Friday, July 23, 2010

விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்ட சிவ "பக்தர்"!

"பதிவு எழுதி ரொம்ப நாளாச்சி! எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சி! இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க! :)"

"என்னாது? எப்படி எழுதணும்-ன்னே மறந்து போச்சா? ஆனா எப்படி தலைப்பு வைக்கணும்-ன்னு மட்டும் மறந்து போகலை போல?" :)

"ஹா ஹா ஹா! இன்னிக்கி பதிவு போட்டே ஆகணும்! ஏன்-ன்னா, இரண்டு நாயன்மார்களின் நினைவு நாள்!"

"ஓ! சரி...அது என்ன 'விருந்து கொடுத்து வெட்டிப் போட்ட நாயன்மார்'? - யாரு? சிறுத்தொண்டரா? பிள்ளைக் கறி எல்லாம் கொடுத்தாரே? அவரா?"

"இல்லையில்லை! இவரு வேற! அவரும் விருந்தினரை வெட்டி எல்லாம் போடலையே! விருந்தினரா வந்த சிவபெருமானுக்குத் தன் மகனையே அல்லவா கொடுக்கத் "துணிஞ்சார்"! ஆனா, நாம இன்னிக்கு பார்க்கப் போறது வேற ஒருவரை! உம்ம்ம்...சரியாச் சொல்லணும்-ன்னா வேற இருவரை!"
1. கோட்புலி நாயனார்
2. கலிய நாயனார்

இருவருக்கும் இன்று தான் குரு பூசை(நினைவு நாள்)! ஆடியில் கேட்டை (Jul-22-2010)! பார்க்கலாமா....என்ன விருந்து, என்ன வெட்டு-ன்னு? :)
இன்றைய "குடும்ப" அரசியல் தலைவர்கள் பலருக்கும், இந்த நாயன்மார் கதை, ஒரு நல்ல பாடம்!நாட்டியத்தான் குடி என்னும் ஊர்! திருவாரூர்-திருத்துறைப்பூண்டி வழியில் உள்ளது! அதில் சைவ வேளாளர் மரபில் தோன்றியவர் கோட்புலி!
பிள்ளைப் பருவத்திலேயே வீரம் அதிகம்! அதனால் விவசாயத்தில் அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை! சோழன் படையில் சேர்ந்தார்!

கொஞ்ச நாளிலேயே சில பல போர்கள்! விறு விறு என்று உச்சத்துக்குப் போய்விட்டார்! சேனாதிபதியாகவும் ஆகி விட்டார்!
ஆனால் மனத்தில் மட்டும் சிவ-பக்தி! சரியாச் சொல்லணும்-ன்னா சிவ-அன்பு!

கோட்புலிக்கு ஒரு முறை வெளியூர் செல்ல வேண்டி வந்தது! எதுக்கு? போருக்குத் தான்! ஆனா இந்த முறை கொஞ்சம் கடுமையான போர், அதனால் திரும்பி வர நாளாகும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொண்டார்! அதனால் போகும் முன்னே, ஒரு கூடு கட்டினார்!

என்ன கூடு? நெல் கூடு தான்!
குதிர்-ன்னு கிராமத்தில் சொல்லுவாய்ங்க! நெல்லுக் குதிர்! நெல்லு, ஈரம் பூத்துப் போகாமல், குதிரில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கும்!

திரும்பி வரும் வரை ஆலயத்துக்கான நெல்லுப் படி! அதைத் தான் கூடு கட்டி வைத்தார்! அவனவன், தான் ஊருக்குப் போகும் போது, தனக்குக் கட்டுச் சாதம் கட்டிக்கிட்டுப் போவாங்க! இவரு ஈசனுக்குக் கட்டுச் சாதம் கட்டுறாரு! ஏன்? = எது வந்தாலும் ஈசனுக்குப் பசி வரக் கூடாது!!

அட, ஈசனுக்குப் பசி வருமா? உலகத்துக்கே படி அளக்கறவனுக்குப் பசியா??-ன்னு அறிவாளர்கள் கேட்பாங்க! ஆனா அன்பாளர்கள்?
அதான் முன்பே சொன்னேன்! "சைவ-பக்தி" வேறு! "சிவ-அன்பு" வேறு!
அன்புக்கு அடைக்கும் தாழ் இல்லவே இல்லை! ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?

Even "simple" looks "beautiful", when seen through "Eyes of Love"!
Even the Lord may look hungry, when seen through "Eyes of Love"!


ஆலயத்தில் ஈசனுக்கு அமுதுபடியாகும் நெல்லைக் கூடு கட்டி வைத்தவர், அப்படியே போயிருக்கக் கூடாதா? தன் சுற்றத்தாரை எல்லாம் கூப்பிட்டார்!
தான் சரியா இருந்தாலும், குடும்பம் நடுவால புகுந்து அரசியல் பண்ணுடிச்சின்னா? அப்பவே இந்தப் பயம் அரசியலாருக்கு இருந்திருக்கு போல! :)

"இது ஈசன் அமுதுப்படிக்கு அளந்து விட்ட நெல்! இதில் இருந்து தான் அடியார்களுக்கான தினப்படி அன்ன தானமும் நடத்தப்படுகிறது! எனவே எக்காரணம் கொண்டும் இதில் நீங்கள் கை வைக்கக் கூடாது!
உங்கள் ஆத்திர-அவசரத் தேவைக்கு என் குடும்பக் களஞ்சியத்தில் இருந்து கடனாக எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் இது திரு இறையாக் கலி! பொதுச் சொத்து! இதில் உங்களுக்கு உரிமை இல்லை! அறவே இல்லை!"

கோட்புலி போன முன்றே மாதத்தில், ஊரில் பஞ்சம் வந்து விட்டது! நாள்பட நாள்பட பற்றாக்குறை அதிகரித்தது!
இதே இந்தக் காலம்-ன்னா.....சுற்றத்தார் பலருக்கு சும்மாவே பத்திக்கும்! பத்தாக்குறையின் போது பத்திக்கலீன்னா எப்படி?

ஆலயத்துக்குச் சென்று அந்த நெல்லை அடவாடியாக அள்ளிக் கொண்டு வந்தார்கள் குடும்ப உறவினர்கள்!
ஆலயப் பூசைக்குப் பின், மக்களுக்குத் தரப்படும் உணவை, வரிசையில் நின்று அவங்களும் வாங்கிச் சாப்பிட்டு இருக்கலாம் தான்! ஆனால் பற்றாக்"குறை"யிலும் கெளரவம் "குறை"யக்கூடாது நினைச்சிட்டாங்க போல!

"நம்ம ஆளு அளந்து விட்ட நெல்லு தானே! நமக்கில்லாத உரிமையா? :) வேணும்-ன்னா பஞ்சம் தீர்ந்தாப் பிறகு, இதே அளவைத் திருப்பிக் கொடுத்துக்கலாம்! ஆனா இப்போ குடும்ப உரிமையை நிலைநாட்டி எடுத்துக் கொள்வோம்!" - இப்படி எடுத்து விட்டனர் சுற்றமும், நட்பும்!

கோட்புலி, பல மாதங்கள் கழித்து, திரும்பி வந்து பார்த்தால்...
சிவபூசைக்கு உணவு இல்லை!
ஆலயத்தில் வழிபாடு இல்லை!
பிரசாதமாச்சும் உண்டு பசியாறிய பல அடியவர்கள் பஞ்சத்தால் இறந்து கிடந்தார்கள்!

ஆனால்.....நம்ம சுற்றமும் நட்பும், அப்பவும் "குடும்ப நியாயம்" பேசிக் கொண்டிருந்தார்கள்!


இவர்களைப் பேசிச் சரிபடுத்த முடியாது என்று புரிந்து கொண்டார் கோட்புலி!
எடுத்ததும் இல்லாமல் எகத்தாளம் வேறு!
அத்தனை பேரையும் விருந்துக்கு அழைத்தார்! வெற்றி விருந்து!

"பஞ்சத்தில் நீங்கள் அனைவரும் ருசியாகச் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்! உணவை அயலூரில் இருந்து தருவிக்கிறேன்! அப்படியே போரில் வென்ற பரிசுப் பொருட்களில் கொஞ்சம் பெற்றுச் செல்லுங்கள்! என் வெற்றியைக் கொண்டாட அனைவரும் விருந்துக்கு வாருங்கள்! சிவ சிவ!!"

உள்ளே திரண்ட அத்தனை பேரும் விருந்தில் களித்து இருக்க...
வெளியே வாயில் காப்போரிடம்...
அத்தனை கதவுகளையும் அடைக்கச் சொன்னார் கோட்புலி!

மாமா, மச்சான், சித்தப்பா, சித்தி, மாமி, அக்கா பெண், அக்கா பிள்ளைகள்-மருமகன்கள்...அண்ணன்-தம்பி...பேரப் பிள்ளைகள்....
இன்னும் குடும்பம்-ன்னு சொல்லி ஒட்டியும் உறவாடியும் உண்டவர்கள் அத்தனை பேரையும் வாள் வீசி வெட்டினார்!
உண்டவர் எல்லாம் கண்டம் துண்டம்!!


சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்
இவரோ வேண்டியவர்களே தனக்கு வேண்டாம் என்றல்லவா முடிவு கட்டி விட்டார்! இனமாவது? புணையாவது??
இப்படித் தன் குடும்பமே தவறு இழைத்து, ஊருக்கு இட்ட உணவை அபகரித்து, இன்று தன் சினத்தால் ஒட்டு மொத்தமாய்த் தழைக்காமல் போய் விட்டதே என்று தன்னந்தனியாக கோட்புலி அழ...

ஈசன் அவரை அங்ஙனயே தோன்றி, அவ்வண்ணமே அணைத்துக் கொண்டான்!
"உன் கை வாளினால் உறுபாசம் அறுத்த சுற்றத்தவர், பிற உலகம் முதலிய பூமிகளிற் புகுந்து, கருமம் தொலைத்து, பின்னர் நம் உலகம் அடைய,
நீர் இந்நிலையிலேயே நம்முடன் அணைக, நம் உலகம் அடைக!" என்று மொழிஞ்சருளினார்!


விருந்துக்கு அழைத்து வெட்டிப் போட்டவர்! = கோட்புலி "நாயனார்" ஆனார்!

இதற்கெல்லாம் முன்பே, நன்றாக வாழ்ந்த காலத்தில்....
கோட்புலி, சுந்தரரைத் தம் ஊருக்கு அழைத்து வந்து, தம் ஊர் இறைவன் மேல் அவரைப் பாட வைத்து, சிங்கடி-வனப்பகை என்ற தன் இரு மகள்களையும் சுந்தரரின் சைவப் பணிக்குக் காணிக்கை ஆக்கினார்!
பிள்ளை இல்லாத சுந்தரரோ, அவ்விருவரையும் தன் சொந்த மகள்களாகப் பாவித்து, தம்மைத் தாமே, சிங்கடி அப்பன், வனப்பகை அப்பன் என்று பாடிக் கொண்டார்! (ஏழாம் திருமுறை-திருநாட்டியத்தான் குடி)

கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத்தான் குடி
நம்பியை நாளும் மறவாச்
சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
திருவா ரூரன் உரைத்த
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
பாடநும் பாவம்பற்று அறுமே!

பின்னாளில்...கோட்புலி, இவ்வாறு சுற்றத்தைக் கொன்று தானும் இறந்த பின்பு...சுந்தரர் பழசை எல்லாம் நினைத்து மீண்டும் அவரைப் பதிக்கிறார்!
"அடல் சூழந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்"
என்று நாயன்மார்களுக்கு எல்லாம் தலைமையாகக் கருதப்படும் சுந்தரர், திருத்தொண்டத் தொகையில் கோட்புலியைப் பாடிப் பரவுகிறார்!

(பின் குறிப்பு: இங்கு பதிவில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் பலவும், சேக்கிழாருடைய பெரிய புராணத்தின் படியோ, வெளியிற் கிடைக்கநாயன்மார் கதைப் புத்தகங்களின் படியோ இருக்காது!
சேக்கிழார் நூலில் வேறு பல காரணங்களுக்காக, சில நாடகத் தன்மை கலந்து, வன்மையாக இருக்கும்! இக்காலப் பார்வைக்கும் சரியாகப் படாது! நான் இங்கு எடுத்துக் கொண்டது மூல நூலான திருத்தொண்டர் திருவந்தாதி மட்டுமே)கலிய நாயனார் குரு பூசையும் இன்னிக்கு தான்-ன்னு சொன்னேன் இல்லையா?
கலிய நாயனார், நம்ம சென்னைக்காரர் - திருவொற்றியூர் பக்கம்!

கிடைக்கும் வருவாயில், திருவொற்றியூர்க் கோயிலில் தினமும் விளக்கேற்றி, பெரிய ஆலயத்தின் இருளில் பக்தர்கள் சிக்கிக் கொள்ளாமல், விளக்கு வெளிச்சத் தொண்டு செய்து வந்தவர்!
பொருளெல்லாம் கரைஞ்ச பின்னும், இதுக்குன்னே ஓரு எண்ணெய் ஆலையில் வேலை வாங்கிக் கொண்டு, விளக்கு கைங்கர்யம் மட்டும் விடாமல் செய்து வந்தார்!

ஒரு நாள்....
துளி எண்ணெய்க்கும் காசில்லாமல் போகவே, ஒரு கட்டத்தில் ஆலயத்தில் இருள் பரவக் கண்டு, பதபதைத்துப் போனார்!
சின்ன பிச்சுவாக் கத்தியால், தன் கழுத்து இரத்தம் குபுகுபு என்று எடுத்தாச்சும் விளக்கில் ஊற்றுவோம் என்று கீறிக் கொள்ள....

"நில்லு கலியா நில்லு!"....என்று ஒரு கரம் தடுக்க...அந்தக் கரத்தில் மானும் மழுவும் சோதியும் ஆதியும்...
இப்படியும் ஒரு ஜீவனா?....... என்று அந்தச் சீவனைச் சிவமே தாங்கிக் கொண்டது!


* பொன்னம்பலத்தில், "சைவப் பிடிப்பாளர்கள்"....எண்ணெயும் ஊற்றி வழுக்கி விழச் செய்வார்கள்!
* மன-அம்பலத்தில் "சிவ அன்பாளர்கள்"....தன் இரத்தமேயும் எண்ணெயாய் ஊற்றித் தருவார்கள்!
ஒன்று சமயப்-பிடிப்பு! இன்னொன்று சிவப்-பிடிப்பு! நாம் சிவத்தைப் பிடிப்போம்!

ஆர் வல்லார் காண், அரன் அவனை? அன்பென்னும்
போர்வை அதனாலே போர்த்தி அமைத்து - சீர்வல்ல
தாயத்தால் நாமும், தனி நெஞ்சினுள் அடைத்து,
மாயத்தால் வைத்தோம் மறைத்து!!!

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ? என்று பெருமாள், ஈசன் மேல் கொண்ட "அன்புடைமையை" மாணிக்கவாசகர் வியந்து வியந்து பாடுகிறார்!
ஆழியான் அன்புக்குரிய ஈசனை....
நாமும் தனி நெஞ்சினுள் அடைத்து....
மாயத்தால் வைப்போம் மறைத்து...
நேயத்தால் வைப்போம் நிலைத்து!!


கலிய நாயனார் திருவடிகளே சரணம்!
கோட்புலி நாயனார் திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, July 11, 2010

நரசிம்மனைக் கடித்த கவி

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:


இடம்: திருக்கோளூர்
நேரம்: ஒரு இனிய மாலை நேரம்

(ஒரு வைணவப் பெரியவர், தன் சீடர்களோடு ஊரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். ஊர் எல்லை அருகே, ஒரு இளம் பெண் கையில் சில மூட்டைகளுடன் எதிரே வந்து கொண்டிருக்கிறாள். இதைக் கவனித்த அந்தப் பெரியவருக்கு, ஒரு விநாடி குழப்பம், பின்னர் ஐயம்! நேரே அந்தப் பெண்ணிடம் செல்கிறார் ...)பெரியவர்: பெண்ணே! மூட்டைகளுடன் எங்கு சென்று கொண்டிருக்கிறாய், இரவு துவங்கும் இந்த வேளையிலே?

பெண் (அந்தப் பெரியவரை வணங்கி): இந்த ஊரை விட்டுச் சென்று கொண்டிருக்கிறேன்!

பெரியவர் ('சந்தேகப் பட்டது சரிதான்' என்று நினைத்து): ஏனம்மா?

பெண்: இந்த ஊரில் இனிமேல் என்னால் இருக்க முடியாது!

பெரியவர் (அதிர்ச்சியுடன்): இந்த ஊரை விட்டு யாரும் போகமாட்டார்கள் என்று நம்மாழ்வார் சொன்னது பொய்யோ?

பெண்: என்ன? நம்மாழ்வார் உங்களிடம் சொன்னாரா?

பெரியவர்: 'எல்லோரும் திருக்கோளூருக்கு வருவார்கள்' என்று நம்மாழ்வார் சொன்னதால் தானே அடியேனும் சீடர்களும் இங்கு வந்தோம்! இங்கு வந்தால் வேறு விதமாய் இருக்கின்றதே?

பெண் (சற்றுக் குழம்பி): நம்மாழ்வார் பரமபதம் சென்று பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதே? அவர் உங்களிடம் எப்படிச் சொல்லி இருக்க முடியும்?

பெரியவர்: இல்லையம்மா! அவர் தானே தன் பாசுரத்தில், 'திருக்கோளூருக்கு எல்லோரும் வருவார்கள், ஆனால் செல்ல மாட்டார்கள்!' என்றாரே?(பாசுரத்தைச் சொல்கின்றார் பெரியவர் ...)

*உண்ணும் சோறு பருகு நீர்* தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன்* எம்பெருமான் என்றென்றே* கண்கள் நீர் மல்கி*
மண்ணினுள் அவன் சீர்* வளம் மிக்க அவனூர் வினவி*
திண்ணம் என் இளமான் புகும் ஊர்* திருக்கோளூரே!
திருவாய்மொழி 6-7-1

பெரியவர்: அதுவும், பெண்கள் புகும் ஊர் (இளமான் புகும் ஊர்) என்றாரே ஆழ்வார்! பெண்கள் 'வெளியே செல்லும் ஊர்' என்று சொல்லவே இல்லையே?

(பாசுரத்தைக் கேட்ட அந்தப் பெண், சற்றுத் தயங்கி நிற்கின்றாள் ...)

பெரியவர்: சரி ... நீ எதற்கு இந்த ஊரில் இருக்க முடியாது என்கின்றாய்?

பெண்: இந்த ஊரில் இருக்க எனக்குத் தகுதியே இல்லை!

பெரியவர்: அப்படி என்ன தகுதி வேண்டும், திருக்கோளூரில் இருப்பதற்கு?

(அந்தப் பெண் சொல்லத் துவங்குகின்றாள் - 81 வரிகள் ...)

அழைத்துவரச் சென்றேனோ அக்ரூரரைப் போலே!
...
பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
...
ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
...
இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
...

(இதைக் கேட்கின்ற பெரியவர் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய, பிரமை பிடித்து நிற்கின்றார் - அந்தப் பெண் முடித்த பின்பும், வெகு நேரம் வரை!

அந்தப் பெண் மீண்டும் உரக்கக் கூப்பிட்டவுடன் தான், பெரியவருக்கு நினைவு திரும்புகின்றது ...)

பெண் (வருத்தத்துடன்): பெரியவரே! முனிவர்களும், ஆழ்வார்களும், ஆசாரியர்களும், அடியவர்களும் செய்ததில் ஒன்று கூட அடியேன் செய்யவில்லையே! எனவே, அவர்களும், வைத்த மாநிதியும் இருக்கும் இந்தப் புகழ் பெற்ற திருக்கோளூரிலே அடியேன் இருப்பதற்குத் தகுதியே இல்லை! எனவே இங்கிருந்து புறப்பட முடிவு செய்துள்ளேன்!

(திகைத்து நிற்கின்றார் அந்தப் பெரியவர் ...)

உண்மையிலேயே அந்தப் பெண்ணிற்குத் தகுதி இல்லையா?

***ந்தப் பெண்ணின் மன நிலையும், திருமாலை அருளிச் செய்யும்போது, தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு இருந்த மன நிலையும் சற்றே ஒத்து நோக்கத் தக்கது.


'என்னிடம் எந்தத் தகுதியும் இல்லை; எனவே எம்பெருமான் எனக்குக் காட்சி தரப் போவதில்லை!' என்று அடிப்பொடியார், அரங்கன் சன்னிதியில் இருந்து விலகிச் செல்கின்றார் [...வெள்கி, போய், விலவறச் சிரித்திட்டேனே - திருமாலை-34].

எங்கே இருக்கின்ற உண்மையான ஒரே தொண்டனும் விலகிச் சென்று விடுவானோ என்று பயந்து, அரங்கன் தொண்டரடிப்பொடியாழ்வாரைக் கூவி அழைத்தானாம்!

"ஆழ்வீர்! போகோதீர்! திரும்பி வாரும்! எப்போது நீர் 'எனக்குத் தகுதியில்லை' என்று நினைக்கும் நிலைக்கு வந்து விட்டீரோ, அப்போதே உமக்கு எம்மை அடையத் தகுதி வந்தது" என்று கூறுகின்றான்.

தான் உலகளந்த கோலத்தை அவருக்குக் காட்டி, அவரைத் தன் பக்கம் சேர்த்துக் கொள்கின்றான்.

அரங்கனைக் கண்டு கொண்ட ஆழ்வார், அடுத்த பாசுரத்தில் தான் உலகளந்த காட்சியைப் பாடி மகிழ்கிறார் [தாவி அன்று உலகமெல்லாம் தலை விழாக் கொண்ட எந்தாய் ...' - திருமாலை 35])

இந்தப் பெண்ணின் தகுதிக்கு வருவோம் ...

***

தொண்டரடிப்பொடி ஆழ்வார் போலவே, 'எனக்குத் தகுதியே இல்லை' எனும் மன நிலை வந்தவுடனேயே அந்தப் பெண்ணுக்கும் அவனை அடையத் தகுதி வந்து விட்டது!

ஆனால், எம்பெருமான் வரவில்லை! பதிலாக, எம்பெருமானார் வந்து விட்டார்!

ஆம்! அந்த வைணவப் பெரியவர் வேறு யாருமல்ல! ஸ்ரீ இராமாநுஜர்!அந்தப் பெண்ணின் பெயர் குறிக்கப்படாவிட்டாலும், அவள் கூறிய 81 அழகான வரிகள், 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரஹஸ்யம்' என்று அழைக்கப் படுகின்றது ('திருக்கோளூர் பெண்பிள்ளை வார்த்தைகள்' என்றும் கூறப்படுவதுண்டு)! வைணவத்தின் சாரம் என்றே இதனைக் குறிப்பிடலாம்!


(இருவரில் யார் முதலில் வரவேண்டும்? எம்பெருமானா, எம்பெருமானாரா?


நாம் தவறு செய்யும் நேரங்களில், நம் உள்ளே இருக்கும் அவன் [ஆத்மா/மனசாட்சி/...], 'இது இவன் விதி, முன் வினைப் பயன்; அனுபவிக்கிறான்' என்று எதுவும் செய்யாது இருந்து விடுவான். ஆனால், நம் ஆசானோ, நாம் செய்யும் தவற்றைச் சுட்டிக் காட்டி, நம்மை நல்வழிப் படுத்துகின்றார்! எனவே, உள்ளே இருக்கும் அவனை விட, வெளியே இருக்கும் ஆசானே நன்று!)


இந்தப் பெண் ஊரை விட்டுச் செல்வது கண்டு பொறுக்காத வைத்த மாநிதிப் பெருமானே இவளுக்கு ஆசானாக, எம்பெருமானாரையே அனுப்பி வைக்கின்றான்!

ஆசானே எதிரே வந்து ஆட்கொள்ளும்படி இருந்த அந்தப் பெண் புண்ணியம் செய்தவள் தானே?

சரி, இந்தப் பெண்ணின் கதையைத் தொடருமுன்பு, கொஞ்சம் புராணம் படிக்கலாம் வாருங்கள்!

***

பிரம்மாவின் ஐந்தாவது மகன், கர்த்தமப் பிரஜாபதி. படைப்புக்காகப் படைக்கப் பட்ட அவன், அதை வெறுத்து, திருமால் அருகில் இருக்கும் மோட்சம் வேண்டுமெனத் தவம் செய்கின்றான். இவன் தவத்தைக் கண்ட ஸ்ரீதேவி, 'ஏன் இவனுக்கு அருள் தர மறுக்கிறீர்கள்?' என்று எம்பெருமானிடம் கேட்க, அவனிடமிருந்து, புன்சிரிப்பே பதிலாக வருகின்றது.

திருமால் பதில் சொல்லாததால் கோபமடைந்த ஸ்ரீதேவி, பூவுலகில் வில்வாரண்யம் எனும் தலத்திற்கு வந்து, அங்குள்ள ஒரு தாமரையில் தன்னை மறைத்துக் கொள்கிறாள்.

திருமகளைத் தேடி வில்வாரண்யத்திற்கு வந்த திருமால், தன் இரு கண்களையும் ஒவ்வொன்றாக மூடித் திறக்கின்றார்! மற்ற எல்லாத் தாமரைகளும், மலர்ந்து, குவிந்து, பின் மீண்டும் மலர, ஒரே ஒரு தாமரை மட்டும் எப்போதும் மூடியிருக்கின்றது! ஸ்ரீதேவி அந்தத் தாமரையில் இருக்கின்றாள் என்று தெரிந்து, மலருடன் சேர்த்துத் திருமகளையும் அணைத்துக் கொள்கின்றார் திருமால்!

(வில்வாரண்யம், ஸ்ரீதேவி வந்து இருந்ததால் ஸ்ரீபுரி என்றும், திருமால் ஸ்ரீதேவியை அணைத்துக் கொண்டதால் ஆலிங்கன புரி என்றும் அழைக்கப் படுகிறது)


திருமாலைப் பின் தொடர்ந்து வந்த கர்த்தமன், 'இது தான் தக்க சமயம்' என்றெண்ணி, தனக்கு மோட்சம் வேண்டுமெனக் கேட்டு, இருவரின் கால்களையும் பிடித்துக் கொண்டான். திருமால், அவனிடம், 'உனக்கு மோட்சம் கலியுகத்தில் தான் கிட்டும்! அதுவரையில் ஒவ்வொரு யுகத்திலும் நீ பிறப்பாய்!' என்று கூறி மறைகின்றார்.

***

ர்த்தமன், அடுத்த யுகமான திரேதா யுகத்தில் உபரிசரவசு எனும் வடநாட்டு (நாட்டின் பெயர் தெரியவில்லை) மன்னனாகத் தோன்றினான். அரசை விட்டு, தவம் செய்யக் கிளம்பினான். தன் தவ வலிமையால், ஆகாயத்தில் பறக்கக் கூடிய சக்தி பெற்றான் (உபர் - ஆகாயம்).

உபரிசரவசு ஒரு முறை ஸ்ரீபுரியின் மீது பறக்கும்போது, மேலே செல்ல முடியாமல் கீழே விழ, அங்கேயே அவன் தவம் செய்ய ஆரம்பிக்கிறான். எம்பெருமான் அவன் முன் தோன்றி, முன்பிறப்பைப் பற்றிக் கூறி, ஸ்ரீபுரிக் கோயிலில் தொண்டு செய்து வருமாறு பணித்தார்.
***

துவாபர யுகத்தில், காவிரி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில், ககூஸ்த பட்டினம் எனும் நாட்டை, வஜ்ரகோசன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் மந்திரி, சங்கபாலன். வஜ்ரகோசனுக்குப் பிள்ளைகள் இல்லாதலால், சங்கபாலன் மகனான வைரமேகன் என்பவனைத் தத்து எடுத்து, இளவரசுப் பட்டம் சூட்டினான். விரைவிலேயே இறந்துவிடுகின்றான் வஜ்ரகோசன்.

நாட்டை ஆளும் பொறுப்பு, சங்கபாலனிடம் வருகின்றது. தன் மகனிடம் நாட்டை ஒப்படைத்து, யாத்திரை செல்கின்றான் சங்கபாலன். ஸ்ரீபுரிக்கு வருகின்றான். அந்த இடத்தின் மகிமையைக் கேள்விப் பட்டு, அங்கேயே இருந்து, யாகங்கள் பல செய்து வந்தான். ஒருமுறை யாகத்தில் அவிர் பாகத்தை ஏற்கத் திருமால் தோன்றிய போது, சங்கபாலனுக்குத் தன் முந்தைய பிறவிகள் பற்றித் தெரிந்து கொள்கின்றான். அவன் திருமாலிடம், 'கலியுகத்திலாவது எனக்கு மோட்சம் நிச்சயம் தானே?' என்று கேட்க, அவர் புன்னகையுடன் மறைகின்றார்.
***

ர்த்தமனே கலியுகத்தில், கலியனாகத் தோன்றுகின்றான்!


கர்த்தமன் தவம் செய்த ஸ்ரீபுரியே - நம் (திருவாலி) திருநகரி! (ஸ்ரீ - திரு, புரி - நகரி) இதன் அருகில் உள்ள திருக்குறையலூரில் தான் நம் கலியனின் திருவவதாரம்!

நான்கு யுகங்களிலும் பிறந்த ஒரே ஆழ்வார் இவர் தான்!

(கர்த்தமனின் தந்தையான பிரம்மன், 'உன்னைப் படைத்ததன் காரணமே படைப்புத் தொழிலைச் செய்யத்தான்! எனவே அதைச் செய்!' என்று ஆணையிட்டதைக் கேட்காமல், தவம் செய்யச் சென்றதாலேயே கர்த்தமனுக்கு நான்கு யுகங்களிலும் பிறப்பு ஏற்பட்டது என்றும் சொல்வதுண்டு!)

திருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் கதையையும் முடித்து விடலாம் ...

***
இராமாநுஜர், அந்தப் பெண்ணை மீண்டும் ஊருக்குள் அழைத்துச் செல்கிறார். வைத்தமாநிதியைத் தரிசித்து விட்டு, அந்தப் பெண்ணையும் தன் சீடர்களில் ஒருவளாக்கிக் கொள்கிறார்.

அதுவரை வேறு எந்த வீட்டிலும் உணவு அருந்துவதைப் பழக்கமாகக் கொள்ளாத ஸ்ரீ இராமாநுஜர், அன்று அவள் வீட்டில் உணவு அருந்தியதாகக் கதை!

இராமானுஜரிடம், நம் திருக்கோளூர் பெண் பிள்ளை, தன் 81 வரிகளில் 12 ஆழ்வார்களைப் பற்றியும் கூறியுள்ளாள்.

***

ம் ஒவ்வொருவரையும் எம்பெருமான் தன்னிடமும், தன் அடியார்களிடமும் சேர்த்துக் கொள்ளும் விதமே வியப்பானது!

பலருக்கு, ஒரு ’கடினமான சோதனை’ வரும்! அதன் மூலம் அவன் பக்கம் செல்வோம்!

எல்லா ஆழ்வார்களுக்கும் கடினமான சோதனைகள் வந்தன! அதன் மூலம், அவர்கள் பூமிக்குத் தாம் வந்த காரணத்தை அறிந்தனர்!

ஆனால் மங்கையாருக்கு மட்டும், ஒரு 'கடிச்' சோதனை வந்தது! நரசிம்மனுடைய காலைக் கடிக்கும் சோதனை!


ஆழ்வார், எம்பெருமானுடைய காலில் உள்ள நகையைக் கேட்க, அவன், 'நீயே கழற்றிக்கொள்' என்கிறான்! ஆழ்வார் மிக முயன்றும் அது வராமல் போக, அதைக் கழற்ற, கடைசியில் அவன் காலையே கடிக்கிறார் ஆழ்வார்!

(சிலர், எம்பெருமானின் கையில் உள்ள மோதிரத்தை எடுப்பதற்காகவே கடித்ததாகக் கூறுவர்.

வேறு சிலர், தாயாரின் காலில் உள்ள மெட்டியைக் கழற்றவே ஆழ்வார் தாயாரின் காலைக் கடித்ததாகவும் கூறுவர். தாயார், 'ஆழ்வார் மங்களகரமான பொருளைக் கடித்து எடுக்கின்றாரே?' என்று எம்பெருமானைக் கவலையுடன் பார்க்க, 'இது கலியுலகம். இங்கு யார் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்' எனும் பொருளில், 'இவன் கலியனோ!' என்று எம்பெருமான் உரைத்ததாகவும் கூறுவர்.

ஆழ்வார் இருவரில் யாரைக் கடித்தார், எதைக் கடித்தார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 'கடித்தார்' என்பதில் ஒரு வேறுபாடும் இல்லை!)

அதன் பிறகே, திருமங்கையாரின் செவியில் எம்பெருமான் எட்டெழுத்து மந்திரத்தைக் கூறி, அவரைத் தன் பக்கம் அழைத்துக் கொள்கின்றான்.


ஒவ்வொரு ஆழ்வாரையும், எம்பெருமான் எவ்வாறு தம்மிடம் அழைத்துக் கொண்டான் என்பதை, நம் திருக்கோளூர்ப் பெண் பிள்ளை, அழகாகக் கூறுகின்றாள், சில வரிகளில்!

மற்ற ஆழ்வார்களுக்கும், கலியனுக்கும் உள்ள வேறுபாட்டை, நம் பெண் பிள்ளை வார்த்தைகளில் இருந்தே நாம் அறியலாம்:

கடித்து அவனைக் கண்டேனோ கலியனைப் போலே!

***

திருமங்கையாழ்வார் இயற்றிய 6 திவ்வியப் பிரபந்தங்களும், நம்மாழ்வார் இயற்றிய தமிழ் வேதங்களுக்கு விளக்கமான 6 தமிழ் உபநிடதங்களாகத் (மந்திரம், வியாகரணம், நிகண்டு, சந்தஸ், நிமித்தம், ஜோதிடம்) திகழ்கின்றன. மணவாள மாமுனிகள்,

மாறன் பணித்த தமிழ் மறைக்கு* மங்கையர்கோன்
ஆறு அங்கம் கூற அவதரித்த* - வீறுடைய
'கார்த்திகையில் கார்த்திகை நாள் இன்று!' என்று காதலிப்பார்*
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.


என்று கலியன் பிறப்பினையும், சிறப்பினையும், படைப்பினையும் பற்றிக் கூறுகின்றார்.


நாமும் நம் கலியன் ஆசியுடன், அவர் இயற்றிய முதல் பிரபந்தமான பெரிய திருமொழியில், அவர் அனுபவித்த நரசிம்மனைக் (51 பாசுரங்கள்) கொண்டாடுவோம்!

வாழி பரகாலன் வாழி கலிகன்றி*
வாழி குறையலூர் வாழ் வேந்தன்* - வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்திரங்கொள்* மங்கையர்கோன்
தூயோன் சுடர் மானவேல்.
- எம்பெருமானார்

எங்கள் கதியே!* இராமநுச முனியே!*
சங்கை எடுத்தாண்ட தவராசா!* - பொங்குபுகழ்
மங்கையர்கோன் ஈந்த மறையாயிரம் அனைத்தும்*
தங்கு மனம் நீ எனக்குத் தா.
- எம்பார்

- பெரிய திருமொழி நரசிம்மர் விரைவில் வருவார்

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP