Sunday, December 24, 2006

கிறிஸ்து ஜெயந்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்!

நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள்; இன்று அதே கொண்டாட்டங்கள் உலகெங்கும்! எத்தனை மகிழ்ச்சி!

சிறு வயதில் இருந்தே கிருஷ்ண ஜெயந்திக்கும், கிறிஸ்து ஜெயந்திக்கும் அப்படி ஒரு கொண்டாட்டம் வீட்டில்;
அன்று சீடை,முறுக்கு என்றால், இன்று ரோஸ்கொத்து மற்றும் ப்ளம் கேக்!

வீட்டில் பல இடங்களில் நட்சத்திரம் தொங்கும்; அதன் ஓட்டைகளில் பல வண்ண ஒளி சுற்றும்!
அட்டைப்பெட்டியால் ஆன அழகிய குடில். அதற்குள் மின் விளக்கு பொருத்தித் தருவார் எங்கள் சித்தப்பா. ஒன்று மின்னி இன்னொன்று மறையும்!முனுசாமி அண்ணா கடையில் இருந்து வைக்கோல் கட்டு கொண்டு வருவோம்;
யோசோப்பு, மரியாள், ஆயர் எல்லாரும் இருப்பர்;
பின்னாளில் பக்கத்து வீட்டு மோகன் அண்ணா-ஷீலா ஆண்ட்டி, தேவதூதர், மூன்று ஞானிகள் போன்ற பொம்மைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.
குழந்தை இயேசு பொம்மை, தன் இரு கைகளை மேலுக்கு விரித்தபடி சிரித்துக் கொண்டு இருக்கும்.

வைக்கோல் குழந்தைக்குக் குத்துமே!
ஆண்ட்டி வெல்வெட் துணியில் குட்டி மெத்தை தைத்துக் கொடுத்தார்கள், குட்டிப் பாப்பாவிற்கு!

செந்தில் என்ற சிறுவன், பொம்மை இடத்தை விட்டு அந்தாண்ட இந்தாண்ட வரமாட்டான்! கேட்டால் கெட்டவர்கள் குழந்தையைக் கொல்ல வந்து விடுவார்கள் என்று சொல்லுவான்! எப்போதோ கேட்ட கண்ணன் கதையை இதோடு கலந்து விடுவான்! அப்படியே கெட்டவர்கள் வந்தாலும் குழந்தை அவர்களை எல்லாம் உதைத்து விடும்; வண்டிச் சக்கரத்தை நொறுக்கி விடும்! பேயிடம் பால் குடிப்பது போல் அவளை அழித்து விடும் என்றெல்லாம் சொல்லுவான்!
நாங்களும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொள்வோம்; ஏன் என்றால் அவன் தான் எங்களை விடப் பெரியவன்.

ஆடு, பசு மாடு பொம்மைகள் நிறைய! மயில் பொம்மைகளும் உண்டு!
இந்தப் பொம்மைகள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கண்ணனுக்கு அருகில் சிரித்துக் கொண்டு இருக்கும்.
கிறிஸ்துமஸ் அன்றோ, குழ்ந்தை இயேசுவின் பக்கத்தில் சிரித்துக் கொண்டு இருக்கும்.

இப்படி பொம்மைகளாகவோ, ஆடு மாடுகளாகவோ இருந்து விட்டால், உலகில் பிரச்சனை என்பதே இருக்காதோ! :-)
அவற்றுக்கு ஆயர்ப்பாடியும் ஒன்றே! நல்ல மேய்ப்பனும் ஒன்றே!
மேய்ப்பனாகிய சிறுவன் கண்ணன்!
அன்பு ஒன்று தான் இந்தப் பசுக்களுக்கு எல்லாம் வேதம்.
அவன் வேணு கானமே கீதம்!

இரவில் தூங்கும் போதும், குடிலில் விளக்கு எரிந்து கொண்டே இருக்கும்!
அப்பப்ப எழுந்து அந்தக் குழந்தை பத்திரமாக உள்ளதா என்று ஒரு எட்டு எட்டிப் பார்த்துக் கொள்வோம்!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!கவிஞர் கண்ணதாசனின் இயேசு காவியத்தில், குழந்தை இயேசுவின் பிறப்பு:

துல்லிய பட்டுப் போன்ற தூயவள் மரியாள் கையில்
மெல்லிய பாலன் இயேசு விளக்கெனப் புன்ன கைத்தான்!
நல்லவர் உள்ளம் போல நலம்பெறப் பிறந்த செல்வன்
இல்லை என்னாத வாறு இருகரம் விரித்து நின்றான்!

மாளிகைச் செல்வம் தோற்கும் மாணிக்கத் தொட்டில் தோற்கும்
தூளி இல்லாத போதும் தூங்கினான் பாலன் இயேசு!
வாழிய என்றார் தூதர்! வணங்கியே நின்றார் ஆயர்!
நாழிகை செல்லச் செல்ல, நல்லொளி மேலும் பல்கும்!

மத்தேயு 1:23

அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

34 comments:

 1. தேவகுமாரனுக்கு எனது வந்தனங்கள்.

  இந்த வருடம் எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளுடன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகைக்காக என் மகள் ஆவலுடன் காத்திருக்கிறாள். பிஸ்கட்டும் ஒரு டம்ளர் பாலும் மரத்திற்கு அருகில் இருக்கிறது. போன வருடம் மரம் இல்லாததால் தாத்தா சினந்து கொண்டு ஃபயர் ப்ளேஸ் பக்கத்திலேயே பரிசுப்பொருட்களை வைத்துச் சென்றுவிட்டார். அதனால் இந்த வருடம் மரத்தை வாங்கி வண்ண விளக்குகளால் அலங்கரித்துவிட்டோம். அமெரிக்கர்களுக்கு கிறிஸ்துவின் பிறப்பை விட கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையையே கிறிஸ்துமஸ் அதிகமாக குறிப்பதால் அவளுக்கு இன்னும் யாருமே தேவகுமாரனைப் பற்றிச் சொல்லவில்லை. அடுத்தவருடம் நாங்கள் சொல்லுவோம் என்று எண்ணுகிறேன்.

  ReplyDelete
 2. கண்ணனும் ஆடுமாடுகள் மேய்த்தான்; இயேசுவும் அப்படியே.
  ஆடுமாடுகள் என்னும் சீவாத்துமாக்களாகிய நம்மை வழிப்படுத்தும் பரமாத்துமாக்கள் இருவரும். இருவருமே நல்ல மேய்ப்பர்கள்தாம்.

  ReplyDelete
 3. சுந்த்ரி9:36 PM, December 24, 2006

  முதலில் ரவிக்கு எம் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
  1.இரண்டுமே ஜெயந்தி
  2.இரண்டு பெயர்களிலும் கிறிஸ் +கிருஸ் ஆரம்பம்
  3.கிறிஸ்துவின் வாக்கும் வேதம்
  கிருஸ்ணனின் கீதையும் வேதம்

  ReplyDelete
 4. நல்ல ஒப்பீடு.
  பொம்மைகள் மாதிரி அங்கு இங்கு என்று மாற்றி- -பிரச்சனையில்லாமல் வாழ்ந்தால் நன்றாகத்தான். இருக்கும்.
  நம்புவோம் நடக்கும் என்று.

  ReplyDelete
 5. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. அழைத்தவர் குரலுக்கு அவர் வருவார்
  தட்டியவர் கைகளில் இவர் தருவார்
  வேண்டியது என்ன அறிவாய் மனமே!
  வேண்டுவது அமைதி பெறுவாய் தினமே!

  ReplyDelete
 7. ரவிக்கு எம் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். Nice comparison! :)

  ReplyDelete
 8. வாழ்க கிறிஸ்து.
  வாழ்க பிதாசுதன்.
  வாழ்க நந்தகோபன் குமாரன்.
  வாழிய பெத்லஹேம்
  வாழிய பிருந்தாவனம்.

  எங்க வீட்டு க்றிஸ்துமஸ் மரமும் பரிசுகளுடன் ரெடி.
  பேரன்'' பாட்டி, I cannot believe Santa can make it thru this narrow chimney.so amma and appa buy the
  presents and keep it here. so they are my Santa''என்கிறான்.:-)

  ReplyDelete
 9. இருவர் பிறப்பும் மாட மாளிகையில் அல்ல!
  இவர் மாடுகளை மேய்த்தாலும்,
  அவர் ஆடுகளை மேய்த்தாலும்,
  இருவரும் அழைக்கப்படுவதென்னவோ
  "இடையர்" என்றே!

  ஆம்!
  நாம் நம்மை நன்கே உணர,
  இவரன்றோ "இடையர்!"

  Merry Christmas!
  Christmas if LOVE!

  ReplyDelete
 10. hari om, first you understand what is religion.then you compare religions.are you know true history of abhrahamic religions.are you read bhavat geta or upanisats in your life.first u know these basic things,then you compare.now you dont know difference between sugar and poison.

  ReplyDelete
 11. கிறிஸ்துமஸ் ந்அல் வாழ்த்துக்கள்.
  ரெம்ப நல்லா பதிவு போட்டிருக்கீங்க...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. கண்ணனோ கர்த்தனோ கந்தனோ...அவரவர் வழியை அவரவர் மதித்து நடந்தாலே போதும். உலகம் அமைதியுறும்.

  தேம்பாவணியில் இப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தேவ மைந்தன் பிறந்த பொழுது "குகை செய் இன்பெழக் கோலமிட்டு ஒத்ததே!" இது பள்ளியில் படித்த வரி. இன்னமும் நினைவிருக்கிறது.

  ReplyDelete
 13. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ரவி!!!

  ReplyDelete
 14. //குமரன் (Kumaran) said...
  இந்த வருடம் எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளுடன் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. இன்று இரவு கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகைக்காக என் மகள் ஆவலுடன் காத்திருக்கிறாள்//

  ஆகா, கிறிஸ்துமஸ் தாத்தா வந்து என்ன பரிசு கொடுத்தார், குமரன்? மரத்துக்கு அருகில் உள்ள பிஸ்கட், பால் யாருக்கு? தாத்தாவுக்கா அவருடன் வரும் ரெயின்டீருக்கா? :-)

  ReplyDelete
 15. //ஞானவெட்டியான் said...
  கண்ணனும் ஆடுமாடுகள் மேய்த்தான்; இயேசுவும் அப்படியே.
  ஆடுமாடுகள் என்னும் சீவாத்துமாக்களாகிய நம்மை வழிப்படுத்தும் பரமாத்துமாக்கள் இருவரும். இருவருமே நல்ல மேய்ப்பர்கள்தாம்.//

  உண்மை தான் ஞானம் ஐயா. பசுவுக்கும் பதிக்கும் தான் என்ன ஒரு பந்தம்! மேய்ப்பர் அருளட்டும்!

  ReplyDelete
 16. //சுந்த்ரி said...
  முதலில் ரவிக்கு எம் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்//

  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், சுந்தரி!

  ReplyDelete
 17. //வடுவூர் குமார் said...
  நல்ல ஒப்பீடு.
  பொம்மைகள் மாதிரி அங்கு இங்கு என்று மாற்றி- -பிரச்சனையில்லாமல் வாழ்ந்தால் நன்றாகத்தான். இருக்கும்.
  நம்புவோம் நடக்கும் என்று//

  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், குமார் சார்!

  ReplyDelete
 18. //சாத்வீகன் said...
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்//

  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், சாத்வீகன்!!

  ReplyDelete
 19. //SP.VR.சுப்பையா said...
  அழைத்தவர் குரலுக்கு அவர் வருவார்
  தட்டியவர் கைகளில் இவர் தருவார்
  //

  அழகாச் சொல்லியிருக்கீங்க சுப்பையா சார்!
  கூப்பிட்டால் வருவான்
  தட்டுங்கள் திறக்கப்படும்
  இதை அப்படியே கவிதையாக்கி விட்டீர்களே!

  ReplyDelete
 20. //ambi said...
  ரவிக்கு எம் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். Nice comparison! :)//

  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அம்பி!

  ReplyDelete
 21. //வல்லிசிம்ஹன் said...
  எங்க வீட்டு க்றிஸ்துமஸ் மரமும் பரிசுகளுடன் ரெடி.
  பேரன்'' பாட்டி, I cannot believe Santa can make it thru this narrow chimney.so amma and appa buy the
  presents and keep it here. so they are my Santa''என்கிறான்.:-) //

  ஆகா விவரமான பையன் தான்! இல்லையென்றால் சாண்டாவைக் கொஞ்சம் ஒல்லியாக் காட்டியிருந்தால் நம்பி இருப்பானோ என்னவோ? :-)

  ReplyDelete
 22. //SK said...
  ஆம்!
  நாம் நம்மை நன்கே உணர,
  இவரன்றோ "இடையர்!"//

  நல்ல சிலேடை SK ஐயா.
  இடையறாது இடையரை எண்ணினால் இடர் ஏதும் இல்லை!

  இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. //vakesir said...
  hari om, first you understand what is religion.then you compare religions.are you know true history of abhrahamic religions.are you read bhavat geta or upanisats in your life.first u know these basic things,then you compare.now you dont know difference between sugar and poison.//

  ஹரி ஓம்!
  அடியேன் இங்கு மதங்களையோ போதனைகளையோ ஒப்பிடவே இல்லையே vakesir ஐயா. அதற்குள் உங்களுக்கு என்ன அவ்வளவு சினம்!

  நான் சொல்ல வந்தது எல்லாம் சிறு குழந்தைகளின் பார்வையில் இரு பெரும் பண்டிகைகள் எப்படித் தெரிகின்றது என்பது தான்; அவ்வளவே!

  முதலில் தாங்கள் பகவத் கீதை, உபநிஷதம் என்ற சொற்களைப் பிழையின்றி உச்சரிக்குமாறு அடியேன் வேண்டுகிறேன்; பின்னர் தாங்கள் மனம் உவந்து சொல்லித் தாருங்கள்; அடியேன் எம்பெருமான் மலர்ந்தருளிய கீதா ரகஸ்யத்தைத் தங்களிடம் இருந்தே அறிந்து கொள்கிறேன்!

  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 24. //சிறில் அலெக்ஸ் said...
  கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.
  ரெம்ப நல்லா பதிவு போட்டிருக்கீங்க...
  வாழ்த்துக்கள்.//

  நன்றி நட்சத்திரமே!
  கிறிஸ்துமஸ் அதுவும் நட்சத்திரம்!:-)
  முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்!
  கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்களும் கூட!

  ReplyDelete
 25. // G.Ragavan said...
  கண்ணனோ கர்த்தனோ கந்தனோ...அவரவர் வழியை அவரவர் மதித்து நடந்தாலே போதும். உலகம் அமைதியுறும்//

  உண்மை ஜிரா. சொல்லிலும் செயலிலும் இதை அனைவரும் பின்பற்ற வேண்டும்! அப்புறம் எல்லாம் இன்ப மயம் தானே!

  //"குகை செய் இன்பெழக் கோலமிட்டு ஒத்ததே!"//

  அச்சோ! இந்தப் பதிவு போடும் போது நானும் இதே செய்யுளை நினைத்தேன்; நீங்க வந்து சொல்லியிருக்கீங்க! நன்றி!!
  பள்ளியில் இது மனப்பாடப் பகுதியும் கூட! எப்படி மறக்கும், அதுவும் தமிழ்ச்செய்யுள்!!

  ReplyDelete
 26. //மு.கார்த்திகேயன் said...
  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ரவி!!! //

  நன்றி கார்த்தி! கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும், நண்பர்களுக்கும்!!

  ReplyDelete
 27. //மத்தேயு 1:23

  அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.//

  இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் இம்மானுவலா? அட எனக்கு தெரியாதே!

  கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. அருமையான பதிவு....நன்றி கே ஆர் எஸ்.

  ReplyDelete
 29. ரவிசங்கர்!
  "தென்னாடுடைய சிவனே!! போற்றி!
  என்னாட்டவர்க்கும் இறைவா !! போற்றி!"
  நல்ல பதிவு
  எல்லோருக்குமினிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 30. மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க! வளர்க! 2004 கிறிஸ்துமஸ்ஸிற்கு யு.எஸ்ஸில் இருந்த நாட்களை நினவு படுத்தினீர்கள். இரவெல்லாம் அலங்காரம் செய்து வைத்தாள் என்னுடைய பெண். தேடித் தேடிப் பரிசுப்பொருட்கள் வாங்கினாள். அதெல்லாம் நினவில் வந்தது, இவ்வருடமும் அவ்வாறே கொண்டாடினதாய்ச் செய்தி வந்தது. ரொம்ப நன்றி, இந்தப் பதிவிற்கு.

  ReplyDelete
 31. எழில் said...
  //இயேசு கிறிஸ்துவின் உண்மையான பெயர் இம்மானுவலா? அட எனக்கு தெரியாதே!//

  அப்படித் தான் நானும் அறிந்தேன் எழில்! உங்களுக்கும் கிறிஸ்துமஸ்/புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 32. //Mathuraiampathi said...
  அருமையான பதிவு....நன்றி கே ஆர் எஸ்.//

  நன்றி மெளலி சார்!

  ReplyDelete
 33. //johan -paris said...
  ரவிசங்கர்!
  "தென்னாடுடைய சிவனே!! போற்றி!
  என்னாட்டவர்க்கும் இறைவா !! போற்றி!" நல்ல பதிவு//

  நன்றி யோகன் அண்ணா!
  உங்களுக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 34. //கீதா சாம்பசிவம் said...
  மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க! வளர்க! //

  ஆசிக்கு நன்றி கீதாம்மா!

  //2004 கிறிஸ்துமஸ்ஸிற்கு யு.எஸ்ஸில் இருந்த நாட்களை நினவு படுத்தினீர்கள். இரவெல்லாம் அலங்காரம் செய்து வைத்தாள் என்னுடைய பெண். //

  மலரும் நினைவுகள்? :-)
  அடுத்த விசிட் எப்போது கீதாம்மா?

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP