Sunday, September 07, 2008

வேளாங்கண்ணியம்மன் பிறந்தநாள்: ஆடாது அசங்காது வா அம்மா!

பள்ளியில் படிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர்-8 அன்று விசேடமாக மேடையில் ஏற்றப்படுவேன்! பலி கொடுப்பதற்காக!
அட, நீங்க ஒன்னு! அவசரப்பட்டு சந்தோஷப் பட்டுக்காதீங்க! என்னைக் களப்பலி கொடுக்க இது என்ன மகாபாரதப் போரா? அடியேன் சொல்வது புனித ஆரோக்கிய அன்னையின் திருவவதார நாள் திருப்பலி - Our Lady of Good Health, Birthday Mass!

பொதுவாகத் திருப்பலியில் கத்தோலிக்க மாணவர்கள் தான் கலந்து கொள்வர். பலியின் முடிவில் அவர்களுக்கு அப்பமும், திராட்சை ரசமும் பிரசாதிக்கப்படும்! ஆனால் பங்குத் தந்தை. ரோசாரியோ கிருஷ்ணராஜ், கீதங்கள் பாடுவதற்கென்றே மேடையில் இருக்கச் சொல்லுவார்...அப்பாவிச் சிறுவனான என்னை மட்டும்! :)

மாசறு மாதா வருக! இளங் குமரனின் தாயே,
காசறு மரியே வருக! கருணையைப் பொழிக!
-
ன்னு பாடும் போது, மக்கள் முகமெல்லாம் மலர்ச்சி! தேவர் மகன் படத்தில் வரும் பாட்டின் மெட்டு!


முந்தைய நாள் மாலை, நானும் ஃபாதரும், அசெம்ப்ளி ஹாலின் பெரிய பியானோவின் பக்கம் உட்கார்ந்து கொண்டு, விதம் விதமாக ட்யூன் போடுவோம்! அவர் வெஸ்டர்ன் நோட்ஸில் ஏதேதோ குறியீடுகளில் எழுதுவார்!
பின்பு ஏற்றி இறக்கிச் சொல்லிக் கொடுப்பார்! அதை நான் பாடிக் காட்டும் போது, பாதி கர்நாடக/தமிழிசையாக மாறி இருக்கும்! :)

உடனே எனக்கும் அவருக்கும் சண்டை தான் வரும்! அது என்னமோ தெரியவில்லை; நான் செல்லும் இடங்களில் எல்லாம், எனக்குன்னு ராமா-ன்னோ, கிருஷ்ணா-ன்னோ ஒருத்தர் அமைந்து விடுகிறார்கள்! அவர்களுடன் சண்டையும் வந்து விடுகிறது! :)

Fr. ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்களுக்கு என் மேல் அலாதிப் பிரியம்! அவருக்கு வரும் வெளிநாட்டுக் கடிதங்களின் தபால்தலை எல்லாம் எனக்குத் தான் தருவார்! கிராமத்தில் இருந்து வந்த எனக்கு வெட்கம்/அச்சம் நீக்கி, பல ஆக்கப்பூர்வமான விடயங்களைச் சொல்லிக் கொடுத்தவரும் அவரே!


மரியன்னை திருப்பலியில்.....சாம்பிராணி மணமும், பெங்களூர் ரோஜாக்களின் மணமும், மெழுகுவர்த்திகள் வாசமும், சேப்பல் (Chapel) எனப்படும் அந்த சின்ன ஆலயம் முழுதும் கமழும்!
நடுநாயகமாக அன்னையின் திருவுருவப் படம்! மிகவும் பெரிய படம்! தஞ்சாவூர் ஓவியப் பாணியில், உள்ளே மணி, முத்து எல்லாம் ஒட்டப்பட்டு இருக்கும்! இரு புறமும் அரையாள் உயரப் பூஞ் ஜாடிகள்!

We’ll do our best, and Never will rest, For Virtus in Arduis...என்ற கோரஸ்!
அதை மூனு முறை பாடுவேன்! கூடவே அனைவரும் பாடணும்!
சின்னப் பையன் தலையைச் சிலுப்பிச் சிலுப்பி மூனு முறை பாடுவேனாம்! சென்ற முறை பள்ளிக்குச் சென்ற போது கூட, நினைவு கூர்ந்தார்கள்!
Seat of Wisdom - Pray for us!
Our Lady of Health - Pray for us!
Don Bosco - Pray for us!
என்று சொல்லி, திருப்பலி முடியும்!இந்தச் சமயத்தில் என் தமிழாசிரியர்கள்
* செஞ்சொற் கொண்டல் டேனியல் ஐயாவையும்,
* தந்தை ரோசோரியோ கிருஷ்ணராஜையும்
அடியேன் நினைவு கூர்ந்து வணங்கிக் கொள்கிறேன்!

தமிழ் இலக்கியத்தில், பக்தி இலக்கியமும், நீதிநெறி இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கும்!
இவர்கள் மாற்று மதத்தினராய் இருந்தாலும் கூட, பக்தி இலக்கியப் பிரவாகத்தில் ஒரு குறையும் வைத்ததில்லை!

அதுவும் டேனியல் ஐயா பிரபந்தங்களைப் பாடியே காட்டுவாரு! அப்படியே திருமங்கை ஆழ்வார் குதிரை மேல் வருவது போலவே இருக்கும்! அப்பர் சுவாமிகள் பாட்டு பாடி, வகுப்புக்குள் பாம்பு வந்துரிச்சோ-ன்னு கூட பார்த்திருக்கேன்! :)

கிறித்துவத் தமிழ் இலக்கியம் பிற்பட்ட காலம் தான்!
ஆனாலும் முன்னிறுத்துகிறேன்-ன்னு வீம்புகள் எல்லாம் செய்யாது, இவர் ஒருவர் மட்டும் தான் தமிழர் முறைமை, அவருக்கு மட்டும் தான் தொன்மம் சொந்தம்-ன்னு எல்லாம் பேசாது....
உள்ளது உள்ளபடி தரும் பாங்கு - என்னைச் சிறு வயதிலேயே கவர்ந்தது இது தான்!

இன்றளவும் இவர்களின் பரந்த தமிழ் மனமே, பரந்து விரிந்த தமிழ் மனமே, அடியேனை வழி நடத்திக் கொண்டிருக்கு!
Daniel Ayya & Fr. Rosario Krishnaraj - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


மேரியம்மாவுக்கு வருவோம்!
சிறு வயதில் இருந்தே என்னை மிகவும் ஈர்த்த தெய்வ வடிவங்களுள், அன்னை வேளாங்கண்ணியின் திருமுகமும் ஒன்று!
மு.கு: அப்ப நான் கிறித்துவப் பள்ளியில் எல்லாம் படிக்க ஆரம்பிக்கல! :)

வேளாங்கண்ணி அன்னையின் மிகப் பெரும் சிறப்பு என்ன தெரியுமா மக்களே? கத்தோலிக்க ஆலயங்களில், மாதாவுக்கு மேனாட்டு முறையின் படியான ஆடை தான் அணிவித்திருப்பார்கள், இல்லை அப்படித் தான் திருச்சிலையும் வடிக்கப்பட்டு இருக்கும்!
தமிழ் முறையின் படி, சேலை அணிவித்துக் காட்சி தரும் மாதாவின் உருவம் வேளாங்கண்ணி அன்னை!

மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி!-ன்னு முருகப் பெருமான் மேல் இருக்கும் பாட்டை அப்படியே வேளாங்கண்ணிக்குச் சொல்லவும் அடியேன் தயார்! முகம் பொழி கருணை! அப்படி ஒரு கருணைக் கடாட்சமான கண்கள் அன்னையின் கண்கள்!

இதுல இன்னொரு சிறப்பு என்னன்னா, வேளாங்கண்ணிக்கு அருகில் தான் சிக்கல் என்ற சிவத்தலமும் இருக்கு! அங்கு அம்பாளின் பெயர் வேல்-நெடுங்-கண்ணி!
அது தான் திரிந்து வேளாங்கண்ணி ஆச்சுது-ன்னு ஒரு நண்பர் என்கிட்ட தீவிரமாச் சொல்லிக் கிட்டு இருப்பாரு! அவர் சொல்லும் போதெல்லாம் நான் பலமாச் சிரிச்சிக்குவேன்! அடப் பாவிங்களா! உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை! பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க! அதான்! :)

வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களில், மாற்று மதத்தினர் தான் அதிகம்! தீவிரமான மத மாற்றுப் பிரச்சாரங்கள், மயக்குமொழிகள் எல்லாம் எதுவும் செய்யவே வேணாம்!
அமைதி அமைந்தாலே போதும், தானாகவே சேவிக்க வருவார்கள் என்பதற்கு வேளாங்கண்ணியே சாட்சி! திருமுகத்தின் அமைதி ஒன்றே அன்னையை ஆயிரம் முறை காணச் சொல்லும்!

அன்னையின் திருப்பெயர் என்னவோ ஆரோக்கிய மாதா (Our Lady of Good Health) என்பது தான்! ஊரின் பெயரால் வேளாங்கண்ணி மாதா என்றே ஆகி விட்டது!
அன்னையின் முதல் தோற்றத்துக்கும் காரணம் ஒரு இந்துச் சிறுவன் தான்.
ஆயர்குலச் சிறுவன் (பால்காரப் பையன்) ஒருவன், குளக்கரையில் உள்ள ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருக்க, அவன் முன் அன்னை தோன்றினாள்!
தன் கைக்குழந்தைக்குக் கொஞ்சம் பால் தர முடியுமா என்று அவனைக் கேட்க, அவனும் தயங்காது கொடுத்து விட்டான்! பின்னர் பால் கொடுக்கும் வீட்டுக்குச் சென்று பால் ஊற்றிவிட்டு, பால் குறைந்ததற்கான காரணத்தையும் அந்த இந்து முதலாளியிடம் சொன்னான். ஆனால் பானையில் எட்டிப் பார்த்தாலோ, பால் பொங்கித் தளும்பிக் கொண்டிருந்தது!

இருவரும் விடுவிடுவென்று மீண்டும் ஆலமரத்துக்கு வந்து பார்க்க, அங்கே அன்னை மீண்டும் தோன்றினாள்! அவள் தோன்றிய மாதா குளம் இன்றும் உள்ளது! போர்த்துகீசிய மாலுமிகள் சிலர் கடல் சூறாவளியில் இருந்து காப்பாற்றப்பட்டு, அன்னைக்கு நிரந்தரமான ஆலயம் எழுப்பினர் என்பது தான் தல வரலாறு!

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொன்கனி என்று ஏழு மொழிகளில் திருப்பலி சார்த்தப்படும் ஒரே ஆலயம் இது மட்டும் என்று தான் நினைக்கிறேன்!
மாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் - மொட்டை போடுதல், கண்மலர் சார்த்தல், உடல்மலர் சார்த்தல், அங்கப் பிரதட்சிணம் செய்தல், முட்டிபோட்டு நடத்தல் - இவை அத்தனையும் வேளாங்கண்ணிக்கும் செய்யப்படுகிறது!

மதங்களுக்கு இடையே தீ மூட்டிக் குளிர் காயும் வேதாகம/விவிலிய பண்டிதர்களும் உள்ளார்கள்.
மதங்களை இணைக்கிறோம் என்றே தெரியாமல், அன்பு ஒன்றினாலேயே மத நல்லிணக்கப் பாலம் கட்டும் பாமரர்களும் இருக்கிறார்கள்!
எளிய மக்களுக்கு அன்பு ஒன்றே வழிபாடு என்பதற்கு இந்த மாரியம்மனும், மேரியம்மனுமே சாட்சி!

(இடுகையின் சில பகுதிகள் மட்டும், அடியேன் நட்சத்திர வாரத்தில் இட்ட மாரியம்மனும் மேரியம்மனும் என்னும் இடுகையின் மீள்பதிவு)


இதோ, அன்னை திருத்தேரில் ஆடி அசைந்து வரும் அழகு!
ஆடாது அசங்காது வா அம்மா!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

34 comments:

 1. மாதாவின் பெருமையை மிகச் சிறப்பாக சொன்ன உங்கள் பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் சில‌ த‌க‌வ‌ல்க‌ள்:

  வேளாங்கண்ணிக்கு வரும் பிற மதத்தவர்களை, கிறிஸ்தவர்களாக மாற்றும் எந்த முயற்சியும் அங்கு நடைபெறுவதில்லை, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் தீவிரம் காட்டுவதேயில்லை. பிற மதத்தோர் திவ்ய நற்கருணை விருந்தில் பங்குபெற வேண்டாம் என்ற வேண்டுகோளைத் தவிர வேறெந்த பாகுபாடும் பிறமதத்தவர்களுக்கு அங்கு இல்லை.

  நீங்க‌ள் குறிப்பிட்ட‌து போல் வேளாங்க‌ண்ணியில் ம‌ட்டுமில்லை, பூண்டி மாதா கோயில், ஏலாக்குறிச்சி என‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் மாதா சுருப‌ம் த‌மிழ் க‌லாச்சார‌ உடைக‌ளில் தான் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

  க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ம் உல‌க‌ம் எங்கும் ப‌ர‌விய‌த‌ற்கு முத‌ற் கார‌ண‌ம் அந்த‌ந்த‌ பிராந்திய‌ மொழிக‌ளை ஏற்றுக்கொண்டு, ஆங்காங்கு உள்ள‌ க‌லாச்சார‌ங்க‌ளையும் ஏற்றுக்கொள்வ‌துதான். முத‌லில் எல்லா இட‌ங்க‌ளிலும் கிறிஸ்த‌வ‌ வ‌ழிபாடு ல‌த்தீன் மொழியில்தான் இருந்த‌தாம். பின்ன‌ர் எல்லா மொழிக‌ளுக்கும் மொழிபெய‌ர்ப்பு செய்துள்ள‌ன‌ர். இத‌னால் நாம் சொல்லும் செப‌ம் என்ன‌ என்ப‌தன் அர்த்த‌ம் புரிந்து சொல்ல‌ முடிகின்ற‌து, பொதும‌க்க‌ளின் ப‌ங்க‌ளிப்பும் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ வ‌ழிபாடுக‌ளில் இருக்கும்.

  ReplyDelete
 2. அனைவருக்கும் அன்னையின் திருவிழா வாழ்த்துகள்!

  பதிவுக்கு நன்றி!

  ReplyDelete
 3. விளையும் பயிர் முளையிலேன்னு சும்மாவா சொன்னாங்க :) வேளாங்கண்ணியில இருந்தா என்ன, வேற்காட்டுல இருந்தா என்ன? அம்மா அம்மாதானே. அருமையாக பதிஞ்சிருக்கீங்க, வழக்கம் போல. அன்னையின் அருள் அனைவருக்கும் சிறக்கட்டும்.

  ReplyDelete
 4. PRAYERS TO MADHA. SEEKING HER BLESSINGS ON SEPTEMBER 8TH.

  ReplyDelete
 5. அன்னை மேரியின் அழகுபுகழை அற்புதமாகச் சொற்களில் வடித்திருக்கிறீர்கள் ரவி!

  எனையாளும் மேரி மாதா
  துணை நீயே மேரிமாதா- என்றும்
  துணை நீயே மேரி மாதா

  என்னும் மிஸ்ஸியம்மா திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது!

  அனைவர்க்கும் மேரியம்மாவின் அருள் நிறையட்டும்!

  ReplyDelete
 6. அட எங்க பக்கத்து ஊரு மேரியம்மா,

  பலதடவை சென்று இருக்கிறேன்.

  ReplyDelete
 7. புதிய தகவல்கள் பல அறியத் தந்திருக்கிறீர்கள். நன்றி!

  நான் ஐந்தாம் வகுப்பு வரையில் கிறிஸ்துவ பள்ளிதான்.

  ReplyDelete
 8. அன்பு இரவியாரே,

  இப்போதுதான் தேவ மாதவின் பிறந்த நாள் என்று ஒரு பதிவு எழுதி வலைச்சரத்தில் பதிவிட்டு விட்டு தமிழ்மணம் வந்தேன் தங்கள் பதிவைக் கண்டேன்.

  மேரியம்மனே மாரியம்மன் அருமை அருமை.

  ReplyDelete
 9. ஒரு முறைதான் சென்றுள்ளேன் மனதை விட்டு நீங்காத முகம் மாதாவுக்கு !
  மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு இடமான நாகூரும் அருகிலேயே உள்ளது.
  பதிவுக்கு நன்றி
  ஷோபா

  ReplyDelete
 10. பல முறை போயிட்டு வந்திருக்கேன் வேளாங்கண்ணிக்கு, ரொம்ப நன்றி பதிவுக்கும், திரும்ப நினைவூட்டியதற்கும், இன்று தேவமாதா பிறந்த நாள் என்று நாட்காட்டியில் பார்த்தப்போவே உங்களைத் தான் நினைச்சேன், பதிவு போட்டிருப்பீங்கனு!

  ReplyDelete
 11. நானும் வணங்கிக்கொள்கிறேன். என் தந்தை வரைந்த தேவ மாதா படங்கள் இன்றும் மதுரை பசுமலை சர்சில் வைக்கப்பட்டிருக்கிறது

  ReplyDelete
 12. //ஜோசப் பால்ராஜ் said...
  மேலும் சில‌ த‌க‌வ‌ல்க‌ள்://

  நன்றி அண்ணாச்சி.

  //பிற மதத்தோர் திவ்ய நற்கருணை விருந்தில் பங்குபெற வேண்டாம் என்ற வேண்டுகோளைத் தவிர வேறெந்த பாகுபாடும் பிறமதத்தவர்களுக்கு அங்கு இல்லை//

  உண்மை தான்.
  நற்கருணை விருந்தில் கூட, கலந்து கொள்ள தடை சொல்ல மாட்டார் ஃபாதர். அப்பம் பிரசாதிப்பது மட்டுமே வேண்டாம் என்று சொல்லுவார்.

  //நீங்க‌ள் குறிப்பிட்ட‌து போல் வேளாங்க‌ண்ணியில் ம‌ட்டுமில்லை, பூண்டி மாதா கோயில்//

  தஞ்சை-திருக்காட்டுப்பள்ளி அருகே இருக்கும் பூண்டி மாதாவைத் தானே சொல்றீங்க?

  //ஏலாக்குறிச்சி என‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் மாதா சுருப‌ம் த‌மிழ் க‌லாச்சார‌ உடைக‌ளில் தான் அல‌ங்க‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கும்//

  முந்தைய பதிவில் ஜோ-வும் இதைக் குறிப்பிட்டிருந்தார்!

  //அந்த‌ந்த‌ பிராந்திய‌ மொழிக‌ளை ஏற்றுக்கொண்டு, ஆங்காங்கு உள்ள‌ க‌லாச்சார‌ங்க‌ளையும் ஏற்றுக்கொள்வ‌துதான்//

  உண்மை! இதே போக்கினை தமிழ்ச் சமயங்களில் வைணவத்திலும் காணலாம்!

  //முத‌லில் எல்லா இட‌ங்க‌ளிலும் கிறிஸ்த‌வ‌ வ‌ழிபாடு ல‌த்தீன் மொழியில்தான் இருந்த‌தாம். பின்ன‌ர் எல்லா மொழிக‌ளுக்கும் மொழிபெய‌ர்ப்பு செய்துள்ள‌ன‌ர்//

  அருமை!

  //இத‌னால் நாம் சொல்லும் செப‌ம் என்ன‌ என்ப‌தன் அர்த்த‌ம் புரிந்து சொல்ல‌ முடிகின்ற‌து, பொதும‌க்க‌ளின் ப‌ங்க‌ளிப்பும் கிறிஸ்த‌வ‌ ம‌த‌ வ‌ழிபாடுக‌ளில் இருக்கும்//

  சத்தியமான வார்த்தை சொன்னீங்க ஜோசப் அண்ணாச்சி!
  இதைத் தான் தமிழ் அர்ச்சனை பதிவிலும் சொல்லி இருந்தேன்!
  மக்கள் மேம்படத் தான் சமயம், சமயம் மேம்பட மக்கள் இல்லை! இதைப் புரிந்து கொண்டால் தமிழ் அர்ச்சனைக்கு இத்துணை தயக்கம் காட்ட மாட்டார்கள்!

  பைபிள் வாசிப்பில் பல இடங்களில் இந்திய மெய்யியல் கோட்பாடுகளைக் கண்டுள்ளேன்! அதிலும் கிறித்துவம், வைணவம் இரண்டிற்கும் பல தத்துவ ஒற்றுமைகள் - சரணாகதி உட்பட!

  நானே வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்றால் நானே காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறேன் என்பான் கண்ணன்!

  அத்வைத, துவைத மற்றும் இதர தத்துவங்களை விளக்கும் $$$ பதிவுகளில், கிறித்துவத்தையும் தொட்டுச் செல்ல எண்ணியுள்ளேன்!

  ReplyDelete
 13. //ஜோ / Joe said...
  அனைவருக்கும் அன்னையின் திருவிழா வாழ்த்துகள்!
  பதிவுக்கு நன்றி!//

  நன்றி ஜோ அண்ணே!
  அன்னையின் திருநாமத்தைப் பார்த்த மாத்திரத்தில் நீங்க வராம இருப்பீங்களா என்ன? :)

  ReplyDelete
 14. //கவிநயா said...
  விளையும் பயிர் முளையிலேன்னு சும்மாவா சொன்னாங்க :)//

  ஹா ஹா
  அடியேன் சாதாரண கம்பங்காட்டுப் பயிர் அக்கா. சும்மா முளைக்கும்!

  //வேளாங்கண்ணியில இருந்தா என்ன, வேற்காட்டுல இருந்தா என்ன? அம்மா அம்மாதானே//

  அதே அதே!
  தாயிற் சிறந்தொரு கோயில் இல்லை!
  கருவறையோ, ஆல்டரோ - தாய் இருக்கும் இடம் தானே கோயில்!

  ReplyDelete
 15. //வல்லிசிம்ஹன் said...
  PRAYERS TO MADHA. SEEKING HER BLESSINGS ON SEPTEMBER 8TH.//

  மாதாவுக்குப் பிரார்த்தனை உண்டியலில் இப்படித் தான் எழுதிப் போடுவோம் வல்லியம்மா! அது போலவே எழுதி இருக்கீங்க!

  ReplyDelete
 16. //VSK said...
  அன்னை மேரியின் அழகுபுகழை அற்புதமாகச் சொற்களில் வடித்திருக்கிறீர்கள் ரவி!//

  நன்றி SK!

  //எனையாளும் மேரி மாதா
  துணை நீயே மேரிமாதா- என்றும்
  துணை நீயே மேரி மாதா//

  அருமையான பாடல்...
  கண்ணன் பாட்டு, முருகனருள் போல அன்னை மரியின் பாடல்கள் வலைப்பூ இணையத்தில் யாரேனும் பதிகிறார்களா தெரியுமா?

  //அனைவர்க்கும் மேரியம்மாவின் அருள் நிறையட்டும்!//

  ததாஸ்து!
  ஆமென்
  அப்படியே ஆகட்டும்!

  ReplyDelete
 17. // கோவி.கண்ணன் said...
  அட எங்க பக்கத்து ஊரு மேரியம்மா,
  பலதடவை சென்று இருக்கிறேன்.//

  உங்கூரு, நாகை சிவா ஊரு! வடுவூர் அண்ணன் ஊரு!
  எத்தினி பேருப்பா கடல் கத்தும் நாகையில் இருந்து!! :)

  ReplyDelete
 18. //Sridhar Narayanan said...
  நான் ஐந்தாம் வகுப்பு வரையில் கிறிஸ்துவ பள்ளிதான்//

  சூப்பரு!
  தோத்திரம் சொல்லுங்க அண்ணாச்சி! :)

  பள்ளியில் சொன்னது:

  Our Father in Heaven!
  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!

  Holy be your Name!
  நாமன் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

  Your kingdom come.
  என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாம்

  Your will be done.
  குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!

  On Earth as in Heaven!
  வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்!

  Give us today our daily bread.
  இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

  Forgive us our sins
  எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!

  As we forgive those who sin against us!
  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!

  Do not bring us to the test
  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

  But deliver us from evil.
  தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!

  Seat of Wisdom - Pray for us.
  Our Lady of health - Pray for us.
  Don Bosco - Pray for us.

  ReplyDelete
 19. //Kailashi said...
  அன்பு இரவியாரே,//

  கைலாஷி ஐயா
  என்ன இது? பேர் சொல்லியே கூப்பிடுங்க! KRS இல்லீன்னா ரவி!

  //மேரியம்மனே மாரியம்மன் அருமை அருமை//

  அவள் அருள் மாரி! இவள் அருள் மேரி! பேரில் கூட என்ன ஒற்றுமை பாருங்கள்!

  ReplyDelete
 20. //Shobha said...
  ஒரு முறைதான் சென்றுள்ளேன் மனதை விட்டு நீங்காத முகம் மாதாவுக்கு !//

  eggjactly!
  நம்மைக் கருணையோடு பார்க்கும் முகம் ஷோபாக்கா!

  //மத நல்லிணக்கத்திற்கு மற்றொரு இடமான நாகூரும் அருகிலேயே உள்ளது//

  நாகூர் தர்கா ஓரிரு முறை தான் சென்றுள்ளேன்! வேளாங்கண்ணி தான் பல முறை! கடற்கரையும் ஒரு காரணம்! :)

  ReplyDelete
 21. //கீதா சாம்பசிவம் said...
  இன்று தேவமாதா பிறந்த நாள் என்று நாட்காட்டியில் பார்த்தப்போவே உங்களைத் தான் நினைச்சேன், பதிவு போட்டிருப்பீங்கனு!//

  ஆகா!
  நன்றி கீதாம்மா!
  வீட்டில் அம்மாவும் படையல் வைப்பாங்க!

  ReplyDelete
 22. // மதுரையம்பதி said...
  நானும் வணங்கிக்கொள்கிறேன். என் தந்தை வரைந்த தேவ மாதா படங்கள் இன்றும் மதுரை பசுமலை சர்சில் வைக்கப்பட்டிருக்கிறது//

  சூப்பர் மெளலி அண்ணா
  அப்பா படங்கள் தான் நான் நேராகப் பார்த்தேனே! Digitize பண்ணி வையுங்க!

  ReplyDelete
 23. //அடப் பாவிங்களா! உங்களுக்கு என்ன தாண்டா வேணும்-னு அப்பவெல்லாம் எனக்குக் கேட்கத் தெரியலை! பதிவெழுத ஆரம்பிக்கலை பாருங்க! அதான்! :)//
  இதற்கு பெயர் தான் உள்குத்தா : )

  //மாரியம்மனுக்குச் செய்யும் வழிபாடுகள் //
  உப்பு மிளகு காணிக்கை அளித்தல். தென்னங்கன்று அளித்தல் ஆகியவையும் உண்டு

  ReplyDelete
 24. //புருனோ Bruno said...//

  வாங்க டாக்டர்!

  //இதற்கு பெயர் தான் உள்குத்தா : )//

  இந்தக் குத்துக்கு எதாச்சும் மருந்து இருக்கா டாக்டர்? :)

  //
  உப்பு மிளகு காணிக்கை அளித்தல். தென்னங்கன்று அளித்தல் ஆகியவையும் உண்டு//

  சூப்பர்! குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி! தோல் வியாதிகளுக்கு உப்பு மிளகு போடுவது கிராமத்து மக்கள் பழக்கம்!

  ReplyDelete
 25. //Our Father in Heaven!
  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!
  //

  அட இதைத்தான் நாங்க தினமும் பிரேயர் சொல்லுவோம். என்ன எல்லாரும் சேந்து சொல்லும்போது வார்த்தைகள் எல்லாம் சரியா விளங்காது. ஆனா சரியா அந்த மீட்டரில் சொல்லிடுவோம் :-)

  ReplyDelete
 26. //அட இதைத்தான் நாங்க தினமும் பிரேயர் சொல்லுவோம். என்ன எல்லாரும் சேந்து சொல்லும்போது வார்த்தைகள் எல்லாம் சரியா விளங்காது. ஆனா சரியா அந்த மீட்டரில் சொல்லிடுவோம் :-)//

  ஹா ஹா, எதைச் சொல்லுவீங்க?
  Our Father in Heaven!-ஆ
  அல்லது
  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!-ஆ? :))

  நான் சும்மா இப்போ ஆண்டாள் Equivalent போட்டேன்! பள்ளியில் Our Father in Heaven - தான்! :)

  ReplyDelete
 27. ராமான்னோ கிருஷ்ணான்னோ இதே பேருல அமைஞ்சிருக்காங்களா? இல்ல அந்த ரெண்டு பேரோட வேற பேருல அமைஞ்சிருக்காங்களா? :-)

  -----

  சிறுவயதில் பெற்றோருடன் சென்று அன்னையை தரிசித்தது இன்னும் கொஞ்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது. அன்னைக்கு அடியேனின் வணக்கங்கள்.

  ReplyDelete
 28. //குமரன் (Kumaran) said...
  ராமான்னோ கிருஷ்ணான்னோ இதே பேருல அமைஞ்சிருக்காங்களா? இல்ல அந்த ரெண்டு பேரோட வேற பேருல அமைஞ்சிருக்காங்களா? :-)//

  ஹா ஹா
  நீங்க யாரைச் சொல்ல வரீங்க-ன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்-னு அவிங்களும் புரிஞ்சிக்கிட்டாங்க! நீங்களும் புரிஞ்சிக்கிட்டீங்க! :)

  "இராமா"-ன்ற அதே பேருலயே அமைஞ்ச என் மனத்துக்கினிய "தம்பி"யைத் தான் சொன்னேன் குமரன்! :)

  ReplyDelete
 29. //இன்றளவும் இவர்களின் பரந்த தமிழ் மனமே, பரந்து விரிந்த தமிழ் மனமே, அடியேனை வழி நடத்திக் கொண்டிருக்கு!//

  நான் அறிய தமிழாசிரியர்கள் அனைவருமே மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் தான் தம் மாணாக்கர்களுக்குக் காட்சி அளித்திருக்கிறார்கள். தமிழின் பெருமை என்று கொள்ளலாமா?

  ReplyDelete
 30. //ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!//


  இந்த மொழி பெயர்பு ரொம்ப நல்லா இருக்கு. என்னடா புதுசா இருக்கேன்னு பார்த்தேன் , ஆண்டாள் பாசுரமா இது? அப்டியே பொருந்தியிருக்கே.

  அதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு.

  பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே,
  உமது நாமம் அர்சிக்கப்படுவதாக,
  உமது இராச்சியம் வருக‌
  உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல‌
  பூலோகத்திலும் செய்யப்படுவதாக,

  எங்கள் அனுதின உணவை
  எங்களுக்கு இன்று அளித்தருளும்.
  எங்களுக்கு தீமை செய்தவர்களை
  நாங்கள் பொறுப்பது போல
  எங்கள் பாவங்களை பெறுத்தருளும்
  எங்களை சோதனையில் விழ விடாதேயும்
  தீமைக‌ளில் இருந்து எங்க‌ளை இர‌ச்சித்த‌ருளும். ஆமென்.


  எனது முந்தையப் பின்னூட்டத்தில் சொல்லியிருந்த பூண்டி மாதக் கோயில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ளதுதான். எனது சொந்த ஊர் மாரநேரியும் அந்த பகுதி தான். நீங்கள் எந்த ஊர்?

  ReplyDelete
 31. ஸ்ரீனி6:00 AM, September 19, 2008

  //சூப்பரு!
  தோத்திரம் சொல்லுங்க அண்ணாச்சி! :)

  பள்ளியில் சொன்னது:

  Our Father in Heaven!
  ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி!

  Holy be your Name!
  நாமன் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்!

  Your kingdom come.
  என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வாம்

  Your will be done.
  குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!

  On Earth as in Heaven!
  வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்!

  Give us today our daily bread.
  இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்!

  Forgive us our sins
  எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்!

  As we forgive those who sin against us!
  கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!

  Do not bring us to the test
  போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

  But deliver us from evil.
  தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்!

  Seat of Wisdom - Pray for us.
  Our Lady of health - Pray for us.
  Don Bosco - Pray for us.
  //
  சும்மா இருக்கும்போதே ஹிந்துயிசம்கிற ஒன்னு கெடயவே கெடயாது.அது கிறிஸ்தவத்த உல்டா பண்ணதுன்னு propaganda பண்ணிட்டு இருக்காங்க.. நீங்க இப்டி எடுத்து வேற குடுத்துட்டு இருக்கீங்க.வெளங்கிடும்...

  ReplyDelete
 32. // RATHNESH said...
  நான் அறிய தமிழாசிரியர்கள் அனைவருமே மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகத் தான் தம் மாணாக்கர்களுக்குக் காட்சி அளித்திருக்கிறார்கள். தமிழின் பெருமை என்று கொள்ளலாமா?//

  வாங்க ரத்னேஷ் ஐயா! நலமா? ரொம்ப நாள் ஆச்சுது!

  தமிழாசிரியர்கள் பெருமை அது!
  தமிழில் தோயத் தோயத் அது தானே பண்படுத்தும் அல்லவா?
  ஆரவாரத் தமிழ் எல்லாம் கரையில் தான்! அன்புத் தமிழ் கடலில் தான்! :)

  ReplyDelete
 33. //ஜோசப் பால்ராஜ் said...
  என்னடா புதுசா இருக்கேன்னு பார்த்தேன் , ஆண்டாள் பாசுரமா இது? அப்டியே பொருந்தியிருக்கே//

  ஜோசப் அண்ணாச்சி
  ஆண்டாள் ஆண்டவனுக்கே பொருந்துவா! தமிழுக்காப் பொருந்தாமல் இருப்பா? :)

  //அதன் சரியான தமிழ் மொழிபெயர்ப்பு.
  பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே,
  உமது நாமம் அர்சிக்கப்படுவதாக,
  உமது இராச்சியம் வருக‌
  உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல‌
  பூலோகத்திலும் செய்யப்படுவதாக//

  அருமை!

  //எங்களுக்கு தீமை செய்தவர்களை
  நாங்கள் பொறுப்பது போல
  எங்கள் பாவங்களை பெறுத்தருளும்//

  இது எனக்கு மிகவும் பிடித்த வரிகள்!

  எங்களை சோதனையில் விழ விடாதேயும்
  தீமைக‌ளில் இருந்து எங்க‌ளை இர‌ச்சித்த‌ருளும். ஆமென்.


  //பூண்டி மாதக் கோயில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ளதுதான். எனது சொந்த ஊர் மாரநேரியும் அந்த பகுதி தான். நீங்கள் எந்த ஊர்?//

  அண்ணாச்சி
  நானு வாழைப்பந்தல்-ன்னு கிராமம், காஞ்சிபுரம்-திருவண்ணாமலைக்கு இடையில் உள்ளது!

  அப்பா தஞ்சாவூர் மாற்றல் ஆன போது, விடுமுறைக்கு எப்பமே தஞ்சை வருவோம்! அப்போ திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், பூண்டி, திருவையாறு-ன்னு நல்லாவே சுத்துவோம்!

  பூண்டி மாதாவின் நீல நிறச் சுருவத்துக்குள் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம், பெருமாள் தீர்த்தம் பக்கத்தில் வைக்கப்பட்டு இருக்கும், எங்கள் பூசை அறையில்! :)

  ReplyDelete
 34. //ஸ்ரீனி said...
  சும்மா இருக்கும்போதே ஹிந்துயிசம்கிற ஒன்னு கெடயவே கெடயாது.அது கிறிஸ்தவத்த உல்டா பண்ணதுன்னு propaganda பண்ணிட்டு இருக்காங்க..//

  ஹா ஹா ஹா!
  ஸ்ரீனி ஐயா! ஏன் இம்புட்டு கோவம்?
  என்ன தான் propoganda பண்ணாலும் எல்லாருக்கும் கால அளவுகள் நல்லாத் தெரியுமே! கிமு, கிபி என்று தத்துவங்களும் சமயங்களும் இருக்கும் போது, ஏன் இது போன்ற தேவையற்ற அச்சங்கள்?

  //நீங்க இப்டி எடுத்து வேற குடுத்துட்டு இருக்கீங்க.வெளங்கிடும்...//

  எடுத்தும் கொடுக்கல! தடுத்தும் கொடுக்கல!
  ஒப்புமை செய்வது ஒரு நயம், ரசம் தான்! அது இறைச் சிந்தனைகளை பலப்படுத்தத் தான் செய்யும்!

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP