Sunday, December 10, 2006

கணவன் பாரதியைப் பற்றி மனைவி பாரதி

Dec 11, பாரதி பிறந்த நாள்;
முன்னொரு முறை, திருமதி செல்லம்மாள் பாரதி, தில்லி வானொலியில் ஆற்றிய உரையின் பகுதிகள் கீழே.எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே!
என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றக் கூறும்படி கேட்கிறீர்கள்.
மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன்.


சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள்.
ஆம், தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. புதுவையில் பத்து வருஷம் வசித்தோம்.
அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும். பொழுதைச் செலவிடுவார்.

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை.
என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை.
அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. அர அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம்; என்னால் மறக்க முடியாது.
மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களி்லிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன்.


கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.
"கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்.
மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக,
ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார்.
அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது!
நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும்.
அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை, நாராயண நாமத்தை ஜபித்தார்.

வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு!

------------------------------------------------

நன்றி: பாரதியார் சரித்திரம் - அமுதசுரபி, தமிழ் Sify
பட உதவி: சென்னை அருங்காட்சியகப் படங்க
ள்ஆதியி லாதியப்பா, -- கண்ணா!
அறிவினைக் கடந்தவிண் ணகப்பொருளே,
சோதிக்குச் சோதியப்பா, -- என்றன்
சொல்லினைக் கேட்டருள் செய்திடுவாய்!


மாதிக்கு வெளியினிலே -- நடு
வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!‘வையகம் காத்திடுவாய்! -- கண்ணா!
மணிவண்ணா, என்றன் மனச்சுடரே!
ஐய, நின் பதமலரே -- சரண்.
ஹரி, ஹரி, ஹரி, ஹரி, ஹரி!’ என்றாள்.

பொய்யர்தந் துயரினைப்போல், -- நல்ல
புண்ணிய வாணார்தம் புகழினைப்போல்,
தையலர் கருணையைப்போல், -- கடல்
சலசலத் தெறிந்திடும் அலைகளைப்போல்,


பெண்ணொளி வாழ்த்திடுவார் -- அந்த
பெருமக்கள் செல்வத்திற் பெருகுதல்போல்,
கண்ணபிரா னருளால், -- தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணிபுதிதாய்
வண்ணப்பொற் சேலைகளாம் -- அவை
வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

37 comments:

 1. இதெல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்களோ?
  நிஜமாகவே புல்லரிக்குது.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  ReplyDelete
 2. நல்ல பதிவு, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  எத்தனை எத்தனை முறை, பேசிப் பேசி முடித்த பின்னாலும் இன்னும் பேச ஆயிரம் கோடி வார்த்தைகள்,
  பாரதி ஒரு யுக புருஷன் என்று பெரியவர்கள் சொன்னதன் அர்த்தம் நாளுக்கு நாள் எனக்கு இன்னும் பெரிதாய் தெரிந்துகொண்டிருக்கின்றது.

  பாரதியின் தீர்க்கத்திற்கும் தெளிவிற்கும் ஈடு கொடுத்திருந்த "செல்லம்மாள்" அவர்களையும் என்றும் மறக்க முடியாது.

  அன்புடன்,
  நம்பி.பா.

  ReplyDelete
 3. அருமையான பதிவு.. பாரதியின் பிறந்த நாளில். நன்றிகள்.

  உன்கவியால் உரம்பெற்றோம்..
  உள்ளத்திறம் பெற்றோம்..
  வாழிய உன்புகழ்..
  வையகம் உள்ளளவும்.

  ReplyDelete
 4. //வடுவூர் குமார் said...
  இதெல்லாம் எங்கிருந்து பிடிக்கிறீர்களோ?
  நிஜமாகவே புல்லரிக்குது.
  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி//

  குமார் சார், வாங்க!
  அமுதசுரபி இதழில், இருக்கு சார்! பாரதியின் குடும்பத்தார் அவர் குறித்து எழுதியவற்றைக் கூட வெளியிட உதவி செய்துள்ளார்கள்!

  கணவனைப் பற்றி மனைவி என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிக்கறதும் ஒரு சுவை தானே:-)
  அதனால் தான் இட்டேன்!

  ReplyDelete
 5. //நம்பி.பா. said...
  இன்னும் பேச ஆயிரம் கோடி வார்த்தைகள்,
  பாரதி ஒரு யுக புருஷன் என்று பெரியவர்கள் சொன்னதன் அர்த்தம் நாளுக்கு நாள் எனக்கு இன்னும் பெரிதாய் தெரிந்துகொண்டிருக்கின்றது//

  வாங்க நம்பி! முதல் வருகைன்னு நினைக்கிறேன்! நல்வரவு!

  உண்மை; பாரதி செய்ததை அதுவும் அவனுக்கு முன்னோடிகள் அவ்வளவாக இல்லாத காலத்தில் செய்ததை, சொல்லித் தான் மாளுமோ?

  //பாரதியின் தீர்க்கத்திற்கும் தெளிவிற்கும் ஈடு கொடுத்திருந்த "செல்லம்மாள்" அவர்களையும் என்றும் மறக்க முடியாது//

  பதிவின் நோக்கமே அது தாங்க! பாரதிக்குக் கடமைப்பட்ட நாம். அவரின் செல்லம்மாவுக்கும் கடமைப்பட்டுள்ளோம்!

  ReplyDelete
 6. பாரதி பாடி அழுத அந்த முழுப்பாடலையும் இங்கிடுகிறேன்.
  ஈழத்தில் தாங்க முடியாத கொடுமைகளை அனுபவித்து வாடும் இந்துத்தமிழர்க்கும், மலேசியாவில் ரப்பர் தோட்டத்தில் கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு கட்டிய கோயில்கள் தற்போது ஒவ்வொன்றாக இடிக்கப்படுவதைப் பார்த்து ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கும் இந்துத்தமிழ் மக்களுக்கும் இன்றும் இது பொருந்தும்.


  பல்லவி

  கரும்புத் தோட்டத்திலே - ஆ!
  கரும்புத் தோட்டத்திலே

  சரணங்கள்

  கரும்புத் தோட்டத்திலே - அவர்
  கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
  வருந்து கின்றனரே! ஹிந்து
  மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
  சுருங்குகின்றனரே - அவர்
  துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
  மருந்திதற் கிலையோ? - செக்கு
  மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

  பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
  பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
  எண்ணம் இரங்காதோ? - அந்த
  ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
  மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
  மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
  கண்ணற்ற தீவினிலே - தனிக்
  காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

  நாட்டை நினைப்பாரோ? - எந்த
  நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
  வீட்டை நினைப்பாரோ? - அவர்
  விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
  கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
  கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
  மீட்டும் உரையாயோ? - அவர்
  விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)

  நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
  நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
  பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
  பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
  தஞ்சமு மில்லாதே - அவர்
  சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
  மிஞ்ச விடலாமோ? - ஹே
  வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி!

  ReplyDelete
 7. பாரதியின் பிறந்தநாள்.
  அன்று உங்களின் அற்புதன பதிவு.
  "சொல்லிலும் செயலிலும் வல்லவரே!" என அன்னை உரைக்கையிலே ஆனந்தம் பொங்குதடா!

  ReplyDelete
 8. //சாத்வீகன் said:
  உரம்பெற்றோம்..உள்ளத்
  திறம் பெற்றோம்..
  //

  அருமையாச் சொன்னீங்க சாத்வீகன்.
  நன்றி!

  ReplyDelete
 9. //Anonymous said...
  பாரதி பாடி அழுத அந்த முழுப்பாடலையும் இங்கிடுகிறேன்.//

  மிக்க நன்றி அனானிமஸ் அவர்களே!
  அறியத் தந்தமைக்கு நன்றி!

  //நாட்டை நினைப்பாரோ? - எந்த
  நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
  வீட்டை நினைப்பாரோ?//

  உருக்கமான வரிகள்!

  ReplyDelete
 10. //ஞானவெட்டியான் said...
  பாரதியின் பிறந்தநாள்.
  அன்று உங்களின் அற்புதன பதிவு.
  "சொல்லிலும் செயலிலும் வல்லவரே!" என அன்னை உரைக்கையிலே ஆனந்தம் பொங்குதடா!//

  உண்மை தான் ஐயா! செல்லம்மாள் பாரதி அன்னை தானே!அவர், தம் கணவரைப் பற்றிச் சொல்லும் போது இன்னும் ஆனந்தம் தான்!

  ReplyDelete
 11. தமிழ் பிழைக்க உழைத்தவன் பாரதி. அவன் பிறந்த நாளில் அவனை நினைவு கூறும் வகையில் ஒரு அருமையான பதிவிட்டமை நன்று.

  வாழியென்றே துதிப்போம் பராசக்தி வாழியென்றே துதிப்போம்.

  கண்ணனைச் சொல்கையில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு இது.

  காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே
  கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே
  நோயிலே துடிப்பதென்ன கண்ணபெருமானே
  நோன்பிலே உயிர்ப்பதென்ன கண்ணபெருமானே

  ReplyDelete
 12. பாரதியார் திரைப்படத்தில் இந்த நிகழ்ச்சியை விவரித்திருப்பார்கள். சரியாகச் சொல்லாததால் அந்தக் காட்சி என்னவோ பாரதியாரைக் கிண்டல் செய்வது போல் அமைந்திருக்கும். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் எல்லாரும் பாரதியையும் அவர் குடும்பத்தையும் தவறாக நினைப்பதற்கு வாய்ப்புண்டு. செல்லம்மாள் பாரதி அவர்களின் இந்தப் பேச்சே அந்த நேரத்தில் என்ன நடந்தது என்று தெளிவாகச் சொல்கிறது.

  எட்டெழுத்து மந்திரத்தை இறுதி வரையில் பாரதியார் சொல்லிக் கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.

  பாஞ்சாலி சபதத்திலிருந்து ஒரு நல்ல பகுதியை எடுத்து இட்டிருக்கிறீர்கள். ஒரு காலத்தில் (கல்லூரியில் படிக்கும் போது) பாரதியார் கவிதைகள் புத்தகம் இல்லாமல் எங்குமே சென்றதில்லை. பல முறை பாஞ்சாலி சபதத்தைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு வரியும் உணர்ச்சிகரமான வரிகள்.

  ReplyDelete
 13. கே ஆர் எஸ்,

  நல்ல பதிவு. மகாகவியின் இந்த நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கைச் சம்பவத்தை எல்லாரும் படிக்குமாறு இட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மிக்க நன்றி ஐயா.

  // பாரதியார் திரைப்படத்தில் இந்த நிகழ்ச்சியை விவரித்திருப்பார்கள். சரியாகச் சொல்லாததால் அந்தக் காட்சி என்னவோ பாரதியாரைக் கிண்டல் செய்வது போல் அமைந்திருக்கும். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் எல்லாரும் பாரதியையும் அவர் குடும்பத்தையும் தவறாக நினைப்பதற்கு வாய்ப்புண்டு. //

  குமரன் ஐயா, அந்தக் காட்சி படத்தில் வந்து கொண்டிருக்கும்போது என் நெஞ்சில் கண்ணீர் வந்தது. இது இயக்குனர் செய்த பெரிய தவறுகளீல் ஒன்று.. இது பற்றி இந்த திண்ணை கட்டுரையில் விவரமாக நான் எழுதியிருந்தது இது -

  இன்னொரு காட்சியில், "·பிஜித் தீவில் ஹிந்து ஸ்திரிகளின் நிலை" என்னும் "கரும்புத் தோட்டத்திலே" பாடலை பாரதி சொல்லும்போது, அவர் மனைவி செல்லம்மா "எங்கேயோ பிஜித் தீவில இருக்கற பெண்கள் கஷ்டத்தைப் பற்றியெல்லாம் பாட்டு எழுதத் தெரியறது.. நான் ஒருத்தி இங்கேயே கஷ்டப்படறது தெரியலையா.?" என்று அலுத்துக் கொள்வதாக வருகிறது.. இந்தக் காட்சியின் போதும் சிரிப்பலைகள், எள்ளல்கள். இப்படி ஒரு அப்பட்டமான பொய்யைப் படத்தில் காட்டியது ஏன்? இந்தப் பாடல் மற்றும் அதன் பின்னணி பற்றி ஸ்ரீமதி செல்லம்மாவே ஆற்றிய உரையில் குறிப்பு உள்ளது, அது 'பாரதியார் சரித்திரம்' நூலிலும் உள்ளது. "...என் கணவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது... செல்லம்மா இங்கே வா என்றார், சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். கரும்புத் தோட்டத்திலே என்ற பாட்டை அவர் பாடியதைக்கேட்ட நாங்களும் விம்மிவிம்மி அழுதோம்". (இந்தக் கட்டுரை இணையத்திலேயே உள்ளது, பார்க்க http://tamil.sify.com/general/mahakavi/fullstory.php?id=13331651). பாரதி பற்றி இவ்வளவு ஆராய்ந்த பட இயக்குனருக்கு இந்தக் கட்டுரை கிட்டவில்லையா? இல்லை வேண்டுமென்றே காட்சியை மாற்றியமைத்தாரா? எங்கோ கடல் கடந்து வாழும் நம் நாட்டு மக்களின் துயரத்தைக் கேள்விப்பட்டு அதைத் தன் குடும்பத்துயரம் போன்று பாவித்து மனம் வருந்திய அந்த உணர்ச்சிகரமான தருணம் திரையில் கேலிக் கூத்தாகிவிட்டது"

  ReplyDelete
 14. அருமையான பதிவு, பாரதியின் பிறந்த நாளில் !

  நான் ஒரு பதிவு போட எண்ணினேன், தாங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள் :)

  //மாதிக்கு வெளியினிலே -- நடு
  வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
  சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
  சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!
  //
  exhilarating stuff, really !

  ReplyDelete
 15. Good Post :).Here is a another piece of info about the great man from his wife Chellamaal.

  பாரதிபற்றி செல்லம்மாள்

  உலகத்தோடொட்டி வாழ வகையறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேனென்றால் உங்ளுக்கு சிரிப்பாகத்தான் இருக்கும்.யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்,ஆனால் கவிஞனின் மனைவியாயிருப்பது கஷ்டம். அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிலிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரெமாதிரியாகத்தான் இருந்திருக்கிறது.ஏகாந்த்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவருங்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்,ஆனால் மனைத்தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலுறுக்கமுடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.கடவுளை பக்தி செய்யும் கவிஞன்,காவியம் எழுதும் கவிஞன்,இவர்களை புற உலக தொல்லைகள் சூழ இடமில்லை.எனது கணவரோ கற்பனைக்கவியாக மட்டுமில்லாமல் தேசியக்கவியாகவும் விளங்கியவர்.அதனால் நான் மிகவும் கஷ்ட்டப்பட்டேன்.கவிதை வெள்ளத்தை அணை போட்டு தடுத்தது அடக்குமுறை.குடும்பமே தொல்லைக்குள்ளாகியது.

  காலையில் எழுந்ததும் கண்விழித்து,மேநிலைமேல் மேலைசுடர் வானை நோக்கி வீற்றிருப்பார்.ஸ்நானம் ஒவ்வொருநாள் ஒவ்வொரு விதத்தில் அமையும்.சூரியஸ்நானம்தான் அவருக்குப்பிடித்தமானது.வெளியிலே நின்று சூரியனை நிமிர்ந்து பார்ப்பது தான் வெய்யற்க்குளியல்.சூரியகிரகணம் கண்களில் உள்ள மாசுகளை நீக்கும் என்பது அவரது அபிப்பிராயம்.காலை காப்பி தோசை பிரதானமயிருக்கவேண்டும் அவருக்கு.தயிர்,நெய்,புது ஊறுகாய் இவைகளை தோசயின் மேல் பெய்து தின்பார்.அவருக்குப் பிரியமான பொருளை சேகரித்துக்கொடுத்தால்,அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தை புசித்து விடுவார்கள்.எதை வேண்டுமானால் பொருக்கமுடிய்ம் ஆனல் கொடுத்த உணவை தாம் உண்ணாமல் பறவைகளுக்கு பொட்டுவிட்டு நிற்கும் அவரது தார்மீக உணர்ச்சியை மட்டும் என்னால் பொறுக்கவே முடிந்ததில்லை.

  புதுவயில் தான் புதுமைகள் அதிகம் தோன்றின.புது முயற்சிகள் புது நாகரீகம்,புதுமை பெண் எழுச்சி,புதுக்கவிதை-இவைதோன்றின.இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நாந்தான் ஆராய்ச்சி பொருளாக அமைந்தேன்.பெண்களுக்கு சம அந்தஸ்த்து வழங்க வேண்டுமா? வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே,பெண்விடுதலை அவசியம் என்று முடிவு கண்டு,நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர்.இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.

  (1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் 'என் கணவர்' என்ற தலைப்பில் செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை)

  ReplyDelete
 16. // G.Ragavan said...
  தமிழ் பிழைக்க உழைத்தவன் பாரதி//

  ஆமாம் ஜிரா
  தமிழால் வாழவில்லை!
  தமிழுக்காக வாழ்ந்தவன் அவன்!

  //
  காயிலே புளிப்பதென்ன கண்ணபெருமானே
  கனியிலே இனிப்பதென்ன கண்ணபெருமானே
  //
  கண்ணன் பாட்டு உங்களுக்குத் தான் மிகவும் பிடிக்குமே! உங்களுக்காகவே தான் தனி வலைப்பூ "கண்ணன் பாட்டு"! :-)

  ReplyDelete
 17. //enRenRum-anbudan.BALA said...
  நான் ஒரு பதிவு போட எண்ணினேன், தாங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள் :)//

  அடடா! பந்திக்கு முந்து போல் ஆகி விட்டதா? அதனால் என்ன பாலா! தமிழ் பந்திக்குத் தானே!!:-))

  //மாதிக்கு வெளியினிலே -- நடு
  வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
  சோதிக்குள் ஊர்ந்திடுவாய், -- கண்ணா!
  சுடர்ப்பொருளே பேரடற்பொருளே!
  //
  exhilarating stuff, really !

  exhilarating = துடிப்பான??

  ReplyDelete
 18. //Gopalan Ramasubbu said...
  Good Post :).Here is a another piece of info about the great man from his wife Chellamaal.//

  நன்றி திரு கோபாலன் ராமசுப்பு!
  பயனுள்ள பின்னூட்டம்.

  அட பாரதிக்கும் தோசையுடன் தயிரும் நெய் தான் பிடிக்குமா? அடியேனுக்கும் அஃதே!! என்னவொரு காம்பினேஷன்!:-))


  //ஏகாந்த்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவருங்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும்// :-))

  //ஆனல் கொடுத்த உணவை தாம் உண்ணாமல் பறவைகளுக்கு பொட்டுவிட்டு நிற்கும் அவரது தார்மீக உணர்ச்சியை மட்டும்// :-((

  இல்லத் தலைவியின் ஏக்கங்கள் இது தானோ!

  ReplyDelete
 19. மாதவிப் பந்தலே நீ
  மாரி பெய்யும் பந்தலோ
  தமிழ் மாரி பொழிந்திடவே நீ
  பாரதி கண்டாயோ.
  நன்றி ரவிசங்கர்.

  ReplyDelete
 20. //குமரன் (Kumaran) said:
  சரியாகச் சொல்லாததால் அந்தக் காட்சி என்னவோ பாரதியாரைக் கிண்டல் செய்வது போல் அமைந்திருக்கும்//

  ஜடாயுவும் இது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார் பாத்தீங்களா, குமரன்! நம் ஆட்கள் இனியாவது கவனமாகச் செய்ய வேண்டும்; பெரியார் படத்தில் இது போல குளறுபடி எல்லாம் இல்லாது, நன்கு செக் செய்து, நல்ல முறையில் வெளியிட இயக்குநர் முனைய வேண்டும்!

  //ஒரு காலத்தில் (கல்லூரியில் படிக்கும் போது) பாரதியார் கவிதைகள் புத்தகம் இல்லாமல் எங்குமே சென்றதில்லை//

  அடியேனும் அப்படியே குமரன்!
  பாக்கெட் சைஸ் புத்தகம் ஒன்று! மூன்று பதிப்புகளாக; கூடவே பாக்கெட்டிலேயே இருக்கும்! அப்பப்ப எடுத்து சில வரிகள் படித்தால் போதும்; சார்ஜ் ஏறிடும் :-)
  இது தான் பாரதி போதையோ? :-)

  //பல முறை பாஞ்சாலி சபதத்தைப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு வரியும் உணர்ச்சிகரமான வரிகள்//

  பல இடங்களில் ஆழ்வார் பாசுர வரிகள், வர்ணனைகள் அப்படியே வரும்! தனிப் பதிவு இட வேண்டும் இது பற்றி!

  ReplyDelete
 21. //ஜடாயு said...
  கே ஆர் எஸ்,
  நல்ல பதிவு. மகாகவியின் இந்த நெகிழ்ச்சியூட்டும் வாழ்க்கைச் சம்பவத்தை எல்லாரும் படிக்குமாறு இட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

  தாமதமாய் தங்களிடம் வந்ததுக்கு முதலில் மன்னிக்கவும் ஜடாயு சார்! உங்கள் திண்ணைக் கட்டுரை இப்போது தான் படித்தேன்! உங்கள் ஆதங்கமும் கோபமும் மிகவும் நியாயமானதே!

  வரலாற்றுப் படங்களை இனி பற்றாளர்கள், எதிர்ப்பாளர்கள் இருவருக்கும் காட்டுமாறு preview வைப்பது நல்லது; இனி வரும் இயக்குநர்கள் இதைச் செய்ய வேண்டும்!

  ReplyDelete
 22. //வல்லிசிம்ஹன் said...
  மாதவிப் பந்தலே நீ
  மாரி பெய்யும் பந்தலோ//

  கவிதையாகப் பேரன் வந்ததில் இருந்து, பின்னூட்டமெல்லாம் கவிதையாகவே வருது வல்லியம்மாவிடம் இருந்து! :-)

  ஆழி மழைக் கண்ணனின் பந்தல் தானே மாதவிப் பந்தல்; ஒரு வேளை அதனால் இருக்கலாம் வல்லியம்மா! :-))

  ReplyDelete
 23. என்ன சொல்லி பாராட்டுவதென்று தெரியவில்லை உங்களை,

  வார இதழ்கள் படிப்பதை நிறுத்திவிட்டேன்,
  அந்த குறையை நீங்களும், தமிழ்மனமும் போக்குகிறீர்கள்.

  நல்ல பதிவு, பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 24. //வெங்கட்ராமன் said...
  என்ன சொல்லி பாராட்டுவதென்று தெரியவில்லை உங்களை//

  நன்றி திரு.வெங்கட்ராமன்.
  அடிக்கடி வந்து, இன்னும் சிறப்பா எப்படிச் செய்யலாம் என்று உங்கள் கருத்துகளைச் சொல்லுங்க!

  //வார இதழ்கள் படிப்பதை நிறுத்திவிட்டேன்,
  அந்த குறையை நீங்களும், தமிழ்மனமும் போக்குகிறீர்கள்//

  தமிழ்மணத்தின் சிறந்த பணி இது! ஒரு நல்ல தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது!
  டிவி மற்றும் இதழ்கள் தவிர இன்னொரு ஆக்கமும் உண்டு என்று காட்டியுள்ளது!

  வலைப் பதிவுகள் மட்டும் இல்லாது, பூங்கா என்ற இதழும் வருகிறதே! அதையும் படியுங்கள்! நல்ல தொகுப்பு!

  வலையில் இருந்து மக்கள் கைகளுக்கும் சென்றால் இன்னும் நலம்!

  ReplyDelete
 25. ரவிசங்கர்!
  இதை முதற்தரம் படித்துள்ளேன்.சம்பவம் நெகிழ்வைத் தருகிறது. தனக்கென வாழாத கவிஞன்!
  பதிவிட்டத்ற்கு நன்றி
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 26. ரவிசங்கர்!
  இதை முதற்தரம் படித்துள்ளேன்.சம்பவம் நெகிழ்வைத் தருகிறது. தனக்கென வாழாத கவிஞன்!
  பதிவிட்டத்ற்கு நன்றி
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 27. அருமையான பதிவு கேஆர்எஸ்,
  பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 28. very very happy to see this post. he is not an another brick in the wall!

  ReplyDelete
 29. Respected Sri KRS,

  Bharathi's episode brought tears in my eyes.goes to prove that he is very much alive amidst us,all the more thro'kind hearted soul like KRS.

  Thiruppavai Padalgalukku vilakkam Eppozhuthu start seyapogirirgal. mikka avaludan.. adiyen sundaram(pl call me as sundaram,if u like)

  ReplyDelete
 30. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்ந்ததிற்கு நன்றி ரவி.
  பாரதியை எனக்குப்பிடிக்கும். அது போல செல்லம்மாவையும் அவர் பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது அந்த செல்ல அம்மா செல்லமாய் வாழாமல் சொல்லொணா போராட்டத்துடன்தான் வாழ்ந்தார்

  ReplyDelete
 31. //johan-paris said...
  ரவிசங்கர்!
  இதை முதற்தரம் படித்துள்ளேன்.சம்பவம் நெகிழ்வைத் தருகிறது. தனக்கென வாழாத கவிஞன்!
  //

  வருகைக்கு நன்றி யோகன் அண்ணா!
  நெகிழ்வான சம்பவம் தான் அண்ணா, அதுவும் அவன் இல்லத்தரசியின் வாயால் கேட்பது!

  ReplyDelete
 32. //கைப்புள்ள said...
  அருமையான பதிவு கேஆர்எஸ்,
  பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி//

  தல, வாங்க!
  நன்றி

  ReplyDelete
 33. //இணைய நாடோடி said...
  very very happy to see this post. he is not an another brick in the wall!//

  நன்றி்ங்க இணைய நாடோடி!

  ReplyDelete
 34. //Anonymous said...
  Respected Sri KRS,
  Bharathi's episode brought tears in my eyes.goes to prove that he is very much alive amidst us,all the more thro'kind hearted soul like KRS.//
  //(pl call me as sundaram,if u like//

  தங்கள் அன்பான சொற்களுக்கு நன்றிங்க சுந்தரம்.

  //Thiruppavai Padalgalukku vilakkam Eppozhuthu start seyapogirirgal. mikka avaludan.. adiyen sundaram)//

  தேசிகன்=http://www.desikan.com/blogcms
  எ.அ.பாலா=http://balaji_ammu.blogspot.com/

  இந்த நல்லன்பர்கள் தினம் ஒரு திருப்பாவை பதிவு இடுகிறார்கள் சுந்தரம்; அவசியம் காணுங்கள்!

  மேலும் குமரனின் கோதைத்தமிழ் கருத்துக்கள் அடிக்கடி வருகிறது. ஜிரா மற்றும் தேசிகன் 2005/2004 ஆண்டுகளில் பாடல் விளக்கம் எழுதி உள்ளார்கள்! வாசிக்கவும்!

  அடியேன் மாதவிப் பந்தலில் ஓரிரு பதிவுகள் இட எண்ணம்! குறிப்பாக 18 ஆம் பாசுரம் அன்று!

  கண்ணன் பாட்டு வலைப்பூவில் மார்கழி இசை உற்சவம் நடக்கிறதே! அங்கும் வாங்க! :-)

  ReplyDelete
 35. //சுந்தரி said...
  அது போல செல்லம்மாவையும் அவர் பொறுமையையும் பாராட்டாமல் இருக்க முடியாது //

  பொறுமைக்கு அணிகலன் செல்லம்மா அவர்கள்! அந்த அணிகலனால் தான், தமிழ் அன்னைக்குப் பாரதியின் கவிதை அணிகலன் கிட்டியது! இது மிகையே இல்லை!

  ReplyDelete
 36. பாரதி பற்றிய தகவல் கிடைக்கையில் என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

  ReplyDelete
 37. பாரதி பற்றிய தகவல் கிடைக்கையில் என் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP