Thursday, March 20, 2008

***குசும்பன் தொகையா? குறுந்தொகையா?

"கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்! குசும்பன் வீட்டு நாய்க் குட்டியும் லொள்ளு பண்ணும் என்பது ஆன்றோர் வாக்கு!
அப்படியாகப் பட்ட நம்ம குசும்பன் அண்ணாச்சியின் மறுபக்கத்தைக் கிழித்தெறிய வேண்டாமா? அதற்குச் சிறந்த ஆயுதம் இந்தக் குறுந்தொகை!"

"என்னங்கண்ணே சொல்றீங்க? ஸ்டார் வீக்குல ஓவர் ஜூடாயிட்டீங்களா? ஜில்லுன்னு ஒரு ஜிகிர்தண்டா அடிக்கறீங்களா கேஆரெஸ்?
அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்னங்கண்ணே சம்பந்தம்? குசும்பனுக்கும் குறுந்தொகைக்கும் என்னங்கண்ணே சம்பந்தம்?"

"எலே! ஜிகிர்தண்டாவை வேணாம்னு சொல்லமாட்டேன்! ஆனா முழுசாக் கேளுவே! நீங்க கண்ணால பாக்குற குசும்பன் வேற! நான் காதால கேக்குற குசும்பன் வேற! அண்ணாச்சிக்கு குறுந்தொகையின் 400 பாட்டும் மனப்பாடமாத் தெரியும்-னு உனக்குத் தெரியுமா?"

"ஆகா...அப்படியா?"

"என்ன நொப்பிடியா! நம்ப முடியலையா?"

"இல்லண்ணே...கேஆரெஸ் நல்லவரு தான்! அவரு சொன்னா கரீட்டாத் தான் இருக்கும்! இருந்தாலும் நம்ம குசும்பன் அண்ணாச்சிக்குள்ளாற ஒரு சங்கத் தமிழ் ஸ்விஸ் பேங்கே இருக்குன்னு சொன்னீங்க பாருங்க...அதான் கொஞ்சம் கேராக் கீது!"

"அந்தச் சங்கத் தமிழ் ஸ்விஸ் வங்கியின் கடவுச் சொல் உனக்கு வேணுமா, வேணாமா? அதைச் சொல்லு"

"ஐயோ...வேணுமே வேணுமே...சரி, நீங்க எப்படி இதைக் கண்டு புடிச்சீங்க?"

"அண்ணாச்சி அன்னிக்கி என்றுமில்லாத அதிசயமா, சிக் ஷாம்பூ போட்டுச் சிக்குனு குளிச்சிக்கிட்டு இருந்தாரு! அப்ப அவர் பாடின அந்த பாத்ரூம் சாங் தான் அந்தக் குறுந்தொகைப் பாட்டு!"

"அடப்பாவி...பாத்ரூம்ல போயி யாராச்சும் குறுந்தொகை பாடுவாங்களா? என்னய்யா மனுசன் இந்தக் குசும்பன்! இருக்கட்டும், இருக்கட்டும்!"

"எலே, எடுப்பட்ட பயலே! எங்க பாடினா என்னலே! குறுக்கப் பாடினாக் குறுந்தொகை, நெடுக்கப் பாடினா நெடுந்தொகை!
இந்தாக் கேட்டுக்கோ! அண்ணாச்சிக்கு ரொம்ப புடிச்சமான பாட்டு-லே இது!"


பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

(நெய்தல் திணை - தலைவி கூற்று - சிறைக்குடி ஆந்தையார் பாடியது)

"ஒன்னுமே புரியலைண்ணே! தமிழ்-ல தானே எழுதி இருக்காங்க? வடமொழியா இருக்கப் போவுது!"

"அடிங்க! இன்னா நக்கலா?...நான் எதுக்குப்பா இருக்கேன்! சொல்லுறேன் கேளூ"

"அதாச்சும் இரண்டு மகன்றில் பறவைகள், தாமரைக் குளத்தில் ஜாலியாக் காதல் செஞ்சிக்கிட்டு இருக்குதுங்க!
(மகன்றில் என்பது நீர் வாழ்ப் பறவைகளில் ஒரு வகை)
அப்போன்னு பார்த்து, ஒரு பூ தண்ணியில மிதந்துகிட்டு வருது! இதுங்க ரெண்டும் அம்புட்டு நெருக்க்க்க்க்க்மா இருக்குதுங்களா? அந்தப்பூ இந்தக் காதல் ஜோடிகளுக்கு இடையேயும் லேசா மிதந்துகிட்டுப் போகுது!"

"அப்படியே மனசுல பலான பலான சீன்களை ஓட்டிக்கறேன் அண்ணாச்சி! கற்பனை பண்ணிப் பாக்கும் போதே அவ்வளவு இனிமையா இருக்கு!"

"அதான் தமிழ் இலக்கியம்! காதல் இலக்கியம்!
அந்த ஒரு நிமிஷ இடைவெளி...இடைவெளி கூட இல்லை! சும்மா கேப்புல ஒரு பூ! - அது கூட அந்த ஜோடிகளுக்குத் தாங்க முடியலையாம்! பல ஆண்டுகள் கழிவது போல கழியுதாம் அந்தப் பூவின் நகர்வு!
அப்படி ஒரு காற்றும் புக முடியா அணைப்பு! இளமை இணைப்பு! புணர்ச்சி முனைப்பு! தமிழ்ப் பிணைப்பு!"

"ஆகா! ஆகா!"

"இப்ப பொருத்திப் பாரு...
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன = பூ இடையில் வந்தாலும், ஆண்டுகள் கழிவது போல்
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப் = நீரில் வாழும் மகன்றில் பறவைகளின் புணர்ச்சி
பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு = பிரிவு கொஞ்சம் கூடத் தாங்காமல், அழியாக் காதலொடு
உடனுயிர் போகுக தில்ல = உடனே உயிர் போய் விட வேண்டும்!"

"என்னண்ணே சொல்றீங்க? எதுக்கு உயிர் போகணும்? பூ தானே வந்துச்சி? வில்லனா வந்தான்?"

"உம்...இந்தப் பறவை சீன் என்பது ஒரு உவமைக் காட்சி தான்! உண்மையான காட்சி என்ன தெரியுமா? பேக்கிரவுண்ட் இதான்!
அம்மாவும் அப்பாவும், பொண்ணை அடைச்சி வச்சிருக்காங்க! அப்போ பிரிவு தாங்காது அவள் தன் தோழி கிட்ட சொல்றா! அது தான் பாட்டு!

கடனறிந்து = கடமையை அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து = ஜென்மம் ஜென்மமாக நாங்க இரண்டு பேரா இருந்து வருகிறோம்!
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே = இப்போ அந்த இரண்டு, ஒன்று+ஒன்று என்று பிரிந்து விட்டதே!
அவர் தனி, நான் தனி என்று ஆகி விட்டதே! இந்தச் சிறுமை எங்களுக்கு வேண்டாம்! நாங்க உய்யணும்னா, உடன் உயிர் போகுக!
இதான் முழுப் பாட்டும் சொல்ல வரும் கருத்து"

"ஆகா...என்ன ஒரு காதல் உணர்ச்சி! தங்களுக்கு இடையே ஒரு சின்னப் பூ வந்தாக் கூடத் தாங்கிக்க முடியலைன்னா, எப்படி எல்லாம் உருகி உருகிக் காதலிப்பாங்க பாருங்க!"

"இப்ப புரியுதா? எதுக்குச் சாயங்காலம் ஆனா, ஆபீஸ் கேண்டீனுக்கு நம்ம பாலாஜிப் பையன் கூட போவாதே-ன்னு சொல்லுறேன்னு!
ஒரு பூ வருவதையே தாங்காத அவங்க ரெண்டு பேரும், இம்மாம் பெரிய பூ-தம் வருவதைத் தாங்குவாங்களா?"

"அடப் போங்க அண்ணாச்சி! எனக்கு ஒரு சந்தேகம்!
பொதுவா காதலர்கள் ஈருடல் ஓருயிர்-ன்னு "ஒன்னா" இருக்குறத தான் விரும்புவாங்க! ஆனா இந்தப் பொண்ணு தனக்கு "ஒன்னு" வேணாம், "ரெண்டு" தான் வேணும்னு சொல்லுதே! ஏன்?"

"ஓ...அந்த "இருவேம்", "ஒருவேம்" பத்திக் கேக்கறியா?
அந்தப் பொண்ணுக்கு இரண்டு பேரா இருக்குறது தான்பா பிடிச்சிருக்கு! ஒன்னா ஆயிட்டா இன்பம் எது-ன்னு தெரியாது பாரு!
இரண்டு பேரா இருக்கும் போது தான் எனக்கு நீ, உனக்கு நான்-னு,
கூடல் சுவை,
கூடலில் ஊடல் சுவை,
ஊடலில் அவளைத் தேடல் சுவை,
தேடலில் அவனை நாடல் சுவை,
நாடலில் மீண்டும் கூடல் சுவை!


அதான் அவளுக்கு "இருவேம்" வேணும்ங்கிறா! "ஒருவேம்" வேணாம்னு சொல்லுறா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்-ன்னு ஆண்டாள் சொன்னாள் அல்லவா! ஜென்ம ஜென்மமாத் தொடரும் இந்த "இருவேம்"...விட்ட குறை, தொட்ட குறை-ன்னு சொல்லுவாங்களே, அதான்! என்னாப் புரியுதா?"

"அண்ணே! நீங்க சொல்லச் சொல்ல எனக்கு இப்பவே காதலிக்கணும் போல இருக்குண்ணே!"குறுந்தொகை தமிழ் மொழியின் அக இலக்கிய நூல்களில் தலை சிறந்தது! எட்டுத் தொகை நூல்களில் ஒன்று!
நற்றிணை, நல்ல குறுந்தொகை என்று குறுந்தொகைக்கு மட்டும் "நல்ல" அடைமொழி கொடுக்கறாங்க! மொத்தமே 400 பாட்டு தான்! ஒவ்வொரு பாட்டும் எட்டு அடிக்கு மேல போகவே போகாது!
குட்டி ஆனால் சுட்டி = அதான் "குறுந்"!
பல புலவர்கள் பாடியதைத் திரட்டித் தொகுத்தது = அதான் "தொகை"!

திருவிளையாடல் சினிமா பார்த்துப் பார்த்து, இந்நேரம் உங்க எல்லாருக்குமே, ஒரு குறுந்தொகைப் பாட்டாச்சும் மனப்பாடம் ஆகியிருக்கும்! ஆமாம்...தருமி இறைவனின் போலியாக, சிவனாரின் பிராக்சியாக, எடுத்துக்கிட்டு வரும் அந்தப் பாடல் குறுந்தொகைப் பாடல் தான்!

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே
(இதுக்குப் பொருள் இந்நேரம் உங்களுக்கே தெரியும்!)

இன்னும் சில பிரபலமான குறுந்தொகைப் பாட்டைக் குறுகுறுன்னு பார்த்துவிட்டுக் குசம்பனின் ஸ்விஸ் பாங்கு அக்கவுண்டுக்குப் போகலாம் வாங்க!


யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
- செம்புலப்பெயனீரார்; குறிஞ்சித் திணை

எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!
- இதான் பொருள்!

நறுமுகையே நறுமுகையே பாட்டில் இதை அப்படியே வச்சாரு நம்ம வைரமுத்து! முன்பு, இசை இன்பம் வலைப்பூவில் இது பற்றி லோக்கலா ஒரு பதிவு போட்டிருந்தேன்! மக்கள் நிறைய பேருக்குப் பிடிச்சி இருந்தது! :-)

டேய், என் காதலை அவகிட்ட சொல்லவும் முடியலை, சொல்லாம இருக்கவும் முடியலை! - இப்படித் தானே நாம் நண்பர்களிடம் டயலாக் விடுவோம்!
ஆனா இங்கிட்டு பாருங்க! எவ்வளவு வித்தியாசமான, ஆழ்ந்த வசனம்!

பாறை மேல வெண்ணைய்! நல்ல வெயில்!
அதுக்குக் காவல் இருப்பவன் - அவனுக்குக் கையும் இல்லை! வாயும் பேச முடியாது!
அதாச்சும் கையில் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் (வெண்ணெய்க் கட்டி).
உருகுது! உருகுது! காதலால் உருகுது!

ஆனா ஓடிப்போய் எடுத்துக் காப்பாத்தவும் முடியலை! ஏன்னா கை இல்லை!
மத்தவங்களை உதவிக்குக் கூப்பிடவும் முடியலை! ஏன்னா வாய் இல்லை!
என் காதல் இப்படி வாயில்லா உமை காக்கும் வெண்ணெய் கட்டி போல ஆகிப் போச்சே! சொல்லவும் முடியலை! சொல்லாம இருக்கவும் முடியலையே! - எப்படி இருக்கு தமிழ் தரும் உவமை?

இடிக்குங் கேளிர் நும்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மற்று இல்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்று கொளற்கு அரிதே.
-வெள்ளி வீதியார்.


என்னா மக்களே, குறுந்தொகை பிடிச்சி இருந்ததா? அப்பப்ப மாதவிப் பந்தலில் சங்கத் தமிழ் விருந்தைத் தலைவாழை இலை போட்டு வைக்கட்டுமா? என்ன சொல்றீங்க?
குறுந்தொகை முழுதும் பொருளுடன் படிக்க இங்கே!
குறுந்தொகை குறித்த நம்ம கவிதாயினி காயத்ரி அறிமுகம் இங்கிட்டு!

இந்தப் பதிவு எழுதத் தூண்டிய குசும்பன் அண்ணாச்சிக்கு அடியேன் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்! இப்பத் தெரிஞ்சிருக்குமே, அண்ணாச்சிக்கு அந்தப் பாட்டு ஏன் ரொம்பப் பிடிக்கும்-னு! இன்னமும் தெரியலைன்னா, அவர் கிட்ட திருமண அழைப்பிதழ் கேளுங்க! :-))))

25 comments:

 1. குறுந்தொகைக்கு நல்ல அறிமுகம்.. அப்படியே சைக்கிள் கேப்ல குசும்பருக்கும் திருமண வாழ்த்து... :)
  நாங்களும் எங்கள் சரவணனுக்கு திருமண வாழ்த்து சொல்லிக்கிறோம்..

  ReplyDelete
 2. அசை பிரித்து அருமையான பாடல்களைத் தந்துள்ளீர்கள். பாடல் இனிது; அதை ரவி சூழ்நிலைக்குத் தகுந்தவாறு அமைத்துத் தருவது இன்னமும் இனிமையே.

  காயத்ரி தந்த அறிமுகம் இன்னும் நினைவில் இருக்கிறது. அவர் அது போல நிறைய எழுத மேற்கோளிட்டீர்களோ? (நானும் அவ்வாறே பின்னூட்டமிட்டிருந்தேன் ;-))

  ReplyDelete
 3. //நான் காதால கேக்குற குசும்பன் வேற! அண்ணாச்சிக்கு குறுந்தொகையின் 400 பாட்டும் மனப்பாடமாத் தெரியும்-னு உனக்குத் தெரியுமா?"
  //

  அப்படியா? இது 'குசும்பன்' அண்ணாச்சிக்கு தெரியுமா?

  இன்றைய பதிவுக்கு குறும்பன்தான் தொகையலா? :-)

  ReplyDelete
 4. Neenga padichadhu Anna Universitya illai Thanjai Tamil Palkalaikazhagama
  :))
  Shobha

  ReplyDelete
 5. //இருந்தாலும் நம்ம குசும்பன் அண்ணாச்சிக்குள்ளாற ஒரு சங்கத் தமிழ் ஸ்விஸ் பேங்கே இருக்குன்னு சொன்னீங்க பாருங்க...அதான் கொஞ்சம் கேராக் கீது!"//

  இரண்டு நாட்கள் வேலையாக நண்பர் வீட்டுக்கு ஷார்ஜா போய் இருந்தேன் அதுக்குள்ள இப்படியா?

  ஆமா நீங்க சொல்லும் குசும்பன் ஆரு? அவரு பிளாக் லிங் கொடுங்களேன்.

  உங்கள் வாழ்த்துக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 6. //ஆமா நீங்க சொல்லும் குசும்பன் ஆரு? அவரு பிளாக் லிங் கொடுங்களேன்//

  யோவ் மாப்ளே! இப்படிக் கேட்டூ வாங்குறியே! கொடுத்தாச்சியா உன்னோட வலைக்குட்டியை...ஐ மீன் வலைச்சுட்டியை! :-))

  ReplyDelete
 7. ஆங்...
  சொல்ல மறந்துட்டேனே!
  இனிய திருமண வாழ்த்துக்கள் குசும்பா!
  திருவாரூர் தியாகேசன் அருளால் நலம் பல சிறந்து வாழ வேண்டுகிறேன்!
  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 8. ரொம்ப நல்லாயிருந்தது. என் நண்பன் குசும்பருக்கு என் மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. Search in தமிழ் http://www.yanthram.com/ta/

  ReplyDelete
 10. //எங்கம்மாவும் ஒங்கம்மாவும் ப்ரெண்ட்ஸா?
  எங்க டாடியும் ஒங்க டாடியும் பார்ட்னர்ஸா?
  எனக்கும் ஒனக்கும் எப்படி இப்படி ஒரு பொருத்தம், மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி?
  செம்மண்ணில் தண்ணி கொட்டிரிச்சுன்னா, அப்படியே ஒன்னா மிக்ஸ் ஆயிடுமே!
  அது போல, நம்ம ஹார்ட்டு ரெண்டும் ஒன்னாயிருச்சு ஸ்வீட் ஹார்ட்!//

  காலத்திற்க்கு ஏற்ற கலாய்த்தல் கலந்த பொருள்.

  ReplyDelete
 11. குசும்பருக்கும் திருமண வாழ்த்து... :)

  ReplyDelete
 12. தல

  \\இன்னமும் தெரியலைன்னா, அவர் கிட்ட திருமண அழைப்பிதழ் கேளுங்க! :-))))\\

  இன்னிக்கு பார்க்க போறேன். (குசும்புண்ணே இன்னிக்கு இனி காலி)

  ;)))

  ReplyDelete
 13. குறுந்தொகையை விடுங்க, நீங்க சொன்ன, கூடல், ஊடல், தேடல், நாடல், வாடல் எல்லாமே மனிதனை "டல்" ஆக்கும் சமாசாரங்கள் என்று தோன்றுகிறதே.

  ReplyDelete
 14. "முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்.." குறுந்தொகைக்கு ரொம்ப நாளைக்கு முன்ன சாலமன் பாப்பைய்யா ஒரு பட்டி மன்றத்துல விளக்கம் கொடுத்திருந்தார். அதுக்கு முந்தின நாள் மதுரைல ஒரு வீட்ல நடந்த ஒரு நிகழ்ச்சிய தான் சொல்றாருன்னு தோணும். அப்படி ஒரு விளக்கம். அரங்கத்துல இருந்த எல்லா முகத்திலும் அப்படி ஒரு சிரிப்பு. கவிதை முழுக்க போய் சேந்திருந்துது. பழந்தமிழ் முகமூடிய எல்லாம் கழிட்டிட்டு அந்த அரங்கத்துக்குள்ள உலாவிக்கிட்டு இருந்துது கூடலூர் கிழாரோட சொற்கள்.

  அது தான் ஞாபகம் வந்துது இந்த பதிவ படிச்சப்ப. ரொம்ப நல்லா வந்திருக்கு ரவி. குறுந்தொகையை இன்றைய தமிழ் வாசகர்கள் கிட்ட கொண்டுபோய் சேக்க அத நிச்சயம் தண்ணீர்படுத்தல் அவசியம். நல்ல பணி ரவி. இன்னும் இன்னும்....

  ReplyDelete
 15. //
  RATHNESH said...

  குறுந்தொகையை விடுங்க, நீங்க சொன்ன, கூடல், ஊடல், தேடல், நாடல், வாடல் எல்லாமே மனிதனை "டல்" ஆக்கும் சமாசாரங்கள் என்று தோன்றுகிறதே.
  //

  haa haa

  Kalakkal.

  ReplyDelete
 16. ///யாயும் ஞாயும் யாரா கியரோ?
  எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
  யானும் நீயும் எவ்வழி அறிதும்?
  செம்புலப் பெயனீர் போல
  அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.///


  இதை யாருடைய ப்ளாக் ன்னு சரியா தெரியல, ஆனா படிச்சுட்டு என்னடா அர்த்தம்ன்னு மண்டை காஞ்சு பொய் கிடந்தேன். நல்ல வேலை அர்த்தத்த போட்டீங்களே? நல்லா இருங்கப்பு.

  ReplyDelete
 17. //மங்களூர் சிவா said...
  Excellent.///  Repeat.

  ReplyDelete
 18. :))) நோட் பண்ணிக்கிறேன் நோட் பண்ணிக்கிறேன்...

  குசும்பனுக்கு வாழ்த்துக்கள்... :)))

  ReplyDelete
 19. //RATHNESH said...
  குறுந்தொகையை விடுங்க, நீங்க சொன்ன, கூடல், ஊடல், தேடல், நாடல், வாடல் எல்லாமே மனிதனை "டல்" ஆக்கும் சமாசாரங்கள் என்று தோன்றுகிறதே//

  ரத்னேஷ் ஐயாவுக்குச் சித்தர்கள் மேலத் தான் கோபம்-னு நினைச்சேன்.
  ஆனா காதலர்கள் மேலக் கூட கோபமா?
  ஏன் உங்களுக்குக் காதல் மேல இந்த கொலை வெறி ரத்னேஷ் ஐயா?
  எனக்குப் பதில் சொல்லியே ஆகணும் நீங்க!
  -உலகக் காதலர்கள் சார்பாக
  காதலன் கேஆரெஸ்
  :-))))

  ReplyDelete
 20. நக்கீரர்: மகன்றில் பறவை இல்லை. அகன்றில் பறவை.

  நக்கீரரின் அகச்சான்று: ஆகா. இம்புட்டு நல்லா எழுதியிருக்கு இந்தப் புள்ளே. அதை பாராட்டாட்டியும் பரவாயில்லை நொள்ளை சொல்லாம இருக்கலாமுல்ல? ஹும். என்னத்த சொல்லி என்னத்த செய்ய?

  நக்கீரர்: சொற்குற்றம் என்றாலும் மன்னித்துவிடலாம். பொருட்குற்றமும் இருக்கிறதே. இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மைக்கு இது தான் பொருளா?

  ந.அ.சா: அட ஆமாம். என்னவோ இவுருக்குத் தான் எல்லா பொருளும் தெரியும் போல அளப்பரை விட்டுக்கிட்டு இருக்காரு. பொருட்குற்றம்ன்னா சரியான பொருள் என்னன்னு சொல்லச் சொல்லுங்க பாப்போம். அப்ப காணாம பூடுவார்.

  குமரன்: இறைவனும் தான் மட்டுமே இருந்த போது எந்த சுகமும் இல்லைன்னு தான் இந்த உலகையும் உயிர்களையும் தன்னில் இருந்து படைச்சுக்கிட்டாருன்னு சொல்லுவாங்க. அதை இரவிசங்கர் எம்புட்டு நல்லா இங்கன சொல்றாரு பாருங்க.

  கு.அ.சா: அட. கூடல் சுவை. கூடலில் ஊடல் சுவைன்னெல்லாம் இரவிசங்கர் எழுதிட்டாரா இவனுக்கு ரொம்ப உச்சிகுளிர்ந்து போச்சு. எப்புடி ஐஸ் வக்கிறான் பாருங்க.

  ReplyDelete
 21. குறுந்தொகையை இம்புட்டு பேரு அலசுறதைப் பாத்தா அதுல இறங்கி நாமளும் ஒரு தடவை நீராடிடலாம்ன்னு ஒரு ஆசை கிளம்புதே. ஆனா எற்கனவே நீராட நினைச்சுக்கிட்டு இருக்குற இலக்கியங்களை முதல்ல பாக்கலாம்ன்னு அடக்கு அடக்குன்னு அடக்கிக்கிறேன்.

  கையில் ஊமன் கண்ணின் காக்கும் பாட்டு இப்பத் தான் முதன்முதலா படிக்கிறேன். அருமையான உவமை ஐயா இது.

  ReplyDelete
 22. //நக்கீரர்: மகன்றில் பறவை இல்லை. அகன்றில் பறவை.//

  நக்கீரா...என்னை நன்றாகப் பார்! நான் போட்ட தமிழ்ப் பதிவில் குற்றமா? பின்னூட்டக் கண்ணைத் தொறந்துடுவேன்! :-)

  இல்லை குமரன்
  அன்றில் என்பது பொது இனம்!
  மகன்றில் (மக+அன்றில்), அகன்றில்(அக+அன்றில்) என்ற பறவைகளும் உண்டு!

  மகன்றில் (p. 2983) [ makaṉṟil ] n makaṉṟil . A species of love-bird; ஆண்பெண்களுள் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாத நீர்வாழ் பறவைவகை. குறுங்கான் மகன்றி லன்ன வுடன்புணர் கொள்கை (ஐங்குறு. 381).

  அகன்றில் (p. 009) [ akaṉṟil ] n akaṉṟil . cf. மகன்றில். Male Greek partridge; ஆண் அன்றில். (ஐங்குறு. 381, பி-ம்.)

  ReplyDelete
 23. அடடா இப்படி அலைக்கழிக்கிறீங்களே.
  எதைப் படிக்க எதை விட.

  குசும்பர் கலயாணம் அப்பவே ஆகிவிட்டதே இல்லையோ. இருந்தாலும் மீண்டும் வாழ்த்துகள் சரவணன்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP