Thursday, May 22, 2008

நியூயார்க் Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாளாம்! சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு?

அவனவன் காதலி(கள்) பொறந்த நாள், நண்பர்கள் பொறந்த நாள்-ன்னு ஞாபகம் வச்சிக்கவே அல்லாடுறான்! இதுல பாலத்துக்கு எல்லாம் பொறந்த நாள் கொண்டாடுவாங்களா? கொடுமை டா சாமி! இந்தப் பாலம் காதலர்கள் கட்டுனது வேற!

நம்ம ஊரு நியூ யார்க்கு! இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே! பாலத்துக்குன்னு வலைப்பூ எல்லாம் தொடங்கி இருக்காங்க மக்கா! இன்னிக்கி ராவோட ராவா, Philharmonic மீசிக் பார்ட்டி, பட்டாசு வெடிச்சிக் கொண்டாட்டம்-னு கச்சேரி களைகட்டுது!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் யாராச்சும் நடந்து போயிருக்கீங்களா? இல்லை சைக்கிளில் போயிருக்கீங்களா? அதுவும் ராத்திரி பன்னிரெண்டு-ஒரு மணிக்கு நண்பர்களோட போகும் சுகமே தனி!

பாலத்தில் பெரியார் சிலை கிட்ட ஒரு யூ-டர்ன் அடிச்சி நின்னு பாத்தா, புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு பெரிய விருந்து கிடைக்கும்!
ரேஸ் குதிரையை அடக்கும் மனிதன் சிலை, தேவாலயம், பாலம், மவுண்ட் ரோடு (அண்ணா சாலை)-ன்னு அத்தனையும் ஒரே ஷாட்-ல புடிக்கலாம்! இப்போ வெளம்பரப் பலகை, டிஜிடல் பேனர் வேற எல்லாம் எடுத்துட்டாங்களாம்?

விசயம் என்னான்னா மக்களே, Brooklyn Bridge-க்கு 125ஆவது பொறந்த நாளாம்!
உலகிலேயே மிகப் பழமையான தொங்கு பாலம்! கீழே பில்லர் (தூண்) எல்லாம் ஒன்னும் இருக்காது!
நியூயார்க் நகரத்தின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று இந்த ப்ரூக்ளின் பாலம்! அதை விட முக்கியமான விசயம், இந்தப் பாலத்தில் பயணம் செய்ய கப்பம் கட்ட வேணாம்! Toll Free! :-)

எனக்கு இது கிட்ட பிடிச்சதே என்னன்னா,
* பாலத்தின் மேல் கம்பி எண்ணிக்கிட்டே காலாற நடந்து போகலாம்! தனிப் பாதை!
* ஆத்தா ஆத்தோராமாப் போறீயா-ன்னு பாடிக்கிட்டே சைக்கிளும் ஓட்டலாம், ஆளையும் ஓட்டலாம்! அதுக்கும் தனிப்பாதை!
* காரு, பஸ்ஸு, சுரங்க ரயில்-ன்னு அது அதுக்கு தனித் தனி பாதை!
இப்பிடி விதம்விதமா ஓட்டுறத்துக்கன்னே ஒருத்தன் 125 வருசத்துக்கு முன்னாடி யோசிச்சிருகான்னா, அவன் தான்யா கடலை மன்னன்! :-)மென்ஹாட்டன் என்னும் மையமான நகரத் தீவை, ப்ரூக்ளின் என்னும் இன்னொரு நகரத்தோடு இணைப்பது இந்தப் பாலம்! கீழே ஓடுவது கிழக்காறு (East River)!
ஸ்பைடர் மேன் படத்துல பார்த்து அசந்து இருப்பீங்க!
உலக வர்த்தக மையம் (WTC) தாக்கப்பட்ட போது எடுத்த அத்தனை வீடியோக்களிலும் பாலம் படமாகி இருக்கும்!

அம்புட்டுத் தானா? இது கட்டின போது பல காதல் கதைகளும், சண்டைகளும், பிரிவுகளும் நடந்துச்சாம்!
சும்மா ஒரு ரவுண்டு கட்டிப் பார்க்கலாமா?!
அப்படியே கேஆரெஸ் வீட்டுல ஒரு பார்ட்டியும் வச்சிக்கலாம்! என்ன மக்களே, போகலாம் வாரீங்களா?ப்ரூக்ளின் பாலம் 1870இல் கட்டத் துவங்கினாங்க! சரியா பதிமூனே வருசத்துல வேலைய முடிச்சிட்டாங்க! மே 24, 1883 திறப்பு விழா!
பாலம் கட்ட ஆன காசு, அப்பவே பதினாறு மில்லியன் டாலர். முதல் நாளே ஒன்றரை லட்சம் மக்கள் பாலத்தைக் கடந்தாங்களாம்!

நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கும் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கும் பாலத்தை வச்சி ஒரு ஜோக் சொல்லுவாய்ங்க!
* இந்த ஊர்ல பாலத்துக்குத் தொகையை ஒதுக்கி, பாலம் கட்டி முடிச்சவுடன், மிச்சம் மீதி இருக்குற தொகையைப் பங்கு போட்டுக்குவாய்ங்க!
* நம்மூருல பாலத்துக்குத் தொகையை ஒதுக்கினவுடன், அதை தங்களுக்குள்ள மொதல்ல பிரிச்சிக்கிட்டு, மிச்சம் மீதி ஏதாச்சும் தொகை இருந்தா, பாலம் கட்டினா கட்டுவாய்ங்க!
ஆக மொத்தம் அரசியல்வாதிகள் எங்கேயும் அரசியல்வாதிகள் தான்! :-)

தொறந்த முதல் வாரத்திலேயே ஒரு பெரிய விபத்து!
எதுனால? பாலம் சரியாக் கட்டலையா? கமிஷன் ஊழலா? அதெல்லாம் இல்ல!
முதல் தொங்கு பாலம் பாருங்க! மக்கள் சில பேருக்குப் பயம்! சில அறிவாளிங்க, பாலம் வீக்கா இருக்கு, ஒடைஞ்சி விழப் போகுதுன்னு, மே 30ஆம் தேதி ஒரு புரளி கெளப்பி வுட்டுட்டாங்க! அதுல நடந்த தள்ளு முள்ளு நெரிசல்-ல 12 பேரு காலி!

பாலத்தின் மொத்த நீளம் ஆறாயிரம் அடி! மையப் பகுதி நீளம் 1600 அடி (கிட்டத்தட்ட அரை கிலோமீட்டர்). Gothic ஸ்டைலில் வளைவுகள் வைத்துக் கட்டப்பட்டது. கருங்கல் (Granite), சுண்ணாம்புக் கல் (Lime Stone), ரோசன்டேல் சிமென்ட், ஸ்டீல் கம்பிகள் தான் கட்டுமானப் பொருட்கள்!


இப்போ பாலத்தோட காதல் கதை:

பாலத்தின் முதல் வடிவமைப்பாளர் பேரு ரோப்லிங் (John Augustus Roebling). தாய் நாடு ஜெர்மனி! அமெரிக்காவுல செட்டில் ஆனவரு! பாலத்துக்காக ஆற்றில் சர்வே எடுக்கும் போது, படகு முட்டிக் கால் ஒடைஞ்சி போச்சி அவருக்கு! ஒரு வாரத்துல டெட்டனஸ் என்னும் நோய் தாக்கி இறந்துட்டாரு!

வாரிசா, அவர் புள்ள வாஷிங்டன் வேலையை ஆரம்பிச்சாரு! என்ன நேரமோ தெரியலை அவரும் காய்சான் (Caisson) என்னும் நோய் தாக்கி இறந்துட்டாரு! அழுத்தப்பட்ட காற்றினால்(Compressed Air) வரும் நோய் இது! அப்பறம் தான் நடந்திச்சி அந்த அதிசயம்!

அவர் அன்பு மனைவி எமிலி ரோப்லிங் (Emily Warren Roebling) களத்துக்கு வந்தாங்க! அவங்க இத்தனைக்கும் பொறியியல் வல்லுநர் எல்லாம் கிடையாது! ஆனா கணவர் தினமும் தன்னிடம் பாலம் பற்றிக் கற்பனை விரிய பேசினதை எல்லாம் காது குடுத்து கேட்டவங்க!

(எத்தினி பேரு ஆபீஸ்-ல code எழுதும் போது Bug வந்ததைப் பற்றி எல்லாம் வூட்ல சொல்லி இருக்கீங்க? அவங்க Debug பண்ண ஆரம்பிச்சா என்ன நடக்கும்? கற்பனைக் குதிரையைத் தட்டுங்க பார்ப்போம் :-)

தன் மறைந்த கணவரின் கனவு, திட்டம், வரைபடம் எல்லாத்தையும் சக பணியாளர்களிடம் பேசிப் புரிய வைத்து, பாலத்தின் அடுத்த கட்டக் கட்டுமானத்துக்கு ரொம்பவே உதவியா இருந்தாங்களாம்.
போதாக்குறைக்கு இதுக்காகவே பொறியியல் படிக்கவும் துவங்கினாங்களாம்! காற்று பலமாக அடிக்கும் இடமாதலால், பாலத்தை ஆறு மடங்கு ஸ்ட்ராங்க கட்டணும் வேற அரசுக்கு அறிவுறுத்தினாங்க!

அவரோட உற்சாகத்தைப் பார்த்தே, மக்கள் பாலம் கட்டுறதுல செம பிசியாகிட்டாங்க! பாலத்தின் திறப்பு விழா போது, முதலில் பாலத்தைக் கடக்க அரசியல்வாதிங்க, அவுங்க குடும்பம்-னு யாரும் போட்டி போடலை! எமிலியைத் தான் முதலில் பாலத்தைக் கடக்கச் செய்து மதிப்பும் மரியாதையும் செய்தார்கள்!

பாலத்துல பாருங்க இப்பிடி ஒரு காதல் கதை!
காதலர்கள் மரத்தைச் சுத்துவாங்க, பாலத்தின் மேல் ஓடியாடி முத்தம் கொடுத்துக்குவாங்க அப்படின்னு சொல்றவங்களுக்கு எல்லாம் ஆப்பு!
காதலர்கள் பாருங்க, காதலால் அன்புப் பாலம் மட்டுமில்லை! ஒரு நிஜ பாலத்தையே கட்டி இருக்காங்க! நாம தான் இல்லாத ராமர் பாலத்தை வச்சிக்கிட்டு அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கோம்! அட ராமா ராமா! :-)

பாலம் கட்டி முடிச்ச பிறகும் ஒரு சோதனை. பாலத்துக்குத் தருவிக்கப்பட்ட இரும்புக் கம்பிகளின் தரத்தில் லாய்டு (Lloyd Haigh) என்ற ஒப்பந்ததாரர் (Contractor) கொஞ்சம் வெளையாடிட்டாரு போல! எப்படியோ விசயம் லீக் அவுட் ஆயிரிச்சி!
நம்ம எமிலி தான் மீண்டும் ஆய்வு செய்து ஆறு மடங்கு பாதுகாப்பு நாலு மடங்காக குறைந்து விடும்னு கண்டுபுடிச்சாங்க! இன்னொரு 250 கேபிள் கொடுத்து பாலத்தை இழுத்துப் புடிச்சாங்களாம்!

வேலை ஆச்சா, காசு பாத்தோமா, போவோம்-னு இல்லாம, கணவரின் பெயரைக் காலமெல்லாம் சொல்லும் அளவுக்கு பாலம் கட்டின எமிலி, ஆத்தா நீ வாழ்க! வாழ்க!

அண்மையில் மின்னசோட்டா பால விபத்தைப் படிச்சிருப்பீங்க! ப்ரூக்ளின் பாலத்துக்குப் பின்னாடி வந்த பாலம் எல்லாம் காணமப் போச்சு!
ஆனா ப்ரூக்ளின் பாலம் மட்டும் காதலைப் போலவே கம்பீரமா இன்னும் நின்னுக்கிட்டு இருக்கு! இருக்கும்!!WTC இடிப்புக்குப் பின்னர் மக்கள் கும்பல் கும்பலாகத் தப்பி ஓடியதும் இந்தப் பாலத்தின் மீது தான்! தீவிரவாதம் தலை தூக்கிய போது, இந்தத் தொங்கு பாலத்தை வெல்டிங் டார்ச்சால் அறுத்துப் போட சதி பண்ணதை, NYPD (New York Police Dept) காவல்துறை கண்டுபுடிச்சி தடுத்துட்டாங்க!

பாலம் தொங்கு பாலம் என்பதால், லைட்டாக அப்படி இப்படிக் காற்றில் ஆடுவதை, நடந்து போனால் நீங்க உணரமுடியும்! Pedestrian oscillations Sway Effect என்கிறார்கள் இதை!
நீங்களும் பாலத்து மேல ஜாலியாச் சைக்கிள் ஓட்டிக்கிட்டே போக ஆசையா இருக்கா? இந்தாங்க, போங்க - Live Cam! அப்படியே இன்னிக்கி கொண்டாட்டத்தையும், ராத்திரி இக்கட சூடலாம்!

இந்தப் பாலம் கட்டும் போது, என்னென்ன செய்திகள் நடந்துச்சு, அப்போது இருந்த நாளிதழ்களில் தினமும் என்னென்ன சேதி வந்துச்சு, என்பதை எல்லாம் ஒன்னாத் தொகுத்து, ஒரு வலைத்தளம் உருவாக்கி இருக்காங்க, அந்தக் காலத்து நியூஸ்பேப்பர் ஸ்டைலில்! பாருங்க!

அப்படியே பாலத்தைக் கூகுள் சேட்டிலைட் மேப்பில் கொஞ்சம் எட்டிப் பாருங்க!

மக்கா,
நம்மூரு அண்ணா மேம்பாலத்துக்கு என்னிக்குப்பா பொறந்த நாளு?
கரீட்டாச் சொல்றவங்க தனியா கவனிக்கப்படுவார்கள்-ன்னு உறுதி அளிக்கிறேன்! :-)References (உசாத்துணை):
"Bridging the East River" - The Brooklyn Daily Eagle
The story of Brooklyn Bridge - by CBS
Chicago Tribune - Article
Picture Courtesy: Yellowecho.com
Read more »

Saturday, May 17, 2008

பக்தர்களில் சிறந்தவன் தேவனா? அசுரனா??

உங்க பிறந்தநாள் அரை மணி நேரத்திலேயே முடிஞ்சி போனா உங்களுக்கு எப்படி இருக்கும்?
ச்சே அவன் பரிசு கொடுக்கறதாச் சொன்ன அந்த ஐபாடும் வரல, PIT போட்டிப் ட்ரைபாடும் வரல! அதுக்குள்ள பிறந்த நாள் முடிந்து விட்டால் எப்படி?-ன்னு மனசு கிடந்து அலை பாயாதா?

உலகத்திலேயே மிகவும் குறுகிய நேரப் பிறந்தநாள் கொண்டாடியது யாரு? சொல்லுங்க பார்ப்போம்! இருங்க...கேள்வியைச் சற்றே மாற்றிப் போடுகிறேன்!
அவதாரங்களிலேயே மிகக் குறுகிய காலமே நடைபெற்ற அவதாரம் எது?


இறைவன்: குழந்தையே! உன் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், உன் எல்லையில்லா அன்புக்கும் மெச்சினோம். என்ன வரம் வேண்டும் கேள்?

குழந்தை: இறைவா...உன் மீது அன்பாக இருப்பது என்னுடைய சுபாவம் தானே! இதுக்குப் போய் நான் என்னவென்று பதிலுக்குக் கேட்பேன்?

இறைவன்: பரவாயில்லை! மனத்தில் தோன்றுவதைக் கேள்! இல்லையென்றால் உனக்கு உடனே புனித வேடம் கட்டி விடுவார்கள்! உறவு என்றால் அதில் ஏதாவது எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் நடைமுறை!
அவர்களால் முடியாததை இன்னொருவர் செய்தால், உடனே அதற்குப் புனித வார்த்தை கொடுத்து, பீடத்தில் ஏற்றி ஒதுக்குவது தான் மானிட சூட்சுமம்! :-)

குழந்தை: அப்படி என்றால் தங்களைக் கணப்பொழுதும் மறக்கக் கூடாது; காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதும் வரத்தை எனக்குத் தாருங்கள் சுவாமி!

இறைவன்: இதெல்லாம் ஒரு வரமா? நானே உன்னை மறந்தாலும், உன்னால் என்னை மறக்க முடியாதே!
ஏன்னா உன் குணம் அப்படி! வேறு ஏதாவது கேள்! என் திருப்திக்காக ஏதாவது கேள்!

குழந்தை: அப்படி என்றால் செய்யும் பக்திக்குப் பிரதிபலனாக வரம் கேட்கலாம் என்ற வியாபர எண்ணமே தோன்றக் கூடாது!
வரம் கேட்காமல் இருக்கும் வரத்தை அடியேனுக்கு அருளுங்கள்!

இறைவன்: அட, இப்படி ஒரு அப்பாவியா இருக்கியேப்பா!
வரம் கொடுத்துத் தான் இது போன்ற எண்ணமெல்லாம் உனக்குச் சித்திக்க வேண்டும் என்பதில்லை!
ஏதாவது கேள், ஏதாவது கேள் என்று, என்னையே கெஞ்ச வைக்கிறாய் பார்த்தாயா? கேள், என் திருப்திக்காக ஏதாவது கேள்!


குழந்தை: சரி...என் தந்தை பொன்வண்ணர் (ஹிரண்ய கசிபு) நற்கதி அடைய வேண்டும்! அவருடைய ஆணவம் தான் அவருக்கு பெரிய பகையாய் போய்விட்டது. ஆணவம்-கன்மம்-மாயை அல்லவா?
ஆணவம் தொலைந்தால் தானே, தான் நம்புவது மட்டுமே சரியானது என்கிற விடாப்பிடி எண்ணம் தொலையும்? பிறர் என்ன தான் சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்கும் எண்ணம் வளரும்!

ஆணவத் திரை அகன்றால் தேடல் என்னும் வெளிச்சம் வரும்!
தேடினால் தானே மாயை அகலும்!
இப்படிச் செய்யாமல் ஆணவத்தினால் அழிவு தேடிக் கொண்டார் என் தந்தை! அவர் உஜ்ஜீவிக்க நீங்கள் தான் அருள வேண்டும்!

இறைவன்: உஜ்ஜீவனமா? உன் தந்தையின் ஜீவனை மறுபடியும் கொடுக்கச் சொல்கிறாயா?
விதி முடிந்த ஒருவன் உயிரைக் கேட்டு என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தலாமா நீ?

குழந்தை: அச்சோ! மன்னியுங்கள் சுவாமி! உடலைக் காப்பது ஜீவனம்! ஆன்மாவைக் காப்பது உஜ்ஜீவனம்!
அடியேன் கேட்டது உஜ்ஜீவனம் அல்லவா! தங்களுக்குத் தெரியாததா? சிறுபிள்ளையிடம் தங்கள் விளையாட்டா? அவருக்கு உங்கள் திருவடியைக் காட்டி நற்கதி அருளுங்கள்!

இறைவன்: ஆகா...ஒருவன் என்னிடம் சரணாகதி செய்தால் அவனின் முன்னேழு தலைமுறையும் பின்னேழு தலைமுறையும் ஈடேறும்! இது நானே கொடுத்த வாக்கல்லவா?
இதை நீ வரம் என்று ஏன் தனியாகக் கேட்கிறாய் குழந்தாய்? உன் சரணாகதிக்கு அது தானாகவே நடந்து விடுமே!
மேலும் உன் தகப்பன் = என் ஜய விஜயன்! அவன் இந்நேரம் வைகுந்த வாசலில் மீண்டும் பணிக்குப் போய் நின்றிருப்பான்!

அட என்னடா இது! இவன், எதுவும் கேட்கக் கூடத் தெரியாதவனாக இருக்கிறானே? என்னையே திகைப்பில் ஆழ்த்தும் இவனை என்ன செய்து அடக்கலாம்?
எல்லாம் அற என்னை இழந்த நலம் என்றல்லவா ஆகி விட்டது!
"இழந்த" என்பது எப்படி ஒருவனுக்கு நலமாகும்? வரவு அல்லவோ நலம்?
இழப்பை நலமாகக் கருதும் அறியாச் சிறுவனோ இவன்?

இவனுக்கு என்ன வரம் கொடுத்து விட்டு மறையலாம்? இன்னும் சில நாழிகை தான்! அதற்குள் மிகக் குறுகிய கால அவதாரம் பூர்த்தி ஆக வேண்டுமே! (இறைவனே கவலையுடன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டான்)

இவனுக்கு என்ன தரலாம்?
* பூமண்டல அதிபதி? - வேண்டாம்!
* சொல்லாய், சுர பூபதி? தேவர்கள் தலைவன்? - வேண்டவே வேண்டாம்!
* அசுரர் தலைவன்? - இப்போது தந்தைக்குப் பின் அதான் அவனே ஆகி விட்டானே!
* சரி, பிரம்ம பதவி? - அதுவும் இவன் பக்திக்கு முன் நிற்காதே?

சரி...
* வைகுண்டபதி? = அது கூட இவனுக்குச் சமானம் ஆகுமா தெரியலையே?
இவன் நம் பேரில் காட்டும் அன்பில் ஒரு பாதியாவது, நாம் பக்தர்கள் பேரில் காட்ட முடியுமா? திருமகள் கூடப் பொதுவாகக் கருணை உள்ளவள்! ஆனால் அவளும் பல வேளைகளில் சினந்துள்ளாளே!

ஆனால் இவனோ கருணையைத் தவிர வேறு எதுவும் தெரியாமல் இருக்கிறானே! கொல்ல வரும் சூலத்தைக் கூட நாராயண உருவமாகக் கண்டதால், அதுவும் இவனுக்கு அப்படியே அல்லவா ஆகிப் போனது! இவனுக்கு என்ன தான் தர முடியும்?

ஆங்...அதுவே சரி!
சாம்ராஜயத்தின் சக்ரவர்த்தி ஆக்கி விடுவோம்! - பக்த சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி!
அதுவே இவனுக்கு உரிய பட்டாபிஷேகம்! அதுவே இவனுக்கு உரிய வரம்!
பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி - அடியார்க்கு அரசன்! அடியார்க்கு நல்லான்!
இதையே கொடுத்து விடுவோம்!
இறைவி: பெருமாளே! ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் என்று எதையும் ஆராய்ந்து தானே நீங்கள் அருளுவீர்கள்?
உங்கள் புதல்வன் பிரம்மனைப் போலவோ, மைத்துனர் சிவனாரைப் போலவோ வரங்களை உடனே உடனே தூக்கிக் கொடுத்துவிட மாட்டீர்களே!

வரத்தால் அவனுக்கு நன்மையா? அவன் எதிர்காலத்துக்கு நன்மையா? அவன் சமூகத்துக்கு நன்மையா? என்றெல்லாம் ஆராய்ந்து அருளும் நீங்களா இவனுக்கு இவ்வளவு பெரிய பட்டத்தைத் தூக்கிக் கொடுப்பது?

இறைவன்: ஆகா, கருணைக் கடலான அலர்மேல் மங்கையா இப்படிச் சொல்வது? வயிற்று வலி உள்ள குழந்தை பலாப் பழத்துக்கு அழுதால் அப்போது ஆராய்ந்து அருளலாம்! ஆனால் இவன் வலி உள்ள குழந்தை அல்ல, திருமகளே!

இறைவி: அதில்லை சுவாமி! இவனுக்கு இப்படிக் கொடுத்து விட்டால் நம் மற்ற பக்தர்களின் கதி எல்லாம் என்னாவது? அவர்கள் எல்லாரும் முனிவர்கள், தேவர்கள், மானிடர்கள் - ஓரளவு நல்லவர்கள்! என்ன இருந்தாலும் இவன் ஒரு அசுரன் ஆயிற்றே!

இறைவன்: ஹிஹி. அசுரன் என்பதாலா உனக்கு இந்தத் தயக்கம் தேவி? தேவர்களிடமோ முனிவர்களிடமோ இல்லாத அசுரத்தனமா? ஹா ஹா ஹா! வேண்டுமென்றே தானே இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்? இவர் வாயால் அசுரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று ஆவலா?

இறைவனைக் காலால் எட்டி உதைக்கவில்லையா ஒரு முனிவன்? நீ கூட அதற்குக் கோபித்துக் கொண்டாயே!
தன்னலத்துக்காக பழி பாவங்கள் செய்யாதவர்களா என்ன தேவர்கள்? நீயே தேவர்களைப் பலமுறை தண்டித்துள்ளாயே!

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

- இது தான் சூட்சுமம்! குணமோ, குற்றமோ, எது மிகையோ - அதை நாடி அருள வேண்டும்!

கண்ணாடி முன் நின்று பார்த்துள்ளாய் அல்லவா?
அது நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே தான் காட்டும்!
உடுத்திக் கொண்டிருந்தால், உடுத்தியதாகத் தெரிவார்கள்!
அலங்கோலப் பட்டிருந்தால், அலங்கோலமாகத் தான் தெரிவார்கள்!
இறைவனும் அந்தக் கண்ணாடி போலத் தானே!


* குழந்தையாய்ப் பார்த்தால் குழந்தை! = தேவகி, யசோதை, பெரியாழ்வார், சபரி போன்றவர்களுக்கு!
* காதலனாய்ப் பார்த்தால் காதலன்! = மீரா, ஆண்டாள், கோபியருக்கு!
* தலைவனாய்ப் பார்த்தால் தலைவன்! = விபீஷணன், விதுரன், அக்ரூரன், அப்பர் போன்றவர்களுக்கு!
* நண்பனாய் பார்த்தால் நண்பன்! = குசேலன், அர்ச்சுனன், சுந்தரர் போன்றவர்களுக்கு!
* எதிரியாய்ப் பார்த்தால் எதிரி! = இராவணன், துரியோதனன், சூரபத்மன் போன்றவர்களுக்கு!
* நண்பன் தான்; ஆனால் அவனுடன் உரிமையாகச் சண்டை போட வேண்டும் என்று பார்த்தால் சண்டையிடும் நண்பர்கள்! = விருஷபாசுரன், குபேரன் போன்றவர்களுக்கு

இதில் அசுரன் தேவன் மனிதன் விலங்கு என்ற பாகுபாடே இல்லை! எனக்கு என்று தனியாக ஒரு குணம் கிடையாது!
யார் யார் எப்படி எப்படிப் பார்க்கிறார்களோ அப்படி அப்படிப் பெற்றுக் கொள்கிறார்கள்!
இவன் அசுரனாகத் தான் இருக்கட்டுமே! ஆனால் ஆத்மார்த்தமான பக்தியில் இவனுக்குப் பின்னே தான் எல்லாரும்!

பிரகலாத நாரத பராசர புண்டரீக
வயாச அம்பரீச சுக சௌனக பீஷ்மதால்பியான்
ருக்மாங்கத அர்சுன வசிஷ்ட விபீஷணாதீன்
புண்யானிமான் பரம பாகவதாம் ஸ்மராமி


என்று சுலோகங்களில் கூட அனைவருக்கும் முன்னால்,
ஏன் வியாசர், சுகப் பிரம்ம மகரிஷிக்கும் முன்னால்
இந்தப் பிரகலாதன் என்னும் அசுரனே இனி முன் நிற்பான்!
இப்போது என்ன சொல்கிறாய் மகாலக்ஷ்மீ?

இதோ பட்டாபிஷேகம்!
பிரகலாதனே பக்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தி!
அடியார்க்கு நல்லான்!
அருளினோம்! அருளினோம்! அருளினோம்!

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் சீரிய சிங்கம் சிலீர் என்று மறைந்தது! அன்று முதல் எந்த ஒரு வழிபாட்டிலும், அடியார்களை முன்னிறுத்திச் செய்யும் பூசைகளில் எல்லாம்....
பிரகலாதன் என்னும் அசுரனே முதலில் முன்னிறுத்தப்படுகிறான்!


நான் சிவ பக்தன், பெருமாள் பக்தன், முருக பக்தன், அம்பிகை பக்தன், புத்த பக்தன், இயேசு பக்தன் என்று நாம் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! பதிவு எழுதி ஆடலாம்! ஆனால்...

ஆனால் "இவன் என் பக்தன்" என்று இறைவன் சொல்ல வேண்டுமே?
நம்மைப் பார்த்து அப்படிச் சிவனோ பெருமாளோ முருகனோ அம்பிகையோ புத்தரோ சொல்வார்களா? :-)

அப்படி, "இவன் என் பக்தன், இவன் என் பக்தன்" என்று இறைவனே தன் வாயால் சொல்லிச் சொல்லிச் சொந்தம் கொண்டாடியது இரண்டு பேரை மட்டுமே!

அந்த இருவரில்...
ஒருவர் கூட முனிவர் இல்லை, தேவர் இல்லை, மனிதர் இல்லை!

* ஒருவன் அசுரன்!
* இன்னொருவன் விலங்கு!


பிரகலாதன் திருவடிகளே சரணம்!
அனுமன் திருவடிகளே சரணம்!

முடிந்தால் யோசித்து, மனத்தளவில் இந்த அசுரன் ஆகப் பார்ப்போம்! இல்லை இந்த விலங்காகப் பார்ப்போம்! :-)
ஆடி ஆடி அகம் கரைந்து - இசை
பாடிப் பாடிக் கண்ணீர் மல்கி - "ஏங்கும்"
நாடி நாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ் வாள் நுதலே!
(நரசிம்ம ஜெயந்தி வரும் ஞாயிறு 18th May 2008. அதற்காக இட்ட சிறு பதிவு)
Read more »

Tuesday, May 06, 2008

விராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி!

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி?

இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்?

அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! ஆணழகனை அள்ளிக் கட்டிக்கணும் போல இருக்கு!
முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

வாங்கப்பு வாங்க!
"யார் தமிழ்க் கடவுள்?"-ன்னு பதிவு போட்டு ஒரு மாசம் ஆச்சுல்ல? அதே போல தான் இந்தப் பதிவும்-ன்னு நினச்சிக்கிட்டு வர்றவங்க எல்லாருக்கும் ஆப்பு! :) இன்னிக்கி எங்க குல தெய்வம் முருகப்பெருமானைப் பார்க்க விராலிமலைக்குப் போகப் போறோம்...வாரீங்களா?

நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி நியூயார்க் நகரில் எனக்கு ஒரு விபத்து.
சுரங்க ரயில் வண்டி ஏறும் போது, வண்டி இடுக்கில் கால் சிக்கிக் கொண்டு ஒரே களேபரம்!
NYPD போலீஸ் மாமாக்கள் வந்து ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போயி அட்மிட் பண்ணாங்க. யாருக்காச்சும் சொல்லணுமா?-ன்னு கேட்டாங்க.

நன்றிங்க ஆபிசர், நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன். கையில் செல்பேசியும் பிளாக்பெரியும் இருந்திச்சி.
யார் கிட்டயும் சொல்லலை! வார இறுதி - அலுவலகம் இல்லை என்பதும் ஒரு வகையில் நல்லதாப் போச்சு!

பத்து மணி நேரக் காரோட்டும் தூரத்தில் இருக்கும் என் தம்பி-நண்பனுக்கு மட்டும் மருத்துவமனையில் இருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன், தகவலுக்காக! :-)
அனுப்பிட்டு, நாமளே சமாளிச்சிக்கலாம்-ன்னு தனியா இருந்தேனா? ராத்திரி ஆக ஆக வலியும் பயமும் சேர்ந்து கூடிக்கிச்சு!
இது போன்ற நேரங்களில் தனிமை கற்றுக் கொடுக்கும் வாழ்க்கைப் பாடங்களும் நட்புப் பாடங்களும் தான் எத்தனை எத்தனை? :-)

இதுக்கு மேல வேணாம்டா சாமீ-ன்னு, நியூயார்க்கிலேயே இருக்கும் என் ஈழத்து நண்பி ஒருத்தியை அழைத்தேன்!
அவளும் அவள் கணவரும் பதறியடிச்சிக்கிட்டு ஓடியாந்தாங்க! அன்றைய இரவு, வலியிலும் கண்ணீரிலும் நட்பிலும் அமைதியாய்க் கழிய....

கொஞ்ச நாள் கழிச்சி இந்தியாவுக்குத் தொலைபேசும் போது, அம்மா கிட்ட உளறி விட்டேன்!
அம்மாவிடம் அவ்வளவா எதையும் மறைச்சிப் பழக்கம் கிடையாது பாருங்க!

(உங்களில் பல பதிவர்களின் பேரு கூட எங்கம்மாவுக்குத் தெரியும்!
பொறுமையின் சிகரம்! என் பதிவு-பின்னூட்டம் பற்றிய மொக்கையைக் கூட பொறுமையாக் கேட்டுப்பாங்க! :-)

அம்மா பயந்தே போயிட்டாங்க!
"ஏண்டா இப்படி எல்லாம் பண்றே-ன்னு?" ஒரே அழுகை! உடனே அவங்களுக்கு நன்கு தெரிந்த என் அமெரிக்க நண்பர்கள் கிட்ட போனைப் போட்டு அங்கேயும் ஒரு சீனைப் போட்டாங்க!
போட்டதுமில்லாம என்னைப் போட்டும் கொடுத்தாங்க! பசங்க எல்லாரும் என்னைப் பிலுபிலுன்னு பிடிச்சிக்க...

இந்த விபத்தால் பயந்து போன அம்மா, விராலிமலைத் தெய்வம் முருகப் பெருமானுக்கு வேண்டிக் கொண்டாங்க போல!
இந்த முருகன் மருத்துவ முருகனாம்! பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமும் அல்லவா?

விராலிமலையில் வேலும் உண்டு! எக்கச்சக்கமா மயூரமும் (மயில்) உண்டு!
அதனால் இந்த முறை இந்தியப் பயணத்தின் போது விராலிமலையில் தரிசனம்!

திருச்சி-திருவரங்கம் வரை ரயிலில் சென்று, பின்னர் விராலிமலைக்கு வாடகைக் காரில் செல்லலாம்! பேருந்தும் நிறைய உண்டு! சுமார் முப்பது கிலோ மீட்டர்!

திருச்சி-மதுரை சாலையில், புதுக்கோட்டைக்கு அருகில் இருக்கும் சிற்றூர் விராலிமலை!
சிறிய ஆனால் அழகிய ஊர்! அழகன் இருக்கும் ஊரல்லவா? அழகா இருக்காதா பின்ன?


அது என்ன விராலி மலை? விரலி மஞ்சள் தெரியும்! விரல் மாதிரி நீட்டு நீட்டா இருக்கும்! ஆனா அது என்னாங்க விராலி??

விறலி என்பது தான் விராலி என்று திரிந்து போனது-ன்னு சிலர் சொல்லுறாய்ங்க!
விறலி-ன்னா நாட்டியப் பெண்! கோயில்களில் நடனமாடும் தேவதாசிகள் நிறைய பேரு விராலிமலையைச் சுற்றி இருந்தாங்களாம்.
இங்கு இசை வேளாளர் குடும்பங்களில், வீட்டில் பிறக்கும் முதல் பெண்ணை, வேலக் கடவுளுக்குக் கட்டி வைக்கும் வழக்கமும் இருந்ததாம்!

இதுக்குன்னே முக்கோண வடிவில், விராலிமலை முருகன் தாலி-ன்னு வழக்கத்தில் இருந்திருக்கு போல!

இவர்கள் ஆடுவது பரதநாட்டியம் இல்லை; சதிர் என்ற ஒரு வகையான ஆட்டம்!
இவர்களுக்கு என்றே எழுதப்பட்ட விராலிமலைக் குறவஞ்சியை நடித்துக் காட்டுவார்கள் என்றும் கூறப்படுகிறது!

ஆனால் கால மாற்றத்தாலும் அரசின் சட்டத்தாலும் இப்போது விறலியர்கள் அவ்வளவாக இல்லை-ன்னு அங்கிருந்த சிவாச்சாரியார்(அர்ச்சகர்) சொன்னாரு!
விராலி மலையில் கால் வைத்ததுமே நாம் காண்பது சிறு குன்று! சுமார் 200 படி இருக்கும் போல! கொஞ்சம் விராலி மரங்கள்!
டிசம்பர் பூ மாதிரி ஒரு பூ... வில்வ இலை மாதிரி ஒரு இலை!
இது ஏதோ மருத்துவச் செடியாம்-ல! கடம்பனே ஒரு மாமருந்து! அவன் மலையில் வளரும் செடிகளுமா மருந்து?

இந்தச் செடியெல்லாம் Analgesic, Pain Killer-ன்னு நம்ம டாக்டரம்மா - தங்கச்சியம்மா சொல்லிப் போர் அடிச்சிக்கிட்டே வந்தாங்களா?
"உன் கூட வரேன்-ல? நெறைய Pain Killer தேவைப்படும்! கொஞ்சம் பறிச்சிப் போட்டுக்கவா"-ன்னு அவ புருசனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே நானும் அவளை ஓட்டிக்கிட்டு வந்தேன்!:-)

குன்றில் இந்தப் பக்கம் திரும்பினா நிறைய மயில்கள்! அட, எங்கிட்டு தான் இம்புட்டு மயிலு இருக்கும்னே தெரியலை! பறபறன்னு ஓடியாருதுங்க!

தோகை மயில்(ஆண்), தோகை இல்லாத மயில்(பெண்), வெள்ளை மயில்-ன்னு எக்கச்சக்கமான மயில்கள்!
நான் எந்த முருகன் கோயில்-லயும், ஏன் அறுபடை வீட்டுல கூட, இம்புட்டு மயிலைப் பார்த்தது கிடையாதுப்பா!
அதுங்க டொக்கு டொக்கு-ன்னு நடக்குற அழகே தனி! ஏதாச்சும் ஒரு மயிலு தோகையை விரிக்குமா-ன்னு நானும் கேமிராவை வச்சிக்கிட்டு அப்படியும் இப்பிடியும் குழந்தை மாதிரி திரும்பித் திரும்பிப் பார்த்தது தான் மிச்சம்!

"வெண்ணை, யார் தமிழ்க் கடவுள்???-ன்னா பதிவு போடுற? தோகையை விரிக்க மாட்டோம் போடா"-ன்னு சொல்லுதுங்க போல! :-)

மயில் போடுற சத்தம் தான் கொஞ்சம் கேட்க ஒரு மாதிரி இருக்கு!
மயில் கத்துது-ன்னு சொல்லக் கூடாதாமே? = என்னன்னு சொல்லணும் சொல்லுங்க பார்ப்போம்?

விராலி மலையின் கீழ் சரவணப் பொய்கை! குளத்தில் கால் நனைத்துக் கொண்டு மலைப்படி ஏறினோம்!
 கீழே கிராம தேவதையான மைக் கண்ணுடையாள் சன்னிதி-ல கும்பிட்டுத் தான் மலை ஏறணுமாம்!

அரோகரா-ன்னு சொல்லச் சொன்னாங்க அம்மா! நானும் சொன்னேன்!
அம்மா என் கையில் சிறிய திருக்கை வேல் ஒன்னு கொடுத்தாங்க! = நேர்த்திக் கடன் வேல்!

அட சக்தி வேல் வாங்கிட்டேனா? அப்ப நான் தேன் முருகன்! :-)
அப்படியே குழந்தை முகமா, பால் வடியும் பால முகமா, பழமா, அப்பாவியா வேற இருக்கேனா?
ஒரு முருக மிடுக்கோடு மலை ஏற ஆரம்பிச்சேன்! கெக்கெக்கே-ன்னு ஒரு சத்தம்!
அட நம்ம மயிலு தோகைய விரிக்கிறான்-டா!

படபட-ன்னு கீழே ஓடியாந்து காமிராவில் சுட்டேன்! ச்சே...ஒரே ஷேக்கு!
"ரவி செல்லம், மனக் கொறையோட ஏன் மலை ஏறுற நீயி?
யார் தமிழ்க் கடவுள்?-ன்னு பதிவுக்கு, ஒன்னும் புரியாத மனுசன் தான் கோச்சிப்பான்!
மால்-மருகன் ஒன்றே-ன்னு புரிந்த உன் காதல் முருகன் கோச்சிப்பானா?

மாமனும் மருகனும் - இருவருமே தமிழ்க் கடவுள்-ன்னு உண்மையைத் தானே சொன்னே? இந்தா தோகை!"
-ன்னு சொல்வது போல, நல்லா விரித்து விரித்து ஆடியது அந்த மயிலு!

எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! வாயெல்லாம் சிரிப்போட மீண்டும் படி ஏறினேன்!

படிகளுக்கு நடுவே அழகா மண்டபம் எல்லாம் இருக்கு! சின்ன மலைங்கிறதாலே சீக்கிரமாவே ஏறிடலாம்!
வழியில் இடும்பன், மீனாட்சி-சொக்கநாதர், வசிட்டர்-அருந்ததி, அகத்தியர், அருணகிரிநாதர் எல்லாருக்கும் சின்னச் சின்னச் சன்னிதிகள்!

இதோ மலை உச்சிக்கு வந்தாச்சு! அழகான ராஜகோபுரம்!

மகாமண்டபம் தாண்டினாக் கருவறை!
மகாமண்டபத்தில் மாணிக்க விநாயகருக்கு ஒரு சல்யூட் அடிச்சிட்டு உள்ளே முருகனைப் பார்க்கலாம்-ன்னு திரும்பிப் பாக்குறேன்.....
அடடா! அந்த அழகனைப் பாக்கலாம்-னு வந்தாக்கா, இந்த அழகர் எங்கேப்பா இங்க வந்தாரு?
இது என்ன இன்ப அதிர்ச்சி? = என் அப்பா!!
* என்னப்பன்,
* பொன்னப்பன்,
* முத்தப்பன்,
* மணியப்பன்,
* தன் ஒப்பார் இல் அப்பன்,
தாயார் உடனுறை திருமகள் கேள்வன் (ஸ்ரீநிவாசன்) = மருகனும் மாமனும் சைடு கேப்புல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருக்காங்க!

எனக்குச் சிரிப்பு தான் வந்தது! நான் பாட்டுக்குச் சிவனே-ன்னு முருகன் கோயிலுக்கு வந்தாக் கூட, இவரு என்னைய சும்மா வுட மாட்டாரு போல இருக்கே! இவரைப் பார்த்துட்டு தான் அவனைப் பார்க்க முடியும் போல இருக்கே! இது என்னடா கொடுமை? வேறு வழியில்லை!

கேஆரெஸ் என்னும் போவான் போகின்றாரை...
போகாமல் காத்து,
உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்!
- என்கிறானோ?

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால், ஆ! வா! என்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்!
தீர்த்தம் பெற்றுத் துளசி மணக்க, முருகனைத் திரும்பிப் பார்க்கிறேன்! ஆகா...யார் சொன்னா அந்த சிக்கல் சிங்காரவேலன் தான் அழகு-ன்னு???


இதோ...அழ்கு விராலி மலையான்! சண்முக நாத சுவாமி என்னும் திருப்பெயர்!
மயில் மீது அமர்ந்த ஒய்யார வடிவம்! இடக்கால் மடித்து, வலக்கால் தொங்கவிட்டு,
மூவிரு முகங்கள், முகம் பொழி கருணை,
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள், மாவடி வைகும் செவ்வேள் மலரடி!

தோளில் ஓர் கூர் வேலலைத் தாங்கி நிற்கும் திருக்கோலம்!
சேவல் கொடியில் என் ஆவல் கொடி பறக்கும் திருக்கோலம்!

வலப்புறம் வள்ளியாள் - அவள் கரத்திலோ தாமரைப்பூ = அவன் வலக்கண் சூரியன் அல்லவா?
இடப்புறம் அத்தியாள் - அவள் கரத்திலோ அல்லிப்பூ = அவன் இடக்கண் சந்திரன் அல்லவா?
சாயரட்சை என்னும் மாலை நேரப் பூசையில் அடுக்கு விளக்குகள் எல்லாம் கருவறையில் ஜொலிக்கின்றன! ஆறுமுகத்தில் பின் மூன்று முகங்கள் கண்ணாடியில் பளிக்கின்றன!
கூட்டமே இல்லை! இனிது இனிது ஏகாந்தம் இனிது! என்னையும் அறியாமல் என் வாய் மெல்லிசா, மென் குரலில் கூவத் தொடங்குகிறது!

மயூ ராதி ரூடம், மகா வாக்ய கூடம்!
மனோ ஹாரி தேகம், மகா சித்த கேஹம்!
மகீ தேவ தேவம், மகா வேத பாவம்!
மகா தேவ பாலம், பஜே லோக பாலம்!

- என்று சரவணன் சதிராடுவது போலவே பாடலும் ஏற்ற இறக்கம் காட்ட.......

ஐயோ, இது என்ன? பாத்துக்கிட்டே இருக்கும் போதே இவங்க திரையைப் போடுறாங்க???


பொதுவா சன்னிதியில் எனக்கு வடமொழி சுலோகங்கள் வராது! தமிழ் அருளிச் செயல்கள் தான் பெரும்பாலும் வரும்!

ஆனா இன்னிக்கு என்னமோ தெரியலை, ஆதிசங்கரர் வாயில தானா வந்துட்டாரு! நான் என்னத்த சொல்ல!

"அப்பா தமிழ்க் கடவுளே! தமிழில் பாடாததற்கு எனக்குப் பாதியில் திரையா? இது என்ன கொடுமைன்னு" மனசு பரபரக்குது!
திரும்பிப் பாத்தா அம்மா என்னைப் பார்த்து ஒரு லுக்கு வுடறாங்க! வாயில் நுழையாத பாஷையை எல்லாம் இவன் எங்கிட்டுப் போயி படிச்சான்-ன்னு அவங்களுக்கு எப்பமே என் மேல ஒரு பயம் தான்! :-)

ஒரு வட்டத் தட்டு, துணி மூடிக் கொண்டு, உள்ளாற போறாங்க சில குருக்கள்! ஓ நைவேத்தியமா? அதான் திரை போட்டாங்களா?
அதானே பார்த்தேன்! என் காதல் முருகனுக்கு எம்மேல கோபமோ-ன்னு நினைச்சிட்டேன்! அப்படியே அவன் கோவப்பட்டாலும் நாங்களும் பதிலுக்குக் கம்புச் சண்டை, அன்புச் சண்டை எல்லாம் போடுவோம்-ல? :-)

கொஞ்ச நேரத்துக்குப் பின், உள்ளாற போன தட்டு தொறந்தபடி வெளியே வருது!
அதைப் பார்த்த உடனே நான் மயக்கம் போட்டு விழாத குறை தான்!!!!

ஆகா...இது என்ன தட்டில் சுருட்டு பீடி?

"அடங் கொக்க மக்கா! என்ன நடக்குது இங்க? முருகன் நைவேத்தியத் தட்டில் எதுக்குச் சுருட்டு பீடி?
இவ்வளவு நேரம், உள்ளாறத் திரையப் போட்டு, தம் அடிச்சிக்கிட்டு இருந்தானா அந்தப் பால முருகன்?

அடப் பாவி! பார்த்தா பால் வடியும் பால முகம்! முளைச்சி மூனு இலை விடல! அதுக்குள்ள உனக்குச் சுருட்டு கேக்குதா? OMG! I just can't believe this!..."

என் வியப்பும் திகைப்பும் மூஞ்சிலயே எழுதி ஒட்டி இருக்கு போல! பக்கத்தில் இருந்த அர்ச்சகரே அதைப் பார்த்துவிட்டு விளக்கம் சொன்னாரு!

குமாரவாடி குறுநில மன்னனின் அமைச்சர் பேரு = கருப்பமுத்துப் பிள்ளை.
முருக பக்தர். அதே சமயம் சரியான சுகபோகி:)
தொடர் புகையாளர் (Chain Smoker). ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தரிசனத்துக்கு மலைக்கு வருவாராம்.

ஆனால் ஒரு முறை வெள்ளம் பெருக்கெடுத்து வர முடியாமல் போனது. கரையில் உணவு கூடக் கிடைக்காமல் தவித்தார் அமைச்சர்.
உணவை விட அவர் விரும்பிப் புகைக்கும் சுருட்டு தடைபட்டது தான் அவருக்குத் தவிப்பாகிப் போனது.

முருகன் அந்த நள்ளிரவிலும் அவர் முன் தோன்றி, சுருட்டு அளித்து, மலைக்கு அழைத்து வந்தான் = எதை நினைக்கிறாயோ அதாகவே ஆவாய்!:)
வேண்டியவர்க்கு வேண்டியதை "ஆராய்ந்து" பின்னரே அருளும் வழக்கமா என்ன கருணைக் கந்தனுக்கு? = சுருட்டு அளித்தான் சுப்ரமணியன்!!!

கருப்பமுத்துப் பிள்ளை அன்று முதல் பூசை வேளயில் சுருட்டும் சேர்த்து சண்முக நாதனுக்கு நிவேதனத்தில் தர வேண்டும் என்ற அரசாங்க உத்தரவு பிறப்பித்து விட்டார்!
இன்றும் அதுவே நடைமுறையில் உள்ளது! இந்த நாட்டு பீடிக்குச் = சுருட்டுக் களஞ்சி என்றே பெயர்!

இதோ திரை விலகி, மேளங்கள் முழங்க, ஆறுமுகனுக்கு ஆரத்தி!

முன்பு சங்கரர் பாடிய அதே புஜங்க நடையில் அழகு ஜொலிக்க நிற்கிறான் என் ஆணழகன்!
விராலிமலைத் திருப்புகழ் அடியேன் வாயில் சன்னமாய் ஒலிக்கிறது.

செய்ப் பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு...
செப்பு என எனக்கு அருள்கை மறவேனே! (பாடலை இங்கு கேட்கலாம்!)

சீரான கோல கால நவமணி
மால் அபிஷேக பார வெகுவித
தேவாதி தேவர் சேவை செய்யும் முக - மலர்ஆறும்

....
....
காவேரி ஆறு பாயும் வயலியில்
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!

(திருப்புகழ் வித்தகர் நம்ம SK ஐயாவை, இந்த அழகிய சந்தப் பாட்டுக்குப் பொருள் சொல்லுமாறு அன்போடு அழைக்கிறேன்!)


அனைவரும் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தோம்.
அங்கிருந்த சிவாச்சாரியார்கள் அடியேன் பாடலை மிகவும் சிலாகித்து அன்புடன் பேசினார்கள்.
அம்மா என் கால் குணமானதற்கு வேண்டுதலை நிறைவேற்றினார்கள்!
திருக்கை வேலினைக் காணிக்கை அளித்தார்கள்! திருச்சி நகருக்குத் திரும்பி வந்தோம்.

எந்தை = திருமால்
எங்கள் மால் ஈசன் கிடந்ததோர் கிடக்கையாம், பச்சை மாமலை போல் அரங்கன் மேனியைக் காண மனசு துடிக்குது.

திருவரங்கம் செல்ல மெள்ளப் பேச்செடுத்தேன். அம்மாவோ "ஊருக்குப் போகலாம்-பா, ரொம்ப லேட்டாயிடிச்சி" என்று சொல்லி விட்டார்கள்!
பாவம் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள்! என் பொருட்டு இவ்வளவு தூரம் வந்ததே பெருசு! சரிம்மா-ன்னு சொல்லிட்டேன்.

திருச்சியில் ரயிலேறிச் சென்னைக்குக் கிளம்பி விட்டோம். ஆற்றுப் பாலம் வரும் போது ரயிலின் கதவோரம் போய் நின்று கொண்டேன். அரங்கனின் நெடிதுயர்ந்த கோபுர மாமலை கண் சிமிட்டுகிறது!

"போய், பின்னொரு நாள் வருகிறேன் ரங்கா!" என்று சொன்னேன்!
கால் வலித் துடிப்பில் மருத்துவமனைத் தனிமையில் இருந்தது நினைவுக்கு வந்து...கண்கள் பனிக்க...

"பயந்த தனி வழிக்குத் துணை நான் அல்லவா? அதான் மருகன் வீட்டில் மாமனைக் கண்டாயே?
மை வண்ணம் இங்கு கண்டாய்! மால் வண்ணம் அங்கு கண்டாய்?"
என்று சொன்னான் போலும் அரங்கன்!
அகண்ட காவேரியின் மை வானத்து இருளில்...ஒரு மின்னல் பளிச்ச... 
அரங்கன் கோபுரம், பிரகாசமாய் ஒளிர்ந்தது, ஓரிரு விநாடிகள்!

கோபாலராயன் நேயம் உள திரு - மருகோனே
காவேரி ஆறு பாயும் வயலியில்,
கோனாடு சூழ் விராலி மலை உறை - பெருமாளே!
Read more »

Sunday, May 04, 2008

தசாவதாரம்: Kamal Haasan & his "Naked" Lies!!

தசாவதாரம் பத்திப் பல பேரு பல விதமா பலப்பல பதிவு போட்டிருக்காங்க! அதுலயும் இந்தக் "கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது" பாட்டு பிச்சிக்கிட்டுப் போகுது! ச்சே இந்த மீஜிக் ஆல்பம் வெளியிடற நேரம் பார்த்து நான் சென்னையில் இல்லாமப் போயிட்டேன்! இருந்திருந்தா இந்தப் பாட்டில் சொல்லி இருக்குற பல பொய்களுக்கு ஜாக்கிசானோடவும் கமலோடவும் சும்மாப் பறந்து பறந்து சண்டை போட்டிருப்பேன்! :-)

Naked Truth தெரியும்ங்க! அதென்ன Naked Lie? - ஹிஹி! எல்லாம் கமலுக்குப் புடிச்சமான இஷ்டைல் தாங்க!
நண்பர், பதிவர் அனந்த லோகநாதன், இந்தப் படத்தில் வரும் பெருமாளின் பக்திப் பாடல்களைக் கேட்கும் போது அடியேனை நினைத்துக் கொண்டாராம்! Haunting Effect-ஆ? மின்னஞ்சல் அனுப்பி இருந்தாரு! எல்லாம் மாதவிப் பந்தல் மயக்கம்! மாதவி இப்பிடி எல்லாம் கூட மயக்கி வச்சிருக்காளா? :-))

விசயத்துக்கு வருவோம்! பாடலின் வரிகள் அனைத்தும் அருமை! நடு நடுவில் பல்லாண்டு பாசுரம் எல்லாம் ஹை பிட்ச்சில் போட்டுக் கலக்கித் தான் இருக்கீங்க!
திருவரங்கத்துக் கவிஞராம்-ல வாலி?
//இராஜலஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன் தான்
ஸ்ரீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் தான்
//
அப்படியே கமலோட அம்மா அப்பா பேரையும் பாட்டுல கொண்டு வந்துட்டாரு பாருங்க! சும்மா கேட்டுக் கிட்டே படிங்க மக்கா!

ஆனா அதுக்கப்பறம் தான் கலந்துகட்டி ஒரே பொய்யா வெளயாடி இருக்காருப்பா வாலி! பாட்டை மேலோட்டமா பார்க்கும் போது அத்தனையும் தத்துவ வரிகள் தான்!
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது; கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது = இது ஓக்கே!
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது = இங்கிட்டு தான் லேசா இடிக்குது!

ஏன்?.......வைணவம் என்று பார்த்தால் மட்டும் தெய்வம் தெரியாது; தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது-ன்னு கூட மாற்றிப் பாடலாமே?

ஆனால் படத்தோட காட்சிக்கு ஏற்றாற் போலத் தான் பாட்டு எழுத முடியும் இல்லையா? படத்துல ஒரு சைவ அரசனும் (குலோத்துங்கன்), பல சைவர்களும் சேர்ந்து, தில்லை வைணவன் ஒருவனுக்குத் (ரங்கராஜ நம்பி) தண்டனையை நிறைவேற்றுவது போல் காட்சி! அதுனால காட்சிக்கு ஏத்தா மாதிரி வாலி எழுதிட்டாரு-னனு சொல்லி எஸ்கேப் ஆயிறலாம்! ஆனால் நம்ம கமல் எஸ்கேப்பு ஆக முடியுமா?அது என்ன காட்சி-ன்னு பார்த்தா, பத்மஸ்ரீ கமலஹாசன், சொல்லியுள்ள-செய்துள்ள பொய்கள் அப்பட்டமாகத் தெரிய வரும்!
கவிதைக்குப் பொய் அழகு! - ஆனால் வரலாற்றைத் தொடர்பு படுத்திக் காட்டும் ஒரு திரைக் கதைக்குப் பொய் அழகல்ல!
வைணவ இலக்கியங்களை ஓரளவு அறிந்தவன் என்கிற முறையில், உங்களுடன் இந்தப் பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறேன்! மாற்றுக் கருத்துக்கள், தரவுகள் (ஆதாரங்கள்) இருந்தால் தட்டாமல் சொல்லவும்!


மொதல்ல கமலின் படக் காட்சியைப் பார்ப்போம்: (இன்னும் படம் வெளி வராததால், ஊடகங்களில் கிடைக்கும் கதையின் கருவை அடிப்படையாகக் கொண்டும், படத்தின் கலைஞர்கள் கொடுக்கும் நேர்காணலைக் கொண்டும் தான் எழுதுகிறேன். படத்தின் ஆர்ட் டைரக்டர் கூட, ரங்கராஜ நம்பி என்ற பாத்திரம் உண்மையானது என்று தான் பேட்டியில் குறிப்பிடுகிறார்! கேளுங்க :-)***கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது - ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள்.
இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா.
இந்தப் பாடல் காட்சியை படு பிரமாண்டமாக அமைத்திருகிறார்கள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் இடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுவும் தில்லை கோவிந்தராஜப் பெருமாளை நடராசர் ஆலயத்தில் இருந்து பெயர்த்து எடுத்து கடலில் வீசி எறியும் காட்சி!

ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் (ரங்கராஜ நம்பி) கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள்.
அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது.

ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (அட! புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!!!!!) கதற...
கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக்கடலில் தூக்கி வீசப்படுகிறார்.

உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால்,
சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட...அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்! (*** வரிகளுக்கு நன்றி: tamilnadutalk.com)

ஆகக் கூடி...இது போன்ற ஒரு காட்சிக்கு வலு சேர்க்கும் பாடல் தான் அது! அதான் வீர வரிகள்!
வீரசைவர்கள் முன்னால் எங்கள் வீர வைணவம் தோற்காது!
மன்னன் சொல்லுக்கு அஞ்சி என்றும் மேற்கே சூரியன் உதிக்காது!


இப்போ உண்மையான கதை என்னன்னும் கொஞ்சம் பார்ப்போம், வாங்க!

இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்துல, அவனை மூளைச் சலவை செய்து சில சைவர்கள் போட்ட ஆட்டம்! அதுல பாவம், அப்பாவி சைவ-வைணவர்களிடையே சமயப் பூசலாய் போய் விட்டது!

தில்லையில் நடராசர் ஆலயத்துக்கு உள்ளேயே திருச்சித்ரகூடம் என்னும் கோவிந்தராசப் பெருமாள் கோயிலும் இருக்கு! அங்கு பெருமாள், ஈசனின் நடனத்தைப் பார்த்துக் களிக்கும் கோலத்தில் இருக்காரு! அவர் மீது திருமங்கை ஆழ்வார் 32 பாசுரம் பாடியுள்ளார். அதுவும் சிவபெருமானுக்குப் பிடிச்சமான சங்கராபரண ராகத்தைப், பெருமாள் மீது பாடி, சமய ஒற்றுமையை வளர்த்து இருக்காங்க!

ஆனால் மூளை கெட்டுப் போயி, சோழன் கோவிந்தராசர் சிலையை வேரோடு பிடுங்கி, தில்லைக்குப் பக்கத்தில் உள்ள பிச்சாவரம் கடற்கரையில் மூழ்கடிக்க வைத்தான். இதை ஒட்டக்கூத்தரும் அவர் பாட்டுல சொல்லி இருக்காரு! அதனால் கோயிலைச் சுற்றி இருந்த வைணவக் குடும்பங்களுக்குப் பல தொல்லைகள்! பல சங்கடங்கள்!
- இது வரைக்கும் சரி!
ஆனா ரங்கராஜ நம்பி என்ற ஒருவரைக் (கமலஹாசன்) கொக்கி மாட்டி, அம்பு எய்து, சிலையோடு கட்டி, கடல்-ல தூக்கிப் போடுறது எல்லாம் கொஞ்சம் ஓவர் கற்பனை தான்!

ஏதோ Passion of the Christ போல படம் பண்ணனும் நெனச்சா அதுக்கேத்த மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுக்கணும்! அதை வுட்டுப்போட்டு இப்படி எல்லாம் டகால்டி பண்ணக் கூடாது!

சொல்லப் போனா கடலில் கட்டித் தூக்கிப் போடுவது ஒரு சைவருக்கு நடந்த கொடுமை! பழுத்த சிவனடியார் அப்பர் சுவாமிகளைச் சமண அரசன் தூணில் கட்டிக் கடலில் தூக்கிப் போடுவான்! ஆனால் அவரு தப்பிச்சி வருவாரு!
கல்தூணைப் பூட்டிஓர் கடலிடைப் பாய்ச்சினும்
நல்துணை ஆவது நமச் சிவாயவே
- என்பது நாவுக்கரசர் தேவாரம்!
இப்படி அப்பர் சுவாமிகளுக்கு முன்னெப்போதோ நடந்ததை, நைசா ஒரு வைணவருக்கு ரீமிக்ஸ் பண்ணிக் காட்டுறது எல்லாம் ஓவரோ ஓவர் கமல் சார்!

கடலில் போட்ட கோவிந்தராசர் மூலவர் சிலை மூழ்கிப் போனது! ஆனால் உற்சவரின் சிலையை மட்டும் எப்படியோ காப்பாற்றிய வைணவக் குடும்பங்கள், அந்தச் சிலையை இராமானுசரிடம் சேர்பிக்கிறார்கள். சிலையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதே இடத்தில் வைத்தால் மீண்டும் பிரச்சனை தான்!

பிரச்சனை சிலைக்கா? இல்லையே!...அதைச் சுற்றியுள்ள அப்பாவி மக்களுக்குத் தானே! இதை நன்கு உணர்ந்த "உண்மையான" சமயத் துறவி அவர்! ஈகோ பார்க்காமல் சிலையைக் கொண்டு போய், கீழ்த் திருப்பதியில் நிறுவுகிறார்! அங்கு புதிதாகக் கோவிந்தராசப் பெருமாள் ஆலயம் ஒன்றை எழுப்புகிறார்! இன்றளவும் கீழ்த் திருப்பதியில் இருப்பது தில்லை கோவிந்தராசரின் உற்சவரே!

ஆண்டுகள் உருண்டோட சோழன் மறைகிறான்! நல்லிணக்கம் நிலவும் போது, புதிதாக மூலவர்-உற்சவர் சிலைகளைச் செய்து மீண்டும் தில்லையில் இருந்த இடத்திலேயே,(சில தீட்சிதர்கள் எதிர்ப்பையும் மீறி) நிறுவுகிறார்கள்! இன்றும் தில்லை நடராசப் பெருமான் ஆலயத்துக்குள் கோவிந்தராசரும் பள்ளி கொண்டுள்ளார்! - கதை இம்புட்டு தான்!

நானும் பல நம்பிகளைப் பற்றிப் படிச்சிருக்கேன் கமல் சார்!
குருகூர் நம்பி, வடுக நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமலை நம்பி, உத்தம நம்பி, திருக்குறுங்குடி நம்பி-ன்னு இந்த நம்பி லிஸ்ட் நீளம் தானுங்கோ!
ஆனா நீங்க சொல்லுற ரங்கராஜ நம்பி எங்கேயும் வரலீங்கோ! சாமி படத்துல கோயில் பட்டாச்சாரியாரா வர்ற விவேக் டயலாக் ஞாபகம் வச்சிக்கோங்கோ :-)

(இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் செய்தது இவ்வளவு தான்! சோழன் கொடுமைகள் எல்லாம் திருவரங்கத்தில் தான்! இராமானுசரை கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைக்கு ஓட ஓட விரட்டியது, அவருடைய வயதான குரு பெரிய நம்பிகள், மற்றும் இளையவரான சீடர் கூரத்தாழ்வான் - இருவரின் கண்களைப் பிடுங்கிய பயங்கரம், பின்னர் சோழனே கிருமி நோய் கண்டு "கிருமி கண்ட சோழனாய்" செத்தது எல்லாம் தனிக்கதை! அதற்கும் தசாவதாரம் கதைக்கும் தொடர்பில்லை!)


போதாக்குறைக்கு பொன்னுசாமின்னு, கடைசீல பார்த்தா இந்தப் பாட்டு விக்ரம் நடிச்ச மலையாளப் படத்தின் சினிமா-காரம்-காப்பியாம்! அட தேவுடா! இந்தாப் பாருங்க :-)


பத்மஸ்ரீ, உலக நாயகன், கமலஹாசன் அவர்களே!
கலைக்கு அழகு கற்பனை தான்! இல்லை-ன்னு சொல்லலை! பொன்னியின் செல்வன் நாவலில் கூட சுவைக்காகச் சில கற்பனைகளைச் செய்வார் கல்கி! ஆனால் கதையின் போக்கு வரலாற்றின் போக்கோடு முட்டிக் கொள்ளாது செய்வார். அதை முன்னுரையில் சொல்லியும் விடுவார்!

இன்றைய காலகட்டத்தில் சைவ வைணவச் சண்டைகள் எல்லாம் ஒன்னும் கிடையாது! இது போன்ற ஒரு சூழலில், நடக்காத ஒன்றை நடந்ததாகக் காட்டுவது என்பது சரியே அல்ல!
சும்மா கதை தானே என்று சொல்லாதீர்கள்! தில்லைக் கோவிந்தராசர் சிலையைக் கடலில் மூழ்கடித்தது உண்மை தானே! அதையும் தானே படத்தில் காட்டி உள்ளீர்கள்!
அதனுடன் ஆளையும் சேர்த்து படுபயங்கரமாகக் கொன்றார்கள் என்று பொய்யை உண்மையுடன் கலக்குவது எல்லாம் வரலாற்றைச் சிதைப்பதாகும்!

அதுவும் சினிமா போன்ற சக்தி வாய்ந்த ஊடகத்தில் சொல்லப்படும் காட்சிகளுக்கு, வரலாற்றுப் புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொள்வதை விட எஃபெக்ட்டு ஜாஸ்தி!
வேண்டாம் இந்த விபரீதப் போக்கு!
நீங்க தான் உங்களை ஒரு பகுத்தறியும் Agnostic என்று பேட்டிகளில் சொல்லிக் கொள்வீர்களே! அப்புறம் உள்ளூர மட்டும் ஏன் இந்த பொய்யான வைணவ பாசம்?

அப்படி மெய்யாலுமே நீங்கள் தொண்டு செய்ய ஆசைப்பட்டால் அதுக்கு உண்மையான பல நல்ல சம்பவங்கள் நடந்திருக்கு! மனித நேயத் தொண்டுகள் இருக்கு! உயிரையும் பொருட்படுத்தாது, தமிழை ஆலயத்துக்குள் முன்னிறுத்திக் காட்டிய வைணவக் கதைகள் இருக்கு!
தந்தை பெரியாருக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னரே, ஸோ கால்டு கீழ்க்குலத்தாரை, ஆலயத்துக்குள் அழைத்துச் சென்ற கதை இருக்கு! அதை எடுங்க!

அதை விடுத்து இப்படி எல்லாம் பொய் சொல்லிச் சைக்கிள் கேப்பில் வைணவம் வளர வேண்டிய அவசியம் இல்லவே இல்லை! :-)

படம் பிரம்மாண்டமா வருது-ன்னு நினைக்கிறேன்! பாடல் காட்சிகள், கதைக் களம் எல்லாரும் ஆகா ஓகோ என்று பேசுகிறார்கள்! உங்கள் காசெட் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர், உடையவர் இராமானுசரின் கொள்கைகளைப் புகழ்ந்து பேசுகிறார்!
இப்படி எல்லாமே நல்லா இருக்கும் போது, இந்த வரலாறு திரித்தல் என்னும் திருஷ்டி மட்டும் தேவையா?

படத்தின் துவக்கத்தில் அந்த ரங்கராஜ நம்பி பாத்திரப் படைப்பு கற்பனையே என்று போட்டு விடுங்கள்!
இல்லை...இல்லை ரங்கராஜ நம்பி என்பவர் உண்மை தான்; சைவர்கள் அவரைக் கொடுமைப் படுத்திக் கடலில் சாய்த்தார்கள் என்று நீங்கள் கருதினால், அதற்கான ஆதாரங்களைத் தமிழ் மக்கள் முன் வைக்க நீங்கள் கடமைப்பட்டு உள்ளீர்கள்!

மற்றபடி உங்க பிரம்மாண்டமான படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்!
(Pic Courtesy: http://dasavatharamthefilm.blogspot.com/)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP