Thursday, September 18, 2008

இறைவனுக்கு எது பிடிக்கும்? - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - Part 2

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை! ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக வருங்காலத்தில் நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ! - ஜய விஜயர்கள் தயக்கம் காட்டுகிறார்கள்...கருமுகிலான் யோசிக்கிறான்! சென்ற பதிவு இங்கே!
(மன்னிக்கவும்! பாக்டிரீயாக் காய்ச்சலின் காரணமாக, ஓரிரு வாரமாய் தொடரைப் பதிய முடியவில்லை! சென்ற பகுதியை ஒரு எட்டு பார்த்து விட்டு வந்து விடுங்கள்; தொடர்ச்சி/Continuity புரிந்து விடும்)

"ஆகா! இவர்களுக்குத் திருவிளையாடல் ஆடித் தான் புரிய வைக்கணும் போல இருக்கே! பார்த்தாயா லக்ஷ்மீ, என் துவாரபாலகர்களே, என் சொல்லைக் கேட்டு நடக்க, கொஞ்சம் யோசிக்கிறார்கள்!
ஆனால் (பின்னாளில்), நம் இராமானுசனை அண்டினோர் மட்டும், அவன் சொன்ன வண்ணமே செய்கிறார்களே! இது எப்படிச் சாத்தியம் ஆகிறது?

"உம்..."

"என்ன உம்? உடையவர் சொன்ன ஒரே வார்த்தைக்காகப் பேரறிஞர் முதலியாண்டான், கொஞ்சம் கூட கூச்சம் பாராமல், யார் வீட்டுக்கோ சென்று தண்ணி இறைக்கப் போகிறார்! ஆனா என் துவார பாலகர்கள்? எனக்கு இவ்வளவு தானா மதிப்பு?"

"ஹா ஹா ஹா, பெருமாளே! உங்களுக்கு இன்னுமா காரணம் புரியவில்லை?"
"புரியவில்லையே தேவீ! நான் தான் வேதம் சொன்னேன்! நான் தான் கீதை சொன்னேன்! அதையே தானே இந்த இராமானுஜன் இன்னும் விரித்து விரித்து விலாவரியாகச் சொல்கிறான்! அவன் சொந்தமா ஒன்னும் சொல்லலை! ஆனா எனக்கு மட்டும் மதிப்பு இல்லாமப் போச்சுதே!"

"ஓ...நீங்க அப்படி வரீங்களா? சரீ....வேதம், கீதை-ல எல்லாம் என்னான்னு சொன்னீங்க சுவாமி?"

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று-ன்னு சொன்னேன்"

"சரி தான்! உங்க கால்-ல வந்து விழு விழு-ன்னு நீங்களே சொல்லிக்கிட்டா யாரு வந்து விழுவாங்க? இதே ஒரு அடியவர், அதோ அழகிய மணவாளப் பெருமாள் இருக்காரு! அவர் அன்பானவர்! அவர் கால்-ல விழுங்க-ன்னு சொன்னா அது அழகு, அடக்கம், ஆற்றுப்படுத்தல், வழிகாட்டல்! அப்போ வந்து விழுவாங்க!"

"ஓ...."

"மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என் ஒருவனையே சரணம் எனப் பற்று - இதை எப்போ எங்கே சொன்னீங்க?"

"கீதையில் பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னேன்! இது கூடவா உனக்குத் தெரியாது?"

"உக்கும்...கீதையில் எங்கோ ஒரு முக்கில், பதினெட்டாம் அதிகாரத்தில் சொன்னா, யாரு கேட்பாங்க? யாருக்கு அம்புட்டு பொறுமை இருக்கு?
குழந்தைகளுக்கு என்ன தரப் போகிறோம்-ன்னு முன்னாடியே சொன்னா தானே, அதுங்க ஆர்வத்தோடு விளையாட்டில் கலந்துக்குங்க!"

"அட! ஆமாம்!"

"இதே ஆண்டாளைப் பாருங்க, எடுத்த எடுப்பிலேயே சொல்லிடறா, நாராயண"னே" நமக்"கே" பறை தருவான்-னு! - அம்மா எப்போதும் சொல்லிவிட்டுக் கொடுக்க மாட்டாள்! கொடுத்து விட்டுச் சொல்லுவாள்!
அது தான் அம்மாவின் ஹிருதயம்! அம்மாவின் ஹிருதயம் தான் ஆச்சார்ய ஹிருதயம்! அதுனால தான் ஆச்சாரியர்கள் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு!"

"ஓ..."

"என்ன ஓ...ஓ...ன்னு ஓ போடுறீங்க சுவாமி? :) பேசாம நீங்களும் அடியார் கூட்டத்தில் போய்ச் சேர்ந்துடுங்க! அப்பறம் தெரியும் அங்கே மட்டும் எப்படி வேலை டாண் டாண்-னு நடக்குதுன்னு? இப்போ நீங்க பேசாம வேடிக்கை பாருங்க! அதோ....சனகாதி ரிஷிகள் உங்களைத் தேடி வராங்க பாருங்க!"


சனகாதி ரிஷிகள், குழந்தை ரிஷிகள்! மொத்தம் நான்கு பேர் - சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர்...
திருப்பாற்கடலை நோக்கி வருகிறார்கள்! இறைவனுக்கு உருவம் இருக்கா என்ன? போய் தான் பார்த்துடுவோமே-ன்னு சும்மா அதிரடியாகக் கிளம்பி வருகிறார்கள்...

இறைவனின் பாற்கடல் ஆலயத்துக்குள் வந்தவர்கள், துவாரபாலகரான ஜய-விஜயர்களைப் பார்க்கிறார்கள்! பார்த்தும் பார்க்காதது போல், நேரடியாக உள்ளே செல்ல எத்தனிக்கிறார்கள்!
அளந்தவனையே அளந்து பார்க்க அல்லவா வந்துள்ளார்கள்! அதான் இறைவன் ஒருவனையே குறியாகக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள்!

ஜய விஜயர்களுக்குப் பாவம் அப்போது தான் பெருமாள் தங்களைக் கீழே வருகிறீர்களா-ன்னு கேட்ட டென்ஷன்! தப-தப என்று உள்ளே நுழையும் சனகாதி ரிஷிகள் நால்வரையும் தடுக்கிறார்கள்! வரவின் காரணம் என்ன என்பதை உரைத்து விட்டுச் செல்லும்படிச் சொல்கிறார்கள்...பிடி சாபம்...

"ஜய விஜயா...சேவிக்க வந்த எங்களிடம் அதோ இறைவன் என்று வழிகாட்ட வேண்டும்! அது தானே உங்கள் கடமை? ஆனால் இறைவனுக்கு அருகில் இருக்கிறோம் என்னும் எண்ணம் உங்களுக்கு ஆணவத்தையும் திமிரையும் அல்லவா வளர்த்து இருக்கு?
அதை வளர்த்து விட்ட அந்த நெருக்கம் இனி உங்களுக்குத் தேவையில்லை! இறைவனை இக்கணமே பிரியுங்கள்! பூலோகம் சென்று திருந்தி வாருங்கள்!"

"ஐயோ...முனி சிரேஷ்டர்களே...அபயம், அபயம்! சக அடியார்களே அபயம், அபயம்! அடியோங்களை மன்னியுங்கள்! மன்னியுங்கள்!"

"உம்..."

"பெருமாள் சற்று முன்னர் தான் பூலோகம் வருகிறீரா-ன்னு கேட்டார்! அப்போது அவரிடம் தயங்கினோம்! ஆனால் இப்போது சாபம் பெற்றுச் செல்ல வேண்டியதாகப் போய்விட்டதே!
இறைவனிடம் வைக்க வேண்டிய பற்றை, மோட்சத்தில் வைத்தோமே! ஐயகோ! எங்களை மன்னித்து, விமோசனத்துக்கு வழி காட்டுங்கள் ரிஷிகளே!"

"இறைவனை நூறு பிறவிகள் பிரிந்து, ஆத்திகர்களாக வாழ்கிறீரா? இல்லை
இறைவனை மூனு பிறவிகள் பிரிந்து, நாத்திகர்களாக வாழ்கிறீரா? - எது வேண்டும்? சீக்கிரம் சொல்லுங்கள்! உங்களிடம் பேசிக் கொண்டிருக்க நாங்கள் இங்கு வரவில்லை! வேறு ஒரு முக்கியமான வேலையாக வந்துள்ளோம்!"

"முனீஸ்வரா, இறைவன் வாய் விட்டுக் கேட்ட போது யோசித்தோம்! ஆனால் இப்போது அதேயே யாசித்தோம்! அவர் சங்கல்பம் எப்படி எல்லாம் நடக்கிறது பாருங்கள்! - அப்போதே ஒப்புக் கொண்டிருந்தால் அது வரம் ஆகியிருக்கும்! இப்போதோ அது சாபம் ஆகிப் போனது!

சரி, எது எப்படியோ, எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! ஆகவே, நாத்திகராய்ப் பிறந்தாலும், மூன்றே பிறவிகள் பிரிந்து, அவரையே சீக்கிரமாகச் சேர வேண்டும்!
சீக்கிரமான கைங்கர்ய பலனையே எங்களுக்குச் சாபமாக ஆக்கித் தாருங்கள்! நன்றி உடையவர்களாக இருப்போம்!"

முனிவர்களுக்கே வெட்கமாகிப் போனது...அவசரப்பட்டு விட்டோமோ? பாவம், இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ? அப்படி ஒன்றும் மோசமாக எல்லாம் இவர்கள் செய்து விடவில்லையே?

அப்போது மூக்கைத் துளைக்கும் ஒரு நறுமணம்! - துளசீ மணம்! காற்றோடு கலந்து வீசி வீசி வருகிறது! கூடவே ஒரு சப்தம்! ஜல், ஜல்! கல், கல்!"ஆகா எம்பெருமான் பொற் பாதச் சலங்கைகள் ஒலிக்க நடந்து வருகிறானோ? அவன் மணம் அல்லவா இந்தத் துளசீ மணம்?
ச்சே! அவனைப் போய் உருவம் இருக்கா, அது இருக்கா, இது இருக்கா-ன்னு எல்லாம் சந்தேகப்பட்டோமே! அதைப் போக்கிக் கொள்ள இவ்வளவு தூரம் நடந்து வேறு வந்தோமே! இது என்ன வெட்கக் கேடு?

பெற்ற தாய்க்கு முலைப்பால் சுரக்குமா என்று சோதித்துப் பார்த்து விட்டா ஒரு குழந்தை பிறக்கிறது? ச்ச்சீ! இது என்ன கேவலமான சோதனைப் புத்தி நமக்கு?
அருவமான நீராவி உருவமான நீர் ஆகாதா? இல்லை உருவமான நீர் தான், அருவமான ஆவி ஆகாதா?

மெத்தப் படித்ததால் ஞான யோகமும், தினப்படி கர்மாக்கள் செய்ததால் கர்ம யோகமும், அவனைப் போற்றிப் பாடியதால் பக்தி யோகமும் கை கூடிற்றே தவிர,
இப்படிச் சோதித்துப் பார்க்கும் ஒரு எண்ணம் எப்படி நமக்கு வந்தது? அப்படியானால் இந்த மூன்று யோகங்களைத் தவிர, நமக்கு இன்னும் வேறு ஏதோ ஒன்னு குறையுதோ?"

எம்பெருமான் முனிவர்கள் முன் தோன்றி விட்டான். வாசலுக்கே வந்து விட்டான்!
மயிலிறகு அசைய அசைய, பீதாம்பரம் உருள உருள, கையில் தாமரைப் பூ சுழற்றச் சுழற்ற, இட்டடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க...இதோ ஈசன்!

அடியில் முடி வீழச் சேவிக்கிறார்கள் முனிவர்கள்! ஆகா என்ன ஆச்சரியம்!
திருவடிகளைக் காணோம்!
உருவம் சோதிக்க வந்தவர்க்கு, அடியை அருவம் ஆக்கிச் சோதிக்கிறானோ?
தவற்றினை உணர்ந்த தவ முனிகள், எம்பெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்! உய்வுக்கு வழி காட்டுமாறு வேண்டுகிறார்கள்!

"பரமாத்மா, பரம்பொருளே, ஸ்ரீயப் பதியான நாராயணா! - ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும் எங்களுக்கு இப்படிச் சோதித்துப் பார்க்கும் புத்தி வந்ததே! அப்படியானால் எங்களுக்கு வேறேதும் ஒர்ய் யோகம் இன்னும் கைவர வேண்டுமோ? அதை என்னவென்று சொல்லி அருள வேண்டும் சுவாமி!"

"சனகாதிகளே! சொல்கிறேன்! ஆனால் அதற்கு முன்னால்...இங்கிருக்கும் ஜய விஜயர்கள் ஏன் இப்படி முகம் வாடிக் களைத்துப் போயுள்ளார்கள்?"

"அவர்கள் அகம்பாவமாக நடந்து கொண்டார்கள் சுவாமி! அதனால் தான் அவர்களைச் சபித்து பூலோகம் அனுப்பத் துணிந்து விட்டோம்!"

"ஆகா! என்ன காரியம் செய்தீர்கள்? ஜய விஜயர்கள் பரம பாகவதர்கள் ஆயிற்றே! சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! அவர்களுக்கு என்னைப் பிரிய மாட்டாது, வைகுண்டத்தைப் பிரிய மாட்டாது இருக்கலாம்! ஆனால் அவர்களுக்கு அகம்பாவமா? யார் சொன்னது?"

"அவர்களே ஒப்புக் கொண்டார்கள் சுவாமி!"

"அவர்கள் ஒப்புக் கொண்டால், அது அவர்கள் சுபாவம்! ஆனால் நான் ஒப்புக் கொள்வேனா?"

"சுவாமி..."

"யாருக்கு அகம்பாவம்? அகம்-பாவம்! உங்களுக்கா? அவர்களுக்கா? இல்லை எனக்கா?"

"ஐயையோ...சுவாமி..."

"ஆலயத்துக்குள் நுழையும் போது, கண்ணில் பட்டவரை எல்லாம் தள்ளி விட்டு, நேராகக் கருவறைக்குள் சென்று விடுவீர்களா? கோபுரம் தரிசித்து, கொடிமரம் வணங்கி, சேனை முதலியாரையோ/தும்பிக்கை உடையானையோ துதித்து, கருடனையும் கண்டு, ஆலய வரிசையில் அடியார் கூட்டத்தை எல்லாம் கண்ட பின்னர் தானே, என்னைச் சேவிக்க வருவீர்கள்?
இல்லை கண்ணை மூடிக் கொண்டு, நேராகக் கருவறை வந்து தான் கண்ணைத் திறப்பீர்களா?"

"சுவாமி..."
(சனகாதிகள் வெலவெலத்துப் போகின்றார்கள்)


"அது போலத் தானே இங்கும்? ஜய விஜயர்கள் என் பணியில் இருக்கும் அடியார்கள் அல்லவா! அவர்களை வணங்கக் கூட வேண்டாம்! முகமன் கூறலாம் அல்லவா? கூடி இருந்து குளிர்ந்தேலோ தெரியாதா உங்களுக்கு?
நேரடியாக இறைவனும் நானும் மட்டுமே! மற்ற எவனும், எந்த அடியானும் எங்களுக்கு நடுவில் இல்லை என்ற அதிகாரப் போக்கை உங்களுக்கு யார் கொடுத்தது?"

"சுவாமி..."

"ஜய விஜயர்களுக்கு இறை-அணுக்க அகங்காரம் என்று சொல்லும் உமக்குத் தான் அகங்காரம் என்று நான் சொல்கிறேன்!"
(சனகாதிகள் வெலவெலத்துப் போகிறார்கள். இவ்வளவு கோபமாகச் சினப்பார் என்று அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!)

"சுவாமி...எங்களை மன்னியுங்கள்! அப்போதே எங்களுக்குத் தோன்றிற்று, இவர்களைச் சபித்திருக்க வேண்டாமோ என்று!
எங்கள் பிரிவு அவருக்கு ஆற்றாது! அவர் பிரிவு எங்களுக்கு ஆற்றாது! அதனால் நாத்திகனாய்ப் பிறந்தாலும் பரவாயில்லை! மூன்றே பிறவிகள் பிரிந்து, கைங்கர்ய சீக்கிரத்தையே அவர்கள் விரும்பினார்கள்! அவர்களைப் போய்...."
(சனகாதிகள் தேம்பித் தேம்பி அழ...)

"இப்போது நான் உங்களைச் சபிக்கட்டுமா?"

"சுவாமி..."

"வேண்டாம், போங்கள்!
கேட்டீர்களே ஞானம், கர்மம், பக்தி தவிர வேறு என்ன வேண்டும்-ன்னு! உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை!
பின்னாளில் சிவபெருமான் சொல்லப் போகிறார்! அதுவும் வாய் பேசாமல், மவுன மொழியாகவே சொல்லப் போகிறார்!
நீங்கள் சபித்த நாத்திகர்களிடம் இருந்து நீங்களே ஒரு பாடம் கற்றுக் கொள்வீர்கள்!
அந்த நாத்திகரின் வம்சக் கொழுந்து தான், அசைக்க முடியாத பக்தி என்றால் என்ன என்று, மெத்தப் படித்த உங்களுக்கு உணர்த்தப் போகிறது!
ஒன்று மட்டும் இப்போது சொல்லிக் கொள்கிறேன்! அடியார்களுக்குச் சாபம் தெரியாது! சரணமே தெரியும்!"

"சுவாமி..."

"சென்று வாருங்கள்!"
(இறைவன் மறைந்து விடுகிறான்)

அடியவர்களை அலட்சியம் செய்த அறிஞர்கள், இறைவனிடத்தில் நமக்கு Straight Dealing, இவர்கள் என்ன இடையில் என்று அதிகாரப் போக்காய் யோசித்த யோகிகள்...
உயிர்ப் பயம் என்று வரும் போது மட்டும், தங்கள் சொந்த நலனுக்காக, தினமும் நூறு முறை "இரண்யகசிபுவே நமஹ", "இரண்யகசிபுவே நமஹ" என்று சொல்லும்படி ஆயிற்று! :)

ஆத்திக ஜய விஜயருக்கு ஒரு முறை முகமன் சொல்லத் தவறிய ஞானிகள்,
நாத்திக ஜய விஜயருக்கு ஆயிரம் முறை வணக்கம் சொல்ல வேண்டியதாகப் போயிற்று :)

எதை எதோடு, எப்போது கோர்க்க வேண்டுமோ, அதை அதோடு, அப்போது கோர்க்க வேண்டும்! - அந்தக் கலையில் ஒருவனே வல்லவன்! அவனே நல்லவன்!

ஞானம், கர்மம், பக்தி எல்லாம் இருந்தும்.....வேறேதோ ஒன்று, எனக்கு வேண்டுமோ? அந்த வேறேதோ என்ன?
(தொடரும்)...
Read more »

Sunday, September 07, 2008

வேளாங்கண்ணியம்மன் பிறந்தநாள்: ஆடாது அசங்காது வா அம்மா!

பள்ளியில் படிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர்-8 அன்று விசேடமாக மேடையில் ஏற்றப்படுவேன்! பலி கொடுப்பதற்காக!
அட, நீங்க ஒன்னு! அவசரப்பட்டு சந்தோஷப் பட்டுக்காதீங்க! என்னைக் களப்பலி கொடுக்க இது என்ன மகாபாரதப் போரா? அடியேன் சொல்வது புனித ஆரோக்கிய அன்னையின் திருவவதார நாள் திருப்பலி - Our Lady of Good Health, Birthday Mass!

பொதுவாகத் திருப்பலியில் கத்தோலிக்க மாணவர்கள் தான் கலந்து கொள்வர். பலியின் முடிவில் அவர்களுக்கு அப்பமும், திராட்சை ரசமும் பிரசாதிக்கப்படும்! ஆனால் பங்குத் தந்தை. ரோசாரியோ கிருஷ்ணராஜ், கீதங்கள் பாடுவதற்கென்றே மேடையில் இருக்கச் சொல்லுவார்...அப்பாவிச் சிறுவனான என்னை மட்டும்! :)

மாசறு மாதா வருக! இளங் குமரனின் தாயே,
காசறு மரியே வருக! கருணையைப் பொழிக!
-
ன்னு பாடும் போது, மக்கள் முகமெல்லாம் மலர்ச்சி! தேவர் மகன் படத்தில் வரும் பாட்டின் மெட்டு!


முந்தைய நாள் மாலை, நானும் ஃபாதரும், அசெம்ப்ளி ஹாலின் பெரிய பியானோவின் பக்கம் உட்கார்ந்து கொண்டு, விதம் விதமாக ட்யூன் போடுவோம்! அவர் வெஸ்டர்ன் நோட்ஸில் ஏதேதோ குறியீடுகளில் எழுதுவார்!
பின்பு ஏற்றி இறக்கிச் சொல்லிக் கொடுப்பார்! அதை நான் பாடிக் காட்டும் போது, பாதி கர்நாடக/தமிழிசையாக மாறி இருக்கும்! :)

உடனே எனக்கும் அவருக்கும் சண்டை தான் வரும்! அது என்னமோ தெரியவில்லை; நான் செல்லும் இடங்களில் எல்லாம், எனக்குன்னு ராமா-ன்னோ, கிருஷ்ணா-ன்னோ ஒருத்தர் அமைந்து விடுகிறார்கள்! அவர்களுடன் சண்டையும் வந்து விடுகிறது! :)

Fr. ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்களுக்கு என் மேல் அலாதிப் பிரியம்! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எல்லாம் எனக்குத் தான் தருவார்! கிராமத்தில் இருந்து வந்த எனக்கு வெட்கம்/அச்சம் நீக்கி, பல ஆக்கப்பூர்வமான விடயங்களைச் சொல்லிக் கொடுத்தவரும் அவரே!


மரியன்னை திருப்பலியில்.....சாம்பிராணி மணமும், பெங்களூர் ரோஜாக்களின் மணமும், மெழுகுவர்த்திகள் வாசமும், சேப்பல் (Chapel) எனப்படும் அந்த சின்ன ஆலயம் முழுதும் கமழும்!
நடுநாயகமாக அன்னையின் திருவுருவப் படம்! மிகவும் பெரிய படம்! தஞ்சாவூர் ஓவியப் பாணியில், உள்ளே மணி, முத்து எல்லாம் ஒட்டப்பட்டு இருக்கும்! இரு புறமும் அரையாள் உயரப் பூஞ் ஜாடிகள்!

We’ll do our best, and Never will rest, For Virtus in Arduis...என்ற கோரஸ்!
அதை மூனு முறை பாடுவேன்! கூடவே அனைவரும் பாடணும்!
சின்னப் பையன் தலையைச் சிலுப்பிச் சிலுப்பி மூனு முறை பாடுவேனாம்! சென்ற முறை பள்ளிக்குச் சென்ற போது கூட, நினைவு கூர்ந்தார்கள்!
Seat of Wisdom - Pray for us!
Our Lady of Health - Pray for us!
Don Bosco - Pray for us!
என்று சொல்லி, திருப்பலி முடியும்!இந்தச் சமயத்தில் என் தமிழாசிரியர்கள்
* செஞ்சொற் கொண்டல் டேனியல் ஐயாவையும்,
* தந்தை ரோசோரியோ கிருஷ்ணராஜையும்
அடியேன் நினைவு கூர்ந்து வணங்கிக் கொள்கிறேன்!

தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியமும், நீதிநெறி இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கும்!
இவர்கள் மாற்று மதத்தினராய் இருந்தாலும் கூட, பக்தி இலக்கியப் பிரவாகத்தில் ஒரு குறையும் வைத்ததில்லை!

அதுவும் டேனியல் ஐயா பிரபந்தங்களைப் பாடியே காட்டுவாரு! அப்படியே திருமங்கை ஆழ்வார் குதிரை மேல் வருவது போலவே இருக்கும்! அப்பர் சுவாமிகள் பாட்டு பாடி, வகுப்புக்குள் பாம்பு வந்துரிச்சோ-ன்னு கூட பார்த்திருக்கேன்! :)

கிறித்துவத் தமிழ் இலக்கியம் பிற்பட்ட காலம் தான்!
ஆனாலும் முன்னிறுத்துகிறேன்-ன்னு வீம்புகள் எல்லாம் செய்யாது, இவர் ஒருவர் மட்டும் தான் தமிழர் முறைமை, அவருக்கு மட்டும் தான் தொன்மம் சொந்தம்-ன்னு எல்லாம் பேசாது....
உள்ளது உள்ளபடி தரும் பாங்கு - என்னைச் சிறு வயதிலேயே கவர்ந்தது இது தான்!

இன்றளவும் இவர்களின் பரந்த தமிழ் மனமே, பரந்து விரிந்த தமிழ் மனமே, அடியேனை வழி நடத்திக் கொண்டிருக்கு!
Daniel Ayya & Fr. Rosario Krishnaraj - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


மேரியம்மாவுக்கு வருவோம்!
சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் ஈர்த்த தெய்வ வடிவங்களுள், அன்னை வேளாங்கண்ணியின் திருமுகமும் ஒன்று!
மு.கு: அப்ப நான் கிறித்துவப் பள்ளியில் எல்லாம் படிக்க ஆரம்பிக்கல! :)

வேளாங்கண்ணி அன்னையின் மிகப் பெரும் சிறப்பு என்ன தெரியுமா மக்களே? கத்தோலிக்க ஆலயங்களில், மாதாவுக்கு மேனாட்டு முறையின் படியான ஆடை தான் அணிவித்திருப்பார்கள், இல்லை அப்படித் தான் திருச்சிலையும் வடிக்கப்பட்டு இருக்கும்!
தமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி அன்னை!

மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி!-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குச் சொல்லவும் அடியேன் தயார்! முகம் பொழி கருணை! அப்படி ஒரு கருணைக் கடாட்சமான கண்கள் அன்னையின் கண்கள்!

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, வேளாங்கண்ணிக்கு அருகில் தான் சிக்கல் என்ற சிவத்தலமும் இருக்கு! அங்கு அம்பாளின் பெயர் வேல்-நெடுங்-கண்ணி!
அது தான் திரிந்து வேளாங்கண்ணி ஆச்சுது-ன்னு ஒரு நண்பர் என்கிட்ட தீவிரமாச் சொல்லிக் கிட்டு இருப்பாரு! அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன்! அடப் பாவிங்களா! உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை! பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க! அதான்! :)

வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களில், மாற்று மதத்தினர் தான் அதிகம்! தீவிரமான மத மாற்றுப் பிரச்சாரங்கள், மயக்குமொழிகள் எல்லாம் எதுவும் செய்யவே வேணாம்!
அமைதி அமைந்தாலே போதும், தானாகவே சேவிக்க வருவார்கள் என்பதற்கு வேளாங்கண்ணியே சாட்சி! திருமுகத்தின் அமைதி ஒன்றே அன்னையை ஆயிரம் முறை காணச் சொல்லும்!

அன்னையின் திருப்பெயர் என்னவோ ஆரோக்கிய மாதா (Our Lady of Good Health) என்பது தான்! ஊரின் பெயரால் வேளாங்கண்ணி மாதா என்றே ஆகி விட்டது!
அன்னையின் முதல் தோற்றத்துக்கும் காரணம் ஒரு இந்துச் சிறுவன் தான்.
ஆயர்குலச் சிறுவன் (பால்காரப் பையன்) ஒருவன், குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்க, அவன் முன் அன்னை தோன்றினாள்!
தன் கைக்குழந்தைக்குக் கொஞ்சம் பால் தர முடியுமா என்று அவனைக் கேட்க, அவனும் தயங்காது கொடுத்து விட்டான்! பின்னர் பால் கொடுக்கும் வீட்டுக்குச் சென்று பால் ஊற்றிவிட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் அந்த இந்து முதலாளியிடம் சொன்னான். ஆனால் பானையில் எட்டிப் பார்த்தாலோ, பால் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது!

இருவரும் விடுவிடுவென்று மீண்டும் ஆலமரத்துக்கு வந்து பார்க்க, அங்கே அன்னை மீண்டும் தோன்றினாள்! அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது! போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் கடல் சூறாவளியில் இருந்து காப்பாற்றப்பட்டு, அன்னைக்கு நிரந்தரமான ஆலயம் எழுப்பினர் என்பது தான் தல வரலாறு!

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொன்கனி என்று ஏழு மொழிகளில் திருப்பலி சார்த்தப்படும் ஒரே ஆலயம் இது மட்டும் என்று தான் நினைக்கிறேன்!
மாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் - மொட்டை போடுதல், கண்மலர் சார்த்தல், உடல்மலர் சார்த்தல், அங்கப் பிரதட்சிணம் செய்தல், முட்டிபோட்டு நடத்தல் - இவை அத்தனையும் வேளாங்கண்ணிக்கும் செய்யப்படுகிறது!

மதங்களுக்கு இடையே தீ மூட்டிக் குளிர் காயும் வேதாகம/விவிலிய பண்டிதர்களும் உள்ளார்கள்.
மதங்களை இணைக்கிறோம் என்றே தெரியாமல், அன்பு ஒன்றினாலேயே மத நல்லிணக்கப் பாலம் கட்டும் பாமரர்களும் இருக்கிறார்கள்!
எளிய மக்களுக்கு அன்பு ஒன்றே வழிபாடு என்பதற்கு இந்த மாரியம்மனும், மேரியம்மனுமே சாட்சி!

(இடுகையின் சில பகுதிகள் மட்டும், அடியேன் நட்சத்திர வாரத்தில் இட்ட மாரியம்மனும் மேரியம்மனும் என்னும் இடுகையின் மீள்பதிவு)


இதோ, அன்னை திருத்தேரில் ஆடி அசைந்து வரும் அழகு!
ஆடாது அசங்காது வா அம்மா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Read more »

Thursday, September 04, 2008

இறைவனுக்குப் பிடித்தமானது - ஞானமா? கடமையா? பக்தியா? பணிவா? - 1

"ஏன்டீ பொண்ணே, சாலைக் கிணற்றில் இருந்து தண்ணி சேந்திக் கொண்டு வர இம்புட்டு நேரமா ஆகும்?"

"அதில்லீங்க அத்தை! வீட்டு வேலையெல்லாம் முடிச்சிட்டு, கிணற்றடிக்குப் போகவே சாயந்திரம் ஆயிடுது! இருட்டிய பின் தனியாக வரக் கொஞ்சம் பயமா இருக்கு!
வரும் வழியில் நாய்கள் வேறு குரைக்குது! அதான் யாராச்சும் துணைக்கு வரும் வரை காத்திருந்து, அவிங்க கூடவே வந்தேன்!"

"நல்லா இருக்கு அத்துழாய் உன் நியாயம்! ஏதோ புதுப் பொண்ணாச்சே-ன்னு பாத்தா, எப்பவும் சாக்கு போக்கு சொல்லிக்கிட்டு இருக்கியே!
வீடுன்னா வேலைகள் இருக்கத் தான் செய்யும்! நாமத் தான் திட்டமிட்டு எது எது எப்பவோ, அது அது அப்பப்ப செஞ்சிக்கிடணும்! இந்த வயசான காலத்தில் கூட நாங்கள்லாம் வேலை செய்யலை? ஏன்-னு கேட்டா மாமியார் கொடுமை-ன்னு சொல்லப் போறியா?"

"அதில்லீங்க அத்தை..."

"பதிலுக்குப் பதில் பேசாதே! உங்க வீட்டுல செல்வச் செழிப்பிலே வளர்ந்த பொண்ணுன்னா, தண்ணி இறைக்கக் கூடவே ஒரு வேலையாளைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்!
அதை விட்டுட்டு, உனக்கும் சேர்த்து நாங்களே வேலை செய்யணும்-னா எப்படி? எங்களுக்குத் தான் செய்ய வேணாம்! உனக்கும் உன் புருசனுக்கும் மட்டுமாவது செஞ்சிக்கலாம்-ல?"

தேசிகன் திருக்கிணறு

அத்தை-அத்துழாய் உரையாடல்! அத்தை சொற்களால் அர்ச்சிக்கிறாள்! அத்துழாய் பாவம் சின்ன பொண்ணு! பெரிய நம்பியின் திருமகள்!
அதுவோ புதுசாய் புகுந்த புகுந்த வீடு! எல்லாரும் நல்லவங்க தான்!
ஆனால் உள்ளதையும் சரி, உள்ளத்தையும் சரி, அன்பினால் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை! சில சமயம் சொற்கள் வெளிப்பட்டு விடுகின்றன!

அவர்கள் வீட்டில் வேண்டுமானால் அவை சாதாரண சொற்களாய் இருக்கலாம்! ஆனால் நறுக்-நறுக் வார்த்தைகள் நம்மாழ்வார் பாசுரத்தில் இல்லையே! :)
தீந்தமிழ்ப் பாசுரங்களே ஓதி ஓதி வளர்ந்த வீட்டுப் பெண்ணொருத்தி, திக்-திக் வார்த்தைகளைக் கேட்டால் என்ன செய்வாள் பாவம்! தன் அப்பா பெரிய நம்பிகளிடம் சொல்லாமல் சொல்லிக் கண் கலங்குகிறாள்!

"நம் வீட்டில் எது நடந்தாலும், அண்ணாவிடம் சொல்வது தானேம்மா வழக்கம்! போய் நம்-அண்ணாவிடம் சொல்லிக் கொள்ளேன்!"


நம்-அண்ணாவிடம் செல்கிறாள் அத்துழாய்! அது யார் நம்-அண்ணா?
நம்-ஆழ்வார் தெரியும்! அது யார் நம்-அண்ணா?
நம்-கோயில்-அண்ணன் என்று மொத்த திருவரங்கமும் உரிமை கொண்டாடிய உடையவர் தான் அந்த நம்-அண்ணா!

"அட, இதெல்லாம் குடும்ப விஷயம்! இதைப் போய் ஒரு துறவியிடம் எடுத்துக் கொண்டு வரலாமா? பேசாம நகரும்மா! வந்தோமா, சேவிச்சோமா, பிரசாதம் வாங்கினோமா, போயிக்கிட்டே இருக்கணும்!"

இப்படியெல்லாம் சீடர்களோ, சுற்றியுள்ளவர்களோ பேசக் கூட முடியாது! அப்படி ஒரு வாஞ்சையை உருவாக்கி வைத்திருந்தார் நம்-அண்ணன் இராமானுசர்! குடும்ப விஷயமும் அரங்க விஷயம் தான்! அந்தரங்க விஷயமும் அந்த-"ரங்க" விஷயம் தான் என்றே கருதும் பரம காருண்யம்!
காரேய்க் கருணை இராமானுசா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை?


"என்னம்மா...சொல்லு அத்துழாய்! நீர் இறைக்க, உங்க வீட்டிலிருந்து கூடவே ஒருவரைக் கூட்டிக்கிட்டு வந்திருக்கணும்-னா சொன்னாங்க?"

"உம்...சுவாமி!"

"முதலியாண்டான்......"

"சொல்லுங்கள் குருவே!"

"நம் அத்துழாய் பொருட்டு, இந்தத் தீர்த்தக் கைங்கர்யம் செய்ய உமக்கு விருப்பமா?"

"அடியேன்! சித்தம்!"
ஆகா...என்ன இது? முதலியாண்டான் சகல சாஸ்திர பண்டிதராச்சே! அவரைப் போய்....சேச்சே!
கோயிலில் கூட இது போன்ற வேலைகளை எல்லாம் "படிக்காத அடியார்கள்" அல்லவா செய்வார்கள்?

இவர் சொல்லின் செல்வர்! வாயைத் திறந்தால் வண்டமிழும் வடமொழியும் கொட்டுமே! இராமானுசரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவர்! இவரையா இப்படி? படிச்ச படிப்புக்கு ஒரு கெளரவம் வேண்டாம்?

ஏதோ கோயில் கைங்கர்யம்; குருவுக்கு முடியலைன்னாலும் பரவாயில்லை! போனாப் போகுது-ன்னு செஞ்சிடலாம்!
யாரோ ஒரு சம்பந்தி! அவிங்க வீட்டுக்குப் போய் தண்ணி இறைச்சிக் கொடுக்கணுமாம்! இது என்ன மானக்கேடு? இதுக்குத் தீர்த்தக் கைங்கர்யம்-னு பெத்த பேரு வேற!

ஒன்னுமில்லாதவன் எல்லாம் சும்மா நாலு வார்த்தை நயமாப் பேசிட்டு, பதின்மூன்றாம் ஆழ்வார், பதினாலாம் ஆழ்வார்-னு பட்டம் வாங்கிக்கிட்டுத் திரியறாங்க! பத்து பாசுரம் சொன்னதுக்கே மாலை மரியாதை வாங்கிக்குறாங்க! அவிங்கள இப்படிச் செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம்!

முதலியாண்டான் மறைபொருள் வித்தகர்! இவருக்கா இப்படி? உடையவர் தான் சொன்னார் என்றால் இவருக்கு எங்கே போனது புத்தி? எதிர்த்துப் பேச வேண்டாம்? ஏன் இப்படி மென்மையாகவே போகிறார்கள்? கொஞ்சம் கூடச் சரியில்லை!


(திருப்பாற்கடலில் வாயிற் காத்தருளும் ஜய விஜயர்களோடு உரையாடிக் கொண்டு இருக்கிறார் ஒருவர்...)
"என்னப்பா, ஜய-விஜயா,......நானும் வேதம் எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சு! யாரும் எதுவும் கேட்கிறா மாதிரி தெரியலை! நானே சென்று நடந்து காட்டினால் தான் மக்கள் கேட்பாங்க போல! செல்லப் போகிறேன்! என்னுடன் வருகிறீர்களா?"

"சுவாமி...நாங்கள் பரிபூர்ண சரணாகதி செய்தவர்கள் ஆயிற்றே! சரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்ற தங்கள் வாக்கு பொய்யாகலாமா?
நாங்கள் மீண்டும் பிறவி எடுத்தால், செய்த சரணாகதிக்கு ஏது மதிப்பு?
நீங்கள் ஆணையிட்டால் நாங்கள் இங்கேயே இருக்கவே பிரியப்படுகிறோம்!"

(கருமுகில் முகம் இன்னும் சற்றே கருக்கிறது...)

"சுவாமி...தங்கள் முகம் மாறலாமா? சரி, நாங்கள் உம்முடனேயே வருகிறோம்!"

"கடனே என்று சொல்ல வேண்டாம்! யோசித்துச் சொல்லுங்கள்! மேலும்....,
என்னுடன் உங்களை அழைத்துச் சென்றால், கதையில் நீங்கள் வில்லன்களாகத் தான் வருவீர்கள்! ஆத்திகர்கள் அத்தனை பேரும் உங்களை வசைபாடுவார்கள்! திட்டித் தீர்ப்பார்கள்! நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்!"

"சுவாமி, ஆத்திகர்கள் எங்களை வசைபாடுவார்களா? அதற்கா நாங்கள் பிறவி எடுக்க வேண்டும்? உம்மிடம் சரணாகதி செய்த எங்களுக்கு, இது தானா நீங்கள் செய்யும் உபகாரம்?

ஆத்திகர்கள் வசைபாடினால் கூடப் பரவாயில்லை!
ஆனால் உங்களை எதிர்த்தோம் என்ற ஒரே காரணத்திற்காக நாத்திகர்கள் எங்களைக் கொண்டாடுவார்களே! ஐயகோ!
"


* முதலியாண்டான் சென்றாரா? ஜய-விஜயர்கள் சென்றார்களா?
* ஏன் செல்ல வேண்டும்? எதற்குச் செல்ல வேண்டும்?
* "என்" தகுதிக்கு இதெல்லாம் ஒத்து வருமா?
* "என்" ஞானம், "என்" கர்மம், "என்" பக்தி - இதெல்லாம் "என்"னாவது?
"நான்" செய்த இதுக்கெல்லாம் மதிப்பில்லையா?

(அடுத்த பதிவில்....)
Read more »

Wednesday, September 03, 2008

பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்தான் அனுமன்!

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்சு போச்சுடா-ன்னு வழக்கத்தில் சொல்லக் கேட்டிருப்பீங்க! "நல்ல நோக்கத்தில் தான் இந்த வேலையைத் தொடங்கினேன்! ஆனால் கடைசியில் முடிஞ்சதென்னவோ வேற மாதிரி!" - இப்படிச் சொல்வதற்குத் தானே இந்தப் பழமொழியைப் பயன்படுத்தறாங்க, இப்பல்லாம்?

பிள்ளையார் சிலை பண்ணலாம்-னு தான் களிமண்ணைத் திரட்டி, உருட்டி ஆரம்பிச்சேன்!
ஆனால் கடைசியா வந்து நின்னதென்னவோ பிள்ளையார் உருவம் இல்லைப்பா! போயும் போயும் ஒரு குரங்கு உருவம்!
நல்ல நோக்கத்தில் தான் வலைப்பூ தொடங்கினேன்! ஆனால் அடிக்கப்பட்ட கும்மியில், கடைசியில் வந்து நின்னதென்னவோ வேற மாதிரி தான்! - இப்படி யாராச்சும் ஃபீல் பண்ணி இருக்கீங்களா மக்களே? ஹா ஹா ஹா :))

சரி...
அதென்ன பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காக முடிந்த கதை? அப்படி ஒரு கதை நிஜமாலுமே இருக்கா என்ன?
கேட்டா, நொந்து, நூலாகி, நூடுல்ஸ் ஆயிருவீங்க! அப்படி ஒரு பழமொழியே இல்லை!
நம்ம மக்கள் அடிச்ச கும்மியில், நல்ல பழமொழி ஒன்று, வேற மாதிரி ஆகிவிட்டது! :)
சமய ஒற்றுமை சொல்ல வந்த பழமொழி, சலசலத்துப் போய் வேறு மாதிரி ஆகிவிட்டது!

உண்மையான வாசகம் என்னவென்றால்...
பிள்ளையார் "பிடித்து" குரங்கில் "முடித்த" கதை!

எந்த ஒரு செயல் துவங்கினாலும், யாரை வணங்க வேண்டும்? அது உங்களுக்கே தெரியும்! -பிள்ளையார்!
அதே போல் எந்த ஒரு செயலை முடிக்கும் போது, யாரை வணங்க வேண்டும்? தெரியுமா? -அனுமன்!
ஏன் இப்படி? பார்ப்போம் வாருங்கள்!


சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! எத்தனை பேர் பார்த்து இருக்கீங்க? கை தூக்குங்க பார்ப்போம்! ஆனந்த விநாயகர்! வேங்கடானந்த விநாயகர் என்பது சுவாமியின் திருநாமம்!
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை! ஆதி+அந்தம்+பிரபு = ஆத்யந்தப் பிரபு
அதாச்சும், பாதி பிள்ளையார்-பாதி அனுமன் என்ற ஒரு திருவுருவச் சிலையை இங்கே காணலாம்! இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து! இதுவே ஆதியந்த ஸ்வாமி!

* எந்த ஒரு செயல் துவங்கினாலும், பிள்ளையாரை வணங்கிச் செய்வது வழக்கம்! விக்கினங்கள்/தடைகள் இன்றி செவ்வனே நடைபெற!
பிரணவம் தானே மூலாதாரம்! அங்கிருந்து தானே எந்த மந்திரமும் துவக்கம்! அதான் முதலில் பிள்ளையார் பூஜை!

* அதே போல் அந்தச் செயல் முடிக்கும் போது, அனுமனைத் துதித்து முடிப்பது வழக்கம்! நன்றி தெரிவித்துக் கொள்ள!
எப்பேர்ப்பட்ட செயலையும் செய்து விட்டு, நன்றி ஒன்றைக் கூட எதிர்பாராது இருப்பவரிடம் சொல்லும் நன்றி மிகப் பெரிதல்லவா! அதான் இறுதியில் அனுமத் பூஜை!

மத்திய கைலாசத்தில் ஆத்யந்த சுவாமி!

பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்!
முதலில் "மகா கணபதிம்" என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, "ராமச்சந்த்ராய ஜனக" என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு!
பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!


* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின ரூபம் கொண்டவர்கள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள்! - யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும்! எதிர்த்து செங்குத்தாய் நடக்காது! அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறித் "தான்" என்று எழுந்து நடக்காது!
அதே போல் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் இருவரும்! ஆனால் நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
அவருக்கு ஆற்றங்கரை கூட இடம் தான்! மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! இவருக்கோ தூண் கூட இடம் தான்! விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!

* வடநாட்டிலும் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!

* நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!

* எம்பெருமான் கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!

* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!

* பிள்ளையாரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "கம்"; ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = "ஹம்"! கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.


பொதுவாகச் செயல் துவங்கும் முன்னர் விநாயகரை வணங்குதல் எல்லாருக்கும் தெரியும்! ஆனால் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை! அதான் அடியேன் இங்கு சொல்லி வைத்தேன்!
இராமாயணத்திலும், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான்! நன்றி சொல்லி மாளுமா நன்றி ஒன்று வேண்டாதானிடம்?

பிரணவ மந்திரம் ஓதி, ஜீவன் மண்ணுக்கு வருகிறது! - அது ஐங்கர (விநாயக) சொரூபம்!
அனுமனின் ராம மந்திரம் ஓதி, ஜீவனை மண்ணில் இருந்து அனுப்புகிறார் காசி நகர் ஈசன்! - அது அனுமத் சொரூபம்!
ஆதியில் தொடங்கி, அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி! அடுத்த முறை சென்னை மத்திய கைலாசத்தில் தரிசியுங்கள்!

இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!
ஆதியில் பிடித்து அந்தத்தில் முடித்த கதை!
இனி பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காய் முடிஞ்சி போச்சி-ன்னு சொல்லாதீங்க! :)

அனைத்து நண்பர்களுக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்!

1. கொழுக்கட்டைகள் பெற வேண்டுமென்றால் நேற்றே இந்தப் பதிவை இட்டிருக்கணும்! ஆனால் வாரயிறுதி அலைச்சலில், காய்ச்சல் பிடித்துக் கொண்டது போல! இன்று அலுவலகத்தில் இருந்து மதியமே வந்து, பதிவை எழுதிட்டு, இதோ சீக்கிரமே தூங்கச் செல்கிறேன்! :)

2. வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டதால், ரோமாயணம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை! தசாவதாரம் போல் தள்ளிக் கொண்டே போகிறது! Sorry! :)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP