Monday, December 31, 2007

2008: இனி கோவில் உண்டியலில் காசு போடாதீங்க! (Part-1)

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டை நெருங்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! இறைவன் எம்பெருமானுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்! நமக்குப் புத்தாண்டு உறுதிமொழிகள்-னு இருப்பது போல், அவனுக்கும் ஏதாச்சும் இருக்காதா என்ன? :-)

திருக்கோவில்கள் திருந்த வேண்டுமா? அப்படின்னா, இனி மேல் கோவில் உண்டியலில் காசு போடாதீங்க!
என்னடா இது மாதவிப் பந்தலில் அக்ரமம்-ன்னு பாக்கறீங்களா? வரும் 2008-இலாவது ஆலயங்கள் திருந்துமா?

இல்லை...நமக்கென்ன வந்தது, கோயிலுக்குப் போனோமா, சும்மானா (இல்லை அம்பது ரூவா டிக்கெட் வாங்கி) சாமியப் பாத்தோமா, பாக்கெட் பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமா, அப்படியே பக்தர்களை/பக்தைகளை நோட்டம் விட்டோமா... வீட்டுக்கு வந்த பின்,
ஆகா ஆலயத்தில் என்னமா தரிசனம், முருகப் பெருமானை என்னமா அலங்காரம் பண்ணியிருந்தாக-ன்னு பதிவு போட்டோமா...மேட்டர் ஓவர்!

இந்த ஆண்டின் துவக்கத்தில் என் இனிய நண்பன் ராகவன் ஒரு பதிவு போட்டிருந்தான். 2007 இல் ஆவது திருக்கோயில்கள் திருந்துமா என்று! - அதில் அவன் தனிப்பட்ட ஆசைகளை மட்டுமே சொல்லி இருந்தானே அன்றி, சமூக நடைமுறை வழிகளைச் சொல்லவில்லை!
இதோ ஆண்டு முடியப் போகிறது! ஆலயங்கள் திருந்தி விட்டனவா?
ஹிஹி! அது எல்லாம் நடக்கிற விஷயமா என்ன? அப்ப இதுக்கு என்ன தான் வழி? - திருத்தங்களை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்! எப்படி? மேலே படிங்க.

ஆலயங்கள் திருந்தணும்னா ரெண்டு பேரு மனசு வைக்கணும்!
ஒன்னு நிர்வாகம்! இன்னொன்னு நாம்! - நிர்வாகத்தின் பங்கு 60% என்றால் நம் பங்கு 40%.
நிர்வாகம் பற்றிய மாற்று எண்ணங்கள் குறித்து அடுத்த பதிவில் பலவற்றைச் சொல்கிறேன்! இன்னிக்கி நம்மளால முடிஞ்சது என்னென்ன பண்ணலாம்-னு பார்ப்போமா?

ஜனவரி முதல் நாள், முதல் வேலையாக இறைவனைத் தரிசத்து விட்டுத் தான் புத்தாண்டை ஆரம்பிக்க வேண்டும் என்று பல பேர் நினைப்பார்கள்!
அதற்காக மார்கழிக் குளிரில், கால் கடுக்க பெரிய வரிசையில் நிற்பார்கள்! - நல்லது தான்! இறைவன் திருமுகம் நம் மனத்தைக் கனியச் செய்யக் கூடியது! அவசியம் சென்று சேவித்து விட்டு வாருங்கள்!

ஆனால் அப்படி வரிசையில் நிற்கும் போது, கொஞ்சம் கீழ்க்கண்ட சிந்தனைகளையும் அசை போட்டுக் கொண்டே நில்லுங்கள்! இறைவனுக்கு நீங்கள் செய்யும் சிறு பங்களிப்பாக, சில புத்தாண்டு உறுதிமொழிகள் அமையட்டுமே!


1. எக்காரணம் கொண்டும், ஸ்பெஷல் டிக்கட் எடுத்து தரிசனம் செய்யாதீர்கள்! - முதலில் ஈசியா சேவிக்கலாம் என்ற எண்ணத்தைக் கைவிடப் பழகிக் கொள்ளுங்கள்!
பிசினஸ் க்ளாஸ், எகானமி க்ளாஸ், முதல் வகுப்பு, ஏசி சேர் கார் என்றெல்லாம் சொகுசுப் பயணம் செய்ய, ஆலயம் என்பது விமானப் பயணமோ, இரயில் பயணமோ அல்ல!
இறையருளில் இப்படியான சொகுசுகள், ஊருக்குக் கொண்டு போய் சேர்க்காது! :-)

கூட்டமாக இருக்கு! டைம் ஆகும்! ரொம்ப பிசி என்று நினைக்கிறீர்களா?
அப்படின்னா கோயிலுக்குப் போகவே வேண்டாம்!
காலத்தைக் கடந்தவனைக் காணக் கூட உங்களுக்குக் காலம் இல்லை-ன்னா, அப்படி ஏன் போக வேண்டும்? இல்லத்தில் இருந்தே, குடும்பமாக வழிபடலாமே?

தயவு செய்து இந்தச் சொகுசுப் போக்கு வேண்டவே வேண்டாம்! முடிந்த வரை இதைத் தவிர்க்கப் பழகிக் கொள்ளுங்கள்! உங்க கால வசதிக்கு ஒத்து வருவது போல் ஆலய யாத்திரைக்கு முன்பே திட்டமிட்டுக் கொண்டு செல்லுங்கள்!
(சிறப்புத் தரிசனம் இருப்பதால் தானே போகிறோம்; நான் ஒருவர் மட்டும் மாறினால் போதுமா? என்பதெல்லாம் விதண்டாவாதம் தான்! அரசு இந்தப் பணம் கொழிக்கும் திட்டத்தை அவ்வளவு சீக்கிரம் கலைக்காது! அதற்கு மாற்று வழிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்)


2. ஆலய உண்டியல்களில் காசைக் கொட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்!
நினைவில் நிறுத்துங்கள்!
* ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருணகிரியும் எத்தனை சல்லிக்காசு உண்டியலில் போட்டார்கள்?
** பணம் போடுவதால் பாவங்கள் கரைவதில்லை!
*** இறைவனைப் பணம் கொண்டு வசியப்படுத்த முடியவே முடியாது!!!

நம் அம்மா அப்பா கூட பெற்ற பிள்ளைகளிடம் வேண்டுமானால், பணம் எதிர்பார்க்காமல் இருக்கலாம்! ஆனால் அதே அம்மா அப்பா, பணத்தை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பார்கள்!
இறைவனோ நம் அனைவருக்குமே தாயும் தந்தையும் ஆனவன்! எனவே அவன் யாரிடம் இருந்தும் உண்டியல் பணத்தை எதிர்பார்ப்பதில்லை!

அச்சோ, தெய்வ குற்றம் ஆகி விடுமே-ன்னு அச்சமா? வேண்டுதல் நிறைவேத்தனும்-னா சாங்கியத்துக்கு மஞ்சள் துணியில் ஒத்தை ரூபாய் சுற்றிப் போடுங்கள்! போதும்!
அப்படின்னா ஆலயச் செலவுக்கும், வளர்ச்சிக்கும் என்ன செய்வதாம்?-னு கேள்வி வரும். அதை அடுத்த பதிவில் பார்க்கலாம்!

எல்லாப் பக்தர்களுமே குற்ற உணர்ச்சியில் தான் உண்டியலில் பணம் போடுறாங்கன்னு சொல்ல மாட்டேன்! அவர்களால் முடிந்த தர்மத்தை, அவர்கள் அடிக்கடி போகும் இடத்தில் செய்யறாங்க! அது புரிகிறது!
ஆனா அந்த உதவி, சரியாகப் பயன்படுதா?....இல்லை முதலை வாயில் போய் விழுதா? சரியாகப் பயன்படாத போது, ரூட்டை லேசா மாத்திக்கிடணும்! அதுக்கு என்ன பண்ணலாம்?

கோவில் உண்டியல் அருகே உட்கார்ந்து கொண்டு, ஒரு காசோலையில் பணம் மட்டும் நிரப்பிக் கொள்ளுங்கள்! உண்டியலில் எவ்ளோ பணம் போட நெனச்சீங்களோ, அதைக் காசோலையில் எழுதிக் கொள்ளுங்க!
ஒவ்வொரு முறை கோவிலுக்குப் போகும் போதும், பழம் பூ தேங்காய் போல, இந்தக் காசோலைப் புத்தகத்தையும் எடுத்துச் செல்லுங்க! காசோலைப் புத்தகம் நிரம்பிய பின், அதை ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கோ, தர்ம காரியத்துக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம்!


3. முடிந்த வரை புதுப்புது ஆலய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
இருக்கும் பல கோயில்களை நல்ல முறையில் பராமரிக்க உதவுங்கள்! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தான் சொன்னார்கள்! கோயில்களையே ஊர் முழுதும் குடி வைக்கச் சொல்லவில்லை! :-)

4. ஆலய வளாகத்தில் நடைபெறும் சிறுவர் வகுப்புகள், தமிழ் இலக்கிய முயற்சிகள், விரிவுரைகள், இசை வகுப்புகள் ஆகியவற்றில் பங்கு கொள்ள முயலுங்கள்.
இதுவும் ஒரு யோகா பயிற்சி போலத் தான்! கோயிலில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டாம். திறந்து வைத்துக் கொண்டு, இது போல் பயிற்சிகள் இருக்கா-ன்னு விசாரியுங்கள்.


5. நீங்கள் செல்லும் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை வசதி இருந்தால், கண்டிப்பாக ஒரு முறை,
தமிழில் அர்ச்சனை செய்யுமாறு கேட்டுத் தான் பாருங்களேன்.


அவர்களாகச் செய்யும் காலம் வரும் வரை, நீங்கள் தான் ஒரு காலை முன் வைக்க வேண்டும். உங்கள் பிறந்த நாளன்று முயன்று பாருங்கள். புரிந்து செய்யும் வழிபாட்டில் நிச்சயம் உங்கள் மனம் லயித்துக் கரைந்து போகும்.

வெளி மாநிலங்களில் நீங்கள் யாத்திரை போனால் பரவாயில்லை! நம்ம ஊரில், நம்ம ஆழ்வார்கள் இறைவனோடு தமிழில் உரையாடினதை, உங்கள் காதுகள் கேட்கக் கசக்குமா என்ன?

பூபாலக திரிவிக்ரமாய நமஹ= அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
லங்காபுரி சமர்த்தனாய நமஹ= சென்று அங்குத் தென்னிலங்கைச் செற்றாய் திறல் போற்றி!
சகடாசுர காலாந்தகாய நமஹ= பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கோவர்த்தன கிரி ஆதபத்ராய நமஹ= குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி!

என்று அவ்வளவு அழகாக மொழியாக்கிக் கொடுத்துட்டுப் போயிருக்காங்க!

யாரு? தமிழக அரசு அறநிலையத் துறை அமைச்சர்களா? சேச்சே! இல்லையில்லை! இதுக்கெல்லாம் அவிங்களுக்கு நேரம் இருக்குமா? இதுக்கெல்லாம் நேரத்தை வீணாக்கினா, அப்புறம் டமிள் வாள்க-ன்னு கூட்டணி மேடைகளில் முழங்க நேரம் இல்லாம் போயிடுமே!:-)

இதைச் செய்தவள் தமிழகத்தை ஆண்ட ஒரு பெண்! ....
தமிழ்த் தெய்வத்தையே ஆண்ட ஒரு பெண்!.....ஆண்டாள் என்னும் கோதை, இவ்வளவு இனிமையா மொழியாக்கிக் கொடுத்திட்டுப் போயிருக்கா! அதைப் பயன்படுத்திக்குங்க!


6. பெருமை வாய்ந்த பல ஆலயங்கள் மிக மிகப் பழமையானவை. இன்று அவற்றுள் பல கேட்பார் அற்றுக் கிடக்கின்றன. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

ஒரே இடத்தில் பணம் கொட்டுவதால் பெரிய நன்மைகள் ஆலயத்துக்கோ, உங்களுக்கோ எதுவுமே அல்ல! அரசின் முதலை வாய்க்குத் தான் போகும்.
எனவே இப்படி மாற்று வழியில் காணிக்கைகள் செலுத்துங்கள். தமிழ்ப் பதிகங்கள், பாசுரங்கள் பெற்ற தலங்கள் எல்லாம் ஓரளவு சீரடையும்.

கட்டாயம் இந்த வலைப்பூவுக்குப் போங்கள்;
Temple Cleaners என்ற அவர்கள் yahoo group-உம் உள்ளது. அவர்கள் இது போன்ற உதவி தேவைப்படும் தொன்மையான ஆலயங்களை அந்த வலைப்பதிவில் அடிக்கடி பட்டியல் இடுவார்கள். அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்திருந்தால் நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்!7. ஆலயத்துக்கு அருகிலேயே உள்ள, குழந்தைகள் இல்லம் அல்லது முதியோர் விடுதியில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
ஆலய தரிசனம் முடிந்து வரும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இறைவனைக் கண்ணாரக் காண்பதும் ஒன்று தான்! எளிய உள்ளங்களின் வாழ்த்தைக் காதாரக் கேட்பதும் ஒன்று தான்! முதல் முறை பழகும் போது கடினமாக இருக்கும்! மாற்றத்தை மனம் பழகிக் கொண்டால், அதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களுக்குத் தானாகப் புரியும்!

முன்பெல்லாம் ஆலயத்தை ஒட்டி ஆதுரச் சாலைகள் (மருத்துவமனைகள்), கல்வி நிலையங்கள், பாலர் பள்ளிகள் இருக்கும். பொன்னியின் செல்வனில் கூடப் படிச்சிருப்பீங்க!
திருவரங்கத்தில் இராமானுசர் தானியக் கொப்பரை உண்டியல், மருத்துவ நிதி எல்லாம் ஏற்படுத்தினார். மறைந்த காஞ்சிப் பெரியவர் பிடி அரிசித் திட்டம் கொண்டு வந்தார்.
தினமும் சமைக்கும் முன்னர், பல குடும்பங்கள், ஒரு பிடி அரிசியை, வீட்டில் உள்ள உண்டியல் பாத்திரத்தில் கொட்டினர். பின்னர் அவை தர்ம காரியங்களுக்குச் சேகரிக்கப்பட்டன.

ஆனா, இப்போது ஆலயங்கள் எல்லாம் வணிக வளாகங்களாக மாற்றப்பட்ட பின், இவை எல்லாம் போக்கொழிந்தன. எனவே நீங்களாக அருகில் உள்ள ஒரு காப்பகத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் ஆலயம் செல்லும் போது, காப்பக தரிசனமும் செய்யலாம்!

இயந்திர கதி வாழ்வில், குழந்தைகளுக்குத் தங்களை ஒத்த Lesser Fortunate குழந்தைகளைப் பார்க்கும் போது தானாகப் பொறுப்பு கூடும்! நீங்க எவ்ளோ அட்வைஸ் பண்ணியும் கேக்காத பசங்க, இதப் பாத்து தானா மாறுவாங்க!

சும்மா டிவிப் பொட்டி, கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆர்க்குட் சாட், சினிமாவிலேயே இந்தக் காலத்துப் பசங்க மூழ்கிக் கிடக்குதுங்க-ன்னு சலிச்சிக்காதீங்க. இப்படி முயன்று பாருங்க. குழந்தைகளுக்குப் பிடித்துப் போகும்.
அடுத்த தலைமுறைக்கு நம்ம ஆன்மீகம், பண்பாடு, மனித நேயப் பார்வையைக் கொண்டு கொடுத்த புண்ணியம் உங்களுக்குக் கிட்டட்டும்!


8. ஆலயத்தில், குளங்களில் தூய்மை பேணுங்கள். திருநீறு, குங்குமம், சந்தனம், துளசி என்று மீதியைக் கொட்ட இடமில்லை என்றாலும், தேடிப் போய் அதற்கென்று இருக்கும் இடத்தில் கொட்டுங்கள். எல்லாக் கோவில்களிலும் அபிஷேக/திருமஞ்சன நீர் வந்து விழும் ஒரு தொட்டி இருக்கும். கொட்ட இடமே இல்லை என்றால், அதில் போய்க் கொட்டுங்கள்! ஒரு பாவமும் அறியாத தூண்களையும் மாடங்களையும் விட்டு விடுங்களேன், ப்ளீஸ்! :-)

9. ஆலயத்தில் இரைந்து பேசலாம்! ஓடி ஆடலாம்! ஒருவரை ஒருவர் விசாரிக்கலாம்! குடும்பங்கள் கலந்துரையாடலாம்! எந்தப் புடைவை எங்கே வாங்கினீங்க-ன்னு கேட்கலாம்! யாருக்கு எங்கே பொண்ணு பாத்து இருக்கீங்க-ன்னு விசாரிக்கலாம்! நம் போன்ற வாலிபர்கள்/இளைஞிகள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழலாம்! தப்பே இல்லை! :-)
நம் ஆலயங்கள் சமூகக் கூடங்கள்! தியான மண்டபங்கள் அல்ல! அதனால் தாரளமாகப் பேசுங்கள்!

ஆனால் முடிந்தவரை சுடு சொற்களை, ஆலய வளாகத்தில் தவிர்க்கவும்! அடுத்தவரைப் புறங்கூறிப் பேசுதல், மட்டம் தட்டிப் பேசுதல் முதலான செயல்களைத் தவிர்க்கவும்!

கருவறைக்குள் மட்டும் அமைதி காத்து, வழிபடுங்கள்!
பிற இடங்கள் எல்லாம் உங்கள் வீட்டு அறைகள் தான்! கருவறை மட்டும் தான் நூலக அறை! அங்கு அமைதி பெறுங்கள்!


10. எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!

நம் குழந்தைகள் இன்று மாறுபட்ட காலகட்டத்தில் வளர்கின்றன. எதை ஒன்றையும் கேள்வி கேட்டு அறியும் குணம் இன்று அதிகம்! அது நல்லதும் கூட! அப்போது தான் உடைமைக் குணம் (sense of ownership) வளரும்!

இப்படி வளரும் குழந்தைகளின் முன், இறைவனைக் கூடப் பணமும் அதிகாரமும் இருந்தால் தான் பார்க்க முடியும் என்று தவறான யோசனைக்கு நாமே தள்ளிவிடலாமா?
இதனால் ஒட்டு மொத்த பண்பாடும் மாறித் தான் போகும். மன அமைதிக்கு ஆன்மீகம் என்ற நிலை போய், மன அழுத்தங்களைத் தான் அடுத்த தலைமுறைக்குப் பரிசாக விட்டுச் செல்வோம்!

அதனால்
எது எப்படியோ, ஆலயத்தில் நம் அதிகார அந்தஸ்தையோ, பண இருப்பையோ காட்டிக் கொள்ள வேண்டாம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள்! - உங்களுக்காக அல்ல! உங்கள் குழந்தைகளுக்காக!
(அடுத்த பதிவில், தமிழ் வழிபாடு, ஆலய நிர்வாகச் சீர்திருத்தம்-னு அவங்க கையில் இருக்கும் ஐட்டங்களைப் பார்க்கலாம்! )

அனைவருக்கும்
இனிய, வளமான புத்தாண்டாக 2008 அமையட்டும்! இறையருள் கனியட்டும்!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
புதுமணத் தம்பதிகளுக்கு Happy Thala New Year :-)
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
Read more »

Monday, December 24, 2007

கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!

சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;
அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!

வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண ஒளி சுற்றும்!
அட்டைப்பெட்டியால் ஆன அழகிய குடில். அதற்குள் மின் விளக்கு பொருத்தித் தருவார் எங்கள் சித்தப்பா. ஒன்று மின்னி இன்னொன்று மறையும்!
முனுசாமி அண்ணா கடையில் இருந்து வைக்கோல் கட்டு கொண்டு வருவோம்;
யோசோப்பு, மரியாள், ஆயர் எல்லாரும் இருப்பர்;
பின்னாளில் பக்கத்து வீட்டு மோகன் அண்ணா-ஷீலா ஆண்ட்டி, தேவதூதர், மூன்று ஞானிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.
குழந்தை இயேசு பொம்மை, தன் இரு கைகளை மேலுக்கு விரித்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும்.

வைக்கோல் குழந்தைக்குக் குத்துமே!
ஆண்ட்டி வெல்வெட் துணியில் குட்டி மெத்தை தைத்துக் கொடுத்தார்கள், குட்டிப் பாப்பாவிற்கு!

செந்தில் என்ற சிறுவன், பொம்மை இடத்தை விட்டு அந்தாண்ட இந்தாண்ட வரமாட்டான்! கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான்! எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான்! அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும்! பேயிடம் பால் குடிப்பது போல் அவளை அழித்து விடும் என்றெல்லாம் சொல்லுவான்!
நாங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்; ஏன் என்றால் அவன் தான் எங்களை விடப் பெரியவன்.

ஆடு, பசு மாடு பொம்மைகள் நிறைய! மயில் பொம்மைகளும் உண்டு!
இந்தப் பொம்மைகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு அருகில் சிரித்துக் கொண்டு இருக்கும்.
கிறிஸ்துமஸ் அன்றோ, குழ்ந்தை இயேசுவின் பக்கத்தில் சிரித்துக் கொண்டு இருக்கும்.

இப்படி பொம்மைகளாகவோ, ஆடு மாடுகளாகவோ இருந்து விட்டால், உலகில் பிரச்சனை என்பதே இருக்காதோ! :-)
அவற்றுக்கு ஆயர்ப்பாடியும் ஒன்றே! நல்ல மேய்ப்பனும் ஒன்றே!
மேய்ப்பனாகிய சிறுவன் கண்ணன்!
அன்பு ஒன்று தான் இந்தப் பசுக்களுக்கு எல்லாம் வேதம்.
அவன் வேணு கானமே கீதம்!

இரவில் தூங்கும் போதும், குடிலில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்!
அப்பப்ப எழுந்து அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளதா என்று ஒரு எட்டு எட்டிப் பார்த்துக் கொள்வோம்!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியத்தில், குழந்தை இயேசுவின் பிறப்பு:

துல்லிய பட்டுப் போன்ற தூயவள் மரியாள் கையில்
மெல்லிய பாலன் இயேசு விளக்கெனப் புன்ன கைத்தான்!
நல்லவர் உள்ளம் போல நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாத வாறு இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும் மாணிக்கத் தொட்டில் தோற்கும்
தூளி இல்லாத போதும் தூங்கினான் பாலன் இயேசு!
வாழிய என்றார் தூதர்! வணங்கியே நின்றார் ஆயர்!
நாழிகை செல்லச் செல்ல, நல்லொளி மேலும் பல்கும்!

மத்தேயு 1:23

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.


சென்ற ஆண்டு கிறிஸ்துமஸ் போது இட்ட பதிவின் மீள்பதிவு இது!
பழைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே!
Read more »

தில்லை நடராசன் தின்பானா ஏழை வீட்டுக் களியை?

அன்று தில்லை நடராசன் சன்னிதியில் ஒரே கூச்சல், குழப்பம்!
"அச்சச்சோ, நடராஜப் பெருமானுக்குத் தீட்டாயிடுத்தே! எந்தச் சண்டாளன் களியைத் தின்னுட்டு, இப்படி மீதியை, ஸ்வாமி மேல் வீசினானோ தெல்லியே! ஏங்காணும்...நோக்கு ஏதாச்சும் தெரியுமா?"

"ஓய், என்னைக் கேட்கறீரா? நேத்து ராக்கால பூஜை முடிச்சி, நடையைச் சாத்தினது நீர் தானேய்யா! இன்னிக்கு காலம்பற வந்து நடையைத் தொறக்கறேன்! அச்சோ! ஸ்வாமி மேல் என்னது இது திட்டு திட்டா விழுந்து கிடக்கே? அபசாரம், அபசாரம்!
நேற்று ராப்பூஜையில் என்னய்யா பண்ணீர் நீர்? திருவிழா நேரம்-னா நடை சாத்தக் கொஞ்சம் தாமதம் ஆகத் தான் செய்யும். அதுக்காகப் பசி தாளாம, அம்பலத்தில் களியை ஒளிச்சி வச்சித் தின்னறதா? நீரெல்லாம் என்னய்யா ஒரு தீட்சிதர்?"

"அய்யோ, இப்படி அபாண்டமாப் பேசாதீங்கோ! நம்மவா களி தின்னும் வழக்கம் எல்லாம் கிடையாதே! நான் எப்படிங் காணும் களியைப் போயித் தின்னிருப்பேன்? பழியைப் போட்டாலும் பொருந்தப் போடணும் ஓய்!
இது வேற எவனாச்சும் செஞ்ச வேலையாத் தான் இருக்கும்! ஹூம்...திருவாதிரை ஆருத்ரா அபிஷேகத்தின் போதா இப்படி எல்லாம் நடக்க வேண்டும்?"

"நாமத் தான் அம்பலத்தில் ஒருத்தனையும் விடமாட்டோமே! வேறு எவன் ஐயா வந்து வீசியிருக்க முடியும்?
ஏற்கனவே நாம போடுற சுத்தபத்த ஆட்டத்தை எல்லாம் பார்த்துட்டு, ஜனங்கள் ரொம்பவே நொந்து போயிருக்கா. இப்போ இது வேறயா?
கண்டராதித்த சோழர் வந்திருக்காராமே ஊருக்கு! இங்க வந்து, "நல்லா இருக்குய்யா உங்க சுத்தமும், ஆச்சாரமும்" ன்னு கேட்கப் போறாரு! என்ன சொல்லப் போறீரு?"

- சிதம்பரத்து தீட்சிதர்கள் இருவர், கோயிலில் இப்படிப் பேசிக் கொண்டும், நடுங்கிக் கொண்டும், மிகவும் பயந்து போய் இருந்தார்கள்! அதற்குள் கண்டராதித்த சோழன், பொன்னம்பல நாதனைத் தரிசிக்க ஓடோடி வந்து விட்டான்! என்ன இன்னிக்கி இவ்வளவு சீக்கிரம், இப்படி ஆவலுடன் ஓடி வருகிறான்?அதற்கு முந்தைய நாள் இரவு!
"செம்பியன் மாதேவி, ஒவ்வொரு ராத்திரியும் பூசை முடித்த பின், என் காதுகளுக்கு நடராஜப் பெருமானின் சதங்கை ஒலி கேட்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் அது இன்று கேட்கவில்லை! என் வழிபாட்டில் தான் ஏதோ குறை உள்ளது போலும்! அப்படித் தானே?"

"கண்டராதித்தரே, உங்களைப் போல் சிவநெறிச் செல்வரைக் கணவராகப் பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! எதற்கு வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்கிறீர்கள்! இன்று கேட்காத சதங்கை ஒலி நாளை கேட்கும் பாருங்கள்! வாருங்கள், சாப்பிட்டு உறங்கப் போகலாம்!"

"இல்லை மாதேவி, எனக்கு மனம் சரியில்லை! உணவு வேண்டாம்! நீ போய் வா! நான் இங்கேயே தூங்கிக் கொள்கிறேன்!"

கவலையில் சோழனுக்கு இரவெல்லாம் தூக்கமில்லை! புரண்டு புரண்டு படுத்தான். சிற்றஞ் சிறுகாலே தோன்றிய உறக்கத்தில், ஒரு கனவு! ஆகா...இது என்ன!.....ஈசனே அல்லவா கனவில் பேசுகிறார்!
"ஆதித்தா...இன்று இரவு சேந்தன் வீட்டுக்குச் சென்றிருந்தேன்! அதான் இங்கு உன்னிடம் வரவில்லை! உனக்கு என் சதங்கை ஒலியும் கேட்கவில்லை!
சேந்தன் தெரியுமல்லவா உனக்கு?"

"தெரியாதே சுவாமி!"

"பட்டினத்துப் பிள்ளையின் கணக்குப் பிள்ளை அவன்! பட்டினத்தான் துறவு பெற்ற பின், அவன் சொத்துக்களை எல்லாம் ஊர் மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டான். அரசனுக்கு கொடுக்கவில்லையாம். செய்யாத குற்றத்துக்குச் சிறைவாசம் அனுபவித்து விட்டு, இப்போது தில்லைக்கு வெளியில் பரம ஏழையாக உள்ளான். அவன் வீட்டுக்குத் தான் ஒரு முதியவனாய் இன்று போய் எட்டிப் பார்த்தேன்...."


"சேந்தனாரு இருக்காருங்களா சாமீ...தினமும் சிவன் அடியாரு ஒருத்தருக்காச்சும் சாப்பாடு போட்டுட்டுத் தான் சாப்பிடுவாராமே! யப்பா...இன்னிக்கி இந்தப் பேய் மழையில இங்கனாச்சும் ஒதுங்கினேனே!"

"வாங்க பெரியவரே! அடியேன் தான் சேந்தன்! இப்படி உட்காருங்க"

"ஓ...நீ தான் சேந்தனா! பார்க்கவே பரம ஏழையா இருக்கேயே! உனக்கு ஏன்பா இந்த அன்னதானம் எல்லாம்? உனக்கே இன்னொருத்தரு அன்னதானம் பண்ணனும் போல இருக்கே!"

"எங்கள் ஈசனும் பரம ஏழை தானே, ஐயா!
ஏழைப் பங்காளன், அவன் உலகத்துக்கே படி அளக்கவில்லையா? அது போலத் தான், நானும்!"

"உக்கும்...இந்தப் பேச்செல்லாம் நல்லா வெவரணையாத் தான் பேசுறாங்க இந்தச் சிவனடியாருங்க! ஆனா பேசறத்துக்கு மட்டும் தான் வாயின்னு நெனச்சிக்காதீங்க சேந்தனாரே! சோறு திங்கறத்துக்கும் சேத்து தான் வாயி! உமக்கே சோத்துக்கு இருக்கான்னு தெரியலை! இதோ, வெறகுக்கட்டை வேற மழையில விக்காம இங்கேயே போட்டிருக்க போல!
அட நடராசா! இது தெரியாம இன்னி ராவுக்கு இவன் வூட்டாண்ட வந்துட்டோமே! பஞ்ச வீட்டில் பெருசா என்ன கொடுத்துவிடப் போறாங்க? பசி வேற வயித்தக் கிள்ளுது! ச்சே..."

சேந்தன், மனைவியைப் பார்க்க...அம்மையார், சமையலறை பக்கம் போனார். எஞ்சியிருந்த கொஞ்சம் அரிசி நொய்யில், களி தயாரித்தார்.
சேந்தன் கொல்லையில் இருந்த காஞ்ச கீரையைப் பறித்துத் தர, கீரைக்குழம்பு தயாரானது.
வயசாளிக்குக் களியும் குழம்பும் ஊத்த, கெடைச்ச மட்டும் லாபம்-னு சாப்புட்டு போட்டுக் கெளம்பினாரு! அப்போ தான் அது நடந்திச்சி...

"அட இன்னும் கொஞ்சம் களி மீதி இருக்கே பாத்திரத்தில்! எனக்கு நாளைக்கு ஆகுமே"-ன்னு வெக்கமில்லாம கேட்டாரு வயசாளி அண்ணாச்சி! சேந்தனும் அவர் மனைவியும் ஏதாச்சும் சாப்பிட்டாங்களா-ன்னு ஒப்புக்குக் கூடக் கேக்கலை!
இந்தக் காலத்துல சில ஆம்ஸடர்டாம்-நியுயார்க் பசங்க, சாப்படக் கூப்புடற வீட்டுல இருந்தே, பார்சல் கட்டிக்கிட்டு வரலையா?:) கட்டிக்கிட்டு வந்து, ரெண்டு நாளுக்கு மைக்ரோவேவ்-ல வச்சி சாப்புடறதில்லையா? அது போலவே சிவபெருமானும் பண்ணியிருக்காரு டோய்!
மிச்ச மீதிக் களியைத் தன் இடுப்புத் துண்டில் கொட்டிக்கொண்டு ஆளு எஸ்கேப்பு!சிற்றம்பலம்-சிதம்பர ரகசியம்-அம்பலவாணர்-சிவகாமி

"கண்டராதித்தா, சேந்தன் வீட்டுக் களி தான் என் ஆடையில் இருக்குன்னு தெரியாம "ஆச்சார சீலர்கள்" சிலர் ஆலயத்தில் கூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்! நீ சென்று அவர்களைக் கவனி! சேந்தனை நாளை தேர்த் திருவிழாவில் உனக்கு அடையாளம் காட்டுகிறேன்...."

அச்சோ...கனவு கலைந்தது...சோழன் அலறி அடித்துக் கொண்டு ஆலயம் வருகிறான்!
களியின் மகிமை கோயிலில் சொல்லப்பட்டது! தீட்சிதர்கள் ஓரளவு அமைதி ஆனார்கள்! ஆனாலும் இந்தக் கதையை அவர்கள் மனம் முழுமையாக நம்பவில்லை போலும்! ஆனாச் சொல்வது அரசன் ஆயிற்றே!

தாஙகள் சொல்லும் கதையை ஊர் நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், ஊர் சொல்லும் கதையை, தான் நம்ப வேண்டாமோ? நம்பாதவரையும் வேறு ஒன்று செய்து நம்ப வைப்பவன் அந்த நடராசன் அல்லவா?

மக்கள் எல்லாரும் யார் அந்தச் சேந்தன்? யார் அந்தச் சேந்தன் என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டிருக்க...தேர் திருவிழா தொடங்கியது.

ஆடல் வல்லான் சிற்றம்பலத்தை விட்டு, பொன்னம்பலத்தின் வழியாக, ஆனந்த நடனம் செய்து கொண்டே வெளியே வருகிறான். தில்லையில் மூலவரே உற்சவரும் ஆகிறார்! தேர் புறப்பட்டு வீதிகளில் சுற்றிய வண்ணம் உலா வருகிறது!
அதைத் தொடாதே, இப்படி நில்லு என்ற அதட்டல் எல்லாம் கோயிலுக்குள் தான் போலும்! வீதியில் அந்த வில்லங்கங்கள் ஏதும் இல்லாது, மிகவும் நிம்மதியாய், மக்களோடு மக்களாய் உலா வருகிறான் இறைவன்.

இதோ நிலைக்கு வரப் போகிறது தேர்! அச்சோ, சக்கரம் பூமியில் இறங்கியது. தேர் நகரவில்லை! என்ன இது காலையில் இருந்து ஒரே அபசகுனமாய் நடந்து கொண்டே இருக்கே-ன்னு தீட்சிதர்கள் முணுமுணுக்க...
அபசகுணம் இல்லை இது! அடியவர் சகுணம்...அன்பின் சகுணம்; அதைக் காட்ட எண்ணிவிட்டான் அம்பலத்தான்.

யானைப் படைகளின் உதவியுடன் தேரை மேலே தள்ளினர் வீரர்கள். ஹூஹூம்...ஒன்றும் முடியவில்லை.
"சேந்தனே, தேர் நகரப் பல்லாண்டு பாடு" என்று ஒரு குரல்.
கூட்டத்தோடு கூட்டமாக இருந்த சேந்தனார், இதைக் கேட்டுத் திடுக்கிட்டார்...
கூட்டம், குரல் கேட்டு வழிவிட்டது! இவனா சேந்தன்? இவனா சேந்தன் என்று எல்லாரும் திரும்பிப் பார்க்க...
இவன் வீட்டுக் கம்பங் களியா, இன்று காலை பெருமானின் மேல் விழுந்து கிடந்தது என்று தீட்சிதர்கள் ஒரு பார்வை பார்க்க...
சேந்தனுக்கு நா எழவில்லை! பா எழுந்தது!!

மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்! வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்செய் மண்டபத்து உள்ளே புகுந்து, புவனி எல்லாம் விளங்க
அன்ன நடை மடவாளுமை கோன், அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே!
- (9ஆம் திருமுறை)

மக்கள் எல்லாரும் இப்போது தேரை இழுக்க, தேர் மீண்டும் வலம் வந்தது.
மந்திரங்களுக்கு கட்டுப்படாத இறைவன், மனத்துக்குக் கட்டுப்பட்டான்!
அபிஷேகத்தால் குளிராத இறைவன், அன்புக்குக் குளிர்ந்து போனான்!
கண்டராதித்தர் ஓடியே வந்து சேந்தனாரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

தீட்சிதர்களால் ஒன்றுமே பேச முடியவில்லை! கண்ணுக்கு முன் எல்லாம் நடந்து முடிந்து விட்டது! சேந்தனின் சிவபக்தி ஊர் அறிந்த ஒன்றாகி விட்டது!
ஆனால் சேந்தன் என்றுமே அதே சேந்தன் தான்! நடந்த அற்புதத்தை வைத்துக் கொண்டு, கோயிலுக்குள் மிட்டா மிராசு செய்யவில்லை! தனி வழியில் தரிசிக்கவில்லை! சிதம்பர ரகசியத்தைப் பணங்கொடுத்து பார்க்கவில்லை! சித்சபையில் சிறப்பு கேட்டு சீண்டிப் பார்க்கவில்லை! கூட்டத்தோடு கூட்டமாக நின்று சேவிக்கும் அதே சேந்தன் தான் அவன்!

அவன் வீட்டுக் களியை நடராசன் உண்டான். நாமும் உண்கிறோம்!
கீழ்த்தட்டு மக்களின் அன்றாட உணவை இன்று தீட்சிதர்கள் உண்கின்றனர். தனவந்தர்கள் உண்கின்றனர். அடியவர்கள் எல்லாம் திருவாதிரைக் களி என்று அன்புடன் உண்கின்றனர்!

ஏழையின் சொல் அம்பலம் ஏறியது!
ஏழையின் சோறு அம்பலம் ஏறியது!


சாதாரண அம்பலம் அல்ல! பொன்னம்பலம் ஏறியது! சிற்றம்பலம் ஏறியது!
திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!Dec 24, 2007
இன்று ஆருத்ரா தரிசனம்! திருவாதிரைத் திருநாள்! திருவாதிரைக் களி நாள்!

Read more »

Wednesday, December 19, 2007

பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!!

வைகுண்ட ஏகாதசி என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது எது?
திருவரங்கம். திவ்ய தேசங்களிலே முதல் திருப்பதி. "கோயில்" என்று சிலாகித்துச் சொன்னாலே, அது வைணவ சம்பிரதாயத்தில் திருவரங்கம் தான்! நடந்தாய் வாழி காவிரி இரண்டாகப் பிரிந்து, அரங்கனுக்கு மாலையாக ஓடும் ஊர்.


ஒரே ஆறாக ஓடும் காவிரி, திருவரங்கத்துக்குச் சற்று முன்பாக, முக்கொம்பு என்ற ஊரில் இரண்டாகப் பிரிகிறாள்.
அரங்கனின் அழகிய தோள்களில் மாலையாய் விழுந்து,
அப்படியே ஆனைக்காவில் அப்பனுக்கும் அந்த மாலவன் மாலை தனையே சூட்டி மகிழ்கிறாள்.
பின்னர் கல்லணைக்குச் சற்று முன்னர் மீண்டும் ஒன்று சேர்ந்து ஒரே ஆறாக ஓடுகிறாள்!
அதனால் கங்கையினும் புனிதமான காவிரி என்று பெரும் சிறப்பு பெறுகிறாள்!

கங்கையிற் புனிதமாய காவிரி நடுவு பாட்டு,
பொங்கு நீர் பரந்துபாயும் பூம்பொழில் அரங்கந் தன்னுள்,
எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே!
(- தொண்டரடிப்பொடி ஆழ்வார்)

அரங்கன் அரங்கத்துக்கே அரசன்! எந்த அரங்கம்?
திருவரங்கமா? இல்லை இல்லை!
உலகம் என்பதே பெரும் நாடக அரங்கம்;
அந்த அரங்கத்துக்கு அரசன்! அவன் குடிகள் நாம் எல்லோரும்!

ரங்கராஜன் என்று அவனை அழைப்பதில் தான் அரங்கவாசிகளுக்கு அப்படி ஒரு சுகம். ஏதோ தன் வீட்டுப் பிள்ளை தான், ஊருக்கே ராஜா என்று சொல்லிக் குதிக்கும் ஒரு கோலாகலம். அதுவும் மார்கழியில் பகல் பத்து, ராப்பத்து உற்சவங்களில் இதை கண்கூடாகக் காணலாம்;

அழைப்பு ஏதும் இன்றி, தன் வீட்டு விழா போல் இதைச் சிறப்பிக்கிறார்கள் ஊர் மக்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இன்றி உரே கொண்டாடி மகிழும் விழா! மாற்று மதத்து வழக்கமாகவும் சில பூசைகள் நடக்கும்!

அதுவும் தமிழுக்குச் சிறப்பு செய்யும் திருவிழா!
என்ன... இப்போதெல்லாம் கூட்டத்தைச் சமாளிக்க சரியான வழியை அரசும் தொண்டு நிறுவனங்களும் கொஞ்சம் கடைப்பிடித்தால், எல்லாரும் இந்தத் தமிழ் விழாவைப் புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாகும்!


சரி, நாம் கதைக்கு வருவோம். அரங்கனின் திருக்கோவிலில்,
குட திசை முடியை வைத்துக், குண திசை பாதம் நீட்டி,
வட திசை பின்பு காட்டி, தென் திசை இலங்கை நோக்கி

பள்ளி கொண்டுள்ளான் அரங்கநாதன்.

அவனுக்கு அர்ச்சனை செய்வதையே தர்மமாகக் கொண்டுள்ளார் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்பவர். ஒரு குழந்தைக்குச் செய்வது போல அவனுக்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்துச் செய்வார். மற்றபடி ஒரு எளிய பக்தர். அவ்வளவு தான்.

அவருக்கு மனதில் வெகு நாளாய் ஒரு ஆசை, ஆனால் பெருமாளிடம் சொல்லத் தயக்கம்.
தன் அர்ச்சனை போய், அவன் கர்ச்சனை ஆகி விடுமோ என்ற மயக்கம்.
ஆனால் அன்று மட்டும் தட்டைக் கீழே வைத்து விட்டு, எப்படியோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டார்.

ரங்கா, எனக்கும் மோட்சம் கொடேன்!
* என்ன சுவாமி இன்று திடீர் என்று உங்களுக்கு மோட்சத்தில் ஆசை வந்தது?
எனக்கு அதில் ரொம்ப நாள் ஆசை ரங்கா! எல்லாப் பக்தர்களுக்கும் அதன் மேல் ஒரு காதல் அல்லவா? எனக்கு நீ கொடுக்க மாட்டாயா?
* சரி யோசிக்கலாம்; நீங்கள் கர்ம யோகம் ஏதாச்சும் செய்திருக்கிறீரா?
இல்லை, சுவாமி!

* சரி, ஞான யோகம்?
அதுவும் இல்லை சுவாமி, நான் சுத்த ஞான சூன்யம்!
* சரி விடுங்கள், பக்தி யோகம் பண்ணியுள்ளீரா?
அந்தப் பக்கமே அடியேன் போனதில்லையே!

* ஹூம்; சரணாகதி செய்திருக்கிறீரா?
அச்சச்சோ, எனக்குத் செய்யத் தெரியாதே சுவாமி.
* சரி போகிறது! ஒரு நாளாவது என் பக்தனுக்கு அன்னம் இட்டு உள்ளீரா?
பசித்த பலருக்குச் சாப்பாடு கொடுத்துள்ளேன், ஆனால் பக்தனா என்றெல்லாம் தெரியாது சுவாமி.

* என்ன இது இப்படிச் சொல்கிறீர்? சரி, என் கதை சொல்லப்படும் இடத்திலாவது போய்க் கேட்டதுண்டா?
இல்லை சுவாமி! நான் உண்டு என் வேலையுண்டு என்று இருந்து விடுவேன்!வந்ததே கோபம் ரங்கநாதருக்கு! எழுந்து உட்கார்ந்தார்!
நாம் எல்லாரும் சயனத் திருக்கோலம் மட்டும் தானே சேவித்துள்ளோம்! அவனுடைய உட்கார்ந்த திருக்கோலம் கண்டவர் பிள்ளைப் பெருமாள் ஐயா மட்டுமே!
* எதற்கெடுத்தாலும் இல்லை, இல்லை என்றே பதில் சொல்கிறீர்கள்?
என்ன அக்ரமம்! மோட்சத்தை இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே!
மோட்சம் என்ன கிள்ளுக் கீரை என்று நினைத்தீரா?
ஒன்றுமே செய்யாத உமக்கு எப்படி ஐயா கொடுப்பது மோட்சம்?

இதைக் கேட்டவுடன், பிள்ளைக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது!
பெருமாள் அவரிடம் சினந்து பாத்ததே இல்லையா, அதனால் மிகவும் கழிவிரக்கம் வந்து கோபமாய் மாறி விட்டது!
அடியவருக்கும் அவனுக்கும் உள்ள உறவைப் பாருங்கள்! இருவரும் என்னவெல்லாம் உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்!

பிள்ளை இடுப்புத் துண்டை இறுக்கி இழுத்துக் கட்டிக் கொண்டார்.
ரங்கா, உன்னை ஒரு குழந்தை போல் கவனிக்கும் என்னிடமா கோபப்படுகிறாய்?
உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?...
அன்று பொய் சொன்னவனுக்கு மோட்சம் கொடுத்தவன் தானே நீ!... என்று கேட்டாரே ஒரு கேள்வி!

அதைக் கேட்டுப் படுத்தவன் தான் அரங்கன்!
இன்று வரை எழுந்திருக்கவே இல்லை!
அப்படி என்ன தான் கேள்வி கேட்டார்?....சற்றுப் பொறுங்கள்! அடுத்த பதிவில்!!
வைகுந்த ஏகாதசி Dec 20 (மார்கழி 4) அன்று வருகிறது!
இந்தக் கதையை ஒட்டி அழ்வார்கள் உற்சவம், இராப்பத்து திருநாள்,
இறைவன் பல்லக்கில் இருந்து கொண்டு எல்லார்க்கும் அள்ளு தமிழில் இடும் ஆணைகள்.
இப்படித் திருவரங்கத்தில் தமிழ் கொடி கட்டிப் பறக்கும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் காணலாம், வாங்க!சென்ற ஆண்டு ஏகாதசிக்கு இட்ட தொடர் பதிவின் மீள்பதிவு இது! - திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிக் காட்சிகளின் படங்களும் பதிவில் உள்ளன. இதோ மற்ற தொடர்கள்.....
பொய் சொல்க! அரங்கன் அருள்வான்!! - 1
ரங்கா - அடியேன் உனக்கு அடியேன்! - 2
தமிழ் வேதம் மட்டுமே கேட்பான் அரங்கன்! - 3
2006-இல் பகல்பத்து, 2007-இல் ராப்பத்து! - 4
முனியே! நான்முகனே!! முக்கண்ணப்பா!!! - 5
Read more »

Monday, December 17, 2007

குறுக்குப் புதிரா? புனிதமா?? - பொன்னியின் செல்வன்!

குறுக்கும் நெடுக்குமாய் ஓடி, வெற்றி பெற்றவர்கள் இதோ!
அறிவன்
அரைபிளேடு
மோகன்தாஸ்
தங்கம்
லஷ்மி
பொன்ஸ்
ஜெயஸ்ரீ

அனைவருக்கும் வாழ்த்துக்கள் மக்களே!
புதிரா புனிதமாவில், முதல் முறை நிறைய பேர் 100/100 அடித்துள்ளார்கள்! மகிழ்ச்சியாய் இருக்கு!

ஆர்வமுடன் பங்கு பெற்ற மற்றவர்களுக்கும், வாழ்த்துக்கள்!
பரிசு எப்படியும் உங்களுக்கும் சேர்த்து தானே! :-)
இதோ பரிசேலோ ரெம்பாவாய்.... ஆசிரியர் கல்கியுடன், பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் Group Photo. ஏற்கனவே நீங்கள் பார்த்தும் இருக்கலாம்! யார் யார் எந்தெந்த பாத்திரம் தெரிகிறதா? (நன்றி பொ.செ யாகூ குழுமம்)

புதிரா புனிதமாவில், குறுக்கெழுத்து ஸ்டைல் நல்லா இருக்கா, இல்லை பழையபடி மல்டிபிள் சாய்ஸ் தான் பிடிச்சிருக்கா?
மேலாக்க ஒரு வாக்குப் பெட்டி இருக்கு பாருங்க! அங்கன சொல்லுங்க மக்கா! அடுத்த முறை அப்படியே பின்னிடலாம்!

சரியான விடைகள் இதோ: (பெருசாப் பாக்கணும்னா, கிளிக்குக)
மக்களே
நண்பர்கள் ஜிடாக்கில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நியூயார்க் நேரப்படி, நாளை மாலை (Dec 19) வரை வாய்தா போட்டாச்சே!


அலோ மக்களே, ஏதோ மார்கழி மாசம் பொறந்துடுச்சாமே! குளிருல நடுங்கிக்கிட்டே என்ன பண்றீங்க? - தெருவுல கலர் கலரா, கலர்கள் போடும் கலர் கோலங்களைப் பார்க்க கலரலையா நீங்க?...ச்சே கிளம்பலையா நீங்க? :-)

என்னாது, ஓவராக் குளிருதா?
அதுக்காக அப்படியே போத்திக்கிட்டு தூங்கிட முடியுமா என்ன? குளிர் பாத்தா கலர் பாக்க முடியுங்களா? கெளம்புங்க மக்கா!
முட்டைய ஒடைச்சாத் தான் ஆம்லெட்டு! ஆட்டையைப் போட்டாத் தான் ஆள் செட்டு! :-)

சரி...மேட்டர் இன்னான்னா, மார்கழி மாசம் பெண்கள் எல்லாம் பாவை நோன்பு நோற்பாங்களாம்! விளையாட்டு போல விளையாடிக்கிட்டே செய்வாங்களாம், பாட்டுக்குப் பாட்டு ஸ்டைல்-ல!

அப்ப, ஆண்கள் மட்டும் சும்மாவா? - நாங்க சிங்கம்-ல!
அவங்க பாட்டுக்குப் பாட்டுன்னா,
நாங்க வார்த்தைக்கு வார்த்தை! - தெரியும்-ல!
அதான் நாமளும் மார்கழி வார்த்தை விளையாட்டைத் தொடங்கிடலாம்-னு...

இதோ அடுத்த புதிரா? புனிதமா??
இந்த முறை ஆட்டம் கொஞ்சம் வித்தியாசம்.....குறுக்கெழுத்துப் புதிர்!
மார்கழி மாசம் கோலம் போடுறா மாதிரி, கட்டம் கட்டமா போட்டு ஒரு மார்கழி ஸ்பெசல்!!

டாபிக் - எல்லாருக்கும் புடிச்ச எவர் க்ரீன்...பொன்னியின் செல்வன்!
மார்கழி ஆட்டம் ஆடுங்க மக்கா...விடைகள் நாளை மாலை நியூயார்க் நேரப்படி!
என்னாது....பேப்பர், பென்சில் எல்லாம் வேணுமா?...
அந்தா...அந்தப் பொட்டிக் கடையில வாங்கிக்குங்க, பழுவேட்டரையர் அக்கவுண்ட்-ல! :-)


விடைகளைப் பொட்டிக்குள்ளாரயே போட்டுப் பாக்கலாம்!
பின்னூட்டம் இடும் போது மட்டும், கீழே உள்ள காப்பி பேஸ்ட்-ஐ யூஸ் பண்ணிக்கங்க மக்கா!இடமிருந்து வலம்:

1. அப்பர் சுவாமிகள் கண்ட காட்சி, திருவிழாவாக நடக்கும் ஊர். இங்கு தான் ரெண்டு சீனத்து வர்த்தகர்கள் வாராங்க! (5)
2. புயல் அடித்த பின் இங்கு பழுவேட்டரையர் வருகிறார், இளவரசரைப் பிடித்துக் கொண்டு போக!
ஊரின் முதல் பாகம் பத்து மில்லியன். இரண்டாம் பாகம் தான் புதிரின் விடை (2)
3. தேவாரம் மீட்ட திருநாரையூர் இளைஞரின் கடைசிப் பெயர் - last name (3)

4. //இவன் என்னைச் சிநேகத்துரோகி என்று சொன்னான். ஆனால் இவன் சிநேகத்துரோகி மட்டுமல்ல; எஜமானத் துரோகி// -
இவ்வாறு கந்தமாறனைக் கரிகாலனிடம் போட்டுக் கொடுப்பது யார்? (8)
5. பூங்குழலியின் அண்ணி. முதல் நான்கு எழுத்து மட்டும் (4)
6. கல்கியில் நாவல் வந்த போது, பத்திரிகையில் முதலில் படம் வரைந்தவர் (4)

7. (வலமிருந்து இடம்) ஒற்றனுக்கே ஒற்றன் வைக்கும் இவரின் பெயர், பட்டப் பெயர் நீங்கியுள்ளது (5)
8. இளவரசர் அருண்மொழியைப் படகோட்டி, நாகை சூடாமணி விகாரத்தில் இருந்து காத்தவன் (6)
9. இலங்கையில் இருந்து இளவரசர், நேரே இந்தச் சோழ நாட்டு ஊருக்குத் தான் வரவேண்டும் என்று வந்தி அடம் பிடிக்கிறான் (4)
10. மழபாடித் தென்னவன். மாதேவியின் அப்பா (6)

கீழிருந்து மேல்:

1. ஜோதிடர் வீட்டுக் கூரையைப் பிடித்துக் கொண்டு தப்பிய வானதி, வெள்ளத்தில் இந்த ஊருக்கு வந்து கரை சேர்ந்தாள் (6)
2. சிறையிருந்த பைத்தியக்காரனின் உண்மைப் பெயர் (7)
4. (கீழிருந்து மேல்) இந்த ஆற்றில் தான் வேல் எறிந்து வந்தியத்தேவனை மூழ்கடித்ததாக கந்த மாறன் நினைத்துக் கொண்டான் (4)

11. பிரம்மராயர், ஊமை ராணி்யைத் தஞ்சைக்குப் பிடித்துக் கொண்டு வர அனுப்பும் ஆள் யார்? (5)
12. இடும்பன்காரியைச் சந்திக்கும் இன்னொரு சதிகாரன், மீன் முத்திரையைச் செய்து காட்டுவான். இவன் பெயர் என்ன? (8)
13. சுரங்கப்பாதைகளும், பொக்கிஷமும், புலிகளும் இருக்கும்....பழுவேட்டரையரின் இதற்குள் தள்ளப்பட்டால், அதோ கதி தான்! (4)

14. (கீழிருந்து மேல்) செம்பியன் மாதேவியின் கணவர் (8)
15. சோழனுடன் வணிகம் செய்த கிரேக்க நாட்டவர் (4)
16. இந்தப் புதர்களின் பின்னால் இருந்து தான் பூங்குழலி, பழுவூர் இளையராணியும் மந்திரவாதியும் பேசுவதை ஒட்டுக் கேட்டாள் (2)


விடைகளைக் காப்பி பேஸ்ட் செய்யும் கண்மணிகளுக்கு ஈசியா....
Across
1
2
3
4
5
6
7
8
9
10

Down
1
2
4
11
12
13
14
15
16


Results of the Poll:

Read more »

Tuesday, December 11, 2007

கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி!

Dec 11, பாரதி பிறந்த நாள்;
முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.


எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!
என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.
மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.


சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள்.
ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.
அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை.
என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.
அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது.
மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களி்லிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.


கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.
"கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்.
மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக,
ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.
அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது!
நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.
அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!

------------------------------------------------

நன்றி: பாரதியார் சரித்திரம் - அமுதசுரபி, தமிழ் Sify
பட உதவி: சென்னை அருங்காட்சியகப் படங்க
ள்


ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!


மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!


‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணார்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,

பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!


இது சென்ற ஆண்டு பாரதியார் பிறந்த நாளின் போது இட்ட பதிவின், மீள்பதிவு
முந்தைய பதிவும், பின்னூட்டங்களும் இங்கே!
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP