Sunday, March 29, 2009

மதுரை மீனாட்சி & Simple Pendulum!

என்ன மக்கா, மருதையே தி்ருவிழாக் கோலமா களை கட்டுதே! ஏப்ரல்-08 ஆத்தா மீனாச்சி கோயில்ல குடமுழுக்கு! அதுக்குப் பந்தல்-ல பந்தல் போடலீன்னா எப்படி? முழுக்க முழுக்க மீனாட்சியம்மன் மேல் புதிரா புனிதமா ஒன்னு எட்டாம் தேதி போட்டுருவோம்! பதிவுலக மருதைக்காரவுக சாமார்த்தியத்தையும் பாத்துருவோம்! :))

ஆனால்.....இன்னிக்கி மதுரை மீனாட்சி & Pendulum Technique!

"எலே! எடுப்பட்ட பய புள்ள! Pendulum Technique-ஆ? அதுக்கும் ஆத்தா மீனாட்சிக்கும் என்னலே சம்பந்தம்? கோதையைத் தான் அப்துல் கலாம் கூட ஒப்பிட்டு பதிவு போட்டே! இப்போ மீனாட்சியையும் விடுறதா இல்லியா நீயி?"

"அட, பாண்டி நாட்டுப் பெண்களை ரசிக்காம விட முடியுமா? அவிங்க அழகென்ன? நறுவிசு என்ன? மயிலென்ன? ஒயிலென்ன? :)
கலர் வேணுமின்னா கொஞ்சம் கொறைச்சலா இருக்கலாம்! ஆனால் அந்தக் கலர்லயும் ஒரு காந்தம் இருக்குல்லே? என்ன நாஞ் சொல்லுறது? :)"

"அடப் பாவி மக்கா! பிள்ளைத் தமிழ்-ன்னு ஏதோ வலைப்பூ துவங்கினயே! ஏதோ கொழைந்தயளைப் பத்தித் தான் எழுதப் போறமில்ல-ன்னு நெனச்சோம்? பிள்ளைத் தமிழ்-ன்னா, பெட்டைப் புள்ளைக பிள்ளைத் தமிழா? வெளங்கிரும்!"

"ஹா ஹா ஹா! அட மக்கா, அதுவும் இருக்குல்லே! பெண்பாற் பிள்ளைத் தமிழ்-ன்னு புள்ளைக தமிழை அப்பவே பாடி வச்சிருக்காவ! அதைத் தான் இன்னிக்கி பாக்கப் போறம்! அதுல தான் Pendulum Technique! ஆத்தா மீனாச்சியை அறிவியல் பூர்வமா தரிசிக்கலாமா?" :)


சின்ன வயசுல இயற்பியல் பாடம் படிச்ச ஞாபகம் இருக்கா? ஆறாங் கிளாஸ்ல பெண்டுலம் பத்திச் சொல்லிக் கொடுப்பாய்ங்க! வகுப்புக்கே பெண்டுலம் எடுத்துக்கிட்டு வருவாரு வாத்தி!
அதன் நீள உசரங்களை அட்ஜஸ்ட் பண்ணி, Pendulum Bobஐ சுண்டி இழுத்து விட்டாக்கா அப்படியும் இப்படியும் அசையும்! பக்கத்துல நான் தான் நிப்பேன்!:)

Start = கையில ஒரு ஸ்டாப் வாட்ச் கொடுத்து, அதைப் பொசுக்குன்னு அழுத்தச் சொல்லுவாரு!
Stop = ஸ்டாப் வாட்ச்சில் முள்ளு இருக்கும் எண்ணை உரக்கச் சொல்லணும்! அதை அந்த மாங்காப் பையன் சரவணன் போர்ட்டில் எழுதுவான்!

இப்படியே மாறி மாறி, பெண்டுலம் வெளையாட்டு நடக்கும்! ஒரு பத்து ரீடிங் எடுத்தவுடன், வாத்தி என்னென்னமோ கணக்கெல்லாம் போட்டு, ஒரு Formula-வை உருவாக்கி,
This is Simple Harmonic Motion-ன்னு முடிச்சது தான் ஞாபகத்துல இருக்கு! அதுவும் பெண்கள் இல்லாத ஒரு வகுப்பில் எப்படி நுணக்கமா கான்சன்ட்ரேட் பண்ணுறது? அறிவியல் வகுப்பு நடத்துறவங்க இதைக் கூட அறியலீன்னா எப்படி? :)

அது முடிஞ்சதும், அடுத்து தமிழ் வகுப்பு! அதுல மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்! ஆரம்பிச்சுட்டாருய்யா டேனியல் ஐயா! கிறித்தவரா இருந்தாலும், சும்மா உருகி உருகிப் பாடம் எடுப்பாரு! பாடியே காட்டுவாரு! அதுவும் ஆழ்வார் பாசுரம்-ன்னா சொல்லவே வேணாம்! அவர் கண்களே பனிக்கும்! இப்போ தெரியுதுங்களா தி சீக்ரெட் ஆஃப் கேஆரெஸ்! :)குமரகுருபரக் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை! வயசு அஞ்சு ஆகுது! பள்ளிக்குப் போற வயசில் பேச்சு வரலீன்னா எப்படி? என்னென்னமோ மருத்துவம் செஞ்சிப் பார்த்துவிட்டு, திருச்செந்தூர் முருகப் பெருமான் சன்னிதியில் கொண்டாந்து பிள்ளையைப் போடுறாங்க பெத்தவங்க!

செந்திலாண்டவன் அழகுத் தோற்றம் குழந்தையை இழுஇழு என்று இழுக்கிறது! இலைத் திருநீறு வாயில் கரைகிறது! பேசுகிறான் குமர குருபரன்...

பின்னாளில் அவுரங்கசீபின் அண்ணன் தாரா ஷூகோவிடமே தமிழின் மேன்மையை எடுத்துச் சொல்லப் போகும் குழந்தை அல்லவா! அவன் வாயில் பேச்சைக் கொடுக்க, தமிழ்க் கடவுள் முருகவேள் கடன்பட்டுள்ளானே! குழந்தை வளர்ந்து பெரும் கவிஞன் ஆகிறது! கவி-யோகியும் ஆகிறது!

தென்பாண்டித் தேசமாம் மதுரைக்கு வந்த குமரகுருபரர், அன்னை மீனாட்சியையும், அப்பன் அழகனையும் கண் குளிரத் தரிசிக்கிறார்!
மூன்று அழகர்கள் அல்லவா மதுரைக்கு! = கள்ளழகர், கூடலழகர், மதியழகர் (சோம சுந்தரர்)!

இப்படி அழகர்கள் கூடி இருப்பதால் தானே மதுரைக்கே ஒரு தனி கிறக்கம்! ஆனால் அத்தனை அழகுக்கும் ஆட்சியாள் யார்? அவள் மீது தான் பிள்ளைத் தமிழ் பாடுகிறார் நம் கவிஞர்! இன்றுள்ள பிள்ளைத் தமிழ் நூல்களில் எல்லாம் தலைசிறந்தது மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்!

மறுநாள் திருமலை நாயக்கர் சபையில் அரங்கேற்றம்! குமரகுருபரர் பாடப்பாட, மொத்த சபையும், துறைத் தீந் தமிழில் கட்டுண்டு கிடக்கிறது!
கடைசி வரிகள்! ஊசல் பருவம்! அன்னை மீனாள் சிறு பெண்ணாய் ஊஞ்சலாடும் அழகு!

எதிரே உள்ள மரத்தைக் காலால் உதைத்து, அன்னை, ஊஞ்சலில் இன்னும் உயர உயர எம்புகிறாள்! உதைத்த மரத்தில் இருந்து பூக்கள் சொரிகின்றன!
அன்னையின் ஊஞ்சல் வீசி வீசி ஆடுகிறது! காற்றைக் கிழித்து.....அவ்வளவு வேகம்!
ஆனால் அதையும் விட வேகமாய் இன்னொன்றும் ஆடுகிறது! எது? = மதுரை மீனாட்சியின் கம்மல்!


பசும்பொன்னில் தொங்க விட்ட கிளிக் கூண்டு போல் ஒரு காதணி! கீழே பாண்டி முத்துக்கள் பதித்த அந்த லோலாக்கு! அது ஊஞ்சலை விட வேகமாக ஆடுகிறதாம்!
ஊஞ்சல் அப்புறம் போய், இப்புறம் வருவதற்குள்...தொங்கட்டான் ஒரு சுற்று முடித்து விடுகிறது! அப்புறம் தான் ஊஞ்சலே ஒரு சுற்று முடிக்கிறது! ஆகா, இது எப்படிச் சாத்தியம்?

கற்பனை செய்து பாருங்கள்!
* ஊஞ்சல் ஒரு பெண்டுலம்!
* ஊஞ்சலில் உள்ளவள் காதில் ஒரு பெண்டுலம்!
ஊஞ்சல் பெண்டுலம் ஆட, ஊஞ்சலில் உள்ளவள் பெண்டுலமும் ஆட...
Both the pendulums are in Simple Harmonic Motion! :)

பெண்டுலத்தைத் தமிழில் ஊசல் என்று சொல்லுவார்கள்!
இரண்டு ஊசல்களை ஒரே நேரத்தில் ஒரே Plane-இல் இயக்கி விட்டால்...
இரண்டும் ஒரே சமயத்தில் கடக்கின்றன!
சமச்சீர் இயக்கத்தில் இயங்குகின்றன! (Simple Harmonic Motion)!
ஆனால் ஊசலின் நீளத்தைப் பொறுத்து தான் அதன் வேகமும் அமையும் என்பது இயற்பியல் சூத்திரம்! ஞாபகம் இருக்கா மக்கா? :)


* ஊஞ்சல் சங்கிலியின் நீளம் அதிகம்! அதனால் நேரமும் அதிகம்!
* கம்மல் சங்கிலியின் நீளம் குறைவு! அதனால் நேரமும் குறைவு!
Given the same acceleration due to gravity at the same place...
the time taken for oscillation
is directly proportional
to the length of the pendulum! :)

எப்படி இருக்கு அன்னை மீனாட்சி செய்யும் Pendulum Experiment (ஊசல் சோதனை)?
சுட்டிப் பொண்ணு மீனாட்சி, மாநிலத்திலேயே முதல் மாணவியா வந்துற மாட்டாளா என்ன? :)


ஊசல் பாடலைப் பார்ப்போமா?
இரு பதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு
இரைத்திடும் அரிச் சிலம்பும்
இறும் இறு மருங்கு என்று இரங்கு மேகலையும் பொன்
எழுது செம் பட்டு வீக்கும்


இரண்டு கால்களில் மெல்லிய ஜில்ஜில் எழுப்பும் கிண்கிணிக் கொலுசும்,
"அம்மா, தாயே, மீனாட்சி, அங்கயற்கண்ணி" என்று முறையிட்டு முனுகும் சிலம்பும்,
இற்று விடுமோ, இற்று விடுமோ என்னும் ஒயிலான இடுப்பு அணி மேகலையும்,
தங்க ரேக்கு நூலிழை ஓடும் பட்டுத் துணி, அதை இறுக்கி இடுப்பில் கட்டியிருக்கா மீனாட்சி!

திரு இடையும் உடை தாரம் ஒட்டி யாணமும்
செங்கைப் பசுங் கிள்ளையும்
திரு முலைத் தரள உத்தரீயமும் மங்கலத்
திரு நாணும் அழகு ஒழுக நின்


அவள் இடையில் உடையும் ஒட்டியாணமும் புரள...
அவள் கையில் பச்சைக் கிளி கீச் கீச் என்று கத்த...
அவள் முலைகளில் முத்து மாலை வரிசைகள் தவழ...
அவள் மங்கலத் திருக்காப்பை அணியுமாறு அழகாக ஆடிட...

அருள் பொழியும் மதிமுகமும் முகமதியின் நெடுநிலவு
அரும்பு குறு நகையும் ஞான
ஆனந்த மாக்கடல் குடைந்து குழை மகரத்
தோடு அமராடும் ஓடு அரிக்கண்


மீனாட்சியின் அருள் முகம், பூர்ண சந்திரன்! முழு மதி!
அதில் தோன்றும் குறு மென் புன்னகையோ, பிறை மதி!
ஞானாந்தம் என்னும் கடலைக் குடைந்து செய்த மகரத் தோடுகள், தொங்கட்டான்கள் ஆட...அந்த ஆட்டத்தின் வேகம் என்ன தெரியுமா? கண்கள் பாயும் வேகம்! அம்புட்டு வேகம்! ஊஞ்சலை விட வேகம்!
இப்படி மீனாளின் தோடுகளுக்கும், மீனாளின் கண்களுக்கும் இடையே வேகப் போட்டி!

பொரு கயலும் வடிவழகு பூத்த சுந்தர வல்லி
பொன்னூசல் ஆடியருளே!
புழுகு நெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்த கொடி
பொன்னூசல் ஆடியருளே!


தோடு ஆடி, அதோடு கயல் கண் ஆடி, வடிவழகு பூக்கும் வடிவாம்பிகே! சுந்தரேசனின் சுந்தரவல்லி! பொன்னூஞ்சல் ஆடி அருளே!
புனுகும் நெய்யும் பூசிய சொக்கனின் அழகுக்குக் கொஞ்சமும் இளைச்சவள் அல்ல நீ! எங்கள் மீனாட்சிக் குழந்தையே! பொன்னூஞ்சல் ஆடி அருளே!


இதுவே, மீனாட்சி ஊஞ்சலின் வேகம்!
அதை விட, மீனாட்சி தோடு வேகம்!
அதை விட, மீனாட்சி கண்கள் வேகம்!
அதை விட, எங்கள் மனது வேகம் அம்மா!.....உன்னிடம் பறி கொடுத்த மீனாட்சி மனது வேகமோ வேகம்!

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் இறுதிப் பாடல் இது!

குமரகுருபரர் பாடி முடிக்கவும், எங்கிருந்தோ ஓடியே வருகிறாள் ஒரு சுட்டிப் பெண்!
திருமலை நாயக்கர் மடி மேலே பிஞ்சுப் பாதங்களால் ஏறுகிறாள்!
மன்னன் கழுத்தில் இருந்த முத்து மாலையைப் பிஞ்சுக் கரங்களால் பறிக்கிறாள்!
இறங்கி வந்து, குமரகுருபரர் கழுத்தில் போட்டு விட்டு.....ஓடியே போகிறாள்!

மதுரை அரசாளும் எங்கள் மீனாட்சி திருவடிகளே சரணம்!
Read more »

Sunday, March 22, 2009

பக்தி For Dummies - Part 3!

"I am Unfit"-இதைப் பத்தி இந்தப் பதிவில் கட்டாயம் பாத்துறலாம்! சஸ்பென்ஸ் போதும்! மக்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! :) சென்ற பதிவு இங்கே!

"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கிட்டா, இன்னிக்கே மோட்சம்!" என்று "விளையாட்டாகவும்", "சீரியசாகவும்" சென்ற பதிவுகளில் சொல்லி இருந்தேன்!

அறிவினால் மட்டுமே இறைவனை அளந்துற முடியுமா?
"அறிவே தெய்வம்"-ன்னு வேணும்னா சில பேரு சொல்லிக்கலாம்! அதுக்கு பாரதியார் பாட்டு வேற இருக்கு! ஆனால் ஒருக்காலும் அறிவு தெய்வம் ஆகி விடாது! (டிஸ்கி: நம்ம சக பதிவர் பெயரைச் சொல்லலீங்கோ) "அறிவே தெய்வம் இல்லை" என்கிற அறிவே தெய்வம்! :)


பெற்றோர்கள் சொல்லித் தானே, நாம் அவர்களின் பிள்ளை என்றே நமக்குத் தெரிகிறது?
தினம் தினம் அம்மா-அப்பாவை ஆயிரம் கேள்வி கேக்குறோமே? ஆனால் "அந்தக்" கேள்வியைக் கேட்போமா? :) அதே போலத் தான் இறைவனும்!

நாம் இன்னாருக்குத் தான் பிறந்தோம் என்று நம்மில் எத்தனை பேர் "உறுதியாகச்" சொல்ல முடியும்? ஒவ்வொருவரும் பயாலாஜிக்கல் எவிடென்ஸ் கேட்டுக் கொண்டும், காட்டிக் கொண்டும் இருக்க முடியுமா? இப்படி, நம்மையே நாம் 100% அறியாத போது, நாம எப்படி இறைவனை 100% அறிய முடியும்? :)

அட, டெக்னாலஜி ரொம்ப முன்னேறிப் போச்சு, உலகம் ரொம்ப பின்னேறிப் போச்சுப்பா! யாரை நம்பறதுன்னே தெரியலை! அதுனால பள்ளியில் சேர்க்கும் முன்போ, கல்யாணத்துக்கு முன்போ, எல்லாரும் Genetic Test என்னும் மரபியல் சோதனை செஞ்சிக்கிட்டு அவங்கவங்க பெற்றோரை "உறுதிப்படுத்திக்கணும்"-ன்னு சட்டமா கொண்டாற முடியும்? :) அதே போலத் தான் இறைவனை "உறுதிப்படுத்திக்" கொள்வதும்!

அரியவனை - அரி அவனை, அறிவினால் "மட்டுமே" உறுதிப் படுத்த முடியாது!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!


சிறு வயதில் இருந்தே, இவங்க தான் உண்மையான அம்மா-அப்பா என்று எப்படி ஏற்றுக் கொள்கிறோம்? சினிமாவில் வேண்டுமானால், கர்ணன் போல கைவிட்ட குழந்தை, தத்து கொடுத்த குழந்தை-ன்னு க்ளைமாக்ஸில் கொஞ்சம் சூடு பிடிக்கும்!
* திடீர் என்று ஒரு நாள், "உண்மை" தெரிய வந்தாலும், "உண்மை இல்லாத" அம்மா அப்பாவை உதற முடிவதில்லையே! - ஏன்?
* தத்துக் குழப்பம் இல்லாத நிஜமான பெற்றோரைக் கூட, இவங்க தான் அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்ளாமலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறோமே? - எப்படி?

அறிவே தெய்வம் இல்லீங்க! அன்பே தெய்வம்!
Knowledge is God என்று யாரும் சொல்லலை! Love is God-என்று தான் மேலை நாட்டவனும் சொன்னான்! இந்தப் பலன் கருதா அன்பினால் தானே அம்மா-அப்பா என்று "உறுதிப்படுத்திக்" கொள்கிறோம்? இல்லை அறிவினாலா? நீங்களே சொல்லுங்க!


ஆக, ஞான விசாரணையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!
கர்ம சாதனையால் இறைவனை "உறுதிப்படுத்த" முடியாது!


* கர்ம யோகம் = சடங்கு, மந்திர ஜபம், தந்திர பூஜை, "விதிச்சதைப் பண்ணுறது" ...
* தியான யோகம் = யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், சமாதி...
* ஞான யோகம் = சாதகம், சத்-சம்பத்து, விவேகம், வைராக்கியம், ஜீவன் முக்தி...
என்றெல்லாம் விதம் விதமா அடுக்கிட்டு போகலாம்!

ஆனால் அத்தனையும் "சம்சார துக்க நிவர்த்தி" என்ற ஒரு பொருளின் மேல் கண் வைச்சு தான் பின்னியிருக்கு! அதிலும் "சுயநலம்" உண்டு!
பற்று அறுத்துட்டேன், பற்று கொஞ்சம் கொஞ்சமா போயிரிச்சி-ன்னு சொல்லிக்கலாமே ஒழிய, இருக்குற பற்றெல்லாம் அங்க தான் இருக்கு! :))

சென்ற பதிவில் ஹோமம், சம்ஸ்காரம்-ன்னு கர்மா பண்ணுறதை ரொம்ப கிண்டல் அடிச்சிட்டேன்-ன்னு சில நண்பர்கள் தனிமையில் குறைபட்டுக் கொண்டார்கள்!
ஒரு அனானி அன்பர் கேட்கவே கேட்டுட்டாரு! தியான யோகம், ஞான யோகம், 5 Watts Bulb-ன்னு சொன்னது மட்டும் சிரிப்பா இருந்துச்சாம்! ஆனால் கர்ம யோகம் பற்றி மட்டும் தவிர்த்து இருக்கலாமே என்று கேட்டு இருந்தார்! :)

அந்த உரையாடல் அடியேன் சொன்னது இல்லீங்க!
கர்மவாதிகள் உட்பட இன்னிக்கி பலரும் போற்றும் பரனூர் அண்ணா (என்னும்) கிருஷ்ண ப்ரேமி சுவாமிகள் சொன்னதைத் தான் பதிவில் கொடுத்து இருந்தேன்!
என்னிடம் வழக்கமாக கோபித்துக் கொள்ளும் சில அனுட்டான சீலர்கள், இப்போ பரனூர் அண்ணா கிட்டே போய் கோபித்துக் கொள்ள முடியுமா? :))

மக்களே...யாரையும் குற்றம் சொல்லணும்-ன்னு அடியேன் நோக்கம் அன்று!
கர்மப் பிடிப்பில் கெட்டியாக ஒட்டிக் கொண்டால் ஆத்ம சாஷாத்காரம் தான் தளும்பும்!
பரமாத்ம சாஷாத்காரம் வராது! உள்ளத்தில் பகவத் கருணை ஊறாது என்பதற்காகத் தான் அத்தனை விளக்கங்களும்!
அது உங்களுக்குக் கோபம் ஏற்படுத்தி இருந்தால், வீழ்ந்தெழுந்து கொள்கிறேன்! அடியேனை மன்னிப்பீர்களாக!சொல்லப் போனால்...நீங்க கிருஷ்ண பரமாத்மாவைத் தான் மன்னிக்கணும்! :)

நானாச்சும் ஏதோ லைட்டாச் சொல்லிட்டுப் போயிட்டேன்! ஆனா அவர் சும்மா பிச்சிப் பிச்சி வாங்குறாரு இந்த ஸோ கால்டு ஆச்சாரத்தை!
சிலர் தனக்குச் சாதகமாகக் காட்டும் அதே பகவத் கீதையில் தான் இதுவும் இருக்கு! :))

யாம் இமாம், புஷ்பிதாம் வாசம், ப்ரவதந்தி அவிபாஸ்சித:
வேத வேத ரதா: பார்த்தா, நான்யத் அஸ்திதி வாதினா 2:42

வேதம் விதிச்சபடி நடக்கிறேன் என்று சொல்லிக் கொள்ளும் சிலர், அலங்கார புஷ்பம் போல வெறும் கோஷம் தான் இடுவார்கள்! தங்களுக்குப் பிடித்தமான வேத வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சுயநலமாகக் கையாளுவார்கள்!

காமாத்மனா, சொர்க்க பரா, ஜன்ம-கர்மா-பலப்ரதாம்
க்ரியா விசேஷ பகுலாம், போக ஐஸ்வர்ய, கதிம் ப்ரதி! 2:43

சொர்க்கம், கர்மா, இஷ்டி, ஹோமம்-ன்னு, உலகாயுதமாக, விதம் விதமான சடங்குகளையும் கர்மாக்களையும் செய்து கொண்டு, வீணே காலம் கழிப்பார்கள்!

(அதாச்சும் வேத சாகைகளில் உள்ள கர்ம காண்டங்களிலேயே உட்கார்ந்து கொள்வார்கள்! சடங்கு தாண்டி, அடுத்து, ஞான காண்டத்துக்கு, "பகவானே எல்லாம்" என்று வரவே மாட்டார்கள்! பேச மட்டும் செய்வார்கள்! ஆனால் நடைமுறைப் படுத்த மாட்டார்கள்!)

ந வேத! யக்ஞ தியாய-னைர், ந தனைர், ந ச க்ரியா-பிர்!
ந தபோ-பிர் உக்ரை! ஏவம் ரூப சாக்ய அகம்! 11:48

வேதப் படிப்பாலேயோ, யாக ஹோமங்களாலேயோ,
தட்சிணை மற்றும் கிரியைகளாலோ, தன்னலமான தான தவங்களாலோ,
என்னைக் காண முடியாது! அடைய முடியாது!
(ஏக பக்திர் விசிஷ்யதே என்னும் "ஏக பக்தி" கொண்ட உன்னால்(பக்தனால்) மட்டுமே காண முடியும்!)

உடன் பிறவா சகோதரிகள், உடன் பிறந்த அரசியல்வாதிகள்...எத்தனையோ பூஜை, ஹோமம்-ன்னு விதம் விதமாப் பண்ணுறாங்களே! "விதிச்சபடி" ஆஹூதி எல்லாம் சூப்பராக் கொடுக்கறாங்க தானே? ஆனால்.....

* ஹோமம் செய்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
* ஹோமம் செய்து வைப்பவர்களுக்கும் தெரியும் = ஆசாமிகள் பகவானை அண்ட முடியாது-ன்னு!
இருந்தாலும் மாங்கு மாங்கு-னு செஞ்சிக்கிட்டு தான் இருப்பாய்ங்க! :))

ஆக, இந்தக் கீதையின் சுலோகங்களில் இருந்து தெரிகிறது அல்லவா?
* ஞான-கர்ம யோகங்கள் தன்னை மட்டுமே உணர்த்தும்! இறைவனை உணர்த்தாது!
* பக்தி யோகம் என்னும் இறை அன்பே பகவானை உணர்த்தும்! அதுவே "உண்மையான" கீதா சாரம்!


இப்போ "லாயக்கில்லை", "Unfit'-க்கு வருவோம்! :)

* ஞான காண்டம் அத்தனையும் எப்போ படிச்சி, கர்ம காண்டம் அத்தனையும் எப்போ பண்ணி, நீ எப்பப்பா மலையேறது?
* நம் பிறப்பையே நாம் 100% அறியாத போது, இதை எல்லாம் படிச்சா அறியப் போகிறோம்?
* அப்படியே அறிஞ்சாலும், அதையெல்லாம் 100% பண்ணவா போகிறோம்? நம்மைப் பத்தி நமக்குத் தெரியாதா? பேச்செல்லாம் பதிவில் தானே? :) பேசும் போது நல்லா இலக்கணமாப் பேசீருவோம்! பாட்டெழுதும் போது கரெக்ட்டா கோட்டை விட்டுற மாட்டோமா என்ன? :))

அதனால் தான்.....
நான் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை! I am Unfit - என்று "சொல்லிச் சொல்லி"ச் சரணாகதி செய்கிறார் மாறன் என்னும் நம்மாழ்வார்! அவரே இப்படிச் சொன்னா, நாம எல்லாம்? :))

* நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
* நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
* ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!

தெரியேன் பாவியனாய், பல தீமைகள் செய்து விட்டேன்!
பெரியேன் ஆயின பின், பிறர்க்கு உழைத்தே ஏழை ஆனேன்!


இப்படி ஒன்றுக்கும் லாயக்கில்லா நான்...
* அகலகில்லேன் = உன்னை அகல மாட்டேன்!
* புகல் ஒன்று இல்லா அடியேன் = போக்கிடம் வேறொன்று இல்லை!

ஞான-கர்ம-தியான யோகம்-ன்னு ஒரு யோகமும் இல்லை!
அகல மாட்டேன் என்ற அன்பு யோகம் மட்டும் தான் இருக்கு!

* எனக்கு வேற போக்கு கிடையாது! = எனக்கு நீ, உனக்கு நான்!
* உன் தன்னோடு+உறவேல்+நமக்கு = அ+உ+ம் = ஓம்! இங்கு ஒழிக்க ஒழியாது!

புகல் ஒன்று இல்லா அடியேன்...உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே! = இதுவே பரிபூர்ண சரணாகதி!
இனி வரும் பதிவுகளில் கேள்வி கேட்டு, கேள்வி கேட்டு, இது சாத்தியாமா-ன்னு பார்ப்போம்!


லைட்டாப் புரிஞ்சி இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அட, ஒன்னுத்துக்கும் லாயக்கில்லா எனக்கே புரியுது! உங்களுக்குப் புரியாதா? இன்னொரு தபா பதிவை வாசிச்சா போச்சு! :)

டேய் கேஆரேஸ்ஸ்...வார்த்தை ஜாலமாப் பேசிட்டாப் போறுமா? ஆழ்வார் பாட்டில் இருந்து எடுத்துக் காட்டி, ஞான-கர்ம யோகம் எல்லாம் இல்லைன்னு சொல்லிட்டாப் போறுமா?
எங்களுக்கு வேதங்கள் தான் அடிப்படை! வேதாந்தம் தான் அடிப்படை!
ஏதோ லாயக்கு இல்லை, Unfit, இன்னிக்கே மோட்சம்-ன்னு "அ-வைதீகமாப்" பேசுகிறாயே! இதுக்கெல்லாம் ஒரு சுலோகத்தையாச்சும் உன்னால் காட்ட முடியுமா? :)

ந தர்ம நிஷ்டோஸ்மி = நியம நிஷ்டை இல்லை!
நச் ஆத்ம வேதி = வேத வழியில் ஆத்ம ஞானம் இல்லை!
ந பக்திமானு = பெருசா நான் பக்திமானும் இல்லை!
த்வத் சரணார விந்தே = ஆனால் "அன்பினால்" சரணார விந்தம், திருவடிகளைப் பற்றிக் கொண்டேன்!

அகிஞ்சனக: = எனக்கு வேறு கைம்முதல் இல்லை!
அனன்ய கதி: = எனக்கு வேறு கதியும் இல்லை!

எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு புரிந்து கொண்ட நம் ஆழ்வாருக்கு மோட்சம் என்றால்.....அப்படியே புரிந்து கொள்ளும் நமக்கும் இன்னிக்கே மோட்சம்! :))


பொதுவாக வேதங்கள் தான் ஞான பரமானவை! ஞானம் கொடுக்கும்! பேத ஸ்ருதி, அபேத ஸ்ருதி-ன்னு புத்திக்குத் தீனி போடுவது போல் பேசும்!
இந்த ஆழ்வார்-நாயன்மார்களின் பாசுரம் எல்லாம் ஒரே "பாவமா"-ன்னா இருக்கு? "ஞானமா" இதுல ஒன்னும் இல்லையே!

ஆழ்வார் அழுவறாரு! தூது விடறாரு! காதல் அது இது-ன்னு "லோக பரமா"-ல்ல பேசுறாரு? இதுல பெருசா தத்துவம் இல்லேயேப்பா!
சரி, போனாப் போவுது, இதுவும் இருக்கட்டும்! நம்ம பகவானை அவங்களும் பாடிட்டாங்க! வேற வழியில்ல!

* ஆரம்ப நிலை = ஆழ்வார்/நாயன்மார்கள்!
* இறுதி நிலை = வேதம்-ன்னு இருக்கட்டும்!
"மூட" பக்தியில் ஆரம்பிச்சி...படிப்படியா ஞானம், கர்மா-ன்னு முன்னேறி வரட்டும் = இப்படிச் சொல்பவர்களைப் போல பேதைகள் வேற யாருமே இருக்க முடியாது!

வேதாந்த தேசிகர் = பெரிய மகான்! சகல வேத சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்! தமிழில் நூல்கள் சில எழுதி இருந்தாலும், வடமொழியில் பெரும் பெரும் வித்தகர்! சுலோகம்-ன்னாலே ஆயிரம் ஆயிரமாகத் தான் வந்து விழும் இவருக்கு!

இன்னிக்கி ஆச்சாரம் பேசும் பல பேர், இவரைத் தான் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவார்கள்! வடமொழியில் பல பனுவல்கள் செய்து விட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக, இவரையும் நியம நிஷ்டை என்னும் வளையத்துக்குள்ளே அடைத்து வைத்து விட்டார்கள்! :(

ஆனால் இவரைப் போல உள்ளம் கனிந்த அன்பரைக் காண முடியாது! அப்பேர்ப்பட்ட வேத வித்து!
அவருக்கே வேத வேதாந்தம் படித்து மிஞ்சியது என்னவாம்? = குழப்பம் தான் மிஞ்சியதாம்! ஹா ஹா ஹா! நான் சொல்லலைங்க! அவரே சொல்கிறார்!
"செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!"


தெளியாத மறை நிலம் = வேதம்! தெளிவே ஏற்படவில்லையாம்!
அப்புறம் ஆழ்வார்களின் ஈரப் பாசுரங்களை, ஈரமாகவே வாசித்த போது தான், "ஆகா...அதுக்குப் பொருள் இதுவா?" - என்ற தெளிவே ஏற்பட்டுச்சாம்!
இப்படிச் சொன்னதற்காக "வேதத்தைக் குறைச்சிப் பேசிட்டாரு", "வேத மாதாவை மதிக்கலை" என்று அவரைத் தள்ளியா வைக்கிறோம்? இல்லை அல்லவா? அதை நம் அன்பர்களும் மனசாட்சியால் "உணர்ந்து" பார்க்க வேணும்!

* வேதங்கள் இறைவனின் பரத்துவத்தை நிலைநாட்டும்!
அவன் ரொம்ப பெரியவன் என்று அவனை "அங்கு" வைத்து, " அங்கு" போக வழியைக் காட்டிச் சொல்லும்!
* பாசுரங்கள் இறைவனின் செளலப்யத்தை நிலைநாட்டும்!
இவன் ரொம்ப எளியவன் என்று இவனை "இங்கு" வைத்து, "இங்கு" போக வழியைக் காட்டிக் கொடுக்கும்!


மக்களே...நினைவில் வையுங்கள்!
வீர-தீர சாகசங்கள், ஞான-கர்ம சாகசங்களை வைத்து...
மற்ற சாம்ராஜ்யத்தைப் வேணும்-ன்னா பிடிக்கலாம்! ஆனால் பக்தி சாம்ராஜ்யத்தைப் பிடிக்க முடியாது!
சுய சாகசங்களால் பிடித்த சாம்ராஜ்யங்கள் கூட, கொஞ்ச தலைமுறைக்குத் தான்! ஆனால் பிரகலாத பக்தி சாம்ராஜ்யம் அப்படி அல்ல!

மோட்சம் என்னும் மந்திரச் சொல்லில் மயங்கி விடாதீர்கள்!
மோட்சம் = அப்பாடா! பிறவிக் கஷ்டமே இல்லாம ஜாலியா இருக்கலாம்-ன்னு சுயநலத்தில் கண் வைத்து ஏமாந்து போகாதீர்கள்!
சுயநலம் இருப்பது தெரிஞ்சிச்சோ...இந்தக் கர்மா செய்யுங்கள், அந்த யாகம் செய்யுங்கள்-ன்னு,
உங்கள் சுயநலத்துக்கு, சுயநலத்தைத் தான் தூக்கிக் கொண்டு வருவார்கள்! மோட்சம் அதுவல்ல!

சம்சார துக்க நிவர்த்தி என்பதே மோட்சம் ஆகி விடாது! சரி, கொஞ்சம் மாற்றி, அந்தமில் பேரின்பம் தான் மோட்சம் என்றும் சொல்லிப் பார்த்தார்கள்!
வெறுமனே அந்தமில் பேரின்பம் தான் மோட்சமா? நல்லா இல்லையே-ன்னு அதற்கும் இறைவன் ஒப்புக்கலையாம்! :)

அப்புறமா, அந்தமில் பேரின்பத்து, "அடியவர்களோடு"...கைங்கர்ய நித்ய நிரைதிஹி-ன்னு மாற்றி எழுதினாப் பிறகு தான் பாடல் ஓக்கே ஆச்சாம்! :)
கூடும் "அன்பினால்" கும்பிடலே அன்றி, வீடும் வேண்டா விறலில் விளங்கினார்!

இறை அன்பா? = அப்படின்னா என்ன? அதை எப்படிப்பா செய்யறது?
நாங்க இறைவன் கிட்ட ஏற்கனவே அன்பாத் தானே இருக்கோம்?
சுப்ரபாதம், திருப்பாவை, அலங்காரம், அந்தாதி, கந்தர் அனுபூதி, ஹ்ருதயம்-ன்னு டைப் டைப்பா எத்தனை பதிவு போடறோம்? :)
பெருசா சொல்ல வந்துட்ட? இறை அன்பு-ன்னா என்ன? சொல்லேன் பார்ப்போம்!

ஒவ்வொன்றிலும்,
* இதைச் செய்தால் எம்பெருமான் திருவுள்ளம் உவக்குமா?
* இல்லை அவன் திருமுகம் வாடுமா?

என்று எண்ணுவதே இறை அன்பு!* தென்கலை/வடகலை, சைவம்/வைணவம், ஆலயத்தில் இந்துக்கள்/இந்துக்கள் அல்லாதார்-ன்னு விதம் விதமா கோஷ்டி கட்டறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* தங்கத்தைப் புழு என்று தரையில் வீசிய வேதாந்த தேசிகருக்கு, தங்கக் கவசம் சாத்த காசு வசூலிக்கறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* பதிகங்களை அம்பலத்தில் பாட ஆகமத் தடைன்னு சும்மானா சொல்லிட்டு, அம்பலத்தில் வழுக்கி விழுமாறு நாமே எண்ணெய் ஊற்றுகிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* கோயிலில் மற்ற அடியார்கள் எல்லாம் கால் கடுத்து நின்று கொண்டிருக்க, நாம் மட்டும் செல்வாக்கு காட்டுறோமே! நம்மைக் கூசும் கண்களால் சக அடியார்கள் பார்க்க, சட்டையே பண்ணாமல் சிறப்புத் தரிசனம் செய்கிறோமே = இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

* கொல்லாமை என்பது புத்த பகவான் "விதிச்சதாச்சே"! நமக்குப் பிடிக்கலை, நம்முடன் ஒத்து வரலை என்பதற்காக, ஒரு இனத்தையே ரத்தத்தில் மிதக்க விடுகிறோமே = இதனால் புத்த பகவான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?...

நாம் செய்யும் பல செயல்களில்,
* இதனால் எம்பெருமான் உள்ளம் உவக்குமா?/வாடுமா?
என்று பகவானைப் பாவிக்கப் பழகுங்கள்!


உங்களோடு கூட பாவிக்க, பாவிக்க....திருவாய்மொழி: பாவனை அதனைக் கூடில், அவனையும் கூடலாமே! அவனைக் கூடுவது தானே மோட்சம்?

(பக்தி For Dummies...தொடரும், எம்பெருமான் உள்ளம் உவக்குமா?...)
Read more »

Monday, March 16, 2009

பக்தி For Dummies - Part 2!

"ஆகா.....ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களைப் பிடிக்காதா?.....எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களைத் தான் பிடிக்குமா? ஹா ஹா ஹா! சும்மா விளையாட்டுக்குத் தானே சொல்கிறாய் கண்ணா?" முந்தைய பாகம் இங்கே!

"இல்லை அர்ச்சுனா! என்னை அறிந்து கொள்ளும் முன்னால், முதலில் உன்னை நீயே அறிந்து கொள்ளவே ஞான-கர்ம யோகங்கள்! ஆனால் அதை மட்டுமே பிடித்துக் கொண்டார்கள்! என்னை விட்டு விட்டார்கள்! இப்படிப்பட்டவர்களை எனக்குப் பிடிக்காது அருச்சுனா!"

"ஏன் கண்ணா?"

"கர்மா பண்ணுகிறேன், கர்மா பண்ணுகிறேன் என்று கர்மாவிலேயே ஊறிப் போய் விட்டார்கள்! குளிரைப் போக்கத் தானே எரியும் விறகுக் கட்டை? அதை இறுக்கி அணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? அதே தான் இவர்களுக்கும் ஆகிப் போனது!
ஒரு கட்டத்தில் ஆண்டவனே முன்னால் வந்து நின்றாலும், நீ ஆகமப் பிரகாரம் வந்திருக்கிறாயா? என்று கேட்கும் அளவுக்கு ஆச்சார போதை தலைக்கேறி விட்டது!"

"ஆகா! உண்மையாகவா கண்ணா???"

"* பிருகு மகரிஷி = கர்மா எல்லாத்தையும் ஒன்னு விடாமல் செய்த யோகி தானே? ஆனால் அவர் தான் திருமகள் வாழும் திருமார்பைக் காலால் எட்டி உதைத்தார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பு அவ்வளவு தான்!
* துர்வாச மகரிஷி = ஞான-கர்ம யோகம் செய்த ஆச்சார சீலர் தானே? ஆனால் அவர் தான், என் பரம பக்தனான அம்பரீஷனை, விரதம் முடிக்க விடாமல், துன்புறுத்தினார்! அவர் செய்த கர்மாவின் மதிப்பும் அவ்வளவு தான்!

ஞான-கர்ம யோகம் தன்னை மட்டுமே காட்டும்! என்னைக் காட்டாது! ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே தரும்! பரமாத்ம சாஷாத்காரம் தராது!"

"உம்ம்ம்...புரிகிறது! அப்போது இவர்களின் நிலை? இவர்கள் என்ன ஆவார்கள் கிருஷ்ணா?"

"’தானே எல்லாம்’ என்று ஆகி விடுவார்கள்! தமது கர்மாவே எல்லாம், தமது ஆச்சாரமே எல்லாம் என்று ஆகி விடுவார்கள்...துர்வாசர், பிருகுவைப் போலே!"

"ஆகா! அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் கண்ணா?"

"இவர்களை எல்லாம் விட, என்னையே நினைந்து, காதலாகி, கசிந்து கண்ணீர் மல்குபவன் எவனோ.....அவனே பக்தன்!
அவனே சிறப்பானவன்! அவனே எனக்குப் பிடித்தமானவன்! இதுவே என் கருத்து அருச்சுனா!"
யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா:
6:47

"அப்படியா?"

"ஆமாம்! குகன் என்ன கர்மா செய்தான்? சபரி என்ன செய்தாள்? அனுமன் என்ன செய்தான்? வீடணன் என்ன செய்தான்? விதுரர் என்ன செய்தார்?
யாரை எல்லாம் நான் தழுவி அணைத்திருக்கேன் என்று யோசித்துப் பார்த்தால் உனக்கே தெரிந்து விடும் அர்ச்சுனா!"என்னிடம் நான்கு வகையான மக்கள் வருகிறார்கள் அர்ச்சுனா! எதற்கு வருகிறார்கள் தெரியுமா?
சதுர் விதா பஜந்தே மாம்
ஜனா சுக்ருதோ அர்ஜூனா
ஆர்த்தோ, ஜிக்ஞாசுர், அர்தார்த்தி
ஞானீ ச பர தர்சப 7.16


* பலர் துக்கம் காரணமாக என்னை வேண்டி வருகிறார்கள்! = ஆர்த்தி!
அனுபவிக்க முடியலையே! கஷ்டப் படுறேனே! கண்ணா! காப்பாத்து! உன் மலைக்கு நடந்தே வரேன்! விரதம் இருக்கேன்! காவடி எடுக்கிறேன்! உண்டியல்ல துணி முடிஞ்சி ஒத்தை ரூவா போடுறேன் முருகா!

* பலர் சந்தோஷம் வேணும் என்பதற்காக என்னை வேண்டுகிறார்கள்! = அர்த்த ஆர்த்தி!
செல்வம், புகழ், போகம் எல்லாம் இன்னும் கொடுப்பா! இதை விடச் சிறப்பா என்னை வச்சிக்கோ! உன் உண்டியல்-ல ஆயிரத்தி ஒன்னாப் போடுறேன் பெருமாளே!

* பலர் ஆராய்ச்சி செய்ய ஆசைப்பட்டு வருபவர்கள்! = ஜிக்ஞாசு!
அது என்ன ஜீவாத்மா-பரமாத்மா? வேதம் அதைப் பத்தி என்ன சொல்லுது? ஞான பரமா யோசிப்போம்! பிரம்மத்தை அறிந்து கொள்வோம்! மாயை போயிடும்!
அப்பாடா, ஒன்னாயிட்டா, பிறவித் தொல்லை இருக்காது! ஜீவன் முக்தி! மோட்சம்!

* ஒரு சிலர் மட்டும், என்னிடம் என்னையே கேட்டு வருபவர்கள் = பக்தர்கள்! அடியவர்கள்!
இவர்களுக்கு வேண்டுவது எல்லாம் கண்ணனே! கண்ணனின் சிரிப்பே!

மோட்சம் கொடுக்கறேன், வருகிறாயா? என்று கேட்டேன்! வேண்டாம் என்று சொல்லி விட்டான் ஆஞ்சநேயன்!
தனக்குப் பாவம் வருதா? பரவாயில்லை! எங்கள் காலடி மண்ணைக் கண்ணன் தலைக்குப் பூசுங்கள்! கண்ணன் தலைவலி தீர்ந்தால் போதும் என்று சொல்லி விட்டார்கள் மாட்டுக்காரப் பெண்கள்!

என்னை அன்றி அவர்களுக்கு வேறு கேட்கக் கூடத் தெரியாது! இவர்கள் தான் உண்மையான ஞானிகள்! ஞான பரமாகப் பேசுபவன் ஞானி அல்லன்! எம்பெருமான் திருமுக உல்லாசமே தன் உல்லாசம் என்று இருப்பவன்! அவனே ஞானி!
அவனை மூட பக்தன் என்று சிலர் சொல்லலாம்! இல்லை! அவனே ஞானி!
அவனே எனக்குப் ப்ரியமானவன்!

தேசாம் ஞானி நித்ய யுக்தா, ஏக பக்திர் விசிஷ்யதே
ப்ரியோ ஹி ஞானினோ அதி அர்த்தம், அகம் சச மமப் ப்ரியஹ! 7.17

அவர்களுக்கு நானும் ஏதாச்சும் திருப்பிச் செய்யணும்-ன்னு பார்க்கிறேன்! முடியவில்லை அர்ச்சுனா! அவர்கள் என் மீது வைத்த காதலில், பாதியைக் கூட என்னால் திரும்பத் தர முடியவில்லை! நானே விக்கித்துப் போய் விடுகிறேன் அருச்சுனா!
என்ன சொல்வது? அதான் "மம ப்ரியஹ, மம ப்ரியஹ" - "எனக்குப் பிடித்தமானவர்கள், எனக்குப் பிடித்தமானவர்கள்" என்று கீதையில் சொல்லிச் சொல்லி, நானே மாய்ந்து போகிறேன்!இனி...நம்மில் பலரும் நன்கறிந்த ஒரு குரு, அவர் சீடர்களுடன் உரையாடுவதை, எழுத்து வடிவில் தருகிறேன்! இவர் யார் என்று பின்னால் பார்க்கலாம்!

"குருவே, இறைவனைச் சென்று அடைய, "நான்".."நான்".."நான்"... ஏதாச்சும் ஞானம்/கர்மா/யோகம்-ன்னு செய்யணுமா?

"செஞ்சி கிழிச்ச போ! கர்ம யோகம் தெரியுமா?"

"ஓ தெரியுமே"

"என்ன தெரியும்?"

"கீதையில இருக்கே!"

ஹிஹி! அதான் தெரியும்! ஒரு மணி நேரம் லெக்சர் பண்ணத் தெரியும்! பத்து கட்டுரை போடத் தெரியும்! கர்ம யோகத்தில் இரு பார்ப்போம்! ஆஆஆங்! அது தெரியாது! :)
குடும்பத்தில் இருந்து கொண்டே இருப்பது தானே கர்ம யோகம்? சுக-துக்கே சமே க்ருத்வா, லாப-அலாப, ஜய-அஜயெள-ன்னு இரேன் பார்ப்போம்! ஆஆஆங்! அது ரொம்ப கஷ்டம்! :)

கர்மாவைப் பற்றி ஏதாச்சும் சொன்னாலே, கோவம் மூக்கு மேல பொத்துக்கிட்டு வருது! பக்தி மட்டுமே போதும்-ன்னு யாரோ சொன்னதைக் கேட்டு, ஐயோ காது புளிச்சிப் போச்சே-ன்னு அங்கலாய்க்கத் தெரிகிறது! அப்புறம் என்ன சமே க்ருத்வா? சமமாகப் பாவிக்கற மனப்பான்மை? அப்பறம் என்ன பெருசா கர்ம யோகம்? :)

கர்மா உன்னைக் காப்பாற்றுமா? = காப்பாற்றாது!

மொதல்ல நல்ல பூநூல் கிடையாது! யாரோ நூல் கண்டில் இருந்து அறுத்துக் கொடுத்தார்கள்! போட்டுக் கொண்டாகி விட்டது!
நல்ல தண்ணீர் கிடையாது! குழாயில் இருந்து பிடிச்சி வச்சி கர்மா செய்கிறோம்!
நல்ல அக்னி கிடையாது! அவனவன் வத்திக்குச்சி வச்சி ஏத்துறான்!
செய்து வைக்க நல்ல ஆள் கிடையாது!
அப்படியே ஆள் கிடைச்சாலும், மந்திரம் நம்ம வாயில் நுழையாது!
அப்படியே நுழைஞ்சாலும் அது அன்னிக்கு மட்டும் தான்! மற்ற நாளில் எல்லாம் நேரம் கிடையாது!

இப்படி ஆயிரம் லோபம்! = மந்திர லோபம், கிரியா லோபம், திரவிய லோபம், நியம லோபம்! அப்பறம் என்ன பெருசா நீ கர்மா பண்றது? = கர்மா உன்னைக் காப்பாற்றாது!

நீ இன்னிக்கி செய்யற கர்மா, உருப்படாத கர்மா!
விட்டுடக் கூடாதே என்பதற்காக ஏதோ காமா சோமா-ன்னு கர்மா செய்கிறோம்!
அப்போ, செய்யும் கர்மாவுக்குப் பலனில்லையா என்றால், அதுக்கும் பக்தி தான் வேண்டி இருக்கு! அவன் மானசீக அன்பு வேண்டி இருக்கு!

மந்த்ர ஹீனம், க்ரியா ஹீனம், பக்தி ஹீனம் ஜனார்த்தனா
யத் பூஜிதம் மயம் தேவம், பரிபூர்ணம் ததஸ்து மே!

ஏதோ ஒப்புக்கு, காமா-சோமா-ன்னு கர்மாவைப் பண்ணிப்புட்டேன்! ஆனால் மார்க்கை நீ பார்த்து போடும்மா அம்பிகே, நீ பார்த்து போடுப்பா ஈஸ்வரா-ன்னு, கர்மாவிலும் பக்தி தான் வேண்டி இருக்கு!

உண்மை இப்படி இருக்க, என்ன பெருசா உனக்கு கர்மாவின் மேல் பிடிப்பு வேண்டிக் கிடக்கு?
அந்தக் கர்மாவை மீறினதாகச் சொல்லி, பெரிய பெரிய மகான்களான இராகவேந்திர சுவாமிகள், திருமழிசையாழ்வார், சித்தர்கள்-ன்னு எத்தனை பேரைத் தள்ளி வச்சோம்?
அப்படித் தள்ளி வைக்க வைச்சதெல்லாம் இந்தக் கர்மப் பிடிப்பு தானே? ஆச்சார மமதை தானே? தந்தை கர்மா மீறினார்-ன்னு சிறு குழந்தைகளைக் கூட தள்ளி வைத்தோமே! பாவம் பார்த்தோமா? :(


அடுத்து தியான யோகம்! :)

கர்ம யோகத்தில் மனசு நிலைச்சி, சித்த சுத்தி ஏற்படுத்தத் தானே தியான யோகம்?
ஆனா..."யோகா க்ளாஸ்-ல இந்த மாசம் மெம்பர்ஷிப் அவ்வளவா காணலையே! நஷ்டம் ஆயிருமோ"-ன்னு மனசு அங்கேயும் இங்கேயும் கிடந்து பறக்குது! :)
இதுல யமம், நியமம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், ஆசனம், தாரணம், சமாதி-ன்னு அடுக்கிக்கிட்டே போவலாம்! ஆனா ஒன்னும் வராது! :)

வேணும்னா வாசல்ல ஒரு போர்டு போட்டுக்கலாம்! ஒரு குட்டி 5 watt பல்ப்-ஐ போட்டுக்கிட்டு, அதையே ஒன்னரைக் கண்ணால உத்து உத்துப் பாக்கலாம்!
நமக்கும் ஆபீஸ்-ல இருக்குற பிக்கல் பிடுங்கல்-க்கு, இது கொஞ்சம் நிம்மதியா இருக்கு! வட்டம் வட்டமா, கருப்புச் சுழல் மாதிரி, ஏதோ ஒன்னு சுத்துதா? தானா தூக்கம் வந்துருது!
உடனே நமக்கு சமாதி நிலை வந்துருச்சி-ன்னு யோகா க்ளாஸ் மாஸ்டர் சொல்லீருவாரு! :)

படுத்துக்கிட்டு தூங்கினா தூக்கம்! உக்காந்து கிட்டு தூங்கினா சமாதி! :)அடுத்து ஞான யோகம்! :)

இப்பல்லாம் ஈஸ்வரோஹம்! ஈஸ்வரோஹம்!-ன்னு சொல்லுறது கொஞ்சம் ஃபேஷனாப் போயிருச்சி! கேட்டா, அதான் ஞான யோகமாம்! அஹம் பிரம்மாஸ்மி! நான் கடவுள்! நான் மட்டுமே கடவுள்! :)
இரண்யகசிபு கூட, தன்னைத் தானே அஹம் பிரம்மாஸ்மி-ன்னு தான் சொல்லிக்கிட்டு திரிஞ்சான்! :)

அது வேற விஷயம்-ப்பா!
பிரம்ம பூதனாய், ஆத்ம சொரூபத்தை உணர்ந்து, நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை! நான் உலகம் இல்லை!-ன்னு உணர்ந்து கொள்வது தான் ஞான யோகம்!
அதெல்லாம் ஒன்னுமே இல்லாம, அஹம் பிரம்மாஸ்மி-ன்னு நீ எதுக்கு ராசா கூவிக்கிட்டு இருக்கே?-ன்னு கேட்டா, அவனுக்குக் கோவம் தான் வருது! :)

ந புண்யம்! ந பாபம்! ந சௌக்யம்! ந துக்கம்!
ந மந்த்ரோ! ந தீர்த்தம்! ந வேதா! ந யக்ஞம்!-
ன்னு ஆதி சங்கரர் சொன்னது!
வேதமும் அவர் இல்லையாம்! யக்ஞமும் அவர் இல்லையாம்! - அச்சச்சோ.....நாஸ்திகமாவா பேசுறாரு பகவத்பாதர்? :) இல்லை! "உணர்ந்து" பேசுகிறார்!

பகவான் ரமணர் சொல்கிறார்! = நான் பிராணன் இல்லை! நான் சரீரம் இல்லை-ன்னு உணர்ந்து கொள்வதோட முடிஞ்சு போச்சா? சரி, ஆத்மா-வை உணர்ந்து கொண்டாய்! அடுத்து பரமாத்மாவை உணர வேண்டாமா?

இப்படிக் கேட்டா, நானே பரமாத்மா!-ன்னு சொல்றான்! அதான் ஜீவாத்மா, பரமாத்மா கூட மிக்ஸ் ஆயிருது-ன்னு வேதமே சொல்லியிருக்கே-ன்னு எடுத்து விடறான்! :)

சரிங்க சார், பிராணன் நான் இல்லை! சரீரம் நான் இல்லை-ன்னு சொல்றீங்களே...உங்க சரீர அபிமானம் போயிடுச்சான்னு பார்த்தா.....
சில்க்கு ஜிப்பா, மயில் கண் ஜரிகை வேஷ்டி, லண்டனில் இருக்கும் பிள்ளை வாங்கிக் கொடுத்த கால்வின் க்ளீய்ன் சென்ட்டு! இதெல்லாம் அடிச்சிக்கிட்டு, லெக்சர் கொடுக்கறாங்க! = கீதா சாரம்! :)

அதை நோட்ஸ் வேற எடுத்துக்கிட்டு போவாங்க சிஷ்ய கோடிகள் பல பேரு! இதையெல்லாம், இறைவன், அதே ஹாலில், மெளன சாட்சியாய் பார்த்துக்கிட்டு, சிரியோ சிரி-ன்னு சிரிக்கிறானாம்! அப்பர் சுவாமிகள் சொல்றாரு!
பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு, நக்கு நிற்பார், அவர் தம்மை நாணியே! :)

காயமே இது பொய்யடா! காசு மட்டும் மெய்யடா-ன்னு பாடும் பிச்சைக்காரன் இதுக்கு எவ்வளவோ தேவலாம்! மெய்யில் வாழ்க்கையை, மெய் எனக் கொள்ளும், இவ்வையம் தன்னோடு கூடுவதில்லையாம்-ன்னு ஆழ்வார் பாடின ஞானம், இந்தப் பிச்சைக்காரனுக்கு வந்து விட்டதே! சிறப்பல்லவா! இது தான் மெய்யான ஞான யோகம்!


ஞானம், கர்மா-ன்னு ஆரம்பிப்பதே, "அவனை அவாவும்" பக்தி நிலைக்கு வருவதற்குத் தான்! என்ன தான் வேதங்களில் ஆரம்பித்தாலும்...இறுதியில் பாசுரப் பதிகங்களுக்கு வந்து தான் ஆக வேண்டும்! = ஏன்? முன்பு சொன்ன அதே காரணம் தான்!

* ஞானம்/கர்மா = அடிவாரம் வரை மட்டுமே இட்டுச் செல்லும்!
* பக்தியே மலை ஏற்றி விடும்! தரிசனம் தரும்!


"தன்" ஞானம், "தன்" கர்மா, "தன்" பக்தி என்ற "தன்னை" நீக்கி...
தொண்டர் குலம், அடியார் குலம் என்று ஆக்குவது பக்தி மட்டுமே!


வெறுமனே ஞான/கர்ம ஆட்கள் பலரை அன்றாட வாழ்க்கையில் பாருங்கள்! நல்ல ஆன்மீகத்தில்/குணானுபவத்தில், அவர்களால் ஒரு குழுவாகவே இயங்க முடியாது! அடியவர்கள் என்று அனைவரோடும் கலக்க முடியாது! "தான்", "தான்" என்ற ஆத்ம சாஷாத்காரம் மட்டுமே அவர்களிடம் தொனிக்கும்! பரமாத்ம சாஷாத்காரம் தொனிக்கவே தொனிக்காது!

தனக்குப் பிடிக்காதவர்கள் வீட்டில் அம்பாள் பூசை-ன்னா அவர்களால் கலந்து கொள்ள முடியாது! "தன் அம்பாள் தானே அங்கும் இருக்கிறாள்?" என்று தோன்ற விடாத படிக்கு, ஆத்ம சாஷாத்காரமே தளும்பி நிற்கும்! இது தான் ஞான/கர்ம யோகத்தால் கூடவே வரும் ஆபத்து! டேஞ்சர்! :)


"அப்போ என்ன தான் வழி?
ஞான/கர்ம மார்க்கங்கள் எல்லாம் வெறும் ஆத்ம அனுபவத்துக்கு மட்டுமே-ன்னு சொல்லிட்ட கண்ணா! சரியாத் தான் இருக்கு! அப்போ கடைத்தேற என்ன தான் வழி?"

":)))"

"எதுக்கு இந்த மயக்கும் சிரிப்பு? சாஸ்திரம் வேற கை கொடுக்காது-ன்னு சொல்லிட்டியே! ஆனா வழியைச் சொல்ல மாட்டேங்குறியே?"

"சாத்திரம் பொய்-ன்னு நான் சொல்லலையே! சாத்திரம் சத்தியம் தான்! மறைகள் சத்தியம் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா நீ லாயக்கு இல்லையே!"

"ஆகா! நான் லாயக்கு இல்லையா? என்ன கண்ணா, இப்பிடிச் சொல்லிட்ட?"

"ந தர்ம நிஷ்டோஸ்மி, நச் ஆத்ம வேதி
ந பக்திமான், த்வத் சரணார விந்தே
அகிஞ்சனக: அனன்யகதி:!"


"சுத்தமாப் புரியலை கண்ணா! நல்ல தமிழே எனக்கு ததி-கின-தோம்! இதுல தஸ்ஸூ புஸ்ஸூ-ன்னு சொல்லுறியே?"

"நோற்ற நோன்பிலேன் = கர்ம யோகம் இல்லேன்!
நுண்ணறிவு ஒன்றிலேன் = ஞான யோகம் இல்லேன்!
ஒன்றும் ஆற்ற கின்றிலேன் = தியான யோகம் இல்லேன்!
அகலகில்லேன் = அகல மாட்டேன்!
*புகல் ஒன்று இல்லா* அடியேன், புகுந்தேனே
!"

நானு எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிந்து கொண்டால், இன்னிக்கே மோட்சம்!" :))

(பக்தி For Dummies...தொடரும்.....)

Read more »

Sunday, March 15, 2009

தமிழில் பட்டர்ஃபிளைக்கு பெயர் இருக்கா?

ஓ பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை! ஏன் கொடுத்தாய் விருதை?-ன்னு மாத்திப் பாடலாமா? ஹிஹி! மகரந்தத்தைத் தேடித் தானே பட்டர்ஃபிளை வரும்? ஆனால் மகரந்தமோ, பட்டர்ஃபிளையை என்னிடம் அனுப்பி வைச்சிருக்கு! :)பட்டாம்பூச்சி விருது அளித்த மகரந்தன், நண்பன் ராகவனுக்கு நன்றி! :)

இந்த மாஆஆஆசம் என்ன விருது மாசமா? தமிழ்மணத்தின் இரண்டு விருதுகளோடே, தமிழ் மணக்கும் ராகவன் இன்னொரு விருதும் அடியேனுக்குத் தந்து ஹாட் ட்ரிக் ஆக்கி இருக்கான்! :)
யார் இந்த பட்டாம்பூச்சியைப் பறக்க விட்டாங்களோ தெரியலை....ஆனால் துள்ளித் திரிந்த காலங்கள் கணக்கா, ஒவ்வொரு வலைப்"பூ"வுக்கும் அழகாப் பறந்துக்கிட்டே இருக்கு!


"சரி..... தமிழில் பட்டர்ஃபிளைக்கு என்ன பெயர்???"

"அட மாங்கா கேஆரெஸ், உன்னைப் போயி தமிழ் கொஞ்சும் பதிவு-ன்னு சொல்லுறாங்க பாரு! இது கூடவா தெரியாது?....குழந்தைக்குக் கூடத் தெரியுமே...பட்டர்ஃபிளைக்குத் தமிழ்ப் பேரு = பட்டாம்பூச்சி, வண்ணத்துப் பூச்சி! இது என்னடா கேள்வி?"

"எலே! வண்ணான் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி-ன்னு எனக்கும் தெரியும்! அதெல்லாம் இப்போ நாம ஜாலியா சொல்றது!
ஆனால் இவ்வளவு அழகான, காதலர்களின் பட்டாம்பூச்சியை, தமிழ் இலக்கியப் பாடல்களில் யாரும் பாடினா மாதிரியே தெரியலையே! அதான் என் கேள்வி! நீயே யோசிச்சிப் பாரு! சினிமாப் பாட்டு தவிர, வேற எங்காச்சும் பட்டர்ஃபிளை பறந்திருக்கா?"

"அட, ஆமாம்-ல? சினிமாவில் பட்டர்ஃபிளை பாட்டு இருக்கு! ஆனா இலக்கியத்தில் வண்ணத்துப் பூச்சி பத்தி யாரும் பாடலை போலிருக்கே!
எத்தனை எத்தனை காதல் இருக்கு தமிழ் இலக்கியத்தில்? ஆனால் ஒருத்தர் கூடவா நம்ம பட்டாம்பூச்சியைப் பாடலை? எ.கொ.ச?"

"ஹா ஹா ஹா! ஒரு வேளை...இந்த வண்ணத்துப் பூச்சி, "தமிழ்க் கடவுள்" மாதிரி, "தமிழ்ப் பூச்சியா" இல்லாம இருந்திருக்குமோ? அதான் இலக்கியத்தில் பின்னாளைய புலவர்கள் பாடலையோ?"

"டேய்....வேணாம்! ஒதை படுவ கேஆரெஸ்ஸு! ஒழுங்காச் சொல்லிரு! இப்ப எதுக்கு இதைக் கெளப்பி விட்ட நீயி? தமிழில் வண்ணாத்திப் பூச்சிப் பாட்டு இருக்கா? இல்லையா? அதச் சொல்லு!"

"இருக்கு! இருக்கு!....ஒவ்வொன்னா எடுத்து விடவா? அடா, அடா, அடா....காதல்-ல்ல தான் எத்தனை எத்தனை பட்டாம்பூச்சி பாட்டு இருக்கு?
1. வண்ணத்துப் பூச்சி...வயசென்ன ஆச்சி?
2. ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ள சுத்துகின்றதே!
3. ஓ...பட்டர்ஃபிளை...பட்டர்ஃபிளை, ஏன் விரித்தாய் சிறகை?"


"டேய்....தமிழ் இலக்கியத்தில் ஏன் பட்டாம் பூச்சி இல்லை-ன்னு கேட்டா, நீ என்னமோ சினிமாப் பாட்டை எல்லாம் காட்டுற?"

"அட ராசா, சினிமாப் பாட்டு இலக்கியம் ஆவாதா என்ன? இன்றைய பாட்டு, இன்னும் இருநூறு வருசத்துல இலக்கியம் ஆயிரும்-டா! தெரிஞ்சிக்கோ" :)

"யாரு கண்டா? ஒன்னை மாதிரி, ஜிரா மாதிரி, கானா பிரபா மாதிரி ஆளுங்க இருந்தாக்கா, ஆனாலும் ஆயிரும்! :) ஆனாலும் வண்ணத்துப் பூச்சி, வயசென்ன ஆச்சி பாட்டு எனக்கும் ரொம்ப புடிக்கும்-டா கேஆரெஸ்!"

"அப்படி வா வழிக்கு! இன்னும் நிறைய பாட்டு இருக்கு! நடு நடுவுல வண்ணத்துப் பூச்சி வரும்! - விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே....அதுல கூட, நீ பட்டுப் புடைவை கட்டிக் கொண்டால், பட்டாம் பூச்சிகள் மோட்சம் பெறும்-ன்னு வரிகள் வரும்! செம கிக்கா இருக்கும்-ல?"

"சரி, நீ மேட்டருக்கு வா! தமிழ் இலக்கியத்தில் பட்டாம் பூச்சி இருக்கா? இல்லையா?"


பட்டாம் பூச்சி வேற! பட்டுப் பூச்சி வேற! பட்டுப் பூச்சி, மின்மினிப் பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி-ன்னு நிறைய இருந்தாலும், மகரந்தம் தேடிப் பறப்பது...மூனே மூனு தான்! = பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி!

இதுல வண்டு, தும்பி = இந்த இரண்டு பத்தியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு!
கோத்தும்பீ என்று மாணிக்கவாசகர் தனியாகவே ஒரு தொகுப்பு போட்டு இருக்காரு! சங்க காலத்திலேயே, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் "தும்பி" தான் திருவிளையாடல் புகழ் பெற்றதாச்சே!

வண்டு பற்றியும் இலக்கியத்தில் உண்டு! திரையிசைப் பாடல்களும் உண்டு!
பூவில் வண்டு கூடும் கண்டு, பூவும் கண்கள் மூடும் என்பது என்னவொரு அழகிய சினிமாப் பாடல்! அதில் இலக்கிய அழகு இல்லீயா என்ன?

"வண்டினம்" முரலும் சோலை என்பது ஆழ்வார் பாசுரம்! வண்டார் குழலி/சுரும்பு ஆர் குழலி என்று இரத்தினகிரி முருகன் கோயிலில் உள்ள அம்பாளுக்குப் பேரு!
இப்படி வண்டும் தும்பியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு! ஆனால்.....

* அழகிய வண்ணம் வண்ணமாய்ப் பறக்கும் பட்டாம் பூச்சி...
* காதல் தேனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் பட்டாம் பூச்சி...
* "I Love U" என்ற மந்திரச் சொல் சொல்லும் போது இளசுகளின் கண்கள், உள்ளமெல்லாம் பறக்கும் பட்டாம் பூச்சி....
தமிழ் இலக்கியத்தில் கிட்டத்தட்ட இல்லை-ன்னே சொல்லிறலாம்! :((("அடடா......அப்படியா சேதி? பட்டாம் பூச்சிக்குத் தமிழ் இலக்கியத்தில் இடம் இல்லையா? கேட்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கேஆரெஸ்!"

"என்னாங்க பண்றது? பின்னாளைய தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?"

"அது என்னமோ சரி தான்! அறுபது வயசு ராஜா அந்தப்புர உப்பரிகையில் நடந்து வருவதைப் பார்த்துட்டு, வீதி இளம்பெண் வயசுக்கு வந்துட்டா-ன்னு "உலா" எழுதினானுங்க சில பேரு! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! என்ன இருந்தாலும், சங்க இலக்கியத்து உண்மைக் காதல் மாதிரி வருமா? அரசனுக்குப் பயப்படாம, உள்ளது உள்ளபடி இயற்கையாகப் பாடின காதல் ஆச்சே அது?"

"இதுக்குத் தான் காதலர்களே பெரும் தமிழ்ப் புலவர்களா ஆயிரணும்! அப்போ தான் காதலர்களுக்கு எல்லாம் ஒரு கெத்தா இருக்கும்! பட்டாம் பூச்சிக்கும் ஒரு மதிப்பு!" :)

"ஆமாம்! அப்படி யாராச்சும் ஆகியிருக்காங்களா கேஆரெஸ்ஸூ? பட்டாம் பூச்சிக்கு விடிவு கொடுக்க, ஒருத்தர் கூடவா இல்ல, தமிழ் இலக்கியத்தில்?"

"ஏன் இல்லை? அதுவும் என் தோழி இருக்கும் போது....."

"ஆகா! கோதையா? அவளா?....அந்தக் காதலி பெரிய புலவர் தான்! ஆனால் அவளாச்சும் பட்டாம் பூச்சியைப் பாடுறாளா என்ன?"

"சிந்துரச் செம்பொடி போல்
திருமாலிருஞ் சோலை எங்கும்,
இந்திர கோபங்களே
எழுந்தும் பறந்து இட்டனவால்,
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான்
சுழலையின் இன்று உய்துங் கொலோ"

"ஆகா! ஆகா! அருமை! அருமை! காதலர்கள் விரும்பும் பட்டாம் பூச்சியைப் பாடிட்டாளா? இதுக்கு விளக்கம் ப்ளீஸ்!


தமிழ்ப் பட்டாம் பூச்சியைப் பாக்கணும்-ன்னா மதுரைக்குத் தான் போவோணும்! மதுரை அழகர் கோயில்-ல தான், அவள் காதலன், சுந்தரத் தோள் உடையான் இருக்கான்! சூப்பர் அழகன்! கள்ளழகன்! - அவனுக்கு ஏன் சுந்தரத் தோள்-ன்னு பேரு? மருதைக் காரவுங்களே வந்து சொல்லட்டும்!

அவன் என்ன பண்ணுறானாம் என் தோழியை?
மந்தர மத்தினை நட்டு, மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்! மந்தரம் நாட்டி, அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான்!
அவன் ஏற்படுத்திய சுழலில் சிக்கித் தவிக்கிறாள் தோழி! பட்டாம்பூச்சி பறக்குது அவளுக்கு! :)

திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில்! அங்கு சிந்தூரப் பொடிகள் தூவினாற் போலே, இந்திர கோபங்கள் என்னும் வண்ணத்துப் பூச்சிகள், ஒரேயடியாக எழுந்து, ஒட்டு மொத்தமாகப் பறக்கின்றன! Butterfly Effect in Love! :) சிந்துரச் செம்பொடி போல், திருமாலிருஞ் சோலை எங்கும், இந்திர கோபங்களே எழுந்தும் பறந்து இட்டனவால்....

இந்திர கோபம் என்னும் வண்ணத்துப் பூச்சி வகையினைச் சார்ந்தவை! சில பேரு தம்பலப் பூச்சி-ன்னும் சொல்லுவாய்ங்க!
எது என்ன இந்திர கோபம்? ரொம்ப கோவமா இருக்குமா? ஹிஹி! லவ்வுல ஏதுங்க கோவம்?

வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்! - அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!

திருமாலின் பலப்பல உருவொளியைக் காட்டுகின்றீர்! அவன் கிட்ட சொல்லி வைங்க! - திருமாலிருஞ் சோலை நம்பி, அவன் வரி வளையில் புகுந்து, வந்தி பற்றும் வழக்குளதே!
என் வளையல் எல்லாம் கழண்டு கழண்டு விழுது! எல்லாம் அவனால் தான்! என்னமோ பண்ணிட்டான் என்னை! என் வளை விழக் காரணமான அந்த மதுரைக்காரன் மேல் கேஸ் போடுவேன்! = வழக்கு உளதே! :)

நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்,
ஏறு திரு உடையான், இன்று வந்து இவை கொள்ளும் கொலோ?

மந்தர மத்திலே மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்!
பதிலுக்கு நானும் வெண்மையான வெண்ணையும், அக்கார அடிசிலும் அவனுக்குத் தருவேன்!
நூறு பானை வெண்ணையும், நூறு பானை சர்க்கரைப் பொங்கலும் அவனுக்கு நேர்ந்து வச்சேன்! ஒழுங்கு மரியாதையா வந்து வாங்கிக்கச் சொல்லுங்க! :)

இப்படி காதலர்களுக்குப் பறக்கும் பட்டாம்பூச்சிகளை, பாட்டிலே காட்டும் ஒரே தமிழ்க் கவிஞர் = கோதை!
காதல் இளவரசி கோதைப் பொண்ணு திருவடிகளே சரணம்!" :)


அப்பாடா...பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு! அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே! யார் அங்கே....?

1. இம்சை அரசி = வாம்மா தங்காச்சி! நீ இம்சை அரசின்னா, என் தோழீ காதல் அரசி! கோதை கூடவே சண்டை போட நீ தான் சரியான ஆளு! புது கல்யாணப் பொண்ணு :)

2. சுவாமி ஓம்கார் = சுவாமிகளைப் பற்றி அடியேன் என்ன சொல்ல? மந்திரம், யோகம் என்பதையெல்லாம் வறட்டு வேதாந்தமாக இல்லாமல்...திரட்டு வேதாந்தமாக, திரட்டி வேதாந்தமாகப் பேச முடியும் என்று வெற்றிகரமாகக் காட்டி வருபவர்!
சந்திராயன் வெற்றிக்கு ஜாதகம் கணித்தவர்! வாழ்க நீர் எம்மான்! உங்க கிட்ட கேட்க பல கேள்விகள் இருக்கு சுவாமி! புருவ மத்தியில் தோன்றிய பல கேள்விகள் :)

3. இலவசக் கொத்தனார் = பொருளாதாரப் பின்னடைவு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது! இப்பல்லாம்....இலவசம் ரெம்ப கம்மி ஆயிருச்சி! :)
குறுக்கெழுத்துப் போட்டி மட்டும்-ன்னே ஆகிப் போச்சி! இவருக்கு விருது கொடுத்தாவது, நம்ம பழைய கொத்தனாரை இஸ்துக்கினு வருவோம்! We want the Old & Gold Kothanar :)

4. குமரன் = சூரியனுக்கு நான் எப்படிங்க டார்ச் லைட்டு அடிக்க முடியும்? இவருக்கு விருது கொடுத்தாலாச்சும், கோதைத் தமிழுக்கு இவரு பதில் விருது கொடுக்கிறாரா பார்ப்போம்! :)
தமிழமுதம் தரும் செஞ்சொற் கொண்டலே வருக!
எளியோன் தரும் பட்டாம்பூச்சி விருதினைப் பெறுக!

5. நா.கணேசன் = அன்னாரின் பன்முகத் தமிழைப் பருகாதவர்கள் உளரோ? நாசா முதல் நற்றமிழ் வரை...One of The Coolest Blog I ever know!


பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
Read more »

Tuesday, March 10, 2009

பக்தி For Dummies! பக்தி For Supers! - Part 1

என்ன மக்களே வித்தியாசமாப் பாக்கறீங்க? என்னடா இது, திடீர்-ன்னு பக்தி For Dummies-ன்னு பாக்குறீங்களா? ஹிஹி! ரொம்பா நாளாச் சொல்லணும்-ன்னு நினைச்சி விட்டுப் போன "$$$" பதிவுகளில் இதுவும் ஒன்னு! :)

இதைப் பற்றி முன்னரே இங்கு பேச்செடுத்து இருந்தேன்! ஆனா இப்போ தான் கொஞ்சம் நேரம் கிடைச்சுது!
இம்புட்டுப் பொருளாதாரப் பின்னடைவிலும் டாலர் சக்கைப் போடு போடுதுல்ல? இப்பவே டாலரை இந்தியாவுக்கு அனுப்பத் தான் இந்த டாலர் பதிவுகள்!:)) சரி மேட்டருக்கு வரேன்!


பக்தி-ன்னா என்ன? பக்தி பண்ணனுமா என்ன? - இது ஒரு பெரீய்ய்ய்ய்ய கேள்வி!
ஆனால் அதுக்கு முன்னாடி...
குழந்தையில் இருந்து கொஞ்சம் வயசுக்கு வந்துட்டாலே, பொண்ணு/பையன் எல்லார் மனசுலயும் சில அடிப்படைக் கேள்விகள் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கும்! ஆனா பல காரணங்களுக்காக வெளிப்படையாக் கேட்க மாட்டாங்க! :)

அதுக்குள்ளாற, பசங்க பின்னாடி பொண்ணுங்க சுத்த, பொண்ணுங்க பின்னாடி பசங்க சுத்த, அப்பறமா மொத்த உலகமும் சுத்தோ சுத்து-ன்னு சுத்தி...
திடீர்-ன்னு ஒரு நாள், ஏதாச்சும் ஒரு பதிவுல கேள்வியாக் கேட்டு வைப்பாங்க! :)

* உலகம் என்றால் என்ன? கடவுள் என்றால் என்ன?
* இந்த இரண்டத்துக்கும் நடுவுல நாம் என்னவா இருக்கிறோம்?
* முன்பு என்னவா இருந்தோம்? அடுத்து என்னவா இருக்கப் போறோம்?
* எதுக்கு இத்தனை ஆட்டம்?

இது மாதிரியான சிந்தனை நம்ம எல்லாருக்குமே எப்பவாச்சும் ஒரு முறையாச்சும் வந்திருக்கும் இல்லையா?
சிவா மனசுல சக்தி-ன்னும் வரும்! இந்த மாதிரி கேள்வியும் வரும்! :)
வயசு - சமயம் - ஜாதி - ஆண்/பெண் - பணம் - கொள்கை என்ற வித்தியாசமே கெடையாது! எல்லாருக்குமே எப்பவாச்சும் இது மின்னல் போல பளிச்சிட்டு ஓடிப் போயிருக்கும்!

இதுக்குப் பெரிய பெரிய தத்துவம் சொல்றவங்க எல்லாம் இருக்காங்க! அப்படிச் சொல்றதாச் சொல்லிக்கிட்டு...வேற எதையோ சொல்லிக்கிட்டு இருக்குறவங்களும் இருக்காங்க! :)
ஆனால், நாம அப்படியெல்லாம் லெக்சர் டைப்புக்கு போகாம, கலந்துரையாடல் பாணியில், நாமளே ஒன்னாச் சேர்ந்து, சில விடைகளைக் கண்டு பிடிக்கலாமா? = அதான் பக்தி For Dummies!

சரி, அப்ப எதுக்கு பக்தி For Supers?
ஹிஹி! அதாச்சும் சில பேருக்கு "ஞான பரமா" யோசிக்கறது தான் ரொம்பவும் பிடிக்கும்! பக்தி-ன்னா ஏதோ ஜனரஞ்சகமானது, உணர்ச்சி வசப்படறது, "அறிவை" உபயோகிக்காம, "மனசை" மட்டும் உபயோகிப்பது...

அதுக்கும் மேலா, அறிவுப் பூர்வமாக, வேதம் சொன்ன வழியில், ஞானம், கர்மம், சாதகம்-ன்னு பண்ணினா இறைத் தத்துவம் புரிய ஆரம்பிக்கும்-ன்னு சில பேரு சொல்வாங்கல்ல? அதையும் நாம லேசாப் பாக்கணும்-ல்ல? அதான், பக்தி For Supers! :)உலகம் மாயை! எல்லாமே மாயை! மாயை விலகினா கடவுளைக் காணலாம் = இது அடிப்படையே தப்பு! :)

உலகம் உண்மை! எல்லாமே உண்மை!
உண்மையா இருந்தா இறைவனைத் தரிசிக்கலாம் என்பதே பொருந்தி வரக் கூடிய உண்மை!
சரி, நீங்களே சொல்லுங்க, உலகம் மாயையா? உண்மையா? :)

சில ஞானபரமான நூல்கள் "பாம்பு-கயிறு" உதாரணத்தைக் காட்டும்! அது கயிறு தான், பாம்பு போலத் தெரியுது! ஆனா பாம்பு கிடையாது = மாயை!
சில நூல்கள் "கானல் நீர்" உதாரணத்தைக் காட்டும்! வெய்யிலில் கானல் நீர்...தண்ணி போலவே தெரியும்! ஆனால் நீர் கிடையாது! = அதே போல உலகமும் மாயை- ன்னு சொல்வாங்க!

ஆனால்...கானல் நீர் என்பது ஏதோ கண் கட்டு வித்தை அல்லவே! கண் எதிரே நடக்கும் அறிவியல் உண்மை தானே?
தோற்றத்தை வச்சி அங்கே தண்ணி போல ஒன்னு இருக்கு-ன்னு நாமளே கற்பனை பண்ணிக்கறோம்! "நீர்" என்ற "எதிர்பார்ப்பு" நம்மிடம் இருக்கு!
அதுவே கற்பனையா உருவாகுது! ஆனா நீர் இல்லை-ன்னு தெரிஞ்சவுடன், உடனே மாயை-ன்னு சொல்லி விடுகிறோம்!

இப்போ சொல்லுங்க....மாயை எங்கு இருக்கு? = கானல் நீரிலா? நம்ம எதிர்பார்ப்பிலா? :)எனவே உலகம் மாயை இல்லை! உலகம் உண்மை! உண்மை! = என்பதே வேத விளக்கம்!
இந்தத் தத்துவத்துக்குப் பேரு என்ன, இதை யாரு சொன்னாங்க என்பதை எல்லாம் இப்போதைக்கு விட்டுருவோம்! கருத்து என்ன-ன்னு மட்டும் பார்ப்போம்!

மொத்தம் மூன்று பொருட்கள்! மூன்றுமே உண்மைப் பொருட்கள்!
1. உயிர்ப்பு/ஞானம் இல்லாதவை = உலகம் (அசித்து)
2. உயிர்ப்பு/ஞானம் உள்ளவை = நாம் (சித்து)
3. இவை இரண்டுக்கும் பொதுவான = இறைவன் (ஈஸ்வரன்)

உலகம்-னா பூமி மட்டுமல்ல! அண்ட வெளி, பஞ்ச பூதம் எல்லாம்!
நாம்-னா நாம் மட்டுமல்ல! உயிர்கள் எல்லாமே!

சித்-அசித்-ஈஸ்வரன் என்று மூன்று தத்துவமாச் சொல்லுறது வழக்கம்! பல சமயங்களும் மூன்று மூன்றாகத் தான் சொல்லுது!
= சித்-அசித்-ஈஸ்வரன்! பிதா-மகன்-பரிசுத்த ஆவி! பசு-பதி-பாசம்!
ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்திப் பார்த்தால், பல விஷயங்கள் விளங்கும்! :)

இப்போ நாம ஞாபகம் வச்சிக்க வேண்டியது = உலகம் உண்மை!
ஒவ்வொரு பொருளும் எதிலேயோ தோன்றி, காலம் என்பதில் நீந்தி, எப்படியோ உரு மாறுது, மறையுது இல்லையா? = அறிவியல் பூர்வமா ஆற்றல்/எனர்ஜி-ன்னு இதைப் பிற்பாடு பார்க்கலாம்!

ஆக, உலகம் உண்மை-ன்னு பார்த்தாலே தெரியுது! அதுனால காதல் உண்மை! காமம் உண்மை! ஞானம் உண்மை! செயல் உண்மை! மொத்த உலகமும் உண்மை! :)
நெருப்புல கை வைச்சா சுடுது-ல்ல? உடம்புக்கு மட்டும் தான் சுடுது! ஆத்மாவுக்குச் சுடலை-ன்னு யாரும் சொல்ல முடியுமா?
உடம்புக்கும் கருப்பு கலர்ல சுடுது! அதை ஆத்மாவும் வலியால் உணருது!

நான் ஒருமுறை வெஸ்ட் வெர்ஜினியா-வில் இருக்கும் இஸ்கான் பொற்கோயிலுக்கு நண்பர்கள் கூட்டத்தோடு போயிருந்தேன்! செம கும்மாளம்!
உள்ளே தங்கத் தகடுகள் போல லேசா ஒட்டி இருந்தார்கள்! பழனி, திருப்பதி போல பெருசா ஒன்னும் இல்லை! தங்கச் சுவரைத் தொடக் கூடாது-ன்னு போர்டு எதுவும் வைக்கலை! எங்களை நடத்திச் சென்ற இஸ்கான் வெள்ளைக்காரப் பையனும் ஒன்னுமே சொல்லலை!

"Soul-ன்னா இந்தியப் பாரம்பரியத்தில் என்ன?"-ன்னு கேள்வி கேட்டான் அந்தப் பையன்! கூட வந்த ஜனங்க எல்லாம் "ஆத்மா", "ஆத்மா"-ன்னு சொன்னாங்க! அவனும் "வெரி குட், இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்களே"-ன்னு சொன்னான்!
"அடிங்க, நம்ம கிட்ட தெரிஞ்சிக்கிட்டு நம்பளுக்கேவா"-ன்னு என் நண்பனோ பக்கத்துல கிடந்து குதிக்கிறான்! :)

இந்த மாதிரி ஆன்மீக விஷயம் எல்லாம் நமக்கு எதுக்கு-ன்னு, வழக்கம் போல ஒதுங்கிட்டேன்! அங்குள்ள சுவரை லேசாத் தொட்டுப் பாத்துக்கிட்டு இருந்தேனா? அட மன்மதன்-ரதி தங்கத் தகட்டுல சூப்பரா ஜொலிக்கிறாங்க! அதான்! :)

"How dare you touch the wall?"-ன்னு அந்த வெள்ளைக்காரப் பையரு டென்சன் ஆயிட்டாரு! "Oh Sorry-nga! தொடக்கூடாது-ன்னு எங்கும் சொல்லவே இல்லையே"-ன்னு சொல்லிப் பார்த்தேன்! ஹூஹூம்! அடங்க மாட்டேன்-ன்னுட்டாரு!

கடைசியா, "My Soul didn't touch the wall! Just my Body touched it, Swami"-ன்னு அடியேன் சொன்னது தான் தாமதம்!
கூட்டம் கொல்-ன்னு சிரிக்க, அமெரிக்க ஸ்வாமி மொத்தமா அடங்கிப் போயிட்டாரு! :) நண்பர்கள் எல்லாரும் "Hurray!"..... :)))

ஆக, என்ன தான் வாயால பல தத்துவம் பேசினாலும், நமக்கு-ன்னு வரும் போது......எல்லாருக்குமே உலகம் உண்மை!சரி, மேட்டருக்கு வருவோம்!

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே மாயை ஸ்க்ரீன் போலத் தொங்குது! காண்பதெல்லாம் மாயை! அந்த மாயை விலகினால் எல்லாம் ஒன்னாயிடும்!-ன்னு சிலர் சொல்லலாம்! ஆனால் அது சரியல்ல!
மாயை என்பதே ஒரு மாயை! அதற்கான மெய்யான வேத விளக்கத்துக்குப் பிற்பாடு வருவோம்!

மக்களே,
இப்போ அடுத்த கேள்வி! சத்-அசித்-ஈஸ்வரன் என்னும் மூன்றில், உலகம் உண்மை-ன்னு சொல்லிட்ட! அப்போ உலகத்தில்...* நாம் யார்? இறைவன் யார்?
இதுக்குப் பதில் சொல்லுறது ரொம்பவே ஈசி-ல்ல? :) ஹா ஹா ஹா!

* பல பிறவிகள் எடுத்து வந்து, உலகில் செயல் புரிவது = ஜீவாத்மா! (சித்து)
* ஞானமுள்ள இந்த ஜீவாத்மாவுக்கும், ஞானமற்ற பிரபஞ்சத்துக்கும் = சொந்தம் உடையதாய் இருப்பது பரமாத்மா! (ஈஸ்வரன்)
= இப்படி எல்லாம் சொன்னா ஒன்னுமே புரியாது! அடிக்கத் தானே வருவீங்க? :)

கொஞ்சம் புரிஞ்சவங்க, அடுத்த கேள்வி கேட்பாங்க!
* பிறவியா? நான் எதுக்குப் பிறவி எடுத்துக் கஷ்டப்படணும்?
* சரிப்பா...தெரியாம ஏதோ பாவம் பண்ணிட்டேன் போன ஜென்மத்துல! அது என்னா-ன்னு சொன்னா, சரி பண்ணிப்பேன்-ல?
* ஒன்னுமே சொல்லாம சும்மா பிறவி பிறவி-ன்னா, கடவுள் என்ன சாடிஸ்டா? :))

புத்தகம் புத்தகமாப் படிச்சவங்க, வேற மாதிரி கிராஸ் கொஸ்டின் போடுவாங்க!
* பிறவியா? அப்போ மொதல் மொதல், நான் என்னவா இருந்தேன்?
* சரி, இப்போ தான் பாவம் பண்ணேன்! அதுனால அடுத்த பிறவி-ன்னு சொல்றீங்க! ஓக்கே! ஆனா முதல் முதலா பரமாத்மா கிட்ட "ஒன்னாத்" தானே இருந்தேன்? அப்போ பாவம் பண்ணி இருக்க சான்ஸ் இல்லை-ல? அப்போ எதுக்குப் பிறவி வந்துச்சி? :)))

இப்படிப்பட்ட கேள்விக்கெல்லாம் ஒவ்வொன்னா வருவோம்!
விளையாட்டா பார்த்தாலும், சிலதைச் சீரியஸாத் தானே பார்க்கணும்? அதுனால அப்பப்போ சீரியசாப் பேசினாக் கோச்சிக்காதீங்க மக்களே! ஆன்மீகத்தைச் சீரியஸாப் பேச-லைன்னு தான் ஒரு சிலருக்கு என் மேல கொஞ்சம் கோவமும் கூட! :)

* நெருப்பு சுடும்-ன்னு, மூஞ்சைப் பயங்கரமா வச்சிக்கிட்டு, பாப்பாவுக்கு பயம் காட்டுங்க! பாப்பா பயந்தா மாதிரி தலையை ஆட்டும்!
ஆனால் சூடு-ன்னா என்னா-ன்னு, அதுக்கே ஒரு நாள் தொட்டாத் தான் தெரியும்!

* விஷம்-ன்னா ஆளு க்ளோஸ்-ன்னு, மூஞ்சைப் பயங்கரமா வச்சிக்கிட்டு பயம் காட்டுங்க! நாமும் பயந்தா மாதிரி தலையை ஆட்டுவோம்!
ஆனால் விஷம்-ன்னா என்னான்னு, நாமளே ஒரு நாள் குடிச்சிப் பாத்தா தான் தெரியும்!...............................ன்னு சொல்லுவோமா? :))

இறைத் தத்துவம் கூட அப்படித் தாங்க!
சிலதைத் தொட்டுப் பாக்கலாம்! சிலதைக் குடிச்சிப் பாக்க முடியாது! :))அடுத்து.....பெரும்பாலும் சான்றோர்களால் மேற்கோள் காட்டப்படுவது பகவத் கீதை! ஆனால் தப்பும் தவறுமாக அவரவர் சுயநலத்துக்கு, அதிகம் மேற்கோள் காட்டப்படுவதும் இதே பகவத் கீதை தான்! :)

கீதை-ல என்ன சொல்லி இருக்கு?
* ஞான யோகம்
* கர்ம யோகம்
* தியான யோகம்
* பக்தி யோகம்

எது பண்ணாலும் ஓக்கே தான்! ஆனால் கரெக்டாப் பண்ணனும்! மோட்சம் உறுதி-ன்னு கியாரென்ட்டி கொடுப்பவர்கள் உண்டு! :) ஆனால்....
ஞான யோகம், கர்ம யோகம் = ரெண்டுமே மோட்சம் கொடுக்காது என்றே கீதை காட்டுகிறது!

என்னடா, இவன் ஒவ்வொன்னாக் கொளுத்திப் போடுறானே-ன்னு பதறக் கூடாது! முக்கியமா, எள்ளலா எடுத்துக்கிட்டு தாம் தூம்-ன்னு குதிக்காமல், என்ன தான் நடக்குது-ன்னு பொறுமையாப் படிங்க! :)

"எனக்கு ஞான பரமான விஷயம் தான் பிடிக்கும்"-ன்னு சிலர் சொல்லலாம்!
ஆனால் நம்ம ஞானத்தால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்! வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம்ம ஞானத்தால் ஆராய்ச்சி பண்ணி, சடங்குகளால் கர்மா பண்ணி....அவனைத் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உங்களுக்கு உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் பசியை ஆற்ற முடியாது!

கீதையில் சொன்ன ஞான யோகம், கர்ம யோகம் அதுவல்ல!
* ஞான யோகம் என்றால் வேதம் படிப்பது, "ஞான பரமாகப்" பேசுவது! - என்பது மட்டும் அல்ல!
* கர்ம யோகம் என்றால் கர்மா பண்ணுவது! ஹோமம் பண்ணுவது! நித்ய கர்மா, ஜப தபங்கள் பண்ணுவது! நமக்கு-ன்னு "விதிச்சதை" தவறாமல் பண்ணுவது - என்பது மட்டும் அல்ல!

ஒரு சிலர் இன்னிக்கி அப்படி ஆக்கி வைத்து விட்டார்கள்! கீதையில் சொல்வது அது கிடையாது!
அவரவர் "கர்மா"/"பிழைப்பு" நல்லபடியா நடக்கணும்-ன்னு, அவரவர் செய்து கொண்ட சுயநலமான வசதிகள் எல்லாம் இந்தக் கணக்கில் வராது! :)

ஞான/கர்ம யோகம் முக்கியம் தான்! கொஞ்சம் ஞானமும் வேணும், செயலும் செய்யணும் தான்! ஆனால் ஞான யோகம் & கர்ம யோகம் இறைவனிடம் இட்டுச் செல்லாதாம்! - ஏன்?
கண்ணனே சொல்கிறான்! கேளுங்களேன்... "ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"


* ஞானம்-கர்மா எதுவுமே செய்யாத பிரகலாத "அசுரன்" இறை அன்பில் விழுந்தான்!
* ஞானம்-கர்மா எல்லாம் சூப்பராச் செஞ்ச பிருகு "மகரிஷி" இறைவன் மார்பில் எட்டி உதைத்தார்! :)
= இதில் இருந்து என்ன தெரிகிறது? ஞானம்-கர்மா-ன்னே கட்டிக்கிட்டு அழுதால் என்ன ஆகும்?ஞான/கர்ம யோகம் = ஆத்ம சாக்ஷாத்காரம்!
அதாச்சும், ஆத்மாவை அறிவிப்பது! "நான் யார்?" என்று நம்மை நமக்கே உணர்த்துவது!
அதற்கு மட்டுமே ஞான/கர்ம யோகங்கள் உபயோகப்படும்! "நாம், நமது"-ன்னு நம்மைச் சுற்றியே நிறைய பேசும்!

* நான் யார்-ன்னு தெரிஞ்சிக்கிட்டா மட்டும் போதுமா?
* அடுத்த நிலை, இறைவன் யார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
* அவனுக்கும் நமக்கும் என்ன உறவு என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பழனி மலைக்கோ, திருப்பதி மலைக்கோ அடிவாரம் வரை மாவட்டப் பேருந்து இட்டுச் செல்லும்! ஆனால் அத்தோட முடிஞ்சிப் போச்சா?
அடுத்து இன்னொரு சிறு பேருந்திலோ, ரோப் காரிலோ, படிக்கட்டிலோ ஏறினாத் தானே தரிசனம்?

ஞான யோகம்/கர்ம யோகம் = ஆத்ம சாக்ஷாத்காரம் = ஆத்மாவை அறிவிப்பது! மாவட்டப் பேருந்து! அடிவாரம் வரைக்கும் தான்!
பக்தி யோகம் = பரமாத்ம சாக்ஷாத்காரம் = பரமாத்மாவை அறிவிப்பது! இதுவே உண்மையான படிக்கட்டு! இதில் ஏறினால் தான் தரிசனம்!

ஏதோ நானே "வாக்குச் சாதுர்யத்தால" கதை அடிச்சி விடலை! :) கீதையில் சொல்வதும் இதுவே! முதல் ஆறு அத்தியாயங்களில் ஞான யோகம், கர்ம யோகம் பற்றிக் கண்ணன் நிறையவே சொல்லிட்டான்! எதுக்கு?

மனம் தளர்ந்து இருக்கும் அருச்சுனனுக்கு, "மொதல்ல உன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சிக்கோ! அப்புறம் என்னைப் பத்தி தெரிஞ்சிக்கலாம்!" - ஆத்மாவை முதலில் தெரிஞ்சிக்கோ! அப்புறம் பரமாத்மாவைத் தெரிஞ்சிக்கலாம்! = இதான் காரணம்!

இதி ஞான யோகஹா! இதி கர்ம யோகஹா-ன்னு அடுக்கி அடுக்கிச் சொல்லியாகி விட்டது!
* உடல் வேறு, ஆத்மா வேறு! ஆத்மாவுக்கு சுதந்திரம் உண்டு!
* ஆத்மா என்னும் நுண்-சக்தி, பல உடல்கள் எடுத்துப் பல செயல்களைச் செய்து கொள்ளலாம்!
* ஆத்மாவுக்கு அழிவே இல்ல! ஆத்மா ஆனந்த மயமானது-ன்னு எல்லாம் சொன்னவுடன்....

அருச்சுனன் இப்போ தான் யாரு, தன் லெவல் என்ன-ன்னு ஓகோ-ன்னு தெரிஞ்சிக்கிட்டான்! ஆனால் கூடவே வந்தது ஒரு ஆபத்து!
"தானே எல்லாம்" என்ற ஒரு திமிரும் கூடவே வந்து விட்டது! ஞானச் செருக்கு, கர்மச் செருக்கு! :))
அஹம் பிரம்மாஸ்மி! நானே கடவுள்! நான் மட்டுமே கடவுள்-ன்னு ஐயா நினைக்க ஆரம்பிச்சிட்டாரு! = Thanks to: ஞான யோகம், கர்ம யோகம்! :))

ஆத்மாவை அறிந்து கொண்டாயிற்று! பழனி அடிவாரம் வந்தாச்சி!
இனி பரமாத்மாவை அறிவோம்! பழனி மலை ஏறுவோம்-ன்னு இல்லாமல்...

அடிவாரமே பழனி மலை! ஞான-கர்ம யோகம் தான் சூப்பர்!
"நான்", "என்" கர்மாவைப் பண்ணிக்கிட்டே இருப்பேன்! யாரும் "என்" கர்மாவைக் கேள்வி கேட்க முடியாது! :)
"நானே" ஞான பரமாப் படிச்சி அவனை அடைஞ்சிருவேன்!
"நானே" விதிச்சதைப் பண்ணி அவனை அடைஞ்சிருவேன்! - இப்படியெல்லாம் ஐயா யோசிக்க ஆரம்பிச்சிட்டாரு! வந்தது விபரீதம்!

இப்போ தான் கீதையின் திருப்பு முனை, அந்த ஏழாம் அத்தியாயம் துவங்கப் போகிறது! என்ன சொல்கிறான் கண்ணன்?
"ஞான யோகம், கர்ம யோகம் செய்பவர்களை எனக்கு அவ்வளவாப் பிடிக்காது அருச்சுனா!"

யோகினாம் அபி சர்வேசாம், மத் கதேன அந்தர் ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம், சமே யுக்த தமோ மதா:
6:47

"ஆகா...அப்போ யாரைத் தான் உனக்குப் பிடிக்கும் இறைவா?"

சுபா அசுப பரித் தியாகி, பக்திமான் யச மே ப்ரியஹ! 12.17
ச்ரத்தா தன மத் பரம, பக்தாஸ் தேதிவ மே ப்ரியஹ! 12:20

"எதுக்கும் பெருசா லாயக்கில்லை! I am Unfit-ன்னு தங்களைத் தாங்களே புரிஞ்சிக்கறவங்களை ரொம்பவே பிடிக்கும்! அவங்களுக்கெல்லாம் இன்னிக்கே மோட்சம்!" :))

(பக்தி For Dummies, பக்தி For Supers...தொடரும்...)
Read more »

Saturday, March 07, 2009

மகளிர் வட்டம்: இலட்சுமணனுக்குப் போடுவோம் சீதா ரேகா!

உலக மகளிர் தின வாழ்த்துக்கள்! மகளிர் தினத் தொடர் விளையாட்டுக்கு, நம்ம ஷைலஜா அக்கா கோலம் போட்டு, மூனு பேரைக் கூப்பிட்டு இருக்காக!

ஒரே பயமாப் போயிரிச்சி! எங்கே நம்மளையும் கோலம் போடச் சொல்லீருவாங்களோ-ன்னு! :)
ஆனால் அவிங்க மட்டும் தான் கோலம் போடணுமாம்! நாம கோலத்துக்கு பார்டர்/வட்டம் மட்டும் போட்டாப் போதும்-ன்னு சொல்லிட்டாங்க! :)

இந்தப் பெண்கள் எப்பமே இப்படித் தான்! கஷ்டமான காரியங்களைத் தானே எடுத்துக்கிட்டு, நம்ம கிட்ட கொடுக்கவும் கொடுக்காம, தானே கஷ்டப்பட்டு செஞ்சதாக் காட்டிக்கறதுல அப்படி என்ன தான் ஒரு சுகமோ? ஹா ஹா ஹா! :)
நாம கோலத்துக்கு பார்டர்/வட்டம் மட்டும் போடுவோமா? ஹிஹி! பெண் வட்டம்! அதான் கவிதைத் தலைப்பு!

அக்கா என்ன சொல்றாங்க-ன்னா: //நேற்று இந்தக் கோலத்தை வாசலில் போடும் போது பெண்ணுருவத்தை மட்டும் முதலில் போட்டு வண்ணப் பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்து விடுவார்களோ என பெண்ணைச் சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகா போல! இந்தக் கோடு அதாவது பெண்வட்டம் பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்//

இப்படி ஒரு பெண்ணே, பெண்ணைச் சுற்றிலும் வட்டம் போட்டுட்டு, ஆண்கள் மட்டுமே கவிதையை எழுதணும்-ன்னு அடம் புடிச்சா? :)
இந்த அடாவடி அக்காவைப் பழி தீர்க்க, சரியான சந்தர்ப்பம்...இதோ...


பெண் வட்டம் - இலட்சுமண ரேகை?

எத்தனை எத்தனை வட்டங்கள் இந்தப் பெண்ணுக்கு மட்டும்?
உச்சந் தலையில் துவங்கும் பொட்டும் வட்டம்!
உள்ளங் கால் விரல் மெட்டியும் வட்டம்!
அழகிய வட்டமும் உண்டு! அழுகிய வட்டமும் உண்டு!
*****************

குழந்தையாய் இருந்தவளின் நட்பு வட்டம் பெரிதா?
குமரியாய் ஆன பின் போட்ட கற்பு வட்டம் பெரிதா?

*****************

தோழியர் வட்டம், காளையர் வட்டமாய் ஆனது!
காளையர் வட்டம், நண்பர் வட்டமாய் ஆனது!
நண்பர் வட்டம், குடும்ப வட்டமாய் ஆனது!
குடும்ப வட்டம், குழந்தை வட்டமாய் ஆனது!

குழந்தை வட்டம், பாச வட்டமாய் ஆனது!
பாச வட்டமோ ஓர் நாள் காணாமல் போனது!

வட்டம் அதனுள் வளைய வந்தவள், வட்டம் காணாது வாட்டம் ஆனாள்!
வட்டம் போனால் நல்லது தானே? வட்டம் போனால் வருத்தம் ஏனோ?

*****************

வட்டத்துக்குக் கூர் முனை இல்லை பெண்ணே!
குத்தினாலும் வலி உடன் தெரிவதும் இல்லை!
ஆனால் முனை இல்லா ஆயுதமும் ஆயுதம் தானே! - வேண்டுமா உனக்கு?

வேண்டும் என்று ஒரு ஆணாய்ச் சொல்கிறேன்!
பெண்ணுக்கு வட்டம் வேண்டும் தான்!
வட்டம் இனி "நீ" உன் கையில் எடுத்துக் கொள்!
*****************

வாசகர் வட்டம், ரசிகர் வட்டம், பதிவர் வட்டம்,
சமூக வட்டம், இசையின் வட்டம், சேவை வட்டம்
....என்று அவரை வட்டமாய் ஆக்கி விடு!
வட்டங்கள் மாறும் காலம் இது!
மாறி விடு! வட்டத்தை அவருக்கு மாட்டி விடு!


இலக்ஷ்மணா, நலமா?
பதிவர் வட்டத்துக்குள் இருந்து எனக்குப் பின்னூட்டு மைத்துனா!

கோலம் போடும் கைக்கு, ரேகை போடவா தெரியாது?
உன்னைச் சுற்றி....இதோ...
சீதை வரைகிறாள்.....
சீதா ரேகா! சீதையின் ரேகை!அடுத்து மூன்று ஆண்களை அழைக்கணுமாம்-ல? யாரைப் பழி வாங்கலாம்?? :))

1. செல்ல மகள் அபி கவிதை எழுதுவாள்! அப்பா எழுதுவாரா? தேறுவாரா? பார்த்து விடலாமா? - வ.வா.ச அட்லாஸ் சிங்கம்...அபி அப்பா! :)

2. பெண் ஈயம், பித்தளைக்கு வலையுலகில் பேர் போன நம்ம இலவசக் கொத்தனார்! குறுக்கெழுத்தாய்யா போடுற? கவுஜ போடு பாப்போம், வெண்பாக் கவுஜ? வட்டம், வட்டமாப் போடணும்! :)

3. வட்டத்தை வச்சி PIT-ல ஃபோட்டோ போட்டி நடத்தலாம்! போட்டா போட்டி நடத்த முடியுமா? ஜீவ்ஸ் அண்ணே! :)
Read more »

Wednesday, March 04, 2009

கருவறைக்குள் அந்தணர் அல்லாதார்! - 1000வது ஆண்டு!

கருவறைக்குள்ளே அந்தணர் அல்லாதார் போகலாமா? அப்படிப் போகத் தான் முடியுமா?
போக ஆகமத்தில் அனுமதி உண்டா? இது வரை யாராச்சும் அப்படிப் போய் இருக்காங்களா?
போனவர்களைச் சக அந்தணர்கள் மதித்து நடத்துவாங்களா? - இப்படி அத்தனை கேள்விக்கும் ஒரே பதில் தான்! = ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

ஆகா! அப்படிக் கருவறைக்குள் போனவர் யாருப்பா? அதுவும் ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே?
இப்ப தானே அரசு சட்டம் எல்லாம் கொண்டாந்து, அனைத்துச் சாதி அர்ச்சகர்-ன்னு ஆகமம் படிக்கவே ஆரம்பிச்சி இருக்காங்க?
சென்னை நகரம் பூவிருந்தவல்லி ஏரியாவின் ஒரு வைசியர்! எண்ணெய் வியாபாரச் செட்டியார் குடும்பத்தில் பிறந்தவர்! ஸோ-கால்ட் தாழ்ந்த குலத்தவர்!
மிகுந்த பணிவும் பண்பும் கொண்டவர்! இறைவன் மீது பக்தியை விட, அன்பைப் பிரதானமாகக் கொண்டவர்!

இவரின் 1000வது பிறந்த நாள் தான் இன்று (Mar-5-2009)! மாசி மாதம் மிருகசீரிட நட்சத்திரம்! ஒரு வாழ்த்து சொல்லிருவமா மக்களே?
மனத்துக்கினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நம்பி! :)


ஆகா? நம்பியா? யார் அந்த நம்பி?

"நானும் கருவறைக்குள் நுழைந்து காட்டுகிறேன் பார்" என்று வீம்புக்கு இவர் நுழையவில்லை! கருவறை நுழைவுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டு, பின்னர் நுழைந்தார்!
முறையாகப் பயின்று, முறையாக நுழைந்தார்! அன்பால் நுழைந்தார்!

நுழைந்த அடுத்த நிமிடமே அவருக்கு வேர்த்து ஊற்றுகிறது!
அடடா, கருவறை இறைவனுக்கு இப்படியா வேர்த்து வடியும்? என்று விசனப்பட்டார்!
விசிறி (ஆலவட்டம்) வீசினார்! வீசி, வீசி, அவனிடம் பேசவும் பேசினார்!

கற்பனை செய்து பாருங்கள்...
* எண்ணெய் வாணிபச் செட்டியார் ஒருவர், கருவறைக்கு உள்ளே!
* அந்தண இளைஞன் ஒருவன், கருவறைக்கு வெளியே!


"இறைவன் என்னைப் பற்றி என்ன நினைக்கிறான்? அவனிடம் எனக்கு ஒரு உத்தரவு வாங்கிக் கொடுங்க" என்று ஒரு அந்தண இளைஞன் ஒரு செட்டியாரைக் கெஞ்சுகிறான்! ஹா ஹா ஹா!

நண்பன் ஜி.ராகவனுக்கும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இப்படி நுழையணும்-ன்னு ஒரு ஆசையாம்! "கனவு, கினவு ஏதாச்சும் காணுறியா கேஆரெஸ்? இதெல்லாம் நடக்கிற காரியமா?" என்று கேட்கத் தோணுதா மக்களே? ஹிஹி!
இது முற்றிலும் உண்மை! அதான் சொன்னேனே ஆயிரமாவது பிறந்த நாள்-ன்னு! ஓ...பேரையும் ஊரையும் இன்னும் சொல்லலீயா? அதான் சந்தேகமா...?

அது காஞ்சிபுரம் பேரருளாளன் (வரதராஜப் பெருமாள்) கருவறை!
* வெளியில் நின்ற அந்தண இளைஞனின் பெயர் = ???
* கருவறையில் உள்ளே இருந்த செட்டியாரின் பெயர் = திருக்கச்சி நம்பிகள்! - இனிய 1000வது பிறந்த நாள் வாழ்த்துக்கள், திருக்கச்சி நம்பிகளே! இன்னுமொரு ஆயிரம் ஆண்டு இரும்!


கஜேந்திர தாசன்! ஆனால் அனைவரும் மரியாதையாக அழைப்பது = திருக்கச்சி நம்பிகள்! காஞ்சி பூர்ணர்!
பூவிருந்தவல்லி அவர் சொந்த ஊர்! சென்னைத் தமிழில் பூந்தமல்லி! :)
அங்கிருந்து காஞ்சிபுரத்துக்கு நடந்து செல்கிறார் நம்பி! கையில் குடமும், பூக்குடலையும்! வழியில் ஸ்ரீபெரும்பூதூரில் தங்கி இளைப்பாற...
அந்த அதி முக்கியமான வரலாற்றுச் சந்திப்பு நடந்தது! ஒரு இளைஞனின் வாழ்க்கையையே திசை திருப்பிப் போட்டது!

ஒரு சைவக் குடும்பத்துச் சிறுவன்! வடமா என்னும் அந்தணர் குலத்தில் பிறந்தவன்! நம்பிகளின் பணிவும் பக்தியும் பார்த்து, மெள்ள மெள்ள அவரை அணுகினான்!
திருக்கச்சி நம்பியோ அங்குள்ள தெரிஞ்ச ஆட்களிடம் ஏதோ திவ்யப் பிரபந்தமாம்...அதைப் மெல்லிசாப் பாடிக் காட்டிக் கொண்டு இருந்தார்! அந்தச் சந்த ஓசை கேட்டு, இவன் மெள்ள வந்து அவர் காலில் வணங்குகிறான்!

நம்பி: "ஐயோ...என்ன இது? பார்க்க ஐயர் வீட்டுப் புள்ளைப் போல இருக்கீங்களே தம்பி! என் காலில் நீங்க விழலாமா?"

இளைஞன்: "அதனால் என்ன சுவாமி? உங்களைப் பார்த்தால் தொண்டிலே பழுத்த பெரியவர் போல இருக்கீங்க! உங்க காலில் விழுந்து ஆசி பெறுவதில் தவறு ஒன்னும் இல்லையே!"

நம்பி: "அதுக்கில்லைப்பா! நீங்கள் அந்தணர்! அடியேன் தாழ்ந்த குலத்தவன்!"

இளைஞன்: "எதைப் பார்த்து என்னை அந்தணன் என்று சொன்னீர்கள் சுவாமி? தோளில் உள்ள இந்த நூலைப் பார்த்தா? பூநூல் தரிப்பதால் மட்டுமே ஒருவன் அந்தணன் ஆகி விட முடியுமா என்ன?
இறைவனைத் தோளில் தரிப்பதா? நெஞ்சில் தரிப்பதா? யார் அந்தணர்?"

நம்பி: "ஆகா! இப்படியெல்லாம் பேசக் கூடாதுப்பா! உங்க ஆட்கள் யாராச்சும் தவறாக நினைக்கப் போகிறார்கள்!"

இளைஞன்: "தவறாக ஒன்னும் சொல்லலையே சுவாமி! வித்தியாசமா சொல்றேன்-ன்னு வேணும்னாச் சொல்லுங்க!
திருப்பாணாழ்வாரைக் கல்லால் அடித்தாராம் தலைமை அர்ச்சகர்! பின்னர் மனம் திருந்திய பின், இப்போது அந்தணர்களே ஆழ்வாரைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்களாமே! திருப்பாணாழ்வாரை விடவா நான் ஒரு உயர்ந்த அந்தணன்?"

நம்பி: "இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு பணிவான பேச்சா? உன் பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்களப்பா!"

இளைஞன்: "சுவாமி! நீங்கள் சற்று முன் பாடினீங்களே ஒரு பாட்டு! அது நம்மாழ்வார் எழுதியது தானே?"

நம்பி: "ஆமாம்! ஓ...உனக்கு ஆழ்வார்களைப் பற்றித் தெரியுமா? உன்னைப் பார்த்தா ஐயமாரு வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்கே! வேத அத்யயனம் செய்வீங்க அல்லவா? தமிழ்ப் பாசுரம் எங்கேயாச்சும் தனியாப் படிச்சிருக்கியா தம்பீ?"

இளைஞன்: "சும்மா ஆர்வத்தில் அங்கொன்னு இங்கொன்னு கத்துக்கிட்டது தான் சுவாமி! நீங்கள் பாடின சந்த ஓசை, அப்படியே கட்டிப் போட்டு விட்டது! அதான் உங்களிடம் வந்து வணங்கினேன்! வகுப்புக்கு நேரமாச்சு! நான் போய் வருகிறேன் சுவாமி!"

நம்பி: "யாரிடம் படிக்கிறாயப்பா? இது தான் உன் ஊரா? நான் இந்த வழியாத் தான் காஞ்சிபுரம் போவேன் வருவேன்! அடுத்த முறையும் முடிஞ்சா சந்திப்போம்!

இளைஞன்: "திருப்புட்குழி யாதவப் பிரகாசர் என்னும் அத்வைத குரு! அவர் கிட்டக்கத் தான் தற்சமயம் பாடம் வாசிக்கிறேன்! பாடசாலையில் ஏற்கனவே சில பிரச்சனைகள்! தாமதமாகப் போகக் கூடாது! நான் வரேன் சுவாமி!
உங்களைப் பார்த்ததில் இருந்து என் மனம் என்னமோ லேசானது போல் இருக்கு!"

நம்பி: "பேர் சொல்லாமல் போகிறாயேப்பா! உன் பேர் என்ன?"

இளைஞன்: "இராமானுஜன்..." (ஓடி விடுகிறான்!)பின்னாளில் ஆசிரியரின் விளக்கங்கள் சரியில்லாத போது, கேள்விகள் கேட்டு...
அறியும் விழைவால் கேட்ட கேள்விகளை எள்ளலாக எடுத்துக் கொண்ட அந்த ஆச்சாரியர், இவனைக் கொல்லவும் துணிந்து...
அந்தச் சதியிலிருந்து தப்பி... தந்தை இல்லாச் சிறுவன், தாய் சொன்னபடி, திருக்கச்சி நம்பியிடமே போய்ச் சேர்ந்தான்!

வேறு ஒரு நல்ல குருவை அவர் பையனுக்குக் காட்டுவார் என்று தாய் நினைத்தாள்! இவனோ, நம்பியையே குருவாக வரிக்க நினைக்கிறான்! அவரோ, தன் குலம் கருதி சற்றுத் தயங்குகிறார்!

காஞ்சி வரதனுக்குச் சாலைக் கிணற்றில் இருந்து நீர் கொண்டாந்து தரும் தீர்த்த கைங்கர்யம்=நீர்த் தொண்டு செய்யச் சொல்கிறார்!
அப்படிச் செய்யும் போது, உனக்கு ஒரு நல்ல குரு தானாகவே கிடைப்பார் என்றும் சொல்கிறார்!

"வேதம் படிச்சவன் இது போன்ற வேலைக்கார வேலையெல்லாம் செய்வதா? இதெல்லாம் படிக்காத பக்தர்கள் அல்லவா செய்வார்கள்?" - என்று கேள்வியே கேட்கவில்லை அந்த இளைஞன்!
படித்ததின் பயனே, பணிவதற்குத் தான் என்பதைப் புரிந்து வைத்திருந்தான்! உடனே சம்மதித்தும் விட்டான்! அப்படித் தண்ணீர்த் தொண்டு செய்து வரும் வேளையில் தான்....புகழ் பெற்ற "அந்த ஆறு வார்த்தைகள்" உதித்தன!


நம்பி: "என்ன இராமானுசா? இன்று ஏதோ தயங்கித் தயங்கி நிற்கிறீர்கள்? என்ன விஷயம்?"

இளைஞன்: "சுவாமி நீங்கள் கருவறைக்குள்ளேயே சென்று தொண்டு செய்யும் பேறு பெற்றவர்! அடியேனுக்கு அந்தப் பேறு இல்லை!"

நம்பி: "அதனால் என்ன? முறையாகப் பயின்று, முறையாக உள்ளே வரலாமே?"

இளைஞன்: "அதில்லை சுவாமி! எனக்கு ரொம்ப நாளா மனதை அரித்துக் கொண்டே இருக்கும் சில சந்தேகங்கள்! அதைத் தீர்த்து வைக்க குருவும் இதுவரை அமையவில்லை! அமைந்த ஒரே குருவான ஆளவந்தாரும், நான் போய்ப் பார்க்கும் முன்னமே இயற்கை எய்தி விட்டார்! அடுத்து என் வாழ்க்கைப் பாதை எப்படிப் போகும்-ன்னே தெரியலை சுவாமி!"

நம்பி: "இவ்வளவு விசனமா உமக்கு? இயற்கை எய்திவிட்டாலும், உமக்குப் பரமகுரு ஆளவந்தார் தான்! நீர் அந்தணன்! என்னைக் குருவாக வரித்தால், உங்கள் வீட்டிலோ, சமூகத்திலோ, உம் மனைவியோ ஏதாச்சும் சொல்லுவார்கள்! அதான் தயங்கினேன்!
ஆனால் உம் மனத் தாபம் பார்த்து எனக்கே கஷ்டமாக இருக்கு! சொல்லும் என்ன வேண்டும் உமக்கு?"

இளைஞன்: "இன்றிரவு கருவறைக்குள் விசிறி வீசுவீங்க-ல்ல? அப்போது என் சந்தேகங்களைப் பெருமாளிடம் கேட்டுச் சொல்ல முடியுமா?
எனக்கு பதில் வாங்கித் தாருங்கள் சுவாமி! உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டு இருப்பேன்!"

நம்பி: "ஹா ஹா ஹா! சொல்லும்...உம் சந்தேகங்கள் என்ன?"

இளைஞன் சொல்லச் சொல்ல.....நம்பி திடுக்கிடுகிறார்....


காஞ்சி வரதன்!


இறைவன்: "என்ன நம்பிகளே! பலத்த யோசனை? இன்று உம் விசிறியில் இருந்து காற்றே வரலையே? காற்று வந்தால் தானே அதற்குப் பேரு விசிறி?" :)

நம்பி: "பெருமாளே! மன்னிக்க வேண்டும்! ஆழ்ந்த சிந்தனை! சிறு பிள்ளை கேட்ட பெரும் கேள்விகள் அப்படி! அவன் கேட்டது எனக்கும் தெரிந்தது போலத் தான் இருக்கு! ஆனால் தெரியாதது போலவும் இருக்கு!"

இறைவன்: "அடேயப்பா! உம் சீடன் கேட்ட கேள்விகளுக்கு அப்படி ஒரு சக்தியா? கேள்வி கேட்கவே பிறந்திருக்கான் போல!
கேள்வி தான் ஆன்ம விசாரணையைத் தூண்டும்! கேள்வியே வேள்வி! தாங்கள் அறியீரோ நம்பீ?"

நம்பி: "அறிவேன் சுவாமி! ஆனால் இது போன்ற கேள்விகளைக் கேட்டு, பாடசாலைக் குருவால் அவனுக்கு ஆபத்து தானே மிஞ்சியது?
உண்மையை அறியும் விழைவு இல்லாது, தாங்கள் வைத்ததே சட்டம் என்னும் குருமார்கள் யோக விசாரணை இல்லாதவர்கள்! அவர்களுக்கு கேள்விகள் என்றுமே பிடிப்பதில்லை!
அவர்களிடம் போய்க் கேட்பதை விட, அவன் சந்தேகத்தை நீங்களே தீர்த்து வைத்தால் என்ன?....குருவாய் வருவாய் அருள்வாய் வரதா!"

இறைவன்: "சொல்லுங்கள்! என்ன கேள்விகள்?"

1. கட+வுள் என்றால் என்ன? யார் பரம்பொருள்?
2. உண்மைத் தத்துவம் என்பது எது?
3. கடவுளை அடையும் உபாயம் எது?
4. மரண காலத்தில் இறைவனின் நினைவு தேவையா?
5. எப்போது மோட்சம் கிட்டும்?
6. குருவாக யாரைக் கொள்வது?

நம்பிகள் சொல்லச் சொல்ல, இறைவனே திடுக்கிடுகிறான்....


இறைவன்: "திருக்கச்சி நம்பிகளே! போய் உம் சீடன் இராமானுசனிடம் சொல்லும்! அவன் கேட்ட கேள்விகள் அவ்வளவு கூர்மையானவை!
அதை விளக்கத் தான், நான் இத்தனை காலம், இத்தனை அவதாரங்கள் எடுத்து கஷ்டப் படுகிறேன்! :))

ஆனால் அவனோ, ஆறே வார்த்தையில் கேட்டு விட்டான்! ஆறு படையான ஆற்றுப்படை! அவன் வாழ்வின் திருப்புமுனை இங்கே ஆரம்பித்து விட்டது என்று சொல்லுங்கள்!

இதோ நம் பதில்கள்! இதோ நம் ஆறு வார்த்தைகள்!
1. பரம் பொருள் நாமே!
2. பேதமே தரிசனம்!
3. உபாயம் பிரபத்தியே!
4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்!
5. சரீரம் விடுகையில் மோட்சம்!
6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது!"கையில் ஆலவட்ட விசிறியுடன், திருக்கச்சி நம்பிகள்!


1. பரம் பொருள் நாமே! = அகரம் முதலே எல்லா எழுத்தும்! ஆதி பகவன் முதற்றே எல்லா உலகும்!
ஒருவர் விடாது, எல்லாரும், என்றேனும் அடைய வேண்டிய பொருள் நாமே! அதற்கு வழி நாமே! நாமே வழியும் ஜீவனுமாய் இருக்கிறோம்!

2. பேதமே தரிசனம்! = எதுவுமே மாயை அல்ல! எல்லாமே உண்மை!
சித்(உயிர்ப்பு உள்ளது), அசித்(உயிர்ப்பு இல்லாதது), ஈஸ்வரன்(இறைவன்) என்ற பேதமே தரிசனம்! அதுவே தத்துவம்!

3. உபாயம் பிரபத்தியே! = "தன்" அறிவு (ஞானம்), "தன்" செயல் (கர்மம்), "தன்" பக்தி (பக்தி) என்ற அனைத்திலும் "தன்னை" விடுப்பதே உபாயம்! பிரபத்தி என்னும் சரணாகதியே உபாயம்!
உங்கள் அறிவினால் மட்டுமே, அரி-அவனை அறிய முடியும் என்று இறுமாந்து விடாதீர்கள்!
வையம் அளந்தானை அளக்க முடியாது! கொள்ளத் தான் முடியும்!

நாமே நம் ஞானத்தால், கர்மாவால் தேடி அறிந்தோம் = இந்த அகங்காரத்துக்கும், ஞானச் செருக்குக்கும், தீனி போட வேண்டுமானால் பல தத்துவங்கள் உதவலாம்! ஆனால் அவற்றால் காலத்துக்கும் உங்கள் பசியை ஆற்ற முடியாது!
எனவே, என்றுமே வற்றாத நீர் நிலையான எம்பெருமான் திருவடிகளில் சரணாகதி செய்யுங்கள்! பற்றுக பற்றற்றான் பற்றினை!

4. அந்திம ஸ்மிருதி வேண்டாம்! = இறக்கும் தருவாயில் இறைவன் நினைவு தேவையில்லை! நல்ல நாளிலேயே என்னை நினைக்க முடியாத உனக்கு, உடல் தளரும் போது, அவஸ்தையை மீறி என்னை நினைக்க முடியுமா? அதனால்..... அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்!

5. சரீரம் விடுகையில் மோட்சம்! = சரணம் அடைந்தார்க்கு எல்லாம் சரீரம் விடுகையில் மோட்சம்!

6. குருவாக பெரிய நம்பிகளைப் பற்றக் கடவது! = எப்போதும் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்!
* சரி பெரியவர்கள் என்று எப்படி அறிவது? செயற்கரிய செய்வார் பெரியர்! பெரியவர்கள் பெரியது செய்வார்கள்!
* சரி, அப்போ பெரியது எது? = தொண்டர் தம் பெருமை சொல்லவும் "பெரிதே"! அடியவர்களை அரவணைப்பவரே பெரியவர்! அந்தப் பெரியவர்களையே குருவாகப் பற்ற வேண்டும்! பெரிய நம்பிகளைக் குருவாக இவன் பற்றட்டும்!

நம்பி: "வரதா! வரதா!.........அருமை! அருமை! நீயே குரு! நீயே குரு!
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ!
தஸ்மை ஸ்ரீ-யின் குரவே நமஹ!

உய்யும் **ஆறு** என்று எண்ணி, உகந்து, ஏல்-ஓர் எம்பாவாய்! இதோ சொல்லி விடுகிறேன்...! வெளியில் ஆவலாய்க் காத்துக் கிட்டு இருக்கான்!

ஆற்றுப்படை வார்த்தைகள் இவை தான், என் சீடனே! உன் பொருட்டு இறைவனே சொன்னது! என் இனிய இராமானுசா.....கேட்டுக் கொள்! கேட்டுக் கொள்! " - மகிழ்ச்சியில் விரைகிறார் நம்பிகள்.......


ஆற்றுப்படையான ஆறு வார்த்தைகளைப் பெற்றுத் தந்து...
அந்த இளைஞனின் வாழ்க்கைப் போக்கையே மாற்றி...
பின்னாளில் ஒரு சமூக-பக்தி இயக்கம் = இராமானுச இயக்கம் தோன்ற...
முதல் விதை போட்டவர் திருக்கச்சி நம்பிகள்!


அருளாளர் உடன்மொழி சொல் அதிசயத்தோன் வாழியே!
ஆறு மொழி பூதுரார்க்கு அளித்த பிரான் வாழியே!
திருவால வட்டம் செய்து சேவிப்போன் வாழியே!
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே!

கருவறைக்குள் அந்தணர் அல்லாத அவரை,
இன்று அத்தனை அந்தணர்களும் கொண்டாடுகிறார்கள்!
நாமும் கொண்டாடுவோம்! 1000வது பிறந்த நாள்!
வரதராசன் கருவறைக்குள் அன்றே புகுந்த, திருக்கச்சி நம்பி திருவடிகளே சரணம்!


அனைத்துச் சாதி அர்ச்சகர்கள், பல நூற்றாண்டுகளாக!
சட்டங்கள் இன்றி, சத்தங்கள் இன்றி...

Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP