Thursday, January 08, 2009

மார்கழி-24: தமிழ் அர்ச்சனை செய்யாதீங்க!

மக்களே, யாரெல்லாம் இன்னும் வைகுண்ட ஏகாதசி தூக்கக் கலக்கத்தில் இருக்கீங்க?:) ஒரு பெரிய கோஷமாப் போட்டு, தமிழ் அர்ச்சனை பண்ணாத அத்தனை பேரையும் இன்னிக்கு ஒரேயடியா எழுப்பிடறா நம்ம கோதை! :)
இந்தப் பாட்டு மிக விசேடமான பாட்டு! தமிழ் அர்ச்சனையின் மூச்சு!

* ஆலயங்களில் தமிழ் அர்ச்சனை செய்வது தகுமா?
* சும்மா மொழி வீம்புக்கு அரசாங்கம் இதை ஏற்படுத்தி வச்சிருக்கா?
* அரசாங்கம் இப்ப தான் ஆர்டர் போட்டுச்சி! ஆனா ஆயிரம் வருசம் முன்னாடியே, தமிழ் அர்ச்சனை நடந்து இருக்கே, திருவரங்கம் முதலான தலங்களில்?

* தமிழ் அர்ச்சனை ஆகமங்களுக்கு எதிரானதா?
* இதற்கு சமயப் பெரியோர்கள், ஆச்சார்யர்கள் ஒப்புவார்களா?
* ஆழ்வார்கள், நாயன்மார்கள், இராமானுசர் முதலான ஆசார்யர்கள் எல்லாம் ஒப்புதல் கொடுத்திருக்காங்களே?
* எல்லாத்துக்கும் மேலாக.....தமிழ் மந்திரங்களுக்கு "அதிர்வு" இருக்கா?


என்னடா இது, இவன் இப்படி அடுக்குறானே-ன்னு பாக்கறீயளா? முன்னர் இட்ட இந்தப் பதிவில் போய் பாருங்க! சுவையான அனானி உரையாடல்!
என்னென்னமோ போராடிப் பாத்து, எதுவுமே செல்லுபடி ஆகலைன்னு, கடைசியா, "தமிழ் அர்ச்சனையெல்லாம் இப்போ "புதுசா" எதுக்கு? இருக்குற படி இருந்துட்டுப் போகட்டுமே"-ன்னு அனானி அன்பர் காம்ப்ரமைஸூக்கு வந்தாரு! அவருக்கே இப்பதிவின் தலைப்பு சமர்ப்பணம்! :)

சரி, நாம கோதையின் உள்ளத்துக்கு வருவோம்! தமிழ் அர்ச்சனை பண்ணச் சொல்லிப் பலமாக ஊக்குவிக்குறா கோதை! - அதுக்கு முன்னோடி தான் இந்தத் திருப்பாவை!

நேற்றைய பாட்டில்...
* "கோயில் நின்று"-ன்னு நம்மைக் கொண்டு போய் நிறுத்தினாள்!
* "சீரிய சிங்காசனத்து இருந்து"-ன்னு அவனை இருத்தினாள்!
* "யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்"-ன்னு சங்கல்பமும் செய்து வைத்தாள்!

அர்ச்சனைக்கு முன் கேட்கப்படும் பேரு, நட்சத்திரம், கோத்திரம், சங்கல்பம்!
சங்கல்பம் = உறுதிமொழி!
அதாச்சும் ஒரு நல்ல நலனை/பலனை வேண்டி முறையிட்டுக் கொள்வது!

அனானி: "அட, கடவுளுக்கு எல்லா மொழியும் ஒன்னு தாம்ப்பா! எந்த மொழியில் முறையிட்டாலும் அவனுக்குத் தெரியாதா என்ன?" :)
அடியேன்: "ஹிஹி! கடவுளுக்கு எந்த மொழியில் முறையிட்டாலும் தெரியும் தாங்க! ஆனா நான் என்னா மொறையிடறேன்-ன்னு எனக்கே தெரிய வேணாங்களா?" :)))

நன்றாக நினைவில் இருத்துங்கள்: சங்கல்பம் + அர்ச்சனை = இறைவனுக்கு அல்ல! நமக்குத் தான்!
அதுக்காகத் தான் நம்ம ஊரு பேரு-ன்னு கேட்டு அர்ச்சனை செய்யறாங்க! நாம என்ன முறையிடுகிறோம் என்று நமக்கே தெரியலீன்னா எப்படி? :)

யார் பேருக்குச் சங்கல்பம் பண்ணிக்குறாங்களோ, அவங்களுக்கு உரிமையானது அல்லவா அர்ச்சனை? அவங்களுக்குப் புரியணும்-ல?
வீர்ய, வீஜய, ஆயுர், ஆரோக்ய, ஐஸ்வர்யாதி அபிவிருத்தயர்த்தம்-ன்னு வேண்டிக்கிட்டா, என்ன வேண்டிக்கறோம்-ன்னு அவிங்களுக்கு புரியணும்-ல?


சிவ கோத்ரஸ்ய
சிம்ம ராசீனாம்
பூர்வ பால்குனி நக்ஷத்ரே
சரவண் நாம்யாஹா

* சக குடும்ப க்ஷேமானாம்
* அஸ்ய யஜமானஸ்ய
* தைர்ய, ஸ்தைர்ய, வீர்ய, விஜய
* ஆயுள் ஆரோக்ய

* ஐஸ்வர்யாதி அபிவிருத்தி யர்த்தம்
* இஷ்ட காம்யார்த்த சித்தயர்த்தம்
* பாகவத ஜனானாம் ப்ரீத யர்த்தம்
* சமஸ்த லோக சாந்த யர்த்தம்

* ஸ்ரீ ரங்க நாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமி,
* திவ்ய சரணார விந்தயோஹோ
* துளசீ தள, குங்குமார்ச்சன,
* அஷ்டோத்திர சத நாம பூஜாம் கரிஷ்யே! ஓம்! ஓம்! ஓம்!

இப்போ, இதே மெட்டில், கீழே இருப்பதை வாய் விட்டுச் சொல்லுங்க பார்ப்போம்!

சிவ கோத்திரம்
பூர நட்சத்திரத்தில் வந்துதித்த
சரவண் என்னும் திருப்பெயர் கொண்ட

* இன்னாரின் நலம் வேண்டி, குடும்ப நலம் வேண்டி
* துணிவும் நல் உறுதியும் வேண்டி
* உயிர்ப்பும் வெற்றியும் வேண்டி
* உடல் நலமும் நீண்ட ஆயுளும் வேண்டி

* நீங்காத செல்வம் நிறைய வேண்டி
* எண்ணிய எண்ணியாங்கு எய்த வேண்டி
* அடியார்கள் மனங் குளிர வேண்டி
* உலகம் அமைதியில் மகிழ வேண்டி

* அரங்க நாச்சியார் உடனுறை
* அரங்க நாதன்...பெரிய பெருமாள்
* திவ்ய மங்களத் திருவடிகளில் சரணம் புகுந்தே...................

* துளசி தள, குங்குமார்ச்சனை
* நூற்றெட்டு போற்றிகள்
* அடியோங்கள் செய்கின்றோமே! ஓம்! ஓம்! ஓம்!

என்னாங்க தமிழில் சொல்லும் போது "அதிர்வு" இருந்துச்சா? :)
தைர்ய, ஸ்தைர்ய,
வீர்ய, விஜய,
ஆயுள் ஆரோக்ய-ன்னு சொல்லும் போது மனசுக்குப் புரிஞ்சி இனிச்சுதா?...இல்லாக்காட்டி...

* உடல் நலமும் நீண்ட ஆயுளும் வேண்டி,
* நீங்காத செல்வம் நிறைய வேண்டி
* அடியார்கள் மனங் குளிர வேண்டி-ன்னு சொல்லும் போது மனசுக்குப் புரிஞ்சி இனிச்சுதா?...நீங்களே முடிவு கட்டிக்குங்க! :)


23 ஆம் பாட்டில், "யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்"-ன்னு நமக்குச் சங்கல்பம் செய்து வைத்தாள் கோதை!
அடுத்து 24 ஆம் பாட்டில் என்ன? அர்ச்சனை தான்! => வடமொழி அர்ச்சனையா? தமிழ் அர்ச்சனையா? ஹிஹி! இதோ ஆரம்பிக்கிறாள்!

* பூபாலக திரிவிக்ரமாய நமஹ = அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
* லங்காபதி சமர்த்தனாய நமஹ = சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
* சகடாசுர காலாந்தகாய நமஹ = பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
* கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ = குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி!


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்!
இன்று யாம் வந்தோம் இரங்கு! ஏல்-ஓர் எம் பாவாய்!


இந்த அர்ச்சனைப் பாட்டை, வெண்பாவில்-செப்பல் ஓசையில் அமைக்காமல், கலிப்பாவில்-துள்ளல் ஓசையில் அமைச்சி இருக்கா இந்தப் பொண்ணு! மந்திரமா ஓதுவதற்கு என்றே இப்படி! இதை விட என்னாங்க ஒரு அர்ச்சனை பண்ணிற முடியும்! எங்கே, கோயில் அர்ச்சனை போலவே, நல்லா நீட்டி முழக்கி, ஒரு முறை ஓதுங்கள் பார்ப்போம்!



அன்று இவ்வுலகம் அளந்தாய் "அடி" போற்றி = இதுக்கு என்னா விளக்கம் சொல்லுறது? தானாவே புரியுது! அதான் தமிழ் அர்ச்சனையின் பெருமை!

அன்று "எல்லா" உலகமும் தானே அளந்தான்? அது என்ன "இவ்வுலகம்" அளந்தாய்-ன்னு பாடுறா? - தேவலோகம், தபோலோகம், சத்யலோகம்-ன்னு ஈரேழு பதினான்கு லோகங்கள் இருக்கே! என்னென்ன சொல்லுங்க பார்ப்போம்!

* இப்படிப் பல லோகங்கள் இருந்தாலும், எம்பெருமானுக்கு நம் மீது தான் அதிக வாஞ்சை! அதான் முதல் அடியை "இங்கு" அளந்து துவங்குகிறான்! அதான் "இவ்வுலகம்" என்கிறாள்!
* பூலோகம்-ன்னு இங்கு வந்து தான் அவதாரம் எடுத்து நம்மோடு உறவாடுகிறான்! இந்திரனின் தேவ லோகத்திலோ, பிரம்மாவின் சத்ய லோகத்திலோ அவன் அவதாரம் எடுத்திருக்கானா? :)

அதனால் தான் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே! என்கிறார் நம்மாழ்வார்! தேவர்களும், பரமபதம் அடையணும்-ன்னா, மண்ணுலகில் பிறந்து, வினை கழித்து விட்டுத் தான் மோட்சம் செல்ல முடியும்! அது தான் பூலோகத்தின் பெருமை! அவ்ளோ பெருமை, வாஞ்சை நம் மண்ணுலகின் மீது! - "இவ்வுலகம்" அளந்தாய், அடி போற்றி!


சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி = தென் இலங்கைக்குச் சென்று, செருச் செய்து, செருக்கு அழித்தாயே! உன் "திறல்" போற்றி!

இதை எழுதும் போது ஈழத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை!
இராமனும் இலங்கை சென்று செருச் செய்தான்! முருகனும் இலங்கை சென்று செருச் செய்தான்! வீண் வீம்புகள் ஒழிந்து பட்டன!
அதே போல், இன்றும் வீம்பு ஒழியணும்! ஈழத்தில் மக்களுக்கு "வாழும்-அமைதி" முதலில் வரணும்-ன்னு கோதையின் அர்ச்சனையில் நானும் சங்கல்பம் செய்து கொள்கிறேன்!

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி = அழியுமாறு, வண்டிச் சக்கரமாய் வந்த சகடாசுரனை உதைத்தாயே! உன் "புகழ்" போற்றி!
சக்கரத்தான் மேலேயே சக்கரம் ஏவி விட்டா? இதெல்லாம் நடக்குற காரியமா, கம்சா? :)

கன்று-குணில்-ஆ எறிந்தாய் கழல் போற்றி = கன்று போல் வந்தான் வத்சா அசுரன்! அங்கே ஆச்சா மரம் என்னும் ஆ-மரமாய் நின்றான் கபித்தாசுரன்! கூட்டணி போட்டுக்கிட்டு வந்தாய்ங்க போல ரெண்டு பேரும்!
Catapult என்னும் உண்டிகோல் ஆடுவது போல், கன்றைச் சுழற்றி, மரத்தின் மேல் வீசினாயே! உன் வீரக் "கழல்" போற்றி!

இளங்கோவடிகளும் இந்த கிராம விளையாட்டில் மனம் பறிகொடுத்துப் பாடுறாரு! கன்று-குணில்-ஆ என்றே பாடுறாரு!
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ?-
ன்னு சிலப்பதிகாரத்தில் வரிகள்!

கனியை உதிர்த்தானாம்! அதாச்சும் மரத்தில் இருக்கும் மாங்கா அடிப்பது போல், கன்றை வீசி, மாங்கா அடிச்சானாம் கண்ணன்! இளங்கோவின் கற்பனை அழகு!
சிலப்பதிகாரம் படிச்சிருக்கா போல கோதை! அதை அப்படியே எடுத்து ஆளுகிறாள் தன் பாசுரத்தில்!

குணில்-ன்னா வளைந்த மரக்கிளை, மரக்கிளையால் செய்த கருவி! உண்டிகோல்/கயிற்றுத் தடி போலன்னு வச்சிக்குங்களேன்!
சின்ன வயசில் உண்டிகோல் விளையாடுவோம்! ஞாபகம் இருக்கா? சும்மா இழுத்து விட்டா ஜிவ்-வுன்னு பறக்கும்-ல?

கிராமத்துப் பசங்க, நிஜார் கூட போடாம ஆடும் ஆட்டத்தை, எவனோ ஒருத்தன் அமெரிக்காவுல காப்புரிமை (patent) வேற வாங்கி வச்சிருக்கானாம்! இங்கிட்டு போயி பாருங்க! அட அமெரிக்க மாங்காய்களா, அப்படியே கோலி, கில்லி-ன்னு, எங்கூரு அரை நிஜாரை எல்லாம் காப்புரிமை வாங்குங்கடா சாமீகளா! :)


குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி = கோவர்த்தன கிரி என்னும் குன்றையே குடை போல புடிச்சவனே! உன் "குணம்" போற்றி!

சென்ற பாட்டில், முப்பத்து மூவர் அமரர்கள் உதவிக்கு வரும் முன்னரே, அவர்களுக்கும் "முன் சென்று", நம்ம உதவிக்கு வருபவன் => இது அடியேன் நானாச் சொன்ன பொருள் தான்! ஆச்சார்ய விளக்கம் அன்று! அடியேனை மன்னிக்கவும்!
தேவர்களுக்கு முன்னால் சென்று, தலைமை தாங்கிக் காப்பான் என்பதே மரபு வழியான விளக்கம்! ஆனால் அடியேனுக்கு என்னமோ அப்படி இல்லை-ன்னே தோன்றியது!

முன் செல்லுவது, தலைமை தாங்குவது = இதெல்லாம் தேவ-சேனாபதி தான்!
பெருமாளுக்கு இந்திரனின் போலி பக்தியில், ஒழுக்கம் தவறிய பக்தியில் நம்பிக்கை கிடையாது! "எல்லாரும் தன்னை வணங்கனும்" என்கிற கர்வம் இந்திரனுக்கு! அவன் புள்ளை ஜெயந்தன் இன்னும் மோசம்! பிராட்டியிடம் அபசாரப்பட்டு "காகாசுரன்"-ன்னு பேரு வாங்கிக்கிட்டான்!
தேவன் புள்ளை தேவன்-ன்னு யாரும் அவனை வைணவத்தில் கொண்டாடுறது இல்லை! அசுரன் என்றே குணத்தை வைத்துச் சொல்கிறார்கள்! போயும் போயும் இவிங்களயா கோதை கொண்டாடுவாள்?

கண்ணன் ஒரு Religious Reformer! சமயப் புரட்சியாளன்!

வேள்விக்காரங்க ஸ்வாஹா, ஸ்வாஹா-ன்னு பூசிக்கும் இந்திரனையும், அவன் திமிரையும், அப்பவே மட்டம் தட்டி வைத்தான்!
தான் சொல்வது, ஆச்சார்யர்கள் வகுத்ததற்கு மாறானது அல்ல-ன்னு, சபையில் பெரியவர்களிடம் வாதாடினான்!
சமயத்தைச் சமூக அக்கறையாகக் கொண்டு சென்றான் கண்ணன்! போலியான ஆசாரங்களுக்கு வளைந்து கொடுக்காத அந்த "குணம்" போற்றி!

வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி = கண்ணன் கையில் வேல் இருக்கா? ஹா ஹா ஹா! வெற்றி வேல் கண்ணனுக்கு அரோகரா! :)

வெட்சி x கரந்தை = ஆநிரைகளைக் கவரும் பகைவருடன் போராடணும்-ல? அதான் முல்லை நிலத்து மாயோன் கையில் "வேல்"! கூர் "வேல்" கொடுந் தொழிலன் நந்தகோபன் குமரன்-ன்னு இன்னொரு பாட்டிலும் பாடுறா கோதை!
எனவே குறிஞ்சிக்கு மட்டுமே வேல்-ன்னு ஏகபோக உரிமை எல்லாம் கொண்டாட முடியாதுங்கோ! :)

பழந்தமிழர் வாழ்வில் மாலவனும் வேலவனும் ஒன்னுக்குள்ள ஒன்னு! அவிங்கள பிரிக்க முடியவே முடியாது!
தமிழ்க் கடவுள் மாயோன் கையிலும் "வேல்"! தமிழ்க் கடவுள் முருகன் கையிலும் "வேல்"!
* வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்!
* வென்று, பகை கெடுக்கும் திருக்கை"வேல்" போற்றி! போற்றி!


என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் = என்னிக்கும் உன் சேவையாய் இருப்பேன் பெருமாளே! உன் திருத் தொண்டினை ஏத்தி, தமிழ் அர்ச்சனை செய்து, பறை என்னும் நோன்புப் பொருளைப் பெற வந்திருக்கேன்! உன் சேவகமே சேவகம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்!

* அப்பா "பல்லாண்டு பல்லாண்டு"-ன்னு பாடினாரு! பொண்ணு "போற்றி போற்றி"-ன்னு பாடுறா!
* அப்பா பரமனைச் "ஏத்துவர்" பல்லாண்டே-ன்னு பாட, பொண்ணு, சேவகமே "ஏத்திப்" பறை கொள்வாம்-ன்னு பாடுறா!

இன்று யாம் வந்தோம், இரங்கு = இறைவா....இன்று நாங்கள் வந்தோம்! மனம் இரங்கு!
தனியாக, சுயநலமா வரலை! ஒன்னா, அடியார்களா, ஒன்று கூடி வந்திருக்கோம்! உன் சேவையே சேவை-ன்னு சேவிக்க வந்திருக்கோம்!

* இன்று யாம் வந்தோம் இரங்கு! எங்களை ஏல் கொள் பெருமாளே! ஏற்றுக் கொள்! ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!


அரசு சட்ட திட்டங்கள் போட்டு விட்டது! => இங்கு தமிழி"லும்" அர்ச்சனை செய்யப்படும்! :)
ஆனால் கருவறையில் தமிழ் அர்ச்சனை மெய்யாலுமே முழு மூச்சாக நடக்கிறதா?

சரி, இவ்வளவு வீறாப்பு பேசறோமே! ஆலயத்துக்குச் செல்லும் போது, எத்தனை பேர், தமிழில் அர்ச்சனை செய்யுமாறு நாமளே கேட்டுக் கொள்கிறோம்? கையைத் தூக்குங்க பார்ப்போம்!
பதிவில் எழுதி விளாசுகிறோமே! ஆனால் நேராப் போகும் போது, நமக்கு அப்படிப் பண்ணத் தோனுதா? :)

வெறுமனே அரசு சட்ட திட்டங்களால், இது போன்ற மனமலர்ச்சிகள் உருவாவதில்லை!
* மக்களை உணர வைக்கணும்!
** கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்கணும்!
*** ஆன்மீகம் பேசும் ஆன்மீகப் பதிவர்கள், நாம தான், எடுத்துச் சொல்லி, கொஞ்சம் கொஞ்சமா உணர வைக்க வேணும்!

மக்களே,
அடுத்த முறை ஆலயம் செல்லும் போது, சும்மாவாச்சும்.....தமிழ் அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு முறை கேட்டுத் தான் பாருங்களேன்!
அப்புறம் நீங்களே விட மாட்டீங்க!
ஆ+லயம் = லயம், லயம்-ன்னு லயித்துப் போவீர்கள்! கோதைத் தமிழ் போலவே! :)

யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ
இன்று யாம் வந்தோம் இரங்கு!
* அடி போற்றி!
* திறல் போற்றி!
* புகழ் போற்றி!
* கழல் போற்றி!
* குணம் போற்றி!
* வேல் போற்றி!


* செகத்து உதித்தாள் வாழியே!
* செப்பினாள் வாழியே!
* பெண் பிள்ளை வாழியே!
* பின் ஆனாள் வாழியே!

- இதி ஸ்ரீமத் "தெய்வத் தமிழ் அர்ச்சனை" சம்பூர்ணம்! :)))

26 comments:

  1. ஏகாதசி விரதத்தினால் வந்த தாமதமோ... :)

    ReplyDelete
  2. //Raghav said...
    ஏகாதசி விரதத்தினால் வந்த தாமதமோ... :)//

    Yessu :)
    ஆபீசில் இருந்து ஆலயம் போயி, கோயிலில் ஒரு சின்னப் பிரசங்கம் பண்ணிட்டு, அப்புறமா வீட்டுக்கு வந்து, ட்ராப்பிக்கானா ஜூஸ் மட்டும் குடிச்சிட்டு, கொட்ட கொட்ட உக்காந்து எழுதி, இப்போ தான் பப்ளீஷ்ஷ்ஷ்....

    ReplyDelete
  3. //வென்று பகை கெடுக்கும் நின் கையில் "வேல்" போற்றி //

    ஸ்ரீமத் வேதாந்த தேசிகரும் தன்னுடைய ஷோடாசாயுத ஸ்தோத்திரத்தில் எம்பெருமானின் 16 ஆயுதங்களில் ஒன்றாக வேல் பற்றியும் பாடியுள்ளார்.

    ReplyDelete
  4. //Raghav said...
    ஸ்ரீமத் வேதாந்த தேசிகரும் தன்னுடைய ஷோடாசாயுத ஸ்தோத்திரத்தில் எம்பெருமானின் 16 ஆயுதங்களில் ஒன்றாக வேல் பற்றியும் பாடியுள்ளார்//

    ஆமாம் ராகவ்!
    ஆனா அது சக்கரத்தாழ்வாரின் 16 ஆயுதங்களில் ஒன்றாகப் பாடுவார்!
    வேல் (குந்தம்)!

    பதினாறு ஆயுதங்களின் பேரை இங்கு சொல்லுங்களேன்!
    யதாயத்தம் ஜகத்சக்ரம் காலச் சக்ரம்-ன்னு தானே தொடங்கும்?

    ReplyDelete
  5. தமிழ் அர்ச்சனையும் விளக்கங்களும் அருமையோ அருமை.
    //தமிழ்க் கடவுள் மாயோன் கையிலும் "வேல்"! தமிழ்க் கடவுள் முருகன் கையிலும் "வேல்"!//
    என்னே உங்க analysis? வாழ்க.

    ReplyDelete
  6. தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கும் மக்கள் "அன்று இவ்வுலகம் அளந்தாய்" என்ற பாடலை மனதுக்குள்ளேயே சொல்லி அர்ச்சனை செய்து விட்டு வரலாமே. அதை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்வது வேண்டாமே. தமிழ் புரட்சிக்கு என்றோ வித்திட்ட ஆண்டாளுக்கு "ஜிந்தாபாத்". "ஆண்டாளே நமஹ"

    ReplyDelete
  7. //RAMESH BABU J said...
    தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கும் மக்கள்//

    வாங்க திரு. ரமேஷ் பாபு
    இங்கே மக்கள் பிடிப்பது அடம் இல்லை! தமிழ் வடம்!
    முதன் முதலில் வடம் பிடிக்கும் போது சற்று கூச்சல் இருக்கத் தான் செய்யும்!

    //"அன்று இவ்வுலகம் அளந்தாய்" என்ற பாடலை மனதுக்குள்ளேயே சொல்லி அர்ச்சனை செய்து விட்டு வரலாமே//

    இதையே திருப்ப அதிக நேரம் ஆகாது! சுக்லாம் பரதரம் என்பதையும் மனதுக்குள்ளேயே சொல்லி அர்ச்சனை செய்து விட்டு வரலாம் அல்லவா?

    //அதை விடுத்து ஆர்ப்பாட்டம் செய்வது வேண்டாமே//

    இங்கே ஆர்ப்பாட்டம் செய்தாற் போலே தெரியலையே! :)

    //தமிழ் புரட்சிக்கு என்றோ வித்திட்ட ஆண்டாளுக்கு "ஜிந்தாபாத்". "ஆண்டாளே நமஹ"//

    நன்றி!

    ReplyDelete
  8. //மின்னல் said...
    தமிழ் அர்ச்சனையும் விளக்கங்களும் அருமையோ அருமை.//

    நன்றி மின்னல்!
    தமிழ் அர்ச்சனைப் பதிவுகள் இன்னும் முடியலை!
    தமிழ் மந்திரங்களுக்கு"ம்", "அதிர்வு" உண்டு என்பதை இன்னும் நிரூபிக்கத் தெரியாதவனாகவே இருக்கேன்! :)

    //
    //தமிழ்க் கடவுள் மாயோன் கையிலும் "வேல்"! தமிழ்க் கடவுள் முருகன் கையிலும் "வேல்"!//
    என்னே உங்க analysis? வாழ்க.//

    :)
    சாதாப் பதிவை analysis பதிவு ஆக்கிட்டீங்களே மின்னல்!

    ReplyDelete
  9. அவன் படைத் தளபதியான சேனை முதலியார் என்னும் நம்மாழ்வார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>

    சேனைமுதலியார் வேறு நம்மாழ்வார் வேறு அல்லவா ரவி!

    வாமனனிலிருந்து ஆரம்பிக்கிறாள் பாருங்கள் அதுதான் விஸ்வரூபமாகிவிடுகிறது!அதுவும் திருவடியைமுதலில்போற்றியபடி அதாவது சரணாகதி முதலில்! பிறகுதன் திறல் புகழ் எல்லாம்!!!!

    >>>>>ஆண்டாளின் "என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" = இதையே "சேவாம் கரோமி, நித்ய சேவா பலம் த்வம், ப்ரயச்ச ப்ரயச்ச! பிரபோ வேங்கடேசா!"-ன்னு , சுப்ரபாதம் ஆக்கினாரு பிரதிவாதி பயங்கரம் அண்ணன் சுவாமிகள்!>>>>>

    அருமை ரவி

    ReplyDelete
  10. //ஷைலஜா said...
    சேனைமுதலியார் வேறு நம்மாழ்வார் வேறு அல்லவா ரவி!//

    சேனை முதலியாரின் அம்சமே நம்மாழ்வார் என்பது மரபு-க்கா!

    குரு பரம்பரைப் படி லட்சுமி&நாதன்->சேனை முதலியார்->நம்மாழ்வார்(சேனை அம்சம்)->நாதமுனிகள்...ன்னு தொடரும்.

    ReplyDelete
  11. //ஷைலஜா said...
    வாமனனிலிருந்து ஆரம்பிக்கிறாள் பாருங்கள் அதுதான் விஸ்வரூபமாகிவிடுகிறது!//

    அட ஆமாம்!

    //அதுவும் திருவடியைமுதலில்போற்றியபடி அதாவது சரணாகதி முதலில்! பிறகுதன் திறல் புகழ் எல்லாம்!!!!//

    எக்ஜாக்ட்லி!
    செவ்"வடி" செவ்வித் திருக் காப்பு!

    //
    >>>>>ஆண்டாளின் "என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" = இதையே "சேவாம் கரோமி, நித்ய சேவா பலம் த்வம், ப்ரயச்ச ப்ரயச்ச! பிரபோ வேங்கடேசா!"-ன்னு !>>>>>

    அருமை ரவி//

    சுப்ரபாதம் சொல்லக் கூடாது! தடை இருக்கு! அனத்யயன காலம்! :)
    ஒன்லி தமிழ் அருளிச் செயல்கள்! நோ வட மொழி ஃபார் மார்கழி! :)

    ReplyDelete
  12. \\** மார்கழி முடிவில், அதிர்வுக்கு ஒரு பதிவு இருக்கு-ன்னும் சொல்லிக்கறேன்! :)
    \\\

    பதிவு இருக்கு...

    இதுக்கு ஒரு தனிபதிவு வரும்...

    விரைவில் இதை தனியாக பதிவு போடுவேன்...

    இப்படி நீங்க சொன்னாதையே தனி பதிவாக போடலாம் தல...;)))

    விரைவில் இதெல்லாம் கணக்கு எடுத்து வெளியிடுக்கிறேன் இருங்க..;)))

    ReplyDelete
  13. பூபாலக திரிவிக்ரமாய நமஹ, லங்காபதி சமர்த்தனாய நமஹ, சகடாசுர காலாந்தகாய நமஹ, கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ - இவை எல்லாம் எந்த அஷ்டோத்தரத்தில்/சஹஸ்ரநாமத்தில் வருகின்றன இரவி? நீங்களாக மொழிபெயர்த்தவையா?

    இராமன் இலங்கை சென்றான் - அறிவேன். முருகனும் இலங்கைக்கா சென்றான்? சூரபதுமனின் நகரம் இலங்கையிலா இருந்தது? புதிய செய்தி எனக்கு.

    கோதை மட்டுமா சிலப்பதிகாரத்தைப் படித்திருக்கிறாள்; அவள் திருத்தந்தையாரும் படித்திருக்கிறார் போலத் தான் தெரிகிறது. 'மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ' என்ற கருப்பொருளில் அவர் பாடியிருப்பதாக நினைக்கிறேன். சரி தானா?

    இரவி. வேள்விக்காரங்க மட்டுமா இந்திரனை வணங்கினார்கள்; வணங்குகிறார்கள்? தமிழ் இலக்கியமும் இந்திர விழா என்பதைப் பற்றி மிகப்பெரிதாகப் பேசுகின்றதே. தமிழகத்தில் இருந்து வழிபாட்டு முறை சென்ற கீழை நாடுகளிலும் இந்திரன் வழிபாடு மிகுதியாக இருந்திருக்கும் போலிருக்கிறதே. கண்ணன் இந்திர வழிபாட்டைத் தட்டி வைத்த பின்னரும் மாயோனை வழி வழியாகப் போற்றிய தமிழ் மண்ணிலும் கீழை நாடுகளிலும் இந்திர வழிபாடு தொடர்ந்தது?

    எனக்கென்னவோ கண்ணன் இந்திரனை வணங்கவே கூடாது என்று தடுக்கவில்லை; செய்நன்றிக்காக கோவர்த்தனத்தை வணங்குவதே ஆயர்களுக்கு முதன்மைக் கடன் என்று சொல்லியதாகத் தான் படித்தவரையில் தோன்றுகிறது. ஆனால் ஆண்டாள் திருவுள்ளம் நன்கு அறிந்த நீங்கள் சொல்வதற்கு மாற்று சொல்லி அபசாரப்பட விரும்பவில்லை. :-)

    ReplyDelete
  14. //குமரன் (Kumaran) said...
    இவை எல்லாம் எந்த அஷ்டோத்தரத்தில்/சஹஸ்ரநாமத்தில் வருகின்றன இரவி? நீங்களாக மொழிபெயர்த்தவையா?//

    அஷ்டோத்திரம் எழுதற அளவுக்கு அவ்ளோ வடமொழி வித்தகம் எல்லாம் அடியேனுக்கு இல்லை குமரன்!
    பஞ்ச கிருஷ்ண ஷேத்திரங்களுள் ஒன்றான திருக்கண்ணங்குடி உலகநாதப் பெருமாள் அஷ்டோத்திரம் அது! எப்பவோ போன போது, பாக்கெட் சைஸ் புக்கா, அழகிய படங்கள் போட்டு, யாரோ உபயமாக் கொடுத்தது இன்னும் இருக்கு.

    இதைக் கொஞ்ச நாளைக்கு முன்னர் வாசிக்கும் போது தான் திருப்பாவையோடு பொருத்திப் பார்த்தேன். அதே ஆர்டர்-ல வரலீன்னாலும், நாமாவளிகள் அப்படியே வருவது வியப்பு தான்! இதை முந்தைய தமிழ் அர்ச்சனைப் பதிவுகளில் கூட எடுத்து இட்டிருப்பேனே! பார்க்கலையா?

    ReplyDelete
  15. //இராமன் இலங்கை சென்றான் - அறிவேன். முருகனும் இலங்கைக்கா சென்றான்? சூரபதுமனின் நகரம் இலங்கையிலா இருந்தது? புதிய செய்தி எனக்கு//

    போர் நடந்த இடம் இலங்கைக் கடலை ஒட்டி என்றும், படைக்குடில் அமைத்து தங்கியது, இலங்கை ஏமகூடம் என்றும் கந்த புராணம் சொல்கிறது.
    சஷ்டிப் பதிவுகளில் இதைச் சொல்லி இருக்கேனே? பார்க்கலையா? :)

    ஏமகூடம், இப்போது இலங்கையில் எங்கு இருக்கு-ன்னும் ஒரு கேள்வி வைச்சிருந்தேன் ஈழத்து அன்பர்களுக்கு!

    ReplyDelete
  16. அண்ணா.... எங்கே இன்றைய பதிவு ??? இன்று அமெரிக்க நேரப்படி தான் திருப்பாவை உற்சவமோ :)

    ReplyDelete
  17. முதல் பெண் அர்ச்சகி.. அவள் சொன்னால் அது வேதம்..
    அருமையான பதிவு

    திவாகர்

    ReplyDelete
  18. //இதை முந்தைய தமிழ் அர்ச்சனைப் பதிவுகளில் கூட எடுத்து இட்டிருப்பேனே! பார்க்கலையா?
    //

    //சஷ்டிப் பதிவுகளில் இதைச் சொல்லி இருக்கேனே? பார்க்கலையா? :)
    //

    பார்த்திருக்கேன். பார்த்திருக்கேன். ஆனால் இன்றைக்குத் தான் கேட்கத் தோன்றியது.

    ReplyDelete
  19. //Raghav said...
    அண்ணா.... எங்கே இன்றைய பதிவு ??? இன்று அமெரிக்க நேரப்படி தான் திருப்பாவை உற்சவமோ :)//

    பொமோனா கோயில்ல வேற Small Talk! :)
    வீடு வந்து சேர்ந்து, சோர்ந்து, தூங்கப் போயிட்டேன்!
    முந்தைய நாள் ஏகாதசிச் சோர்வும் சேந்துக்கிச்சி ராகவ்! சாரி! :)

    காலையில் எழுந்து பரபர-ன்னு பதிவு போட்டாச்சே! :)

    பிகு:
    அந்த ராகவன் திட்டறான்! why so early-ன்னு? :)

    ReplyDelete
  20. கோபிநாத் said...
    //பதிவு இருக்கு...
    இதுக்கு ஒரு தனிபதிவு வரும்...
    விரைவில் இதை தனியாக பதிவு போடுவேன்...
    இப்படி நீங்க சொன்னாதையே தனி பதிவாக போடலாம் தல...;)))//

    ஹா ஹா ஹா
    ரசிச்சேன்! சிரிச்சேன்! கோப்பி மாப்பி! :)

    //விரைவில் இதெல்லாம் கணக்கு எடுத்து வெளியிடுக்கிறேன் இருங்க..;)))//

    நாட்டுல இந்த ஆடிட்டர்-ங்க தொல்லை தாங்க முடியலைப்பா சாமீ! :)

    ReplyDelete
  21. @குமரன்
    //கோதை மட்டுமா சிலப்பதிகாரத்தைப் படித்திருக்கிறாள்; அவள் திருத்தந்தையாரும் படித்திருக்கிறார் போலத் தான் தெரிகிறத//

    ஆமாம் குமரன்!
    வள்ளுவம் படித்தவர்கள், சிலம்பு படிக்காமல் இருப்பார்களா? சமண நூல் என்றெல்லாம் "மறந்தும் புறம் தொடாதவர்கள்" இல்லை அவர்கள்! :)

    //'மாயவன் இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ' என்ற கருப்பொருளில் அவர் பாடியிருப்பதாக நினைக்கிறேன். சரி தானா?//

    ஹூம்! தெரியலையே குமரன்!
    சிலம்பின் வரிகளை அப்படியே ஆண்டிருக்கிறாரா என்ன பட்டர்பிரான்?
    கன்று-குணில்-ஆ ன்னு இவ அப்படியே ஆளறா!

    ReplyDelete
  22. //ஆனால் ஆண்டாள் திருவுள்ளம் நன்கு அறிந்த நீங்கள் சொல்வதற்கு மாற்று சொல்லி அபசாரப்பட விரும்பவில்லை. :-)//

    ஆகா! இது வேறயா? :)
    அபசாரம் ஏதும் அடியேன் பதிவில் பார்ப்பதில்லை குமரன்!
    ஆனானப்பட்ட கோவி கண்ணனே பல கேள்விகள் கேட்கும் போது...ஆத்திக விவாதங்களுக்கு பந்தலில் பஞ்சம் ஏது? மஞ்சம் மட்டுமே! :)

    //இரவி. வேள்விக்காரங்க மட்டுமா இந்திரனை வணங்கினார்கள்; வணங்குகிறார்கள்? தமிழ் இலக்கியமும் இந்திர விழா என்பதைப் பற்றி மிகப்பெரிதாகப் பேசுகின்றதே//

    பேசுகிறது குமரன்! அதை மறுக்கவில்லை! ஆனால் மாயோனைப் போலவோ, சேயோனைப் போலவோ ஏத்துகிறாதா? மக்கள் தெய்வமாக, வீட்டுத் தெய்வமாக காட்டுகிறதா?

    பின்னாளில் கொற்றவையைப் பேசும் அளவுக்குக் கூட, இந்திரனின் "கல்யாண குணங்கள்" பற்றிப் பேசுகிறதா?

    சீர்கெழு செந்தில், வீங்கு நீர் அருவி வேங்கடம் நின்றான் என்பது போல் பெரும் பெரும் ஆலயங்கள் காட்டுகிறதா?

    இந்திரனைப் பற்றிக் கட்டாயம் பேசுகிறது! பல இடங்களில்! மறுக்கவே இல்லை! வேந்தன்/இந்திரன் விவாதத்துக்குள் நான் இப்போ போகலை! இந்திரன் என்றே கொள்வோம்!

    ஆனால் அவனைக் குணவானாகவோ, மக்கட் தெய்வமாகவோ, பாடாண் திணைக்கு உரிய தலைமைப் பண்புகள் கொண்டவனாகவோ காட்டவில்லை என்பதே என் துணிபு!

    இந்திர விழா சடங்கு விழா! இன்ப விழா! அதில் எல்லாத் தட்டு மக்களும் கலந்து கொண்டார்களா?
    ஆயர்கள், வேடுவர்கள்...சரி அவிங்கள விடுங்க...பரதவர்கள் கலந்து கொண்டார்களா? கடல் விழா தானே?

    அதில் கலந்து கொண்டவர்கள் இந்திரனைப் பூசனைச் சடங்கு செய்திருக்கலாமே தவிர...அவன் மக்கட் தெய்வமாகவோ, அவன் குணவியல் நிகழ்ச்சிகளோ...
    யாராலும் போற்றிப் பாடப் படவில்லை! வேலன் வெறியாட்டு, குரவைக் கூத்து போல் இந்திரனுக்கு என்ன? சொல்லுங்க பார்ப்போம்!

    //எனக்கென்னவோ கண்ணன் இந்திரனை வணங்கவே கூடாது என்று தடுக்கவில்லை; செய்நன்றிக்காக கோவர்த்தனத்தை வணங்குவதே ஆயர்களுக்கு முதன்மைக் கடன் என்று சொல்லியதாகத் தான் படித்தவரையில் தோன்றுகிறது//

    இல்லை!
    முதலில் இந்திர அபிமான பங்கம்!
    பின்பே யாருக்கு அப்போ பூசை?-ன்னு வரும் போது, கோவர்த்தனம்!

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. @குமரன்
    Here is the passage from Srimad Bhagavatam
    It specifically says..
    S'rî S'uka said: 'Hearing these words by the Supreme Lord, by the Time in person, spoken with the intent to break the pride of Indra, இந்திர அபிமான பங்கம்!

    (1) S'rî S'uka said: 'The Supreme Lord staying in that very place [of Vraja] accompanied by Baladeva also, saw how the gopas were very busy arranging for a sacrifice to Indra. (2) Even though the Supreme Lord, the Soul of All Seeing All, knew what that meant [see B.G. 9: 23], bowed He down humbly and inquired He with the elders lead by Nanda [His stepfather]: (3) 'Tell Me, dear father, what all this fuss is you're put up with, were does it lead to, for whom is it done and by what means is this sacrifice to be accomplished?
    ....
    ....

    (8) S'rî Nanda said: 'The rain its great lord is Indra, the clouds are his personal representatives, they provide the rain for all living beings which, just like milk, is the gratifying life-force
    For his liquid discharged do we and other people too with various items and fire sacrifices worship him,
    ....Anyone who rejects this religious duty that was handed down by tradition is a person who because of lust, enmity, fear and greed for certain cannot achieve the splendor [of God, see B.G. 10: 36].'
    ...
    ...

    (12) S'rî S'uka said: 'Hearing Nanda's words and also what the other residents of Vraja said, spoke Lord Kes'ava to His father in a way that made lord Indra angry. (13) The Supreme Lord said: 'It is of karma that a living entity takes birth, it is by karma alone that he meets with destruction; happiness or unhappiness,
    ....(15) So what do living beings, who each follow the path of their own karma, have to do with Indra who himself cannot make any difference in what for people according their natures is ordained
    ...
    ...
    we are the forest people dear father, we always live in the forests and on the hills. (25) Let's therefore make a start with a sacrifice for the cows, the brahmins and the hill [Govardhana], and may this be carried out with the ingredients for Indra's sacrifice!
    ....
    ....
    (31) S'rî S'uka said: 'Hearing these words by the Supreme Lord, by the Time in person, spoken with the intent to break the pride of Indra, accepted Nanda and the elder men them as excellent.

    http://www.srimadbhagavatam.org/canto10/chapter24.html

    ReplyDelete
  25. //DHIVAKAR said...
    முதல் பெண் அர்ச்சகி..//

    அட...இதுவும் ஒரு கோணம் தான்! அருமை திவாகர் சார்!
    நன்றி!

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP