Thursday, January 01, 2009

மார்கழி-18: மாதவிப் பந்தல் என்றால் என்ன?

ஹேய்ய்ய்ய்ய்ய்! இன்னிக்கி நம்ம பாட்டுங்க! கே.ஆர்.எஸ் வலைப்பூவை ஆண்டாள் அன்னிக்கே வாழ்த்திப் பாடியிருக்கா-ன்னா பாத்துக்கோங்க! ஹாஹாஹா! :)

* இந்தப் பாட்டில் தாங்க "மாதவிப் பந்தல்" என்னும் சொற்றொடர் வருது! அதுவே அடியேன் வலைப்பூவின் பெயராக அமைந்ததும் கோதையின் திரு(அன்பு)வுள்ளமே!

* இந்தப் பாடல் இராமானுசரின் உள்ளம் கவர்ந்த பாடலும் கூட! இதைப் பாடிக் கொண்டு வரும் போது, பிராட்டியே கண்ணெதிரில் வந்து தரிசனம் தந்தாற் போலே ஒரு நிகழ்ச்சி! வளையோசை கலகல-கலவென கதவு திறக்க, மாதவிப் பந்தலில் மயங்கினார் நம் திருப்பாவை ஜீயர் = இராமானுசர்!
நல்ல கவிதையை வாசிக்கலாம்! சு-வாசிக்கலாம்! உடையவர் சு-வாசித்தார்! இங்கே சென்று நீங்களும் சு-வாசியுங்கள்!
* இந்தப் பாடலில் தான் "அந்த" மிகவும் முக்கியமான நபரை நமக்கு அறிமுகப்படுத்தத் துவங்குகிறாள் கோதை!


மாதவிப் பந்தல் = கோதைத் தமிழ்!
கோதைத் தமிழே அடியேனின் வலைப்பூவாக அமைந்து விட்டது அவள் தந்த நட்புக் கொடை!
அதற்கு நன்றி சொல்ல முயன்று, முடியாமல்,
வெறுமனே அவளைப் பார்த்து புன்னகை பூத்து, இன்றைய பாட்டினைத் துவக்குகிறேன்! போகலாமா?

கேட்டுக்கிட்டே பதிவைப் படிங்க! :)
* ஆண் குரலில் - சிக்கில் குருசரண் (கல்லூரி மாணவிகளின் நாயகன்)
* பெண் குரலில் - எம்.எல்.வசந்த குமாரி (ஸ்ரீவித்யா அவங்க அம்மா)

உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்,
நந்த கோபன் மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி, கடை திறவாய்!
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்

பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண்!
பந்து ஆர் விரலி, உன் மைத்துனன் பேர் பாடச்,
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்து! ஏல்-ஓர் எம் பாவாய்!


நேற்றைய பாட்டில் வீட்டில் எல்லாரையும் எழுப்பிய கோதை, முக்கியமான ஒருத்தியை மட்டும் மறந்து விட்டாளோ? நந்தகோபன், யசோதை, பலதேவன், கண்ணன் என்று எல்லாரையும் எழுப்பியவளுக்குத் திடீரென்று ஒரு ஷாக்!
அச்சோ! அவசரத்தில் தவறு செய்து விட்டோமோ? உடனே சுதாரித்து விடுகிறாள்!

முக்கியமான "அந்த" நபரை எழுப்பாமல், கண்ணனை எழுப்புதல் கூடாது அல்லவா?
* "அந்த" நபரை எழுப்பிவிட்டு,
* "அந்த" நபரின் துணைக் கொண்டு கண்ணனை எழுப்பினால்,
* அருள் நிச்சயம், பொருள் நிச்சயம், காதல் நிச்சயம்,
* அறம்-பொருள்-இன்பம் நிச்சயம்! விருப்பமெல்லாம் நிச்சயம்!

பிராட்டியைப் பற்றிக் கொண்டு, அவள் புருஷகாரத்தால், பெருமாளைப் பற்றச் சொல்லிக் கொடுக்கிறாள் கோதை!

அச்சோ, இப்ப என்ன செய்வது? உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்-ன்னு ஆல்ரெடி பாடியாச்சே!
அதனால் என்ன? அதுக்குத் தான் என்றும்-உள-தென்தமிழ், என்றும்-உளது-என் தமிழ் இருக்கே! தெய்வத் தமிழ், அது கை கொடுக்கும்!
* உம்பியும் நீயும் உறங்கேல்! ஓர் எம் பாவாய் என்றும் பாடலாம்!
* உம்பியும் நீயும் உறங்கு! ஏல்-ஓர் எம் பாவாய் என்றும் பாடலாம்!

* உறங்கேல் = தூங்காதே!
* உறங்கு-ஏல் = தூங்கு! தூக்கத்தை ஏல் (ஏற்றுக் கொள்)

கண்ணனை எழச் சொல்வது போல், "சொல்லியும் சொல்லாமலும்" விட்டுவிடலாம் அல்லவா? ஹா ஹா ஹா!
நாம எதுக்கு, போயும் போயும் அவனை எழுப்ப வேண்டும்? அவன் தூங்கட்டும்! அவனை, எழுப்ப வேண்டியவள் எழுப்பட்டும்! அப்போ தானாய் எழுந்து விடுவான்! எழுந்தே ஆக வேண்டும்!
இப்போ, நாம் எழுப்ப வேண்டியவளை, எழுப்பத் துவங்குவோம்! நப்பின்னை நங்காய் திருவே, துயில் எழம்மா!!

இது கோதை செய்யும் செல்ல யுத்தி: அறிந்தும் அறியாமலும் = சொல்லியும் சொல்லாமலும் = உறங்கேல், உறங்கு-ஏல்! :)


உந்து மத களிற்றன் = மத யானை போல் உந்துபவன், முந்துபவன்!
மதம் பிடித்த யானை நடக்காது! முந்தும்!
அது முந்த முந்த, மதம் வழிந்து வழிந்து உந்தும்!

அந்த மாதிரி யானையை அடக்குவது மிகவும் கடினம்! வழக்கமான அங்குசம் கூட வேலைக்காவாது! அது போல் நந்தகோபன் என்னும் ஆயர்களின் தலைவன்!
அவனுடைய செயல்களில் அவன் உந்திக் கொண்டே இருப்பான்! கண்ணன் என்னும் பாசாங்குசத்தால்=பாச+அங்குசத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்!

ஓடாத தோள் வலியன் = எங்கும் ஓடி விடாமல், அவனுடன் என்றும் இருக்கக் கூடிய தோள் வலிமை கொண்டவன்!
பொதுவாச் செல்வம் என்னும் திருமகள் ஒரு இடத்தில் தங்க மாட்டாள்!
ஓடிக் கொண்டே இருப்பாள்! ஒரே விதி விலக்கு: வீர லட்சுமி!
சுத்த வீரனிடம் நிலையாய்த் தங்குவாள்! நம் நந்தகோபன் சுத்த வீரன்!

நந்த கோபன் மருமகளே நப்பின்னாய் = அந்த நந்தகோபனின் மரு+மகளே! நப்பின்னைப் பிராட்டியே! (தாயே, இப்பாவையில், இப் பாவை உன்னை முதன் முதலில் அறிமுகஞ் செய்கின்றேன்! நீயே காப்பு!)

அது என்ன கண்ணனின் மனையாளே-ன்னு பாடலாமே? யசோதையின் மருமகளே-ன்னு பாடலாமே? ஏன் நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்?
(ஹா ஹா ஹா! இன்றும் வீடுகளில் மருமகள்கள் மாமனாரிடம் ஒத்துப் போய் விடுவர்! மருமகன்கள் மாமியாரிடம் ஒத்துப் போய்விடுவர் தானே!:))
கண்ணன் இன்னும் தலைவன் ஆகவில்லை! நந்தன் தான் இப்போ அங்கே தலைவன்!
தலைவனின் மகள் என்றால் அது தனித்த அடையாளம் அல்லவா! தனித்த பாசம்! தனித்த உரிமை! அதான் நந்தகோபன் மரு+மகளே!

மரு=பரிசு! பெரும் பரிசாய் வந்த மகள்=மரு+மகள்! வாராது வந்த மகள்!
* நப்பின்னைப் பிராட்டியார் குலத்துக்கே பரிசாய் வந்த மரு+மகள்! செல்வ+மகள்!
* கண்ணனின் முழுமுதல் காதல் துணைவி!
* ஆயர்ப் பாடியில் இருக்கும் வரை, அவள் மட்டுமே கண்ணனின் உரிமைக்காரி! அவள் உடலாய் உள்ளமாய் அவன்! அவன் உடலாய் உள்ளமாய் அவள்!

நப்பின்னையை தமிழர் மரபான ஏறு தழுவி வென்றான் கண்ணன்! அதனால் வந்த மரு+மகள், பரிசு+மகள் = நப்பின்னைப் பிராட்டியார்!
அவன், தானே, முதன் முதலில் விரும்பி அடைந்து சொத்து, தமிழ்க் குல தனம் = எங்கள் நப்பின்னை! மற்றையோர் எல்லாம் அவனை நாடிப் பின்னாளில் வந்தனர்! ஆனால் இவனே நாடி, முன்னாளில் பெற்றவள் நப்பின்னை!

நப்பின்னை = தமிழர்களின் தலைமகள்!
குறிஞ்சிக்கு ஒரு வள்ளி! முல்லைக்கு ஒரு நப்பின்னை! = இவர்கள் இருவரும் தமிழ்க் குலதனம்!
* நப்பின்னையாள் தமிழ்க் கடவுள் மாயோனின் மனை விளக்கு!
* வள்ளியாள் தமிழ்க் கடவுள் சேயோனின் மனை விளக்கு!


ஆழ்வார்கள் பலரின் ஈர உள்ளத்திலும், கோதையின் உள்ளத்திலும் பெரும் மதிப்பு பெற்றவள் இந்த நப்பின்னை = நல்+பின்னை = நற்+பின்னை!
பின்னை என்று இருப்பதால் இவள் பின்னால் வந்தவள் என்று பொருளாகி விடாது!
சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு = ஏர் முதலில் தோன்றியது, உலகு பின்னால் தோன்றியது-ன்னா பொருள்? ஏர் முன்னே செல்ல, உலகு பின்னால் செல்லும் அல்லவா!

அதே போல் கண்ணன் முன்னால் செல்ல, அவன் கொள்கையில், அவன் வெற்றிகளில் பின்னே செல்வாள்! அதனால் இவள் பின்னை! அவன் வெற்றிகளுக்கு இவள் பின்னை!
நல்ல+பின்னை=நப்பின்னை! ஆனால் இவளே முன்னை!
கண்ணன் ஆய்ப்பாடியில் இருக்கும் வரை, அவனை ஆண்ட ஆண்டாள் இவளே!

நப்பின்னைப் பிராட்டியார் திருவடிகளே சரணம்!


கந்தம் கமழும் குழலி, கடை திறவாய் = வாசனைகள் மணக்கும் கூந்தல்காரி! கதவைத் திற!

வந்து எங்கும் கோழி அழைத்தன காண் = சேவல்கள் ஒன்றல்ல, ரெண்டல்ல! இப்போ பலதும் விழித்துக் கொண்டு, எல்லாம் இடத்திலும் கூவுகின்றதே! நீ கேட்கலை? பார்க்கலை?

மாதவிப் பந்தல் மேல், பல் கால் குயிலினங்கள் கூவின காண் = மாதவிப் பந்தலில், பல விதமான குயில்களும் கூவுகின்றனவே! நீ கேட்கலை? பார்க்கலை?
* மாதவி = வசந்தமல்லி/செண்பகம் என்னும் கொடி! குருக்கத்திக் கொடி என்றும் சொல்வார்கள்! அது கண்ணன் வீட்டுப் பந்தலில் படர்ந்து, கமகம-ன்னு உலகம் முழுதும் மணம் வீ்சுது!

அந்த மாதவிப் பந்தல் மேல், எங்கெங்கிருந்தோ வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, பலப்பல கீதங்கள் இசைக்கின்றன!
இன்ப கீதம், கோப கீதம், அன்பு கீதம், காதல் கீதம், சிருங்கார கீதம், வீர கீதம் என்று நவரசங்கள் அரங்கேறும் பந்தல் = மாதவிப் பந்தல்!
கண்ணனுக்குச் சொந்தமான மாதவிப் பந்தலில் யாவரும் குயில்களே! - நீங்களும் தான்! :)

வில்லிபுத்தூர் ஆலயம் - மாதவிப் பந்தல்


ஆச்சார்யர்கள் விளக்கங்களில் மாதவிப் பந்தல்:
* சுகப் பிரம்ம மகரிஷிகள் முதலான பல ஞான முனிவர்களும்,
* சனகாதி மகரிஷிகள் முதலான கர்ம யோகிகளும்,
* துருவன்/பிரகலாதன் போன்ற பக்த/அன்பு உள்ளங்களும்,
* ஆஞ்சநேயர் முதலான சரணாகத/தொண்டு உள்ளங்களும், இன்னும் பலரும் வந்த அமரும் பந்தல் என்றே குறிப்பிடுகின்றனர்.

* இப்படி அவர்கள் வந்து அமரும் செண்பகக் கொடியானது வேத/வேதாந்த சாகை!
அதில் எந்தவொரு தடங்கலும் இல்லாமல், இன்பமாக அமர்ந்து கொண்டு, அவரவர் தமதம அறிவறி வகைவகையாக பகவானைப் பாடிப் பரவும் கோஷப் பந்தல் என்றே குறிக்கிறார் வியாக்யானங்களில்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆலயத்தில் மாதவிப் பந்தலை இன்றும் காணலாம்! (படத்தில் பார்க்க)


பந்து ஆர் விரலி = பூப்பந்துகளைச் செருகி வைத்துக் கொள்ளும் நீட்டு நீட்டு விரல்-டீ ஒனக்கு!

உன் மைத்துனன் பேர் பாட = உன் மைத்துனன் நம்பி மதுசூதனன் பேர் பாடுகிறோமே! கேட்கலை? பார்க்கலை?
குறிப்பு: மைத்துனர்=மச்சினர் என்பது கணவனின் உடன் பிறந்தவர்கள் என்று பொதுவாகக் கொள்வார்கள்! ஆனால் பெண்கள் தம் ஆசைக் கணவரை "மச்சான்" என்று அழைக்கும் கிராம வழக்கமும் உண்டு!

அதான் "மச்சான்/மைத்துனன்" என்ற சொல்லையே கோதை பல இடங்களில் புழங்குகிறாள்! கனவில் கூட,"மைத்துனன்" நம்பி மதுசூதனன் கைத்தலம் பற்ற கனாக் கண்டேன் என்று தான் பாடுகிறாள்! ஆண்டாளும் என்னைப் போலவே கிராமத்தி அல்லவா! :)

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப = நப்பின்னை, நங்காய், திருவே! வாம்மா! உன் சேப்புத் தாமரைக் கைகளில், வளையோசை கலகல கலவென ஒலிக்குதே!
வளையோசை கலகல கலவெனக் கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது!
சிலநேரம் சிலுசிலு சிலுவெனச் சிறகுகள் படபட
துடிக்குது எங்கும் தேகம் கூசுது!!

சின்னப் பெண் பெண்ணல்ல, கண்ணன் காதல் பூந்தோட்டம்!
இந்தப் பெண் நப்பின்னை, இவள் தமிழ்த் தேரோட்டம்...!!

வந்து திறவாய் மகிழ்ந்து = வா, வந்து கதவைத் திற! முனகிக் கொண்டே திறக்காதே! நல்லா மகிழ்ச்சியாய் திற!

மகிழ்ச்சி உள்ளே வரணுமா?
உள்ளே வர, உள்ளக் கதவைத் திற!
ஏல்-ஓர் எம் பாவாய்! ஏல்-ஓர் எம் பாவாய்!

ஆண்டாள் திருவடிகளே சரணம்!

20 comments:

 1. ஹய்யா... இன்னைக்கு ரெண்டு மாதவிப்பந்தல். :)

  ஒண்ணு மாதவன் வீட்டுப் பந்தல்.. இன்னொன்னு மாந்தர் மனம் கவர் பந்தல்.

  (எங்கக்கா வராத்தால், அவங்க சார்பா நானும் கவிதையா பேசுறேன். :)

  ReplyDelete
 2. //இந்தப் பாடல் இராமானுசரின் உள்ளம் கவர்ந்த பாடலும் கூட! //

  மறக்க முடியுமா அந்த நிகழ்வையும் அதை தாங்கள் பதிந்த விதத்தையும்.. இன்னமும் என் கண் முன்னால் அந்தக் காட்சி விரிகிறது. எத்தனை முறை வேண்டுமானாலும் படித்துச் சுவைக்கக் கூடிய ஒன்று எம்பெருமானார் சரிதம் ஒன்றே.

  ReplyDelete
 3. //பிராட்டியைப் பற்றி, அவள் புருஷகாரத்தால், பெருமாளைப் பற்றச் சொல்லிக் கொடுக்கிறாள் கோதை!//

  புருஷகாரம் பற்றி ஒரு விரிவான பதிவு போடுங்களேன் அண்ணா.. கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்வோம்.

  ReplyDelete
 4. திருப்பாவை போட்டி முடிவுகள் இன்னமும் காணோமே???

  பரிசி அறிவித்து ஏல் ஓர் எம் பாவாய் !!

  ReplyDelete
 5. ந‌ப்பின்னையை வ‌ர்ண‌னை அருமை. கோதை வித்தியாச‌மான‌ பொண்ணுங்க‌ங்க‌, தான் ம‌ண‌க்க‌ வேண்டும் என்று நினைக்கும் க‌ண்ணின் காதலியை கூட‌ புக‌ழ்ந்து பாட‌றா. அவ‌ள் மேல் எந்த‌ பொறாமையும் இல்லை. க‌ண்ண‌ன் மேல் பொஸ‌சிவ்னஸும் இல்லை.

  ReplyDelete
 6. // Raghav said...

  திருப்பாவை போட்டி முடிவுகள் இன்னமும் காணோமே???

  பரிசி அறிவித்து ஏல் ஓர் எம் பாவாய் !!//

  முடிவுகளை ஒரு நாள் பொறுத்து அறிவியுங்கள் கண்ணன் , அடியேனும் இன்று என்னுடைய பதிலையும் பதிவிட்டு விடுகிறேன்

  ReplyDelete
 7. //Mani Pandi said...
  முடிவுகளை ஒரு நாள் பொறுத்து அறிவியுங்கள் கண்ணன் , அடியேனும் இன்று என்னுடைய பதிலையும் பதிவிட்டு விடுகிறேன்
  //

  ஆகா!
  மணி அண்ணாச்சி, மன்னிக்கவும்!
  இப்போ தான் விடைகள்-பரிசு ன்னு எல்லாம் அறிவிச்சிட்டு வாரேன்! வந்தா உங்க பின்னூட்டம்! Really Sorry! Next time! :))

  ReplyDelete
 8. நீங்கள் வளையோசை போட, நான் சன் டிவி பார்க்க,
  அங்க கமலும் அமலாவும் பாட:)

  மாதவிப்பந்தலுக்கு ஒரு வாழி.

  மாதவிப்பந்தலைப் பேச வைத்த ரவிக்கு ஒரு வாழி.
  வளையோசைக்கு இராமனுசனார் எம்பெருமானுக்கும் தண்டன் சமர்ப்பித்த விண்ணப்பம்.

  ReplyDelete
 9. எனக்கு இந்தக் குழப்பம் உண்டு. சென்ற பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, பலதேவன், உம்பர் கோமான் இந்த நான்கு பேர்களையும் எழுப்புகிறாளே. ஒரு வேளை பலதேவனும் அவன் தம்பியும் கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்களோ? அப்புறம் ஏன் 'கொத்தலர் பூங்குழன் நப்பின்னை'யுடன் உறங்கிக் கொண்டிருப்பதாக அடுத்த பாசுரத்தில் பாடுகிறாள் கோதை? நாரதர் ஒவ்வொரு வீட்டிலும் கண்ணனைக் கண்டது போல் கோதையும் கூடத்தில் பலதேவனுடன் கண்ணனையும் அறையில் நப்பின்னையுடன் கண்ணனையும் கண்டு துயிலுணர்த்துகிறாளோ?

  பந்தார் விரலிக்கு என்ன பொருள் கொள்ளலாம் என்று சுப்பிரமணியன் ஐயா வந்து சொல்லுவார். :-) (நாரதர்ன்னு அவர் பேரு வச்சுக்கிட்டா அந்த வேலையை நாம செய்வோம்ல?) :-)

  ReplyDelete
 10. //Raghav said...
  ஹய்யா... இன்னைக்கு ரெண்டு மாதவிப்பந்தல். :)
  ஒண்ணு மாதவன் வீட்டுப் பந்தல்..//

  சரி தான்!

  //இன்னொன்னு மாந்தர் மனம் கவர் பந்தல்//

  ராகவ்! வேணாம்! அழுதுருவேன்! :))

  //எங்கக்கா வராத்தால், அவங்க சார்பா நானும் கவிதையா பேசுறேன். :)//

  அக்கா வொய் நாட் பிக்கிங் தொலைபேசி?
  அரங்கன் கிட்ட தொலைபேசிங்? :)

  ReplyDelete
 11. //Raghav said...
  மறக்க முடியுமா அந்த நிகழ்வையும் அதை தாங்கள் பதிந்த விதத்தையும்.. இன்னமும் என் கண் முன்னால் அந்தக் காட்சி விரிகிறது//

  திரைக் கதையா? :)

  //எத்தனை முறை வேண்டுமானாலும் படித்துச் சுவைக்கக் கூடிய ஒன்று எம்பெருமானார் சரிதம் ஒன்றே//

  உடையவர் கருணைக் கடல்! அதான்!
  சாதி, மதம், மொழி, பால் தாண்டி...
  பகவதோஸ்ய "தயையேஏஏஏஏஏஏஏக" சிந்தோ!
  ராமானுஜஸ்ய சரணளெ சரணம் ப்ரபத்யே!

  ReplyDelete
 12. //Raghav said...
  புருஷகாரம் பற்றி ஒரு விரிவான பதிவு போடுங்களேன் அண்ணா.. கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்வோம்//

  பிற்பாடு பார்க்கலாம் ராகவ்!
  பாவைப் பதிவுகள் நிறையட்டும்!

  ReplyDelete
 13. //Raghav said...
  திருப்பாவை போட்டி முடிவுகள் இன்னமும் காணோமே???//

  என்ன மெரட்டறீங்களா? :))))

  //பரிசி அறிவித்து ஏல் ஓர் எம் பாவாய் !!//

  உங்க பேரு கூடல் தருமியா? உங்களுக்குப் பாட்டெழுதிக் கொடுத்த இறையனார் எங்கே ராகவ்? :)

  ReplyDelete
 14. பரிசு அறிவிப்புப் பதிவு இங்கே!

  ReplyDelete
 15. //மின்னல் said...
  ந‌ப்பின்னையை வ‌ர்ண‌னை அருமை//

  நன்றி மின்னல்!
  நப்பின்னை ஆராய்ச்சி மிகவும் பெரிது!
  அவளைத் தமிழறிஞர்கள் இன்னும் ஆய்வு செய்கிறார்கள்!
  * கோட்பாடு வைணவத்தில் நப்பின்னைக்குப் பெரும் பங்கு உண்டு!
  * அன்றாட வைணவத்தில் அவள் எங்கே போனாள்-ன்னு தான் தெரியலை? :(

  //கோதை வித்தியாச‌மான‌ பொண்ணுங்க‌ங்க‌, தான் ம‌ண‌க்க‌ வேண்டும் என்று நினைக்கும் க‌ண்ணின் காதலியை கூட‌ புக‌ழ்ந்து பாட‌றா//

  ஹா ஹா ஹா!
  நப்பின்னை இப்போ காதலி இல்லை! மனைவி! :)

  //காதலியை கூட‌ புக‌ழ்ந்து பாட‌றா. அவ‌ள் மேல் எந்த‌ பொறாமையும் இல்லை. க‌ண்ண‌ன் மேல் பொஸ‌சிவ்னஸும் இல்லை//

  அதான் கோதை!
  அவளுக்கு சக அடியார்களிடம் அன்பு மிகுதி! தயைக சிந்தோ! அதான் அதே பழக்கம் இராமானுசரிடமும் வந்துது போல! :)

  ReplyDelete
 16. //வல்லிசிம்ஹன் said...
  நீங்கள் வளையோசை போட, நான் சன் டிவி பார்க்க,
  அங்க கமலும் அமலாவும் பாட:)//

  வாவ்! இது தான் பெருமாள் அருள்! :)))
  மீண்டும் புத்தாண்டு வாழ்துக்கள் வல்லிம்மா!

  //மாதவிப்பந்தலுக்கு ஒரு வாழி.
  மாதவிப்பந்தலைப் பேச வைத்த ரவிக்கு ஒரு வாழி//

  ஆசிக்கு நன்றி!
  நன்னாளில் வணங்கிக் கொள்கிறேன்!

  ReplyDelete
 17. //குமரன் (Kumaran) said...
  எனக்கு இந்தக் குழப்பம் உண்டு. சென்ற பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, பலதேவன், உம்பர் கோமான் இந்த நான்கு பேர்களையும் எழுப்புகிறாளே//

  உங்களுக்குமா குழப்பம்?
  கோதைத் தமிழ்த் துறையின் தலீவர் (HOD)-க்கே டவுட்டா? :)

  //ஒரு வேளை பலதேவனும் அவன் தம்பியும் கூடத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்களோ?//

  இல்லை! படங்களில் வேணும்னா சும்மா அப்படி வரைந்திருக்கலாம்! ஆனால் கோதை வரையும் ஓவியத்தில் நல்லாத் தெரியுதே!

  உம்பியும், நீயும் உறங்கு+ஏல் என்று சொல்கிறாளே தவிர, அருகருகில் உறங்குவதாகச் சொல்லவில்லையே! கண்ணனுக்கு முதல் மணம் ஆகி விட்டது! நப்பின்னை! மேலும் மாதமோ மார்கழி! ஸோ..... :))
  //'கொத்தலர் பூங்குழன் நப்பின்னை'யுடன் உறங்கிக் கொண்டிருப்பதாக அடுத்த பாசுரத்தில் பாடுகிறாள் கோதை?//

  //பந்தார் விரலிக்கு என்ன பொருள் கொள்ளலாம் என்று சுப்பிரமணியன் ஐயா வந்து சொல்லுவார். :-)//

  அவர் போட்டா அது NC ஓட்டு
  நீங்க போட்டாத் தான் அது MN ஓட்டு!
  ஒழுங்கா உங்க ஜனநாயகக் கடமையைச் செய்யுங்க குமரன்! :)விளக்கம் குடுங்க! மேலதிகமா பேசி மகிழ்வியுங்கள்!

  ReplyDelete
 18. //அந்த மாதவிப் பந்தல் மேல், எங்கெங்கிருந்தோ வரும் குயில்கள் எல்லாம் வந்தமர்ந்து, பலப்பல கீதங்கள் இசைக்கின்றன!//
  இரசித்தேன்!

  ReplyDelete
 19. நற்பின்னை - நல்ல தங்காள் - அக்காளும் அவளே - தங்கையும் அவளே - இறுதியில்!

  ReplyDelete
 20. Hi.
  I found your site by chance and was totally taken aback by this wonderful piece of writing.
  Your beautiful way of breaking down the pasuram has left me speechless.
  Thanks a lot. I always loved Thirupaavai, deriving fresh meanings everytime, by the grace of Sri Aandal, but yours was a gr8 way of putting it down.
  PS: Sry, I can't type in Tamil.

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP