Saturday, December 02, 2006

ராபின்ஹுட் ஆழ்வார்! Happy Birthday!!

ஆழ்வார்களிலேயே படு வேகமானவர்!
முதலில் நீலன்; பின்னர் திருமங்கையின் மன்னர்; அதற்குப் பின் கள்வர்; பெருமாளிடமே வழிப்பறி செய்த ராபின்ஹூட்! அவரின் Birthday இன்று! ஆமாம், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை தீபம் அன்று தான் திருமங்கை ஆழ்வாரின் பிறந்த நாள்! (Dec 03, 2006)

கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் ஆழ்வார் அவதாரம். (எட்டாம் நூற்றாண்டு); திருக்குறையலூர் என்னும் ஊரில் (சீர்காழிக்கு அருகில்) பிறந்தார்;
உலக வாழ்வில் மிகவும் ஈடுபட்டுப், பின்னர் எல்லாம் அற என்னை இழந்த நலமாய், நாரணன் பணி செய்து கிடந்தார். "வைணவ அருணகிரி" என்றும் நயத்துக்குச் சிலர் சொல்லுவார்கள்!

நிலையில்லாத இந்தப் பூவுலகில், எம்பெருமான் பாதங்களை ஒருவர் நேராகத் தொடத் தான் முடியுமா? காலம் எல்லாம் தவங் கிடக்கிறார்களே, இதற்காக!
வழிப்பறியின் போது, பரமனின் காலில் உள்ள மெட்டியைத் திருடுவதற்காகத் தொட்டார்! தொட்டது தான் தாமதம்!
இனி வேறு என்ன!!! கலியன் (வலிமை மிக்கவன்) என்று எம்பெருமானே இவரை வாய் விட்டு அழைத்தான்! இவர் காதில் "நாராயண" எட்டெழுத்து மந்திரம் உபதேசித்து அருளினான்.

இவர் கால்படாத திருத்தலம் தான் உண்டா? மிக அதிகமான திவ்ய தேசங்களைப் பாடியது இவர் ஒருவர் தான்!
வைணவத்தை ஒரு மக்கள் அமைப்புக்குள் கொண்டு வந்தவர்.
சம்பந்தப் பெருமானின் திருக்கை வேலைப் பரிசாக வாங்கியவர்!
இன்று திருவரங்கம் கோவில் இப்படிப் பரந்து விரிந்து நிற்கிறது என்றால், அதற்கு முழுக்காரணம் இவரே! இவர் துணைவியார் குமுதவல்லி நாச்சியார், இவருக்கு உற்ற துணையாய், இறைப்பணிகள் அனைத்துக்கும் கைகொடுத்தார். ஆழ்வார்களிலேயே, தம்மோடு தம் மனைவிக்கும் சேர்த்தே, சிலையும் வழிபாடும் இருப்பது, இவருக்கு மட்டும் தான்!


அவர் பிறந்த நாளில், இதோ அவரின் நெஞ்சை அள்ளும் ஒரு பாசுரம்!
திருவேங்கடமுடையான் மீது தீராத காதல் கொண்டு, கடைத்தேற வழி தெரியாது, "அப்பா... உன்னை வந்து அடைந்தேன்! காப்பாற்று" என்று பாடுகிறார்!
செப்பார் திண்வரை சூழ் திருவேங்கட மாமலை என்
அப்பா வந்து அடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே!

இவரை ஆட்கொண்டானா? அவரே சொல்கிறார்; கீழே மிக முக்கியமான பாசுரம்; பாக்கலாம் வாங்க!
இந்தப் பாசுரம் வைணவர் உலகம் கொண்டாடும் மிக முக்கியமான பாசுரம்!!
மந்திரப் பூர்வமானது! (திரு மந்திரம்-திரு எட்டு எழுத்து- அஷ்டாக்ஷரம்);
இதை சதா சர்வ காலமும், அதிலும் இறுதிக் காலத்தில் கேட்க எல்லாரும் விரும்புவர்! அவ்வளவு விசேடம்!
பெருமாள் தன் காதில் சொன்னதை, அவர் ஊருக்கெல்லாம் சொல்லும் பாசுரம்!


குலம்தரும் செல்வம் தந்திடும்
--அடியார் படுதுயர் ஆயினஎல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
--அருளோடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
--பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
--நாராயணா என்னும் நாமம்!


நல்ல குலம்/சுற்றத்தைத் தரும் (உத்தமர் தம் உறவு); செல்வம் தரும் (திருமகள் கடாட்சம்).
அடியவர்கள் படும் துன்பங்களை எல்லாம் தரைமட்டமாக்கும்! (நிலந்தரம்)
நீளமான வைகுந்தப் பாதையை (நீள்விசும்பு), நொடியில் அருளும்;
இறைவன் அருளும், கைங்கரியம்/தொண்டு (பெருநிலம்) என்னும் மகா பாக்கியத்தையும் அளிக்கும்!

வலிமை தரும், மற்ற எல்லாம் தரும். (அவனை அடைய என்ன வலிமையும், மற்றவையும் உனக்குத் தேவைப்படுமோ, அவை எல்லாம் தரும்)
பெற்ற தாயை விட அதிகமான பரிவு காட்டும்!
நல்லதே தரும் சொல் ஒன்றே ஒன்று! அது தான் நாராயணா என்னும் நாமம்!
அதை நான் கண்டு கொண்டேன்! நீங்களும் கண்டு கொள்ளுங்கள்!!

42 comments:

 1. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல். இதே போல அபிராமி அந்தாதியிலும் ஒரு செய்யுள் உண்டு. தனம் தரும் என்று தொடங்கும் செய்யுள். படிக்கும் போதே இரு பாடல்களுக்குமான பொருளை எண்ணி வியந்ததுண்டு.சில நேரங்களில் பைபிளில் உள்ள verse களில் ஒன்றான ask and it shall be given unto you கூட இதை சொல்லத்தானோ என்றும் தோன்றியதுண்டு

  ReplyDelete
 2. மிக அருமையான பதிவு. ஆழ்வாரின் பாசுரத்திற்கு மிக அருமையாக விளக்கம் இட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி!!!

  தேசிகன் பக்கத்தில் திருமங்கை ஆழ்வாரைப்பற்றி திரு. சுஜாதா அவர்கள் எழுதியிருந்த கட்டுரையை இங்குப் பார்க்கலாம்.

  ReplyDelete
 3. கார்த்திகையில் கார்த்திகை நாள் செழிக்க வந்தான் வாழியே!

  ReplyDelete
 4. எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
  எனக்கரசு என்னுடை வாழ்நாள்
  அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
  அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
  வம்புலாஞ்சோலை மாமதிள் தஞ்சை
  மாமணிக்கோயிலே வணங்கி
  நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
  நாராயணாவென்னும் நாமம்.

  ReplyDelete
 5. கார்த்திகையில் கார்த்திகை தான் திருமங்கையாழ்வாரின் திருநட்சத்திரம் என்பது தெரிந்திருந்தாலும் திருக்கார்த்திகை தீபமே மனதில் முன்னால் நிற்கிறது. ஆழ்வாரின் திருநட்சத்திரம் என்பது மறந்துவிடுகிறது. அதனை நினைவுறுத்தியதற்கு மிக்க நன்றி இரவிசங்கர்.

  ஆழ்வார்களில் நம்மாழ்வாருக்கு அடுத்து இவருக்குத் தான் அதிக ரசிகர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். திருவாய்மொழி படித்த அளவிற்கு மற்ற பாசுரங்களைப் படித்ததில்லை. படிப்பதற்கு வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் படிக்கத் தான் அவன் திருவுளம் இன்னும் அமையவில்லை.

  ReplyDelete
 6. ரவி சங்கர்!
  தாயினும் நல்ல தலைவனல்லா!!! தகவல்கள்;படங்கள் பாசுரம் விளக்கம் என்றும் போல் அருமை!!
  கார்த்திகைத் திருநாள்;;;வாழ்த்துகள்
  யோகன் பாரிஸ்

  ReplyDelete
 7. கள்ளம் புரிந்து, உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு அடியார் திருமங்கை ஆழ்வார்.

  அவர்தம் பிறந்த நன்நாளில் அவரை பற்றி தகவல்களை தந்தீர்கள்.

  நன்றி.

  ReplyDelete
 8. இறைவனே சிறந்த ராபின் ஹுட் ஆவார்
  கள்வனின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கள்வனல்லவா...

  ReplyDelete
 9. கண்ணபிரான்,
  சிறப்பான பதிவு. நன்றி. குமரன் கொடுத்த பாசுரத்திற்கு என்னால் முடிந்த பொருளுரை !

  எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
  அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
  வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
  நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.

  பொருள்:
  என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன் என்றெல்லாம் சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே ! அழகிய சோலைகளும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அப்பெருமானைத் தொழுது, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !

  ReplyDelete
 10. பத்மா,
  அபிராமி அந்தாதிப் பாடலை என் ஞாபகத்திலிருந்து தருகிறேன். பிழையிருந்தால் பொறுத்தருளவும் :)))

  தனம் தரும் கல்வி தரும்
  ஒரு நாளும் தளர்வறியா மனந்தரும்
  தெய்வ வடிவந்தரும்
  நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும்
  நல்லன எல்லாந்தரும்
  அன்பர் என்பவர்க்கே
  கனந்தரும் பூங்குழலாள்
  அபிராமி கடைக்கண்களே !

  எ.அ.பாலா

  ReplyDelete
 11. //குமரன் கொடுத்த பாசுரத்திற்கு என்னால் முடிந்த பொருளுரை !
  //

  :-))

  நன்றி பாலா.

  ReplyDelete
 12. அருமை அருமை ! வழக்கம்போல் அருமை.

  //வலந்தரும் மற்றும் தந்திடும்//

  எல்லாமும் தந்து இப்ப 'வலை'யும் தந்த கருணையை
  என்ன சொல்வேன்?

  KRS,

  பேசாம உங்க பதிவைப் பாராட்டி' பின்னூட்ட டெம்ப்ளேட்' ஒண்ணு எழுதி
  வச்சுக்கணும்போல இருக்கே.

  வரவர ரொம்ப அழகா எழுதறீங்க. என்ன சொல்றதுன்னு தெரியாம எல்லாரையும்
  திகைக்க வச்சுடறீங்களேப்பா!

  ReplyDelete
 13. பத்மா சொல்வதுதான் நானும் வழிமொழிகிறேன்.

  கேட்போம் கொடுப்பான்.
  டோட்டல் சரணாகதி.
  நின்னருளாம் கதியின்றி
  மற்றொன்றூ இல்லேன்
  நெடுங்காலம் பிழை
  செய்த நிலை கழிந்தேன்
  மன்னிருளால் நின்றநிலை எனக்குத்தீர்ந்து
  வானவர் தம் வாழ்வுதர வரித்தேன் உன்னை
  இன்னருளால்
  இனியெனக்கோர் பரம்
  ஏற்றாமல் என் திருமால் அடைக்கலம் கொள் என்னை நீயே.

  கோவிந்தன்,நாராயணன்,ஸ்ரீரங்கன்
  ஸ்ரீனிவாசன் திருவடிகளே சரணம்.
  வா

  ReplyDelete
 14. //KRS,

  பேசாம உங்க பதிவைப் பாராட்டி' பின்னூட்ட டெம்ப்ளேட்' ஒண்ணு எழுதி
  வச்சுக்கணும்போல இருக்கே.

  வரவர ரொம்ப அழகா எழுதறீங்க. என்ன சொல்றதுன்னு தெரியாம எல்லாரையும்
  திகைக்க வச்சுடறீங்களேப்பா!//

  அதே, அதே , நான் சொல்ல நினைத்ததுவும் அதுவே

  ReplyDelete
 15. எட்டெழுத்து மந்திரத்தை நெஞ்சில் உன்னும் அடியவருக்கு (வெண்ணைக்) கள்வன் கேட்டதெல்லாம் தருவான்.
  (நம்) ஆழ்வாரை இங்கிலாந்தில் பிறந்தவராக்கிவிட்டீரே!!

  ReplyDelete
 16. //ஞானவெட்டியான் said:
  எட்டெழுத்து மந்திரத்தை நெஞ்சில் உன்னும் அடியவருக்கு (வெண்ணைக்) கள்வன் கேட்டதெல்லாம் தருவான்.//

  உண்மை தான் ஞானம் ஐயா! நெஞ்சைக் களவாடும் கண்ணன், நெஞ்சால் உண்ண உண்ண, நம் நெஞ்சுக்குள்ளேயே வந்து அமர்ந்து விடுவான்!

  //(நம்) ஆழ்வாரை இங்கிலாந்தில் பிறந்தவராக்கிவிட்டீரே!!//

  எல்லாரும் அறிவார்கள் என்ற சுவைக்காகவும், மக்கள் ரசனைக்காகவும் தான் இப்படிச் "செல்லமாகச்" சொல்ல நேரிட்டது ஐயா!

  அடியேனை மன்னியுங்கள் பிழை செய்திருந்தால்!
  ஆலி நாடன், கலியன், பரகாலன், திருமங்கை மன்னன் திருவடிகளே சரணம்!

  ReplyDelete
 17. நல்ல பதிவு. இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.

  ReplyDelete
 18. எல்லாரும் எழுதிட்டாங்க, நான் என்ன புதிசா எழுதப் போறேன். ஆனால் திருமங்கை ஆழ்வார் பிறந்த தினம் திருக்கார்த்திகை அன்று என்பது இப்போதான் தெரிந்து கொண்டேன். நல்ல அருமையான தகவல்களைக் கூறுகிறீர்கள். நல்ல பதிவு, மனதை நிறைக்கிறது.

  ReplyDelete
 19. திரு. கேஆர்ஸ்,

  நானும் துளசியக்காவை வழிமொழிகிறேன்.....

  நன்றி!

  ஆகா!, ஆகா!....ஒரு நல்ல சத்சங்கம் உருவாகிறது....நன்றி....

  மெளலி....

  ReplyDelete
 20. முதலில் எல்லாரும் அடியேனை மன்னிக்கனும்! இந்தப் பதிவு பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்லக் கொஞ்சம் தாமதம் ஆனது!

  வந்து பார்த்தால்,
  ஆழ்வார்களில் திருமங்கைக்குத் தான் எத்தனை ரசிகர்கள்!!

  குமரன் அவர்கள் சொன்னது முற்றிலும் சரி!

  ReplyDelete
 21. //பத்மா அர்விந்த் said...
  படிக்கும் போதே இரு பாடல்களுக்குமான பொருளை எண்ணி வியந்ததுண்டு//

  வாங்க பத்மா; அடுத்த பதிவுக்கு நல்ல ஐடியா தந்திருக்கீங்க! இரண்டு பாடல்களையும் ஒப்பு நோக்கலாம்!
  இதை வாரியார் சுவாமிகள் ஒரு முறை செய்துள்ளார்!

  அபிராமி அந்தாதியில் வரும் தனம் தரும் பாடல் இகத்துக்கும், ஆழ்வாரின் பாடல் பரத்துக்கும் ஆகி வரும் என்று சொல்லுவார்!

  //சில நேரங்களில் பைபிளில் உள்ள verse களில் ஒன்றான ask and it shall be given unto you//

  படுதுயர் ஆயின எல்லாம் = Do not bring us to the test!
  நலம் தரும் சொல்லை = Holy be your name!

  ReplyDelete
 22. //Sridhar Venkat said...
  தேசிகன் பக்கத்தில் திருமங்கை ஆழ்வாரைப்பற்றி திரு. சுஜாதா அவர்கள் எழுதியிருந்த கட்டுரையை இங்குப் பார்க்கலாம்//

  நன்றி Sridhar Venkat!
  சுஜாதா அவர்களின் "ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம்", அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று!

  தேசிகன் அவர்களின் சுட்டி, தந்தமைக்கு நன்றி! பிரம்மோற்சவப் பதிவுகளில் கூட அவரின் சுட்டியில் இருந்து தான் துவங்கினேன்! நல்ல ready reckoner!

  ReplyDelete
 23. //குமரன் (Kumaran) said...
  கார்த்திகையில் கார்த்திகை நாள் செழிக்க வந்தான் வாழியே!//

  அழ்கா எடுத்துக் கொடுத்தீங்க குமரன்!
  வாழித் திருநாமம்!! மிக்க நன்றி!!

  கார்த்திகையில் கார்த்திகைநாள் களிக்கவந்தோன் வாழியே.
  காசினியில் திருக்குறையல் அவதரித்தான் வாழியே.

  வார்த்தபுகழ் குமுதவல்லி
  மணவாளன் வாழியே.
  மங்கையர் கோன்
  மலர்பதங்கள் வாழியேவாழியே.

  ReplyDelete
 24. //குமரன் (Kumaran) said...
  திருக்கார்த்திகை தீபமே மனதில் முன்னால் நிற்கிறது. ஆழ்வாரின் திருநட்சத்திரம் என்பது மறந்துவிடுகிறது//

  உண்மை தான் குமரன்; அடியேனும் முதலில் தீபப் பதிவு தான் இட்டேன்!
  அப்புறம் தான் ஆழ்வார் நட்சத்திரம் பதிவுக்கு வந்தேன்!

  //திருவாய்மொழி படித்த அளவிற்கு மற்ற பாசுரங்களைப் படித்ததில்லை. படிப்பதற்கு வாங்கி வைத்திருக்கிறேன். ஆனால் படிக்கத் தான் அவன் திருவுளம் இன்னும் அமையவில்லை//

  வெகு விரைவில் அமைய எங்கள் பிரார்த்தனை! அப்போது தானே எங்களுக்கு இன்னொரு வலைப்பூ உங்களிடமிருந்து கிடைக்கும் :-)

  ReplyDelete
 25. //Johan-Paris said...
  ரவி சங்கர்!
  தாயினும் நல்ல தலைவனல்லா!!! தகவல்கள்;படங்கள் பாசுரம் விளக்கம் என்றும் போல் அருமை!!
  கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்//

  வாங்க யோகன் அண்ணா! மிக்க நன்றி!
  படத்துக்கு நன்றி: radioramanuja.org
  கார்த்திகைத் திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. //சிவமுருகன் said...
  கள்ளம் புரிந்து, உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு அடியார் திருமங்கை ஆழ்வார்.
  அவர்தம் பிறந்த நன்நாளில் அவரை பற்றி தகவல்களை தந்தீர்கள்//

  மாயக் கண்ணன் கள்ளனுக்கு, கள்ளம் செய்பவரைப் பிடித்து விட்டதில் வியப்பே இல்லை! :-)
  நன்றி சிவமுருகன்!

  ReplyDelete
 27. //சாத்வீகன் said...
  இறைவனே சிறந்த ராபின் ஹுட் ஆவார்
  கள்வனின் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட கள்வனல்லவா...//

  இது!
  இறைவன் செல்வந்தரிடம் பறித்து, எளிய ஏழைகளுக்கும் நிம்மதியைக் கொடுக்கிறாரே! அவரே சிறந்த ராபின் ஹுட் ஆவார்!!

  நன்றி சாத்வீகன்!

  ReplyDelete
 28. //enRenRum-anbudan.BALA said...
  பத்மா,
  அபிராமி அந்தாதிப் பாடலை என் ஞாபகத்திலிருந்து தருகிறேன். பிழை யிருந்தால் பொறுத்தருளவும் :)))//

  பாலா, தங்கள் ஞாபகத்திறன் அருமை!
  பிழையா, பாலா சொல்லும் பிழை, யார் அங்கே! :-))

  அன்னையின் அந்தாதிப் பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி பாலா!

  ReplyDelete
 29. //enRenRum-anbudan.BALA said...
  கண்ணபிரான்,
  சிறப்பான பதிவு. நன்றி. குமரன் கொடுத்த பாசுரத்திற்கு என்னால் முடிந்த பொருளுரை !//

  குமரனின் பின்னூட்ட விதிகளைக் கரெக்டா follow பண்ணிட்டீங்க! பாட்டு சொன்னா பொருளும் சொல்லனும்! சொல்லிட்டீங்க! :-))

  நன்றி பாலா!

  ReplyDelete
 30. //துளசி கோபால் said...
  //வலந்தரும் மற்றும் தந்திடும்//
  எல்லாமும் தந்து இப்ப 'வலை'யும் தந்த கருணையை
  என்ன சொல்வேன்?//

  அடடே, இது எனக்குத் தோணலையே! இதுக்குத் தான் சத்சங்கத்துக்கு குருவா டீச்சர் வேணும்னு சொல்றது!

  //KRS,
  பேசாம உங்க பதிவைப் பாராட்டி' பின்னூட்ட டெம்ப்ளேட்' ஒண்ணு எழுதி வச்சுக்கணும்போல இருக்கே.//

  :-)
  அச்சச்சோ! அப்பிடி எல்லாம் ஒண்ணுமில்லை டீச்சர்! தப்பா ஏதாச்சும் சொன்னா அடிக்க வராம இருந்தா சரி! பாருங்க நெகடிவ் வோட் கூட போட்டிருக்காங்க! அதுவும் ஆழ்வார் பதிவுக்குப் போய்!

  முக்கியமான விடயம் என்னவென்றால்:
  சத்சங்கம் களை கட்டுவதால் கண்ணன் சார் கொடுத்த ஐடியாவைச் சீக்கிரம் செயல்முறைப்படுத்தணும்! குமரன் மற்றும் இன்னும் எல்லா அன்பர்களிடமும் கேட்கணும்!

  சங்கத்துக்கு நீங்களே ஒரு நல்ல பேராச் சொல்லுங்க டீச்சர், தனிமடலில்! "துளசி தளம்" போல நல்லா வாசமுள்ளதா இருக்கணும்!

  ReplyDelete
 31. //வல்லிசிம்ஹன் said...
  கேட்போம் கொடுப்பான்.
  டோட்டல் சரணாகதி.//

  உண்மை தான் வல்லியம்மா!
  என்ன தான் கேட்காமலேயே நம் குழந்தைக்கு நாம் கொடுத்தாலும்,
  அது கேட்கும் போது, வாங்கிக் கொடுப்பதும் ஆனந்தம் தானே!

  //
  உன் சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
  என்திருமால் அடைக்கலம் கொள் என்னை நீயே.//

  அருமையான "தேசிகப் பிரபந்தம்" பாடலைக் கொடுத்திருக்கீங்க வல்லியம்மா! மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 32. //ஜெயஸ்ரீ said...
  //KRS, பேசாம உங்க பதிவைப் பாராட்டி' .......!//

  அதே, அதே , நான் சொல்ல நினைத்ததுவும் அதுவே//

  ஜெயஸ்ரீ, நீங்களுமா?
  டீச்சர் கூட்டணியில் சேந்துட்டீங்களே!
  எங்க கூட்டணியில் தான் நீங்க இருக்கணும்! :-)))))

  ReplyDelete
 33. //இலவசக்கொத்தனார் said...
  நல்ல பதிவு. இந்த எட்டெழுத்து மந்திரம் என்பது பற்றி ஒரு பதிவு போடுங்களேன்.//

  கொத்ஸ்;
  கண்டிப்பா பதிவிடறேன்!
  வைகுண்ட ஏகாதசி (Dec 30) அன்று இடட்டுமா?

  ReplyDelete
 34. //கீதா சாம்பசிவம் said...
  ஆனால் திருமங்கை ஆழ்வார் பிறந்த தினம் திருக்கார்த்திகை அன்று என்பது இப்போதான் தெரிந்து கொண்டேன்.//

  மிக்க நன்றி கீதாம்மா! ஒரே பண்டிகையில் இன்னொன்றும் தொடர்புபடுத்திப் பார்ப்பதும் ஆனந்தம் தான்! சைவ-வைணவ ஒற்றுமை இந்தக் கார்த்திகை தீபத்தில் அழகா அமைஞ்சி விட்டது பாத்தீங்களா?

  ReplyDelete
 35. //Anonymous said...
  ஆகா!, ஆகா!....ஒரு நல்ல சத்சங்கம் உருவாகிறது....நன்றி....
  மெளலி....//

  வாங்க மெளலி! மிக்க நன்றி!
  இந்த சத்சங்கம் பற்றித் தான் கண்ணன் ஐயா சொன்னார்! நல்லபடியா அமைந்து, பயனுள்ள செயல் புரிய அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!

  ReplyDelete
 36. கேஆர்ஸ்,

  அந்த சத்சங்கத்தில் தயவுசெய்து என்னையும் இணைத்துவிடுங்கள்.....

  மெளலி

  ReplyDelete
 37. உங்கள் பணி சிறக்கட்டும் ! பல்லாண்டு வாழ்வீராக !

  ReplyDelete
 38. திருமங்கையாழார் பற்றி நானும் படித்தும் படத்தில் பார்த்தும் இருக்கிறேன். அவர் பிறந்த விண்மீன் திருக்கார்த்திகை என்று தெரியாது.

  நல்லதொரு பாவைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பு.

  கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
  காலங்கள் தோறும் நினைத்தது பலிக்கும்
  என்ற கவியரசரின் வரிகள் நினைவிற்கு வருகின்றன.

  ReplyDelete
 39. காவலனே கடவுளிடம் களவாட வந்த அந்த கள்ளனின் பிறந்த நாளா? அம்மன்னனுக்கு ஆழ்வாருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 40. //மணியன் said...
  உங்கள் பணி சிறக்கட்டும் ! பல்லாண்டு வாழ்வீராக//

  நன்றி மணியன் சார்!

  ReplyDelete
 41. //G.Ragavan said...
  அவர் பிறந்த விண்மீன் திருக்கார்த்திகை என்று தெரியாது//

  வாங்க ஜிரா; அதற்காகத் தான் இதை இட்டேன்! அடுத்த முறை கார்த்திகை தீபத்தன்று, அண்ணாமலையாரையும், ஆழ்வாரையும் ஒரு சேர நினைத்துக் கொள்ளுங்கள்!

  //நல்லதொரு பாவைச் சொல்லி அதற்கு விளக்கமும் சொல்லியிருக்கிறீர்கள். சிறப்பு//

  நன்றி ஜிரா! "பாடும் பணியே பணியாய் அருள்வாய்" அல்லவா?

  ReplyDelete
 42. //ENNAR said...
  காவலனே கடவுளிடம் களவாட வந்த அந்த கள்ளனின் பிறந்த நாளா? அம்மன்னனுக்கு ஆழ்வாருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்//

  வாங்க என்னார் ஐயா!
  வெறும் வாழ்த்து தானா?
  எங்கே எங்கள் ஆழ்வாருக்கு பர்த்டே கேக்? :-)))

  ReplyDelete

எல்லே இளங்கிளியே, இன்னும் Comment-லையோ? :)

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP