Showing posts with label பட்டாம்பூச்சி. Show all posts
Showing posts with label பட்டாம்பூச்சி. Show all posts

Sunday, March 15, 2009

தமிழில் பட்டர்ஃபிளைக்கு பெயர் இருக்கா?

ஓ பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை! ஏன் கொடுத்தாய் விருதை?-ன்னு மாத்திப் பாடலாமா? ஹிஹி! மகரந்தத்தைத் தேடித் தானே பட்டர்ஃபிளை வரும்? ஆனால் மகரந்தமோ, பட்டர்ஃபிளையை என்னிடம் அனுப்பி வைச்சிருக்கு! :)பட்டாம்பூச்சி விருது அளித்த மகரந்தன், நண்பன் ராகவனுக்கு நன்றி! :)

இந்த மாஆஆஆசம் என்ன விருது மாசமா? தமிழ்மணத்தின் இரண்டு விருதுகளோடே, தமிழ் மணக்கும் ராகவன் இன்னொரு விருதும் அடியேனுக்குத் தந்து ஹாட் ட்ரிக் ஆக்கி இருக்கான்! :)
யார் இந்த பட்டாம்பூச்சியைப் பறக்க விட்டாங்களோ தெரியலை....ஆனால் துள்ளித் திரிந்த காலங்கள் கணக்கா, ஒவ்வொரு வலைப்"பூ"வுக்கும் அழகாப் பறந்துக்கிட்டே இருக்கு!


"சரி..... தமிழில் பட்டர்ஃபிளைக்கு என்ன பெயர்???"

"அட மாங்கா கேஆரெஸ், உன்னைப் போயி தமிழ் கொஞ்சும் பதிவு-ன்னு சொல்லுறாங்க பாரு! இது கூடவா தெரியாது?....குழந்தைக்குக் கூடத் தெரியுமே...பட்டர்ஃபிளைக்குத் தமிழ்ப் பேரு = பட்டாம்பூச்சி, வண்ணத்துப் பூச்சி! இது என்னடா கேள்வி?"

"எலே! வண்ணான் பூச்சி, வண்ணாத்திப் பூச்சி-ன்னு எனக்கும் தெரியும்! அதெல்லாம் இப்போ நாம ஜாலியா சொல்றது!
ஆனால் இவ்வளவு அழகான, காதலர்களின் பட்டாம்பூச்சியை, தமிழ் இலக்கியப் பாடல்களில் யாரும் பாடினா மாதிரியே தெரியலையே! அதான் என் கேள்வி! நீயே யோசிச்சிப் பாரு! சினிமாப் பாட்டு தவிர, வேற எங்காச்சும் பட்டர்ஃபிளை பறந்திருக்கா?"

"அட, ஆமாம்-ல? சினிமாவில் பட்டர்ஃபிளை பாட்டு இருக்கு! ஆனா இலக்கியத்தில் வண்ணத்துப் பூச்சி பத்தி யாரும் பாடலை போலிருக்கே!
எத்தனை எத்தனை காதல் இருக்கு தமிழ் இலக்கியத்தில்? ஆனால் ஒருத்தர் கூடவா நம்ம பட்டாம்பூச்சியைப் பாடலை? எ.கொ.ச?"

"ஹா ஹா ஹா! ஒரு வேளை...இந்த வண்ணத்துப் பூச்சி, "தமிழ்க் கடவுள்" மாதிரி, "தமிழ்ப் பூச்சியா" இல்லாம இருந்திருக்குமோ? அதான் இலக்கியத்தில் பின்னாளைய புலவர்கள் பாடலையோ?"

"டேய்....வேணாம்! ஒதை படுவ கேஆரெஸ்ஸு! ஒழுங்காச் சொல்லிரு! இப்ப எதுக்கு இதைக் கெளப்பி விட்ட நீயி? தமிழில் வண்ணாத்திப் பூச்சிப் பாட்டு இருக்கா? இல்லையா? அதச் சொல்லு!"

"இருக்கு! இருக்கு!....ஒவ்வொன்னா எடுத்து விடவா? அடா, அடா, அடா....காதல்-ல்ல தான் எத்தனை எத்தனை பட்டாம்பூச்சி பாட்டு இருக்கு?
1. வண்ணத்துப் பூச்சி...வயசென்ன ஆச்சி?
2. ஒரு பட்டாம் பூச்சி நெஞ்சுக்குள்ள சுத்துகின்றதே!
3. ஓ...பட்டர்ஃபிளை...பட்டர்ஃபிளை, ஏன் விரித்தாய் சிறகை?"


"டேய்....தமிழ் இலக்கியத்தில் ஏன் பட்டாம் பூச்சி இல்லை-ன்னு கேட்டா, நீ என்னமோ சினிமாப் பாட்டை எல்லாம் காட்டுற?"

"அட ராசா, சினிமாப் பாட்டு இலக்கியம் ஆவாதா என்ன? இன்றைய பாட்டு, இன்னும் இருநூறு வருசத்துல இலக்கியம் ஆயிரும்-டா! தெரிஞ்சிக்கோ" :)

"யாரு கண்டா? ஒன்னை மாதிரி, ஜிரா மாதிரி, கானா பிரபா மாதிரி ஆளுங்க இருந்தாக்கா, ஆனாலும் ஆயிரும்! :) ஆனாலும் வண்ணத்துப் பூச்சி, வயசென்ன ஆச்சி பாட்டு எனக்கும் ரொம்ப புடிக்கும்-டா கேஆரெஸ்!"

"அப்படி வா வழிக்கு! இன்னும் நிறைய பாட்டு இருக்கு! நடு நடுவுல வண்ணத்துப் பூச்சி வரும்! - விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே....அதுல கூட, நீ பட்டுப் புடைவை கட்டிக் கொண்டால், பட்டாம் பூச்சிகள் மோட்சம் பெறும்-ன்னு வரிகள் வரும்! செம கிக்கா இருக்கும்-ல?"

"சரி, நீ மேட்டருக்கு வா! தமிழ் இலக்கியத்தில் பட்டாம் பூச்சி இருக்கா? இல்லையா?"


பட்டாம் பூச்சி வேற! பட்டுப் பூச்சி வேற! பட்டுப் பூச்சி, மின்மினிப் பூச்சி, பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி-ன்னு நிறைய இருந்தாலும், மகரந்தம் தேடிப் பறப்பது...மூனே மூனு தான்! = பட்டாம்பூச்சி, வண்டு, தும்பி!

இதுல வண்டு, தும்பி = இந்த இரண்டு பத்தியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு!
கோத்தும்பீ என்று மாணிக்கவாசகர் தனியாகவே ஒரு தொகுப்பு போட்டு இருக்காரு! சங்க காலத்திலேயே, கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் "தும்பி" தான் திருவிளையாடல் புகழ் பெற்றதாச்சே!

வண்டு பற்றியும் இலக்கியத்தில் உண்டு! திரையிசைப் பாடல்களும் உண்டு!
பூவில் வண்டு கூடும் கண்டு, பூவும் கண்கள் மூடும் என்பது என்னவொரு அழகிய சினிமாப் பாடல்! அதில் இலக்கிய அழகு இல்லீயா என்ன?

"வண்டினம்" முரலும் சோலை என்பது ஆழ்வார் பாசுரம்! வண்டார் குழலி/சுரும்பு ஆர் குழலி என்று இரத்தினகிரி முருகன் கோயிலில் உள்ள அம்பாளுக்குப் பேரு!
இப்படி வண்டும் தும்பியும் இலக்கியத்தில் நிறையவே இருக்கு! ஆனால்.....

* அழகிய வண்ணம் வண்ணமாய்ப் பறக்கும் பட்டாம் பூச்சி...
* காதல் தேனை உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கும் பட்டாம் பூச்சி...
* "I Love U" என்ற மந்திரச் சொல் சொல்லும் போது இளசுகளின் கண்கள், உள்ளமெல்லாம் பறக்கும் பட்டாம் பூச்சி....
தமிழ் இலக்கியத்தில் கிட்டத்தட்ட இல்லை-ன்னே சொல்லிறலாம்! :(((



"அடடா......அப்படியா சேதி? பட்டாம் பூச்சிக்குத் தமிழ் இலக்கியத்தில் இடம் இல்லையா? கேட்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கேஆரெஸ்!"

"என்னாங்க பண்றது? பின்னாளைய தமிழ்ப் புலவர்கள் மனசு வைக்கணும்! அவிங்க யாரும் வைக்கலை போல இருக்கே! தமிழ்க் கடவுளான திருமாலையே தமிழ்க் கடவுள்-ன்னு பாடாத சில பின்னாள் புலவர்களா, பட்டாம் பூச்சிக்கு எல்லாம் மனசு இரங்கப் போறாங்க?"

"அது என்னமோ சரி தான்! அறுபது வயசு ராஜா அந்தப்புர உப்பரிகையில் நடந்து வருவதைப் பார்த்துட்டு, வீதி இளம்பெண் வயசுக்கு வந்துட்டா-ன்னு "உலா" எழுதினானுங்க சில பேரு! சில பேரு ராஜாவுக்கு கூஜா தூக்க, வலிந்து போய் காதல் பாடல்களை எழுதுவாங்க! உலா, கலம்பகம்-ன்னு பின்னாளைய சிற்றிலக்கியம்! அதில் எல்லாம் செயற்கைக் காதல் தான்! என்ன இருந்தாலும், சங்க இலக்கியத்து உண்மைக் காதல் மாதிரி வருமா? அரசனுக்குப் பயப்படாம, உள்ளது உள்ளபடி இயற்கையாகப் பாடின காதல் ஆச்சே அது?"

"இதுக்குத் தான் காதலர்களே பெரும் தமிழ்ப் புலவர்களா ஆயிரணும்! அப்போ தான் காதலர்களுக்கு எல்லாம் ஒரு கெத்தா இருக்கும்! பட்டாம் பூச்சிக்கும் ஒரு மதிப்பு!" :)

"ஆமாம்! அப்படி யாராச்சும் ஆகியிருக்காங்களா கேஆரெஸ்ஸூ? பட்டாம் பூச்சிக்கு விடிவு கொடுக்க, ஒருத்தர் கூடவா இல்ல, தமிழ் இலக்கியத்தில்?"

"ஏன் இல்லை? அதுவும் என் தோழி இருக்கும் போது....."

"ஆகா! கோதையா? அவளா?....அந்தக் காதலி பெரிய புலவர் தான்! ஆனால் அவளாச்சும் பட்டாம் பூச்சியைப் பாடுறாளா என்ன?"

"சிந்துரச் செம்பொடி போல்
திருமாலிருஞ் சோலை எங்கும்,
இந்திர கோபங்களே
எழுந்தும் பறந்து இட்டனவால்,
மந்தரம் நாட்டி அன்று
மதுரக் கொழுஞ் சாறு கொண்ட
சுந்தரத் தோள் உடையான்
சுழலையின் இன்று உய்துங் கொலோ"

"ஆகா! ஆகா! அருமை! அருமை! காதலர்கள் விரும்பும் பட்டாம் பூச்சியைப் பாடிட்டாளா? இதுக்கு விளக்கம் ப்ளீஸ்!


தமிழ்ப் பட்டாம் பூச்சியைப் பாக்கணும்-ன்னா மதுரைக்குத் தான் போவோணும்! மதுரை அழகர் கோயில்-ல தான், அவள் காதலன், சுந்தரத் தோள் உடையான் இருக்கான்! சூப்பர் அழகன்! கள்ளழகன்! - அவனுக்கு ஏன் சுந்தரத் தோள்-ன்னு பேரு? மருதைக் காரவுங்களே வந்து சொல்லட்டும்!

அவன் என்ன பண்ணுறானாம் என் தோழியை?
மந்தர மத்தினை நட்டு, மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்! மந்தரம் நாட்டி, அன்று மதுரக் கொழுஞ் சாறு கொண்ட சுந்தரத் தோள் உடையான்!
அவன் ஏற்படுத்திய சுழலில் சிக்கித் தவிக்கிறாள் தோழி! பட்டாம்பூச்சி பறக்குது அவளுக்கு! :)

திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் கோயில்! அங்கு சிந்தூரப் பொடிகள் தூவினாற் போலே, இந்திர கோபங்கள் என்னும் வண்ணத்துப் பூச்சிகள், ஒரேயடியாக எழுந்து, ஒட்டு மொத்தமாகப் பறக்கின்றன! Butterfly Effect in Love! :) சிந்துரச் செம்பொடி போல், திருமாலிருஞ் சோலை எங்கும், இந்திர கோபங்களே எழுந்தும் பறந்து இட்டனவால்....

இந்திர கோபம் என்னும் வண்ணத்துப் பூச்சி வகையினைச் சார்ந்தவை! சில பேரு தம்பலப் பூச்சி-ன்னும் சொல்லுவாய்ங்க!
எது என்ன இந்திர கோபம்? ரொம்ப கோவமா இருக்குமா? ஹிஹி! லவ்வுல ஏதுங்க கோவம்?

வண்ண வண்ண வானவில்லை இந்திர தனுசு என்று சொல்வது போல், வண்ண வண்ண வண்ணாத்திப் பூச்சியை இந்திர கோபம்-ன்னு சொல்லுறது வழக்கம்! - அவன் கோபாலன்! அவள் கோபிகை! அது "கோ"பம்!

திருமாலின் பலப்பல உருவொளியைக் காட்டுகின்றீர்! அவன் கிட்ட சொல்லி வைங்க! - திருமாலிருஞ் சோலை நம்பி, அவன் வரி வளையில் புகுந்து, வந்தி பற்றும் வழக்குளதே!
என் வளையல் எல்லாம் கழண்டு கழண்டு விழுது! எல்லாம் அவனால் தான்! என்னமோ பண்ணிட்டான் என்னை! என் வளை விழக் காரணமான அந்த மதுரைக்காரன் மேல் கேஸ் போடுவேன்! = வழக்கு உளதே! :)

நாறு நறும் பொழில் மாலிருஞ் சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்,
நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்,
ஏறு திரு உடையான், இன்று வந்து இவை கொள்ளும் கொலோ?

மந்தர மத்திலே மதுரமான வெள்ளமுதம் தந்தவன் அவன்!
பதிலுக்கு நானும் வெண்மையான வெண்ணையும், அக்கார அடிசிலும் அவனுக்குத் தருவேன்!
நூறு பானை வெண்ணையும், நூறு பானை சர்க்கரைப் பொங்கலும் அவனுக்கு நேர்ந்து வச்சேன்! ஒழுங்கு மரியாதையா வந்து வாங்கிக்கச் சொல்லுங்க! :)

இப்படி காதலர்களுக்குப் பறக்கும் பட்டாம்பூச்சிகளை, பாட்டிலே காட்டும் ஒரே தமிழ்க் கவிஞர் = கோதை!
காதல் இளவரசி கோதைப் பொண்ணு திருவடிகளே சரணம்!" :)


அப்பாடா...பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு! அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே! யார் அங்கே....?

1. இம்சை அரசி = வாம்மா தங்காச்சி! நீ இம்சை அரசின்னா, என் தோழீ காதல் அரசி! கோதை கூடவே சண்டை போட நீ தான் சரியான ஆளு! புது கல்யாணப் பொண்ணு :)

2. சுவாமி ஓம்கார் = சுவாமிகளைப் பற்றி அடியேன் என்ன சொல்ல? மந்திரம், யோகம் என்பதையெல்லாம் வறட்டு வேதாந்தமாக இல்லாமல்...திரட்டு வேதாந்தமாக, திரட்டி வேதாந்தமாகப் பேச முடியும் என்று வெற்றிகரமாகக் காட்டி வருபவர்!
சந்திராயன் வெற்றிக்கு ஜாதகம் கணித்தவர்! வாழ்க நீர் எம்மான்! உங்க கிட்ட கேட்க பல கேள்விகள் இருக்கு சுவாமி! புருவ மத்தியில் தோன்றிய பல கேள்விகள் :)

3. இலவசக் கொத்தனார் = பொருளாதாரப் பின்னடைவு ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது! இப்பல்லாம்....இலவசம் ரெம்ப கம்மி ஆயிருச்சி! :)
குறுக்கெழுத்துப் போட்டி மட்டும்-ன்னே ஆகிப் போச்சி! இவருக்கு விருது கொடுத்தாவது, நம்ம பழைய கொத்தனாரை இஸ்துக்கினு வருவோம்! We want the Old & Gold Kothanar :)

4. குமரன் = சூரியனுக்கு நான் எப்படிங்க டார்ச் லைட்டு அடிக்க முடியும்? இவருக்கு விருது கொடுத்தாலாச்சும், கோதைத் தமிழுக்கு இவரு பதில் விருது கொடுக்கிறாரா பார்ப்போம்! :)
தமிழமுதம் தரும் செஞ்சொற் கொண்டலே வருக!
எளியோன் தரும் பட்டாம்பூச்சி விருதினைப் பெறுக!

5. நா.கணேசன் = அன்னாரின் பன்முகத் தமிழைப் பருகாதவர்கள் உளரோ? நாசா முதல் நற்றமிழ் வரை...One of The Coolest Blog I ever know!


பட்டாம் பூச்சி பறக்கும் முறை:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP