Monday, January 12, 2009

மார்கழி-29: சிற்றஞ் சிறுகாலே! காமம்? மோட்சம்?

வாங்க! வாங்க! ஆட்ட இறுதிக்கு வந்துட்டோம்! போகி அதுவுமா என்ன கொளுத்துனீங்க? டயரை எல்லாம் கொளுத்தலை தானே? சரி, பறை அடிச்சீங்களா? ஆண்டாளும் பறை, பறை-ன்னு கேக்குறாளே! நீங்க கொஞ்சம் அவளுக்குப் பறையறது? :)

இன்றைய பாட்டு மிக மிக விசேடமான பாட்டு! எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டு! திருப்பாவை முப்பதின் சாரமும் இந்தப் பாட்டு தான்!

தினமுமே முப்பதும் சொல்ல முடியாதவர்கள், இந்த ஒன்றை மட்டும் வாய் விட்டு ஓதிக்கலாம்! மனசுக்குள் சொல்லிக்கலாம்!
ஆலயங்களில், சாத்துமுறை என்னும் சாற்று மறையில், இது சிறப்பாக ஓதப்படும் பாசுரம்!
கருவறைகளில் இந்தத் "தமிழ்ப் பாட்டு" இல்லாத பெருமாள் கோயிலே இல்லை - ஆந்திரா, கர்நாடகம், சில கேரள ஆலயங்கள் உட்பட! :)

இவ்வளவு பெருமை கொண்ட இந்தப் பாட்டின் சாரம் என்ன தெரியுமா?
எல்லாரும் காமம் செய்யுங்கள்! எல்லாரும் காமம் செய்யுங்கள்!

ஹா ஹா ஹா! அட நான் சொல்லலைங்க! ஏற்கனவே அடியேனைத் தான் "வேற மாதிரி" பாத்துக்கிட்டு இருக்காங்களே! இது நான் சொல்லும் விளக்கம் இல்லை! இது ஆச்சார்ய விளக்கம்! பெரும் ஆச்சார்ய விளக்கம்!சின்ன வயசு இராமானுசர்! அன்று திருப்பாவை விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்காரு....திருவரங்கம் அர்ச்சுன மண்டபத்திலே! பெருங்கூட்டம்!

வைணவத்துக்குள்ளேயே, அவரோட ஆரம்ப கால எதிரிகள் நிறையப் பேரு கூட்டத்தோடு கூட்டமாச் சூழ்ந்து நிக்குறாங்க!
அவரோட கருத்தில் எங்காவது பெரிய குற்றமாக் கண்டுபிடிச்சி, அவரை ஒரேயடியா மடக்கிட்டா, அப்புறம் அவர் அதோகதி தான்!
ஆலயத்து அக வேலைகளில் அவரைக் கை வைக்க முடியாமல் பண்ணீறலாம்! நாமளே தொடர்ந்து சுயநல ராஜாங்கம் நடத்தலாம்-ன்னு ஒரு கணக்கு! :)

இராமானுசர்: "ஆக, ஐ*ஐந்தும் + ஐந்துமான திருப்பாவை முப்பதிலே, சாரமான, சாஸ்திரோத்காரமான பாசுரம் இந்த சிற்றஞ்சிறுகாலே!
அங்க பஞ்சக சம்பன்னமான, ஆத்ம ரட்சை என்னும் சரணாகதியைச் செய்யும் பாசுரம் இது!

எல்லாருக்கும் தர்மம்-அர்த்தம்-காமம்-மோட்சம் என்று நாலு நிலையும் தெரியும் அல்லவா? தமிழில் அறம்-பொருள்-இன்பம்-வீடு என்றும் சொல்வார்கள்!
இந்த நான்கில் சிறப்பானது எது? - அறமா? பொருளா? காமமா? மோட்சமா? சொல்லுங்கள் பார்ப்போம்!"

கூட்டம்:
* ஒரு சிலர் அறம்-ன்னு சொல்லுறாங்க = தர்மம் தலை காக்கும்!
* கொஞ்சூண்டு பேர் பொருள்-ன்னு சொல்லுறாங்க = ஆன்மீகம்-ன்னா அதில் பணம்-ன்னு வெளிப்படையாச் சொல்லக் கூடாதே! :)
* ஆனா யாருமே காமம்-ன்னு சொல்லலை! சொன்னா ஒழிச்சிருவாங்க! :)
* நூற்றுக்கு தொன்னூறு பேரு...மோட்சம், மோட்சம், அது தான் நான்கிலும் உசத்தி-ன்னு ஒரே கூக்குரல்...

இராமானுசர்: "அமைதி! அமைதி! நான் சொல்லட்டுமா? அறமா? பொருளா? காமமா? மோட்சமா?
நான்குமே ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொன்று தேவைப்பட்டாலும்...
நான்கிலும் மிக மிக உயர்த்தியானது...
எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டியது...காமம்! காமமே மிகவும் சிறப்பானது!!!"

கூட்டம்: ஒரே சல-சல!.....
அடப்பாவி.....இராமானுசரா இப்படிப் பேசுவது? சீச்சீ! ஆச்சார சீலர்கள் எல்லாம் முகம் சுளிக்கிறார்கள்!
உண்மையான பக்தர்களுக்கும் அடியார்களுக்கும் திகைப்பு! கொஞ்சம் வருத்தம்! ஆனால், உடையவர் இப்படிச் சொல்றாரு-ன்னா அதுல ஏதோ இருக்கும்-ங்கிற ஒரு எண்ணம்!

எதிரிகள் எல்லாருக்கும் சந்தோஷம்! ஒழிஞ்சாருடா இராமானுஜர்! வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டார்!
ஜகத்குருவான கண்ணன், கீதையில் நிஷ்+காம்ய கர்மம்-ன்னு சொல்கிறான்!
நிஷ்+காமம்! காமம் இல்லாம இருக்கணும் என்பது தான் பகவத் கீதை!
அப்படி இருக்க, இவரோ காமம் தான் உசத்தி-ன்னு தறி கெட்டுப் போய் பேசுகிறாரே! இன்று இராமானுஜரை ஒரேயடியா சாய்ச்சிறலாம்!

சைவத்தில் இருந்து இவரு நம்ம வைஷ்ணவத்துக்குள் வந்து புகுந்த போதே எனக்குப் பயம்! இவரைப் போய் ஆளவந்தார், பெரிய நம்பி எல்லாம் எப்படிக் கொண்டாடுறாங்க-ன்னு தான் புரியலை! ஆனா இன்னிக்கி எல்லாம் முடிஞ்சிது! வகையா மாட்டினார்! ஹா ஹா ஹா! ரங்கா...உனக்கு எப்படி நன்றி சொல்லுறது! நல்ல வாய்ப்பைக் கொடுத்தீயே!
இராமானுசரே.....நிறுத்துங்கள்! அபச்சாரம்...உங்க விளக்கத்தில்...."

இராமானுசர்: "சற்றுப் பொறுங்கள்! அடியேன் இன்னும் முடிக்கவில்லை!
காமமே மிகவும் சிறப்பானது.....
கண்ணனுக்கே உரியது காமம்!"


கூட்டம்: "ஹாஆஆஆஆஆஆஆஆஆஆ"

இராமானுசர்: "உனக்"கே" நாம் ஆள் செய்வோம்! உனக்"கே" நம் காமம்!
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல்-ஓர் எம் பாவாய்!"


கீதா சாரமா? கோதா சாரமா? :) கோதை வெட்ட வெளிச்சமா ஆக்குறா! பார்க்கலாமா? கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க!

* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)


சிற்றம் சிறு காலே, வந்து, உன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ,
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது!


இற்றைப் பறை கொள்வான் அன்று காண்! கோவிந்தா,
எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும், உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட்செய்வோம்!
மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!
சிற்றம் சிறு காலே = சிறு காலே-ன்னா Early Morning!
சிற்றம் சிறு காலே-ன்னா = Early Early Morning! :)

வைகறை
என்பது தமிழ்க் காலக் கணக்கு! பிரம்ம மூகூர்த்தம் என்பார்கள் வடமொழியில்!
சூர்யோதயத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக! சுமார் 04:30 மணி!
இன்றும் சில திருமணங்கள் 04:30-06:00 இல் நடக்கும்! இந்த நேரம் சாதனைக்கும், யோகத்துக்கும், போகத்துக்கும் மிகவும் மங்களமான நேரம்!
மனித செயற்கைத்தனங்கள் விடிந்து கொள்ளும் முன்னர், இயற்கையான இயற்கையை ருசிக்கும் அற்புத நேரம்!

"வந்து", உன்னைச் "சேவித்து" = அடியாருடன் கூட்டமாக "வந்து", உன்னைச் சேவிக்கிறோம்!
* வந்து = இருந்த இடத்தில் இருந்தபடியே கூட இறைவனை வணங்கலாம்! ஆனால் அது தனித்த வழிபாடு! நாம "வந்து" வணங்குவோம்!
இந்த அற்புதமான வைகறை வேளையில் தனிமை எதுக்கு? அடியார் கூட்டத்தில், கூடி இருந்து, குளிர்ந்து வழிபட்டால், அது தனிப் புத்துணர்ச்சி அல்லவா!

* சேவித்து = இது வைணவத்தில் அதிகம் புழங்கும் ஒரு அழகிய தமிழ்ச் சொல்! இறைவனைக் கும்பிடலாம்! அது என்ன "சேவித்து"?
கரம் குவித்து வணங்குவதைச் சேவித்தல்-ன்னு சொல்லுவாங்க! ஆனால் சேவை என்பதின் அடிச்சொல் தான் "சேவித்து"!

சும்மா கண்ணால பாத்துட்டு ஹாய் சொல்லிட்டு வந்தா = கும்பிடுதல்!
சேவை என்னும் தொண்டும் செய்யணும்! அப்படிச் செய்தால் = "சேவித்து"!


உன் பொற்றாமரை அடியே, போற்றும் பொருள் கேளாய் = உன்னைப் போற்றவில்லை! உன் திருவடிகளையே போற்றும் காரணத்தைச் சொல்கிறோம்! கேள்!
வள்ளுவரின் கடவுள் வாழ்த்து முழுக்க, கடவுளைச் சொல்லலை! திருவடிகளைத் தான் சொல்றாரு ஐயன்!

* வாலறிவன் "நற்றாள்" தொழாஅர் எனின்
* மலர்மிசை ஏகினான் "மாண் அடி" சேர்ந்தார்
* வேண்டுதல் வேண்டாமை "இலான் அடி" சேர்ந்தார்க்கு
* தனக்குவமை இல்லாதான் "தாள்" சேர்ந்தார்க்கு அல்லால்
* அறவாழி அந்தணன் "தாள்" சேர்ந்தார்க் கல்லால்
* எண் குணத்தான் "தாளை" வணங்காத் தலை
* நீந்தார் இறைவன் "அடி" சேராதார்

கோதையும் இறைவனைப் போற்றாது, அவன் திருவடிகளையே போற்றுகிறாள்!
உன்னை விட உன் திருவடிகளைப் போற்றுவதால், அந்த பொற்றாமரை அடிகள் மேல் உனக்குப் பொறாமையா பெருமாளே? ஹிஹி! காரணம் சொல்கிறோம், கேள்!


பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ = மாடுகளை மேய்த்து உண்ணும் "சாதாரண" தொண்டர் குலம் நாங்கள்! அதில் நீயும் வந்து பிறந்து விட்டாய்!
(பெற்றம்=பெறு=பேறு-ன்னு தமிழ்க் காரணப் பெயர்களின் அழகைப் பாருங்க! பெற்றம்=மாடு=செல்வம்! பசுச் செல்வம்! பால் செல்வம்!)

* இறைவன் ஆயர் குலத்தில் நேரடியாகப் பிறக்கவில்லை! ஓர் இரவில் மாறி, ஆயர் குலத்தில் "உதித்தனன்" உலகம் உய்ய!
இருந்தாலும் ஆயர்கள் அவனை விட்டுக் கொடுப்பதாக இல்லை! அவனும் ஆயர் குலம் தான்! மொத்த ஆயர் குலமும் தொண்டர் குலம் தான்! எனவே அவனும் ஒரு அடியார் தான்!

* அட, இது எப்படி? அவனுக்கே அவன் எப்படி அடியாராய் இருக்க முடியும்?
பெருமாள் நெற்றியை நல்லா உற்றுப் பாருங்க...என்ன இருக்கு? திருவடிகள்!
அவன் திருவடிகள் அவனைக் காட்டிலும் உசத்தி! அதனால் தான் அவனே அதை நெற்றியில் தாங்கிக்கிட்டு இருக்கான்!
அவனுக்கே அவன் செவ்வடி தான் காப்பு! செவ்வித் திருக்காப்பு!
அதனால் தான் அவனைப் போற்றும் பொருள் கேளாய்-ன்னு பாடாமல், பொற்றாமரை "அடியே" போற்றும் பொருள் கேளாய்!

குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது = எங்கள் தொண்டை, கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்ளாமல் போகக் கூடாது, பெருமாளே!
நாங்கள் தொண்டு செய்வோம்! நீ ஏற்றுக் கொண்டே ஆகணும்!

அது என்ன குற்றேவல்? குறு + ஏவல் = சின்னச் சின்ன வேலை! சின்னச் சின்ன ஆசை! :)

கட+உள் = கடந்து உள்ளவன்! பெரும் பெரியவன்! அவனுக்குப் போய் பெருசா நாம என்ன பண்ணிட முடியும்?
* அவனை எழுப்புறோம், விசிறுகிறோம், திரு முழுக்காட்டுறோம்!
* அவனுக்குப் பூச் சூட்டுறோம்! உணவு படைக்கிறோம், தூப-தீப-கற்பூர ஆரத்தி எல்லாம் காட்டுகிறோம்!
* அடியார்களுடன் கூடிப் பாடுகிறோம்! அடியார் தொண்டும், சமூகத் தொண்டும் செய்கிறோம்!

இதெல்லாம் யாரை ஏமாற்றும் வேலை? நமக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிக்கறோம்! அவனுக்குச் சும்மா ஒத்த ரூவாய்க்கு பூப் போட்டா போதுமா?
ஹிஹி! போதும்! போதும்! குற்றேவல், ஆனால் குற்றமே இல்லாத ஏவல்!
அன்பால் செய்யும் தொண்டு! மனம் கசிந்து செய்யும் தொண்டு!

அம்மாவுக்கு ஒன்னுமே வாங்கிட்டுப் போகலை-ன்னாக் கூட அவங்க முகம் மாறி விடாது!
யம்மா, சாப்பாடு போடும்மா-ன்னு முன்னாடி உட்காருகிறோம் பாருங்க, அதுவே அவங்களைப் பொறுத்த வரை பெரிய தொண்டு தான்!

எப்படி இருக்கு கதை? சாப்பிடறது நாம! அது ஒரு தொண்டா? - ஹிஹி! அதான் குற்றேவல்! யம்மா, சாப்பாடு போடும்மா-ன்னு உரிமையோடு அன்போடு கேட்பது...
சின்ன தொண்டு தானே-ன்னு எங்களைக் கொள்ளாமல் போகாது பெருமாளே! ஞாபகம் வச்சிக்கோ! எங்கள் கடன் பணி (கைங்கர்யம்) செய்து கிடப்பதே! உன் கடன் அதை ஏற்றுக் கொண்டு கிடப்பதே!


இற்றைப் பறை கொள்வான் அன்று! காண்! = ஏதோ பறை, பறை-ன்னு நோன்புச் சாமான் கேட்டோம்! நீயும் கொடுத்தாய்!
ஆனால் நாங்கள் கேட்டது சும்மா சடங்குக்கும், நோன்புக்கும் அடிக்கும் பறை அல்ல! இற்றைப் பறை கொள்வான் அன்று! அன்று! அன்று!

அன்னிக்கு ஒருத்தன், மரணமே வரக் கூடாது = உள்ளும்/வெளியும், மேலும்/கீழும், மனிதன்/மிருகம்...என்றெல்லாம் அடுக்கி அடுக்கி வரம் கேட்டானே! அது போல எங்களையும் நினைச்சிட்டீயா?
ஏதோ காசு, பணம், வீடு, வசதி, ஆஸ்தி, அந்தஸ்து கேப்பாங்க இவங்க! சரி கொடுத்துடலாம்-ன்னு நினைச்சியா? இல்லை! இல்லை! இல்லை! இற்றைப் பறை கொள்வாம் அன்று! அன்று! அன்று!

நாங்கள் கேட்ட பறை = சாலப் + பெரும் + பறை
பரம்பரை, பரம்பரை-களாக உன்னைத் துதிக்கும் பரம்+பறை!

பரமாத்வான நீ! = நீ தான் வேணும் எங்களுக்கு!
நாராயண"னே", நமக்"கே" பறை தருவான்
-ன்னு துவக்கத்திலேயே சொல்லியாச்சு! வரம் எல்லாம் வேணாம்! நீ தான் வேணும்!
ஆகவே உன்னைக் கொடு, என்னைத் தருவேன்!:)
கோவிந்தா = கோ-விந்தனே! பசுக்களான எங்களைக் காப்பவனே!

சென்ற இரண்டு பாசுரங்களிலும், இந்தப் பாசுரத்திலும் சேர்த்து, "கோவிந்தா-கோவிந்தா-கோவிந்தா" என்று மூன்று முறை அழைக்கிறாள் கோதை!
* கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!
* குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!
* இற்றைப் பறை கொள்வாம் அன்று காண், கோவிந்தா!


கோவிந்த சப்தம் மங்களகரமான சப்தம்! எல்லா அவதாரங்களையும் ஒரே பெயரில் அடக்க முடியும்-ன்னா அது "கோவிந்த" என்ற ஒரே சொல்லில் மட்டும் தான், என்று மூக்கூர் சுவாமிகள் உபன்னியாசம் செய்வார்!
இறைவனின் திருநாமங்கள் பெரும்பாலும் மந்திரப் பூர்வமானவை! ஆனால் இந்த "கோவிந்தா" என்ற ஒரே திருநாமம் தான் மந்திரம் இல்லாமல், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் உச்சரிக்கலாம் என்று ஆனது!

மாதவிலக்காய் இருக்கும் பாஞ்சாலி நடுச்சபையில் கூவியதும் "கோவிந்தா" என்ற நாமமே!
யாரோ ஒரு கிராமத்துவாசி "கோஹிந்தா"-ன்னு சொல்ல, அதை ஒரு வடமொழி வித்தகர் திருத்தினாராம்! வேண்டாம், அப்படியே சொல்லட்டும் என்று தடுத்தாட்கொண்ட கதையும் உண்டு! - அப்படியான திரு நாமம், எளியோர்கள் ஒரு நாமம்! = கோவிந்தா! கோவிந்தா!


எற்றைக்கும், ஏழ் ஏழ் பிறவிக்கும் = எப்பப்ப எல்லாம் "எழும் எழும்" பிறவிகளோ, அப்பல்லாம்...

ஏழ் x ஏழ் பிறவின்னா என்ன? ஏழு பிறவியா? இல்லை ஏழேழு=நாற்பத்தொன்பது பிறவியா? :)

இதை வல்லுனர்கள் விதம் விதமா கணக்குப் போடுவாங்க!

* ஒரு சிலர் ஏழு பிறவி-ம்பாங்க = தாவரம், நீர் வாழ்வன, ஊர்வன, விலங்கு, நரகர், தேவர், மக்கள்...
தேவர்களே ஆனாலும், மனுசனாய்ப் பிறந்தால் தான், எல்லாம் வினையும் தீர்த்து, மோட்சம் புக முடியும்! ஆகவே Last Stop மனுசன் தான்! :) - வைகுந்தம் புகுவது "மண்ணவர்" விதியே!

* இன்னும் சிலர் ஏழேழாய், ஒன்றுக்குள் ஒன்று அடங்கி இருப்பத்தோரு பிறவி-ன்னு கூடச் சொல்லுவாய்ங்க! - "மூவேழ்" சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே -ன்னு திருவாசகம்!
புல்லாகிப், பூடாய், புழுவாய், மரமாகிப்,
பல் விருகமாகிப், பறவையாய்ப், பாம்பாகிக்,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்,
வல் அசுராகி, முனிவராய்த், தேவராய்,
செல்லா நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


* ஆனால் கோதைக்கு இந்தக் கன்ஃப்யூஷனே இல்லை! அது ஏழோ, இல்லை இருவத்தி ஒன்னோ, இல்லை நாற்பத்து ஒன்பதோ...
அவ தான் எவ்ளோ பிறவி-ன்னாலும், வேணாம்-ன்னு சொல்லாமல், வேணும் வேணும்-ன்னு கேட்கிறாளே! மோட்சம் வேணாமா? - வேணாம்! அது சுத்த போர்! :)


நாம்: "என்னது மோட்சம் போரா?"

கோதை: "ஆமா! அங்கே மலர்கள் வாடவே வாடாது! தினம் தினம் பூமாலை, பாமாலை சூட்டிக் கொடுக்கத் தான் முடியுமா? இல்லை படுத்திருக்கும் பெருமாளை அப்படியே ஆசையாக் கட்டிக்கத் தான் முடியுமா?
யாருக்கு வேணும் மோட்சம்? போங்கய்யா, ஜீவாத்மா, பரமாத்மா-ன்னு சொல்லிக்கிட்டு இருங்க! எனக்கு ஒன்னியும் வேணாம்! நீங்களே வச்சிக்குங்க!"

நாம்: "அடிப் பாவீ...கோதை! லூசாடி நீயி? இவ்ளோ கஷ்டப்பட்டு, மார்கழி நோன்பெல்லாம் இருந்துட்டு, க்ளைமாக்ஸ்-ல வந்து மோட்சம் வேணாம்-ன்னு சொல்லுறியே?
மனுசனாப் பொறந்தாலே ஆயிரம் கஷ்டம்! அவனவன் இன்னொரு பிறவி வேணாம்-ன்னு தெய்வத்து கிட்ட வேண்டுறான்! நீ என்னடா-ன்னு பிறவி "வேணும்"ங்கிறியே? பிறவி எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

கோதை: ஒரு கஷ்டமும் இல்ல!
பூமியில தான் மாடு வேணும், வீடு வேணும்-னு விதம் விதமாச் சுயநலமா வேண்டிக்குறீங்க-ன்னா,
"எனக்கு" மோட்சம் வேணும், "எனக்கு" மோட்சம் வேணும்-ன்னு மோட்சத்திலேயும் சுயநலமா? போங்கடீ...நீங்க தான் லூசு! பிறவி என்பது கஷ்டமே இல்லையே!

* நீர் வாழ்வனவா? = மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே!
* பறவையா? = கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே!
* மரமா? = வேங்கடத்து செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே!
படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே! எம்பெருமான் பொன்மலை மேல் "ஏதேனும்" ஆவேனே!

ஆல் திஸ் ஜீவாத்மா, பரமாத்மா, மோட்சம் எல்லாம் நீங்களே வச்சிக்குங்க! :)
ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம்,
"எனக்கு" மோட்சம் வேணும், "எனக்கு" மோட்சம் வேணும் -ன்னு, எனக்கு-எனக்கு-ன்னு சொல்லிக்கிட்டே இருங்க!
ஒரு கையில் மணி, இன்னொரு கையில் செம்பு வச்சிக்கிட்டு, அனத்திக்கிட்டே இருங்க! ஹா ஹா ஹா! :)

அங்கே மோட்சத்துக்கே போனாலும்,
அவர் அவதாரம் எடுக்கும் போது, நம்மளையும் கீழே கூப்புடுவாரு! அப்போ வர மாட்டேன்-ன்னா சொல்லப் போறே?
உனக்கு உன் சுயநலமான மோட்சம் வேணுமா, இல்லை அன்பாக அவரு வேணுமா? யோசி...


உன் தன்னோடு உற்றோமே ஆவோம் = உனக்கு உறவாக அமைவோம்!

அவ்ளோ தான்! "நீ-நாங்கள்" உறவு! இது பிரணவம் போல! பிரிக்கவே முடியாது! உன்தன்னோடு (அ) + உறவேல் (உ) + நமக்கு (ம)! இங்கு ஒழிக்க ஒழியாது!

உனக்கே நாம் ஆட்செய்வோம் = உனக்"கே" நாம் ஆளாக இருப்போம்!
மாம் "ஏகம்" சரணம் வ்ரஜ-ன்னு நீ தானே அன்று சொன்னாய்?
அதான் உனக்"கே" நாம் ஆட்செய்வோம்!
என்னிக்கும் நான் உன் "ஆளு" கண்ணா! அதை மறந்துடாதே! :)

கைங்கர்யம்-ன்னு ஒன்னு இருந்தாப் போதும்! குணானுபவம்-ன்னு ஒன்னு இருந்தாப் போதும்!
நான் பூமாலை, பாமாலை சூடி அவனுக்கும் சூட்டிக் கொண்டே இருப்பேன்! பதிவு போட்டுக்கிட்டே இருப்பேன்! :)

ஏழேழ்-ன்னு எத்தனை பிறவி எழுந்தாலும், எழுந்தாலும்...I dont care! I will enjoy the thirumeni sountharyam of my Love:)
எனக்குக் காமம் தான் வேணும்! காமம் தான் வேணும்! கண்ணனுக்கே உரியது காமம்!

மற்றை நம் காமங்கள் மாற்று = அதுக்குத் தடையா, போட்டியா, வேறெந்த விருப்பம் வந்தாலும், அதை மாத்திரு கண்ணா!

சர்வ தர்மான் பரித்யஜ்ய = எல்லாத் தர்மங்களையும் விட்டுவிட்டு-ன்னு எங்களுக்குச் சொன்னாய் அல்லவா!
சர்வ காமான் பரித்யஜ்ய = மற்றை நம் காமங்கள் மாற்று-ன்னு நாங்கள் உனக்குச் சொல்கிறோம்!

கண்ணனுக்குப் போய் சேராத எங்களின் மற்ற காமங்களை, மற்ற விருப்பங்களை எல்லாம் ஒன்னு விடாமல் மாற்றி விடு!
சில சமயம் இவ்ளோ பேசிட்டு நானே ஒரு வேளை சபலப் பட்டுப் போயிடலாம்! இந்தப் பூமியோட ராசி அப்படி! அதுனால....
மற்றை நம் காமங்கள் மாற்று! மாற்று!
கண்ணனின் காமங்கள் ஏற்று! ஏற்று!


ஏல் கொள் பெருமாளே! என்னை-எங்களை ஏற்றுக் கொள்!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!


அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! :)
இன்னும் சிறிது நேரத்தில், வங்கக் கடல் கடைந்த என்ற கடைசிப் பாசுரமும் போட்டு, திருப்பாவைப் பதிவுகளை நிறைவு செய்து விடுகிறேன்!

நாளை தைத்திருநாளில் - தையொரு திங்களைப் பார்த்து,
ஆண்டாள் கல்யாண வைபோகத்தையும் ஜாலியாக் கொண்டாடி...
மார்கழித் திருப்பாவைப் பதிவுகளை நிறைவு செய்வோம்!

30 comments:

 1. //υnĸnown вlogger™ said...
  :) i m here//

  You are the best!
  You are the Singai-Kothai! :)

  போகி வாழ்த்துக்கள் ஜிஸ்டர்! நல்லாக் கொளுத்து! போய் எல்லாப் பதிவையும் பத்த வை! :)

  ReplyDelete
 2. எனக்கு ரொம்ப புடிச்ச மாதவி பந்தலை தவிர வேறு எங்கேயும் பத்த வைக்க போறது இல்லை :D


  //நாம்: "அடிப் பாவீ...கோதை! லூசாடி நீயி? இவ்ளோ கஷ்டப்பட்டு, மார்கழி நோன்பெல்லாம் இருந்துட்டு, க்ளைமாக்ஸ்-ல வந்து மோட்சம் வேணாம்-ன்னு சொல்லுறியே?
  மனுசனாப் பொறந்தாலே ஆயிரம் கஷ்டம்! அவனவன் இன்னொரு பிறவி வேணாம்-ன்னு தெய்வத்தின் கிட்ட வேண்டுறான்! நீ என்னடா-ன்னு பிறவி வேணும்ங்கிறியே? பிறவி எவ்ளோ கஷ்டம் தெரியுமா?//

  இப்படி நினைச்சுட்டு இருந்த நான்,இனிமேல் திருந்திட்டேன் :D
  கோதைக்கு நன்றி,கோதை சொன்னதை புரியுற மாதிரி சொன்ன ரவி அண்ணாவுக்கு இன்னும் பெரிய நன்றி.இங்க வந்தால் உங்களை எரிக்கமா ஐஸ்கீர்ம் வாங்கி தரேன் அண்ணா :))
  rock on bro :D

  ReplyDelete
 3. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாசுரம்.. அதில் நம் ராமானுஜரையும் அழைத்து வந்து சிறப்பு செய்துட்டீங்க..

  இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் “உன்” தன்னோடு உற்றோமே ஆவோம்.

  ReplyDelete
 4. //அட, இது எப்படி? அவனுக்கே அவன் எப்படி அடியாராய் இருக்க முடியும்? பெருமாள் நெற்றியை நல்லா உற்றுப் பாருங்க...என்ன இருக்கு? திருவடிகள்!//

  என் பெரியப்பா, இன்னொரு விளக்கம் கொடுப்பார்.. வளைந்திருக்கும் திருமண் பெருமாளையே குறிக்கும், அவனுள் அனைவரும் அடக்கம் என்பதயே அதன் நடுவில் உள்ள ஸ்ரீசூர்ணாம் ஆகிய மஹாலெக்ஷ்மி குறிக்கிறாள். இவ்வாறு திருமண் + ஸ்ரீசூர்ணத்தில் பெருமாளும் தாயாரும் உள்ளதாக சொல்வார்.

  ReplyDelete
 5. //"கோவிந்தா-கோவிந்தா-கோவிந்தா" என்று மூன்று முறை அழைக்கிறாள் கோதை!//

  வேத பாராயணங்களிலும், ”கோவிந்த - கோவிந்த - கோவிந்த” என்று மூன்று முறை சொல்வர்.

  ReplyDelete
 6. //நாம்: "என்னது மோட்சம் போரா?"//

  சுஜாதா அவர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது.. சொர்க்கத்தில் ஒரே நாளில் போரடித்து விடும், நரகத்தில் தான் பல வித்யாசமான மனிதர்களை சந்திக்கலாம்.

  ReplyDelete
 7. தினமுமே முப்பதும் சொல்ல முடியாதவர்கள், இந்த ஒன்றை மட்டும் வாய் விட்டு ஓதிக்கலாம்! மனசுக்குள் சொல்லிக்கலாம்! ஆலயங்களில், சாத்துமுறை என்னும் சாற்று மறையில், இது சிறப்பாக ஓதப்படும் பாசுரம்! கருவறைகளில் இந்தத் தமிழ்ப் பாட்டு இல்லாத பெருமாள் கோயிலே இல்லை என்று சொல்லி விடலாம்! - ஆந்திரா, கர்நாடகம், சில கேரள ஆலயங்கள் உட்பட!>>>>

  ஆமாம்....கன்னடத்வனியில் தமிழ்ப்பாசுரம் சொல்வார்கள் இங்க கர்னாடகால சில கோயில்களில..ஆனாலும் கேட்க தமிழ் இனிக்கும்!

  ReplyDelete
 8. ஹிந்தில காம் என்றால் வேலை என்று பொருள் வரும் சம்ஸ்க்ருதத்திலும் அப்படி இருக்கலாமோ
  அதனால் காமங்கள் என்பது பணிகள் வேலைகள் எனவும் அர்த்தம் கொள்ளத்தோன்றவைக்கிறது ரவி என்ன சொல்றீங்க நீங்க!

  ReplyDelete
 9. றம் சிறு காலே = சிறு காலே-ன்னா Early Morning! சிற்றம் சிறு காலே-ன்னா Early Early Morning!
  வைகறை என்பது தமிழ்க் காலக் கணக்கு! பிரம்ம மூகூர்த்தம் என்பார்கள்!
  சூர்யோதயத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக! சுமார் 04:30 மணி! இன்றும் சில திருமணங்கள் 04:30-06:00 இல் நடக்கும்! இந்த நேரம் சாதனைக்கும், யோகத்துக்கும், போகத்துக்கும் மிகவும் மங்களமான நேரம்! மனித செயற்கைத்தனங்கள் கலக்கும் முன்னர், இயற்கையான இயற்கையை ருசிக்கும் அற்புத நேரம்!>>>>>>>>>>>>>>>>> சிற்றங்சிறுகாலை!இங்க ஆண்டாளை நீங்கள் ஒரு பட்டம் கொடுத்து புகழ்வீர்கள் என நினைத்தேன் ரவி!

  ReplyDelete
 10. "வந்து", உன்னைச் "சேவித்து" = அடியாருடன் கூட்டமாக வந்து, உன்னைச் சேவிக்கிறோம்>>>>


  >>>>>>>>>>>>>>>>> ஏற்றக்கலங்கள் தொடங்கி ஒருத்திமகனாய்பாடல் வரை ;வந்து; அல்லது ;வந்த; என்ற சொல் 5 முறை வருகிறது.

  ஏற்ற..........ஆற்றாது வந்து உன் அடிபணியுமாப்போலே...

  அங்கண்மா...சங்கமிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

  மாரி....யாம் வந்த காரியம் ஆராய்ந்தருள்

  அன்றுஇவ்வுலம்.....இன்றுயாம் வந்தோம் இரங்கு..

  ஒருத்திமகனாய்..உன்னை அருத்தித்து வந்தோம்..

  இந்த சிற்றஞ்சிறுகாலைப்பாடலில்
  வந்து உன்னை சேவித்து என்பது சரணாகதியைச்சொல்கிறது.
  இதன் பூர்வாங்கமாக ஐந்து அங்கங்களோடே வந்து செய்யும் ஆத்ம சமர்ப்பணத்தை சொல்கிறாள் ஆண்டாள்.

  சரணாகதியின் போது பக்தன்
  1, நான் உனக்கு அனுகூலனாய் இருப்பேன் எனும்போது பகவான் நான் உனக்கு அத்யந்த அதாவது நெருங்கிய அனுகூலனாய் இருப்பேன் என்கிறாராம்

  2 நான் இனி உனக்கு மாறி நடக்கமாட்டேன் எனும் பக்தனிடம் நான் உனக்கு மாறாக நடக்கமாட்டேன் என்பாராம்

  3 நான் உன்னையே நம்பி வந்தேன் என்பானாம் பக்தன்,
  நான் நம்பிவந்தவனை எவ்வாறு கைவிடுவேன் என்பானாம் இறைவன்

  4 நான் நீ இல்லாமல் போக்கற்றுக்கிடக்கிறேன் என்பானாம் பக்தன்
  நானே இனி உனக்கு எல்லாமாக இருப்பேன் அஞ்சாதே என்பாராம் ஆண்டவன்

  5 உன்னையே எனது ரட்சகனாக அறுதியிட்டேன் என்பானாம் பக்தன்.

  உன்னையே ரட்சித்தேன் என்பானாம் பகவான்!


  இந்த ஐந்து சங்கல்பங்களே ஐந்து அங்கங்கள் ஆகின்றன.

  சரணாகதி இதுதான் என்கிறார்கள் பெரியோர்கள்!

  நின்னருளாம் கதியன்றி மற்றொன்றில்லேன் நெடுங்காலம் பிழைசெய்த நிலைகழிந்தேன்
  என்கிறார் தேசிகர்.

  உனக்கே நாம் ஆட்செய்வோம் எனும் வாக்கியத்தில் சரணாகதி தத்துவத்தை
  சொல்லிவிடுகிறாள் ஆண்டாளும்!

  ReplyDelete
 11. வங்கக்கடலை சீக்கிரம் கடைந்து ஆண்டாள் அளித்த தமிழ் அமுதத்தை தருக! பொங்கல் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 12. 29க்கு வந்துட்டேன் ரவி.

  சிலு சிலு சிற்றஞ்சிரு காலைக்கு உங்கள் பதிவைப் படித்தாயிற்று. இதைப் படிக்கும்போது கோதை திருமணத்தையும் டிவியில் காட்டினார்கள்.

  ரவி ,இன்னும் நிறைய பதிவுகளை என்னையும் கண்ணனையும் சேர்த்து எழுதச் சொல்லுன்னு கோதை சொன்னாள்.
  நன்றிம்மா.

  ReplyDelete
 13. 29க்கு வந்துட்டேன் ரவி.

  சிலு சிலு சிற்றஞ்சிரு காலைக்கு உங்கள் பதிவைப் படித்தாயிற்று. இதைப் படிக்கும்போது கோதை திருமணத்தையும் டிவியில் காட்டினார்கள்.

  ரவி ,இன்னும் நிறைய பதிவுகளை என்னையும் கண்ணனையும் சேர்த்து எழுதச் சொல்லுன்னு கோதை சொன்னாள்.
  நன்றிம்மா.

  ReplyDelete
 14. Raghav said...
  //அட, இது எப்படி? அவனுக்கே அவன் எப்படி அடியாராய் இருக்க முடியும்? பெருமாள் நெற்றியை நல்லா உற்றுப் பாருங்க...என்ன இருக்கு? திருவடிகள்!//

  என் பெரியப்பா, இன்னொரு விளக்கம் கொடுப்பார்.. வளைந்திருக்கும் திருமண் பெருமாளையே குறிக்கும், அவனுள் அனைவரும் அடக்கம் என்பதயே அதன் நடுவில் உள்ள ஸ்ரீசூர்ணாம் ஆகிய மஹாலெக்ஷ்மி குறிக்கிறாள். இவ்வாறு திருமண் + ஸ்ரீசூர்ணத்தில் பெருமாளும் தாயாரும் உள்ளதாக சொல்வார்.

  12:42 AM, January 13, 2009
  >>>>>>>>>>>>>>>>ஆமா ராகவ் இப்படி நானும் கேள்விப்பட்டிருக்கேன்.

  ReplyDelete
 15. வல்லிசிம்ஹன் said...
  29க்கு வந்துட்டேன் ரவி.

  சிலு சிலு சிற்றஞ்சிரு காலைக்கு உங்கள் பதிவைப் படித்தாயிற்று. இதைப் படிக்கும்போது கோதை திருமணத்தையும் டிவியில் காட்டினார்கள்.

  ரவி ,இன்னும் நிறைய பதிவுகளை என்னையும் கண்ணனையும் சேர்த்து எழுதச் சொல்லுன்னு கோதை சொன்னாள்.
  நன்றிம்மா
  >>>>>>>>>>>>>>>>>>..2தடவை சொன்னாளா உங்ககிட்ட கோதை !என்கிட்ட ஒருதடவ கூட சொல்லலையே வல்லிமா:):)

  ReplyDelete
 16. மிகவும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள் !


  தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

  கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
  சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


  உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
  உழவன்

  ReplyDelete
 17. ஏழ் ஏழ் அப்டிங்கிறது வரையருக்க படமுடியாதது நு அதாவது இன்ஃபினிட்டிவ் நு சொல்லுவோம் அதனுடைய தமிழாக்கம்


  Mani Pandi

  ReplyDelete
 18. கோதை ஒரு சூப்பர் காதலிப்பா. கண்ணன் கொடுத்து வைத்தவன்.
  நல்ல பதிவு. வாழ்த்துகள்

  ReplyDelete
 19. மிக அருமையான விளக்கங்கள் இரவி. எதைப் பற்றிக் குறிப்பாக எடுத்துப் பேச என்று தெரியவில்லை. எல்லாம் நல்லா இருக்கு.

  ReplyDelete
 20. கலக்கல்... ஆண்டாள் Conversation சூப்பர் ;)

  ReplyDelete
 21. ஏல் கொள் பெருமாளே! என்னை-எங்களை ஏற்றுக் கொள்!
  ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்>>>>>

  ஏல்ல ஏள்ள(ல ள ஆகி) (ஏற்று வருக ஏற்றுவருக) என்று இப்போதும்
  வைணவவீடுகளில் சான்றோர்கள் வந்தால் வரவேற்கிறார்கள்

  ReplyDelete
 22. இன்று தான் இந்தப் பாடலைப் படித்தேன்.

  சேமநல்வீடும் பொருளும் தருமமும் சீரிய நற்
  காமமும் என்று இவை நான்கென்பர் நான்கினும் கண்ணனுக்கே
  ஆமது காமம் அறம் பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்
  வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே

  ReplyDelete
 23. //குமரன் (Kumaran) said...
  இன்று தான் இந்தப் பாடலைப் படித்தேன்.

  நான்கினும் கண்ணனுக்கே
  ஆமது காமம் அறம் பொருள் வீடிதற்கு என்றுரைத்தான்
  வாமனன் சீலன் இராமானுசன் இந்த மண்மிசையே//

  என்ன குமரன்,
  இராமானுச நூற்றந்தாதியும் கையுமா உட்கார்ந்துட்டீங்களா? :)
  நன்றி பாட்டைக் கொடுத்தமைக்கு!

  அடியேன் திருப்பாவை விளக்கத்தில், ஏதோ கொஞ்சமாச்சும் பிரமாணம் தேறும் போல இருக்கே! :))

  ReplyDelete
 24. நன்றி கடன் பட்டிருக்கிறேன்.
  ஓங்கி உலகலண்ட என்ற பாடலே எமக்கு சரியாக தெரியாது .. யாரு பாடினது என்பதும் தெரியாமல் இருந்தேன்.
  உங்கள் பதிவில் ஆண்டாள் பாசுரத்திற்கு மிக மிக மிக எளிமையான விளக்கங்கள் படித்தேன்
  ஆண்டாள் பாசுரமும் உங்கள் விளக்கமும் எம்மை ஈர்த்தது .. மனதில் அப்படியே படியுது. this year மார்கழி மாதம் முதல் முறையாக தினமும் ஆண்டாள்
  பாடல்கள் உங்கள் பதிவில் படித்து வந்தேன். maargazhi 15-vathu நாள் பெருமாள் கோவிலில் பஜனை குழுவில் சேர
  வாய்ப்பும் கிடைத்தது. இதுதான் பறையோ! ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
  உங்கள் தொண்டு சிறப்பானது .இன்று பஜனை பாடிய பாசுரத்தில் காமமே மிகவும் சிறப்பானது.....
  கண்ணனுக்கே உரியது காமம்!"
  மற்றை நம் காமங்கள் மாற்று! ஏல்-ஓர் எம் பாவாய்!
  என்று கூறியிருக்கிறார் ஆண்டாள். .ஒரு சந்தேகம்
  கண்ணனுக்கு ஆவது காமம் என்றால் பெண்களை கல்யாணம் பண்ண கூடாதா!
  சந்நியாசியா இருக்கணும் என்று சொல்றாங்களா!
  அவ பெண் ஆசைப்பட்டு கண்ணனை கட்டி கொண்டாள்.
  நாமும் ஓம் நமோ நாராயணய! கண்ணனுக்கு தாலியை கட்டி விட்டோம்.
  ஆனா நம்ம!
  மானிட பெண்ணை திருமணம் செய்யாமல் விட மாட்டாங்களே! என்ன செய்வது

  கண்ணனுக்கு மட்டுமே ஆவது காமம் - ரொம்ப சரியானது.
  ஆனா எப்படி!
  .

  ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
  ஸ்ரீ இராமானுஜர் திருவடிகளே சரணம்!


  நட்புடன்
  -----------------------

  ReplyDelete
 25. //Anonymous said...
  நன்றி கடன் பட்டிருக்கிறேன்//

  :)
  என் தோழி கோதைக்குத் தானே? தாராளமா கடன் படுங்க!

  //உங்கள் பதிவில் ஆண்டாள் பாசுரத்திற்கு மிக மிக மிக எளிமையான விளக்கங்கள் படித்தேன்//

  :)

  //மனதில் அப்படியே படியுது. this year மார்கழி மாதம் முதல் முறையாக தினமும் ஆண்டாள்
  பாடல்கள் உங்கள் பதிவில் படித்து வந்தேன்//

  இது சென்ற ஆண்டு இட்ட பதிவுங்க!

  //maargazhi 15-vathu நாள் பெருமாள் கோவிலில் பஜனை குழுவில் சேர வாய்ப்பும் கிடைத்தது. இதுதான் பறையோ!//

  ஆமாம்!
  அந்தமில் பேரின்பத்து அடியவர்களோடு கூடித் தொழுவதே பறை!

  ReplyDelete
 26. //ஒரு சந்தேகம்...கண்ணனுக்கு ஆவது காமம் என்றால் பெண்களை கல்யாணம் பண்ண கூடாதா!
  சந்நியாசியா இருக்கணும் என்று சொல்றாங்களா!//

  ஹா ஹா ஹா

  //அவ பெண் ஆசைப்பட்டு கண்ணனை கட்டி கொண்டாள். ஆனா நம்ம!//

  :)

  //மானிட பெண்ணை திருமணம் செய்யாமல் விட மாட்டாங்களே! என்ன செய்வது//

  திருமணம் செய்வது!
  உங்க பேரு என்னாங்க? கல்யாணம் ஆயீருச்சா? இல்லை தை பொறந்தா வழி பொறக்கப் போவுதா? :)
  முன் கூட்டிய வாழ்த்துக்கள்!!

  // கண்ணனுக்கு மட்டுமே ஆவது காமம் - ரொம்ப சரியானது.
  ஆனா எப்படி!//

  உம்...
  கண்ணனுக்கு மட்டுமே உரியது காமம்!
  ஆனால் காமம் என்றால் என்ன?

  ReplyDelete
 27. // கண்ணனுக்கு மட்டுமே ஆவது காமம் - ரொம்ப சரியானது.
  ஆனா எப்படி!//

  "காமம்" = உடல் சுகம் என்பது பொருள் அல்ல!
  "காமம்" = விழைவு, ஆசை, இன்பத்தோடு கூடிய...
  மனத்தில் ஆராக் காதல் நிலை என்பது பொருள்!

  கண்ணனுக்கே உரியது காமம்-ன்னா, உலகில் எல்லாரும் கண்ணனைக் கல்யாணம் கட்டிக்கிட்டு, அவனோடு குடும்பம் நடத்தி குழந்தை பெற்றுக் கொள்வது-ன்னு பொருள் எடுத்துக்க கூடாது!

  பெண்களே அப்படி எடுத்துக்க முடியாது! அப்பறம் ஆண்கள் எப்படி எடுத்துக்க முடியும்?
  ஆனா எடுத்துக்கறவங்க எடுத்துக்கலாம்! :)))

  கண்ணனுக்கே உரியது காமம்-ன்னா...
  * நம் மனம் கண்ணனுக்கே உரியது!
  * அந்த மனத்தில் தோன்றும் எண்ணங்களில் எப்பமே கண்ணனுக்கே முதன்மை..
  * அன்றாட செயலிலும் வாழ்விலும், கண்ணனுக்கே முதல்...
  * குடும்பம் நடத்தி வந்தாலும், தாய் தந்தையரை மதித்தாலும், மனைவியைக் கொஞ்சினாலும், குழந்தையோடு செல்லம் ஆடினாலும்...
  * யாரோடும், எப்போதும், எல்லா இடத்தும்...நல்லது செய்யும் போதும், சபலத்தால் தவறு செய்யும் போது கூட...

  * மனத்தின் ஓரத்தில் கண்ணன் இருந்து கொண்டே இருப்பது = "காமம்"!
  * எது செய்தாலும், இது அவனுக்குப் பிடிக்குமா என்று அப்பப்ப நினைத்துப் பார்த்துக் கொள்வது = "காமம்"!
  * அவன் உள்ள உகப்புக்கு நாம எப்பமே இருக்கணும் என்று மனதார நினைப்பது = "காமம்"!

  கடையில் ஏதாச்சும் ஒரு நல்ல பொருள் பார்த்தா, என் தோழன் நினைவு வரும்! எப்பயோ கேட்டிருப்பான்! அட, அவன் அப்ப ஆசையா கேட்டான்-ல?-ன்னு வாங்கி வைப்பேன்!
  அது போலத் தான்! எப்படி இப்படி நினைவுக்கு வருதோ, அதே போல், அன்றாட செயல்களில், இதனால் கண்ணன் மனசு உவக்குமா? வாடுமா? உவக்குமா? வாடுமா??-ன்னு பார்த்துப் பார்த்து நடந்து கொள்வது "காமம்"!

  இந்தக் காமம் தான்...கண்ணனுக்கே உரியது "காமம்" என்பதற்கு உண்மையான பொருள்!

  இப்படித் தொடங்கினால், கொஞ்சம் கொஞ்சமாக...உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே...என்ற நிலை தானாக வரும்!
  * அதுவே, ஞான-கர்ம-பக்தி யோகங்களைக் காட்டிலும் சிறந்தது!
  * அதுவே, தனக்கு மோட்சம் என்னும் சுயநலம் இல்லாதது!
  * அதுவே, என் கதி, அதோ கதி, அதோ அவனே கதி...என்னும் சரணாகதி!!

  சரணாகதியே = காமம்!

  காமமே சிறந்த புருஷார்த்தம்!
  கண்ணனுக்கே உரியது காமம்!

  (இப்போ ஓரளவு புரியும் வண்ணம் சொல்ல முடிந்தது என்று நினைக்கிறேன்! ஹரி ஓம்!)

  ReplyDelete
 28. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 29. மேலிருக்கும் ஒரு பதிவை பண்ணிடுங்க ரவி
  இந்த பதிவில் மட்டும் பெயர் வெளியிட விரும்பவில்லை .
  உங்களுக்குத்தான் பெயர் போட்டேன்.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP