Sunday, March 23, 2008

***அத்தை மகளே, போய் வரவா?

அன்புடை நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், வாழிய நலம்! இந்த ஒரு வாரம் முழுதும், உங்களுடன் அளவளாவி இருந்தது மிகவும் மகிழ்ச்சி.
பொதுவாகக் கச்சேரி முடிக்கும் போது மங்களம் பாடி முடிப்பாய்ங்க! ஆனா அடியேன் வேற மாதிரி மங்களத்தைப் பாடி முடிக்கிறேன்! இந்தப் பாட்டை அவசியம் இங்கே கேட்டுக்கிட்டே படிங்க!

அனைவருக்கும் பதில் சொல்ல முடியலை! காரணம் உங்களுக்கும் தெரியும்! குறிப்பாக வவ்வால், அரைபிளேடு, கோவி அண்ணா, சிறில் அண்ணாச்சி, VSK ஐயா, மதுரையம்பதி, கோபிநாத் - இவர்கள் எல்லாம் சில நுட்பமான கேள்விகளைக் கேட்டிருந்தார்கள். இவற்றுக்கு எல்லாம் இன்னும் சில வாரங்கள் கழித்து, நான் அறிந்த வரை பதில் தருகிறேன். மின்னஞ்சலும் செய்கிறேன்.ஆரோக்கியமான விவாதங்கள் அமைத்துக் கொடுத்த உங்களுக்கு என மனமார்ந்த நன்றி!

பதிவுலக விவாத களங்களில், தனி மனிதத் தாக்குதல் இருக்குன்னு பல பேர் சொல்லுறாங்க! ஆனா கடந்த ஒரு வாரத்தில, இங்கு பல சூடான தலைப்புகளின் மேல் விவாதங்கள் நடந்தன! எவ்ளோ தனி மனிதத் தாக்குதல் நடந்ததது-ன்னு சொல்ல முடியுமா?
இத்தனைக்கும் பதிவின் உரிமையாளர் என்கிற முறையில் அடியேனோ, இல்லை வேறு எவரும் மாடரேட் கூடச் செய்யவில்லை! பின்னூட்டங்களும் மட்டுறுத்தப்படவில்லை! (இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டுத் தான் Comment Moderation எடுத்தேன்!:-)

அப்படி இருந்தும், கருத்தை ஒட்டி மட்டுமே விவாதங்கள் நடைபெற்றது!
கருத்துக்குக் கருத்து தான் இருந்ததே தவிர, கருத்துக்கு மனுசன்-ன்னு இல்லை! பொறுப்புடன் விவாத நோக்கம் அமைந்து விட்டால், விவாதங்களும் பொறுப்புடன் அமைந்து விடும்! (Garbage In - Garbage Out)!

இது ஒன்றே போதும்,
தமிழ்ப் பதிவர்கள் அப்படி ஒன்னும் பொறுப்பற்றவர்கள் அல்லர் என்று ஊருக்குச் சத்தம் போட்டுச் சொல்ல!
(நான் தான் பார்க்கிறேனே, Rediff போன்ற தளங்களில் எப்படி எல்லாம் நடக்கிறது என்று)
குறிப்பாக E=mc^2 பதிவில் ஆத்திக-நாத்திக வாதங்கள் தனிப்பட்ட முறையில் இல்லாமல், எப்படித் தரம் வாய்ந்தவையாக இருந்தன என்பது கண்கூடு!
இதற்காக, முன்னாள் நாத்திகன் - இந்நாள் (அரைகுறை) ஆத்திகன் என்ற முறையில் அடியேன் இரண்டு பங்கு மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்தச் சமயத்தில் அரைபிளேடு, சிறில், திவா, கோவி, ஜீவா, ஸ்ரீதர் ஆகியோருக்கு நன்றி சொல்லலை-ன்னா எனக்குச் சென்னையில் சோறு கிடைக்காது!(பிரியாணி கிடைக்குமா-ன்னு கேக்காதீங்க! :-)
குறிப்பு: ஆன்மீகப் பதிவுலகில் அரைபிளேடு, ஜீவா, ஸ்ரீதர் போன்ற சிறப்பான தத்துவ வித்தகர்கள், இன்னும் அதிகமாக வளைய வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆவல்!

ஒரு தம்பிக்கு எடுத்துச் சொல்வது போல், என் பதிவுலகப் பயணத்தை Critical Review செய்து தந்த கோவி அண்ணாவுக்கும், அண்ணா என்று நான் அழைக்காவிட்டாலும் அப்படியே கருதும் நண்பர் குமரனுக்கும் என் நன்றி!
டீச்சருக்கு எப்பமே நான் செல்லப் பிள்ளை தான்! அதனால் நன்றி-ன்னு சொல்ல மாட்டேன். அதுக்குப் பதிலா ரெண்டு வடையை மட்டும் வாங்கிக்குறேன்!(டீச்சர், யானை மோதிரம் வந்து சேர்ந்துச்சா?)
ஆன்மீகப் பதிவுலகத்துக்கு வினை ஊக்கிய பாபாவுக்கு, ரவிசங்கருக்கு என் நன்றிகள்!

விளையாட்டோ வினையோ, ஒரு கட்டத்தில் சைவ/வைணவ வேறுபாடு எல்லை மீறிப் போகவே, ஓகை ஐயாவிடம் சினக்க வேண்டி வந்தது!(நான் சினந்தாலும் எப்படிச் சினப்பேன்-னு உங்களுக்கே தெரியும்! (அடியேன்-னு சொல்லிக்கிட்டு நிப்பேன் :-)
என் சினத்தையும் பொருட்படுத்தாது, அதன் பின்னர் நான் இட்ட பதிவுகளுக்கும் வந்து கருத்துகள் சொன்னாரு ஐயா! அவருக்கு என் நன்றியறிதல்கள்!

பின்னூட்டிக் கருத்துச் சொன்ன எல்லாப் பதிவர்களுக்கும்,
தனி மடலில் உற்சாகம் அளித்த நண்பர்களுக்கும், (குறிப்பா கெ.பி.அக்காவுக்கும்),
வராது வந்த மாமணி போல் நட்புடன் வந்த விடாதுகருப்பு அண்ணாச்சி இதர நண்பர்கள் அனைவருக்கும்
ஆர்க்குட்டில் புதிரா புனிதமா விடை சொன்ன நண்பர்களுக்கும் = நன்றி! நன்றி! நன்றி!
(என்னது ஆர்க்குட்டில் புதிரா புனிதமா-வா? ஹிஹி! நாங்க அடுத்த கட்டத்துக்குப் போயிட்டோம்-ல)

அப்பறம் முக்கியமா, நான் ரொம்பவே பீட்டர் வுட்டுட்டேன்...பின்னூட்டத்தில் மட்டும் தான்...அவசரம்...நேரமின்மை...இந்த மாதிரி நேரத்துல் பீட்டர் பட்டுன்னு ஓடியாந்துறான்! பீட்டர் எதுக்கு வரணும்? பிரிசில்லா வந்தா எம்புட்டு நல்லா இருக்கும்! :-)

இரண்டு பிறந்த நாட்களுக்குப் பதிவிட்டது (ஷைலஜா, குமரன்), நம்ம கல்யாண மாப்ள குசும்பன் அண்ணாச்சிய செந்தமிழால் கலாய்ச்சதெல்லாம் எனக்கு நட்சத்திர வார உவகை!
பங்குனி உத்திரம், புனித வெள்ளி, மீலாது நபி - இவை மூன்றும் ஒன்னா வந்து அடியேனின் நட்சத்திர வாரத்தில் அமைந்தது,
அதுவும் ஆன்மீகப் பதிவன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருத்தனின் வாரத்தில் அமைந்தது திருமலை எம்பெருமானின் திருவருளாகவே கருதிக் கொள்கிறேன்.எழுதலாம் என்று நினைத்து விட்டுப் போன இடுகைகள்:

1. தந்தை பெரியார் - இராமானுசர் கற்பனை உரையாடல் (பெரியார் நொடித்துப் போன ஆலயத்தை மேம்படுத்திக் காட்டுவார் அல்லவா? ஆலய நிர்வாகத்தைச் சீர்திருத்தி நடத்துவது பற்றிய இந்த இடுகையை அப்புறமா போடட்டுமா என்ன? :-)
2. Magical Realism/கம்பர்/கப்பி பய
3. கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, சிவன் பாட்டு குழுப் பதிவுகள் அறிமுகம்
4. பங்குனி உத்திரம் - திருமணமா/லிவிங் டுகெதரா?
(அடியேனுக்கு நிச்சயம் குழப்பவாதி ஆன்மீகப் பட்டத்தைக் கொடுத்திருப்பார்கள் வலையுலக ஆன்மீகப் பெரியவர்கள்!:-)
5. கம்பர்/இயேசு காவியம்/சீறாப் புராணம்
சும்மா ஒவ்வொரு பாடல் கொடுக்கலாம்-னு இருந்தேன் மும்மத விழாவில்! முடியலை! (ஆனால் பாடலை மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டேன்)

இறுதிப் பாகம் போடாத இடுகை:

* பெண்ணழகு-கண்ணழகு-முன்னழகு-பின்னழகு Part 2!

ஆன்மீக அன்பர்கள் சிலரிடம் மட்டும் இப்போது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சைவ/வைணவ மனக்குறைகள்! இதற்கு மூல காரணம் (root cause) அடியேன் தில்லைப் பிரச்சனையில் எடுத்த நிலைப்பாடு! அன்பர்களின் மனக்குறை நீங்காத வரை, அடியேன் இந்தக் கதையைப் பூர்த்தி செய்யப் போவதில்லை!
தமிழுக்கு முகம் காட்டி (முன்னழகு), வடமொழிக்கு முதுகு காட்டும் (பின்னழகு) அரங்கன்! இந்த மனக்குறை தீர முகம் காட்டுவானா?
மனக்குறையை நீக்கி அருளும் வரை, அரங்கனை (திருவரங்கனை மட்டும்), அடியேனும் பதிவில் எழுதப் போவது இல்லை! :-( ரங்கா! ரங்கா! ரங்கா!!!


பொதுவாகக் கச்சேரி முடிக்கும் போது மங்களம் பாடி முடிப்பாய்ங்க! ஆனா நான் வேற மாதிரி மங்களத்தைப் பாடி முடிக்கிறேன்! அந்தப் பாட்டைக் கேட்டீங்கல்ல? இல்லீன்னா இங்கே கேட்டுக்கிட்டே படிங்க! அதுவும் கடைசிப் பத்தியில் மிகவும் மென்மையான எம்.எஸ்.அம்மா, ரொம்பவும் அழுத்தி, ஆணித்தரமாச் சொல்லுவதைத் தட்டாமக் கேளுங்க! சின்ன வயசுப் பதிவன் ஒருத்தன் எண்பது வருசத்துக்கு முன்னாடி எழுதன பாட்டு!

கருத்து வேற்றுமை நாட்டுல வருது! பதிவுல வராதா? ஒற்றுமைக்கு என்னவெல்லாம் பண்ணலாம்-னு அப்பவே ஆக்கப் பூர்வமா யோசிச்ச பதிவன் நீ தான்-யா!
நாங்களா? அடச்சே! சேதுவுக்கு இன்னும் கேது தோஷ பரிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம்! போய்யா போ! ஏதோ உன்னளவு இல்லீன்னாலும், உன்னை மாதிரி யோசிச்சி ப்ளாக் எழுத முயற்சிக்கிறோம்!

சாதி இரண்டொழிய வேறில்லை என்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தம் என்போம்
நீதி நெறியில் நின்று பிறர்க்கு உதவும்
நேர்மையர் மேலவர், கீழவர் மற்றோர்படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே!

அடியேனும் அவ்வண்ணமே...
பார்த்தாலும்
படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும்
பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும்
பிடித்தாலும்
இறுகிக் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே என்னும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் தலையைத் தாழ்த்தி, இந்த நட்சத்திர வாரத்தை நிறைவு செய்கிறேன்!

உங்கள் சிறுவனுக்கு ஆசி கூறி அனுப்புங்கள்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

27 comments:

 1. welcome home Ravi.
  இந்த ஒரு வாரம் விடுமுறை போலக் கழிந்தது.
  வேகமாக
  இனிமமயாக, மகிழ்ச்சியாக.
  நன்றி.

  உடல் நலம் காரணமாக்க் குமரன் கேட்டுக்கொண்ட ஆப்புரைசல் செய்ய முடியாமல் போனது. மன்னிக்கணும்.

  திருந்தச் செய்ய முடியாத எதையும் செய்கை என்று ஒத்துக் கொள்ள முடியாது இல்லயா:)
  வாழ்த்துகள் நன்றி.

  ReplyDelete
 2. நல்ல வாரம் ரவி. என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு கொஞ்சம் ஆன்மீக ஓவர்டோஸ்தான். ஆனால் உங்கள் ஸ்பெஷாலிட்டி அதாக இருப்பதால் ஓக்கே. கிடைத்த கேப்பில் ரெண்டு மூணு பதிவுகளில் ரொம்ப நாள் கழித்து ரிலேக்ஸ்டாக பின்னூட்ட விளையாட்டு விளையாடினேன். முகம் சுளிக்காமல் அதை அனுமதித்ததற்கு நன்றி. மீண்டும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ஒரு கிழமை கலகலப்பாகப் போனது. நல்ல பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.

  அன்புடன்,
  இராம.கி.

  ReplyDelete
 4. வாரத்தை இனிமையாக்கியதற்கு நன்றி Mr.K.R.S

  ReplyDelete
 5. //உங்கள் சிறுவனுக்கு ஆசி கூறி அனுப்புங்கள்!
  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!//

  நீங்க நல்லா இருக்கோனம் நாடு முன்னேற....

  ReplyDelete
 6. மூத்த பதிவர் முத்த பதிவு போடாமல் விடை பெறுவதை இங்கு வன்மையாக கண்டிக்கிறேன்:)))

  வெள்ளி கிழமை இங்கு பதிவர் சந்திப்பில் தம்பி கோபியும் சென்ஷியும் அண்ணே உனக்கு குறுந்தொகை தெரியுமாமே எங்கே ஒரு பாட்டு எடுத்துவிடு என்று கேட்டார்கள் வாயில் சூயிங்கம் எடுத்து போட்டு தப்பித்துவிட்டேன்.:)))

  ReplyDelete
 7. ஹை.....பலாப்பழம்!!!!!

  எனக்கு ரொம்பப் பிடிச்ச பழம்.

  ReplyDelete
 8. "சென்று வா மகனே சென்று வா! உலகை வென்று வா மகனே வென்று வா! " அப்படின்னு ஒரு பழைய பாட்டு உண்டு. அது தான் இந்த தலைப்புக்கான பதில் பாடல் :-)

  ரொம்ப நாட்கள் கழித்து நான் தமிழ் மணத்தை தினம் பார்த்தேன்னா அது உங்களால்தான். இந்த இடுகை உள்பட எதிலும் சுவாரஸ்ய குறைவில்லாமல் எழுதியுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
 9. //ஆன்மீக அன்பர்கள் சிலரிடம் மட்டும் இப்போது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சைவ/வைணவ மனக்குறைகள்! இதற்கு மூல காரணம் (root cause) அடியேன் தில்லைப் பிரச்சனையில் எடுத்த நிலைப்பாடு! அன்பர்களின் மனக்குறை நீங்காத வரை, அடியேன் இந்தக் கதையைப் பூர்த்தி செய்யப் போவதில்லை!
  தமிழுக்கு முகம் காட்டி (முன்னழகு), வடமொழிக்கு முதுகு காட்டும் (பின்னழகு) அரங்கன்! இந்த மனக்குறை தீர முகம் காட்டுவானா?
  மனக்குறையை நீக்கி அருளும் வரை, அரங்கனை (திருவரங்கனை மட்டும்), அடியேனும் பதிவில் எழுதப் போவது இல்லை! //

  இது மட்டும் ஏனோ ஒரு திருஷ்டி பொட்டுமாதிரி ஆயிடுச்சு.

  கடலில் என்று அலை ஓய, நாம எப்போ குளிக்க....இந்த நீரு பூத்த நெருப்பு இருக்கத்தான் செய்யும். இதற்கு அரங்கனிடம் கோபித்து என்ன பயன். அவன் வந்து சமாதானமா செய்வான்?. பிகு பண்ணிக்காம படத்தை சாரி, சாரி, பதிவப் போடுங்க.... :-)

  ReplyDelete
 10. //ஒரு தம்பிக்கு எடுத்துச் சொல்வது போல், என் பதிவுலகப் பயணத்தை Critical Review செய்து தந்த கோவி அண்ணாவுக்கும், அண்ணா என்று நான் அழைக்காவிட்டாலும் அப்படியே கருதும் நண்பர் குமரனுக்கும் என் நன்றி!//

  ரவி,

  மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மீண்டும் எழுதத்தூண்டிய உங்களுடன் உங்கள் பாராட்டை பகிர்ந்து கொள்கிறேன். ஒரு பக்கம் ஆசிட்வீச்சுகள் என்மீது வந்து விழுந்து காயம் ஏற்படுத்தியதை உங்கள் பாராட்டு மலர்களின் வாசனைகள் மறையச் செய்துவிட்டன.

  நான் எழுதுவது ஆத்திகமாக நாத்திகமா என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளீர்கள், இந்த இடுகைக்கு முன்பே எனது நிலைப்பாட்டில் விமர்சனம் வரும் என்று தெரிந்தும் மற்றொரு இடுகை எழுதி உங்களுக்கு அதை காணிக்கை ஆக்கி இருக்கிறேன்.

  http://govikannan.blogspot.com/2008/03/blog-post_23.html

  அதையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

  அன்புடன்,
  கோவி.கண்ணன்

  ReplyDelete
 11. ரவி,
  நன்றி.

  உன்னானச் சத்தியமாய் இன்னும் உங்கடை நட்சத்திர வாரப் பதிவுகளைப் படிக்க நேரம் கிடைக்கேல்லை. குறிப்பாக யார் தமிழ்க் கடவுள் என்ற பதிவு கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு எண்டு குறிச்சு வைச்சிருக்கிறேன்.

  நீங்களும் தாயகப் பயணத்தை நல்ல வடிவாய் அனுபவிச்சு விட்டு வாங்கோ, பிறகு உங்கடை பதிவுகள் குறிச்சு கன கேள்விகளோடை வாறேன்.

  உங்களைப் போலை ஆக்களிடை பதிவுகளைப் படிக்கிறது, என்ரை ஜீவிததில் கிடைச்ச பாக்கியம்.

  ReplyDelete
 12. தல

  நிறைய சொல்ல வேண்டும் போல் இருக்கு...ஆனா பாருங்க பின்னூட்டத்திற்கு வந்த ஒன்னுமே ஞாபகம் வரமாட்டேன்கிது.

  மிக மிக அருமையான வாரம்...ஒவ்வொரு பதிவும் நிறைய விஷயங்களை கொண்ட பதிவுகள். ரசித்தேன் தல ;))

  ReplyDelete
 13. \\அப்படி இருந்தும், கருத்தை ஒட்டி மட்டுமே விவாதங்கள் நடைபெற்றது!
  கருத்துக்குக் கருத்து தான் இருந்ததே தவிர, கருத்துக்கு மனுசன்-ன்னு இல்லை!\\

  ஆகா..ஆகா..தத்துவமா சொல்லி கலக்குறிங்க தல ;))

  ஊருக்கு போயி என்ஜாய் பண்ணுங்க தல ;)

  ReplyDelete
 14. பாவம் கண்னபிரான் சொல்லாத விஷயத்துக்கெல்லாம் வாங்கி கட்டிக்கிறார்! கடமையை செய்: பலனை எதிர்பாராதே ன்னு அவர் எங்கே சொன்னார்? அத் 2 பாடல் 47: கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன
  அதாவது கர்மாவில் (செயலில்) மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு. பலனில் ஒரு போதும் (அதிகாரம்) இல்லை. என்ன சொல்ல வரார்? ஒரு காரியத்தை செய்யலாம், செய்யாமல் இருக்கலாம், மாற்றி செய்யலாம். அதற்கு உனக்கு அதிகாரம் இருக்கு. ஆனால் அதற்கான பலன் எப்படி இருக்கும் என்பது உன் அதிகாரத்தில் இல்லை. அதில மத்த விஷயங்களும் கலந்து இருக்கு. (இதற்கான வாதங்கள் சரியாகவே வைத்து இருக்காங்க)
  அவ்ளோதான்!
  நிறைய பேர் தப்பா நினைக்கிறாங்க. அதனால சொன்னேன்.
  நன்னி!

  ReplyDelete
 15. ஹாய் கேஆரெஸ்,

  ஆஹா நல்லா தான் இருந்தது உங்களுடைய இந்த ஒரு வார ஜொலிப்பு.(நட்சத்திரமாம்ல அது தான் ஹிஹிஹி) நான் நிஜமாவெ ரொம்ப விரும்பி படிக்கறது தான் உங்களுடைய எல்லா பதிவுகளும், ஆனா என்ன சில சமயம் கமெண்ட் போடரது இல்லை.

  உங்களுடைய ஆன்மீகம் தான் என்னை நிஜமவே யோசிக்க வைக்கறது, முன்னாடி ஆத்திகனா இருந்து இப்பொ நாத்திகனா மாறிட்ட என்னை...இதுவும் ஒரு விதியின் செயலோன்னு தான் தோனுது.

  நீங்க பாட்டுக்கு நிறைய்ய எழுதுங்க நானும் படிச்சு மாற முடியுமானு பாக்கறேன்.

  ReplyDelete
 16. ennanga idu kelvu... neenga batula podunga.. yar enna sonna enna.. namma ellam katru mathri adai pada koodathu

  ReplyDelete
 17. moththathula oru kovuiluku pona maari irundhuchu!

  ReplyDelete
 18. //நல்ல வாரம் ரவி. என்னைப் போன்ற ஆசாமிகளுக்கு கொஞ்சம் ஆன்மீக ஓவர்டோஸ்தான். ஆனால் உங்கள் ஸ்பெஷாலிட்டி அதாக இருப்பதால் ஓக்கே.//

  repeatu...

  ReplyDelete
 19. இரவிசங்கர்.

  எதிர்பார்த்ததைப் போல் இந்த வாரம் மிக நன்றாக இருந்தது. திருவிழா இன்னும் தொடராதா என்று நினைத்துக் கொண்டிருந்த போது வாத்தியார் ஐயா வந்து தொடர்கிறார். :-)

  ஒரு வேளை தனிமனிதத் தாக்குதல் செய்பவர்கள் 'இந்தப் பழம் புளிக்கும்' என்று சொல்லி இந்தப் பக்கமே வராமல் சென்றுவிட்டார்களோ? :-)

  நீங்க இடுகைகளை இட்ட வேகத்திற்கு என்னால் படிக்க இயலவில்லை. கனமான சில இடுகைகளை இனி மேல் தான் படிக்க வேண்டும். அதில் ஐன்ஸ்டீன் சூத்திர இடுகையும் ஒன்று (அ) இரண்டு.

  கோவி.கண்ணனும் நானும் மட்டும் தான் உங்களுக்கு அண்ணாவா? உங்கள் மேலும் (என் மேலும் பாலாஜி மேலும்) சினத்துடன் இருக்கும் நம் நண்பர் உங்களுக்கு நண்பர் மட்டுமேவா? அவர் அருமைத் தம்பியோ அண்ணனோ இல்லையா? :-)

  விளையாட்டு வினையாகிவிட்டதோ என்று தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன் இரவிசங்கர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பேசத் தொடங்கியதை இன்னும் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த வாரம் வரை சினந்து கொள்ளாமல் பேசினோம்.

  தந்தை பெரியார் - இராமானுஜர் கற்பனை உரையாடலை உங்களின் அடுத்த விண்மீன் வாரத்திற்காக வைத்திருங்கள். என்ன பாக்கிறீங்க? இன்னொரு தடவை உங்களுக்கு விண்மீன் வாய்ப்பு வரத்தான் போகிறது பாருங்கள்.

  என்ன இப்படி சபதம் போடறீங்க? அரங்கன் என்னைப் புறம் தள்ளி எட்டி எட்டிப் பார்க்கிறானே? அவனிடம் முகம் காட்டாமல் ஓடுவது நீங்கள் தானே ஒழிய அவனில்லை. உங்களுக்காக அவன் ஊர் ஊராக வந்து முகம் காட்டுவான் என்றா நினைக்கிறீர்கள்? அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாட மாட்டேன் என்றாராம் ஒருவர். நீங்கள் அரங்கனைப் பாட மாட்டேன் என்றால் எப்படி?

  ReplyDelete
 20. //அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாட மாட்டேன் என்றாராம் ஒருவர். நீங்கள் அரங்கனைப் பாட மாட்டேன் என்றால் எப்படி?//

  குமரன், யாரை குரங்கன் அப்படிங்கறீங்க?....எனக்கு அந்த உண்மை தெரிந்தாக வேண்டும்.

  (நாராயண, நாராயண :-))

  ReplyDelete
 21. //நீங்க இடுகைகளை இட்ட வேகத்திற்கு என்னால் படிக்க இயலவில்லை. கனமான சில இடுகைகளை இனி மேல் தான் படிக்க வேண்டும்.//

  குமரன் சொன்னதுக்கு ஒரு பெரிய ரிபீட்ட்டு!

  எப்படி இத்தனை பதிவுகள்! அதிலும் எல்லா பதிவுகளிலும் மறுமொழிகள், தொடர்மொழிகள் என்று தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தீர்கள். தின்ன தின்ன தெவிட்டா விருந்துதான் போங்கள்.

  போகிற போக்கில் என் மேல ஒரு முத்திரைய வேற குத்த பாக்கறீங்க. அது நடக்காது.

  எனக்கு 'தத்துவம்' என்ற வார்த்தைக்கே சரியா பொருள் தெரியாது. இதுல 'வித்தகம்' காட்டி விளையாட்டல்லாம்... அதுவும் உங்க கூட... வாய்ப்பே இல்லை. ப்ரீயா விடுங்க.

  ReplyDelete
 22. மௌலி.

  குரங்கன் யார்ன்னு கண்ணன் பாட்டு பதிவுல 'எங்கள் மால் இறைவன் ஈசன்' இடுகையில சொல்லியிருக்கேனே. பாத்தீங்களா?

  ReplyDelete
 23. //குரங்கன் யார்ன்னு கண்ணன் பாட்டு பதிவுல 'எங்கள் மால் இறைவன் ஈசன்' இடுகையில சொல்லியிருக்கேனே. பாத்தீங்களா?//

  ஹலோ, ஹலோ குமரன் அரங்கனை என்ன வேணாச் சொல்லட்டும் தொண்டரடிப்பொடியார், ஆனா எங்காளை குரங்கன்னெல்லாம் சொன்னா சும்மாயிருக்க மாட்டோம் சொல்லிட்டேன்....ஆமா....இவரு எங்க குலதெய்வம், அதுமட்டுமா எங்கண்ணா கே.ஆர்.எஸ்ஸின் இஷ்ட தெய்வம்..... :)

  ReplyDelete
 24. நான் மிக விரும்பி, தினந்தோறும் பதிவுகளைப் படித்த வாரம். மிக்க்க்க்க்க்க நன்றி.

  //அடியேன் இந்தக் கதையைப் பூர்த்தி செய்யப் போவதில்லை!// ஏற்கனவே, சொல்லியாச்சு. வெட்டிப் பயலும் எடுத்துக் கொடுத்திருக்கிறார (பழைய பின்னூட்டம் பார்க்க): இந்த கதையை முடிக்காவிடில், அரங்கன் தயவில், உங்கள் பயணத்தின் போது தூங்கும் போதெல்லாம், கனவில், சூர்யாவும், தியா பாப்பாவும் தான் வருவார்கள் (ஜோவுக்கு ஏதோ அவசர வேலையாக நியுயார்க் போயிருக்கிறார்;-). நீங்கள் முடிவை மாற்றாவிடில், தியா பாப்பா, 'கேஆரெஸ் மாமா' என்று விளையாட அழைக்கும். பரவாயில்லியா?

  இன்னும் ஐன்ஸ்டைன் பதிவுகளைப் படிக்கவில்லை. நேரம் இல்லை, பதிவுக்குரிய மதிப்பு கொடுத்து படிக்க வேண்டும்.

  முகஸ்துதிக்காக உயர்த்திப் பேசும் வழக்கமில்லை. உங்கள் பதிவுகளைத் தொகுத்து நல்ல புத்தகங்களாகப் போடலாம்.

  சக்கப் பிரதமனாய் வாரம் முழுக்க இனித்தது... நன்றி.

  ReplyDelete
 25. அருமையான ஒரு நட்சத்திர வாரத்தை அளித்த இரவிசங்கருக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
 26. அட்டகாசமான வாரம் அண்ணாச்சி! அடிச்சு ஆடி ரணகளம் பண்ணிட்டீங்க!! வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 27. // (Garbage In - Garbage Out)!//

  அது என்ன‌வோ ஒவ்வொரு க‌ணினி துவ‌க்க‌ வ‌குப்பிலேயே இந்த‌ வார்த்தைக‌ள் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌ன். தானாக‌ க‌ணினி ஒன்றும் செய்வ‌தில்லை என‌ வ‌லியுறுத்த‌வே
  இது சொல்ல‌ப்ப‌டுகிற‌து. நீங்கள் செய்வது எதுவோ அதன் பிரதிபலிப்பு என்று சொல்ல, துவ‌க்க‌த்திலேயே குப்பை, கசடு, என்றா சொல்லவேண்டும் ?
  1984 ல் முதலாக எங்கள் எல்.ஐ.சி. நிறுவனத்தில் கணினி உள்ளே நுழைய பகீரதப்பிரயத்தனம் செய்து கொண்டிருந்த வேளையில், ஊழியர் கணினி வகுப்புகளுக்குக்கூட வரமாட்டோம் என பிடிவாதப் போக்கில் இருந்த நிலையில், என்னை ஒரு துவக்க வகுப்புக்கு ( கணினி என்றால் என்ன ? இது என்ன செய்யும் ! என்ன செய்யாது ? போன்ற அடிப்படை விஷயங்கள் ‍ ) பாடம் எடுக்கச் சொன்னார்கள்.
  வகுப்புக்கு வந்திருந்தவர்களில் பலர் நடுனிலை, உயர் நிலை அலுவலர். அவர்கள் மனதிலேயே ஒருவகை அச்சமும் bias ம் கணினியின் பால் இருந்தது.
  என்னைப் பார்த்ததுமே ஒருவர் Garbage in என்றார். இன்னொருவர் garbage out
  என்றார். கணினியின் பால் அவரது கோபத்தை மறைமுகமாக என்னிடம் சொன்னார்கள். நான் உடனே சிரித்துக் கொண்டே சொன்னேன்:

  good things in - good things out.

  நான் ந‌ல்ல‌வ‌னாக‌ உள்ளே நுழைகிறேன். நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இவ்வ‌குப்பு முடியும்போது இருப்பீர்க‌ள் எனும் பொருளில் முத‌ல் தொட‌ரைப் பேசும்போது என்னையும் அடுத்த‌ தொட‌ரைப் பேசும் போது, அம‌ர்ந்திருந்த‌வ‌ர்க‌ளையும் சுட்டிக்காட்டினேன்.

  ய‌த் பாவ‌ம் த‌த் ப‌வ‌தி. நாம் எப்ப‌டி நினைக்கிறோமோ அவ்வாறே ஆகிறோம்.

  நான் ந‌ல்ல‌தை நினைக்கும்போது . ந‌ல்ல‌தை பேசிடும்போது, ந‌ல்ல‌தை செய‌ல்படுத்தும்போது , என்னைச் ச‌ந்திப்போரும் நல்லதையே நினைத்திடவேண்டிய ஒரு some sort of compulsion ஏற்பட்டுவிடும்.

  இருட்டாக இருக்கும் ஒரு அறையில் ஒரு மெழுகு வத்தி ஏற்றிவைத்தாலே போதுமே. இது வெளிச்சமா ? எத்தனை விழுக்காடு ஒளி இருக்கிறது என்று வாதிடத்துவங்கினால் எல்லை உண்டோ?

  sampraadhe san nihithe kaale nahin nahin rakshathi tukrankarane.
  (tukrankarane = rules of grammar, leading aimless discussions )


  வெளிச்சம் தேவைப்பட்டோருக்கு ஒரு மெழுகுவத்தி போதும். வெளிச்சம் நோக்கி ச்செல்பவர்கள் வாதப்பிரதிவாதங்களை ஒரு obsession ஆகவோ அல்லது
  with a professional zeal செய்வதில்லை. ரமணர் பேசினாரா ? !

  நிற்க‌.

  //அரங்கனை (திருவரங்கனை மட்டும்), அடியேனும் பதிவில் எழுதப் போவது இல்லை!//

  "த‌ன்னெஞ்ச‌றிய‌ பொய்ய‌ற்க‌.." ஏனெனின்,

  உங்க‌ள் ம‌ன‌ம் எழுதிக்கொண்டிருப்ப‌தை ( நீங்க‌ளே கேளுங்க‌ள் !)

  // :-( ரங்கா! ரங்கா! ரங்கா!!!//

  உங்க‌ளால் நிறுத்த‌ இய‌லாது.

  க‌ண்ண‌பிரான் = க‌ண்ண‌ன் + பிர் ( once again )
  ஆன். (ON )

  ஆசிக‌ள்.
  சுப்பு ர‌த்தின‌ம்.
  த‌ஞ்சை.
  http://pureaanmeekam.blogspot.com

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP