Thursday, January 03, 2008

மாதவிப் பந்தலில் துளசியைப் பார்த்தார்! மயக்கம் போட்டார்!!

குட்டிப் பெண் துளசி...அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் "அத்துழாய்" என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர்.
ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் "அத்து" என்று கூப்பிட...
அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு....துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க! துளசி என்ற சொல் தானே, தூய தமிழ்ப் பாசுரத்தில் துழாய் என்று வருகிறது!
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்,
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்...


அத்துழாய்- பேருக்கு ஏற்றாற் போல் அழகான துழாய் அந்தப் பெண்!
மற்ற செடிகள் போல், துளசிச் செடிக்குப் பூக்கள் பூத்துக் குலுங்காது. அப்புறம் எப்படித் துளசியைப் போயி அழகு-ன்னு சொல்லலாம்?
சிறுசிறு சிரிப்பாய் கரும்பச்சை இலைகள். அந்தச் சிரிப்புக்கு மேலே ஒய்யாரக் கொண்டை போல், துளசி மலர்க்காம்பு காற்றில் ஆடும்.
அதில் பொடிப்பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்!
மற்ற பூக்களை எல்லாம் கொய்யாமல் செடியில் விட்டால் கூட, ஒரு சில நாளில் வாடி விடும்! ஆனா வாடாத மலர் என்றால் அது துளசி மட்டும் தானே? ஒட்டு மொத்த செடியே ஒரு வாசனைக் கொடின்னா அது துழாய்ச் செடி மட்டும் தான்! - நம்ம அத்துழாய்ப் பொண்ணும் அப்படித் தான்!
அழகும் உடையவள். அருங்குணம் என்னும் வாசமும் உடையவள்! சும்மாவா? பெரிய நம்பியின் பெண்ணல்லவா?

மகா பூர்ணர் என்ற பெயரை அழகுத் தமிழில் பெரிய நம்பி என்று ஆக்கிக் கொண்டாரே? அவரா?
ஆமாம்! அவரே தான்! இராமானுசரின் குருவாயிற்றே அவர்! அப்பாவைப் போலவே தான் பொண்ணும்!..... எளிமை ஆனால் உறுதி! அறிவு ஆனால் அடக்கம்! தமிழ்ப்பற்று ஆனால் மொழிவெறுப்பின்மை!


அன்று மார்கழி மாதம் 18 ஆம் நாள்....
அத்துழாய் காலையில் எழுந்து நீராடி, வீதியில் கோலமும் போட்டு, வீட்டுக்குள் வேலையும் முடித்து விட்டாள்.
தன்னை மிகவும் அழகாக அலங்காரம் செய்து கொண்டாள். கூந்தலில் வாசனைத் தைலம் பூசி, நெற்றிச் சுட்டி பளபளக்க, கைவளைகள் கலகலக்க, இதோ...தோழியரோடு பந்தாட்டம் ஆடப் புறப்பட்டு விட்டாள்! காலங்காத்தால அப்படி என்ன ஒரு பொண்ணுக்குப் பந்தாட்டம் வேண்டிக் கிடக்கு? - இப்படிக் கேட்க அவளுக்கு அம்மா இல்லை!

அட, இது என்ன வீதியில் ஒரே சத்தம்!
யாரோ கும்பலாகப் பாட்டு பாடிக் கொண்டு அல்லவா வருகிறார்கள்? அதுவும் தாள ஓசைகளோடு தமிழ்ப் பாட்டு அல்லவா ஒலிக்கிறது!
ஓ...சீடர்களோடு, உடையவர் வருகிறார் போலும்! அது என்ன உடையவர்?

யாருக்கு உடையவர்? எதற்கு உடையவர்?? - அரங்கனின் செல்வம் அத்தனைக்கும் உடையவர்!
அரங்கனின் செல்வம் நாம் தானே! - அப்படின்னா நமக்கு உடையவர்! நம்மை உடையவர்!
நம் நன்றிக்கு உடையவர்! வேதங்களைப் பேதங்கள் பார்க்காது அனைவருக்கும் பொதுவாக ஆக்கி வைத்த இராமானுசர், சீடர்களோடு வீதியில் வந்து கொண்டிருக்கிறார். துறவிக்கு உரிய நோன்பான இரத்தல் நோன்பின் படி, பிட்சைக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அச்சோ பாவம்...அவருக்கு விஷயம் தெரியாது போலும்!
ஆலயத்துக்கும் தமிழுக்கும் தான் செய்யும் சீர்திருத்தங்கள் சிலருக்குப் பொறுக்கவில்லை! குமுறிக் கொண்டு இருக்கிறார்கள்! பின்னொரு நாள் பிட்சை உணவில் விஷம் கலக்கப் போகிறார்கள் என்பதை அப்போது அவர் அறிந்திருக்க மாட்டார் தான்! அது தனிக்கதை! இப்போது நாம் இந்தக் கதைக்கு வருவோம்.

எவ்வளவோ வேதங்களும் பாசுரங்களும் அறிந்திருந்தாலும், இவருக்குக் கோதையின் தமிழில் மட்டும் ஏன் அப்படி ஒரு காதலோ தெரியலையே! என்னமோ இவர் பெத்த பொண்ணு பாட்டெழுதினா மாதிரி, அப்படி என்ன பெருமிதம் வேண்டிக் கிடக்கு? ஓய்வு நேரங்களில் கூட, வாய் மட்டும் திருப்பாவைப் பாடல்களை முணுமுணுத்தபடியே இருக்கே!
இது சீடர்களுக்கே சந்தேகம் தான், இருந்தாலும் யாரும் ஒன்னும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை! அன்றும் இதே நிலைமை தான்....திருப்பாவை பாடிக் கொண்டே ஒவ்வொரு வீடாக வருகிறார்கள்.



முதல் வீட்டில், ஒரு புது கல்யாணப் பெண்! புகுந்த வீட்டின் அரிசிப் பானையில் இருந்து ஒரு கைப்பிடி கொட்டி வணங்குகிறாள்.
உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன்
மத யானையின் பலம் கொண்டவன், நீங்காத தோள் வலிமை கொண்டவன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
அந்த நந்தனின் மருமகளே! புகுந்த வீட்டில் ஒரு அப்பா! அவரின் திருமகளே! நப்பின்னையே!

அப்படியே பாடிக் கொண்டே செல்கிறார்கள்; அடுத்த வீடு பூட்டி இருக்கு! யாத்திரைக்குப் போய் இருப்பாங்க போல! அதுக்காக உடனே அடுத்த வீதிக்கு எல்லாம் போய் விடக் கூடாது! - நோன்பை மாற்றிக் கொள்ள முடியுமா? இந்த நாள், இத்தனை வீடுகளில், இந்த அளவுக்குத் தான் பெற வேண்டும் (ஒரு கைப்பிடி) என்பது நியமம் ஆயிற்றே!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வாசனை வீசும் கூந்தல் உள்ள பெண்ணே! நடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்
காலையில் சேவல்கள் எல்லாம் கூவத் தொடங்கி விட்டன!

சீடர்கள் நகர்கிறார்கள்...
அடுத்த வீடு, மிகவும் எளிமையாய் அழகாய் இருக்கு! பச்சை வர்ணம் பூசி இருக்காங்க! பார்த்தாலே பரவசம்! முகப்பில் மாதவிப் பந்தல்!

வில்லிபுத்தூர் ஆலயம் - மாதவிப் பந்தல்

மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் கூவின காண்!
மாதவி மலரின் கொடிகள் (செண்பகப்பூ) அந்தப் பந்தலில் அடர்த்தியாகப் படர்ந்துள்ளன. அதில் குயில்கள் எல்லாம் கூவுகின்றனவே!

அந்த வீட்டில் திருச்சின்னங்கள் துலங்குகின்றன! இனிமையான செண்பகப் பூக்களின் வாசம்! வாசற்படியில் மஞ்சள் குங்குமம் எல்லாம் பூசி வைத்துள்ளனர். கிராமத்து ரேழி தெரிகிறது!
பந்தார் விரலி நின் மைத்துனன் பேர் பாட
பூப்பந்தை விரல்களில் உருட்டிக்கொண்டு வரும் பெண்ணே...உன் கணவன் பேரை நாங்கள் பாடிக் கொண்டே வந்திருக்கிறோம்.

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
உன் தாமரைப் பிஞ்சுக் கைகளால், வளையல்கள் எல்லாம் ஜல்ஜல், கல்கல் என்று ஒலிக்க....
வந்து திறவாய் மகிழ்ந்தே! ஏல்-ஓர் எம்பாவாய்!
பாட்டு முடியவும், அட இது என்ன விந்தை... கதவு மெய்யாலுமே கல்கல் ஜல்ஜல் ஓசையுடன் திறக்கிறதே!

அதே மாதவிப் பந்தல் இங்கும் இருக்கே!
அதே கந்தம் கமழும் குழலி கதவைத் திறக்கிறாளே!
அதே பந்து ஆர் விரலி, கைகளில் பூப்பந்து வைத்திருக்கிறாளே!
அதே செந்தாமரைக் கையால், சீரார் வளை ஒலிகள், கலகல சலசல என்று ஒலிக்கிறதே! அதோ, அந்தப் பெண் அத்துழாய் நிற்கிறாள்!
ஆகா...இது அத்துழாயா? இல்லை நப்பின்னைப் பிராட்டியா? அதே வளையோசை...கலகல கலவென!
வளையோசை கலகல கலவெனக் கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது!
சிலநேரம் சிலுசிலு சிலுவெனச் சிறகுகள் படபட துடிக்குது எங்கும் தேகம் கூசுது!!
சின்னப் பெண் பெண்ணல்ல, கண்ணன் காதல் பூந்தோட்டம்!
இந்தப் பெண் நப்பின்னை, இவள் தமிழ்த் தேரோட்டம்...!!

தாயாரை அடிக்கீழ் வீழ்ந்து சேவிப்பது போல், நடுத்தெருவில் கீழே விழுந்தார் உடையவர்! அப்படியே மயக்கம் போட்டுக், கீழே சரிந்து விட்டார் இராமானுசர்! மூர்ச்சையானார்!



சீடர்கள் எல்லாம் பதறிப் போய் விட்டனர்! விசிறுகின்றனர். கமண்டல நீர் தெளிக்கிறார்கள்! அத்துழாய் அலறி அடித்துக் கொண்டு உள்ளே ஓடுகிறாள்! அப்பா...அப்பா...ஜீயர் என்னைச் சேவித்தார், ஜீயர் என்னைச் சேவித்தார்! கீழே விழுந்து விட்டார்...பயமா இருக்கு! வாங்கப்பா வாங்க!
பெரிய நம்பிகள் உள்ளே பூசையில் இருந்தவர், போட்டது போட்டபடி, வெளியில் ஓடி வர...
கீழே கிடப்பது சீடன்! சீடன் என்றாலும், இன்று சீரங்கத்துக்கே அவன் தான் தலைவன்! சீடனின் மனதை நன்கு அறிந்த குருவாயிற்றே நம்பிகள்! உடனே புரிந்து கொண்டார்!

பயப்படாதீங்க! இதோ மூர்ச்சை தெளியுது பாருங்க! இன்னும் நல்லா விசிறுங்க!.....ராமானுஜா! ராமானுஜா!
ராமா....என் கண்ணா, எழுந்திரு என்று தோளைத் தட்டி அழுத்திப் பிடிக்கிறார்.

"உந்து மத களிற்றன்" என்ற பாசுரம் சேவித்துக் கொண்டு வந்தாயா நீ?
உனக்குச் சீரார் வளை ஒலிக்கக் கதவைத் திறந்தவள் நப்பின்னைப் பிராட்டி என்று சேவித்து வீழ்ந்தாயோ? அவள் என் செல்லப் பெண் அத்துழாய், ராமானுஜா! பார்... கண் விழித்துப் பார்! கோதையின் தமிழ்க் கவியில் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு அப்படி ஒரு ஈடுபாடா?

ஆண்டாள், தன் காதலில் வெற்றி பெற, மதுரை அழகருக்கு நூறு தடா பொங்கலும் வெண்ணையும் வேண்டிக் கொண்டாளே? அதை நிறைவேற்றாமல் அரங்கனுடன் கலந்து விட்டாளே என்றெல்லாம் முன்பு என்னிடம் புலம்புவாயே! நீ என்ன கோதையின் ஆசை அண்ணனா என்ன? அவள் விரும்பியதெல்லாம் வாங்கிக் கொடுக்க? அவள் ஆசைப்பட்டதெல்லாம் நடத்திக் கொடுக்க? போதும், போதும், எழுந்திரு!

கவிதையை வாசிப்பவனுக்கு இப்படி எல்லாம் ஏற்படுமா?
கவிதையைச் சுவாசிப்பவனுக்கு மட்டுமே இப்படி ஏற்படும்!

தமிழைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து வாழும் நீ, இனி வெறும் ஜீயர் அல்ல! திருப்பாவை ஜீயர்!! திருவரங்கச் செல்வத்தைத் திருத்தி வைத்தோன், தரையில் வீழ்ந்து கிடக்கலாமா? எழுந்திரு ராமா!
எழுந்திருங்கள் திருப்பாவை ஜீயரே, எழுந்திருங்கள்! என்று தோளில் தன் சீடனை அன்புடன் தட்டினார் பெரிய நம்பிகள்!

பெரிய நம்பிகள், இராமானுசர் - குரு சீடன் கோலத்தில்!

உடையவர் சித்தம் தெளிந்தார்.
சற்றே நாணத்துடன் எழுந்து உட்கார்ந்தார். சூடான பால் சிறு குவளையில் தரப்பட்டது! மயக்கம் கலைந்து, முக்கோலை (துறவிகள் கையில் உள்ள திரிதண்டம் என்னும் குச்சி) மீண்டும் கையில் பிடித்தார்!
பெரிய நம்பிகளை வாஞ்சையுடன் வணங்கினார். இருவரும் அச்சோ என்று சிரித்துக் கொண்டனர்!
இராமானுசர், அத்துழாயை ஒரு கனிவான பார்வை பார்த்தார். நாளை அவள் மணமாகிப் போகும் போது அவளுக்கு ஒரு பெரும் சீதனம் தரப் போகிறாரே!

பின்னாளில் ஆண்களுக்கு இணையாக, பெண்களும் ஆன்மீகப் பணிகள் செய்யலாம் என்று ஒரு நிலையை உருவாக்கப் போகிறார் அல்லவா உடையவர்!
அப்போது அரங்கனின் அணியில் திரண்ட பல பெண்களில் ஒரு வைரமாக மின்னப் போகிறாள் இந்தத் துளசி என்னும் அத்துழாய்!
மாதவிப் பந்தல் மேல், பல்கால் குயில் இனங்கள் இன்னும் கூவும்! :-)

37 comments:

  1. நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்,
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொரு நாள்..//

    கோவிலில் இப்போதும் திருத்துழாய் என்றே துளசியைக் குறிப்பிடுகிறார்கள்.

    சிறுசிறு சிரிப்பாய் கரும்பச்சை இலைகள். அந்தச் சிரிப்புக்கு மேலே ஒய்யாரக் கொண்டை போல், துளசி மலர்க்காம்பு காற்றில் ஆடும்.
    அதில் பொடிப் பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்..//

    ஆஅஹா அபார வர்ணனை! படங்கள் பேசுகின்றன!

    யாருக்கு உடையவர்? எதற்கு உடையவர்?? - அரங்கனின் செல்வம் அத்தனைக்கும் உடையவர்//

    ஆமாம் அதனால்தானே அரங்கன் அவரை தன் திருவடி இருக்கும் திசையில் தன் இருப்பிடத்திலேயே ஜீவ சமாதியாக்கிவைத்து தினமும் தன் பக்தனை பார்த்துப் பெருமிதம் அடைகிறான்?



    //சீடர்கள் நகர்கிறார்கள்...
    அடுத்த வீடு, மிகவும் எளிமையாய் அழகாய் இருக்கு! பச்சை வர்ணம் பூசி இருக்காங்க! பார்த்தாலே பரவசம்! முகப்பில் மாதவிப் பந்தல்//

    ஆமாம் நாங்களும் ராமானுஜரோடு உங்க மாதவிப் பந்தலுக்கு வந்துவிட்டோம்! என்ன ஒரு எழுத்து வீச்சு ரவி! கண்முன்னே காட்சி பரவுகிறதே!


    //இந்தப் பெண் நப்பின்னை, இவள் தமிழ்த் தேரோட்டம்...
    அப்படியே தாயாரை அடிக்கீழ் வீழ்ந்து சேவிப்பது போல், நடுத்தெருவில் கீழே விழுந்தார் உடையவர்!
    அப்படியே மயக்கம் போட்டுக், கீழே சரிந்து விட்டார் இராமானுசர்! மூர்ச்சையானார்!//

    என்ன ஒரு ஆழ்ந்த பக்தி தன்னிலை மறந்த தூய பக்தி இது தானோ?


    //மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் இன்னும் கூவும்! :-)//

    குயில்கூவ செவி மூடுமோ? கூவட்டும்! கானமழை பொழியட்டும்...ஆவலுடன் காத்திருக்கீரோம் ரவி!

    ReplyDelete
  2. //கவிதையை வாசிப்பவனுக்கு இப்படி எல்லாம் ஏற்படுமா?
    கவிதையைச் சுவாசிப்பவனுக்கு மட்டுமே இப்படி ஏற்படும்!
    தமிழைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து வாழும் நீ,//

    கண்ணனுக்கே இவ்வரிகள் பொருந்தும்! அருமை! பாராட்ட வார்த்தைகளே இல்லை!

    ReplyDelete
  3. அ ரு மை!

    அன்புடன்

    து ள சி

    ReplyDelete
  4. சத்யா பாடல் அங்கு நுழைக்கப்பட்டதா? இல்லை அங்கு இருந்ததா?
    “வலையோசை கல கல”

    ReplyDelete
  5. துளசிப்பூக்களை இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை - நுண்நோக்கியில் எடுத்த படம் போல மிகைப்படுத்திப் பார்க்க அழகு!

    வீட்டில் மீண்டும் துளசிச்செடி துளிர்விட குளிர்காலம் கழிய காத்திருக்க வேண்டும்:-(

    ReplyDelete
  6. பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் ஆண்டாள் என்ற கதையிலும் இராமானுசர் ஆண்டாள் பாசுரங்களை வெறும் கவிதையையாய்க் காணவில்லை என்பது தெரியும். எப்படியெல்லாம் உடையவர் வாழ்ந்து நமக்குக் காட்டியிருக்கிறார்! ஆச்சார்யர்கள் யாருமே பாசுரங்களை வெறும் தமிழ்ச் சொற்கள் என்றே காணவில்லையே! உதாரணமாக கீழேயுள்ள திருப்பாவை வியாக்கியானத்தைக் கேளுங்கள்:

    http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/

    இது தமிழா இல்லை பிரபஞ்சமா? இப்பிரபஞ்சம் பிஞ்சு உள்ளத்தில் எப்படி உதித்தது? ஆண்டாள் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  7. //கிராமத்து ரேழி..//
    எத்தனையோ வருடங்களுக்குப்பின் இப்போதுதான் இந்த 'ரேழி' என்கிற சொல்லைக் கேட்கிறேன்!

    ReplyDelete
  8. வடுவூர் குமார் said...
    சத்யா பாடல் அங்கு நுழைக்கப்பட்டதா? இல்லை அங்கு இருந்ததா?
    “வலையோசை கல கல”>>>>

    வடுவூர் குமார்! வளை, வலையானாலும் மாதவிப்பந்தலுக்கு அது சரியே! ரவியின் வலையில் இந்தப்பதிவினால் இப்போ கலகல தான்!!

    ReplyDelete
  9. துளசியின் மணம் பதிவிலும்!!!!!!!!!

    ReplyDelete
  10. ஆஹா!
    என்பது தவிர எதுவும் சொல்ல வரவில்லை.
    நன்றி.

    //துளசிப்பூக்களை இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை - நுண்நோக்கியில் எடுத்த படம் போல மிகைப்படுத்திப் பார்க்க அழகு!//

    அதே.. :)

    ReplyDelete
  11. தலைப்பை பாத்ததும் ஏதோ நுண்ணரசியல் பதிவோ?னு நினைத்து விட்டேன். :p

    வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    கோவிலில் பொங்கல் புளியோதரை வாங்காதீர்!னு ஒரு கன்டிஷன் போட்ருவீங்களோனு போன பதிவை பாத்து பயந்து போயிட்டேன். :))

    ReplyDelete
  12. எப்படி இரவிசங்கர் தலைப்பை இவ்வளவு சூப்பரா தேர்ந்தெடுக்குறீங்க? தலைப்பும் நல்லா இருக்கு. :-)

    //அதில் பொடிப்பொடிக் கருநீல விதைகள், அந்தக் கருநீலனையே தாங்கிக் கொண்டு இருப்பது போல் அப்படி ஒரு பெருமிதம்!
    //

    எத்தனையோ தடவை துளசி விதைகளைப் பார்த்திருக்கேன். ஒரு தடவை கூட இப்படி தோணுததில்லை. காக்கைச் சிறகினிலே நந்தலாலனைப் பார்த்தவர் வழி வந்தீங்க போல.

    //தமிழ்ப்பற்று ஆனால் மொழிவெறுப்பின்மை!
    //

    :-)

    திருவல்லிக்கேணியில் தான் நான் முதன்முதலில் இவ்வளவு பெரிய பிரபந்த கோஷ்டியைப் பார்த்தேன் இரவிசங்கர். மதுரையில் எங்கள் பிரசன்ன வேங்கடாசலபதி கோவிலில் பிரபந்த கோஷ்டியில் ஐந்தே பேர் தான். கூடலழகர் பெருமாள் கோவிலில் பெரிய கோஷ்டி இருக்கோ என்னவோ?! பார்த்ததில்லை. திருவல்லிக்கேணி கோஷ்டியின் படம் அருமை. பின்னால் பாரதியார் நினைவில்லம் தெரிகிறது.

    திருப்பாவை ஜீயரின் திருப்பாவை ஈடுபாட்டை சொல்லும் இந்த நிகழ்ச்சியை நன்கு விவரித்திருக்கிறீர்கள் இரவிசங்கர். இனி மேல் வரப் போகும் கதைகளுக்கும் (மூன்று கதைகளா?) முன்னிகை கொடுத்திருக்கிறீர்கள். மாதவிப் பந்தலில் பல்கால் கூவ குயிலினங்களில் ஒன்று இதோ காத்துக் கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  13. நல்ல தமிழ் படித்தேன், ரசித்தேன், இனித் தேன் இல்லாதபடி சுவைத்தேன்.

    இனித் தேன் அடுத்த பதிவிலா?

    ReplyDelete
  14. //ஷைலஜா said...
    ஆமாம் அதனால்தானே அரங்கன் அவரை தன் திருவடி இருக்கும் திசையில் தன் இருப்பிடத்திலேயே ஜீவ சமாதியாக்கிவைத்து தினமும் தன் பக்தனை பார்த்துப் பெருமிதம் அடைகிறான்?//

    உண்மை தான் ஷைலஜா. இராமானுசர் தானான திருமேனி (ஜீவசமாதி) க்கு, செய்யப்படும் மஞ்சக்காப்பு பார்த்திருக்கீங்களா? இப்போதெல்லாம் dressing சரியாகச் செய்வதில்லையா என்ன? அந்தப் பழைய அமைப்பு தெரிவதில்லை! சுருங்கினாற் போல் இருக்கு! திருவரங்கப்ரியா - உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே!

    //குயில் கூவ செவி மூடுமோ? கூவட்டும்! கானமழை பொழியட்டும்...ஆவலுடன் காத்திருக்கீரோம் ரவி//

    நன்றி ஷைல்ஸ்!
    பதிவை உடையவர் போலவே நீங்களும் ஆழ்ந்து படிச்சிருக்கீங்க போல! பின்னூட்ட வீச்சு பேசுது!

    ReplyDelete
  15. //கீதா சாம்பசிவம் said...
    //கவிதையை வாசிப்பவனுக்கு இப்படி எல்லாம் ஏற்படுமா?
    கவிதையைச் சுவாசிப்பவனுக்கு மட்டுமே இப்படி ஏற்படும்!
    தமிழைக் கண்டு கேட்டு உண்டு உயிர்த்து வாழும் நீ,//

    கண்ணனுக்கே இவ்வரிகள் பொருந்தும்!!//

    அந்தக் கண்ணனைத் தானே சொல்றீங்க கீதாம்மா! :-)
    போகட்டும் கண்ணனுக்கே!

    ReplyDelete
  16. //துளசி கோபால் said...
    அ ரு மை!
    அன்புடன்
    து ள சி//

    து ள சி
    அ ம் மா
    அ ன் பு
    ந ன் றி

    என்ன டீச்சர் இது! இது ஒங்க பதிவு!
    வரிக்கு வரி துளசி தான்! :-))

    ReplyDelete
  17. //வடுவூர் குமார் said...
    சத்யா பாடல் அங்கு நுழைக்கப்பட்டதா? இல்லை அங்கு இருந்ததா?//

    குமார் சார்
    “வலையோசை கல கல” பாட்டு = சத்யா தான் ஒரிஜினல்!
    நான் தான் பழைய பாசுரத்துக்கும் புதிய பாட்டுக்கும் கற்பனையில் முடிச்சு போட்டேன்! :-)
    தற்காலத்துக்குச் சுவையா இருக்கட்டுமேன்னு!

    ReplyDelete
  18. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    துளசிப்பூக்களை இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை - நுண்நோக்கியில் எடுத்த படம் போல மிகைப்படுத்திப் பார்க்க அழகு!//

    ஆமாங்க ஜீவா
    நீங்க இப்படி ரசிச்சதற்கு அப்புறம் பழைய படத்தைத் தூக்கி விட்டு, அதை விட நுணுக்கமாக எடுத்த இன்னொரு படத்தை இட்டிருக்கிறேன்! பாருங்க! நண்பர் ஒருவர் அனுப்பி வைச்சார். PIT வலைப்பூ இருக்கத் தரமான படங்களுக்கு இனி கவலை இல்லை!

    //வீட்டில் மீண்டும் துளசிச்செடி துளிர்விட குளிர்காலம் கழிய காத்திருக்க வேண்டும்:-(//

    ஆமாம் ஜீவா!
    இங்கு நியூயார்க்கிலும் இதே குளிர் தான் துளசிக்குப் பிரச்சனை! மல்லியும் அப்படித் தான்!

    ஆனா நண்பர் ஒருவர் glass house போல் ஒரு சிறு குடில் செய்து, பனியிலும் துழாய்ச் செடியை வளர்க்கிறார்! அருமை!!

    ReplyDelete
  19. //N.Kannan said...
    எப்படியெல்லாம் உடையவர் வாழ்ந்து நமக்குக் காட்டியிருக்கிறார்! ஆச்சார்யர்கள் யாருமே பாசுரங்களை வெறும் தமிழ்ச் சொற்கள் என்றே காணவில்லையே!//

    வாங்க கண்ணன் சார்!
    வெறும் சொல்மாலை என்று பார்த்திருந்தால் என்னைக்கோ கழட்டி வைத்திருப்பார்கள்!
    அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் வந்தவள் தந்ததல்லவா!

    அதான் உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையாய்...திருப்பாவையை உண்டே வாழ்ந்தனர் போலும்!

    //http://www.ibiblio.org/ramanuja/thiruppavai///

    Dr. MAV அடியேன் குருநாதர்!
    வேளுக்குடி அண்ணாவின் சொலல் வல்லர்!
    அவர்கள் செய்யும் பேருரையும் வியாக்யானமும் என்றுமே திகட்டாத ஒன்று!

    ReplyDelete
  20. //ஜீவா (Jeeva Venkataraman) said...
    எத்தனையோ வருடங்களுக்குப்பின் இப்போதுதான் இந்த 'ரேழி' என்கிற சொல்லைக் கேட்கிறேன்!//

    ஹிஹி!
    நிறைய நாட்டு வழக்கு பேச்சொழிந்து போகிறது ஜீவா!
    அதான் நம்மாள முடிஞ்சது ஆங்காங்கே புழங்கி விடுகிறேன்!

    மக்களே
    ரேழி-ன்னா இடைக்கழி!
    வீட்டுக்குள் நுழையும் வாசப்படிக்கும், வீட்டின் கூடம் துவங்கும் இடத்திற்கும் நடுவில் இருக்கும் இடம் தான் ரேழி!

    ரேழியில், கதவை ஒட்டினாற் போல் இருக்கும் ஒரு சிறு அறையில் தான் நெல்லும் அரிசியும் கொட்டி வைத்திருப்பார்கள்! இதைத் தேகளி என்றும் சொல்லுவார்கள்!

    திருக்கோவிலூர் பதிவிலும் இச்சொல்லை ஆண்டுள்ளேன்!
    திருக்கோவிலூர் பெருமாள், இடைக்கழியில் ஆழ்வாரை நெருக்கியதால், அவருக்கு தேகளி+ஈசன்=தேகளீசன்-ன்னு பெயர்

    ReplyDelete
  21. //கீதா சாம்பசிவம் said...
    துளசியின் மணம் பதிவிலும்!!!!!!!!!//

    டீச்சரின் பின்னூட்டத்தைச் சொல்லுறீங்களா கீதாம்மா? :-))

    ReplyDelete
  22. //மலைநாடான் said...
    ஆஹா!
    என்பது தவிர எதுவும் சொல்ல வரவில்லை//

    நன்றி மலைநாடான் ஐயா!

    //துளசிப்பூக்களை இவ்வளவு அருகில் பார்த்ததே இல்லை - நுண்நோக்கியில் எடுத்த படம் போல மிகைப்படுத்திப் பார்க்க அழகு!//

    புதுப்படங்களையும் பார்த்துச் சொல்லுங்க!

    ReplyDelete
  23. //ambi said...
    தலைப்பை பாத்ததும் ஏதோ நுண்ணரசியல் பதிவோ?னு நினைத்து விட்டேன்.//

    ஏன் நினைக்க மாட்டீங்கண்ணே! எலெக்சன், கலெக்சன் எதுலயாச்சும் நிக்கப் போறீங்களா என்ன? :-)

    //வழக்கம் போல ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்து கொண்டேன்//

    இதுல நுண்ணரசியல் ஒன்னும் இல்லியே! ஏன் கேட்டேன்-ன்னா
    "வழக்கம் போல்" ன்னு தொக்கி நிக்குது இல்ல! :-)

    //கோவிலில் பொங்கல் புளியோதரை வாங்காதீர்!னு ஒரு கன்டிஷன் போட்ருவீங்களோனு போன பதிவை பாத்து பயந்து போயிட்டேன்//

    யோவ்!
    உமக்குக் குசும்பு கொஞ்ச நஞ்சம் இல்ல! ஒரு அண்டா புளியோதரை கணக்கா இருக்கு! :-)
    பொங்கல் வாங்காதீங்கன்னு எல்லாம் சொல்லுவேனா?
    மழைக்குக் கூட மடப் பள்ளியா பாத்து ஒதுங்கறவன் தானேப்பா அம்பி என்னும் வம்பி! :-))

    ReplyDelete
  24. //Dreamzz said...
    kanna kattuthu!//

    என்ன தல! இதுக்குப் போய் ஃபீல் ஆவறீங்க!
    கண்ணைக் கட்டினா, ஒடனே ஒரு ஆன்மீகப் பதிவு போட்டுறுங்க! :-)

    ReplyDelete
  25. அழகோ அழகு! சொல் அழகு, நடை
    அழகு, பொருள் அழகு, பரவி நிற்கும்
    பக்தியோ பேரழகு!

    தனிமனித வெறுப்புணர்வுகளால்
    தடுமாறிக்கொண்டிருக்கும்
    தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகள்
    தென்றல் காற்றாய் வீசுக்கின்றன.

    பலநூறு பதிவெழுதி வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete
  26. அருமை, அருமை என்பதை தவிர வேறு என்ன சொல்லன்னு தெரியல்ல..

    ReplyDelete
  27. நண்பரே !! என்ன மறுமொழி இடுவது. படித்தேன் - ரசித்தேன் - அனுபவித்தேன் - மகிழ்ந்தேன் - எதை மறுமொழியில் இடுவது - எதை விடுவது - தெரியவில்லை.
    அருமை. துளசிச் செடியை எவருமே இது மாதிரி நுணுக்கமாக வர்ணித்தது இல்லை. படங்கள் பிரமாதம். ம்ம்ம் வாழ்த்துகள்.

    உங்களெயும் மாட்டி விட்டுருக்கேன் - பாருங்களேன்.

    http://pathivu.madurainagar.com

    ReplyDelete
  28. //cheena (சீனா) said...
    நண்பரே !! என்ன மறுமொழி இடுவது. படித்தேன் - ரசித்தேன் - அனுபவித்தேன் - மகிழ்ந்தேன் -//

    ஆகா...இது என்ன எல்லாரும் தேன் தேன் ன்னு கண்ணதாசன் கணக்கா கெளம்பி இருக்காங்க?

    //துளசிச் செடியை எவருமே இது மாதிரி நுணுக்கமாக வர்ணித்தது இல்லை. படங்கள் பிரமாதம்//

    நன்றி சீனா சார்! படங்களுக்கு நன்றி நண்பனுக்குத் தான்!

    //உங்களெயும் மாட்டி விட்டுருக்கேன் - பாருங்களேன்.
    http://pathivu.madurainagar.com//

    பாத்தாச்சே! மொக்கை தானே! போட்டுருவோம்! சதா சர்வ காலம் அதைத் தானே பதிவுல போட்டுக்கிட்டு இருக்கேன்! :-)

    ReplyDelete
  29. //குமரன் (Kumaran) said...
    எப்படி இரவிசங்கர் தலைப்பை இவ்வளவு சூப்பரா தேர்ந்தெடுக்குறீங்க? தலைப்பும் நல்லா இருக்கு. :-)//

    குமரன், நீங்களுமா என்னைய வம்பு பண்ணறீங்க!:-)

    //தமிழ்ப்பற்று ஆனால் மொழிவெறுப்பின்மை!
    //
    :-)//

    உண்மை தானே குமரன்!
    மகா பூர்ணர் = பெரிய நம்பி
    மறைமலை அடிகள் பெயர் மாற்றிக் கொண்டதைச் சொல்பவர்கள், அவருக்கு நானூறு வருசத்துக்கு முன்பே இப்படித் தனித்தமிழ் ஆக்கிகிட்ட பல நம்பிகளை எல்லாம் யாரும் கண்டு கொள்வதில்லை! :-(

    //திருவல்லிக்கேணியில் தான் நான் முதன்முதலில் இவ்வளவு பெரிய பிரபந்த கோஷ்டியைப் பார்த்தேன் இரவிசங்கர்//

    ஆமாங்க! அவிங்க செட்டு பெரிய செட்டு! ஆனா அங்கும் வேத கோஷ்டி அஞ்சாறு பேர் தான்! தமிழ்க் கோஷ்டி சுமார் அம்பது அறுவது பேர்!
    திருவரங்கம், திருமலைக் கோஷ்டிகளும் பெரிது தான்!

    //திருவல்லிக்கேணி கோஷ்டியின் படம் அருமை. பின்னால் பாரதியார் நினைவில்லம் தெரிகிறது.//

    கரெக்டாக் கண்டுபுடிச்சீங்க! சூப்பர்! :-)

    //இனி மேல் வரப் போகும் கதைகளுக்கும் (மூன்று கதைகளா?) முன்னிகை கொடுத்திருக்கிறீர்கள். மாதவிப் பந்தலில் பல்கால் கூவ குயிலினங்களில் ஒன்று இதோ காத்துக் கொண்டிருக்கிறது//

    ஒவ்வொன்னாச் சொல்லுவோம்! அடியோங்கள் அறிந்த சிறிதை, நம் நண்பர்கள் எல்லாருக்கும் அறியத் தருவோம்!
    குமரக் குயில் கூவும் அவா அடியேன் அறியாததா என்ன?

    குயில்கள் கரவா கரைந்துண்ணும்-னு குறளை மாத்திடலாமா? :-))

    ReplyDelete
  30. //நானானி said...
    நல்ல தமிழ் படித்தேன், ரசித்தேன், இனித் தேன் இல்லாதபடி சுவைத்தேன்.
    இனித் தேன் அடுத்த பதிவிலா?//

    வாங்க நானானி!
    நல்ல தமிழில் தேன் விளையாட்டு அருமையா விளையாடறீங்க!

    அடுத்த பதிவில் தேன் இருக்குமான்னு தெரியலை! ஆலயச் சீர்திருத்தம் பற்றிய ரெண்டாம் பதிவு!
    எனவே ஸ்வீட் இருக்கோ இல்லியோ காரம் கண்டிப்பா இருக்கும்! :-)

    ReplyDelete
  31. //Anonymous said...
    அழகோ அழகு! சொல் அழகு, நடை
    அழகு, பொருள் அழகு, பரவி நிற்கும்
    பக்தியோ பேரழகு! //

    நன்றிங்க அனானி!

    //தனிமனித வெறுப்புணர்வுகளால்
    தடுமாறிக்கொண்டிருக்கும்
    தமிழ்மணத்தில் உங்கள் பதிவுகள்
    தென்றல் காற்றாய் வீசுக்கின்றன//

    தென்றல், புயல் எல்லாம் மாறி மாறி வரத் தானே செய்யும்! :-)
    தமிழ்மணத்தில் பல ஆக்கப்பூர்வமான பதிவுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன! ஆன்மீகம், நகைச்சுவை, புகைப்படம், வணிகம்-னு நிறைய ஆர்வலர்கள்!

    //பலநூறு பதிவெழுதி வாழ்க பல்லாண்டு!//

    ஆசிக்கு நன்றி!
    அடிக்கடி வாங்க! அப்படியே கையொப்பம் போல தங்கள் பெயரையும் குறிப்பிடுங்கள்! ரசனையாளர்களை அறிந்து கொள்வதும் ஒரு ரசனை தானே! :-)

    ReplyDelete
  32. //மதுரையம்பதி said...
    அருமை, அருமை என்பதை தவிர வேறு என்ன சொல்லன்னு தெரியல்ல...//

    வாங்க மெளலி அண்ணா!
    நன்றி!
    சீனா சாரை எப்போ மீட் பண்ணப் போறீங்க?

    ReplyDelete
  33. அருமையோ அருமை. எப்பட் பாராட்டுவது என்று தெரியவில்லை. மாதவி மணம் இன்னும் தொடரட்டும்.

    ReplyDelete
  34. Gostei muito desse post e seu blog é muito interessante, vou passar por aqui sempre =) Depois dá uma passada lá no meu site, que é sobre o CresceNet, espero que goste. O endereço dele é http://www.provedorcrescenet.com . Um abraço.

    ReplyDelete
  35. என்னே தங்களின் படைப்பு படங்களும் மிக அருமை ஆழ்வார் ஆச்சாரியர்களின் ஆசிர் வாதம் உள்ளதே அதை நினத்து கூட பார்க்க முடியாது அவ்வளவு அதிஷ்டகரமாந்து தன்கள் இனைத்துள்ள படத்தில் உள்ள பெண்மனிக்கு கிடைத்திருக்கிறது

    "சூடிக் கொடுத்த சுடர்கொடி" ஆண்டாள், மகாவிஷ்ணுவை கணவனாக அடைய வேண்டும் என்று சாதித்துக் காட்டியவர். அவருடைய திருப்பாவை,பக்தி ரசம் நிறைந்தவை. "ஓங்கி உளகளந்த" பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஓங்கி உளகளந்த உத்தமனாம் நாராயணனை வணங்கி பாவை நோன்பிருந்தால் விளையும் என்று ஆண்டாள்.தீங்கின்றி நாடெங்கும் மழை பெய்யும்,அதனால் நெற்பயிர்கள் ஓங்கி வளரும் , அப்படி வளர்ந்த கதிர்களுக்கு இடையே மீன்கள் துள்ளி விளையாடும், குவளைபோதை மலரில் வண்டானது தேன் குடித்த மயக்கத்தில் உறங்கும்,பசுக்கள் குடம்குடமாய் பால் சொரியும், எங்கும் நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் என்று ஆண்டாள் சொல்லியிருப்பார். தினமும் இந்த பாடலை காலையில் பாடி அந்த பொழுதை தொடங்கினால்.அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம்,

    ReplyDelete
  36. arumai.
    adiyongal seitha bagyam.

    ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP