்கு அன்பு ஒன்றே வழிபாடு என்பதற்கு இந்த மாரியம்மனும், மேரியம்மனுமே சாட்சி!


  வாழைப்பந்தல் பச்சையம்மன்  பாலாறும் செய்யாறும் சங்கமிக்கும் எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தின் (திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம்) அதிதேவதை இவள்!
  புதுப்புடைவையை மடித்து மடித்துச் சுற்றி ஒரு பெண்ணின் உருவம் போல் எங்கம்மா செய்வாங்க! பூவாடைக்காரியான அதற்குக் காதோலைக் கருகமணி சார்த்தி, வாமுனியும் செம்முனியும் காக்கும் பந்தலில் பொங்கலிட்டு, வீட்டுக் குழந்தைகளுக்கு முதல் முடியிறக்கம், காதுகுத்தல் எல்லாம் நடைபெறும்!


  வாழைப்பந்தல்கள் பின்னணியில் வாமுனி, செம்முனி

  இவளுக்குச் செய்த பின்னர் தான், குலதெய்வம் முருகப் பெருமானுக்கும், பின்னர் திருமலை எம்பெருமானுக்கும் செய்வது வழக்கம்!
  பச்சம்மா என்று நாங்கள் பாசமுடன் அழைக்கும் பச்சையம்மனையும் பொன்னியம்மனையும் இந்த நட்சத்திர வாரத்தில் போற்றி மகிழ்கின்றேன்!

  ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா!
  ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், துன்னுபுட்டுப் போடியம்மா!
  Read more »

  Thursday, March 20, 2008

  ***தமிழ்ப் பதிவர்களின் பாரதப் போர்! - கீதா சாரம்! - Part 2

  கீதையின் துவக்கம்! மக்களே எல்லாரும் எழுந்திரிச்சி நின்னு, கன்னத்துல ஒரு தபா போட்டுக்குங்க! அப்படியே கிளாசில் ஒரு குவார்ட்டர் ஊத்திக்குங்க! இதோ பதிவர் கேஆரெஸ்-க்குப் பதிவர் ராகவன், திருவாய் மலர்ந்து அருளிய "பெகாவத்" கீதை! முந்தைய பகுதி இங்கே!

  ஜிரா:
  சண்டையை எண்ணிச் சலம்பிடும் சங்கரா!
  சண்டையின் தன்மை சொல்வேன் கேளடா!
  பதிவுகள் ஆன்மா மரணம் எய்தாது...மீள் பதிவு பிறந்திருக்கும்!
  பின்னூட்டம் இடுவாய், பின்னூட்டம் இடுவாய், வீரத்தில் இதுவும் ஒன்றே!

  நீ விட்டு விட்டாலும் இவர்களின் பதிவு, சூடாகி ஆவியாகும் ஓர் நாள்!

  கேஆரெஸ்: உனக்கு எல்லாம் தெரியும்டீ! ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும் ஜிரா! நீயா என்னை இந்தப் பாவச் செயலைச் செய்யத் தூண்டுவது?

  ஜிரா:
  என்னை அறிந்தாய்! எல்லாப் பதிவும் என் போலி என்பதையும் அறிந்து கொள்வாய்!
  ஜிரா மனது, ஜில்பான்ஸ் மனதோ? காண்டீபம் நழுவ விட்டாய்?
  பதிவரும் நானே! போலியும் நானே! அனானியும் நானே நானே!
  சொன்னவன் ஜிரா! ஜல்லி அடிப்பவன் ஜிரா! துணிந்து நில் தி(ர)ட்டி வாழ!!!

  கேஆரெஸ்: சர்வமும் நீ தான், நீ தான் என்று சொல்லிக் கொள்கிறாயே எங்கள் மாதவா! உண்மையில் நீ யாரு? அதை ஒரு வாட்டியாச்சும் ஒழுங்காச் சொல்லித் தொலையேன்!

  ஜிரா: அடேய்! என்னையா யாரென்று கேட்டாய்? நான் ஸ்ரீவள்ளியும் எழுதுவேன்! சில்க் ஸ்மிதாவும் எழுதுவேன்! ஆனா தேவயானையைப் பத்தி மட்டும் எழுதவே மாட்டேன்! இதோ பார் என் சுயரூபம்...ச்சே விஸ்வரூபம்..!!!
  டொய்ங்க்...டொய்ங்க்...டொட்ட டொட்ட டொட்ட டொட்ட டொய்ங்க்க்க்க்க்!!!
  (ஜிரா தன் சட்டை, கூலிங் கிளாஸ், கர்ச்சீப் என்று சகலமும் கழட்டி விட்டுத், தன் விஸ்வரூப ஆர்ம்ஸைக் காட்டுறாரு! ஒரு முறுக்கு முறுக்குறாரு!
  "ஜீவன்டோன் சாப்பிடுங்க" என்று வெளம்பரத்தை உரக்கச் சொல்லி ஜிராவை அர்ஜூன கேஆரெஸ் கலாய்க்கிறான்!)


  நான் யார்?
  நானே பதிவும் பின்னூட்டமுமாய் இருக்கிறேன்!
  ஆண்களில் நான் டாம் க்ரூஸ்!
  பெண்களில் நான் பிரிட்னி ஸ்பியர்ஸ்!
  நாடுகளில் நான் அமெரிக்கா!

  நகரங்களில் நான் பாரீஸ்!

  மொழிகளில் நான் பிரெஞ்ச்(கிஸ்)!
  வேதங்களில் நான் காமசூத்திரம்!
  தேவர்களில் நான் இந்திரன்!
  அசுரர்களிலும் நானே இந்திரன்!


  சாமியார்களில் நான் ஓஷோ!
  மாமியார்களில் நான் இந்திரா காந்தி

  நதிகளில் நான் நயாகரா!
  மாத்திரையில் வயாகரா!


  தீர்த்தங்களில் நான் குவார்ட்டர்
  நடப்பதில் நான் கோபிநாத் வாக்கர்...ச்சே....ஜானிவாக்கர்
  இசைக்கருவிகளில் நான் பேக்பைப்பர்
  துறவிகளில் நான் ஓல்டுமாங்கு


  சினிமாவில் டைரக்டர்ஸ் ஸ்பெஷல்
  சரக்குகளில் நான் சுண்டக்கஞ்சி
  பத்திரிகைகளில் நான் டெபோனேர்
  புரொகிராம்களில் நான் மிட்நைட்மசாலா


  மீன்களில் நான் கருவாடு!
  அரிசியில் நான் புழுங்கல்!
  பருப்பில் நான் முந்திரி!
  மவனே போதும் எந்திரி!


  கேஆரெஸ்: ஆகா...ஆகா...தன்யானேன் ஜிரா! என்ன ஒரு தரிசனம்! விஸ்வரூப தரிசனம்! என்னுடல் புல்லரிக்குது ஜிரா! இப்ப நான் ஒரு பாசுரம் பாடியே ஆகணும்!
  (கேஆரெசாழ்வார் ஜிராவின் பொற்பாத கமலங்களைப் பணிந்து, தமிழ்ப் பாசுரங்களை ஓங்கிப் பாடுகிறார்...)
  பச்சைமா மலைபோல் சாலட்
  பவளவாய் கென்டக்கி சிக்கன்
  அச்சுதா அஞ்சப்பர் குழம்பே
  ஆயர்தம் அன்னப் பூர்ணா


  இச்சுவை தவிர யான்போய்
  மெக்டொனால்ட்ஸ் ஜங்ஃபுட் உண்ணும்
  அச்சுவை பெறினும் வேண்டேன்
  ஆம்ஸ்டர்டாம் நகர் உளானே...


  ஜிரா: ஆகா! கேஆரெஸ்! நான் தான் டகால்ட்டி-ன்னு நெனச்சேன்! நீ என்னைய விட டகால்ட்டியா இருக்கியேப்பா! எப்படிடா நண்பா, இப்படி எல்லாம் தமிழ்ப் பாசுரம் பாடுற?

  கேஆரெஸ்: அடியேன் சீவீ ராமானுஜ தாசன்! ஹிஹி! சரி ஜிரா பரந்தாமா, கீதை இவ்வளவு தானா? இல்ல இன்னும் ஏதாச்சும் பாக்கி கீக்கி இருக்குதா?


  ஜிரா:
  பதிவுலகில்
  எது பதிந்ததோ அது பின்னூட்டம் பெற்றது.
  எது பின்னூட்டம் பெற்றதோ அது நன்றாகவே சூடானது.
  எது சூடானதோ அது பேஜ்விசிட் பெற்றது.
  எது பேஜ்விசிட் பெற்றதோ அது அலெக்சியா ரேட்டிங் பெற்றது.

  டாப் ஃபைவ்வில் ஒருவனே, டாவடிக்கும் பார்த்தனே...
  எந்த ரேட்டிங்கை நீ கொண்டுவந்தாய் அதை நீ இழப்பதற்கு.
  எந்த ரேட்டிங்கை நீ பெற்றாயோ அது இங்கிருந்தே பெறப்பட்டது.
  எந்த ரேட்டிங்கை நீ இழந்தாயோ அது இங்கேயே இழக்கப்பட்டது.

  எந்தப் வலைப்பூவை கொண்டு வந்தாய்! அதை நீ இழப்பதற்கு?
  எந்தப் பின்னூட்டத்தை நீ போட்டாய்! பதிவு சூடாவதற்கு?
  எதை நீ பப்ளிஷ் செய்தாயோ, அது இங்கிருந்தே பப்ளிஷ் செய்யப்பட்டது.
  எதை நீ ரிஜெக்ட் செய்தாயோ, அதுவும் இங்கிருந்தே ரிஜெக்ட் செய்யப்பட்டது.


  எந்த பின்னூட்டம் இல்லையென்று நீ அழுகின்றாய்?
  கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!!
  பதிவினை எழுது! பின்னூட்டத்தை எதிர்பாராதே!!
  குழுப் பதிவினில் எழுது! கும்மியை எதிர்பாராதே!!


  எது இன்று உன்னுடைய குழுப் பதிவோ,
  அது நாளை மற்றொருவர் உடையதாகிறது.
  மற்றொருநாள், அது வேறோருவர் உடையாதாகும்.
  Nothing Stays...Thatz what Nameethan Says!!
  இதுவே பதிவுலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.

  கேஆரெஸ்: ஆகா......இதுக்குப் பேர் தான் கீதாசாரமா கண்ணா? எனக்கென்னமோ இது கீதாசாரமாத் தெரியலையே! அபசாரம் மாதிரி-ல்ல தெரியுது!

  ஜிரா: இது அப-சாரமும் இல்லை! அபிஅப்பா-சாரமும் இல்லை! இதுவே ஜீரா சாரம்! ஜீரா சாரம்!!

  கேஆரெஸ்: தன்யன் ஆனேன் ராகவா! ஆனால்...

  ஜிரா: எலே மாங்கா...என்னவே ஆனால்-னு இழுக்குற...?

  கேஆரெஸ்: மை டியர் ராகவா! என்ன இருந்தாலும் பின்னூட்டத்தில் சண்டை போடப் போகிறவன் நான் அல்லவா?
  ஜிரா காட்டிய வழி என்று யாரையாவது நான் எடுத்தெறிந்து பின்னூட்டி விட்டால், அந்தப் பாவம் எனக்கல்லவா?
  அதற்கு நீ உடந்தை ஆவாயா ஜிரா? சொல் ஜிரா சொல்!

  ஜிரா:
  உள்குத்து என்றிந்த உலகம் சொன்னால் அது போகட்டும் கோவி-கண்ணனுக்கே!
  போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் குமரனுக்கே!
  ரத்னேஷே ஆக்கினான்! டிபிசிடியே தாக்கினான்!
  வவ்வாலே கொலை செய்கின்றான்!!!
  பதிவுலகில் எழுக! நின் சாக்பீசும் எழுக! பதிவெலாம் சிவக்க!!!  ஆயிரம் ஆயிரம் மணிகள் ஒலிக்கின்றன. சங்க நாதம் பறக்கிறது. ஓசை செல்லா சவுண்ட் எபெக்ட்ஸ் பிச்சிக்கிட்டுப் போகுது. பதிவர்கள் மலர் மாரி பொழிகிறார்கள்!
  பாஸ்டன் வியாசா Snap Judge-இல் சுட்டி கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறார்!
  பெனாத்தலார் பெனாத்துவதை நிறுத்தி விட்டு, கீதாலஜி படிக்கத் துவங்குகிறார்!
  அடுத்தது கீதை பற்றிய குறும்படம் தான் என்று டுபுக்கு கேஆரெஸ்ஸின் கால்ஷீட் தேடி ஓடுகிறார்!
  கீதாசாரத்தின் படி, நல்ல பதிவனாய் நடந்து கொள்வது எப்படி-ன்னு டிப்ஸ் திவ்யா சிப்ஸ் போடுறாங்க!

  கீதா ரகசியம் சொன்னவன் காலைக் கழுவிக் குடிங்கடே-ன்னு ஆசிப் அண்ணாச்சி அருள் வந்து ஆடுறார்!
  இதுவே தமிழன் நிஜ கீதை! இதுவே கலைஞர் பெரும் பாதை! என்று லக்கி அண்ணாச்சி ஒரு சிலிர்ப்பு சிலிர்க்கிறார்!
  இட்லி வடையில் ஜீரா சாரம் டாப் டென்னில் நிக்குது!
  கீதைச் சார்பின்மையும் பதிவுகளின் பரிமாணங்களும் என்று நம்ம ரவிசங்கர் விக்கிபீடியாவில் ஆயிரம் பக்க வெள்ளை அறிக்கை ஒன்றைச் சமர்பிக்கிறார்!

  நச்-னு ஒரு கீதைப் போட்டியை சுடச்சுட அறிவிக்கிறார் நம்ம சர்வேசன்! போட்டிக்கு விண்ணப்பங்கள் குவிகின்றன!
  * வினையூக்கி எழுதிய மாயாவி மகாபாரதம்
  * சிறில் அலெக்ஸ் எழுதிய முட்டத்தில் மகாபாரதம்
  * தேவ் அண்ணாத்த எழுதும் விவாஜீ, கிருஷ்ணாஜீ, ஜீராஜீ
  * செல்வன் எழுதும் ஜிரா புனிதாவை லவ் பண்ணுகிறாரா?
  * தம்பி உமாகதிர் எழுதும் போர்க்களத்தில் ஒன்னுக்கு போகலாமா?
  * காதல் மன்னன் ஜீ எழுதும் அர்ஜூன் என்ற அன்பானவன்
  * அரைபிளேடு எழுதும் பாஞ்சாலியின் ஜன்னல் வச்ச ஜாக்கெட்.

  என்று போட்டிக்கு பல லட்சம் பாரதக் கதைகள் வருகின்றன. அத்தனையும் சீக்ரெட்டாக எடைக்கு எடை போட்டுக் காசாக்குகிறார் சர்வேசன்! யார் இந்த சர்வேசன் என்ற சர்ச்சை பதிவுலகில் கூடவே எழுகிறது! அடுத்த ஐந்து நிமிடத்தில் யூ.எஸ்.மேப்பில் இருந்து பாஸ்டன் காணாமல் போகிறது!

  கோமகன் கொத்தனார் இத்தனை களேபரத்திலும் கடமையே கண்ணாக உப்புமா கிண்டிக் கொண்டிருக்காரு! அவர் கிண்டக் கிண்டப் பின்னூட்டப் புயல் போர்க்களத்தில் சுழன்று சுழன்று அடிக்கிறது!

  வெட்டிப்புயல் பதிவில் வீசிய புயல் எல்லாம், இப்போது இடம் மாறி வீசுவதைக் கண்டு, வெட்டிப்புயல் துரியோதனச் சக்ரவர்த்தி திகைத்துப் போய் நிற்கிறார். ஆல் பிகாஸ் ஆப் திஸ் ஜிரா என்று கறுவுகிறார்!

  இனி வேறு வழியில்லை! சிங்கிளா இருந்தா சமாளிக்கலாம்! ஆனா இப்ப வெட்டி சிங்கிள் இல்லையே!...
  சிங்கிள், ஜிராவின் பாதங்களில் மிங்கிள் ஆகிறது!
  வெட்டிப்புயல், ஜிராவின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து சரணாகதி செய்கிறான்!
  இனி எல்லாம் சுகமே என்று கெளரவர்களின் எண்ணிக்கையும் 105ஆக உயர்கிறது! நியாயமாப் பாத்தா 106ஆக உயரணும்! ஆனால் வழக்கம் போலக் கடைசியில் எல்லாரும் கோவி கர்ணனை லூசில் விட்டுவிடுகிறார்கள்!

  (இத்தனையும் சத்தம் போடாமல் ஒரு ஓரமாய் பார்த்துக் கொண்டிருந்த கீதாம்மா...
  "அடப் பாவிங்களா,
  "கீதா"சாரம் என்ற பெயரே என் பேரில் இருந்து தான் வந்தது! இதுக்கான ஆதாரத்தை ஒரு ஓலையில் எழுதி, சிதம்பரத்தில் சீக்ரெட்டா சீலிங்கில் தொங்க விட்டுருக்காங்க!
  அதுக்குத் தான் எல்லோரும் அம்பலம் ஏறி அதைப் பறிக்குணும்-னு திட்டம் போடுறாங்க! என்னிடம் காப்புரிமை வாங்காத ஜிராவுக்கு ஆப்புரிமை கொடுத்தே ஆகணும்" என்று தீவிரமா யோசிச்சிக்கிட்டு இருக்க...அங்கே அம்பி...நல்லா விசிறி விட்டு விட்டு வந்த வேலை முடிஞ்சுது-ன்னு அப்படியே அப்பீட் ஆகிறான்!

  சு! சுபா! சுபம்!!!
  பதிவர்களுக்குச் சர்வ மங்களம் உண்டாகட்டும்!!!
  Read more »

  ***குசும்பன் தொகையா? குறுந்தொகையா?

  "கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்! குசும்பன் வீட்டு நாய்க் குட்டியும் லொள்ளு பண்ணும் என்பது ஆன்றோர் வாக்கு!
  அப்படியாகப் பட்ட நம்ம குசும்பன் அண்ணாச்சியின் மறுபக்கத்தைக் கிழித்தெறிய வேண்டாமா? அதற்குச் சிறந்த ஆயுதம் இந்தக் குறுந்தொகை!"

  "என்னங்கண்ணே சொல்றீங்க? ஸ்டார் வீக்குல ஓவர் ஜூடாயிட்டீங்களா? ஜில்லுன்னு ஒரு ஜிகிர்தண்டா அடிக்கறீங்களா கேஆரெஸ்?
  அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்னங்கண்ணே சம்பந்தம்? குசும்பனுக்கும் குறுந்தொகைக்கும் என்னங்கண்ணே சம்பந்தம்?"

  "எலே! ஜிகிர்தண்டாவை வேணாம்னு சொல்லமாட்டேன்! ஆனா முழுசாக் கேளுவே! நீங்க கண்ணால பாக்குற குசும்பன் வேற! நான் காதால கேக்குற குசும்பன் வேற! அண்ணாச்சிக்கு குறுந்தொகையின் 400 பாட்டும் மனப்பாடமாத் தெரியும்-னு உனக்குத் தெரியுமா?"

  "ஆகா...அப்படியா?"

  "என்ன நொப்பிடியா! நம்ப முடியலையா?"

  "இல்லண்ணே...கேஆரெஸ் நல்லவரு தான்! அவரு சொன்னா கரீட்டாத் தான் இருக்கும்! இருந்தாலும் நம்ம குசும்பன் அண்ணாச்சிக்குள்ளாற ஒரு சங்கத் தமிழ் ஸ்விஸ் பேங்கே இருக்குன்னு சொன்னீங்க பாருங்க...அதான் கொஞ்சம் கேராக் கீது!"

  "அந்தச் சங்கத் தமிழ் ஸ்விஸ் வங்கியின் கடவுச் சொல் உனக்கு வேணுமா, வேணாமா? அதைச் சொல்லு"

  "ஐயோ...வேணுமே வேணுமே...சரி, நீங்க எப்படி இதைக் கண்டு புடிச்சீங்க?"

  "அண்ணாச்சி அன்னிக்கி என்றுமில்லாத அதிசயமா, சிக் ஷாம்பூ போட்டுச் சிக்குனு குளிச்சிக்கிட்டு இருந்தாரு! அப்ப அவர் பாடின அந்த பாத்ரூம் சாங் தான் அந்தக் குறுந்தொகைப் பாட்டு!"

  "அடப்பாவி...பாத்ரூம்ல போயி யாராச்சும் குறுந்தொகை பாடுவாங்களா? என்னய்யா மனுசன் இந்தக் குசும்பன்! இருக்கட்டும், இருக்கட்டும்!"

  "எலே, எடுப்பட்ட பயலே! எங்க பாடினா என்னலே! குறுக்கப் பாடினாக் குறுந்தொகை, நெடுக்கப் பாடினா நெடுந்தொகை!
  இந்தாக் கேட்டுக்கோ! அண்ணாச்சிக்கு ரொம்ப புடிச்சமான பாட்டு-லே இது!"


  பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
  நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
  பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு
  உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
  இருவேம் ஆகிய உலகத்து
  ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

  (நெய்தல் திணை - தலைவி கூற்று - சிறைக்குடி ஆந்தையார் பாடியது)

  "ஒன்னுமே புரியலைண்ணே! தமிழ்-ல தானே எழுதி இருக்காங்க? வடமொழியா இருக்கப் போவுது!"

  "அடிங்க! இன்னா நக்கலா?...நான் எதுக்குப்பா இருக்கேன்! சொல்லுறேன் கேளூ"

  "அதாச்சும் இரண்டு மகன்றில் பறவைகள், தாமரைக் குளத்தில் ஜாலியாக் காதல் செஞ்சிக்கிட்டு இருக்குதுங்க!
  (மகன்றில் என்பது நீர் வாழ்ப் பறவைகளில் ஒரு வகை)
  அப்போன்னு பார்த்து, ஒரு பூ தண்ணியில மிதந்துகிட்டு வருது! இதுங்க ரெண்டும் அம்புட்டு நெருக்க்க்க்க்க்மா இருக்குதுங்களா? அந்தப்பூ இந்தக் காதல் ஜோடிகளுக்கு இடையேயும் லேசா மிதந்துகிட்டுப் போகுது!"

  "அப்படியே மனசுல பலான பலான சீன்களை ஓட்டிக்கறேன் அண்ணாச்சி! கற்பனை பண்ணிப் பாக்கும் போதே அவ்வளவு இனிமையா இருக்கு!"

  "அதான் தமிழ் இலக்கியம்! காதல் இலக்கியம்!
  அந்த ஒரு நிமிஷ இடைவெளி...இடைவெளி கூட இல்லை! சும்மா கேப்புல ஒரு பூ! - அது கூட அந்த ஜோடிகளுக்குத் தாங்க முடியலையாம்! பல ஆண்டுகள் கழிவது போல கழியுதாம் அந்தப் பூவின் நகர்வு!
  அப்படி ஒரு காற்றும் புக முடியா அணைப்பு! இளமை இணைப்பு! புணர்ச்சி முனைப்பு! தமிழ்ப் பிணைப்பு!"

  "ஆகா! ஆகா!"

  "இப்ப பொருத்திப் பாரு...
  பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன = பூ இடையில் வந்தாலும், ஆண்டுகள் கழிவது போல்
  நீருறை மகன்றில் புணர்ச்சி போலப் = நீரில் வாழும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சி
  பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு = பிரிவு கொஞ்சம் கூடத் தாங்காமல், அழியாக் காதலொடு
  உடனுயிர் போகுக தில்ல = உடனே உயிர் போய் விட வேண்டும்!"

  "என்னண்ணே சொல்றீங்க? எதுக்கு உயிர் போகணும்? பூ தானே வந்துச்சி? வில்லனா வந்தான்?"

  "உம்...இந்தப் பறவை சீன் என்பது ஒரு உவமைக் காட்சி தான்! உண்மையான காட்சி என்ன தெரியுமா? பேக்கிரவுண்ட் இதான்!
  அம்மாவும் அப்பாவும், பொண்ணை அடைச்சி வச்சிருக்காங்க! அப்போ பிரிவு தாங்காது அவள் தன் தோழி கிட்ட சொல்றா! அது தான் பாட்டு!

  கடனறிந்து = கடமையை அறிந்து
  இருவேம் ஆகிய உலகத்து = ஜென்மம் ஜென்மமாக நாங்க இரண்டு பேரா இருந்து வருகிறோம்!
  ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே = இப்போ அந்த இரண்டு, ஒன்று+ஒன்று என்று பிரிந்து விட்டதே!
  அவர் தனி, நான் தனி என்று ஆகி விட்டதே! இந்தச் சிறுமை எங்களுக்கு வேண்டாம்! நாங்க உய்யணும்னா, உடன் உயிர் போகுக!
  இதான் முழுப் பாட்டும் சொல்ல வரும் கருத்து"

  "ஆகா...என்ன ஒரு காதல் உணர்ச்சி! தங்களுக்கு இடையே ஒரு சின்னப் பூ வந்தாக் கூடத் தாங்கிக்க முடியலைன்னா, எப்படி எல்லாம் உருகி உருகிக் காதலிப்பாங்க பாருங்க!"

  "இப்ப புரியுதா? எதுக்குச் சாயங்காலம் ஆனா, ஆபீஸ் கேண்டீனுக்கு நம்ம பாலாஜிப் பையன் கூட போவாதே-ன்னு சொல்லுறேன்னு!
  ஒரு பூ வருவதையே தாங்காத அவங்க ரெண்டு பேரும், இம்மாம் பெரிய பூ-தம் வருவதைத் தாங்குவாங்களா?"

  "அடப் போங்க அண்ணாச்சி! எனக்கு ஒரு சந்தேகம்!
  பொதுவா காதலர்கள் ஈருடல் ஓருயிர்-ன்னு "ஒன்னா" இருக்குறத தான் விரும்புவாங்க! ஆனா இந்தப் பொண்ணு தனக்கு "ஒன்னு" வேணாம், "ரெண்டு" தான் வேணும்னு சொல்லுதே! ஏன்?"

  "ஓ...அந்த "இருவேம்", "ஒருவேம்" பத்திக் கேக்கறியா?
  அந்தப் பொண்ணுக்கு இரண்டு பேரா இருக்குறது தான்பா பிடிச்சிருக்கு! ஒன்னா ஆயிட்டா இன்பம் எது-ன்னு தெரியாது பாரு!
  இரண்டு பேரா இருக்கும் போது தான் எனக்கு நீ, உனக்கு நான்-னு,
  கூடல் சுவை,
  கூடலில் ஊடல் சுவை,
  ஊடலில் அவளைத் தேடல் சுவை,
  தேடலில் அவனை நாடல் சுவை,
  நாடலில் மீண்டும் கூடல் சுவை!


  அதான் அவளுக்கு "இருவேம்" வேணும்ங்கிறா! "ஒருவேம்" வேணாம்னு சொல்லுறா!
  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்-ன்னு ஆண்டாள் சொன்னாள் அல்லவா! ஜென்ம ஜென்மமாத் தொடரும் இந்த "இருவேம்"...விட்ட குறை, தொட்ட குறை-ன்னு சொல்லுவாங்களே, அதான்! என்னாப் புரியுதா?"

  "அண்ணே! நீங்க சொல்லச் சொல்ல எனக்கு இப்பவே காதலிக்கணும் போல இருக்குண்ணே!"  குறுந்தொகை தமிழ் மொழியின் அக இலக்கிய நூல்களில் தலை சிறந்தது! எட்டுத் தொகை நூல்களில் ஒன்று!
  நற்றிணை, நல்ல குறுந்தொகை என்று குறுந்தொகைக்கு மட்டும் "நல்ல" அடைமொழி கொடுக்கறாங்க! மொத்தமே 400 பாட்டு தான்! ஒவ்வொரு பாட்டும் எட்டு அடிக்கு மேல போகவே போகாது!
  குட்டி ஆனால் சுட்டி = அதான் "குறுந்"!
  பல புலவர்கள் பாடியதைத் திரட்டித் தொகுத்தது = அதான் "தொகை"!

  திருவிளையாடல் சினிமா பார்த்துப் பார்த்து, இந்நேரம் உங்க எல்லாருக்குமே, ஒரு குறுந்தொகைப் பாட்டாச்சும் மனப்பாடம் ஆகியிருக்கும்! ஆமாம்...தருமி இறைவனின் போலியாக, சிவனாரின் பிராக்சியாக, எடுத்துக்கிட்டு வரும் அந்தப் பாடல் குறுந்தொகைப் பாடல் தான்!

  கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
  காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
  செறி எயிற்று அரிவை கூந்தலின்
  நறியவும் உளவோ நீ அறியும் பூவே
  (இதுக்குப் பொருள் இந்நேரம் உங்களுக்கே தெரியும்!)

  இன்னும் சில பிரபலமான குறுந்தொகைப் பாட்டைக் குறுகுறுன்னு பார்த்துவிட்டுக் குசம்பனின் ஸ்விஸ் பாங்கு அக்கவுண்டுக்குப் போகலாம் வாங்க!


  யாயும் ஞாயும் யாரா கியரோ?
  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
  யானும் நீயும் எவ்வழி அறிதும்?
  செம்புலப் பெயனீர் போல
  அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
  - செம்புலப்பெயனீரார்; குறிஞ்சித் திணை

  எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
  எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
  எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
  செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
  அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
  - இதான் பொருள்!

  நறுமுகையே நறுமுகையே பாட்டில் இதை அப்படியே வச்சாரு நம்ம வைரமுத்து! முன்பு, இசை இன்பம் வலைப்பூவில் இது பற்றி லோக்கலா ஒரு பதிவு போட்டிருந்தேன்! மக்கள் நிறைய பேருக்குப் பிடிச்சி இருந்தது! :-)

  டேய், என் காதலை அவகிட்ட சொல்லவும் முடியலை, சொல்லாம இருக்கவும் முடியலை! - இப்படித் தானே நாம் நண்பர்களிடம் டயலாக் விடுவோம்!
  ஆனா இங்கிட்டு பாருங்க! எவ்வளவு வித்தியாசமான, ஆழ்ந்த வசனம்!

  பாறை மேல வெண்ணைய்! நல்ல வெயில்!
  அதுக்குக் காவல் இருப்பவன் - அவனுக்குக் கையும் இல்லை! வாயும் பேச முடியாது!
  அதாச்சும் கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் (வெண்ணெய்க் கட்டி).
  உருகுது! உருகுது! காதலால் உருகுது!

  ஆனா ஓடிப்போய் எடுத்துக் காப்பாத்தவும் முடியலை! ஏன்னா கை இல்லை!
  மத்தவங்களை உதவிக்குக் கூப்பிடவும் முடியலை! ஏன்னா வாய் இல்லை!
  என் காதல் இப்படி வாயில்லா உமை காக்கும் வெண்ணெய் கட்டி போல ஆகிப் போச்சே! சொல்லவும் முடியலை! சொல்லாம இருக்கவும் முடியலையே! - எப்படி இருக்கு தமிழ் தரும் உவமை?

  இடிக்குங் கேளிர் நும்குறை ஆக
  நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்று இல்ல
  ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
  கையில் ஊமன் கண்ணின் காக்கும்
  வெண்ணெய் உணங்கல் போலப்
  பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.
  -வெள்ளி வீதியார்.


  என்னா மக்களே, குறுந்தொகை பிடிச்சி இருந்ததா? அப்பப்ப மாதவிப் பந்தலில் சங்கத் தமிழ் விருந்தைத் தலைவாழை இலை போட்டு வைக்கட்டுமா? என்ன சொல்றீங்க?
  குறுந்தொகை முழுதும் பொருளுடன் படிக்க இங்கே!
  குறுந்தொகை குறித்த நம்ம கவிதாயினி காயத்ரி அறிமுகம் இங்கிட்டு!

  இந்தப் பதிவு எழுதத் தூண்டிய குசும்பன் அண்ணாச்சிக்கு அடியேன் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்! இப்பத் தெரிஞ்சிருக்குமே, அண்ணாச்சிக்கு அந்தப் பாட்டு ஏன் ரொம்பப் பிடிக்கும்-னு! இன்னமும் தெரியலைன்னா, அவர் கிட்ட திருமண அழைப்பிதழ் கேளுங்க! :-))))

  Read more »

  ***E=mc^2. எனவே கடவுள் இல்லை! - 2

  "சரி சார், இவ்ளோ நேரம் என்னைக் கேட்டீங்க! இப்ப நான் உங்களைச் சில அறிவியல் கேள்விகள் கேட்கலாமா?"
  (மொத்த வகுப்பே சீட்டின் நுனிக்கு வருகிறது!...அப்துல்லா தொடர்கிறான்)

  "KPS சார்! வெப்பம்-னு ஒன்னு அறிவியல்-ல இருக்கு தானே சார்?"

  "ஹிஹி! இதிலென்ன சந்தேகம்! இருக்கு தான்!"

  "குளிர்ச்சி-ன்னு ஒன்னும் அறிவியல்-ல இருக்கா சார்?"

  "என்னடா டுபுக்குத்தனமா கேக்குற? அதுவும் இருக்கு!"

  "இல்லை சார்! குளிர் என்பது அறிவியல்-ல இல்லவே இல்லை!"
  (வகுப்பு கூர்ந்து கவனிக்குது இப்போ!...என்னமோ நடக்கப் போகுது...)

  "என்னடா சொல்லுற நீயி?"

  "வெப்பம் நெறைய இருக்கு. Super Heat, Latent Heat-ன்னு எல்லாம் இருக்கு! ஆனா Super Cold, Latent Cold-ன்னு ஏதாச்சும் இருக்கா?
  வெப்பம் எவ்வளவு வேணும்னாலும் போகலாம்! பத்தாயிரம் டிகிரி கூட! ஆனால் குளிர் -273k டிகிரி வரைக்கும் தான் போக முடியும், அதுக்கு மேலப் போக முடியாது அல்லவா? குளிர்-ன்னு ஒன்னு இல்லவே இல்லை சார்! வெப்பம் இல்லாமை தான் குளிர்!"

  "ஆமா அப்துல்லா, என்ன எதாச்சும் காமெடி பண்ணுறியா நீயி?"

  "வெளிச்சம்-ன்னு ஒன்னு அறிவியல்-ல இருக்கு! இருட்டு-ன்னு ஒன்னு இருக்கா சார்?"

  "பகல்ல வெளிச்சம், நைட்ல இருட்டு! ரொம்ப சிம்பிள்! டேய், என்னாமோ வெளையாடுறடா நீ!"

  "இல்லை சார்! திருப்பியும் தப்பு பண்றீங்க! வெளிச்சம் மட்டுமே அறிவியல்-ல இருக்கு! வெளிச்சம் இல்லாமையே இருட்டு! வெளிச்சத்தை எவ்வளவு வேணும்னாலும் கூட்டலாம்! உங்களால இருட்டைக் கூட்ட முடியுமா? இல்லையே! வெளிச்சத்தைக் குறைக்கத் தான் முடியும்!"

  "சரி...கரெக்டு தான்! ஆனா...இப்ப என்னா சொல்ல வர நீயி?"

  "உங்க அடிப்படையே தப்பு-ன்னு சொல்லறேன்!"

  "வாட்? டு யூ நோ டு ஹூம் யூ ஆர் டாக்கிங்?"

  "தெரியும் சார்! அறிவியல் பேராசிரியர், டாக்டர் KPS கூடத் தான் பேசுறேன்! உங்க தத்துவம் இரட்டைத் தத்துவம்! எதிர்மறைத் தத்துவம் சார்!
  = நல்லதுxகெட்டது, வாழ்வுxசாவு, அழகுxஅசிங்கம், அன்புxவெறுப்பு - இப்படி!

  நல்லது இல்லாததைப் பார்த்துவிட்டு, கெட்டதை ஏன் கடவுள் படைச்சாரு-ன்னு கேக்குறீங்க!
  உங்க அக்கா வாழாததைப் பார்த்துவிட்டு, வெதும்பிப் போய், கடவுள் ஏன் சாவடிச்சாரு-ன்னு கேக்குறீங்க!

  ஸ்கேலை வச்சி என் உசரத்தை அளக்கலாம்! என் எடையை அளக்க முடியுமா?
  இல்லை என் கிட்ட அது தான் இருக்கு! அதை வச்சித் தான் அளப்பேன்! அப்படி அளக்க முடியலைன்னா எனக்கு எடையே இல்லை-ன்னு சொல்லுவீங்களா?
  கடவுளைச் சரியா அளக்க உங்க கிட்ட ஒரு கருவி இல்லை! அதுனால கடவுள் இல்லை-ன்னு ஆயிடுமா?"
  "என்னடா சொல்லுற நீயி? லாஜிக்கோட தான் பேசுறியா?"

  "ஆமா சார்! கண்ணால பாக்க முடியுமா? தொட முடியுமா-ன்னு எல்லாம் கேட்டீங்களே! Magnetism என்ற காந்தக சக்தி இருக்கு அறிவியல்-ல! அதைத் தொட முடியுமா? இல்லை கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்த முடியுமா?
  ஆனா அது கிளப்பும் விளைவுகளை மட்டும் பார்க்க முடியுது! அப்புறம் எதை வச்சி அது காந்தக சக்தி-ன்னு சொல்லுறோம்? அது தரும் விளைவை வச்சித் தானே!
  அதே போல் தான் இறைவனும்!
  மூலத்தைப் பார்க்க முடியலைன்னாலும், விளையும் விளைவுகளை வச்சி இறைவன் இருக்கிறான்-னு சொல்லுறாங்க
  !"
  (வகுப்பில்...ஆகா..ஈகி-ன்னு ஒரே சத்தம் தூக்குது...)

  " நல்லது இல்லாமை தான் கெட்டது! வெளிச்சம் இல்லாமை இருள்! வெப்பம் இல்லாமை குளிர்! அதே போல, தர்மம் இல்லாமை அதர்மம்!
  அதர்மத்தை இறைவனும் படைக்கல! சாத்தானும் படைக்கல! நாம தான் படைச்சோம்!
  நாம நல்லது பண்றதில்லை! அதுனால அது கெட்டது-ன்னு ஆயிடுது! கெட்டதை ஏன் இறைவன் படைச்சான்-னு பகுத்தறிவுச் சுடரான நீங்க பகுத்தறியாது கேட்கலாமா?"
  (வகுப்பில்...மேசைகள் தட்டப்படுகின்றன...)

  "மனுசன் குரங்கில் இருந்து வந்தான்-னு நேற்று சொல்லிக் கொடுத்தீங்க! அந்த மாற்றங்களை எல்லாம் நேராப் போயிப் பார்த்தீங்களா? இல்லையே!
  அறிஞர்களின் ஆராய்ச்சியைப் படிச்சிட்டு, அந்த ஆராய்ச்சி முறையாகச் செய்யப்பட்ட ஆராய்ச்சி-ன்னு நம்பித் தானே அடுத்த கட்டத்துக்குப் போறீங்க! இல்லீன்னா ஒவ்வொரு முறையும் பழைய ஆராய்ச்சி எல்லாத்தையும் உங்க கண்ணால உறுதிப்படுத்திக்கிட்டு, அப்புறம் தான் மேற்கொண்டு Experiment ஏதாச்சும் செய்ய ஆரம்பிக்கறீங்களா?"
  (இப்போது KPS தலை கவிழ்கிறார்...)


  "டியர் ஃப்ரெண்ட்ஸ், நம்ம KPS சார் மூளையை யாராச்சும் பார்த்து இருக்கீங்களா? தொட்டு, முகர்ந்து, சுவைத்து இருக்கீங்களா?"
  (வகுப்பு கொல்லென்று சிரிக்கிறது...)

  "கோச்சிக்காதீங்க சார்! உங்களை அவமதிக்கணும்-னு எல்லாம் இப்படிக் கேக்கலை! ஒருத்தர் மூளையை இங்க வேறு யாருமே பார்க்கலை அப்படிங்கிறதுக்காக, அவருக்கு மூளையே இல்லைன்னு சொன்னா எப்படி இருக்கும்?"
  (வகுப்பு மீண்டும் கொல்லென்று சிரிக்கிறது...)
  (KPS, அப்துல்லாவை எரித்து விடுவது போல் பார்க்கிறார்)

  "இன்னொன்னும் சொல்கிறேன், யாரும் கோச்சிக்கக் கூடாது நண்பர்களே! நம்ம எல்லாருக்கும் நம்ம அம்மா அப்பா இவிங்க தான்-னு நம்பறோம் தானே!
  பொறந்ததில் இருந்து கூடவே இருக்காங்க! அவங்க தான் அம்மா அப்பா என்ற நம்பிக்கை ஆழமாப் பதிஞ்சிக்குது இல்லையா? அறிவியல் பூர்வமாய் DNA Test காட்டினாத் தான் நம்புவோம்-னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா என்னவாகும்?

  அந்த அறிவியல் சோதனை எல்லாம் இயல்பு வாழ்க்கைக்கு வைத்துக் கொள்வதில்லை! விதிவிலக்கான சமயங்களின் போது தான் அவற்றைப் பயன்படுத்தறோம் இல்லையா? அது போலத் தான் இயல்பு வாழ்க்கைக்கு இறைவனை நாம் DNA பரிசோதனை செய்து கொள்வதில்லை!"


  "ஒரு பொருள் இருப்பதற்குச் சான்று இல்லாமை, அதன் இல்லாமைக்குச் சான்றாகி விடாது!
  ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் இருந்திச்சின்னு அறிவியல் பாடத்துல நாங்கல்லாம் படிச்சோம்! ஆனா இப்ப விஞ்ஞானிகள் இல்லை-ன்னு சொல்லுறாங்க! எங்க பசங்க படிக்கும் போது ப்ளூட்டோ-ன்னு ஒரு கிரகம் பாடப்புத்தகத்தில் இல்லாமலே போகலாம்! அப்படின்னா மொத்த விஞ்ஞானமும் அறிவியலும் பொய்யாகி விடுமா சார்? எதையுமே நம்பக் கூடாதா?"

  "ஹும்ம்ம்ம்...
  ஆராய்ச்சிகளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் அப்துல்லா! மனிதனுக்கும் அறிவியலுக்கும் இணைப்பே அந்த நம்பிக்கை தான்!
  அறிவியலால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்!"

  "அதே தான்!
  கடவுளின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டும் சார்! மனிதனுக்கும் கடவுளுக்கும் இணைப்பே அதே நம்பிக்கை தான்!
  ஆன்மீகத்தால் மனித வாழ்வு மேம்படும் என்ற நம்பிக்கை அவசியம் வேண்டும்!
  அந்த நம்பிக்கை தான் சார் மனிதர்களை அன்றாடம் உயிர்ப்புடன் நடத்திக் கொண்டிருக்கு!"
  (டாக்டர் KPS-க்கு ஏதோ புரிவது மாதிரி இருக்கு...உங்களுக்கு?)


  நம்மாழ்வாரின் திருவாய்மொழி தான், காலம் காலமாய் உள்ள கேள்விக்கு விடை தேடத் துவங்குகிறது!
  உளன் எனில் உளன்; அவன் உருவம் இவ் உருவுகள்
  உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள்
  உளன் என, இலன் என இவை குணம் உடைமையில்
  உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே


  கறந்த பாலுள் நெய்யே போல்
  இவற்றுள் எங்கும் கண்டு கொள்

  அப்பர் சுவாமிகளும் இதை ஒட்டியே செல்கிறார்...
  விறகில் தீயினன், பாலில் படு நெய் போல்
  மறைய நின்றுளன், மாமணிச் சோதியான்
  உறவு கோல் நட்டு, உணர்வு கயிற்றினால்
  முறுக வாங்கிக், கடைய முன் நிற்குமே!

  விறகுக்குள் தீ ஒளிந்திருக்கும்! பாலுக்குள் நெய் ஒளிந்திருக்கும்!
  பாலைக் காட்டி, இதில் நெய் எங்கே இருக்கு-ன்னு கேட்டா என்ன சொல்ல முடியும்? இல்லை, கடைஞ்சாத் தான் வரும்-னு சொல்லலாம்!

  இல்லையில்லை! நான் எதுக்குக் கஷ்டப்பட்டுக் கடையணும்? ஒன்னு இருக்கா-ன்னு கேக்குறேன்! என்னையே வேலை பார்த்துக் கண்டுபுடிக்கச் சொல்றீங்க! யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? கண்ணு முன்னாடி நெய்யைக் காட்டுங்க பார்க்கலாம்-னு சொல்லுவோமா? அதுக்கு என்ன பண்ணனும்?

  கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துத் தான் பார்க்க வேணும்!
  உறவு என்னும் கோலை நட வேண்டும்!
  உணர்வு என்னும் கயிற்றினால்
  உள்ளத்தைக் கடையக் கடைய,
  நெய்யது நிலைப்படும்! தெய்வம் புலப்படும்!
  :-)))


  என்ன மக்களே? ரொம்ப ஓவராப் போவாம, எளிமையாத் தானே சொன்னேன்?
  முன்னெப்போதோ மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கில ஆக்கத்தை, மேலும் செவ்வியாக்கி, ஐன்ஸ்டீனின் கொள்கை, DNA Testing, நம்மாழ்வார்-அப்பர் சுவாமிகளின் கருத்தையும் அதில் ஏற்றிச் சொல்லிப் புரிந்து கொள்ள முயன்றேன்!
  புரியப் புரியப் புரியாமை புரியும்! :-) கீழே இன்னொரு அசைபடம் அருமையா இருக்கு!  Read more »

  Wednesday, March 19, 2008

  ***E=mc^2. எனவே கடவுள் இல்லை! - 1

  அறிவியல் வகுப்பில் மாணவர்கள், மாணவிகள் பலரும் ஜோடியா உட்கார்ந்து, ஜொள்ளிக் கொண்டிருந்தார்கள்...சாரி...சொல்லிக் கொண்டிருந்தார்கள்!
  எதை? ஐன்ஸ்டீனின் Theory of Relativity-ஐ! அந்த இளம் பேராசிரியர் உள்ளே வருகிறார்! வகுப்பே எழுந்து நின்று பணிவுடன் வணக்கம் தெரிவிக்கிறது! பேராசிரியர் கே. பன்னீர் செல்வம் (KPS) ஒரு வருத்தப்படாத வாலிபர்! ரொமாண்டிக் மூடு அதிகம்! சிறு வயதிலேயே பேராசிரியர் ஆனவர்!

  அவர் இயல்பாகப் பழகினாலும், அவருடைய அறிவுத் திறமும், பேச்சு வன்மையும் கண்டு, மாணவர் கூட்டம் அவரை ஒரு பத்தடி தள்ளியே வைத்திருந்தது! மாணவியர் கூட்டம் மட்டும் பத்தடி இல்லாமல், இரண்டடி மட்டும் தள்ளி வைத்திருந்தது! :-)

  KPS புரியாத மண்டைக்கும் ஓரளவுக்காச்சும் புரிய வச்சிட்டுத் தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்! "ஐயோ எனக்குப் புரிய வேணாம் சார், நான் சாய்ஸ்-ல வுட்டுறேன் சார்", என்கிற சால்ஜாப்பு எல்லாம் அவர் கிட்ட எடுபடாது! அவரிடம் இருந்து தப்பிக்கணும்னா மாஸ் பங்க் தான் ஒரே வழி! :-)
  அறிவியல் பற்றி அவர் விளக்கும் போதெல்லாம், பகுத்தறிவும் தெளித்து விளக்கும் ஆழ்ந்த பகுத்தறிவுச் செல்வர் நம்ம KPS! அறிவியல் பயிலப் பயில அனைத்தும் தெரிந்து தெளிந்து விடும் என்பது அவர் ஆழமான கருத்து!

  "வணக்கம் KPS சார்"

  "வணக்கம் மாணாக்கர்களே! உட்காருங்க! எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஐன்ஸ்டீன் தியரி பற்றி அவங்கவங்க பார்வையில் சிறு குறிப்பு எழுதிக்கிட்டு வரச் சொன்னேனே! யார் முதலில் வந்து பிரசென்ட் பண்ணப் போறீங்க?"

  "நம்ம அப்துல்லா தான் சார் பண்ணப் போறான்!"

  "வா அப்துல்லா, துவங்கு உன் கச்சேரியை!"

  "நன்றி சார்!
  ஒவ்வொரு அணுவுக்குள்ளும் (atom), சக்தி (energy) இருக்கு சார்! அதை எப்படி அளக்கணும் என்பதைத் தான் இந்த E=mc^2 சொல்லுது!
  அந்தச் சக்தி = அணுவின் கனம் x ஒளியின் வேகம் x ஒளியின் வேகம்

  உதாரணம் ஒன்னு பார்த்தா சுளுவாப் புரியும் சார்! ஒரு கிலோ தூய்மையான தண்ணியில் சுமார் 111 கிராம் ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கும் சார். அப்போ அந்தத் தண்ணிக்குள்ள எவ்ளோ சக்தி இருக்கும்?

  E = 0.111 kg x 3x10^8 x 3x10^8 = 10,000,000,000,000,000 Joules!

  "அருமை! அருமை! மேல சொல்ல அப்துல்லா!"

  "ஒரு புத்தகத்தை வேகமாக் கீழே போட்டா ஒரு Joule சக்தி ஆவுது சார்! அப்படீன்னா ஒரு கிலோ தண்ணிக்குள்ளாற எவ்வளவு சக்தி ஒளிஞ்சிருக்கு பார்த்தீங்களா? கிட்டத்தட்ட நாப்பது மில்லியன் லிட்டர் பெட்ரோல் தரும் சக்தி ஒரு கிலோ தண்ணிக்குள்ள இருக்கு சார்!"

  "வாவ்! மார்வலஸ்! மிகவும் எளிமையாச் சொல்லி இருக்க, அப்துல்லா!"

  "இவ்வளவு சக்தியும் எப்படி சார் தண்ணிக்குள்ள இருந்து ரிலீஸ் பண்ண முடியும்? ஒரு பக்கெட் தண்ணிக்குள்ளாற இவ்வளவு சக்தியா-ன்னு முதலில் தோணும்!
  அதே போலத் தான் சார் கடவுளும்! மேலோட்டமாப் பாக்கும் போது ஒன்னுமே தெரியாது! ஆனா அளந்து பார்த்தோம்னா, ஒவ்வொரு சின்னப் பொருளுக்கு உள்ளேயும், இறைவனின் அபிரிமிதமான சக்தி ஒளிஞ்சிக்கிட்டு இருக்குன்னு தெரியும்!

  இது தான் சார் என்னோட பிரசென்டேஷன்! அனைவருக்கும் நன்றி நண்பர்களே!"  பேராசிரியர் KPSக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது!
  "நான்சென்ஸ்! எதோட எதைத் தொடர்பு படுத்திச் சொல்லுற? அறிவிருக்கா உனக்கு! யார் சொல்லிக் கொடுத்தா இதை உனக்கு?"

  "நான் படிக்கும் போது தானாப் புரிந்து கொண்டது தான்! ஏன் சார் தப்பா?"

  "டோட்டல் நான்சென்ஸ்! இது அறிவியல்-டா! இதுக்குள்ள எப்படிடா கடவுள் வந்தாரு? கடவுள்-னு ஒருத்தர் இருந்தாத் தானே, அதன் சக்தியை அளக்க முடியும்? இல்லாத ஒன்னை எப்படிடா அளப்ப? பைத்தியம் போல பேசாதே!"

  "கோவிச்சிக்காதீங்க சார்!
  அணுவுக்குள் இவ்ளோ சக்தி இருக்கு-ன்னு நமக்கு மட்டும் முன்னாடி தெரிஞ்சுதா என்ன? இல்லை-ன்னு நினைச்சிக்கிட்டு இருந்த சக்தி இப்ப இவ்ளோ இருக்கே சார்? அதைத் தான் சார் நான் சொன்னேன்!"

  "ஓகோ...அப்ப கடவுள் இருக்காருன்னு சொல்லுற! அப்படித் தானே?"

  "ஆமாம் சார்!"

  "சரி, மக்களே, இன்னிக்கு வகுப்புல இதான் டிஸ்கஷன்! நானும் பார்த்துடறேன் இது எங்க போயி முடியுது-ன்னு"  (வகுப்புக்கு ஆர்வம் பத்திக்கிச்சு! தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா-ன்னு பாடின பசங்க எல்லாம் இன்னிக்கு ஏதோ ஒன்னு பத்திக்கப் போவுதுன்னு ஆர்வமா முன் சீட்டுக்கு வராங்க! )

  "சொல்லு அப்துல்லா, கடவுள் இருக்காருல்ல! அவர் நல்லவரா?"

  "ஆமாம் சார்! நல்லவரு தான்! அறவாழி-ன்னு தான் வள்ளுவர் சொல்லி இருக்காரு"

  "உம்ம்ம்ம்...சரி, கடவுள் சர்வ சக்தி படைச்சவரா?"

  "ஆமாம் சார்!"

  "எங்க அக்கா ரொம்பவே பெருமாள் பக்தை! அவளுக்குக் கேன்சர் வந்து கன்னியாவே செத்துப் போனா! பாவம், ரொம்ப நல்லவ, அன்பானவ!
  கொஞ்ச நாள் அறிமுகமான நண்பர்களுக்கே நாம் முடிஞ்ச அளவுக்கு உதவறோம்! ஆனா அந்தக் கடவுள் அவளுக்கு உதவலை! ஏன்?
  கடவுளுக்கு நல்ல மனசு இல்லையா, இல்ல அவர் கிட்ட அவ்ளோ சக்தி இல்லையா? அவரு பெருமாளா? வெறும் ஆளா?"
  (அப்துல்லா மெளனமாகத் தலை குனிகிறான்)

  "சரி அப்துல்லா, இதுக்காச்சும் பதில் சொல்லு! கடவுள் எல்லாவற்றையும் படைத்தார் அல்லவா?"

  "ஆமாம் சார்!"

  "உலகத்துல கொடுமை, அதர்மம், நோய், வெறுப்பு, அசிங்கம் எல்லாம் நிறைய இருக்கா?"

  "இருக்கு சார்!"

  "அதையெல்லாம் கூடக் கடவுள் தான் படைச்சாரா?"
  (அப்துல்லா மறுபடியும் மெளனமாகத் தலை குனிகிறான்)

  "உம்...அறிவியல் என்ன சொல்லுது? ஐந்து புலன்களையும் வைத்து உலக ஓட்டத்தை அறிந்து கொண்டு வாழறோம்-னு சொல்லுது இல்ல?
  கடவுளை நீ எப்படி அறிந்து கொண்டாய்? எதை வைத்து அறிந்து கொண்டாய்?"
  (அப்துல்லாவுக்குப் பேச்சே வரலை! மறுபடியும் தலை குனிவு தான்)

  "ஆகக் கூடி, கடவுளை நீ பார்த்ததில்லை, கேட்டதில்லை, முகர்ந்ததும் இல்லை, சுவைக்கவில்லை, தொட்டதில்லை!
  ஆனாக் கடவுள் இருக்காரு-ன்னு மட்டும் சொல்லுவே, அப்படித் தானே?"
  (மறுபடியும் மெளனம் தான்...வகுப்பே ச்ச்ச்ச்ச்-ன்னு உச்சு கொட்டுது...)

  (KPS வெற்றிக் களிப்புடன்)
  "கடவுள் இருக்காருன்னு நீ இன்னும் நம்புறியா?"

  "ஆமாம் சார்! நம்புறேன்!"

  "அடப்பாவி! சின்னப் பசங்க தான்டா நாட்டின் எதிர்காலம்! நீங்கெல்லாம் அறிவியல் சிந்தனையை வளர்த்துக்கணும்! ஏதோ ரொம்ப நல்லா ஐன்ஸ்டீன் சூத்திரத்தைச் சொன்னியேன்னு பார்த்தேன்! இப்படி வடிகட்டின மடையனா இருக்கியே? கடவுளை நம்புறவன் முட்டாள்-டா!
  அறிவியல்-ல சிந்திக்கணும்-டா உன் மூளை! அப்போ தான் முன்னேறுவ!
  கடவுளை நம்புறேன், நம்புறேன்-னு சொல்லுறியே! எதை வச்சிடா நம்புற?"

  "எதுவும் இல்ல சார்! என் நம்பிக்கையை வச்சித் தான் நம்புறேன்!"

  "நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்ல! தெரியும் தானே?"
  (மறுபடியும் தலை குனிவு தான்)

  "சரி சார், இவ்ளோ நேரம் என்னைக் கேள்விகள் கேட்டீங்க! கடவுள் அறிவியல்-ல பல இடங்களில் வராரு! அதெல்லாம் நான் உங்களைச் சில கேள்வியாக் கேட்கலாமா?"

  (மொத்த வகுப்பே சீட்டின் நுனிக்கு வருகிறது! நாளை தொடர்ந்து, நிறையும்...)


  (முன்னெப்போதோ மின்னஞ்சலில் வந்த ஒரு ஆங்கில ஆக்கத்தை, மேலும் செவ்வியாக்கி, ஐன்ஸ்டீனின் கொள்கை E=mc^2 சேர்த்து, DNA Testing, நம்மாழ்வார்-அப்பர் சுவாமிகளின் பாடல்கள் எல்லாம் சேர்த்து, இந்த ஆக்கம் வரும்! கீழே அசை படம் பாருங்க! நல்லா இருக்கு!)
  Read more »

  ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

  வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
  கே.ஆர்.எஸ்,
  கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

  வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
  குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

  உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
  Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

  ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

  Sri Kamalakkanni Amman Temple said...

  ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
  பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
  பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

  இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

  இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

  Back to TOP