Friday, March 21, 2008

***மாரியம்மனும் மேரியம்மனும்!

மாரியம்மன் கோயில் இல்லாத கிராமங்கள் மிக மிகக் குறைவு! தனிப்பட்ட கோயிலாய் இல்லை என்றாலும் கூட எங்காகிலும் ஒரு இடத்தில், வேப்ப மரத்திலோ இல்லை மண் புற்றிலோ, ஏதோ ஒன்றில் அவள் நிரப்பப்பட்டு விடுவாள்! அப்படி ஒரு அன்னோன்னியம் அவளுக்கும் கிராமத்து மக்களுக்கும்!
நாம் என்ன தான் மாயோனும் சேயோனும் ஆதி காலத் தமிழ்க் கடவுள் என்று மாஞ்சி மாஞ்சிப் பதிவு போட்டாலும், இன்னிக்கு மூலைக்கு மூலை இருப்பதென்னவோ அரசரடிப் பிள்ளையாரும், வேப்ப மர மாரியும் தான்! இதை யாரும் மறுப்பதற்கு இல்லை! :-)

படிப்பின்மையால் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகமாக இவள் வழிபாட்டில் இருந்தாலும், எளிமையும் அன்பும் கூட அங்கு தான் அதிகம்!
படித்தவர்கள் பேராசையால் செய்யும் மூடநம்பிக்கைகளைப் பார்க்கும் போது, கிராமத்து மூடநம்பிக்கைகள் எவ்வளவோ மேல் என்று தான் எண்ணத் தோன்றுகிறது! :-)
குறைந்த பட்சம், நிறுவனப்படுத்தப்பட்ட பிரேமானந்தாக்களைக் கிராம மக்கள் உருவாக்கியது கிடையாது! அடுத்தவரை வருத்தும் மூடநம்பிக்கைகளைக் காட்டிலும் தன்னை வருத்திக் கொள்ளும் மூடநம்பிக்கைகள் தான் கிராம மக்களிடம் அதிகம்!

அதெல்லாம் இருக்கட்டும்! மாரி-ன்னா என்னாங்க?
மாரி என்பது மழை என்னும் தூய தமிழ்ச்சொல் என்பது பலருக்கும் தெரியும்! மழைக் கடவுளாக வழிபடப்பட்டவள் இவள்!
இன்று மரக்கடவுளாக வழிபடும் நிலைக்கு இந்த மாரி, மாறி உள்ளாள்!

இவளின் தோற்றம் வேதக் கடவுளாக இல்லை என்பதே அறிஞரின் கருத்து! பின்னாளில் தான் பார்வதி, துர்க்கையுடன் இவள் தொடர்புகள் பேசப்படுகின்றன! கொற்றவை என்று தமிழ் இலக்கியம் பேசுவது மாரியம்மனைத் தானா?
இல்லை இ்வளும் பிடாரி, இசக்கியம்மனைப் போல் ஒரு சாதாரண கிராமத்து தேவதையா? இல்லை எப்போதோ மடிந்த ஒரு பெண்ணின் தெய்வாம்சமா?தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

இவளை எப்படியெல்லாம் கருதுகிறார்கள்?

* பரசுராமனின் தாயார் ரேணுகா தேவி = நெறி தவறிய தாயின் தலையைப் பரசுராமன் வீழ்த்தியதால் இன்றும் தலை மட்டும் காலடியில் சிலையாக வைத்து வழிபடும் வழக்கம் மாரியம்மன் கோயில்களில் இருக்கு!
படவேடு "ரேணுகா" பரமேஸ்வரி மிகவும் பிரபலமான ஆலயம்! எங்கூருக்கு மிகவும் பக்கம்!

* மாயை, மாயாதேவி, விஷ்ணு மாயை = வசுதேவர்-யசோதையின் உண்மையான மகள்! ஆயர் குலத்தில் உதித்தவள்! கண்ணன் பிறந்த போது பிறந்த குழந்தை! கம்சன் கையில் இருந்து தப்பி வானில் எழுந்து சிறு வயதிலேயே மறைந்தவள்! இப்படி மணமாகாமல் மறையும் கன்னிப் பெண்களை, ஆண்டுக்கொரு நாள் வழிபடுவது ஆயர் குல வழக்கம்! எங்கள் வீட்டில் பூவாடைக்காரியாக இப்படி வழிபடுவார்கள்!

கண்ணனுடன் பிறந்தவள் ஆதலால் பெருமாளின் சகோதரி. இன்றளவும் ஒவ்வொரு வைகாசி மாதமும் முதல் நாள் அன்று, திருவரங்கத்து அந்தணர்கள் இவளை வழிபடுகிறார்கள். பூச்சொரிதல் விழாவின் போது அரங்கனும் சமயபுரத்தாளுக்குப் பிறந்தவீட்டுச் சீதனமாய்ப் பட்டாடை அனுப்புகின்றான்!

* கொற்றவை = கொற்றம் என்றால் வெற்றிச் சிறப்பு! நின் கொற்றம் வாழ்க-ன்னு டயலாக் வரும்ல! வெற்றியைத் தரும் போர்த் தேவதை இவள்! பாலை நிலத்து வேட்டைத் தெய்வம்!
சிலப்பதிகாரம் வேட்டுவ வரிகளில் இவள் பேசப்படுகிறாள்! வழிப்பறி/ கொள்ளைகள் செய்யும் ஆறலைக் கள்வர்களால்(எயினர்) வணங்கப் பெற்றவள்! இந்தக் கொள்ளைத் தொடர்பினாலோ என்னவோ தான் சிலம்புக்கு முன்னுள்ள சங்க இலக்கியங்கள் இவளை அதிகம் பேசவில்லை போலும்! நக்கீரர் மட்டும் "கொற்றவைச் சிறுவ" என்று கொற்றவையின் புதல்வனாக முருகனை அழைக்கிறார்!

* கண்ணகி அம்மன் = கண்ணகி தான் மாரியம்மனோ?
கண்ணகி உயிர் துறந்த மலைநாடான கேரளத்தில் இந்த பகவதி நம்பிக்கை அதிகம்! ஆடியின் கடைசி வெள்ளியில் கண்ணகி மதுரையை எரித்ததாகச் சொல்லுவார்கள்! கண்ணகி என்பவள் அம்மனான பின்னர், அம்மனுக்கும் ஆடியில் விழா எடுக்கிறார்கள்!

* அம்மை நோய் எப்படி இவளோடு தொடர்பாச்சு என்பது ஒரு புதிர் தான்! தென்னகம் மட்டும் இல்லை! வடக்கிலும் அம்மை நோய்க்குச் சீதளாதேவியின் தொடர்புண்டு! (சீதளம்=குளிர்ச்சி); நம் நாட்டைத் தாண்டி, யூதர்கள்=மார்ச்சு, Chaldeans=மாராட்டு, பாபிலோனியர்கள்=ஆயா என்று நோய் தீர்க்கும் அம்மன்கள் எல்லாக் கலாச்சாரம், பண்பாட்டிலும் இருக்கு போல!:-)

* எல்லையம்மன், பேச்சியம்மன், செல்லியம்மன், பச்சையம்மன், பொன்னியம்மன், கங்கையம்மன், ராக்காயி, பிடாரி, இளங்காளி என்று அத்தனையும் இவள் தானா?


இப்படிப் பலப்பல கேள்விகள்!
கேக்கறவன் கேட்டுக்கிட்டே இருப்பான். கும்புடறவன் போயிக்கிட்டே இருப்பான்!:-)
எது எப்படியோ,
பொங்கல், குலவைச் சத்தம், கரகம் என்று ஆய கலைகள் - நாட்டுப்புறக் கலைகள் - அதுக்காகவேனும் மாரியம்மனுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்!
பதிவர்களில் எத்தினி பேருக்குக் குலவை போடத் தெரியும்? தெரிஞ்சவங்க பின்னூட்டத்தில் போடுங்க பார்ப்போம்! :-)

மாரியம்மன் ஏழை மக்களோடும் குறிப்பாகப் பெண்களோடும் உறவாடும் தெய்வமாய் இருப்பது எப்படி-ன்னு கீழே அசைபடம் பாருங்க! புரிஞ்சிடும்!


மாரியம்மாவில் இருந்து மேரியம்மாவுக்கு வருவோம்!
சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் ஈர்த்த தெய்வ வடிவங்களுள், அன்னை வேளாங்கண்ணியின் திருமுகமும் ஒன்று!
மு.கு: அப்ப நான் கிறித்துவப் பள்ளியில் எல்லாம் படிக்க ஆரம்பிக்கல!:-)

வேளாங்கண்ணி அன்னையின் மிகப் பெரும் சிறப்பு என்ன தெரியுமா மக்களே? கத்தோலிக்க ஆலயங்களில், மாதாவுக்கு மேனாட்டு முறையின் படியான ஆடை தான் அணிவித்திருப்பார்கள், இல்லை அப்படித் தான் திருச்சிலையும் வடிக்கப்பட்டு இருக்கும்!
தமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி ஒன்றே!

மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி!-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குக் கொடுக்கவும் அடியேன் தயார்! முகம் பொழி கருணை! அப்படி ஒரு கருணைக் கடாட்சமான கண்கள் அன்னையின் கண்கள்!

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா,
வேளாங்கண்ணிக்கு அருகில் தான் சிக்கல் என்ற சிவத்தலமும் இருக்கு!
அங்கு அம்பாளின் பெயர் வேல்-நெடுங்-கண்ணி! அது தான் திரிந்து வேளாங்கண்ணி ஆச்சுது-ன்னு ஒரு நண்பர் என்கிட்ட தீவிரமாச் சொல்லிக் கிட்டு இருப்பாரு!
அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன்!
அடப் பாவிங்களா! உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை! பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க! அதான்! :-)

வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களில், மாற்று மதத்தினர் தான் அதிகம்! தீவிரமான மத மாற்றுப் பிரச்சாரங்கள், மயக்குமொழிகள் எல்லாம் எதுவும் செய்யவே வேணாம்! அமைதி அமைந்தாலே போதும், தானாகவே சேவிக்க வருவார்கள் என்பதற்கு வேளாங்கண்ணியே சாட்சி! முகத்தின் அமைதி ஒன்றே அன்னையை ஆயிரம் முறை காணச் சொல்லும்!

அன்னையின் திருப்பெயர் என்னவோ ஆரோக்கிய மாதா (Our Lady of Good Health) என்பது தான்! ஊரின் பெயரால் வேளாங்கண்ணி மாதா என்றே ஆகி விட்டது!
அன்னையின் முதல் தோற்றத்துக்கும் காரணம் ஒரு இந்துச் சிறுவன் தான்.
ஆயர்குலச் சிறுவன் (பால்காரப் பையன்) ஒருவன், குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்க, அவன் முன் அன்னை தோன்றினாள்!
தன் கைக்குழந்தைக்குக் கொஞ்சம் பால் தர முடியுமா என்று அவனைக் கேட்க, அவனும் தயங்காது கொடுத்து விட்டான்! பின்னர் பால் கொடுக்கும் வீட்டுக்குச் சென்று பால் ஊற்றிவிட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் அந்த இந்து முதலாளியிடம் சொன்னான். ஆனால் பானையில் எட்டிப் பார்த்தாலோ, பால் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது!

இருவரும் விடுவிடுவென்று மீண்டும் ஆலமரத்துக்கு வந்து பார்க்க, அங்கே அன்னை மீண்டும் தோன்றினாள்! அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது! போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் கடல் சூறாவளியில் இருந்து காப்பாற்றப்பட்டு, அன்னைக்கு நிரந்தரமான ஆலயம் எழுப்பினர் என்பது தான் தலவரலாறு!

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொன்கனி என்று ஏழு மொழிகளில் திருப்பலி சார்த்தப்படும் ஆலயம் இது மட்டும் என்று தான் நினைக்கிறேன்!
மாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் - மொட்டை போடுதல், கண்மலர் சார்த்தல், உடல்மலர் சார்த்தல், அங்கப் பிரதட்சிணம் செய்தல், முட்டிபோட்டு நடத்தல் - இவை அத்தனையும் வேளாங்கண்ணிக்கும் செய்யப்படுகிறது!

மதங்களுக்கு இடையே தீ மூட்டிக் குளிர் காயும் வேதாகம/விவிலிய பண்டிதர்களும் உள்ளார்கள்.
மதங்களை இணைக்கிறோம் என்றே தெரியாமல், அன்பு ஒன்றினாலேயே மத நல்லிணக்கப் பாலம் கட்டும் பாமரர்களும் இருக்கிறார்கள்!
எளிய மக்களுக்கு அன்பு ஒன்றே வழிபாடு என்பதற்கு இந்த மாரியம்மனும், மேரியம்மனுமே சாட்சி!


வாழைப்பந்தல் பச்சையம்மன்பாலாறும் செய்யாறும் சங்கமிக்கும் எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தின் (திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம்) அதிதேவதை இவள்!
புதுப்புடைவையை மடித்து மடித்துச் சுற்றி ஒரு பெண்ணின் உருவம் போல் எங்கம்மா செய்வாங்க! பூவாடைக்காரியான அதற்குக் காதோலைக் கருகமணி சார்த்தி, வாமுனியும் செம்முனியும் காக்கும் பந்தலில் பொங்கலிட்டு, வீட்டுக் குழந்தைகளுக்கு முதல் முடியிறக்கம், காதுகுத்தல் எல்லாம் நடைபெறும்!


வாழைப்பந்தல்கள் பின்னணியில் வாமுனி, செம்முனி

இவளுக்குச் செய்த பின்னர் தான், குலதெய்வம் முருகப் பெருமானுக்கும், பின்னர் திருமலை எம்பெருமானுக்கும் செய்வது வழக்கம்!
பச்சம்மா என்று நாங்கள் பாசமுடன் அழைக்கும் பச்சையம்மனையும் பொன்னியம்மனையும் இந்த நட்சத்திர வாரத்தில் போற்றி மகிழ்கின்றேன்!

ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா!
ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், துன்னுபுட்டுப் போடியம்மா!

27 comments:

 1. // ஏதோ ஒன்றில் அவள் நிரப்பப்பட்டு விடுவாள்! //

  இப்பதான் பல ஊர்கள்ல
  "எல்லாத்தையும்" சுத்தம் பண்ணிட்டாங்களே. மருத - 2 பார்க்கவும்.

  (ஹூம் அரசியல் தலைவர்களுக்கும், அவர்தம் தலைகளின் சிலைகளுக்கும், கட்சி அலுவலகளுக்கும், கொடிகம்பங்களுக்கும் எப்படியாவது இடம் கிடைக்கும் விடுங்க!)

  //படித்தவர்கள் பேராசையால் செய்யும் மூடநம்பிக்கைகளைப் பார்க்கும் போது,//
  நல்லா சொன்னீங்க!

  //அடுத்தவரை வருத்தும் மூடநம்பிக்கைகளைக் காட்டிலும் தன்னை வருத்திக் கொள்ளும் மூடநம்பிக்கைகள் தான் கிராம மக்களிடம் அதிகம்!//
  என்ன சார் கிராமபுரத்தில் இல்லாத செய்வினையா! எதிர்காட்டு வினையா?

  //பரசுராமனின் தாயார் ரேணுகா தேவி//

  இவர் நம் குடும்பத்து குலம் வளர்க்கும் தெய்வம்! இவருக்கு முகவடிவம், படம் என்று ஒன்றும் கிடையாது! ஒரு மஞ்சள் வட்டம் அதில் 5 சிகப்பு கோடு, எல்லா கோட்டிற்க்கு கீழ் ஒரு கருநிற புள்ளி. இது தான் அவரது அடையாளம். இதை நாம் அம்மோ (தெய்வத்தாய்) என்போம்!

  //ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா!
  ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், துன்னுபுட்டுப் போடியம்மா!//

  அப்பிடியே எல்.ஆர். ஈஸ்வரியம்மாவ கொண்டாந்து விட்டீங்களே. ரொம்ப நல்லா இருந்தது இப்பதிவு.

  ReplyDelete
 2. ரவி, எங்களுக்கு மாரி மேரி இரண்டு பேரும் வேண்டும்.

  ஆனா இந்தச் (போலி) சாமியார்கள் புறப்படுவது என்னவோ அறியாமை இருக்கும் கிராமங்களிலிருந்துதான்.
  அஃப்கோர்ஸ்
  ஹைடெக் அட்வைசர்ஸ் ,
  ஜெட் ஃப்ளையர்ஸ் புது விதமாகப் பணம் செய்கிறார்கள.

  எல்லாப் பெண்களுக்கும் ஒரு எல்லை அம்மாவோ, ஒரு முண்டகக் கண்ணியோ வேண்டித்தான் இருக்கிறார்கள்
  நோய் நொடி வரும்போது ,அம்மானு கூப்பிட்டவுடன் வந்து உதவுவது அவர்கள் தான். என் உண்மை அனுபவம்.
  இப்பவும் வேளாங்கண்ணி மாதாவுக்கு ஒரு மெழுகு வர்த்தி சொன்னால் போதும். எனக்கு நிம்மதி தருவாள்.
  நான் படமெல்லாம் வைத்துக்கொள்ளவில்லை.
  மனமேதான் அவர்களுக்கு இருப்பிடம்.
  நன்றி ரவி.

  ReplyDelete
 3. எங்க ஊரை டச் பண்ணிட்டீங்க.
  வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு பல முறை போயுள்ளேன்.மண்டியும் போட்டுள்ளேன்.

  ReplyDelete
 4. மூச்சு வாங்கிட்டிருக்கீங்களா, நட்சத்திர வாரம் நல்லாப் போயிட்டிருக்கு, ஒரே பந்தியில் 20 கோர்ஸ் சாப்பாட்டோட... வாழ்த்துக்கள்.

  என்னைப் பொறுத்த வரை, பெண்‍/கல் வழிபாடு வளர்ந்து இன்றைய மதங்கள் வரைக்கும் வந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொள்கிறேன். வல்லியம்மா சொன்னாப் போல், //எல்லாப் பெண்களுக்கும் ஒரு எல்லை அம்மாவோ, ஒரு முண்டகக் கண்ணியோ வேண்டித்தான் இருக்கிறார்கள்//. எனக்கு சமயபுரத்தாள். எனக்கு வேண்டியதைப் பார்த்துத் தர. (நான் வேண்டியதை அல்ல;-)

  தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட மஹாராஷ்டிரிய மஹர் இனத்தவர் (தலித் இயக்கத்தின் கர்த்தாக்கள் எனக் கருதப்படுபவர்) வணங்கும் "மாரியாயி' பற்றிச் சொல்லவில்லையே?

  என்ன பேர் சொன்னாலும் அவளே காற்றாகி, கனலாகி, கடலாகி, கருவாகி, உயிராகி, உறவாகி, நேற்றாகி, இன்றாகி, நாளாகினாள்.

  ReplyDelete
 5. //அம்மை நோய் எப்படி இவளோடு தொடர்பாச்சு என்பது ஒரு புதிர் தான்!//

  அம்மனுக்கு ஆயிரம் கன்னுடயாள் என்றும் ஒரு பெயர் உண்டு. அம்மை வாத்தவர்கள் முகமும் ஆயிரம் கன்னுடையவர்கள் போல்தான் இருக்கும். ஒரு வேளை இதன் காரணமாக கூட இருக்கலாம்.
  மிக அருமையான பதிவு.
  நன்றி.

  ReplyDelete
 6. பச்சையம்மன் பற்றி இன்னும் கொஞ்சம் அறியத் தாருங்களேன்

  ReplyDelete
 7. /// //ஆத்தாடி மாரியம்மா, சோறு ஆக்கி வச்சேன் வாடியம்மா!
  ஆழாக்கு அரிசியைப் பாழாக்க வேண்டாம், துன்னுபுட்டுப் போடியம்மா!//

  அப்பிடியே எல்.ஆர். ஈஸ்வரியம்மாவ கொண்டாந்து விட்டீங்களே. ரொம்ப நல்லா இருந்தது இப்பதிவு. ///

  சிவமுருகன், இரவிசங்கர் தந்திருக்கும் படக்காட்சியும் மேற்கண்ட பாடல் வரிகளும் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் 'ஆதி பராசக்தி' படத்திலிருப்பவை. பாடலைப் பாடுவது எல் ஆர் ஈஸ்வரி அல்ல. இது ஓர் ஆண்குரல் பாடல். பாடியது யாரென்று எனக்கு நினைவில்லை.படத்தில் இப்பாடலுக்கு நடித்திருப்பது நகைச்சுவை நடிகர் சுருளிராஜன்.

  மேலும் இந்தப் படத்தில் மாரி-மேரி என்கிற கருத்தாக்கமும் சொல்லப்படுகின்றது. தஞ்சாவூர் மாரியமம்மனை இகழ்ந்து பேசும் ஓர் ஆங்கிலேயர் அம்மை நோய் கண்டு வருந்தி நோய் சரியானபின் மாரியம்மனை மேரியாகக் காண்பதாக காட்சிகள் வரும்.

  இந்தப் படத்தில் இப்பதிவுக்கு பொருத்தம்மான இரண்டு P.சுசிலா பாடிய பாடல்கள் இருக்கின்றன. ஒன்று ஆயீ..மகமாயீ.. என்ற பாடல். இப்பாடல் VSK அவர்களின் பதிவில் இருக்கின்றது. இன்னொரு பாடல் எனக்கு மனப்பாடம்.

  'நானாட்சி செய்துவரும் நான்மாடக் கூடலிலே
  மீனாட்சி என்ற பெயர் எனக்கு
  கங்கை நீராட்சி செய்துவரும் வடகாசி நகர்தன்னில்
  விசாலாட்சி என்ற பெயர் வழக்கு.
  கோனாட்சி பல்லவர்தம் குளிர்சோலை காஞ்சிதன்னில்
  காமாட்சி என்றபெயர் எனக்கு.
  கொடுங்கோலாட்சிதனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
  கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு.

  ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
  நீரோடும் பாதைதன்னைக் குறிக்கும்-நிற்கும்
  ஊர்மாறி பேர்மாறி உருமாறி கருமாறி
  ஒன்றே ஓம்சக்தி என உரைக்கும்.

  ReplyDelete
 8. வேளாங்கண்ணி மாதா தரிசனம் பெற்றுள்ளேன். பிரான்சின் லூர்து மாதா கோவில் போல், மிகத் தூய்மையுடன் போற்றப்படும் ஆலயம்.
  மிகப்பிடித்தது, எந்தக் கத்தோலிக்க ஆலயத்திலும் நான் காணாத, மாதா சிலைக்குச் சாற்றிய மாலைகள் பிரசாதமாக அடியார்களுக்கு கொடுக்கப்பட்டது.

  ReplyDelete
 9. //மதுரையம்பதி said...
  பச்சையம்மன் பற்றி இன்னும் கொஞ்சம் அறியத் தாருங்களேன்//

  மெளலி அண்ணா, இதோ ஊர் மக்கள் சொல்லும் கதை!

  அன்னை பார்வதி, சிவனாரை நோக்கித் தவமிருக்க திருவண்ணாமலையில் இருந்து காஞ்சிக்குச் செல்கிறாள்.
  அவள் செல்லும் வழியில் ஒவ்வொரு ஊராகத் தங்கிச் செல்கிறாள்!

  முதலில் அகப்படும் ஊர் முன்னகப்பட்டு!
  இது இன்று முனுகப்பட்டு என்று திரிந்து விட்டது!

  பின்னர் வாழைப்பந்தல் வருகிறாள்.
  ஈசனை வழிபட வாழை மரங்களால் பந்தல் அமைக்கிறாள்! நீர் கிடைக்கவில்லை! அதனால் மூத்த பிள்ளை கணேசனை அழைத்து நீர் கொணரச் சொல்ல, அவனோ உண்பதில் கவனம் செலுத்துகிறான். பால்குடம் காலில் தடுக்க, பால் சிதறி பாலாறாய் ஓடுகிறது!

  இது சரி வராது என்று இளைய மகன் குமரனைக் கொணரச் சொல்ல, அவனோ வேல் தவறான இடத்தில் எறிந்து விடுகிறான். இதனால் ரத்த வெள்ளம் பெருக, இது செய்+ஆறாய்=செய்யாறாய் பாய்கிறது!

  இதுவும் வேலைக்காகது என்று அன்னையே பிரம்பால் குசஸ்தலை ஆற்றை உண்டாக்கி, நீர் கொணர்ந்து பூசை முடிக்கிறாள். மூன்று ஆறுகளும் கூடும் சிறு கிராமம் வாழைப்பந்தல்!

  இவளுக்குப் பச்சை மட்டுமே சார்த்தும் வழக்கம் உண்டு! அம்மன் பச்சை வாழை மரமாகி வழிபட்டதாகவும் சொல்லுவார்கள்!

  (This story is a fable told by common folk in the village.
  பாட்டி ஜனகவல்லி அம்மாள் சொல்லச் சொல்லக் கேட்டு வாய் பிளந்த பிள்ளை அடியேன். மூச்சு வாங்கும் போது நிறுத்தினால், மீதியை அவங்க மறந்துட்டாங்க-ன்னு நினைச்சி நான் முடிப்பேனாம்!:-)

  பாட்டியின் விருப்பப்படி இங்கு வந்து இறுதியடைய எண்ணம் போலும்! இந்த முக்கூடலில் நடக்கும் தகனக் கிரியைகள் பற்றிச் சொல்லுவாங்க!
  அப்போ சென்னையில் இருந்தோம்! அதுனால சீரியசா எடுத்துக்கல!

  ஒரு முறை உறவினர் திருமணத்துக்கு நாங்கள் மட்டும் வந்த போது, என்றுமே அது வேணும் இது வேணும்-னு கேட்காத பாட்டி அன்று மட்டும் கூட வருகிறேன்-ன்னு அடம் பிடிக்க, சரி அத்தைப் பையன் மேல் பாசம் போலன்னு, பேருந்தில் கூட்டிச் சென்றோம்! அப்போ வாடகைக் கார் வைத்துச் செல்லும் அளவுக்கு வசதியில்லை!

  நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, இரண்டாம் நாள் காலை, ஊர் திரும்பலாம்-ன்னு எல்லாரும் கிளம்பிய போது...காலையில் பார்த்தால்....
  பாட்டி அவர்கள் விரும்பிய வண்ணமே மூக்கூடலில் தனக்கு இடம் தேடிக் கொண்டார்கள்! _/\_

  அவர்கள் பாடிய நாட்டுப்புற ராமாயணம் இன்னிக்கும் என் காதுகளில் ஒலிக்கும்! நூறே வரியில் மொத்த ராமாயணமும் முடிந்து விடும்!

  சரஸ்வதியும் லட்சுமியும் சங்கரிகளும் ராமா
  மங்களமாய் பூசை செய்து மனம் மகிழ்ந்தார்!
  சுந்தரமாய் பாலர் கண்டு செளக்கியப்படவே ராமா
  சித்தி விநாயகரைப் பாதம் பணிந்தார்!
  என்று ஆரம்பித்து
  ஒன்றாம் மாசம்
  ரெண்டாம் மாசம்-ன்னு மசக்கை எல்லாம் சொல்லி,
  இராம, இலக்குவ, பரத, சத்ருக்கனர்கள் பிறப்பு... அப்பறம் அப்படியே ஒவ்வொன்னா...

  மொத்தம் நூறே வரியில் அத்தனையும் முடிஞ்சிரும்! ஒவ்வொரு ஈற்றடியும் ராமா, ராமா-ன்னு வரும்!
  எளிமையான நாட்டுப்புறப் பாடல்!
  நினைவே ஒரு சுகந்தம்! :-)

  ReplyDelete
 10. @மெளலி அண்ணா

  சென்னையில் திருமுல்லைவாயில் அருகே ஒரு பச்சையம்மன் கோயில் இருக்கு! வைஷ்ணவ தேவி ஆலயம் தாண்டி ஒரு அஞ்சு நிமிடம்-ன்னு நினைக்கிறேன்!

  யாராவது அங்கு சென்று வந்து எழுதினால் இன்னும் நல்லா இருக்கும்!

  ReplyDelete
 11. மெளலி அண்ணா, யார் சொல்லித் திடீர்-னு பச்சை அம்மன் மேல் வெளக்கம் கேட்டீங்க?
  வாழைப்பந்தல் பற்றிய பதிவில் பாட்டி பேரும் அடியேன் சொல்லணும்-னு இருக்கு போல!

  ReplyDelete
 12. ஆதி பராசக்தி படம் அப்படியே பார்த்த மகிழ்வு - ஆத்தாடி மாரியம்மா - பாடல் நினைவில் ஓட - மகிழ்ந்தேன் - நல்ல தொரு பதிவு

  ReplyDelete
 13. திருமுல்லைவாயில் கோயிலுக்கு நான் போயிருக்கேன். அப்போ இந்த வைஷ்ணவோதேவி ஆலயமுன்னு ஒண்ணும் அங்கே கிடையாது.

  பஸ்ஸில் இருந்து இறங்கி, கிராமச்சாலையா ரெண்டு பக்கமும் மரங்கள் அடர்ந்த பாதையிலே போகணும். ஒரு ரெண்டு மூணு நிமிச நடையில் இடதுபக்கம் ஒரு தாமரைக்குளம். தெளிவான தண்ணீர். வலதுபுறம் பச்சையம்மன் கோவில்.

  உள்ளே ஏழுமுனிஸ்வரர்கள் சிலைகள். (தில்லானா மோகனாம்பாள் படத்தில் இது வந்துருக்கு) மன்னார்சாமின்னு ஒரு முனி சிலைதான் ரொம்பப்பெருசு. பஸ்ஸில் வரும்போதே தெரியும். பெரியபெரிய முட்டைக் கண்கள், கொடுவா மீசைன்னு ஒரு காலை மடிச்சுப்போட்டு உட்கார்ந்திருக்கும் சிலை. அங்கே முன்னங்கால்களைத் தூக்கி நிற்கும் குதிரைச்சிலைன்னு எல்லாம் பிரமாண்டமான அளவில் சிலைகள்.

  சின்னதா ஒரு சந்நிதியில் பச்சையம்மன் சாமி. பூசாரி இருப்பார். கற்பூரம் கொழுத்திச் சாமிகும்பிட்டுத் துன்னூறு வாங்கிப்பூசிக்கிட்டு குளத்தங்கரை மரத்தடியில் கொண்டுபோன கட்டுச்சோத்தைத் தின்னுட்டு விளையாடுவோம்.
  ஆலமரங்கள் நீண்டு தொங்கும் விழுதுகளோடு நிற்கும்.

  பெரியவர்கள் எல்லாம் குட்டித்தூக்கம் & பேச்சு.

  நாலுமணிவரை இப்படி. அப்புறம் பொடிநடையா ஊருக்குள்ளே போவோம். அங்கே சிவன் கோயில். மாசிலாமணீஸ்வரர். வாசலில் மகுடம்பூ மரங்களில் பூக்கள். கீழே கொட்டிக்கிடக்கும் பூக்களைச் சேகரிப்பது முக்கிய வேலை எங்களுக்கு.

  கோயிலில் உள்ளே புல்மண்டிக் கிடக்கும் பிரகாரங்கள். சிவலிங்கம் தலையில் ஒரு காயம் இருக்காம். அதனாலே சந்தனம் அரைச்சுப் பத்துப்போட்டிருக்கும்.
  கதை வழக்கமானதுதான். பூமியில் புதையுண்டு யாரோ மன்னனின் யானையோ குதிரையோ இடறி அங்கே ரத்தம் பெருகியதாம். தோண்டிப்பார்த்தபோது கிடைத்த லிங்கமாம். அபூர்வமா எருக்கம் மரத்தில் செஞ்ச மரத்தூண்கள் விசேஷம்.

  எனக்குப் பிடிச்ச சமாச்சாரம் அங்கே இருக்கும் ஆளுயரப் பாவை விளக்கு. (அப்போ அதுதான் என் உயரம்) அதோட பின்னல் அழகாப் பின்னி மொழுமொழுன்னு இருக்கும். தலை அலங்காரம் பேஷ்பேஷ். அதோட ஜடையைப் பத்துதரமாவது நீவிவிடாம அங்கிருந்து கிளம்புனதில்லை.

  அங்கிருந்து மெல்ல நடந்துவந்து பஸ் ஸ்டாப்புலே நின்னா ஒரு பஸ்கூட நிக்காது. எல்லாம் ஃபுல்லா வரும். எதாவது பஸ் நிக்காதான்னு திரும்பித்திரும்பிப் பார்த்துக்கிட்டே நடப்போம். கடைசியில் வீடே வந்துரும்.

  வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசிப் பயணம் இது. தூங்காமல் இருக்கணுமாம் மாலை விளக்கு வைக்கும்வரை.

  கால்நிறைய வலியும் மனம் நிறைய மகிழ்ச்சியுமாய் அன்னிக்கு ராத்திரி எல்லாரும் அடிச்சுப்போட்டமாதிரி தூங்குவோம்.

  நீண்ட பின்னூட்டத்துக்கு மன்னிக்கணும்.

  ReplyDelete
 14. எழுத்து நல்லா இருக்கு.

  ReplyDelete
 15. துளசி, அந்தக் கோவில் இன்னும் இருக்கா.
  அப்படியே மனசில பதியற மாதிரிச் சொல்லி இருக்கீங்களே.

  ReplyDelete
 16. வல்லி,
  இல்லாம எங்கே போகப்போது?
  கீதாவைக் கேட்கலாம்.

  அம்பத்தூர் & ஆவடிக்கு இடையில் இருக்கும் சிற்றூர் இது. இப்போ அரக்கோணம்வரை மெட்ராஸ் ஆகிப்போச்சு இல்லை. அப்ப இதுவும் 'பேரூர்'ஆகி இருக்கும்.

  புதுக்கோவில்(வைஷ்ணவி) வந்தபிறகு இதுக்கு 'மவுஸ்' கொறைஞ்சுபோச்சோ என்னவோ?

  ReplyDelete
 17. தல

  எங்க ஏரியாவில் இராயபுரத்திலும் பச்சையம்மன் கோயில் ஒன்று இருக்கு. மெயின் ரோடுடில் இருக்கு. எங்கள் அத்தை வீட்டுக்கு அந்த அம்மன் தான் குலதெய்வம்.

  அந்த கோவிலில் முனிஸ்வரர்கள் சிலைகள் கூட இருக்கு.

  ReplyDelete
 18. கே.ஆர்.எஸ்,

  பச்சையம்மன் கதை மட்டுமல்ல, உங்க ஊர் சிறப்பும் அறிந்தேன். சூப்பர்.
  (போன் ல சொன்ன மாதிரி, நேர ஒரு டிரிப் அடிக்க வேண்டியதுதான் வாழைப்பந்தலுக்குன்னு தோணுது)

  எந்த ஒரு ஒரு நல்ல நிகழ்வு நடக்கையிலும் முன்னோர்களை நினைவிருத்தி அவர்கள் புகழ் பாடுதல் நலம். அவ்வாறு செய்வது, மீண்டும் அவர்கள் ஆசிகள் கிடைக்க ஒரு வழி.

  அந்த விதத்தில் மிகச்சிறப்பான உங்களது இந்த ஸ்டார் வாரத்தில் உங்கள் பாட்டி அவர்களை நினைவுறுத்தி எழுதியது உமக்கு நன்மையே.

  ReplyDelete
 19. நான் திருமுல்லை வாயில் கோவிலுக்கு போயிருக்கிறேன், ஆனா ரொம்ப சின்ன வயதில், ஞாபகம் இல்லை.

  ReplyDelete
 20. ஒருவள் மாரியம்மை. மாரி ஆவது மழை. மழையென அன்பு பொழிபவள்.

  மற்றொருத்தி மரியம்மை. எபிரேய மொழியில் மிரியம். ‘அன்பிற்குரியவள்’ என்று பொருள்.

  இருவரும் அன்பை பொழிபவர்களே.

  ReplyDelete
 21. எங்கள் ஊர் பக்கத்தில் உள்ள வலங்கைமான் மாரியம்மன் கோயில் மிக பிரசித்தி. இந்த அம்மனுக்கு ‘பாடைகட்டி மாரியம்மன்' என்ற பெயர் உண்டு. தற்போது நடந்துவரும் பங்குனி மாதத்தில் பெருந்திரளான மக்கள் பாடை காவடி எடுப்பதால் இந்த பெயர்.

  மாரியம்மன் கோயில்களில் பிராமணரல்லாத பூசாரியிடமும் ‘குனிந்து மரியாதையாக விபூதி வாங்கனுண்டா' என்று என் தந்தை சொல்வது ஞாபகம் இருக்கிறது.

  ReplyDelete
 22. முதல் பகுதியில் சொல்லியிருப்பதைப் பற்றி பற்பல ஆய்வுகள் ஏற்கனவே செய்து வெளிவந்திருக்கின்றன இரவிசங்கர். மாரியம்மன் என்பதும் ஆதிபராசக்தி என்பதைப் போல் ஒரு பொதுப் பெயர் தான். கொற்றவை, மாரித்தெய்வம், நிலவளத்தெய்வம், பால்வளத்தெய்வம் (குழந்தை வரம் தரும் தெய்வம்), கொடுமை அனுபவித்து இறந்த கன்னியர், கற்பின்மகளிர் என்று எல்லாருமே மாரியம்மன் என்ற பொதுப்பெயரால் அழைக்கப்படுகிறார்கள். நான் அறிந்தவை மிகக் குறைவு.

  எங்கள் வீட்டிலும் ஒரு முன்னோரை இப்படி தையில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.


  புனித வெள்ளிக்கு மேரியம்மாவைப் பற்றியும் எழுதியாச்சா? அருமை.

  உங்கள் குலதெய்வம் (முதல் முடி பெறும் தெய்வம்) பற்றி எழுதியிருப்பதைப் பார்த்த பின்னர் தான் சௌராஷ்ட்ரர்களின் குலதெய்வங்களைப் பற்றி (முதல் முடி பெறும் தெய்வங்கள்) சேகரித்து வைத்திருப்பவை நினைவிற்கு வருகின்றன. விரைவில் கூடலில் ஒரு இடுகையோ இரு இடுகையோ இட வேண்டும்.

  எங்கள் வீட்டில் (மல்லி குடும்பத்தினர்) முதல் முடி இறக்கம் திருப்பரங்குன்றத்தில். மாவிளக்கு ஏற்றி காதோரம் முடியைக் கத்தரித்து மஞ்சள் துணியில் சுற்றி உண்டியலில் இடுவார்கள். பின்னர் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கை அருகிலோ பழனி அடிவாரம் சரவணப் பொய்கை அருகிலோ மொட்டை. திருவேங்கடத்தானுக்கு மொட்டை போடும் வழக்கம் இல்லை. என் தந்தையார் தான் பழனிக்கோ திருமலைக்கோ செல்லும் போதெல்லாம் மொட்டை போட்டுக் கொள்வார். முன்பெல்லாம் பழனிக்கு வருடம் மூன்று முறையோ நான்கு முறையோ செல்லும் வழக்கம் இருந்ததால் என்றென்றைக்கும் பழனியாண்டியாகவே காட்சி தருவார். :-)

  சிவமுருகன் அவங்க வீட்டு வழக்கத்தைச் சொல்லியிருக்கிறார். (சௌராஷ்ட்ரர்கள் வழக்கமாகச் செய்யும் எங்க/நம்ம குழப்பத்தை இவரும் செய்திருப்பதைப் பார்த்து ஒரு புன்னகை. :-) சௌராஷ்ட்ரத்தில் எங்க/நம்ம இரண்டிற்கும் ஒரே சொல் தான்; அதனால் வரும் குழப்பம் இது)

  நட்சத்திர வாரத்தில் குலதெய்வத்தைப் போற்றியதற்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 23. ரவி,

  மாரியம்மனின் தலையை மட்டும் வணங்குவதற்கு காரணம்,

  "
  * பரசுராமனின் தாயார் ரேணுகா தேவி = நெறி தவறிய தாயின் தலையைப் பரசுராமன் வீழ்த்தியதால் இன்றும் தலை மட்டும் காலடியில் சிலையாக வைத்து வழிபடும் வழக்கம் மாரியம்மன் கோயில்களில் இருக்கு!"

  என்கிற தட்டையான காரணத்தை எழுதி இருக்கிறீர்கள்,

  உண்மையான காரணம் எது என்று இங்கே எழுதி இருக்கிறேன், அதுவும் அதே பரசுராமன் கதை தொடர்புடையது தான்.

  ReplyDelete
 24. //தமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி ஒன்றே!//

  ஒரு சின்ன தகவல்.. கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கோனான் குப்பத்தில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட 'பெரிய நாயகி அம்மன்' தேவாலயம் உள்ளது .அதில் அன்னை மரிக்கு தமிழ் முறைப்படி சேலைகட்டியது மட்டுமல்ல ,அன்னையின் பெயரும் பெரிய நாயகி அம்மன் என்றே வழங்கப்படுகிறது.

  ReplyDelete
 25. மிக அருமையாக சொல்லிவிட்டீகள்! ரவி! எந்த தெய்வமும் நம்மிடம் கேட்பது உண்மையான அன்பு மட்டும்தான். அவள் மாரியானாலும் சரி மேரியானாலும் சரி. என் பூஜையில் மும்மதத்துக்கும் இடமுண்டு.
  குழந்தை யேசுவை கையிலேந்திய மேரிமாதாவும் புனித மெக்காவின் சிறிய ஸ்டிக்கரும் உண்டு.
  //ஆத்தாடிமாரியம்மா சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேணாம் தின்னுபுட்டு போடியம்மா//
  எவ்வளவு எளிமையாக, உள்ளன்போடு தாயை அழைக்கும் வரிகள்!!!
  எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

  ReplyDelete
 26. This comment has been removed by the author.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP