Showing posts with label இராமானுசர். Show all posts
Showing posts with label இராமானுசர். Show all posts

Saturday, May 07, 2011

பகுத்தறிவு: பாரதிதாசனும் இராமானுசரும்

இன்று இரு பெரும் தலைவர்கள் தோன்றிய நாள்! * ஆதிசங்கரர் - வேதாந்தக் கடல்! * இராமானுசர் - இறையன்புக் கடல்! சாதியால் ஒதுக்கப்பட்ட/மொழியால் ஒதுக்கப்பட்டவர்களைத் துணிந்து முன்னிறுத்தி தமிழும் சமயமும் வளர்த்தார்! சித்திரைத் திருவாதிரை - ஈசனுக்கு உகந்த திருவாதிரையில் தோன்றிய தோன்றாத் துணைவர்கள்! இருவருக்கும் வணக்கம்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :)
சரி, அது என்ன பதிவின் தலைப்பிலே பாரதிதாசன்? கடவுள் கடவுள்.. என்று எதற்கும் கதறுகின்ற மனிதர்காள்
கடவுள் என்ற நாமதேயம், கழறிடாத நாளிலும்
உடைமை யாவும் பொதுமையாக உலகு நன்று வாழ்ந்ததாம்
கடையர் செல்வர் என்ற தொல்லை, கடவுள் பேர் இழைத்ததே!

-ன்னு பாடிய உணர்ச்சிக் கவிஞர்! அவருக்கும் இராமானுசருக்கும் என்ன தொடர்பு? * அவரோ பகுத்தறிவுக் கொள்கையின் கூடாரம்! இவரோ பக்தி என்னும் சரணாகதிச் செம்மல்! * அவரோ தந்தை பெரியாரிடம் பேசுபவர்! இவரோ எம்பெருமானையே பேசுபவர்! * அவரோ பாரதிக்குத் தாசன்! இவரோ கோதைக்குத் தாசன்! இவர் பால் அவருக்கு என்ன பெருசா தொடர்பும் ஈர்ப்பும்? நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்! முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ் நாடு இருந்தவப் பயனாய் இராமா னுசனை ஈன்ற தன்றோ்? இந்நாடு வடகலை ஏன் என எண்ணித் தென்கலை ஈன்று திகழ்ந்த தன்றோ? ( - பாரதிதாசன் கவிதைகள்) இப்படி, நாத்திகர்களையும், பகுத்தறிவுவாதிகளையும் கூடக் கவர்ந்த ஒரு சமயத் தலைவர் உண்டென்றால், அது உடையவர் என்னும் இராமானுசரே! எப்படித் தமிழ்க் கடவுளான முருகனை மட்டும் அவர்கள் அரைமனதாகப் பேசுகிறார்களோ, அதே போல் இராமானுசரையும் கொள்கிறார்கள்! :) ஏன்? = அடியவர்கள் யாராயினும், அவர்களைக் குலம் விசாரிப்பவன்...பெற்ற தாயை, யோனி விசாரித்தவன் ஆகின்றான்! - இப்படித் தாய்மையைத் தடாலடியாகப் பெரியார் கூடச் சொன்னதில்லை :) அதனால் தான்!
ரெண்டு நாளாக் காய்ச்சல்! பதிவு எழுத இயல வில்லை! அதனால் சுருக்கமாக இராமானுசரின் பிறந்த நாள் பதிவு! ரெண்டு வருசம் முன்னாடி, நண்பர்கள் அனுப்பிய மின்னஞ்சலில், ஒரு தாலாட்டுப் பாட்டைப் "பாடி" வைச்சேன்! அதை மட்டும் இங்கே பிறந்த நாள் குழந்தைக்கு இட்டு வைக்கிறேன்! வர்ட்ட்டா? :) மன்னுபுகழ் காந்தி மதி, மணி வயிறு வாய்த்தவனே தென் பொருநல் மாறனடி, சேர்ப்பித்தாய் செம்பொன் சேர் கன்னி நன்மா மதில்புடை சூழ், அரங்கநகர்க்கு அதிபதியே என்னுடைய இன்னமுதே, இராமனுசா தாலேலோ! தாலே தாலேலோ, உன் முப்புரிநூல் தாலேலோ! தாலே தாலேலோ, உன் முக்கோலும் தாலேலோ! தாலே தாலேலோ, உன் முறுவல்நிலா தாலேலோ! தாலே தாலேலோ, உன் கண்வளராய் தாலேலோ! உறங்காதே சக்கரமே, உடனிருந்து காத்திடுவாய்! உறங்காதே வெண்சங்கே, பால்கொடுத்து ஊட்டிடுவாய்! உறங்காதே கோபுரமே, குளிராமல் போர்த்திடுவாய்! உறங்காதே காவேரீ, கால்வருடி விட்டிடுவாய்! சங்கரனும் ராகவனும், சடுதியில் ஓடிவந்தோம்! தங்கையவள் கோதையுடன், தமிழோதி ஓடிவந்தோம்! திங்களொளி ராத்திரியில், தாலாட்ட ஓடிவந்தோம் பங்கயத்தின் சிவப்பழகே, பதறாமல் கண்ணுறங்கு! கண்ணுறங்கு கண்ணுறங்கு, இலட்சுமணா கண்ணுறங்கு! கண்ணுறங்கு கண்ணுறங்கு, இராமனுஜா கண்ணுறங்கு! நீயுறங்கு நீயுறங்கு, நிர்மலனே நீயுறங்கு! நானுறங்கு நானுறங்கு, நானிலமும் தானுறங்கு! ஆரீ-ராரீ-ரோஓஓஓஓஓஓ!
Read more »

Monday, January 03, 2011

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part2

தும்பையூர் கொண்டி மனசில் ஏதோ முடிவெடுத்து விட்டாள்! - விபரீதமாகவா??
தினப்படி மூனுபடி! அதிகாலையிலேயே தயிர் அளந்து விட்டு, யார் கண்ணிலும் படாமல் மறைந்து விடுவாள்! கதையின் முதல் பாகம் இங்கே!
தயிர் கொடுத்த நங்கை, பங்கை மட்டும் பெற்றுக் கொள்ளவில்லை!
சரி, மாதம் பிறந்ததும், ஊதியம் போல் கொடுத்து விடலாம் என்று நினைத்தார்கள்! மாதமும் பிறந்தது...


முதலியாண்டான்: "என்னம்மா, தும்பையூர் கொண்டி, நல்லா இருக்கீயா? ஆளே காணலை? இந்தா பிடி.....முப்பது நாளும் மூனு படி அளந்த! படிக்கு ஒரு காசு வீதம், மொத்தம் 90 செப்புக்காசு!"

கொண்டி: "காசு வேணாம் சாமீ! நான் இராமானுசரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன்! யாரையும் ஒதுக்க மாட்டார்-ன்னு தெரிஞ்சி, என் சொந்த அன்பின் பேரில் தான் தயிர் அளந்தேன்!"

முதலி: "என்ன, விளையாடுறியா? ரொம்ப செல்வச் செழிப்பா இருக்கே-ன்னு நினைப்போ? பேசாம தயிர்க் காசை வாங்கிக்கோம்மா! பெருமாளுக்கு மட்டுமே கடன்பட்டிருக்கும் எங்களை, தயிருக்கெல்லாம் கடனாளியா ஆக்கீறாத தாயே!"

கொண்டி: "அப்படீன்னா, உங்க இராமானுசர் கிட்ட..., நான் ஒன்னு கேட்டதாச் சொல்லி, வாங்கிக் கொடுங்க ஐயா! அது போதும்!"

முதலி: "ஆகா! இதுல விவகாரம் ஒன்னும் இல்லீயே?
என்ன கொண்டி, கோயிலுக்குள் போகணுமா? இப்பல்லாம் நீயே போகலாமே! அவரு சொல்லித் தான் உள்ளே விடுவாங்க என்பதெல்லாம் ஆரம்பத்தில் தான்! இப்போ மாறி விட்டது! "திருக்குலத்தார்" என்று உங்களுக்குச் சிறப்புப் பெயர் வேற கொடுத்திருக்காரு! உங்களைத் தடுத்தா, எங்களை வெளியே துரத்தினாலும் துரத்தீருவாரும்மா! ஹா ஹா ஹா!"

கொண்டி: "அதில்லீங்க! கோயிலுக்கு நானே போய்க் கொள்கிறேன்! எனக்கு ஒரேயொரு சீட்டு மட்டும்....அவர் கிட்டே வாங்கித் தாங்க! அது போதும்!"

முதலி: "சீட்டா?......என்ன சீட்டு?"

கொண்டி: "மோட்ச ஓலை!"

முதலி: "அப்படியொரு சீட்டா? என்னமா சொல்லுற நீயி??"

கொண்டி: "முன்பு திருவரங்கத்தில், நம் சொத்துக்கு "உடையவர்"-ன்னு சொன்னானாமே அரங்கன்! அதான் யாரு "உடையவங்களோ", அவங்க கிட்ட இருந்து ஒரே ஒரு சீட்டு!

சீட்டு எழுதிக் கொடுத்தால் போதும்! நான் திருவேங்கடமுடையானிடம் அதைக் காட்டி வேண்டிக் கொள்வேன்! எனக்கு இங்கே தனியா கிடந்து அல்லாடுறது பிடிக்கலீங்க! அவன் கிட்ட போய் அவனுக்காகவே இருந்துடணும்-ன்னு ஆசையா இருக்கு!" - கண்களில்....தோமாலை சேவை!

முதலியாண்டானுக்குத் தூக்கி வாரிப் போட்டது!
"ஒரு வேளை, இவள் "உடையவர்" என்பதைக் கேலி பேசுகிறாளோ? இல்லையே! கண்ணில் இருந்து கொட்டும் அருவியைப் பார்த்தால் அப்படித் தெரியலையே!

ஒரு வேளை, நாம் தான் "உடையவர்" என்பதை முழுமையாக நம்பலையோ? அது சும்மா ஒரு பட்டப் பெயர்-ன்னு மட்டும் நினைச்சிட்டோமோ?
கேவலம், தயிர்க்காரிக்குத் தோனினது.....யாரு உடையவங்களோ, அவங்க கிட்ட இருந்து ஒரு சீட்டு....இவ்வளவு நாள் நமக்குத் தோனாமல் போச்சே!

சே! தவறு தவறு! "கேவலம் தயிர்க்காரி" என்றெல்லாம் சொல்லக் கூடாது! ஏன் தான் என் நாக்கு அன்றில் இருந்து இன்று வரை அப்படியே இருக்கோ?
உடையவர் என்னை அடிக்கடி கடிந்து கொள்வது இதனால் தானோ? ஜாதி அபிமானம், என்னை அறியாமல் இன்னும் என்னிடம் ஒட்டிக்கிட்டு இருக்கோ? "


இராமானுசர்: "என்ன தாசரதி (எ) முதலியாண்டானே! ஏன் இவ்வளவு பதற்றம்?"

முதலியாண்டான், விஷயங்களைச் சொல்லச் சொல்ல இராமானுசருக்கே தூக்கி வாரிப் போடுகிறது!

"என்னது? மோட்சம் போவதற்காக என்னிடம் சீட்டு கேட்டாளா?
மோட்சம் என்பது எம்பெருமான் தானே தரவேணும்? அதைத் தரும் "வல்லமை" ஒரு சாதாரண மனிதனான எனக்கு இருக்கா?
ஆகா................! வல்லமை! வல்லமை!
அந்தப் பாட்டின் பொருள் இப்போது விளங்கி விட்டது! நன்றாக விளங்கி விட்டது!

நீள் விசும்பு அருளும்!
அருளோடு, பெரு நிலம் அளிக்கும் வலம் தரும்!
வலம் தரும் = வல்லமை தரும்!
எனக்கு வல்லமை தரும்!"

முதலி: "உடையவரே, என்ன சொல்றீங்க? எனக்கு ஒன்னுமே புரியலை!"இராமானுசர்: "அம்மா, தாயே! தயிர்க் காரியாய் வந்து, தயை காரியம் செய்தாயே!
ஆழ்வாரின் தமிழ், வெறும் தமிழ் அல்ல! = அது ஈரத் தமிழ்!

அந்த ஈரம், இன்று வந்து என்னை நனைத்து விட்டதே! வேத/வேதாங்கம் படிக்கும் போது கூட புரியாத ஒன்று....இன்று தமிழ் வேதம் படிக்கும் போதா புரிய வேண்டும்?
மாறன் பணித்த தமிழ் மறைக்கு, மங்கையர் கோன் ஆறங்கம் கூற...
கார்த்திகையில் கார்த்திகை நாள்
...என்பது எவ்வளவு பொருத்தம்!

"வெறும் பாடமாக" இல்லாமல்......"வாழ்க்கைப் பாடமாய்ப்" பொருள் உணர்த்தி விட்டாயே, தயிர்க்காரி! தும்பையூர் கொண்டி!
வாம்மா! உள்ளே வா! இதோ, நீ கேட்ட மோட்ச ஓலை! நான் எழுதித் தருகிறேன்!


திருமலை!
இன்று, தெலுங்கில் "படிக்காவாலி" எனப்படும் வெள்ளைக் கோபுர வாசல்!


பச்சைப் புடைவையாய் மலைகள் சூழ, வண்ண மலர்கள் அதற்குச் சரிகை போட,
வெள்ளைக் கழுத்துள்ள பெண், நம் குழந்தை வந்து விட்டதா என்று எட்டிப் பார்ப்பது போல்......., அந்தக் கோபுரம் எட்டிப் பார்க்கிறது...

வாசலில் ஒரே கலாட்டா! தும்பையூர் கொண்டி அதிகாரிகளிடம் முறையிட்டுக் கொண்டு இருக்கிறாள்! கையில் இராமானுசர் எழுதிக் கொடுத்த மோட்ச ஓலை!

"ஏம்மா! உனக்கு புத்தி கித்தி பிசகிப் போச்சா? ஓலையைக் காட்டினா எல்லாம் மோட்சம் கிடைக்குமா? அதுவும், மனுசன் கட்டி வைச்ச கோயில்-ல்ல நுழைஞ்சி மோட்சம் போகணும்-ன்னு கேட்கிறாயே? முடியுமா?
இராமானுசர், உன் மனம் நோக வேணாமே-ன்னு சும்மா எழுதிக் கொடுத்து இருப்பார்! அதை இங்கே எடுத்தாந்து, உள்ளே விடுங்க-ன்னா எப்படி?"

"போ, போ! போய் உன் வீட்டுப் பூஜை அறையில் ஓலையை வச்சிக்கோ! கடைசிக் காலத்தில் அதைத் தொட்டுப் பாத்துக்கோ! மோட்சம் போவ!"

"இன்னும் இளமை இருக்கே உனக்கு! இங்கேயே மோட்சம் இருக்கே கொண்டி! இளமையா-இன்பமா சுகபோகமா இருக்குறது தான் மோட்சம்! அதை விட்டுட்டு....பெருசா ....ஓலையாம், உடையவராம், மோட்சமாம்...."

இப்படி ஆளாளுக்கு வியாக்யானம் பண்ணிக் கொண்டிருக்க....ஆளாய் அங்கே வந்தான், ஒரு கட்டிளங் காளை! செல்வச் சீமானோ?
அவன் நடையழகு! பின்னும் உடையழகு! பின் வரும் குடையழகு! பின்னே சடையழகு! சக்கரப் படையழகு!
உடுப்பில் தோன்றும் மிடுக்குக்கு ஒரு தனி மதிப்பு தான் போல! பேசுவார்களையும் பேசாமல் இருக்கச் செய்து விடுகிறதே!

"ஏம்மா...என்ன ஓலை அது? இப்படிக் கொடு, பார்ப்போம்!"


ஓலை:
அகலகில்லேன் என்று அவளுறை திருவேங்கடமுடையானே,
நலம்; நலமறிய ஆவல்!
உனக்குப் பல்லாண்டு பல்லாண்டு! நிற்க!

இந்த ஓலையைக் கொண்டு வரும் தும்பையூர்க் கொண்டி, புகல் ஒன்றில்லா அடியவள்! உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே என்று "ஆசை"ப்படுகிறாள்!

உம்முடைய நித்ய-லீலா விபூதிகளுக்கு "உடையவன்" ஆகிய அடியேன்,
இவள் அன்பினால் அளந்த தொன்னூறு தயிர்ப் படிக்கு ஈடாக,
மோட்சப் படியை அளிக்கக் கடமைப்படுகிறேன்! நீயும் அவ்வண்ணமே தந்தருள நம் நியமனம்!

தொன்னூறு தயிர்ப்படிக்கு...
முடிவும் முழுதுமாக நான் கட்டும் தவணைத் தொகையாக,
இவள் வைகுந்தம் புகுந்து கொள்ளக் கடவது!

இங்ஙனம்...
(திருவாழி முத்திரையோடு:
ஒப்பம் - இராமானுசன்)




ஹா ஹா ஹா

அழகுச் சீமான்: "அதிகாரிகளே! பாவம்! ஏதோ, நம்பி வந்து விட்டாள்! எதுக்கு இவளைத் தடுத்து நிறுத்தி...தேவையில்லாமல் ஒரு களம் உருவாக்குகிறீர்கள்?
ஓலையாவது, பாலையாவது? அது பற்றி நமக்கென்ன கவலை!
மற்றவர்களைப் போல் இவளையும் தரிசனத்துக்கு உள்ளே அனுப்புங்கள்! இவளும் பார்த்து விட்டு இவள் வழியில் போகட்டுமே!"

உள்ளே விட்டு விட்டார்கள்!
தும்பையூர் கொண்டி வரிசையில் ஊர்ந்து ஊர்ந்து நகர்கிறாள்!
அவள் முன்னேயும் பின்னேயும் விதம் விதமான அடியார்கள் கூட்டம்! அவரவருக்கு ஒவ்வொரு ஆசை! ஒவ்வொரு ஏக்கம்!
ஒவ்வொருவராக அவனை நோக்கி நகர்ந்து கொண்டே....அவரவர் விதி வழி அடைய "நின்றனரே"!

மகாத் துவாரம், கொடி மரம், ரெங்க மண்டபம், அயன மண்டபம், வெண்டி வாகிலி, பங்காரு வாகிலி என்று தாண்டித் தாண்டி...

இதோ திருமாமணி மண்டபத்துக்கு வந்தாகி விட்டது....
தங்க வாயில்...ஜய விஜயர்கள் இரு புறமும் வைத்த மா நிதியைக் காத்து நிற்க,
பெரிய திருவடியாகிய கருடன் ஏகாந்தத்தில் அவனையே கண்டு கொண்டிருக்க....

அத்தனை மக்களின் கூச்சலும், ஓர் நொடிக்குள் அடங்கி விட....
ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்,
பணத்தப்பர், அதிகாரப் பத்துமப்பர்
உதயப்பர் ஆகி விட்டு, ஓர் நொடிக்குள்,
ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி....
ஒப்பப்பர் ஆகி.....அவரவர் தலைமேல் அவரவர் கைகள்!

அதோ..அதோ..சென்னி ஓங்கு..எம்பெருமான் திருவேங்கடமுடையான்....
மாயனார் திரு நண் மார்பும், மரகத உருவும், தோளும்
தூய தாமரைக் கண்களும், துவர் இதழ்ப் பவள வாயும்
ஆய சீர் முடியும் தேசும், அடியோர்க்கு அகலலாமே!

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல் மங்கை உறை மார்பா!

என்னை ஆள்வோனே!

உன் வென்றி வில்லும், வாளும், தண்டும்,
சங்கோடு சக்கரமும்....

இன்று வந்து என் கண்ணுள் நீங்காது!
என் நெஞ்சுள்ளும் நீங்காது நீங்காதே!


உன் கோல நீள் கொடி மூக்கும்,
தாமரைக் கண்ணும், கனி வாயும்,

நீல மேனியும், நான்கு தோளும்,
ஐயோ....வந்து.....என் நெஞ்சம் நிறைந்ததுவே!



நிவேதனத் திரை போட்டு விட்டார்கள்!
பார்த்துக் கொண்டே வந்த கொண்டிக்கு, காட்சித் தடை ஆகி விட்டதே! ஐயோ!

தெரியேன் பாலகனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!

நாயேன்....உன் வீட்டு வாசலை வந்து அடைந்தேன்!
அன்பே.......அணைத்து என்னை ஆட் கொண்டருளே!

அவளுக்குத் தாள மாட்டாது, கைகள் தானாகவே சென்னி மேல் குவிய...கோவிந்தாஆஆஆ......

சென்னி மேல் உள்ள அவள் கையோலை கீழே விழ,
கருவறையில் போட்டிருந்த திரைச் சீலையும் அறுந்து விழ...
தும்பையூர்க் கொண்டியும் அடிமரமாய் விழ...

பின்னால் வரும் அத்தனை அடியார்களும், அவளை மிதித்து விடுவோமோ என்று பதறிப் போய் பின் வாங்குகிறார்கள்!
பட்டர்களும் அர்ச்சகர்களும் கூடப் பின் வாங்குகிறார்கள்....பாதி நைவேத்யம் பண்ணும் போது திரை அறுந்துட்டதே! என்ன தீட்டோ என்னமோ?

காற்றே இல்லாத கருவறையில், அந்த ஓலை காற்றடித்துப் பறக்கிறது! பறந்து பறந்து அவன் அடிக் கீழ்.....அவள் உயிர்....
புகல் ஒன்றில்லா அடியேன், உன் அடிக்கீழ்....தும்பையூர் கொண்டி புகுந்தாளே!

கதவுகள் இழுத்து மூடப்படுகின்றன! கர்ப்பக் கிருஹத்தில் மரணம் ஆயிடுத்து! புண்யாகவசனம் பண்ணுங்கோ!
தீட்டு கழிக்கப்படுகிறது! :) எம்பெருமானுக்குத் தீட்டா? ஆமாம்! அவன் குழந்தையைத் தீண்டும் "தீட்டு"!
அன்று வைகுந்த வாசமெல்லாம், தும்பையூர் கொண்டியின் தயிர் வாசம்! தயிர் வாசம்!


கீழ்த் திருப்பதியில் சேதி பரவுகிறது! இராமானுசரும், அவர் குருவான பெரிய திருமலை நம்பிகளும்....மீண்டும் அதே பாடம்.....
சேதி கேட்ட இராமானுசருக்கு, கண்ணோரத்தில் நீர்! பாட்டின் பொருளைக் காட்டியவள் அல்லவோ தயிர்க்காரி? அப்படி என்ன தான் காட்டி விட்டாள்?

நாராயணா என்னும் நாமம்...

* நீள் விசும்பு அருளும் = மோட்சம் தரும்!
* அருளொடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு, மோட்சம் தரும்!
* வலம் தரும் மற்றும் தந்திடும்!
எதற்கு இரண்டு முறை.....மோட்சம் தரும், மோட்சம் தரும்-ன்னு சொல்லணும்? அவ்ளோ சந்தேகமா?

அப்படி வரியை உடைத்துப் படிக்கக் கூடாது குருவே! இப்போது பாருங்கள்!
* நீள் விசும்பு அருளும் = மோட்சம் தரும்!
* அருளொடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் = கருணையோடு, பிறர்க்கு மோட்சம் அளிக்கும் வலிமையைக் கூட நமக்குத் தரும்! = நாரணா என்னும் நாமம்!

ஆகா!
மோட்சம் இறைவனால் மட்டும் தானே கொடுக்க முடியும்?

இல்லை....
நம்மாலும் கொடுக்க முடியும்!!!! எப்படி?
எனக்கு மோட்ச ஓலை எழுதித் தாருங்கள்! - கேட்டது, தயிர்க்காரி! எழுதிக் கொடுத்தது ஒரு மானிடர்! கிடைத்தது மோட்சம்!


கருணை....
"எம்பெருமான் மேல் எனக்குத் தானாகவே பக்தி வந்தது", என்று யாராலும் சொல்ல முடியுமா? பக்தி என்பது சுய சம்பாத்தியமா?

என்றைக்கோ ஒரு அடியவர், "ஐயோ....இப்படி ஒரு புழுவாய்....இது சாக்கடையில் கிடந்து நெளிகிறதே, இதற்கு ஒரு விடிவு கிடைக்காதா? நாராயணா!" என்று அந்தப் புழுவைப் பார்த்துச் சொல்லி இருப்பாரோ?
அதனால் தான் அந்தப் புழு, இன்று பதிவுகளில் எம்பெருமானை ஆழ்ந்து ஆழ்ந்து அனுபவிக்கிறேனோ?

அன்று சாக்கடைப் புழுவாய்க் கிடந்தவனுக்கு, இன்று எம்பெருமானை அனுபவிக்கும் "மோட்ச" ஆசையைக் கொடுத்தது யாரோ?
யாரோ ஒரு முகம் தெரியாத அடியவர் தானே! அவர் நினைத்த நினைப்பு = பெருநிலம் அளிக்கும் வலம்/வல்லமை தந்தது அவருக்கு!!

அருளொடு = கருணையொடு
பெருநிலம் அளிக்கும் வலம் தரும்! = பிறர்க்கு, மோட்சம் கொடுக்கக் கூடிய வலிமையும் தர வல்லது! பிறர் மனதில் மோட்ச விதையைத் தூவ வல்லது!

* மற்றும் தந்திடும்! = இன்னும் என்ன தான் தந்திடாது?
* பெற்ற தாயினும் ஆயின செய்யும் = கருப்பைக்குள்ளே கை நீட்டி உதவ முடியாதவள் நம் தாய்! அவளைக் காட்டிலும், ஆயின செய்யும்!


மோட்சம் என்பது என்ன?
= சுயநலமாய்....இனிமேல் துன்பமே அனுபவிக்காது, பிறவிச் சுழலில் இருந்து நான் மட்டும் விடுபட்டுடணும்-அதுவா மோட்சம்?

அதற்காக, கணக்குகள் போட்டு, கர்ம-ஞான யோகம் செய்வதா மோட்சம்?
யோகம் செய்தால் மோட்சம் போய் விடலாம், அப்பறம் கவலையே இல்லை! இனி பிறக்கவே மாட்டோம்!
பிறவா யாக்கைப் பெரியவர்கள் ஆகி விடலாம்! = நானே சிவம்! அஹம் பிரம்மாஸ்மி! நான் கடவுள்!

"அவதாரம் எடுக்கப் போகிறேன், என்னோடு வருகிறீர்களா? என்று இறைவனே கேட்டாலும்....வர மாட்டோம் என்று சொல்லி விடலாம்! :)

அட, இத்தனை கஷ்டப்பட்டு மோட்சத்துக்கு வந்திருக்கோம்? மறுபடியும் பிறப்பதா? உலக உயிர்கள் கடைத்தேறுவதா முக்கியம்? நம்ம "மோட்சம்" தானே நமக்கு முக்கியம்? :)
கோதையைப் போல் லூசா நாமெல்லாம்? எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்-ன்னு....போயும் போயும் பிறவியைக் கேட்டாளே அந்த லூசு! :)

மோட்சம் என்றால் என்ன? <> சம்சார துக்க நிவர்த்தி! மாயை விலகல்! இரண்டு அல்லாத ஒரே அத்வைத நிலை! = இதுவா மோட்சம்? இல்லை!
அந்தமில் பேரின்பத்து அடியவர்களுடன் கூடி,
தொண்டு எனும் கைங்கர்யம்...
அவனுக்"கே" அவனுக்"கே" இருப்பது = இதுவே மோட்சம்!

இது கருணையால் மட்டுமே வருவது! அந்தக் கருணையின் பாற்பட்ட கைங்கர்யமே மோட்சம்!

* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு, பெருநிலம் அளிக்கும் வலம் தரும் = கருணை என்னும் குணத்தால், சக அடியார்களுக்கு, மோட்ச விதையை மனசிலே தூவும்!
எது? = நலம் தரு சொல்லை, நான் கண்டு கொண்டேன், நாரணா என்னும் நாமம்!

தயிர்க்காரி, தும்பையூர் கொண்டி திருவடிகளே சரணம்!
Read more »

Thursday, December 30, 2010

தயிர்க்காரி - தும்பையூர் கொண்டி! - Part1

அவள் ஒரு தயிர்க்காரி! பேரு "தும்பையூர் கொண்டி"! கொஞ்சம் முப்பதைத் தாண்டினாலும் பார்க்க அழகா இருப்பா! அவள் மோட்சம் போவாளா?



என்னடா இது...சம்பந்தமே இல்லாமல், தயிர்க்காரி, மோட்சம்-ன்னு "உளறுகிறேன்"-ன்னு பார்க்கறீங்களா? அது எப்பமே பண்ணுறது தானே! :)

தும்பையூர்!

எங்க ஊர் வாழைப்பந்தலுக்குப் பத்து கல்லுக்குள்ளாற இருக்கும் ஒரு கிராமம்!
ஆரணி தொகுதி! திருவண்ணாமலை மாவட்டம்!
செய்யாறு-தும்பையூர் சாலையில் இன்னிக்கி ஒரு பொறியியல் கல்லூரி கூட இருக்கு!(Ramana Maharishi College of Engg)

அது என்ன தும்பையூர்?
தும்பை என்பது அழகான ஒரு வெள்ளைப்பூ! தும்பைப் பூ போல இட்லி, தும்பைப் பூ போல மனசு-ன்னு எல்லாம் சொல்வாங்க-ல்ல?

தும்பை என்பது சங்க இலக்கியப் பூவும் கூட!
போர் புரியும் போது வீரர்கள் சூடிக் கொள்வது! திணைகள்: வெட்சி/கரந்தை, தும்பை/வாகை-ன்னு படிச்ச ஞாபகம் இருக்கா? :)

அந்தத் தும்பையூரில் தான் கொண்டி, தயிர்க்காரியாக பிழைப்பு ஓட்டிக் கொண்டிருந்தாள்! சற்றே பேரிளம் பெண், ஆனால் அழகி!
வாழ்வைத் தொலைத்து விட்டவள் போலும்! எதிலும் பிடிப்பில்லாமல், அவன் ஒருவனையே பிடித்துக் கொண்டிருந்தாள்!

தும்பையூர் கொண்டி! பேரே நல்லா இருக்கு-ல்ல? :)


திருமலை அடிவாரம்! = அடிப்படி!
இன்னிக்கி "அலிபிரி" என்று தெலுங்கில் சொல்லுகிறார்கள்! அங்கே...........குருவுக்கும் சீடனுக்கும் வாக்குவாதம்!

ஏன் இந்தச் சீடன் எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா பொருள் சொல்லுறான்? இப்படிச் செஞ்சா, யாருக்கும் பிடிக்காதே! :)
பாவம்.....பாட்டை, வெறும் பாட்டாப் பார்க்கத் தெரியலை அவனுக்கு!
ஈரத் தமிழாய்ப் பார்ப்பதால்...அவனையும் அறியாமல், இப்படி மனம் செல்கிறது....

குலம் தரும், செல்வம் தந்திடும்,
அடியார் படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும், நீள் விசும்பு அருளும்,
அருளோடு பெருநிலம் அளிக்கும்..


"சுவாமி, நிப்பாட்டுங்க, நிப்பாட்டுங்க!"

"எதுக்குப்பா நிறுத்தச் சொல்லுற? எவ்வளவு அருமையான பாட்டு, இந்தப் பாட்டைத் தான் பலர் தலையில் வச்சி கொண்டாடுகிறார்கள்! இரு முடிச்சிடறேன்! அப்பறமா நீ கேள்வி கேளு, சரியா?"

வலம் தரும், மற்றும் தந்திடும்,
பெற்ற தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை, நான் கண்டுகொண்டேன்,
நாரணா என்னும் நாமம்!

"ஆகா! சமயமாகப் பார்க்காமல், தமிழாகப் பார்த்தால் கூட, ரொம்ப அருமையா இருக்கு குருவே! பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரு சொல்லா?"

"ஆமாம் ஆமாம்!"

"உண்மை தான் குருவே! அம்மாவைக் கூட ஒரு கால கட்டத்தில் பிடிக்காமல் போகலாம்! ஆனால் "அம்மா என்னும் சொல்"?
நம்ம அம்மா கூட, நம் நிம்மதியை எப்பவாச்சும் வந்து கெடுப்பாங்க! ஏம்மா படுத்தற? என்போம்! அவங்க அறையை விட்டுக் கிளம்பிய பின் தான் நமக்கு நிம்மதி......ஆனா அப்பவும் என்ன சொல்கிறோம்? = "அம்மாடி"! :)

பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்!"
அது போலத் தான் "அவன் என்னும் சொல்"!
அவன் பேரே என்னையும் தாங்கும்! அவன் பேரே என்னையும் தாங்கும்!

"இப்படி உணர்வு பூர்வமா, பாட்டில் ஒன்றுகிறாயேப்பா! என்னால் உனக்குப் பெருமையா? உன்னால் எனக்குப் பெருமையா? ஆகா!"

"அதை விடுங்கள் குருவே! எனக்கு ஒன்னே ஒன்னு தான் புரியலை! ஏதோ "தரும் தரும்"-ன்னு வரிசையா அடுக்கறாங்களே! அது என்ன-ன்னு கொஞ்சம் சொல்றீங்களா? தனம் தருமா? கல்வி தருமா?? என்ன தரும்?"


"ஓ அதுவா?
* குலம் தரும்-ன்னா = அடியார்கள் என்னும் குலம்/அவர்கள் உறவைத் தரும்!
* செல்வம் தந்திடும் = கல்விச் செல்வம், செல்வச் செல்வம், வீரச் செல்வம்! "நீங்காத செல்வமும்" தரும்!
* அடியார் படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் = அடியார்களின் துயரத்தை எல்லாம், நிலத்தில் போட்டு நசுக்கி, மீண்டும் எழ விடாமல் செய்யும்!"

"அருமை! ஏதோ தரையில் பூச்சியைத் தேய்ப்பது போல் நம் துயரைத் தேய்க்கும் - நிலம்தரம் செய்யும்....அழகான உவமை அல்லவா!"

"* நீள் விசும்பு அருளும் = மோட்சம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா! நிப்பாட்டுங்க! நிப்பாட்டுங்க! இதுக்குத் தான் அப்பவே நிப்பாட்டச் சொன்னேன்!
அதான் மோட்சம் கொடுக்கும்-ன்னு ஒரு முறை சொல்லிட்டாரே...
அப்பறம் எதுக்கு இன்னொரு முறையும், அருளோடு மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்லணும்?
முதலில் சொன்னது அருளில்லாத மோட்சம்! பின்னே சொன்னது அருளோடு மோட்சமா? - இப்படியெல்லாம் சந்தேகமா ஆழ்வார் எழுத மாட்டாரே....."

"உம்ம்ம்ம்............அது வந்து....அது வந்து....."

"சொல்லுங்க சுவாமி! எனக்கு அங்கே தான் கவிதைத்-தடை ஏற்படுகிறது!"

"ஒரு வேளை இப்படியும் இருக்கும்ப்பா...
* நீள் விசும்பு அருளும் = இந்திர லோகமாகிய சொர்க்கம் கொடுக்கும்!
* அருளோடு பெருநிலம் அளிக்கும் = அருளோடு மோட்சமும் கொடுக்கும்!"

"ஆகா.....அப்படி இருக்காது சுவாமி! புண்யம், பாவம் இரண்டுமே விலங்கு-ன்னு நீங்க தானே சொல்லிக் கொடுத்தீங்க! ஒன்னு பொன் விலங்கு, இன்னொன்று இரும்பு விலங்கு!
கேவலம், இந்திர லோகத்தையா "நாரணா" என்னும் சொல் கொடுக்கும்? நாரணா-ன்னு சொன்னா, உனக்குப் பொன்னால் விலங்கு செய்து பூட்டப்படும் என்று சொல்வது போல் இருக்கு! அப்படி இருக்காது சுவாமி!"

"ஆகா! ஆரம்பித்து விட்டாயா? இப்படி எதுக்கெடுத்தாலும் புதுசு புதுசா விளக்கம் சொன்னால் எப்படி-யடா?"

"மன்னிச்சிக்குங்க சுவாமி! புதுசாச் சொல்லணும்-ன்னு திட்டம் போட்டு எல்லாம் சொல்லலை! ஒரு நல்ல கவிதைக்கு மனத் தடை இல்லாமல் இருக்கணும் என்ற ஆசையில் தான் கேட்கிறேன்!"

"சரி, இப்ப என்ன தான் பண்ணனும்-ங்கிற?"

"இந்திரலோகம் கொடுக்கும்-ன்னு சொல்லி, அதுக்குப் பக்கத்திலேயே உயர்ந்த மோட்சம் கொடுக்கும்-ன்னு கொண்டாந்து வைப்பாரா ஆழ்வார்?
அன்பர் மனசுக்கெல்லாம்.....
சொர்க்க வாசல் என்பதே....
அவன் வீட்டு வாசல் தானே
சுவாமி?"

"உம்ம்ம்ம்ம்.....அதான் முன்னாடியே நானும் சொன்னேன்!
ஆனா நீ தான் - நீள் விசும்பு அருளும், அருளோடு பெருநிலம் அளிக்கும்-ன்னு எதுக்கு ரெண்டு முறை மோட்சம் கொடுக்கும்-ன்னு சொல்றாரு-ன்னு கேட்ட!
என்னை அப்படியும் போக விடாம, இப்படியும் போக விடாம....என்ன இராமானுசா இது?"



அடிவாரம்...பெரிய புளிய மரத்தின் கீழே...குண்டுக் கல் பாறையில்...அருவி கொட்டும் ஓசையில்....

"சாமீ.....சாமீங்களா...ஏதோ ரெண்டு பேரும் பெரிய விஷயமாப் பேசிக்கிட்டு இருக்கீங்க போல! என் பேரு தும்பையூர் கொண்டி!
தயிர்க் காரி! திண்ணாமலை பக்கம்! இங்கே திருப்பதிக்கு யாத்திரையா வந்தேன்!
ஆனாத் திருப்பதியை விட்டுத் திரும்பிப் போவ மனசு வரலை! கொஞ்ச நாளா, இங்கேயே தங்கி, தயிர் கடைஞ்சி வித்து, பொழைப்பு ஓட்டிக்கிட்டு இருக்கேனுங்க...."

"சரிம்மா! இதையெல்லாம் எதுக்கு என் கிட்ட வந்து சொல்லுற? பார்க்க லட்சணமா வேற இருக்க! இந்தக் காட்டில் தனியா வரலாமா? தயிர் வாங்கக் கூட இங்கே யாரும் இல்லீயே!"

"அது இல்லீங்க! நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்! இந்த நடுவயசுப் புள்ளையா ஒருத்தர் இருக்காரே! இவரு தான் இராமானுசரா?"

"ஆமாம், அதுக்கென்ன இப்போ? என் பேரு திருமலை நம்பி! அவரோட குரு!"

"அதில்லீங்க...உங்களுக்கும், உங்க கூட இங்கே தங்கி இருக்கவங்களுக்கும், நானே தயிர் ஊத்தட்டுமா தினமும்? நல்ல தயிரு, கெட்டியா, வாசனையா இருக்கும்-ங்க!
நல்லா, தளதள-ன்னு கறந்த பசும் பாலை, ஒறைக்கு விட்டு, தண்ணியெல்லாம் வடிச்சி, கெட்டியா, சுத்த பத்தமா கொடுப்பேன் சாமீ! இந்தத் தும்பையூர்த் தயிர்க்காரி பற்றி எல்லாரும் நல்லபடியாத் தான் சொல்வாங்க"

"இல்லம்மா, மடத்தில் பால் வேறு ஒருவர் அளக்கிறார்! தயிரெல்லாம் நாங்களே கடைந்து கொள்வோம்! வெளியில் வாங்கும் வழக்கமில்லை!"

"குருவே, இவர்களைப் பார்த்தால் ஏதோ கண்ணனின் யசோதாவைப் பார்ப்பது போல் இருக்கு! பாவம், தயிர் அளந்து விட்டுப் போகட்டுமே! நம் ஆட்களுக்கும் இராமயண பாடம் படியெடுக்க நேரம் கிடைத்தால் போலவும் இருக்கும்!"

"சரி! தினப்படிக்கு மூன்று படி தயிர்! அளந்து விட்டுப் போம்மா! மாசம் பிறந்ததும் பணம் வாங்கிக்கோ!"

தும்பையூர் கொண்டி (மனசுக்குள்): "உங்களிடம் பணம் வாங்கப் போவதில்லீங்க! வேறு ஏதோ வாங்கப் போகிறேன்!"

(தொடரும்....)
Read more »

Tuesday, April 20, 2010

பிறந்தநாள்: இராமானுசர் தவறு? சுட்டிக் காட்டியது யார்?

ஆகா! இராமானுசர் தவறு செய்வாரா? அடப்பாவி! அங்க வச்சி, இங்க வச்சி, கடேசீல இவர் மேலேயே கைய வச்சிட்டியா?-ன்னு ஒரு சிலர் பொங்கி எழுவது எனக்குத் தெரிகிறது!
அவர்களுக்கு இராமானுசர் மேல அன்பு இருக்கோ இல்லீயோ...அடியேன் மேல் "பாஆஆசம்"...இருப்பதென்னவோ உண்மை! :)

வணக்கம் மக்களே! இன்று சித்திரைத் திருவாதிரை (Apr 20, 2010)!
உடையவர், எம்பெருமானார் என்று போற்றப்படும்.....காரேய்க் கருணை, இராமானுசரின் பிறந்த நாள்!
Happy Birthday Ramanuja! இன்னும் பல நூற்றாண்டு இரும்! :)

* தமிழ் வேதமான மாறன் மொழியை, ஆலயம் தோறும், "கருவறைக்குள்ளே-யும்" ஒலிக்கச் செய்து...
* தமிழை இறைவனுக்கு முன்னே ஓதி வர, இறைவன் பின் தொடர, வடமொழி வேதங்களை அதற்கும் பின்னால் ஊரறிய ஓதி வரச் செய்து...

* வேதங்களின் விளக்க நூலும், விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூலுமான ஸ்ரீபாஷ்யத்துக்கு, பிரம்ம சூத்திரங்களை மட்டுமே ஆதாரமாகக் கொள்ளாமல், திருவாய் மொழியையும் ஆதாரமாகச் சேர்த்து...

* திருவாய் மொழிக்கு, பல ஈடு வியாக்யானங்களை எழுதப் பண்ணி...
* வைணவத் தலைநகரமான திருவரங்கத்தில், மார்கழி ஏகாதசியின் போது, தமிழுக்கென்றே தனித்த திருநாள் - திருவாய்மொழித் திருநாள் - 21 நாட்கள் இன்றளவும் நடக்க வைத்து...

இப்படி, பெற்ற தாயான நம்மாழ்வாரைக் காட்டிலும், வளர்த்த தாயாய், வளர்த்து விட்ட உடையவருக்கு.....இந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை!
வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன்! மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் நம் இராமானுசன்!




சரி, இராமானுசர் பிறந்த நாள் பதிவுக்கு வருவோம்! அது என்ன இராமானுசர் செய்த தவறுகள்? இராமானுசர் தவறெல்லாம் செய்வாரா என்ன? :)

மனுசனாப் பொறந்த எல்லாருமே தவறுவது இயல்பு தான்!
நமக்குப் பாடம் காட்ட வந்த அவதாரங்களும், ஆசார்ய புருஷர்களும், நல்லது மட்டும் தான் செய்து காட்டுவாங்களா என்ன?
தவறும் செய்து காட்டுவார்கள்! அப்படித் தவறிய பின், அதை எப்படி எதிர்கொள்ள வேணும் என்றும் நடந்தும் காட்டுவார்கள்!

இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான்! அதை அவனே தவறு என்று ஏற்றுக் கொண்டு, அடுத்த அவதாரத்தில், அதே போல் மறைந்திருந்து, கண்ணன் கொல்லப்பட்டு, கழுவாய் தீர்த்துக் கொண்டான்!

ஆனால் நம் பண்டித சிகாமணிகள் தான், ஓவர் புனிதப் பூச்சுகளைப் பூசி, வாலி வதம் சரியே! சீதையின் அக்னிப் பிரவேசம் சரியே! என்று ராமாயண இண்டு இடுக்குகளில் புகுந்து, இன்றும் பட்டிமன்றம் நடாத்திக் கொண்டிருப்பார்கள்! :)
இதனால் இராமன் மேல் மதிப்பு வருவதற்குப் பதிலா, ஓவர் புனிதப் பூச்சு பூசி, வெறுப்பு வரவே இவர்கள் துணை போய்க் கொண்டு இருப்பார்கள்!

இராமன் காட்டிய வழியில் தானே இராம-அனுஜனும்? இராமானுச வைபவத்தில் அவர் "தவறிய" இடங்களும், மறைக்காது குறிப்பிடப் பட்டிருக்கும்! அவற்றில் சிலதை இன்று காணலாமா? :)
பயப்படாதீங்க! ஆசார்ய அபச்சாரம் எல்லாம் இல்லை! இதனால் அவர் பால் புரிதலும் மதிப்பும் இன்னும் கூடவே செய்யும்!


திருவரங்கம் - இராமானுசர் பள்ளிப்படுத்தப்பட்ட இடம்


ஸ்ரீபாஷ்யம் எழுதத் துவங்கிய காலம்! மூல நூலான போதாயன விருத்தியை, இராமானுசர் நடையாய் நடந்து வாங்கிய பின்னால், சிறிது நாளிலேயே களவாடிக் கொண்டார்கள்!
அட, இதுவும் வேதம் தானே! விரிவுரை சொல்லிவிட்டுப் போகட்டுமே-ன்னு கூட அந்த வைதீகோத்தமர்களுக்குத் தோனவில்லை!
வேதமா முக்கியம்? தங்கள் உள்ள உகப்பு தானே இவிங்களுக்கு எப்பவும் முக்கியம்! தமக்கும், தம் நம்பிக்கை/பழக்க வழக்கங்களுக்கும் சரிப்பட்டு வரும் வரை தான் வேதம்! :(

இப்போ என்ன செய்வது? முழுசாப் படிப்பதற்குள் மூல நூல் திருடு போய் விட்டதே! எப்படி குருவான ஆளவந்தார் ஆசையை நிறைவேற்றி வைப்பது?
சமய சஞ்சீவியாக, எப்போதும் உடன் இருக்கும் நண்பரும்-முதன்மைச் சீடருமான கூரத்தாழ்வான் முன்னுக்கு வந்தார்!

"உடையவரே, தாங்கள் இரவில் படிக்கத் துவங்கிய போது, அசதியில் உறங்கி விடுவீர்கள்! அப்போது நான் பின் வரிசையாக, ஒவ்வொரு பாகமாகப் படித்து, உருவேற்றி விட்டேன்! ஒப்பிக்கிறேன்! கேட்கிறீர்களா? பிறகு நீங்களே முடிவுக்கு வாருங்கள்!"

இராமானுசருக்குப் போன உயிர் திரும்பி வந்தது!
குருவால் புகழ் பெற்ற சீடர்கள் பலர்! ஆனால் குருவுக்கே புகழ் சேர்த்த சீடர்கள் உண்டென்றால் அது உடையவரும்-அவர் சீடர்களும் தான்!
அந்த அளவுக்கு அங்கே அதிகாரம் காட்டாது, கொடுக்கல்-வாங்கல் இருந்தது! இனி பாஷ்யம் எழுத வேண்டியது தான் பாக்கி!

"கூரேசா, நான் ஸ்ரீபாஷ்யம் சொல்லிக் கொண்டே வருகிறேன்! வேதங்களில் இருந்தும், திருவாய் மொழியில் இருந்தும் என் விளக்கங்கள் அமையும்!
நீர் மூல நூலையும் வாசித்து உள்ளதால், நான் எங்கேனும் தவறான விளக்கம் சொல்லும் பட்சத்தில், என்னைத் தடுத்து நிறுத்தும்! சரியா?"

"ஐயோ! சுவாமி! உலகாசான்-ஜகத்குரு என்று ஊரே உங்களைக் கொண்டாடுகிறது! உங்கள் விளக்கத்துக்கு நான் மறுப்பு சொல்வதா? இதெல்லாம் சரிப்பட்டு வருமா? வேண்டாம் இராமானுசரே!"

"சரி! இப்படிச் செய்வோம்! நான் சொல்லும் விளக்கம், மூல நூலின் கருத்தோடு மாறுபட்டு இருந்தால், நீர் எழுதுவதை நிறுத்தி விடும்!
உடனே அது எந்த இடம் என்று நானும் புரிந்து கொள்வேன்! சரியா? இதனால் யாருக்கும் எந்தச் சங்கடமும் இல்லை!"



இதோ, விசிட்டாத்வைத கலங்கரை விளக்கமாக, ஸ்ரீபாஷ்யம் நிறைவுறும் நிலைக்கு வந்து விட்டது! உடையவர் பொழியும் பொழிவை, கூரேசன் வயற்காட்டுக்குப் பாய்ச்சி விடுவது போல், எழுதி விடுகிறார்! ஆனால்...ஆனால்...இன்று.....

கூரேசன் எழுதுவதை நிறுத்தி விட்டார்! பாஷ்யம் நிறையப் போகும் சந்தோஷத்தில் பொழிவைத் தொடர்ந்து கொண்டே இருந்த உடையவருக்கு அதிர்ச்சி!
தான் போட்டுக் கொடுத்த திட்டப்படி தானே கூரேசன் செய்கிறார் என்பது கூட மறந்து போனது! பாஷ்யம் முடிய வேணுமே என்ற பேராவல் மட்டுமே ததும்பும் நிலையில்...

"கூரேசா, தொடர்ந்து எழுதும்!"

மெளனம்...

"கூரேசா..."

"சுவாமி, ஜீவாத்மாவை ஞானம் மிக்கவன், ஞானம் மிக்கவன் என்று தான் சொல்லிக் கொண்டே இருக்கிறீரே அன்றி...
பரமாத்மனைச் சரணம் அடைந்து இருப்பதே அந்த ஞானத்தின் பயன் என்று விரிக்கவே இல்லையே! அதான்....."

"ஓ...அதான் உம்ம கை மறுக்கிறதா? பலே! அப்போ நான் எதற்கு? பாஷ்யத்தை சுயமாக நீரே எழுதிக் கொள்ளும்!"

எங்கிருந்து தான் அப்படியொரு கோவம் வந்ததோ இராமானுசருக்கு!
கோவமே வராதவர்களுக்கு கோவம் வந்தால்?
அதுவும் தப்பு செய்யாதவன் மேல் தப்பு செய்தான் என்று கோவம் வந்தால்???

உடையவர் விறுவிறு என்று எழுந்து, கூரேசன் கையில் இருந்த ஓலையெல்லாம் வீசி எறிந்து விட்டு, ச்சீ, நன்கு முடியப் போகும் தக்க சமயத்தில் இப்படி ஒரு தடையா என்று கடுப்புடன் வெளியேறி விட்டார்!

கூரேசனுக்கு மூச்சே நின்று போனது!
அய்யோ! நீங்க ஆரம்பிக்கும் போது சொன்னீர்களே! அதைத் தானே நானும் செஞ்சேன்?-என்று தன் பக்க நியாயங்களைச் சொல்லக் கூட, அவருக்கு வாய் வரவில்லை!
பரிபூர்ண சரணாகதர்களின் லட்சணம் இது தான்! தன்னைத் தான் காத்துக் கொள்ளத் தெரியாத நிலை! "தன்னை அவன் கதிக்கே" விட்டு விடும் நிலை!

"என்ன ஓய் கூரேசரே, இராமானுஜர் இப்படிக் கோவப்பட்டு நாங்க பார்த்ததே இல்லைங்காணும்! இனி நீர் என்ன செய்யப் போகிறீர்?
ரொம்ப பணிவானவர் போல வளைய வந்தீரே! இராமானுஜரையே எதிர்க்கும் அளவுக்கு அடடா என்னவொரு பணிவய்யா உமக்கு! குட்டு வெளிப்பட்டுருச்சி-ங்காணும்! பேசாம மடத்தைக் காலி பண்ணிட்டு போம்!"

எள்ளல்கள்!!! கருடன், சரணாகதியில் ஒடுங்கி இருந்தால்...மண்புழு கூட "கருடா செளக்கியமா"-ன்னு கேட்கும் அல்லவா? :)

"என்னது?....அவரே கோபித்தாலும்....அவரை விட்டுப் போவதா?.....ஹைய்யோ!
எத்தனையும் வான் மறந்த காலத்தும், பசும் பயிர்கள்
மைத்தெழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும்!
உன் அந்தமில் சீர்க்கு அல்லால்.....வேறெங்கும் அகங் குழைய மாட்டேனே!
என் பால் நோக்காயே ஆகிலும்.....உன் பற்றல்லால் பற்றில்லேன்!

என் வாழ்வோ தாழ்வோ,
உன் கையால் நடப்பது என்னவோ,
அதுவே எனக்கு இனியது, இனி எது, இனி அது...கேட்கின்...?"


அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால், எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும், சச்சரவு உண்டாகி விடுகிறதே...அதுவும் இந்த அறிவியல் காலத்திலேயே!
கருத்தைக் கருத்தாக மட்டுமே பார்க்காது...
மாற்றுக் கருத்து சொன்னாலே, மாற்றான் ஆக்கி விடும் நிலைமை! ஒரு வேளை இராமானுசரும் அப்படிப் பட்டவர் தானோ?

இராமானுசர் எழுந்து அவர் அறைக்குச் சென்று விட்டாரே தவிர, அவருக்கு எதுவுமே நிலை கொள்ளவில்லை! மறுபடியும் மறுபடியும் அதே யோசனை!

"கூரத்தாழ்வான் அப்படிப்பட்டவன் இல்லையே! தன் சொத்தையெல்லாம் விட்டுவிட்டு என் பின்னால் வந்தவன், இன்று மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேணும்? அப்படி என்ன நான் தப்பாகச் சொல்லி விட்டேன்? ஞானத்தை முதலில் சொல்லி, இன்னும் சிறிது நேரத்தில் சரணத்தைப் பற்றிச் சொல்லத் தானே போகிறேன்! அதற்குள் என்ன அவசரம்?"

ஆலயத்தில், சாற்றுமுறையில், கோயில் திருவாய்மொழி ஓதும் சத்தம் கேட்கிறது!
ஒண்சங்கு கதை வாள் ஆழியான்
ஒருவன் அடியேன் உள்ளானே!!
அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கல்லாம்
படியன் அல்லன் பரம் பரன்!!!

"ஆகா...ஆகா...இதைத் தானே கூரேசனும் சொன்னார்?
"என்"னுள்ளும் இறைவன் உள்ளான்-ன்னு சொல்லாது,
"அடியேன்" உள்ளான் என்று வருகிறதே மாறன் மொழி! அப்படீன்னா...அப்படீன்னா...

"என்" ஞானம் என்று ஒன்றும் கிடையாது!
"என்" கர்மம் என்ற ஒன்றும் கிடையாது!
அதான், இறைவன், "என்"-உள்ளான் என்று சொல்லாது
"அடியேன்"-உள்ளான் என்கிறாரோ நம்மாழ்வார்?

ஆகா! ஒரே சொல்லில், ஒத்தைச் சொல்லில்...
அவன் "அடிக்"கீழ் நாம் இருப்பதைக் காட்டி...
அப்படி "அடிக்"கீழ் இருக்கும் நமக்காகவே, அவனும் இருப்பதைக் காட்டி...
"அடி"யேன் உள்ளான்! "அடி"யேன் உள்ளான்!!

ஓ! ஞாபகம் வருது! வேதத்திலும் பகவத் சேஷ பூத: ஜீவ: என்று தான் வருகிறது அல்லவா! அடா, அடா, அடா! வேதத்தில் கூட நாலு சொற்கள்!
நம்மாழ்வார் எப்படி இவ்வளவு அழகா, நறுவிசா, திராவிட வேதத்தில், ஒரே சொல்லால்? - அடியேனுள்ளான்! அடியேனுள்ளான்!

கூரேசன் சொன்னது சரியே! கூரேசன் சொன்னது சரியே!
நாம் தான் அவசரப்பட்டு விட்டோம்! ஐயோ! கூரேசன் மனம் என்ன பாடுபட்டிருக்குமோ? கூகூகூரேசா....."



இராமானுசர் விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறார்! அங்கே கூரேசன், கண்களில்.....வழிய....
பசியிலும், தனிமையிலும், "அவரே" என்று ஒடுங்கிய நிலையில்.....

"கூரேசா! என்னை மன்னித்து விடும்! என்னை மன்னித்து விடும்!"

"ஐயோ! சுவாமி, என்ன இது? உம்ம கண்ணில் இருந்து எதுக்கு இப்படி தண்ணி கொட்டுது? என்ன ஆயிற்று?"

"உம் கண்ணில் இருந்து கூடத் தான் தண்ணீர் கொட்டுது? என்னை மட்டும் கேட்கிறீரே?"

"சுவாமி..."

"ஒன்னும் பேச வேணாம்! நான் தான் அப்பவே சொன்னேன்-ல்ல? மூல நூலில் இருந்து நான் விலகிச் சென்றால், எழுதுவதை நிறுத்தி விடும், புரிந்து கொள்கிறேன்-ன்னு! அதை எனக்கு எடுத்துச் சொன்னால் என்னவாம்? எதுக்கு நான் திட்டிய போதும் மெளனம் காத்தீர்?"

"உங்கள் முக வாட்டமும், கோபமும் கண்டு, எனக்கு தற்காத்து கொள்ளக் கூட, பேச வரவில்லை! கண்ணீர் தான் வந்தது! அதான்....."

"ஐயோ! கூரேசா! இப்படியா இருப்பார்கள்?
உம்மைத் திட்டிவிட்டு, நான் மட்டும் உம்ம யோசனை இல்லாமல் இருப்பேனா? அரங்கன் சன்னிதி ஓதல் காட்டிக் கொடுத்து விட்டது! - அடியேனுள்ளான், அடியேனுள்ளான்! திருவாய்மொழி சொல்வது அதுவே! நீர் சொன்னதும் அதுவே!

இதோ, என் கருத்தை நான் மாற்றிக் கொள்கிறேன்! ஸ்ரீபாஷ்ய உரையை மாற்றிச் சொல்கிறேன்! தொடர்ந்து எழுதும் கூரேசா! எனக்காக, இந்த இராமானுசனுக்காக...தொடர்ந்து எழுதும்!"


* அறிவுச் செய்தியில் அபிப்ராய பேதம் வந்தால்? = "நெருக்கமா"னவர் "வெறுக்க"மானவர் ஆவாரா?
* மாற்றுக் கருத்து வந்தால்? = மனத்துக்கு இனியான், மாற்றான் ஆகி விடுவானா?
* மாற்றுக் கருத்து....சரியானது என்னும் பட்சத்தில்...மாற்றிக் கொள்ள மனம் இடங் கொடுக்குமா? எப்போது இடங் கொடுக்கும்?

காரேய்க் கருணை மனத்தில் இருந்தால்...இடம் கொடுக்கும்! "அடம்" கொடுக்காது! "இடம்" கொடுக்கும்!

காரேய்க் கருணை இராமானுசா இக் கடல் நிலத்தில்
யாரே அறிவர் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்துற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராம்! அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!

அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!
இராமானுசர் திருவடிகளே சரணம்!
Read more »

Friday, February 26, 2010

(பழைய * பதிவு) - "அவள்" கண்களா? "அவன்" கண்களா? - 2

அவள் கண்ணைக் காட்டிலும் அழகிய சிறை உலகத்தில் வேறு இல்லவே இல்லை என்று சாதித்தான் தனுர்தாசன்! என்ன நினைச்சாரோ தெரியலை! அவன் கையைப் படக்-கென்று பிடித்து...இழுத்துக் கொண்டு வருகிறார்...கூடவே அவளும்...ஈடு கொடுத்து ஓடி வருகிறாள்!

சிலர் பதறுகிறார்கள்! "ஐயோ, இவன் மல்யுத்தம் செய்யும் முரடானாச்சே! இவனைத் தொட்டதும் இல்லாமல், ஆலயத்துக்கு வேறு ஜோடியா இழுத்துக்கிட்டு வராரே! இவர் வந்ததில் இருந்து எல்லாமே தலைகீழா-ன்னா நடக்கிறது??? இவரைக் கேட்பார் எவருமே இல்லியா?"

இந்தக் கதையின் முந்தைய பாகம் இங்கே!
அந்தப் பதிவு வந்து ஒன்னரை வருஷம் ஆச்சு! அப்போ அடியேனின் தமிழ்மண நட்சத்திர வாரம்! :)
அந்தப் பதிவில் நடைபெற்ற ஒரு சிலரின் கும்மிகளால், கதையை எழுதி வைத்திருந்தாலும், அப்போது வெளியிடவில்லை! இன்று...இதோ...அந்தப் (பழைய)நட்சத்திரப் பதிவு! :)

இதை இன்னிக்கி வெளியிட வேண்டிய அவசியம் என்னா-ன்னு கேட்கறீங்களா?
இன்று தான் அந்தக் கதை நாயகனின் பிறந்த நாள்! (மாசி ஆயில்யம்! Feb 26, 2010) - Happy Birthday Dhanur Daasa! :)
பிள்ளை உறங்கா வில்லி தாசனே! - பின்னாளில் திருவரங்க ஆலயத்துக்கே "மேலாளன் ஆன வேளாளனே"! உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!



இருள் மயங்கும் வேளை! அருள் முயங்கும் வேளை!
அவன் கையைப் படக்-கென்று பிடித்துக் கொண்டார்...விறுவிறு என்று இழுத்துக் கொண்டு வருகிறார்...கிடுகிடு கிடுவென்று...

தெற்கு வாசல் தாண்டி, ஆலிநாடன் வீதி தாண்டி,
ரெங்க விலாச மண்டபம் தாண்டி, கருட மண்டபம் தாண்டி,
ஆர்ய படாள் வாசல் தாண்டி, சந்தனு மண்டபம் தாண்டி,
மேலப் படிகள் ஏறி, கிளி மண்டபம் தாண்டி,

இதோ வந்தாகி விட்டது காயத்ரி மண்டபத்துக்கு!
24 காயத்ரி எழுத்துக்களும் 24 தூண்களாய்த் தாங்கும் பேரமைதிக் கருவறை!
அதன் மேல் அந்த ஓங்கார விமானம்!
ஓம் என்பது போலவே வளைந்து நெளிந்த....பிரணவாகார ரங்க விமானம்!

குறுகிய வாசல்! உள்ளம் உருகிய வாசல்!
நெய் தீப மணமும், துளசீ மணமும் துளைக்கின்றது!
வட-தென் காவேரிக் குளிர்ச்சி உள்ளேயும் சிலிர்க்கிறது!
வீணை ஏகாந்தம் இந்த இரவிலும் இசைக்கிறது!

ஆயர்ப்பாடி வெண்ணெய் வீச்சம் கருவறையில் வீசுகிறது!
பச்சைக் கர்ப்பூர நெடி...அன்று கோதையின் பச்சை உடம்பை என்னமோ பண்ணியதே! இன்று என் உடம்பையும் என்னமோ செய்கிறதே!!!

தனுர்தாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை!
"அவளை விட அழகிய கண்ணைக் காட்டுறேன்-ன்னு சொன்னவரு, இங்கே கூட்டிக்கிட்டு வராரே! மாடத் தெரு ஆடலாளியைக் காட்டுவாரு-ல்ல நினைச்சோம்"! - அந்தப்புரம் என்று எண்ணி வந்தவன் நொந்தப்புரம் ஆனான்!
ஆனால்...ஒரே விநாடி தான்....திரை விலகியது.....அய்யோ.....

கரிய..பெரிய..உரிய..விரிய..சரிய..தெரிய..அரிய..உருவம்!!
ஜென்ம ஜென்மத்துக்கும்....
மெல்லிய தீபம், அசைத்து அசைத்துக் காட்டப்படுகிறது!
பாதத்தில் ஜொலிக்கும் தீபம்....சிறிது சிறிதாக மேலேறுகிறது!!

* திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
* சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே
* உந்தி (தொப்புள்) மேலதன்றோ அடியேன் உள்ளத்தின் உயிரே
* திருவயிற்று உதர பந்தனம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

"தனுர்தாசா...என்ன சிலையாக நின்று விட்டாய்? என்ன காண்கிறாய், சொல்?"

* ஆர மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே
* கண்டம் (கழுத்து) கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே
* செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

"என்ன தடுமாறுகிறாய்? அருகில் இதற்கென்றே உள்ள இரண்டு திருமணத் தூண்களைப் பிடித்துக் கொள்! விழுந்து விடாதே! சொல், சொல்...என்ன செய்கிறது?"

பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!
பெரிய வாய கண்கள்..........என்னைப் பேதைமை செய்தனவே!!





அரங்கனின் பெருந்தாமரைக் கண்களின் நேராக நேத்ர தீபம் சுழல்கிறது!
நாமும் சுழல்கிறோம்!
நம் மனசென்னும் ஆழியுட் புக்கு...முகந்து கொண்டு ஆர்த்து ஏறி, ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழையாய்...
நேத்ரானந்த தீப சேவை!

ஒன்று மறந்தறியேன் ஓதநீர் வண்ணனை நான்,
இன்று மறப்பேனோ ஏழைகாள்? - அன்று
கருவரங்கத்து உட்கிடந்து கைதொழுதேன் கண்டேன்
திருவரங்கத்து மேயான் திசை!!!

"என்னது? பெரியவாய கண்களா?
அடேய்....நீ கண்டாயா? கண்டு என்ன செய்தாய்? சொல்! தனுர்தாசா....சொல்!"

"கண்டேன்! கண்டேன்! நாடி நான் கண்டு கொண்டேன்!
என்னையே பார்க்கும் கண்கள்! என்னையே விழுங்கும் கண்கள்!
இல்லை இல்லை! உலகையே விழுங்கும் கண்கள்!
ஐயோ! கரியவனின் பெரிய வாய கண்கள்!"

கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும், முடிவில்லதோர் எழில்
நீலமேனி...ஐயோ....நிறை கொண்டது என் நெஞ்சினையே!


"என்னது ஐயோ-வா? எதற்கு ஐயோ என்று சொல்கிறாய்?"

"தாங்க முடியவில்லை சாமீ! நடுங்குகின்றேன்! என்ன செய்தீர்கள் என்னை?
என் கண்கள் அந்தக் கண்களோடு ஒட்டிக் கொண்டது போல் இருக்கே!
வைத்த கண்ணை மீண்டும் எடுக்க முடியவில்லையே!
அந்தக் கண்களே வெள்ளைப் பாற்கடல் போல் இருக்கே!
அந்த வட்ட விழி - நட்ட நடு - கருமணியில்.....நானும் தெரிகிறேனே!"

"ஓ! அந்தக் கண் மேல் உந்தன் கண்ணை வைத்து விட்டாயா?
இனி, அவனும் உன் மேல் கண்ணை வைத்து விட்டான்!
இனி, உன்னைக் கன்ணுள் வைத்துத் தாங்குவான்!
இனி, என்ன செய்யப் போகிறாய் தனுர்தாசா?"

என் அமுதினைக் கண்ட கண்கள்,
மற்று ஒன்றினைக் காணாவே!
மற்று ஒன்றினைக் காணாவே!!
மற்று ஒன்றினைக் காணாவே!!!

திரையிடப்பட்டது! முறையிடப்பட்டது!
அரங்கனில் கிறங்கினான்! அங்கேயே உறங்கினான்!


மல்யுத்த வீரன், மல்லாண்ட திண்தோள் தனுர்தாசன், இராமானுசரின் சீடர்களுள் ஒருவனாகச் சேர்ந்து கொண்டான்!
குருவை...அவன் தேடிப் போகவில்லை! அவனைத் தேடி...குரு வந்தார்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

இன்று போலி குருக்களைத் தேடி, போலியாய் அலையும் பலரும் கவனத்தில் கொள்ள வேண்டியது இது!
குருவைத் தேடித் தேறவும் முடியுமா? குரு போலியா இல்லையா என்று கண்டுபிடிக்கும் ஞானம் இருந்திருந்தால் நீயே குருவாக ஆகியிருப்பாயே!
அந்த ஞானமே இல்லாத போது, நீ எதை வைத்து ஒரு குருவைச் சோதிக்க முடியும்?

உன் பேராசைகள் நிறைவேறுமா என்று மை போட்டுப் பார்க்கவல்ல குருவைத் தேடி அலைகிறாயா?
பேராசையாக அலைந்தால், பேராசிரியர் தான் கிடைப்பார்!
பேர் ஆசிரியர் - பேருக்கு ஆசிரியர் - பேராசைப் பேராசிரியர்!


அதனால் "நல்ல" குருவை எடை போட்டுத் தேடி "அலையாதே"!
தாகமாய் இரு! தண்ணீர் கிடைக்கும்!!
மாணவனாய் இரு! ஆசான் கிடைப்பார்!!
குரு இல்லை என்றால்...வாழ்க்கைப் பாடங்களையே...இறைவன் உனக்கு குருவாக ஆக்குவான்!
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!


தனுர்தாசன் பெரிய பண்டிதன் கிடையாது! முரட்டு மல்லன்!
அவனைச் சேர்த்துக் கொண்டு் அரசவை வாதப் போரில் எல்லாம் வெல்ல முடியாது!
ஆனாலும் குழாத்தில் அவனையும் சேர்த்துக் கொண்டார் இராமானுசர்!
பயன் அன்று ஆகிலும், பாங்கு அல்லன் ஆகிலும், திருத்திப் பணி கொள்வது தானே குருவின் சிறப்பு!

சீடனின் உள்மனம் குருவுக்குத் தெரியும்! அங்கு கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லவே இல்லை! இது தெரியுமா, அதைப் படிச்சிருக்கியா என்றெல்லாம் ஒன்னுமே கேட்கவில்லை!
முக்கியமாக "உன் குலம்-கோத்திரம் என்ன? கலை-ஆசார்யன் என்ன?" என்ற கேள்வி எல்லாம் எழவே இல்லை!
சீடர்களுள் சீடராய்ச் சேர்த்துக் கொண்டார்!
தனுர் தாசன் என்று இருந்தவனை, "பிள்ளை உறங்கா வில்லி" என்னும் தூய தமிழ்ப் பெயராக மாற்றிக் கொடுத்து, தீட்சையும் அளித்து விட்டார்!

ஆனால் அவனுக்கு குடும்பம்-ன்னு ஒன்னு இருக்கே!
என்ன தான் அவள் நடன மங்கையாக இருந்தாலும்,
சாத்திரத் திருமணம் செய்து கொள்ளவில்லை ஆயினும்...
அவள்-அவன்...இருவரும் ஆருயிர் காதல் துணைகள் ஆயிற்றே!
ஹேமாம்பா என்ற அவளுக்கும் "பொன்னாச்சி" என்று தீட்சை அளித்து விட்டார்!

இருவரையும் இராமானுசர் பிரிக்கவில்லை! அதே சமயத்தில் தம்பதிகளை மடத்திற்குள்ளே சேர்க்காமல், தனி இல்லத்தில் குடியிருத்தினார்!
காதலன்-காதலி இருவருமே தொண்டில் சிறந்து, சிறிது நாளில் பலரின் நன்மதிப்பையும் பெற்றனர்!


என்ன தான் வில்லியைச் சேர்த்துக் கொண்டாலும், அவன் கட்டை உருவம், நாலாம் வருணம் என்ற எண்ணம் சில சீடர்கள் மனத்தில் உறுத்தலாகவே இருந்தது போலும்!

அவனிடம் அதிகம் பேசிக் கொள்ளாமல் ஒட்டி உறவாடாமல், "தங்களுக்குள் மட்டும் தனிக் கோஷ்டியாக" இருந்தனர்!
மனதுக்குள் சிரித்துக் கொண்ட இராமானுசர், அவர்களை அடக்கித் திருத்த வேறு வழிகளைக் கையாண்டார்...

தினமும் ஆற்றில் குளிக்கப் போகும் முன், அந்தணச் சீடனின் தோள் பற்றி நடப்பார்!
குளித்து முடித்த பின், வில்லியின் தோள் பற்றி நடந்து வருவார்!
அச்சோ...குளிச்சி முடிச்ச பிறகும் இப்படித் தீட்டாயிடுத்தே-ன்னு சொல்லாத முடியாத படிக்கு,
பேச்சால் பேசிக் கொண்டிராமல், செய்கையால் சாதியின் வாயை அடைப்பது, இராமானுசருக்கு, கை வந்த கலை!

"சுவாமி, நீங்க அந்த வில்லிக்கு ரொம்பவே இடம் கொடுக்கறீங்க"

"ஏன்? கொடுத்தா தப்பா சிஷ்யர்களே? வில்லியின் பண்பட்ட மனம் இங்கே யாருக்காச்சும் இருக்கா?"

"அப்படி என்ன பண்பட்டுட்டான் அவன் மட்டும்?"

"சொல்கிறேன்...இப்போது போய்த் தூங்குங்கள். பின்னிரவு ஆகி விட்டது!"

சீடர்கள் தூங்கச் சென்றார்கள்! சிறிது நேரம் கழித்து உடையவர் தானே சென்று, அத்தனை பேரின் மேலாடையிலும் கத்திரிக்கோலால் சிறு சிறு துண்டுகள் போட்டார்!
தீராத விளையாட்டுப் பிள்ளை! உடையவர் மடத்திலே சீடருக்கு ஓயாத தொல்லை! :)

மறுநாள் காலை...மடத்தில் சுப்ரபாதமா ஒலித்தது? இல்லையில்லை!
கேட்கக் கூசும் வசவு வார்த்தைகள் ஒலித்தன!
சீடர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டே இருந்தனர்.

"சீடர்களே, சாதாரண ஒரு நூல் துண்டுக்கா இத்தனை பேச்சு பேசுகிறீர்கள்? தகுமா இது?
பல நூல் கற்ற நீங்கள், சில "நூலுக்கு", உயர் நூலை அடகு வைத்தீர்களே!
ஆக, உங்கள் யாவருக்கும் இது நாள் வரை.......
வாய் தான் மறையோதிற்றா? மனம் ஓதவில்லையா?"

"குருவே!"

"சரி சரி, உங்களைச் சோதிக்க நான் தான் ஆடைகளைக் கத்தரித்தேன்! நீங்கள் பேசிய இழிசொல் அத்தனையும் என்னையே சேரட்டும்!
உம்ம்ம்..முரட்டு மல்லன் வில்லி கூட இப்படி எல்லாம் பேசியதில்லை!"

"ஆசார்யரே...அய்யோ...மதி இழந்தோம்! கேவலமாய் நடந்து கொண்டோம்! மன்னியுங்கள்! இப்போதே வில்லியிடம் சென்று மன்னிப்பு கோருகிறோம்!"

"வேண்டாம்! அவன் லட்சணம் என்ன என்பதையும் ஒரு கை பார்த்து விடுவோம்!
இன்று இரவு வில்லியை நான் மடத்துக்கு அழைத்துப் பேசப் போகிறேன்!
அந்தச் சமயம் பார்த்து நீங்கள் அவன் வீட்டுக்கு மாறுவேடத்தில் சென்று, பொன்னாச்சியின் நகைகளை திருடிக் கொண்டு வாருங்கள்!"

"என்ன! திருட்டா? குருவே..."

"உம்...சொன்னதைச் செய்யுங்கள்! ஆசார்யரின் ஆக்ஞை!"



வில்லி அலறி அடித்துக் கொண்டு ஓடி வருகிறான்! கையில் நகை மூட்டை!

"சாமீ, உங்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, என் வீட்டில் யாரோ சில கொள்ளையர்கள் புகுந்து களவாடியுள்ளனர்!
உறங்கிக் கொண்டிருந்த பொன்னாச்சி எழுந்து பார்த்து அலற நினைத்தாள் போலும்!
ஆனால் கொள்ளையர்கள் நாமம் தரித்து, திருச்சின்னங்கள் தாங்கி இருப்பதைப் பார்த்து அமைதியாகி விட்டாள்!

படுத்துக் கொண்டிருந்தவள், சரி தன் மேலுள்ள நகைகளையும் எடுத்துக் கொள்ளட்டுமே என்று திரும்பிப் படுத்தாள் போல!
ஆனால் அவள் அசைவு கண்டு அவர்களோ பயந்து ஓடி விட்டார்கள்!

இது என்ன சோதனை சுவாமி? பூலோக வைகுந்தம் என்று சொல்வீர்களே!
அரங்கத்திலா இப்படித் திருட்டு நடக்கிறது?
அதுவும் அடியார்கள் போல் தோற்றம் அளிப்பவர்கள் இப்படிச் செய்வது நமக்கு அல்லவா இழுக்கு??

அதான் பொன்னாச்சியின் சம்மதத்தோடு அத்தனை நகைகளையும் மூட்டை கட்டி எடுத்து வந்து விட்டேன்! இதை ஏற்றுக் கொண்டு அந்த ஏழைப்பட்ட அடியார்களிடம் கொடுத்து விடுங்கள்!
அன்னதானம் போன்ற திருப்பணிகளும் செய்ய வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்! அப்படிச் செய்தால் திருட்டு ஒழிந்து, நம் இயக்கம் காப்பாற்றப்படும்".

இராமானுசர் மற்ற அத்தனை சீடர்களையும் திரும்பி ஒரு பார்வை பார்க்க...
அனைவருக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது!
இத்துப் போன மேல் துண்டுக்குச் சத்தம் போட்ட நாம் எங்கே?
சத்தம் போட்டுத் தாக்குவதே தொழிலாகக் கொண்டிருந்த வில்லி எங்கே?

சீடர்கள் அத்தனை பேரும்...குலம் பார்க்காது...
வில்லி தாசனின் காலில்...
நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்க,
நடந்த நாடகத்தை ஏதுமறியா வில்லி விழி விழியென விழித்தான்!

இராமானுசர் நடந்தது அத்தனையும் அவனுக்கு விவரித்தார்! இனி அடியவர் கூட்டத்தில் எவரும் குல விசாரிப்பு செய்யக் கூடாது என்பதை அப்போதே சட்டமாக இயற்றினார்!

"அடியவரைக் குலப் பரிசோதனை செய்பவன், பெற்ற தாயை...யோனிப் பரிசோதனை செய்தவனுக்கு ஒப்பாவான்!!!"
என்று அவர் அதிரடியாக முழங்கியதைக் கேட்டு ஸ்ரீரங்கமே அதிர்ந்து போனது!
அப்படி ஒரு வார்த்தை எம்பெருமானார் இராமானுசர் வாயில் இருந்து வரும் என்று எவரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்!

கொஞ்ச நாளில், வில்லி சிறந்த மாணாக்கனாகத் தேறி வைணவ நூல்களை இயற்றும் அளவுக்குத் திறமை பெற்றான்! திருவரங்க கோயில் கொத்தின் மேலாளன் ஆனான்!
பொன்னாச்சியோ மகளிர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, ஊர் ஊராகச் சென்று ஆழ்வார் பாசுரங்களை நாட்டியம் செய்து பாடிப் பரவினாள்! அவர்கள் காதல் ஈரப் பாசுரம் போல் ஈரமாகவே வளர்ந்தது!

மேலிருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் - கீழிருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்!


எம்பெருமானார் திருவடிகளே சரணம்!
பொன்னாச்சி உடனுறை பிள்ளை உறங்கா வில்லி தாசன் திருவடிகளே சரணம்!!
Read more »

Friday, June 05, 2009

பிறந்தநாள்: குல முதல்வன்! தாமிரபரணித் தலைவன்!

யாருப்பா தாமிரபரணித் தலைவரு? பதிவுலகில் தாமிரபரணி தண்ணிக் குடிச்சவங்க பல பேர் உண்டு! ஆனா அவிங்க எல்லாம் தலைவர் ஆயிட முடியுமா? எங்க தலைவர் மாதிரி வருமா? அதுவும் பதினாறு வயசுத் தலைவர்! அவர் பேச்சுக்கு உருகாதவங்களே கிடையாது! அவர் திருவாய் மொழிக்கு உருகாதார் ஒருவாய் மொழிக்கும் உருகார்! அவருக்குத் தான் இன்னிக்குப் பிறந்த நாளு! (Jun-05, வைகாசி விசாகம்)

Happy Birthday MaaRa! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், குல முதல்வன் நம்மாழ்வாரே! :)

* அப்படியே என் கட்டிளங்காளை முருகப் பெருமானுக்கும் இன்னிக்குத் தான் பிறந்தநாள்! Happy Birthday Muruga! :)
* காஞ்சிப் பெரியவர் என்று போற்றப்படும் மறைந்த ஆச்சார்யர் பிறந்தநாள் நாளை (அனுஷம்)!
** அப்படியே அம்மாவுக்கும்-அப்பாவுக்கும் இன்று திருமண நாளும் கூட! Happy Wedding Day, My Big Children! :)



பொருநை என்னும் தாமிரபரணி நதி! சுழித்துச் சுழித்து ஓடும் இளமங்கை! அரங்கனின் காவிரியை விட, ஆழ்வாரின் பொருநை அழகு!
பொருநைத் துறைவன்! யமுனைத் துறைவனைக் காட்டிலும் உயர்ந்தவன்!
அவனுக்குப் பெற்றோர் இட்ட பெயர் மாறன்! அரங்கன் இட்ட பெயர் நம்-ஆழ்வார்! அவனே குல முதல்வன் ஆனான்!

பொதுவாக இந்தியச் சமயங்களிலோ, தத்துவங்களிலோ, அதன் முதல்வர்கள் பெரும்பாலும் அந்தணராகத் தான் இருப்பர்!
அதில் பெரிதாகத் தவறொன்றும் இல்லை! சமய ஆராய்ச்சியும் தொண்டும் செய்து, அதற்கென்றே இருந்தவர்களைத் தான் அந்நாளில் தலைவராகக் கொண்டனர் போலும்!

ஆதி சங்கரர், இராமானுசர், மாத்வர், சுந்தரமூர்த்தி நாயனார் என்று பலப்பல எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்!
ஒரு அருணகிரியோ, அப்பரோ, சமயத் தலைவராக வந்ததில்லை! அவர்களுக்குத் தனிப்பட்ட மதிப்பளித்தாலும், அவர்களைத் தலைவராகத் தனியாகக் கொண்டாடியதில்லை!

ஆனால் "தாழ்ந்த குலம்", "சூத்திரர்", "நாலாம் வருணம்" என்றெல்லாம் சொல்லப்பட்ட ஒரு வேளாளக் குடும்பத்தில் இருந்து வந்து...
மொத்த சமயத்துக்குமே இவர் தான் தலைவன் என்றால்?
அதுவும் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இப்படி-ன்னா அது லேசுப்பட்ட விஷயமா என்ன?

வைணவக் "குல முதல்வன்" என்ற போற்றப்படுபவர் = வேளாளரான நம்மாழ்வார்!
அந்தணர், அந்தணர் அல்லாதார் என்று அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர் நம்மாழ்வார்!
கீதையின் தேர்த்தட்டு மொழியை விட அவரின் திருவாய் மொழிக்கு ஏற்றம் அதிகம்!

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க!
திருவாய் மொழிக்கு உருகாதார் ஒரு வாய் மொழிக்கும் உருகார்!

இத்தனைக்கும் இவர் ரொம்ப சின்னப் பையன்!
பதினாறு வயதில் பாடத் துவங்கி, முப்பத்து இரண்டு வயதில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஒரு வருத்தப்படாத வாலிபன்! அவனா குல முதல்வன்?

முதன் முதலில் தோன்றிய முதலாழ்வாரைச் சொல்லலாமே?
ஆண்டாளை மகளாகப் பெற்று, அரங்கனையே மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வாரைச் சொல்லலாமே? இத்தனைக்கும் அவர் அந்தணராச்சே!
அவர்களை எல்லாம் குல முதல்வன் என்று சொல்லாது, ஒரு சின்னப் பையன் நம்மாழ்வாரைச் சொல்வது ஏன்?

ஏன் மாறனுக்கு மட்டும் இத்தனை சிறப்பு? அவரை மட்டும் எப்படி அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்? இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்!
இன்னிக்கி பிறந்த நாள் என்பதால் தத்துவம் வேணாம்! சுவையான கதையைக் கேட்கலாமா?
ஊரையே காய்ச்சும் தாமிரபரணி ஆளுங்க ஒரு பக்கம்-ன்னா, அந்தத் தாமிரபரணித் தண்ணியையே காய்ச்சும் கதை! பார்க்கலாமா? :))



தாமிரபரணி ஆறுக்கு அம்புட்டு மகத்துவம்! அழகு + தெளிவு + உயிர்ப்பு! கனிம வளம், மருத்துவக் கூறுகள் கொண்ட வளம்-ன்னு அதன் பெருமையே தனி!
கண்ணனின் ஸ்ரீமத் பாகவதத்திலேயே நம்ம தாமிரபரணி சொல்லப்பட்டிருக்கு-ன்னு தெரியுமா?

தாமிரபரணீ நதி யாத்ர, கிருதமாலா, பயஸ்வினீ
கலெள கலி பவிஷ்யந்தி நாராயண பாராயண!
க்வசித்-க்வசின் மகாபாக திராவிடேஷூ பூரீச
ப்ராயே பக்தா பாகவதா, வாசுதேவே அமலாஸ்ரயா!

தாமிரபரணி நதி கொழிக்கும் திருநாட்டிலும், வைகை பாலாறு பாயும் தேசங்களிலே
கலியுகத்தில் கலியைப் போக்க, நாராயண பாராயணம் செய்ய சிலர் தோன்றுவார்கள்!
அங்கும் இங்குமாக திராவிட நாட்டிலே இந்த ஆச்சார்யர்கள் உதிப்பார்கள்!
பக்த-பாகவத கைங்கர்யத்தில் ஈடுபட்டு, வாசுதேவன் என்னும் நாராயணனில் "ஆழ்ந்து" போவார்கள்!

பின்னாளில், திராவிடத்திலே, ஆழ்வார்கள் உதிக்கப் போகிறார்கள் என்று முன் கூட்டியே சொல்லும் ஸ்ரீமத் பாகவத சுலோகம் இது தான்!
இப்படிப்பட்ட தாமிரபரணிக் கரையில் அன்னிக்குன்னு பார்த்து ஒரு முக்கியமான உரையாடல்...
**********************************************************************
மதுரகவிகள்: "ஆழ்வாரே! இப்படி அடியேனை வருத்தப்பட வைக்கலாமா? என்ன வயசு ஆகி விட்டது உமக்கு? முப்பத்திரண்டு தானே? அதற்குள் உலக வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றால் எப்படி?"

மாறன்: "ஹா ஹா ஹா! நான் வந்த பணி முடிந்ததால் மீண்டும் பரமபதம் செல்கிறேன்! இதில் உமக்கு என்ன வருத்தம் மதுரகவிகளே?"

மதுரகவிகள்: "எங்கோ வடநாட்டில் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தேன் நான்! இமயமலை போனால் தான் சிலருக்குப் பொய் ஞானம் வருமா? மெய் ஞானம் தாமிரபரணிக் கரையிலேயே கிடைத்து விடுமே-ன்னு, வானில் தோன்றிய ஒளி, என்னை இங்கு இழுத்துக் கொண்டு வந்தது..."

மாறன்: "ஓ...மலரும் நினைவுகளா? அதான் தெரியுமே! இந்த ஊருக்கு வந்து, அசையாது இருந்த என்னை நீங்கள் தானே அசைய வைத்தீர்கள்?
’இவன் வெற்றுச் சிறுவன்! தழலை ஓம்பும் அந்தணன் கூட அல்லன்! இவனுக்குப் பெரிதாக என்ன தெரிந்து விடப் போகிறது”-என்று சோதித்துப் பார்க்கத் தானே அப்படி ஒரு கேள்வியை எழுப்பினீர்கள்?"

மதுரகவிகள்: "ஆகா! ஆகா! அப்படியில்லை சுவாமி! அடியேன் பிறப்பால் வேணுமென்றால் அந்தணனாக இருக்கலாம்! ஆனால் செந்தன்மை பூண்டொழுகும் நீரல்லவோ மெய் அந்தணர்? நீரல்லவோ எம் குலமுதல்வன்?
நான் முதன்முதல் பார்த்த போது, நீர் பதினாறு வயது சிறுபிள்ளை! அசையாது புளியமரத்தின் கீழே யோகத்தில் உட்கார்ந்து இருந்தீர்கள்! உம்மை அசைக்க வேண்டியே அந்தக் கேள்வியைக் கேட்டேன்!"

மாறன்: "அந்தக் கேள்வியை இன்னொரு முறை சொல்லுங்கள் கவிகளே! என்ன அருமையான கேள்வி! நினைத்தாலே இனிக்கும்!"

மதுரகவிகள்: "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்...
எத்தைத் தின்று, எங்கே கிடக்கும்???"


மாறன்: "அத்தைத் தின்று, அங்கே கிடக்கும்!!!"

மதுரகவிகள்: "இந்த ஒற்றை வரிப் பதிலால் அல்லவோ அடியேன் ஆடிப் போனேன்!"



மாறன்: "ஹா ஹா ஹா! உண்மைக்கு என்றுமே ஒற்றை வரி தான்!
உண்மை, இறைவனைப் போலவே மிகவும் எளிமையானது!"

மதுரகவிகள்: "ஆமாம் ஆழ்வாரே! அதனால் தான் உங்கள் ஒரு வாய்மொழியான திருவாய்மொழியும் எளிமையாகவே உள்ளது!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! இதற்குத் தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள்! ஆகா!"

மாறன்: "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = உலக வாழ்வின் கர்மாக்களைத் தின்று, அது தீரும் வரை அங்கேயே உழன்று கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = ஆச்சார்யனின் மறைமொழிகளைத் தின்று, அவா தீரும் வரை அவர் அணுக்கத்திலேயே கிடக்கும்!
அத்தைத் தின்று அங்கே கிடக்கும்! = எம்பெருமானின் திருவடிகளைத் தின்று, ஏக்கம் தீரும் வரை அங்கேயே பற்றிக் கிடக்கும்!"

மதுரகவிகள்: "இப்படியெல்லாம் விதம் விதமாக வியப்பில் ஆழ்த்தினீர்கள்! இந்தச் சிறிய வயதில் இப்படி ஒரு ஞானமா? இத்தனை தெளிவா? என்று வியந்து போனேன்!"

மாறன்: "ஞானமும் கர்மமும் நமக்கு எதற்கு கவிகளே? பெற்றவளை ஞானத்தாலும் கர்மத்தாலுமா ஒருவன் அறிந்து விட முடியும்? பாவித்தால் அல்லவோ உறவு? பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே!"

மதுரகவிகள்: "அதான் தங்களைப் பாவிக்கிறேன் ஆழ்வாரே! ஆனால் நீர் தான் எம்மை விட்டுவிட்டு மேலுலகம் செல்வதில் உறுதியாக உள்ளீர்! அடியேன் என்ன சொல்லி உம்மை நிறுத்த?"

மாறன்: "பிள்ளைகளுக்குப் பெற்றோர் பேச்சைக் கேட்கத் தான் கசக்கும்! அதான் எம்பெருமானின் அவதாரங்கள் எடுபடுமாற் போனது!
பிள்ளைகளுக்குச் சக பிள்ளைகள் பேச்சைக் கேட்கத் தான் பிடிக்கும்! அதான் எம்பெருமான் இனி அவன் அவதரிக்காது, நம்மை அவதிரிப்பித்தான்!
நாமும் பிள்ளைகளுக்குப் புரியும் மொழியில், தமிழ் வேதத்தைக் கொடுத்தாகி விட்டது! நம் பணி முடிந்து விட்டது! இனி வரப்போவது தமிழ்ச் சமயத்தில் அடுத்த அத்தியாயம் தான்!"

மதுரகவிகள்: "செல்ல முடிவே கட்டி விட்டீர்களா?"

மாறன்: "கவிகளே! கவலைப்படாதீர்கள்! நீரும் உமது பணி முடித்து விரைவில் எம்முடன் வந்து சேர்ந்து விடுவீர்! அது வரை உமக்குத் துணையாக, எம்மைப் போல் ஒன்றைத் தருகிறோம்!
இதோ, இந்த கனிம வளமான, தாமிரபரணி ஆற்று நீரை இப்போதே காய்ச்சுங்கள்! எம்மைப் போல் ஒன்று உருவாகும்!"



மதுரகவிகள்: "ஆகா! இது என்ன வித்தியாசமான உருவமாக வந்து விட்டதே! இதைப் பார்த்தால் தங்களைப் போல் தெரியவில்லையே சுவாமி? வழவழ மழமழ என்று செதுக்கியும் செதுக்காமலும் ஒரு உருவமா?"

மாறன்: "ஆம்! இது நாம் அல்லோம்! இது நம்மைப் போல் ஒருவன்! நம்மை அத்தனை பேருக்கும் எடுத்துச் சென்று சேர்க்கப் போகிறவன்!
பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! கலியும் கெடும் கண்டு கொண்மின் என்று பின்னாளில் தோன்றப் போகிற உடையவன் இவனே! இவன் பெயர் பவிஷ்யதாச்சார்யன்! "பின்னாள் ஆசான்!"

மதுரகவிகள்: "ஆகா! இவர் பின்னாளில் தோன்றப் போகிறவரா? முன்னமேயே அறிவிக்கை செய்யப் போந்தீரே! தீர்க்க தரிசனமோ? அறிவுடையார் ஆவது அறிவார் என்பதல்லவோ குறள்?"

மாறன்: "ஆம்! மதுரகவிகளே! நீரும் நானும் செய்யாததை எல்லாம் இவர் செய்யப் போகுவார்! கைங்கர்யம் என்னும் திருத் தொண்டே இவர் லட்சணம்! லட்சுமணம்!
சாதிப் பாகுபாடு எல்லாம் அறவே நீக்கி, ஒருவர் விடாது, அனைவரையும் அரங்கனுக்கு ஆக்கும் செயல் வீரர் இவரே! இவரைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த உருவத்தை வழி வழியாக நாளைய தலைமுறையிடம் கொண்டு சேருங்கள்!"

மதுரகவிகள்: "மிக்க மகிழ்ச்சி சுவாமி! அப்படியே செய்கிறோம்! அடியேனுக்குத் தங்கள் உருவத்தையும் தந்தருள வேண்டும்!"

மாறன்: "மறுமுறை தாமிரபரணியைக் காய்ச்சி நம்மை பெற்றுக் கொள்ளும்! அடியேன் விடை பெறட்டுமா?!"

முடிச்சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய், நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே! கட்டுரையே!


அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
புகலொன்றில்லா அடியேன், உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே!

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவாவில் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே!



காய்ச்சிய தாமிரபரணி உருவம் தலைமுறை தலைமுறையாகக் கைமாறி, பின்னாளில் ஆழ்வார் சொன்னது போலவே, உடையவர் தோன்றினார்! நம்மை அவனுக்கு உடையவராக்கினார்!

குலமுதல்வன் நம்மாழ்வார் பெற்ற தாய் என்றால், இராமானுசர் வளர்த்த தாய் என்பார்கள்! இன்றும் முதல் தாய், இதத் தாய் என்றே இந்த இருவரையும் குறிக்கிறார்கள்!

வான் திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ் மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும் - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமானுசன்!

இன்றும், நெல்லைச் சீமை, திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்குப் போனால், ஆலயத்தில் தண்ணீரில் காய்ச்சிய திருவுருவைக் காணலாம்!
"பின்னாள் ஆசான்" என்னும் பவிஷ்யதாச்சார்யன் திருமேனியைக் கண்டு கைதொழலாம்!

செதுக்கிய சிலையாய் இல்லாமல், கையால் பிடித்த சிலையைப் போல், கூர்மையும் கூர்மையில்லாமலும், சாதாரண மானுட உருவம் போலவே இருக்கும்! இது தான் பின்னாளில் உடையவர் முகத்தையும் ஒத்து இருந்தது!

* தாமிரபரணி நம்மாழ்வாரை மட்டும் நமக்குப் பெற்றுத் தரவில்லை!
* நம்மாழ்வாரை நம் எல்லாரின் ஆழ்வாராய் ஆக்கிய இராமானுசனையும் பெற்றுத் தந்தது தாமிரபரணியே!

பொருநைத் துறைவன் பிறந்த நாள் அதுவுமாய்,
தமிழ்க் கடவுள் முருகப் பெருமான் பிறந்த நாள் அதுவுமாய்,
வேதம் "தமிழ்" செய்த மாறன் திருவடிகளே சரணம்!!!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP